New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிலப்பதிகாரத்தில் கொற்றவை வழிபாடு


Guru

Status: Offline
Posts: 24601
Date:
சிலப்பதிகாரத்தில் கொற்றவை வழிபாடு
Permalink  
 


சிலப்பதிகாரத்தில் கொற்றவை வழிபாடு (Post No.3964)

9 months ago

bda63-durga2bdevi252c2btamil2bnadu.jpg?w

 

Research ArticleWritten by London Swaminathan

 

Date: 2 June 2017

 

Time uploaded in London- 8-40 am

 

Post No. 3964

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

(I wrote this for ‘Soundaryam’ published by Hindu Tamil Cultural Association, Enfield,London)

 

b7017-durga2bmetal.jpg?w=600

“ஆனைத் தோல் போர்த்துப் புலியின் உரி உடுத்துக்

கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால்—

வானோர் வணங்க, மறைமேல் மறையாகி,

ஞானக் கொழுந்தாய், நடுக்கு இன்றியே நிற்பாய்!

(வேட்டுவ வரி, சிலப்பதிகாரம்)

 

செந்தமிழில் உள்ள ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று சிலப்பதிகாரம். “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” — என்று பாரதியாரால் போற்றப்பட்ட அற்புத காவியம். பழந்தமிழ் நாட்டில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற நாநிலப் பிரிவுகளுக்கு முறையே விஷ்ணு,முருகன், இந்திரன், வருணன் தெய்வங்களாக இருந்ததை “ஒல்காப்புகழ் தொல்காப்பியன்” எழுதிய தொல்காப்பிய சூத்திரம் மூலம் அறிகிறோம்:

மாயோன் மேய காடுறை யுலகமுஞ்

சேயோன் மேய மைவரை யுலகமும்

வேந்தன் மேய தீம்புன லுலகமும்

வருணன் மேய பெருமணலுலகமும்

முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே

(தொல். பொருள். 1-5)

 

இந்த நாநிலம் அதன் நிலை திரிந்து வறண்டு போனால் அது பாலை நிலம் எனப்படும். அதற்கான தெய்வம் கொற்றவை என்னும் ‘தேவி’யாகும். சம்ஸ்கிருதத்தில் கொற்றவையை ‘துர்கா’ என்று அழைப்போம். கொற்றவை வழிபாடு குறித்து பல சுவையான தகவல்களை, நமக்கு, இளங்கோ அடிகள் யாத்த, சிலப்பதிகாரம் தருகிறது. அவை இன்று வழக்கற்றுப் போனது மேலும் வியப்பை ஏற்படுத்தும்.

 

தற்போதுள்ள உலக மதங்களில் இந்து மதம் ஒன்றில் மட்டுமே கடவுளைப் பெண் வடிவத்திலும் வணங்குகிறோம். அந்த அளவுக்குப் பெண்களுக்கு உயர்நிலை கொடுக்கப்பட்டது. சங்க காலம் முதல் இந்தக் கொற்றவை எனும் பெண் தெய்வம் (முருகு.368, பெரும்.583, நெடு.192) வழிபாடு இருப்பதற்குப் பல சான்றுகள் உள. இக்கட்டுரையில் சிலப்பதிகாரக் குறிப்புகளை மட்டும் காண்போம்:

 

மான் வாகனம்

துர்கைக்கு/ கொற்றவைக்கு மான் வாகனம் என்ற குறிப்பு சிலம்பில் வருகிறது. பிற்காலத்தில் நால்வரில் ஒருவரான திருஞான சம்பந்தரும் மான் வாகன தேவி பற்றி (கலையதூர்தி) என்று பாடுகிறார். ஆனால் சிங்கத்தின் மீதும், புலியின் மீதும் காட்சி தரும் தற்கால துர்கை, மான் வாகனத்தில் அமர்ந்த கட்சி எங்கேயும் காணக் கிடைக்கவில்லை; அதாவது சிலையிலோ, படத்திலோ இல்லை! இது ஒரு வியப்பான செய்தி. இளங்கோ பாடிய சிலம்பிலிருந்து, சம்பந்தர் பாடிய தேவாரம் வரை காணப்படும் கொற்றவையின் மான்  வாகன ‘’போஸ்’’ நமக்குக் கிடைத்தில.

 

பாலைவனத்தில் வாழ்வோர் மறவர்கள் ஆவர். அவர்கள் கொலைக்கும் அஞ்சாத வீரர்கள். பாலைவனம் வழியாகக் கடந்து செல்லும் வணிகர், தூதர் முதலியோரைத் தாக்கி, அவர்களைக் கொன்று, பொருள்களை வவ்வுவதே பாலை நில மக்களின் தொழில். தாங்கள் கொன்ற மிருகங்களை கொற்றவைக்குப் படைப்பதும் இவர்கள் வழக்கமாகும்.

சிலப்பதிகாரத்தில் ஐயை, கார்த்திகை என்ற பெயர்களுடைய பெண்களும் காட்சி தருகின்றனர். அவை துர்க்கையின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது

மதுரை நகருக்கு கவுந்தியடிகளுடன் நடந்து வந்த கண்ணகியும் கோவலனும் முதலில் ஒரு கொற்றவை கோவிலில்தான் தங்குகின்றனர்:

“விழிநுதற் குமரி, விண்ணோர் பாவை,

மையறு சிறப்பின் வான நாடி

ஐயை தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு – என்”

(காடுகாண் காதை, சிலம்பு)

 

இதைத் தொடர்ந்துவரும் வேட்டுவ வரிப் பாடல் முழுதும் கொற்றவை வருணனை வருகிறது.

கொற்றவை கோவிலில் சாலினி வெறியாடியதை (சாமி ஆடல்)  எல்லோரும் வியப்புடன் பார்த்தனர். கலையமர் செல்விக்கு பலிதந்தால்தான் நன்மைகள் விளையும் என்று அவள் சாமி ஆடுகையில் முழங்குகிறாள். இதோ இளங்கோவின் வரிகள்:

 

“கலையமர் செல்வி கடன் உணின் அல்லது

சிலையமர் வென்றி கொடுப்போள் அல்லள்;

மட்டு உண் வாழ்க்கை வேண்டுதீர் ஆயின்

கட்டு உண் மாக்கள்! கடம் தரும் என் ஆங்கு”

(கலை= மான்)

e7c63-durga2bin2bwood2bcolor.jpg?w=600

பெண்ணுக்கு கொற்றவை வேஷம்

இன்னொரு விநோத வழக்கத்தையும் சிலம்பு பாடுகிறது. அதாவது ஒரு சிறு பெண்ணை கொற்றவை போல அலங்கரித்து மான் வாஹனத்தில் ஏற்றி ஊர்வலம் விட்டு வணங்கியதையும் இளங்கோ சொல்லுகிறார். சங்க காலத்தில் நடந்த இக்கொற்றவை வழிபாடு இன்று எங்கும் காணக் கிடக்கில. நேபாள  நாட்டில் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து “குமாரி” என்று தெய்வமாக வழிபடுவதை இன்றும் காணலாம்.

 

“பழங்குடிக் குமரியின் முடியை உயர்த்திப் பொன்கயிற்றினால் கட்டினர். காட்டுப் பன்றியின் கொம்பை பிறைச் சந்திரன் போல அவளுக்கு அணிவித்தனர். புலிப்பல் தாலியை அணிவித்து புலித்தோலை ஆடையாகப் போர்த்தி, அவளை மான் மீது ஏற்றி ஊர்வலம் விட்டனர். அவள் கையில் கிளி, கோழி முதலியவற்றைக் கொடுத்து வழிபட்டனர். அவளைத் தொடர்ந்து பெண்கள் பலர், சோறு, எள்ளுருண்டை, நிணச் சோறு, நறுமணப் பொருட்கள் ஆகியவற்றைச் சுமந்து வந்தனர். பெரிய வாத்தியங்கள் முழங்கின. இது இளங்கோ அடிகள் நமக்கு அளிக்கும் செய்தி.

 

இதற்குப் பிறகு இளங்கோ அடிகள், துர்கையை மஹிஷாசுரமர்த்தனியாக வருணிக்கிறார். இன்றும் மாமல்லபுரத்தில் “எருமை அசுரனை” (மஹிச அசுரன்) தேவி, வதம் செய்த காட்சி, அருமையானச் சிலை வடிவில் காட்சிதருகிறது;

பல்லவர்கள் சிலை செய்வதற்கு முன்னரே இளங்கோ அடிகள் செய்யுள் வடிவில் ஓவியம் தீட்டிவிட்டார்:

 

“மதியின் வெண்தோடு சூடும் சென்னி

நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்

பவள வாய்ச்சி, தவளவாள் நகைச்சி,

நஞ்சு உண்டு கறுத்த கண்டி, வெஞ்சினத்து

அரவு நாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்

துளை எயிற்று உரகக் கச்சுடை முலைச்சி,

வளியுடைக் கையில் சூலம் ஏந்தி

கரியின் உரிவை போர்த்து, அணங்கு ஆகிய

அரியின் உரிவை மேகலை ஆட்டி

சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி,

வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை!

இரண்டு வேறு உருவின் திரண்டதோள் அவுணன்

தலைமிசை நின்ற தையல்; பலர் தொழும்

அமரி, குமரி, கவுரி, சமரி,

சூலி, நீலி, மால் அவற்கு இளங்கிளை

ஐயை, செய்யவள், வெய்யவாள் தடக்கைப்

பாய்கலைப் பாவை, பைந்தொடிப் பாவை;

ஆய்கலைப் பாவை, அருங்கலப் பாவை

தமர் தொழ வந்த குமரிக் கோலத்து

அமர் இளங்குமரியும் அருளினள் –

வரியுறு செய்கை வாய்ந்ததால் எனவே”

 

பொருள்: சந்திரப் பிறை சூடிய தலை; நெற்றிக் கண்; பவள வாய், முத்துச் சிரிப்பு, நஞ்சுண்ட கறுத்த கழுத்து, பாம்பையே கயிறாகக் கொண்டு மேரு மலையை வில்லாக  வளைத்த வில்லி; துளை அமைந்த பல்லுடைய விஷப் பாம்பையே கச்சு ஆக அணிந்த முலையுடையாள்; வளைகள் அணிந்த கையில் சூலம், யானைத்தோல் போர்வை, புலித்தோல் மேகலை, இடப்புற காலில் சிலம்பு, வலப்புறக் காலில் கழல், வெற்றி கொடுக்கும் வாள் ஏந்திய கை, மகிஷாசுரன் தலையில் நிற்பவள்; எல்லோரும் தொழும்குமரி, கறுப்பி, போரின் அதிதேவதை, சூலம் ஏந்திய பெண்; நீல நிறத்தவள்; எம் தலைவி, செய்யவள், தடக் கையில் கொடிய வாளேந்திய நங்கை; பாயும் மான் மீது ஏறி வருபவள்; மலைமகள், கலைமகள், திருமகளின் உருவம்; இளங்குமரி; அவள் அருள் நமக்குக் கிடைத்துவிட்டது.

 

வழக்குரை காதையிலும் கண்ணகியின் தலைவிரி கோலத்தைக் கண்டவுடன், வாயிற்காப்போன், பாண்டிய மன்னனிடத்தில் சொல்லுகையில் வாசலில் வந்து நிற்கும் பெண் கொற்றவை அல்லள், காளி அல்லள், பிடாரி அல்லள் என்று பல பெண் தெய்வங்களின் பெயர்களை எல்லாம் சொல்லுகிறான். சங்க காலத்தில் பெண் தெய்வ வழிபாடு, குறிப்பாக கொற்றவை வழிபாடு, எந்த அளவுக்குப் பரவியிருந்தது என்பதைக் காண முடிகிறது. புராணத்தில் வரும் மஹிஷாசுர மர்தனி, அர்த்தநாரி முதலிய கருத்துகளும் துர்கை என்பவள் சிவன், நாராயணன் எனும் வடிவத்தின் பெண் உரு என்ற கருத்தும் மூன்று தேவியரின் மாற்று உரு என்றும் கருத்து தொனிக்கும் அற்புத வரிகள் இவை. சங்க காலத்தில் ஒரே தெய்வம் என்ற கொள்கையை மக்கள் உணர்ந்த போதிலும் அவளைப் பல்வேறு வடிவங்களில் வழிபட முழ்டியும் என்பதை இளங்கோ சொல்லும் போது நாம் துர்கா அஷ்டோத்திரம் படிக்கும் உணர்வு ஏற்படும்!

 

மேலும், வேட்டுவ வரி முழுதும் கொற்றவை வழிபாடுதான்; படிக்கப்படிக்கக் கழிபேருவகை தரும்!

 

கண்ணகி, தனது கணவன் கோவலன் கொலையுண்ட செய்தி கேட்டவுடன், அவள் வளையல்களை உடைத்தெரிகிறாள். இதுவும் கொற்றவை கோவிலில் நடந்த நிகழ்ச்சி.

 

6fb0d-mumbai-mukerjee-during-durga-puja.

சிலப்பதிகாரம் தவிர தமிழில் பல்வேறு கால கட்டங்களில் எழுந்த இலக்கியங்களில் கொற்றவைக்குப் பல பெயர்கள் காணப்படுகின்றன:

அமரி, எண்டோளி, வெற்றி, அந்தரி, அம்பணத்தி, சமரி, ஆளியூர்தி, பாலைக் கிழத்தி, வீரச் செல்வி, மகிடற்செற்றாள், குமரி, கலையதூர்தி, கொற்றவை, சக்கிரபாணி, விமலை, கலையானத்தி, விசயை, அரியூர்தி, நாரணி, விந்தை, நீலி, காத்தியாயனி, சுந்தரி, யாமலை, சயமகள், மேதிச் சென்னி, மிதித்த மெல்லியல், கௌரி, ஐயை, பகவதி, கொற்றி, சக்கராயுதத்தி, மாலுக்கிளையநங்கை, சூலி, வீரி, சண்டிகை, கன்னி, கார்த்திகை, நாராயணி, தாருக விநாசினி

 

வாழ்க கொற்றவை / துர்க்கை புகழ்!

பெருகுக! தேவியின் அருள்!

எங்கும் மங்களம் பொங்குக!!!

 

e9253-kudroli2bdurga2b1.jpg?w=600

-Subham-



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard