New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழ் எழுத்தின் பழமை - கணியன் பாலன்


Guru

Status: Offline
Posts: 24596
Date:
தமிழ் எழுத்தின் பழமை - கணியன் பாலன்
Permalink  
 


தமிழ் எழுத்தின் பழமை - 1

tamil

தமிழ்மொழியும் அதன் இலக்கியங்களும் மிகப் பழமையானது என்பதற்கு அதன் ‘தமிழி’ எழுத்துத் தோன்றிய காலத்தை அறிதலே போதுமானது. தமிழகத்தில் பழனி அருகே உள்ள பொருந்தல் என்ற இடத்தில் நடந்த அகழாய்வின்போது கிடைத்த மட்பாண்டங்களில் இருந்த இருநெல் மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள பீட்டா ஆய்வு நிலையத்தில், அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு (Accelerator Mass Spectrometry by the Beta Analytic Lab , USA ), அவைகளின் காலம் கி.மு.490, கி.மு. 450 எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நெல் மாதிரிகளுமே, பொருந்தல் அகழாய்வில் கிடைத்த, இரு வெவ்வேறு மட்பாண்டங்களிலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும்.

            இந்த மட்பண்டங்களில் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் அகழாய்வு இயக்குநர் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகப் பேராசிரியர், முனைவர் கா.இராசன் அவர்கள், இந்தக்காலக் கணிப்புகளின்படி, தமிழ் பிராமியின்(தமிழி) காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு என்கிறார். மேலும் தமிழ்பிராமி எழுத்து அசோகர் பிராமிக்கு இரு நூற்றாண்டுகள் முற்பட்டது என்பதோடு, அசோகர் பிராமியில் இருந்து தமிழ் பிராமி(தமிழி) உருவாக வில்லை என்பதும் நிரூபிக்கப்படுகிறது என்கிறார்(1).

பொருந்தலும், ஆதிச்சநல்லூ ரும்:

            இந்த 5ஆம் நூற்றாண்டுப் பொருந்தல் எழுத்துக்கள் குறித்து டாக்டர் சுப்பராயலு அவர்கள் 29-8-2011 இந்து நாளிதழுக்குக் கொடுத்த தகவலில், இந்த எழுத்துக்கள் ஐராவதம் மகாதேவன் அவர்களின் கணிப்புப்படி இரண்டாம் நிலைத் தமிழி எழுத்துக்கள் ஆகும் எனவும், ஆகவே அதன் காலத்தை கி.மு 490 க்குக் கொண்டுபோக முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனை அவர் குறிப்பிட்ட பொழுது ஒரு மட்பாண்ட நெல் மாதிரி மட்டுமே அமெரிக்காவில் உள்ள பீட்டா ஆய்வு நிலையத்தில் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதன் காலம் கி.மு 490 என கண்டறியப்பட்டிருந்தது. அதன்பின் இரண்டாவது நெல் மாதிரியும் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு அதன் காலம் கி.மு. 450 என கண்டறியப் பட்டது. ஆகவே பொருந்தல் தமிழி எழுத்துக்களின் காலம் கிமு. 5ஆம் நூற்றாண்டு என்பது சந்தேகத்திற்கு இடமின்றி இரண்டு மாதிரிகளின் அறிவியல் ஆய்வு மூலம் இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

            தமிழி(தமிழ் பிராமி) எழுத்துக்களை அதன் எழுத்தமைதி, வடிவம், எழுதும்விதம் ஆகிய பல காரணிகளைக் கொண்டு ஐராவதம் மகாதேவன் அவர்கள் மூன்று நிலைகளாகப் பிரித்துள்ளார். ஒவ்வொன்றுக்கும் இடையே சில நூற்றாண்டுகள் இடைவெளிகள் இருந்துள்ளன என்கிறார் அவர். ஐராவதம் மகாதேவன் அவர்கள் பிரித்த மூன்று நிலை தமிழி எழுத்துகளில், பொருந்தல் தமிழி எழுத்துக்கள் இரண்டாம் நிலை தமிழி எழுத்துக்கள் என்கிறார் டாக்டர் சுப்பராயலு அவர்கள்(2). ஆதலால் முதல் நிலை தமிழி எழுத்துக்கள் இந்த இரண்டாம் நிலை தமிழி எழுத்துக்களுக்குச் சில நூற்றாண்டுகள் முந்தையவையாக இருந்தாக வேண்டும். இரண்டாம் நிலை தமிழி எழுத்துக்களான பொருந்தல் தமிழி எழுத்துக்களின் காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு என்பதால் முதல்நிலை தமிழி எழுத்துக்களின் தொடக்க காலம் அதற்கு இரண்டு மூன்று நூற்றாண்டுகள் முந்தையவையாக இருந்தாக வேண்டும். அதன் அடிப்படையில் கி.மு. 5ஆம் நூற்றாண்டுக்கு முன் இரண்டு, மூன்று நூற்றாண்டுகள் எனில் முதல்நிலை தமிழி எழுத்துக்களின் தொடக்க காலத்தை கி.மு. 8ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.

கொற்கையில் தமிழி எழுத்துக்கள்:

            1970ல் நடந்த கொற்கை அகழாய்வில் மௌரியர் காலத்து மட்பாண்டங்கள் கிடைத்தன. அத்துடன் தமிழி எழுத்துக்களைக் கொண்ட மட்பாண்டங்களும் கிடைத்தன. அவைகளின் காலம் கி.மு. 3ஆம் 2ஆம் நூற்றாண்டு என ஆய்வாளர் திரு ஆர். நாகசுவாமி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அவருடைய அறிக்கை அத்துடன் அதன் அடியாழத்தில் அதாவது 2.69 மீட்டர் ஆழத்தில் ‘கேஆர்கே-4’ என்கிற குழியில் கரித்துண்டு மாதிரிகள் கிடைத்தன எனவும் அதனை கார்பன்-14 ஆய்வுக்கு உட்படுத்தி அதன் காலம் கி.மு. 850க்கும் 660க்கும் இடையே கி.மு. 755 என கண்டறியப் பட்டது எனவும் தெரிவிக்கிறது. மேலும் அதே குழியில் தமிழி எழுத்துப் பொறிப்புகளுடன் கூடிய மட்பாண்ட ஓடுகள் கிடைத்துள்ளன. ஆதலால் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட கரித்துண்டின் காலம்தான் இந்த எழுத்துப் பொறிப்பின் காலம் என்பதால், கொற்கை அகழாய்வின் அடியாழத்தில் கிடைத்த எழுத்துப் பொறிப்பின் காலம் கி.மு. 755, அதாவது கி.மு.8 ஆம் நூற்றாண்டு என ஆகிறது-(3).

ஆதிச்சநல்லூர்-தமிழி எழுத்து:

            ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வின் இயக்குநர் சத்தியமூர்த்தி அவர்கள், அங்கு கிடைத்தத் தமிழி எழுத்துப் பொறிப்பின் காலம், அறிவியல் ஆய்வின் படி (PRELIMINARY THERMO LUMINESCENCE DATING), கி.மு.1500 முதல் கி.மு.500 வரை எனவும், குறைந்த பட்சம் கி.மு.500 க்கும் முற்பட்டதாக இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்-(4). அதே ஆதிச்ச நல்லூரில் நடைபெற்ற அகழாய்விlல் கி.மு 800ஆம் ஆண்டு தமிழி எழுத்துப் பொறிப்பு கிடைத்ததாக 26.5.2004 இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது-(5). ஆகவே இந்த ஆதிச்சநல்லூர் தமிழி எழுத்துப் பொறிப்பின் காலத்தைக் குறைந்தபட்சம் கி.மு.800 எனக் கொள்ளலாம். ஆதிச்சநல்லூரில் முழுமையான ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. ஒரு விழுக்காட்டிற்கும் குறைவான ஆய்வுகளே அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூரில் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்பொழுது தமிழி எழுத்துப் பொறிப்புகளின் காலம் கி.மு. 800 அல்லது அதற்கும் முன் கொண்டு செல்லப்படும் என்பது உறுதி.

ஆதிச்சநல்லூர் – காலம்:

            பண்டைய ஆதிச்ச நல்லூரின் காலத்தை அறிய மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக உள்ள முனைவர் இராசு கிசோர் கார்சியாவின் தலைமையில் இருந்த அறிவியலாளர்கள், புதிய அறிவியல் தொழிநுட்ப முறைப்படி(OPTICALLY STIMULATED THERMO LUMINESCENCE TEST) ஆதிச்ச நல்லூர் மட்பாண்டங்களின் பாகங்களை ஆய்வு செய்து, அதன் காலத்தை கண்டறிந்தனர். அதன்படி தாழி எண் 10இன் காலம் 3400+700 (அல்) 3400-700 எனவும், தாழி எண் 29இன் காலம் 1920+350 (அல்) 1920-350 எனவும் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது ஆதிச்சநல்லூரின் காலம் கி.மு. 1750 முதல் கி.மு. 270 வரை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிடைத்த மிகப் பழமையான மட்பாண்டங்களின் காலம் கி.மு. 4000 என எசு. பத்ரி நாராயணன்(S.BADRINARAYANAN) அவர்கள் தெரிவிக்கிறார். ஆதிச்ச நல்லூரில் இருந்த சுரங்கத் தொழிற்சாலையின் காலம் கி.மு 1500 என பி. சசிசேகரனும் (B.SASISEKARAN et al.) அவருடன் ஆய்வு செய்தவர்களும் தெரிவிக்கின்றனர். ஆகவே ஆதிச்சநல்லூர் நாகரிகத்தின் காலம் கி.மு. 2000 அளவில் என உறுதியாக முடிவு செய்யலாம் என்கிறார் முனைவர் இராமசாமி அவர்கள்-(6).

‘தமிழி’ அசோகர் பிராமிக்கும் முற்பட்டது:

1.நடன காசிநாதன்:

            பொருந்தல் அகழாய்வு, ஆதிச்சநல்லூர் அகழாய்வு போன்ற ஆய்வுகளுக்கு முன்னரே தமிழி எழுத்துக்கள் அசோகன் பிராமிக்கு முற்பட்டது எனப் பல ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். “தமிழ்பிராமி பற்றி அண்மைக்காலம்வரை வெளிவந்துள்ள பல்வேறு ஆய்வுக்கருத்துக்களை ஒப்பிட்டு ஆராய்ந்து, தமிழ்பிராமிக் கல்வெட்டுக்கள் தமிழுக்கே உரியவை என்றும் இவ்வெழுத்து அசோகன் பிராமியிலிருந்து கடனாகப் பெறப்பட்டது அல்ல என்றும், இது கி.மு. 6ஆம், 5ஆம் நூற்றாண்டுகளுக்கு உரியது என்றும் 2004ஆம் ஆண்டிலேயே முன்னாள் அகழாய்வு இயக்குநர் நடன காசிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்-(7).

2.டாக்டர் கிப்ட் சிரோமணி:

            டாக்டர் கிப்ட் சிரோமணி அவர்கள் 1983 வாக்கிலேயே தமிழி எழுத்து அசோகன் எழுத்துக்கு முந்தையதாக இருக்க வேண்டும் என்கிற கருத்தை வெளியிட்டுள்ளார். ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமிழி(தமிழ் பிராமி) எழுத்தை மூன்று நிலைகளாகப் பிரித்துள்ளார் எனவும் பட்டிப்பொருளு என்பது இன்னொரு வகை எனவும் இந்த நான்கும் இல்லாத வேறொரு வகைதான் அசோகன்பிராமி எனவும் அவர் குறிப்பிடுகிறார். அசோகன் பிராமியில் ஒரேநிலைதான் இருக்கிறது எனவும், தமிழியில் பலநிலைகள் இருக்கிறது எனவும் ஆதலால் தமிழி எழுத்து தான் முதலில் தோன்றியிருக்க வேண்டும் எனவும் முதல்நிலை தமிழி எழுத்து அசோகன் பிராமிக்கு முற்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்று புதிதாகத் தோன்றுகிற போது பல நிலைகளை கடந்த பின்னரே புதியதாக உருவாகும். தமிழி தமிழகத்தில் தோன்றியதால்தான் இங்கு தமிழியில் பல நிலை எழுத்து வகைகள் இருக்கின்றன. அசோகன் பிராமி புதியதாகத் தோன்றியதல்ல. அது மற்றதைப் பார்த்து உருவாக்கப்பட்டது என்பதால் அங்கு பல நிலைகள் இல்லை என்பதே டாக்டர் கிப்ட் சிரோமணி அவர்களின் அடிப்படை வாதமாகும். இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதும் சரியானதுமாகும்.

            சம்பை கல்வெட்டில் உள்ள ‘சதியபுதோ’ என்கிற சொல்லில் உள்ள எழுத்துகளும் அசோகன் கல்வெட்டில் உள்ள ‘சதியபுதோ’ என்கிற சொல்லில் உள்ள எழுத்துகளும் எந்தவித வேறுபாடும் இன்றி ஒரே மாதிரி உள்ளன என்கிறார் அவர். ஆதலால் சேரன் செங்குட்டுவன், அதியமான் போன்றவர்கள் அசோகனின் சமகாலத்தவர்களா அல்லது 400வருடங்களுக்குப் பிறகு வந்தவர்களா என்கிற அடிப்படையான கேள்வியை 1983 வாக்கிலேயே டாக்டர் கிப்ட் சிரோமணி அவர்கள் எழுப்பியுள்ளார். சேரன் செங்குட்டுவன், அதியமான் போன்றவர்களின் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என தற்போதைய வரலாற்று மாணவன் கருதுகிறான். அது உண்மையானால் சம்பை கல்வெட்டின் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என ஆகிறது. ஆனால் கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற சாதவ கன்ன அரசன் சதகர்ணியின் நாணயங்களில் உள்ள தமிழி எழுத்துகளுக்கும் சம்பை கல்வெட்டு எழுத்துகளுக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது.

            தற்பொழுது தமிழி எழுத்தின் அடிப்படையில் தரப்படும் காலத்திற்கு வலிமையான அடிப்படை எதுவும் இல்லை. ஆதலால் மாங்குளம், சம்பை ஆகிய கல்வெட்டுகளிலுள்ள தமிழி எழுத்தின் அடிப்படையில் பாண்டியன் நெடுஞ்செழியன், அதியமான் ஆகியவர்களுக்கு தற்போது தரப்பட்டிருக்கும் காலத்தை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்கிறார் அவர். அவருடைய கருத்துப்படி அசோகனும், அதியமானும், சேரன் செங்குட்டுவனும் சம காலத்தவர்கள். தற்போது அவர்களிடையே இருக்கும் 400 ஆண்டுகள் இடைவெளி நீக்கப்படவேண்டும் என 1983 லேயே அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்-(8). நமது ஆய்வு அதனைத்தான் செய்துள்ளது. அதியமானும் சேரன் செங்குட்டுவனும் நமது கணிப்புப்படி கி.மு. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள், அதாவது அசோகன் காலத்தைச் சேர்ந்தவர்கள்.

            தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், மொழியியல் போன்ற பல்வேறு சான்றுகளின் அடிப்படையில் தமிழி எழுத்து அசோகன் பிராமிக்கு முற்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அசோகன் பிராமிக்கு சுமார் 500 ஆண்டுகள் முந்தைய தமிழி எழுத்தை அசோகன் பிராமியில் இருந்து உருவானது என இன்றும் சில அறிஞர்கள் சொல்லி வருகின்றனர். இது குறித்து “தமிழகத்தில் சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கில் இருந்த ஒரு வரிவடிவம் அசோகர் காலத்திற்குப் பின்பு, சமணர்களால் அல்லது சமண வணிகர்களால் தமிழகத்தில் புகுத்தப்பட்டது போன்ற கருதுகோள்களை உரசிப்பார்க்க வேண்டியதுள்ளது” என்கிறார் முனைவர் கா. இராசன்-(9)

            இறுதியாக தமிழகத்தில் கிடைக்கும் தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், மொழியியல் தரவுகளின் அடிப்படையிலும், மண்ணடுக்கு ஆய்வின் அடிப்படையிலும், தமிழகத்தில் கிடைக்கின்ற பல்வேறு வகைப்பட்ட பண்பாட்டுக்கூறுகளின் தோற்றம், வளர்ச்சி, பரவல் ஆகியவற்றின் அடிப்படையிலும், குறியீடுகளின் அமைப்பு, எழுதும்முறை, எண்ணிக்கை, பரவல் ஆகியவற்றின் அடிப்படையிலும், தமிழகத்திற்கும் பிற பகுதிகளுக்கும் இடையே காணப்படுகின்ற பண்பாட்டு உறவுகளின் அடிப்படையிலும் தமிழகத்தில் கிடைக்கும் பழந்தமிழ் வரிவடிவங்களான தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் அசோகர் காலத்திற்கும் முற்பட்டவை என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை என்கிறார் முனைவர் க.இராசன் அவர்கள்-(10).

சங்கச் செவ்வியல் இலக்கியம்:

            சங்ககாலச் செவ்விலக்கியம் கி.மு 6ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. முதல் நூற்றாண்டு வரை(கி.மு. 550-50) படைக்கப்பட்டு வந்துள்ளது எனத் தற்போதைய நமது கணிப்பு வெளிப்படுத்துகிறது. இந்த சங்ககாலச் செவ்விலக்கிய படைப்பாக்க காலத்திற்கு இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதாகத் தமிழி எழுத்தின் தொடக்க காலம் இருந்திருக்கவேண்டும். அதன் அடிப்படையில் தமிழி எழுத்தின் தொடக்ககாலத்தை கி.மு 8ஆம் நூற்றாண்டு எனக் கணிக்கலாம். பொருந்தல் அகழாய்வு, கொற்கை அகழாய்வு, ஆதிச்சநல்லூர் அகழாய்வு ஆகிய மூன்று அகழாய்வு இடங்களிலும் கிடைத்த தமிழி எழுத்துப் பொறிப்புகளின் காலம் அறிவியல் ஆய்வு முடிவுகளின்படி கி.மு. 8ஆம் நூற்றாண்டு எனக் கண்டறியப்பட்டுள்ளது.

            சங்ககால செவ்வியல் இலக்கியப் படைப்பாக்க காலத்தின் அடிப்படையிலும் தமிழி எழுத்தின் காலம் கி.மு 8ஆம் நூற்றாண்டு எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆதலால் மேற்கண்ட பல்வேறு தரவுகளின் படி, தமிழி எழுத்தின் தொடக்க காலத்தைக் கி.மு. 8ஆம் நூற்றாண்டு என உறுதிபடக் கூறலாம். தமிழ் இலக்கியத்தின் தொடக்ககாலம் கி.மு. 750 என முன்பே கண்டறிந்துள்ளோம். ஆதலால் அதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எழுத்து வடிவத்தைப் பயன்படுத்தியிருக்கவேண்டும். தமிழகத்தில் கி.மு. 1000 வக்கில் குறியீடுகள் ஒரு எழுத்து வடிவமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என அறிய முடிகிறது. ஆதலால் தமிழகக் குறியீடுகள் குறித்து அறிதல் அவசியமாகிறது.

குறியீடுகள்(GARAFFITI SYMBOLS):

            தமிழகத்தின் புதிய கற்கால கட்டத்திலும் அதற்குப் பிந்தைய முதுமக்கள் தாழி மற்றும் பெருங்கற்படை காலகட்டத்திலும் உருவான ஓவிய வரைவுகளில், மட்பாண்டங்களில், காசுகளில், அணிகளில், முத்திரைகளில், கல்வெட்டுகளில் இறுதியாகத் தமிழ் எழுத்துகள் இடையேயும் கூட ‘குறியீடுகள்’ இடம்பெற்றுள்ளன. தமிழகக் குறியீடுகளில் பல, பண்டைக்கால சுமேரிய, எகிப்திய, சீன, கிரேக்க, யப்பான் நாட்டுக் குறியீடுகளோடும், முக்கியமாகச் சிந்து வெளிக் குறியீடுகளோடும் ஒப்புமை உடையனவாக உள்ளன. அவைகளின் தரவுகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன-(11).

1.சுமேரியன், அக்கேடியன், இட்டடைட் ஆகிய மூன்று தொன்மையான மொழி எழுத்து மரபுகளுடன் பெருங்கற்காலத் தமிழகக் குறியீடுகளின் வடிவங்கள் ஒப்புமை உடையனவாக உள்ளன(பக்:237).

2.சுமேரிய-எகிப்து மொழியில், இலினியர்(Linear-B) எழுத்துமுறை கலந்திருக்கிறது. இலினியர் எழுத்துக்களில் 87 குறியீடுகள் உயிர்மெய் எழுத்துக்கள். அந்த 87 எழுத்துக்களும் தென்னிந்தியக் குறியீடுகள், வரிவடிவங்களோடு ஒப்புமை உடையனவாக உள்ளன(பக்: 248).

3.தமிழகத்தில் கண்டறியப்பட்ட பண்டைய குறியீடுகளையும், சிந்து வெளிக் குறியீடுகளையும் தொகுத்துக் காணும் பொழுது அவற்றிற்கு இடையே காணப்படும் வரைவு ஒற்றுமைகளும், மொழி, எழுத்து குறித்த சிந்தனைகளும் ஒரு தொடர்ச்சியான வரலாற்றைப் பெற்றுத் திகழ்கின்றன என்பதை அறிய முடிகிறது(பக்:252). மேலும் சிந்துவெளிக் குறியீடுகளின் எழுத்துரு அமைப்பில் தமிழின் தொடர்பையும், தொல்குறியீடாகிப் பின்னர் மொழியாக்கம் பெற்ற தமிழியில் சிந்துவெளிக்குறியீடுகளின் ஒப்புமையையும் காணமுடிகிறது (பக்:253).

4.தமிழகப் பெருங்கற்காலக் குறியீடுகளுக்கும், கி.மு. 500 - கி.பி. 200 ஆம் காலத்திய யப்பானிய யாயோய்(Yayoi) பண்பாட்டு மட்பாண்டக் குறியீட்டு வரைவுகளுக்கும் இடையே தெளிவான வடிவ ஒற்றுமை இருக்கிறது(பக்:230).

5.சீனம், எகிப்து, இலங்கை, யப்பான், கிரேக்கம் ஆகிய நாடுகளின் 130 பழங்காலக் குறியீடுகள் தமிழகப் பெருங்கற்காலக் குறியீடுகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளன(பக்:239-244). அதில் எகிப்து நாட்டுக் குறியீடுகளோடு 121 குறியீடுகளும், சீனத்தோடு 103 குறியீடுகளும், யப்பானோடு 94 குறியீடுகளும், கிரேக்கத்தோடு 64 குறியீடுகளும் ஒப்புமை கொண்டுள்ளன என்பது கணக்கிட்டு அறியப்பட்டது.

6.பண்டைய உலக நாகரிகங்களின் சமகாலத்துப் பண்பாட்டிற்கு இணை -யாகவே சங்ககாலத் தமிழகம் திகழ்ந்தது என்பதை, உறுதி செய்யும் வண்ணம் இப்பெருங்கற்காலக் குறியீடுகள் அமைகின்றன(பக்:262).

            மேலே தரப்பட்ட தரவுகள் கி.மு.3000 முதல் கி.மு.1500 வரையும், கி.மு.800 முதல் கி.மு. 200 வரையுமான இரு காலத்தைக் கொண்டவை. இதில் எகிப்து, சிந்து, சீனம், சுமேரியா போன்ற பண்டைய நாகரிகங்கள் முதல் காலத்தையும், இலங்கை, யப்பான், கிரேக்கம் போன்ற நாடுகள் இரண்டாம் காலத்தையும் சார்ந்தவை-(12). பண்டைய நாகரிக நாடுகளின் குறியீடுகளோடு கொண்டுள்ள இந்த ஒப்புமையைத் தற்செயலானவை எனக் கருத இயலாது. பண்டைய தமிழகம் இந்த நாடுகளோடு பண்டையகாலம் முதல் வணிகப் பண்பாட்டுத் தொடர்பைக் கொண்டிருந்தன என்பதற்கு இக்குறியீடுகளின் ஒப்புமை ஒரு ஆதாரமாகத் திகழ்கிறது எனலாம்.

குறியீடுகள்-எழுத்து வரி வடிவம்:

            அகழாய்வுகளின், கீழ் அடுக்கில் உள்ள மட்பாண்டங்களில், அதிக அளவு குறியீடுகளும், குறைந்த அளவு தமிழி எழுத்துக்களும் உள்ளன. அதே சமயம் மேல் அடுக்குகளில் உள்ள மட்பாண்டங்களில், அதிக அளவு தமிழி எழுத்துகளும் குறைந்த அளவு குறியீடுகளும் உள்ளன. அதாவது அகழாய்வுகளில் தமிழி எழுத்துகள் கிடைக்கத் தொடங்கியவுடன் குறியீடுகளின் எண்ணிக்கை குறையத் தொடங்குகிறது எனலாம். இதன் காரணமாகவும், தமிழி எழுத்துகள் இடையே இக்குறியீடுகள் இடம்பெறும் தன்மை காரணமாகவும், தமிழி எழுத்து பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு, கருத்துப் பரிமாற்றத்திற்கான வரி வடிவமாக, தமிழர்களால் இக்குறியீடுகள் பயன்படுத்தப்பட்டன எனலாம். “தமிழகத்தில் அகழாய்வு செய்யப்பட்ட அனைத்து இடங்களிலும் இக்குறியீடுகள் கிடைப்பதாலும், தமிழ் வரிவடிவங்களைப் போன்றே இவையும் இடமிருந்து வலமாக எழுதப்பட்டுள்ளதாலும், தமிழ் பிராமி (தமிழி) வரி வடிவம் வழக்கில் வந்தவுடன் இக்குறியீடுகளின் பயன்பாடு குறைந்து வருவதாலும், பானை ஓடுகள், நாணயங்கள், கல்வெட்டுகள் மற்றும் மோதிரங்கள் என எண்ணற்ற ஊடகங்களின் வாயிலாக இவை வெளிப்படுவதாலும், சங்க காலத்திற்கு முன்பிருந்தே அதாவது சிந்து சமவெளிப் பண்பாடு தொட்டு, சில வடிவ மாற்றங்களுடன் தொடர்ந்து இவை இருந்து வந்துள்ளதாலும், தமிழ் பிராமி (தமிழி) வரி வடிவம் தமிழகத்தில் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக இக்குறியீடுகள் சங்ககால மக்களின் எண்ணங்கள் அல்லது கருத்துப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வரிவடிவமே என எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது” என்கிறார் முனைவர் கா.இராசன் அவர்கள்-(13).

            தனது ‘பண்டையத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும்’ என்கிற நூலில் “குறியீடுகளின் எண்ணிக்கைகளும் பயன்பாடும் மிகுதியாக இருக்கும் காலத்தில் எழுத்துகளின் பொறிப்புக் குறைவாகவும், எழுத்துப் பொறிப்பு மிகுதியாகும் பொழுது குறியீடுகளின் பொறிப்புக் குறைந்தும் அமைகின்றன என்பது இந்த ஆய்வால் உறுதி செய்யப்படுகின்றது. இந்த ஆய்வு முடிவினைக் காணும் பொழுது குறியீடுகளை முதலில் ஒலி எழுத்துகளாகவோ, பொருள் வெளிப்பாட்டு வரைவுகளாகவோ அக்காலத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர் எனக் கருதலாம்“ என்கிறார் முனைவர் இராசு.பவுன்துரை அவர்கள்-(14)

            மேலும், இக்குறியீடுகளின் வளர்ச்சி தந்த பங்களிப்பு தான், எழுத்துருவாக்கமும் மொழியாக்கமும் என்பதோடு, தமிழகப் பெருங்கற் காலத்து மட்பாண்டக் குறியீடுகள், தமிழி அல்லது பிராமி எழுத்துத் தோற்றத்தையும் அதன் வளர்ச்சிக் கூறுகளையும் அறிய உதவும் அடிப்படைச் சான்றுகளாகவும் உள்ளன என்கிறார் அவர். இறுதியாக “தமிழ் மொழியின் வளர்ச்சியில், குறியீடுகளின் பங்களிப்பு தனிச் சிறப்பிற்குரியதாகவும், எழுத்துச் சான்றுகளாக மாற்றம் பெறுவதற்கு முன்னர் வலுவான வரைவுடன் கூடிய தகவல் தொடர்புச் சாதனமாகவும், குறியீடுகள் திகழ்ந்தன எனக் கருதலாம்“ என்கிறார் முனைவர் திரு. பவுன்துரை அவர்கள்-(15). திரு. இராசன் மற்றும் திரு. பவுன்துரை ஆகியவர்களின் கருத்துப்படி தமிழி எழுத்துக்கு முன்பு, தமிழகத்தில் இக்குறியீடுகள் மிக நீண்ட காலமாக கருத்துப் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன என்பது உறுதியாகிறது. மேற்கண்ட இருவரும் சிந்துவெளி எழுத்துகளுக்கும் தமிழக குறியீடுகளுக்கும் இடையே நல்ல ஒப்புமை உள்ளது என்பதையும் தங்கள் நூல்களில் தெரிவித்துள்ளனர். பண்டைய தமிழ் மக்கள் கி.மு.1000 ஆண்டு வாக்கிலேயே ஒருவகையான எழுத்துப்பொறிப்புகளை அல்லது வரிவடிவத்தை தமது கருத்துப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தினர். தமிழகத்தில் இக்குறியீடுகள் பரவலாகக் கிடைப்பதால் இந்நிலையை அடையப் பல்லாண்டு காலம் ஆகியிருக்கவேண்டும் என்கிறார் முனைவர் கா. இராசன் அவர்கள்-(16).

- கணியன்பாலன், ஈரோடு

பார்வை:

1. Porunthal Excavations prove existence of Indian scripts in 5th century BC : expert , News paper Dated 15.10.2011,

2.PALANI EXCAVATION TRIGGERS FRESH DEPATE- THE HINDU News paper Dated 29-8-2011.

3.முன்னாள் அகழாய்வுத் துறை இயக்குநர் நடனகாசிநாதன் அவர்கள், ஏப்ரல்-2006, Tamils Heritage, Page:31.

4.Rudimentary Tamil-Brahmi Script unearthed at adichanallur, THE HINDU Newspaper Dated 17.2.2005

5.Three of them(human skeletons), which may be 2,800 years old, bear inscriptions that resemble the early Tamil Brahmi script-: , THE HINDU Newspaper Dated 26.5.2004.

6.அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் அ. இராமசாமி அவர்கள் நூல்: தொன்மைத்தமிழர் நாகரிக வரலாறு, டிசம்பர் 2013, பக்: 61, 62; D. VENKAT RAO et al., RECENT SCIENTIFIC STUDIES AT ADICHANALLUR: A PRE HISTORIC MINING SITE IN SANGAM: NUMISMATICS AND CULTURAL HISTORAY CHENNAI- 2006, PP. 150-151; .S.BADRINARAYANAN, OP.CIT., P-38; B.SASISEKARAN et al. ADICHANALLUR: A PRE HISTORIC MINING SITE IN INDIAN JOURNAL OF HISTORY OF SCIENCE, 45. 3, 2010, P-383. & adichanallur: a prehistoric mining site - Indian National ... http://www.insa.nic.in/writereaddata/UpLoadedFiles/IJHS/Vol45_3_3_BSasisekara.pdf

7.தொகை இயல்-பேராசிரியர் அ. பாண்டுரங்கன், பக்: 193; Date of early Tamil Epigraphs: Journal of Tamil Studies No. 65, June, 2004.

8.கிப்ட் சிரோமணி அவர்களின் இணையதளப் பக்கம். “WWWDR. GIFT SIROMONEY’S HOME PAGE”.

9, 10.முனைவர் கா. இராசன் அவர்கள், ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2010, பக்: 77.

11.முனைவர் இராசு பவுன்துரை அவர்கள், “பண்டையத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும்” உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004, பக்: 237, 248, 252, 253, 230, 239-244, 262.

12. “ “ பக்:263.

13.முனைவர் கா. இராசன் அவர்கள், ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2010, பக்: 55, 56.

14.முனைவர் இராசு பவுன்துரை அவர்கள், “பண்டையத்தமிழக வரைவுகளும் குறியீடுகளும்” உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004, பக்: 257.

15. “ “ பக்: 263.

16.முனைவர் கா. இராசன் அவர்கள், ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2010, பக்: 74, 56. 



__________________


Guru

Status: Offline
Posts: 24596
Date:
Permalink  
 

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தமிழி-கா.இராசன்:

 20 வருடங்களாக ஏழு தடவை கொடுமணலில் அகழாய்வு நடந்துள்ளது என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் சுப்புராயலு அவர்கள். அந்த 20 வருட அகழாய்வுகளில் கிடைத்த 500க்கும் மேற்பட்ட தமிழி(தமிழ் பிராமி) எழுத்துப்பொறிப்புகளை விரிவாக ஆய்வு செய்த கா.இராசன் அவர்கள் அவற்றின் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 6ஆம் நூற்றாண்டு வரை எனவும் அவை மிகவும் நன்கு வளர்ந்த நிலையில் இருப்பதால் அதன் தொடக்க காலம் இதற்குச் சில நூற்றாண்டுகள் முந்தையதாக இருக்கலாம் எனவும் தனது ‘பண்டைய எழுத்துமுறை, குறியீடுகளில் இருந்து பிராமிக்கு ஒரு பயணம்’(EARLY WRITING SYSTEM, A Journey from graffiti to Brahmi) என்ற ஆங்கில நூலில் தெரிவித்துள்ளார். அந்த நூலில் கொடுமணலில் கிடைத்த 500க்கு மேற்பட்ட தமிழி எழுத்துப்பொறிப்புகள் குறித்தும், கிட்டத்தட்ட 600 குறியீடுகள் குறித்தும் விரிவான விளக்கங்களும், வரைபடங்களும், புகைப்படங்களும், தரப்பட்டுள்ளன. இவைகளைப்பற்றிய ஆய்வுகளில் இருந்து, கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்குச் சில நூற்றாண்டுகள் முந்தையதாகத் தமிழி எழுத்தின் தொடக்க காலம் இருக்கலாம் என முனைவர் கா.இராசன் அவர்கள் கூறுகிறார்(17). ஆகவே தமிழி எழுத்தின் தொடக்க காலத்தைக் கி.மு.8ஆம் நூற்றாண்டு என உறுதிபடக்கூறலாம். கொடுமணலில் நடந்த இவ்வாய்வு குறித்தச் சிறுவிளக்கத்தைக்காண்போம்.

Tamil brahmiகொடுமணலில் 2012, 2013ஆம் ஆண்டுகளில் 5 அகழாய்வுகள் முறையே 15செ.மீ, 60செ.மீ, 65செ.மீ, 85செ.மீ, 120செ.மீ ஆகிய ஆழங்களில் நடத்தப்பட்டன. அந்த ஆழங்களில் கிடைத்தத் தமிழி எழுத்துப்பொறிப்புகளைக்கொண்ட பண்பாட்டு பொருட்களின் பழையமுறையிலான ஆண்டுகளும்(UNCALIBRATED), முறையாகக் கணிக்கப்பட்ட ஆண்டுகளும்(CALIBRATED) கண்டறியப்பட்டன. அவை முறையே கி.மு.200-408 வரையிலும், கி.மு.200-480 வரையிலும் இருந்தன. அதாவது 120செ.மீ ஆழத்தில் இருந்த எழுத்துப் பொறிப்புகளின் பழைய முறையிலான ஆண்டு கி.மு.408 ஆகவும், கணிக்கப்பட்ட ஆண்டு கி.மு. 480 ஆகவும் இருந்தது. ஆனால் அதற்குப்பின்னரும் 65செ.மீ ஆழம்வரை, அதாவது 185செ.மீ ஆழம் வரையில் மொத்தம் 500க்கு மேற்பட்ட தமிழி எழுத்துப்பொறிப்புப் பொருட்கள் கிடைத்துள்ளன. இப்பகுதியில் கிடைத்த தமிழி எழுத்துப்பொறிப்புப் பொருட்களுக்கு சராசரியாக ஒரு செ.மீ ஆழத்திற்கு 2ஆண்டுகள் கணக்கிடலாம் எனக்கொண்டு 65செ.மீ ஆழத்திற்கு 130 ஆண்டுகள் எனக் கணக்கிடப்பட்டது. அதன்படி, 120செ.மீ ஆழத்திற்கு கி.மு.408 ஆண்டுகள் எனில், 185 செ.மீ ஆழத்திற்கு கி.மு. 6ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் எனக் கணக்கிடலாம் எனக் குறிப்பிட்டுள்ளார் முனைவர் கா.இராசன் அவர்கள்.

முறையாகக் கணிக்கப்பட்ட ஆண்டுகளை(CALIBRATED) அவர் கணக்கில் கொள்ளவில்லை. அதனைக்கணக்கில்கொண்டால் கி.மு. 480 என்பது கி.மு.610 என ஆகி 7ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலம்வரை என இந்தத் தமிழி எழுத்துக்களின் காலத்தைக் கணிக்கலாம். எனினும் இவை அனைத்தையும் கொண்டு இந்தத் தமிழி எழுத்துக்களின் காலத்தைக் குறைந்தபட்சம் கி.மு. 6ஆம் நூற்றாண்டு என உறுதிபடக் கூறலாம். இந்த 6ஆம் நூற்றாண்டு தமிழி எழுத்துக்கள் மிகவும் நன்கு வளர்ந்த நிலையில் இருப்பதால், தமிழி எழுத்துக்களின் தொடக்க காலம் என்பது கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்குச் சில நூற்றாண்டுகள் முந்தையதாக இருக்கவேண்டும் எனவும் கா.இராசன் அவர்கள் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, தமிழி எழுத்தின் தொடக்ககாலம் குறைந்தபட்சம் கி.மு. 8ஆம் நூற்றாண்டு என்பது உறுதியாகிறது.

கொடுமணலில் இவைபோக 1456 குறியீடு(GRAFFITI) பொறித்தப் பொருட்களும் கிடைத்துள்ளன. இதில் 858 குறியீடு பொறித்த பொருட்களில் உள்ள குறியீடுகள் முழுமையற்றுப் புரிந்துகொள்ளமுடியாத நிலையில் இருக்கிறது. ஆகவே 598 குறியீடு பொறித்தப் பொருட்களை மட்டுமே கணக்கில் கொள்ளமுடியும். ஆக 500க்கும்மேற்பட்ட தமிழி எழுத்துப் பொறிப்புகளும், கிட்டத்தட்ட 600 குறியீடு பொறிப்புகளும் கொடுமணலில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஒரு விழுக்காட்டு ஆய்வில் கிடைத்துள்ளன(18). “தமிழ் பிராமி (தமிழி) வரி வடிவம் தமிழகத்தில் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக இக்குறியீடுகள் சங்ககால மக்களின் எண்ணங்கள் அல்லது கருத்துப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வரிவடிவமே என எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது” என முனைவர் கா.இராசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளதை முன்பே சொல்லியுள்ளோம். இக்குறியீடுகள் அக்கருத்தை வலியுறுத்துவதாக இருக்கின்றன எனலாம்

கொடுமணல் பகுதியில் உள்ள தமிழி எழுத்துக்களில் பிராகிருதச் சொற்களும் இருக்கின்றன என கா. இராசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவை பெயர்சொற்கள் மட்டுமே எனவும், அதுவும் அவைகள் தமிழாக்கம் செய்யப்பட்டவை எனவும், இப்பெயர்ச் சொற்கள் தமிழ், பிராகிருதம் ஆகிய இரண்டும் இணைந்து உருவான புதுமுறையிலான சொற்களாக(HYBRID FORM) உள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்(19). அவைகளைக்கொண்டு பிராகிருதத்தின் செல்வாக்கு தமிழ் மொழியில் இருந்தது என்று கூற முடியாது. ஒரு மொழியின் இலக்கணத்தில் பிறமொழியின் செல்வாக்கால் ஏற்படும் மாற்றத்தைத்தான் அம்மொழியின் செல்வாக்கு எனலாம். பெயர்சொற்கள் இருப்பதைக் கொண்டு அதைப் பிற மொழியின் செல்வாக்கால் ஏற்பட்டது எனக்கூற முடியாது. ‘இது போன்ற பெயர்சொற்கள், நிறுவனப்பெயர்கள், மதச்சொற்கள் முதலியன இருப்பதைக்கொண்டு அவை ஒரு மொழியின் எழுத்தை முடிவு செய்யும் எனக்கொள்ள முடியாது” என திரு இரங்கன் என்பவர் 2004இல் சொல்லியிருப்பதை இராசன் அவர்கள் குறிப்பிட்டதோடு, குகைக் கல்வெட்டுகளில்கூட தமிழி எழுத்துக்கள் வினைச்சொற்கள், பண்புப்பெயர்கள் முதலியனவற்றைக் கடன் வாங்கவில்லை எனக் கூறியுள்ளார்(20). அங்கும் வடபெயர்சொற்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே பிராகிருதத்தின் செல்வாக்கு தமிழியில் இருக்கவில்லை எனலாம். முக்கியமாகக் கொடுமணல் தமிழி எழுத்துக்களில் பிராகிருதத்தின் செல்வாக்கு இருக்கவில்லை என்பதே இவைகளில் இருந்து நாம் பெரும் முடிவாகும். இருந்த போதிலும் இந்தப் பிராகிருதப் பெயர்ச்சொற்கள் கி.மு. 6ஆம் நூற்றாண்டில் இருந்தே கொடுமணல் தமிழி எழுத்துக்களில் இருப்பதற்கான காரணத்தை நாம் கண்டறிந்தாக வேண்டும்.

 வட இந்திய வணிகர்கள் வணிகத்துக்காகக் கொடுமணலில் வந்து பல ஆண்டுகள் தங்கி வணிகம் செய்து வந்ததன் விளவாகவும், அவர்களின்பெயர்கள் பிராகிருதத்தில் இருப்பதாலும் அவர்களைக்குறிப்பிட இந்தப் பிராகிருதப் பெயர்ச்சொற்கள் தமிழி எழுத்துக்களில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது எனலாம். கி.மு. ஆறாம் நூற்றாண்டுகாலத் தமிழி எழுத்திலேயே பிராகிருதச்சொற்கள் இருப்பதால் அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வட வணிகர்கள் தமிழகத்தில் வந்து தங்கி வணிகம் செய்து வந்திருக்கவேண்டும் எனலாம். இவை குறித்துத் தொடர்ந்து செய்யப்படும் ஆய்வுகளே இவ்விடயங்கள் குறித்தத் தெளிவை வழங்கும். அதேசமயம் வட இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் மிக நீண்டகாலமாக வணிகத் தொடர்பு இருந்துள்ளது என்பதை இச்செய்திகள் உறுதிப்படுத்துகின்றன எனலாம்.

தொல்லியல் ஆய்வாளர் சுப்புராயலு அவர்கள், வட இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான அகழாய்வுகள் பல நடந்த பின்னரும் கூட, இன்றைய பாக்கிசுத்தானின் வடமேற்குப்பகுதியில் இருந்த அராமிக்(ARAMAIC) எழுத்துக்களைத்தவிர வேறு எந்த எழுத்துக்களும் அசோகன்பிராமிக்கு முன்பு வட இந்தியாவில் இருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்(21). அதாவது கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்பு பிராமி எழுத்து வட இந்தியாவில் இருக்கவில்லை என்பதை அவர் இதன் மூலம் உறுதிப்படுத்துகிறார். ஆனால் தமிழகத்தில் கி.மு. 6ஆம் நூற்றாண்டு அளவிலேயே தமிழி எழுத்து(தமிழ் பிராமி) இருந்துள்ளது என்பதும் இதன் தொடக்ககாலம் அதற்குச் சில நூற்றாண்டுகள் முந்தையது என்பதும் முனைவர் கா.இராசன் அவர்களின் ஆய்வுகள் உறுதிப் படுத்துகின்றன.

இவ்விரண்டு செய்திகளின் மூலம் அசோகன் பிராமியில் இருந்து தமிழி எழுத்து உருவாகவில்லை என்பது உறுதியாகிறது. அதேசமயம் தமிழியில் இருந்து அசோகன் பிராமி உருவாகியிருக்க வாய்ப்புள்ளது. சமற்கிருதத்துக்கான கிரந்த எழுத்துக்கள், தமிழகத்தில், தமிழி எழுத்தில் இருந்துதான் உருவாகியது. இவ்விடயத்தை பெஞ்சமின் கை பாயிங்டன் என்பவர் கி.பி. 1830வாக்கிலேயே சொல்லியுள்ளார்(22). ஆதலால் அசோகன் பிராமியும்(பிராகிருத பிராமி) தமிழியில் இருந்து உருவாகியிருக்க வாய்ப்புள்ளது எனலாம். முதலில் பிராகிருதப் பெயர் சொற்களுக்கு தமிழி எழுத்து கொண்டு எழுதப்பட்டது. அதன் பின் அந்நிலை வளர்ந்து சமற்கிருதத்துக்கான கிரந்த எழுத்து தமிழி எழுத்தில் இருந்து உருவாகியது போல, பிராகிருத மொழிக்குத் தமிழியில் இருந்து அசோகன் பிராமி எழுத்து உருவாகியது எனலாம்.

மயிலாடுதுறை கைக்கோடாலி :

            மயிலாடுதுறையில் உள்ள செம்பியன் கண்டியூர் (SEMBIAN KANDIYUR) என்னும் இடத்தில், கல்லால் ஆன புதிய கற்காலத்தைச் சார்ந்த கைக்கோடாலி ஒன்று கிடைத்துள்ளது. அதில் நான்கு குறியீடுகள் உள்ளன. அந்த நான்கு குறியீடுகளும் சிந்துவெளிக் குறியீடுகளுக்கு ஒப்புமை உடையனவாக உள்ளன. தொல்பொருள் ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள், அக்குறியீடுகளை நன்கு ஆய்வு செய்து ‘முருகன்’ எனப் படித்தறிந்துள்ளார். மேலும் அவர், இக்குறியீடுகள் சிந்துவெளி குறியீட்டு எண்கள் 48, 342, 367, 301 ஆகியவற்றோடு முழுமையாக ஒப்புமை கொண்டுள்ளன எனவும், இதன் காலம் கி.மு.1500 முதல் கி.மு.2000 எனவும் நிர்ணயித்துள்ளார். இந்தக் கல்கோடாலி தமிழகப் பகுதியில் உள்ள கல்வகையினைச் சார்ந்தது எனவும், அதனால் இந்தக் கல்கோடாலி வட இந்தியாவிலிருந்து வந்திருக்க முடியாது எனவும் குறிப்பிடுகிறார். மேற்கண்ட காரணங்களால் தமிழக மக்களும் சிந்துவெளி மக்களும் ஒரே மொழியைப் பயன் படுத்தியவர்களே எனச் சொல்லும் அவர், இதனை இந்த நூற்றாண்டுக்கான மிகச் சிறந்த கண்டுபிடிப்பு என்கிறார்-(23).

            மயிலாடுதுறை கைக்கோடாலி குறித்த ஐராவதம் மகாதேவன் அவர்களின் கருத்தையும், கா.இராசன், பவுன்துரை ஆகியவர்களின் குறியீடுகள் குறித்த கருத்தையும் இணைத்துப் பார்க்கும் பொழுது கீழ்கண்ட முடிவுக்கு நாம் வந்து சேரமுடியும். அதாவது, கி.மு.1500 வாக்கில், தமிழர்கள், குறியீடுகளைக் கருத்துப் பரிமாற்றத்திற்கான ஒரு வகை வரிவடிவமாக, ஒரு வகை எழுத்தாகப் பயன்படுத்தத் தொடங்கினர் எனவும், சில நூற்றாண்டு களுக்குப் பின், கி.மு.1000 வாக்கில் அக்குறியீடுகளைப் பயன்படுத்தும் நிலை, பரவலாகத் தமிழகமெங்கும் பரவியிருந்துள்ளது எனவும் கருதலாம். தமிழர்கள் குறியீடுகளை ஒரு எழுத்து வடிவமாகக் கி.மு. 1000 வாக்கில் பரவலாகப் பயன்படுத்திக் கொண்டிருந்ததால், தமிழ் இலக்கியத்தின் தொடக்ககாலம் கி.மு. 750இல் தொடங்கிவிட்டது எனலாம். சங்ககால மக்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம் குறியீடுகள் கிடைப்பதால், ஆய்வாளர்கள் இவைகளைச் சேகரித்துப் பதிவு செய்வதும், அவைகளைப் படித்தறிந்து பொருள் காண்பதும் அவசியமாகிறது. அதன்மூலம் பண்டைய தமிழர்களின் வாழ்க்கையை மேலும் நன்கு புரிந்து கொள்ள முடியும் என்பதோடு, தமிழர்களின் வரலாற்றைப் பல நூற்றாண்டுகள் மேலும் பின்னோக்கிக் கொண்டு செல்லமுடியும். குறைந்தபட்சம் கி.மு. 1000 வரை கொண்டுசெல்ல முடியும் எனலாம்.

தமிழகமும் அகழாய்வும்:

            சங்ககால நூலான பதிற்றுப்பத்துக் குறிப்பிடும் கொடுமணல் குறித்துப் பல தரவுகள் வெளிவந்துள்ளது. கொடுமணம்(கொடுமணல்) அகழாய்வில் இருநூற்றிற்கும் மேற்பட்ட எழுத்துப்பொறிப்புப் பெற்ற பானை ஓடுகளும், வெள்ளி முத்திரை நாணயங்களும், இரும்பு, எஃகு செய்வதற்கான உலைக்கலங்களும், இரும்பு ஆயுதங்களும், வைடூரியம், சூதுபவளம், பளிங்கு, நீலக்கல், பச்சைக்கல் போன்ற அரியமணிக்கற்களில் செய்யப்பட்ட ஏராளமான மணிகளும், குறியீடுகளும், நெய்யப்பட்ட துணியும், அவை நெய்வதற்கு பயன்படுத்தப்பட்ட தக்களிகளும் என ஏராளமானத் தரவுகள் வெளிக்கொணரப் பட்டுள்ளன. கொடுமணலில் உள்ள 70 ஏக்கர் பரப்பில் ஒரு ஏக்கருக்கும் குறைவான பகுதியில் மட்டுமே அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள நூற்றுக்கணக்கான பெருங்கற்படைச் சின்னங்களில் 13 மட்டுமே தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையால் அகழ் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த அகழாய்வின்அளவு என்பது ஒரு விழுக்காட்டிற்கும் குறைவானது.

            ஒரு விழுக்காட்டு அகழாய்வில் மேலே குறிப்பிட்ட பல்வேறு வகையான தரவுகள் அதிக அளவில் கிடைக்கின்றன எனில் மீதமுள்ள 99 விழுக்காட்டுப் பகுதிகளை அகழாய்வு செய்யும்பொழுது மேலும் பன்மடங்கு செய்திகள் அல்லது தொல்பொருட்கள் வெளிவரும் என்பது உறுதி. சங்ககாலப் புலவர்களால் பெரிதும் பேசப்படாத சங்ககால ஊரான கொடுமணலில் மேற்கொள்ளப்பட்ட ஒரு விழுக்காடு அகழாய்வில் மட்டுமே இவ்வளவு தொல்பொருட்கள் கிடைக்கின்றன எனில் சங்க இலக்கியங்களில் வியந்து பேசப்படுகின்ற மதுரை, கொற்கை, பூம்புகார், முசிறி, கரூர், உறையூர் போன்ற இடங்களில் அகழாய்வு செய்யப்படும் பொழுது மிக அதிக அளவு தொல்பொருட்களும் தரவுகளும் வெளிவரும் என்பதை நினைக்கும் பொழுது அது பெருவியப்பைத் தோற்றுவிக்கிறது எனலாம்.

            தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மேற்கொண்ட கள ஆய்வில் மட்டும் 2000க்கும் மேற்பட்ட சங்ககால எச்சங்கள் கொண்ட ஊர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மீதமுள்ள மாவட்டங்களில் கள ஆய்வு செய்யப்படும்பொழுது இந்த எண்ணிக்கை அதிகளவு பெருகும் எனவும், இந்த ஊர்கள் அனைத்தையும் முழுமையாக அகழாய்வு செய்யப்படும்பொழுது மட்டுமே சங்ககாலத் தமிழர்களின் பண்பாட்டை முழுமையாக அறியவும், அவர்கள் குறித்த ஒரு தெளிவான முடிவுக்கு வரவும் முடியும் என்கிறார் முனைவர் கா.இராசன்-(24).

            மனிதனின் கடந்த காலத்தைப்பற்றி எழுதப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு அமைவது வரலாறு. ஆனால் தொல்லியல் என்பது எழுதப்பட்ட ஆவணங்களின் தரவுகளை உறுதிப்படுத்தவும் நெறிப்படுத்தவும் பயன்படும் என்பதோடு, எழுதப்பட்ட வரலாற்றுக் காலத்தையும் தாண்டி, வரலாற்றிற்கு முந்தைய காலத்தைப் பற்றியும் இருப்பதை இருப்பது போலவே அறிவிப்பதாகும். இவை பற்றி கார்டன் சைல்டு(Gordon Childe) என்கிற அறிஞர், “புவியின் வரலாற்றில் எழுதப்பட்ட ஆவணங்களால் நிரப்பப்படும் வரலாற்றைவிட தொல்லியல் சான்றுகளால் நிரப்பப்படும் வரலாறு நூறு மடங்கு அதிகமாகும்” என்கிறார். இன்னொரு அறிஞரோ, “வரலாற்றில் ஒரு சதவிகிதத்தைபற்றி மட்டுமே எழுதப்பட்ட ஆவணங்களின் மூலம் அறிய இயலும். ஆனால் மீதமுள்ள தொன்னூற்று ஒன்பது சதவிகித வரலாற்றை அறிய தொல்லியல் மட்டுமே உதவுகிறது” என்கிறார்-(25). ஆகவே நமது அகழாய்வுகளை அதிகப்படுத்தி, விரைவுபடுத்தி செயல்படுத்துவதன் மூலமும், வெளிக்கொண்டுவரப்படும் தரவுகளை முறையாக ஆவணப் படுத்துவதன் மூலமும் மட்டுமே நமது வரலாற்றை நன்கு அறிந்து கொள்ள இயலும். 99 விழுக்காட்டு வரலாற்றை அகழாய்வின் மூலம் மட்டுமே அறிய முடியும் என்பது தமிழகத்தின் வரலாற்றுக்கு மிகமிக பொருந்தும் எனலாம்.

தம்பப்பண்ணி:

            தமிழக வரலாற்றின் தொடக்க காலத்தில், தமிழகத்திலிருந்து ஆதிகால இரும்புப் பண்பாடு இலங்கையின் வடமேற்குப் பகுதியில் பரவத்தொடங்கி, அங்கு தம்பப்பண்ணி என்ற இரும்புக்காலப் பண்பாட்டுக் குடியிருப்பு உருவாகியது. அதன் இடத்தில்தான் இன்றைய பொம்பரிப்பு என்கிற அகழ்வாராய்ச்சி இடம் உள்ளது. பொம்பரிப்புப் பகுதியில் இருந்து தான் இந்த இரும்புக்காலப் பண்பாடு அநுராதபுரத்திற்கு பரவியது. ஆதலால் பொம்பரிப்புக் குடியிருப்பின் காலம் அநுராதபுரக் குடியிருப்புக்கு ஓரிரு நூற்றாண்டுகள் முந்தியது எனக் கணிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரக் குடியிருப்பின் காலம் முதலில் கி.மு.900 என கரிமப் பகுப்பாய்வுப்படி கணிக்கப்பட்டது. அதனைப் பிரித்தானியத் தொல்லியல் குழுவும் உறுதிப்படுத்தியது. அதற்குப் பிந்தைய கணிப்புகளின் படி அதன் காலம் ஏறத்தாழ கி.மு.1000 என இலங்கைத் தொல்லியல் ஆய்வாளர் சிரான் தரணியகல(DERANIYAGALA) கருதுகிறார்(26).

            ஆகவே பொம்பரிப்புக் குடியிருப்பின் காலம் கி.மு. 1200 வரை இருக்கலாம் எனலாம். தம்பப்பண்ணி கி.மு. 500 வாக்கில் ஒரு புகழ் பெற்ற நகராக இருந்தது எனவும் தமிழகத்துப் பாண்டியர்(பண்டு) வழி வந்தவர்கள் அதை ஆண்டனர் எனவும் பாலி நூல்கள் தெரிவிக்கின்றன. கி.மு. 500க்குப் பின் ஆதி இரும்புக்காலம் முடிவடைந்த கட்டத்தில் தம்பப்பண்ணியில் இருந்த அதிகார பீடம் உள்நாட்டில் உள்ள அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பின் எழுச்சி பெற்ற அநுராதபுர நகரம், கி.மு. 3ஆம் நூற்றாண்டு வாக்கில் ஒரு புகழ் பெற்ற நகராக ஆகியது. பாலி நூல்களின் மரபுக் கதைகளின்படி அநுராதபுரம் எழுச்சி பெறுவதற்குமுன் தம்பப்பண்ணி ஒரு துறைமுக நகராகவும் ஓர் ஆட்சிபீடமாகவும் இருந்துள்ளது. இந்தத் தம்பப்பண்ணியின் சமற்கிருதப் பெயர் தாம்ரபர்ணி ஆகும். ஆகவே தமிழகத்தில் உள்ள (இலங்கையின் எதிர்க்கரையில் அமைந்துள்ள) தாமிரபரணி ஆற்றின் பெயரால் தான் இந்நருக்கு இப்பெயர் வந்தது எனலாம். ஆகவே அன்று தம்பப்பண்ணி நகரம் தமிழர்களின் நகராகவும், வட இலங்கையின் ஆட்சிப் பகுதியாகவும் இருந்துள்ளது-(27).

            தமிழகத்தில் ஓடும் தாமிரபரணி ஆறுதான், தம்பப்பண்ணி என்கிற பெயர் இலங்கையின் வடமேற்கு நகரத்துக்கு வரக் காரணம் என முன்பே குறிப்பிட்டோம். பொம்பரிப்பு என்கிற இந்தத் தம்பப்பண்ணி நகருக்கு அருகிலுள்ள அகழாய்வு இடம் தாமிரபரணி ஆற்றின் எதிர்பக்கத்தில்தான் அமைந்துள்ளது. இந்தப் பொம்பரிப்புக் கால இரும்புப் பண்பாடு குறித்துத் தென் இந்தியாவிலும், இலங்கையிலும் ஆய்வுகளை மேற்கொண்ட சுதர்சன் செனவிரத்னே (SENEVIRATNE) அதன் முக்கியக் கூறுகளைப் பின்வருமாறு பட்டியலிட்டுள்ளார், “அடிப்படை உலோகத்தொழில்நுட்பம், இரும்பின் உபயோகம், மட்பாண்டச்செய்கை உபகரணங்கள், நெற்பயிர்ச்செய்கை உபகரணங்கள், நீர்ப்பாசன முறைகள், சிறுகைத்தொழில், புதிய நிலையான குடியிருப்புகள், பண்டமாற்று வர்த்தகமையங்கள், குறுநிலஅரசுகளின் தோற்றம், குதிரையின் அறிமுகம், புதிய சவஅடக்க முறை என்பனவாகும்” -(28). இந்த பொம்பரிப்புக் கால இரும்புப் பண்பாடு என்பது தமிழகத்தில் இருந்து பரவிய தமிழர்களின் பெருங்கற்காலப் பண்பாடாகும்.

            இந்தப் பொம்பரிப்புக் குடியிருப்புத் தோன்றுவதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழகத்தில் ஆதிகால இரும்புப் பண்பாட்டுக் குடியிருப்புகள் தோன்றி இருக்கவேண்டும். ஆதிச்சநல்லூர் அத்தகைய குடியிருப்புகளில் ஒன்றாகும். இந்த ஆதிச்சநல்லூர், தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இதுவரையான ஆய்வுகள் அதன் காலத்தை கி.மு. 2000 வரை என உறுதிப்படுத்தியுள்ளது-(29). இலங்கையில் நடைபெற்ற அகழாய்வு கி.மு 1200க்கு வெகுகாலம் முன்பே தமிழகத்தில் இரும்புக்காலப்பண்பாடு வேரூன்றி விட்டது என்பதை உறுதிப் படுத்துகிறது. முனைவர் கா.இராசன் அவர்களின் ஆய்வு முடிவை இந்திரபாலா, சுதர்சன செனவரத்னே ஆகியவர்கள் தரும் தகவல்கள் மேலும் வலுப்படுத்துகின்றன. மேலும் தமிழகத்தில் இருந்த மதுரை, கொற்கை, உறையூர், புகார், வஞ்சி, முசிறி போன்ற நகரங்களும், இலங்கையில் இருந்த தம்பப்பண்ணி என்ற நகரமும் கி.மு 5ஆம் நூற்றாண்டு அளவில் பண்டையத் தமிழர்களின் நன்கு வளர்ச்சி பெற்ற பெருநகரங்களாக இருந்திருக்க வேண்டும் எனலாம்.

            தமிழ் மொழியின் ஆரம்பகால எழுத்தானத் தமிழியின்(தமிழ் பிராமி) தொடக்க காலம் சுமார் கி.மு. 8ஆம் நூற்றாண்டு எனவும், தமிழகத்தில் சுமார் கி.மு. 1500 வாக்கிலேயே இரும்புப் பண்பாடு தொடங்கிவிட்டது எனவும், தமிழி எழுத்துக்கு முன்பு தமிழர்கள் குறியீடுகளை ஒருவகை எழுத்து வடிவமாக கி.மு. 1500 வாக்கிலேயே பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர் எனவும், கி.மு. 1000 வாக்கில் தமிழர்கள் குறியீடுகளை கருத்துப் பரிமாற்றத்திற்கான எழுத்து வடிவமாகப் பரவலாகப் பயன் படுத்தினர் எனவும், தமிழ் இலக்கியத்தின் தொடக்க காலம் கி.மு. 750 எனவும், தமிழகத்தில் அகழாய்வுகள் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாகவே நடந்துள்ளது எனவும், தமிழகத்தில் இருந்துதான் இலங்கைக்கு இரும்புப் பண்பாடு பரவியது எனவும், அது தமிழர்களின் பண்பாடாகவே இருந்தது எனவும் இதுவரை பார்த்தோம். தமிழ் சமுதாயத்தின் பழமை கி.மு. 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை இவைகள் உறுதிப்படுத்துகின்றன.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24596
Date:
Permalink  
 

குமரி நிலப்பரப்பு - மதிரை நகர்:   

            இறையனார் அகப்பொருள் உரையிலும், இலங்கையின் பாலி வரலாற்று நூலாகிய மகாவம்சத்திலும் மதுரை நகரம் குறித்த சில தகவல்கள் உள்ளன. அதன்படி பாண்டியருடைய ஆட்சிபீடமான மதிரை நகரம் கடலருகே இருந்ததாகவும், கடல்கோளால் அந்நகரம் அழிந்து போனதால், அதன்பின் கபாடபுரம்(பெருவாயில் உடைய நகரம்) என்ற சமற்கிருத பெயர் பெற்ற கடலருகே இருந்த இன்னொரு நகரத்திற்கு தங்கள் ஆட்சிபீடத்தை பாண்டியர்கள் மாற்றிக்கொண்டனர் எனவும் தகவல்கள் உள்ளன. சமற்கிருத நூல்களாகிய மகாபாரதமும், அர்த்த சாத்திரமும் இக்கபாடபுரம் குறித்த குறிப்புகளைக் கொண்டுள்ளன. இந்த இரண்டாவது நகரமும் கடல் கோளால் அழிந்துபோன பின், பாண்டியர்கள் உள்நாட்டில் வைகை நதியில் உள்ள மதிரை என்ற நகரத்தைத் தங்கள் தலைநகராக ஆக்கிக்கொண்டனர். மறைந்துபோன முதலாவது மதிரை நகரை அவர்கள் “தென்மதிரை” என அழைத்தனர். பாலி மரபுக் கதைகளில் இந்நகர் ‘தக்கிண மதுரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது-(30)

குமரி நிலம்:

            வால்மீகி இராமாயணத்தில் பாண்டியர்களின் தலைநகர் கபாடபுரம் எனவும், வியாசரின் மகாபாரதத்தில் கபாடா எனவும் சொல்லப்பட்டுள்ளது. கி.பி. 6ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட ஆகமங்கள் குமரி நிலப்பரப்பு குறித்து விரிவாகப் பேசுகின்றன. கிரான ஆகமம் ஞானபாதத்தில் எட்டாம் இயலில், 69-74 வரையிலுள்ள பாடல் அடிகளும், சுப்ரபேத ஆகமம் ஞானபாதத்தில் மூன்றாம் இயலில் 125-135 வரையிலுள்ள பாடல் அடிகளும், மிருகேந்திர ஆகமம் ஞானபாதத்தில் பதிமூன்றாம் இயலில் 93-97 வரையிலுள்ள பாடல் அடிகளும் குமரி நிலப்பரப்பு குறித்துப் பேசுகின்றன. ஆனால் சந்திர ஞான ஆகமம் தனது 14ஆவது இயலில், 165-272 வரையிலுள்ள பாடல் அடிகளில் புவனத்துவ பாலா என்கிற தலைப்பில் குமரி நிலப்பரப்பு குறித்து விரிவாகப் பேசுகிறது. 28 முதன்மை ஆகமங்களில் சந்திர ஞான ஆகமம் 19ஆவது ஆகமம் ஆகும். அதன் 14ஆவது இயல் மொத்தம் 298 பாடல் அடிகளைக்கொண்டது ஆகும். அதில் 108 பாடல் அடிகள் குமரி நிலப்பரப்பு குறித்துப் பேசுகின்றன.

            குமரி நிலம், குப்சா, கேதா, கார்வதா, பட்டணா என்கிற நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. குப்சா பகுதியின் தெற்கே குமரி ஆறும், வடக்கே பஃறுளி ஆறும் ஓடிக்கொண்டிருந்தன. தென்கிழக்கே குமரிக்கடலின் அலைகள் குமரி மலை அடிவாரத்தைத் தழுவிச் செல்லும் இடத்தில் தலைநகர் கபாடபுரம் அமைந்திருந்தது. அங்கே ஒரு துறைமுகமும் மறைவான போர்க்கருவிகள் வைக்கப்பட்டிருந்த நீர்க்கோட்டையும் இருந்தன. விண்ணைத்தொடும் குமரிமலையின் உச்சியில் சிகரக்கோட்டையும், பள்ளத்தாக்கில் துரோனிக்கோட்டையும், தெற்குச்சரிவில் கடகக் கோட்டையும் இருந்தன. கேதாப்பிரிவில், சப்த நாளிகா, சப்த தளா, சப்த கைரிகா, சப்த மதுரா, சப்த பூர்வசாலா, சப்த அபாரசாலா, சப்த பிரசித்திரா ஆகிய ஏழு நகரங்கள் இருந்தன. குப்சா பிரிவின் மேற்கில் கார்வதா பிரிவும், குமரி நிலப்பரப்பின் வடக்கில் பட்டணா பிரிவும் இருந்தன. கேதாப்பிரிவின் நடுவில் மேற்கு நோக்கிக் கந்தன் கோயிலும், கார்வதாப் பிரிவின் நடுவில் கிழக்கு நோக்கித் திருமால் கோயிலும் கட்டப்பட்டிருந்தது. இவை அனைத்தும் சந்திர ஞான ஆகமத்தில் சொல்லப்பட்ட தகவல்களாகும். இக்குமரி நிலத்தில் இருந்த நகர அமைப்புகள் குறித்தும் இந்த ஆகமம் விரிவாகப் பேசுகிறது-(31).

            சங்க இலக்கியத்தில் முதுகுடுமிப் பெருவழுதி குறித்துப்பாடிய நெட்டிமையார், நிலந்தரு திருவிற் பாண்டியன் என்கிற நெடியோன் குறித்தும் அவனது நாட்டில் இருந்த பஃறுளி ஆறு குறித்தும் பாடியுள்ளார்(புறம்-9). இந்தப் பாண்டியன் நெடியோன் குறித்து 2ஆம் பதிற்றுப்பத்தில் குமட்டூர் கண்ணனாரும், மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனாரும் பாடியுள்ளனர். சங்ககால ஆதார இலக்கிய நூல்களில் இவைகளைத்தவிர வேறு தரவுகள் இல்லை. பஃறுளி ஆறும், குமரி மலைத்தொடரும் கடலில் மூழ்கியது குறித்துச் சிலப்பதிகாரம் குறிப்பிட்டுள்ளது.

            சா. குருமூர்த்தி அவர்கள் நிலவியல் அறிவியலாளர்கள் கருத்துப்படி கி.மு. 9500, கி.மு. 3000, கி.மு. 1500 ஆகிய மூன்று காலகட்டங்களில் கடற்கோள் பேரழிவுகள் நடந்துள்ளன என்கிறார். இடோப்பா (ETOPO) செயற்கைக்கோள், குமரி நிலப்பரப்பானது தமிழகத்தின் தென் பகுதியில் கி.மு. 15000 வாக்கில் சுமார் 25000 ச.கி.மீ பரப்பும், கி.மு. 8000 வாக்கில் சுமார் 5000 ச.கி.மீ பரப்பும் கி.மு. 2000 வாக்கில் சுமார் 1000 ச.கி.மீ பரப்பும் கொண்டதாக இருந்துள்ளது எனக்காட்டுகிறது. ஆதலால் சா.குருமூர்த்தி அவர்களின் நிலவியல் அறிவியலாளர்கள் கருத்தையும், நவீன இடோப்பா(ETOPO) செயற்கைக்கோள் கணக்கீட்டையும், இறையனார் அகப்பொருள் உரையையும் ஒருங்கிணைத்து, கி.மு. 3000 வாக்கில் தென்மதுரையும், அதன்பின் கி.மு. 1500 வாக்கில் கபாடபுரமும் கடற்கோள்களால் அழிந்து போயின எனக் கருதலாம் என்கிறார் முனைவர் இராமசாமி அவர்கள்(32).

            இன்றைய தமிழகத்தின் பரப்பு 1,30,000 ச.கி.மீ, பண்டைய தமிழகத்தின் பரப்போ இதைவிட மூன்று மடங்கு அதிகம்(4,00,000 ச.கி.மீ). ஆனால் தென்மதுரை கடற்கோளால் அழியும்முன் கி.மு. 3000 வரை, 5000 ச.கி.மீ. பரப்பு குமரி நிலப்பரப்பாக இருந்துள்ளது. கி.மு. 3000க்குப்பின் அது 1000 ச.கி.மீ. பரப்பாகக் குறைந்து போயுள்ளது. கிரீசு வாழ்ந்த வரலாறு என்கிற தனது நூலில், பண்டைய ஏதென்சு நகர அரசின் பரப்பளவு என்பது சுமார் 1000 ச,கி.மீ. தான் என்கிறார் வெ. சாமிநாத சர்மா அவர்கள். ஆதலால் கடல்கோள்களால் அழிந்துபோன பகுதி மிகச்சிறிய பரப்புதான் எனினும் அங்கு தென்மதுரை, கபாடபுரம் போன்ற தலைநகரங்களும், பிற முக்கிய நகரங்களும் இருந்து நாகரிக வளர்ச்சியும் அங்கு அதிகமாக இருந்ததால் அவைகளின் இழப்பு பெரிதுபடுத்தப் பட்டிருக்கவேண்டும். கடற்கோள்களால் பாண்டிய வேந்தன் தென்மதுரையில் இருந்து கபாடபுரத்திற்கும், கபாடபுரத்திலிருந்து மதுரைக்கும் தனது வேந்தர் ஆட்சியை மாற்றிகொண்டு வந்திருக்கவேண்டும். ஆனால் ஆரம்ப காலத்தில் இருந்தே மதுரை, கொற்கை முதலியன பிற பாண்டியக் கிளை அரசுகளால் ஆளப்பட்டு வந்திருக்க வேண்டும். இவை குறித்து மேலும் ஆய்வுகள் தேவை.

            தமிழ்ச் சமூகத்தின், தமிழ் மொழியின் பழமை குறித்து இறுதியாகச் சங்கப்பாடல்களில் இருந்து இரு சான்றினை வழங்க விரும்புகிறேன். கி.மு. 3ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த ஒல்லையூர் தந்தப் பூதப்பாண்டியன் ஒரு பாண்டியக் கிளை அரசன் ஆவான். அவன் தனது புறம் 71ஆம் பாடலில் தனது பாண்டியர்குடியை நீண்டகாலமாக இருந்துவரும் குடி என்று பாடுகிறான். அது போன்றே கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்ககாலச் சோழர்பகுதிப் புலவனான காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்பவர் தனது புறம் 58ஆம் பாடலில் சோழ, பாண்டிய வேந்தர்கள் ஒன்றாக இருந்த அவையில் பாண்டியர் குடியை “நல்லிசை முதுகுடி” எனப் பாடியுள்ளார். ஆகவே 2000 வருடங்களுக்கு முந்தைய சங்க காலத்திலேயே பாண்டியர் குடி ஒரு முதுகுடியாக, ஒரு மிகப்பழமையான புகழ்பெற்ற குடியாகத் தமிழ் மக்களால் கருதப்பட்டு வந்துள்ளது. பாண்டியர்குடியின் பழமை என்பது தமிழ்ச் சமூகத்தின், தமிழ் மொழியின் பழமையைச் சுட்டிக்காட்டுகிறது.

பார்வை:

17.EARLY WRITING SYSTEM, A Journey from graffiti to Brahmi, K.RAJAN, PANDYA NADU CENTRE FOR HISTORICAL RESEARCH, MADURAI-10, 2015. PAGE: 405.

18. “ “ PAGE: 87.

19. “ “ PAGE: 421

20. “ “ PAGE: 422

21. “ “ PAGE: FOREWORD, VI.

22. Benjamin Guy Baprngton(1830),An account of the sculptures and inscriptions at Mahamalaipur. TRANSACTIONS OF THE ROYAL ASIATIC SOCIETY. VOL 2.(paper read on 12.07.1828) & உலக அறிஞர்கள் பார்வையில் தமிழ்-பி.இராமநாதன். பக்: 8, 9.

23. “Significance of Mayilaaduthurai Find” and “Discovery of a century” in Tamil Nadu, THE HINDU Newspaper Dated 1.5.2006 and 21.5.2008 24.முனைவர் கா. இராசன் அவர்கள், ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2010, பக்: 16, 17.

25.தொல்லியல், முனைவர் நா. மாரிசாமி, ஜூன்-2010, பக்: 43.

26.இலங்கையில் தமிழர்-கா. இந்திரபாலா, குமரன் புத்தக இல்லம், அக்டோபர் 2006, பக்:113

27. “ “ பக்:121, 126, 127.

28.இலங்கையில் தமிழர்-ஒரு முழுமையான வரலாறு(கி.மு. 300-கி.பி. 2000), கலாநிதி முருகர் குணசிங்கம், எம்.வி வெளியீடு, 2008, பக்: 34.

29.அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் அ. இராமசாமி, தொன்மைத்தமிழர் நாகரிக வரலாறு, டிசம்பர் 2013, பக்: 61, 62.

30.இலங்கையில் தமிழர்-கா. இந்திரபாலா, குமரன் புத்தக இல்லம், அக்டோபர் 2006, பக்:120.

31, 32.அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் அ. இராமசாமி, தொன்மைத்தமிழர் நாகரிக வரலாறு, டிசம்பர் 2013, பக்:11-22.

- கணியன் பாலன், ஈரோடு



__________________


Guru

Status: Offline
Posts: 24596
Date:
Permalink  
 

http://www.virtualvinodh.com/wp/tamil-script-evolution/

தமிழ் எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சி

zha_tamil_correctஇந்தியாவின் பண்டைய இலக்கிய மொழிகளுள் ஒன்று தமிழ் மொழி. திராவிட மொழிகளிலேயே மிக முந்தைய இலக்கிய படைப்புகள் நிகழந்தது தமிழில் தான். பண்டைக்காலத்தில் வடபுலத்து சமஸ்கிருத பிராகிருத மொழிகளுக்கு இணையாக இலக்கியம் சமைக்கப்பெற்றதும் தமிழ் மொழியில் தான். தமிழ் இவ்வாறு தன்னை நிலைநிறுத்திக்கொள்வதில் முக்கிய பங்கு அதன் எழுத்தும் வகித்தது.

ஒரு மொழியை நிலைநிறுத்த எழுத்து என்பது என்றுமே மிகவும் அத்தியாவசியமானது. எழுத்தில்லாத மொழி நிலைப்பது கடினம். மொழியினை போற்றி பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு இட்டுச்செல்லக்கூடியது எழுத்து மட்டுமே. எழுத்தற்ற மொழி மிக விரைவிலேயே சிதைவுக்கு உள்ளாகி உருத்தெரியாமல் போய் விடும். இலக்கணம் சமைக்கவும் இலக்கியம் படைக்கவும் எழுத்து முக்கியம். இன்று எழுத்துமுறை இல்லாது இருக்கும் மொழிகள் அனைத்தும் இலக்கியமற்ற திருத்தம்பெறாத மொழி

எழுத்துமுறைகள் பலவாறாக வகைப்படுத்தப்படுகிறது. உயிர் எழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள், உயிர்மெய்யெழுத்துக்கள் என எழுத்துக்களை வகுக்கும் எழுத்துமுறை “அபுகிடா” என்று அழைக்கப்படுகிறது. இந்திய மற்றும் சிங்கள, தாய், கம்போடிய, லாவோ முதலிய தெற்காசிய-தென்கிழக்காசிய எழுத்துமுறைகள் அனைத்தும் இந்த வகையின் கீழ் வரும். தமிழ் எழுத்துமுறையும் “அபுகிடா” வகையை சார்ந்ததே.

 

சிந்து சமவெளி எழுத்துக்கள்

இந்தியாவில் மிகவும் பழமையாக கிட்டக்கூடிய எழுத்துக்கள் சிந்துசமவெளி எழுத்துக்கள். ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. சிந்து சமவெளி எழுத்துகளின் மொழி இந்தோ-ஆரியம் என்றும், பழந்தமிழ் என்றும், முண்டா மொழிக்குடும்பத்தை சார்ந்தது என்றும் இஷ்டத்திற்கும் கருத்துக்கள் விரவி கிடக்கின்றன. பார்க்கப்போனால், சிந்து சமவெளி எழுத்துக்கள் உண்மையான எழுத்துமுறையா அல்லது வெறும் குறியீடுகளா என்பது கூட இன்னும் முழுமையான ரீதியில் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு நிறுவப்படவில்லை.

பிராமி

சிந்துசமவெளி எழுத்துக்களுக்கு பிறகு, அசோகர் காலத்தில் 300 BCE அளவில் இந்தியா முழுதும் தொல்லியல் நிபுணர்களால் பிராமி  என்றழைக்கப்பெறும் எழுத்துக்களில் பல்வேறு ஸ்தூபிகள், கல்வெட்டுகள் உருவாகின்றன. இந்தியா முழுதும் பிராகிருத மொழியினை பிராமி எழுத்துக்களிலியே அசோகர் கல்வெட்டுகளில் பொறிக்கிறார். அந்த பிராமியே பல்வேறு பிரதேச வேறுபடுகளால், திரிந்து, பல்வேறு உருபெற்று நவீன இந்திய எழுத்துமுறைகள் உருவாகின. அசோகரின் பிராமி எழுத்துமுறை அரமேய எழுத்துமுறையின் தாக்கத்தில் உருவானது என்று பொதுவாக கருதப்படுகிறது.

Brahmi_asoka_article

அசோகரின் அலஹாபாத் ஸ்தூபி கல்வெட்டு

 

brahmi_grantha_transcription

தே³வாநம்ʼ பியே பியத³ஸீ லாஜா ஹேவம்ʼ ஆஹா

அம்ʼநத அகா³ய த⁴ம்ʼம காமதாய அகா³ய பல […]

சங்க காலத்திலேயே ஜைன மதமும் பௌத்த மதமும் தமிழகத்தில் ஸ்தாபிக்கப்பட்டு, நிலைபெற்றுவிட்டன. இவ்விரு மதங்களுள் தமிழகத்தில் முதலில் ஸ்தாபனம் செய்யப்பட்ட்து ஜைன மதமாகத்தான் இருக்க வேண்டும். (சமண [ < சிரமண ] என்பது பௌத்த-ஜைன மதங்களை ஒன்றுசேர குறிக்கூடிய சொல், தமிழகத்தில் ஜைன சமயத்தை மட்டும் குறிப்பதில் இருந்தே, சிரமண சமயங்களில், முதலில் நுழைந்த்து ஜைன சமயம் என்று யூகிக்கலாம்).

அவ்வாறு ஜைன சமயத்தை வடநாட்டில் இருந்து தமிழகத்தில் ஸ்தாபனம் செய்யவந்த ஜைன முனிவர்களும் ஆச்சாரியர்களும் வடநாட்டில் வழக்கில் இருந்து பிராமி எழுத்துமுறையை தமிழகத்துக்கு கொண்டு வந்ததாக கருதப்படுகின்றது. ஜைனர்களும் பௌத்தர்களும் பொதுவாகவே மக்கள் மொழியில் போதிப்பவர்கள். எனவே, தமிழில் தங்களுடைய போதனைகளை வெளிப்படுத்த வேண்டி, பிராமியை தமிழுக்கு கொண்டுவந்திருக்க வேண்டும். ஆரம்ப கால தமிழ் பிராமி கல்வெட்டுகள் பெரும்பாலும் ஜைன முனிவர்களின் குகைகளில் காணப்படுவது இக்கருத்துக்கும் வலுசேர்ப்பதாக உள்ளது.

தமிழ் பிராமி

அவ்வாறு அவர்கள் கொண்டு வந்த பிராமி எழுத்துமுறை தமிழுக்குரியதாக இல்லை. பிராகிருதத்தின் ஒலியியலும் தமிழின் ஒலியியலும் வேறானவை. தமிழில் கூட்டெழுத்துக்கள் அதிகம் கிடையாது, சொல்லிறுதி தனிமெய்களும் அதிகம். பிராகிருத்ததில் மகரத்தை தவிர்த்து வேறு சொல்லிறுதி மெய்கள் வருவதில்லை. அதனால் அசோக பிராமியில் தனி மெய்யினை (க், ங் முதலியவை) குறிக்க இயலாது, மெய்யெழுத்துக்கூட்டுகளை வேண்டுமென்றால் கூட்டெழுத்துக்களாக எழுத இயலும் (உதாரணமாக, க்ய, க்த ஆகியவற்றை எழுதலாம், ஆனால் க் என்ற தனி மெய்யை எழுத முடியாது) .  எனவே, பிராமியை தமிழுக்கு ஏற்றார்போல் செய்ய பல்வேறு முயற்சிகள் நிகழ்ந்தன.

பிராகிருதத்தில் இல்லாத தமிழுக்குரிய ற,ழ,ன,ள முதலிய எழுத்துக்களுக்கு வடிவங்கள் உருவாக்கப்பட்டன, எ, ஒ என்ற குறில் எழுத்துக்களை ஏகார, ஓகார எழுத்துக்களின் மீது புள்ளியினை வைத்து உருவாக்கினர். [பிராகிருதத்தில் எ, ஒ கிடையாது] (தமிழில் எ, ஒ’விற்கு புள்ளி வழக்கம் வீரமாமுனிவர் காலம் வரை நீடித்தது) தமிழில் இல்லாத வர்க்க எழுத்துக்கள் பொதுவாக கைவிடப்பட்டன. அசோக பிராமியின் கூட்டெழுத்து முறையும் கைவிடப்பட்டது.

தமிழ் பிராமி மூன்று கட்டங்களை உடையாதாக அறியப்படுகிறது, முற்கால தமிழ் பிராமியில், எழுத்தில் உள்ளார்ந்த அகரம் கிடையாது. ஆகார’க்குறி அகரம், ஆகாரம் இரண்டையும் குறித்த்து. இடைக்கால தமிழ் பிராமியில், ஆகாரக்குறி நிலை பெற்றது. அனால், ஒரு எழுத்து மெய்யா, அல்லது அகர உயிர்மெய்யா என்ற தெளிவு இருக்காது. பிற்கால தமிழ் பிராமியில் மெய்யெழுத்துக்களையும் (மற்றும் எகர ஒகரங்களையும்) குறிக்க புள்ளி உருவாக்கப்பட்ட்து

அதாவது, ”நிகழ்காலம்” என்ற சொல் பின்வாறாக எழுதப்பட்டிருக்கும்:

முற்கால முறை : நிகாழகாலாம

இடைக்கால முறை : நிகழகாலம

பிற்கால முறை : நிகழ்காலம்

300 – 400 CE வரை தமிழ் பிராமியில் எழுதப்பட்டு வந்தது,

தொல்காப்பியம் புள்ளியை எகர ஒகரங்களுக்கும் மெய்யெழுத்துக்களுக்கும் குறிப்பிடுவதில் இருந்து, தொல்காப்பிய காலத்தில் புள்ளி வழக்கில் வந்திருக்க வேண்டும்.

pugalur_tamil_brahmi_inscription

2ஆம் நூற்றாண்டு CE – புகழூர் தமிழ் பிராமி கல்வெட்டு

 

உள்ள உரை:

கொஆதன செலலிருமபொறை மகன  

பெருஙகடுஙகொன மகன ளங 

கடுஙகொ ளஙகொ ஆக அறுததகல  

புள்ளியோ, எகர ஏகார, ஒகர ஓகார வேறுபாடோ கல்வெட்டில் இல்லாததை கவனிக்கவும். இகரமும் விடுபட்டுள்ளது

திருந்திய உரை:

கோஆதன் செல்லிரும்பொறை மகன் 

பெருங்கடுங்கோன் மகன் [இ]ளங்

கடுங்கோ [இ]ளங்கோ ஆக அறுத்தகல்

முசிறி – தமிழ் பிராமி  எழுத்துக்கள் – 2ஆம் நூற்றாண்டு பொது.சகாப்தம் 

 brami-amana 

”அமண” (< சமண) என்று பானையில் பொறிக்கப்பட்டுள்ள தமிழ்-பிராமி எழுத்துக்கள். ( அதற்கு அடுத்து இருக்கும் இரண்டு வடிவங்கள்- சித்திரக்குறியீடுகள்). பழந்தமிழ் துறைமுகமான முசிறியில் [இன்றைய கேரளாவின் எர்ணாகுளத்தில் “பட்டணம்”] இது கிடைத்துள்ளது. 2ஆம் நூற்றாண்டளவிலேயே ஜைன மதம் சேர நாட்டில் செல்வாக்குடன் திகழ்ந்தது என்பதை இதன் மூலம் அறியலாம்

 

 


__________________


Guru

Status: Offline
Posts: 24596
Date:
Permalink  
 

வட்டெழுத்து

பிறகு ஓலைச்சுவடியில் எழுதுவதற்கு வசதியாக தமிழ் பிராமி வட்ட வடிவமாக உருமாற துவங்கியது. இந்த காரணத்தினால் இக்காலக்கட்டத்து தமிழ் எழுத்து வட்டெழுத்து என அழைக்கப்படுகிறது. வட்டெழுத்து உருவான அதே கால கட்டத்தில், வடமொழி எழுதுவதற்காக பிராமியில் இருந்து பல்லவ கிரந்தம் என்ற எழுத்து பல்லவர் காலத்தில் தோன்றியது. வட்டெழுத்தும் பல்லவ கிரந்தமும் ஒரே காலக்கட்டத்தில் தோன்றியவை.

ஐந்தாம் நூறாண்டில் இருந்து 11ஆம் நூற்றாண்டு வரை தமிழை எழுத வட்டெழுத்து பயன்பட்டது. 7ஆம் நூற்றாண்டு வரை வட்டெழுத்து மட்டுமே, தமிழை எழுத பயன்பட்டது. அதன் பின்னர் அதன் பயன்பாடு படிப்படியாக குறைந்து. பிறகு நவீன தமிழ் எழுத்துக்களின், மூலமான பல்லவ-தமிழ் எழுத்துக்களால் முழுமையாக தமிழ் எழுதப்பட துவங்கியது. 11ஆம் நூற்றாண்டு வரை மட்டுமே தமிழ் எழுத பயன்பட்டாலும், 19ஆம் நூற்றாண்டு வரை கேரள தேசத்தில் மலையாள மொழியினை எழுத பயன்பாட்டில் இருந்தது. வட்டெழுத்தின் இன்னொரு வடிவமான கோலெழுத்து முறையும் மலையாளத்தை எழுத நீண்ட காலம் வழக்கில் இருந்தது.

வட்டெழுத்தில் புள்ளியின் பயன்பாடு நிச்சயமாக காணப்படும். அதனால், எகர ஒகரங்களும் தெளிவாக குறிக்கப்பெறும். ஒரே விஷயம் ப’கர வ’கர வேறுபாடுகள் அவ்வளவு தெளிவாக இருக்காது, இரண்டும் மிகவும் ஒத்த வடிவங்களை பெற்றிருக்கும்.

vatteluttu_inscription_corrected

மஹேந்திர பல்லவர் காலத்து நடுகல்லில் வட்டெழுத்து 

கோவிசைய மயேந்திர 

பருமற்கு முப்பத்திரண்டா 

வது பொன்மோதனார் சே 

வகன் வின்றண்[வ]டுகன்

புலி குத்திப் பட்டான் 

கல்

பல்லவ தமிழ்

பல்லவ கிரந்தத்தை பற்றி முன்னரே குறிப்பிட்டிருந்தோம் அல்லவா ? பல்லவ கிரந்தத்தை அடிப்படையாக கொண்ட எழுந்த பல்லவ-தமிழ் எழுத்துக்களும் அதே 7ஆம் நூற்றாண்டளவில் தமிழை எழுத பிரயோகிக்கப்பட ஆரம்பித்த்து. பல்லவ கிரந்தத்தில் இல்லாத ற,ழ,ன போன்றவை வட்டெழுத்தில் இருந்து கடன்பெற்று எழுதப்பட்டன. மகரமும் லகரமும் கூட வட்டெழுத்தை அடிப்படையாக கொண்ட வடிவத்தை பெற்றிருந்தன.

இந்த காலக்கட்டங்களில், அதாவது 7ஆம் நூற்றாண்டில் இருந்து, தமிழ் இரண்டு எழுத்துமுறைகளில் எழுதப்பெற்றது. பல்லவ-சோழ ராஜ்யமாக இருந்த வட தமிழகத்தில் பல்லவ எழுத்துக்களிலும் பாண்டிய ராஜ்யமாக இருந்த தென் தமிழகத்தில் வட்டெழுத்திலும் எழுதப்பட்டன.

11 ஆம் நூற்றாண்டளவில் வட்டெழுத்துமுறை முழுமையாக கைவிடப்பட்டு, தமிழ் முற்றிலும் பல்லவ எழுத்துக்களில் எழுதப்பட ஆரம்பித்த்து.

நம்முடைய தற்கால தமிழ் எழுத்துக்கள் இந்த பல்லவ எழுத்துமுறையில் இருந்து தோன்றியதே.

பல்லவ தமிழ் எழுத்தில் பல்வேறு குறைபாடுகள் இருந்தன. புள்ளி குறிக்கப்பெறவே இல்லை. நன்னூல் போன்ற பிற்கால இலக்கண நூல்களிலும் கூட புள்ளியின் பயன்பாட்டை ஏட்டளவில் குறித்தாலும் ஓலைச்சுவடிகளிலோ கல்வெட்டுகளிலோ புள்ளியை காண இயலாது. இதற்கு புள்ளியிட்டால் ஓலைச்சுவடி கிழிந்துவிடும் என்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. அதனால், எகர ஏகார ஒகர ஓகார வேறுபாடும் இருக்காது. ர’கரமும் காலும் ஒரே வடிவத்தை கொண்டிருக்கும்.

”கொள” என்ற சொல் கொள், கோள், கெரள், கெர்ள், கேர்ள், கேரள், கேரள என்று என்னவாகவும் இருக்கலாம். இடத்திற்கு ஏற்றார்போல் பொருள் கொள்ளுதல் வேண்டும்.

pallava_tamil_inscription

1005 CE சேர்ந்த ராஜ ராஜனின் செப்பேடு பல்லவ தமிழில்

வீரமாமுனிவருக்கு முற்பட்ட தமிழ்

சுமார் 15ஆம் நூற்றாண்டளவிலேயே தற்கால தமிழுக்கு மிகவும் நெருங்கிய வடிவினை தமிழ் எழுத்துக்கள் பெற ஆரம்பித்தன.  அதே நேரத்தில், பல்லவ தமிழின் குறைபாடுகள் அவ்வாறே தொடர்ந்த வண்னம் இருந்தன.

tamil_15th_century

பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் அச்சிடப்பட்ட ஒரு தமிழ் கிறிஸ்தவ நூல்.

ரகத்திற்கும் காலிற்கும் வித்தியாசம் இல்லாத்த்தை கவனிக்கவும். அதே போல புள்ளி இருக்காது. எகர ஏகார வேறுபாடும், ஒகர ஓகார வேறுபாடும் இருக்காது. செசுவகையிலுளபடடபாதிரிமாா (< சேசுவகையிலுளபட்டபாதிரிமார்), முகவுரை போன்ற சொற்களை காண்க.

வீரமாமுனிவரின் தமிழ்

வீரமாமுனிவர் என்று தன்னை அழைத்துக்கொண்ட கிறிஸ்தவ மிஷினரி கொன்ஸ்டன்ஸோ பெஸ்கி பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழகம் வந்தார். கிறிஸ்தவ மதத்தை தமிழகத்தில் பரப்புவதற்காக, தமிழ் மொழியை அவர் கற்றுக்கொள்ள நேர்ந்த்து. தமிழ் எழுத்துமுறையினில் பல குறைகள் அவரை உறுத்தியது.

வெளிநாட்டு கிறிஸ்தவ மிஷினரிகள் தமிழை கற்றுக்கொண்டு கிறிஸ்தவ மதத்தை பிரச்சாரம் செய்ய இவை தடையாக இருப்பதாக கருதினார், எனவே பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ் எழுத்துமுறையில் புகுத்தினார்.

ஏற்கனவே கூறியது போல், தமிழில் புள்ளி ஏட்டளவில் இலக்கண நூல்களில் மட்டுமே இருந்தது. நடைமுறையில், அதன் பயன்பாடு மிகவும் அருகிக்காணப்பட்டது. அச்சின் மூலம் புள்ளியின் பயன்பாட்டை மீண்டும் கொண்டு வந்தார்.

அதே போல, எ, ஒ முதலிய குறில்களும் (இலக்கணரீதியாக) புள்ளி பெற வேண்டி இருந்தது. புள்ளி பெறாதது நெடில்களாக கருதப்பட்டன.

புள்ளியினை மீண்டும் பிரபலப்படுத்தினாலும், அதே எகர ஒகரங்களுக்கான புள்ளியை அவர் பிரபலப்படுத்தவில்லை. உயிர் எழுத்துக்கள் புள்ளி பெறுவதை அவர் விரும்பாத காரணத்தினால் எ, ஒ ஆகியவற்றின் அமைப்பில் சில மாற்றங்களை செய்து ஏ , ஓ என புது நெடில் உருவங்களை படைத்தார். அதே போல, ஒற்றைக்கொம்பை மாற்றி நெடில்களுக்கு இரட்டை கொம்பை (ே) உருவாக்கினார். ஈகார உயிர்மெய்கள் ஒரு சுழி பெறுவது போல, கொம்பும் இன்னொரு சுழி பெருமாறு வடிவம் உருவாக்கப்பட்டது. புள்ளி பெறாத பழைய நெடில்கள், வீரமாமுனிவரின் தமிழில் குறில்களை குறித்தன.

அவர் எண்ணிய இரட்டைக்கொம்பு கீழிருந்து மேலாக எழுதப்பட வேண்டும் என்பது [ஈகாரக்குறி போல], ஆனால், இப்போதைய நடைமுறையில் அது மேலிருந்து கீழாகத்தான் எழுதப்படுகிறது. இவ்வாறு தான் காலப்போக்கில் எழுத்துக்கள் மாறுபாடுகளை அடைகின்றன !

அதே போல, கால்’ போல இருந்த ரகரத்துக்கு கீழே இன்னொரு சாய்வுக்கோடு இட்டது, யாரோ ஒரு பெயர் தெரியாத அச்சுத்தொழிலாளி மாற்றியதாக அறியப்படுகிறது.

பெரியார் தமிழ்

பெரியாருக்கு முற்பட்ட தமிழில் ஐகாரத்திற்கு இருவேறு குறிகள் இருந்தன. ல,ள,ன,ண முதலியவை ஒரு குறியையும், பிற எழுத்துக்கள் வேறு குறியையும் பெற்றன. அதே போல், ற,ன,ண ஆகியவையின் ஆகார உயிர்மெய்கள் சிறப்பு வடிவம் பெற்று திகழ்ந்தன.

இவைகளை ஒழுங்கற்றவைகளை பெரியார் கருதியதால், அவை அனைத்தும் எம்.ஜி.ஆர்’ஆல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அனைத்தும் மெய்களும் ஒரே சீராக ஐகாரக்குறியையும், காலையும் பெற்றன.

tamil_periyar_reform

தமிழ்-பிராமியில் இருந்து துவங்கி வட்டெழுத்து, பல்லவர் எழுத்து என பல்வேறு வடிவங்களை பெற்று,  வீராமாமுனிவரின் சீர்த்திருத்தத்தில் துவங்கி, பெரியாரால் சீர்திருத்தம் செய்யப்பெற்ற எழுத்துக்களிலேயே இன்று தமிழ் எழுதப்பட்டு வருகிறது.

இவ்வாறாக, பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து பெற்று வந்தாலும், கடந்த 2000 வருடங்களாக, தமிழ் பல்வேறு எழுத்துமுறைகளில் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம்.

பிற்சேர்க்கை

தமிழ்-பிராமி, வட்டெழுத்தாகவும் பல்லவ-தமிழ் எழுத்தாகவும் சமகாலத்தில் உருமாற்றம் பெற்ற விதம். நடுவில் தமிழி என்ற குறிப்பிடப்பட்டுள்ளது “தமிழ்-பிராமி”.
 
tamil_brahmi_vatteluttu
 
தமிழ் இணைய பல்கலைக்கழகம்: http://www.tamilvu.org/courses/degree/a051/a0514/html/a051414.htm
 

மேற்கோள்கள்

  1. Early Tamil EpigraphyAiravatam Mahadevan
  2. Elements of South Indian PaleographyA.C. Burnell
  3. Indian EpigraphyRichard Salamon
  4. Slides of Dr. S Swaminathan, Tamil Heritage Foundation 

http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=311&Itemid=398

 

http://www.hindu.com/2011/03/14/stories/2011031453981800.htm



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard