போன மாதம், தமிழ்நாட்டில் நன்கறியப் பட்ட ஒரு ஆன்மிகப் பத்திரிகையில் ஒரு கேள்வி- பதில் வந்திருந்தது. அது பற்றிய எனது கீழ்க்காணும் கடிதத்தை பத்திரிகை ஆசிரியருக்கு அனுப்பினேன்.
அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம்.
தங்கள் இதழில் வழக்கமாக வரும் ஆன்மிக கேள்வி பதில்கள் சிறப்பாக இருக்கின்றன. மே மாத இதழில் வந்த கீழ்க்கண்ட கேள்வி-பதில் பற்றி ஒரு விமர்சனம்.
------------
கேள்வி: சித்தாந்தம் - வேதாந்தம்... விளக்கம் தருக.
பதில்: 'அந்தம்' என்ற சொல்லுக்கு, 'முடிவு' மற்றும் 'குறிக்கோள்' என்று இரண்டு அர்த்தங்கள் உண்டு. வேத நூல்களைப் பிரமாணமாகக் கொண்டு, அவை காட்டும் முடிவை ஏற்பது, வேதாந்தம் (வேத அந்தம்- வேதாந்தம்). தன் சித்தத்தின் முடிவுக்கு இசைந்து போகும் பட்சத்தில், வேதப் பிரமாணங்களையும் ஏற்பது அல்லது விடுவது... இந்த தத்துவ நெறிமுறையே சித்தாந்தம். வேதாந்தம் வடக்கின் கொடை; சித்தாந்தம் தெற்கின் கொடை!
--------------
தமிழில் எல்லா உச்சரிப்புகளும் இல்லாத காரணத்தால் Siddha என்பதையும், Chitta என்பதையும் "சித்தம்" என்றே எழுதுகிறோம்.
Siddha = சித்தி (Siddhi) என்கிற இறுதிநிலையை அடைந்தவன்
Chitta = சித்தம், அதாவது எண்ண ஓட்டங்கள் கொண்ட மனம்
சித்தாந்தம் (Siddhanta) என்கிற சம்ஸ்கிருத சொல் Siddhi + anta என்ற சொற்களால் உருவானது. உச்சரிப்புக் குழப்பத்தால் Chitta என்ற சொல்லைக் கொண்டு தவறான பொருள் கூறியிருக்கிறார் விடையளித்தவர். "சித்ததிற்கு இசைந்த வகையில்" என்றால் என்ன - "மனம் போன போக்கில்"?
சித்தாந்தம் என்பதற்கு இறுதியான தர்க்க முடிவுகளை உள்ளடக்கிய சமய தத்துவம் என்று பொருள். பல இடங்களில் சமயம் தவிர்த்த அறிவியலைக் குறிக்கவும் இச்சொல் பயன்டும்: ஜோதிஷ சித்தாந்தம், ரஸாயன சித்தாந்தம், கணித சித்தாந்தம் போல. தமிழ்ச் சூழலில் பொதுவாக "சைவ சித்தாந்தம்" என்கிற சைவ சமயப் பிரிவைக் குறிக்க இச்சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
வேதாந்தம் என்பதற்கு வேதத்தின், மெய்அறிவின் எல்லை என்பது பொருள். இந்து தத்துவங்கள் எல்லாவற்றின் உச்சம், அறுதி நிலை, பிரமாணம், வேதாந்தம் தான். வேதாந்தம் என்கிற தத்துவ அமைப்பின் மீது தான் சைவம், வைணம், சாக்தம், கௌமாரம் ஆகிய எல்லா சமயப் பிரிவுகளும் கட்டமைக்கப் பட்டிருக்கின்றன. அதனால் "வேதப் பிரமாணத்தை விடுவது" என்ற பேச்சிற்கே இந்த சமயப் பிரிவுகள் எவற்றிலும் இடமில்லை. அவை வேதாந்தத்திற்கு முரண்பட்டவை அல்ல.
"வேதாந்த, சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற வித்தகச் சித்தர் கணமே" என்று இந்த ஒருமையைத் தான் தாயுமானவர் குறிப்பிடுகின்றார்.
மேலும், வடக்கு, தெற்கு என்று இந்தத் தத்துவக் கொடைகளைப் பிரிப்பதும் தவறு. வேதாந்த தத்துவத்தை நாடெங்கும் நிலைநாட்டிய ஆதிசங்கரர் தென்னாட்டில் தான் பிறந்தார். பின்னர் விசிஷ்டாத்வைதம், த்வைதம் என்கிற வேதாந்தப் பிரிவுகளை உருவாக்கிய ஆசாரியார்களும் தென்னாட்டில் பிறந்தவர்களே.
அதே போன்று சைவசித்தாந்தமும் சரி, சித்தர்கள் மரபும் சரி, பாரதம் முழுவதும் வேர்கள் கொண்டது. இமயமலையில் இருந்து வந்த சிவயோகி ஒருவரே மூலன் என்ற இடையன் உடல்புகுந்து திருமூலர் ஆகி திருமந்திரம் என்ற தத்துவக் களஞ்சியத்தை அளித்தார் என்று பெரியபுராணம் கூறும். கோரக்கர் (கோரக் நாத்) உள்ளிட்ட தமிழ்நாட்டு 18 சித்தர்கள் போன்று வடபாரதம் முழுவதும் நவநாத் (Navnath) என்னும் 9 சித்தர்கள் பற்றிய பழைய மரபு உள்ளது.
பத்திரிகைகளில் சுருக்கமாக பதில் எழுதவேண்டும் என்கிற கட்டுப்பாடு உள்ளதைப் புரிந்து கொள்கிறேன். ஆனால் அவை தவறாக இருக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அதுவும், இணையம் என்ற தகவல் களஞ்சியம் நம் கைக்கெட்டும் தூரத்திலேயே இருக்கும்போது என்ன கவலை?
பிற்சேர்க்கையாக: Cologne Digital Sanskrit Lexicon சம்ஸ்கிருத அகராதியிலிருந்து Vedanta, Siddhanta ஆகிய சொற்களின் பொருள்.
அன்புடன்,
ஜடாயு
இந்தக் கடிதம் அனுப்பி சில நாட்களில் சம்பந்தப் பட்ட சைவ, தமிழ் அறிஞரிடமிருந்து 21 கேள்விகளுடன் ஒரு கடிதம் வந்தது, அவற்றுக்கு உங்களுக்குள்ளேயே விடை தேடுங்கள் என்ற கோரிக்கையுடன். அவருக்கு நான் எழுதிய பதில்களை, அந்த பதில் கடிதத்தில் கூறியவாறே தமிழ் இணைய வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சாய்வுக் கோட்டுக் குறிக்குள் (//) இருப்பவை அவரது வினாக்கள். பின் வருபவை எனது பதில்கள்.