திராவிட இயக்கத்தைச் சேர்ந்த வெறியர்கள் இந்து சடங்குகளையும், நம்பிக்கைகளையும் கண்மூடித்தனமாக வசைபாடுவது தெரிந்த விஷயம் தான். சில சமயங்களில் பித்தம் தலைக்கேறி ஏதாவது ஒரு வேதமந்திரத்தையோ அல்லது வேத இலக்கியத்தில் உள்ள படிமத்தையோ எடுத்துக் கொண்டு, அதற்குப் “பொருள் கூறி” அது உலகத்திலேயே அருவருப்பான விஷயம் என்றெல்லாம் பிரசாரம் செய்வார்கள்.
உதாரணமாக, பாணிக்ரஹணம் எனப்படும் கைத்தலம் பற்றும் சடங்கின் போது மணப்பெண்ணை நோக்கிச் சொல்லப் படும் ஒரு மந்திரம்:
सोम: प्रथम: विविदे गन्धर्वो विविद उत्तर: ॥
तृतीयो अग्निस्ते पति: तुरीयास्ते मनुष्यजः ॥
ஸோம: ப்ரதம: விவிதே கந்தர்வோ விவித உத்தர:
த்ருதீயோ அக்னிஸ்தே பதி: துரீயாஸ்தே மனுஷ்யஜ:
(ரிக்வேதம் 10.85.40)
“முதலில் சோமனும், இரண்டாவதாகக் கந்தர்வனும், மூன்றாவதாக அக்னியும் உன்னை சுவீகரித்தனர். பெருமைக்குரிய தேவர்களால் சுவீகரிக்கப் பட்ட உன்னை, இறுதியாக மனிதனாகிய நான் வரிக்கிறேன்”
பார்ப்பனர்களின் இந்த மந்திரம் பெண்மையை இழிவு செய்கிறது, இழிவான பெண்ணை தூய்மைப் படுத்துவது என்பது தான் இதன் பொருள் என்று ஒரு அவதூறு. “மூன்று பேர் மணந்த பென்ணை நாலாவதாக மணக்கிறேன் என்று சொல்கிறான், எந்த மானமுள்ள ஆண்மகனாவது இப்படிச் செய்வானா?” என்பது “கற்பு என்பதே ஒரு பொய்க் கற்பிதம்” என்று பேசுவதாகச் சொல்லிக் கொண்ட இந்த இயக்கத்தின் இன்னொரு அவதூறு.