தஞ்சாவூர்,செப்.29:திருவாரூரில் அமையவுள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் உதவியாளர்கள் முதல் விரிவுரையாளர்கள் வரை பணியில் சேர லஞ்சம் கேட்கப்படுவதாகவும், துணை வேந்தர் நியமனத்திலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் புகார்கள் கூறப்பட்டுள்ளன. . மாநிலங்களின் தரமான உயர் கல்வியை வழங்கும் நோக்கத்துடன் மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திற்கும் மத்திய பல்கலைக்கழகம் அமைக்க அனுமதி வழங்கியது.
அதன்படி தமிழகத்திற்கு வழங்கப் பட்ட மத்திய பல்கலைக்கழகம் முதல மைச்சர் கருணாநிதி பிறந்த மாவட்டமான திருவாரூரில் அமைய உள்ளது.
இதற்கான துவக்க விழா திருவாரூரில் நாளை நடைபெறுகிறது. முதலமைச்சர் கருணாநிதி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த பல்கலைக்கழகத்துக்காக வண்டாம்பாளையத்தில் 516 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற உள்ளன.மத்திய அரசு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதில் ரூ.400 கோடியில் கட்டிடங்கள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
உயரிய நோக்கத்துடன் ஆரம்பிக்கப் படும் இந்த மத்திய பல்கலைக் கழகத்தில் பல முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் தெரிவிக்கின்றன.திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மூலம் துணை வேந்தர் பதவிக்கு தேர்வுகள் நடைபெற்றன.
தமிழகம், ஆந்திரம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலிருந்து 3 பேர் தேர்வுப் பட்டியிலில் வைக்கப்பட்டிருந்தனர். சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில் தமிழகத்தைச் சேர்ந்தவரிடம் அப்போதைய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரின் மகனது செய்தித் தொடர்பாளர் ஒருவர் துணை வேந்தர் பதவிக்காக ரூ.2 கோடி தர வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த பதவியில் அமர்ந்தால் கட்டிடம் கட்டுகின்ற பணிக்காக ஒதுக்கப் பட்டுள்ள ரூ.400 கோடியில் ரூ.4 கோடியும், பேராசிரியர், விரிவுரையாளர் உள்ளிட்டோரை நியமிப்பதில் பணமும் கிடைக்கும் என்று அவரிடம் கூறியதாக தெரிகிறது.
ஆனால் தன்னால் அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என தமிழகத்தை சேர்ந்தவர் கூறி விட்டதால், தேர்வுப் பட்டியலில் இருந்த பி.பி.சஞ்சய் என்பவர் பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அவர் மத்திய அமைச்சரின் மகன் சார்பில் கேட்கப்பட்ட ரூ.2 கோடியை கொடுத்து பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியை பெற்றதாகவும் இவருக்கு ஆந்திராவை சேர்ந்த பெண் இணையமைச்சர் சிபாரிசும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், மத்திய பல்கலைக் கழகத்திற்கு விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் குறித்து விளம்பரங்கள் அளிக்கப்பட்டன.
இதனையடுத்து பல கல்லூரிகளில் வேலை பார்க்கும் கல்லூரி ஆசிரியர்கள் பலர் விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது.அவ்வாறு விண்ணப்பித்தவர் களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவர்களை பணியில் சேர்க்க லஞ்சம் கேட்கப்படுவதாக கூறப்படுகிறது.
ரூ.2 கோடி கொடுத்து இந்த பதவியை பிடித்துள்ள மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் தற்போது பேராசிரியர், விரிவுரையாளர் பதவிகளுக்கு ரூ.20 லட்சமும், பணியாளர் பதவிகளுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலும் கேட்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
ரூ.2 கோடி கொடுத்து தான் இந்த பதவியை பெற்றதாக துணை வேந்தர் வெளிப்படையாகவே கூறி இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக அந்த புகார்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இத்தகைய முறைகேடுகள் ஆரம்பக் கட்டத்திலேயே நடப்பது கல்லூரி ஆசிரியர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
http://stopbribe.blogspot.com/2009/09/blog-post_29.html