New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறளின் கல்வி அதிகாரம் - ஓர் ஆய்வு


Guru

Status: Offline
Posts: 24601
Date:
திருக்குறளின் கல்வி அதிகாரம் - ஓர் ஆய்வு
Permalink  
 


திருக்குறளின் கல்வி அதிகாரம் - ஓர் ஆய்வு

 
%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%


                  தேவர்க் குறளும் திருநான் மறைமுடியும்

                  மூவர் தமிழும் முனி மொழியும்

                  கோவைத் தமிழும் திருவாசகம் சொல்லும்

                  ஒரு வாசகம் என்றுணர்
 
     ஒரு மனிதன் தன் வாழ்வில் அவசியம் கொண்டிருக்க வேண்டியது கல்வி. கல்வியினைச் சிறப்பித்து பல அறிஞர்கள் பாடியுள்ளனர். மேலும், நம்முடைய இந்து மதத்தில் கல்விக் கடவுள் வாணியை மும்மூர்த்திகளில் முதலாமவராக நம் ஞானிகள் குறிப்பிடுகின்றனர். “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்பது ஔவை வாக்கு. ஆக, நாம் பொருள் படைத்திருக்காவிடிலும் கல்விச் செல்வம் பெற்றிருக்க வேண்டும் என்று புலப்படுகிறது. ஒருவன் தன் வாழ்வில் இரந்து நின்றாலும் கல்வி கற்றல் சிறப்பே என்று ஔவை பிராட்டி நமக்கு விளக்குகின்றார். இவ்வாறாக, இவ்வரும்பெரும் செல்வமான கல்விச் செல்வத்தை நம் தெய்வப்புலவர் வள்ளுவர் தன்னுடைய 40வது அதிகாரத்தில் பாடியுள்ளார். இந்த கல்வி எனும் அரிய செல்வத்தினைப் பாட்டுடைப் பொருளாகக் கொண்டு பிற அறிஞர்களும் பாடியிருக்கின்றனர். ஆக, இவ்வேளையில் நாம் வள்ளுவப் பேராசான் எழுதிய கல்வி அதிகாரத்தை முதலாகக் கொண்டு ஏனைய அறிஞர்களின், கல்வி பற்றிய  கருத்துகளை உற்று நோக்கவுள்ளோம்.
     கல்வி அதிகாரத்தின் முதல் குறளாக அமைவது,
கற்க கசடற கற்பவை கற்றபின்

 நிற்க அதற்குத் தக (குறள் 391)
என்ற குறளாகும். அறிஞர் மூ. வரதராசர் அவர்கள் இயற்றிய திருக்குறள் தெளிவுரை என்ற நூலில் இக்குறளுக்கானப் பொருள் விளக்கம், “கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்கவேண்டும். அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்கவேண்டும்” என்பதே ஆகும். இதன் வழி, வள்ளுவப் பெருந்தகை பிழையறக் கற்றதை வாழ்க்கையில் ஒழுக வேண்டும் என்று விளம்புகின்றார். நாம் ஒன்றினை பிழையறக் கற்கையில் சிறந்த கல்வியினைப் பெறுகின்றோம். ஆகையால், நாம் பெற்ற அச்சீரிய கல்வியானது வெறுமனே ஒரு அறிவாக நிலைத்துவிடாது அதனை நம் வாழ்வின் பின்பற்றினோமேயானால் நம் வாழ்வு மேன்மையடையும் ஆதலால் இக்குறள் வழி நாம் நடப்பது உசிதமாம்.
     இதனையே, முண்டாசு கவி பாரதி தன்னுடைய புதிய ஆத்திச்சூடியில்,“கற்றது ஒழுகு என கூறி வைத்தான். கற்ற கல்வி வெறுமனே கற்றதோடு நின்றுவிட்டால் பின் கற்ற கல்வியின் பயன் என்னவோ? ஏட்டுக் கல்வியை விட அனுபவக் கல்வியே சிறந்தது என்பதற்கு கற்ற விசயத்தைக் கல்வியோடு நிறுத்திக் கொள்ளாமல் அதை அனுபவமாக்கி, கற்ற கல்விக்கு அழகு சேர்த்தலே சிறப்பு என பொருள் கொள்ள விழைகிறேன். எனவே, தான் மூதறிஞர்கள் கற்றதை வாழ்க்கையில் நடைமுறைப் படுத்துதல் அவசியம் என்கின்றனர். கல்வி என்பது ஒரு மனிதனின் வாழ்வினை நெறிப்படுத்துகிறது. எனவே தான், கிரேக்க அறிஞர் “பிளட்டோ”, கற்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே மேல். ஏனென்றால், கல்லாமைதான் தீவினையின் மூலவேர்” என்றுரைத்திருக்கின்றார். ஆகவே, இக்கூற்றின் வழி கல்வியே நல்வழிக்கு வழிவகுக்கும் என்று தெரியவருகின்றது. கற்றக் கல்வியை பிழையறக் கற்று அதனை வாழ்க்கையில் ஒழுகுவதே மேன்மை தரும்.
     கல்வி எனும் அதிகாரத்தின் இரண்டாவது குறளாய்,
           எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்

            கண்என்ப வாழும் உயிர்க்கு. (குறள் 392)
எனும் குறள் அமைகின்றது. பொய்யாமொழி புலவன், இக்குறள் வழி கூறும் கருத்து யாதெனில், “எண் என்று சொல்லப்படுவன, எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இருவகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்” எனப் பொருள் விளங்க தன் நூலில் தெளிவுரை அமைத்திருக்கின்றார், கவிஞர் வரதராசர் அவர்கள். நம் அன்றாட வாழ்வில் கணிதமும் மொழியியலும் அடிப்படையாய் விளங்குவது நமக்கு கண்கூடு. தினசரி, உரையாடல், தொடர்பு, கற்றல் மற்றும் கற்பித்தல் ஆகியன மொழியினை, அதாவது எழுத்துக்களைச் சாரமாகக் கொண்டு இயங்குதற் போன்றும் அன்றாட பண்டமாற்று, விற்றல், வியாபாரம் போன்றவை கணிதத்தை முதலாகக் கொண்டு விளங்குவதும் நாம் அறிந்ததே. இவை அனைத்தும் ஒரு சராசரி மனிதனின் அன்றாட வாழ்வில் அவசியமாய் இடம்பெறுகின்றன. எனவே தான், எண்ணின் அடிப்படையிலான கணிதமும், எழுத்தின் அடிப்படையிலான மொழியியலும் மக்களுக்கு கண்களாய் திகழ்கின்றன என்றார், வள்ளுவப் பெருந்தகை. இவ்விரண்டையும் சரியான முறையில் கற்றறியாதவன் எவ்வாறான வாழ்க்கை வாழ்வான் என்பது நம் சிந்தனைக்குரியதாம். அவனுடைய வாழ்க்கை ஒழுங்குற செயல்படாது. ஏனெனில், வாழ்வில் ஒரு மனிதனின் கண்களாய், அதாவது வழிகாட்டியாய் அமையும் எண்ணும் எழுத்தும் இல்லையெனில் அவன் குருடனை ஒத்த நிலையை அடைவான் என்பது இங்கே தெள்ளத் தெளிவாய் நிருபணமாகின்றது. எண்ணும் எழுத்தும் வாழ்வின் வழிகாட்டி என்பதையே ஐயன் வள்ளுவன் நம் சிந்தையில் பதிவு செய்கின்றார்.
           கண்உடையவர் என்பவர் கற்றோர்: முகத்திரண்டு

            புண்ணுடையர் கல்லா தவர். (குறள் 393)
     40வது அதிகாரத்தின் மூன்றாம் குறள், “கண்ணுடையவர் என்று உயர்வாகக் கூறப்படுபவர் கற்றவரே: கல்லாதவர் முகத்தில் இரண்டு புண்கள் உடையவர் ஆவர்” என்ற பொருள் ஏற்று வருகின்றது. இதன்வழி, நம்மால் அறியப்படுவது என்னவெனில், கற்றவரே பூரணமானவர், மாறாக கல்லாத பேதையர் கண்களற்ற குருடர்களாய், ஊனமானவர்களாய் விளங்குவர் என்று தெரியவருகின்றது. கல்வி கற்காதவர்கள், என்றுமே சமுதாயத்தின் உயர்ந்த நிலையில் அறியப்படமாட்டார். பாரதிதாசனே தன் பாடலில்,
சொட்டுக் குழம்புக்கும் சோற்றுக்கும் கையில் ஒரு

துட்டுக்கும், கண்ணயர்ந்து தூங்குதற்கும் – கட்டத்

துணிக்கும் துடிக்கின்ற ஏழையையும் நல்ல

பணக்காரன் ஆக்கும் படிப்பு
என்று பாடி, கல்வி வாழ்வின் மேன்மைக்கு இட்டு செல்லும் என பாமரனையும் பணிய வைக்கும் வகையில் எளிய தமிழில் உணர்த்தியிருக்கின்றார். படிப்பறிவற்றவனும் தன் வாழ்வில் ஒளி பெற ஒரு உந்துதலாய் திகழும் இப்பாடல், கல்வியற்றவனின் இருளற்ற வாழ்க்கையை நமக்கு கண் முன்னால் கொண்டு வருகின்றது அல்லவா? வள்ளுவன் பாடிய படி, கல்வி அற்றவன் பரிபூரணமானவன். ஆனால், கல்லாமை சூழ்ந்த பேதையரோ ஒளி பெற்ற கண்கள் அன்றி புண்களையே அணியாகப் பெற்றிருக்கின்றனர். கல்லாமை ஒரு தாழ்வு என்பது இம்மூன்றாவது குறள் வழி அறியப்படுகின்றது. இழித்து கூறப்படும் நிலையினை உதிர்த்து, வாழ்வில் நிமிர்ந்து முன்னேற கல்வி எனும் அணிகலனையே நாம் சூட்டிக்கொள்ள வேண்டும். நிலையான கல்விச் செல்வத்தை “சங்கத் தமிழ் மூன்றும் தா” என்று கணபதியை வேண்டிப் பெற்ற ஔவைப் பிராட்டி, அரிது அரிது என்ற பாடலில், ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது” என்று பாடியிருக்கின்றார். கல்விச் செல்வத்தைப் பெறுவது அரிதாயினும் அதுவே நம்மை உயர்விற்கு இட்டுச் செல்லும் என்று நாம் உற்று நோக்குகையில் உர்சிதமாகின்றது.
     நான்காவதாய் இடம்பெற்றிருக்கும் குறள்,
           உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

            அனைத்தே புலவர் தொழில் (குறள் 394)
என்பதாகும். அதன் பொருள் பின்வருமாறு: மகிழும்படியாகக் கூடிப் பழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும். கற்றோரின் நட்பு நமக்கு இன்பம் பயக்குமாம். கற்றறிந்த புலவரிடத்தே கொண்ட உறவு நமக்கு அறிவு பயக்கும். புத்தம் புதிய செய்திகள், கருத்துகள் வற்றாத ஊற்றாய் பெருக்கெடுக்கும். நாம் கல்வி எனும் நிலையான செல்வத்தைக் கேள்விச் செல்வம் வழி பெறுவோம். இதனால் தான், செல்வத்துள் செல்வம் என்று கேள்விச் செல்வத்தைப் பாடியிருப்பார் போலும், பொய்யில் புலவர். பெருஞ்செல்வமான கேள்வி செல்வம் அல்லவா நம்மை கல்வி எனும் அழியாச் செல்வத்திற்கு இட்டுச் செல்கின்றது? இப்புலவர்களின் மத்தியில் இருந்தோமேயானால், நமக்கு அருந்த அருந்த குறையாத தேனமுதம் போன்ற கல்வி செல்வம் கிடைக்கப்பெறும், இதனையே நறுந்தொகை,
           “ஒரு நாட் பழகினு பெரியோர் கேண்மை

            இருநிலம் பிளக்க வேர் வீழ்க்குமே”
என்று உயர்ந்த குலத்தோரான கற்றறிந்த அறிஞரிடத்தே கொண்டிருந்த நட்பு இனி இவரை எங்கு காண்போம் என்று ஏங்கும் படியாகச் சலித்தலின்றி நிலைப் பெற்றாயிற்று. இஃது, அயன் வள்ளுவன் புலவரிடத்தே உடைய நட்பு எத்தகைய தன்மை உடையதாய் உள்ளது என்று விளித்துக் கூறப் பெறுகின்றது.
     உலகப்பொதுமறையாம் திருக்குறளில் ஐந்தாவதாய் இடம்பெற்றிருக்கும் குறள் வெண்பா,
           உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்

            கடையரே கல்லா தவர் (குறள் 395)
எனும் வெண்பா ஆகும். அக்குறளின் விளக்கம், செல்வர்முன் வறியவர் நிற்பதுபோல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்வி கற்றவரே உயர்ந்தவர்; கல்லாதவர் இழிந்தவர் என்று பொருள் பட விளங்கும் இக்குறள் ஒருவன் தன் வாழ்விற்குத் தேவையான கல்விச் செல்வத்தைப் பெற கற்றறிந்த அறிஞர்முன்  தாழ்ந்து நிற்பானே ஆயினும் கற்றவன் எனில் அவன் உயர்ந்தவனே, கல்லாதாவன் இழிந்தவனே எனும்படி வள்ளுவர் இக்குறளை இயற்றியிருக்கின்றார். பாரதிதாசன் தன் “கல்வி பயில” எனும் பாடலில்,
           கல்லாத மூடனை “வா” என்பார்: கற்றவனை

            எல்லாரும் “வாருங்கள்” என்றழைப்பார்.
என்று கல்வி கற்றவனுக்கு இச்சமுதாயத்தில் அளிக்கப்படும் மரியாதையினைப் பாமரர்களும் அறியும் வகையில் தன் பாடலில் எளிமையாக விளக்கியிருக்கின்றார்.  மேலும், நறுந்தொகை பாடல், “நாற்பாற் குலத்தின் மேற்பா லொருவன் கற்றிலனாயின் கீழிரு ப்பவனே என உயர்ந்த குலத்திற் பிறந்தவனாயினும் கல்லாதவனாயின் தாழ்ந்தவனே என்று கல்லாமையின் விளைப்பயனை எடுத்து இயம்புகின்றது. கல்லாதவனின் நிலை எவ்வகையில் இழிவானது என்று தமிழ் கிழவி தன் பாடலின் வழி உலகிற்கு உணர்த்துகின்றார். அப்பாடல்,
           கவையாகி கொம்பாகி காட்டகத்தே நிற்கும்

            அவையல்ல நல்ல மரங்கள் – சபை நடுவே

            நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய

            மாட்டாதான் நின்றான் மரம்
என்று காடுகளில் உயர்ந்து வளர்ந்திருக்கும் மரங்கள் மரங்களல்ல. மாறாக, கற்றறிந்த சபை நடுவே ஒரு ஒலையில் எழுதப் பெற்றிருக்கும் வாசகத்தை வாசிக்க மாட்டாதவன் தான் உண்மையான மரம் என்று கல்வி கற்றிராத வர்க்கத்தின் முகத்தில் அறைந்தாற் போன்று இக்கவியை இயற்றியிருப்பது கல்வியின் அவசியத்தை இவ்வுலக மக்களுக்குத் திறம்பட எடுத்துக் காட்டுகின்றது. அவ்வகையில், “கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு”என்று நாம் அறியப் பெறுகின்றோம். கற்றவர்கள் தாங்கள் பெற்ற நிலையான செல்வமான இக்கல்விச் செல்வத்தின் வழி ஒரு நாளும் தாழ மாட்டார்கள், கல்லாதவர்கள் ஒரு நாளும் உயர்ந்த நிலையை அடைய மாட்டார்கள்.    
     ஆறாம் குறளாய், வாயுறைவாழ்த்து என வழங்கப்பெறும் திருக்குறளில் இடம்பெறும் குறள்,
                தொட்டணைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்

                  கற்றனைத்து ஊறும் அறிவு (குறள் 396)
எனும் குறளாகும். மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்; அதுபோல், மக்களுக்கு கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும். என்று பொருள்பட இக்குறளை அமைத்திருக்கின்றார், ஒரு மனிதன் அவன் கற்ற கல்வியின் அளவே அவனின் அறிவின் திறமும் அமையும். கல்வி அளவற்ற ஒரு செல்வமாகும். அது அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியைப் போன்று நமக்கான அறிவும் அள்ள அள்ளக் குறையாது பெருகியிருக்கின்றது.“கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு” என்ற சொற்றொடர் வழி இவ்வுலகில் நாம் பெறவேண்டிய அறிவு இன்னும் நிறைய நிறைந்திருக்கின்றது. மேலும், ஒரு அறிஞர் “ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட ஒரு பள்ளிக்கூடம் கட்டுவது சிறந்தது எனக் கூறியிருக்கின்றார். எனவே, இதன்வழி கல்வியின் மகத்துவத்தை நாம் அறிந்து கொள்கின்றோம். கல்வி ஒர் உயர்ந்த சமுதாயத்தை உருவாக்கும், ஆதலால் அனைத்து இளைய தலைமுறையினருக்கும் கல்வியினைச் சென்று சேர்ப்பிக்க வேண்டும்.
          யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன்

            சாந்துணையும் கல்லாத வாறு  (குறள் 397)
என்பது திருக்குறளின் ஏழாம் குறளாகும். கற்றவனுக்குத் தன் நாடும் ஊரும்போலவே வேறு எதுவாயினும் நாடாகும்; ஊராகும்; ஆகையால், ஒருவன் சாகும்வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்? ஒருவன் தான் கற்ற கல்வியின் வழி எந்நாட்டிற்கும் எவ்வூரிற்கும் சொந்தமாகின்றான். கல்வித் தகுதி அவனை அதற்குத் தகுதியானவனாக்கின்றது. ஒருவனுக்கு என்றும் புகழ் கொணரும் செல்வம் கல்வி ஒன்றே ஆகும். மனிதன், தன் வாழ்நாளில் கல்வியின் பெருமைகளை அறிந்தும் ஒருவன் கல்வியை உதாசினப்படுத்துவது என்பது ஏன் என்று இன்னும் புலப்படவில்லை.“கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது இங்கே உர்சிதமாகின்றது. ஒருவன், தன் வாழ்வில் கற்காத நாளெல்லாம் வீணடிக்கின்றான். இது ஒரு மனிதனின் சோம்பலைக் காட்டுகின்றது. கல்வியறிவற்றவன், கல்வி அறிவு பெற்றவனைப் போல் பாவிப்பது மூடத்தனம் ஆகும்.
           காண மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

            தானும் அதுவாகப் பாவித்து தானும் தன்

            பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போல்

            கல்லாதான் கற்ற கவி
கல்வி கற்றவனைப் போல் பாவித்து கற்காதவன் நடிப்பது மயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி அதுவும் தன் சிறிய சிறகை விரித்தாடுவதற்கு ஒப்பாகும். சற்றும் தகுதியற்றவன் ஒன்றினை அடைய முயற்சி செய்வதற்கு இணையான செயலாகும்.
     அடுத்த குறள்,
           ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவன்

            எழுமையும் ஏமாப் புடைத்து  (குறள் 398)
என்ற குறளாகும். ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் ஒருவனுக்கு ஏழுபிறப்பிலும் உதவும் தன்மை உடையதாகும். இத்தன்மையுடையதாய் இருப்பதால் தான் கல்வி நிலையான் செல்வமாகும். ஒருவன் தன் வாழ்நாளில் கற்ற கல்வியானது ஏழு பிறப்பிற்கும் தொடரும் என்பதால் மனிதன் என்பவன் தன்னுடைய கல்வி அறிவைப் பெருக்கத் தயக்கம் கொள்ளக் கூடாது. ஒரு மனிதனின் வாழ்வை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் தூண்டுகோல் கல்வியாகும். கல்வி தகுதி ஒருவனை அனைவரின் அன்புக்குரியவராய் ஆக்கும். “அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்” எனும் செய்யும் இதனை வெள்ளிடை மலையாகக் காட்டுகின்றது. மனிதன் கல்வி எனும் செல்வத்தை நோக்கி முன் செல்லவேண்டும்.
     அடுத்த குறள், ஒன்பதாவது எண் குறள்,
           தாம்இன் புறுவது உலகின் புறக்கண்டு

            காமுறுவர் கற்றறிந் தார்   (குறள் 399)
ஆகும். இக்குறள் தன்னகத்தே கொண்டிருக்கும் பொருளானது என்னவென்றால், தாம் இன்புறுவதற்கு காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் கல்வியையே விரும்புவார், என்பதாகும். உலகளாவிய நிலையில் இன்று கல்வி பெறும் சிறப்பு பெற்று விளங்குகின்றது. அக்கல்வியினால், உலக மக்களும் மகிழ்ச்சி பெற்று நாளுக்கு நாள் மகிழ்ச்சி பெருக தங்களைக் கல்வித் துறையில் ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இவ்வாறாக, ஒரு அறிஞன் என்பவன் தான் மகிழும் கல்வியின் பொருட்டு உலகமே மகிழ்ச்சி கொள்ளும் நிலையைக் கண்டு இன்புறுவான் எனில், அவனே உண்மையான கற்றவன் ஆவான். கல்வி என்றும் பிறரை கீழான நிலைக்கு இட்டு சென்றதில்லை. இதனை, இவ்வுலகமே அறிந்து தெளிந்திருக்கின்றது. கல்வி ஒருவரை மேன்மையான நிலைக்கே இட்டுச் செல்லும் தன்மையைத் தன்னோடு கொண்டிருக்கின்றது. எனவே தான், அதனை அறிந்து தெளிந்தவர்களும் சிறப்போடு திகழ்கின்றனர். இதையே முற்றும் உணர்ந்த முனி போல் தேவர் தம் தெய்வநூலில் செப்பியிருக்கின்றார். கல்வியே ஒருவனுக்கு நிலைக்கொண்டச் செல்வமாம்.
     40வது அதிகாரமன கல்வி அதிகாரத்தின் இறுதி குறளாய் முத்தாய்ப்பாய்த் திகழ்வது,
           கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு

            மாடுஅல்ல மற்றை யவை (குறள் 400)
எனும் பத்தாம் குறளாகும். இக்குறள் கல்வியின் ஒட்டுமொத்த சிறப்பினை விளக்குகின்றது. இக்குறளின், பொருள் என்னவென்று உற்று சிந்தித்தால், ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும்; கல்வி தவிர மற்றபொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல என்று மூ. வரதராசனார் அவர்கள் தெளிந்து உரைத்திருக்கின்றார். மனிதனின் வாழ்விற்கும் அவனுடைய ஏனைய பிறப்புகளுக்கும் அவனைப் பின்தொடரும் நிலையான செல்வம் கல்வியே தவிர மற்றேதும் இல்லை. இதனை அனைவரும் அவரவர் அனுபவங்களின் வழி தானே அறிந்து உணர்ந்திருக்க வேண்டும். அனைவரும் வாழ்க்கையின் அனைத்து நிலையிலும் கல்வியை முன்னிறுத்தி பின்னரே பொருளை முன்னிறுத்துகின்றார்கள். மேற்கூறியது போல், கல்வி தானே பொருளை ஈட்டும், ஆனால் பொருளால் இயலாது.
     எனவே, அனைவரும் கல்வி எனும் ஆழ்ந்த கடலில் மூழ்கி முத்தெடுப்போம். கல்வியானது, தொடக்கத்தில் கசக்கலாம், ஆனால், அதனில் வெற்றி பெற்றால் சுவைக்கும். இதனையே, ஆங்கில எழுத்தாளர் ஒருவர், கல்வியின் விதைகள் கசப்பானது, ஆனால், கனியோ இனிப்பானது எனக் கூறியிருக்கின்றார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறாக, கல்வியின் பெருமைகளைத் தேவர் அவர்கள் தம்முடைய அரும் நூலான திருக்குறளில் விளம்பியிருக்கின்றார்.
     திருவள்ளுவர் திருவடிகள் வாழ்க, அவர் அளித்த குறள்கள் வாழ்க


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard