தமிழரின் அழியாப் பாரம்பரியமான இந்து சமயத்தின்மேல் கிறிஸ்துவ சாயம் பூசி நம்மையும், நம் மூதாதையர்களையும் சுய சிந்தனையற்றவர்களாக சித்தரிக்க அண்மையில் சென்னையில் ஒரு மாநாடு மூலம் சிலர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு, அந்த மாநாட்டின் இறுதி நாளிலேயே பலத்த அடி விழுந்தது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட சிலர் நமது தளத்தைத் தொடர்பு கொண்டு அளித்த தகவல்களின் அடிப்படையில் இது பற்றிய ஆதாரபூர்வமான குறிப்புகளைத் தொகுத்து அளிக்கிறோம்.
‘தமிழர் சமயம் : முதல் உலக மாநாடு’ என்கிற பெயரில் 2008 ஆகஸ்ட் 14-15-16 17 ஆகிய நாட்களில், சென்னையில் மயிலை கத்தோலிக்க பாஸ்டோரல் நிறுவனத்தில் நடத்தப்பட்ட ‘மாநாடு’ உண்மையில் ஒரு கிறிஸ்தவப் பிரச்சாரக் கூட்டம் ஆகும். தமிழ் அறிஞர்களுக்கு தமிழ் மொழி – பண்பாடு, அதன் தொன்மை ஆகியவற்றின் மீது இருக்கும் பற்றினை பயன்படுத்தி எவ்வாறு தமிழரின் சமய வாழ்க்கையை கிறிஸ்தவப்படுத்தலாம்; எப்படி தமிழரின் உயர்ந்த ஆன்மிக இலக்கியங்களை கிறிஸ்தவ பிரச்சாரத்துக்கு பயன்படுத்தலாம் என்பதே இந்த மாநாட்டின் உண்மையான உள்நோக்கமாக விளங்கியது எனலாம். எனவே இந்த மாநாடு உண்மையில் தமிழரின் மீது ரோம-கத்தோலிக்கத்தாலும் தமிழ்நாடு-மலேசியா-சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள சில கிறிஸ்தவ மத மேன்மையாளர்களாலும் நடத்தப்படும் ஒரு ஆக்கிரமிப்பு முயற்சியே ஆகும்.
தமிழ் அறிஞர்களுக்கு ‘தமிழே உலகின் முதல் மொழி’ ‘உலகின் முதல் மனிதன் தமிழனே’ எனக் கூறிவிட்டால் உள்ளம் புளகாங்கிதம் அடைந்துவிடுகிறது. உடனே அவ்வாறு கூறுபவர்களின் ஏனைய கருத்துகளைக் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளவோ அல்லது அதனை எதிர்க்காமல் மௌனிக்கவோ தயாராகிவிடுகிறார்கள். உதாரணமாக, அங்கு வந்திருந்த ஒரு சில -கை விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலேயே இருந்த- இந்துக்களான தமிழ் அறிஞர்களிடம் தனிப்பட்ட உரையாடலில் தெய்வநாயகத்தின் மையமான பிரச்சார கருத்தான ‘சைவமும் வைணவமும் புனித தாமஸ் கொண்டு வந்த கிறிஸ்தவத்தின் offshoot’ என தெளிவாகக் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டிய போது அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்; தாங்கள் இதனை ஏற்கவே இல்லை என அடித்துக் கூறினர். ஆனால் இவர்கள் எவருக்கும் தமிழரின் ஆன்மிக பண்பாட்டின் மீது நடத்தப்படும் இந்த வெளிப்படையான ஆக்கிரமிப்பை மேடையில் கண்டிக்க அல்லது மறுக்கத் தோன்றவில்லை. அவையடக்கம் காரணமாகவும் மாநாடு நடத்துபவரின் மனத்தை நோகடிக்க அவர்கள் விரும்பாத காரணத்தினாலும் அவர்கள் அதனை செய்யவில்லை போலும்! இதனை அந்த மாநாட்டின் நடத்துனர்களாக இருந்த முனைவர். தெய்வநாயகம்-தேவகலா அணி மிகத் தந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டது.
இந்த மாநாடு உண்மையிலேயே தமிழர் சமயம்-பண்பாடு ஆகியவற்றினை உலகறிய செய்வதற்காக நடத்தப்படும் ஒரு உன்னதமான முயற்சி என்பதாக எண்ணினர் வேறு சில வெள்ளந்தியான தமிழ் அறிஞர்கள். அவர்கள் பொதுவாக அளித்த பாராட்டினை தெய்வநாயகமோ தேவகலாவோ அல்லது கத்தோலிக்க மதச்சபையோ ‘தோமா கொண்டுவந்த ஆதி கிறிஸ்தவத்தின் offshoot தான் வைணவமும் சைவமும்’ என்கிற தங்களின் நிலைப்பாட்டுக்கான ஆமோதிப்பாகக் காட்டத் தான் போகிறார்கள். ஆனனல் அதைப் போல நேர்மையற்ற, கயமையான செயல் பிறிதொன்று இருக்க முடியாது.
எதுவாயினும் இந்த மாநாட்டில் பேசப்பட்ட பல கருத்துகள் ஆதாரமற்றவை; அவை கிறிஸ்தவ மதப்பிரச்சாரத்துக்கு உலகமெங்கும் பயன்படுத்தப்படும் கருத்துகள்; சில கருத்துகள் அப்பட்டமான வெறுப்பியல் பிரச்சாரமாகவும் இருந்தன. வேறு சில கருத்துகள் சிறுதும் அறிவியல் தன்மையற்றவையாகவும் இனமேன்மைவாதக் கருத்துகளாகவும் இருந்தன. முக்கியமாக முனைவர் தெய்வநாயகத்தின் பல கருத்துகள் சிறிதும் வரலாற்று அடிப்படை அற்றவையாகவும் தவறானவையாகவும் இருந்தன என்பதுடன் அவையே அவரது கோட்பாட்டின் ஆதார தூண்களாகவும் விளங்கின என்பதும் குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில் இந்த மாநாட்டுக்கு வந்திருந்த சில இந்துக்கள் இந்த போலி பிரச்சாரத்தால் மிகவும் மனத்துயரடைந்து மாநாட்டின் மூன்றாள் நாள் (ஆகஸ்டு 16) தமிழ்இந்து.காம் இணையதளத்தை அணுகினர். அதற்கு முன்பே அவர்கள் எழுத்தாளர் ஜெயமோகன் அண்மையில் எழுதிய தமிழர்களுக்குச் சிந்திக்கச் சொல்லித்தந்த புனித தாமஸ் என்ற இதுபற்றிய கட்டுரையைப் பற்றியும் தேடி அறிந்து அதனைப் படித்திருந்தனர் என்பதும் தெரியவந்தது. பொதுஜன ஊடகங்களில் வராத முக்கியமான கருத்துக்களைக் கொண்டு செல்வதிலும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் இணையம் கொண்டிருக்கும் அபரிமிதமான சக்தி நமக்கு வியப்பூட்டியது!
ஒரு இந்துத் தமிழர் அக்கட்டுரையையும், அத்துடன் அந்த மாநாட்டு நிகழ்வுகளில் செய்யப்பட்ட சில தவறான அணுகுமுறைகளை எடுத்துக்காட்டும் ஒரு சிறு கட்டுரையும் இணைத்து பல பிரதிகள் எடுத்து அதனை அந்த மாநாட்டில் விநியோகிக்கப் போவதாகவும் நமக்குத் தெரிவித்தார். அவர் அசோக்நகர் அனுமான் கோவிலின் அறங்காவலரும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபருமான கணேசன் அய்யா அவர்கள்.
திரு. கணேசன் அய்யாவின் ஊக்கத்தையும், முனைப்பைக் கண்டு நாமும் பெரும் உற்சாகம் அடைந்தோம். அந்த மாநாட்டில் பேசப்பட்ட விஷயங்களைப் பற்றியும் அறிந்துகொண்டோம். உடனடியாக தமிழ் இந்து தளம், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ் அறிஞர்களை நோக்கி சில ஆழமான கேள்விகளை எழுப்பும் முகமாக, போஸ்டர் வடிவில் சில display materials களையும் கணினியில் வடிவமைத்து அளித்தது. இந்த மாநாட்டில் கூறப்பட்ட கருத்துகளை ஆராய்ந்து ஒரே இரவில் கோர்க்கப்பட்ட இந்தத் தொகுப்பு இது குறித்த ஆய்வினை முன்னகர்த்த மிகவும் தேவையானது என்பது நமது தாழ்மையான எண்ணம். “பரிணாம அறிவியல் வெறும் ஊகமா? சம்ஸ்கிருத கல்வெட்டுகளின் காலம் என்ன? கடவுள் மனிதனாக வருவார் என்னும் கோட்பாடு கிறிஸ்துவுக்குப் பின்னர் தான் இந்தியாவுக்கு வந்தததா? தெய்வநாயகத்தின் சைவ நூல் மேற்கோள் மோசடி” – இவை உள்ளிட்ட மிக முக்கியமான விஷயங்கள் பற்றிய நம் தரப்பு வாதங்கள் அதில் இருந்தன.
மாநாட்டின் முடிவு நாளான ஞாயிறு அன்று நிகழ்வு காலை 9:30க்கு மேலேதான் ஆரம்பித்தது. திரு.கணேசன் அய்யா அவர்கள் மாநாடு தொடங்குவதற்கு முன்பாக தனது கட்டுரைப் பிரதிகளை விநியோகிக்க முடிவு செய்ததுடன், தாம் கொண்டுவந்திருந்த போஸ்டர்களைக் காட்டவும் மாநாட்டின் அதிகாரிகளில் ஒருவரான முனைவர் தேவகலாவிடம் அனுமதி கோரினார். ஆனால் தேவகலா அதற்கு ‘அங்கே கேட்டு முடிவு செய்ய வேண்டும் இங்கே கேட்டு முடிவு செய்ய வேண்டும்’ என்றும் கூறி தாமதித்துக்கொண்டிருந்தார். கணேசன் அய்யா அவர்கள் மாநாடு தொடங்குவதற்கு முன்பாகவே கட்டுரைப் பிரதிகளை விநியோகிக்க ஆரம்பித்தார்.
திரு.ஜெயமோகனின் கட்டுரை மாநாட்டுக்கு அழைக்கப்பட்டவர்களின் மனசாட்சியினுள் வேலென நுழைந்திருக்கக் கூடும் என்பதனை ஊகித்த முனைவர் தெய்வநாயகம், ஒரு ஆராய்ச்சியாளருக்கு தகுதியல்லாத, ஆனால் கிறிஸ்தவத்தின் ஒரு மூன்றாந்தர பிரச்சாரகனின் வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்த பிரதி விநியோகத்தை விமர்சனம் செய்தார். மதிப்பிற்குரிய கணேசன் அய்யா அவர்களை பெயர் குறிப்பிடாமல் ‘சைத்தானின் பிள்ளை’ என சொன்ன கொடுமையை என்னவென்பது! தமிழ்நாட்டில் அன்னிய மத ஏகாதிபத்தியத்துக்கு வேலை செய்யும் கைக்கூலிகள் சொந்த மண்ணின் பண்பாட்டை காப்பாற்ற ஒற்றை மனிதனாக வீரத்துடன் போராடிய அத்திருமகனாரை ‘சைத்தானின் பிள்ளை’ என வர்ணித்த அந்த கொடுஞ்செயல் ‘தமிழர் சமய மாநாடு’ எனும் போர்வையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் அரங்கேறியது.
ஆனால் தமிழ் இந்து.காம் எழுப்பிய ஆணித்தரமான ஆதாரபூர்வமான கேள்விகளுக்கும், விளக்கங்களுக்கும் இந்த தெய்வநாயகம்-தேவகலா அணியினரால் பதிலளிக்கவோ, எதிர்வினை புரியவோ முடியவில்லை என்பதால், இந்தக் கேள்விகள் எழுப்பப்பட்டு அங்கிருந்த தமிழறிஞர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட விஷயத்தையே அங்கு வந்திருந்த அறிஞர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து மறைத்து விட்டனர். இதுதான் இந்த மாநாட்டினை நடத்தி சென்று கொண்டிருந்தோரின் ‘ஆராய்ச்சி நேர்மை’.
அந்தக் கேள்விகள், வாதங்கள் இங்கே (.pdf கோப்பு வடிவில்).
இதன் முக்கியமான விளைவு என்ன? தெய்வநாயகம் மாநாட்டு மேடையில் தமது கருத்துகளுக்கும் கத்தோலிக்க சபைக்கும் தொடர்பில்லை என அறிவிக்க வேண்டியதாயிற்று. அதற்கு முந்தைய நாள் இருந்த துணிவும் வேகமும் வெளிப்படையான வெறுப்பியல் பிரச்சாரமும் விஷமத்தன தூண்டுதல்களும் இல்லமாலாயிற்று, மாநாட்டின் முழுக் கவனமும் இந்த மாநாடு சமய நல்லிணக்கத்துக்கு எதிரானது அல்ல என நிரூபிப்பதாக அமைய வேண்டியதாயிற்று.
தமிழர்களின் பண்பாட்டின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு மௌனம் காக்காமல் எதிர்த்து குரல் எழுப்பி அய்யா வைகுண்டரும், பாரதியும், சுவாமி சித்பவானந்தரும் உருவாக்கிய பண்பாட்டு பாதுகாப்பு சமுதாய அக்கறை எனும் பாரம்பரியத்தில் தன்னையும் ஒரு சிறு சேது பந்தன அணிலாக இணைத்துக் கொண்டதில் தமிழ் இந்து.காம் பெருமை அடைகிறது.
துணிச்சலுடனும் பொறுமையுடனும் விவேகத்துடனும் தன்னை இழிவாக விளித்த தெய்வநாயகத்திடமே ‘நீங்கள் நீண்டகாலம் வாழ வேண்டும்’ என உண்மை தமிழருக்கே உரிய மனித நேய பண்பாட்டுடனும் செயல்பட்ட அய்யா கணேசன் அவர்களுக்கும், இம்முயற்சியில் அவருக்கும் உறுதுணையாக இருந்த மற்றவர்களுக்கும், தமிழ் இந்து.காம் தனது பணிவான வணக்கங்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.