New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தொல்காப்பியரின் திணைக் கோட்பாடும் - பிற்கால இலக்கண நூல்களில் அதன் வளர்ச்சியும் -- கா. சுரேஷ்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
தொல்காப்பியரின் திணைக் கோட்பாடும் - பிற்கால இலக்கண நூல்களில் அதன் வளர்ச்சியும் -- கா. சுரேஷ்
Permalink  
 


தொல்காப்பியரின் திணைக் கோட்பாடும் - பிற்கால இலக்கண நூல்களில் அதன் வளர்ச்சியும்

E-mailPrintPDF

- கா. சுரேஷ் முனைவர் பட்ட ஆய்வாளர்,   தமிழ்த்துறை, அரசு  கலைக்கல்லூரி (தன்னாட்சி), கோயமுத்தூர் -தமிழரின்  தொன்மைமிக்க வாழ்வியல் முறையினை எடுத்துரைக்கும் பகுதி தொல்காப்பியப் பொருளதிகாரமாகும். தமிழர்கள் மலைகளில் வாழ்ந்து உடைமைகளைப் பேணிக்காக்கக் காடுசார்ந்த பகுதியில் வாழ்ந்து பின்பு நாகரிக வளர்ச்சியடைந்து நிலமும் நீரும் வளமும் பெருகி இருந்த வயல்சார் மருதநிலத்தில் வாழ்ந்து,  வாணிகம் பொருட்டு கடல்சார்ந்த நெய்தல் பகுதியில் குடியேறி ஒப்பற்ற வாழ்க்கை முறையினை வாழ்ந்து வந்தனர். மேலும் அவர்கள் மலைச்சாரல் பகுதிகளிலும்,  அழகிய புல்வெளி சார்ந்த காடுகளும் வறட்சியுற்ற போது பாலை என்ற நிலம் உருவானது. அங்கும் மக்கள் வாழ்ந்து வந்தனர். அவ்வாழ்க்கை முறையினை உணர்ந்த தொல்காப்பியர் அக வாழ்க்கை மற்றும் புறவாழ்க்கை என இரண்டாகப் பகுத்துள்ளார். அதில் ‘அகம்’ காதல் சார்ந்த வாழ்க்கையினையும்,‘புறம்’ நாடு சார்ந்த போர், வீரம் போன்ற வாழ்வியல் சூழலையும் எடுத்துரைத்துள்ளது. தொல்காப்பியர் திணையை ஒழுக்கம் என்னும் பொருளில் கையாண்டு அக ஒழுக்கம் ஏழினையும் புறஒழுக்கம் ஏழினையும் பிரித்தறிகின்றார். 
இதனை,

“கைக்கிளை முதலா ஏழ் பெருந்திணையும்
முற்கிளந்த தனவே முறைவயினான்”1

என்ற நூற்பாவில் சுட்டுகிறார். அதாவது கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை என அகத்திணைகள் ஏழு என்கிறார். இத்திணைகளின் நெறிமுறைகளைப் பொருளதிகாரத்தின் அகத்திணையியல் முதல் நூற்பாவில் (தொல்.அகத்.நூ.1)கூறப்பட்டுள்ளது. இதற்கு இளம்பூரணர்,“திணையாவது கைக்கிளை முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணையென்பன. அவை முறைமையினான் மேற்சொல்லப்பட்டன என்றவாறு”2என்பார். அதாவது இந்நூற்பாவில் கைக்கிளை முதலா ஏழ்பெருந்திணையும் அகத்திணை என்றும் அவற்றின் முறையே என்பதற்கு புறமாகிய  பாடாண், வஞ்சி, வெட்சி, வாகை, உழிஞை, தும்பை, காஞ்சி என்றும் புறத்திணை ஏழும் சேர்ந்து பதினான்கு திணை என வரையறுக்கிறார் இளம்பூரணர். பேராசிரியர்,“கைக்கிளை முதற் பெருந்திணையிறுவாய். எழும் முன்னர்க் கிளக்கப்பட்டன”என்பார். மேலும் நச்சினார்க்கினியர்,“கைக்கிளை  முதலா  எழுபெருந்திணையும்  கைக்கிளை  முதலாக முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணையென்ற  எழு நிலனும், முறைநெறி வகையின் - அவற்றிற்கு முறைமை வழியிற் புறமென அடைத்த வெட்சி முதற் பாடாண் பகுதியீறாகிய எழுபகுதியோடே கூட்ட, முற்கிளந்தனவே-முன்னர்க் கிளக்கப்பட்டனவேயாகச் செய்யுட்குறுப்பாய் நிற்கும்”4 என்பர். இளம்பூரணர் நூற்பாவில் வரும் “முறைமையினான்” என்ற பாடத்தை மாற்றி “முறை நெறிவகையின்” என  பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் பாடங் கொண்டுள்ளனர். இத்திணை என்னும் உறுப்பு செய்யுட்குரிய உறுப்பாக அமைந்துள்ளது. ஒரு செய்யுளில் முதல், கரு, உரிப்பொருள் மூன்று சேர்ந்து வந்தால் தான் அச்செய்யுள் அகப்பாட்டுறுப்பாக அமையும் என்பது தொல்காப்பியரின் திணைக்கோட்பாடாகும். இத்திணைக் கோட்பாடு செய்யுளில் பாடப்பெறும் ஒழுகலாறுகளை அகமும் புறமும் எனப் பாகுப்படுத்தி அறிவதற்கான கருவியாகும்.

உரையாசிரியர்கள் ‘திணை’ என்பதனை  ஒழுக்கம், நிலம், குடி, வீடு, திண்ணை என்ற பொருளில் கையாண்டுள்ளனர். மேலும் திணைக் கோட்பாட்டின் தோற்றம் பற்றி ஜே.ஆர்.மாரின் கருத்து,“தொல்காப்பியனார் ஏழு அகத்திணைக்குள் ஐந்து நிலங்களுடன் தொடர்புற்றதெனக் குறிப்பிடுகிறார். முதலாவதான கைக்கிளையும் இறுதியான பெருந்திணையும் தொடர்புடையவையல்ல. மேலும் புவியியற் பிரதேசங்களுக்குரிய பெயர்களான முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்பன உண்மையில் முறையே காடு, மலை, பாலை நிலம், பண்படுத்தப்பட்ட நிலம், கடற்கரை ஆகியவற்றில் வளரும் தாவரங்களாகும். முதலில் இப்பெயர்கள் தாவரங்களையே குறித்தன என எண்ணுதல் நியாயமானது. அதன்பிறகு அவை வளரும் பிரதேசங்களைக் குறிக்கப் பயன்படுவதன் காரணம் நீலகிரி, பழனி மலைப் பிரதேசங்களில் கவனத்தைக் கவரும் தாவரமாக இது உள்ளது. அடிக்கடி இல்லாமல் அருமையாகவும் அதே சமயம் மிக அதிகமாகவும் பூக்கும் தன்மையது. அதன் பின் காதல் விடயங்களைக் குறிப்பதற்கான சொற்களாக இவை மாறின. அதுபோலவே போருக்குச் சூடிச்சென்ற பூக்களின் பெயரால் புற விடயங்கள் அழைக்கப்பட்டன.”5 முதலில் ஐந்திணைகளும் அங்குள்ள தாவரங்களைக் கவனப்படுத்தும் போது, அங்கு வளரும் தாவரங்களின் பெயர்களால் ஐந்திணை உருவானது என்று ஊகிக்கலாம். அந்தத் தாவரங்களின் பூக்களினைப் போருக்குச் சூடிச் சென்ற போது அகத்திணைகளுக்கு புறமான புறத்திணை உருவாகியிருக்கலாம். மேலும் மனிதனின் ஐம்பொறி உணர்ச்சிகள் அகத்திணை என்றும். அவ்வுணர்ச்சிகளுக்குப் புறமான உயிர்களுக்குத் தேவையான ஐம்புதங்கள் புறத்திணை என்றும் உய்த்துணரலாம். இதனை ந.சுப்புரெட்டியார் கூற்றின் மூலம் ஊகிக்கலாம். “நாம் இவ்வுலகினைக் கூர்ந்து நோக்குவோமானால், அங்கு நிகழும் செயல்கள் யாவும் உயிர்களின் செயல்களாகவே காணப்பெறுகின்றன. உயிர்களின் செயல்கள் யாவும் அவ் உயிர்களின் உணர்ச்சிகளைக் கவ்விக்கிடக்கின்றன. உயிர்களின் உணர்ச்சிகள் மெய், வாய், கண்,  மூக்கு,  செவி என்ற ஐம்பொறிகளின் வாயிலாக ஐந்து வகைப்பட்டு நிகழும் என்பதை நாம் அறிவோம். அவை முறையே ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை என்பனவாம். இவ்வுணர்ச்சிகளும் முறையே மண், புனல், தீ, காற்று,  வான் என்னும் ஐவகைப்பட்ட புறப்பொருள்களைப் பற்றியே நிகழும் என்பதை ஊகித்து அறியலாம். உயிர்கட்குப் புலனாகும் புறப்பொருள்கள் யாவும் இந்த ஐந்து வகைகட்குள் அடங்கும்.”மனிதனுக்குத் தேவையான அடிப்படையான இயற்கைச் சூழல் தான் திணைக் கோட்பாடு உருவாக்கத்திற்கு மூலமாகத் திகழ்கிறது. அதாவது ஆதிமனிதன் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையினை வாழ்ந்தமைக்கு மூலஆதாரமாகத் திணைக் கோட்பாடு உருவாக்கம் பெற்றன என்பது தெளிவாகிறது. 

தமிழரின் திணை வரலாறு என்பது ஒரே காலக்கட்டத்தில் உருவானதல்ல. ஒவ்வொரு திணையும் பலஆண்டுகால நீட்சியின் பருவகால மாற்றத்தினால் உருப்பெற்றது எனலாம். “ஆதியில் குறிஞ்சி நிலத்தில் வாழ்க்கையைத் தொடங்கிய மனிதன் அந்த நிலத்திலேயே பரம்பரை பரம்பரையாகப் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து வந்திருக்க வேண்டும். ஆநிரைகளை அவன் சேகரித்து அவற்றைத் தன் உடைமையாகக் கொண்டு வளர்க்கத் தொடங்கிய காலத்திற்குப் பின்னரே புதிய மேய்ச்சல் நிலம் தேடி, முல்லை நிலத்திற்குக் குடிபெயர்ந்திருக்க முடியும். முல்லை நிலத்தில் வேளாண்மைத் தொழிலை அவன் அறிந்து, சிறுகச் சிறுகக் காடுகளை வயல்களாக அவன் செய்த பின்னரே மருதம் என்ற புதிய நிலம் உருவாகியிருக்க முடியும். ஆழ்கடல் பற்றிய அச்சம் பையப் பைய நீங்கிய ஒரு பிந்திய காலத்திலேயே அவன் கடலை நெருங்கி வாழும் சூழல் உருவாகியிருக்க வேண்டும். தொடக்கத்தில் அவன் வாழ்ந்து பழகிய குறிஞ்சியும் முல்லையும் வறட்சியுற்ற சூழலில் பழகிய இடத்தைப் பிரிய மனமின்றியே அவன் பாலை நிலத்தில் வாழும் வாழ்க்கையில் ஒன்றியிருக்க வேண்டும். இவ்வாறே வாழ்க்கைத் தேவை காரணமாக மனிதன் ஒவ்வொரு நில வாழ்க்கையும் அடுத்தடுத்துப் பெற்றான் எனத் தெரிகிறது.”இவ்வாறு ஒவ்வொரு திணையும் பல ஆண்டு இடைவெளியில் பெற்ற மக்கள்,  அங்கு பண்பட்ட நாகரிக வாழ்க்கை முறையை வாழ்ந்து வந்துள்ளனர். அப்படி வாழ்ந்த மக்களின் ஒழுக்க முறையை அடிப்படையாகக் கொண்டு ஐந்திணை அமைப்பு தோற்றம் பெற்றன எனலாம். ஐந்திணையோடு கைக்கிளை,  பெருந்திணை என்ற ஒழுக்க முறையும் சேர்ந்து அகத்திணை  ஏழு என்று உருப்பெற்றன என்பது தெளிவாகிறது.

பண்டை மக்களின் ஒழுக்க முறை வாழ்வியலுக்கு உதாரணமாக சங்க இலக்கியத் தொகுப்பு காணப்படுகின்றன. அவர்களின் வாழ்வியலை சமுதாயவியல் அணுகுமுறையோடு அணுகும் போது திணைக் கோட்பாட்டினை அடையாளப்படுத்தலாம். “ஒவ்வொரு நிலப்பகுதியையும் ஒரு குறிப்பிட்ட ஒழுக்க முறையுடன் தொடர்புப்படுத்தும் மரபானது சங்க இலக்கியங்களிலும் காணப்படுகிறது. இந்தக் கருத்திணைக் கூறும் குறியீடாய்த் திணை என்ற சொல் விளங்குகின்றது. தொல்காப்பியர் இந்தச் சொல் குறித்து வரையறை எதனையும் செய்யவில்லை. மிக முந்திய உரையாசிரியரான இளம்பூரணர், இந்தச் சொல்லுக்கு பொதுக்கருத்து அல்லது உள்ளடக்கம் என்று விளக்கும் கூற முற்படுகிறார். மற்றொரு உரையாசிரியராகிய நச்சினார்க்கினியர் திணை என்னும் சொல்லை ஒழுக்கம் அல்லது நடத்தை என்று வகைப்படுத்திக்கூறுகின்றார்.”8

தொல்காப்பியர் வகுத்த ‘திணை’ என்ற சொல் உரையாசிரியர்கள் ஒழுக்கம்,  நடத்தை,  நிலம் என்ற பொருளில் கையாண்டுள்ளனர். இத்திணை என்ற சொல்லை வைத்து தமிழரின் திணை வரலாற்றினைப் புரிந்து கொள்ளலாம். ஏனெனில் ஒவ்வொரு திணையிலும் காதல், போர் குறித்த விடயங்கள் ஐவகை பூகோள நிலப்பிரிவுகளோடு தொடர்புடையன. அதாவது குறிப்பிட்ட காதல் அல்லது போர் நடவடிக்கைகள் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் இயல்பாகச் சித்தரிக்கப்படுகின்றன. ஐவகை நிலப்பகுகளும் அவற்றின் ஒழுக்க வடிவங்களும் அந்தந்த நிலப்பகுதிகளுக்கே உரித்தான மலர்களின் பெயரால் அழைக்கப்படுவதே திணைக்கோட்பாடாகும். 

தொல்காப்பியருக்குப்  பின்பான  இலக்கண  நூல்களில்  திணைக் கோட்பாடு
தமிழரின் திணை வரலாறு என்பது பூர்வீக மக்கள் மலைகளிலிருந்தும் அழகிய அடர்த்தியான வனங்களிலிருந்தும் உணவுத்தேவை பூர்த்தி செய்யும் வளமிக்க சமவெளிப் பகுதிகளை நோக்கியும் மற்றும் கடல்சார் வாழ்வியலோடு, மலையும் வனமும், வளம் குன்றிய போது வறட்சியான பாலை என்ற ஐவகை நிலவமைப்பு உருவாக்கப் பெற்றது என்பதைத் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியம் வகுத்த திணைக்கோட்பாடாகும். தொல்காப்பியத்திற்குப் பின்பு பல ஆண்டுகள் இடைவெளியில் அகப்பொருள் உணர்ந்த பல்வேறு இலக்கண நூல்கள் தோன்றின அவைகள் தொல்காப்பியர் வகுத்த திணைக்கோட்பாட்டை எவ்வாறு முன்நிகர்த்திச் செல்கின்றது என்பதனைப் பிற்கால அகப்பொருள் நூல்களில் ஆராய்வது இப்பகுதியாகும்.

இறையனார் அகப்பொருளில் அகப்பாட்டுறுப்புகளாகத் திணை, கைகோள்,  கூற்று,  கேட்போர்,  களம்,  காலம், எச்சம், மெய்ப்பாடு, பயன், கோள் ஆகிய பத்தினை எடுத்துரைக்கிறது. இதில் திணையாக அன்பின் ஐந்திணையை மட்டுமே கூறி கைக்கிளை பெருந்திணையை விடுத்துள்ளது. 

இதனை, 
“திணையே கைகோள் கூற்றே கேட்போ
………              …………             ……………         ........………
அகனைந் திணையும் உரைத்தல் ஆறே”9

என்ற நூற்பாவில் அன்பின் ஐந்திணையை மட்டும் எடுத்துரைக்கிறது. இதில் கைக்கிளை, பெருந்திணை பற்றி கூறவில்லை. இதற்கு நக்கீரர் உரை,“அவர் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தலென ஐந்து வகைப்படும். அவை அறியுமிடத்து முதல், கரு, உரிப்பொருள் பற்றி அறியப்படுமென்றவாறு. அவ்விலக்கண மெல்லா மேல் ‘அன்பினைந் திணை’ (இறையனார்-க) என்ற தன்வழியே உணர்த்திப் போந்தாம். அவை திணையெனப்படுவன. அகப்பாட்டின் ஒரு பாட்டுக்கேட்ட இடத்து இவ்வைந் திணையுள்ளு இன்னதொன்றுபற்றி வந்ததொன்று சொல்லுவது.”10 அதாவது அகப்பாட்டுறுப்புக்களில் அன்பினைந்தினையை மட்டுமே சுட்டும் பொருள் கொண்டு இருக்கலாம். ஆதலால் கைக்கிளை, பெருந்திணையை விடுத்து அன்பினைந்திணை மட்டும் எடுத்துரைத்துள்ளது.

வீரசோழியத்தில் அகப்பாட்டுறுப்பு எனச் சுட்டாமல் அகப்பொருள் உரை இருபத்தேழு என்று விவரித்துள்ளது. அதில் ‘திணை’ அகம் என்ற ஐந்திணையை மட்டுமே விளக்கி, கைக்கிளை, பெருந்திணையை விளக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு திணைக்கு முதல், கரு, உரிப்பொருள் ஆகியவற்றைப் பற்றி தனித்தனியாக விளக்கியுள்ளது. மேலும் அகப்பொருளை அகம்,புறம், அகப்புறம்,புறப்புறம் என்ற நால்வகையாகப் பிரித்து அவற்றுள் புறம், புறப்புறத்தில் உள்ள திணைகள் புறப்பொருள் வெண்பாமாலை நூலில் உள்ளது போன்று வகுந்துள்ளது. இங்கு அகத்தின் அன்பினைந்திணை மட்டுமே விளக்குகிறது. இதனை,

“சட்டக  மேதிணை   கைகோள்  நடைசுட்டிடங்கிளவி
…………              ……………               ……………                      ………………
…………              ………………           ……………                         ………….....
மாற்று  முரையும்  அகுக்கு  முரையு  மதித்தறியே”11

என்னும் நூற்பா வழி உணர்த்துகிறது.

 

நம்பியகப்பொருளில் ஒழிபியலில் தொல்காப்பியர் வகுத்ததைப் போல அகப்பாட்டுறுப்புகளாக பன்னிரெண்டினைச் சுட்டியுள்ளது. இதில் ‘திணை’ அன்பினைந்திணை, கைக்கிளை,  பெருந்திணை ஆகிய ஏழு திணைகளைத் தொல்காப்பியர் அகத்திணையியலில் விளக்கியுள்ளது போன்று நம்பியகப்பொருள் ஒழிபியல் என்ற பகுதியில் அகந்திணை ஏழு என்று கூறுகின்றது. இதனை,

“திணையே கைகோள் கூற்றே கேட்போர்
……………         ……………     ……………      ….................
அப்பால் ஆறிரண் டகப்பாட் டுறுப்பே”12

என்னும் நூற்பாவில் பன்னிரெண்டு அகப்பாட்டு உறுப்புக்களில் திணையின் விரிவாக்கமாக அன்பின் ஐந்திணையோடு கைக்கிளை, பெருந்திணை சேர்த்து ஏழுதினை என்று கூறியுள்ளது.

தொன்னூல் விளக்கத்தில்,
“அகப்பொருள் புறப்பொருளாம் இரண்டு அவற்றுள்
பெருகிய கைக்கிளை பெருந்திணைக் குறிஞ்சி
ஆதி ஐந்திணை என அகத்திணை ஏழே”13

என்னும் நூற்பாவில் தொல்காப்பியர் கூறி மரபிலேயே அகத்திணை ஏழு என்று  சுட்டியுள்ளது. மேலும் பெரும்பொழுது சிறுபொழுது இரண்டுக்குரிய நிகழ்ச்சிகள் அகப்பொருள் மரபிலே விளக்க முற்படுகிறது. இதில் அன்பின் ஐந்திணை பற்றியும் அவற்றிற்கான இடத்தினைப் பற்றியும் (நூற்பா.174ல்) இடவுரிமை பற்றி விளக்கியுள்ளது எண்ணத்தக்கது.

முத்துவீரியம், “திணைகளைக் களவிற்குரிய திணையாக குறிஞ்சி, நெய்தல் என்றும்,”14 “கற்பிற்குரிய திணைகளாக மருதம், முல்லை என்றும்”15 விளக்கியுள்ளது. ஆனால் இவ்வமைப்பினை ஏற்றுக் கொள்ள முடிவதாக இல்லை. ஏனெனில் களவிற்குரிய திணை, கற்பிற்குரிய திணைகளாக பிரித்துக் கூறினாலும், அகவொழுக்கவியல் முதல் நூற்பாவில் அகத்திணை ஏழு என்று விளக்கியுள்ளது. 

இதனை,
“அகப்பொருள் கைக்கிளை யைந்திணை பெருந்திணை
எனவெழு வகைப்படு மென்மனார் புலவர்”16

என்னும் நூற்பாவில் அகப்பொருள் முதலான கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, பாலை,  மருதம்,  நெய்தல்,  பெருந்திணை என்று அகத்திணை ஏழு என்று தொல்காப்பியர் மரபினை அடியொற்றி விளக்கியுள்ளது.

சுவாமிநாதம்,  அகப்பொருள் முதலான கைக்கிளை,  குறிஞ்சி,  முல்லை,  மருதம்,  பாலை,  நெய்தல்,  பெருந்திணை என அகத்திணை ஏழு என்று கூறுகின்றது. இங்கு அகப்பொருள் கற்பித்து உரைக்கப்படும் புனைந்துரையும் உலக நெறியும் உரைப்பதாகும். ஆனால் கைக்கிளை என்பது ஒருதலைக்காமம் என்றும்,  ஐந்திணை என்பது அன்புடையகாமம் என்றும், பெருந்திணை என்பது இசையாக்காமம் என்றும் விளக்கியுள்ளது. 
இதனை,

“கறுவில் ஒரு தலைக்காமம், ஐந்திணை அன்புடைய
காமம்இசை யாக்காம மாதல்பெருந் திணையே”17

என்னும் நூற்பா வழி விளக்குகிறது. இங்கு தொல்காப்பியர் மரபினை அடியொற்றி அகத்திணை ஏழு என்று கூறுகிறது.

அறுவகையிலக்கணத்தில் திணை பற்றி செய்திகள் அகப்பொருளில் கூறாமல் புறப்பொருளில் ஐந்திணைப் பெயர்கள் பெயரளவில் கூறப்பட்டுள்ளது. இதனை,

“புறப்பொருட் பகுதியில் பொருவில் ஐவகை
நிலத்து இயல்பு உரைக்கும் நிகழ்ந்த வாறே”18

என்ற நூற்பா வழி சுட்டுகிறது. இங்கு ஐவகைத் திணையமைப்பு வழக்கத்துக்கு மாறாகப்  புறப்பொருளில் கூறப்பட்டுள்ளது. புறப்பொருள் பற்றிக் கூறும் இப்பகுதியில் ஒப்பற்ற  ஐந்து வகையான நிலங்களின் தன்மைகளை இயற்கைப் பொருள்களே என்று சுட்டுகிறது. மேலும் குறிஞ்சி முதலான இயற்கைப் பொருள்களின் அகப்பொருள் பாத்திரங்களை உணர்ச்சிகளின் பின்னணியாகப் பயன்படுத்துகிறதை ஒழிய,  இங்கு அகப்பொருள் பற்றி கூறவில்லை எனலாம்.

தொல்காப்பியரின் திணைக்கோட்பாடு மக்களின் அக ஒழுக்கம் ஏழினையும், புற ஒழுக்கம் ஏழினையும் பாடுபொருளாகக் கொண்டு அமைந்துள்ளது. இவரின் திணை என்ற சொல் நிலம்,  ஒழுக்கம் என்ற பொருளில் வருகின்றது.

தொல்காப்பியர் ஒரு திணையை வகுக்க முதல்,  கரு,  உரிப்பொருளின் பின்னணியோடு அமைந்தால் தான் அது அகப்பாட்டு பொருள் தரும் என்று திணைக் கோட்பாட்டை வகுத்துள்ளார். மேலும் தொல்காப்பியர் அகத்திணை ஏழு என்றும் அதற்கு எதிர்ச்சூழலில் அமைந்த போர் நிலைகளை புறத்திணை ஏழு என்றும் பாடம் கொண்டுள்ளார். தொல்காப்பியரின் திணைக்கோட்பாடு மக்களின் அக ஒழுக்கம் ஏழினையும்,  புற ஒழுக்கம் ஏழினையும் பாடுபொருளாகக் கொண்டு அமைந்துள்ளது. இவரின் திணை என்ற சொல் நிலம்,  ஒழுக்கம் என்ற பொருளில் வருகின்றது. ஐவகைத் திணைக்கோட்பாடு ஒவ்வொரு மலர்களின் பெயரளவில் சித்தரிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. 

ஒரு படைப்பு நிலஅமைப்பு,  சமூகஅமைப்பு,  பண்பாட்டுக் கூறுகளுடன் பொதுத்தன்மையோடு தோன்றுகிறது. அந்த அடிப்படையில் உயிர்ப்புடன் தொல்காப்பியர் தமிழ் இலக்கிய அறிவுப்புலத்திற்குத் திணைக்கோட்பாடு தவிர்க்கமுடியாத மிக முக்கியமான விடயமாக விளங்குகிறது. இத்திணைக்கோட்பாடு நவீன  இலக்கியமான நாவல், சிறுகதை,  கவிதை போன்றவற்றிலும் பொருத்தி,  நவீனக் கோட்பாட்பாட்டைப் புறம் தள்ளி தமிழருக்கான கோட்பாட்டுக் கொடையாக கருதலாம். திணைக்கோட்பாடு உலக இலக்கியத் தளத்திற்குப் பொருத்தும். திணைக்கோட்பாடு ஒவ்வொரு நில மலர்களின் பெயரால் சித்தரிக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. 

தொல்காப்பியருக்குப் பின்பு பல்வேறு அகப்பொருள் இலக்கண நூல்கள் தோற்றம் பெற்றன. அவற்றில் தொல்காப்பியர் வகுத்த திணை அமைப்பினைப் பார்க்கையில்,  இறையனார் அகப்பொருள்,  வீரசோழியம் போன்றவை அன்பின் ஐந்திணையை மட்டும் கூறி கைக்கிளை,  பெருந்திணை ஒழுக்கத்தினைக் கூறவில்லை. நம்பியகப்பொருளில் விளக்கப்பட்டதைப் போன்று மாறனகப்பொருள்,  இலக்கண விளக்கம் போன்றவைகளில் அன்பின் ஐந்திணையோடு கைக்கிளை,  பெருந்திணை சேர்த்து அகத்திணை ஏழு என்று சுட்டியுள்ளன. களவியற்காரிகை நூற்பாக்கள் சிதைந்துள்ளதால் திணை பற்றி குறிப்பிடவில்லை. தமிழ்நெறி விளக்கம் ஐந்திணை பற்றி முடிவு செய்ய முடியவில்லை. காரணம் அகப்புறப் பாகுப்படினுள் கைக்கிளை,  பெருந்திணை பற்றி அகப்பொருள் தொடர்பான செய்திகள் இருக்க வாய்ப்பில்லை என்கிறது. முத்துவீரியம் முதலில் களவிற்குரிய,  கற்பிற்குரிய திணைகளாக முதலில் கூறி பின்பு அகத்திணையியலில் அகத்திணை ஏழு என்று சுட்டியுள்ளது. அறுவகையிலக்கணத்தில் மற்ற நூல்களில் கூறியது போல் இல்லாமல் ஐந்திணைப் பெயர்களை மட்டும் பெயரளவில் புறப்பொருளில் விளக்கியுள்ளது.

இங்கு பெரும்பாலான நூல்கள் தொல்காப்பிய மரபினை அடியொற்றி அகத்திணை அமைப்பில் திணைக் கோட்பாட்டினை விளக்கியுள்ளது அறிய முடிகிறது. மேலும் ஒரு சில நூல்களில் அன்பின் ஐந்திணை ஒழுக்க நெறியினை மட்டும் சுட்டியுள்ளது எனலாம்.

குறிப்புகள்
1.    தொல்.செய். இளம் (உ.ஆ),  நூ.177
2.    க. வெள்ளைவாரணன், தொல்காப்பியம்,  செய்யுளியல் உரை வளம்,     ப.898
3.    மேலது,  ப.898
4.    தொல்.பொருள்.செய். நச்சர். (உ.ஆ),  ப.218
5.    அம்மன்கிளி முருகதாஸ்,  சங்கக் கவிதையாக்கம் மரபும் மாற்றமும்,ப.51
6.    ந.சுப்பு ரெட்டியார்,  தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை,  ப.247
7.    வெ.மு. ஷாஜகான் கனி,  திணை வரலாறு,  ப.4
8.    கா.சிவத்தம்பி,  பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி,  ப.27-28
9.    இறையனார் அகப்பொருள்,  நூ.56
10.    நக்கீரர் உரை,  இறையனார் அகப்பொருள்,  ப.179
11.    வீரசோழியம், நூற்பா. (88-89)
12.    நம்பியகப்பொருள்,  நூற்பா.211
13.    தொன்னூல் விளக்கம், நூற்பா. 199
14.    முத்துவீரியம், நூற்பா. 809
15.    மேலது,  நூற்பா. 810
16.    மேலது,  நூற்பா. 770
17.    சுவாமிநாதம், நூற்பா. 71
18.    அறுவகையிலக்கணம்,  நூற்பா. 57

suraphd@yahoo.in



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard