பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் திருஞான சம்பந்தரைப் பல்வேறு அடைமொழிகளால் சிறப்பித்துக் கூறுகின்றார். அதில்
“இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட
வந்த வைதிக மாமணி”
என்ற தொடர் மிகவும் அழகானது. தமிழக வரலாற்றில் அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் சமூகம், சமயம், கலாசாரம் ஆகிய அனைத்துப் பண்பாட்டுக் கூறுகளிலும் கவிந்திருந்த இருளை சம்பந்தர் அகற்றினார் என்ற முக்கியமான வரலாற்றுச் செய்தியை உள்ளடக்கியதாக இந்தப் புராணக் குறிப்பு உள்ளது.
களப்பிரர் காலம்:
தமிழகப் பண்பாட்டு வரலாறு சங்ககாலத்துடன் தொடங்குகிறது. தமிழ்ச் சங்கங்கள் இலக்கியத்தையும், கலைகளையும் வளர்த்த மதுரை மாநகரே இதன் மையமாக விளங்கியது எனலாம். இதன் பின்னர் ”இருண்ட காலம்” என்று பொதுவாகக் கருதப் படும் களப்பிரர் காலம் நான்கைந்து நூற்றாண்டுகள் நீடிக்கிறது. அதைத் தொடர்ந்து பக்திப் பெருவெள்ளம் இந்த மண்ணிலே பாய்ந்தோடி, சைவ வைணவ சமயங்கள் செழித்து, பெரும் ஆலயங்களும், பேரரசுகளும் உருவாகும் காலகட்டம்.
இதில் களப்பிரர் காலத்தை இருண்ட காலம் என்று முந்தைய சமூக, அரசியல் வரலாற்றாசிரியார்கள் கூறியதற்கு இக்காலம் பற்றிய முழுமையான சித்திரத்தை அளிக்கும் தெளிவான சான்றுகள் இல்லை என்று அவர்கள் கருதியது காரணம். ஆனால் இலக்கிய வரலாற்றை எழுதிய தமிழறிஞர்கள் வேதநெறியும், சைவசமயமும் மறையும் நிலையிலிருந்து, தமிழ் நூல்கள் உத்வேகத்துடன் எழாத காலமாதலால், இருண்ட காலம் என்று பெயரிட்டார்கள்.
பின்னர் களப்பிரர்கள் பற்றிய விரிவான ஆய்வுகள் செய்யப் பட்டன, அந்தக் காலகட்டத்தைப் பற்றி ஓரளவு நன்றாகவே நாம் இப்போது புரிந்து கொள்ள முடியும். களப்பிரர்கள் தமிழகத்திற்கு வெளியேயிருந்து இங்கே வந்தவர்கள். அவர்களது மூல இருப்பிடம் கர்நாடகத்தின் தற்போதைய மைசூர் பகுதியாக (சிரவணபெளகொளா) இருக்கலாம் என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப் படும் கருத்து. 3ம் நூற்றாண்டு தொடங்கி 6-7ஆம் நூற்றாண்டுகள் வரை தொண்டை மண்டலம், சேர, சோழ, பாண்டிய நாடுகள் இவற்றை அவர்கள் கைப்பற்றி ஆண்டனர். அரசு அதிகாரம் மட்டுமின்றி தமிழகத்தின் சமயம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களிலும் இதன் தாக்கம் பெருமளவில் இருந்தது. சமணம், பௌத்தம் இரண்டும் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் பரவின.
களப்பிரர் காலத்தின் தொடக்கத்தில், இந்தத் தாக்கம் மிக ஆக்கபூர்வமாகவே இருந்த்து. திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற உன்னத இலக்கியங்கள் படைக்கப் பட்டன. “பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும், நீலமேனி நெடியோன் கோயிலும், அருகர் பள்ளியும், தவத்தோர் உறைவிடமும், கொற்றவைக் கோட்டமும்” அருகருகே அமைந்து அனைத்து சமயங்களும் பெருமளவில் மோதல்கள் ஏதுமின்றி, மிக்க தோழமையுடன் ஒன்றோடொன்று உறவாடி வாழ்ந்த காட்சியை சிலப்பதிகாரம் காட்டுகிறது. சமணரான இளங்கோ “நாராயணா என்னா நாவென்ன நாவே” என்று எந்த மனத்தடையும் இன்றி உள்ளம் உருகப் பாடிய சூழல் அது.
ஒரு கட்டத்தில் சமணம் அரசு மதம் என்ற அளவில் பல பகுதிகளில் நிலை பெற்றது. மகேந்திர வர்ம பல்லவன், கூன்பாண்டியன் போன்ற மன்னர்கள் மூலம் தனது அதிகாரத்தையும், செல்வாக்கையும் அது நிலைநாட்ட முயன்றது. இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டுச் சமணம், வேதநெறி, பௌத்தம் இரண்டையுமே பின்னுக்குத் தள்ளியிருந்தது. மிக இறுக்கமான தன்மையதாகி, ஒரு வெறித்தனமான போக்கைக் கொண்டதாகவும் ஆகி விட்டிருந்தது. காலத்தால் மூத்த திருக்குறள் தவிர்த்து பெரும்பாலான மற்றைய பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இக்காலத்தில் எழுந்தவை.
சம்பந்தரது காலமான 7ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொண்டை நாட்டில் அப்பர் பெருமானின் பெரும்பணியால் வேதநெறியும், சைவ சமயமும் புத்துயிர் பெறத் தொடங்கியிருந்தன. சோழ நாடு குறுநில மன்னர்களால் ஆளப் பட்டு வந்தாலும், கலாசார ரீதியாக உயிர்த் துடிப்புடன் விளங்கியது. ஆனால் சங்கம் வளர்த்த தமிழ் மதுரையில், தமிழ்ப் பண்பாட்டுத் தொடர்ச்சியே அற்றுப் போகும் நிலை இருந்தது. சைவ நூல்கள் “பரசமய இருள்” என்று இந்த நிலையைத் தான் குறிப்பிடுகின்றன. அக்காலத்திய இலக்கியங்களில் இந்த சமூகத் தேக்கம் நேரடியாகவும், குறியீட்டுத் தன்மையுடனும் சொல்லப் படுகிறது. இதனை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
வரலாற்றில், நாகரீகத்தில் மேலோங்கிச் செல்லும் சமூகங்கள் எல்லாம் நுண்கலைகளைப் போற்றி வளர்ப்பதைக் காணமுடியும். சங்ககாலத் தமிழகத்தில் இசை மக்களின் வாழ்வில் மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது. இசை வல்லுனர்களான பாணர்களும், பாடினிகளும் நிறைந்திருந்தனர். அவர்கள் ஊர்கள் தோறும் சென்று, வள்ளல்களைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்று வந்தனர். பெரும்பாணாற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை என்ற இரு சங்க நூல்கள் பாணர்களின் பெயரைத் தாங்கியுள்ளன. வாழ்க்கையின் இன்பங்களையும் சரி, துயரங்களையும் சரி, பாடல்களாகப் புனைந்ததோடு மட்டுமல்லாமல், யாழ், முழவு (மிருதங்கம்) முதலிய கருவிகளின் துணையோடு அவற்றை இசைக்கும் கலாசாரமும் செழித்து வளர்ந்திருந்தது. இதன் தொடர்ச்சியாகவே, தொடக்க கால சமண காவியமான சிலப்பதிகாரத்தில் இசையும், நடனமும் முக்கிய இடத்தைப் பெறுவதைப் பார்க்கின்றோம்.
சைவ, வைணவ சமயங்களின் முதல் குருமார்களில் பாண்டிநாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. நாயன்மார்களில் 8 பேர் தொண்டை நாட்டினர். 30-40 பேர் சோழ நாட்டினர். நடுநாடு, மலைநாடு, சேரநாட்டிலும் நாயன்மார் தோன்றியிருக்கின்றனர். ஆனால் தொன்மையான பண்பாட்டுப் பாரம்பரியம் உடைய, சங்கம் வைத்துத் தமிழ்வளர்த்த தென்பாண்டி நாட்டில் தோன்றியவர் நால்வரே. இதில் மூவர் - மங்கையர்க்கரசியார், குலச்சிறையார், நின்றசீர் நெடுமாறனாக மாறிய கூன்பாண்டியன் ஆகியோர் சம்பந்தருடைய தொடர்பாலேயே நாயன்மார்களானவர்கள். மூர்த்தி நாயனார் மிகக் குறுகிய காலம் அரசாண்ட ஒரு சைவக் குறுநிலமன்னர். வைணவத்திலும் முதலாழ்வார் மூவர் தொண்டை நாட்டினர், பிறர் சோழநாட்டினர்.




