New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நீதி, தர்மம், திருவள்ளுவர், சமணம்


Guru

Status: Offline
Posts: 24811
Date:
நீதி, தர்மம், திருவள்ளுவர், சமணம்
Permalink  
 


நீதி, தர்மம், திருவள்ளுவர், சமணம்

 

பிப்ரவரி 7, 2008 திண்ணை இதழில் ஜெயமோகன் எழுதியிருக்கும் “நீதியும் நாட்டார் விவேகமும் ....“ என்ற கட்டுரை குறித்து சில விமரிசனங்கள்.

// ஜெ.மோ: இவற்றில் உச்சம் திருவள்ளுவர் என்றும் சமண மரபில் ஆச்சாரிய குந்தகுந்தர் என்றும் குறிப்பிடப்படும் சமண முனிவரால் எழுதப்பட்ட 'திருக்குறள்' //

திருவள்ளுவரின் சமயப் பார்வை பற்றிய ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அவர் சைவம், வைணவம் இவற்றை உள்ளடக்கிய (இன்று இந்துமதம் என்றழைக்கப் படும்) வேத சமயத்தினர், சமணர் அல்லது பௌத்தர் ஆகிய மூன்று தரப்பிற்கும் பல்வேறு வலுவான ஆதாரங்கள் வைக்கப் படுகின்றன. இந்நிலையில் முடிந்த முடிபாக இவ்வாறு ஜெயமோகன் எழுதியிருப்பது சரியானதன்று. சமண மறுமலர்ச்சி பற்றி முழங்கும் தருண் சாகர் போன்ற ஜைன ஆசாரியர்கள் தான் தங்கள் பிரசார மேடைகளில் எல்லாம் “குந்தகுந்தர் தான் திருவள்ளுவர்” என்று பேசி வருகிறார்கள். சமீப காலங்களில் இந்த rhetoric அதிகமாகியுள்ளது என்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் ஆய்வு நோக்குள்ள ஒரு எழுத்தாளரின் இத்தகைய நிலைப்பாடு வியப்பூட்டுகிறது.

tiruvalluvar.jpg

நீதி என்ற கருத்தியல் அடிப்படையை மட்டுமே கொண்டு திருவள்ளுவரின் “சமணத்” தன்மையை ஜெயமோகன் முன்னிறுத்துவதாகத் தெரிகிறது. ஆனால் திருவள்ளுவர் கண்டிப்பாக ஏன் சமணராகவும் (பௌத்தராகவும்) இருந்திருக்கவே முடியாது, அவர் இந்து/வேத சமயத்தினராக மட்டுமே இருந்திருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் கருத்தியல் மட்டுல்ல, குறள் நேரிடையாகக் குறிப்பிடும் பருப்பொருள் உண்மைகள், உவமானங்கள், கூறுபொருள்கள் இவை அனைத்தின் மூலமும் உறுதி செய்யப் படுகின்றன.

இது குறித்து யுகமாயினி என்ற இலக்கிய சிற்றிதழில் ஜாவா குமார் என்பவர் எழுதிய கட்டுரையை இதன் இறுதியில் பிற்சேர்க்கையாக இணைத்துள்ளேன். இந்தக் கட்டுரை இத்தகைய முக்கிய ஆதாரங்களை சுருக்கமாகத் தொட்டுக் காண்பிக்கின்றது. .

// ஜெ.மோ: சமணர்களால் உருவாக்கப்பட்ட நீதி அதுவரை இந்திய சமூகத்தில் இல்லாதிருந்த பல முக்கியமான அம்சங்களைக் கொண்டிருந்தது. ஒன்று அதற்கு மானுடமளாவிய ஒரு நோக்கு இருந்தது. அடிப்படை விழுமியங்களையாவது அனைத்துமானுடருக்கும் சமமாக வைக்க அதனால் இயன்றது. இரண்டு, வன்முறை சாராமல் மனிதனின் கருணையையும் அகச்சான்றையும் நம்பியே பேசும் நீதியை அவை முன்வைத்தன. //

நீதி என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு இட்டுச் செல்லுவது, வழிநடத்துவது என்று பொருள். அதனால் தான் நீதி நூல்கள் தத்துவ விவாதங்களாகவோ அல்லது தேடல்களாகவோ அல்லாமல் வெளிப்படையான அறவுரைகளாவும், இதைச் செய், இதைச் செய்யாதே என்று கட்டளையிடும் உபதேசங்களாகவும் உள்ளன. ஆனால், இந்த நீதியின் ஊற்றுக் கண்ணாக தர்மம் என்கிற கோட்பாடு (principle) உள்ளது. நீதிகளை (morals, ethics) உருவாக்குபவர்கள் அவற்றின் உண்மைத் தன்மையை தர்மம் என்ற உரைகல்லில் உரைத்தே உறுதி செய்ய வேண்டும். தர்மம் என்கிற மாறாத உண்மையின் கனி தான் நீதி என்பது.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

இந்த தர்மம், மானுட அறம் என்கிற கோட்பாடு வேத ரிஷிகளாலேயே முதன்முதலில் எடுத்துரைக்கப் பட்டது. ரிக்வேத சம்ஹிதைகளிலேயே உலகின் மாறாத நியதி தர்மம் என்ற கருத்து உள்ளது. உபநிஷதங்கள் இதனை தங்கள் தத்துவப் பின்புலத்தில் வளர்த்தெடுக்கின்றன. உதாரணமாக, பிரகதாரண்ய உபநிஷத்தில் தர்மம் பற்றிய மிக விரிவான உரையாடல்கள் உள்ளன. பின்னர் இதிகாசங்கள் வாழ்க்கைச் சம்பவங்கள், கதைகள் மூலம் அறம் பற்றிய பல பரிமாணங்களை வெளிக் கொணர்கின்றன.

ந வை ராஜ்யம் ந ச ராஜா ஆஸீத், ந ச தண்டோ ந தாண்டிக:
தர்மேணைவ ப்ரஜா: ஸர்வே ரக்ஷந்தி ஸ்ம பரஸ்பரம் 


“அரசும் இல்லை அரசனும் இல்லை; தண்டனைகளும் இல்லை, தண்டிப்பவனும் இல்லை.
மனிதர்கள் அனைவரும் தர்மத்தினாலேயே தங்களை பரஸ்பரம் பாதுகாத்துக் கொண்டனர்”

என்கிற மகாபாரத சுலோகம் குறள் கூறும் “அறம்” என்ற கருத்துடன் முழுதும் ஒன்றுபடுகிறது. “என்பிலதனை வெயில் போலக் காயுமே அன்பிலதனை அறம்” என்று வள்ளுவர் கூறுவது நீதி என்ற கருத்தாக்கத்திற்கும் அப்பாற்பட்ட உலகின் இருத்தலுக்குக் காரணமாகிய இந்த தர்மம் பற்றியே, இதனையே, “ஜகத ஸ்திதி காரணம்” (உலகின் இருத்தலுக்குக் காரணமாகிய தர்மம்) என்று சங்கரர் தன் உரை ஒன்றில் கூறுகிறார்.


1176546492_vhp.jpg
தர்மோ ரக்ஷதி ரக்ஷித: (தர்மத்தைக் காப்பவரை தர்மம் காக்கும்) - விசுவ ஹிந்து பரிஷத் சின்னம்


இந்து மதம், பௌத்தம், சமணம் ஆகிய மூன்று மதங்களும் தர்மம் என்கிற இந்த அடிப்படைக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்பவை தான். அதனோடு கூட, ஒவ்வொரு மதத்தின் இறையியலிலும் இந்த சொல்லுக்கான சிறப்புப் பொருள்களும், விளக்கங்களும் அளிக்கப் படுகின்றன. அதனால் தான் இப்போது தலாய் லாமா உள்ளிட்ட பல சமயத் தலைவர்கள் இந்த மூன்று மதங்களையும் பொதுவாகக் குறிக்க கிழக்கத்திய மதங்கள் (eastern religions) என்பதற்குப் பதிலாக தர்ம மதங்கள் (Dharmic religions) என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.

எனவே சமணம் தான் மானுடம் அளாவிய அறக் கோட்பாட்டையே “உருவாக்கியது” என்பது முற்றிலும் பிழைபட்ட புரிதல்.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

// பேராரசுக்குரிய நீதி எப்போதும் தண்டனைகளால் அடிக்குறிப்பிடப்பட்டது. வாளால் பரப்பபடுவது, ரத்தத்தால் நிறுவப்படுவது.
வணிகநீதி இந்திய நிலப்பகுதியில் இரு பெரும் மதங்களின் குரலாக ஒலித்தது. பௌத்தம் சமணம் இரண்டுமே அடிப்படையில் வைசியர்களின் மதங்கள். பின்னர் தொழில்செய்யும் சூத்திரர்களின் மதங்களாக அவை வளர்ந்தன. பௌத்தமும் சமணமும் வணிகத்திற்கு இன்றியமையாத அடிப்படை நெறிகளை இந்திய நிலப்பகுதி முழுக்கக் கொண்டு சென்றன. //

“தண்டோ தமயதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீஷதாம்” (அடக்குபவைகளில் தண்டனையாகவும், வெற்றியை நாடுபவர்களிடத்தில் நீதியாகவும் நான் இருக்கிறேன்) என்று கீதையில் (10.38) கிருஷ்ணன் கூறுகிறார்.

வணிக நெறி என்பது அரசிற்குக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு அரசனால் நிர்வகிக்கப் பட்ட ஒன்றாகவே இருந்ததே அன்றி அதற்கு எதிரான, மாற்றான ஒன்றாக இல்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். தங்கள் பயணங்களில் கொள்ளைக் காரர்களாலும், வழிப்பறிகளாலும் தாக்கப் பட்ட இந்திய வணிகர்கள் அவர்களை எதிர்த்துப் போராடவுமில்லை, கருணையினால் மன்னித்து விட்டுவிடவும் இல்லை. மாறாக தங்களைக் காக்க வேண்டி மன்னனிடமே சென்று முறையிட்டனர். சம்ஸ்கிருத நாடகங்களிலும், சங்க இலக்கியத்திலும் இதற்கான சான்றுகள் பல உள்ளன. சட்டமும், தண்டனைகளும் நீதியின் ஒரு முக்கியமான அங்கம் என்பதை அவர்கள் தெளிவாகவே உணர்ந்திருந்தனர்.

திருக்குறளில் வணிகம் என்று ஒரே ஒரு அதிகாரம் உள்ளது, ஆனால் மன்னனைப் பற்றியும் அரசாட்சி பற்றியும் பற்பல அதிகாரங்கள் உள்ளன. “ஒறுத்தல்” (தண்டனை) என்கிற சொல் பல இடங்களில் புழங்குகிறது - “கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களைகட்டதனொடு நேர்” என்பதில் உள்ளது போல.

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு 
இறை என்று வைக்கப் படும். 

வானோக்கி வாழும் பயிர் என்ப மன்னவன் 
கோல்நோக்கி வாழும் குடி.

அந்தணர் நூற்கும், *அறத்திற்கும்* ஆதியாய் 
நின்றது மன்னவன் கோல்.

இப்படி மன்னனே சமுதாய நலனுக்கு அச்சாணி என்று அறுதியிடும் குறட்பாக்களை சொல்லிக் கொண்டே போகலாம். இந்த வகையில் குறள் மகாபாரதம் கூறும் அதே நீதிக் கருத்துக்களை, விவாதப் பின்புலங்கள் தவிர்த்து அவற்றின் சுருக்கமான வடிவில் வைக்கிறது என்பதே சரியான முடிவாக இருக்கும். அதன் பார்வை எந்த சமண நூலையும் விட மகாபாரதத்திற்குத் தான் மிக நெருக்கத்தில் உள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

“சொல்லக் கொடாத சுயோதனன் பின் ஏன்
கொல்லக் கொடுத்தான் குமரேசா - மெல்லவே
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்பு போல்
கொல்லப் பயன்படும் கீழ்”


என்பது குமரேச வெண்பா என்னும் நூலில் உள்ள ஒரு பாடல். முதல் இரண்டு அடிகளில் ஒரு உதாரணம், சம்பவம் அல்லது கதையையும் (இவை பெரும்பாலும் இதிகாச, புரானங்களில் இருந்தே இருக்கும்) அடுத்த இரண்டு அடிகளில் குறட்பாவின் மூல வடிவையும் கொண்டு அமைந்த நூல் இது. இதே போன்று சிவசிவ வெண்பா என்றும் ஒரு நூல் இருக்கிறது. குறட்கருத்துக்களுக்கு வாழும் உதாரணங்களாக இந்த நூலாசிரியர்கள் காட்டுவது இந்து புராணங்களையும், கதையாடல்களையும் தான், சமணத்தில் பல குறட்பாக்களுக்கு உதாரணமே கிடைத்திருக்காது.

மேலும் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று வாழ்க்கைப் பயன்களையும் (த்ரிவர்கம்) ஒருங்கே பேசும் குறள் எப்படி வாழ்க்கையை நிராகரிக்கும் சமண அறவியலின், பொருளை மையமாகக் கொண்ட வணிக நீதியின் குரலாக மட்டும் இருக்க முடியும்? இந்தியப் பண்பாட்டின் முக்கிய அம்சமான இந்த பரந்து பட்ட அறக்கோட்பாட்டையும், அதனை எடுத்தோதும் திருக்குறளையும் இப்படிக் குறுக்குவதே செயற்கையானதும், ஒற்றைப் படை சிந்தனைப் போக்கும் ஆகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

பிற்சேர்க்கை: 
யுகமாயினி : டிசம்பர் 2007 இதழ் (பக்கங்கள் 20-24): ஜாவா குமார் எழுதியுள்ள கட்டுரை.

அன்புள்ள யுகமாயினி ஆசிரியருக்கு,
தங்களின் சமீபத்திய இதழில் திரு.இந்திராபார்த்தசாரதியின் கட்டுரை ஒன்றில் கீழ்க்காணும் இந்தப்பகுதி என் கவனத்தை ஈர்க்க இதை எழுதுகிறேன்.
" இன்னொரு வகையான வன்முறையும் உண்டு. புத்த ஜாதகத்தில் வழங்கிய ராமாயணக்கதை, ஹிந்து மதத்துப் புனித காவியம் ஆவதுபோல, சமணத் துறவியாக வள்ளுவருக்கு, ஜடா முடியை அணிவித்து, திருமேனி முழுவதும் திருநீற்றைப் பூசியிருப்பது போல், தமிழில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சீவக சிந்தாமணியும் பல நூல்களும் தப்பித்திருப்பது, அவை செய்த அதிர்ஷம் என்றுதான் சொல்லவேண்டும். இன்னொரு சமணராகிய தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியத்தை வைதிக மதத்துச் சட்ட திட்டங்களுக்குள் கொண்டுவர உரையாசிரியர்கள் எவ்வாறு முயல்கிறார்கள் என்பது கருத்து வன்முறையின் வேறொரு முகம். "

மேலே திரு.இபா சொல்ல முனைவது 'வைதிகமதத்தினர் (அது என்ன மதம் என்று தெரியவில்லை) சமணரான திருவள்ளுவரை சைவராக வலிந்தேற்றித் திருநீற்றைப் பூசி விட்டனர்' என்று கொள்கிறேன்.

திருநீறுதான் திரு.இபாவின் பிரச்னை என்றால், வைணவமரபில் வந்த பரிமேலழகரே (இவரை காஞ்சி உலகளந்தபெருமாள் கோயில் பட்டரென்பர்) கடவுள்வாழ்த்துப் பகுதியில் வரும் 'எண்குணத்தான்' என்ற குறிப்புக்கு உரையெழுதுகையில் 'சிவாகமங்களில் குறிப்பிடப்படுவது போல' என்று சொல்வதால் வள்ளுவருக்குத் திருமண்ணைவிட திருநீறு பொருத்தமே. எனவே இங்கே வைணவமரபினர்தாம் வள்ளுவருக்குத் திருநீறு பூசினர் என்று திரு.இபா சொல்லியிருந்தால் தெளிவாயிருக்கும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

அது கிடக்கட்டும். விஷயத்துக்கு வருகிறேன்.

திருக்குறளை வைத்து வள்ளுவரைச் சமணரென்பதற்கு யாதொரு அடிப்படையும் இல்லை. ஆய்ந்து நோக்கின் திருக்குறள் பெயரிலாப் பெருவழியான இந்துஞானமரபின் அறநூலே! இத்திறக்கில் அடியேன் கடந்த சில வருடங்களாக இணையத்தில் பல குழுமங்களில் பல சமண அறிஞர்களுடனும் வாதிட்டு இக்கருத்தை நிறுவியுள்ளேன். விரிவஞ்சி விடுத்து சாரமான சில சான்றுகளை மட்டும் கீழே தருகிறேன்.

1. அத்திநாத்தி வாதம் என்ற சமணர்தம் ஆதாரக் கோட்பாட்டினைச் சுட்டும் ஒரு பாவினைக் கூட திருக்குறள் நெடுகத் தேடினாலும் கிட்டாது. மேலும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் 'உளது இலது' என்று முரண்படும் இந்த ஆதார நம்பிக்கையைத் தாக்கினரே அன்றி சாதாரணச் சமணர்களை அல்ல.

2. பொதுவாய் சமணத்திற்குச் சான்றாய்ச் சுட்டப்படும் 'அவிசொரிந்தாயிரம் வேட்டலின் ஒன்றின் உயிர் செகுத்து உண்ணாமை நன்று' என்ற (குறள் 259) குறளில் வேட்டலை உயர்வுநவிர்ச்சியிலே குறிப்பிட்டிருக்கிறாரே அன்றி சமணர் ஏற்காத வேள்விகளைச் சாடவில்லை என்பது பிறிதோரிடம் (குறள் 413) 'செவியுணவிற் கேள்வி உடையார் அவியுணவின் ஆன்றோரொடு ஒப்பர் நிலத்து' என்று சொல்வதன் மூலம் அறியலாம். 'அவியுணவின் ஆன்றோர்' (Havis consuming celestials) என்ற சொல்லாட்சியும் இங்கே உயர்வுநவிர்ச்சியிலே சொல்லப்பட்டிருப்பதன் மூலம் வள்ளுவர் வேதவேள்விகளுக்கு எதிரானவர் அல்ல என்றும் தெளியலாம்.


yagna.jpg


3. மேலும் சிறுதெய்வங்களுக்குப் படையல் வைப்பதும், மூதாதைகளுக்குப் படையல் வைப்பதும் (குறள் 43) சமணத்திற்கு ஏற்புடையது அல்ல.

4. குறள் 550 -ல் 'கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களை கட்டதனோடு நேர்' என்று மரணதண்டனையை நியாயப்படுத்துவது எவ்வகையிலும் அஹிம்சை போற்றும் சமணத்திற்குப் பொருந்தாது. சமண அறநூல்களில் மரணதண்டனை தீர்ப்பாகச் சொல்லப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

5. மன்னன் முறைதவறினால் அந்தணர் கடமைகளான வேட்டல் வேட்பித்தல், கற்றல், கற்பித்தல், இரத்தல், புரத்தல் ஆகிய அறுதொழில் நலியும் என்றும் அவர்தம் நூலையே மறப்பர் என்றும், வேள்விக்கும் ஆலயவழிபாட்டிற்கும் அவசியமான ஆபயன் (பஞ்சகவ்யம்) குன்றும் என்றும் (குறள் 134, 560) வள்ளுவர் வலியுறுத்துவதையும் நோக்கினால் வள்ளுவத்தின் அடிநாதம் சமணம் அல்ல என்று தெளியலாம்.

6. கடவுள் வாழ்த்திலே 'மலர்மிசை ஏகினான்' என்பதை சமணர்தம் ஆதிநாதர் மலரிலே நடந்தவர் என்பதால் சொல்கிறார் என்று சிலர் சொல்வதுபோல் பொருள் கொண்டால் அதன் தொடர்ச்சியாய் அவன் அடிசேர்ந்தார் 'நிலமிசை நீடுவாழ்தல்' எவ்வகையிலும் பொருந்தாது. 'நிலமிசை நீடுவாழ்தல்' (மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் - சம்பந்தர் தேவாரம்) என்பதே சமணத்திற்குப் புறம்பானது. இது போலவே இதர கடவுள்வாழ்த்துப் பாக்களுக்கும் சமணர்தம் அத்திநாத்திய சியாத்வாதக் கோட்பாட்டிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

7. பல குறட்பாக்கள் பதஞ்சலி யோகசூத்திரம் மற்றும் திருமந்திரப் பாக்களை ஒத்திருப்பதைக் காணலாம். 'பகவன், அறவாழி அந்தணன், எண்குணத்தான்' போன்ற விளிகள் சமணருக்குச் சொந்தமானதல்ல. காட்டாய்:



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள்தந்த மாதவன் நந்தி
*அறவாழி அந்தணன்* ஆதிப் பராபரன்
உறவாகி வந்தென் உளம் புகுந் தானே!
திருமந்திரம் - 1803

பல்லூழி பண்பன் பகலோன் இறையவன்
நல்லூழி ஐந்தினுள் ளேநின்றவூழிகள்
செல்லூழி யண்டத்துச் சென்றவ் வூழியுள்
அவ்வூழி யுச்சியு ளொன்றிற் *பகவனே*.
திருமந்திரம் - 2533

கொல்லான் பொய்கூறான் களவிலன் *எண்குணம்*
நல்லான் அடக்கமுடையான் நடுச்செய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் இயமத்து இடையில் நின்றானே.
திருமந்திரம் - 554

இங்கே சிவாகமங்கள் சுட்டும் எண்குணங்கள் ஆவன: தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை மற்றும் வரம்பில் இன்பமுடைமை.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

'எட்டுகொலாம் அவர் ஈறில் பெருங்குணம்' என்று அப்பர் பெருமானும், 'எண்குணம் செய்த ஈசனே' என்று மாணிக்கவாசகரும் பாடுவர்.
அதனாற்றான் சிவாகமங்களில் சுட்டியபடி என்று பரிமேலகரும் உரையெழுதுகிறார்.

8. மேலும் எளிதில் பொருள்விளங்கா பல அதிநுட்பமான குறட்பாக்களுக்கு வேதாந்த சைவசித்தாந்த அடிப்படையில் மட்டுமே மெய்ப்பொருள் கொள்ளமுடியும். காட்டாய்:

'அல்லல் அருள் ஆள்வார்க்கில்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி' (குறள் 245)

என்ற குறளில், அருள் ஆள்பவர்க்கும் வளிக்கும் உள்ள தொடர்பை சித்தாந்தரீதியில் அணுகினால் ஒழிய பொருள் விளங்காது.
இதன் சூக்குமத்தை

'வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாந்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு வளியனு மாமே'

என்ற திருமந்திரத்தின் துணை கொண்டும் தெளியலாம்.
அது போலவே

'குடம்பை தனித்தொழிய புள் பறந்தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு'

என்ற குறளில் (338) ஆன்மாவின் இயல்பைச் சுட்டுவதும் அத்திநாத்தியத்திற்கு ஒவ்வாதது. இது வேதாந்தக் கோட்பாடு. அவ்வண்ணமே வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகுதலும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

10. இறுதியாய் ஒன்று. அஹிம்சை என்பது சமணர்க்கு மட்டுமே குறிக்கோள், ஆதாரக்கோட்பாடு என்பதும் பிழை. யோகமார்க்கத்தில் அஹிம்சையை இந்துசமய நூல்கள் அனைத்துமே வலியுறுத்துகின்றன. ஆயின் சமணத்தைப் போலன்றி அதை முக்திக்கு ஒரே வழியாக வைக்கவில்லை. 'யோகியர் பெறும் பேற்றினையே சாங்கியரும் பெறுவர்' என்ற கண்ணபிரானின் கீதைப்பேருரைக்குச் சான்றாய் வேடர் கண்ணப்பரையும், மீனவர் அதிபத்தரையும் அவர் போன்ற எண்ணற்ற மகான்களையும் காண்கிறோம். வள்ளுவரும் புலால் மறுத்தலை அனைவருக்கும் வலியுறுத்திச் சொல்ல்லவில்லை.

புலால் மறுத்தலை வலியுறுத்துவது யாரிடம்?

'துறவியலில்', யோகத்திலாழ்ந்து தவம் மேற்கொள்வோர்க்கு, நோற்பார்க்கு மட்டுமே. அது அமணர்க்கு மட்டுமின்றி அனைவர்க்கும் பொதுவானது. 'சமாதி'யில் (semedi) அமைய வேண்டி, ஒரு மண்டலம் நோன்பிருக்கும், மரக்கறி உணவே பழகாத ஜாவானியர் கூட அந்த நாற்பது நாள்களில் புலால் (முட்டை கூட) உண்பதில்லை.

புலால் மறுத்தலை வேறெங்காவது சொல்கிறாரா?
குடியியலில் ஓரிடத்தில் சுட்டுகிறார்.

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு. (984)

ஆக, கொல்லாமை என்பது நோற்பார் மட்டுமே கொளத்தகும். ஆயின் அவர் பெரும்பான்மையினரா? என்றுமில்லை. அவரே சொல்கிறார்:

இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர். (270)

வள்ளுவம் சமணத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால் 'கொல்லாவிரதம்' அனைத்துத் தரப்பினர்க்கும், 'துறவியல்' மட்டுமின்றி பிற அதிகாரங்களிலும் எங்காவது ஓரிடத்திலாவது வலியுறுத்தப் பட்டிருக்கும்.
அப்படி அமையவில்லை என்பதை ஓர்க!

பொதுவில் பெரும்பான்மைக்கு, குறிப்பாய் நட்பியலில், 'மருந்து' (அதிகாரம் 95) எது என்று குறிப்பிடுகையில், 'செரித்தது கண்டு, அளவறிந்து உண்க' என்று பல பாக்களில் சொல்லிப் போகிறாரே அன்றி ஓரிடத்திலும் 'புலால் மறுத்தலே சிறந்த மருந்து, உடல்நலத்திற்கு ஏற்றது' என்று சொல்வதில்லை.
தமிழர் உணவுப்பழக்கத்தில் புலால் தவிர்க்க முடியாத அம்சமாய் இருப்பதை தொன்றுதொட்டுக் காண்கிறோம்.

ஓரிடம் நிணத்தைத் தீயிலிட்டு வாட்டுவதைக் காண்கிறார் வள்ளுவர். கண்டிக்கவில்லை; கலங்கவுமில்லை. மாறாய் நின்று ரசிக்கிறார். புசித்துமிருக்கலாம். எப்படியோ, சமணராய் வெறுத்து ஒதுக்கி ஓடியிருந்தால் அதனை ஓர் உவமையாய்க் குறளில் (that too approvingly) அமைத்திருக்க மாட்டார் என்பது திண்ணம்.

காமத்தீயில் நிறையழிந்து நிற்கும் பெண்மைக்கு அதைச் சுட்டுகிறார் இங்கு:

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்? (1260)

அன்புடன், ஜாவா குமார்

 

 


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

திராவிட இயக்க திருக்குறள் பார்வைகள் குறித்து

 

கிறிஸ்தவ இறையியலில் Dehellenization என்று ஒரு கருதுகோள் உண்டு. “ஹெலன் இல்லாமல் ஆக்குவது” என்ற பொருள் தொனிக்கும் இந்தப் பதத்தின் உண்மைப் பொருள் “கிரேக்கத் தாக்க நீக்கம்” என்பதாகும் (நன்றி: அருணகிரி) 16ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க சர்ச்சின் எதேச்சாதிகாரத்தை எதிர்த்து பிராட்டஸ்டண்ட் இயக்கம் எழுந்தபோது இந்தக் கருத்தியல் உருவானது. கிறிஸ்தவ மதக் கொள்கை, அதன் சின்னங்கள், சமய இலக்கியம் இவற்றில் இழையோடிக் கொண்டிருப்பதாகக் கருதப்பட்ட கிரேக்க தத்துவ ஞானம், கிரேக்க புராண, உருவவழிபாட்டு “பாகன்” மத தாக்கங்கள் இவற்றைத் திட்டமிட்டு நீக்கி, கிறிஸ்தவத்தை “சுத்திகரிக்க” வேண்டும் என்ற எண்ணத்துடன் பைபிள் முழுவதும் இந்தப் பார்வையில் வாசிக்கப்பட்டு அதன் கருத்துக்களுக்கு விளக்கமளிக்கும் “பண்டிதர்கள்” உருவானார்கள். ஆனால், மதிப்பீடுகள் மாறிவரும் நவீன காலகட்டங்களில் கிரேக்க தத்துவ தரிசனத்துடன் பைபிளும், கிறிஸ்தவமும் தொடர்புடையது என்று நிறுவுவதும் ஒருவகையில் சாதகமான நிலைப்பாடு தான் என்றும் கருதப் பட்டது. இன்றும் வாத்திகன் மற்றும் ஏனைய கிறிஸ்தவ வட்டாரங்களில் இதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பான குரல்கள் எழுந்துவருகின்றன. சர்ச்சையைக் கிளப்பிய தனது சமீபத்திய 2006ம் ஆண்டு உரையிலும் போப் இதுபற்றிக் குறிப்பிட்டார் (இந்த உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு)

முனைவர் மு.இளங்கோவன் என்பவர் திண்ணையில் சென்ற இரு வாரங்களாக எழுதி வந்த “திராவிட இயக்க திருக்குறள் பார்வைகள்” கட்டுரையைப் படிக்கும்போது இந்தச் சொல் என் நினைவில் தோன்றி மறைந்தது. பழந்தமிழ் இலக்கியங்கள், கலை மற்றும் கலாசார விஷயத்தில் DeHinduization (இந்துத்தன்மை நீக்கம்) என்கிற “சுத்திகரிப்பு” வேலையைத் தானே முதலில் தமிழகத்திற்கு வருகை புரிந்த கிறிஸ்தவ மிஷநரிகளும், பின்னர் அவர்களால் போஷிக்கப் பட்டு வரும் திராவிட இயக்கமும் செய்து வந்திருக்கின்றன?



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

ஆனால் இரண்டிற்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. சர்ச் கிரேக்கத் தாக்கநீக்க வேலையை ஆரம்பித்த காலகட்டத்திற்கு ஒரு பன்னிரண்டு நூற்றாண்டுகள் முன்பே கிரேக்க மதமும், தத்துவமும், கலாசாரமும் கிறிஸ்தவத்தின் வன்முறைப் பரவலால் வேரறுக்கப் பட்டுவிட்டன. அதை வெளிப்படையாகக் கடைப் பிடிப்போர் யாருமில்லை. அவற்றின் ஒளியை தரிசிக்க விரும்பிய ஐரோப்பிய மறுமலர்ச்சிக் கால ஆரம்ப சிந்தனையாளர்கள் கூட சர்ச் அதிகார அமைப்பால் வேட்டையாடப் பட்டனர். பின்னர் கிரேக்கத் தத்துவம் போற்றுதலுக்கு உரியதாக மாறிவந்ததும், சர்ச் அதன் ஒளியில் தானும் குளிர்காயத் தொடங்கியது.

ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்த “சுத்திகரிப்பு” தொடங்கிய இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககாலத்தில் இந்துமதம் இன்று போலவே உயிர்த்துடிப்புடன் வாழ்ந்து வந்தது. இந்திய தேசிய எழுச்சியின் நாயகர்களான விவேகானந்தர், திலகர், லாஜபத்ராய், அரவிந்தர், மகாகவி பாரதி, வ.உ.சிதம்பரனார் உள்ளிட்ட தலைவர்கள் இந்து கலாசார அடித்தளத்தின் மீதே தேசிய எழுச்சிக்கான கருத்தியல்களைக் கட்டமைத்தனர். தமிழ்ப் பண்பாடு உள்ளிட்ட பாரத நாட்டின் அனைத்து சமுதாய வாழ்க்கை முறைகளிலும் இழையோடிக் கொண்டிருந்ததும் இந்தக் கலாசாரத்தின் கூறுகள் தாம் என்றும் அவர்கள் நாடெங்கும் எடுத்துரைத்தனர்.

ஆனால், இந்த தேசிய நீரோட்டத்திற்கு மாறாக “தமிழ்ப் பழம்பெருமை”, “நாத்திகம்/பகுத்தறிவு” என்ற இரண்டு தொடர்பேயில்லாத சண்டிக் குதிரைகள் மீது சவாரி செய்ய விரும்பியது திராவிட இயக்கம். ஒரு மிகப்பெரிய நகைமுரணாக, “நவீன” சித்தாங்களின் அடிப்படையில் எழுந்ததாகத் தன்னை சொல்லிக் கொண்ட இந்த இயக்கம் வெறித்தனமான மரபு வழிபாட்டு, இனப்பெருமைக் கொள்கைகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது, அவற்றை வளர்த்தெடுத்தது. பண்டைக் கலாசாரத்தின் கூறுகளை முழுமையாக மறுக்கும் “தூய” பகுத்தறிவுவாதம் தமிழ்மண்ணில் சுத்தமாக எடுபடாது என்பதை இந்தப் பகுத்தறிவுப் பகலவன்கள் அறிந்தே இருந்தனர்.

ஆனால் கோயில்களும், சிற்பங்களும், பேரிலக்கியங்களும், பாரம்பரிய இசை, நடனக் கலைகளும், சைவ, வைணவ சமயங்களும் இல்லாமல் “தமிழ்ப் பழம்பெருமை” என்று ஒன்று இருக்கவே முடியாதே, என்ன செய்வது? இந்த ஓட்டையை இட்டு நிரப்பத் தோதாகக் கிடைத்தது கால்டுவெல் பாதிரியார் உருவாக்கிய போலியான ஆரிய-திராவிட இனவாதக் கொள்கை. அதிலிருந்து முளைத்தவையே பிராமண வெறுப்பு, இந்துமத எதிர்ப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு, வட இந்திய வெறுப்பு, சம்ஸ்கிருதக் காழ்ப்புணர்ச்சி எல்லாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

இந்தச் சட்டகம் இறுதி வடிவம் அடைந்ததும், தங்கள் கையில் கிடைத்த பழந்தமிழ் இலக்கியங்களையும், கலாசாரப் பிரதிகளையும் இந்தப் பார்வையில் திரித்து, உருமாற்றி, சிதைத்து புதுப்புது விளக்கங்கள் அளிப்பது திராவிட இயக்க குடிசைத்தொழில் போன்று ஆகியது. ஒப்பீட்டளவில் “கிரேக்கத்தாக்க நீக்கம்” செய்த பாதிரிகளுக்கு இருந்த ஆழ்ந்த புலமையில் சிறிதளவும் தேராத “புலவர்”களும், பாவலர்களும், நாவலர்களும், தமிழ்க் காவலர்களும், அரசியல் ஏவலர்களும் கூட இதில் புகுந்து விளையாடினர். “சீரங்க நாதனையும் தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளக்க” ஒருவர் அறைகூவுவார். இன்னொருவர் வானளவாவ உயர்ந்த கோபுரங்களையும், அணிமாடக் கோயில்களையும் கட்டிய தமிழனின் சிற்பக் கலை உன்னதத்தைப் பற்றி அடுக்குமொழியில், துடுக்கு நடையில் உரையாற்றுவார்!

இந்தக் கட்டுரை தரும் திராவிட இயக்க திருக்குறள் உரைப் பட்டியலில் வ.சுப.மாணிக்கம் போன்று ஒரு சில உண்மையான அறிஞர்களின் உரைகள் தவிர்த்து, பெரும்பாலான உரைகளை இன்று படித்துப் பார்க்கும், ஓரளவு இலக்கியப் பிரக்ஞையும், கொஞ்சம் மரபிலக்கியப் பயிற்சியும் உள்ள எந்தத் தமிழ் வாசகனும் அவை எவ்வளவு போலித்தனமாகவும், அறிவுசார் நேர்மை இன்றியும், குருட்டாம்போக்கிலும் எழுதப்பட்டுள்ளன என்பதை உணரக் கூடும்.


2007062250630301.jpg
பரிமேலழகர் காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில் பட்டாச்சாரியாராக இருந்தவர் என்பது மரபு


திருக்குறள் தமிழிலக்கியத்தின் ஒரு சிகரம் என்றால், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப் படும் ஈடு இணையற்ற உரையாசிரியர் பரிமேலழகர் அதற்குச் செய்த உரையை தமிழிலக்கியத்தின் சிகர தீபம் என்பதே சரியாக இருக்கும். எல்லா பழம் நூல்களையும் போல, காலம் கடந்து நிற்கும் இவ்வுரையும் சிற்சில இடங்களில் தன் காலத்தைப் பிரதிபலிப்பதாகவே இருப்பது புரிந்துகொள்ளக் கூடியதே (திருக்குறளும் இதற்கு விதிவிலக்கல்ல). ஆனால் பரிமேலழகரின் உரையில் “ஆரிய சதிவேலை”யைத் தோண்டித் துருவிக் கண்டுபிடித்துப் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியிருக்கும் இந்த உரையாளர்களுக்கு, அதை இன்னும் கொஞ்சம் நீட்டித்தால், அதே “ஆரிய சதிவேலை”யைத் திருக்குறளின் உருவாக்கத்திற்கே கூட மிக எளிதாகப் பொருத்திவிடலாம் என்ற அடிப்படைத் தர்க்கம் கூட புரியாமல் இருந்தது ஆச்சரியம் தான்! (திருக்குறளில் வேதநெறி பற்றிய பல குறிப்புகளை இந்தத் திண்ணைக் கட்டுரையில் காணலாம்)



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 



thiruvalluvar.jpg
திருவள்ளுவ நாயனார், திருமயிலை


இத்தகைய தர்க்க ஓட்டைகளை அடைப்பதற்கு, திருக்குறளில் வரும் சில சொற்களுக்கு இவர்கள் பொருள் கொள்ளும் விதம், உலக மொழியாராய்ச்சிகளின் ஓட்டைச் சித்தாந்தங்கள் (crack pot theories) எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டு விடும்! ‘அமிழ்தம்’ என்பதன் பொருள் பாற்கடல் அமிர்தம் அல்ல, அது அம்மா ஊட்டும் “அம்ம”மாம். ஆனால் சங்கநூல் புறநானூற்றில் “இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும்..” என்று வருகிறது, சிலப்பதிகாரம் “அலையிடைப் பிறவா அமிழ்தே” என்கிறதே என்று ஒரு சாதாரண ஆள் கூடக் கேட்கலாம். ஆனால் அதற்கெல்லாம் திராவிட அகராதியில் பதில் கிடையாது. இதை இப்படியே நீட்டி “கருமம்” என்பதற்கு “கரு மம்மம்” அதாவது கரிய சோறு (வெள்ளைச் சோறு ஆரிய உணவு!) என்றும் தனித்தமிழ்ப் பொருள் தரலாம். திருக்குறளின் “வேள்வி”யும் “வேட்ட”லும், திராவிட உரைகளில் வேட்டைக் காரனில் இருந்து வேட்டி வரை என்ன வேண்டுமானாலும் ஆகலாம். சரி, புறநானூற்றின் “இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி” யாகம் தானே செய்தான் என்றால் அதற்கும் அதிர்ச்சிகரமான பல திராவிட உரைவிளக்கங்கள் வரலாம்! தேவர்களாக இருந்த “புத்தேளி”ரை திராவிடர்கள் “புதிய தேள்”களாகக் கூட ஆக்கி விடுவார்கள்! இந்த உரைகள் எழுதப்பட்ட காலத்தில், உலகத்திலேயே அதிக அளவு மொழிக் கோமாளிகள் தமிழ்நாட்டில் தான் இருந்திருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியும். இவர்களின் தலைவரை மொழிஞாயிறு என்றும் அழைத்து தமிழக அரசு கௌரவப் படுத்தியது. இன்றும் மெரீனா கடற்கரையில் அமாவாசை தினங்களில் நடு இரவில் சில பிசாசுகள் வந்து இதுபோன்ற தனித்தமிழ்ச் சொல்லாராய்ச்சிகள் செய்துகொண்டிருப்பதாகக் கேள்வி.

“செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென” என்னும் மணிமேகலையையும் “ஊரவர் கவ்வை எருவாக, அன்னைசொல் நீர்மடுத்து” என்ற திருவாய்மொழியும் போன்று, திருக்குறளின் சொற்களையும், பொருள்களையும் அதற்குப் பின்வந்த பல நூல்கள் பல இடங்களில் நேரடியாகவே எடுத்தாண்டுள்ளன. அதனால் திருக்குறளில் புழங்கும் இத்தகைய பழம்சொற்கள் ஏதோ உறைந்து கிடந்ததாக எண்ணி, அவற்றுக்குப் “புதுமைப்” பொருள் கூற முயன்ற செயல், இத்தகைய உரையாளர்களின் இலக்கிய, மொழியியல் அறியாமையையே காட்டுகிறது. கி.வா. ஜகன்னாதன் பதிப்பாசிரியாராக இருந்து கொணர்ந்த “திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு” ஒவ்வொரு குறளுக்கும், இத்தகைய மேற்கோள்களைத் தேடித் திரட்டித் தொகுத்திருக்கின்றது (இந்த நூல் பற்றிய எனது திண்ணைப் பதிவு)

மொத்தத்தில், திராவிட இயக்கம் நிகழ்த்த முயன்ற இந்தக் கலாசார அழிப்பு வேலையில் தமிழரின் உன்னத அறிவுக் கருவூலமான திருக்குறளும் தப்பவில்லை என்பதையே ஒரு இரங்கற்பா போன்று அந்தக் கட்டுரை சொல்லிச் செல்வதாக எனக்குத் தோன்றுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

Anonymous said...

ஜடாயு, பாவாணரின் சில கருத்துக்கள் பிழையே! (ஆனால் அதையும் அக்கால விஞ்ஞான அறிவின் அடிப்படையில் பார்க்க வேண்டும், அதை இக்கால விஞ்ஞான அறிவின் அடிப்படையில் பார்க்க கூடாது. உதாரணம் - குமரி). ஆனால் அதற்காக அவரின் அணைத்து தமிழ் ஆராச்சியையும் பிழையென சொல்லல் அகாது.

ஜடாயு said...

// அதற்காக அவரின் அணைத்து தமிழ் ஆராச்சியையும் பிழையென சொல்லல் அகாது. // 

அனானி, தேவநேயப் பாவாணரது தமிழ் "ஆராய்ச்சி" முழுவதுமே ஒரு சட்டகத்தை வைத்துக்கொண்டு அதற்குத் தேவையான ஆதாரங்கள் இருப்பதாகக் காட்டுவதாகத் தானே இருந்தது. அதில் புலமை, நேர்மை, உண்மையறியும் ஆவல் எங்கே இருந்தது? 

லெமூரியா, குமரிக்கண்டம் முற்றிலும் எந்த ஆதாரமும் அற்றது என்றூ நிரூபிக்கப்பட்டுவிட்டதாக நீங்களே கூறுகிறீர்கள். ஆனால் அவர் எழுதிய எல்லா நூல்களிலும் இந்த விஷயத்தை அடிப்படையாக வைத்துத் தான் மற்ற எல்லாவற்றையுமே நிறூவ முயல்கிறார் - தமிழ் உலகின் முதல் மொழி, தமிழில் இருந்து சம்ஸ்கிருதத்திற்குச் சென்ற சொற்கள், தமிழ் மன்னரை 2000 வருடம் முன்பு "அடிமை"ப் படுத்திய ஆரியர் இத்யாதி இத்யாதி. முதல் கோணல் முற்றும் கோணல்.

இன்றைக்கு நாம் தமிழிலக்கியம் என்று போற்றும் எதுவுமே லெமூரியர்களால் எழுதப் பட்டது கிடையாது, தொல்காப்பியம்,திருக்குறள், சங்க இலக்கியம் எதுவும். எல்லாமே ஆரியசதி.ஆனால் இந்த இலக்கியங்கள் தான் தமிழின் பெருமைக்குக் காரணம் !!! இதை self defeating logic என்று சொல்வார்கள். 

அவர் ஆங்கிலத்தில் எழுதிய The Primary Classical Language of the World என்ற நூலைப் படித்த எனது நண்பரான ஒரு மதிப்புக்குரிய பேராசிரியர் அதிர்ந்து போனார். இதையெல்லாம் கூட ஆராய்ச்சி என்று தமிழ்நாட்டில் கொண்டாடுகிறார்களா என்று அதிசயித்தார். language clown என்று அவர் குறிப்பிட்டதைத் தான் "மொழிக்கோமாளி" என்று இங்கே எழுதியிருக்கிறேன். 

அந்த நூலின் முன்னுரையில் சில வரிகள் - 

There is no other language in the whole world as Tamil, that has suffered so much damage by natural and human agencies, and has been done so much injustice by malignant foreigners and native dupes....

(இது உண்மை என்றால் எப்படி இந்த 2000 வருடத்தில் உலகம் போற்றும் இலக்கியம் தமிழில் வளர்ந்தது?) 

Tamil is a highly developed classical language of Lemurian origin, and has been, and is being still, suppressed by a systematic and co-ordinated effort by the Sanskritists both in the public and private sectors, ever since the Vedic mendicants migrated to the South, and taking utmost advantage of their superior complexion and the primitive credulity of the ancient Tamil kings, posed themselves as earthly gods (Bhu-suras) and deluded the Tamilians into the belief, that their ancestral language or literary dialect was divine or celestial in origin.

12:19 AM

 
Anonymous Anonymous said...

ஜடாயு, அவருடைய குமரி கூற்று, முதல் மொழி மற்றும் சமஸ்கிரத பார்வை ஆகியவற்றை தவிர்த்து அவருடைய சொல்லாராச்சியை பார்க்க வேண்டும். அப்படி தான் நான் பார்க்கிரேன், அப்படி பார்த்தால் அவருடைய சொல்லாராச்சிகள் சிறந்தவையே.

ஒருமுறை அண்ணல் காந்தி கப்பலில் செல்லும் போது ஒரு பிரிதானியர் அவரிடம் ஒரு பைபிலை கொடுத்தார், காந்தி அந்த பைபிலில் இருந்த ஒரு குண்டூசியை மட்டும் எடுத்து விட்டு பைபிலை குப்பை தொட்டியில் போட்டதாக வரலாறு. இப்படி தான் அவருடைய சொல்லாராச்சியை பார்க்க வேண்டும். பிழைகளை தவிர்த்து நல்லவற்றை ஏற்க வேண்டும். ஒருவருடைய ஒரு கருத்தை நாம் பிழைப்பதற்காக எல்லாவற்றையும் ஒதுக்ககூடாது.

1950' "Plate Tectonics" இருக்கவில்லை அதனால் பொதுவாக குமரி கண்டம் இருந்தது ஆக விஞ்ஞானத்தால் நம்பப்பட்டது. இப்போது "Plate Tectonics" முலம் கண்டம் தாழ்வது முடியாத காரியம் என விஞ்ஞானம் கண்டரிந்துள்ளது. ஆகவே அவரது குமரி கருத்துகளை அக்கால விஞ்ஞான அறிவின் அடிப்படையில் பார்க்க வேண்டும், அதை இக்கால விஞ்ஞான அறிவின் அடிப்படையில் பார்க்க கூடாது. இது ஒரளவு அவரது சிந்து நாகரிக கருத்துகளுக்கும் பொருந்தும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

திராவிட திருக்குறள் பார்வைகள் இன்னொரு எதிர்வினை

சென்ற திண்ணை இதழில் மு.இளங்கோவன் இப்படி ஒரு எதிர்வினையை எழுதியிருக்கிறார்.

 

முதலில் ஒரு சில்லறை விஷயம். என் பெயரை நான் எழுதுவது போலன்றி “சடாயு” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒரு பெயரைப் பல வகைகளில் எல்லா மொழிகளிலும் எழுதமுடியும் தான். ஆனால் ஒருவரைப் பெயர் சொல்லி அழைக்கையில் அப்பெயருடையவர் எழுதுவது போலவே எழுதுவது என்பது அடிப்படை நாகரீகம், பண்பு, இணைய ஒழுக்கம் (netiquette). இதிலும் கொள்கை, புண்ணாக்கு எல்லாம் கலப்பது, எனது பெயரை இப்படித் திரிப்பது என்பது அநாகரீகம்.

 

(“தன் உயிர் புகழ்க்கு விற்ற சடாயுவை” என்று தானே கம்பன் சொல்லியிருக்கிறான்? ஆமாம். ஆனால் கம்பன் சொன்னது போலவே எல்லாப் பெயர்களையும், எல்லாக் காலத்திலும், எல்லாரும் எழுதிக் கொண்டிருக்கிறோமா? தொல்காப்பியர் சொன்ன பெயர்ச்சொல் விதிகளின் படி தான் இப்போது எல்லாரும் பெயர் வைத்துக் கொள்கிறார்களா?)

 

மேலும் சொல்கிறார்:

// “அவரின் இணையப்பக்கத்தில் உள்ளஅவர்தம் கொள்கை முழக்கங்களையும் காணும்போது அவர் யார் என்பதையும், அவர் உள்ளத்துள் உறைந்துள்ள எண்ணங்கள் என்ன என்பதையும் என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது”//

 

அடேயப்பா! ஒருவரது ஒரே ஒரு வலைப்பதிவைப் பார்த்தே இவ்வளவு தூரம் உளவறியக் கூடிய ஜித்தர்கள் எல்லாம் இருக்கிறார்களா? ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

// “கட்டுரையைப்பற்றி எழுதியுள்ளதைவிட கிறித்தவ மதம்,திராவிட இயக்கம் பற்றித் தாக்குவதை நோக்கமாகக் கொண்டு இயங்கும்” //

இது அபாண்டம். என்னுடைய கட்டுரையில் நான் தொட்டுக் காட்டிய மூன்று விஷயங்கள் சுருக்கமாக -

1. தமிழ்ப் பழம்பெருமை, நவீனத்துவம், கடவுள்மறுப்பு ஆகிய முரண்களை சமாளிக்கத் தெரியாத திராவிட இயக்கம் கால்டுவெல்லின் “ஆரிய திராவிட இனவாதத்தை” வைத்து ஒரு சட்டகம் உருவாக்கியது.
2. இந்தச் சட்டகத்தைக் கொண்டு திருக்குறளுக்கு கண்மூடித்தனமாக உரைகண்டது, அடிப்படை தர்க்க ஓட்டைகள், சொல் பயன்பாடு போன்றவற்றைக் கூட கண்டுகொள்ளாதது
3. இத்தகைய செயல்கள் மத்திய கால நிறுவன கிறிஸ்தவத்தின் DeHellenization முயற்சிகளின் மோசமான காப்பி போன்று இருந்தது
இதை இப்படிப் புளியைப் போட்டு விளக்கிய பின்னும், முத்திரை குத்துதல் மூலமே ஒரு வாதத்தை எதிர்கொள்ள நினைப்பவர்கள் பற்றி ஒன்றும் பேசுவதற்கில்லை.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, திராவிட இயக்கத்தின் பொதுவான “சட்டக” அணுகுமுறை குறித்து நான் கூறியிருந்தவற்றை அப்படியே மெய்ப்பிக்கும் வகையில் இந்த எதிர்வினையும் எழுதப் பட்டுள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

இப்படி எழுதிச் செல்கிறார்.
// “தமிழ்ச்சமூகத்தைப் பிளவுப்படுத்தி ஏமாற்றி வாழ்ந்தவர்கள் ஆரியர்கள்” //
// தமிழ் இலக்கியங்களையும்,தமிழர்தம் கலைகளையும் சமற்கிருதமயமாக்கிக் கொண்டு தமிழ்மூலத்தை அழித்தவர்கள் //
// பின்னர் வளவன், வழுதி,பாண்டியன், சேரன் என்ற பெயர்கள் மாறிஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன்,விஜயாலயன் வந்தன. தமிழ் நீச பாஷையானது.மக்கள் அடிமையாக்கப்பட்டனர். //

அடடா, என்ன அரிய கண்டுபிடிப்பு! அந்த “அடிமையாக்கப் பட்ட” தமிழினத்தில் தான் உலகெங்கும் தமிழ்ப் பெருமையை நிலைநாட்டிய ராஜராஜனும், ராஜேந்திரனும், குலோத்துங்கனும் தோன்றினரா? இன்றும் தமிழனின் சிற்பக் கலையைப் பறைசாற்றும் மாமல்லபுரமும், தஞ்சைப் பெருங்கோயிலும், திருவரங்கமும் தோன்றினவா?


s04.jpg



இந்த “நீசபாஷையாக்கப் பட்ட” தமிழில் தான், தமிழின் அதிஉன்னத காவியங்களான கம்பராமாயணமும், பெரியபுராணமும், சிந்தாமணியும் படைக்கப் பட்டனவா? தமிழர் சமயத்தின் ஆணிவேர்களான சைவத் திருமுறைகளும், நாலாயிர திவ்யப் பிரபந்தமும் எழுந்தனவா? வேதம் தமிழ்செய்த மாறன் சடகோபனும், சங்கத் தமிழ்மாலை முப்பதும் செப்பிய ஆண்டாளும், தமிழ்விரகன், தமிழ்ஞானசம்பந்தன் என்றே தன்னை அடையாளப் படுத்திக் கொண்ட சைவப் பெருந்தகையும் உருவானார்களா?

இந்த அடிப்படையான, எளிமையான கேள்விகளைக் கூட சிந்தித்துப் பார்க்காமல், அது எப்படி தன்னை ஒரு சட்டகத்தில் அறைந்து கொண்டு ஒரு “முனைவர்” எழுதுகிறார்? சொல்லப் போனால் இந்தக் கேள்விகளை என் முதல் பதிவிலேயே எழுப்பியாகி விட்டது.

// முகத்தை மறைத்துக்கொண்டு எழுதும் சடாயுவுக்கும் அவர் போன்றவர்களுக்கும், ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள் //

தொடக்கத்தில் ஜடாயுவின் ஜாதகமே தெரியும் என்ற ரீதியில் எழுதினார். இப்போது “முகத்தை மறைத்துக் கொண்டு”. என்னதான் சொல்லவரீங்க? “அவர் போன்றவர்கள்” என்பது யார்? திண்ணை என்பது சுயபுத்தியுள்ளவர்கள் படிக்கும் இணைய இதழ், திராவிய இயக்கப் பொதுக்கூட்ட மேடையல்ல என்று நினைவுபடுத்த விரும்புகிறேன்.

என்னை சில புத்தகங்கள் படிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். திண்ணை வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான வரலாற்று அறிஞர் எஸ்.இராமச்சந்திரனின் “தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும்” என்ற இந்த ஒரு கட்டுரையைப் படிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

அன்புடன்,
ஜடாயு



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

பின்குறிப்பு:

இதே கடிதத்தில் சம்பந்தமே இல்லாமல் வேத திருமணச் சடங்கில் வரும் ஒரு மந்திரத்தைப் பற்றிய “சட்டக” அபத்தக் கருத்து ஒன்றை அப்படியே போகிற போக்கில் உமிழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார்.

// இவர்கள் திருமணம் செய்யும் பெண்ணை தூய்மை(புனிதம்)பெறும்பொருட்டு முதலில் சோமனும்,அடுத்த நாள் கந்தருவனும்அதற்கடுத்த நாள் உத்திரனும்,நான்காம் நாள் அக்கினியும் நுகர்ச்சிசெய்தபிறகு இவளை மணம்செய்தவன் புணரவேண்டும் என்ற மந்தரங்கள் அருவருப்பு ஊட்டும் தந்திர வித்தைதானே //

இதில் “இவர்கள்” என்பது யார்? பாரத நாடு முழுதும் ஏராளமான சமூகங்கள் வேதத் திருமணச் சடங்கில் நம்பிக்கை வைத்து அதன்படி மணம் புரிகின்றனர். அவர்கள் அத்தனை பேரையும் அவதூறு செய்திருக்கிறார். இதற்கும் எடுத்துக் கொண்ட பொருளுக்கும் என்ன சம்பந்தம்?

சம்பந்தமில்லையென்றாலும், தெரிந்துகொள்ள விழைபவர்களுக்காக இது பற்றிய எனது பழைய பதிவு ஒன்றை பிற்சேர்க்கையாக இணைத்துள்ளேன்.

பிற்சேர்க்கை: ஒரு மணப்பெண்ணும், தேவதைகளும், திராவிட பகுத்தறிவும்



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

சுழியம் said...

வீரவேல் ! வெற்றி வேல் !

அன்பிற்கும் மரியாதைக்குமுரிய ஜடாயு,

சுருக்கமும் தெளிவும் நிறைந்த மிக அழகான பதில். போற்றி பாதுகாக்கவேண்டிய ஒன்று. ஹிந்து மதம் தொடர்பான கேள்வி-பதில் பகுதியில் இடம் பெறவேண்டியது. 

ஈவேராவிற்கும் அவரது தண்டுதாங்கிகளுக்கும் நுண்கலைகளான கவிதை, இலக்கியம், இசை, நடனம், சிற்ப ஸாஸ்திரம் போன்றவை புரியவில்லை. அதே போல நுண் உணர்வுகளான காதல், தாய்மை, குடும்பம் சார்ந்த உணர்வுகள், அழகுணர்வு, கடமை, தேசப்பற்று, ஆன்மீகம், கற்பு, மனித உறவு போன்றவையும் புரியவில்லை.

இவர்களுக்கு இந்த அழகிய கவிதையும், அந்த கவிதையினால் மேன்மையுறும் மனித உறவுகளும் எப்படி புரியும்? 

பெண்ணுக்கும், ஆணுக்கும் நடுவில் இருக்கக்கூடிய ஒரே தொடர்பு காமம் மட்டுமே என்று நினைக்கும் இவர்கள் மனிதனை மனிதனாக வைத்திருக்கும் நுண் உணர்வுகளை கேவலைப்படுத்தவே செய்வார்கள்.

ஒரு வேண்டுகோள்: 

திராவிடம் என்பது நிலப்பகுதியை குறிக்கும் சொல். அந்த திராவிட நிலப்பகுதியில் இருக்கிற பகுத்தறிவுவாதிகளாக, ஹிந்து தத்துவங்களில் சிறந்த ஹிந்துமதப் பெரியவர்களை மட்டுமே சொல்ல முடியும். இந்த இனவெறியர்களை திராவிட பகுத்தறிவுவாதிகள் என்பது அந்த ஹிந்துப் பெரியவர்களை அவமதிப்பதுபோல் இருக்கிறது.

தேவையில்லாத, தவறான அங்கீகாரமும்கூட வந்துவிடுகிறது. வேண்டுமானால், இவர்களை "திராவிட குத்தறிவு"வாதிகள் என்று அழைக்கலாம். "தமிழக இனவெறியாளர்கள்" என்பதும் பொருந்துகிறது.

இந்த நுண்ணுணர்வற்ற இழிபிறவிகளுக்கு அங்கீகாரம் தரும் பெயர்களை நாம் உபயோகப்படுத்தவேண்டுமா?

வந்தேமாதரம் !



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60408055&format=html&edition_id=20040805

திருக்குறள் பற்றிக் கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வது சரிதானா ? -திருக்குறள் ஒரு சமண நூலா ?

நா.முத்து நிலவன்

 

 

திருக்குறள் ஒரு சமண நூலா ?

 

'செம்மலர் ' ஜூலை மாதக் கேள்வி பதிலில், 'திருக்குறள் ஒருசமணநூல் ' என்பதாக இளமதி தெரிவித்திருந்தார். இதே மாதிரி ஒரு கருத்தைக் கிட்டத்தட்ட இதேசமயத்தில் சென்னையில்நடந்த அ.மார்க்ஸின் புத்தக வெளியீட்டுவிழாவில் கவிஞர் அப்துல்ரகுமான் அவர்களும்–( '...க, வள்ளுவர் சமணமதக் கருத்துக்களை விதைத்தவர் 'என்று)-தெரிவித்திருப்பதாக 'நக்கீரன் '(ஜூலை 21, 2004)இதழில் படித்தேன். திருக்குறள் பற்றிக் கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வது சரிதானா ? திருக்குறள் ஒரு சமணநூல் தானா ? இதுபற்றி ஒரு விவாதத்தை நடத்துவது நல்லது.

 

தாம் வாழ்ந்த காலத்தில், பெரிதும் மேலோங்கியிருந்த சமணக்கருத்துக்களை முன்வைத்துச்சென்ற வள்ளுவர், சில இடங்களில் அந்த சமணக் கருத்துக்களையே மீறியும், பல இடங்களில் பெளத்தக் கருத்துக்களை கையாண்டிருப்பதையும் பார்த்தால் அவர் தனது நூலை 'ஒரு சமண நூல் ' என்று முத்திரை குத்தவிடாமல் செய்திருப்பதாகவே எனக்குப் படுகின்றது.

 

முதலில் ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்:

'யானையைப் பார்த்த ' குருடர்களைப்போல் வள்ளுவரைத் தத்தம் மதத்துக்குள் இழுக்கும் மதவாதியல்ல நான். எனவே, 'வள்ளுவர் கிறித்துவரே ' என்றொரு நூல் எழுதியவரைப் போலவோ, அல்லது 'அவர் ஒரு சைவ சமயத்தவரே ' எனும் திருவாவடுதுறை சைவப் பேராசிரியர்களைப் போலவோ, நான் வள்ளுவரை எந்தச் சமயச் சிமிழுக்குள்ளும் இழுத்தடைக்க விரும்பவில்லை. வள்ளுவரின் மதம் எதுவாயினும், அவர் குறளில் சமணக் கருத்துக்களை மட்டுமே வலியுறுத்தி எழுதவில்லை என்பதே எனது கருத்து.

 

அதே போல –பாரதிதாசன் போலும் முற்போக்குவாதிகளின் 'அதீதக் குறளன்பின் ' அரசியல் அவசியம் காரணமாக - 'வெல்லாத தில்லை, திருவள்ளுவன் வாய் விளைத்தவற்றுள்...

இல்லாத தில்லை, இணையில்லை, முப்பாலுக் கிந்நிலத்தே! ' என்றும் கவிபாட நான் தயாராக இல்லை.

 

'தேவாரம் ஒரு சைவநூல் ' எனும் அளவிலான வார்த்தைகளில், 'திருக்குறள் ஒரு சமணநூல் ' என்பது சரிதானா ? அன்றைய சமூக நிலைக்கேற்ப, அவருக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு, னால் அதற்குப் பெயர்தந்து, உருவம் தந்து வணங்கும் மதவழி வழிபாட்டை அவர் வற்புறுத்தவில்லை. அவர்காலத்திய வேத வைதீக தெய்வங்களான இந்திரன்,பிரமன் முதலான தேவர்களைப் பல இடங்களில் சுட்டும் அவர், பெயர்சுட்ட வாய்ப்புள்ள கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் அந்தத் தேவர்களைக் 'கண்டுகொள்ளவில்லையே ' ஏன் ?

 

*புத்தனுக்குரிய 'பகவன் ' எனும் சொல்லை முதல் குறளிலேயே வழங்கியிருக்கும் திருக்குறள் சமண நூலாகுமா ?

 

'பகவான் ' என்பது, பின்னர் வைணவம் வளர்ந்த பிறகு 'உட்கவரப்பட்ட ' ஒரு சொல். (இதே பெயர் சமணருக்கும் உண்டெனினும், அது புத்தருக்குரியதுபோலப் பிரதானமான பெயரல்ல என்பது கவனிக்கத்தக்கது)

 

* 'அறிவன் '- எனும் நேரடித் தமிழாக்கமும் புத்தருக்கே உரியது.

* 'மலர்மிசை ஏகினான் ' - என்பதுகூட அப்பட்டமாக புத்தரையே குறிப்பதாகத் தெரிகிறது. (புத்தரின் பாதங்களில் தாமரை மலர் போலும் சக்கரச் சின்னம் இருந்ததான பழங்கதைகள் பலவுண்டு. புத்தரின் பட்டப் பெயரான 'ததாகதா ' என்பதற்கு 'இவ்விதம் சென்றவன் '-ஏகியவன்- என்பது பொருள்)

 

அடிப்படையில் எனது கேள்விகள் இவைதாம்:

(1)துறவறத்தை வற்புறுத்திய சமணத்துக்கு மாறாக,இல்லறத்தைப் பாடிய திருக்குறள் சமண நூலாகுமா ? குறளில், சமணம் போன்ற 'கெடுபிடி ' நடைமுறை இல்லை. புத்தம் போன்ற 'ஜனநாயக ' மரபே அதிகம். டுமாடுகளைப் பலிகொடுக்கும் வைதீக வேள்விக்கு எதிராக 'தன்னைக் கட்டும்தவம் ' வலியுறுத்தப் பட்டது -சமணத்தில். அதைக்காட்டிலும், குடும்பவாழ்க்கையே பெரிதென்று கூறிய குறள் எப்படி சமண நூலாக முடியும் ? (காதலுக்கென்று மூன்றில் ஒருபகுதி நூலையே ஒதுக்கி காதலைப் பாடியது சமணக் கோட்பாடா என்ன ?)

 

(2) 'உழவே செய்யக்கூடாது - செய்தால் அது தொடர்பான உயிர்களை அழிக்கவேண்டி வரும் ' என்பது சமணக் கோட்பாடு. எனில், 'உழவே தலை ' என்ற குறள் எப்படிச் சமண நூலாக முடியும் ? இவை போலும் கேள்விகள் ஏராளம் ஏராளம்!

 

அன்றைய மன்னராட்சிக் காலத்திலேயே,மன்னராட்சிக்கெதிரான சில கருத்துக்களோடு - வேத வைதீக வர்ணாஸ்ரமக் கருத்துக்களை எதிர்த்த குரல்தான் வள்ளுவத்தில் அதிகமே அன்றி, சமணக் கருத்துக்கள் இருப்பதால் அது சமண நூலென்றோ,பெளத்தக் கருத்துக்கள் இருப்பதால் அது பெளத்த நூலென்றோ, சைவக் கருத்துக்கள் இருப்பதால் அது சைவ நூலென்றோ முடிவுக்கு வருவது எப்படிச் சரியாகும் ?

 

= நா.முத்து நிலவன், புதுக்கோட்டை - 622 004.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

திருக்குறளின் முதல் அதிகாரம்

thirukkural-1
உலகப்பொதுமறை என்று பாராட்டப்படுகின்ற ஒரு தலையாய இலக்கியம், திருக்குறள். திருக்குறளின் பகுப்புமுறை, அதிகாரங்களுக்குத் தலைப்புத் தந்துள்ள முறை போன்றவை யாரால் எப்பொழுது செய்யப்பட்டவை என்பதெல்லாம் சரிவரத் தெளிவாகவில்லை. இப்பொழுது நாம் காணும் அதிகாரப் பகுப்பு, அதிகாரத் தலைப்புகள், இயல் பகுப்பு போன்றவை எல்லாம் திருவள்ளுவரே செய்ததாகத் தோன்றவில்லை. சான்றாக, திருக்குறளின் முதல் நான்கு இயல்களைப் பாயிரம் என்று பகுத்துள்ளனர் சில ஆசிரியர்கள். பரிமேலழகர் போன்ற செல்வாக்குள்ள உரையா சிரியரும் இதனை ஏற்றுக் கடைப்பிடிப்பதால் இது பெரும்பாலும் ஏற்கக்கூடிய கருத்தாகி விட்டது. இப்பகுப்பு சரியானது என நிறுவப்படவில்லை. இயல்பகுப்பு உரையாசிரியருக்கு உரையாசிரியர் மாறுபடுகிறது. அதிகாரத்தலைப்புகளும் அவ்வாறே. மணக்குடவர் மக்கட்பேறு எனக்கூறும் அதிகாரத்தைக் காலத்தால் பிற்பட்டவராகிய பரிமேலழகர் புதல்வரைப் பெறுதல் என்று மாற்றிக்கொண்டிருக்கிறார்.
இவற்றையெல்லாம் இங்கு நினைவுகூறக் காரணம், திருக்குறளின் முதல் அதிகாரமாகிய கடவுள் வாழ்த்து என்பதன் தலைப்பே பொருத்தமானதல்ல என்பதைச் சுட்டிக்காட்டத்தான். பொதுவாக, திருக்குறளில், அதிகாரத் தலைப்பாக அமைந்த சொல், பெரும்பாலும் அந்த அதிகாரத்திலுள்ள ஓரிரு குறட்பாக்களிலேனும் இடம் பெறுவது வழக்கம். இதற்கு மிகச்சில விதிவிலக்குகளே உண்டு. அந்த விதிவிலக்குகளில் ஒன்று, கடவுள் வாழ்த்து. கடவுள் என்ற சொல்லோ, வாழ்த்து என்ற சொல்லோ கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் எங்கும் இடம்பெறவேயில்லை.
இந்தச் சொற்களை முக்கியமாக ஆராய்வதற்குக் காரணம் உண்டு. ஏனென்றால் கடவுள் என்ற கருத்தும், வாழ்த்துதல் என்ற கருத்தும் திருவள்ளுவருக்கு உடன் பாடானவை என்று தோன்றவில்லை. இன்று இறைவன், தெய்வம், கடவுள் என்ற மூன்று சொற்களும் ஏறத்தாழ ஒரே அர்த்தத்தில் கையாளப்படுகின்றன. ஆனால் திருவள்ளுவருடைய ஆளுகையில் இம்மூன்று சொற்களுக்கும் பொருள் வேறு. கடவுள் என்ற சொல்லை அவர் திருக்குறளில் கையாளவே இல்லை. கட+உள் என்று இச்சொல்லைப் பிரித்து நமக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று நமக்கு உள்ளும் நம்மைக் கடந்தும்(அப்பாலும்) இருக்கிறது என்று இச்சொல்லுக்குப் பொருள் கூறுவர். அல்லது கடவுதல் (இயக்குதல், செலுத்துதல்) என்ற சொல் அடியாகப் பிறந்தது இச் சொல் என்ற கருத்தும் உண்டு. உயிர்களுக்கெல்லாம் அப்பால் நின்று ஒரு சக்தி அவற்றைக் கடவுகின்றது என்ற கருத்து இதில் இருக்கிறது. இப்படிப்பட்ட, உயிர்களுக்கும் மனிதருக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தியில்(transcendent force) திருவள்ளுவருக்கு நம்பிக்கை இல்லாததனால்தான் அவர் இச்சொல்லைத் தமது நூலில் எங்குமே பயன்படுத்தவில்லை என்று கருதமுடியும்.

thirukkural-3

பழங்காலத்தில் வைதிக சமயத்தினர் தமக்கு அப்பாற்பட்ட சக்தியான கடவுள் ஒன்றில் நம்பிக்கைகொண்டவர்கள். வைதிகசமயத்தினர்க்கு மாறான சார்வாகர், சாங் கியர், பௌத்தர், சமணர் போன்ற மரபுகளைச் சார்ந்தவர்கள் இப்படிப்பட்ட நம்பிக்கை அற்றவர்கள். திருக்குறளை ஆழ்ந்து நோக்கும்போது திருவள்ளுவர் சமணராக இருந்திருக்கக்கூடும் என்பதை நாம் உணரமுடியும்.
இறைவன்-தெய்வம் என்ற சொற்கள் கடவுள் என்ற கருத்துக்கு மாறானவை. தேவன் அல்லது தேவ என்ற சொல்தான் தெய்வம் என்ற வடிவத்தில் தமிழில் வழங்குகிறது. இச்சொல்லுக்கு மனிதனைவிட உயர்உலகம் ஒன்றில் வாழும் (மனிதனைவிட அதிகமான, ஆனால் எல்லைக்குட்பட்ட சக்தியுடைய) உயர்பிறவிகள் என்பது அர்த்தம். வள்ளுவரும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று சொல்கிறார். மனிதர்கள் தங்கள் நிலையில் உயரும்போது தெய்வம் ஆகிறார்கள்.
இறை என்ற சொல் ஆதி என்ற சொல்லுக்கு எதிரானது. மனிதனால் ஆதி (யாவற்றிற்கும் முற்பட்ட நிலை)யையும் சிந்திக்க முடிவதில்லை, அந்தம் (இறை, இறுதி) என்ற நிலையையும் சிந்திக்க முடிவதில்லை. இறைவன் என்ற சொல்லை அரசன் என்ற அர்த்தத்தில்தான் வள்ளுவர் மிகுதியும் பயன்படுத்தியுள்ளார். ஏனென்றால், மனிதர்களுக்குள் இறுதியான தலைமைநிலையில் இருப்பவன் அரசன்தான். இறு (வேர்ச்சொல் ‘இற்’) என்ற சொல்லிலிருந்துதான் இறையன், இறைவன், இறுதி, இற்றுப் போதல், இறுத்தல், இறப்பு போன்ற சொற்கள் உருவாகின்றன. இறத்தல் என்பதற்கு ஒரு எல்லையைக் (இங்கே மனித வாழ்க்கை எல்லை) கடந்து செல்லுதல் என்று பொருள். எனவே இறைவன் என்பது கடவுளைக் குறிக்கும் சொல்லன்று.
கடவுள் என்ற சொல் திருக்குறளில் எங்கும் இடம்பெறவேயில்லை என்ப தையும், காரணம் அது நமக்கு அப்பாற்பட்ட அதீத சக்தியைக் குறிக்கின்ற ஒன்று என்பதையும் முன்பே கூறினோம். கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் இறைவனைக் குறிப்பதாக இடம் பெறும் சொற்கள் அனைத்தும் மனிதநிலையிலிருந்து உயர்ந்த சான்றோர்களைக் (இவர்களை நாம் சமண முன்னோரான துறவிகளாகக் கொள்ள வாய்ப்பு உண்டு) குறிப்பவைதான்.
மனிதநிலைக்கு அப்பாற்பட்ட ஒரு கடவுளைக் கருத்தில் ஏற்றுக்கொள்ளாததால் திருவள்ளுவருக்கு அத்தகைய கடவுளை வாழ்த்துவது என்ற எண்ணமும் தோன்றவில்லை. திருக்குறள் கடவுள் வாழ்த்தின் பத்துச் செய்யுட்களையும் நன்கு கவனித்துப் பாருங்கள் – எந்தச் செய்யுளாவது, கடவுளை வாழ்த்துவதாக அமைந் துள்ளதா? எல்லாச் செய்யுட்களுமே – பத்துக்குறட்பாக்களுமே உயர்ந்த மானிடர்களின் பத்து இயல்புகளைக் குறிப்பிடுவனவாகத்தான் அமைந்துள்ளன. நம் சிந்தனையையும் மனத்தையும் கடந்த ஒன்றிற்கு இயல்புகளைச் சொல்வது எப்படி?
முதல் குறட்பாவைப் பார்ப்போம். அகரமுதல எழுத்தெல்லாம்; ஆதி பகவன் முதற்றே உலகு என்பது குறள். இது சொல்வது என்ன? எழுத்துகளெல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டிருப்பதுபோல, இந்த உலகம் ஆதிபகவனை முதலாகக் கொண்டிருக்கிறது என்பதுதானே? இதில் உள்ள இரு பகுதிகளும் நாம் கவனிக்க வேண்டியவை.
ஒன்று, எழுத்துகளெல்லாம் அகரத்தை முதலாக உடையவை.
இரண்டு, (அதுபோல) உலகம் ஆதிபகவனை முதலாக உடையது.
முதல் பகுதியைக் கவனிப்போம். எழுத்துகள் அகரத்தை முதலாக உடையன என்றால் என்ன? இறைவன் உயிர்களை ஆக்குவது போல, எல்லா எழுத்துகளையும் (உயிர், மெய்) அகரம் ஆக்குகிறது, படைக்கிறது என்றா அர்த்தம்? முதல் என்பதற்குப் பல அர்த்தங்கள் உண்டு. மண்ணிலிருந்து குடம் ஆகிறது என்றால் மண் காரண முதல் என்போம். குயவனால் குடம் ஆகியது என்றால் குயவனைக் கர்த்தா முதல் என்போம். இந்த அர்த்தங்கள் எதுவும் இங்கு இல்லை.
பெரும்பாலான மொழிகளில் அகரம் முதல் எழுத்து. பிறகு மற்ற எழுத்துகளின் வரிசை தொடர்கிறது. ஒரு கியூ வரிசையில் முதலில் நிற்கும் ஆள், கியூவை உண்டாக்குபவரா? அதாவது காரணமுதலா? கர்த்தா முதலா? இரண்டும் அல்ல, அவர் வரிசை முதல். அவ்வளவுதான். அதுபோல எழுத்துகள் வரிசையில் அகரம் முதன்மையாக நிற்கிறது. வரிசை முதல். அதுபோல உயிர்களின் வரிசையில் ஆதிபகவன் முதலில் நிற்கிறார். அவ்வளவுதான். ஆதி என்றசொல்லும் குணங்களில் முதன்மையானவர் என்பதைத்தான் குறிக்கிறது.

thirukkural-2

இரண்டாவது, பகவன் என்ற சொல்லைப் பார்ப்போம். இது பகவான் என்ற வட சொல் அடிப்படையிலானது அல்ல. தமிழில் முற்றும் துறந்த முனிவர்களை-மனிதர்களை பகவன் என்று கூறினார்கள். கலித்தொகையில் ஒரு செவிலித்தாய் தலைவனுடன் போய் விட்ட தன் மகளைத் தேடிவருகிறாள். அவளுக்கு முக்கோல் பகவர்கள் (அதாவது திரிதண்டம் என்னும் கோலை உடைய பகவர்கள் சிலர்) ஆறுதல் சொல்கிறார்கள். இங்கு முக்கோல் பகவன் என்ற சொல்லுக்கு கடவுள், பகவான் என்றா அர்த்தம்? முனிவன் என்பதுதான் பொருள். அதே பொருளில் – அதாவது முற்றும் துறந்த முனிவன் என்ற பொருளில்தான் பகவன் என்ற சொல்லை இங்கும் திருவள்ளுவர் பயன்படுத்துகிறார். ஆனால் இவர் நீண்ட காலத்துக்கு முன்னாலிருந் தவர் (ஒருவேளை அருகதேவராக இருக்கலாம்). அதனால் ஆதி பகவன்.
எனவே இந்த முதற்குறள் கூறுவது என்ன? மனித வரிசையிலே குணங்களால் உயர்ந்த, காலவரிசையில் முற்பட்ட ஒரு முனிவர் – ஆதி பகவன் – அவரை உதாரணமாகக் கொண்டது இவ்வுலகு என்பதுதான்.
இனி வரும் குறட்பாக்களும் அந்த ஆதி பகவனின் – அதாவது மனிதராக இருந்து உயர்ந்த நிலை அடைந்த – வள்ளுவர் வாக்கில், தெய்வநிலை அடைந்தவர் களின் பண்புகளைப் பற்றித்தான் பேசுகின்றன. இரண்டாவது குறட்பாவில் ‘வால் அறிவன்’ என்கிறார். அதாவது  தூய்மையான அறிவுடையவன். மூன்றாவது குறட்பா இன்னும் தெளிவானது. மலர்மிசை ஏகினான். இது புலனறிவைக் கடந்த கடவுளைக் குறிக்கும் சொல்லே அன்று என்பது மிக வெளிப்படை. மலரின்மீது நடந்தவன். இங்கு மலர் என்பது உருவகமாக பூமியைக் குறிக்கிறது. (மலர் தலை உலகம் என்று வருணிப்பதை நோக்குக). எனவே இந்தப் பூமியின்மீது வாழ்ந்த ஒரு தெய்வப் பண்புடைய ஒருவன் என்பது இச்சொல்லின் பொருள்.
அடுத்த குறள் வேண்டுதல் வேண்டாமை இலான் என்கிறது. அதாவது அந்த நிலைகளைக் கடந்தவன். அதற்கடுத்த குறளில் இறைவன் என்றசொல் வருகிறது. அதாவது நாம் அடையவேண்டிய இறுதிநிலையாக இருப்பவன், அல்லது அந்த இறுதிநிலையை அடைந்தவன். பத்தாம் குறளும் இறைவன் என்ற சொல்லையே பயன்படுத்துகிறது. (இறைவன் அடி சேராதார், பிறவிப்பெருங்கடல் நீந்தார்).
அடுத்த குறள் இன்னும் தெளிவானது. பொறிவாயில் ஐந்து அவித்தான். எல்லாவற்றையும் கடந்த கடவுளுக்குப் பொறிவாயில்கள் (அதாவது புலன்நுகர்ச்சி உறுப்புகள் – கண், காது, மூக்கு, நாக்கு, தோல்) என்பன ஏது? இப்பொறிவாயில்கள் ஒருவனுக்கு உண்டு, அவற்றை அவித்தவன் (கட்டுப்படுத்தியவன்) என்றாலே கடவுள் என்ற அர்த்தமா வருகிறது? எந்தக் கடவுளும் புலன்களை அவிக்கத் தேவையில்லை. சாதாரண மனிதநிலையில் இருந்து, புலனுணர்வுகளைக் கட்டுப்படுத்தி, தெய்வ நிலையை அடைந்த சான்றோன் என்னும் பொருள் அல்லவா இந்தச் சொல்லுக்கு வருகிறது? அப்படிப்பட்ட சான்றோனுடைய பொய்தீர் ஒழுக்கநெறியில் நின்றவர்கள் நீடுவாழ்வார் என்பதில் கடவுளுக்கு எங்கே இடம்?
அடுத்த குறளில் வரும் சொல் தனக்குவமை இல்லாதான். பொறிவாயில் அவித்த ஒருவனுக்கு உலகிலுள்ள சுகபோகங்களில் ஈடுபட்ட யாரை அல்லது எதை உவமை சொல்ல முடியும்? அடுத்த சொல் அறவாழி அந்தணன் அறக்கடலாக விளங்குகின்ற அந்தணன். அந்தணன் என்பது பார்ப்பனச் சாதியைக் குறிக்கும் சொல் அல்ல. அந்தணர் என்போர் அறவோர் – திருவள்ளுவரைப் பொறுத்தமட்டில். அறவோனாக இருப்பவன் அந்தணன். அறக்கடலாகவே விளங்கும் முதன்மையான அந்தணன் இந்த பகவன்.
ஒன்பதாம் திருக்குறள் மிகமிக முக்கியமானது. ஏனென்றால் இதுவரை இறைவனுடைய பண்புகளாகக் குறிப்பிட்டவற்றைத் தொகுத்துரைக்கிறது. கோளில் பொறியில் குணம் இலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. எண்குணத்தான் என்ற சொல்லுக்கு நம் மனங்களில் எண்ணப்படுகின்ற நல்ல குணங்களையெல்லாம் உடையவன் என்று சமத்காரமாகப் பொருள்சொல்லலாம். எட்டு குணங்களை உடையவன் என்பதும் பொருள். அதாவது, இதற்கு முன்னுள்ள எட்டுகுறட்பாக்களில் சொல்லப்பட்ட எட்டு குணங்களையும் உடையவன். அதனால் தான் பத்தாம் குறளில் வேறு எந்தப் பண்பையும் புதிதாகச் சேர்க்காமல், ஐந்தாம் குறட்பாவில் ஆண்ட இறைவன் என்ற சொல்லையே திரும்பவும் பயன்படுத்தி விடுகிறார்.
இக்காலத்தில் தமிழ் இலக்கியம் படிப்போர் சொற்களுக்கு இக்காலப் பொருளையே கொண்டுவிடுகின்றனர் என்பது ஒரு குறைதான். அது சிலவித இலக்கிய ஆய்வுகளுக்குப் பயன்படக்கூடியதே என்றாலும், மிகப் பழங்கால இலக்கியங்களைப் படிக்கும்போது ஒரு சொல்லைக் கண்டால் அது அக்காலத்தில் எப்பொருளில் பயன்பட்டிருக்கும் என்று ஓரளவேனும் ஆராய்ந்தே பொருள்கொள்ளவேண்டும். அவ்வாறில்லாவிட்டால் குழப்பம்தான் ஏற்படும். பரிமேலழகர் போன்ற உரையாசிரி யர்களிடம் உள்ள குறைபாடு, அவர்கள் அவ்வக்காலத்திற்கேற்ற பொருளைக் கொண்டமையே ஆகும். அதனால் சமணசமயம் மேலோங்கியிருந்த – நீதி இலக்கிய காலத்தில், அறச்சிந்தனைக் காலத்தில் இயற்றப்பட்ட திருக்குறளுக்குச் சைவசித்தாந்த, வைணவசித்தாந்தப் பொருள் கூறி இடர்ப்பட்டனர். சான்றாக எண் குணத்தான் என்றசொல்லுக்குச் சைவம் என்ன அர்த்தங்களைத் தருகிறது, வைணவம் என்ன அர்த்தங்களைத் தருகிறது என்றெல்லாம் குறித்துள்ளனர். மாறாக, சமணசமயத்தில் எண்குணம் என்பதற்கு என்ன அர்த்தம் என்று நோக்கினால் பொருத்தமாக இருக்கும்.
எனவே திருவள்ளுவர் பாடிய கடவுள் வாழ்த்து கடவுளைப் பற்றியதும் அல்ல, அது வாழ்த்தாக அமைந்ததும் அல்ல என்று சொல்லி இக்கட்டுரையை முடிக்கலாம்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard