New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தொல்காப்பியரின் முறையுடைப் பேச்சு முனைவர் அ.ஜான் பீட்டர்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
தொல்காப்பியரின் முறையுடைப் பேச்சு முனைவர் அ.ஜான் பீட்டர்
Permalink  
 


தொல்காப்பியரின் முறையுடைப் பேச்சு

தொல்காப்பியரின் முறையுடைப் பேச்சு
         முனைவர் அ.ஜான் பீட்டர்
 
1535678_274446209374445_685336160_n.jpg
 
இலக்கியங்களின் அமைப்பையும் பாடுபொருளையும் பயனையும் முறைப்பட விளக்கும் இலக்கண நூலாகத் தொல்காப்பியம் - பொருளதிகாரம் விளங்குகிறது. தொல்காப்பிய பொருளதிகாரத்தின் இயல்களாகிய செய்யுளியலில் யாப்பிலக்கணமும் உவமவியலில் அணியிலக்கணமும் மெய்ப்பாட்டியலில் இலக்கியத்தின் எண்சுவைகளும் மரபியலில் தமிழ் மரபுகளும் பற்றிக் குறிப்பிட்ட தொல்காப்பியர் அகத்துறை இலக்கியங்களுக்கான வரைவிலக்கணத்தை அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் ஆகிய நான்கு இயல்களிலும் புறத்துறை இலக்கியங்களுக்கான வரைவிலக்கணத்தைப் புறத்திணையியலிலும் குறிப்பிடுகிறார்.
அகத்துறை இலக்கியங்களில் பாத்திரங்களாக வரும் தலைவன், தலைவி, தோழி, பாங்கன், நற்றாய், செவிலித்தாய் ஆகியோர் வெவ்வேறு சூழல்களில் நிகழ்த்தும் கூற்றுகளைக் குறித்துத் தொல்காப்பியர் இலக்கணம் படைக்கிறார். களவொழுக்கத்தின் கண் நிகழும் மாந்தர் கூற்றுக்களைப் பற்றி களவியலிலும் உடன்போக்கில் தலைவனும் தலைவியும் ஈடுபடும் காலத்து மாந்தர் கூற்றுக்களையும் தலைவனின் பிற பிரிவுக் காலங்களின் கூற்றுக்களையும் குறித்து அகத்திணையியலிலும் தோழி முதலானோர் அறத்தோடு நிற்றலின் போது நிகழும் மாந்தர் கூற்றுக்களைப் பொருளியலிலும் கற்பொழுக்கத்தின் கண் நிகழும் கதை மாந்தர் கூற்றுக்களைக் குறித்துக் களவியலிலும் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்
 
இவ்வாறு கூற்றுக்களின் தன்மை அடிப்படையில் அவற்றை வகைப்படுத்தி வெவ்வேறு இயல்களில் முறைவைத்து அதன் கூறுகளை விளக்கிக் கூறும்  தொல்காப்பியரின் கூற்றுமுறைமை பாராட்டிற்கும் வியப்பிற்கும் உரியது.
252.jpg

 
பிரிவின் கண் நிகழும் கூற்றுக்கள்:
அகத்துறை இலக்கியங்கள் இரண்டு வகைப் பிரிவுகளைச் சுட்டுகின்றன 1.தலைவனும் தலைவியும் பிறரைப் பிரிந்து உடன்போக்கில் ஈடுபடுதல் 2. தலைவன் பொருள் தேடியும் கல்வி கற்கவும் போர் பயிலவும் பரத்தையை நாடியும் செல்வதான இதர பிரவுகள். இப்பிரிவுகளின் போது நிகழும் கூற்றுக்களைக் குறித்து அகத்திணையியலில் தொல்காப்பியர் குறிப்படுகிறார்.
உடன் போக்கின் போது நிகழும் கூற்றுக்கள்: தலைவனும் தலைவியும் பிறர் அறியாவண்ணம் உடன்போக்காக பிற ஊரையோ தேயத்தையோ நாடிச்செல்லுதல் உடன்போக்கு ஆகும்.
தலைவியின் தாயாகிய நற்றாயின் கூற்று பற்றிக் குறிப்பிடும் தொல்காப்பியர் நற்றாய் புலம்பல் என்று அவளின் மனநிலை வெளிப்படக் கூறுகிறார். (நூ:982) தன்னையும் தலைவியையும் தலைவனையும் குறித்துப் பேசுதலும், நிமித்தம், நற்சொல் கேட்டல், தெய்வக்குறி பார்த்தல் ஆகியவற்றால் பின்விளைவினை ஆய்தலும் நன்மை, தீமை, அச்சம் உள்ளிட்டவற்றால் குழப்பமெய்திக் கலங்குதலும் இறப்பு நிகழ்வு, எதிர்வு எனும் முக்காலத்தையும் பலவாறாக ஆராய்ந்து விளக்கமாகத் தோழிகளிடம் பேசுதலும் கண்டோரித்தும் புலம்புதலும் நற்றாயின் கூற்றாக அமையும் என்கிறார் தொல்காப்பியர்.
தோழியின் கூற்றுக்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது ‘ஒன்றித் தோன்றும் தோழி’ என்ற தொடரைத் தொல்காப்பியர் பயன் படுத்துவது கண்டின்புறத்தக்கதாகும். இஃது தலைவி கூற்றா அன்றி தோழிகூற்றா என்று தடுமாற்றம் தரும் பல சங்கப் பாடல்கள் உண்டு. தலைவியின் மனநிலையைத் தம் மேல் ஏற்றிப் பாடும் தோழியின் கூற்றாயமைந்த பாடல்களால் தொல்காப்பியரின் உணர்வினை நாமும் பெறுகிறோம்.
வரக்கூடிய துன்பங்களைக் கண்டு எச்சரித்தல், உடன்போக்கிற்கு இசைதல், உடன்படுதல், குடும்பத்தினரின் துன்பம் கூறி இரங்குதல், தாயைத் தடுத்துக் கூறல், தாயின் நிலைகண்டு இரங்கித் தேற்றுதல் ஆகியன உடன்போக்கின் போது தோழியின் கூற்றாய் நிகழும் என்று தொலைகாப்பியர் முறைமைப் படுத்துகிறார்.
கண்டோரின் கூற்று பற்றி அடுத்துக் குறிப்பிடும் தொல்காப்பியர், பொழுதையும் வழியையும் குறித்து எச்சரித்தல், ஆர்வமொடு ஆற்றுப் படுத்துதல், அன்புடன் விடையிறுத்தல், தேடி வரும் தாயைத் தடுத்தல், விடுத்தல் ஆகியன பற்றிச் சுரத்திடைக் கண்டோர் கூற்று நிகழும் என்று வரையறுக்கிறார்.
தலைவனின் கூற்றாய், வெப்பம் மிகுந்த சுரத்தின் தன்மையும், கொடிய பாலைவழியின் இயல்பு கூறி தோழியிடம் இரங்கலும், தலைவியின் நலம் கருதி விடுத்துச் செல்லவும் மனங்கொண்டு உரைத்தலும், தலைவியை இடைச்சுரத்தே அவள் சுற்றத்தார் மீட்டுச் சென்றுழி பெருந்துயர் எய்தி தலைவியின் நிலைக்குக் கலங்குதலும் குறிப்பிடப்படுகின்றன.
பொருள், கல்வி, தூது, போர், நாடு காவல் ,பரத்தை இவை குறித்த தலைவனின் பிரிவு நிகழும் காலங்களில் தலைவனின் கூற்று நிகழும் முறைமையைத் தொடர்ந்து தொல்காப்பியர் அகத்திணையியலில் குறிப்பிடுகிறார்.(நூ:987)
பிரிவுக் காலத்தைய தலைவியின் கூற்று குறித்து தொல்காப்பியம் எதுவும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏடு எழுவோரால் தவறாக இப்பகுதி விடுபட்டிருக்கலாம் என்ற கருத்தை இளம்பூரணர் கருதுவது குறிப்பிடத்தகுந்ததாகும். எஞ்சியோருக்கும் எஞ்சுதல் இலவே (நூ:988) என்ற நூற்பா பிரிவு குறித்த பிறரின் கூற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
களவுக் காலத்துக் கூற்றுகள்
களவொழுக்கத்தில் ஈடுபடும் தலைவனும் தலைவியும் இயற்கைப் புணர்ச்சியில் இன்பந் துய்த்தலும், குறியிடத்துச் சந்தித்தலும், தோழியின் நெறிமையும், அலரும், அறத்தொடு நிற்றலும் ஆகிய களவுக்கால கூற்றுக்கள் எவ்வாறு அமையும் என்பதைத் தொல்காப்பியர் முறைபடுத்துகிறார்.
தலைவனின் கூற்று களவொழுக்கத்தில் முதன்மை பெறுகிறது. இயற்கைப் புணர்ச்சியின் போது மெய்தொட்டுப் பயிறல், பொய் பாராட்டல் தொடங்கி தலைவனின் கூற்றுகள் விரிவாகப் பேசப்படுகின்றன. (நூ:1048). இடையூறு உற்றதைக் கூறுதல், இரங்குதல், கூடி மகிழ்ந்துரைத்தல், அச்சம் தெளிவித்தல் ஆகிய பொருட்களில் தலைவனின் கூற்று நிகழும். தலைவனைப் பெற்றதால் மகிழ்ச்சியும் பிரிய நேர்வதால் கலக்கமும் தலைவிடம் நிகழவேண்டியதை உரைப்பதும் இடித்துரைக்கும் பாங்கனிடம் மேன்மை கூறுதலும், தோழியிடம் இரத்தலும், தினைப்புனக் காவலில் ஊரும் பேரும் வினவலும், வேட்டையாடிய மா இங்கு வந்ததோ? என்று வினவுதலும் போன்றன தலைவனின் களவுக் காலக் கூற்றுகளாக மேலும் அமைகின்றன.
பகற்குறி இரவுக்குறி தவறுமிடத்தும், காம வேட்கையில் கலங்கிச் செயலற்ற பொழுதும், வரைவுக்கு உடம்படுமிடத்தும், திருமணத்தை மறுத்தலின் போதும் உள்ளிட்ட பல்வேறு சூழல்களில் தலைவனின் கூற்று மேலும் நிகழ்வதை நூ:1053 குறிப்பிடுகிறது.
தலைவி கூற்று: 1054 முதல் 1059 அமைந்த 6 நூற்பாக்களில் களவொழுக்கத்தில் ஈடுபடும் தலைவியின் கூற்றைக் குறித்து தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். பொதுவாக நாணமும் மடனும் பெண்மையின் அணிகலனாக இருப்பதால் குறிப்பால் அன்றி வெளிப்பட கூறாளாகிய தலைவி தன் கண்களிரண்டால் காதலைக் கூறுவாள். கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்களாகிய கூற்றுக்களால் என்ன பயனும் இல என்பதைக் காமம் சொல்லா நட்டம் இன்மையின்… (நூ:1055)என்ற நூற்பாவால் தொல்காப்பியரும் சுட்டுகிறார்.
இயற்கைப் புணர்ச்சியின் பின்னர் தலைவி வருந்துதலும், நாணப்படுதலும், சிறு பிரிவுக்கும் வருந்துதல், காப்பு அருமைகூறித் தலைவனைத் தடுத்தல், அலராகும் என மறுத்தல், கூடிய வழிமகிழ்தல், களவுக் கூட்டத்தைத் தலைவிக்கு வெளிப்படுத்தல், களவை மறைக்க முயலுதல், பல்வேறு சூழல்களால் அச்சப்படுதல், தலைவனது இயல்பைப் பேசுதல், சிந்தை அழிந்து வருந்துதல், தண்ணளி மிகுதல், வரைவிடை வைத்துத் தலைவன் பிரிந்தபோது வருந்துதல்  உள்ளிட்ட பல்வேறு கூற்றிடங்களைத் தலைவியின் கூற்றாக எத்தொடர்புமின்றிக் கலந்து தொல்காப்பியர் கூறியிருக்கிறார்.
தோழியின் கூற்று: நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும் முதலானவற்றில் தலைவியிடம் காணும் மாற்றம் அறிதல், தலைவனிடம் மறுத்துரைத்தல், களவைத் தடுத்து வரைவைத் தூண்டுதல், தலைவனைத் தடுத்ததின் காரணம் கூறுதல், பலவாறு நகையாடிப் பேசுதல், பகற்குறி இரவுக்குறி மறுத்தல், தலைவியின் இளமைச் சிறப்பை எடுத்துரைத்தல், தலைவியின் காதல் மிகுதி கூறல், தாய் ஐயப்படும்போது மறுத்துரைத்தல் போன்ற பல இடங்களில் தோழியின் கூற்று நிகழும்.
செவிலி, நற்றாய் கூற்று: களவொழுக்கம் வெளிப்படத் தோன்றுதல், தலைவியின் காமவேட்கை மிகுதல், தோற்றத்தில் மாற்றம் தோன்றுதல், குறி, வெறியாடல் ,கழங்கு பார்த்தவிடத்தும், கனவில் தலைவி பிதற்றுதலின் போதும் முதலானான இடங்களில் செவிலித்தாயின் கூற்று நிகழும் என நூ:1061 இல் தொல்காப்பியம் தெரிவிக்கிறது. செவிலியின் உணர்வு நற்றாய்க்கும் ஒக்கும் ஆதலின் செவிலிக்கூற்றின் தன்மைகள் நற்றாய்க்கும் பொருந்தும் என்கிறார் தொல்காப்பியர்.
கற்பொழுக்கத்தின் கூற்று முறைகள்
களவொழுக்கம் முடிந்து பெரியோர் இணைத்து வைத்த கரணத்தினால் திருமணம் முடிந்த பின்னர் நிகழும் கூற்றுக்களை களவியிலில் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். வழமை போல் தலைவன் தலைவி, தோழி, செவிலி ஆகியோரது கூற்றுகள் இடம்பெறுகின்றன. (விரிவு கருதி இவை இங்கு இடம்பெற வில்லை) இவையன்றி வாயில்கள் எனப்படும் பாங்கன், பார்ப்பன், பாணன் பாடினி, இளையர், விருந்தினர், கூத்தர், விறலியர், அறிவர், கண்டோர் ஆகியோரது கூற்றுகளும், காமக்கிழத்தியின் கூற்றுகளும்  கற்பொழுக்கம் சார்ந்த சிறப்புடைய கூற்றுகளாய் அமைகின்றன.
காமக்கிழத்தியர் கூற்று: தலைவன் தலைவி ஆகியோரின் வினை குறித்த இகழ்ச்சிக் கூற்றுகள், புதல்வரைக் கண்டு மகிழ்தல், தம்மாட்டு வந்த வாயில்களை மறுத்துக் கூறல், மனைவியை ஒத்த சிறப்பினள் என்று கூறுதல் போன்றன காமக்கிழத்தியரின் கூற்று ஆகும்.
 
அறத்தோடு நிற்றல்
 தலைவன் தலைவியினிடையே இருந்த மறைவொழுக்கத்தை உலகத்தாருக்குத் தெரிய வாழும் கற்பொழுக்கமாக மாற்றுதலுக்காக நிகழும் ஒரு செயல்பாடே அறத்தோடு நிற்றலாகும்.
தலைவனின் எளிமைத் தன்மையைக் கூறுதல், தலைவனை உயர்த்திக் கூறுதல், தலைவன் தலைவியரது உள்ள வேட்கையை எடுத்துரைத்தல், குறிப்பாய்க் கூறுதல், காரணம் காட்டுதல், இயல்பாக இணைந்தனர் என்று கூறுதல், நிகழ்ந்ததைக் கூறுதல் ஆகிய ஏழு முறைகளில் அறத்தோடு நிற்கும் காலமறிந்து தோழி தலைவியின் காதல் குறித்துக் கூறுவாள் எனப் பொருளியலில் எடுத்துரைக்கப்படுகிறது.
மேலும் காம மிகுதியால் உறுப்புடையது போல், உணர்வுடையது போல், மறுத்துரைப்பது போல், மெய்பாடு தோன்ற நெஞ்சோடு கிளத்தலும் கனவின் கண் உரைத்தலும் குறித்து பொருளியல் மேலும் பேசுகிறது.
இவ்வாறு அகத்திணையில் நிகழும் கூற்றுக்களின் தன்மைகளை பல நீண்ட நூற்பாக்களால் தொல்காப்பியர் கூறுகிறார். சுருங்கக் கூறுதல் என்ற கொள்கையைக் கடைபிடித்து காரண காரியச் செயல்களோடு முறைவைத்து இலக்கண நூல் கண்ட தொல்காப்பியர் கூற்றுகளைக் குறித்து விரிவாகக் கூறுதல் ஆய்விற்குரியது. 
‘தொல்காப்பியத்தில் தமிழர் வாழ்வியல்’ என்ற பொருண்மையில் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி(தன்னாட்சி)யில் நடைபெற்ற செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆதரவில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் 10.01.2013 அன்று வாசித்தளிக்கப்பட்டது.

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard