New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புள்ளி தந்த பிள்ளையார்! ஐராவதம் மகாதேவன்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
புள்ளி தந்த பிள்ளையார்! ஐராவதம் மகாதேவன்
Permalink  
 


புள்ளி தந்த பிள்ளையார்! 
ஐராவதம் மகாதேவன்
 
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=607
காரைக்குடிக்கும் திருப்பத்தூருக்கும் இடையிலுள்ள பிள்ளையார்பட்டி தலத்தையும் அங்கு எழுந்தருளியிருக்கும் கற்பகவிநாயகப் பெருமானையும் அறியாதவர் தமிழகத்தில் இருக்கமாட்டார்கள். அங்குள்ள் குடைவரைக் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள ஒரு சிறிய கல்வெட்டு பல முக்கியமான கண்டுபிடிப்புகளுக்குச் சான்றாக இருப்பது பலருக்கு தெரியாமலிருக்கலாம்.

பிள்ளையார்பட்டிக் குடைவரை

பிள்ளையார்பட்டிக் குடைவரை மிகவும் தொன்மையானது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் வரை இக்குடைவரை கி.பி. 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது என்றும் அதிலுள்ள இரு கருக்கு(புடைப்பு)ச் சிற்பங்கள் பல்லவ மன்னர்களின் உருவங்கள் என்றும் அறிஞர்கள் கருதி வந்தனர். இச்செய்திகளையே கம்பன் அடிப்பொடி சா.கணேசன் 1955-ல் எழுதிய 'பிள்ளையார்பட்டித் தல வரலாறு' என்ற நூலின் முதற் பதிப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதன் பின்னர் தொல்லியல் அறிஞர் டாக்டர் இரா.நாகசாமி இக்குடைவரைச் சிற்பங்களை மீண்டும் நுணுக்கமாக ஆராய்ந்து பல்லவ மன்னர்களின் உருவங்கள் என்று தவறாகக் கருதப்பட்டவை ஹரிஹரர், இலிங்கோத்பவர் ஆகிய மூர்த்திகளின் சிற்பங்கள் என்றும், பாண்டிய நாட்டில் பல்லவர் ஆட்சி செய்ததாக வரலாறு இல்லாமையால், இக்குடைவரைக் கோயிலைப் பாண்டிய மன்னர்களே நிர்மாணித்திருக்க வேண்டும் என்றும், சிற்ப அமைதியின் அடிப்படையில் இக்குடைவரை பல்லவ மகேந்திரவர்மன் காலத்துக்கு முந்தையது என்றும் பல அரிய உண்மைகளை முதன்முதலாக வெளிப்படுத்தினார். 

பண்டைய கல்வெட்டு

1965-ல் நாகசாமி என்னிடம் ஒரு போட்டோவைத் தந்து "இது பிள்ளையார்பட்டிக் குடைவரையில் பொறிக்கப்பட்டுள்ள மிகப் பழமையான கல்வெட்டு; இதை இதுவரை யாரும் சரியாகப் படிக்கவில்லை; உங்களால் முடியுமா பாருங்கள்" என்று கூறினார். அக் கல்வெட்டு 1936-ல் மையத் தொல்லெழுத்தியல் துறையினரால் முதன்முதலாகப் படியெடுக்கப்பட்டு பின்வருமாறு வாசிக்கப்பட்டுள்ளது:

ஈக்காட்டூரு-
க் கொற்றூரு (ஐஞ்) சன் (1)


இக்கல்வெட்டு பழமையான வட்டெழுத்துகளில் உள்ளது என்றும் கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். இந்த வாசிப்பின் அடிப்படையில் ஈக்காட்டூர் என்பது தொண்டை மண்டலத்தில் ஈக்காட்டுக் கோட்டம் என்ற பகுதியில் இருந்திருக்கலாம் என்று சா.கணேசன் தம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். 

நாகசாமி என்னிடம் கொடுத்த போட்டோவில் எழுத்துகள் மங்கலாகவும் முழுமையின்றியும் தென்பட்டன. (கல் தூணின் மீது சாத்தியிருந்த சந்தனக் காப்பே இதற்குக் காரணம் என்று பின்னர்தான் தெரியவந்தது!) ஓரளவு முயன்று அந்தப் போட்டோவின் அடிப்படையில் அக் கல்வெட்டைப் பின்வருமாறு வாசித்தேன்:

எருகாட்டூரு -
க் கோன் பெரு பரணன் (2)


எழுத்தமைதியிலிருந்து இக்கல்வெட்டு பல்லவ மகேந்திரவர்மன் காலத்துக்கும் முந்தையது என்றும் சுமார் கி.பி. 5-ம் நூற்றாண்டின் இறுதியில் பொறிக்கப்பட்டிருக்கலாம் என்றும் நான் அப்பொழுது எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன் (sunday standard 31.10.1965). 1966-ல் தமிழகத் தொல்லியல்துறை சென்னையில் நடத்திய கல்வெட்டுக் கருத்தரங்கில் குகைக் கல்வெட்டுகளைப் பற்றி நான் வாசித்தளித்த நீண்ட ஆய்வுக் கட்டுரையிலும் பிள்ளையார்பட்டிக் கல்வெட்டின் மேற்படி வாசகத்தையே சேர்த்திருந்தேன்.

அதற்குப் பிறகு நாகசாமி பிள்ளையார்பட்டிக்கு மீண்டும் சென்று அக்கல்வெட்டை நேரில் பார்வையிட்ட பின்னர் அதன் வாசகத்தைப் பின்வருமாறு திருத்தியமைத்தார்:

எருகாட்டூரு -
க் கோன் பெருந் தசன் (3)


எருக்காட்டூர் என்ற ஊரின் தலைவனாகிய பெருந்தச்சன் இக்குடைவரைக் கோயிலை எழுப்பிய சிற்பியாக இருக்கலாம் என்றும் இக்கல்வெட்டு சுமார் 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் கல்வெட்டியல் என்ற நூலில் (1972) அவருடைய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

Pillaiyaar.jpg


கல்வெட்டின் மீளாய்வு

இவ்வாறாக மூன்று விதங்களில் வாசிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டை நேரில் பார்த்து மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற என் விருப்பம் 1992 ஜவவரி மாதத்தில்தான் நிறைவேறியது. தொல்லியல் ஆய்வாளரும் என் நண்பருமான எஸ்.ராஜகோபால், பிள்ளையார்பட்டிக் கோயில் தேவஸ்தானத்துடன் தொடர்பு கொண்டு எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். இக்கல்வெட்டை முழுமையாக ஆய்வு செய்ய ஒரு தொல்லியல் வல்லுநர் குழுவையும் அமைத்தேன். என் அழைப்பை ஏற்று மதுரையிலிருந்து தமிழகத் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் சாந்தலிங்கம், போஸ், ராஜகோபால், வேதாசலம் ஆகியோரும், கல்வெட்டை விளம்பிப் படியெடுக்கப் பொறியாளர் மதகடி தங்கவேலுவும், என் உதவியாளராக அளக்குடி சீதாராமனும் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

எங்களை அன்போடு வரவேற்று சுவாமி தரிசனத்துக்கும் மதிய விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்த சுந்தரம் அய்யர் அவர்களும் மற்ற தேவஸ்தான அதிகாரிகளும் கல்வெட்டை மட்டும் போட்டோ எடுக்கவோ படி எடுக்கவோ அனுமதிப்பதில்லை என்று முதலில் கூறினார்கள். மிகுந்த ஏமாற்றம் அடைந்த நான், அவர்களிடம் "இக் கோயிலின் பழைய கல்வெட்டை நான் முன்னர் தவறுதலாக வாசித்து வெளியிட்டு விட்டேன். அந்த வாசகம் கோயில் தல வரலாற்றின் பிற்பதிப்புகளில் சேர்க்கப்பட்டுவிட்டது; இந்த 'அபசார'த்தைப் போக்கிக் கொள்ள நான் இக்கல்வெட்டை மீண்டும் ஆய்வு செய்து அதன் உண்மையான வாசகத்தை வெளியிட்டால்தான் முடியும்" என்று மன்றாடினேன். அதற்குப் பிறகே அவர்கள் மனமிரங்கி என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அனுமதி வழங்கினார்கள்.

நாங்களும் மகிழ்ச்சியுடன் கோயிலுக்குச் சென்று கற்பக விநாயகப் பெருமானை வணங்கிவிட்டு அருகிலேயே ஓர் அரைத் தூணில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டைப் பார்வையிட்டோம். மிகுந்த கனமான சந்தனக் காப்பு சாத்தப்பட்டு அக்கல்வெட்டு ஏறத்தாழ முழுமையாக மறைந்திருந்ததைக் கண்டோம். என்னுடன் வந்திருந்த தொல்லியல் குழு வாளி வாளியாகத் தண்னீரைக் கொட்டித் தேங்காய் மட்டை நாரினால் தேய், தேய் என்று தேய்த்து ஒவ்வொரு எழுத்தாக வெளிக் கொண்டு வந்த காட்சியை என்னால் என்றுமே மறக்க முடியாது! அப்பொழுது முழுமையாகவும் தெளிவாகவும் தெரிந்த கல்வெட்டைப் படியெடுத்து படமும் எடுத்துக் கொண்டோம். கல்வெட்டின் திருந்திய வாசகம் பின் வருமாறு"

எக் காட்டூரு-
க் கோன் பெருந் தசன் (4)


எக்காட்டூர் என்ற ஊரின் தலைவன் பெருந்தச்சன் என்பது கல்வெட்டின் பொருளாகும்.

எருக்காட்டூர்

எக்காட்டூர் என்பது எருக்காட்டூர் என்ற பழைய பெயரின் மரூஉ ஆகும். (பெருமான் 'பெம்மான்' ஆனது போல.) சங்க காலத்திலேயே இவ்வூர் இருந்தது என்பது எருக்காட்டூர் தாயங் கண்ணனார் என்ற புலவரின் பெயரிலிருந்து அறிகிறோம். புறநானூற்றைப் பதிப்பித்த தமிழ்த்தாத்தா ஐயரவர்கள் எருக்காட்டூர் என்பது தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்குத் தென் மேற்கில் உள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அண்மைக் காலத்தில் மதுரை, இராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய பிராந்தியங்களில் கிடைத்துள்ள தமிழ் - பிராமி, வட்டெழுத்துக் கல்வெட்டுகளில் இப்பெயர் பலமுறை காணப்படுவதால் இவ்வூர் பாண்டிய நாட்டில்தான் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இது பிள்ளையாபட்டியின் பழைய பெயரா என்று உறுதியாகக் கூற முடியவில்லை. ஆயினும் எருக்காட்டூரைச் சேர்ந்த பெருந்தச்சன் பிள்ளையார்பட்டிக் குடைவரைக் கோயிலை எழுப்பியவன் என்ற வரலாற்று உண்மையை இக்கல்வெட்டிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. சங்க காலத்தில் தாயங்கண்ணனார் என்ற புலவரை ஈந்த எருக்காட்டூர், சங்கம் மருவிய காலத்தில் தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயிலை நிர்மாணித்த சிற்பியையும் தந்துள்ளது என்ற பெருமைக்கும் உரித்தாகிறது.

குடைவரை பாண்டியரின் பணியே

அடுத்தபடியாக இக்கல்வெட்டு இக்குடைவரையின் தொன்மையை உறுதி செய்கிறது. வட்டெழுத்தின் தொடக்க நிலையில் உள்ள இக் கல்வெட்டின் எழுத்தமைதியிலிருந்து இது சுமார் கி.பி. 6-ம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்தது என்று சொல்ல முடியும். பாண்டிய மன்னன் சேந்தனின் வைகைப் படுகை கல்வெட்டை ஆய்வு செய்த தொல்லெழுத்தியல் மூதறிஞர் கே.ஜி.கிருஷ்ணன் அது கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்தது என்று நிறுவியுள்ளார். அக்கல்வெட்டுடன் ஒப்பிடும் போது, பிள்ளையார்பட்டிக் கல்வெட்டு குறைந்த பட்சம் ஒரு நூற்றாண்டாவது முந்தையதாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியுள்ளது. ஆகவே கி.பி. 6-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் பாண்டிய மன்னரால் எழுப்பப்பட்ட தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயில் பிள்ளையார்பட்டியாகும்.

புள்ளி தந்த பிள்ளையார்!

இறுதியாக தமிழ் எழுத்தியலில் இக்கல்வெட்டு அளித்துள்ள ஒரு முக்கியமான சான்றையும் இங்கு குறிப்பிட வேண்டும். கல்வெட்டு பொறித்த அரைத்தூணை நன்றாகக் கழுவித் துடைத்துப் பார்த்தபோது அதுவரை யாருமே பார்த்திராத புள்ளிகள் எங்கள் கண்களுக்குப் புலப்பட்டன. எகர எழுத்தின் உட்புறத்திலும் மற்ற ஆறு மெய்யெழுத்துகளின் மேலும் இடப்பட்டுள்ள புளிகள் பளிச்சென்று தென்பட்டன.

மெய்யின் இயற்கை புள்ளியோடு நிலையல்
எகர ஒகரத் தியற்கையுமற்றே


என்று தொல்காப்பிய சூத்திரம் கூறியிருப்பினும் பழைய கல்வெட்டுகளிலும் ஓலைச்சுவடிகளிலும் புள்ளிகள் பெரும்பாலும் இடப்படவில்லை. பிள்ளையார்பட்டிக் கல்வெட்டில் புள்ளிகளைக் கண்ட பிறகு மேலும் கள ஆய்வு நடத்தி சித்தன்னவாசல், திருநாதர்குன்றம், பறையன்பட்டு போன்ற இடங்களில் உள்ள அதே காலத்திய கல்வெட்டுகளிலும் மெய்யெழுத்துகளின் மீதும் எகர ஒகரத்துடனும் புள்ளிகள் இடப்பட்டுள்ளதை எங்கள் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். (கடந்த 30 ஆண்டுகளில்தான் தமிழ் - பிராமி எழுத்துகளிலும் பண்டைய வட்டெழுத்துகளிலும் புள்ளிகள் இடப்பட்டுள்ளதை ஆய்வாளர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.)

தமிழ் எழுத்தியலில் ஒரு காலகட்டத்தில் தீராத பிரச்சினையாக இருந்த புள்ளி பிரச்னையைத் தீர்த்து வைக்க வழிகாட்டியருளிய கற்பக விநாயகப் பெருமானின் கருணையை வாழ்த்தி அங்கிருந்து விடை பெற்றுக் கொண்டோம்.

(5 செப்டம்பர் 1997 தினமணியில் வெளியான கட்டுரை, வரலாறு.காம் வாசகர்களுக்காக மறு பிரசுரம் காண்கிறது)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard