சிலை வழிபாடு மற்றும் உருவ வழிபாடு ஆகியவற்றை தவறு என்றும் பாவம் என்றும் பலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது எந்த அளவு சரி? உண்மையிலே சிலை வழிபாடு அல்லது விக்கிரக வழிபாடு என்பது ஒரு பாவமான காரியமா? அது இழிவானதா? சில மாற்றுமத சகோதரர்கள் உருவ வழிபாடு செய்பவர்களுக்கு முடிவே இல்லாத நரக தண்டனையை கடவுள் அளிப்பார் என்று கூட பிரச்சாரம் செய்கின்றனர். இது சரியா? இது போன்ற கேள்விகளுக்கான விடைகளைத்தான் நாம் இந்த பதிவில் காண இருக்கின்றோம்.
சிலை வழிபாடு அல்லது பொதுவாக உருவ வழிபாடு எனக் கூறப்படுவதுதான் என்ன?
காலம் காலமாக தன்னலமற்ற ஞானிகளால் தியானம் யோகம் ஆகியவற்றின் மூலம் கண்டறியப்பட்ட தெய்வத் திருவடிவங்கள் மீது தியானிப்பது மற்றும் பூசனைகள் செய்வது, மனதால் அன்பு செலுத்துவது ஆகியவற்றின் மூலம் சத்தியத்தை அடைய மேற்கொள்ளும் முயற்சியே சிலை வழிபாடு ஆகும். ஒவ்வொரு மனிதனும் -ஆணும் பெண்ணும்- அழிவற்ற சத்தியத்தை தன்னுள் உணர முடியும். இது நம் ஒவ்வொருவருடைய பறிக்கமுடியாத உரிமையாகும் என்பது நம் பாரத ஞான மரபு மனிதகுலத்துக்கு அளிக்கும் செய்தியாகும்.
இந்த உருவ வழிபாடு அல்லது சிலை வழிபாடு என்பது ஆழ்ந்த உளவியல் தன்மையை கொண்டது.