New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 36. தமிழ் நூல்களில் தேவலோகம்.


Guru

Status: Offline
Posts: 23907
Date:
36. தமிழ் நூல்களில் தேவலோகம்.
Permalink  
 


36. தமிழ் நூல்களில் தேவலோகம்.

 

ரஷ்யா வரை வேத நாகரீகம் பரவியிருந்த சாத்தியக் கூறுகளைப் பார்த்தோம். வட துருவப் பகுதியை ஒட்டியுள்ள வட சைபீரியப் பகுதி தேவருலகம் என்று கருதப்பட்டது என்பதை மஹாபாரத வர்ணனைகள் மூலம் அறிந்தோம். இந்த விவரம் சங்க நூலிலும் உள்ளது. இந்த விவரத்தைத் தரும் புறநானூற்றுப் பாடலான ‘எந்தை வாழி என்று தொடங்கும் பாடலில் சரித்திர ஆராய்ச்சிக்குட்பட்ட மற்றொரு விவரமும் வந்துள்ளது. புறநானூறு மட்டுமல்லாமல், மணிமேகலையிலும், தேவருலகம் குறித்த செய்தி வருகிறது. இந்த இரண்டு செய்திகளை இந்தப் பகுதியில் அறிவோம்.
புறநானூறு 175  இல் வேங்கட மலையின் தலைவனான ஆதனுங்கன்என்பவனைக் கள்ளில் ஆத்திரையனார் என்னும் புலவர் வாழ்த்துகிறார். இரவு, பகல் என்ற வித்தியாசம் இல்லாமல், எந்நேரமும் அந்த அரசன் மக்களைக் காக்கிறான் என்கிறார். இந்த இயல்பை தேவருலக இயல்புடன் ஒப்பிடுகிறார். தேவருலகத்தில் சூரியன் அஸ்தமிக்காமல், ஆறு மாதம் வானத்தில் நிலை பெற்றிருக்கும். அப்பொழுது இரவு, பகல் என்ற வேறுபாடே அங்கு இருக்காது. அது போல ஆதனுங்கன் என்னும் இந்த அரசன், இரவு- பகல் என்ற வேறுபாடு இல்லாமல், எல்லா நேரத்திலும் மக்களைக் காக்கிறான் என்கிறார்.
இதில் என்ன விவரம் இருக்கிறது?
புலவர் தன் கற்பனையில் தேவருலகத்துடன் ஒப்பீடு செய்துள்ளார் என்று நினைக்கலாம்.
இங்குதான் ஒரு அதிசய விவரமும் தருகிறார் புலவர்.
இந்தத் தேவருலகம் செல்லும் வழியையும் கூறுகிறார்.
வானத்தைத் தொடுவது போலத் தெரியும் நீண்ட கொடியை உடைய தேரினைக் கொண்ட மோரியர் என்னும் அரசர், தங்கள் தேர்ச் சக்கரம் செல்வதற்கு வசதியாக, வெள்ளி மலையைக் குறுக்கே உடைத்துச் சென்றனர். அந்த இடத்துக்கு அப்பால் இருக்கும்  உலகத்தின் பகுதி உலகின் இடை கழி ஆகும். (இடைகழி என்றால் வாயில் அல்லது இரண்டு பகுதிகளுக்கு இடையே உள்ள பகுதி) அந்த இடைகழியில், சூரியன், தேவர்களால் நிறுத்தப்பட்டு இரவு, பகல் என்ற வேறுபாடு இல்லாமல், வானில் தெரிவான் என்கிறார்.
வென்வேல்
விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
உலக இடைகழி அறைவாய் நிலைஇய
மலர்வாய் மண்டிலத் தன்னநாளும்
பலர்புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே.
என்கிறார்


__________________


Guru

Status: Offline
Posts: 23907
Date:
Permalink  
 

இதற்கு அந்த நாளில் எழுதப்பட்ட பழைய உரையை டாக்டர்.வேசாஅவர்கள் கண்டெடுத்துக் கொடுத்துள்ளார். அந்த உரையும், அவர்களுக்கு முன் இருந்தவர்கள் எழுதியதைப் பின் பற்றி எழுதப்பட்டது. எனவே இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட உரைகள், அந்நாளில் தமிழகத்தில் வழங்கி வந்த செய்திகளக் கொண்டிருக்கும் என்பதை நினைவில் கொண்டு நாம் படிக்கவேண்டும். இன்றைய திராவிட வருடிகள் எழுதியுள்ள உரைகள், இந்தப் பழைய உரைகளில் உள்ள செய்திகளை இருட்டடிப்பு செய்து விடுகிறார்கள் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். உ.வே.சா அவர்கள் கண்டுபிடித்த பழைய உரையில் மேற்காணும் பாடல் பகுதிக்கான உரை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
"வென்றி வேலை உடைய விசும்பைத் தோயும் நெடிய குடையினையும்,கொடி அணிந்த தேரினையும் உடையநிலமுழுதும் ஆண்ட வேந்தரது திண்ணிய ஆர் சூழ்ந்த சக்கரம் இயங்குதற்குக் குறைக்கப்பட்ட வெள்ளிமலைக்கு அப்பாலாகிய உலகத்திற்குக் கழியும் இடைகழியாகிய அற்றவாயின்கண் தேவர்களால் நிறுத்தப்பட்டு இரு பொழுதும் ஒருபெற்றியே நிலை பெற்று விளங்கும் பரந்த இடத்தை உடைய ஆதித்ய மணடலத்தை ஒப்பநாள்தோறும இரவு பகல் என்னாமல் பலரையும் காத்தலை ஏற்றுக் கொண்டு ஒரு பெற்றியே விளங்கிய அறத்த்துறையாகிய நின்னை "
இங்கு ‘வெள்ளி மலை” என்று வருவது, இமய மலையைத் தவிர வேறு மலையாக இருக்க முடியாது. நாம் முன் பகுதிகளில் கண்டவாறு இமய மலைக்கு அப்பால் இருக்கும் பகுதியைப் புலவர் குறிப்பிடுகிறார் என்பது விளங்குகிறது.விச்சாதரர் என்பவர்கள், முன்பே (பகுதி 10) நாம் கண்ட வித்யாதர மக்களுக்கு  மற்றொரு தமிழ்ப் பெயர். இந்தப் பகுதி வடசேடி என்றும் பார்த்தோம். அங்கிருந்து ஒரு இளம் ஜோடி புகாரில் நடந்த இந்திர விழாவுக்கு வந்தனர் என்று இளங்கோவடிகள் கூறியுள்ளார் என்றும் பார்த்தோம். 
அந்த வித்யாதரப் பகுதியை ஆண்ட அரசன் உபரிசர வஸு என்பவன். அவன் சோழர்கள் பரம்பரையிலும் குறிக்கப்பட்டுள்ளான் என்பதையும் (பகுதி 11) பார்த்தோம். அந்த அரசனுக்கும், அந்த நாட்டு மக்களுக்கும் தேவர்கள் தலைவனான இந்திரன், நண்பனாவான் என்று சொல்லப்பட்டுள்ளது என்றும் பார்த்தோம். எனவே இமய மலைக்கு அப்பால்  60 டிகிரி அட்ச ரேகைக்கு அப்பால் உள்ள பகுதியை தேவருலகம் என்று சொல்லும் வழக்கம் எங்கும் இருந்திருக்கிறது. அப்படியே தமிழ் மக்களும் அறிந்துள்ளனர் என்றும் தெரிகிறது. இங்கு சொல்லப்பட்டுள்ள மோரியர் சம்பவம் இன்னும் சில சங்கப் பாடல்களில் வருகிறது. அதை அடுத்த பகுதியில் தொடருவோம். இங்கு தேவருலகம் என்று ஓரிடம் நாம் வாழும் இந்த உலகிலேயே இருந்தது என்று தமிழ் மக்களும் நினைத்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
சக்கரவாளச் சக்கரவர்த்திகள் என்று பழைய உரைக்காரர் கூறியுள்ளார்.
சக்கரன் என்பது இந்திரனது இன்னொரு பெயர்.
அதனால் அவன் வழியில் வந்த மன்னர்களை சக்கரவாளச் சக்கரவர்த்திகள் என்று அழைத்திருக்கலாம்.
சக்கரவாளம் என்பதற்கு வேறொரு பொருளும் உண்டு. அதைமணிமேகலையில் சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதையின் மூலம் தெரிந்து கொள்கிறோம்.
6 ஆவது காதையான இந்தக் காதையில், புகார் நகரில் இருந்த ஒரு சுடுகாட்டை, சக்கரவாளம் என்று மணிமேகலா தெய்வம் கூறுகிறது. முன்னாளில் அந்தச் சுடுகாட்டைச், சக்கரவாளம் என்னும் தேவருலகம் என்று அழைத்தார்கள் என்ற விவரத்தைக் கூறும் ஒரு கதையைச் சொல்கிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 23907
Date:
Permalink  
 

ஒருமுறை ஒரு பார்ப்பனச் சிறுவன் அந்தச் சுடுகாட்டுக்குள் நுழைந்து விடுகிறான். அங்கு கண்டவற்றால் பயந்து போய் வீட்டுக்கு ஓடிச் சென்று, பயத்தால் அங்கு இறந்துவிடுகிறான். அவனது தாய், தந்தைக்குக் கண் தெரியாது. அந்தச் சிறுவன்தான் அவர்களது ஒரே நம்பிக்கை. அவன் இறந்து போனதைப் பொறுக்க முடியாமல் அவன் தாய் கோதமைஎன்னும் பெயருடையவள், அவனைத் தூக்கிக் கொண்டு சுடுகாட்டின் புறத்தே இருந்த சம்பாபதி என்னும் தெய்வம் இருக்கும் கோவிலுக்கு வருகிறாள். முன்பே பகுதி 17 -இல் சொல்லப்பட்ட சம்பாபதி என்னும் காவல் தெய்வம் அவள்.
 அவளை மனத்தால் தியானிக்க, அந்தத் தெய்வம் கோதமையின் அகக் கண்ணில் தெரிந்தது. அவளிடம் தன் குறையைச் சொல்லி, தன் மகனை உயிர்ப்பிக்க வேண்டினாள். அது இயலாது என்று சம்பாபதி கூறவே, தன் உயிரை எடுத்துக் கொண்டு, மகன் உயிரை மீட்டுத்தர வேண்டினாள். கர்ம பலனால் பிறப்பும், இறப்பும் நேர்வதால், தன்னால் எதுவும் செய்ய இயலாது என்று சம்பாபதி கூறினாலும், கோதமையின் மீது இரக்கம் கொண்டு ஒருவேளை பிரம்மன், தேவர்கள் போன்றவர்களால் உயிர் கொடுக்கக்கூடும் என்று சொல்லி, எல்லாத் தெய்வங்களையும் அங்கு அழைக்கிறாள். 
நான்கு வகைப் பட்ட அரூபப் பிரம்மர்களையும்,
பதினாறு வகைப்பட்ட உரூபப் பிரம்மர்களையும் ,
சூரியன்சந்திரன் என்னும் இரண்டு ஒளிக் கடவுளர்களையும்,
ஆறு வகைப்பட்ட தேவக் கூட்டங்களையும்,
பல் வேறு வகைப் பட்ட அசுரர்களையும்,
பெரும் துன்பம் தரும் எட்டு வகைப் பட்ட நரகர்களையும்,
வானத்தில் சுற்றி வரும் விண்மீன் கூட்டங்களையும்,  நாண்மீன்களையும்,கோள்களையும் தன்னகத்தே அடக்கிக் கொண்டிருக்கின்ற சக்கரவாளமாகியஇந்த அண்டத்தில்
உறைகின்றமக்களுக்கு வரம் தரும் ஆற்றல் படைத்த தேவ கணங்களைசம்பாபதி அங்கே வரவழைத்தாள்

பொதுவாகச் சக்கரவாளத்தில்தான் அவர்களை ஒன்றாகப் பார்க்க முடியும். அவர்கள் புகார் நகர சுடுகாட்டில் ஒன்று சேர வந்துவிடவே அந்தச் சுடுகாடே சக்கரவாளம் போலாயிற்று.
அதனால் அன்று முதல் அந்தச் சுடுகாட்டை. சக்கரவாளக் கோட்டம் என்றே அழைக்க ஆரம்பித்தனர். நாளடைவில், அந்தப் பழைய சம்பவம் மறந்து போனதால், சுடுகாடு என்றே அழைத்தனர். இவ்வாறு புகார் நகரத்தில் தேவருலகமான சக்கரவாளத்தினர் ஒரு முறை வந்தனர் என்று மணிமேகலை கூறுகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 23907
Date:
Permalink  
 

தெய்வங்களும், கோவிலும்.
தேவர்கள் காட்சி தந்ததால் அதை ஒரு கோட்டம் அதாவது கோவில் என்று அழைக்கலாயினர். மயன் என்னும் தச்சன் அந்த இடத்தில் கோட்டத்தை நிர்மாணித்தான் என்று மணிமேகலா தெய்வம் கூறுகிறது.
தமிழ் நாடு மட்டுமல்ல, பாரதம் முழுவதிலுமே, ஓரிடத்தில் அதிசயக் காட்சியோ, தெய்வக் காட்சியோ தென்பட்டால் அதே இடத்தில் அப்படிக் காட்சி கொடுத்த தெய்வத்துக்கு கோவில் எழுப்பியுள்ளனர்.
இதை ‘காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்” என்று தொல்காப்பியர்சூத்திரமாகக் கூறியுள்ளார். அப்படிக் காட்சி தந்தது அனைவரும் அறிந்த தெய்வமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. போரில் வீர மரணம் அடைந்தவராகக் கூட இருக்கலாம். நமது கிராமமெங்கும் குடி கொண்டுள்ள தேவதைகளாக இருக்கலாம்.

தொல்காப்பியரின் அடிப்படை சூத்திரத்தைப் புரிந்து கொள்ளாமல், ஆரிய தெய்வத்தைத் தமிழ் நாட்டில் பரப்பி விட்டனர் என்று திராவிடவாதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலே கூறிய சக்கரவாளக் கோட்டம், என்றோ நடந்த கதை. அது நடந்த இடம் 11,000 வருடங்களுக்கும் மேலான சரித்திரம் கொண்ட புகார் நகர்.
அந்தக் கதையில் காட்சி தந்த தெய்வ்ம், காவேரி நதி ஓடுவதற்கு முன்னால் புகாரில் குடி கொண்டு, தன் பெயரையே புகாருக்குக் கொடுத்த தெய்வம்.

அந்தத் தெய்வம் வரவழைத்தது ஆரியக் கதை என்று திராவிடவாதிகள் கதை கட்டும் தேவருலகத் தெய்வங்கள்.
எங்கிருந்து, எந்தக் காலக்கட்டத்தில் புகாரிலும், தமிழர் மத்தியிலும் இவர்கள் சொல்லும் ஆரிய ஊடுருவல் நடந்திருக்க முடியும்?
மேலும் கோவில்களும், தெய்வங்களும், அவற்றுக்குப் பூஜைகளும் தோன்றிய விதத்தை தொல்காப்பிய சூத்திரம் சொல்ல, அதை சிலப்பதிகாரத்தில் அதே பெயர்களில் நான்கு காதைகளில் காண்கிறோம்.
எங்கேனும் ஒரு அதிசயக் காட்சி தெரிந்தால், அது காட்சி ஆகும்.
சிலப்பதிகாரத்தில், கண்ணகி மதுரையை எரித்த பிறகு, சேர நாட்டில் இருந்த திருச்செங்குன்று என்னும் மலைக்குச் செல்கிறாள். அங்கு வான ஊர்தியில் கோவலன் வருவதையும், அதில் கண்ணகி ஏறிச் செல்லும் காட்சியையும் அங்கிருந்த மலை வாழ் வேடர்கள் கண்டனர்.இந்த அபூர்வக் காட்சியின் காரணமாக அவள் தெய்வம் ஆகிறாள். அந்தக் காட்சி கண்ட இடம் தெய்வ சக்தி இறங்கிய இடமாகிறது. அந்த சக்தி அவ்விடத்திலேயே என்றென்றும் உறையும் வண்ணம் வேத மந்திரம் சொல்லி ‘விசேஷ கிருகம்’  அதாவது விக்ரகம் என்று சிலையாக நிலை நிறுத்தப்படுகிறது. இதுதான் கோவில்கள் பிறந்த கதை. கோவிலை அந்த நாளில் கோட்டம் என்றார்கள்.
அபூர்வக் காட்சி தெரிந்த இடத்தில், அப்படிக் காட்சி தந்த கடவுளையோ, தெய்வ உருப் பெற்ற மனிதனையோ சிலையாக வடிக்கக் கல் எடுப்பார்கள். அதைக் ‘கால்கோள் என்கிறார் தொல்காப்பியர். கண்ணகிக்குச் சிலை வடிக்க அபூர்வக் கல் தேவை என்று இமய மலைக்குச் சென்று கல் எடுத்து வந்தார்கள்.
அப்படித் தேர்ந்தெடுத்த கல்லை மந்திரம் சொல்லி நீராட்டுவார்கள். அதுவே ‘நீர்ப்படை” என்று சொல்லப்பட்டது. கண்ணகி சிலைக்கான கல்லைக் கங்கையில் நீராட்டினார்கள்.
அந்தக் கல்லில் அந்தத் தெய்வத்தின் உருவத்தை வடித்து, அந்த தெய்வத்துக்கென எழுப்பட்ட கோவிலில் நடுவார்கள். அதுவே ‘நடுகல்என்ப்பட்டது. அதைக் கும்பாபிஷேகம் என்கிறோம்.


__________________


Guru

Status: Offline
Posts: 23907
Date:
Permalink  
 

போரில் வீர மரணம் அடைந்தவர்களை அடக்கம் செய்த பிறகு, அவர்கள் உயிர் நீத்த இடத்தில் ஒரு கல்லை நட்டு வழிபடுவது வழக்கம். இது ஒரு அடையாளக் கல்லாக இருக்கும். ஆனால் அந்த இடத்தில் இறந்த நபர் கண்ணுக்குத் தெரிந்தாலோ அல்லது அந்த இடத்தில் ஒரு அதிசயம் நடந்தாலோ, அந்த நபரது உருவத்தைக் கல்லில் வரைந்து அல்லது செதுக்கி முன் சொன்ன மாதிரி, கால்கோள், நீர்ப்படை, நடுகல் என முறைப்படி செய்தார்கள். இதற்கான ஆதாரம் புறநானூறு  263, 264 இல் இருக்கிறது.

 

nadukal.bmp
ஆறாம் நூற்றாண்டில் நடப்பட்ட நடுகல் இது. 
திருவண்ணாமலையில் கிடைத்தது. 
உருவம் செதுக்கப்பட்டிருக்கவே, இந்த நபர் அதிசயக் காட்சியாகத் தென்பட்டிருப்பார். 
வழிபாடும் செய்திருப்பார்கள்.

இந்த பாரத பூமியே அதிசயங்கள் தென்படக் கூடிய பூமியாகும். அதிலும் தமிழ் நாட்டில் தெய்வ சக்திகள் அதிக அளவில் காட்சி கொடுத்திருக்கிறது. . வைணவ திவ்ய தேசங்கள் பலவும் தமிழ் நாட்டிலும், பண்டைய தமிழர் பகுதியான கேரளத்திலும் உள்ளன. யாருக்காவது தெய்வம் காட்சி அளித்து அருள் செய்யவே அந்தத் திவ்ய தேசங்கள் உண்டாயின.
திவ் என்றால் ஒளி என்று பொருள். திவ் என்னும் சொல்லிலிருந்து தெய்வம் என்ற சொல் வந்தது. அப்படி ஒளி மயமாகக் காட்சி தந்த இறைவன் விஷ்ணுவாகவும், சிவனாகவும், முருகனாகவும், மற்றும் பல தெய்வங்களாகவும் இருக்கலாம். அந்தத் தெய்வங்கள் எங்கே காட்சி அளித்தனவோ, அந்தந்த இடங்களிலேயே அவற்றுக்குக் கோவில்கள் உருவாக்கப்பட்டன.
இவை பெரும் தெய்வங்கள். இவை எல்லாம் தமிழர் தெய்வங்கள் இல்லை. சிறு தெய்வங்களும், கிராம தெய்வங்களுமே தமிழர் தெய்வங்கள் என்று சிலர் சொல்கிறார்கள். தொல்காப்பியர் சூத்திரப்படி, யார் காட்சி கொடுத்தாலும் அவருக்குக் கோவில் எழுப்பி விடுவார்கள். சாதாரண மக்கள் அசாதாரண விதத்தில் வாழ்ந்தும், வீழந்தும், காட்சி கொடுத்தும் இருக்கவே அவர்களும் தெய்வங்களாகி உள்ளனர்.
காட்சியின் அடிப்படையில் நட்ந்த பழைய சம்பவமே சக்கரவாளக் கோட்டக் கதையாகும். தேவ லோகவாசிகள் என்னும் இயற்கைச் சக்திகள் காட்சி தரவே ஒரு சுடுகாடே சக்கரவாளக் கோட்டம் என்றானது. அதை மயன் வடிவமைத்தான்.


__________________


Guru

Status: Offline
Posts: 23907
Date:
Permalink  
 

தமிழ் நாட்டில் பலப்பலக் கோவில்கள் பல காலமாகவே இருந்து வருவதால், தமிழ் நாடு ஒரு புண்ணிய பூமி என்றால் அது மிகையில்லை. 
நாத்திகம் பேசும் திராவிடவாதிகள் தமிழ் நாட்டின் இந்த தெய்வ வழிபாட்டு அடிப்படையைத் தெரிந்து கொள்ளாமல் ஆரிய ஊடுருவல் என்று உளறுகிறார்கள். 
இது ஆரியம் என்றால், இந்த ஆரியமே தமிழர் அடையாளமாகும். 

எங்கோ வட துருவப் பகுதியில் இருந்தவர்களை சக்கரவாளச் சக்கரவர்த்திகள் என்று புறநானூறு சொல்வதும், புகார் நகர சுடுகாட்டில் தேவர்கள் குழுமி வரவே அந்த சுடுகாடே சக்கரவாளம் என்றானது என்று மணிமேகலை சொல்வதும், தமிழ் மக்கள் என்றென்றும் அந்த “ஆரிய” வழக்கத்தில் ஊறித் திளைத்தவர்கள் என்றே பறை சாற்றுகிறது. 

இந்த ஆரியம், 3500 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததாக இவர்கள் கூறும் ஆரியப் படையெடுப்புக்குப் பின் வந்ததல்ல. 
சக்கரவாளச் சக்கரவர்த்தியான இந்திரனது பூத கணமான நாளங்காடிப் பூதம் புகாரில் கோவில் கொண்ட காலத்திலேயே இருந்திருக்க வேண்டும்.
சம்புத் தீவைக் காபாற்ற வேண்டி, தவமிருந்து காவல் தெய்வமான சம்பாபதித் தெய்வம் புகார் நகரில் கோவில் கொண்டபோதே இருந்திருக்க வேண்டும்.
அந்த சம்பாபதித் தெய்வம் அழைத்த தெய்வங்கள், உலகின் வட அட்சப் பகுதிகளில் இரவு பகலாகத் தெரியும் நட்சத்திர, கோள்கள் கூட்டங்கள் ஆகும்.
 
நாமிருக்கும் தமிழ் நாட்டில் சப்த ரிஷி மண்டலம் என்னும் நட்சத்திரக் கூட்டம் மட்டுமே இரவு பகலாக, வருடம் முழுவதும் சுற்றிக் கொண்டிருப்பது தெரியும். இன்னும் வடக்கே செல்லச் செல்ல, நமது பூமியின் அச்சு காட்டும் பகுதியைச் சுற்றி, ஒரு சக்கரம் போல அண்டங்கள் சுழல்வதைக் காணலாம். அவற்றில் உள்ள நட்சத்திரக் கூட்டங்கள் அந்தப் பகுதியைச் சுற்றி வருவது போன்ற தோற்றத்துடன் சக்கரம் போலச் சுழல்வதைக் காணலாம். அங்கு பகல் ஆறு மாதங்கள், இரவு ஆறு மாதங்கள். இருப்பினும், அண்டங்கள் அந்தப் பகுதியைச் சுற்றுவதைக் காண முடியும். அந்தப் பகுதியின் முகடு போல இருப்பது வட துருவமாகும். அதை மேரு மலையின் முகடு என்றனர்.
சக்கராவாளம் எனப்பட்ட அந்தப் பகுதி, முன் பகுதியில் சொல்லப்பட்ட தேவருலகப் பகுதி ஆகும். பஞ்ச பாண்டவர்களுக்கும் தேவர்களுக்குப் பிறந்தவர்கள் என்று சொல்வது இந்தப் பகுதி மக்களுக்குப் பொருந்தும்.
இப்படி ஒரு பகுதி இருந்தது என்று ஆணித்தரமாக சொல்வதாகப் புறநானூற்றுப் பாடல் அமைந்துள்ளது. மோரியர் என்பவர் மலையைக் குடைந்து தேரினைச் செலுத்திய கதை பாரதத்தின் வேறு பகுதிகளிலோ அல்லது மஹாபாரத, ராமாயணத்திலோ காணப்படவில்லை.
வெள்ளி மலை என்று சொல்லப்படும் இமய மலையைக் குடைந்து வந்த அந்த மோரியர் ஆரியர்களாக இருக்கலாமே என்று கேட்கலாம். அதற்கு விடை தேடினால் நமக்குக் கிடைப்பது, ஆரியக் கதை அல்ல. மாறாக, நம் தமிழன்தான் பிற இடங்களுக்குச் சென்றான் என்பதன் அடையாளங்களே கிடைக்கின்றன. அந்த அடையாளங்கள் மங்கோலிய மொழி, ஹங்கேரிய மொழி போன்றவற்றில் கலந்துள்ள தமிழ்ச் சொற்களாகத் தெரிகின்றன. 
அவற்றையும் பார்ப்போம். 

(பிகு:- கோதமைக் கதையில், சக்கரவாளத் தேவர்கள் அவளுக்கு பிறப்பு - இறப்பு இயல்புகளை எடுத்தியம்பி மகன் இறந்ததை ஏற்றுக் கொள்ள வைக்கிறார்கள். தன் மகனுக்கு ஈமச் சடங்கு செய்த பின் கோதமையும் இறந்து விடுகிறாள்.)


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard