New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 19. அளவைப் பிழைகள் - தெ. முருகசாமி


Guru

Status: Offline
Posts: 24601
Date:
19. அளவைப் பிழைகள் - தெ. முருகசாமி
Permalink  
 


19. அளவைப் பிழைகள்

 

தெ. முருகசாமி

 

‘‘அளவை’’ என்றதும் எடுத்தல், முகத்தல், நிறுத்தல் போன்ற, பொருள்களை நிறுவை செய்து அளப்பது பற்றிய உலகியல் உணர்வே நினைவுக்கு வருவது இயல்பு. வாழ்வியலுக்கான அந்நிறுவை அளவையினும் மெய்ப்பொருள் காணும் உண்மையை உணர்வதற்கான தத்துவ அளவைகள் பற்றி அறிவதே அளவை என்பதன் உண்மைப் பொருளாகும். எனவே கண்களால் காணப்படும் பொருள் அளவினும் கருத்தில் உணரத்தகும் அளவைகள் பத்து வகைப்படும் என்கிறது மணிமேகலைக் காப்பியம்.

1.காண்பது 

2. கருதுவது 

3. உவமையால் உணர்வது 

4. நூல்களால் உணர்வது 

5. அனுமானத்தால் உணர்வது 

6. இயல்பான நிகழ்வுகளால் தெளிவது 

7. சடங்குகளால் அறிவது 

8. தோன்றி மறையும் இல்லாமையில் யூகிப்பது

9. கண்ணுக்கு முன்பாக நிகழும் சம்பவ உண்மையால் உணர்வது

10. ஒன்றால் மற்றொன்றை உணரும் மீட்சி அளவையால் அறிவது.

இந்த அளவைகள் ஒவ்வொன்றும் முழுமையை அளந்தறியப் பயன்படா நிலையில் ஒவ்வொரு வகையான குறையீட்டை உடையதாக உள்ளதை விளக்கும் போது, அவற்றைப் பிரமாணயாசங்கள் எட்டு என்பதாக மணிமேகலை நூல் கூறுகிறது. அவை பற்றி அறிதலே அளவைப் பிடைகள் அல்லது கற்றங்காளம் என்க! அளவைப்போலிகள் எனவும்படும்.

எட்டுள பிரமாண ஆபாசங்கள்
சுட்டு உணர்வொடு திரியக்கோடல் ஐயம்
தேராது தெளிதல் கண்டு உணராமை 
எய்தும் இல்வழக்கு உணர்ந்ததை உணர்தல்
நினைப்பு என நிகழ்வ (மணி . சமயக் 57- 61)

முன்னர் கூறிய காட்சியளவை முதலியவற்றிற்கு ஆகாதென விலக்கப்படுவன சுட்டுணர்வு முதலிய எட்டு என்றது தொகுத்துக் கூறப்பட்டது. தொகுத்துச் சுட்டிய ஒவ்வொன்றைப் பற்றியும் வகுத்துக் கூறுங்கால் கீழ்க்கண்டவாறு தனித்தனியே கூறப்பட்டது.



1. சுட்டுணர்வு எனப்படுவது - ஏனைப் பொருளுண்மை மாத்திரை காண்டல், பொருள் உண்மையை மாத்திரை (மட்டும்) காண்டலே சுட்டல் ஆகும். இதில் காட்சியளவில் உள்ள பொருளை மட்டுமின்றி அறியப் புகுந்த எல்லாப் பொருளையும் காண்டல். அங்ஙனம் காணுங்கால் எப்பொருள் காண்பது என்றபடி, ஒரு பொருளின் அதாவது காட்சியளவில் காணப்பட்டதன் உண்மையை மட்டும் காணுதலால் பயனில்லை என்பதால் சுட்டுணர்வு போலியிற்று குற்றியோ மகனோ எனக் காணப்படும் பொருளின் உண்மை மட்டுமே அப்பொருளின் முழுமையைச் சுட்டிவிடாது, அதன் மறுபுறமான பெயர், குணம், செயல் முதலியவைகள் மறைந்த நிலையில் ஒரு சார்பாகக் காண்பது குற்றமாம் என்க! இதன் தெளிவை நீலகேசியில் ‘‘பிறிதினை விலக்கலும் மாட்டலும் இன்றாய் ஒரு பொருளுரைப்பது சுட்டெனப்படுமே’’ (120) என்பதாகக் கூறப்பட்டதை இலக்கிய மேற்கோளாகக் கொள்ளலாம். இந்தச் சுட்டுணர்வாகிய அளவைக் குற்றத்தைப் பிற்காலத்தார் நிருவி கற்பக் காட்சி என்றனர். எனவே காணப்படும் பொருளின் முழுமையையும் அறியாத நிலையில் கண்டதைக் கொண்டே அதன் உண்மையைக் கோடலே காட்சியளவிலான சுட்டுணர்வுப் பிழையாம் என்க!

2. திரியக் கோடல் ஒன்றை ஒன்றென்றல் 
விரிகதிர் இப்பியை வெள்ளி என்றுணர்தல்

ஒன்றை மற்றொன்றாகக் கருதலே திரியக் கோடலாம், காணப்படும் பொருளின் தன்மை இயல்பாகவே அதனோடு பிரியாமலிருக்க அதனை விபரீதக் காட்சியாகக் காண்பது. விரிந்து ஒளி வீசும் சிப்பியை வெள்ளி என்று உணர்ந்து கொள்ளும் போது கடல்படு பொருளான சிப்பியை உலோகங்களுள் ஒன்றான வெள்ளியாகக் கருதுவதற்கு அதன் (சிப்பியின்) விரிகதிர் தோற்றமே காரணமாதலால் கருதல் அளவையின் வழித் திரியக்கோடல் ஓர் அளவைப் பிழையாயிற்று.

உணர்வின் திரிபு உணரும் செயல் மேல் நின்றது. மரத்தால் செய்யப்பட்ட யானை உருவத்தைக் கண்ட அளவில் உண்மை எனக் கருதுதல், உணர்வின் திரிபாகும். மரத்தை மறைத்தது மாமதயானை என்பது திருமூலர் கருத்து. இதனைச் சைவ சித்தாந்தத்தின் சிவஞான சித்தியார் குறிப்பிடும் அளவை பற்றியதில் ‘‘திரியவே கொண்டால் திரவாம்’’ எனக் கூறப்பட்டுள்ளது. விரிகதிர் இப்பி என அடையெடுத்த காரணத்தால் வெள்ளியைத் திரிபாகக் கருத ஏதுவாயிற்று. சிப்பியின் ஒளியைவிட வெள்ளிப் பொருள் ஒளிவீசும். இரண்டிற்கும் வெண்மை நிறம் பொருந்தியமையினும் விரிகதிர் பரப்பே ஒன்றை ஒன்றாகக் கருத இடம் கொடுக்கிறது. ஆக, திரிபின் கோடல் என்பதற்கு ஒன்றை ஒன்றென்றல் என்றது இலக்க்ணமாங்கால் அதற்கான எடுத்துக்காட்டே ‘விரிகதிர் இப்பியை வெள்ளியென்றுரைத்தல் எனப்பட்டதென்க.

3. ஐயம் என்பது ஒன்றை நிச்சயியா
மையல் தறியோ மகனோ என்றல்

ஐயம் என்னும் அளவைப் பிழையாவது காணும் பொருளை இரட்டுறக் கருதலாம் என்க. அதாவது காணப்பட்ட பொருளை இன்னதெனத் துணியாத மயக்கம், மயக்கத்தால் கண்ட பொருள் கட்டையோ (தறி) மகனோ என ஐயுறுங்கால் உள்ள தெளிவின்மை புலனாவதே பிழையாகும்.

மேலே திரியக் கோடலில் ஒன்றை ஒன்றாகவே கருதவிடுவது. ஆனால் ஐயத்தில் தெளியாத குழப்பம் மேலிடுவது. கண்ட உருவைக் கற்றியோ மகனோ எனக் கவர்வுற்றுத் துணியாத நிலையே ஐயப்பிழை. ஐயத்திற்கான காரணத்தைச் சாத்தனார் ‘‘மையல்’’ (மயக்கம்) என்றது போலவே ‘‘பதார்த்த தரும சங்கிரக’’ நூலார் ஐயத்தோடு காணப்படும் பொருளின் சேய்மையான தூரத்தையும் ஒரு காரணமாகக் கூறுவார். ஆனால் பிற்காலத்திய அளவை நூலார், மையலான ஐயமானது உண்மையைக் கண்டறிதற்கான ஊக்கத்தைத் தருலால் அதனை ஓர் அளவைப் பிழையாகக் கருதாமல் ஆக்கமாகக் கூறுவர். இருப்பினும் ஐயம் என்பதே ஒருவகையான குற்றமாம் என்க!



4. தேராது தெளிதல் செண்டு வெளியில்
ஓராது தறியை மகனென உணர்தல்

தேராது தெளிதல் என்பது ஆராயாது துணிதல் ஆகும். தேரான் தெளிவு தீமை பயக்கும் என்கிறார் திருவள்ளுவர் (தேரான் தெளிவும். . . தீரா இடும்பை தரும் 510) வெளியிடத்தே காணும் பொருளைக் குற்றமாம். ஆராய்ந்தறிந்த பிறகு குற்றி என்றோ மகன் என்றோ துணிந்துரைக்க வேண்டும். அங்ஙனம் ஆராய்வதற்குரிய வாய்ப்புள்ளபோது ஆராயாதது குற்றமாயிற்று. செண்டு வெளியில் என்றது தெளிவான வெட்டவெளி என்பதாகும். காணப்படும் பொருள் தெளிவாகக் காணத் தடையில்லாத இடத்தில் தீர உணரலாமல் தெளிதலே பிழையானது.

காணப்படும் இடம் தெளிவாக உள்ளதாயினும் ஆய்வில்லாதே பிழைக்கான ஏதுவாயிற்று, செண்டு வெளி என்றது விளையாடும் வெட்ட வெளியான பரப்பிடம் ஆகும். இதனைக்குதிரை வீரர்கள் குதிரைகளுடன் இருக்கும் இடமாக சேக்கிழார் பெரியபுராணத்தில் கழறிற்றறிவார் புராணத்தில் கூறுகிறார். குதிரை வீரரும் குதிரையைக் கட்டும் தறியும் (குற்றியும்) பந்திபந்தியாக (வரிசைவரிசையாக) க்காணும் வெளியிடத்தில் குற்றயகை குதிரை வீரருள் ஒருவானாகக் கருதியது வழுவாயிற்று.

5. கண்டுண ராமை கடுமாப் புலியொன்று 
அண்டலை முதலிய கண்டும் அறியாமை

கண்டுணராமையாவது கண்ணாற் காணும் பொருளின் இயல்பு உணராமை, இதற்கான உவமையே, கடுமாப்புலி ஒன்று அண்டிவருதலைக் கண்டும் அலட்சியமாக இருந்ததாகும். அதாவது நெருங்கி வரும் புலியாம் தமக்குத் தீங்கு நிகழும் எனத் தெரிந்திருந்தும் ஒருவர் தன்மைய்யிது காத்துக் கொள்ளாத அறியாமையே ஈண்டு கண்டுணராமையான பிழையாயிற்று, தம்மைக் கொன்றொழிக்கும் கொடிய விலங்காகிய புலிதம்மை அணுகி வரக் கண்டும் அதனால் வரும் தீமையை அதனால் வரும் தீமையை உணராததோடு தம்மையும் காத்துக் கொள்ளத் தெரியாதது குற்றமாம் என்ன.

சாத்தனார் கடும் புலி எனக் கூறியதையே அறியாமைக்கான ஏது எனலாம். ஏனெனில் பசி எடுத்த புலி என்ற கருத்தில் ஏதாவது இரையைத் தேடிவரும் நிலையில் ஒருவரைக் கண்டால் விடாது என்பதெல்லாம் உண்மையாயினும் புலியைக் கண்டமாத்திரத்தில், அது நம்மை அடித்துத் தின்னும் என்ற உணர்வற்ற அறியாமைதான் கண்டுணராமையும் அறியாமையும் ஆகும்.

மேலும் இரையை உண்டு ஓரிடத்தில் கிடக்கும் புலி எனக் கூறாமல் நெருங்கி வருதலைச் சாத்தனார் ‘‘அண்டல்’’ என்றார் (அண்டல் கூட்டல் ஐ - அண்டலை இதில் ஐகாரம் சாரியை) ஆக வரும் தீமையை நன்குணர்த்தற்பொருட்டு புலி ஒரு குறியீட்டுப்பொருளாயிற்று. புலியைப் பார்த்ததும் நம்மை ஒன்றும் செய்யா என்ற இந்த அலட்சியப் புத்தியை அளவை நூலார் ‘‘உபேட்சாத்மக ஞானம் ’’ என்பர்.

6. இல்வழக்கு என்பது முயற்கோடொப்பன
சொல்லின் மாத்திரத்தால் கருத்திற்தோன்றல்

இல்வழக்கென்பது இல்லாததாகிய முயற்கொம்பு, ஆமை மயிர்க்கம்பளம், காக்கைப்பல் போன்ற சொற்களைக் கேட்ட மாத்திரத்தில் இருப்பன போலக் கருதுதல் குற்றமாகும். முயலும் கொம்பும் தனித்தனியே உண்டாயினும் இரண்டும் சேர்ந்தாற் போன்றதொரு பொருள் இல்லாததால் இருப்பதாக உணர்தல் பிழையாயிற்று. அதாவது சொல்லளவில் இன்றிப் பொருள் அளவில் இல்லை என்பது கருத்து.

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்ற தொல்காப்பிய சேனாவரையர் உரையில் (சொல்லதிகாரம்) தருக்க வாதமாக விவாதிக்கும் போது இல்லாத பொருளுக்குச் சொற்கள் அமைந்ததாயினும் உள்ள இரு பொருள்களின் ஒட்டுறவாகவே சொற்கள் உருவானதால் இப்பொருள் உவமைக்கான சொற்களாகக் கொள்ளலாம் எனப்பட்டது. அங்ஙனம் கருதாக்கால் இல்லோன் தலைவனாக உள்ளது புனைதலான இலக்கியப் படைப்பு உண்மையில்லாததாகி விடும் என்பதால் இத்தகு இல்வழக்கு ஒரே வழி தேவை என்பார் சேனாவரையார். இருப்பினும் ஈண்டு மணிமேகலையைப் பொறுத்தவரை, இல்லாமையை இருப்பதாகக் கருதலை மட்டுமே பிழையாக உணர்த்தப்பட்டதாம் என்க. மேலும் முயற்கோடு, காக்கைப்பல் முதலியவை இல்பொருளாயினும் சொல்லளவில் உண்டெனக் கருதத் தூண்டியதே குற்றமாம் எனலாம்.



7. உணர்ந்ததை உணர்தல் உறுபனிக்குத் தீப்
புணர்ந்திடல் மருந்தெனப் புலங்கொள நினைத்தல்

உணர்ந்ததை உணர்தலாவது தெளிவாக உணரப்பட்ட ஒன்றையே மீண்டும் உணர்வது குற்றமாகும். முன்பேயன்றிப் பட்டதன் உண்மை தெளிவாக இருக்கும் போது அதனையே திரும்பவும் உணரத் தலைப்படுதலால் பிறர்க்கு ஐயம் ஏற்படுமாதலின் மீண்டும் அறிய முற்படுதல் குற்றமாயிற்று. அதாவது ஒருவர் நன்கு உணர்ந்ததனையே வாளா மீண்டம் உணர்தல் திறன் அவர் உணர்ந்ததன் தெளிவின்மையை வெளிப்படுத்திவிடும் என்பதால் அஃது போலி அளவையாயிற்று. அதற்கான எடுத்துக்காட்டே உறுபனிக்குத் தீக்காயல் என்பதாகும். எத்துணை மிக்கப் பனிபொழியினும், தீயருகில் செல்லுதலே அதற்கான மருந்தாம் எனத் தெரிந்தும் தம்மைப்போல் பிறரும் உணர்வரானாலும் அப்பிறர்க்குப் பனிக்குத் தீக்காயல் மருந்தாம் எனக் கூறலே ஈண்டுள்ள உணர்த்தலான குற்றமாகும். அதாவது யாருக்கும் தெளிவாகத் தெரிந்த ஒன்றைத் தெளிவித்தல் வேண்டாத ஒன்று என்பது கருத்து. இதனையே பலங்கொள நினைத்தல் எனப்பட்டது.

சாத்தானர் கூறும் உணர்ந்ததை உணர்தல் என்பது தாம் உணர்தலன்றிப் பிறர்க்கு உணர்த்தல் என்பதாம். அதனால்தான் பிறர் புலங்கொளச் செய்ய நினைத்தல் என்பதாகக் கூறினார். உளவியல் கருத்தின் படித்தாம் அறிந்த்தையே பிறர் அறிந்திருப்பினும் அதனைச் சொல்வதால் சொல்வோர்க்கான மனஉணர்வும் பிறரைத் தம் போல் கருதலால் வந்த சோர்வேயாம் என்க. எனவே உணர்ந்ததை உணர்தல் போலி அளவையானது.

8. நினைப்பெனப்படுவது காரணம் நிகழாது
நினக்கு இவர் தாயும் தந்தையும் என்று
பிறர் சொலக் கருதல்

நினைப்பெனும் போலியாவது பிறர் சொன்னதை நினைத்தல், அதாவது பிறர் கூற்று பொய்யாதலும் கூடுமாதலின் அதற்கான ஆராய்வின்றிக் கூறியதில் கொண்ட நினைப்பு ஒரே வழி குற்றமாயிற்று. பிறர் ஒருவரைப் பார்த்து அவர் நும் தந்தை தாயர் எனக் கூறிய வழி தந்தை தாய் என அறியப்படா நிலையில் நம்பும் உணர்வே ஒரேவழி குறையாம். கூறுபவர் தாமே உணராதவராயிருந்து பிறர் யாரோ கூறிய பிழையான தகவலையும், உணர்த்தலாமாயினும் அவர் கூற்றை நம்பல்தான் ஒரேவழி அளவைப் பிழைக்கு வழி கோலுவதாயிற்று. அதாவது பிறர் கூறும் அனைத்து சொற்களையும் காரணகாரிய ஆராய்ச்சியின்றிக் கருதுதல் குற்றமாம் என்க.

இக்காலத்து வெளுத்ததெல்லாம் பால் எனக் கருதி ஏமாற்றம் செய்வோரை நோக்கி ‘நமக்கு யாவரும் தூயவே மொழிகுவர் என்னும் நினைப்பு” என்று கூறுவதைக் காணும் போது காரணம் இன்றி ஏற்றலை நினைப்பு எனக் கூறப்பட்டது எனலாம்.

ஒருவருக்குத் தாயும் தந்தையும் என்றாகிவிட்டால் அந்த நினைப்பில் ஆராய்ச்சிக்கு இடம் இல்லை. இதன் பொருட்டே சாத்தனார் காரணம் நிகழாது என்றார்.

அடுத்துப் பொதுவாகத் தாயறிவிக்க அறியும் தந்தையினும் தாயைப் பிறர் அறிவிக்க அறிதல் கூடாமையின் பிறர் சொல என்றும் கூறினார் சாத்தனார். மேலும் காரணம் நிகழாது மேற்கோடற் குறியார் தாயும் தந்தையுமின்றிப் பிறரின்மையின் “நினக்கு இவர் தாயும் தந்தையும் என்று பிறர் சொல்லக் கருதுதல்” என்றும் கூறினார் என்க. ஆக மெய்ம்மை காணும் அளவைகளுக்குக் குற்றம் உண்டென்பதால் மணிமேகலை அளவைவாதியை விட்டுவிட்டு சைவவாதியைச் சந்திக்கச் சென்றாள் என்று அளவைப்பிழைகள் பற்றி விவரிக்கிறார் சாத்தனார்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard