பொதுமக்களிடம் பணம் பறிப்பது சரியா ? தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் கேள்வி
சென்னை : பொதுமக்களிடம் பணம் பறிமுதல் நடவடிக்கை சரியா என தேர்தல் கமிஷனுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்து.தேர்தலில் தங்களுக்கு சாதகமாக ஓட்டளிக்க வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க தமிழகம் முழுவதும் தேர்தல் கமிஷன் பறக்கும் படை அமைத்து அதிரடி சோதனை நடத்தி வருகிறது. ஆனால் அன்றாடம் நடக்கும் அதிரடி சோதனையால் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான் என்பது பரவலாக எழுந்துள்ள புகார்.மேலும் பறக்கும் படையினர் சோதனை என்ற பெயரில் வாகனங்களில் செல்லும் பொதுமக்களிடம் குறிப்பாக பெண்களிடம் அத்துமீறி நடப்பதாகவும் ஒரு சில இடங்களில் புகார்கள் எழுந்துள்ளன. குற்றவாளி என்று உறுதி படுத்துவதற்கு முன்பே சோதனை என்ற பெயரில் அவர்களை வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. இது தவறான நடவடிக்கை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண்களை சோதனையிடும் போது வீடியோ எடுக்கக் கூடாது, சிறு வணிகர்கள் கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்யக்கூடாது, அதற்கு பதிலாக அவர்களின் முகவரி உள்ளிட்ட விபரங்களை சேகரித்து வைத்துக்கொள்ளலாம் என்பது போன்ற கோரிக்கைகளை வணிகர்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் தேர்தல் கமிஷனை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கடையடைப்பு போராட்டத்தையும் வணிகர்கள் நடத்தி வருகிறார்கள். தேர்தல் கமிஷனின் சோதனை தொடர்ந்தால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஏற்கனவே அறிவித்துள்ளார்.
ஐகோர்டில் வழக்கு : இதற்கிடையில் தேர்தல் கமிஷனின் அதிரடி சோதனைக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஜக்கம்பட்டி திருவள்ளுவர்நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தில்லை நடராஜன் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். வாக்காளர்களை குறிப்பிட்ட நபர்களுக்கு ஓட்டுப்போட செய்வதற்காக அவர்களுக்கு பணம், பொருட்களை சட்டவிரோதமாக கொடுப்பதற்கு முயன்றால் அவற்றை பறிமுதல் செய்வதற்கு தேர்தல் விதிப்படி நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படையில் உள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் சாலையில் செல்லும் பொதுமக்களிடம் இருந்து பணத்தையும், வியாபாரத்துக்காக சிறுவாகனங்களில் கொண்டு செல்லும் பொருட்களையும் தேர்தல் நடவடிக்கை என்ற பெயரில் பறித்துவிடுகின்றனர். பொதுமக்களிடம் இவர்கள் மேற்கொள்ளும் பறிமுதல் அனைத்தும் சட்டவிரோதமாகும். எனவே பொதுமக்கள் சுதந்திரமாக பணம், பொருட்களுடன் செல்வதற்கு பறக்கும் படையினர் இடையூறு செய்வதை தடை செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு நேற்று, நீதிபதிகள் தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் கமிஷன் சார்பில் வாதிட்ட வக்கீல், பொருட்களை பறிமுதல் செய்வதற்கு தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் உள்ளது என்றும், இதுவரை ரூ.20 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார். அதற்கு, அரசியல் கட்சிகளையும், வேட்பாளர்களையும் ஒழுங்குபடுத்தும் நோக்கத்தில் பின்பற்றப்படும் பறிமுதல் நடவடிக்கைகளை, பொதுமக்களிடம் மேற்கொண்டு அவர்களை பாதிப்படையச் செய்ய முடியுமா?என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்க தேர்தல் கமிஷன் கால அவகாசம் கோரியது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
முதல்வர் அறிக்கை : தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இந்த கெடுபிடிகள் குறித்து முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் "தேர்தல் கமிஷன், எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை அதிக கெடுபிடி செய்து வருகிறது. வாகன சோதனையில், ஆடு, கோழிகளைக் கூட விட்டுவைக்கவில்லை,'' என, கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
29ம் தேதி கடையடைப்பு : தேர்தல் கமிஷனின் வாகனச் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 29ம் தேதி கடை அடைப்பு நடத்த வணிகர்கள் முடிவு செய்துள்ளனர். தேர்தல் கமிஷன் கெடுபிடியை கண்டித்து தமிழகம் முழுவதம் பல்வேறு நகரங்களில் வணிகர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தேர்தல் கமிஷன் கெடுபிடி குறித்து முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளதை அடுத்து இன்று ஐகோர்ட்டில் தேர்தல் கமிஷன் அளிக்கக்கூடிய பதில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை: ‘சந்தேகத்தின் அடிப்படையில் பொதுமக்களிடம் சோதனை நடத்தக் கூடாது’ என்று தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையை தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொள்வதாகவும் நீதிபதிகள் அறிவித்தனர். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் இருந்து தேர்தல் கமிஷன் சோதனை என்ற பெயரில் பணம் பறிமுதல் செய்யப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், வேணுகோபால் வழக்கை விசாரித்தனர். தேனி மாவட்டம் ஜக்கம்பட்டியை சேர்ந்த முன்னாள் தலைமை ஆசிரியர் தில்லை நடராஜன் சார்பாக மூத்த வக்கீல் ஆர்.தியாகராஜன் மற்றும் வக்கீல் ஸ்ரீனிவாசன் ஆஜராகி வாதிட்டனர். அப்போது நடந்த வாதம்:
வக்கீல்கள் தியாகராஜன், ஸ்ரீனிவாசன்: சோதனை என்ற பெயரில் தமிழகத்தில் தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து பணத்தை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. வியாபாரிகளால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் வக்கீல் ராஜகோபால்: ரூ.1 லட்சத்துக்கும் கூடுதலாக எடுத்துச் செல்லும் பணத்தைதான் பறிமுதல் செய்கிறோம். நிறைய இடங்களில் ரூ.10 லட்சத்துக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புகார் அடிப்படையில்தான் பறிமுதல் செய்கிறோம். பணத்தை பறிமுதல் செய்ய சட்டப்படி தேர்தல் கமிஷனுக்கு முழு அதிகாரம் உள்ளது.
அமைச்சர் கே.பி.பி.சாமி வக்கீல் ஆர்.விடுதலை: எதிர்க்கட்சியினர் கொடுத்த புகார் அடிப்படையில் எந்த ஆதாரமும் இன்றி ஒரு அமைச்சர் வீட்டிலேயே சோதனை நடத்தியுள்ளனர். இது அடிப்படை உரிமையை பறிப்பதாக உள்ளது. தேர்தல் கமிஷன் வரம்பு மீறி செயல்படுகிறது. நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தலை நடத்துவதாக கூறிக்கொண்டு அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்கள். அமைச்சர் வீட்டில் நடந்த சோதனையில் எதையும் கைப்பற்றவில்லை. அரசு அதிகாரிகளையும் இஷ்டத்துக்கு இடமாற்றம் செய்கின்றனர். குறிப்பிட்ட வேட்பாளர்களை குறிவைத்து நடவடிக்கை எடுக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் உள்நோக்கத்துடன் கொடுக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள்.
வக்கீல் ராஜகோபால்: இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன்: தேர்தல் கமிஷனுக்கு எதிராக நிறைய புகார்கள் வந்துள்ளன. திருமணத்துக்கு நகை வாங்க செல்பவர்களிடம் இருந்தும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் கமிஷனுக்கு தலைமைச் செயலர் கடிதம் எழுதியுள்ளார். பணத்தை பறிமுதல் செய்யும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள், வருமானவரித்துறை விசாரணைக்கு பிறகு பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்கின்றனர். வக்கீல் ராஜகோபால்: தலைமைச் செயலரின் கடிதம் கிடைத்தவுடன் நாங்களே புதிய விதிமுறை வகுத்துள்ளோம். சந்தேகம் ஏற்படும் நபர்களிடம் இருந்து மட்டும் பணத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளோம். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி பணத்தை பறிமுதல் செய்ய முழு அதிகாரம் உள்ளது.
நீதிபதிகள்: தேர்தல் கமிஷன் செயல்பாடுகள் எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. இஷ்டப்படி நீங்கள் சோதனை நடத்துவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்குகூட பணம் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. ரியல் எஸ்டேட் வியாபாரிகள் பத்திரப்பதிவுக்காக பணம் எடுத்துச் செல்வதை எவ்வாறு தடுக்கலாம். (பத்திரிகைகளில் வெளிவந்த முதல்வர் கருணாநிதியின் கடிதத்தை நீதிபதிகள் படித்துக் காட்டினர்).
இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் 28ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அன்று தேர்தல் கமிஷன் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், முதல்வரின் கடிதத்தை தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொள்வதாக அறிவித்தனர். இந்தக் கடிதத்துக்கும் பதில் அளிக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டனர். வரும் 28&ம் தேதி வரை சந்தேகத்தின் அடிப்படையில் பொதுமக்களிடம் சோதனை நடத்தக்கூடாது என்றும் நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் சோதனை நடத்தலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பெரியார் சிலை மூட எதிர்ப்பு
இந்த வழக்கு விசாரணை முடிந்தவுடன் வக்கீல் வீரசேகரன் ஆஜராகி, ‘தமிழகம் முழுவதும் பல இடங்களில் பெரியார் சிலைக்கு துணி போட்டு மூடப்பட்டுள்ளது. இதை உடனே அகற்ற வேண்டும் என திராவிடர் கழக பொதுச்செயலாளர் கனியன் பூங்குன்றனார் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும். துணியை அகற்ற உத்தரவிட வேண்டும்’ என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், இன்றே இந்த வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தனர்