நூலக வரியாக, கடந்த மூன்று ஆண்டுகளில், 450 கோடி ரூபாயை உள்ளாட்சி அமைப்புகள் செலுத்தியும், நூலகங்களுக்கு ஒரு புத்தகத்தைக் கூட வாங்காத அவல நிலை உள்ளது.
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள், ஆண்டுதோறும் 150 கோடி ரூபாய் வரை நூலக வரி செலுத்துகின்றன. மாவட்ட, கிளை மற்றும் கிராம நூலகங்களின் பராமரிப்பு, ஊழியர் சம்பளம் மற்றும் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதற்கு, நூலக வரி தொகை பயன்படுகிறது.மூன்றாண்டு உறக்கம்: நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க தனி கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இதில், நூலக சங்க செயலர் பல்கலை மற்றும் கல்லூரி நூலகர்கள் உறுப்பினர்கள். இவர்களோடு, பொதுநூலகத் துறை இயக்குனகரம் ஆலோசித்து, நூலகங்களுக்கு ஆண்டுதோறும் வாங்கும் புத்தகங்களை முடிவு செய்வர். கடந்த 2009க்கு பின், மூன்றாண்டுகளாக நூலகங்களுக்கு ஒரு புத்தகம் கூட வாங்கப்படாதது குறித்து, நூலக சங்க செயலர், எம்.முத்துசாமி கூறுகையில், ""நூலகத் துறை இயக்குனரகத்துக்கு பல கோரிக்கைகள் விடுத்தும் பலனில்லை. நூலகங்களுக்கு புத்தகங்களை விற்பனை செய்வதன் மூலம், பதிப்பாளர்களுக்கு கிடைத்து வந்த வருமானம் தடை செய்யப்பட்டு உள்ளது. மூன்றாண்டுகளில், 450 கோடி ரூபாய் நூலக வரி செலுத்தப்பட்டு உள்ளது. அது அனைத்தையும் முடக்கியே வைத்துள்ளனர்'' என்றார்.
மத்திய அரசு நிதியும்...: பொதுநூலகத் துறைக்கு, ராஜாராம் மோகன்ராய் அறக்கட்டளை மூலம் ஆண்டுக்கு, ஐந்து கோடி ரூபாயை புத்தகங்கள் வாங்குவதற்காக, மத்திய அரசு அளிக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக, தமிழகத்தில், இந்த தொகையும் முடங்கி கிடக்கிறது. இதுபற்றி, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்க செயலர், வைரவன் கூறும்போது, ""புதிய நூல்கள் கிடைப்பதில்லை என்பது நூலகம் சென்று வாசிப்பவர்களுக்கு பெரும் நஷ்டமே. மாவட்ட அளவிலும், கிராமங்களிலும் தனியாக புத்தகம் வாங்கி வாசிப்பவர்களை விட, நூலகம் சென்று வாசிப்பவர்களே மிக அதிகம்'' என்றார். மேலும், ""கடந்து மூன்றாண்டுகளாக புத்தகங்களை ஏன் வாங்கவில்லை என்பதற்கு, நூலகத் துறை காரணங்களைக் கூறவில்லை. புத்தக விற்பனையாளர்களும், பதிப்பாளர்களும் நூலக இயக்குனரகத்தை பல முறை அணுகியும் பலனில்லை'' என்றார்.
விடை என்ன? நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவது, மூன்றாண்டுகளாக முடங்கியிருப்பது பற்றி கருத்துப் பெற, நூலகத் துறை இயக்குநர் அன்பழகனை நேரிலும், தொலைபேசியிலும், பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தும், தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில், நூலக சங்கத்தினர் சபாநாயகர் ஜெயக்குமாரிடம், இப்பிரச்னையை கொண்டு சென்று உள்ளனர். அவர், முதல்வர் மூலம், இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதாக, நூலக சங்கத்தினருக்கு உறுதி அளித்து உள்ளார். பிரச்னைக்கு தீர்வு கண்டால் மட்டும் போதாது, மூன்று ஆண்டுகளாக புத்தகம் வாங்காததற்கு காரணமும் தெரிவிக்கப்பட வேண்டும் என, புத்தக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.