New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கால்டுவெல்: திராவிட முகவரி -வைரமுத்து


Guru

Status: Offline
Posts: 24601
Date:
கால்டுவெல்: திராவிட முகவரி -வைரமுத்து
Permalink  
 


 

கால்டுவெல்: திராவிட முகவரி

வைரமுத்து

 

ஓர் அதிசயம் 1814-ல் நேர்ந்தது. தமிழ்நாட்டுக்கான சூரியோதயம் அன்று மேற்கில் நிகழ்ந்தது. அது கிழக்கு நோக்கிப் பயணப்பட்டு, தன் பேரொளியை இந்தியாவில் பரப்பிவிட்டு, தமிழ்நாட்டின் தென்கோடியில் மண்ணுக்குள் தன்னை மறைத்துக்கொண்டது. ஆனால், அதன் கற்றைகள் மட்டும் உலகின் விளிம்புகள்தோறும் இன்னும் வெளிச்சம் வீசிக்கொண்டிருக்கின்றன. அந்த வெளிச்சத்தின் பெளதிகப் பெயர் கால்டுவெல்.

அவர் 77 வயதில் மறைந்தபோது, அவர் அடக்கம் செய்யப்பட்ட இடையன்குடி கல்லறை மீது இங்கிலாந்திலிருந்து ஒரு பூ விழுந்தது. 1891 அக்டோபர் 19 நாளிட்ட ‘தி லண்டன் டைம்ஸ்’ இவ்வண்ணம் எழுதியது: “1856-ல் முதன்முதலில் வெளியிடப்பட்ட அவரது திராவிடக் குழுமங்களின் ஒப்பிலக்கணம், மேற்கத்திய மொழி அறிஞர்களுக்கு ஒரு தேவ ரகசியக் கண் திறப்பாகவும், எதிர்ப்பாரற்ற - எவராலும் பின்தொடர முடியாத தனித்தன்மை மிக்கதாகவும் திகழ்ந்தது. அவரது ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ காலத்தால் அழியாத நினைவுச் சின்னமாய் என்றென்றும் நிலைத்திருக்கும்.”

கால்டுவெல் இந்தியாவுக்கு நற்செய்தி சொல்ல வந்தவர்தாம்; இறைப் பணிக் கழகத்தின் தூதுவர்தாம்; சமயம் பரப்பும் நோக்கத்தைத் தலை மேல் சுமந்தவர்தாம். ஆனால், தேன் குடிக்கவந்த வண்டு மகரந்தச் சேர்க்கை செய்து, மலர்க்காட்டைக் கனிக்காடாய் மாற்றுவதுபோல், சமயத்தை ஏற்றிப்பிடிக்கப் போந்து திராவிடம் என்ற இனவியல் தத்துவத்தை இமயத்தில் ஏற்றிவைத்த கதைதான் கால்டுவெல் கதை.

வசீகரமானது அவரது வாழ்வு; ஆனால் வலிகளால் நிறைந்தது.

கால்டுவெல் கடந்து வந்த பாதை

அயர்லாந்தில் பிறந்து, தாய்நாடாகிய ஸ்காட்லாந்துக்கு 10 வயதில் இடம்பெயர்ந்து, 16 வயது வரை ஆங்கில இலக்கண இலக்கியக் கல்வி பெற்று, கவின் கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்று, பின்னர் மெய்யுணர்வு நாட்டம் பெற்று, சமயப் பணியே தம் பணி என்று இறுதியாக உறுதியுற்று, லண்டன் சமயத் தொண்டர் சங்கத்தில் 20 வயதில் இணைந்து, கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் ஐரோப்பியத் தொன்மொழிகளின் நீதி நூல்களையும் சமய நூல்களையும் தேர்ந்து கற்றுத் தெளிவு பெற்று, டேனியல் சேண்ட்ஃபோர்டு என்ற மொழிநூல் மேதையிடம் கிரேக்க மொழியை உயர்தனிச் செம்மொழிகளோடு ஒப்பாய்வு செய்து, சமயத் தொண்டர் சங்கம் ஆற்றுப்படுத்த, தென்தமிழ்நாட்டின் திருப்பணிக்காக 24 வயதில் கப்பலேறி, நான்கு மாதக் கப்பல் பயணத்தில் ஆந்திரம் - ஆரியம் இரண்டும் கற்று, 1838-ல் சென்னையில் இறங்கி ‘ட்ரூ’ என்னும் ஆங்கில அறிஞரோடு மூன்றாண்டு வாசம் புரிந்து, தமிழையும் தமிழ்நாட்டையும் தமிழர் பண்பாட்டையும் உயிருக்குள் உள்வாங்கி, 400 மைல் தூரத்தையும் நடந்தே கடப்பதென்று பாண்டி நாட்டுக்குப் பயணப்பட்டு, சோழ நாடடைந்து, காவிரியோடு நடந்து, சிதம்பரம் - மயிலாடுதுறை வழியே தரங்கம்பாடி சென்று தங்கி, குடந்தை அடைந்து, நிலவளம் - நீர்வளம் - மொழிவளம் - பண்பாட்டு வளத்தை உற்றறிந்து, திருவரங்கம் புகுந்து நீலகிரி அடைந்து கோவை வழியே மதுரை அடைந்து, பொருனை வழியே பாளையங்கோட்டை கடந்து நாசரேத் சென்று தன் இறுதி எல்லையான இடையன்குடியை ஓர் இரவிலே அடைந்து, அங்கேயே தங்கி, தன் தேகம் வருத்தித் தெருக்கள் திருத்தி, தெருப் பணியோடு திருப்பணி தொடங்கி, 29 வயதில் நாஞ்சில் நாட்டில் வளர்ந்த நங்கை எலீசா என்னும் கிறித்துவத் திருமகளை மணம்புரிந்து, சமயப் பணியும் சமுதாயப் பணியும் ஆற்றிமுடித்து, 33 ஆண்டுகள் முயன்று கிறித்துவக் கோயில் கட்டியெழுப்பி, தமது 77-ம் வயதில் இயற்கை கொழிக்கும் கொடைக்கானலில் இயற்கை எய்தி, இடையன்குடியில் தான் கட்டிய கோயிலில் அடக்கஞ்செய்யப்பட்டதுதான் கால்டுவெல்லின் ஒருவரிச் சரிதை.

கால்டுவெல்லின் வாழ்க்கை இத்தோடு கழிந்திருந்தால் காலப் பெருவெள்ளத்தில் மற்றுமொரு குமிழியாய் ஓசையின்றி உடைந்திருப்பார். ஆனால் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற பேராய்வுதான் அவருக்குக் கால முகவரி தந்தது; திராவிடம் என்ற இனத்துக்கு மூல முகவரி தந்தது.

18-19-ம் நூற்றாண்டுகளில் தமிழ் இனத்தின் மீது ஒரு கெட்டி இருட்டு கொட்டிக் கிடந்தது. சூரியக் கதிர்களும் துளைக்க முடியாமல் இறுகிக் கிடந்தது அந்த இருட்டு. அந்த வெளியேறாத இருட்டை வெட்டியெடுத்த ஐரோப்பியக் கோடரி கால்டுவெல்.

சம்ஸ்கிருதம்தான் இந்தியாவின் மொழிகளுக்கெல்லாம் தாய் என்ற கருதுகோள் ஐரோப்பிய வெளியெங்கும் ஆணித்தரமாக நம்பப்பட்டது. மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் வடமொழி இலக்கியம் - பண்பாடு - கலை என்பதைத் தாண்டித் தெற்கு நோக்கித் திரும்பவே இல்லை. திராவிட மொழிகளை வடநாட்டார் ‘பைசாச பாகதம்’ அதாவது ‘பேய்களின் மொழி’ என்றே பேசிவந்தனர். கோல் புரூக் - காரி வில்கின்ஸ் போன்ற ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும் வடமொழியே திராவிட மொழிக் குடும்பத்தின் மூலம் என்ற மூளைச் சலவைக்கு ஆளாகிக் கிடந்தனர்.  இதற்குப் பின்னால் ஒரு ‘மொழிஅரசியல்’ இருந்தது. அதை உடைத்து தமிழ்மொழி என்றொன்று உண்டென்றும் ஞானக் கருவூலங்கள் கொட்டிக்கிடக்கும் ஆதிமொழி அதுவென்றும் எழுத்துருவில் ஐரோப்பாவிற்கு அறிவித்தவர்கள் பைந்தமிழ் பயின்ற பாதிரிமார்களே.

கால்டுவெல் என்ற யுக சம்பவம் நிகழ்வதற்குக் கால்கோள் செய்தவர்களைக் காலம் மறக்காது. 1606-ல் இத்தாலியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து மார்பில் பூணூல் தரித்து, கிறித்துவ மதம் பரப்பிய தத்துவ போதக சுவாமி என்ற ராபர்ட் டி நொபிலி, 1700-ல் இத்தாலியிலிருந்து வருகைதந்து தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கண்ட வீரமாமுனிவர் என்ற கான்ஸ்டன்டின் ஜோசப் பெஸ்கி, 1709-ல் ஜெர்மனியிலிருந்து வந்து தரையில் கால் மடக்கி அமர்ந்து மணலில் விரல் செலுத்தி எழுதித் தமிழ் கற்றுத் தொண்டாற்றிய சீகன் பால்கு, 1796-ல் இங்கிலாந்திலிருந்து  வந்திறங்கி திருக்குறளின் முதல் 13 அதிகாரங்களுக்கு ஆங்கிலத்தில் உரை எழுதிய எல்லிஸ் துரை, 1814-ல் ஜெர்மனியிலிருந்து வந்து திருநெல்வேலியில் ‘சாந்தபுரம் -

சந்தோஷபுரம்’ முதலிய பன்னிரண்டு கிராமங்களை உண்டாக்கிய இரேனியுஸ் அடிகள், 1838-ல் இங்கிலாந்திலிருந்து வந்து திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் ஆகிய பெருமக்கள் செய்த பெருந்தொண்டு தமிழையும் ஒரு மொழியென்று முன்னிறுத்தியது மேற்குலகில்.

ஆனால், தமிழ் என்பது திராவிடம் என்ற ஒரு மொழிக் குடும்பத்தின் தாய் என்றும், சம்ஸ்கிருதத்தின் வேரிலிருந்து அது முற்றிலும் வேறுபட்டதென்றும், சம்ஸ்கிருதத்தின் உறவின்றியே அது தனித்தியங்கும் வல்லமை கொண்டதென்றும் ஐரோப்பிய அறிவுலகம் அறிந்து மதித்தது கால்டுவெல்லின் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ 1856-ல் இங்கிலாந்தில் வெளிடப்பெற்ற பிறகுதான். அதுவரை இந்திய மொழிகளின் மூலம் குறித்து ஐரோப்பாவில் நம்ப வைக்கப்பட்ட பிம்பம் கண்ணாடி நிழல் மீது கற்பாறை விழுந்ததுபோல் உடைந்து சிதறியது. திராவிடம் என்பது மொழிப்பரப்பு மட்டுமன்று; அது ஒரு நிலப்பரப்பு மற்றும் பண்பாட்டுப்பரப்பு என்றும் பின்பு ஐரோப்பா அறிந்தது.

தொல்காப்பியம் முதல் நேமிநாதம், வீரசோழியம், நன்னூல் வரையிலான நூல்களெல்லாம் தமிழின் அமைப்பிலக்கணம் கூறுவன. ஆனால், கால்டுவெல்லின் ஆராய்ச்சிதான் முதன்முதலில் தமிழின் ஒப்பிலக்கணம் கூறியது. ஒப்பிலக்கணம் என்பது மொழிப்புலத்தின் புத்தறிவியல். தீயும் சக்கரமும் கண்டறியப்பட்ட பிறகு மனித குலப் பயணம் புதுப்பாய்ச்சல் கொண்டதுபோல, ஒப்பிலக்கணம் என்ற மொழிஅறிவியல் தோன்றிய பிறகுதான் மொழிக் குடும்பங்கள் புத்தொளி பெற்றன.

கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம், சம்ஸ்கிருதம்தான் தமிழுக்குத் தாய் என்ற கருத்தை முதலில் கருக்கலைப்புச் செய்தது. மனிதர்களுக்கு மரபணுக்கள் மாதிரி மொழிகளுக்கு வேர்ச்சொற்கள் என்று கண்டறிந்து திராவிட மொழிகளின் வேர்ச்சொற்களை ஒப்பிட்டு உறழ்ந்து, தமிழே திராவிட மொழிகளின் தாய் என்பதை உலகமே ஒப்புக்கொள்ள ஓங்கி உரைத்தது. திராவிடம் என்பது, ஓர் ஆதி இனத் தொகுதியின் அடையாளக் குறி - இந்த மண்ணும் மண் சார்ந்ததுமான உரிமை உயில் என்பதை உறுதி செய்தது.

திராவிடம் எனும் ஆதிச் சொல்

திராவிடம் என்ற சொற்சுட்டு கால்டுவெல்லால் உண்டாக்கப்பட்டதன்று. அது ஓர் ஆதிச் சொல்.

‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்று மனோன்மணிய ஆசிரியரும், ‘திராவிட உத்கல வங்கா’ என்று மகாகவி தாகூரும், ‘திராவிடத்திலே’ என்று தாயுமானவரும் சுட்டுவதற்கு முன்பே 14-ம் நூற்றாண்டில் மலையாள இலக்கியமான லீலா திலகம் ‘திராவிடம்’ என்பதைப் பிரித்துச் சொல்லியிருக்கிறது. 8-ம் நூற்றாண்டில் குமாரில பட்டர் என்ற வடமொழி ஆசானும் ‘ஆந்திர திராவிட பாஷா’ என்று குறிக்கிறார். பாகவத புராணத்தில் சத்திய விரதன் என்ற இந்திய மூதாதை ‘திராவிட மன்னன்’ என்றே அழைக்கப்படுகிறான்.  விஷாலர் என்று மனுதர்ம சாஸ்திரம் இழியினத்தாராக அழைக்கும் பட்டியலில் ஒட்டரர் - காம்போஜர் - யவனர் - சாகர் - பாரதர் - சீனர் - கிராதர் இவர்களோடு திராவிடர் என்ற பெயரையும் எழுதிப்போகிறது. இப்படி இலக்கிய இலக்கண புராண முற்சுட்டுகளெல்லாம் திராவிடம் என்பதைத் தங்கள் வசதிக்கேற்பப் பொருள்சுட்ட, கால்டுவெல் மட்டும்தான் திராவிடம் என்பது ஓர் இனக்குழு நாகரிகத்தின் மூத்த மொழிச் சுட்டு என்பதை அறிவியல் அடிப்படையில் மெய்ப்பித்தார்.

இந்தி - வங்காளம் போன்ற கெளரிய மொழிக் குடும்பத்தில் சதையும் நரம்புமாய் ஒட்டிக்கிடக்கும் சம்ஸ்கிருதச் சொற்களின் ஆதிக்கத்தை ஆய்ந்து அந்த மொழிகள் வடமொழிச் சிதைவில் பிறந்தவை என்று மொழி வல்லார் முடிவு கட்டினர். மெழுகுவத்தியை ஊதி அணைத்தவர்கள் விண்மீனையும் அப்படியே அணைத்துவிடலாம் என்று கருதி, உச்சி வானம் பார்த்து உதடு குவித்ததுபோல, இந்திக்கும் வங்காளத்துக்கும் வைத்த அளவுகோலையே திராவிட மொழிகளுக்கும் நீட்டித்தனர். அவையும் வடமொழி வழிவந்தவையே என்று நம்பினர்; ஐரோப்பிய அறிவுலகத்தையும் நம்ப வைத்தனர்.

வடமொழியைக் கழித்துவிட்டால் இந்தியும் வங்காளமும் இயங்கவே இயங்கா. அதேபோல், தெலுங்கும் மலையாளமும் கன்னடமும்கூட இயங்குவது அரிது; அல்லது கடிது. ஆனால், வடமொழிச் சொற்களை முற்றிலும் களைந்த பிறகும் வாழ வல்லதும் வளர வல்லதும் திராவிட மொழிக் குடும்பத்தின் தாயாக விளங்கும் தமிழ் மொழி ஒன்றே என்று கால்டுவெல் நிறுவினார். ஒரு மொழி தன் வேர்ச்சொற்களை எப்படி வினைப்படுத்துகிறது என்ற அளவுகோல் கொண்டுதான் அதன் பிறப்பும் இருப்பும் பெருமையும் பெறப்படும் என்று கணக்கிட்ட கால்டுவெல்லின் ஆராய்ச்சிகள் அரிதானவை. அறிவுலகத்தால் மறுக்க இயலாதவை.

அவர் எழுதுகிறார்: “திராவிட மொழிக் குடும்பங்களின் வேர்ச்சொற்கள் ஓரசைத் தன்மை உடையவை; உயிர் நெடில் உடையவை; குறிலோடு உயிர்கூடிய மெய்யீறு கொண்டவை.” இதை மெய்ப்பிக்க அணுவைப் பிளப்பதுபோல் சொல்லைப் பிளக்கிறார். ‘பெருகுகிறது’ என்ற சொல் ஆறசை உடையதாயினும் உண்மையில் அதன் வேர் ஓரசையே என்று உணர்த்துகிறார்.

பெருகுகிறது என்ற சொல்லில் ஈற்றசையாகிய ‘அது’ அஃறிணை ஒருமை விகுதி; ‘கிறு’ என்பது நிகழ்கால இடைநிலை. இரண்டையும் கழித்தால் ‘பெருகு’ என்பதே வினையின் பகுதி. ‘கு’ என்பது தன்வினை உணர்த்தும் அஃறிணைச் சொல்லாக்கம். எனவே ‘பெரு’ என்பதே வினைமூலம் என்று பெறப்படும். இதிலும் ஒலிநயம் கூட்ட வரும் உகரம் களைந்தால் ‘பெர்’ என்பதே வேர்ச்சொல்லாய்ப் பெறப்படும். திராவிட மொழிகள் அனைத்துக்கும் இந்த வேர்ச் சொல் விதி பொருந்தும்; வேர்ச் சொல் அடிப்படையில் ஆராய்ந்து திராவிடமும் சமஸ்கிருதமும் வெவ்வேறு குருதிக்குடும்பம் என்று விளக்கமுறச் செய்தார் கால்டுவெல்.

“திராவிட மொழிகளில் சமஸ்கிருதச் சார்புத் தன்மைகளைவிட எதிர்த்தன்மைகளே மிகுதி. திராவிட மொழிகளின் இடப்பெயர்களும் எண்ணுப் பெயர்களும் பெயர்வினை என்ற சொல்லாக்கங்களும் சம்ஸ்கிருதத்தோடு முற்றிலும் வேறுபட்டவை. தமிழ் மொழியில் சமஸ்கிருதத்தின் அளவு, ஆங்கிலம் கடன் வாங்கிக்கொண்ட இலத்தீனைவிடக் குறைவுதான்” என்று நீண்ட ஆய்வுகளில் நிறுவினார் கால்டுவெல். இந்த ஆய்வுகளால் தமிழைக் கட்டிப்போட்ட சம்ஸ்கிருதத்தின் நூற்றாண்டு முடிச்சுகளை நுட்பமாக அவிழ்த்தார் கால்டுவெல்.

திருந்திய மொழிகளும், திருந்தா மொழிகளும்

திராவிடக் குடும்ப மொழிகள் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்பதை எண்ணுப் பெயர்கள் கொண்டு எடுத்துக்காட்டுகிறார் கால்டுவெல். தமிழின் ‘ஏழு’ என்னும் எண்ணுப்பெயர் மலையாளத்திலும் ஏழு, கன்னடத்தில் ஏளு, துளுவில் ஏளு, தெலுங்கில் ஏடு என்று வழங்கப்படுகிறது. தமிழ் ‘ழ’கரம் தெலுங்கில் ‘ட’கரமாகும், கன்னடத்தில் ‘ள’கரமாகும். ஆகவே அவையாவும் ஒரே குடும்பம் என்று உறுதிசெய்தார்.

மலையாளம் என்ற மொழிப்பெயரை ‘மலய’ என்ற வடமொழியின் திரிபு என்று கருதுவாருண்டு. அது அவ்வாறன்று. தமிழில் வழங்கும் ‘மல்’ என்ற வேர்ச் சொல்லுக்கு வளம், வலிமை என்று பொருள். அதனால்தான் பெருங்குன்றுக்கு ‘மலை’ என்று பெயர் வந்தது. எனவே மலையாளம் என்ற மொழிப்பெயரே அது தமிழ்க் குடும்பம் என்று சுட்டுகிறது.

தெலுங்கு மொழியை ஆதிப் புலவர்கள் அழைத்த பெயர் தெனுகு அல்லது தெனுங்கு என்பதே. அது அவ்வாறாயின் ‘தேன்’ என்ற வேரடியிலிருந்தே பிறந்திருக்க வேண்டும் என்பது ஒரு கூற்று. இது ஏற்புடைத்தாயின் தமிழ் வேரிலிருந்தே நமது சகோதரத் தெலுங்கு மொழியும் பெயர்பூண்டிருக்க வேண்டும் என்று பெறப்படும்.

வடமொழியில் இருந்து பிறந்ததே ‘கர்நாடகம்’ என்று சிலர் கருதுவர். ஆனால், மொழி அறிஞர் குண்டர்ட் கூற்றுப்படி ‘கரு+நாடு+அகம்’ என்ற தமிழடியாகப் பிறந்தது என்பதே சால்புடைத்து.

துளு மொழிக்கு எழுத்துருவும் இல்லை; இலக்கியமும் இல்லை. ஆனால் அது அச்சு வடிவம் கண்டதென்னவோ கன்னட எழுத்துருவைக் கடன்வாங்கித்தான். எனவே, அதுவும் திராவிட மொழிக் குடும்பத்தின் அங்கம் என்பது ஆதாரபூர்வமாக அறியப்படுகிறது.

பிறப்புமுறை - ஒலிப்புமுறை - அமைப்புமுறை ஆகியவற்றால் திராவிட மொழிக் குடும்பம் ஒன்றென்பதும் அது சம்ஸ்கிருதத்துக்கு மாறுபட்டுத் தனித்துத் தோன்றியதென்பதையும் தரணிக்கு மட்டுமன்று தமிழர்க்கும் அவரே உணர்த்தினார்.

திராவிட மொழிக் குடும்பத்தைத் திருந்திய மொழிகளென்றும் திருந்தா மொழிகளென்றும் இரண்டாகப் பிரிக்கிறார் ஆய்வாளர் கால்டுவெல்.

தமிழ் - மலையாளம் - தெலுங்கு - கன்னடம் - துளு - குடகு ஆகிய ஆறும் திருந்திய மொழிகளென்றும், துதம் - கோதம் - கோண்ட் - கூ - ஓரியன் - ராஜ்மகால் ஆகிய ஆறும் திருந்தா மொழிகளென்றும் ஆய்ந்து அறிவிக்கிறார். சம்ஸ்கிருதத்திலிருந்தே திராவிட மொழிகள் பிறந்தன எனும் கூற்று உண்மைக்குப் புறம்பானதென்பதைத் திருந்தா மொழிகளைக்கொண்டே தீர்ப்பளிக்கிறார்.

“திராவிட மொழிகளைச் சம்ஸ்கிருதத்திலிருந்து பிறந்தனவாகவே கொள்ளுதல் வேண்டும் என்று கூறும் கீழைநாட்டு மொழிநூலறிஞர்கள், சம்ஸ்கிருதச் சொற்கள் அறவே இடம்பெறாதனவாய் திருந்தாத் திராவிட மொழிகள் இருப்பதை அறிந்தவரல்லர். சம்ஸ்கிருதச் சொற்களை மேற்கொள்ளும் திராவிட மொழிகளும் அச்சொற்களை ஆடம்பரப் பொருளாகவும், அழகுதரும் பொருளாகவும் மதிப்பதல்லது மொழிவளர்ச்சிக்கு இன்றியமையாதனவென்று மதிப்பதில்லை.” திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண முதல் பாகத்தில் கால்டுவெல் கூறும் கட்டியம் இது. இந்தக் கருத்தை வெறுப்பாருண்டு; மறுப்பாரில்லை.

மறதியின் புழுதி மறைத்த அருந்தொண்டுகள்

கால்டுவெல் ஊர் திருத்தியும் சீர்திருத்தியும் பேர்திருத்தியும் ஆற்றிய பெருந்தொண்டுகள் பலவற்றை மறைத்துவிட்டது மறதியின் புழுதி.

ஒன்பது பள்ளிகள் உண்டாக்கி, பிள்ளைகளுக்கு அவர் மதிய உணவு தந்த மாண்பு மறந்து போயிற்று. வேட்டி கட்டிய விலங்குகளாய்த் திரிந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர் பெற்றுத்தந்த சமூக மரியாதை பேசப்படவில்லை பெரிதாய். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற பேரொளியின் முன்னே அவர் எழுதிய ‘தாமரைத்தடாகம்’, ‘ஞான ஸ்நானம்’, ‘நற்கருணை’, ‘திருநெல்வேலிச் சரித்திரம்’ போன்ற தீபங்கள் மங்கிப்போயின. குங்குமத்தின் குழந்தை போன்ற தேரியின் செம்மண்ணை வியன்னா ஆராய்ச்சிக் கழகத்திற்கு அனுப்பி, உலகில் எங்குமே அறியக் கிடைக்காத அரிய மண் அதுவென்று நெல்லைச் சீமைக்கு அவர் பெற்றுத்தந்த பெரிய பெருமை பெரிதும் அறியப்படவில்லை. படைப்போவியமாய் எழுதிப்பார்த்துப் புடைப்போவியமாய் அவர் எழுப்பிய கிறித்துவத் திருக்கோயில் போதிய கீர்த்தி பெறவில்லை. அந்த இடையன்குடி ஆலயத்திலேயே அவர் திருமேனி அடக்கம் செய்யப்பட்டிருப்பதை அறிவுலகம் தவிரப் பிற உலகம் அறியவில்லை.

சமயப் பணி ஆற்ற வந்த கால்டுவெல் சமுதாயப் பணியும் ஆற்றி, திராவிடம் என்ற கருத்தியலை இமயத்தில் ஏற்றி வைத்து இங்கேயே - இந்த மண்ணிலேயே தன் பூத உடலைப் புதைத்துக்கொண்டார். இந்த நூற்றாண்டில் அதிகமாகப் பேசப்பட்ட வார்த்தைகளான திராவிடம் - இன உணர்வு - விடுதலை - சுயமரியாதை - தனித்தமிழ் இயக்கம் - தமிழ் - தமிழர் என்ற அனைத்து நெருப்புக்குமான மூலப்பொறி கால்டுவெல்லின் மூளையிலிருந்தே மூண்டது.

இதை எனது கூற்றாக முன்வழிவதைவிடக் கலாநிதி க.கைலாசபதியின் கூற்றை வழிமொழிவதே வழிகாட்டுதலாகும். “தமிழர் சமயம், தனித் தமிழ், இந்தி எதிர்ப்பு, சுயமரியாதை இயக்கம், தமிழ்ப் பாதுகாப்பு, தமிழ் அரசு, முதலிய கருத்தோட்டங்களுக்கும், இயக்கங்களுக்கும், எழுச்சிகளுக்கும், கோரிக்கைகளுக்கும் கால்டுவெல் பாதிரியாரது ‘மொழியியல்’ கருத்துரைகள் தோற்றுவாயாக இருந்தன என்பது உண்மைக்குப் புறம்பாகாது. பிற்கால அரசியல், சமூக, சமய இயக்கங்கள் பலவற்றின் ஆன்மீகத் தந்தையாகப் பாதிரியார் விளங்குகிறார். அவ்வாறாயின் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை பாதிரியாரது ஞானபுத்திரன் ஆவார்: மறைமலையடிகளும் அவர் போன்றாரும் ஞானப் பௌத்திரர் ஆவர்” என்பது அவரது திறனாய்வுத் தீர்ப்பு.

நன்றி அய்யனே! ஒரு தலைமுறைக்கே தலையறிவு தந்தவனே! எங்கள் மூல முகவரி அறிந்து சொன்ன மூதறிஞனே! தாய்க்கு முகமெழுதிய தனயனே! அயர்லாந்தில் கருவுற்று இடையன்குடியில் திருவுற்றவனே! பைன் மரங்களுக்கிடையே கண் விழித்துப் பனை மரங்களுக்கிடையே கண்மூடியவனே! உனக்கும் கிறித்துவச் சமுதாயத்தின் பெருந்தொண்டுக்கும் தமிழ்ச் சமுதாயம் கடமைப்பட்டிருக்கிறது. வாழ்க உன் புகழ் என்று வானம் பாடுகிறது. தெற்கத்திக் காற்று ‘ஆமென்’ சொல்கிறது. திராவிடச் சமுதாயம் ஆமென்று சொல்கிறது!

மகத்தான தமிழ் ஆளுமைகளை இளைய சமூகத்திடம் கொண்டுசேர்க்கும் விதமாக கவிஞர் வைரமுத்து அரங்கேற்றிவரும் ‘தமிழாற்றுப்படை’ கட்டுரைத் தொடரில் ஆகஸ்ட் 25  அன்று அவர் வாசித்த கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தமிழறிஞர்களில் கால்டுவெல்

நா.தீபாசரவணன் உதவிப்பேராசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணாமகளிர்கலைஅறிவியல் கல்லூரி,கோவை. 

தமிழகம் சங்ககாலத்திற்கும் முற்பட்டக் காலத்திலிருந்தே யவனர் எனும் ஐரோப்பிய நாட்டவருடன் வாணிக உறவுகொண்டு விளங்கியதைச் சங்க இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன. யவனரைத் தொடர்ந்து இசுலாமியர் அரபு நாடுகளிலிருந்து வந்து வாணிபம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போர்ச்சுக்கல், டச்சு, ஆங்கிலேயர், பிரான்சு போன்ற பிற ஐரோப்பிய நாட்டவரும் தமிழகத்தோடு தொடர்புகொள்ள விழைந்தனர். இவர்கள் வெறும் வாணிபத்தோடு நில்லாமல் தம் சமயத்தையும் பரப்ப முற்பட்டனர். இப்பணியில் மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து முதலில் தமிழைப் பயின்றனர். பயிலப்பயில பைந்தமிழின் இனிமையில் தம்மை மறந்து மனதைப் பறிகொடுத்துத் தமிழுக்குத் தொண்டு செய்யத் தலைப்பட்டனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்வளர்ச்சி

Siragu tamil1

கல்வெட்டுக்களிலும் ஓலைச்சுவடிகளிலும் எழுதப்பட்ட தமிழ்மொழி இம்மேலைநாட்டவர்களால் அச்சு இயந்திரத்தில் அச்சேறியது. பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளில் அச்சு இயந்திரங்கள் பாதிரிமார்களிடத்தும் கிழக்கிந்தியக் கம்பெனிகளிடத்தும் மட்டுமே இருந்தது. பொதுமக்களின் கைக்கு வரவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் இந்திய மக்கள் அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தும் உரிமைப்பெற்றார்கள் என்கிறார் மு.வரதராசன். அதன்பிறகே புதிய உரைநடை நூல்களை எழுதி அச்சிடும் முயற்சியில் ஈடுபட்டனர். கிறித்தவர்களும் முஸ்லிம்களும் தத்தம் சமயங்களைப் பரப்புவதற்குத் தமிழில் நூல்கள் எழுதி அச்சிட்டபடியால் இந்துக்களும் தம் சமயத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நூல்கள் எழுதி அச்சிடுதல் தேவையாயிற்று. இவ்வாறு அச்சு இயந்திரங்கள் சமய நூல்களை எழுதி அச்சிடுவதற்கும் பயன்பட்டன. பழைய செய்யுள் இலக்கியம், புதிய செய்யுள் இலக்கியம், புதிய உரைநடை நூலகள், திங்கள் இதழ், வாரஇதழ் முதலியவற்றைப் பரப்புவதற்கு அச்சுக்கருவிகள் பயன்பட்டன. அச்சிடும் நூல்கள் அதிகரிக்க அதிகரிக்க ஏட்டுச்சுவடிகளை விட நூல்கள் எளிமையாகவும் மலிவாகவும் கிடைக்கப்பெற்றன. இதனால் நூல்களை வாங்கிப் படிப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது. அதனால் உரைநடை நூல்கள் எழுதுவதற்கு ஏற்றச் சூழ்நிலை அமைந்து, பலர் நூல்களும் கட்டுரைகளும் எழுதத்தொடங்கினர்.

Siragu tamil2

இத்தனை நூற்றாண்டுகளாக இயற்றப்பட்ட நூல்களை விடப் பலமடங்கு நூல்கள் இந்த இரு நூற்றாண்டுகளில் எழுதப்படலாயின. இவ்வகையில் சமயத்தொண்டாற்ற வந்து தமிழ்தொண்டாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர் ‘கால்டுவெல்’ ஆவார்.

கால்டுவெல்:

அயர்லாந்து நாட்டினரான இராபர்ட் கார்டுவெல் 1889-ல் சமயத்தொண்டாற்றத் தமிழகம் வந்தார். தனது தமிழ்ப்பணியை திருநெல்வேலி இடையன்குடி என்ற இடத்தில் தங்கித் தொடங்கினார். மதுரையிலும் திருநெல்வேலியிலும் அரியத் தமிழ்ப்பணியோடு சமயப்பணியும் புரிந்தார். தான் ஒருவராகவே இலட்சம் பேரைக் கிறித்தவராகக்கியப் பெருமை இவரையேச் சேரும். இவர் ‘திருநெல்வேலி சரித்திரம்’ என்னும் ஆங்கில நூலையும், ‘நற்கருணைத்தியான மாலை’, ‘தாமரைத்தடாகம்’, ‘பரதகண்டபுராதனம’, ‘ஞானக்கோயில்’ முதலிய தமிழ் நூல்களையும் இயற்றியுள்ளார்.

Siragu tamil3

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு ஆகிய திருந்திய திராவிட மொழிகளையும் வேறு பல திருந்தாத திராவிட மொழிகளையும் ஒப்பிடுவதில் பல ஆண்டுகள் செலவிட்டார். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A comparative grammar of the Dravidian family of language) என்று ஆங்கிலத்தில் இவர் எழுதிய நூல் திராவிட மொழிகளுக்கு சிறப்பை தேடித்தந்ததோடல்லாமல் இவரது புகழை உலகிற்கும் பறைசாற்றியது.

கால்டுவெல்லின் கண்ணோட்டத்தில் ஒப்பியல் கல்வி

ஒப்பியல் கல்வி தனித்த இலக்கியங்களை பரந்துபட்ட ஓர் இலக்கியக் குடும்பத்தின் உறுப்பினர்களாகக் காணும் அகன்ற ஆய்வுநிலைக்கு நம்மை நகர்த்துகிறது.

நாட்டு எல்லைகளைக்கடந்து மொழி எல்லைகளைக் கடந்து நிகழத்தப்படும் ஆய்வு, ஒவ்வொரு நாட்டின் இலக்கியமும், அந்தந்த நாட்டுத் தேசிய மரபுகளைக் கொண்டிருப்பதுடன் அந்தந்த இலக்கியங்களின் பாடுபொருள், உணர்வுகள், அடிக்கருத்து, நடைப்பாங்கு, உத்திகள் வழக்கங்கள் ஆகியனவற்றில் முக்கியமான வேறுபாடுகளைப் பெறுகின்றன என்பதை உணர்த்த உதவுகின்றன. இவ்வாறு இலக்கியங்களை, இனம் பிரித்துக்காணவும் மதிப்பிடவும் ஒப்பிலக்கிய அறிவுப் பெரிதும் தேவைப்படுகிறது. இத்தகைய ஒப்பியல் கல்வியைக் குறிக்குமிடத்து கால்டுவெல் கூறும் கருத்து இங்கு எண்ணத்தக்கதாகும்.

“ஒப்பியல் கல்வி ஒவ்வொரு அறிவியல் துறையிலும் ஐரோப்பாவில் பெரும் பயனைத் தந்துள்ளது. திராவிடர்கள் குறிப்பாகத் தமிழர்கள் தங்கள் மொழி இலக்கியங்களை பிறவற்றுடன் ஒப்புநோக்க ஒருபோதும் முயன்றதில்லை. இதனால் அவர்கள் தங்கள் மொழியைப் படிப்பதில் கடைப்பிடித்த அக்கறையானது மதிநுட்பத்தோடும் பகுத்துணர்வோடும் கூடிவராததால், நேர்மையாக எதிர்பார்த்த அளவிற்கு மிகக்குறைந்த பயனையே அளித்துள்ளது” என்கிறார் தனது திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலில்.

கால்டுவெல் திராவிடமொழிகளும்:

இந்தியாவில் ஆரியமொழி என்றும் திராவிட மொழிகள் என்றும் இரண்டு இனக்குழு மொழிகள் நிலவுகின்றன. வடநாட்டில் பேசப்படும் சமற்கிருதம் ஆரியமொழி எனப்படும். அதிலிருந்து இந்தி, இந்துஸ்தானி, ராஜஸ்தானி, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, ஹரியானா, பீகாரி, வங்காளி, ஆசாமியர், மனிப்புரி, கோஜ்புரி, ஒரியா ஆகிய மொழிகள் கிளைத்தன. இவை அனைத்தும் ஆரிய மொழிகள் எனப்படும்.

தென்னாட்டுப் பகுதியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, என்னும் மொழிகள் அனைத்தையும் கற்றுத்தேர்ந்த கால்டுவெல் இதை திராவிட மொழிக்குடும்பம் என்கிறார். இவரது ஆராய்ச்சியின் விளைவாக இவர் சில மொழிகளைப் பண்பட்ட மொழிகள் என்றும், பண்படாத மொழிகள் என்றும் வகைப்படுத்துகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு ஆகிய ஆறு மொழிகள் பண்படுத்தப்பட்ட மொழிகளாகும். தூதம், கோண்டு, கந்தம், ஒராஓன், ராஜ்மஹால், பிராகுயி போன்றவை பண்படுத்தப்படாத மொழிகளாகும். மேலும் திராவிட மொழிகளைத் தென் திராவிட மொழிகள் நடுத்திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள் எனப்பகுத்தும் ஆய்வுக்குட்படுத்துவர் மொழிவல்லார்கள்.

தமிழ்மொழி

Siragu tamil4

திராவிட மொழிக்குடும்பத்தில் மிகப்பழமையான இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே இலக்கிய இலக்கணங்களைக் கொண்ட தமிழ்மொழி தமிழ்நாட்டில் மட்டுமின்றி பர்மா, மலேசியா, சிங்கப்பூர். பிஜித்தீவு, இலங்கை, தென்ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ்காயானா, மடகாஸ்கர், திரினிபால் போன்ற நாடுகளில் பேசப்படுகின்றன.

இலக்கிய வழக்கு உலகவழக்கு எனத் தமிழை இருவகையாகப் பகுத்துப்பார்த்தனர் நம் முன்னோர். தற்காலத் தமிழிலும் பேச்சுத் தமிழுக்கும், எழுத்துத் தமிழுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. இன்றைய மொழியியல் அறிஞர்கள் மொழியை பேச்சுமொழி, எழுத்துமொழி என இரண்டாகப் பகுத்து ஆராய்கின்றனர். நூறு ஆண்டுகளுக்கு முன்பே இதைக்கண்டறிந்தவர் கால்டுவெல். அவர் பேச்சுமொழி வேறு, எழுத்துமொழி வேறு எனக்கூறி மொழியை ஆராய்ந்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் என்னும் சொல்லுக்கு நேரான வடசொல் ‘டிராவிடா (Dravida) என்பது வழங்கப்படுகிறது. மொழிவல்லாருள் சிலர் ‘திராவிடா’ என்ற வடசொல்லே ‘தமிழ்’ எனத் திரிபுற்றது என்பர். கால்டுவெல் ‘த்ராவிடம்’ என்பதை பொதுக்குறியீட்டுச் சொல்லாகக் கொண்டு ‘தமிழ்’ என்பதை சிறப்பாக உயர்தனிச் சொல்லாகக் கொள்ளவேண்டும் என்கிறார்.

மலையாளம்

திராவிட மொழிகளின் பண்பட்ட வகையில் தமிழுக்கு அடுத்தபடியாக பெருமைபெற்று விளங்குவது மலையாளமாகும். பிற திராவிட மொழிகளைக்காட்டிலும் தமிழோடு நெருங்கியத் தொடர்பு இம்மொழிக்கு உண்டு. டாக்டர் கால்டுவெல் ‘தமிழின் இன்றியமையாத கிளைமொழி மலையாளமே’ என்கிறார்.

குட மலைகளுக்கு அப்பால் மலபார் என்னும் பகுதியைச் சார்ந்துள்ள ஊர்களில் இம்மொழி பேசப்படுகிறது. கேரளத்தில் மட்டுமின்றி இலட்சத்தீவிலும் இம்மொழி பேசப்படுகின்றது. முள்ளுக்குறும்பர் என்ற பழங்குடி மக்கள் பேசும் பேச்சை மலையாள மொழியின் கிளை மொழியாகவும், தனிமொழியாகவும் கருதுகின்றனர்.

தமிழ் – மலையாளத் தொடர்பு:

மிகப்பழங்காலத்தில் தமிழ்-மலையாளம் இவை இரண்டும் தமக்குள் வேறுபாடு இல்லாமல் இருந்திருக்கலாம். இத்தன்மையைப் போர்த்துகீசியர்கள் கருத்தில் கொண்டு ‘மலபார்’ என்ற சொல்லால் ‘தமிழைக்’ குறிப்பிட்டனர். மேலைநாட்டு வணிகப் பெருமக்கள் வாணிகம் பொருட்டாகத் தமிழகம் வந்த காலத்தில் மலையாளம் வழங்கும் தேசத்தில் முதற்கண் தங்கியிருக்கவேண்டும். ‘மலை’ என்ற தமிழ்ச்சொல் ‘மலே’ என அமைதலும் அதுவேப் பின்னர் ‘மல’ என அமைதலும் ஒலிநூலுக்கு உடன்பட்டதாகத் தோன்றும்.

பண்டைக்காலம் தொட்டே தமிழகத்தின் ஒரு பகுதியாக விளங்கிய மேலை கடற்கரை சேரநாட்டுடன் மேலைநாட்டார் வாணிபத்தொடர்பு வைத்திருந்தனர். டாக்டர் குண்டர்ட் என்பவர் வடமொழியைக் காட்டிலும் தமிழையே பெரும்பாலும் மலையாளச் செய்யுள் ஒத்திருந்ததாகக் குறிப்பிடுவார்.

தமிழ்மலையாளம்  இவை இணைந்த உறவை காட்டுங்கால் ‘நெல்குன்றம்’ பாண்டிய தலைநகராக விளங்கியது என்பதை டாக்டர் கால்டுவெல் சுட்டிக்காட்டுகிறார். இன்றைய ஆலப்புழையில் ‘நீர்குந்தம்’ என்றபெயரில்   ஓர் ஊர்  உள்ளது. இதன் மூலம் மிகப்பழங்காலந்தொட்டே நம்  தமிழ்நாட்டில்    மேற்குப்பகுதியில் தமிழ் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற உண்மை வலுப்பெறுகிறது. மலையாள மொழியின் முதல்  செய்யுள் இலக்கியமான ‘இராமசரிதத்தில்’ வடமொழிக்கலப்பு இல்லாமையும், தமிழை ஒத்திருப்பதும் இவ்விரு மொழிஉறவை வலுவடையச்செய்கின்றன.

திராவிடமொழிக்குடும்பங்களில் குறிக்கப்பெறும் மொழிகளில் ஒவ்வொரு மொழிக்கும் நெருங்கியத் தொடர்பு இருப்பினும் தமிழ், மலையாளம் ஆகிய இருமொழிகளின் தொடர்புமுறை சிலச் சான்றுகளால் விளக்கப்பட்டன.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வளர்ச்சியடைந்த அச்சு இயந்திரங்களின் பணியும், மேனாட்டறிஞர்களின் வருகையும் தமிழை புதியதொரு வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச்சென்றன. சிறுகதை, புதினம், பத்திரிகைகள், உரைநடை, போன்ற பல்வேறுத்துறைகளில் தமிழ் வளர்ந்து நவீன மொழியாக்கப்பட்டது. மேனாட்டறிஞர்களான பெஸ்கி, ரேனியஸ், கிரால், போப், கால்டுவெல் ஆகியோர் பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழைக் குறிப்பாகப் பேச்சுத் தமிழைப்பற்றி நன்கு ஆராய்ந்துள்ளனர். தமிழகத்தில் இன்று வளர்ந்து செழித்துள்ள மொழியியல் ஆராய்ச்சிக்கு வித்திட்டவர் கால்டுவெல் ஆவார். இவர் தமிழுக்கும், தமிழ்மொழி வளர்ச்சிக்கும் திராவிட மொழிக்குடும்பத்திற்கும் செய்த பணிகளைக் கருத்தில் கொண்டே இவரை ‘திராவிட மொழியியலின் தந்தை’ என அழைக்கின்றனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கால்டுவெல்லின் திராவிடம் - ஒரு வாசிப்பு - வ. கீதா 

http://azhiyasudargal.blogspot.com/2010/06/blog-post_11.html

 

வ.கீதா இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், சமூக வரலாற்று ஆசிரியர். 1988 ஆம் ஆண்டிலிருந்து இந்தியப் பெண்கள் இயக்கத்தில் பணியாற்றி வருபவர். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 10 நூல்கள் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்புக்கள் செய்துள்ளார். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு இவர் மொழிபெயர்த்த நூல்களுள் பெருமாள் முருகனின் நாவலும் ஒன்றாகும்

என்னுடைய இந்தக் கட்டுரை சென்னைப் பல்கலைக் கழகத்தில் நான் ஆற்றிய உரையின் எழுத்து வடிவமே. இது மூன்று பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில், இதுவரையில் வெளிவந்துள்ள கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் va.geethaஒப்பிலக்கைணத்தின் பதிப்புகளில் நீக்கப்பட்டு, இந்த திருத்தி யமைக்கப்பட்ட பதிப்பில்  இடம்பெற்றுள்ள பகுதிகளைப் பற்றிச் சில கருத்துகளைக் கூறவிருக்கிறேன். அந்தப் பகுதிகளை நாம் எப்படி புரிந்து கொள்ளலாம், குறிப்பாக, அப் பகுதிகள் விடப்பைட்டதற்கான காரணங்களை நாம் எவ்வாறு அறியலாம் என்பதைப் பற்றிய எனது உரத்த சிந்தனையைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இரண்டாம் பகுதியில், புதிய பதிப்பில் இணைக்கப்பட்டுள்ள பகுதிகளை வைத்துக்கொண்டு கால்டு வெல்லின் சாதி, சமயம், இனம் பற்றிய பார்வையை மதிப்பிடுவ தன் தேவையை நான் வாதிட விரும்புகிறேன். மூன்றாவதாக, இன்றைய சமூகப்பண்பாட்டுச் சூழலில், கால்டுவெல்லின் கருத்துப் பொருத்தப்பாட்டை ஆராய்வேன்.

நீக்கப்பட்ட பகுதிகள் - ஒரு ஆய்வு

இதற்கு முன்னால் வெளிவந்துள்ள பல்கலைக்கழகப் பதிப்புகளில் விடப்பட்ட செய்திகளைத் தொகுத்துக் கூறுவது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. புதிய பதிப்பையும் பழைய பதிப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் நமக்கு உடனடியாகத் தெரிய வருவது இதுதான். பழைய பதிப்பில், ‘திராவிடர்கள்’ என்று அடையாளப்படுத்தப்பட்டவைர்களுக்கும் ‘சூத்திரர்கள்’ என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களுக்கும் உள்ள உறவு, அச்சொற்கள் குறிக்கும் பொருளில் உள்ள வேறுபாடுகள் குறித்து கால்டுவெல் மொழிந்துள்ள கருத்துகளில் கணிசமான பகுதி நீக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. எதை எதையெல்லாம் பதிப்பாளர்கள் நீக்கியுள்ளனர் என்பதை ஆராய்ந்து பார்க்கையில் கீழ்க்கண்ட விஷயங்கள் தெளிவாகின்றன.

திராவிடர்கள் சூத்திரர்களா இல்லையா என்ற கேள்வியை எழுப்பும் கால்டுவெல், தனது கேள்விக்கு உரம் சேர்க்கும் வகையில் மேலும் சில கேள்விகளை எழுப்புகிறார். சூத்திரர்கள் என்போர் யார்? அவர்கள் ஆரியர்களின் வருகைக்கு முன்னாலேயே தென்னிந்தியப் பகுதிகளில் வாழ்ந்தவர்களா? ஆரியர்களால் வெற்றி கொள்ளப்பட்டு அவர்களால் ஆளப்பட்டவர்களா? அல்லது ஆரிய சமுதாயத்தின் ஒரு பிரிவினராக இருந்து, அவர்களில் வல்லமை பொருந்தியவர்களாக விளங்கியவர்களால் அடிமைப்படுத்தப்பட்ட ஒரு வர்க்கத்தினரா?

இக் கேள்விகளை எழுப்பி தொடர்ந்து சில பதில்களையும் வழங்குகிறார். தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தவரை, சூத்திரர் என்ற சொல் இழிச் சொல்லாகப் பாவிக்கப்படவில்லை என்று குறிப்பிடுகிறார். இன்னும் சொல்லப் போனால், தென்னிந்தியப் பகுதியைச் சேர்ந்த மன்னர்களைப் பற்றிப் பேசும் போது, அதாவது, சேர சோழ பாண்டியர்களைப் பற்றிப் பேசும்போது வடஇந்திய நூல்கள் அவர்களைச் சத்திரியர்கள் என்றே குறிப்பிடுகின்றன. எனவே சூத்திரர் என்ற சொல் இழிச்சொல்லா இல்லையா என்பது பிரச்சனையல்ல. அது எதைக் குறிக்கிறது என்பதை ஆராய்வது முக்கியம். ஆதாரங்களைக் கொண்டு பார்க்கையில், ஆதிக்கம் செலுத்தக்கூடிய நிலையில் உள்ளவர்கள், மேலாண்மை செலுத்தக்கூடிய நிலையில் உள்ளவர்கள் அவர்களுடைய ஆணவம், அதிகாரம் காரணமாக இந்தச் சொல்லைக் கையாண் டிருப்பது தெளிவு. தாம் அடக்கி ஆள நினைத்தவர்களை, தமக்குக் கீழ்ப்பட்டவர்களாகக் கருதியவர்களைச் சிறுமைப் படுத்தவே இதை அவர்கள் செய்தனர். எனவே சூத்திரர் என்ற சொல், அதிகாரத்தின்பாற்பட்டுப் பயன்படுத்தப்பட்ட சொல்லே அல்லாமல், இழிவைக் குறிக்கும் சொல் அல்ல.

இந்த விளக்கத்தைத் தொடர்ந்து அவர் கூறும் செய்திகள் தான் பழைய பதிப்புகளில் நீக்கப்பட்டுள்ளன. அவையாவன - தென்னிந்தியாவில் சூத்திரர்கள் என்று சொல்லப்படக்கூடியவர் கள், குறிப்பாக உயர் சாதிநிலையில் இருக்கக்கூடியவர்கள், பொதுவாக ‘திராவிடர்கள்’ என்று அடையாளப் படுத்தப்படு பவர்கள், திராவிட அடையாளத்தைத் தங்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய ஒரு அடையாளமாக வரித்துக்கொண்டு, அந்த அடையாளத்தை திராவிடர்கள் அல்லாதவர்கள் என அவர்கள் கருதிய ‘ஈன’ சாதியினருக்கு மறுத்தனர். ஆரியர்கள் அவர்களைச் சூத்திரர் என்று குறிப்பிட்டது போல, இவர்கள், தமக்குக் கீழ்நிலையிலுள்ளவர்களை இழிவானவராகக் கருதி இதைச் செய்தனர். திராவிடர், திராவிடம் ஆகிய சொற்களுக்குரிய பொருள் குறித்து கால்டுவெல்லின் இந்த மதிப்பீடு தணிக்கை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்து விடப்பட்டுள்ள பகுதியாவது Antiquity of Tamil என்ற தலைப்பிட்ட ஒரு பெரும் பகுதி. திராவிட இலக்கியங்களின், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு மொழி இலக்கியங்களின் தொன்மை, வரலாறு, பழம்பெருமை முதலியவற்றைப் பற்றிப் பேசும் பகுதியாக இது அமைந்துள்ளது. இது முழுமையாகவே நீக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் தமிழ் மொழியிலக்கியம் பற்றிக் கால்டுவெல் முன்வைத்த சர்ச்சைக் குரிய கருத்துகளும் அடங்கும்.

அக்கருத்துகளாவன

- தமிழுக்கு ஓசை நயம் உண்டு. தமிழ்க் கவிதைகள் அற்புத மானவை. தமிழ் இலக்கியங்களில் துலங்கும் அழகியல் ருசிகர மானது. என்றாலும், தமிழ் இலக்கிய வெளிப்பாடுகள் மனத்தை மயக்கவல்லவையாகவே உள்ளன. உண்மையை அறுதியிட்டுக் கூறக்கூடிய ஆற்றலோ, வலிமையோ, திண்மையோ தமிழ்மொழிக்கு இல்லை என்றுகூடச் சொல்லலாம்.

- தமிழ் மொழி, ஏன் எல்லா திராவிட மொழிகளுமே பெண்மைத்தன்மை வாய்ந்தவையாக உள்ளன. இவற்றை ரசிக்கலாம், படிக்கலாம்; ஆனால் இவை வீரியம் குறைந்த மொழிகள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

-    ஆனால் இந்நிலைமை மாறுவதற்கான சாத்தியப்பாடுகள் இன்று உருவாகியுள்ளன. மேற்கத்தியக் கல்வியின் விரிவாக்கம், கிறிஸ்தவத்தின் பரவலாக்கம் ஆகியவற்றின் விளைவாகச் சமுதாயத்தளத்தில் முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பார்ப்பனரல்லாத வகுப்பர் பலர் ஆங்கிலக் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் இலக்கியம் படைக்க வரும் போது, தாம் பெற்றுள்ள புதிய கல்வி, அக்கல்வியும் கிறிஸ்தவ சமயமும் தந்துள்ள அறிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி, தமிழ் இலக்கியம் இதுநாள் வரைக்கும் கண்டிராத உண்மைத்தன்மையுடன், வலிமையுடன், வீரியத்துடன் இலக்கியம் படைக்க வருவார்கள். தமிழ் மொழியில் உறைந்துகிடக்கும் பலங்களை அவர்களின் எழுத்து உலகுக்கு அறிவிக்கும். 

- கோவர் என்பவரோடு கால்டுவெல் நடத்திய விவாதமும் பழைய பதிப்புகளில் விடப்பட்டுள்ளது. திராவிட மொழி வகை என்று எதுவும் கிடையாது. அத்திணைக்குள் அடக்கப்படும் மொழிகளெல்லாம் கூட ஏதோ ஒரு வகையில் இந்தோ-ஆரிய மொழிக் குழுமத்தைச் சேர்ந்தவைதான் என்பது கோவரின் கருத் தாக இருந்தது. கோவரை மறுத்து கால்டுவெல் முன்வைத்தக் கருத்துகளைப் பழைய பதிப்புகளில் நீக்கியுள்ளனர்.

அடுத்து, நூலில் பிற்சேர்க்கைகளாக இணைக்கப்பட்ட- ‘பறையர்கள் திராவிடர்களா?’ ‘நீலகிரித் தோடர்கள் திராவிடர் களா?’ என்று தலைப்பிடப்பட்ட இரு கட்டுரைகளும் - நீக்கப் பட்டுள்ளன. பார்ப்பனர் அல்லாத மேல்சாதியினர் மட்டும்தான் திராவிடர்கள், பறையர்களை அவ்வாறு கருதமுடியாது என்ற கருத்து அன்று பரவலாகப் பேசப்பட்ட சூழலில் முதல் கட்டுரை எழுதப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம். ஆனால் இக்கருத்து யாரால், எக்காரணங்களை முன்னிட்டு வாதிடப்பட்டது என்பது குறித்து கால்டுவெல் எதையும் சொல்வதில்லை. அறிவு வட்டாரங்களில் வெகுவாகப் பேசப்பட்ட ஒரு கருத்தாகக் கொண்டு அதைப் பற்றி அவர் அதிகம் சொல்லாமல் இருந்திருக் கலாம். இக்கருத்துக்கு வலுவான ஆதாரங்கள் உள்ள போதிலும் அவற்றைப் போதுமான ஆதாரங்களாகக் கொள்ள முடியாது என்ற ரீதியில் அவர் வாதிடுகிறார். பழைய பதிப்புகளில் விடப் பட்ட வேறு பகுதிகளாவன - திராவிட மக்களின் உடலமைப்புப் பற்றிய ஒரு கட்டுரையும், ‘திராவிட மக்களின் சமயம்’ என்ற கட்டுரையும் பல்கலைக்கழகப் பதிப்பில் இல்லை.

பல்கலைக்கழகப் பதிப்பில் நீக்கப்பட்ட பகுதிகளைத் தொகுத்துப் பார்க்கையில், சில விஷயங்கள் தொழிற்படுகின்றன. ஒப்பிலக்கணத்தைப் பதிப்பித்தோர் ‘திராவிட’ அடையாளம் என்பதைக் குறிப்பிட்ட வகையில் விளக்க முற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சென்ற நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் அதாவது 1900ங்களிலிருந்து 1930வரையிலான காலக்கட்டத்தில் அவர்கள் இதைச் செய்துள்ளனர். அவர்கள் அவ்வாறு செய்ததற் கானக் கருத்தியல் அல்லது அரசியல்ரீதியான காரணங்களை நம்மால் அடையாளங்காண முடியுமா? என்பதுதான் கேள்வி. நீக்கப்பட்டப் பகுதிகளைக் கொண்டு பார்க்கையில் ‘திராவிட’ அடையாளத்தைக் ‘களங்கப்படுத்து’வதாக அமைந்துள்ள வாதங்களை, கருத்துகளை அவர்கள் ஒதுக்கியுள்ளனர் என்று சொல்லலாம். (ஒப்பிலக்கணத்துக்குத் தொடர்பில்லாத விஷயங் களை மட்டுமே தாம் தவிர்த்துள்ளதாகப் பதிப்பாசிரியர்கள் கூறியுள்ள போதிலும் அவர்களது வாதங்களை நாம் வேறு கோணத்திலிருந்தும் அலசி ஆராய வேண்டியுள்ளது.)

திராவிடர்கள் சூத்திரர்களா? என்ற பிரச்சனைக்குரிய ஒரு கேள்வியைக் கால்டுவெல் எழுப்பினாலும், திராவிடர்கள் சத்திரியர்கள்தான், பழம்பெரும் சமுதாயம்தான் என்றே பதில் வழங்குகிறார். என்றாலும் இந்த வாதத்தையட்டி அவர் முன்வைக்கும் சில கருத்துகள், திராவிட அடையாளத்தைப் பத்திரப்படுத்தி வைக்க விரும்பியவர்களுக்கு உவப்பளித்திருக் காது என்றே தோன்றுகிறது. இதனால்தானோ என்னவோ, திராவிடப் பெருமை வாய்த்திருந்த ‘உயர்’ வகுப்பினர், அவர்கள் ‘ஈன’ சாதியினராகக் கருதியவர்களுக்கு இவ்வடையாளத்தை மறுத்தனர் என்ற கால்டுவெல்லின் கருத்தின் சாராம்சத்தை வாதிட விரும்பாமல், அதனைத் தணிக்கை செய்துள்ளனர். அது போலவே, திராவிட சமயம், பண்பாடு குறித்த செய்திகளையும் அவர்கள் தணிக்கை செய்துள்ளனர்.

குறிப்பாக, திராவிடப் பண்பாடு என்பது பொருண்மையுலகை சார்ந்ததே அல்லாமல், கருத்துலகைச் சார்ந்து இயங்கும் ஒன்றல்ல. குறிப்பிட்ட நெறிமை களை வகுக்கவோ, அறிவார்ந்த வகையில் சிந்திக்கவோ இயலாத பண்பாடு அது என்பன போன்ற கருத்துகள் பதிப்பாசிரியர்கள் பாவித்த திராவிட அடையாளத்தைச் சலனப்படுத்தியிருக்கக் கூடும். மேலும் ஆரிய மரபுகளை உள்வாங்கிக் கொண்டதாலேயே அறிவார்ந்த, கருத்துருவாக்க செயல்பாடுகளைத் திராவிடர்கள் மேற்கொண்டனர் என்ற கருத்தை அவர்கள் கண்டிப்பாக ஏற்றிருக்க மாட்டார்கள். இத்தனைக்கும் ஆரியம் மூலம் பெற்ற வரவுகளைக் காட்டிலும் அது புகுத்திய கெடுதிகள் தான் அதிகம் என்று கால்டுவெல் குறிப்பிடுகிறார். ஆனாலுங் கூட ஆரியம்-திராவிடம் குறித்தான இந்த சர்ச்சைக்கு முகங் கொடுக்கப் பதிப்பாசிரியர்கள் விரும்பவில்லை! தமிழ்மொழி குறித்துக் கால்டுவெல் கூறியுள்ளவற்றை, குறிப்பாக அம் மொழியைப் பெண்தன்மை வாய்ந்ததாக அவர் மதிப்பிட்டதை ஆராயவும், கால்டுவெல்லுக்குத் தக்க பதிலளிக்கவும் அவர்கள் முனைய வில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

திராவிடர்களின் உடல்கூறுகள் குறித்துக் கால்டுவெல் முன்வைக்கும் விளக்கங்கள், திராவிடச் சமயங்களை அவர் விவரிக்கும் விதம் ஆகியன, திராவிடப் பெருமையைச் சுற்றி கட்டியமைக்கப்பட்டிருந்த ஒளிவட்டத்தை மங்கச் செய்து விடுமோ என்ற அச்சமும் பதிப்பாசிரியர்களுக்கு இருந்திருக்கக் கூடும். 
அடுத்து பறையர் அடையாளம் தொடர்பாகக் கால்டுவெல் கூறும் கருத்துகள் நீக்கப்பட்டதற்கான காரணங்களை ஆராய் வோம். பறையர்கள் குறித்துக் கால்டுவெல்லின் கருத்துகளாவன:

- பறையர்களின் தற்கால அடிமைநிலையைக் கொண்டுப் பார்க்கையில், அதுவும் திராவிடர்களால் அவர்கள் அடிமைப் படுத்தப்படுவதை ஆராய்கையில், அவர்கள்தான் இம்மண்ணின் பூர்வகுடிகள், வேறு எங்கிருந்தோ வந்து குடியேறிய திராவிடர்கள் அவர்களை அடக்கியாள வந்தனர் என்று எண்ணத் தோன்றும்.

- மேலும் பறையர்களிடம் வழங்கும் கதைகள், அவர்களது கூட்டு நினைவில் எஞ்சியிருக்கும் மனப்பதிவுகள் ஆகியவற்றை வைத்துக்கொண்டுப் பார்த்தால், அவர்களுமே ஆண்ட பரம்பரை யினராக இருந்துள்ளனர் என்ற முடிவுக்கு நாம் வரவேண்டி யிருக்கும். இவ்வகையில் பறையர்கள் பூர்வகுடிகள் தாம் என்றும் எண்ணத் தோன்றும்.

-    என்றாலும் இக்காரணங்களைக் கொண்டு மட்டும் பறையர் களின் பூர்வ அடையாளத்தைப் பற்றி ஒரு முடிந்த முடிவுக்கு நாம் வரமுடியும் என்று தோன்றவில்லை. காரணம், பறையர் களின் கூட்டுநினைவு சுட்டும் பழைய வாழ்க்கையானது அவர்கள் ஒரு காலத்தில் அனுபவித்த சுதந்திரத்தைக் குறிப்பதாகக் கொள் ளலாமே அல்லாமல், அவர்கள் தனி இனத்தவர் என்பதைக் கொள்ள முடியாது. ஆரியர்கள் மத்தியில் ஏற்பட்ட பிரிவினை கள் இனம் தொடர்பாக ஏற்படவில்லை, மாறாக, உரிமை, உழைப்பு முதலியனவையே அவற்றுக்கு ஆதாரமாக அமைந்து வருணப் பிரிவினைகளைச் சாத்தியப்படுத்தின. காலப்போக்கில், இவை இனப்பிரிவினைகளாகக் கொள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் ஆதியில் அவை அவ்வாறு இருக்கவில்லை என்பது திண்ணம். அது போலதான், பறையர்கள் ஒதுக்கி வைக்கப்பட்ட தும், பறையர்கள் திராவிடர்களில் ஒரு பகுதியனராக இருந்தவர் கள்தான். அவர்களுடைய உழைப்பு அன்று ஆள்வோருக்குத் தேவைப்பட்டது. அவ்வுழைப்பை அபகரித்து, அவர்களை அடிமைப்படுத்தி, ஒதுக்கியும் வைத்தனர். 

பறையர்களும் திராவிடர்கள்தான் என்ற கருத்தும், அவர்கள் திராவிடர்களின் ஒரு பகுதியினரால் ஒடுக்கப்பட்டனர் என்ற விளக்கமும் திராவிடப் பெருமையை நிலைநிறுத்த விரும்பியவர் களுக்குக் கசப்பான செய்திகளாக இருந்திருக்கக்கூடும். சாதிப் பெருமையும் இனப்பெருமையும் ஒன்றுக்கு மற்றொன்று துணை நின்று, பறையர்கள் பற்றிய குறிப்புகள் தணிக்கை செய்யப்பட காரணமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 சாதி, இனம், சமயம் பற்றி கால்டுவெல்

ஒப்பிலக்கணத்தின் நீக்கப்பட்ட பகுதிகள், நீக்கப்படாத பகுதிகள் என்று அனைத்தையும் இணைத்துப் பார்க்கையில், சாதி, இனம், சமயம் தொடர்பாகக் கால்டுவெல் முன்வைத்தக் கருத்துகளை ஒருங்கே பெறமுடிகிறது. கால்டுவெல் திராவிட நாகரிகம், பண்பாடு ஆகியவற்றின் தனித்தன்மையை அங்கீகரிப் பவராகவே தம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஆரியப் பண்பாடு, சமுதாயம் ஆகியவற்றோடு திராவிடம் தொடர்பான வற்றை ஒப்பிடுகிறார். ஆரியச் சமுதாயத்தில் உள்ளது போல சூதும் வாதும் நிறைந்த பார்ப்பனர் வகுப்பு என்ற ஒன்று இங்கு ஆதியில் இல்லாததைப் பெருமைக்குரிய விஷயமாகப் பார்க்கிறார். திராவிடர்களின் சமயச் சடங்குகள் மாயம், மந்திரம் சார்ந் தவையாக உள்ளன என்றாலும், திராவிட மக்களைப் பொருத்த வரை அவர்கள் பொய் கூறுபவர்களாக இல்லாமல், நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக, விசுவாசமானவர்களாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

ஆரிய, திராவிட சமுதா யங்களில் சாதியமைப்பு நிலவுவதை அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் சாதியமைப்புக்கு அப்பாற்பட்டு வாழ நிர்பந்திக் கப்பட்ட சாதியினரை ஆரிய சமுதாயம் சாதி கெட்டவர்களாக கண்டது என்றும், அவர்களை இழிசனங்களாகவே அடை யாளப்படுத்தியது என்றும் கூறுகிறார். திராவிடச் சமுதாயத்தில் இவ்வாறு சாதியமைப்புக்கு வெளியே வாழும் சாதிகளை நாம் சாதி கெட்டவர்களாகக் கொள்ள வேண்டியதில்லை என்கிறார். மாறாக, இம்மக்கள், தனிப்பெரும் சாதிகளாக வாழ்ந்தவர்கள், அடிமைகளாக்கப்பட்டதனால் பழைய வாழ்க்கையை இழந்தனர், ஆரியநூல்கள் கூறுவது போல ‘பொருந்தா மண’ உறவுகளிலிருந்து பிறந்தவர்களாக இவர்களை நாம் கொள்ள வேண்டியதில்லை என்கிறார்.

பறையர்களின் வாழ்க்கை குறித்து ஏராளமான விவரங்களைத் திரட்டி வழங்குகிறார். அவர்கள்பால் அவருக்கு ஒரு பொதுவான இரக்கம், அனுதாபம் இருந்ததாகக் கொள்ளலாம். என்றாலும், சமத்துவம், சமநீதி என்பதன் அடிப்படையில் அல்லாமல், ஆன்மீகம் பாவிக்கும் சகோதரத்துவத்தின் அடிப்படையிலேயே அவர்களைப் பற்றிய அவரது சிந்தனை விரிந்தது. அவரது எழுத்துகள் காட்டும் மனநிலையைத்தான் நாம் இவ்வாறு குறிப்பிடுகிறோம். கிறிஸ்தவ சபையின் ஊழியராக அவர் பணிபுரிந்த பகுதிகளில், அவரது செயல்பாடுகளினூடாக வேறொரு கால்டுவெல்லை நம்மால் இனங்காண முடியும் என்றே தோன்றுகிறது. மக்களின் நலத்தில், சுயமரியாதையில் ஆழ்ந்த அக்கறையுடைய மனிதரை ஊழியப்பணி வெளிபடுத் தியது என்பதற்கு ஆதாரங்கள் உண்டு.

திராவிடம், சாதி பற்றிய கால்டுவெல்லின் சிந்தனையை அவரையும் அவரைப் போன்றோரையும் பாதித்த அறிவு மரபின் பின்னணியில் வைத்துப் புரிந்து கொள்வதென்பது அவசியமா கிறது. சாதியைப் பற்றி முதன் முதலில் விரிவாக எழுதிய ஐரோப்பியர்களில் முதன்மையானவர், முக்கியமானவர் அபே துபுவா தான். ஏசு சபையைச் சேர்ந்த இந்த பிரெஞ்சு நாட்டவர், ஏடுகளின் வாயிலாகவும் கீழைதேயங்கள் பற்றி ஐரோப்பியர்கள் ஏற்கனவே யூகித்து வைத்திருந்த பட்டறிவின் அடிப்படையிலும் தாம் இந்தியாவில் வாழ்ந்தபோது நேரில் கண்டவற்றைக் கொண்டும் சாதி பற்றிய தனது பார்வையைக் கட்டியமைத்திருந்தார். அவரது எழுத்துகள் மொழிபெயர்க்கப்பட்டு இங்கு ஆட்சி புரிந்த கிழக்கிந்திய கம்பெனியாரால் தமது ஆட்சிக்குப் பயன்படக்கூடிய கையேடாகப் பயன்படுத்தப்பட்டது.

அபே துபுவா தனது எழுத்துகளில் பார்ப்பனர்களின் மேலாண்மையையும் இந்து மதத்தை அவர்கள் தங்களது நலத்தை முன்னிட்டு செயல்படுத்தியதையும் கடுமையாகச் சாடினார். பார்ப்பனியம் என்ற ஒன்றை அடையாளப்படுத்தி அதன்பால் வசவுகளைப் பொழிந்தார். இந்து மதத்தில் பாராட்டத்தக்க விஷயங்கள் இருந்தாலும் அது பார்ப்பனர்களின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டிருந்ததால் தரங்கெட்டுப் போயிருந்ததாகக் கூறினார். சாதியைப் பற்றிக் குறிப்பிடுகையில், அதனை ஒரு கட்டுக்கோப்பான சமுதாய அமைப்பாகவே விளக்கினார். இந்துக்கள் நாகரிகமற்றவர்களாக, காட்டு மிராண்டிகளாக வாழ நேர்ந்தாலும், அவர்கள் தடம் புரளாமல் இருந்துவருவதற்குக் காரணம் அவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்து, அவர்களை வழிநடத்தும் சாதிய நெறிமைகள்தான் என்கிறார். இந்தக் கீழைத்தேய மக்களுக்குச் சாதி என்றதொரு அமைப்புச் சட்டகம் இருப்பதனால் தான் ஏதோ ஒரு ஒழுங்கும் அறமும் இங்கு பேணப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். சாதியை மிக முக்கியமான குடிமைச் சமுதாயக் கூறாக அவர் அடையாளப்படுத்தினார். அதே சமயம் அவ் வமைப்பு இந்து மத நெறிகளால்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார். எது எப்படி இருந்தாலும், சாதி என்பது இந்துக்களின் வாழ்வியலை நிர்ணயிக்கும் முக்கியமான அமைப்பு என்றும், மதமாற்றம் செய்ய விரும்புவோர் சாதியமைப்பின் முக்கியத்து வத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் எச்சரித்தார்.

இங்கு ஊழியம் செய்ய வந்த எல்லா மிஷினரிகளுமே சாதியமைப்பு குறித்து நிறைய யோசித்தனர். ஒரு சிலர், அதற்கும் இந்து மதத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை, அது ஒரு சமுதாய அமைப்பு மட்டுமே என்றனர். மதமாற்றம் செய்ய விரும்புவோர், அவ்வமைப்பைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் வாதிட்டனர். தமது இறைப்பணிக்கு பார்ப்பனர்களும் இந்து மதமும்தான் முட்டுக்கட்டைகளாக உள்ளனர் என்றும் அவர்கள் விளக்கினர். எனவே, கிறிஸ்தவத் திற்கு ஒருவர் மாறிவிட்டார் என்றால், அவர் மனம் மாறுவதையே அவர்கள் முக்கியமானதாகக் கொண்டார்கள், அவ்வாறு மாறியவர் தமது சமூக அடையாளத்தை துறந்துவிட்டு வர வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. அவ்வாறு வற்புறுத்தியவர் களும் கூட அந்த பழைய உலகம், மதம் மாறியவரின் மனத்தைக் கலைத்து விடும், எனவே அவர் அந்த உலகத்தை விட்டு நீங்கி, கிறிஸ்தவ பேருலகைத் தழுவ வேண்டும் என்றனர். அதாவது, சாதியமைப்பை நேரடியாகவும் கருத்தியல்ரீதியாகவும் எதிர்த்தவர்கள் மிகச் சிலர்தான். அதன் உள்ளார்ந்த அநீதியைப் புரிந்து கொண்டு எதிர்த்தவர்கள் அரியவர்களிலும் அரியவர் களாய் இருந்தனர். தமது மதமாற்ற நடவடிக்கைகளுக்குச் சாதி அமைப்பு தடையாக உள்ளதைத்தான் அவர்கள் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டினர்.

1840களிலும் 50களிலும் Madras Mission Society போன்ற அமைப்புகள் சாதி என்பதை ஒழித்தாலன்றி மதமாற்றத்தைச் சாதிக்க முடியாது என்றன. சாதி என்பது கிறிஸ்தவம் போற்றும் அன்பு, சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு எதிரானது என்றும் தீர்மானித்தன. என்றாலும், சாதியை ஒழிப்பதென்பது, மிஷனரிகளில் பெரும்பாலோனர்களைப் பொருத்தவரையில், அதற்கு ஆதாரமாக அவர்கள் கண்ட இந்துமதக் கருத்தியலை எதிர்ப்பது என்ற நிலையில்தான் செயல்பட்டது. அதே சமயம் மிஷனரிகளின் கல்விச் செயல்பாடுகளும், அவர்களது தருமச் செயல்களும் ஏழை, எளிய சாதிகளை அவர்கள் பால் ஈர்த்தன. ‘கஞ்கி’க்காக மதம் மாறியவர்களாக இவர்களைப் பலர் பகடி செய்தாலும் வறுமையும் ஒடுக்குமுறையும்தான் பலரைக் கிறிஸ்தவத்திடம் இட்டுச் சென்றன என்பதை மிஷனரிகளால் மறுக்க முடியவில்லை. இந்து மதத்தின் தத்துவங்களையும் சடங்குகளையும் எதிர்கொண்டு, அவற்றின் உள்ளார்ந்தத் தீமைகளைச் சுட்டிக் காட்டி, கிறிஸ்தவத்தின் மேன்மையை நிலைநிறுத்த வேண்டும் என்ற அவர்களின் எண்ணம் முழுமை யாக நிறைவேறவில்லை. இந்து மதத்தின் அதிபர்களான பார்ப்பனர்களை அவர்களால் வென்றெடுக்க முடியவில்லை. அதே சமயம் ‘கீழ்’ மக்களாகப் பாவிக்கப்பட்ட அப்பாவி மக்கள்தான் தம்மை நாடி வந்தனர் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.

தமது செயல்பாடுகளுக்கு சாதியமைப்பு தடையாக உள்ளதை மிஷனரிகள் இனங்கண்டிருந்த போதிலும், அவ்வமைப்பின் நுணுக்கங்களை தாம் அறிந்தாலொழிய அதனை எதிர்கொள்ள முடியாது என்றும் நினைத்தனர். எனவே சாதிகளைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள முற்பட்டனர். அதே சமயம் இந்துமதம், சமுதாயம், பண்பாடு தொடர்பான விஷயங்களிலும் அக்கறை செலுத்தத் தொடங்கினர். உலக மொழிகளை ஓப்பியல் ஆய்வுக்கு உட்படுத்தும் போக்கு மலிந்திருந்த ஐரோப்பிய அறிவுச் சூழலில் அவர்களுமே இம்முறைமையைக் கையாண்டு இனம், மொழி, இவற்றுக்கு இடையிலான தொடர்புகள் ஆகியவற்றை ஆராயத் தொடங்கினர். 
1838இல் கால்டுவெல் இங்கு வந்தபோது இத்தகைய சூழல்தான் இருந்தது. அவர் முதன்முதலில் திருநெல்வேலி பகுதியில்தான் ஊழியம் புரிந்தார். அவர் ஊழியம் புரிந்த காலக்கட்டத்தில் சாணார் மக்கள் கிறிஸ்தவத்துக்கு அதிக எண்ணிக்கையில் மாறியிருந்தனர். அவர்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள கால்டுவெல் அவர்களது வாழ்க்கை முறையைக் கூர்ந்து கவனித்து அவர்களைப் பற்றிய நூல் ஒன்றை எழுதினார். ஒப்பிலக்கணத்தில் அவர் பதிவு செய்துள்ள இனம், சாதி தொடர்பான கருத்துகளின் சாயலை இந்த நூலிலேயே காணலாம். சாணார் மக்கள் ஆரியர்கள் அல்ல என்றார்.

இன ரீதியாக, மொழிரீதியாக, அவர்கள் பின்பற்றிய சமய, சடங்கு களைக் கொண்டு பார்க்கையில் இந்துக்களிடமிருந்து, குறிப்பாகப் பார்ப்பனியமயமாக்கப்பட்ட இந்துக்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்ததாகக் குறிப்பிட்டார். சாணார்களில் சிலர், கல்வி எய்தி, வாழ்க்கையில் முன்னேறி, செல்வம் ஈட்டியிருந் ததால் தம்மை மேம்படுத்திக் கொள்ளும் முகமாகச் சில பார்ப்பனியப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றக்கூடும் என்றாலும், சாணார் பொதுமக்கள் இவ்வாறு இல்லாமல் தமக்கு ஆதிகாலம் முதல் வாய்த்திருந்த மாய, மந்திரச்சடங்குகளைச் செய்தும், பேய், பிசாசுகளை வணங்கியுமே வாழ்ந்து வந்தனர் என்றார். பார்ப்பனர்கள் இப்படிப்பட்ட சிறு தெய்வங்களையும், உள்ளூர் கடவுளரையும் தமது அணி வரிசையில் சேர்த்துக் கொண்டாலும் கூட, எளிய சாதியினர் ஒரு போதும் சாதி சமுதாயத்தில் மனிதர்களாக பாவிக்கப்பட மாட்டார்கள் என்றும் வாதிட்டார். எனவே, சாணார் பெருமக்கள் மதம் மாறியதில் ஆச்சரியம் ஏதுமிருக்க முடியாது என்றார். அவர்கள் கஞ்சிக்காக மதம் மாறினர் என்று கொண்டாலும் அவர்கள் மோசமான ஒடுக்கு முறையிலிருந்து நீங்கி, தமக்குப் புதுவாழ்வு வழங்கத் தயாராக இருந்த புதிய மார்க்கத்தில் இணைந்ததை யார்தான் குறை கூற முடியும் என்றும் வினவினார். மேலும், சாணார்கள் இயல்பில் எளியவர்கள், நேர்மையானவர்கள், சூதும்வாதும் அறியாதவர்கள், அவர்களை இயக்கும் பூசாரிகள் என்று எவரும் இல்லை. அவர்களிடையே எந்தவித மனக்காழ்ப்பும் இல்லை, அவர்கள் பழம்பெருமை பேசி, வரலாற்றைக் காரணங்காட்டி கிறிஸ்தவத்தின் மேன்மையை விமர்சிக்கக்கூடியவர்கள் அல்லர் என்றார்.

கால்டுவெல் சாணார்களை விமர்சிக்கவும் செய்தார், சாடி னார். ஆனாலும்கூட அவர் பார்ப்பனர்களைதான் அதிகம் விமர்சித்தார். அதே சமயம், பார்ப்பன இளைஞர்கள் மேற்கத்திய கல்வி கற்று பகுத்தறிவோடு சிந்திக்கத் தொடங்கினால், தாமே கிறிஸ்துவைத் தேடி வருவர் என்றும் அவர் எதிர்பார்த்தார். கஞ்சிக்காக மட்டுமே இந்துக்களில் சிலர் மதம் மாறினரே அல்லாமல், இறையியல் காரணங்களை முன்னிட்டு அல்ல என்ற விமர்சனத்தை அவர் இவ்வாறே எதிர்கொண்டார். 
சாணார் சமுதாயத்தைப் பற்றிக் கால்டுவெல் முன்வைத்தக் கருத்துகளை அச்சமுதாயத்தைச் சேர்ந்த பெரிய மனிதர்களில் சிலர் ஆத்திரத்துடன் எதிர்கொண்டனர். தாம் காட்டுமிராண்டி கள் அல்ல என்றும், கால்டுவெல் நினைப்பது போல தாம் பிராமணீயத்திலிருந்து விலகியவர்களும் அல்ல, தமது பண்பாட்டுக்கும் ஆரியத்துக்கும் தொடர்பு உண்டு என்றும் வாதம் செய்தனர். அது மட்டுமில்லாமல் சிற்சில இடங்களில் கலகச் செயல்களிலும் ஈடுபட்டனர். கால்டுவெல் தமது நூலைப் பிரசுரிக்காமல் பின்வாங்க வேண்டியிருந்தது.

என்றாலும், கால்டுவெல் தனது கருத்துநிலையிலிருந்து பின்வாங்கவில்லை. தமிழ்ப் பகுதிகளில் அவர் கண்ட ஆரியம் அல்லாத பண்பாட்டைப் பற்றியும், மொழியைப் பற்றியும் தொடர்ந்து அவர் ஆய்வுகள் நடத்தி வந்தார். சாணார்கள் பற்றிய அவரது கருத்துகளை விரிவுப்படுத்தி திராவிட இனம் முழுவதுக்கும் பொருந்தக்கூடிய வாதம் ஒன்றைத் தனது ஒப்பிலக்கணத்தில் முன்வைத்தார். இதை அவர் ஏன் இத்தகைய தொரு நூலின் வாயிலாகச் செய்தார்? திராவிட மக்களின் பண்பாடு குறித்து நேரடியாக எழுதாமல், ஒரு இலக்கணப் பிரதி யின் மூலமாகத் தனது கருத்துகளை வெளிபடுத்தத் துணிந்தார்?

18ஆம் நூற்றாண்டு முதற்கொண்டே ஐரோப்பிய அறிவு வட்டாரங்களில் மொழி பற்றிப் பல்வேறுவிதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஐரோப்பியர்கள் உலகின் பல பகுதிகளுக்குப் பயணம் போகையில், தாம் சென்ற இடங்களில் பேசப்பட்ட மொழிகளைப் பற்றியக் குறிப்புகளைச் சேகரித்தனர். வேறு, வேறு மொழிகளுக்கிடையிலான ஒற்றுமை, வேற்றுமைகளைக் குறித்து ஐரோப்பிய அறிவாளிகள் பேச, விவாதிக்க இத்தகைய தகவல்கள் உதவின. இவ்வாறு உருவான அறிவு மரபில் பயின்ற, இந்தியாவுக்கு வந்த வில்லியம் ஜோன்ஸ் போன்றோர், நாளடைவில், இந்தியப் பண்பாட்டின் உன்ன தத்தைப் பற்றிப் பேசவும் எழுதவும் தொடங்கினபோது, அப்பண்பாட்டின் மேன்மையைச் சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்ட இலக்கிய, இலக்கணங்களில் கண்டனர். கிரேக்கம், லத்தீன் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடைய சமஸ்கிருதம், இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் மிக முக்கியமான ஒரு கூறு என்று வாதிட்டனர். ஆதிகாலத்து இந்தியர்கள், குறிப்பாக வேதகாலச் சமுதாயத்தைச் சேர்ந்த ஆரிய வம்சத்தினர் நாகரிகத்தின் உச்சத்தை எட்டியிருந்ததாகவும் குறிப்பிட்டனர்.

இவ்வாறு மொழி குறித்த ஆய்வானது, பண்பாடு, நாகரிகங் கள் குறித்த ஆய்வாக உருமாறியது. மொழிக்குரிய பண்புநலன் கள் அம்மொழியைப் பேசிய இனத்தவருக்கு உரியவையாக அடையாளப்படுத்தப்பட்டன. குறிப்பிட்ட இனத்தினர் பேசிய மொழியானது அவ்வினத்தின் சின்னமாக, அதன் தனித்தன்மைக் கான ஆதாரமாக ஆகிப்போனது. இத்தகைய சூழலில்தான் கால்டுவெல் திராவிட மொழிகளைப் பற்றிய தனது ஆய்வினை மேற்கொள்ளத் தொடங்கினார். அவருக்கு முன்னமே, சென்னையில் கிழக்கிந்திய கம்பெனி யின் ஆட்சியாளராகப் பணிபுரிந்த எப். டபுள்யூ. எல்லிஸ் என்பாரும் அவரது இந்திய சகாக்களும் திராவிட மொழிகள், ஆரிய மொழிக் குடும்பத்திலிருந்த மொழிகளினின்று வேறுபட்டிருந்ததை, தெலுங்கு மொழிக் குறித்த ஆய்வுகளின் மூலம் உறுதிப் படுத்தியிருந்தனர். கால்டுவெல்லுக்கு இது தெரிந்திருந்தது, ஆனால் அவர் செய்ய நினைத்தது வெறும் மொழியியல் ஆராய்ச்சி அல்ல. திராவிட மொழிகளின் தனித்தன்மையை ஆதாரமாகக் கொண்டு திராவிட மக்களின் தனித்தன்மையை, தனிச்சிறப்பான பண்பாட்டுக்கு அவர்கள் அதிபதிகளாக இருந்ததை அவர் நிரூபிக்க நினைத்தார். ஆரியம், திராவிடம் என்ற வழக்கில் இருந்த சொல்லாடல்களை அவர் நூதனமான வகையில் கையாள வந்தார்.

திராவிட நாகரிகம், பண்பாடு ஆகியன ஆரியத்திலிருந்து வேறுபட்டவை என்று மட்டும் அவர் கூறவில்லை. தானும் தன்னைப் போன்ற பிறரும் மேற்கொண்டிருந்த மதமாற்ற நடவடிக்கைகளுக்குத் திராவிடம் கைகொடுக்கும் என்றும் வாதிட்டார். ஆரியத்தால் வீழ்த்தப்பட்டு ஈனசாதியினராக ஆக்கப்பட்ட திராவிடர்கள் கிறிஸ்தவ நற்செய்தியை அக்கறை யுடன் கேட்பர், அவர்கள்தான் கிறிஸ்தவத்துக்கு உகந்தவர்களும் கூட என்பதே அவரது வாதமாக இருந்தது. அவர் இவ்வாறு வாதிடக் காரணங்கள் இல்லாமல் இல்லை. நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளது போல, அடித்தட்டு மக்கள்தான் அதிக எண்ணிக்கையில் மதம் மாறியிருந்தனர். அவர்களைக் கஞ்சிக்காக மட்டும் மதம் மாறியவர்களாகப் பலர் கருதினர். இவ்வாறு மாறுவதில் எந்தவிதத் தவறும் இல்லை என்று கூறியதுடன், இவ்வாறான மதமாற்றம்தான் இந்தியாவில் கிறிஸ்தவத்தை வளர்க்கும் என்று கால்டுவெல் வாதிட்டார்.

சாணார்களின் சமுதாய உளவியலைக் காட்டி அவர்கள் கிறிஸ்தவத்துக்கு மாறியிருந்ததைக் கொண்டாடிய கால்டுவெல், அத்தகைய உளவியலை ஒரு இனம் முழுவதுக்குமே பொதுவான தாக அடையாளப்படுத்த வந்தார். அதே சமயம், இந்த உளவியல் ஏற்கனவே கண்டிருந்த பரிணாம வளர்ச்சி நிலையையும் சுட்டிக்காட்டினார். திராவிட மொழி இலக்கியங்களின் அருமை பெருமைகளைப் பட்டியலிட்டார். திராவிடர்களிடையே உள்ள வேறுபாடுகள் ஆரியர்களிடையே நிலவிய சாதிசார்ந்த, பிறப்பு சார்ந்த வேறுபாடுகள் அல்ல. எனவே பறையர்கள் போன் றோரைச் ‘சாதி கெட்டவர்’களாகக் கருத வேண்டியதில்லை, அவர்கள் தனியரு சமுதாயமாக இருந்தவர்கள், அவர்களது உழைப்பை அபகரிக்க வேண்டியே உயர் நிலையில் இருந்த திராவிடர்கள், அவர்களை அடிமைப்படுத்தினரே அல்லாமல் அவர்களது பிறப்பின் அடிப்படையில் அல்ல என்றார். பிறப்பைச் சார்ந்த அடையாளங்களை முன்நிறுத்தும் வருண-சாதியமைப்பி லிருந்து திராவிடர்களை விடுவித்து, பல்வேறு சமுதாயத்தினரை யும் இணைக்கும் ‘இனம்’ என்ற முழுமைக்குள் அவர்களை அடக்கினார். திராவிட இனம் என்ற வகையில் அவர்கள் கிறிஸ்தவத்துக்கு அணுக்கமானவர்கள் என்று வாதிட்டார்.

இங்கு மற்றொரு விஷயத்தையும் நாம் பதிவு செய்தாக வேண்டும். கோவர் என்பாரோடு கால்டுவெல் நடத்திய வாதத்தில் திராவிடத்தின் தனித்தன்மையை மட்டும் அவர் உயர்த்திப் பிடிக்கவில்லை. திராவிட அடையாளம் என்பது எவ்வகையில் மதமாற்றத்தைச் சாத்தியப்படுத்தும் என்றும் விளக்கினார். திராவிடம் என்று தனித்துப் பேசினால், திராவிடர் கள் தாங்கள் ஆரியத்திலிருந்து வேறுபட்டிருப்பதாக நினைத்து, ஆரிய வம்சத்தினரான ஆங்கிலேயரிடம் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள், கிறிஸ்தவத்தை அந்நியர்களின் மதம் என்று கொள்வார்களே அல்லாமல் தமக்கு உரிய சமயமாக ஏற்க மாட்டார்கள் என்பது கோவரின் வாதமாக இருந்தது. இவ்வாதத்தை மறுத்து, திராவிடர்களாக இருப்பதால்தான், இவர்கள் கிறிஸ்தவத்தை மறுக்கமாட்டார்கள் என்ற தனது நிலைப்பாட்டை கால்டுவெல் முன்வைத்தார்.

நமது காலத்தில் கால்டுவெல்

தற்காலச் சூழலின் பின்னணியில் கால்டுவெல்லின் கருத்து களை, குறிப்பாக, நீக்கப்பட்டு புதிய பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ள பகுதிகளை மதிப்பீடு செய்ய வேண்டியது தேவையாகிறது. திராவிட அடையாளம் என்பதன் சாதிய உட்கூறுகளைப் பகுப்பாய்ந்து, திராவிடச் சமுதாயத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை இனங்கண்டு அவற்றைத் ‘திராவிட நாகரிகம்’ என்ற சொல்லாடலுக்குள் கொண்டுவந்து சமத்காரம் செய்த பிறகே, அவர் அவ்வடையாளத்தை உயர்த்திப் பிடிக்கிறார். பழைய பல்கலைக்கழகப் பதிப்பாளர்களோ கால்டுவெல்லின் இந்த முயற்சியை அங்கீகரிக்காமல், அவர் எழுப்பிய கேள்விகளை மறுதலிக்கும் வகையில் அவற்றை நீக்கி, சாதிக்கும் இனத்துக்கும் இடையே அவர் கற்பித்த சமன்பாட்டைப் புறக்கணித்து, வரம்புக்குட்பட்ட திராவிட அடையாளத்தையே முன்வைத்தனர். இன்றைய அரசியல், பண்பாட்டுச் சூழலில் கால்டுவெல் முன்வைத்த திராவிட அடையாளத்தையும், அதன்பொருட்டு அவர் கையாண்ட வாதங்களையும் நாம் எவ்வாறு புரிந்து கொள்ளப் போகிறோம் என்பதுதான் கேள்வி.

19ஆம் நூற்றாண்டில் பரவலாகக் கையாளப்பட்ட மொழியியல் ஆய்வுமுறையின்படி, வழக்கிலுள்ள ஒரு குறிப் பிட்ட சொல்லுக்கான வேர்ச்சொல்லை இனங்காண்பதன் மூலமே அச்சொல்லுக்குரிய அடையாளம், அதாவது, அது எந்த மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்பது தீர்மானிக்கப்பட்டது. குறிப்பிட்ட மொழிக்குரிய வேர்ச்சொற்களஞ்சியத்திலிருந்து அல்லாமல் வேற்று மொழியிலிருந்து வந்து சேர்ந்த சொற்களைப் பிரித்துப் பார்க்க இந்த அணுகுமுறை உதவியது. குறிப்பிட்ட மொழியின் தனித்தன்மையை நிறுவவும் இந்த அணுகுமுறை உதவியது. தனக்குரிய வேர்ச்சொற்களிலிருந்து அதிக சொற் களைப் பெற்றிருந்த மொழியானது தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்பட்டது. அதே சமயம் குறிப்பிட்ட மொழியின் ‘அசல’£ன அடையாளத்தை இனங்காணவும் இந்த அணுகுமுறை பயன் பட்டது. தமிழைப் பொருத்தவரை, வடமொழிச் சொற்களை அதிகமான எண்ணிக்கையில் பெற்றிராத காரணத்தால், அது திராவிட மொழிகளில் மூத்ததானதாக, அசல் திராவிட மொழியாகக் கொள்ளப்பட்டது. என்றாலும் கால்டுவெல் போன்றோர் ‘மொழித்தூய்மை’ என்பதைக் கொண்டு மட்டும் திராவிட அடையாளத்தை வரையறுக்கவில்லை. பறையர்களும் திராவிடர்களா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ள விதத்திலிருந்தே நமக்கு இது தெரிகிறது. இவர்கள் கொச்சைத் தமிழ் பேசினாலும், பிற ‘திராவிட’ர்கள் இலக்கியத் தமிழைக் கையாண்டாலும் இவர்கள் அனைவரும் ஒரு இனத்தவரே என்று அவர் அறுதியிட்டுக் கூறுவதைப் பார்த்தோம், அதற்கான சமூக, கருத்தியல் பின்னணியும் கண்டோம்.

இன்றைய சமூகச் சூழலிலோ எல்லாத் தமிழர்களும் ஒரு இனம்தான் என்பதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்ள முடியாது. தலித் எழுத்தாளர்களும் இயக்கங்களும் தமிழ் அடை யாளம் என்பது வழக்கத்தில் எவ்வாறு உள்ளது, அவ்வடை யாளம் என்பது தாழ்த்தப்பட்ட மக்களின் பண்பாட்டை உள் ளடக்கியதா என்பன போன்ற கேள்விகளைத் தொடுத்துள்ள ஒரு சூழலில் கால்டுவெல் முன்வைக்கும் இன அடையாள வாதத்தை நாம் வேறு நிலையிலிருந்து புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. 19ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முதல்பகுதியிலும் கால்டுவெல்லின் கருத்துகள் படித்தவர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டு, தமிழ்த் தேசிய அடையாளம் வளர, உருபெற காரணமாக இருந்தன என்பதை நாம் அறிவோம். இதே காலத்தில் வாழ்ந்த அயோத்திதாசர் தமிழ் அடையாளத்தை வேறு நிலையிலிருந்து புரிந்து கொண்டார். சாதிக்கும் இனத்துக்கும் இடையிலான உறவை அவர் புரிந்துகொண்ட விதத்தைக் கால்டுவெல்லின் சிந்தனையின் ஒரு வித நீட்சியாகக் கொள்ளலாம்.

அயோத்திதாசர் ஆசிரியராக இருந்து பதிப்பித்த ‘தமிழன்’ இதழில் ஒரு வாசகம் தொடர்ந்து இடம்பெற்று வருவதைக் காணலாம். கட்டங்கட்டி அது வெளியிடப்பட்டிருக்கும். ‘The Non Caste Dravidian Federation’ என்பதுதான் அந்த வாசகம். ‘சாதிகளற்ற திராவிடர்களின் கூட்டமைப்பு’ என்பதே அதன் பொருள். திராவிடம் என்ற பொதுவான இன அடையாளத்தை முன்நிறுத்தினாலும், அவ்வின அடையாளமானது சமூகத் தளத்தில் வென்றெடுக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை தாசர் வலியுறுத்துகிறார். சாதிய ஏற்றத்தாழ்வுகளைக் களைய அவர் பௌத்தத்தை நாடியதையும் பௌத்தராக வாழ்ந்ததையும் நாம் அறிவோம். அவர் உயர்த்திப் பிடித்த பௌத்தம் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தது. தமிழ் இலக்கிய வரிசையில் உள்ள நீதி நூல்கள், சமண, பௌத்த காப்பியங்கள், நிகண்டுகள் ஆகியவற்றை அவர் தனிச்சிறப்பானதொரு வாசிப்புக்கு உட்படுத்தினார். அந்த வாசிப்பின் வழியே தமிழ் பௌத்தம் என்பதனை வரையறுத்தார். திராவிட மக்களின், குறிப்பாக, தமிழர்களின் ஆதிசமயம் பௌத்தம்தான் என்றும் அவர் வாதிட்டார்.

ஆரிய-இந்து மதத்துக்குக் கட்டுப்பட்டு, ஆரியர்களால் வெல்லப்பட்டு, பௌத்தத்தைத் தொலைத்தவர்கள் ‘சூத்திரர்கள்’ என்றும், அவ்வாறு ஆரியத்துக்கு இணங்க மறுத்ததால் ‘தீண்டத்தகாத வர்களாக’ ஆக்கப்பட்டு ஒதுக்கப்பட்டவர்கள் தான் பறையர்கள் என்றும், அவர்கள்தான் ‘பூர்வ தமிழர்கள்’ என்றும் அவர் கொண்டார். இந்தப் பூர்வ தமிழர்களும் பிறரும், அதாவது, ‘சூத்திரர்’களும் இணைந்த ‘சாதிகளற்ற திராவிடக் கூட்டமைப்பை’ உருவாக்க வேண்டிய தேவையை அவர் தொடர்ந்து வலியுறுத்தினார்.

கால்டுவெல்லின் வாதங்களுக்கும் தாசர் முன்வைத்த கருத்து களுக்கும் ஒற்றுமைகள் இருக்கவே செய்தன. பறையர்களை உள்ளடக்கிய திராவிட அடையாளத்தைதான் இருவரும் முன்நிறுத்தினர். பறையர்களை ஆதிகுடிகளாக இருவருமே கொண்டனர். அவர்களது ஆதி நிலையை, தற்காலத்தில் அவர் களது கூட்டு நினைவில் மட்டும் உயிர் வாழும் சுயாதீன வாழ்க்கை பற்றிய மனப்பதிவுகளிலிருந்து அறியலாம் என்பதை இருவருமே ஒப்புக் கொண்டனர். கால்டுவெல் அவர்களது உழைப்பு அபகரிக்கப்பட்டதைப் பற்றி எழுதினார், தாசரோ அவர்களது அடையாளம் அழிக்கப்பட்டதைக் குறித்து விளக்குகிறார். பறையர்கள், சாணார்கள் போன்றவர்களின் உள்ளார்ந்த ‘உண்மை’த்தன்மையைச் சுட்டிக்காட்டி, இம்மக்கள்தான் கிறிஸ்தவத்துக்கு உகந்தவர்கள், கிறிஸ்தவ நற்செய்தியைக் கேட்டு, மனமும் மதமும் மாறக்கூடியவர்கள், ‘உயர்’குடிகளான ஆரிய பார்ப்பனர்கள் அல்ல. மேற்கத்தியக் கல்வியும் கிறிஸ்தவமும் இணைந்து பறையர், சாணார் போன்ற அப்பாவி மக்களை நன்னெறிப்படுத்தம், நாகரிகமடையச் செய்யும், அவர்களை இலக்கிய கர்த்தாக்களாக ஆக்கும் என்றெல்லாம் கால்டுவெல் வாதிட்டார்.

தாசர், கிறிஸ்தவம் ஒருவரைப் பண்படையச் செய்யும் என்பதை ஏற்றுக் கொண்டார். அதே சமயம், இத்தகைய பண்படுத்தலைச் சமணமும், பௌத்தமும் தமிழ்ச் சமுதாயத்தில் ஏற்கனவே சாதித்திருந்தன என்றும், ஆரிய, பார்ப்பன சூழ்ச்சியா லும், வேஷ பார்ப்பனர்களின் செயல்பாட்டின் காரணமாகவும் அம்முயற்சிகள் காலவெளியில் வேரூன்றாமல் போய்விட்டன என்றும் குறிப்பிட்டார். ஆனால் தற்காலத்தில் இது சாத்தியப் படும், அத்தகைய பண்படுத்துதல் என்பது பௌத்தம் காட்டும் அறவழியினூடாக வெளிப்படும் என்றும் கூறினார்.

அயோத்திதாசரைப் பொருத்தவரை இனம் என்ற திணைக்குள் சாதியப் பாகுபாடுகளை கொண்டு வருவதால் மட்டுமே அவற்றைக் கடந்துவிட்டதாகக் கொள்ள முடியாது என்பதில் தெளிவாக இருந்தார். சமத்துவம், பகுத்தறிவு, ஜீவகாருண்யம் ஆகியவற்றை அன்றாட வாழ்க்கைக்குரிய விழுமியங்களாக ஏற்று, நாம் ஒவ்வொருவரும் சாதியுணர்வைக் கடந்து அன்பு வழியில் ஒழுகினாலொழிய திராவிட இன அடையாளத்துக்குப் பொருள் இருக்க முடியாது என்பதைப் பலஇடங்களில் குறிப்பால் உணர்த்துகிறார், நேரடியாகவும் வாதிடுகிறார். கால்டுவெல்லின் திராவிடத்துக்கு அவர் ஆற்றிய ஊழியப்பணி பொருள் வழங்கியது, எளிய சாதியினர்பால் அவரது அக்கறையும் கவனிப்பும் திரும்பக் காரணமாக அமைந்தது. ஆனால், கிறிஸ்தவத்தின் மேன்மையை ஆங்கில நாகரிக வளர்ச்சி என்பதன் அடிப்படையிலேயே அவர் மதிப்பிட்டார். இதனால் பறையர்கள், சாணார்கள் போன்றோரைப் பண்பாட்டு வளர்ச்சிக் குன்றியவராகவே அவர் பாவித்தார். அவரது செயல்பாடுகளில் அன்பும் அவர்கள் பால் மதிப்பும் வெளிப்பட்டிருக்கக்கூடும் என்றாலும், அவரது வாதங்களில் வெள்ளை இனவாதம் தலைப்படுவதை மறுக்க முடியாது.

அயோத்திதாசரின் திராவிடமோ சாதிபாகுபாடுகளை முற்றிலும் துறக்க நினைத்த ஒன்றாகவும், எந்தக் குறிப்பிட்ட சாதியின், இனத்தின் மேன்மையையும் நிலைநிறுத்த முற்படாத தாகவும் இருந்தது. அவர் சிலசமயங்களில் பறையர் பெருமை பேசுவார், ஏனைய தாழ்த்தப்பட்ட சாதியினரை, குறிப்பாக, ‘தோட்’டிகள் என்று அவரால் அழைக்கப்பட்டவர்களை இழி மக்களாக அடையாளப்படுத்துவார். ஆண்களுக்கு, குறிப்பாக கணவன்மார்களுக்குப் பணிவிடை செய்வதில்தான் பெண்ணுக் குரிய அறம் அடங்கியிருப்பதாக வாதிடுவார். ஆனால் இத்தகைய கருத்துகளுக்குக் கருத்தியல் ஆதாரங்களை அவர் வழங்குவதில்லை. அதாவது, கால்டுவெல்லின் சிந்தனையை ஊடறுத்து செயல் பட்ட இனச்செருக்குக் கொள்கை போன்ற எதுவும் தாசரின் மனக்காழ்ப்புகளுக்கு அரண்அமைத்து அவற்றுக்கான நியாயங் களை வழங்கவில்லை. சாதி சமுதாய உளவியலையும் ஆணாதிக்க மனநிலையையும் துறப்பதென்பது அத்தனை எளிதல்ல என்பதைதான் இவை சுட்டிக்காட்டுகின்றன.

அயோத்திதாசரின் சிந்தனைவழி கால்டுவெல்லின் கருத்து களை அணுகும்போது, கீழ்க்கண்டவை முக்கியத்துவம் பெறு கின்றன. இவையே கால்டுவெல்லின் கருத்துகளின் இன்றைய பொருத்தப்பாட்டை வரையறுக்கக் கூடியவையாகவும் உள்ளன. சாதி தகுதி, இன அடையாளம் ஆகியவற்றுக்கு இடையிலான உறவை முக்கியமானதாக இனங்கண்டு, அவ்வுறவைச் சமன் படுத்த கால்டுவெல் மேற்கொண்ட கருத்தியல்ரீதியான முயற்சி களும், தேவ ஊழியராக இருந்து இந்தச் சமன்பாட்டை அவர் சமூகத்தளத்தில் வேரூன்றச் செய்ய மேற்கொண்ட முயற்சிகளும் தொடர்புடையவை. அவரது இனக் கொள்கையைச் சமுதாயம் பற்றிய அவரது பார்வையிலிருந்து பிய்த்தெடுத்து அவரை திராவிடப் பெருமை பேசியவராக மட்டும் கொள்ள முடியாது.

மதமாற்றம் செய்திருந்த எளிய சாதியினரை அறவாளர்களாக அடையாளப்படுத்தியும், அவர்களது ‘நேர்மை’, அவர்கள் காட்டிய ‘உண்மை’யான விசுவாசம் முதலியவற்றைக் கொண்டும் தான் அவர் திராவிடப் பண்பாட்டின் உன்னதத்தை நிறுவுகிறார் என்பதையும் நாம் மறந்துவிடலாகாது. திராவிட அடையாளம் என்பதனை மொழி, இனம் சார்ந்ததாக மட்டும் கொள்ளாமல் அறமார்ந்த அடையாளமாக வும் அவர் கட்டியமைக்க நினைத்தார் என்பது கவனத்துக்குரியது. 
******

நன்றி: புதுவிசை (ஜூலை - செப்டம்பர் 2006)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 40204857_498347440636541_466162311355170



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

ஜபம் என்ற வார்த்தையே இப்போது கிருத்துவத்தின் அடையாளம் ஆகிவிட்டது.. என்ன ஒரு கொடுமை..

Kris Srikanth இதைப்பற்றி எழுதியது...

உங்கள் அலுவலகத்தில் புதிதாக ஒரு ஊழியர் சேருகிறார்.. உங்களை பதவி, மரியாதை அவருக்கு கிடைக்கவில்லை. ஆனால் பலரிடம் உங்களால் ஆகும் வேலைகளை தானே செய்வதாக சொல்கிறார். உங்கள் கையெழுத்தை அச்சு அசலாக அவரே போடவும் கற்றுக் கொண்டு விடுகிறார். பல இடங்களில் உங்களுக்கு பதிலாக அவரே உங்கள் கையெழுத்தை போட்டு பல வேலைகளை செய்து விடுகிறார்.

நாளடைவில் உங்கள் அனுமதி, கையெழுத்து வேண்டுமென்றால் சிலர் உங்களிடம் வராமல் நேரே அவரிடம் செல்கின்றனர். இப்போ நீங்க என்ன செய்வீங்க.. யாரையும் எதற்கு குறை சொல்ல வேண்டும்,, வெறுக்க வேண்டும் என்று நினைப்பீர்களா.. பொதுவில் எல்லோரிடம் எச்சரித்து, போலீசில் சொல்லி நடவடிக்கை எடுப்பீர்களா..?

இங்கே ஜபம் என்கிற முறை உங்களுக்கும் உரிமையானது என்று நினைத்தால் நீங்கள் அந்த முறையை உங்களுக்கு தந்த கலாசாரத்தை இன்னொருத்தர் ஃபோர்ஜரி செய்யும்போது குறைந்தபட்சம் அது தவறு என்று கூட சொல்லக் கூடாது என்று சொல்வது நியாயமா என்று யோசித்துப் பார்க்கவும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

திராவிடம் : கால்டுவெல்லின் கடுஞ்சறுக்கல்களும் வைரமுத்துவின் ஆற்றுப்படையும்:- பெ. மணியரசன்.

 
images%2B%25283%2529.jpeg
பாவலர் வைரமுத்து அவர்களின் படைப்பாற்றல் வலிமை நாடறிந்தது! சமகாலத் தமிழ் வளர்ச்சிக்கு வைர முத்துவின் பங்களிப்பு போற்றத்தக்கது. அவருடைய அரசியல் சார்பு என்பது அவருடைய உரிமை என்ற அளவில் அது குறித்து நான் விமர்சிக்கவில்லை. ஆனால் அவரது தமிழாற்றுப் படையின் 19 ஆவது கட்டுரையாக “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் - கால்டுவெல்” பற்றி திருநெல்வேலி பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் 25.08.2018 அன்று அவர் படித்த கட்டுரையின் சில பகுதிகள் விமர்சனத்திற்குரியவை.

சமற்கிருதத் துணையின்றி தமிழ் இயங்கும் என்று கண்டறிந்த கால்டுவெல் பாரட்டப்பட வேண்டியவர். அதே வேளை அவரின் பிழைகளை சுட்டிக்காட்டி திறனாயவும் வேண்டும்.

வைரமுத்து அவர்களின் கால்டுவெல் உரையில் ஒரு பகுதி 26.08.2018 “தினத்தந்தி” நாளேட்டில் வந்துள்ளது.

“தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல; ஒரு மொழிக் குடும்பத்தின் தாய் என்றும் திராவிடம் என்பது வெறும் சொல் அல்ல மறுக்க முடியாத மானுடக் கலாச்சாரம் என்றும் அறிவுலகத்துக்கு அறிவித்தவர் கால்டுவெல். கால்டுவெல் மட்டும் திராவிடம் என்ற இனக்குறியீட்டைக் கண்டறியாது இருந்திருந்தால் நமக்கு அடையாளமில்லை. வீழ்த்தப்பட்ட தமிழர்கள் இன்று அடைந்திருக்கும் வெற்றியும் இல்லை. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, மறைமலையடிகள், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய திராவிடச் சிங்கங்கள் இல்லை.” (தினத்தந்தி)

“திராவிடம்” என்ற இனக் குறியீட்டைக் கால்டுவெல் கண்டறியாது இருந்தால் தமிழர்களுக்கு அடையாள மில்லை, ஆதாரமில்லை, கிரீடமில்லை, கீர்த்தியில்லை என்று வைரமுத்து வர்ணித்திருப்பது - அவருடைய பாணியில் கூறுவதென்றால் கவிதைக்குப் பொய்யழகு என்பது போல் கட்டுரைக்கும் பொய்யழகோ? கால்டு வெல்லைப் பெருமைபடுத்துவதற்காகத் தமிழையும் தமிழர் பெருமிதங்களையும் சிறுமைப்படுத்த வேண்டுமா?

கால்டுவெல் ஒப்பிலக்கணம் எழுதாமல் போயி ருந்தாலும், தமிழ் வளர்ச்சியும் தமிழர் வளர்ச்சியும் தடைப்பட்டிருக்காது; மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையும், மறைமலை அடிகளாரும் தமிழறிஞர்களாக சிறந்திருப்பார்கள். அண்ணா மக்கள் தலைவராக வளர்ந்திருப்பார். அவர் சங்கத்தமிழில் - திருக்குறளில் - காப்பியத் தமிழில் காலூன்றி நின்றவர்!

வைரமுத்து தமது கட்டுரையில் வரிசைப்படுத்தி யிருப்பது போல் கால்டுவெல் வருவதற்கு முன்பாக சமயப் பரப்புரைக்காக தமிழ்நாடு வந்த ஐரோப்பியச் சான்றோர்கள் இத்தாலியின் இராபர்ட் நொபிலி (1577 - 1656), இத்தாலியின் வீரமா முனிவர் என்ற கான்ஸ் டன்டின் ஜோசப் பெஸ்கி (1680 - 1742), செர்மனி யிலிருந்து வந்த சீகன் பால்கு (1682 -  1719) இங்கிலாந் திலிருந்து வந்த பிரான்சிஸ் ஒயிட் எல்லீசு (1777 - 1819),  இங்கிலாந்திலிருந்து வந்த ஜி.யு. போப் (1820 - 1908) போன்றோர் தமிழின் சீர்மை, தூய்மை, ஆழம், அகலம் அனைத்தையும் கண்டு வியந்து போற்றினர். தங்கள் படைப்புகளையும் தமிழில் வழங்கினர்.

வீரமாமுனிவர் தமிழுக்குச் சதுர அகராதி தந்தார். எழுத்துச் சீர்திருத்தம் கொணர்ந்தார். ஜி.யு. போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். கிறித்தவ சமயம் பரப்ப வந்த சான்றோராக இருந்தும் மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் மனம் பறிகொடுத் தார். “தமிழ் மாணவன்” என்று தம்மைச் சொல்லிக் கொள்வதில் பெருமை கண்டார் போப்!

தமிழின் தனித்தன்மையை ஐரோப்பியர் ஏற்றுக் கொண்டால்தான் தமிழ் வாழும்; தமிழர் வாழ்வர் என்று கருதுவது அடிமை மனப்பான்மையில்லையா?

கால்டுவெல்லுக்கு முன் ஒப்பிலக்கண ஆய்வு செய்தவர் பிரான்சிஸ் ஒயிட் எல்லீசு. அவர் ஆங்கிலேயர்!  அதே வேளை சமற்கிருதம், தமிழ், தெலுங்கு மொழிகள் கற்றவர். சென்னையில் நாணய அச்சடிப்பு நிலைய அதிகாரியாக இருந்தபோது திருவள்ளுவர் படம் பொறித்து நாணயம் வெளியிட்டார். திருக்குறளின் சில அதிகாரங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். சென்னை மாகாணத்தில் நிர்வாகப் பணிபுரிய வரும் இளம் வெள்ளை அதிகாரிகள் இம்மாகாணத்தில் உள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளைக் கற்பதற்காக சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் 1812இல் கல்லூரி நிறுவினார் எல்லீசு! தம் பெயரைத் தமிழ்மரபுப்படி “எல்லீசன்” என்று அழைக்கச் சொன்னார்.

மேற்படி சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கல்லூரியில் கண்காணிப்புக் குழு செயலாளராகப் பணியாற்றிய அலெக்சாண்டர் டங்கன் காம்பெல் 1816இல் தெலுங்கு மொழி இலக்கணம் குறித்து எழுதிய நூலுக்கு எல்லீசு தந்த முன்னுரை சிறந்த மொழியியல் ஆய்வுரை என்று அறிஞர்களால் போற்றப்படுகிறது. அதில்தான் எல்லீசு அவர்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலை யாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் சமற்கிருத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல; இவை தனிமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றார். இவற்றைத் தென்னிந்திய மொழிகள் என்றாரே தவிர திராவிட மொழிகள் என்று கூறவில்லை! அப்போதும் “திராவிட” என்ற சொல்லாட்சி சமற்கிருத நூல்களில் இருந்தது. பிராமண அறிவாளிகள் “திராவிட” என்ற சொல்லைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் எல்லீசன் “திராவிட மொழிக் குடும்பம்” என்ற திரிபு வேலையைச் செய்யவில்லை.

தென்னிந்திய மொழிகள் தனிக்குடும்பம் என்ற எல்லீசு இவற்றின் தாய் தமிழ் என்றார். இவ்வாறு எல்லீசு கூறியது 1816இல்! நாற்பது ஆண்டுகளுக்குப் பின் 1856 இல், இந்தத் தென்னிந்தியத் தனி மொழிக் குடும்பத்திற்கு “திராவிட மொழிக் குடும்பம்” என்று கால்டுவெல் புனைவுப் பட்டம் சூட்டினார். எது முந்திய ஆய்வு என்று இப்போது தெரிகிறதா?

கவிஞர் வைரமுத்து கூறுவது போல் கால்டுவெல் இல்லையென்றால் தமிழ் மொழிக்கு - தமிழர்களுக்கு அடையாளமில்லை; ஆதாரமில்லை; கிரீடமில்லை, கீர்த்தியில்லை என்ற அவலம் வரலாற்றில் என்றுமே இல்லை! கால்டுவெல்லே - வைரமுத்துவின் கூற்றை ஒப்புக்கொள்ள மாட்டார். அவர் தமது ஒப்பிலக்கண நூலில் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.

“இவ்வின மொழிகள் (தென்னிந்திய மொழிகள் - பெ.ம.) ஐரோப்பிய ஆசிரியர்களால், ஒரு காலத்தில் “தமுலியன்” அல்லது “தமுலிக்” என்று பெயரிடப் பட்டிருந்தன. ஆனால் இவ்வின மொழிகளுள் தமிழ் நனி மிகப் பழைமையுடைய, பெரிதும் நாகரிகமடைந்த மொழியாதலாலும், தன் இன (மொழி வகையினம்) உடைமைகளாய்ச் சொல்லுருவங்கள், சொல் மூலங்கள் ஆகியவற்றின் பெரும் பகுதியைப் பெற்றுள்ளதாலும், தமில், தமிலன் என்ற சொற்களை முறையே தமிழ் மொழியையும் அதை வழங்கும் மக்களையும் குறிக்க மேற்கொள்வதே விரும்பத்தக்கதாம்.”

- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், டாக்டர் கால்டுவெல் அய்யர், தமிழில் - புலவர்  கா. கோவிந்தன் எம்.ஏ., சு. ரத்னம் எம்.ஏ., பக்கம் - 7.

ஐரோப்பிய நூலாசிரியர்கள் தமிழ்மொழியையும் தமிழ் இனத்தையும் தமக்கு முன்பாகவே அறிந்து வைத்துள்ளார்கள் என்பதைக் கால்டுவெல்லே கூறுகிறார்.

ஆரியம் வெட்டிய திராவிடப்
படுகுழிக்குள் வீழ்ந்தார் கால்டுவெல்
----------------------------------------------------------

தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல; ஒரு மொழிக் குடும்பத்தின் தாய் என்று கால்டுவெல் கூறியதாக வைரமுத்து எழுதியுள்ளார். அது உண்மையன்று; திராவிட மொழிக் குடும்பத்தில் மூத்த மொழி தமிழ் என்ற கால்டுவெல், திராவிடம் என்ற மூலமொழிதான் (Proto Language) தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி களுக்குத் தாய் என்கிறார்.

இந்தத் திராவிட மொழி இருந்ததற்கான மூலச் சான்றை தமிழ் மொழியிலிருந்தோ அல்லது தெலுங்கு மொழியிலிருந்தோ கால்டுவெல் எடுக்கவில்லை. ஏன் எனில் இவற்றில் பழங்காலத்தில் திராவிட மொழி என்ற பெயரில் ஒரு மொழி கூறப்படவில்லை. பிறகு எங்கிருந்து எடுத்தாராம் கால்டுவெல்? ஆரிய மொழியான சமற் கிருதத்திலிருந்து திராவிட மொழிக்கான - திராவிட இனத் திற்கான சான்றை எடுத்தேன் என்கிறார். அதிலும் மனு ஸ்மிருதியிலிருந்து எடுத்தேன் என்கிறார். இதோ கால்டுவெல் கூற்று :

“மனு கூறுகிறார் (x43, 44) : சத்திரியர்களைச் சேர்ந்த கீழ்வரும் பழங்குடிகள் மெல்ல மெல்ல விரிசாலா (புறச்சாதியினர் - Out caste) ஆனார்கள். அவ்வாறு கீழ்நிலை அடைந்ததற்கு அவர்கள் புனிதச்சடங்குகளைச் செய்யாததும், பிராமணர் தொடர்புகளைக் கைவிட்டதும் காரணம் ஆகும். அப்படி (புறச்சாதிகள்) ஆனவர்கள் பௌந்தரர்கள், ஒட்ரர்கள், திராவிடர்கள், கம்போ ஜர்கள், யவனர்கள், சாகர்கள், பரதாஸ், பகலவாஸ், சீனாஸ், கிராதஸ், தாததாஸ், கசாஸ்”.

“மனு குறிப்பிடும் இப்பழங்குடிகளுள் திராவிடர்கள் மட்டுமே தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள். தென்னிந்தியப் பழங்குடிகள் அனைத்துமே திராவிடர்கள் என்று கருதலாம். இப்பழங்குடிகளுள் யாராவது  தாங்கள் திராவிடர்கள் அல்ல என்று கருதினால், அவர்கள் ஆந்தி ரர்கள் - உட்பகுதிகளில் உள்ள தெலுங்கர்கள்; அவர்கள் ஏற்கெனவே ஐத்தரேயா பிராமணாவில் பெயர் குறிக்கப் பட்டவர்கள்; விசுவாமித்தரர் வம்சத்திலிருந்து இழி வடைந்த புஞ்ரஸ், சபரஸ், புலிந்தஸ்.”

- இராபர்ட் கால்டுவெல், A Comparative Grammar of the Dravidian or South-Indian family of languages, 2008, ஆங்கிலம் - Kavithasaran Pathipagam, Chennai - 600019, பக்கம் - 5,6.

மேற்படி மனுநூல் திராவிடர் என்பவர் விரிசாலா என்ற இழி பிறப்பாளர் என்று கூறுகிறது. விரிசாலா என்ற சொல் தான் பின்னர் சூத்திரர் என்று விளக்கப்பட்டது என்கிறார் பேராசிரியர் த. செயராமன் (இனவியல் : ஆரியர் - திராவிடம் - தமிழர் தொடர் கட்டுரை).

மனுதர்ம எதிர்ப்பு பேசும் பெரியாரியர்கள்  கொண்டாடும் ‘திராவிடரின்’ பிறப்பு இவ்வாறு உள்ளது.

தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகளுக்குத் தாய்மொழி அல்லது மூலமொழி தமிழ்தான் என்பதை - மாற்றி அமைப்பதற்காகத்தான் ஆரியச் சான்றுகளைத் தேடி அலைகிறார் கால்டுவெல். அந்தத் தேடலில் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த குமாரிலபட்டர் என்ற ஆரியர் எழுதிய சமற்கிருத நூலான தந்திர வார்த்திகாவில் வரும் “ஆந்திர - திராவிட பாஷா” என்பதைக் கண்டறிகிறார். இதில் உள்ள ஆந்திரம் தெலுங்கைக் குறிக்கிறது. “திராவிட பாஷா” என்பது மூலமொழியைக் குறிக்கிறது என்று  தன்விருப்பப்படி - சான்றேதும் இல்லாமல் முடிவுக்கு வருகிறார். அதே ஏழாம் நூற்றாண்டில், குமாரிலபட்டர் படித்த அதே காஞ்சிபுரத்தில் தர்க்கங்கள் பல நடத்திய திருநாவுக்கரசர் “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” என்று தெளிவாக இரு இனங்களைக் குறிப்பிட்டுள்ளார். அதைக் கால்டு வெல் எடுத்துக்கொள்ளவில்லை!

கால்டுவெல் சமற்கிருதம் படித்து ஆரிய இலக்கியங்களில் ஆரியக்கதைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

“பரதகண்ட புராதனம்” என்றொரு நூலைக் கால்டுவெல் தமிழில் எழுதியுள்ளார். இதன் மறுபதிப்பை  என்.சி.பி.எச். பதிப்பகம் 2012 மே மாதம் வெளியிட் டுள்ளது. இந்நூலின் பதிப்பாளர் திரு. பொ. வேல்சாமி அவர்கள்.

இந்தியா முழுமையையும் “பரதகண்டம்” - “பாரதம்” என்று சொல்லிக் கொள்ளும் ஆரியக் கருத்தியலை அடி யொற்றி, அந்த “பரத” கண்டத்தின் அடியொற்றி, அந்த பரத கண்டத்தின் புராதன வரலாற்றைத் திறனாய்வுடன் சொல்லும் பாங்கில் எழுதியுள்ளார் கால்டுவெல். சதுர்வேதங்கள் தொடங்கி இராமாயணம், மகாபாரதம், வாயுபுராணம் உள்ளிட்ட புராணங்கள் முதலியவை பற்றிய விளக்கங்கள்தாம் இந்நூலில் உள்ளன. பரதகண்ட புராதனம் என்பதற்கு ஆங்கிலத்தில் - “Indian Antiquities By the Late Bishop Caldwell”  என்று தாம் கண்ட மூலநூலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததாக திரு பொ. வேல்சாமி குறிப்பிடுகிறார். இந்நூல் 1893 இல் வெளி யிடப்பட்டதாகக் குறிப்பு இருந்தது என்கிறார்.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதப்பட்டது 1856இல்! சமற்கிருத இலக்கியங்களில் மூழ்கிப் போயிருந்த கால்டுவெல், தமது ஒப்பிலக்கண நூலில் தமிழர்களைப் பழங்குடியினர் (Tribe) என்றும் தமிழை - பழங்குடிகளின் கிளை மொழி (Dialect) என்றும் பல இடங்களில் குறிப்பி டுகிறார். சமற்கிருதத்தை ஒரு பழங்குடிக் கிளைமொழியாக(Dialect)ப் பார்க்கும் ஆய்வுமுறை அவரிடம் இல்லை. எனவே சமற்கிருத நூல்களான மனுதர்மம், மகாபாரதம், இராமாயணம், தந்திரவார்த்திகா மற்றும் புராணங்கள் போன்றவற்றில் கூறப்படும், ஆரியச் சத்திரியர்களில் இழிவடைந்து போன சூத்திரப் பிரிவினரான திராவிடர் களைத் தமிழர்களின் மூலவர்கள் - மூதாதையர் என்று குறிப்பிடுகிறார்.      

புறநானூறு, அகநானூறு, பரிபாடல், சிலப்பதிகாரம், தேவாரம், பூதத்தாழ்வார் பாடல், கம்பராமாயணம், பெரியபுராணம், இளம்பூரணரின் தொல்காப்பிய உரை  போன்ற தமிழ் நூல்கள் தமிழர் - தமிழகம் - தமிழ்நாடு ஆகியவற்றைக் கூறுகின்றன. இவற்றில் எதுவுமே கால்டுவெல்லுக்குக் கிடைக்கவில்லையா?

அதுமட்டுமன்று மானிடவியல் ஆய்வு, மரபு இனவியல் ஆய்வு போன்றவற்றில் எதையும் தமது இன ஆய்வுக்கு அடிப்படையாய் கால்டுவெல் எடுத்துக் கொள்ளவில்லை. ஆரிய சமற்கிருத வர்ணாசிரம தர்ம மனு நூல், இராமாயண, மகாபாரத இதிகாசங்கள்,  புராணங்கள் போன்றவை தான் தமிழர்களுக்கான இன அடையாளம் குறிக்க கால்டுவெல் கையாண்ட “சமூக அறிவியல்” நூல்கள்!

இப்படியாக வருவிக்கப்பட்ட ஆரிய அடையாள திராவிட இனத்தைத்தான் பகுத்தறிவுச் சிந்தனையாளர் பெரியார் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார். தமிழர்களின் தனித்த அடையாளத்தை - மறைத்து அல்லது அதை நீர்த்துப் போகச் செய்து கலப்பட இனப்பெயராகக் காணப்பட்ட “திராவிட இன” அடையாளத்தைத் திட்டமிட்டுத் திணித்தார் பெரியார். அதில் அவர்க்கான நோக்கம் இருந்தது. அதுபற்றி “திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா, வழி மாற்றியதா” என்ற எனது நூலில் எழுதியுள்ளேன்.

கவிப்பேரரசு வைரமுத்து கலப்படத் தயாரிப்பான திராவிட இனப்பெயரை ஏன் தூக்கிச் சுமந்து கொண் டாட்டம் போட வேண்டும்?

“திராவிடம் என்ற சொற்சுட்டு கால்டுவெல்லால் உண்டாக்கப்பட்டதன்று. அது ஓர் ஆதிச்சொல்” என்கிறார் வைரமுத்து. ஒரே ஒரு திருத்தம், ஆதிச்சொல் அன்று - ஆரியச்சொல்!

கி.பி. 13ஆம் நூற்றாண்டில் பாண்டியரும், சோழரும் தங்களுக்குள் சண்டையிட்டு வீழ்ந்த பின்னர் தமிழ் நாட்டில் அயலார் ஆதிக்கம் தொடங்கியது. நீண்டகாலம் தமிழர்கள் அடிமை வாழ்வு வாழ நேரிட்டது. அப்போது ஆரியர்கள் தமிழர்களுக்குச் சூட்டிய இழி பெயரான - “சூத்திரர்” என்ற சொல்லையே தாங்களும் தங்களைக் குறிக்க பயன்படுத்திய நிகழ்வுகள் உண்டு! தமிழர்களில் “உயர் சாதி” பிரிவைச் சேர்ந்தோரில் கற்றவர்கள் ஒரு சாரார், தங்களை “சற்சூத்திரர்கள்” என்று சொல்லிக் கொண்டது உண்டு! அதே அடிமை மனநிலையில்தான் தமிழர்கள் தங்களைக் குறிக்க இக்காலகட்டத்தில் ஆரியம் திணித்த “திராவிடர்கள்” என்ற சொல்லைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

சமற்கிருதத்தினின்றும் தனித்து இயக்கக் கூடிய மொழி தமிழ் என்பதை 1816-ஆம் ஆண்டே எல்லீசு நிறுவி விட்டார். அதை 1856இல் விளக்கமாக - விரிவாக மெய்ப் பித்துள்ளார் கால்டுவெல். அதற்காக அவரைப் பாராட்டு வோம்! அதே வேளை அவர் தென்னிந்திய மொழிகளின் மூலமொழி தமிழ் என்பதை மாற்றி, “திராவிடம் மூலமொழி” என்று திணித்த ஆய்வியல் அநீதியை வரலாறு மன்னிக்காது! தமக்கு முன்னோடியாய் தென்னிந்திய மொழிகள் ஆய்வில் விளங்கிய எல்லீசு பற்றி கால்டுவெல் தமது ஒப்பிலக்கண நூலில் எதுவும் குறிப்பிடாதது வியப்பாய் உள்ளது.

“மொழி ஞாயிறு” தேவநேயப் பாவாணர் - தமது தமிழ் மொழி வரலாறு நூலில் கால்டுவெல் பங்களிப்பைப் பாராட்டும் அதேவேளை - அவரது தவறுகளைப் பட்டியலிட்டுள்ளார். அப்பட்டியலின் தலைப்பு : “கால்டுவெல் கண்காணியாரின் கடுஞ்சறுக்கல்கள்”.

அதில் முதல் தவறு, “திராவிடம்” என்ற பெயரில் மூலமொழி இருந்ததாகக் குறித்தது. அந்த மூலமொழி தமிழே!

தமிழர்களை உயர் நாகரிகர்களாக மேம்படுத்திய வர்கள் ஆரியர்கள் என்று கால்டுவெல் கூறியிருப்பது தவறு. ஆரியர் தொடர்புக்கு முன் தமிழர்களுக்கு மோட்சம், நரகம், ஆன்மா, பாவம் முதலியவை பற்றி தெரிந்திருக்கவில்லை என்று கூறுவது அடுத்த தவறு.

அடுத்த தவறு, தமிழர்களுக்கு ஆயிரத்திற்கு மேல் எண்ணத் தெரியாது என்று கூறியிருப்பது.

தமிழ் நெடுங்கணக்கு (அகரவரிசை) சமற்கிருத நெடுங்கணக்கைத் தழுவியமைந்தது என்று கால்டுவெல் கூறுகிறார். ஆரிய எழுத்துகளுள் வேண்டியவற்றை எடுத்துக் கொண்டு வேண்டாதவற்றைத் தமிழர்கள்  விட்டு விட்டனர் என்று கூறுகிறார். இது தவறு!

அரசன், ஆயிரம், உலகம், கணியம், சேரன், சோழன், பாண்டியன், திரு, நாழி, மனம், மாதம் என்பன வடசொற்கள் என்று கால்டுவெல் கூறுவது தவறு!

மேலும் இலக்கண அடிப்படையில் கால்டுவெல் செய்த தவறுகளையும் பாவாணர் சுட்டிக்காட்டியுள்ளார் (தமிழ் வரலாறு - பாவாணர், பக்கம் 26 - 28).

கால்டுவெல் இல்லையென்றால் - மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை இல்லை, மறைமலையடிகள் இல்லை, அண்ணா இல்லை என்று வைரமுத்து கூறுவது, உணர்ச்சி ஆரவாரம் தவிர உண்மையில்லை!

தொல்காப்பியம், புறம், அகம், காப்பியங்கள், ஆன் மிக இலக்கியங்கள் - தமிழர்களின் அறிவுத்துறை சாதனைகள்! இமயத்தில் வெற்றிக்கொடி ஏற்றி வாழ்ந்த இனம் - தமிழினம்! ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியப் பாண்டியன், ஆரிய மன்னர்களான கனகன் விசயன் ஆகியோரை அடக்கி அவர்கள் தலையில் இமயக் கல்லை ஏற்றி வந்து, கண்ணகிக்குச் சிலை எடுத்த சேரன் செங்குட்டுவன் போன்றோர் தமிழ்ப் பேரரசர்கள்!

“பேர் கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால் - போர் கொண்ட மன்னர்க்குப் பொல்லாத நோயாம் - பார் கொண்ட மக்களுக்குப் பஞ்சமும் பிணியு மாம்” என்று எச்சரித்தவர் திருமூலர். “வேத ஆகமங்கள் என்று வீண் வாதம் ஆடாதீர்; சூதாகச் சொன்னதல்லால் உண்மை நிலை தோன்ற உரைக்கவில்லை” என்றார் வள்ளலார்.

தமிழர் மறுமலர்ச்சியின் தொடக்கப் புள்ளி - வள்ளலார்! அவர் தொடங்கிய சாதி, சமய வேறுபாடற்ற சமத்துவ சங்கம் ஒருவகை நிகரமை (சோசலிச)க் கொள்கைக்கு முன்னோடித் திட்டம்!

மறைமலை அடிகளார் 1916இல் தொடங்கிய தனித்தமிழ் இயக்கம் - தமிழில் சமற்கிருத சொற்களை நீக்கி எழுத வேண்டும்; தமிழர் கோயில் மற்றும் குடும்பச் சடங்குகளை பிராமணப் புரோகிதர்களை நீக்கி தமிழ் அறவோரைக் கொண்டு செய்ய வேண்டும் என்ற இலட்சியங்களை முன்வைத்தது. 1930களில் எழுந்த இந்தித் திணிப்பு எதிர்ப்பு எழுச்சி “தமிழ்நாடு தமிழர்க்கே” என்று முழக்கம் கொடுத்தது. தமிழர் என்பதைக் கைவிட்டு, பின்னர் திராவிடர் என்று மாற்றிக் கொண்டவர் பெரியார்.

திராவிடர் என்பதில் கால்டுவெல்லுக்கே கடைசி வரை ஐயுறவு இருந்ததால், தமது ஒப்பிலக்கண நூலுக்கு “திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்” (A Comparative Grammar of the Dravidian or South Indian Languages) என்று இரு பெயர் சூட்டினார்.

திராவிடம் என்ற பெயரில் மொழியும் இல்லை; இனமும் இல்லை; நாடும் இல்லை! அப்பெயர் ஆரியம் சூட்டிய திரிபுப் பெயர்!

தமிழே நமக்கு மூலமொழி (Proto Language); தமிழே நமக்கு வளர்ந்த பொது மொழி (Standard Language). தமிழர் என்பதே நமது மரபு இனம் (Race), தமிழர் என்பதே நமது தேசிய இனம் (Nationality).

கவிப்பேரரசு அவர்களே, மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்பினால் அது நம் மார்பில்தான் விழும்; அருள்கூர்ந்து மறுவாசிப்பு செய்யுங்கள்!


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

8. கால்டுவெல் கண்காணியாரின் கடுஞ்சறுக்கல்கள்

கால்டுவெல் கண்காணியார், தமிழை ஆழ்ந்து கற்றுத் தமிழுக்கு அரும் பெருந்தொண்டு செய்த மேலையருள் தலைசிறந்த வராயிருந்தும் அவர்தம் அயன்மையாலும், ஆரிய வருகைக்கு முற்பட்ட தமிழிலக்கிய மனைத்தும் அழிக்கப்பட்டுப் போனமை யாலும், இற்றைத் தமிழர் எல்லா வகையிலும் பிராமணருக்குக் கீழ்ப்பட்டிருப்பதனாலும், தொல்காப்பியப் பயிற்சியும் கழக (சங்க) நூற் கல்வியும் தனித் தமிழுணர்ச்சியும் குமரிக்கண்டக் கொள் கையும் அவர் காலத்தின்மையாலும், தமிழரே வடமொழியைத் தேவ மொழியென நம்பிப் பல தென்சொற்கு வடசொன்மூலம் காட்டி யமையாலும், தமிழையும் தமிழரையும்பற்றிய பல வுண்மைகளை அறியவியலாது போயினர். ஆதலால், தம் ஒப்பியலிலக்கணத்தில் பலவிடங்களில் மிகத் தவறான செய்திகளைக் கூறியுள்ளனர். அவையாவன:

(1) சேரர், சோழர், பாண்டியர் என்னும் பெயர்கள் முத்தமிழ் நாட்டுக் குடிகளின் பெயர்கள் என்பது.

(2) தமிழ் நாகரிகம் கொற்கையில் தொடங்கிற்று என்பது.

(3) தமிழரை (அல்லது திரவிடரை) உயர்நாகரிகப் படுத்தியவர் ஆரியர். ஆரியர் வருகைக்கு முன், வீடு (மோட்சம்), அளறு (நரகம்), புலம்பன் (ஆன்மா), கரிசு (பாவம்) என்பவற்றைப்பற்றித் தமிழருக்கு ஏதேனுங் கருத்திருந்ததாகத் தெரியவில்லை. வழக்கறிஞரும் நடுவரும் அவர்கட்கில்லை. அறிவனும் (புதனும்) காரியும் (சனியும்) தவிர, மற்றப் பழங்காலத்தாருக்குப் பொதுவாகத் தெரிந்திருந்த கோள்களை யெல்லாம் அவர் அறிந்திருந்தனர் ஆயிரத்திற்குமேல் அவர்கட்கு எண்ணத்தெரியாது, மருத்துவ நூலும் மருத்துவரும் மாநகரும் வெளிநாட்டு வணிகமும் அவர்கட்கில்லை. இலங்கை யைத் தவிர, வேறெந்தக் கடற்கப்பாலை நாட்டோடும் அவர்கட்குப் பழக்கமில்லை. தீவு அல்லது கண்டம் என்னும் கருத்தைத் தெரி விக்கக் கூடிய சொல் அவர்கட்கில்லை. படிமைக்கலை, கட்டடக் கலை, வானநூல், கணியம், பட்டாங்கு நூல் துறைகள், இலக்கணம் ஆகியவற்றைப்பற்றி அவர்கட்குத் தெரியாது. அவர்கள் அகக்கரண வளர்ச்சியடையாதிருந்ததினால், மனம், நினைவு, மனச்சான்று, வெள்வு(Will) ஆகியவற்றைக் குறிக்க அவர்கட்குச் சொல்லில்லை என்பது.

(4) தமிழ் நெடுங்கணக்கு சமற்கிருத நெடுங்கணக்கைத் தழுவியமைந்தது. தமிழர் வடவெழுத்துகளுள் வேண்டியவற்றை

5. இப் பகுதியில் வந்துள்ள தனித்தமிழ்ச் சொற்கள் ஆசிரியன் குறித்தவை. ஆதன், உறவி என்பனவும் புலம்பனைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 மட்டும் எடுத்துக்கொண்டு, வேண்டாதவற்றை விட்டுவிட்டனர், என்பது.

(5) தமிழ்ப்பெயர்ச்சொல்லின் வேற்றுமையமைப்பு முற்றும் சமற்கிருத வேற்றுமையமைப்பைப் பின்பற்றியது என்பது.

(6) தமிழில் சரியானபடி, செயப்பாட்டு வினையே இல்லை என்பது.

(7) அரசன், ஆயிரம், உலகம், கணியம், சேரன், சோழன், திரு, நாழி, பாண்டியன், மனம், மாதம் என்பன வடசொற்கள் என்பது.

இனி, கால்டுவெலார் சில புலனங்களை (விஷயங்களை) முன்னுக்குப் பின் முரணாகவும் கூறியுள்ளார். எ-டு : மலையாளம் தமிழின் கிளைமொழி (oldest offshoot) என ஓரிடத்தும், உடன் பிறப்பு மொழி (sister dialect) என மற்றோரிடத்தும் கூறியிருத்தல்.

மேற்காட்டிய எழுவகைச் சறுக்கற்கூற்றுகளும் உண்மைக்கு மாறானவையென்பது, இந் நூலாலும் இதையடுத்துவரும் ஏனைய நூல்களாலும் தெற்றெனத் தெரியவரும். தமிழைக் காய்தலின்றி முதன்முதல் மொழிநூன் முறையில் ஆராய்ந்து ஓரளவு பெருமைப் படுத்திய கால்டுவெலாரே இங்ஙனம் கூறியிருப்பதனாலும், இவர் கருத்தே உலக முழுவதும் பரவியுள்ள ஆங்கிலக் கலைக் களஞ் சியத்தில் இடம்பெற்றிருப்பதனாலும், அயலாரும் வெளிநாட்டாரும் தமிழின் பெருமையை அறியமுடியாது போயிற்று. இவர் நூல்முழுதும் நோக்கின், தமிழ் நாகரிகத்திற்கு ஆரியம் அடிப்படை என்னும் தவறான கருத்து, இவர் உள்ளத்தில் ஏற்கெனவே ஆழ வேரூன்றியிருந்ததைக் காணலாம், சமற்கிருதத்தில் திரவிடச் சொற்கள் உள என முதன்முதல் இவர்க்குக் கண்திறந்தவர், மலையாள மொழியாராய்ச்சியில் ஈடும் எடுப்புமற்ற குண்டர்ட்டு என்னும் செருமானியக் கிறித்தவக் குரவரே. ஆயினும் கால்டு வெலார் பகைமைக் கண்கொண்டு தமிழை நோக்கியவரல்லர் என்பது, அனைவர்க்கும் ஒப்ப முடிந்த உண்மையாம். எனினும், அவர் ஆராய்ச்சியின் குணமுங் குற்றமும் நாடின், குற்றமே மிகுந்த தென்பது தெளிவு. ஆதலால் அஃது எக்காலத்திற்கும் ஏற்குமென்பது அறியார் கூற்றே. அது இன்று பழமைப்பட்டும் பழுதுபட்டும் போயிற்றென்பது இந் நூலால் விளங்கும்.

9. திரவிடமொழிப் பகுப்பு

தென்னிந்திய மொழிக்குடும்பத்தைக் கால்டுவெல் கண்காணி யார் முதன்முதலாக ஆராய்ந்ததினால், தமிழையும் அதனொடு தொடர்புள்ள பிற மொழிகளையும் வேறுபடுத்தாது, திரவிடம் என்னும் ஒரே பெயராற் குறித்தார். ஆயின், இன்று தெலுங்கு கன்னட மலையாள நாடுகள் வெவ்வேறு பிரிந்து போனமையாலும், தமிழ் ஒன்றே ஆரியத்தை எதிர்த்துத் தன் தூய்மையைப் போற்றிக் கொள்ளும் ஆற்றல் பெற்றுள்ளமையாலும், வடசொற்கள் சேரச் சேரத் தெலுங்கு கன்னட மலையாளத்திற்கும், தீரத்தீரத் தமிழுக்கும் உயர்வு ஏற்படுவதனாலும், இந்தியும் வடமொழியும் பற்றிய கொள்கையில் தமிழர்க்கும் அவர்தம் இனமொழியாளர்க்கும் நேர்மாறான கருத்துண்மையாலும், தெலுங்கு கன்னடம் முதலிய இனமொழிகளெல்லாம் மீளத் தமிழொடு சேர முடியா வளவு ஆரியவண்ணமாய் மாறிவிட்டமையாலும், அதனால் இனமொழி களையும் புறக்கணிக்கும் நிலை தமிழுக்கு ஏற்பட்டுவிட்டதனாலும், தமிழைத் தமிழ் என்றும், அதன் இனமொழிகளையே திரவிடம் என்றும், பிரித்துக் கூறல் வேண்டும். அவ்விரு கூறுகளையும் இணைத்துக் குறிப்பதற்குத் தென்மொழி என்னும் சொல்லை ஆளவேண்டும். இவற்றிற்கு ஆங்கிலத்தில் முறையே, Tamil. Dravidian, Tamilic or South Indian என்னும் சொற்களை ஆளலாம்.

தமிழ் என்னும் சொல் திரவிடம் என்று திரிந்தது போன்றே, தமிழம் என்னும் மொழியும் பல திரவிட மொழிகளாகத் திரிந் திருப்பதனால், திரவிடம் என்னும் சொல்லால் திரவிட மொழி களைக் குறிப்பது தக்கதே. வடமொழி என்னும் பெயர் பல வட நாட்டு மொழிகளையும் ஆரியத்துள் அடக்குவதுபோல், தென் மொழி என்னும் பெயரும் பல தென்னாட்டு மொழிகளையும் தமிழுள் அடக்கும்.

தியூத்தானியம்(Teutonic) என்னும் ஒரே வகுப்பைச் சேர்ந்த செருமானியம், தச்சம்(Dutch), ஆங்கிலம் முதலிய மொழிகள் எங்ஙனம் திரும்ப ஒன்று சேராவோ, அங்ஙனமே தென் மொழியம் என்னும் வகுப்பைச் சேர்ந்த தமிழும் திரவிடமும் ஒன்றுசேரா. பால் திரைந்து தயிரானபின் மீளப் பாலாகாதது போல், தமிழ் திரிந்து திரவிடமான பின் மீளத் தமிழாகாது. இங்கு மொழிகட்குச் சொன்னது நாடுகட்கும் ஒக்கும்.

திரவிடம் என்னுஞ் சொல் முதலாவது தமிழையே குறித்த தென்றும், நாலாயிரத் தெய்வப் பனுவல் திரவிட வேதமென்றும் மெய்கண்டான் நூலுக்குச் சிவஞான முனிவர் வரைந்த அகலவுரை திராவிட மாபாடியம் என்றும் பெயர் பெற்றுள்ளன வென்றும், தனித்தமிழாராய்ச்சி யில்லாத பண்டை நிலைமையைக் கூறி, தமிழ்நாட்டையும் பிரிந்துபோன திரவிட நாடுகளையும் ஒன்றாய் இணைக்க முயல்பவர், கறந்த பாலைக் காம்பிற் கேற்றுபவரேயாவர். ஆயின் அரசியற் கொள்கை யொப்புமைபற்றி, தமிழ்நாடும் திராவிட நாடுகளும் ஒரு கூட்டாட்சி அமைக்கலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கி.பி. 7ஆம் நூற்றாண்டிலேயே, குமரிலபட்டர் ஆந்திர - திராவிட பாஷா என்று தெலுங்கைத் தமிழினின்று பிரித்துக் கூறிவிட்டார். கன்னடமும் மலையாளமும் அதன்பின்பே தமிழி னின்று பிரிந்தன. தமிழ் நாடும் ஆந்திர மைசூர் கேரளமாகிய முத்திரவிட நாடுகளும் அண்மையில்தான் பிரிந்து போயின. அவை மீளவும் ஒன்றுசேரும் நிலைமையிருப்பின், முன்னர்ப் பிரிந்தே போயிரா. மேலும்.

"கன்னடமும் களிதெலுங்குங் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும்"

என்று பேரா. சுந்தரம் பிள்ளையவர்கள் கூறியது, பழந்தமிழைப் பொறுத்தவரையில் உயர்வுநவிற்சியா யிராது உண்மை நவிற்சியா யிருப்பதால், தமிழையும் அதன் இன மொழிகளையும் வேறு பிரித்துக் கூறுதற்கு மற்றுமொரு கரணியமுள்ளது. பழந்தமிழுக்கும் இற்றைத் தமிழுக்குமுள்ள வேறுபாடு மிகச் சிறிதே. இலத்தீனுக்கும் இத்தாலியம், பிரெஞ்சியம், இசுபானியம், போர்த்துக்கீசியம் முதலிய மொழிகட்கும் இடைப்பட்ட உறவே, தமிழுக்கும் தெலுங்கு கன்னடம் முதலிய திரவிட மொழிகட்கும் இடைப்பட்ட தாகும்.

தமிழல்லாத ஒரு மொழி திரவிடத்தாயாகத் தமிழுக்கு முற்பட்டு இருந்ததேயில்லை. மொழித்துறைக்குச் சொன்னதே இனத் துறைக்கும். "திரவிட முன்னையர் (Pre-Dravidians") என்றோ, மூலத்திரவிடர் (Protp-Dravidians) என்றோ, திரவிடர் (Dravidians) என்றோ வேறுபாடிருந்ததாக நமக்குத் தோன்றவில்லை. இவர்க ளெல்லாம் புதுக்கற்காலத்தினின்றும் அதற்கு முன்பிருந்தும் வந்த மக்களின் நேர்வழித் தோன்றிய ஓரினத்தாரே.‘ என்று இராமச்சந்திர தீட்சிதர் கூறியிருத்தலையும் காண்க. (Pre-Historic South India, p. 246)

10. தமிழ் என்னும் பெயர் வரலாறு

தமிழ் குமரிக்கண்டத்தில் தானேதோன்றிய மொழியாத லானும், ஆரியர் வரும்வரை வேற்றுமொழி யொன்றும் தென்னாட் டில் எவ்வகையிலேனும் வழங்காமையானும், தமிழவணிகர் மொழிபெயர்நாடு செல்லும்வரை அல்லது அயலாரொடு அரசியல் அல்லது வணிகத் தொடர்பு கொள்ளும் வரை, மொழி அல்லது பேச்சு என்னும் பொதுப் பெயர் தவிர யாதொரு சிறப்புப்பெயரும் தமிழுக்கு வழங்கியிருக்க முடியாது.

தமிழ்மொழியின் சிறப்புப் பெயர், தமிழ் (தமிழம்), திரவிடம் என்னும் இருவடிவில் காணப்படுகின்றது. இவ் விரண்டும் வெவ்வேறு சொற்போல் தோன்றினும் உண்மையில் ஒரே சொல்லின் இருவேறு வடிவங்களாகும். இவற்றுள் முன்னையது தமிழ் என்பதே. இதற்குச் சான்றுகளாவன:

(1) திராவிடம் என்னும் சொல் முதலாவது தமிழ் என்னும் பொருளிலேயே வழங்கியமை

வடநூலார் தமிழை ஒரு பிராகிருதமாகக் கொண்ட போது, அதைத் ‘த்ராவிடீ‘ என அழைத்தனர்.

பாகவத புராணத்தில், சத்தியவிரதன் என்னும் பெயராற் குறிக்கப்படும் ஒரு தமிழரசன், திரவிடபதி எனப்படுகின்றான்.

கி.பி. 470ஆம் ஆண்டில் வச்சிரநந்தி என்னும் சமணர் மதுரையில் நிறுவிய தமிழ்க் கழகம்’ திரவிட சங்கம் எனப்பட்டது.

பிள்ளை லோகாசார்ய சீயர் (500 ஆண்டுகட்கு முன்) பெரிய திருமொழிச் சிறப்புப் பாயிரவுரையில், தமிழிலக்கணத்தைத் திரவிட சாஸ்திரம் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

நாலாயிரத் தெய்வப் பனுவல் திரவிடவேதம் என்றும், சிவஞான முனிவரின் மெய்கண்டான் நூல் அகலவுரை திரவிட மாபாடியம் என்றும், சபாபதி நாவலரின் தமிழிலக்கிய வரலாறு திராவிடப் பிரகாசிகை என்றும் பெயர் பெற்றுள்ளன.

தாயுமானவர் (18ஆம் நூற்.) "கல்லாத பேர்களே நல்லவர்கள்" என்னும் பாட்டில், தமிழைத் திராவிடம் எனக் குறிப்பிடுகின்றார்.

கிறித்துவிற்கு முன் தமிழிலன்றித் திரவிடமொழி யெதிலும் இலக்கியமின்மையால், திரவிடம் என்னும் பெயரால் தமிழையே தலைமையாகக் குறித்து வந்தனர், வடவர். கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தான், குமரிலபட்டர் ஆந்திர-திராவிட பாஷா என்னுந் தொடரால் தெலுங்கைத் தமிழினின்று பிரித்துக் கூறினர்.

திரவிடம் என்னும் திரிந்த வடிவைச் செம்மையான வடிவாகக் கொண்டு, ஆரியத்தால் தெற்கே துரத்தப்பட்டது என்று தமிழ்ப் பகைவரும், தீவினையைத் துரத்துவது என்று சிவஞான முனிவரும், திருவிடம் (திரு+இடம்) என்று பேரா. பூரணலிங்கம் பிள்ளையும் துரூவிதரோடு தொடர்பு படுத்தி ஞானப்பிரகாசக் குரவரும், வெவ்வேறு பொருட் கரணியங் காட்டுவாராயினர்.

(2) தமிழ் என்னும் சொல்லையொத்த பெயர்களே வெளிநாடுகளில் வழங்கியமை

கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் எழுந்த பெரிப்புளுசு(Periplus) என்னும் கிரேக்க நூல் தமிராய்(Tamirai) என்று குறித்துள்ளது. பியூத்திங்கர் அட்டவணை(Peutinger Tabels) என்னும் உரோம ஞாலப்படங்களில்(Atlas) தமிழகம் தமிரிக்கே ‘(Damirice)‘ எனக் குறிக்கப்பட்டுள்ளது. தாலமி(Ptolemy) என்னும் எகிபதிய ஞால 

நூலார் (கி.பி. 139-61), பியூத்திங்கர் அட்டவணை யிடப்பெயர்களைப் பெயர்த்தெழுதும்போது, கிரேக்க டகரத்தை லகரமாகக் கொண்டு, திமிரிக்கே(Dymirice) என்னும் பெயரைத் தவறுதலாக லுமிரிக்கி (Lumiriki) என்று எழுதிவிட்டார். ஆயினும் அவருக்குப் பின்னர் வந்த ரேவண்ணா(Ravenna) ஞாலநூலார் தமிரிக்கா(Damirica) எனத் திருத்திக்கொண்டார்.

தமிழ் என்னுஞ்சொல், கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இந்தியா விற்கு வந்த இவென்திசாங்(Hwen Thsang) என்னும் சீன வழிப் போக்கர் குறிப்பில், சிமொலொ(Tehi-mo-lo) என்னும் வடிவில் உள்ளது.

இதைத் ‘திமல‘(Dimala) அல்லது ‘திமர‘(Dimara) என்றும் படிக்கலாம் என்பர் கால்டுவெலார். பாலிமொழியிலுள்ள மகா வமிசம்(Mahavanso) என்னும் இலங்கை வரலாற்றில், ‘தமிலோ‘ (Damilo) என்னும் வடிவமே உள்ளது. ஐரோப்பியர் பொதுவாகத் ‘தமுல்‘(Tamul) என்றனர். அவருள் தேனிய விடையூழியர் (Danish Mis- sionaries) மட்டும் ‘தமுலிக்க மொழி‘(Lingua Damulica) என இலத்தீன் வடிவில் குறித்தனர், ஆங்கிலத்தில் ‘தமில்‘(Tamil) என்னும் வடிவம் வழங்குகின்றது. மாக்கசு முல்லர் தென்மொழிக் குடும்பத்திற்குத் ‘தமுலிக்கு‘(Tamulic) எனப் பெயரிட்டார்.

(3) திராவிடம் என்னும் சொல், தமிழ் என்னுஞ் சொல்லிற்கு நெருங்கிய ‘திரமிலங்‘ (அல்லது திரமிளம்) என்னும் வடிவில் வழங்கியமை

கி.பி. 6ஆம் நூற்றாண்டில் வராகமிகிரர் நூலின் பழங் கையெழுத்துப் படிகளில் த்ரமிட என்னும் வடிவும் மங்கலேச அரசனின் பட்டங்களில் த்ரமில என்னும் வடிவும் காணப் பட்டன வென்றும், தாரநாதர் திபேத்தில் எழுதிய ‘இந்தியாவில் புத்த மதத்தைப் பரப்பின வரலாறு‘ (கி.பி. 1573) என்னும் நூலில், திராவிடர் ‘திரமிலர்‘(Dramilas) எனக் குறிப்பிட்டுள்ளனர் என்றும், புராணங்களின் பழைய மொழிபெயர்ப்புகளிலெல்லாம் இவ் வடிவே பெருவழக்கா யிருப்பதாகச் குண்டெர்ட்டுப் பண்டாரகர் கூறுகிறா ரென்றும், திரவிடம் என்பதன் மிகப் பழைய வடிவம் ‘த்ரமிட‘(Dramida) என்பது என்றும்; கால்டுவெல் கண்காணியார் வரைந்துள்ளார்6.

நாட்டுப் பெயர்களும் மொழிப்பெயர்களும் பண்டைக் காலத்திற் பெரும்பாலும் ‘அம்‘ ஈறுபெற்றுத் தமிழில் வழங்கியதை நோக்கும் போது, தமிழ் என்னும் சொல்லும் சிறுபான்மை தமிழம் என்று வழங்கியதாகக் கருத இடம் ஏற்படுகின்றது. தமிழம், த்ரமில(ம்) த்ரமிள( ம்), த்ரமிட(ம்), த்ரவிட(ம்) என்னும் வடிவுகளை முறையே நோக்கின், தமிழ் என்பதன் திரிபே திரவிடம் என்பது புலனாம். ஆயினும் கால்டுவெலார் இவ் வெளிய முறையில் உண்மையைக் காணாமல், இயற்கைக்கு மாறாகத் தலைகீழாய் நோக்கி, திரவிடம் என்னுஞ் சொல்லே தமிழென்று திரிந்ததாக முடிவு செய்துவிட்டார். ஆயின், கிரையர்சன் இத் தவற்றைத் திருத்திவிட்டனர்.

"த்ரமிளம் என்பது தமிழ் எனத் திரிதலும் அது" என்று பிரயோக விவேக நூலார் (ப.4) கூறியது, அவரது தமிழ் வெறுப்பைக் காட்டும் சான்றேயென அறிக.

(4) திராவிடம் என்னும் வடிவம் தமிழ்நாட்டுலக வழக்கில் அருகியும் வழங்காமை

(5) த்ரமிடம், த்ரவிடம் என்னும் ரகரமேற்றிய வடிவுகளே யன்றி, ‘தபிள‘, ‘தவிட‘ என்னும் மிக நெருங்கிய வடிவுகளும் வடமொழி நாடகங்களிலும் சமண நூல்களிலும் வழங்கியிருத்தல்

இனி, தமிழ் என்னுஞ் சொல், கிரேக்க நாட்டில் வழங்கிய ‘தெர்மிலே‘ அல்லது ‘தெர்மிலர்‘ அல்லது ‘திரமிலர்‘ என்னும் இனப் பெயரினின்று திரிந்ததென்று ஞானப்பிரகாசக் குரவரும், வங்கநாட்டுத் ‘தம்ரலித்தி‘ என்னும் நகர்ப் பெயரினின்று தோன்றிய தென்று கனகசபைப் பிள்ளையும்; தாமம்(ஞாயிறு), எல்லாம் (இலங்கை) என்னும் இரு சொல், முறையே தாம் ஈழம் என மருவிப் புணர்ந்த வடிவென்று கந்தையாப் பிள்ளையும்; தமி என்னும் முதனிலையடியாய்ப் பிறந்து ஒப்பற்றதெனப் பொருள் படுவதென்று தாமோதரம் பிள்ளையும், தனிமையாக ழகரத்தைக் கொண்ட மொழி என்னும் பொருள் தருவதென்று ஒரு சாராரும், வலி மெலியிடையாகிய மூவின மெய்களைக் கொண்ட நிலைமையைக் குறிப்பதென்று மற்றொரு சாராரும், அதற்குப் பொருட்கரணியங் காட்டுவர். இனிமையானது என்று பொருட்கரணியங் காட்டுவாருள், (S) சீநிவாசையங்கார் ஒருவரே தம்+இழ் என்று பகுத்து இழ் என்னும் ஈறு இனிமைப் பொருள்படும் இழும் என்னும் சொல்லின் சிதைவெனக் காட்டுவர். பிறரெல்லாம், "இனிமையு நீர்மையுந் தமிழென லாகும்" என்னும் பிங்கலந்தை நூற்பாவைத் தழுவி, தமிழ் என்னும் சொற்கே இனிமைப் பொருளுண்டெனக் கொள்வர்.

கிரேக்க நாட்டில், என்றேனும் தமிழ் வழங்கிய தென்பதற்கோ தமிழர் வாழ்ந்திருந்தார் என்பதற்கோ ஒரு சான்று மின்மையானும்; தமிழ்ச்சொற்களும் தமிழர் பழக்க வழக்கங்களும், கிரேக்க நாட்டில் மட்டுமன்றி உலகத்திற் பல இனத்தாரிடையும் காணப்படுவதாலும், கிரேக்க நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு திரவிட மொழியும் வழங்காமையானும்; தெர்மில என்னும் சொல்லைத் திர- இல்-அர் என்று பிரித்து, ‘கடற்கரையில் குடிகொண்டவர்‘ என்று பொருள் கூறுவது, கேசவக்கிருட்டிணனே ஏசுக்கிறித்து என்று சொல்வதொக்கு மாதலானும்; ஒரே சொல்லின் ஒருபுடையொப் புமைபற்றி ஒரு நாட்டாரை ஐயாயிரம் கல் தொலைவிற்கப்பாற் பட்ட வேறொரு நாட்டினின்று வந்தவராகக் கொள்வது, மொழிநூன் முறைக்கு முற்றும் முரணானதாகலானும்; தோற்றம் முதல் இதுவரைப்பட்ட வளர்ச்சி நிலையெல்லாம் தொடர்பாகக் காட்டிக்கொண்டு தொன்றுதொட்டுத் தென்னாட்டிலேயே தமிழ் வழங்கி வந்திருத்த லானும்; கிரேக்க நாட்டு மூலக் கொள்கை மிகத் தவறான தென்று கூறி விடுக்க.

வங்க நாட்டில் திரவிடரேயன்றித் தமிழர் ஒருகாலும் வாழ்ந் திராமையானும், இற்றை வங்கமொழி ஆரிய வண்ணமாய் மாறி யிருத்தலானும், தமிழ் என்னுஞ் சொற்குத் தம்ரலித்தி என்னுஞ் சொல்லோடுள்ள தொடர்பு, காசி என்னும் பெயர்க்குக் காஞ்சி யென்னும் பெயரோடுள்ள தொடர்பே யாதலானும்; தம்ரலித்தி (அல்லது தமிலப்தி அல்லது தமிலூக்) என்னுஞ் சொல்லினின்று தமிழ் என்னும் பெயர் வந்ததென்பது சிறிதும் பொருந்தாது.

தமிழர் நாகரிகமடைந்த காலந்தொட்டுத் தமிழகம் சேர சோழ பாண்டியராட்சிக் குட்பட்ட முத்தமிழ்நாடாயிருந்துவந்தமையானும், கி.மு. 7ஆம் நூற்றாண்டினரான தொல்காப்பியரும்,

"வண்டமிழ் மூவர் தண்பொழில் வரைப்பின்
நாற்பெயர் எல்லை யகம்" (தொல். 1336)

என்று கூறுதலானும், வரலாற்றுக் காலம் நெடுகலும் இலங்கை அயலாராட்சிக்குட்பட்ட ஒரு குடியேற்ற நாடாகவே கருதப்பட்டு வருதலானும்; தமிழ் என்னும் பெயர் குமரிக் கண்டத்திலேயே தோன்றி விட்டமையானும்; தாமமெல்லாம் அல்லது தாமீழம் என்பது இலங்கையை நோக்கிப் புதுவதாகப் படைத்த பொருந்தாப் புணர்ப்பாதலாலும்; அப் புணர்ப்புச் சொல்லினின்று தமிழென்னும் பெயர் தோன்றிற்றென்பது, நாட்டுப்பற்றினா லெழுந்த விருப்பக் கருத்தேயன்றி வேறன்று.

தமிழ் ஒப்புயர்வற்ற தென்னுங் கருத்து ஏனைய மொழிக ளெல்லாந் தோன்றியபின், அவற்றோடு தமிழை ஒப்புநோக்கி அதன் உயர்வு கண்டு அதற்குத் தமிழ் எனப் பெயரிட்டன ரென்று, அப் 

பெயரீட்டை மிகப் பிந்திய நிகழ்ச்சியாகக் காட்டுவதால், அதுவும் கொள்ளத் தக்கதன்று.

மூவினமெய் எல்லா மொழிகட்கும் பொதுவாதலின், தமிழ் என்னும் பெயர் அது குறித்துத் தோன்றிற்றென்பதும் தவறானதே.

எல்லா மொழியாளரும் தத்தம் மொழியே இனியதென்று கொள்வது இயல்பாதலானும்; மாடு என்னும் சொற்குச் செல்வம் என்னும் பொருள் தோன்றியதுபோல், தமிழ் என்னும் சொற்கு இனிமை என்பது மதிப்பும் பற்றும் பற்றித் தோன்றிய வழிப் பொருளே யாதலானும்; தம்+இம்(இழும்) என்னும் சொற் பகுப்பில், ‘தம்‘ என்னும் முன்னொட்டு தொடர்பற்றும், இழும் என்னும் தலைமைச் சொல் ஈறாகக் குன்றியும், இருக்கவேண்டும் நிலைமை யேற்படுதலானும்; இனிமைப் பொருட் கரணியமும் ஏற்றதன்றாம்.

இழும் = இனிமை. இழுமெனல் = இனிதாயிருத்தல்.

இழுது = தேன், தித்திப்பு.

தனிமையாக ழகரத்தைக் கொண்டதென்னுங் கருத்துப் பொருத்தமுள்ளதாகத் தோன்றினும், அதுவும் ஏனை மொழி களுடன் ஒப்பு நோக்குதலை வேண்டுதலின் ஏற்கத்தக்க தன்று. கி.மு. 10,000 ஆண்டுகட்கு முன்னரே குமரிக்கண்டத்தில் தமிழ் என்னும் பெயர் ஏற்பட்டு விட்டது.

தமிழ் என்னும் சொல்லில் ‘ழ்‘ இயல்பீறன்று. அமிழ், இமிழ், உமிழ், குமிழ், சிமிழ் என்பவற்றிற்போல், தமிழ் என்பதிலும் ‘இழ்‘ என்பதே ஈறாம். அது ‘இல்‘ என்பதன் திரிபு. தனிமையாக ழகரத்தைக் கொண்டதென்னும் பொருளில், தமிழ் என்பது தமி+ழ் என்று பிரிதல் வேண்டும். தமி = தனிமை. ழகரம் இனிதாயொலிப்ப தால், தனிமையாக ழகரத்தைக் கொண்டதென்னுங் கூற்றும், இனிமைக் கருத்தைத் தழுவியதே.

இனி, இனிமையென்பது தமிழுக்கு ழகரத்தால் மட்டும் ஏற்பட்டதன்று. எழுத்தினிமை போன்றே, சொல்லினிமை, செய்யு ளினிமை எனப் பிறவினிமைகளுமுண்டு. இவற்றின் விரிவையும் விளக்கத்தையும் என் ‘செந்தமிழ்ச் சிறப்பு’, ‘முத்தமிழ்‘ என்னும் நூல்களிற் கண்டு கொள்க.

"சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும்
உறைவான் உயர்மதிற் கூடலி னாய்ந்தவொண் டீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச் சூழல்புக்கோ
இறைவா தடவரைத் தோட்கென் கொலாம்புகுந் தெய்தியதே"

என்னும் திருக்கோவைச் செய்யுளில், ‘ஒண்டீந்தமிழின் துறை‘ என்று பிறமொழிகட்கில்லாத பொருளிலக்கணமும், "ஏழிசைச் சூழல்"  

என்று இசைத் தமிழும், இன்பத் துறைகளாக மாணிக்கவாசகராற் குறிக்கப்பட்டிருத்தலையும் நோக்கித் தெளிக.

அண்மையில் தமிழ்ப்பேராசிரியர் ஒருவர்7, தமிழ் என்னுஞ் சொல்லைத் த+மிழ் என்று பிரித்தும், தம்+மிழற்று என்று விரித்தும், நமது இனியமொழி என்று பொருள் குறித்தும், ஆங்கிலத் தில் ஒரு கட்டுரை வரைந்துள்ளார்.

முறையே, ஏம் (யாம்), நாம், நூம், தாம் என்னும் மூவிடப் பெயர்களின் வேற்றுமையடிகளான எம், நம், நும், தம் என்னும் சொற்களுள், எம், நம் என்னும் தன்மைச் சொற்களே அருமைப் பாட்டை யுணர்த்தும். இது ‘ஆர்வக் கோளி‘ (Dative of Interest) என்னும் ஆங்கில விலக்கண அமைதியை ஒருபுடை யொத்தது.

எ-டு: எம்பிள்ளை, எம்ஆள், எம்பெருமான்;
நம்பிள்ளை, நம்ஆள், நம்பெருமான்,
நம்பெருமாள், நம்மாழ்வார்.

தம் என்பது தமது என்று படர்க்கையை யுணர்த்துமே யன்றி, நமது என்று உளப்பாட்டுத் தன்மையை உணர்த்தாது. ஒருவர் தமக்கு அருமையானவரைத் தம்மொடுபடுத்திக் கூறுவதன்றிப் பிறரொடு படுத்திக் கூறுவது, இயல்பன்றென்பதும் அறிக.

"மழவுங் குழவும் இளமைப் பொருள" (உரி. 14)

என்பது தொல்காப்பியம்.

இளமை மென்மையையும் உணர்த்தும்

மழ - மழல் - மழலை, மழல் - மழறு - மழற்று - மிழற்று.

மிழற்றுதல் = குழந்தைபோல் மென்மையாய் அல்லது

இனிமையாய்ப் பேசுதல்.

மிழற்று என்னும் சொல் மிழ் எனக் குறுகி ஈறாயிற் றென்பது பொருந்தாது.

ஆயினும், நம் பேராசிரியரின் நன்னோக்கம் மகிழ்ந்து பாராட்டற் பாலதே.

இனி, வேறு எவ்வகையில் தமிழ் என்னும் பெயர் தோன்றி யிருக்கலாமெனின், கூறுவேன்.

மொழிகட்குப் பெயர் முதலாவது நாடுபற்றியும், பின்பு மக்கள் பற்றியும், அதன்பின் மொழியின் தன்மைபற்றியும் தோன்றியுள்ளன.

7. வே.வ. இராமசாமி பாராட்டு’ மலர், பக்.93-5

6. தி. ஒ. இ., ப.9



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard