New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆரிய இந்திரன், தமிழரின் கடவுள்!


Guru

Status: Offline
Posts: 24603
Date:
ஆரிய இந்திரன், தமிழரின் கடவுள்!
Permalink  
 


9. ஆரிய இந்திரன், தமிழரின் கடவுள்!

 
தச்யுக்களுக்கு எதிரியாகச் சித்தரிக்கப்பட்ட ஆரிய இந்திரனுக்குத் தமிழ் நாட்டில் மவுசு அதிகம்.
தமிழ் நாட்டில் இந்திரனுக்குக் கோவிலும், விழாவும் தொன்று தொட்டு இருந்திருக்கின்றன 
ஆங்கிலேயனுக்குத்தான் தமிழர் சரித்திரம் தெரிந்திருக்கவில்லை .
அவன் பேசிய ஆரியப் படை எடுப்பை அப்படியே தத்து எடுத்துக்கொண்ட தமிழ் நாட்டு அறிவுஜீவிகளாவது, தமிழ் மரபில் இந்திரன் ஒரு தெய்வம்தானே என்று ஒரு கணம் நினைத்துப் பார்த்திருக்கக் கூடாதா?
தொல்காப்பியர் கூறும் ஐவகை நிலங்களில் மருத நிலத்துக்குக் கடவுள் இந்திரன் என்பதுகூட  அவர்களுக்குத் தெரியாதா?

தெரியாமல் இருந்திருக்காது.
ஆனால் அவர்கள் எல்லாம் பகுத்தறிவுவாதிகளாயிற்றே!
கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று சொல்லும் பகுத்தறிவு வாதிகளுக்கு, தமிழர் வழிபட்ட தெய்வங்கள் எல்லாம் ஒரு பொருட்டா என்ன?
சிலம்பைப் பாராட்டி, கண்ணகி சிலைக்குப் போராடினாரே, அவர் சிலப்பதிகாரம் கூறும் இந்திர விழாவை எப்படி மறந்திருப்பார்?
அந்த இந்திரனைத் தானே ஆரியன் என்றும், ஆரிய வெள்ளைக்குத் துணை போனவன் என்றும், கருப்பு நிறத் திராவிடனை விரட்டியவர்கள் என்றும்  சொன்னார்கள்.
அப்படி விரட்டப்பட்டது உண்மை என்றால், ஓடி வந்த தமிழன் அந்த இந்திரனை ஏன் வழிபட வேண்டும்?
இந்த முரண்பாடு அன்று முதல் இன்று வரை ஏன் இந்த திராவிடத் தலைவர்களுக்கு உரைக்கவில்லை?
இந்த முரண்பாட்டைப் புரிந்து கொள்ளப் பகுத்தறிவு வேண்டாம்.
சாதாரண அறிவே போதும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

அதனால் அவர்களுக்குப் புரியாமல் இல்லை  தெரிகிறது. 
அவர்களுக்கும் தெரியும், தமிழன் வேறு, சிந்து சமவெளியில் இருந்தவன் வேறு என்று. ஆனால் இந்த ஆட்டம், அவர்களது ஏமாற்று அரசியலுக்கு - பிரித்தாளும் அரசியலுக்குத் தேவைப்பட்டது.
அது என்ன என்பதைப் பற்றி பிறகு பார்ப்போம்.
இப்பொழுது, இந்திரன் என்பவன் எப்படி தமிழர் வாழ்வில் முக்கியப் பங்கு கொண்டிருந்தான், அவன் யார், அவனைப் பற்றிய இந்தக் கதைகள் எல்லாம் ஏன், அவனை ஏன் தெய்வமாக வழிபட்டார்கள் என்று பார்ப்போம். இந்திரன் மட்டுமல்ல, அவனது வில், ஆயுதம், வெண்ணிறமான ஐராவதம் என்னும் அவன் யானை என்று அவன் சம்பத்தப்பட்ட எல்லாமே வழிபடத் தக்கதாக நினைக்கப்பட்டது.

 சமீபத்தில் நடந்து முடிந்த செம்மொழி மாநாடு என்னும் திராவிட மாநாட்டில், 'ஆரியத் தாக்கம் செம்மொழித் தமிழில் ஏற்படுத்திய கருத்துச் சிதைவு" என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை வாசிக்கப்பட்டது. இந்த மாநாடு உண்மையிலேயே தமிழ் குறித்த மாநாடாக இருந்திருந்தால், அல்லது தமிழின் உயர்வையும், தொன்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் மாநாடாக இருந்திருந்தால் இந்தக் கட்டுரை அனுமதிக்கப்பட்டிருக்காது.

ஆரியக் கடவுளர்களையும், ஆரிய மூட பக்தியையும் பாரதம் திருவிளையாடல் புராணம் போன்ற நூல்களின் மூலமாகத் தமிழில் நுழைத்து விட்டார்கள் என்று இந்தக் கட்டுரை குற்றம் சாட்டுகிறது. தருமிக்கு இறையனார் என்னும் சிவ பெருமானார் கொடுத்த பாடல் குறுந்தொகையில் இரண்டாவது பாடலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. அந்தப் பாடலையும் மூட பக்தியில் நுழைக்கப்பட்ட பாடல் என்கிறது அந்தக் கட்டுரை.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இவையெல்லாம் ஆரியன் புகுத்தினது என்றால், 'உண்டாலம்ம' என்று தொடங்கும் புற நானூற்றுப் பாடலை ( 182 ) திராவிட விரும்பிகள் தங்களுக்கு வேண்டும்  என்கிறபோது மேற்கோள் காட்டுகிறார்களே, அது என்ன சொல்கிறது?
உண்டாலம்ம இவ்வுலகம் என்று சொன்னவுடன், "இந்திரன் அமிழ்தம் இயைவதாயினும்" என்று இந்திரனது அமிர்தமே கிடைத்தாலும் அதையும் தனித்து உண்ண மாட்டார். பிறருடன் பகிர்ந்துதான் உண்ணுவார் என்கிறதே அந்தப் பாடல்?
இந்திரன் அமிழ்து என்று மூட நம்பிக்கையைச் சங்கப்புலவரே புகுத்துகிறார்  என்று ஏன் சொல்லவில்லை?
சங்க நூல்கள் படித்திருந்தால் சொல்வார்கள்.
அதிலும் அந்த நூல்களில் எந்தக் கருத்தில் சொல்லப்பட்டதோ அந்தக் கருத்தைப்  படித்திருந்தால் சொல்வார்கள்.
பிறப்பினால் எல்லா உயிரும் ஒக்கும், அதனால் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று புது அர்த்தம் சொல்பவர்கள்  இவர்கள்! 
எப்படி சங்கக் கருத்துக்களை அதன் அர்த்தத்தில் புரிந்து கொள்வார்கள்?



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

புற நானூறு அன்றைய தமிழ் மக்கள் வாழ்ந்த வகையை, அவர்கள் கலாச்சாரத்தைச்  சொல்வது.
அந்த மக்கள்,  இந்திரனை தேவர்கள் அரசன், நூறு யாகங்கள் செய்ததால் இந்திர பதவி அடைந்தவன, அமிர்தம் உண்டவன, அதனால் சாகா வரம் பெற்றவன் என்று போற்றினர். இவை எல்லாம் கட்டுக்கதை அல்ல. மூட நம்பிக்கையும் அல்ல. 
இந்த எண்ணங்கள் அனைத்துக்கும் உட் பொருள் உண்டு.
அவை  என்ன என்று பார்ப்பதற்கு முன்னால், இந்திரன் என்னும் கடவுள் எப்படி எல்லாம் தமிழர் வாழ்வில் இணைந்திருந்தான்  என்று பார்ப்போம்.

அந்நாளில், இந்திரனுக்குக் கோவில் இருந்தது. இந்திரனது ஆயுதம் வஜ்ராயுதம் எனப்பட்டது. அதனால் இந்திரன் கோவிலை வஜ்ரக் (வச்சிரக்) கோட்டம் என்றனர். ஆய் அண்டிரன் என்னும் அரசன் "வச்சிரத் தடக்கை நெடியோன் கோவிலுக்கு" அதாவது வச்சிரக் கோட்டத்துக்கு வந்த போது அந்தக் கோவிலில் முரசம் முழங்கி வரவேற்றார்கள். (புற நானூறு - 241 )



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

சிலப்பதிகாரத்தில் இந்திர விகாரம் ஏழு என்று வருகிறது. இது புத்த மதத்தவர்களது என்ற எண்ணம் ஒன்று உண்டு. பௌத்தத்திலும் இந்திரன் வழிபடப்படுகிறான். ஆனால் 
இந்திரனுக்கு விழா எடுத்து ஹிந்து மரபில் வழிபட்ட சிலப்பதிகாரக் காலத்தில் இருந்த இந்திர விஹாரம் ஹிந்து சமயம் சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். பொதுவாக விஹாரம் என்னும் இடங்களில் துறவிகள் தங்குவதும், ஆன்மீக  சபைகள் கூட்டுவதும் உண்டு.

வைஸ்ய வருணத்தில் நிலை பெற்று வாழ்ந்த கோவலனது தந்தைமாசாத்துவான், தன் மகன் இறந்த செய்தியும், கண்ணகி மதுரையை எரித்து, வானுலகம் சென்ற செய்தியும் கேட்ட பின், தன் செல்வங்கள் எல்லாவற்றையும் தானம் செய்து விட்டு, இந்திர விஹாரம் ஏழனுக்குச்சென்று சந்நியாசம் வாங்கிக் கொண்டார் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

அதே போல, கோவலனும் கண்ணகியும், புகார் நகரை விட்டு மதுரைக்குச் செல்லும் போது, மணிவண்ணன் கோவிலில் பாம்பணையில் பள்ளி கொண்ட பெருமாளைத் தரிசித்து விட்டு, பிறகு இந்திர விகாரம் ஏழனுக்குச் சென்று வழிபாட்டு  விட்டு அதன் பிறகு பயணத்தைத் தொடங்கினர் என்று வருகிறது. (மாசாத்துவான் சந்நியாசம் பெற்றது இங்குதான் இருக்கும்) 
இப்படிச் செய்ய அவர்களை எந்த ஆரிய மூட நம்பிக்கை அடிமைப்படுத்தியது?
இந்திரனால் கொல்லப்பட்டு, விரட்டப்பட்ட மக்களாக இருந்திருந்தால், வந்த இடத்தில் இப்படி அந்த இந்திரனுக்கே கோவில் கட்டி கும்பிட்டிருப்பார்களா? 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

அடுத்து இந்திர வில் என்பதைப் பற்றிப் பார்ப்போம். 
இந்திரன் வில் என்பது சங்க நூல்களில் அடிக்கடி சொல்லப்படுகிறது. வானவில்லை இந்திரன் வில்லுக்கு ஒப்பிட்டனர். சேரமான் யானைக் கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையின் நாட்டில் மக்கள் எந்தவிதக் கஷ்டமும் படவில்லை என்று சொல்லும்போது, அந்த நாட்டு மக்கள் இந்திரன் வில்லைத் தவிர, பகைவரது கொலை வில்லை அறியாதவர் என்கிறது புறநானூறு  (20 ).


'திரு வில்' என்று அழைக்கப்பட்ட இந்திரவில் ஐகுருநூறு, சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம் என்று பல நூல்களிலும் சொலல்ப்படுகிறது.
இவை எல்லாமே மூட நம்பிக்கையை வளர்ப்பது என்றும், ஆரியத் தாக்கத்தின் விளைவு என்றும் சொல்லலாமே?

சிலப்பதிகாரத்தில் வேட்டுவ மக்கள், கண்ணகி வானுலகம் போவதைக் காண்கிறார்கள். அது தெய்வச் செயல் என்று மகிழ்ந்து, குன்றக் குரவை ஆடுகிறார்கள். அதற்கு முன்  அருவியில் நீராடுகிறார்கள். அந்த அருவியானது மலை மேலே இருக்கும் பல வித வண்ணத் துகள்களை அடித்துக் கொண்டு 'இழும்' என்ற சப்தத்துடன் கொட்டுகிறது. அந்த வண்ணத் துகள்கள் அருவி நீரில் இந்திரனது வில் போலத் தெரிகிறது என்று பாடுகிறார்கள்.
வேட்டுவர்களுக்குக் கூட இந்திர வில் பற்றித் தெரிந்திருந்தால், எந்த அளவு, இந்திரன் என்னும் தெய்வமும் அவன் வில்லும் மக்களால் வணங்கப் பட்டிருக்க வேண்டும்? வெறும் ஆரியத் தாக்கத்தால் இப்படி நிகழுமா?

வில் மட்டுமல்ல. இந்திரனது ஆயுதமான வஜ்ராயுதம் ஆங்காங்கே சங்க நூல்களில் பேசப்படுகிறது. ஆய் அண்டிரன் சென்ற கோவிலைப் பற்றிச் சொல்லும் புறப்பாடல் வச்சிரத் தடக்கை என்கிறது. வச்சிராயுதம் ஏந்திய கையை உடைய இந்திரன் என்று அந்தப் பாடல் சொல்கிறது. 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சிலப்பதிகாரம் விவரிக்கும் இந்திர விழா, இந்திரனை, தமிழ்ப் பகைவனாகச் சொல்ல முடியாதவாறு, ஒரு முக்கியக் கடவுளாகக் காட்டுகிறது. அந்த விழா நடக்கும் ஊர் புகார் நகரம்.
அது மருத வளநாடனான சோழனின் தலை நகரம்.
மருதத்தின் கடவுள் இந்திரன்.
இந்திரனுக்கு மட்டுமல்ல, அவனது, முரசு, அவனது வெண்ணிற யானை, அவனது மரமான கற்பகத் தரு ஆகிய அனைத்துக்குமே தனித் தனிக் கோவில் இருந்தது என்று சிலப்பதிகாரம் காட்டுகிறது.

இந்திர விழா துவங்கும் முன்னர்,வச்சிரக் கோட்டத்திலிருந்து  முரசை விமரிசையாக எடுத்து வந்து, இந்திரனின் ஐராவதம் என்னும் வெள்ளை நிற யானை இருக்கும் வெள்யானைக் கோட்டத்துக்குக் கொண்டு வருகிறார்கள்.
பிறகு அந்த யானையின் முதுகில் முரசினை ஏற்றி, விழாவினைப் பற்றி முரசறிவித்துப் , பிறகு கற்பகத தரு இருக்கும் தரு நிலைக் கோட்டத்திற்குச் சென்று, அங்கே இந்திரக் கொடி ஏற்றுகிறார்கள் என்ற வர்ணனை வருகிறது. 

இன்றைக்கு கோவிலில் பிரம்மோத்சவம் ஆரம்பிக்கும் முன் கொடியேற்றி ஆரம்பிக்கிறோம். அது போல அந்த நாளில், இந்திரோத்சவம் நடந்தது.
அந்த உற்சவத்தில் இந்த்ரத்வஜம் எனப்படும் இந்திரனது கொடி ஏற்றப்படும்.
புகார் நகரில் நடந்த இந்திர விழா இந்திரோத்சவமே.
இந்திரன் கோவில்களில் இது நடந்தது.
காலப்போக்கில் இந்திரன் கோவில்கள் மறைந்த பிறகு, பிற தெய்வக் கோவில்களில் நான்முகப் பிரம்மனை முன்னிட்டு பிரம்மோத்சவம் செய்யலானார்கள்.

புகார் நகரில் நடந்த இந்திர விழாவில் இந்திரனுக்கு மங்கள நீர் அபிஷேகம் செய்யப்பட்ட விவரங்கள் வருகின்றன. இதை விட முக்கிய விவரம், இந்திர விழாவுக்கு வந்த ஒரு பயணியைப் பற்றியது.
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard