தமிழ் ஒரு மொழி. தனித் தமிழ் ஒரு முயற்சி. தனித் தமிழே தமிழ் மொழியல்ல.
இந்தத் தெளிவு எனக்கிருப்பதால் தனித்தமிழ் மீது எனக்கு வெறுப்பில்லை. இந்தத் தெளிவு இல்லாததினால் தனித்தமிழ்ப் பிரியர்கள் தம்மை அறியாமலேயே தமிழை வெறுத்து வருகிறார்கள்.
தமிழனது சமுதாய வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் கலப்புகள் நிகழ்ந்திருக்கிறதோ அப்பொழுதெல்லாம் தமிழ் மொழியில் கலப்பு நிகழ்ந்திருக்கிறது. இவ்விதக் கலப்பினாலேயே அவனது வாழ்க்கை வளமுற்றது போல - அவனது மொழியும் வளம் பெற்றிருக்கிறது.
தனிப்பட்ட சொந்த வாழ்க்கையின் இத்தகைய கலப்புக்களையெல்லாம் தவிர்க்க முடியாமல் ஏற்றுக் கொண்டுவிட்ட சிலர், மொழி மட்டும் தனித்திருக்க வேண்டுமென்று ஆசையுற்று அவ்வித முயற்சியில் இறங்குவது ரசனைக்குரியதே. ஒரு முயற்சி என்ற முறையில் அதிலிருக்கும் பலவீனமான அழகைக் கூட என்னால் ரசிக்க முடிகிறது. எனினும் அதுவே தமிழ் என்பதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அந்தத் தனித்தமிழ் முயற்சியில் சில வியாசங்கள் வரையலாம். நண்பர்களுக்குக் கடிதங்கள் எழுதிக் கொள்ளலாம். மேடையில் மிகுந்த ஜாக்கிரதையோடு கூடிய ஒரு சமத்காரத்தோடு கூற வந்த விஷயத்தைக் கூற முடியாமலேயே - தமிழின் தனித்துவத்தைக் காப்பாற்றக் கூடிய முயற்சியில் வெற்றியோ, தோல்வியோ பெற்று ஒருவாறு பேசி முடிக்கலாம்.
என்னதான் செய்தாலும் இந்தத் தனித்தமிழில் ஒன்றை மட்டும் செய்ய முடியாது. இலக்கியம் சிருஷ்டிப்பது என்ற மகத்தான காரியத்தைக் கம்பியில் நடப்பது போன்ற இந்தத் தனித்தமிழ் என்கிற 'பாலன்ஸ்' கூத்தின் மூலம் நிறைவேற்றவே முடியாது.
ஒரு மொழியெனின் அதில் இலக்கியம் உருவாக வேண்டும். வாழ்க்கையைப் புறக்கணித்து இலக்கியங்கள் உருவாவதில்லை. இன்றைய தமிழ் இலக்கியம் என்பது - உலக அளவிற்கு உட்பட்ட துறைகளில் உருவாவது, உரைநடையில் நிறைவேறுதல் வேண்டும். உரை நடையென்று செய்யுளுக்கு வந்த உரைபோல அமைதல் கூடாது. எந்த அளவுகு நடைமுறை வாழ்க்கையோடு - அதன் பிரத்தியேக அழகுகளோடு வசனம் இசைந்து உருப்பெறுகிறதோ அந்த இசையையே வசனத்தின் வளர்ச்சியெனக் கொள்ளூதல் வேண்டும். அதற்குமேல் நவீன இலக்கியங்கள் நாம் சந்திக்கின்ற மனிதர்களைப் பாத்திரங்களாகக் கொண்டிருத்தல் வேண்டும்.
பாத்திரப் படைப்பு என்பது ஒவ்வொன்றும் தனித்தன்மையோடு விளங்க - இது இந்தக் காலத்தை - இந்தச் சூழ்நிலையை - இந்தப் பிரதேசத்தை - இந்த வர்க்கத்தை என்றெல்லாம் சம்பாஷணைகளின் மூலமும் சிந்தனைகளின் மூலமும் ஆசிரியனின் விவரிப்பின் மூலமும் நிலை பெறுதல் வேண்டும்.
இந்தச் சாதனையைத் தனித்தமிழ் என்ற ஒரு சாதாரண முயற்சி சாதிப்பது துர்லபம். ஏனெனில் தனித்தமிழ் என்பது ஒரு வாழ்க்கை உண்மையில்லை; அது ஒரு மனமயக்கம்! அல்லது ஒரு குழுவின் விருப்பம். இதற்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லாதிருப்பதே இதன் சிறப்பு.
(எனவேதான் இதனை ஒரு முயற்சி என்று குறிப்பிட்டேன்.)