ஆண்டில் மூன்று மாதங்கள் மட்டுமே, சூரிய வெப்பம் உள்ள ஜெர்மனியில், சோலார் மின் உற்பத்தி சாத்தியம் எனில், ஆண்டில் எட்டு மாதங்கள் வெப்பம் உள்ள நம் இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில், ஏன் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியாது?
எங்கள் வீட்டின் கீழ்தளத்திலும், மேல் தளத்திலும், ஏழு அறைகள் உள்ளன. இந்த அறைகளில், பல்புகளும், மின் விசிறிகளும் இயங்க, ஒரு கிலோவாட் மின்சாரம் தேவை. இந்தத் தேவைக்காக, பத்து சோலார் தகடுகளைப் பொருத்தியுள்ளேன். இந்தத் தகடுகள், சிலிக்கானால் ஆனவை. சூரிய ஒளியிலுள்ள புற ஊதாக் கதிர்கள், இந்தத் தகட்டின் மீது படும்போது, இதிலுள்ள சிலிக்கான், இக்கதிர்களை மின் ஆற்றலாக மாற்றும். இந்த மின்சார ஆற்றல், ஒயர்களின் வழியாக, மெயின் போர்டில் சேரும்படி, இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், எட்டு சோலார் இன்வெர்ட்டர் பேட்டரிகளிலும், மின்சாரம் சேமிக்கப்படுகிறது.
சூரிய வெளிச்சம் உள்ள பகல் நேரத்தில் மட்டும் தான், இந்தத் தகடுகளில், மின்சாரம் பெற முடியும். சேமிக்கப்பட்ட இன்வெர்ட்டர்கள் மூலம், இரவு நேரங்களில் மின்சாரம் பெறுகிறோம். சோலார் தகடு, இன்வெர்ட்டர், பேட்டரிகள் அனைத்தையும் சேர்த்து, இரண்டரை லட்சம் ரூபாய் செலவானது. வீடு முழுவதும், சோலார் மின் இணைப்புக் கொடுத்திருப்பதால் தான், இத்தொகை. நடுத்தர சிறிய வீடுகளில் இத்தொகை பாதியாகக் குறையும். ஒரு வீட்டில் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் சோலார் இணைப்புக் கொடுத்தால் செலவு குறையும்.
சோலார் தகடுகளை ஒருமுறை பொருத்திவிட்டால், 25 ஆண்டுகளுக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. எட்டு பேட்டரிகளுக்கு, 80 ஆயிரம் ரூபாய் வரை செலவானது. இந்த பேட்டரிகளை, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.