New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டவரா அல்லது ஆத்திகனா


Guru

Status: Offline
Posts: 24603
Date:
திருவள்ளுவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டவரா அல்லது ஆத்திகனா
Permalink  
 


 திருவள்ளுவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டவரா அல்லது ஆத்திகனா



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: திருவள்ளுவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டவரா அல்லது ஆத்திகனா
Permalink  
 


இல்லாமை பலவற்றுள் மிக்க இல்லாமை அறிவில்லாமையே  என புல்லறிவாண்மையின் முதற் குறளில் இத்தகையோரைத் தான் திருவள்ளுவர் சாடியுள்ளாரோ!

வள்ளுவனே அறிவுறுத்திய,வாழும் உயிர்க்கு இரு கண்ணெனத் தக்கவையான எண் (எண்ணுதல்-தத்துவ ஆய்வு மேற்கொளல்மற்றும் எழுத்து இலக்கணம்இவற்றுள் இரண்டினையுமே அரைகுறையாகத் தெரிந்து பிதற்றும் இவர்களை எண்ணி பரிதாபமே கொள்ளவியலும்.

இத்தகையோர், தங்களின் நாத்திகக் கருத்தை பகிர,வள்ளுவன் புகழை மாசுபடுத்தும் இழிசெயலில் ஈடுபடுகிறார்கள்.

sm msg athigan-page001

சமூக ஊடகங்களில் அவ்வப்போது வந்து போய்க் கொண்டிருக்கும் மேலேயுள்ளதைப் போன்ற பதிவுகளைப் பதிவரை வேறு என்னவென்பது!

மொத்தம் 1330 குறள்களில் பத்து குறள்களை கடவுள் வாழ்த்து என்ற முதல் அதிகாரத்தின் கீழ் உட்படுத்தியிருக்கும் பொய்யாமொழிப் புலவனான  திருவள்ளுவரைக் குறித்து,தெய்வப்புலவர் என்ற ஈடற்ற புகழ் மிக்க வள்ளுவனைக் குறித்து,அவர் நாத்திகன்,அரை நாத்திகன் என்ற வகையில் கருத்துக்களை சமூக வலைதளங்கள் பலவற்றில் பரப்பிக் கொண்டிருப்பவர்களின் சிற்றறிவை எள்ளி நகையாடத் தான் வேண்டும்

குறுகிய மனநிலை கொண்டோரால் மட்டுமே இவ்வாறான தீஞ்சொல்லை பரப்பவியலும் என ஒரு பக்கம் எண்ணி இந்த அரைவேக்காடான கருத்துக்களைப் புறந்தள்ளவியலும்.

அதேவமயம்,நிறைமொழி மாந்தர் பெருமை போற்றுவோர்,வள்ளுவனின் வான்புகழை அவ்வப்போது நல்லுலகிற்கு பரப்பும் நற்தருணமாகவும் இச்சூழ்நிலை அணுக வேண்டிய அறப்பொறுப்பில் உள்ளனர் என்பதையும் மறக்கவியலாது.  

இம்மாதிரியான பதிவுகள் யாவுமே,தெய்வத்தான் ஆகாதெனினும் போன்ற,தெய்வம் என்னும் சொல் இடம் பெறும் ஒரு சில குறள்களை மட்டும் எடுத்து,அவற்றை தவறாகப் பொருள்படுத்துவதால் ஏற்படும் பொதுவான விளைவுகளே.

கடவுள் நம்பிக்கை பற்றிய ஐயம் பலருக்கும் இயல்பேயாயினும், அத்தகையவரில் சிலர்,தாம் ஆத்திகம் பற்றி கொண்டுள்ள ஐயமுடைய கருத்துக்கு வள்ளுவர் போன்ற சான்றோரும் விதிவிலக்கு அல்ல என்ற கண்ணோட்டத்திற்கு ஆளாகி விடுகிறார்கள்.

இந்த வலைப்பதிவின் நோக்கம் இத்தகைய தவறான கண்ணோட்டத்தை சீர்படுத்த,மறைமொழி ஆய்வு முயற்சியை மிகச்சிறு அளவில் மேற்கொள்வதேயாம்.

வள்ளுவன் முதற்குறளில் ஆதிபகவன் என்ற சொல்லில் துவங்கி, இறைவன்,தெய்வம்,அமரர்,உலகியற்றியான் என ஒரே மெய்ப்பொருளைக் குறிப்பால் உணர்த்தும் பல சொற்களையும் கையாண்ட முறை பற்றி மிகவும் சுருக்கமாக ஆராய முற்பட்டதன் விளைவே இந்த வலைப்பதிவாகும்.

இறைதத்துவத்தைப் பற்றிய சரியான நோக்கலும்,புரிதலும் நம் அன்றாட வாழ்வின் பல்வேறு சூழல்களை நல்ல விதத்தில் எதிர்கொள்ள வகை செய்கிறது.நீள்விசும்பு அருளும் என்கிறார் திருமங்கை ஆழ்வார்.

நன்றிக்கு நல்வித்தாக்கும் ஒரேயெண்ணம் கொண்டு,இச்சிறுமுயற்சியை அடியேன்,இறைவன் மற்றும் ஆசானின் அருளை வேண்டித் தொடர்கிறேன்…………

ஆத்திகன்,நாத்திகன் – சொற்பொருள் விளக்கம்

பலரும் இவ்விரு சொற்களை பயன்படுத்துவதால் மட்டுமே,இவற்றின் சரியான புரிதலுண்டு எனக் கூறவியலாது. சரியான புரிதலுள்ளவர்கள் திருவள்ளுவனை இன்னும் நன்கு உணர்ந்து போற்றத்தகுந்த ஆசானாக உயர்வாக நடத்துவார்கள், மனதில் வள்ளுவனைப் பற்றிய இவ்வாறான எண்ணங்கள் தோன்றினாலும்,அத்தகைய ஐயங்களைத் தீர்க்க முனைவார்களேயன்றி,அதை விடுத்து,வள்ளுவனைக் குறை பாடிக் கொண்டிருக்கமாட்டார்கள்.

சனாதன இந்து அறநெறியின்படி,முதலும் முடிவுமற்ற பரமன் என்பதே மெய் என்றஇறைமைக் கோட்பாட்டை ஏற்பவரை ஆத்திகர் என்போம்.இந்த ஆத்திகர் ஆறு ஆன்மீக நெறிகளுள் ஒன்றை நம்பிக்கையுடன் (சிரத்தையாக) பின்பற்றபவர் ஆவார்.ஷண்மதம் எனப்படும் ஆறு ஆன்மீக நெறிகளாவன

1.   காணபத்யம் ஆனைமுகன்/கணபதி வழிபாடு )

2.   கௌமாரம் குமரன்/முருகன் வழிபாடு )

3.   சௌரம்: சூரியன் வழிபாடு )

4.   சாக்தம் ( அன்னை/சக்தி வழிபாடு )

5.   சைவம் சிவன் வழிபாடு )

6.   வைணவம் (திருமால் வழிபாடு )

அவ்வாறன்றி கடவுள் நம்பிக்கையின்மை,இறைமறுப்பு பற்றிய கருத்துக்களை முன்னிறுத்துபவரைக் குறிக்கும் சொல் நாத்திகன் ஆகும்.

பொதுவாக சமூக வழக்கத்தில் இறைவன்/தெய்வம் இச்சொற்களுக்கு ஆங்கிலச் சொல்லான காட் (God/Gods) என்பதன் பயன்பாடே பெருமளவில் உள்ளது.அதேபோல்ஆத்திகன்/நாத்திகன் என்பதற்கும் ஆங்கிலச் சொற்களான தீஸ்ட்/ஏதீஸ்ட் (theist/atheist)இவற்றின் பயன்பாடே பெருமளவில் உள்ளது.ஆனால்,தீஸ்ட்/ஏதீஸ்ட்/காட் இச்சொற்கள் யாவுமே ஆபிரகாமிய கோட்பாடுகளை மையமாகக் கொண்டதால்,இவற்றைக் கொண்டுசனாதன இந்து அறநெறியின் ஆத்திகன்/நாத்திகன் ஆகிய சொற்களைப் பொருள்படுத்த முயல்தல் முற்றிலும் தவறான அணுகுமுறையே.

ஒருவன் ஆத்திகனா அல்லது நாத்திகனா என்பதை கண்டறிய தான் உலகவாழ்வில் கடைத்தேற,பண்டைய இந்தியாவில் தொன்றுதொட்டு ஆன்றோர்கள் அமைத்த ஆன்மீகநெறி வழிகள் பலவற்றுள் தனக்கு உகந்ததை கடைப்பிடிக்க விழைவதன் மூலம் தான் தீர்மானிக்கமுடியும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 ஆத்திக நெறிகளும்,வலிய  சான்றுகளும்  

நான்கு வேதங்களை ஏற்றுக்கொள்ளும் ஆறு ஆன்மீக நெறிகள் தத்தமது நெறிகள் முன்னிறுத்தும் வழிபாட்டுக் கடவுளை பரம்பொருளின்/பரமனின் அம்சமாகக் கொண்டு வீடுபேறு எய்துவதை உயரிலக்காகக் கொண்டவை.அவ்வாறே வள்ளுவனும் அறம்,பொருள்,இன்பம்,உயிரச்சம் என நான்கு திறன்களைக் கூறுகிறான்.

இவை யாவுமே வலிய சான்றுகளை (ப்ரமாணம்அடிப்படையாகக் கொண்டவை.ஆதலால் வலிய சான்றுகள் எவை என முதலில் தெளிவோம்.

நாம் ஏனைய பொருட்களைப் பற்றிய அறிவை அடைய உதவும் கருவியாகவும்,அடைந்த அவ்வறிவை ஏற்றுக்கொள்ள குறிப்பீடாகவும் உள்ளது வலிய சான்று எனப்படுகிறது.இவை ஆறும் கீழே விளக்கப்பட்டுள்ளன:

1, நேர்ப் பொறியுணர்வு

இது சுவை,ஒளி,ஊறு,ஓசை நாட்டம் ஆகியன உணரும் நம் ஐம்புலன்களைக் கொண்டு பெறும் அறிவு.

பொதுவாக நம்முடைய ஐந்து புலன்களின் நேரடி வீச்சிற்குள்ள பொருளின் இருப்பும்,தன்மையும் எளிதில் நம்மால் அறியப்படுகிறது. நம் மனதில் தோன்றி மறையும் இன்ப,துன்ப,விருப்பு,வெறுப்பு,பொருட்களைப் பற்றிய அறிவு மற்றும் அறியாமை யாவும் நேர்ப் பொறியுணர்வில் அடங்கும்.

பொறியுணர்வின் மிகப்பெரிய குறைபாடு யாதெனின் மிகமிகக் குறுகிய வட்டத்திற்குள் உள்ள அதன் செயல்பாடேயாகும்.

நேர்ப் பொறியுணர்வு முழுமையான அறிவைப் புகட்டாது.அரைமீட்ட விட்டமுள்ளதாகத் தெரியும் கதிரவன்,கானல் நீர்,நேராக உள்ள குச்சி கண்ணாடிக் குமிழி நீரிலோ ஒளிச்சிதறலால் வளைந்திருப்பதாகத் தோன்றுவது போன்றவை நேர்ப் பொறியுணர்வின் வாயிலாகப் பெறப்படும் தவறான அறிவிற்கு மற்றும் சில எடுத்துக்காட்டுகள்.

நாத்திக வாதம் என்பது இந்த நேர்ப்பொறியுணர்வினால் பெறும் அறிவு மட்டுமே போதுமானது/இறுதியானது என முடிவாக்கலே.

பிறப்பெனும் பேதைமை என்றார் வள்ளுவர்.நம் பிறப்பு என்னும் முக்கிய நிகழ்வே நேர்ப் பொறியுணர்வு மூலம் அறியப்படாத ஒன்று.அவ்வாறு இருக்கையில் நேர்ப் பொறியுணர்வு ஒன்றை மட்டும் பயன்படுத்தி வாழ்வில் எழும் இன்ன பிற முக்கிய வினாக்களுக்கு விடை கண்டறிதல் சாத்தியமோ?

அம்மாதிரியான வினாக்கள் தேவையற்றவை என்ற நிலைப்பாட்டில் இருப்போருக்கு ஏனைய ஐந்து வலிய சான்றுகளுமே தேவையில்லை தான்.

2. ஊகம் அல்லது தொடர்ப் பொறியுணர்வு

முன்பே வேறொரு பொருளைப் பற்றி புலனுணர்வு மூலம் அடைந்த அறிவைத் தொடர்ந்து, அடையப்படும் அறிவு ஊகம் அல்லது தொடர்ப் பொறியுணர்வு ஆகும்.

நெருப்பும்,புகையும் நம்மால் சேர்ந்தே உணரப்படுவதால்,தொலைவிலுள்ள மலையில் தெரியும் புகையின் அடிப்படையில்,கண்ணுக்குத் தெரியாத நெருப்பும் அறியப்படுவது ஊகமாகும்.

சிடுசிடுப்பான முகங்கொண்டவர் சினமுள்ளவர் போன்ற பொதுப்படையான கருத்துக்கள் உண்டாவது ஊகத்தினால் தான்.மழைபொழியும் போதெல்லாம் கருமேகங்களின் இருப்பைக் கண்டு,கருமேகங்களைக் கொண்டு மழை வருகையை எதிர்நோக்குவதும் ஊகமே.

வேறொரு பொருளைப் பற்றிச் சார்ந்து அடையும் அறிவு என்பதால் இதுவும் முழுமையான அறிவைப் புகட்டாது.

3. உவமை

பொருளின் தன்மையை விளக்க பிறிதொரு பொருளின் தன்மையுடன் ஒப்பிட்டு அறிவது உவமையாகும்.

பரமனின் ஒளி சூரியனின் ஒளியை ஒத்தது என்பது உவமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் மறைநூல் வாக்காகும்.தன்னொளியை மறைக்கும் மேகக்கூட்டத்தையும் ஒளிர்விப்பது கதிரவனே.அவ்வாறே பரமன் நம்மறிவின் உள்ளொளியாய்த் திகழ்கிறான் என்ற உவமை பரம்பொருளை எளிதே விளக்கும் பெருமை வாய்ந்தது.

பொதுவாக எப்பொருளும் உண்டாக மூலக்காரணம் உள்ளது என்ற அடிப்படையில் இந்த அண்டத்தை படைத்த ஒருவர் உள்ளார் என்ற பொருள்பட வள்ளுவன் பாடிய முதற்குறளின் வரிகளான எழுத்தெல்லாம் அகர முதல,உலகு ஆதிபகவன் முதற்றேஎன்பது ஊகம்,உவமை சான்றுகளை உள்ளடக்கியதாகும்.

4. ஆராய்ச்சிக்கு உட்படுத்தாத ஏற்பு

ஒரு நிகழ்வை எவ்வித ஆய்விற்கும் உட்படுத்தாது,அந்நிகழ்வை உறுதிப்படுத்தல்ஆராய்ச்சிக்கு உட்படுத்தாத ஏற்பு எனப்படும்.

மறைநூலிலும் இம்முறைச் சான்று பலவாறு பயன்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக தன்னை உணர்ந்த ஞானி துன்பப்படுவதில்லை என பறைசாற்றுவதிலிருந்து நாம் அறிவது யாதெனில் ஞானம் துன்பத்தை அழிக்குமெனவே,துன்பம் என்பது பொய்த் தோற்றமாக இருந்தாலொழிய,அறிவினால் அதை அழிக்கவியலாது என்பதே.

இவ்வாறான முடிவை எட்டுவதை ஆராய்ச்சிக்கு உட்படுத்தாத ஏற்பு என்கிறோம்.பற்பல குறள்களில் வள்ளுவன் இதைப் பயன்படுத்தியுள்ளான். மற்றுமோர் எடுத்துக்காட்டுக் குறள் கீழே:

இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில்.

5. இல்லாமை உணர்வு

ஒரு பொருளின் இருப்பை முதலில் சொன்ன பொறியுணர்வு மூலம் அறிவது போன்றே,பொருளின் இல்லாமையையும் புலனுணர்வு மூலம் அறிவதை நாம் பார்க்கிறோம்.

வகுப்பில் ஆசிரியர் இல்லை,ஒலி கேட்கப்படவில்லை போன்ற கூற்றுக்கள் இல்லாமை உணர்வை தெரியப்படுத்துகிறது.

அற்ற குளத்தின் அறுநீர்ப்பறவை என்ற குறள்வரிகள் இல்லாமை உணர்வுக்குஎடுத்துக்காட்டு ஆகும்.

6. மறைமொழி அல்லது மறைநூல் சான்று

மொழிச் சான்று என்பது யாதென முதலில் தெளிவோம்.

சிறு வயது முதலே செவிவழிச் செய்தியாக பெற்றோர்,பெரியோர், உடனிருப்போர்களின் பேச்சை,பொருட்களின் இருப்புக்கும்,தன்மைக்கும் நேர்ப் பொறியறிவு அன்றியும் சான்றாகக் கொள்வதே.நூல்கள்,செய்தித் தாள்கள், நாளேடுகள்,ஊடகங்கள் மூலம் அறியப்படும் யாவும் நம்பத்தகுந்த நபர்/கள் மற்றும் அமைப்புக்களிலிருந்து பெறப்படுகிறது.

இவற்றை மொழிச் சான்றெனக் கொண்டால்,பரம்பொருளின் இருப்புக்கும், விளங்கிக் கொண்டிருப்பதற்கும் மறைமொழி அல்லது மறைநூற்களை மட்டும் தான் சான்றாகக் கொள்கிறோம்.

முன்னர் நோக்கிய ஐந்து சான்றுகள் யாவும் நம்பிக்கை சார்ந்த அறிவே.

தான் இவ்வுலகில் பிறந்தது புலன்களால் நேராக அறியப்படாததால், புலன்களை நேராகவும்,மறைமுகமாகவும் கொண்டு உலகைப் பற்றி அடையும் மற்ற பொருளறிவு(தன்னுடல்,மனம்,புத்தி உட்பட) யாவும் நம்பிக்கை சார்ந்ததே.

இதற்கு மாறானது மறைநூற் சான்று.எவ்வாறெனில்,மறைநூற் சான்று என்பது அறிவு சார்ந்த நம்பிக்கையாம்.ஏனெனில் பரம்பொருள் மட்டுமே ஏற்கெனவே இருந்தும்,விளங்கியும் கொண்டிருக்கும் தத்துவாகும்.அப்பரம்பொருளை புலன்களைக் கொண்டோ, புலன்களுக்கப்பால் உள்ள மனம்,புத்தியைக் கொண்டோ அறியவியலாது,மறைநூற் சான்று ஒன்றைக் கொண்டு மட்டுமே அறியவியலும்.

அவ்வாறே உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன்,ஒன்றே குலமும்,ஒருவனே தேவனும்,அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர் போன்ற கூற்றுகள் இறைவனின் இருப்புக்கு நம்மாழ்வார்,திருமூலர்,கம்பர் போன்ற சமய குருமார்களின் மறைநூற் மொழிச் சான்றாகும்.

மறைகள் மைய இலக்கான மெய்ப்பொருளை விளக்க,இறைதத்துவத்தை முன்னிறுத்தியும்,இறைதத்துவத்தை விளக்குமுகமாக மறுபிறப்பு, இருவினைப்பயன் ஆகியன எடுத்துரைத்தும் நம்மை வழிநடத்திச் செல்கின்றன.

மறைமுடிவு நூல் கூற்றுக்கள் பலவற்றுள்,பரமன் உளன் என நேராகவே பறை சாற்றுபவற்றில் ஒன்றாக தைத்திரிய உபநிடதத்தின் இரண்டாம் அத்தியாயம் பிரம்ஹானந்தவல்லி,ஆறாம் பகுதியின் துவக்கத்தில் உள்ள இரு சொற்றொடர்களைக் கூறலாம்:

அஸந்நேவ ச பவதி;அஸத் ப்ரம்ஹேதி வேத சேத்

அஸ்தி ப்ரம்ஹேதி சேத்வேத;ஸந்தமேனம் ததோ விது:ருதி

இதன் பொருள்-பரமனை இல்லை என்று அறிபவன் தன்னையே இல்லை என்பவன் என ஆகிறான்.பரமனை உண்டு என்று அறிந்தவனை கற்றுணர்ந்தவன் என அறிஞர்கள் போற்றுகின்றனர் என்பது.

தமிழ்மறையாகிய திருக்குறளிலும்,இதே கருத்தையே குறள் 850ல் காணக் கிடைக்கிறது:

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப் படும். ”

வள்ளுவன் ஆத்திகனே என்ற கருத்தை திடமாக்கும் ஒற்றைக் குறள்

மேற்சொன்ன குறள் 850ன் சொற்பொருள் உலகத்தார்–அறிஞர்கள், உண்டென்பது-உண்டு எனச் சொல்லியதை, இல்லென்பான்-இல்லை என மறுப்பவன்,வையத்து– (அவ்வறிஞர்களைப் பின்பற்றும்)வையத்து மக்களால்,அலகையா வைக்கப்படும்- (கண்ணால் காணாத)பேய்க்கு நிகராய் கருதப்படுவான். தைத்திரிய உபநிடதக் கூற்று மற்றும் இக்குறளின் ஆழ்ந்த ஒப்பீட்டை பிரிதோர்  பதிவில் காணலாம்.

ஆக,மறைநூல் சான்றை துளியும் கருத்து மாற்றாமல்,அப்படியே இறைவனின் இருப்புக்குச் சான்றாகக் கூறியுள்ள இந்த ஒரு குறளை வைத்தே, வள்ளுவன் ஆத்திகனே என்ற முடிவான தீர்மானத்திற்கு நம்மால் வர முடியும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

பின்னும் தொடர்ந்து யோசித்தால்,.வள்ளுவன் ஆத்திகனே என தீர்மானத்தை எட்டினாற் போல்,அவன் அரைநாத்திகனோ,முழு நாத்திகனோ அல்ல எனவும் உணரமுடியும்.

ஏற்கெனவே பார்த்தது ஆறு ஆன்மீக நெறிகளாவன.ஆயின் நாத்திக வழி ஏற்றுக்கொள்ள விழையும் சான்று நேர்ப் பொறியுணர்வு என ஒன்று மட்டுமே எனக் கண்டோம்.அவ்வாறே வள்ளுவன் ஆறு வித வலிய சான்றுகளையும் குறள்களில் வெளிப்படுத்தி உள்ளதையும் கண்டோம்.

ஆக தெய்வப் புலவர் திருவள்ளுவர் நாத்திகன் அல்ல என்பதும் தெளிவு.

இனி இந்த வலைப்பதிவின் மையக் கருத்தான தெய்வத்தான் ஆகாது என்பதை தவறாகப் பொருள் கொள்வதற்கு அடிப்படைக் காரணமான ஐயத்தை அலசுவோம்.அதையும் வள்ளுவரே மெய்யுணர்தல் அதிகாரத்தின் முதற் குறளில் தெளிவாக்குகிறார்:

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு. ”

மருள் என்பது தவறான உணர்வு,மெய்ப்பொருள் இல்லாதவற்றை மெய்ப்பொருள் எனவெண்ணும் தவறான உணர்வு.

மேற்சொன்ன ஆறு சான்றுகளில்,மறுபிறப்பு,இருவினைப்பயன்,இறைவன் ஆகியவை விளக்கும் மொழிச் சான்றான மறைநூலை அண்டியே இந்த மருளாகிய ஐயம் நீங்கப்பெற்று இதே மெய்யுணர்தல் அதிகாரத்தின் இரண்டாவது குறளில் சொல்லப்பட்ட‘மாசறு காட்சியை’ உணரவியலும்.

மறுபிறப்பு,இருவினைப்பயன் ஆகியன நம்பிக்கை சார்ந்தது. ஆனால் இறைவனோ முதலில் நம்பிக்கையுடன் அணுகப்பட்டு, இறுதியில் அறிவே உருவானவனாய்த் தெளியப்படுபவன்.

வழக்கத்தில் இறைவன் என்ற சொல்லைத் தவிரவும்,பகவன் அல்லது பகவான்,தெய்வம் ஆகிய சொற்களையும் பற்றிய தெளிவின்மையே மருளென்னும் ஐயத்தைத் தொடரச் செய்கிறது. எனவே இந்தத் தெளிவின்மையை நீக்கிக்கொள்வது இன்றியமையாத் தேவை,

இறைவனை தெய்வம் என அழைப்பது சரியா, இறைவனைத் தொழுதலும், தெய்வத்தை தொழுதலும் வேறா போன்ற ஐயங்கள் ஏற்படுவதும் மருளினால் தான்.

கடவுள்,இறைவன்,தெய்வம்- இச்சொற்கள் யாவும் ஒரே பொருள் குறிப்பனவா?

மறைகள் யாவிலும், 1.தெய்வம் (அல்லது தேவன்,அமரன்,பகவான்) மற்றும்,2.கடவுள்(அல்லது ஆதிபகவன்,இறைவன்,ஆண்டவன்,படைத்தவர்) ஆகிய இரு சொற்களின் பொருள்களும் தெளிவாக்கப் பட்டுள்ளன.

பரமன் எனும் மெய்ப்பொருள் இடத்தாலும், காலத்தாலும் நிறைந்த இறை தத்துவமாகப் பேசப்படுகையில் இறைவன் எனப்படுகிறார். அதே இறைவன் இவ்வுலகிற்கான மூலமாகப்மூல காரணமாக பேசப்படுகையில் முதற்குறளில் சொன்ன ஆதி,ஆதிபகவன் அல்லது ஆண்டவர்,படைத்தவர் எனப்படுகிறார்.அதே இறைவன் குணங்களுடன் கூடியவராக,பக்தன் பக்தியை செலுத்த/வழிபாட்டில் ஈடுபட ஏதுவாக உருவம்/அவதாரம் எடுக்கையில் பகவான் எனவும்,தேவன் எனவும் தேவதேவன் தேவர்களின் தேவன் ) எனவும் பற்பல பெயர்களைப் பெறுகிறார்.

தெய்வம்,தேவன் எனும் சொல்,சாதி ஒருமை குறித்த சொல்லாதலால் ஒருமை மட்டுமல்லாது,தெய்வங்கள்,தேவர்கள்-என்ற சொற்களாக,ஒருமை, பன்மை என்றவாறும் வழக்கத்தில் உள்ளது.

ஆனால் இதனின் வேறான கடவுள்,இறைவன் என்ற சொல்லோ ஒருமை,பன்மை இவை கடந்து, ஆண்டவன்,படைத்தவர் எனப் பொருளைக் கொண்டு,ஒருமையை என்றல்ல,இரண்டற்ற ஒன்றை மட்டும் குறிக்கும் சொல்லாகத் திகழ்கிறது. வேறு எந்த பெயர்ச்சொல்லுக்கும் பொருந்தும் பன்மை வடிவம்,கடவுள்,இறைவன்,ஆண்டவன்,படைத்தவர் ஆகிய சொற்களுக்கு உளவாகா.

தாவர, விலங்கு,மனித இனங்கள் போலவே தெய்வம்,தேவன் இதுவும், ஆண்டவனால் படைக்கப் பட்டவையே எனும் சேதியே மறைநூல் தெளிவுபடுத்துவதாகும்.

ஆனால் இறைவனோ-ஒருவன் ஆவார்,இறைவனே ஆண்டவர்,படைத்தவரும் அவரே –தெய்வங்கள் உட்படப் படைத்தவர்.படைத்த இறைவன் படைப்புக்குப் பின் ஒவ்வொரு படைப்பினுள்ளும் நுழைந்தார் எனவும் மறைநூலில் சொல்லப்பட்டிருப்பதையும் காண்கிறோம்.

ஆகவே தான்,வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும், என்று மனிதர்களும் தேவர்களில் ஒருவராக உயர இயலும் என,மனிதர்களின் உயரிய பரிணாம இலக்காகவள்ளுவன் சொல்லியிருப்பதையும் காண்கிறோம்.

திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்து கொண்டுள்ள பத்து குறள்களிலுமே,தெய்வம் எனும் சொல் இடம் பெறாததையும் நாம் நோக்கலாம்.அது மட்டுமன்றி, கடவுள் குறித்த இலக்கணங்களும் இந்த பத்து குறள்களில் தெளிவாக்கப்பட்டுள்ளன.

ஆதலால் முதன்மையாக, திருவள்ளுவர் கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் பத்து குறள்களிலும்,இறைவனைப் போற்றும் முறை,தொழும் முறை,அவ்வாறு போற்றித் தொழுதலால் கிட்டும் பயன்கள் ஆகியன பற்றிக் கூறும் முறையை நோக்குவது மிக மிக அவசியம்.அவை கீழே அட்டவணையில் முறைப்படுத்தப்பட்டுள்ளன:

கடவுள் வாழ்த்து-page001

கடவுள் வாழ்த்தின் குறள்களை ஆராயப் புலனாவது யாதெனில், பத்துக் குறள்களில் எடுத்தரைத்தபடி கடவுளின் குணங்களை கண்டறிந்து தொழுவது , மேற்கூறிய அட்டவணையில் கூறியுள்ள பயன்களை எதிர்நோக்கியதாகும்.

இதைத்தவிரவும்,படைத்தவன் எனப் பொருள்படும் உலகியற்றியான் என்ற சொல்லுடை குறளும் உண்டு.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்

இரவச்சம் அதிகாரத்தின் இக்குறளில் முயற்சி செய்து வாழ்வதை விட்டு, பிச்சை எடுத்து வாழ்வதும் செய்தொழிலில் அடங்கும் என்ற கருத்துடன் ஆண்டவன் இவ்வுலகைப் படைக்கவில்லை எனவுணர்த்த,அவ்வாண்டவனும் கெட்டொழியட்டும் என்கிறார். அதாவது முயற்சி செய்து வாழ்வதே வாழ்க்கை என்ற காரணத்தின் அடிப்படையில் தான் மனிதர் படைக்கப்பட்டுள்ளனர் என்ற கருத்தை முன்னிறுத்துவது தான் வள்ளுவப் பெருந்தகையின் நோக்கமேயன்றி,ஆண்டவனைக் குறை கூறவோ,பழிக்கவோ அன்று.

தெய்வம்-ஒரு தத்துவ ஆய்வு.

தேவ என்னும் வடமொழிச் சொல்லின் திரிபுவே தெய்வம் என்பது.தேவ என்பதற்கு ஒளிர்பவர் எனவும் ஒரு பொருளாகும்.படைக்கப்பட்ட 14 உலகங்களிலும் ஒளிர்பவர்கள் யாவர் எனில்,அமரர்கள் (இறவாநிலை எய்தியவர்கள்) எனவும் கூறப்படும் படைக்கப்பெற்ற தேவர்களேயாம்.

ஒரு இருப்பிடத்தை இலக்காகக் கொண்டு பயணிக்கையில்,திக்கு புலனாகாதபோது இரவில் தோன்றும் ஒளிரும் விண்மீன்களை வழிகாட்டிகளாகக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்து இலக்கை அடைவது போலவே, ஆன்மீகத் தேடுபவனுக்கும்,ஒளிரும் தேவர்களே வழிகாட்டிகளாக செயல்பட்டு கடவுள்வாழ்த்து மூன்றாம் குறளில் கூறப்பட்ட(மலர்மிசை ஏகினான்),உள்ளத்தாமரையில் வீற்றிருக்கும் இறைத்தன்மையை உணர ஏதுவாகிறார்கள்.

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’  என்ற திருமூலரின் வாக்கு நம்மால் உண்மையிலேயே உணரப்படவேண்டின் ஒளிரும் தேவனும்,ஒளிர்விக்கும் இறைவனும்,இவ்விரண்டினையும் வெவ்வேறென நோக்கும் ஆன்மீகத் தேடுபவனும் பிளவுகள் அற்ற ஒன்றே என்பது சாத்தியப்பட வேண்டும்.

தெய்வம்/அமரர் என்ற சொற்கள் குறள்களில் கையாளப்பட்டுள்ள முறை

தெய்வம் என்னும் சொல்லை பன்மையாகவும்,சாதி பற்றிய ஒருமையாகவும் திருவள்ளுவர் கையாண்டுள்ளதைக் காணலாம்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி. 25

நீத்தார் பெருமை அதிகாரத்தின் இக்குறளில் அகல் விசும்புளார்- அகன்ற வானத்தில் உள்ளவர்கள் என தெய்வத்தைக் குறிப்பிட்டு அத்தெய்வர்களின் தலைவனாக இந்திரனைக் குறிப்பிட்டுள்ளதைக் காணலாம்.

இனி மறைநூலில் தேவர்கள் விளக்கப்பட்டிருப்பதை சுருக்கமாகக் காணலாம்.தேவ என்னும் வடமொழிச் சொல் திவ என்னும் மூலச் சொல்லினின்று பெறப்பட்டதாகும்.பத்து வெவ்வேறு செயல்களை உணர்த்துவதாய் உள்ளது இச்சொல்.

அச்செயல்கள் விளையாடுதல்,யாவற்றுள்ளும் மேம்பட்டு விளங்குதல்,பலவற்றுள்ளும் தன்னை ஈடுபடுத்துதல்,மின்னுதல்,போற்றுதல் / துதித்தல்,மகிழ்ச்சி,உவகை,இன்பம் கொள்ளுதல்,களிப்பு,பூரிப்பு கொள்ளுதல், கனா காணல்,ஒளிர்தல்,இயங்குதல் ஆகியன

மறைகளின் படி,தேவர்கள் முப்பத்து மூவர் ஆவர்.வேதத்தில் சுக்ல யஜுர்வேதத்தின் சதபத பிராமணம் ( 14.6.9- 3,4,5,6 மற்றும் 7 ) ஆகிய பகுதிகளில் 8 வசுக்கள், 11 உருத்திரர்கள் மற்றும் 12 ஆதித்தியர்கள், தேவர்களின் தலைவன் இந்திரன் மற்றும் பிரஜாபதி,ஆக மொத்தம் 33 தேவர்கள் என பேசப்பட்டுள்ளது.

தேவர்கள்-page001

சாதி பற்றிய ஒருமைச் சொல்லாக,தெய்வம் என்ற சொல்லைக் கையாண்டு இல்வாழ்க்கை வாழ்பவன் பாராட்டவேண்டிய ஐந்து அம்சங்களுள் ஒன்றாக தெய்வத்தைக் குறிக்கிறார்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. 43

மேற்சொன்ன குறளில், ஐந்து அம்சங்களுமே இறைவன் படைத்தவையே என்பது முக்கியமாக நினைவில் நிறுத்த வேண்டியதாகும்.

ஆக ஐந்தில் ஒன்றாக தெய்வ அம்சத்தைச் சொன்ன வள்ளுவர் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் இறைவன் என்ற சொல்லை ஒருமையில் கையாண்ட விதத்தை நோக்கும்போதும், ஏனைய பிற குறள்களிலும் தெய்வம் என்ற சொல்லைக் கையாண்ட விதத்திலும் உள்ள வேறுபாடு மிகத் தெளிவன்றோ!

‘இல்வாழ்க்கை‘ அதிகாரத்தின் குறள் எண் 50ல்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும். 50

என இக்குறளிலும்,இல்வாழ்க்கை வாழ்பவனுடைய இலக்காக தேவலோகத்தைக் குறிக்கும் விதமாக வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்,என்று மனிதர்களில் எவரும் தெய்வங்களுள் ஒருவராக உயர இயலும் என,மனிதர்களின் உயரிய பரிணாம இலக்காகச் சொன்னார்.

இதே கருத்தையே அடக்கமுடைமை அதிகாரக் குறளிலும் ’அமரருள்’ என்ற சொல்லைக் கையாண்டு முன்னிறுத்தியுள்ளார்.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும். 121

இனி தெய்வத்தின் சிறப்பு,தொழுவோர்கள் வேண்டுவதை மாறாமல் வழங்குவதேயாம் என்பதை கீழ்க்கண்ட குறளில் விளக்குகிறார்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை. 55

‘வாழ்க்கை துணைநலம்‘ என்னும் அதிகாரத்திலுள்ள இக்குறள் கற்புடை இல்லாளின் பெருமை பேசுகையில்,கொண்ட கணவனையே தெய்வமாகத் தொழுபவள் எனக் கூறி, அத்தகை மகளிரின் வேண்டுதல் மழையென்றால், அம்மழை பொழிந்தே தீரும் எனக் கூறியதால்,தெய்வத்தின் சிறப்பு, வேண்டுவதைத் தந்தே தீருவது என்பதும் நிலை நாட்டப்பட்டதாகிறது.

தெய்வம் கட்டையிலோ, கல்லிலோ அல்லது மண்ணிலோ உண்டாவதன்று, நம் மனப்பாங்கில் தான் உள்ளதாகையால், மனப்பாங்கே முக்கியம் என்ற பொருள்படும் சாணக்கியனின் வரிகள் நினைவில் நிறுத்தத் தக்கவை.

வள்ளுவனுக்கு நாத்திகப் பட்டம் சூட்டுவதை,வாழ்நாளின் இலக்காகக் கொண்டுள்ள புல்லறிவாளர் சிறப்பாகப் பொருள் கூறும் குறளை ஆராய்வோம்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும். 619

‘ஆள்வினையுடைமை‘ அதிகாரத்தில் வரும் இதில்,தெய்வத்தான் ஆகாது எனினும்என்பதற்குப் பொருள் முன்வினையின் விளைவாக,இப்போது செய்யும் வினைக்கான பயன் தெய்வத்தால் தடைபெற்றாலும் கூட என்பதே. ஆனால் இருவினைப் பயன் உண்டு என்ற வகையில் ஒவ்வொரு வினைக்கான பயனைத் தருவது தெய்வத்தின் தன்மை என்பதே இதன் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.அத்தகைய பயன் நமக்கு கட்புலனாகாத முன்வினையின் விளைவாகத் தடைபடுவதையே தெய்வத்தான் ஆகாது எனும் சொற்கள் அறிவுறுத்துகின்றன.

ஊழ் அதிகாரத்தில் வரும் குறள் 377ஐ நோக்குவோம்:

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.

கோடி பொருள்கள் முயன்று சேகரித்தவர்களுக்கும்,தெய்வம் வகுத்த வகை தான் அப்பொருட்களை நுகர நேரிடும் என தெய்வத்தின் தன்மையான வினைப்பயனைத் தருவதை வகுத்தான் என்ற சொல்லினால் விளக்குகிறார்.

இதனைத் தெளிவாக்கிக் கொள்ள, நம் அன்றாட வாழ்வில் நிறுவனங்கள் அடிப்படையாக செயல்படும் விதத்தை ஆராயப் புலனாகும். நிறுவனத்தின் உரிமையாளர், பல மேலாளர்களை பணியில் அமர்த்துகையில்,ஒவ்வொரு மேலாளருக்கும் அதிகாரங்களை தனித்தனியே பிரித்து பொறுப்புக்களை ஒப்படைப்பதால்,உரிமையாளரின் அதிகாரங்கள் குலையாமையையும், மேலாளர்களுக்கு அளிக்கப்படும் திறன்கள் வரையறைகளுக்கு உட்பட்டும் வடிவமைக்கப்பட்டுள்ளதையும் நோக்குகிறோம்.

இறைவன் உரிமையாளர் எனவும், தெய்வங்கள் மேலாளர்கள் எனவும் உருவகப்படுத்தி நோக்கினால் இக்கருத்து தெளிவாகும்.

நாம் புரியும் ஒவ்வோர் வினைக்கும் வினைப்பயன் உண்டு என்பது நியதி என்றால் அந்த நியதியை உருவாக்கி உறுதிசெய்ய அறிவுணர்வுள்ள ஒரு திறனாளியாலன்றி அந்த நியதி சாத்தியமாகாது.

உலகைப் படைத்தவரான திறனாளியே அந்த இறைவன். படைக்கப்பட்டோரின் தன்மைகளுக்கேற்ப இறைவன் பற்பல பெயரும்,உருவமும்,வினைப் பயனளிக்கும் திறன்களும் கொண்ட பலப்பல தெய்வங்களாக மறை நூல்களிலும்,இதிகாச புராணங்களிலும் பேசப்பட்டுள்ளார்.

அடுத்து கீழேயுள்ள ‘குறிப்பறிதல்‘ அதிகாரத்தின் குறளில்,அமைச்சனின் தன்மையாக,ஆளும் அரசனின் கண்ணால் காணவியலாத மனத்தை அறியும் வல்லமை பற்றிக் கூறி,அத்தகை அமைச்சனை, தெய்வத்துடன் ஒப்புமையாகக் கூறுகிறார்.

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்

தெய்வத்தோ டொப்பக் கொளல். 702

இங்ஙனம் தெய்வத்தின் மற்றொரு தன்மையாக மனிதர்களின் கட்புலனாகாத மனத்தை அறியும் வல்லமை கூறப்பட்டது.

‘குடிசெயல்வகை‘ அதிகாரத்தினின்று மற்றொரு குறளை அலசுவோம்.

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான்முந் துறும். 1023

தன் குடியினை உயர்த்த உறுதி பூண்டு,அதற்கேற்ற முயற்சி மேற்கொள்பவனுக்கு தெய்வம் ஆடையை இறுகக் கட்டிக்கொண்டு முன்னே நிற்கும் என்பது இதன் பொருள்.நம் முயற்சிக்கு என்றும் முன்னே நின்று நம்மை உயர்த்துவது தெய்வத்தின் மற்றுமோர் சிறப்பாகக் கூறப்படுகிறது.

அடுத்ததாய் கயமை அதிகாரத்தின் இக்குறளில் கயவரைப் புகழ்வது போலப் பழித்துக்கூற,கயவரை தேவர் குழாத்திற்கு ஒப்பிடுகிறார்.

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான். 1073

தனக்கு படைத்தவனால் அளிக்கப்பட்டுள்ள திறன்களை தங்கு தடையின்றி வெளிக்கொணர்வது தான் தேவர்களின் இயல்பு.

என்றுமே வானில் திகழ்ந்து அனைத்துக்கும் ஒளியூட்டும் கதிரவன் ஓர் எளிய எடுத்துக்காட்டு.அத்தகைய தேவர்களை கயவருடன் ஒப்பிட்டு,தான் விரும்பியதை செய்து முடிப்பதில் தேவரும்,கயவரும் எவ்விதத்தில் ஒரே தன்மையவர் என விளக்க கயவர் அறநெறிப்படி செல்லாது,தான் விரும்புவதை தன் போக்கில் செய்வதாகப் புகழ்வது போலப் பழிக்கிறார்.

சொந்த விருப்பு வெறுப்பு ஏதுமற்று, தனக்கு உள்ள திறன்களை செவ்வனே வெளிக் கொணர்பவர்கள் என்பதாக தேவர்களின் பெருமை கூறப்படுகிறது.

தொகுப்புரை

இதுகாறும் தெய்வம் என்ற சொல்லை திருவள்ளுவர் கையாண்ட விதத்தைகீழ்க்கண்ட அட்டவணையில் தொகுத்துள்ளோம்:

தெய்வம்-page001மொத்தத்தில் நம் தெளிவின்மையை தெய்வப் புலவராம் வள்ளுவன் மேல் ஏற்றுவதைத் தவிர்த்து,முழு நம்பிக்கையுடன் வள்ளுவன் கூறிய நல்லுரைகளை உணர முற்படுவது நலம்.

இவ்வாறாக, நாம் ஆய்ந்தறிந்து,திருவள்ளுவர் பற்றிய ஐயம் நீங்கித் தெளிவோம்,அங்ஙனம் தெளிந்தால்,திருவள்ளுவர் வெறும் ஆத்திகனல்ல;வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகுந்த அமரர் எனவும்,அறிவு சார்ந்த நம்பிக்கையுடைய நம் போன்ற ஆத்திகரை வழிநடத்தி,அமரருள் உய்க்க வகை செய்யும் உயர்ந்த ஆசானெனவும் நன்றே விளங்கும்.

நன்றி!



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

சமணர்களின் கடுமையான துறவறம்!

 

சமணமும் தமிழும் – 4

அறிஞர் சீனி. வெங்கடசாமி

சமணமுனிவர் ஒழுக்கம்

வாழ்க்கையை இல்லறம் துறவறம் என்று சமணர் இரண்டுவிதமாகப் பிரித்துள்ளனர். இவ்விரண்டினையும் முறையே சாவக (சிராவக) தர்மம், யதிதர்மம் என்றுங் கூறுவர். இல்லறம் எனப்படும் சாவக தர்மம், மனைவி மக்கள் சுற்றத்தாருடன் இருந்து ஒழுகும் ஒழுக்கம். துறவறமாகிய யதிதர்மம், உலகத்தைத் துறந்து வீடுபேற்றினைக் கருதித் தவஞ் செய்யும் முனிவரது ஒழுக்கம். சமண சமய ஆராய்ச்சிக்கு, யதிகர்மம் எனப்படும் சமண முனிவர் ஒழுக்கத்தை அறியவேண்டுவது இன்றியமையாததாதலின், அதனைச் சுருக்கமாக ஈண்டு விளக்குவாம்.
பிறவியை நீக்கி, வீடுபேறு பெறுவதை நோக்கமாகக் கொண்டு, உலகத்தைத் துறக்கும் சமண முனிவர் தமது துறவற வாழ்க்கையில் மேற்கொண்டொழுக வேண்டிய ஒழுக்கங்கள் இருபத்தெட்டாகும். இவ்விருபத்தெட்டினையும் மூலகுணங்கள் என்பர்.

அவையாவன:- மாவிரதங்கள் ஐந்து; சமிதி ஐந்து; ஐம்பொறி அடக்கம் ஐந்து; ஆவஸ்யகம் ஆறு; லோசம்; திகம்பரம், நீராடாமை, பல்தேய்க்காமை, தரையிற்படுத்தல், நின்று உண்ணல், ஒரே வேளை உண்ணல் ஆக இருபத்தெட்டாம். இவற்றைச் சுருக்கமாக …

மாவிரதங்கள் ஐந்து: 1. அகிம்சை, 2. வாய்மை, 3. கள்ளாமை, 4. துறவு, 5. அவாவறுத்தல் என்பன. துறவு பெறும் சமண முனிவர் இவ்வைந்து மாவிரதங்களையும் தவறாமல் மேற்கொண்டொழுக வேண்டும்.

1. அகிம்சை : ‘‘அகிம்சா பரமோ தர்ம’’ என்பது சமணரின் அடிப்படையான தர்மம். இன்னா செய்யாமை, அருளுடைமை, கொல்லாமை, புலால் மறுத்தல் ஆகிய இந்நான்கும் ஒன்று சேர்ந்ததே அகிம்சை என்பது, ‘‘ஓரறிவுயிர் முதலாக ஐயறிவுயிர் ஈறாக, அவை சிறியனவாயினும் பெரியனவாயினும், அவற்றைக் கொல்ல மாட்டேன்; கொல்லச் சொல்லவும் மாட்டேன்; கொல்ல நினைக்கவு மாட்டேன்; மற்றவர் கொல்வதற்கும் மனம் மொழி மெய்களால் உடன்படவும் மாட்டேன்’’, என்று உறுதி கூறிச் சமண முனிவர் அகிம்சா விரதத்தை மேற்கொள்கிறார்.

2. வாய்மை : அஃதாவது பொய்யாமை. ‘‘பொய்யாமையாவது, தீமை பயக்கும் சொற்களைக் கூறாமை’’ என்றார் சமணராகிய இளம்பூரண அடிகள். சமணசமயக் கொள்கையின்படி, வாய்மை என்பது, மேற்கூறிய அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. ஒருவன் ஓர் உயிரைக் கொல்லத் துணிவானாயின், அவ்வமயம் பொய் சொல்லியாகிலுங் கொலையினின்றும் அவ்வுயிரைக் காப்பாற்ற வேண்டியது, சமணத் துறவியின் கடமையாகும். ஓர் உயிரைக் காப்பாற்றப் பொய் சொல்லுவது வாய்மையினுள் அடங்கும் என்பது சமணரின் ஓத்து. இக்காரியத்துக்காக மட்டும் பொய் சொல்லலாமே தவிர மற்றப்படி சமணத் துறவிகள் சிறிதும் பொய் பேசக்கூடாது என்பதும், மனம் மொழி மெய்களால் மெய்பேசுவதை மேற்கொண்டொழுக வேண்டும் என்பதும் சமண சமயக் கொள்கையாகும். வாய்மையைப் பற்றி நீலகேசி (மொக்கல. 60ஆம் செய்யுள்.) உரையில் கூறப்பட்ட செய்தி ஈண்டுக் குறிப்பிடத்தக்கது:
‘‘என்னை?
‘பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்’(குறள். 292)
என்பது எம் (சமணரின்) ஓத்தாதலால், பிராணி பீடா நிவர்த்தியார்த்த மாகப் பொய்யுரைத்தலும் ஆவதாகலின் என்பது…………………ஆகலின் நன்மை பயக்கச் சொல்லும் பொய் குற்றமன்றென்பது’’
‘‘நான் எப்பொழுதும் மெய்ம்மையே பேசுவேன்; ஒரு போதும் பொய் பேசமாட்டேன்; பிறர் பொய் பேசுவதை உடன்படமாட்டேன்; பிறரைப் பொய் பேசத் தூண்டவும் மாட்டேன்; மனம் மொழி மெய்களால் முக்காலங்களிலும் மெய்ம்மையே பேசுவேன்,’’ என்று உறுதி கூறி ஆருகத முனிவர் வாய்மை என்னும் விரதத்தை மேற்கொள்கிறார்.

3. கள்ளாமை: எவ்வளவு அற்பமான பொருளாயிருந்தாலும், அதனை அதற்குரியவர் கொடுத்தாலன்றி, எடுத்துக்கொள்ள மனத்தினாலும் நினையாதிருத்தல். ‘‘நாட்டிலாயினும் காட்டிலா யினும் கிராமத்திலாயினும் நகரத்திலாயினும் பிறர்க்குரிய பொருளை – அஃது அற்பமானதாக இருந்தாலும் விலைமதிக்கத் தக்கதாயிருந்தாலும், உயிருள்ள தாயிருந்தாலும் உயிரற்றதாயிருந்தாலும்-, அதற்குரியவர் கொடுத்தாலன்றி அதனை  எடுத்துக் கொள்ளமாட்டேன்; பிறர் எடுத்துக்கொள்ளவும் உடன்படமாட்டேன். மனம் மொழி மெய்களால் கள்ளாமையை மேற்கொள்கிறேன்’’ என்று உறுதி கூறிச் சமண  முனிவர் இந்த மூன்றாவது விரதத்தை மேற்கொள்கிறார்.

4. பிரமசரியம்: அஃதாவது புணர்ச்சி விழையாமை. சிற்றின்பத்தை மனம் வாக்குக்  காயங்களால், செய்யாதிருத்தல்.
‘‘தெய்வங்களுடனாவது மனிதர்களுடனாவது விலங்குகளுடனாவது இணைவிழைச்சாகிய சிற்றின்பத்தைத் துய்க்க மாட்டேன்; இதனை மனம் மொழி மெய்களால் முக்காலத்திலும் செய்யாதிருக்க உறுதி கூறுகிறேன்’’ என்று கூறிச் சமணத் துறவி இந்த நான்காவது மாவிரதத்தை மேற்கொள்கிறார்.

5. அவாவறுத்தல்: அஃதாவது முற்றத் துறத்தல். ‘‘துறத்தலாவது தன்னுடைய பொருளைப் பற்றறத் துறத்தல்’’ என்றார் சமணராகிய இளம்பூரண அடிகள். இதனைப் ‘பரிக்கிரகத் தியாகம்’ என்பர்.
‘‘அவாவென்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து’’                   (குறள்: 461)
என்றபடி, அவாவினால் மேன்மேலும் வினைகள் ஏற்பட்டு, அவற்றால் பிறப் பிறப்பாகிய சம்சாரம் உண்டாகும். ஆகையால், பிறப்பறுக்கத் துணிந்த துறவி அவா வறுத்தல் வேண்டும்.
‘‘உயிருள்ள பொருளாயிருந்தாலும் உயிரற்ற பொருளாயிருந்தாலும் சிறியதாயினும் பெரியதாயினும் எல்லாப் பொருள்களையும் துறந்து அவற்றின் தொடர்பை நீக்கிக் கொள்கிறேன்; இதனை மனம் மொழி மெய்களால் முக்காலத்திலும் செய்ய உறுதி கூறுகிறேன்’’, என்று கூறி இந்த ஐந்தாவது மாவிரதத்தைச் சமண முனிவர் மேற்கொள்கிறார்.
இந்த ஐந்து மாவிரதங்களைப் பற்றிச் சமண நூல்களில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது:
‘‘ஐவகைப் பொறியும் வாட்டி, ஆமையின் அடங்கி, ஐந்தின்
மெய்வகை தெரியுஞ் சிந்தை விளக்கும் நின்றெரிய விட்டுப்
பொய் கொலை களவு காமம் அவா இருள் புகாது போற்றிச்
செய்தவம் நுனித்த சீலக் கனைகதிர்த் திங்கள் ஒப்பார்’’
(சிந்தாமணி, 2834)
‘‘கோறல் பொய்த்தல் கொடுங்களவு நீக்கிப்
பிறர்ம னைகள்மேல்
சேற லின்றிச் செழும்பொருண்மேல் சென்ற சிந்தை
வேட்கையினை
ஆறுகிற்பின் அமருலகம் நுங்கட் கடிய தாமென்றான்
நீறும் ஓடும் நிழன்மணியும் பொன்னும் நிகரா
நோக்குவான்.’’ (நீலகேசி, 40.)

சமிதிகள் ஐந்து : 1. இரியை, 2. பாஷை, 3. ஏஷணை, 4. ஆதான நி«க்ஷபனை, 5. உத்சர்க்கம் என்பன. இவற்றை விளக்குவோம்:

1. இரியா சமிதி: சமணத்துறவி, நடக்கும்போது தரையை மூன்றுமுழ தூரம் பார்த்துப் புழுப்பூச்சிகள் இருந்தால் அவற்றை மிதிக்காமல் நடத்தல் வேண்டும். ‘‘நூற்கதிகொண்டு கண்ணால் நுகத்தளவெல்லை நோக்கி,’’ நடக்கவேண்டும் என்றார் சிந்தாமணி ஆசிரியர். கொல்லா நோன்பை அடிப்படையாகக் கொண்டவர் ஆதலால் எறும்பு, புழு, பூச்சி முதலிய  சிற்றுயிர்களும், நடக்கும் போது காலினால் மிதிபட்டிறவாதபடி விழிப்பாகத் தரையைப் பார்த்துச் சமணத் துறவி நடக்க வேண்டும். இது பற்றியே அவர் இராக்காலங்களில் பிரயாணம் செய்யார். வழியில் உள்ள சிற்றுயிர்கள் காலில் மிதிபடாதபடி ஒதுக்குவதற்காக மயிற்பீலிக் குஞ்சத்தை அவர் கையில் வைத்திருப்பார். இதுவே இரியா சமிதி எனப்படும்.

2. பாஷா சமிதி: நாவடக்கம் அல்லது வாக்கடக்கம், பழித்துப் பேசுதல், புகழ்ந்து பேசுதல், கோபமாகப் பேசுதல், கடுஞ்சொற்கூறல் முதலிய பேச்சுக்களை நீக்கி இனிமையாகப் பேசுவதையும், தரும ஒழுக்கம் சமயக் கொள்கை இவற்றைப் போதிப்பதையும் துறவி தமக்கு ஒழுக்கமாகக் கொள்வது பாஷா சமிதி எனப்படும்.

3. ஏஷணா சமிதி: நாற்பத்தாறுவகையான குற்றங்கள் இல்லாத உணவைச் சமணத் துறவி யாசித்துப்பெற்று அதிகமாக உண்ணாமல் அளவாக உண்ணுதல் ஏஷணா சமிதியாகும். உணவின் நாற்பத்தாறுவகைக் குற்றங்களைச் சமண நூல்களில் கண்டுகொள்க.

4. ஆதான நி«க்ஷபனா சமிதி: சமண முனிவருக்குரிய நூல் (புத்தகம்), குஞ்சம் (மயிற்பீலி), கமண்டலம் என்னும் இப்பொருள்களை எடுக்கும்போதும் வைக்கும் போதும் எறும்பு முதலிய சிற்றுயிர்கள் இறந்துபோகாதபடி விழிப்போடு இருந்து பைய எடுத்தலும் பைய வைத்தலுமாம்.

5. உத்சர்க்க சமிதி: சமணத் துறவி மலமூத்திரங்கழிக்கும்போது, ஊருக்கு அப்பால், ஒருவரும் நடமாடாததும் பாராததுமான இடத்தில் கழிக்கவேண்டும். அன்றியும் புழு பூச்சிகள் உள்ள இடங்களிலும் வளை முதலியவையுள்ள இடங்களிலும் கழிக்கக் கூடாது.

ஐம்பொறி அடக்கம்: ஐம்பொறிகளின் வாயிலாகவே நல்வினை தீவினைகள் உயிரைப் பற்றிப் பிணித்து, அதனைப் பிறப்பு இறப்புகளிற் செலுத்துகிறபடியால் ஐம்பொறிகளை அடக்க வேண்டுவது துறவிகள் கடமை. நாட்டியம், நடனம் முதலிய காட்சிகளைக் காண்பதும், பாட்டு,யாழ், வீணை முதலிய இசைகளைக் கேட்பதும், சந்தனம், பூ முதலியவற்றின் நறுமணங்களை முகர்வதும், அறுசுவையுணவுகளை உண்பதும், ஊறு என்னும் புலனுக்கு  இன்பமளிக்கிற பொருள்களைத் தொடுதல் தேய்த்தல் முதலியவற்றைச் செய்வதும் ஆகிய ஐம்புலநுகர்ச்சியை மனம் மொழி மெய்களாலும் நீக்குதல் ஐம்பொறியடக்கம் எனப்படும். தீர்த்தங்கரர், அருகர் முதலிய கடவுளர்களின் தோத்திரப் பாக்களைப் பாடும் இசைப்பாட்டு முதலியவற்றைக் கேட்பது, அவர்களின் சரித்திரங்களை நாடகங்களில் காண்பது முதலியவை கடவுட்பற்றுக்குக் காரணம் ஆகையால் அத்தகையவற்றைச் சமண முனிவர் ஐம்பொறி களாலும் துய்க்கலாம். ஆனால், சிற்றின்பத்திற் செலுத்தக்கூடிய ஐம்பொறி இன்பங்களை மட்டும் அடக்கவேண்டும்.
‘‘மெய்வாய்கண் மூக்குச் செவிஎனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினை – கைவாய்
கலங்காமல் காத்துய்க்கும் ஆற்றல் உடையான்
வலங்காது வீடு பெறும்.’’
என்பது நாலடி நானூறு என்னும் சமண நூல்.

jainism

ஆவஸ்யகம் ஆறு: இவை ஷடாவஸ்யக்கிரியை எனப்படும். அவையாவன:
1. சாமயிகம். 2. துதி. 3. வணக்கம். 4. பிரதி கிர்மணம். 5. கழுவாய். 6. விசர்க்கம் என்பன.
இவற்றின் விளக்கம் வருமாறு:
1. சாமயிகம்:
இன்ப துன்பம், நன்மை தீமை, உயர்வு தாழ்வு முதலியவற்றை ஒரு தன்மையாக (சமமாகப்) பார்த்தல்.
2. துதி:
இருஷபர் முதலிய இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களையும் அருகப் பரமேட்டியையும் போற்றித் துதித்தல்.
3. வணக்கம்:
அருகர், சித்தர், தீர்த்தங்கரர் முதலியவர்களின் திருவுருவங்களையும், சாத்திரங்களைக் கற்ற தபசிகளையும், தீ¬க்ஷ கொடுத்த குருக்களையும், பெரியோர்களையும் மனம் வாக்குக் காயங்களினால் வணங்குதல்.
4. பிரதிகிர்மணம்:
பாவத்திற்குக் காரணமானவை தன்னிடத்தில் மனம் வாக்குக் காயங்களினால் நேராதபடி காத்துக் கொள்ளுதல்.
5. கழுவாய்:
அஃதாவது பிராயச்சித்தம். சமண முனிவர் தமது விரதத்தில் ஏதேனும் குற்றம் நேர்ந்துவிட்டால், அதனையுணர்ந்து வருந்தி மனம் மொழி மெய்களால் தம்மையே நொந்துகொண்டு அக்குற்றத்தைக் கழுவுதல்.
‘‘ஒன்றியும் ஒன்றாதும் தான்செய்த தீவினையை
நின்று நினைத்திரங்கற் பாற்று.’’
‘‘தீயவை எல்லாம் இனிச்செய்யேன் என்றடங்கித்
தூயவழி நிற்றலும் அற்று’’             (அருங்கலச் செப்பு.)
6. விசர்க்கம்:
காயோத்ஸர்க்கம் எனவும் கூறுவர். தவம் செய்யும்போது வரும் துன்பங்களை அஞ்சாமல் பொறுத்தல். வாளும் உறையும்போல உடலும் உயிரும் வேறு வேறு என்பதை உணர்ந்து, தமது உடம்பையும் தமது என்று கருதாமல் யாக்கையிற் பற்றறுத்தல்.
‘‘பிறப்பறுக்க லுற்றார்க்கு உடம்பும் மிகை’’ என்று கருதி உடற்பற்றையும் நீக்கித் துறவின் உயர்நிலையையடைந்த சமண முனிவர், தாம் துறந்த தமது உடலினை எவ்வாறு வைக்கவேண்டும் என்பதைக் கூறுவதுதான் கீழ் வரும் ஏழு ஒழுக்கங்கள். அவையாவன. 1. லோசம், 2. திகம்பரம், 3. நீராடாமை, 4. தரையிற் படுத்தல், 5. பல்தேய்க்காமை, 6. நின்று உண்ணல், 7. ஏகபுக்தம் என்பன. இவற்றை விளக்குவாம்.

1. லோசம்: அஃதாவது மயிர் களைதல், சமண முனிவர் துறவுகொள்வதற்கு முன்னர்த் தீ¬க்ஷபெறுவர். தலைமயிரைக் களைவது தீ¬க்ஷயில் இன்றியமையாதது. தலை மயிரைக் கத்தியால் மழிக்காமல் கையினால் பிடுங்கிக் களையவேண்டும். மீண்டும் மயிர் வளரும்போதெல்லாம் அவ்வப்போது பிடுங்கிக் களையவேண்டும். இதனைச்செய்யும் நாட்களில் பட்டினி நோன்பிருக்கவேண்டும். இவ்வாறு மயிர் களையும்போது தேகத்தில் உண்டாகும் பொறுத்தற்கரிய பெரிய வலிமையப் பொறுத்துக்கொள்வது, சமணத் துறவியின் துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளும் ஆற்றலையும் மனவலிமையையும் தேகத்தின்மேல் பற்றின்மையையும் காட்டுகிறது.

2. திகம்பரம்: அஃதாவது நிர்வாணமாக இருத்தல். நகை முதலியவற்றை நீக்கித் துணி, தோல், மரவுரி, இலை முதலியவற்றாலும் உடலை மூடாமல் திகம்பரமாக (ஆகாயமே உடையாக) இருத்தல். ‘‘பிறப்பறுக்க லுற்றார்க்கு உடம்பும் மிகை’’ எனக் கண்டு தமது உடலையும் தமதன்று என உடற்பற்றையும் நீங்கிய சமணமுனிவர், அதுதொடர்பான உடை உடுத்தல் முதலியவற்றையும் நீக்கி முழுத்துறவு கொள்வர். அன்றியும், வெயிலின் வெம்மையும் குளிரின் தண்மையும் தேகத்தில்பட்டால் அவற்றையும் பொறுத்துக் கொள்வதும், எறும்பு கொசுகு முதலியவை கடித்தால் அத் துன்பங்களையும் தாங்கிக் கொள்வதும் உடம்பு தமதன்று எனத் துணிந்த சமணமுனிவரின் கடமையாகும்.

3. நீராடாமை: துறவு நிலையின் உயர்ந்தபடியிற் சென்று உடம்பும் தமதல்லவென்று துறந்து அதற்கு உடையுடுத்துவதும் பற்றுக்குக் காரணமாகும் என்று கருதித் திகம்பர நிலையை மேற்கொண்ட சமண முனிவர் உடம்பில் உண்டாகும் வியர்வை அழுக்கு முதலியவற்றைக் கழுவிப் போற்றமாட்டார். நீராடிச் செய்யும் புறத்தூய்மையைவிட அகத் தூய்மையே சிறந்ததெனக் கருதுவர் சமண முனிவர். இதுபற்றி நீலகேசி உரையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ‘இந்திரிய ஜயார்த்தமாக அஸ்நான (நீராடாமை) விரதங்கொண்டதல்லது யாங்கள் சரீரத்து மலமாக்க வேண்டுமென்று சொல்லியதூஉம் செய்ததூஉம் இல்லை’’ (மொக்கல. 318 ஆம் பாட்டுரை).
‘‘செற்றம்விட்டார் திருமேனியெல்லாம் மாசுவிம்ம
வற்றவிட்டார் …. நம்தொழு தெய்வமே’’
என்பது திருநூற்றந்தாதி.
சமண முனிவர் நீராடாமைக்கு இன்னொரு காரணமும் இருக்கக்கூடும். நீரில் மிகச் சிறிய கண்ணுக்குப் புலப்படாத உயிர்கள் உள்ளன என்பது சமண மதக்கொள்கை. சிற்றுயிரையும் கொல்லாத அகிம்சா விரதத்தை முதன்மையாகக் கொண்ட சமண முனிவர், உடற்றூய்மைக்காக நீராடினால் அந்நீரில் உள்ள நுண்ணுயிர்கள் ஊறுபட்டு இறந்துபடும் என்றஞ்சிப்போலும் அவர் நீராடாதொழிந்தது எனக் கருதுவதும் பொருந்தும். நீரில் உயிர் அணுக்கள் உள்ளமை பற்றியே சமணமுனிவர் நீருண்ணும்போது ஏழுமுறை வடிகட்டிய பின்னர்க் குடிக்கவேண்டும் என்னும் ஒழுக்கத்தைச் சட்டமாக வைத்துள்ளனர்.

4. தரையிற் படுத்தல்: பாய் படுக்கைகளின்றித் தரையின்மீது படுத்து உறங்கும்போது கல் மண் உறுத்துவதனால் உண்டாகும் வேதனைகளைப் பொறுத்தல். படுக்கும்போது இடது அல்லது வலது பக்கமாகப் படுக்க வேண்டும் என்பதும், குப்புறப் படுப்பதும் மல்லாந்து படுப்பதும் கூடாது என்பதும் கட்டளை. எறும்பு, புழு, பூச்சிகள் நசுங்கி இறவாதபடி அவை இல்லாத இடங்களில் படுக்கவேண்டும்.

5. பல் தேய்க்காமை: உடம்பும் மிகை என்று தமது உடம்பையுந் துறந்த சமண முனிவர் பல் தேய்த்துச் சுத்தம் செய்யார். அப்படிச் செய்வது, தாம் புறக்கணித்துவிட்ட உடம்பின்மீது மீண்டும் பற்றினை உண்டாக்கும் எனக் கருதுவர். இதனால், அவர்கள் தமது உடலையுங்கூட எவ்வளவு திடமாகப் புறக்கணித்தனர் என்பது அறியப்படும்.

6. நின்று உண்ணல்: சமண முனிவர், நின்றபடியே உணவை உட்கொள்ளவேண்டும். இலை முதலிய உண்கலங்களில் உண்ணாமல் கையில் வாங்கிப் புசிக்க வேண்டும். தமது அன்று என்று உடற்பற்றினையும் நீக்கிவிட்ட அவர்கள், அதற்குச் சுகங்கொடுத்து ஆசனத்தில் அமர்ந்து உண்கலத்தில் உண்பது அதனிடத்துப் பற்றுக் கொண்டு அதனைப் போற்றி வளர்ப்பதற்குக் காரணம் ஆகும் எனக் கருதி, இவ்வாறு நின்றவண்ணமே கையில் உண்பர்.

7. ஏக புக்தம்: ஒரு நாளைக்கு ஒரே வேளை, உண்ணுதல், சமண முனிவர்களில் சிலர் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, மூன்று நாட்களுக்கு ஒருமுறை உண்ணும் விரதத்தையும் கொண்டிருந்தனர். எட்டு நாட்களுக்கு ஒரு முறை உணவுகொண்ட அட்டோபவாசிகள் சாசனங்களில் கூறப்படுகின்றனர். சூரியன் புறப்பட்ட மூன்று நாழிகைக்குப் பின்னரும், சூரியன் மறைவதற்கு மூன்று நாழிகைக்கு முன்னரும், அஃதாவது, பகல் நேரத்திலேயே சமண முனிவர் ஒருவேளை உணவு கொள்ளவேண்டும்.
இதுகாறும், கூறிய இவையே சமண முனிவர் கைக் கொண்டொழுகவேண்டிய இருபத்தெட்டு மூல குணங்களாகும்.

சமண முனிவர் உடற்பற்றினைக் குறைத்துச் சக்திக்குத் தக்கபடி நோன்பிருந்தனர். இப்படிச் செய்வதை அளவுக்கு மிஞ்சிச் செய்யாமல் தமது உடல் நிலைக்கு ஏற்றபடி செய்துவந்தனர். சமணரைக் ‘‘கடுநோன்பிகள்’’ என்று ஏனைய சமயத்தவர் குறைகூறியதற்கு விடையாக, நீலகேசி என்னும் சமண நூலில் கீழ்க்கண்ட செய்தி கூறப்படுகிறது.
‘‘யாங்கள் (சமணர்) கொலை முதலாகிய பாவநிவர்த்தி யார்த்தமாக சக்திக்குத் தக்கவாறு அனசனாதிகள் (உண்ணாவிரதம் முதலியன) செய்து விஷயாநுபவம் (இன்ப நுகர்ச்சி) துறந்தனம். ………..யாங்கள் பலகாலுண்ணவும் குளிக்கவும் தாம்பூல சேவை முதலாயின பண்ணவும் புகுவோமாகில் ஆர்ஜன ரக்ஷணாதி (ஆக்கல் காத்தல் முதலிய) வியாபாரங்களால் கொலை முதலாயின பாவங்களும் ஞானத்தியான விக்கினங்களுமாதலின், ‘‘சக்தி தத்ஸ தியாக தபஸி’’ (சக்திக்குத் தக்கபடி கொடையுந் தபசும்) என்பது எம்மோத்தாகலின், சத்தியை அதிக்கிரமித்து அநசனாதிகள் செய்வதுமில்லை. வெயினிலை முதலாயினவும் வனசரராய் நின்று சகல வியாபாரங்களும் துறந்து ஒருவழி நிற்றல் இருத்தல் செய்து ஞான தியானங்கள் பயில்வுழி வெயிலும் மழையும் காற்றும் முதலாயின வந்தால் அவற்றைச் சக்திக்குத் தக்கவாறு பொறுத்தாம். என்னை?
‘‘உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு.’’                  (குறள். 241)
என்பது எம்மோத்தாகலின், தாமே வந்தன பொறுத்த லல்லது வெயில் முதலாயினவற்றுள் வருந்துதலே தவமென்று சொன்னோமோ? இல்வாழ்க்கைக்கண் நின்றாரும் இல்வாழ்க்கைக் காரியங்களுள் ஒன்று செய்வுழி அழிந்த காரியங்கள் துறந்து கிருஷி முதலாயின செய்ய, அவ்வழி வந்த வெயில் முதலாயினவும் சக்திக்குத் தக்கவாறு பொறுப்பதற்காகக் காயம் வருந்தினாராவரோ?’’ (மொக்கல, 87ஆம் பாட்டின் உரை)

இதுகாறும் கூறிய இவை யதிகர்மம் ஆகும். அஃதாவது சமணசமயத் துறவிகள் ஒழுகவேண்டிய முறையாகும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard