New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறளில் அறம்- ஒரு ஒருங்கிணைந்த புரிதலுக்கான வாசிப்பு - கு.அழகர்சாமி


Guru

Status: Offline
Posts: 24601
Date:
திருக்குறளில் அறம்- ஒரு ஒருங்கிணைந்த புரிதலுக்கான வாசிப்பு - கு.அழகர்சாமி
Permalink  
 


திருக்குறளில் அறம்- ஒரு ஒருங்கிணைந்த புரிதலுக்கான வாசிப்பு

கு.அழகர்சாமி

1.முன்னுரை:

திருக்குறளின் அறம் நடைமுறை வாழ்க்கையின் உன்னதத்தின் அடிப்படையாகும். இரு வரிகளில் அமைந்ததால் மட்டும் குறளல்ல. அணுவைத் துளைத்து ஆழ்கடலைப் புகட்டியதால் மட்டும் குறளல்ல. ஒவ்வொரு அதிகாரத்திலும் பேசப்படும் கருத்தின் முழுமையைப் பத்துக் குறட்பாக்களில் பேசிக்காட்டும் அசாத்தியத்தில் தான் அது குறள். அந்தப் பத்துக் குறட்பாக்களில், பேசப்படும் அறக் கருத்து வரையறுக்கப்படும்; அதன் அவசியம் விளக்கப்படும்; விளைவுகள் சொல்லப்படும். அதாவது அறங் கடைப்பிடிப்பதின் மேன்மையும், அறத்தைக் கடைப்பிடிக்காததின் கீழ்மையும் குறிக்கப்படும். கூர்ந்து நோக்கினால் சில கருத்துக்களை நிறுவுவதற்காகக் காணும் நடைமுறை நிகழ்வுகளைச் சான்றாகக் காட்டும் அனுபவ அணுகுமுறையும் (empirical method) கையாளப்படும்.( குறள்கள் 37,114,169 போன்ற குறள்களை நோக்குக)சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஒவ்வொரு அறக் கருத்தென்னும் வைரத்தின் பன்னிறங்கள் பத்துக் குறட்பாக்களில் பட்டை தீட்டப்பட்டிருக்கும்.

2.திருக்குறள் வாசிப்பு- ஒரு அதிகாரத்தில் குறட்பாக்கள் அளவில்:

இப்படி ஒவ்வொரு அறக்கருத்தையும் பத்துக் குறட்பாக்களில் வாசிக்கும் போது சில சமயங்களில் ஒரு அதிகாரத்தில் பேசப்படும் அறக் கருத்தின் கட்டமைப்பும் உன்னதமும் இப்போது இருக்கும் நிரல் முறையில் அல்லாமல் வேறு நிரல்முறையில் இருந்தால் இன்னும் உன்னதம் கூடி நிகரற்று விளங்குமோ என்று தோன்றும். இது உள்வயமானது (subjective) என்று சிலர் புறந்தள்ளலாம். இப்போது இருக்கும் ஒவ்வொரு குறட்பாக்களின் நிரல் முறையும் உள்வயமானதென்று இருக்கும் போது இன்னொரு நிரலில் அமையும் உள்வயமான வாசிப்பு ஒரு அறக்கருத்தைக் கூடுதலாய்ப் பட்டை தீட்ட முடியமென்றால், திருக்குறள் என்ற நிகரற்ற படைப்பு வாசகனுக்குத் தரும் வாசிப்பு சுதந்திரம் அது. அரவிந்தர் திருக்குறளின் கடவுள் வாழ்த்தையும் , வான் சிறப்பின் ஐந்து குறள்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். திருக்குறளின் கடவுள் வாழ்த்தை அரவிந்தர் மொழி பெயர்த்துள்ள விதம் போப், சுத்தானந்த பாரதி போன்ற மற்ற மொழி பெயர்ப்பாளர்களிடமிருந்து வித்தியாசமாக மூலத்தின் உண்மையையும், உயிர்ப்பையும் வெளிப்படுத்துகிறது.(Usha Mahadevan(Jan(2009)) அதற்கு அரவிந்தருடைய ஆன்மீக அனுபவம் காரணமாய் இருக்க வேண்டும். ஆனால் சுவாரசியமானது என்னவென்றால் கடவுள் வாழ்த்தின் பத்துக் குறட்பாக்களை மொழி பெயர்க்கும் போது அவர் நிரல்படுத்தியிருக்கும் முறை. வழக்கமாக கடவுள் வாழ்த்தில் நாம் வாசிக்கும் பத்துக் குறட்பாக்களின் நிரல் முறையை, 1,2,3,4,5,6,7,8,9,10 என்பதற்குப் பதிலாக 1,2,3,7,8,4,5,6,10,9 என்று மாற்றியமைக்கிறார். இந் நிரலை1,2,3,6,7,8,4,5,10,9 என்று சிறிது மாற்றியமைத்தால் இன்னும் வாசிப்பு அனுபவம் மிகைப்படும். சொல்லப்படும் முறையிலும், கருத்தாக்கதிலும் மூன்றாவது ஆறாவது குறள்கள் இயைபுடைத்தாயிருக்கின்றன. இந்த இரு குறள்களை வாசித்துப் பாருங்கள்.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடு வாழ்வார்.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடு வாழ்வார்.

இதே போன்று ஏழாவது எட்டாவது குறள்களும், நான்காவது ஐந்தாவது குறள்களும் முறையே இயைபுடையதாகி வாசிப்பு அனுபவத்தைக் கூட்டுகின்றன. இறைவனைச் சார்ந்தோருக்குச் சேரும் நலன்களைச் சொல்லும் நான்காவது, ஐந்தாவது குறள்களோடு பத்தாவது குறள் அடையும் நலன்களின் மலையடுக்குகளில் இறுதி உச்ச அடுக்கைச் சொல்வது போல் இருக்கிறது. மேற்சொன்ன மூன்று குறள்களையும் ஒரு சேர வாசித்துப் பாருங்கள்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தாருக்கு

யாண்டும் இடும்பை இல.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடி சேராதார்.

திருக்குறளின் இந்த ஒருங்கிணைந்த வாசிப்பு அனுபவம் வாசிக்கும் யாருக்கும் ஏற்பட்டிருக்கும். உதாரணமாக அறன் வலியுறுத்தல் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நான்காம், ஐந்தாம் குறள்கள் அறத்தை வரையறுக்கின்றன.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்

ஆகுல நீர பிற.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச் சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.

இவற்றை முதல் இரு குறட்பாக்களாக வாசித்துப் பார்க்கலாம். அறத்தின் சிறப்பை ஒன்றாம் இரண்டாம் ஒன்பதாம் குறள்கள் பேசுகின்றன. ஆறாம், எட்டாம் குறள்கள் அறம் செய்ய வேண்டிய காரணங்களைச் சொல்கின்றன. மூன்றாம், பத்தாம் குறள்கள் அறம் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. அதற்கு நடை முறை உண்மையைச் சொல்வதாய் ஏழாவது குறள் அமைகிறது. கீழ் சொல்லப்படும் இந்த ஏழாம் குறளைப் பத்தாவது குறளாக வாசித்துப் பார்க்கும் போது ஒரு முத்தாய்ப்பு போல் ஒரு ஒருங்கிணைந்த வாசிப்பு அனுபவம் கிடைக்கிறது.

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

ஆக அறன் வலியுறுத்தல் அதிகாரத்தின் எனது வாசிப்பு அனுபவத்தில் 4,5,1.2,9,6,8,3,10,7 என்று குறள்களை நிரல் மாற்றி வாசிக்கும் போது அறன் வலியுறுத்தல் என்ற கருத்தாக்கத்தின் முழுப் பரிமாணமும் ஒருங்கிணைந்த வாசிப்பாய் மனத்தில் பிடிபடுகிறது. இன்னொருவருக்கு, இது வேறு விதமாகவும் அமையலாம். இங்கு வலியுறுத்தப்படுவது வழக்கமான நிரல் முறை வாசிப்பில் திருக்குறளின் மகோன்னதம் முழுதும் மனத்தில் பிடிபடாமல் போய் விடும் சாத்தியம் இருக்கிறது என்பதைத் தான். இது ஒரு அதிகாரத்தின் கீழ் வரும் பத்துக் குறட்பாக்களின் வாசிப்பை விட , அடுத்த தளத்தில் அதிகார முறைமையில் வாசிக்கும் போது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

3.திருக்குறள் வாசிப்பு- அதிகார அளவில்:

திருக்குறளின் அறத்துப்பால், பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்ற நான்கு இயல்களாக அமைந்துள்ளது. ஒவ்வொரு இயலும் அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, இல்லறத்துக்கான அறங்களைப் பேசுவது இல்லறவியலாகவும், துறவறத்துக்கான அறங்களைப் பேசுவது துறவறவியல் எனவும் இல்லறவியல் துறவறவியலுக்கான வகைப்படுத்தலை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.. ஆனால் இப்படி எளிதாகக் கோடு போட்டுக் கொண்டு வாசிப்பது ஒருங்கிணைந்த வாசிப்பு அனுபவத்தைத் தருவதாக இல்லை. இல்லறவியலில் வைக்கப்படும் அறக்கருத்துக்களுக்கும் துறவிறவியலில் வைக்கப்படும் கருத்துக்களுக்கும் அப்படியொன்றும் பாகம் பிரிப்பது போல் பிரித்து விட முடியாது. எடுத்துக்காட்டாக கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை என்று துறவறவியலில் வகைப்படுத்தப்பட்டிருக்கும் கருத்துக்கள் , துறவறவியலுக்கு மட்டுமே உரித்தானது என்பது கண்மூடிய நிலைப்பாடாகத் தான் இருக்கும். இந்தக் கருத்துக்கள் இல்லறவியலுக்கும் இல்லறத்தின் நடைமுறைக்கேற்ற அளவில் பொருத்தமானவை தாம். அதே போல் பொறையுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, தீவினையச்சம் போன்ற கருத்தாக்கங்கள் இல்லறவியலுக்கு மட்டுமே உரித்தானவை என்ற நிலைப்பாடும் அறிவுக்கு முழுதும் ஒப்புடையதாய் இல்லை. துறவற நிலையினும் இந்த அறக்கருத்துக்களுக்கு ஒரு பொருத்தம் இருக்கிறது. ஆக துறவறவியல், இல்லறவியல் என்ற பகுப்பு பல்வேறு அறக்கருத்துக்களிடையே இருக்கும் ஒருங்கிணைப்பை மறுதலிக்கிறது. ஆனால் அதிகாரங்களின் வரிசைக்கு, சொல்லப்படும் காரணங்கள் அவ்வளவு ஒப்புடையதாக இல்லை. சில அதிகாரங்களின் வரிசைக் கிரமத்திற்குச் சொல்லப்படும் காரணங்கள் வலிந்து நியாயங்கள் கற்பிக்கப்பட்டது போல் இருக்கின்றன. எடுத்துக் காட்டாக, இல்லறவியலில் ஒழுக்கமுடைமை என்ற அதிகாரத்திற்கு அடுத்து பிறனில் விழையாமை என்ற அதிகாரம் வைக்கப்பட்டுள்ளது. இதற்குப் பரிமேல் அழகரின் உரை தரும் காரணம் விசித்திரமாக இருக்கிறது. ”அஃதாவது காமமயக்கத்தால் பிறனுடைய இல்லாளை விரும்பாமை. இஃது ஒழுக்கம் உடையார் மாட்டே நிகழ்வதாகலின், ஒழுக்கம் உடைமையின் பின் வைக்கப்பட்டது” என்பது பரிமேல் அழகர் உரை தரும் விளக்கம். அடுத்து பொறையுடைமை அதிகாரம் பிறனில் விழையாமை அதிகாரத்தின் பின் வைக்கப்பட்ட முறைமைக்குப் பரிமேல் அழகரின் உரை தரும் விளக்கத்தைப் பாருங்கள். “அஃதாவது காரணம் பற்றியாதல், மடமையானாதால் ஒருவன் தமக்கு மிகை செய்தவழித் தாமும் அதனை அவன் கண் செய்யாது பொறுத்தலை உடையராதல். நெறியின் நீங்கிய செய்தாரையும் பொறுக்க வேண்டும் என்பதற்கு, இது பிறன் இல் விழையாமையின் பின் வைக்கப்பட்டது.” இந்த மாதிரியான வைப்பு முறையில் இன்னொரு சிக்கலும் ஏற்படுகிறது. ஒரு அதிகாரம் விளக்கம் பெறும் போது அதன் பெற்றி தாழ்வுறுவ்து போல் அதற்கான வைப்பு முறை விளக்கம் தரப்படுகிறது. எடுத்துக் காட்டாக நடுவு நிலைமை அதிகாரத்திற்கான விளக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ”அஃதாவது பகை நொதுமல்,நண்பு என்னும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது ஒப்ப நிற்கும் நிலைமை. இஃது நன்றி செய்தார் மாட்டு அந்நன்றியினை நினைத்த வழிச் சிதையுமன்றே? அவ் இடத்துஞ் சிதையலாகாது என்றதற்கு செய்ந்நன்றி அறிதலின் பின் வைக்கப்பட்டது.” நடுவுநிலைமை என்ற கருத்தாக்கத்தின் தன்னளவிலான உயர்ச்சி அதற்கான அதிகார வைப்பு முறையில் சேர்த்துக் காணப்படும் போது உயர்ச்சியிலிருந்து தாழ்வுறுகிறது.

இந்த அதிகார முறைமை பற்றி ஏன் பெரிதும் அலட்டிக் கொள்ள வேண்டும் என்று கேட்கலாம். திருக்குறளின் பல் வேறு அறக்கருத்துக்களை உதிர்ந்த மணிகள் போல் பொறுக்கிக் கொள்ளலாமா? அல்லது பல் வேறு அறக்கருத்துக்களிடையே ஒரு தத்துவக் கோர்வை இருக்குமா என்று ஒரு மணிமாலையைக் கோர்த்துக் கொள்ளலாமா? இந்த இரு கேள்விகளில் நாமெடுத்துக் கொள்ளும் தெரிவைப் பொறுத்துத் தான் திருக்குறளில் பேசப்படும் அறத்தை நாம் மனத்தில் அகப்படுத்திக் கொள்ளும் திறனும் தீர்க்கமும் அமைகின்றன. தம்மபதத்தில் சினம், பேராசை, பயம், எண்ணம், பற்று போன்ற கருத்துக்களை வாசிக்கும் போது தம்மளவில் தனித்தனியாய் இருந்தாலும் அவை புத்தரின் போதனைகள் என்ற பிண்ணனியில் புத்தரின் தத்துவாக்கங்களான எண்பிரிவு வழி, நான்கு வாய்மைகளோடு பொருத்திப் பார்க்கப்படும் நீர்மையான் தம்முள் இயைபும் முழுமையும் பெறுகின்றன. இதையொட்டி, திருக்குறளுக்கும் ஒரு சமயப் பிண்ணனி தேடி ஆய்வதல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம். ஒவ்வொரு சமயத்தவரும் தத்தம் சமயக் கருத்துக்கள் திருக்குறளில் உள்ளதாக வாதிடுகிறார்கள். ஜைன சமய சித்தாந்தத்தின் படி திருக்குறளை இயற்றியவர் குந்த குந்த ஆசாரியர் என்பவராவர். திருக்குறளுக்கு ஜைன உரை இருக்கிறது. இந்தக் கட்டுரையில் முயற்சிப்பது என்னவென்றால் திருக்குறளில் பேசப்படும் கருத்துக்களில் ஒரு தத்துவக் கோர்வையை நம்மால் நெய்து கொள்ள முடியுமென்றால் அது திருக்குறளில் பேசப்படும் அறத்தினை நாம் மேலும் வளமும்,முழுமையும் கூடிப் புரிந்து கொள்ள முடியும் என்பது தான். இந்தத் தத்துவார்த்தப் புரிதலுக்குத் தான் திருக்குறளின் தற்போதைய வைப்பு முறையிலிருந்து விலகி நாம் வாசிக்க வேண்டியிருக்கிறது.

அறத்தை மொழி, மெய், மனம் சார்ந்து புரிந்து கொள்வது ஒரு தத்துவார்த்த முறை. வாழ்வின் பரிசுத்தத்தையும் மொழி, மெய், மனம் சார்ந்த பரிசுத்தங்களாக அடையாளம் கண்டு கொள்ளலாம். திருக்குறளில் அறத்துப்பாலில் பேசப்படும் அதிகாரங்களை இந்த தத்துவார்த்த அடிப்படையில் நிரல் படுத்திப் புரிந்து கொள்ள முடியுமா என்பது தான் கேள்வி. மொழி சார்ந்த அறங்களாக இனியவை கூறல், புறங்கூறாமை, பயனில சொல்லாமை, வாய்மை போன்ற அதிகாரங்கள் அடங்குகின்றன. இங்கு புத்தரின் மொழி சார்ந்த பரிசுத்தத்தின் தன்மைகளாக பொய்மையும், பயனில் பேச்சும் என்று கூறப்படும் விளக்கத்தை நினைவில் கொள்வது பொருத்தமானது.(The Buddha and His Dhamma, Dr.B.R.Ambedkar,p.230)).அடுத்து மெய் சார்ந்த அறங்களாக கீழ்க்கண்ட அதிகாரங்களை அடையாளம் காணலாம்- பிறனில் விழையாமை, வெஃகாமை, புலால் மறுத்தல், கள்ளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை. இவற்றை புத்தரின் மெய் சார்ந்த அறத்தின் தன்மைகளாகச் சொல்லப்படும் பண்பு நலன்களான- பிரிதொரு உயிர் கோறாமை, கள்ளாமை, தவறான புலனிச்சைகள் – என்பவற்றோடு பொருத்திப் பார்த்துக் கொள்வது சரியானது.( The Buddha and His Dhamma, Dr.B.R.Ambedkar,p.229)). மூன்றாவதாக மனம் சார்ந்த அறத்தை, முன்னால் குறிப்பிடப்பட்டது போல்

’மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்

ஆகுல நீர பிற.’

என்று திருக்குறள் மையப்படுத்திச் சிறப்பிக்கிறது. இந்தக் குறளை அடுத்து வரும் குறள் முன்னாலே குறிப்பிடப்பட்டது தான்.

அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.

மனம் சார்ந்த அறத்தின் பண்புகளாகக் கடிந்தொழுக வேண்டியவற்றில் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் ஆகிய நான்கும் குறிப்பாகச் சொல்லப்படுகின்றன. கடிந்தொழுக வேண்டிய இந்த நான்கு பண்புகளை விரித்துரைக்குமுகமாக அழுக்காறாமை, அவா அறுத்தல், வெகுளாமை, பொறையுடைமை என்ற நான்கு அதிகாரங்கள் அமைகின்றன. ஆக, மொழி, மெய், மனம் சார்ந்த அறங்கள் ஒழுக்கத்தின் அடிப்படையாய் அமைய, இதன் பிண்ணனியில் ஒழுக்கமுடைமை, கூடா ஒழுக்கம் என்ற இரு அதிகாரங்களையும் இணைந்து வாசிக்கும் போது சில குறள்களின் அர்த்தங்கள் ஆழம் பெறுகின்றன. எடுத்துக் காட்டாக,

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின்

என்ற குறளுக்கு(குறள் 280) பரிமேழகர் உரையைப் பாருங்கள்-”உயர்ந்தோர் தவத்திற்கு ஆகாது என்று குற்றம் கூறிய ஒழுக்கத்தைக் கடிந்து விடின், தவம் செய்வார்க்குத் தலைமயிரை மழித்தலும், சடையாக்கலும் ஆகிய வேடமும் வேண்டா”. இந்த உப்பு சப்பில்லாத உரையை விட இந்தக் குறள் வாழ்க்கையின் இரு தீவிர நிலைகளை- உல்லாசத்தில் திளைத்தல் அல்லது உடல் வருத்தி இளைத்தல்- என்பதைக் குறிப்பதாகி, இரண்டு நிலைகளும் வேண்டா என்று மத்திய வழியைச் சுட்டுவதாய்ப் பொருள் கொள்ளும் போது பொலிவு பெறுகிறது. இது புத்த உரை என்று சொல்லலாம். அதற்காக உப்பு சப்பில்லாத உரையைத் தூக்கி நிறுத்த முடியாது. அதுவும் பத்துக் குறள்களும் வயிர மணி போன்று ஒளி விடும் தவம் என்ற அதிகாரத்தின் பின் வரும் கூடா ஒழுக்கம் என்ற அதிகாரத்தில் வரும் இந்தக் குறளுக்கு எப்படி இப்படியான உப்பு சப்பில்லாத உரை இருக்க முடியும். மேலும் கூடா ஒழுக்கம் அதிகாரத்தில் வரும் ஏனைய ஒன்பது குறள்களின் பிண்ணனியில் மத்திய வழியைப் பத்தாம் குறள் சுட்டுகிறது என்பது முத்தாய்ப்பாகவும் முடிவாகவும் இருக்கும் என்று அறுதியிடலாம். ஒழுக்கமுடைமையையும் ‘தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கத்தினையுடையர் ஆதல்’ என்று பரிமேல் அழகர் உரை குறிப்பிடும் போது உரைகாரரின் கால சமூக ஒழுக்கம் திருக்குறளின் மேல் திணிக்கப்பட்டு விட்டதா என்று தோன்றுகிறது.

அற ஒழுக்கத்தின் அடுத்த கட்ட மன நிலைகளாக அன்புடைமையையும் அருளுடைமையையும் நாம் தேர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. இந்த மன நிலைகளை பெளத்ததில் பேசப்படும் கருணா, மைத்ரி என்ற நிலைகளோடு ஒப்பிடலாம். கருணா எனபது சக மனிதர்களோடான அன்பாகவும், மைத்ரி என்பது சக உயிர்நிலைகளோடான அன்பாகவும் ((மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு(குறள்:244)) பரிணமிக்கின்றன. அருளுடைமை குறித்து “அஃதாவது தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை” என்று பரிமேல் அழகர் உரையும் குறிக்கிறது. அன்புடைமை பற்றி ‘இல்லறம் இனிது நடத்தலும், பிற உயிர்கள் மேல் அருள் பிறத்தலும் அன்பின் பயன் ஆகலின் இது வேண்டப்பட்டது’ என்று பரிமேல் அழகர் உரை சொல்லும் போது அன்புடைமையை இல்லறத்தாரொடு என்று பொருத்திப் பார்ப்பதை விட சக மனிதர்களோடு என்று பொருத்திப் பார்த்துக் கொள்வது நல்லது. இதை அன்புடைமை அதிகாரத்தில் வரும் குறள்களை வாசிக்குங் கால் உணரலாம். மேற் சொன்ன அன்புடைமை, அருளுடைமை அதிகாரங்களை ஒட்டி ஒப்புரவறிதல், ஈகை என்ற அதிகாரங்களை வாசித்தால் செல்வத்தைக் கையாள வேண்டிய அற நிலைகளைப் (ஊருணிநீர் நிறைந்தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு. (குறள்(215)),அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி.(குறள்(226)) பெரிதும் உள்வாங்கிக் கொள்ள முடியும்.

ஆக எதைக் கருதி மொழி,மெய், மனம் சார்ந்த மேற் சொன்ன அறங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ஒரு மெய்யுணர்தலைக் கருதியே அது இருக்க முடியும் என்ற அளவில் திருக்குறளின் ’மெய்யுணர்தல்’ அதிகாரத்தை நாம் எடுத்துக் கொள்ள முடியும். இந்த மெய்யுணர்தல் ‘மாசறு காட்சி (குறள்; 352; மற்றீண்டு வாரா நெறி(குறள்:356); பிறப்பென்னும் பேதைமை நீங்கிச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது(குறள்:358). இந்த மெய்யுணர்தல் அதிகாரத்தில் வரும் பத்தாம் குறள் மூன்று மாசுக்களை குறிப்பிட்டுச் சொல்கிறது.

காமம், வெகுளி, மயக்கம் இவை மூன்றன்

நாமம் கெடக் கெடும் நோய்.

புத்த கோசர் தனது “ தூய்மையுறுவதற்கான வழி(The Path of Purification) என்ற நூலில் மூன்று அடிப்படை மாசுக்களைக் குறிப்பிடுகிறார். அவை பேராசை(greed), வெறுப்பு(hatred), காமம்( infatuation) என்பவை. இவை சகதி, எண்ணெய் போன்று தம்மளவில் மட்டும் மாசானவை அல்ல; மற்றவற்றையும் மாசுடையாக்குபவை என்பார் அவர்.(The Dhammapada, Eknath Eswaran(1996),p.150) புத்த கோசரின் மூன்று அடிப்படை மாசுக்களைப் போலவே, திருக்குறளின் மூன்று அடிப்படை மாசுக்கள்- காமம், வெகுளி, மயக்கம்- மெய்யுணர்தலுக்குத் தடையாக உள்ளன. மயக்கம் என்பதை அறியாமை, அல்லது அகந்தை என்று பொருள் கொண்டால், விருப்பு (காமம்), வெறுப்பு (வெகுளி) என்ற மனம் சார் நிலைகளான் மாசுக்கள் மெய்யுணர்தலுக்குத் தடையாகின்றன. இந்தக் கருத்து ‘யான் எனது என்னும் செருக்கு அறுப்போன்’ என்று வரும் குறளில் (குறள்:346) மேலும் விளக்கம் பெறுகிறது. ‘தான் இல்லாத உடம்பை யான் என்றும், தன்னோடு இயைபு இல்லாத பொருளை எனது என்றும் கருதி அவற்றின் கண் பற்றுச் செய்வதற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான்’ என்று பரிமேல் அழகர் உரை விளக்கம் சொல்கிறது. இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் ’தான்’ என்பது உடல் உபாதைகளால் பாதிக்கப்படாது உடலினின்றும் தனியாய் என்றும் நிலையாய் அனுபூதியாய் ஒளிரும் ஆத்மா என்ற ரீதியில் சொல்லப்படவில்லை. ‘தான்’ ’எனது’ என்னும் அகந்தை நிலைகளை அகற்றி ஒரு அகண்ட பிரக்ஞையைச்(cosmic consciousness) சுட்டுவதாய்த் தான் இருக்கிறது. இந்தக் கட்டத்தில் தவம் அதிகாரத்தில் வரும் ‘தன்னுயிர் தான் அறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும்’(குறள்(268)) என்ற குறளையும் நினைவு கூர்வது பொருத்தமானது. ஆக, நிலையாமை, தவம், துறவு, மெய்யுணர்தல் என்ற அதிகாரங்களை ஒருங்கு கூடி வாசித்தால் திருக்குறளின் அறத்தின் இலக்கு என்னவென்று புரிந்து கொள்ள உதவும்.

4.முடிவுரை:

தொகுத்துக் கூற வேண்டுமானால், திருக்குறளில் பேசப்படும் அறத்தின் ஒருங்கிணைந்த கட்டமைப்பு இணைப்பு-1 -ல் இருப்பது போல் அமையலாம். இந்தக் கட்டுரையில் மெய்யுணர்தல், மொழி, மெய், மனம் சார் அறங்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்ற கட்டங்களுக்கு எதிரே ஏற்புடைத்தாய் அதிகாரங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அவை முடிந்த முடிபல்ல. கட்டுரையின் நோக்கம் திருக்குறளில் அறத்தை வாசிக்குங் கால் ஒருங்கிணைந்த கட்டமைப்பு அணுகு முறையை வலியுறுத்துவதே. அரவிந்தர் திருக்குறளைப் பற்றிக் குறிப்பிடும் போது, குறு வடிவில் மறை பொருட் கவிதையாக்கத்தில் (gnomic poetry) திருக்குறள் அதனது கட்டமைப்பிலும், கருத்தாக்கத்திலும், செயலாக்கத் திறனிலும் இப்படி இது மாதிரி எழுதப்பட்டதிலே மகத்தானது (Tiruvalluvar’s Kural is the greatest in plan, conception and force of execution ever written in this kind) என்பார். இந்தக் கருத்தினையொட்டி, திருக்குறளை ஒரு ஒருங்கிணைந்த தத்துவார்த்ததில் அணுகினால், அதனது படைப்பாக்கத்திற்கும் நாம் அடையும் வாசிப்பு அனுபவத்திற்கும் ஈடு இணையில்லை என்று உணரலாம்.

References

Sri Aurobindo’s translation of Thirukkural, Usha Mahadevan, IRWLE, vol,5, Jan,2009

The Buddha and His Dhamma, Dr.B.R.Ambedkar, Buddha bumi Publication, Nagpur

The Dhammapada, Eknath Eswaran(1996),Penguin books

திருக்குறள் தெளிவுரை, டாக்டர்.மு.வரதராசனார், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,121 ஆவது பதிப்பு, ஜுலை,1994.

இணைப்பு-1

அற நிலைகள்

அதிகாரங்கள்
மெய்யுணர்தல்
பொறையுடைமை, அழுக்காறாமை,வெகுளாமை, அவா அறுத்தல், அன்புடைமை, அருளுடைமை,அடக்கமுடைமை, ஈகை, ஒப்புறவறிதல்,ஒழுக்கமுடைமை, கூடா ஒழுக்கம், தீவினையச்சம்,நடுவு நிலைமை
மனம் சார் அறங்கள்
பிறனில் விழையாமை, வெஃகாமை,புலால் மறுத்தல்,கள்ளாமை,இன்னா செய்யாமை, கொல்லாமை
இனியவை கூறல்,புறங் கூறாமை, பயனில சொல்லாமை, வாய்மை
நிலையாமை, தவம், துறவு, மெய்யுணர்தல்

மொழி சார் அறங்க



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: திருக்குறளில் அறம்- ஒரு ஒருங்கிணைந்த புரிதலுக்கான வாசிப்பு - கு.அழகர்சாமி
Permalink  
 


R.Venkatachalam says:

இவ்வுலக வாழ்கையின் நோக்கம் ஆன்மமேம்பாடு அடைந்து அதன் மூலம் பிறவிச் சங்கிலி அறுதல் மட்டுமே. அந்த நோக்கில் நடுவு நிலைமை என்பது மிகமுக்கியமான ஒன்று ஆகவே ஒரு உயிரியைப் புசிப்பதற்காக க்கொல்வது அதன் வாழும் உரிமையை மறுப்பதாகும். அச்செயல் ஆன்ம இழப்பை ஏற்படுத்துமென்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆகையால் திருவள்ளுவரின் முக்கிய கருத்தான இவ்வுலகு வாழ்வு ஒரு ஆன்மபயிற்சிக்காலம் என்பதை ஏற்றுக்கொண்டால் மொத்தக்குறள்களையும் திரும்பவும் வேறு விதமாகப் புரிந்து கொள்வது அவசியம் என்பது புரியும்.

இதுபற்றியே நான் திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டு உள்ளேன்.

 

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு 231

இந்தக்குறள் வரும் புகழ் அதிகாரம் ஈகை மற்றும் ஒப்புரவு அதிகாரங்களுக்குப் பிறகு வருவதாகும்.
என்னுடைய புரிதலில் இக்குறளின் பொருள் கீழ்கண்டவாறு:

ஈகை மற்றும் ஒப்புரவு செய்து அதன் பயனாளிகளின் உள்ளத்தில் பெருகும் மதிப்பினைப் பெற்றுவாழ்வதுதான் இவ்வுலக வாழ்வின் சம்பளம் அல்லது நோக்கம்.

இதன் உண்மையான பொருள் வேறொன்று அது:

தன் நலனையே முதன்மைப்படுத்தாமல் பிறர் நலனையும் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் முதன்மைப்படுத்திச்செயல்படுவது தன்னுடைய ஈகோவில் வாழும் ஒருவனுக்குச்சாத்தியமன்று. ஆன்மாவில் வாழ்பவனுக்கே இயலும். அவ்வாறு வாழும் ஒருவன் பல்வேறு சோதனைக்கு உட்பட்டும் ஆன்ம வாழ்வைத் தொடரும்போது (நத்தம் போல உளதாகும். . . 235) அவனுடைய ஆன்மா முழுப்பக்குவம் அடைந்து கடவுள் உலகு புகும் என்பதே அந்தக்கருத்து.

இக்கோணத்தில் பார்த்தால் திருக்குறளைபொறுத்தவரை திருவள்ளுவர் என்ன கூறி உள்ளார் என்று ஒவ்வொரு குறளின் உண்மைப்(ஆன்மிகப்)பொருளை உணர்ந்து அதைக்கடைப்பிடித்து வாழ்வது மட்டுமே செய்யவேண்டுவது.
இச்செய்தி தமிழ் மக்கள் மனதில் ஆழப்பதியும்படி செய்யவேண்டும். நானறிந்தவரை இச்செய்தி பெரும்பாலும் உணரப்படவில்லை என்றே தோன்றுகிறது. ஆகவேதான் நான்

திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை என்ற புத்தகத்தை எழுதி வெளி இட்டு உள்ளேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

R.Venkatachalam says:

பாப்பான் குலவொழுக்கம் கெடும் என்ற குறளுக்கு நான் தந்துள்ள விளக்கத்தை காவ்யா படித்துள்ளாரா எனத்தெரியவில்லை. ஏனெனில் என்னுடைய புத்த்கத்தில் உள்ள அதனை நான் இங்கே இதுவரை எழுதாத நிலையில் அக்கருத்து எவ்வாறு அவருடைய பார்வைக்குக் கிட்டியது எனத் தெரியவில்லை.

ஒழுக்கமுடைமை அதிகாரத்தைப் பொருத்தவரை அதிகாரத்தின் பொருளே முழுக்க வேறு என்பது என்னுடைய கருத்து. அவ்வதிகாரம் இன்றைய தினம் மேலாண்மையினர் கூறும் சிறந்த நடைமுறை Best practices என்பதைப்பற்றியதாகும். ஒவ்வொரு தொழிலினரும் அத்தொழிலுக்கான சிறந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதே அவ்வதிகாரம். ஆகையால் பார்ப்பனன் என்பது ஒரு career அந்தப்பணிக்கான சிறந்த நடைமுறைகளை அவன் கடைப்பிடிக்கவேண்டும் இல்லையென்றால் அவனுடைய தொழில் பாழ்படும் என்று பொருள் கொள்வதே சரியாக இருக்கும்.

வள்ளுவம் மதங்களுக்கு அப்பால் செல்லும் ஆன்மிகத்தைப் பற்றிப் பேசும் நூல். ஆகவே இந்துமதத்தில் உள்ளவற்றிற்கு அவரிடம் பதில் எதிர்பார்ப்பது சரியாகாது.

பெண்ணை குறிப்பாக மனைவியை குடும்பத்தின் நற்பெயரை உயர்த்திப்பிடிக்கும் (brand ambassador) ஒருவராகச் சித்தரிக்கும் திருவள்ளுவரை பெண்ணடிமைத்தனத்தை உயரத்தூக்கிப் பிடிப்பவர் என்பது எவ்வாறு?

முரண்பாடுகளின் மொத்த உருவம் இந்த ஆள். திருவள்ளு வரைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என வைத்துக்கொண்டு நான் கூறும் பதில் இதோ:

முரண்பாடுகளே இல்லாத ஒரு நூல் திருக்குறள். முரண்பாடுகள் அத்தனைக்கும் பதில் என்னுடைய திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை என்ற நூலில் உள்ளது.
நூலினை நானே வெளி இட்டு இருப்பதால் அதனைப் பெற்று படித்து தங்களது மேலான கருத்துக்களைக் கூறவும். அது தொடர்பான விவரங்கள்:
R.Venkatachalam // A 19 Vaswani Bella Vista // Sitarampalya Main Road // Behind SAP lab // Bangalore 48 // Karnataka 560048
இந்த முகவரிக்கு ரூபாய் 285/- க்கு டிராஃப்ட்/ அட்பார் காசோலை/ மணி ஆர்டர் இவற்றுள் ஏதாவது ஒன்றினை அனுப்பினால் புத்தகத்தை என்னுடைய செலவில் அனுப்பி வைக்கிறேன். வெளிநாடெனில் go to India posts and then to tool. A dialogue box will open. You can findout what is the postage charges for a book wheing 540gms. அத்தொகையை புத்தகத்தின் விலையோடு சேர்த்து அனுப்பவும்.

மேலலுந்தவாரியாகப்பார்த்தால் நான் என்னுடைய வணிகத்திற்காக இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவது போலத் தோன்றும். என்னுடைய முதன்மை நோக்கம் அதுவன்று. திருக்குறள் தமிழர்களின் பெரும் சொத்து. ஆனால் தமிழ் கூறும் நல்லுலகம் அவருடைய உள்ளக்கிடக்கையை அவர் உணர்ந்துள்ளவாறு உணர்ந்துள்ளனரா என்ற கேள்விக்கு உறுதியாக இல்லை என்று (பலவருட உழைப்பின் மூலம் நான் திருக்குறளை அறிந்துகொண்டதால்) எனக்குப்பட்டதாலேயே நான் இந்நூலினை எழுதினேன்.

அவர் உள்ளக்கிடக்கையை உள்ளது உள்ளபடி எவ்வாறு அறிவது? திருக்குறள் மொத்தத்திற்கும் ஒரு திறவு கோலும் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் சில திறவுகோல்களும் குறட்பாக்கள் வடிவில் கிட்டுவனவாம். அவற்றைக் கொண்டு குறட்பாக்களைத்திறந்தால் வள்ளுவத்தில் முரண்பாடு எதுவும் இல்லையென்பதை அறியலாம்.
அப்படிச்செயல்பட்டதாலேயே 33 அதிகாரங்களுக்கும் 584 குறட்பாக்களுக்கும் இதுவரை கூறப்படாத பொருள்கள் எனக்குக் கிட்டியன. இதன்காரணமாக எழுந்ததுதான் என் புத்தகம்.

திருக்குறள் கல்வி ஒரு இயக்கமாக தமிழர்களிடையே ஏற்படுமானால் அவர்களுடைய வாழ்க்கை பொருளாதாரரீதியிலும் மன நலம் என்ற ரீதியிலும் பிறகு ஆன்ம முதிர்ச்சி என்ற நிலையிலும் மிக உயரிய நிலையை அடையும் என்பது என்னுடைய கருத்து



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

  • G.Alagarsamy says:

    திருக்குறளின் அறத்துப்பாலில் ஒரு தத்துவக் கட்டமைப்பு இருக்கிறது. அது ’தன்னுயிர் தானற’ என்ற அகண்ட பிரக்ஞையைத்(cosmic consciouness) தழுவியதாக உள்ளது. அதுவே மெய்யுணர்தல் என்ற ரீதியில் தன்னையறிதலாகித் ‘தான்’ என்பதைக் கடந்து செல்லும் அனுபவமாய் அமைகிறது. இதன் மையமாய் திருக்குறளில் பேசப்படும் அறக் கருத்துக்களைப் புரிந்து கொள்ள முயன்றால், அவை மொழி , மெய், மனம் சார்ந்த அறங்களாக அவற்றை அடையாளம் கண்டு கொள்ள முடியும். இதற்கு ஒரு வித்தியாசமான ‘பரந்த வாசிப்பு’(macro reading)தேவை. இப்போது போல் தனித் தனி அதிகாரங்களில் தனித்தனிக் குறள்களுக்கு அர்த்தங்கள் என்ற அணுகு முறையில் இது சாத்தியப்படாது. இது தான் கட்டுரையின் மையக் கருத்து. திருக்குறளில் வரும் அறநிலைகளோடு உடன்படலாம். உடன்படாமலும் போகலாம். அவை முடிந்த முடிபுமல்ல. திருவள்ளுவரே சொல்வார்:’எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு”. அவர் எதையும் திணிக்கவில்லை. மெய்யுணர்தலின் அடிப்படை இது.புத்தர் சொன்ன உனக்கு நீ தான் புகலென்பது போல இது. ஒரு வகையில் பார்த்தால் திருக்குறளை பெளத்ததின் பிண்ணனியில் படித்துப் பார்த்தால் இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள உதவும். புலால் மறுத்தல் என்பதை அருள்(compassion) என்ற சந்தர்ப்பத்தை(context)ஒட்டித் தான் புரிந்து கொள்ள வேண்டும்.வள்ளலார் ஜீவகாருண்யத்தை வலியுறுத்தியது போல.’தன்னுயிர் தானறப் பெற’ வேண்டுமானால் கொல்லாமை, புலால் மறுத்தல் போன்ற அறங்கள் அகண்ட பிரக்ஞையின் அனுபவத்திற்கான அடிப்படைகளாக மற்ற அறங்களோடு சேர்த்து ஒழுகப்பட வேண்டியவை என்ற அணுகு முறை தான் திருக்குறளை ஒரு ஒட்டுமொத்தப் பார்வையில் பார்க்க உதவும்.புத்தர் பிச்சையாகத் தரப்பட்ட புலால் உண்டார். அதே சமயத்தில் கொல்லாமையைச் சொல்லும் போது ‘எல்லாவற்றையும் நேசி; அதனால் எதையும் நீ கொல்ல நீ விரும்ப மாட்டாய்’ என்று. எதையும் கொல்லாத ஒரு அருள் நிலையில் புலால் மறுத்தல் எனபது பிரச்சினையல்ல. அது புலால் துறத்தலான மனோ நிலையாகவும் இருக்கலாம். ஆக, புலால் மறுத்தல் என்ற அறநிலையைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், அன்புடைமை, அருளுடைமை, தவம், மெய்யுணர்தல் என்ற இன்ன பிற அறக்கறுத்துக்களின் பிண்ணனியில் புரிந்து கொள்ளப்பட வேண்டியது. இந்தக் கட்டுரை சொல்ல விரும்புவது, அறம் பற்றிப் பேசும்எந்த அதிகாரமும் தனிப்பட்டதல்ல. அது இன்னொன்றோடு தொடர்புடையது(not absolute but relative).அதற்குத் திருக்குறளின் அறம் குறித்த ஒட்டுமொத்த வாசிப்பு தேவை என்பதே.- கு.அழகர்சாமி.

  • R.Venkatachalam says:

    என்னுடைய முகவரியில் தொலைபேசி எண்ணையும் மின் அஞ்சல் முகவரியையும் தர மறந்துவிட்டேன். அவற்றைக்கீழே தந்துள்ளேன்.
    prof_venkat1947@yahoo.com 9886406695

  • கி.பிரபா says:

    திருக்குறளில் 32 அறங்கள் கூறப்பட்டுள்ளன. பரத்தையர் பற்றி இல்லை.ஒள எனும் எழுத்து இல்லை. மனிதனைத் தெய்வ நிலையில் உயர்த்துவது திருக்குறளே ஆகும்.மறுபிறவிச் சிந்தனை இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் வாழ்வில் உணர்ந்தும் போற்றியும் பின்பற்றியும் வாழ்வதற்கு உரிய வகையில் இந்நூல் பயனைத் தருகிறது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard