மகாபாரதப் போர் முடிந்த பிறகு, கிருஷ்ண த்வைபாயனர் என்னும் வியாசர் அவர்கள், வரப்போகும் கலி யுகத்துக்கு உதவக்கூடிய விஷயங்களை எல்லாம் தொகுக்கத் தொடங்கினார். அப்படி அவர் செய்த தொகுப்புகளில் ஒன்று வேதத் தொகுப்பு. அவர் வேதங்களை நான்காக வகைப்படுத்தினார். ரிக், யஜூர், சாம, அதர்வண என்னும் அந்த நான்கு வேதங்களும், அவை சொல்லப்பட்ட காலத்தால் வரிசைப் படுத்தப் படவில்லை. அதாவது வெவ்வேறு காலக் கட்டத்தில் சொல்லப்பட்ட வேதங்களை அவற்றில் காணலாம். அதனால் காலத்தால் ரிக் வேதம் முந்தியது, அதர்வண வேதம் பிந்தியது என்று சொல்ல முடியாது. வியாசர் அவர்கள் ஆங்காங்கே இருந்து எடுத்து தொகுத்திருக்கிறார் என்று தெரிகிறது. அதிலும் கலி யுகத்துக்கு என்று கொடுத்திருக்கிறார். அவற்றில் எவ்வளவு அழிந்து போனதோ நமக்குத் தெரியாது. வேதங்கள் வாய் வழியாகவே வந்திருக்கவே, அவற்றைச் சொல்பவர்கள் மறைந்த பிறகு, அவர்களிடமிருந்து யாரும் கற்றுக் கொள்ளாமல் இருந்திருந்தால் அவ்வளவுதான். அந்த வேதப் பகுதிகளை நாம் இழந்தவர்கள் ஆகிறோம்.
அதிலும் முஸ்லீம் படை எடுப்பின் போது வேதம் அறிந்தவர்கள் பெரிதும் அழிந்தனர். ராம் சரித மானஸ் என்று ராமாயணத்தை எளிய மக்களும் படிக்கும் வண்ணம் எழுதிய துளசி தாசர் அவர்கள், தன்னுடைய மற்றொரு படைப்பான 'துளசி சதகம்' என்னும் நூலில் அயோத்தியில் ராமர் பிறந்த இடம் அழிக்கப்பட்டதை விவரிக்கும் போது, பூணுல் அணிந்தவர்கள் எல்லாம் கொல்லப்பட்டனர். அப்படி கொல்லப்பட்டவர்களது மண்டை ஓடுகள் மலை மலையாகக் குவிக்கப்பட்டன என்கிறார்.
