விண்ணப்பங்களை ஓராண்டாக கிடப்பில் போட்டிருந்தார்' என, பார்லிமென்ட் கூட்டுக்குழு முன், தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் தெரிவித்தார். இருப்பினும், விண்ணப்பங்களை தயாநிதி ஏன் கிடப்பில் போட்டார் என்ற கேள்வியை பா.ஜ., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் எதுவுமே எழுப்பவில்லை.
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவரான பி.சி.சாக்கோ தலைமையிலான, பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் குழுவின் கூட்டம், கடந்த புதன் கிழமை நடந்தது. அப்போது, தொலைத்தொடர்புத் துறையின் முன்னாள் செயலர் ஜே.எஸ்.சர்மா ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அவர் கூறியதாகச் சொல்லப்படுவதாவது: ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் ஒதுக்கீடு மற்றும் அவற்றின் விலைகள் நிர்ணயம் குறித்து முடிவு செய்ய, பிரணாப் முகர்ஜி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு என்பது தொலைத்தொடர்பு அமைச்சகம் சார்ந்தது என்றாலும், பிரணாப் தலைமையிலான மூத்த அமைச்சர்கள் குழு தான் எல்லாவற்றையும் முடிவு செய்யும் என, தீர்மானிக்கப்பட்டது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, ஆரம்பத்தில் இப்படித்தான் முடிவெடுக்கப்பட்டது.
பிரதமருக்கு கடிதம்: கடந்த 2005ல் நிலைமை இவ்வாறு இருந்தாலும், 2006ல் மாறியது. அப்போது, தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி, ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார். அதில், "ஸ்பெக்ட்ரம் உரிமம் மற்றும் விலை நிர்ணயம் போன்றவை அனைத்தும், தொலைத்தொடர்பு இலாகாவிற்குள் மட்டுமே வர வேண்டும். இந்த விஷயங்களை ஆராய்வதற்கு, மூத்த அமைச்சர்கள் குழு அவசியம் இல்லை' என்றார். இதை பிரதமர் ஏற்றுக் கொண்டதால், ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் மற்றும் ஒதுக்கீடுகள் குறித்த விஷயங்கள் அனைத்தும், மூத்த அமைச்சர்களின் அதிகார வரம்பில் இருந்து எடுக்கப்பட்டது. இவ்வாறு சர்மா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
உயர்ந்த அதிகார மையம்: கூட்டம் முடிந்த பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த பார்லிமென்ட் கூட்டுக்குழுத் தலைவர் சாக்கோ கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், முதலில் மூத்த அமைச்சர்கள் அடங்கிய குழுவிடம் தான் இருந்தது. இதை அப்போதைய தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி, கடுமையாக எதிர்த்துள்ளார். ஆரம்பக் கட்டத்திலேயே இதை தயாநிதி மாற்றவும் நடவடிக்கை எடுத்தார். அதனால், ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் தொடர்பான முடிவுகள் எடுப்பது குறித்து, அரசாங்கத்தின் மிக உயர்ந்த அதிகார மையத்திடம் பேசி சம்மதிக்க வைத்துள்ளார். விலை நிர்ணயம் என்ற விஷயம் மட்டும், அமைச்சர்கள் குழுவிடம் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாக, முன்னாள் தொலைத்தொடர்பு செயலர் சர்மா கூறினார். கடந்த 2003ல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நடந்தபோது, ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, ஸ்பெக்ட்ரம் தொடர்பான எந்த முடிவுகளை எடுக்க வேண்டுமென்றாலும், தொலைத்தொடர்பு இலாகா மட்டுமல்லாது, நிதியமைச்சரையும் கலந்தாலோசித்து எடுக்க வேண்டுமென்று எடுக்கப்பட்ட முடிவு, எப்படி உங்களுக்கு தெரியாமல் போனது என, சர்மாவிடம் கூட்டுக்குழு கேட்டது. அதற்கு, "அமைச்சர்கள் குழுவை தவிர்ப்பது என்பது அரசாங்கத்தின் மிக உயர்ந்த அதிகார மையம் சார்பில் எடுக்கப்பட்ட முடிவு' என, பதில் கூறினார்.
ஆரம்பத்திலேயே முயற்சி: ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயத்தை தொலைத்தொடர்புத் துறை தான் செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி, பிரதமருக்கு மூன்று கடிதங்கள் வரை தயாநிதி எழுதியுள்ளதாக சர்மா கூறினார். தவிர, ஏர்செல் - மாக்சிஸ் ஒப்பந்தம் குறித்தும் தனக்கு தெரியும் என்றார். மூத்த அமைச்சர்கள் குழுவை தவிர்த்து விடலாம் என்ற முடிவு எந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்டது என, சர்மாவிடம் குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சர்மாவோ, "ஆரம்ப நிலையிலேயே தயாநிதி அதை மாற்ற முயற்சிகள் எடுத்தார். பிறகு, பிரதமரின் தலையீட்டிற்கு பிறகு மாற்றப்பட்டுவிட்டது' என்றார். எந்தவொரு முடிவெடுத்தாலும், தொலைத்தொடர்பு கமிஷனையும் ஆலோசிக்க வேண்டும் என்று உள்ள நிலையில், அவ்வாறு ஏன் செய்யவில்லை என கேட்டதற்கு, "தொலைத்தொடர்பு கமிஷனை ஆலோசிக்காமல் பலமுடிவுகள், முந்தைய காலகட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன. எனவே, அவசியமாகக் கருதவில்லை' என்று சர்மா தெரிவித்தார். இவ்வாறு சாக்கோ கூறினார்.