அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா? இல்லையா?
என்ற விவாதம் இறை விரோதக் கருத்தே!

A view about the debate on Allah!

மேற்கண்ட தலைப்பில் ஓர் விவாதம் அண்டை நாடான தமிழ்நாட்டில் அண்மையில் நடை பெற்று, அது இணைய தளத்தில் ஊட்டுதல் செய்யப்பட்டு, ஒரு நண்பரால் எனக்குச் சிபாரிசு செய்யப்பட்டு, அதனைக் கேட்க வேண்டியேற்பட்டு, கேட்டதைத் துர்பாக்கியமாக நினைந்து வேதனைப்படுகிறேன்.

இந்த விவாதம்கூட சாதாரண மக்களால் முன்வைக்கப்பட்டிருந்தால் சரி போகட்டுமென விட்டு விடலாம்! ஆனால் அவ்விவாதம், தமிழ்நாட்டில், தம்மை இஸ்லாத்தின பிதாமகர்களாகக் கூறிக் கொண்டிருக்கும் இரண்டு இஸ்லாமியக் குழுவினரால், பிரமாண்டமான அளவில் பிரச்சாரம் செய்யப்பட்டு, ஏதோ ஓர் சாதனையைச் செய்வது போல் நடத்தப்பட்டமைதான் நமக்கு வேதனையையும், அதிர்ச்சியையும் தந்த விடயமாகும்.

இதில் பங்கேற்ற ஒருவர் குர்ஆன் மொழிபெயர்ப்பாளருங்கூட. அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என வாதிட்டோர் தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத்தார். எதிர்த்து உருவம் இல்லையென வாதிட்டோர் தமிழ்நாடு சுன்னத்வல் ஜமாஅத்தார். 23:53 – ‘பிறகு அவர்கள் தம் காரியத்தைத் தங்களுக்கிடையே பல பிரிவுகளாகத் துண்டாக்கிவிட்டனர். ஓவ்வொருவரும் தங்களிடம் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்’. இவ்விருவரும் உருப்படியான எந்த ஆதாரங்களையும் முன்வைக்கவில்லை. இருந்தால்தானே முன்வைக்க முடியும்! மாறாக, குறிப்பிட்ட கருத்தை வெளி;ப்படுத்துவதற்காகக் கூறப்பட்ட குர்ஆனின் ஓரிரு வசனங்களையும், ஓரிரு ஹதீஸ்களையும் ஆதாரங்களாகக் காட்டி, தமது வாக்குசாதுரியத்தைப் பாவித்து, அவற்றைத் தமது விவாதப் பொருளுக்குக் கருவாக்கிக் கொள்ள முயன்றனர்.

மேலும், அல்லாஹ்வக்கு உருவம் இல்லையென்ற சுன்னத்வல் ஜமாஅத்தார் தமது கருத்துக்குத் தக்க ஆதாரங்களைக் கொணரவில்லை. உருவம் உண்டு என்பாரும், ஏற்கக்கூடிய எதனையும் கூறவில்லை. இருவரினது விவாதங்களில் இருந்து, இவ்விருவரது கூற்றுக்களுக்கும் குர்ஆனிய ஆதாரங்கள் இல்லை என்பது பூரணமாத் தெளிவாகியது. அல் குர்ஆன் 25:33 இதனை மிகத் தெளிவாக வெளியாக்குகிறது. ‘இன்னும் உம்மிடம் எந்த உதாரணத்தையும் அவர்கள் கொண்டு வருவதில்லை. உண்மையானதையும் விளக்கத்தால் மிக அழகானதையும் நாம் உமக்குக் கொண்டு வந்தே தவிர’.

தமது தமிழ்ப் புலமையையும், சொல்லாண்மையையும், வாதத்திறனையும் வைத்துக் கொண்டு இறைவனுக்கு உருவம் உண்டெனவும், இல்லையெனவும் தீர்ப்புக்களைக் கூறி அல்லாஹ்வுக்கு வரைவிலக்கணம் கொடுக்கும் அவலம் நடப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதுதானா? என்பதைச் சற்று சிந்தியுங்கள். அல்லாஹ்வை விவாதப் பொருளாக்கியுள்ள நிலை, நாளை அவன் ஆணா? பெண்ணா? அலியா? (அஸ்தஃபிருள்ளாஹ். குட்டையானவனா? நெட்டையானவனா? சட்டை போட்டுள்ளானா? இல்லையா? கருப்பா? வெள்ளையா? என எல்லையற்று சொல்லொணா கருத்துக்களாலான மேடைகளை உருவாக்கி வைக்கும். இவை அவனது கண்ணியத்துக்குக் களங்கம் ஏற்படுத்தும் பண்புகளை உள்ளடக்கி உள்ளமை புரிகிறதா?

நிராகரிப்பாளர் கூட இறைவனுக்கு இது போன்ற இழுக்கை ஏற்படுத்தும் செயல்களில் இதுவரை இறங்கி இருக்கவில்லை. மனிதனது வாக்கு வல்லபத்தால், சிந்தனையால், அறிவால் கண்டு தீர்மானிக்கப்படக் கூடியவனா வல்ல அல்லாஹ் சுபுஹானஹுவதஆலா? அதிலும் அவனுக்கு உருவம் உண்டு, அல்லது இல்லையெனக் கூறுவதற்கு நமக்குள்ள தகுதிதான் என்ன? அவனது குர்ஆன் திட்டவட்டமாக அவனுக்கு உருவம் உண்டு எனச் சொல்லியிருந்தாலே தவிர யாராலும் தீர்மானிக்கப்பட முடியாததே! மூஸா (அலை) அவர்கள் உன்னைப் பார்க்க வேண்டும் எனக் கேட்டதற்கே என்னை உம்மால் கண்டு கொள்ள முடியாது, முடிந்தால் அந்த மலையைப் பாரும் என்றுதானே கூறினான்.

உருவம் இருக்கும் ஒன்றுதானா எதையும் செய்யும்? அல்லாதவை செய்ய முடியாதா? அல்லது உருவம் இருந்தால்தானா அல்லாஹ்வின் இருப்பை எல்லோரும் ஏற்பர்? இல்லையேல் ஏற்க மாட்டார்களா? இதுவரை உயிரோடிருக்கும் 200 கோடிக்கு அதிகமானோர் உருவம் இருக்கிறதா இல்லையா என்பதனைப் பார்த்தா அல்லாஹ் மீது விசுவாசம் கொண்டுள்ளனர்? அப்படியாயின் இதுவரை அவதரித்த 124000 நபிமார்களுக்கெல்லாம் தனது உருவை வெளிப்படுத்தாமல் விட்டு விட்டானா? அல்லது அப்படி வெளிப்படுத்தும் ஆற்றல்தான் அவனுக்கு இல்லையா?

மின்சாரம், காற்று போன்றவையை நாம் பார்க்க முடியாவிட்டாலும் அவற்றின் இருப்பை நம்மால் மறுக்க முடியுமா? தண்ணீரை நாம் காண்கிறோமே அதனை உருவத்தைக் கொண்டா பார்க்கிறோம்? நெருப்பை, புகையை என்ன உருவத்தில் காண்கிறீர்கள்? இவை எதனை உங்களுக்குக் காட்டுகின்றன? இவை நாம் கற்பனை பண்ண முடியாததைக் கணப் பொழுதில் நிறைவேற்றிச் செல்கின்றன என்பதை அறியவில்லையா? இவை போதாதா அல்லாஹ்வை அறிந்து கொள்ள? அவனது படைப்புகளுக்கே உருவம் உண்டா இல்லையா எனக் கூறும் ஆற்றலற்ற நம்மால் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு இல்லை என வாதிட்டுத் தீர்வு காணமுற்படும் செயலுக்கு என்ன பெயர் கொடுப்பதோ? முட்டாள்தனம் என்றால் அத்தவறை வெளிப்படுத்த அது போதுமா?

படைப்புக்களே உருவற்ற நிலையில் அனைத்தையும் இயக்கித் தம் வல்லபத்தைக் காட்டிக் கொண்டிருப்பதில் இருந்து அல்லாஹ்வை அறிந்து கொள்ள முடியவில்லையா? வெவ்வேறு தேவைகளைக் கொண்ட இப்படைப்பக்களே உருவின்றி எதை எதையோ எல்லாம் செய்ய முடிகிறதே! அப்படியாயின் யாருடையவோ, எதனுடையவோ தேவையும் அற்றவன் பற்றி நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா? காற்றுக்கு, நீருக்கு, மின்சாரத்துக்கு, நெருப்புக்கு, புகைக்கு உருவம் உண்டு அல்ல இல்லையென யாரும் விவாதம் செய்து கொண்டிருந்தால், அவர்களை நீங்கள் பார்க்க நேரிட்டால், அவர்களைப் பற்றி என்ன நினைப்பீர்கள்? இப்போது உங்கள் நிலையும், அறியாமையும் உங்களுக்கே புரிந்திருக்குமே! இன்னும் புரியவில்லையா!

மேலும் அல்லாஹ்வின் அடிமைகளாகிய நாம் அல்லாஹ் இருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்ளுவதைத் தவிர அதற்கு மேல் நம்மால் முடியாது என்பதற்கு அல்லாஹ் மூஸா (அலை) அவர்களுக்குக் கூறிய பதில் ஒன்றே பயபக்தியாளருக்குப் போதாதா? தனித்தனியாக நமக்குக் கூற வேண்டுமா? அவன் கூறியதற்கு மேல் கேள்வி கேட்கும், ஆய்வு நடத்தும், வீண்வாதம் செய்யும் உரிமை அடிமைகளாகிய நமக்கு உண்டா? அடுக்கடுக்காக நான் இங்கு கேள்விக் கணைகளைத் தொடுப்பதாக யாரும் பிழையான எண்ணங் கொள்ள வேண்டாம். சரியான பதில் வேண்டியே கேள்விகள் பிறக்கின்றன! உரிய பதில் கிடைத்தால் கேள்விகள் தானாக இருந்த இடம் தெரியாது இல்லாது மறைந்துவிடும். அவர்கள் வர்ணிப்பதைவிட்டும் வெகு உயர்வாக உயர்ந்தவன் என்ற அவனது வாக்கு நம்மை இவ்வாறான வழிகேடுகளில் இருந்து தடுக்கவில்லையானால் இவற்றை மனமுரண்டு என்பதைத் தவிர வேறென்னவென்று கூறமுடியும்.

உருவம் உண்டு என்று எதையாவது அல்லாஹ்வுக்கு கொடுக்க அல்லது உண்டென்று நிறுவ முயல்வது பாரிய ஷிர்க்கை வருவிப்பது. மனித அறிவுக்கு உட்பட்ட விதத்திலேயே நாம் அல்லாஹ்வுககு உருவம் கொடுக்க முடியும். அப்படிக் கொடுக்க முற்படுமிடத்து அந்த உருவ அமைப்புக்கள் படைப்புகளில் ஏதாவதொன்றையோ அன்றிப் பலதையோ ஒத்ததாகவே அன்றி போலவோ அன்றி மாதிரியாகவோ இருக்கும். அவனைப் போன்று எப்பொருளும் இல்லை என்ற 42:11 திருவசனம் அவ்வுருவை நிராகரித்துவிடும். மேலும் சில மதங்களில் கடவுளுக்கு உருவம் கொடுத்து ஷிர்க்கில் இருப்பதை ஒக்கும். கை, கால், முகம், பார்வை, கேள்வி என்ற சொற் பிரயோகங்கள் குர்ஆனில் நிரவிக் கிடப்பதை வைத்துக் கொண்டு அவனுக்குக் காலுண்டு, கையுண்டு, முகமுண்டு, கண்ணுண்டு, காதுண்டு என்றெல்லாம் பேச முயல்வதும் உருவமுண்டு என வாதிட முயல்வதும், அதுவே இஸ்லாம் என வலியுறுத்த முனைவதும் அல்லாஹ்வின் மிக மோசமான கோபத்தை வருவிப்பதற்கான செய்கையாகவே இருக்கும். காரணம் அவ்வாறு உருவம் காண முயல்வது நமது ஐம்புலன்களால் கிடைத்த அனுபவ அறிவைக் கொண்டே! சிறு உதாரணமாக, பாம்பைக் காணாதவன் பாம்பிற்கு கால், காது போன்றவை தன்னுடையதைப் போன்றே இருக்கும் எனக் கற்பனை செய்தால் அது சரியாகுமா!

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கண்ணைக் காட்டிப் பார்ப்பவன் எனவும், காதைக் காட்டிக் கேட்பவன் எனவும் கூறியிருப்பதால் அல்லாஹ்வுக்குக் கண் உண்டு, காது உண்டு, என்றெல்லாம் வாதிடுவது சிறுபிள்ளைத் தனமாகத் தோன்றுகின்றது. அவன் திரை மறைவில் இருந்தோ, வஹியின் மூலமாகவோ அன்றி தூதரை அனுப்பியோ தவிர யாருடனும் பேசியதில்லை என்பது அவனது திருவசனமே! இது யாரும் அவனை நேரடியாகப் பார்த்ததில்லை என்பதைச் சிறிதளவு சந்தேகத்துக்கு இடமின்றித் திட்டவட்டமாகத் தெளிவாக நிரூபிக்கின்றது. அப்படியிருக்க நாயகம் கண்ணைக் காட்டியதையும், காதைக் காட்டியதையும் அல்லாஹ்வின் அவயங்களைக் குறிப்பிட்டுக் காட்டுவதற்காகவே கூறப்பட்டது என அர்த்தம் கொள்ள முற்பட்டால் இறைவனின் முன்னைய வசனத்தைப் பொய்ப்பிக்கும் குற்றத்துக்குள் நம்மைக் கொண்டு சேர்த்து விடும். அதாவது நாயகம் ஸல் அவர்கள அல்லாஹ்வைப் பார்த்ததாக முடியும். நாயகம் அவர்களிலும் குறைவை ஏற்படுத்திவிடும். அல்லாஹ்வின் வசனத்தைப் பொய்யாக்குவது போன்ற கருத்துக்கள் வெளியிடுவது மன்னிக்கக்கூடிய குற்றமா! அல்லாஹ் அக்குற்றத்திலிருந்து நம்மைக் காப்பானாக! பார்க்கக் கூடியதாகவுள்ள சூரிய, சந்திரரையே நம்மால் காண முடியவில்லை. அவற்றை வெறும் வட்ட வடிவமாகவே காண்கிறோம். அவற்றின் கோள வடிவத்தைக் காண முடிவதில்லையே!

நான் மேற்போந்த பந்திகளில் கூறியிருப்பதை வைத்து, அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என நான் கூற முற்படுகிறேன் என்ற முடிவுக்கு யாரும் வந்துவிட வேண்டாம் என மிகவும் விநயமாக வேண்டுகிறேன். அல்லாஹ்விடம் இல்லை என்ற சொல்லுக்கே இடமில்லை. அவன் பரிபூரணன். பரிபூரணமானவன் எனும் போது இல்லை என்று எதுவும் அவனிடம் இல்லை என்பதே. அதே வேளை, ‘தேவை’ என்ற ஒன்றும் அவனுக்கு இல்லை. அவன் கனி, ஸமது என்ற பண்புகளைத் தன் பெயராகக் கொண்டவன். அவன் யாருடையவோ, எதனுடையவே எப்படியான தேவையும் அற்றவன். அப்படியிருக்க அவனுக்கு உடலோ, அதன் உறுப்புக்களோ வேண்டியதில்லை. கண் இல்லாவிட்டால் அவனால் பார்க்க முடியாது, காது இல்லாவிட்டால் அவனால் கேட்க முடியாது, காலில்லாவிட்டால் அவனால் நடக்க முடியாது, கையில்லாவிட்டால் அவனால் பிடிக்க முடியாது என்ற நிலையில் உள்ளவன அல்லன். அனைத்தும் அவனுள் அடக்கமே. அவனது அறிவுக்கு அப்பாற்பட்டு எதுவுமில்லை. அவன் நமது ஊரிதா (Jugular vein) நரம்புக்கும் அருகாமையில் இருக்கிறான் என்பதை மறுப்பவர் யாரோ?

ஆக அவன் இன்னதென்று நம்மால் கூறமுடீயாத ஓர் மாட்சிமையில் இருக்கிறான். அவனும் தான் ஒவ்வொரு ஷணமும் ஒவ்வோர் மாட்சிமையில் இருப்பதாகக் கூறுகிறான். ஷணமும் மாறிக் கொண்டு இருக்கும் ஒன்று இப்படித்தான் இருக்கும் என்றோ இல்லை என்றோ கூறிட முடியுமா? நம் அறிவு, சிந்தனை போன்றவை இந்த அளவில் தடைப்படுவதை ஒத்துக் கொண்டால் இந்த அல்லாஹ் பற்றிய மனிதக் கருது கோள்களுக்கு முடிவு வந்துவிடும். இப்படித்தான், அப்படித்தான் எனக் கூற முடியாதபடிக்கு அத்தனையும் அவனுக்குள் அடக்கமாகி விடுகிறது. அவனில் இருந்து அனைத்தும் தோற்றம் பெற்றிருந்தால் எது அவனுக்கு அப்பால் நின்று அவனைக் காண்பது? ஒன்றுக்குள் அமைந்திருக்கும் ஒன்று, தன்னை வைத்திருக்கும் ஒன்றின் உருவத்தை எப்படிக் காணமுடியும்? இப்போது உண்டு இல்லை என்பதெல்லாம் அர்த்தமற்ற நிலையை அடைந்துவிடும். அவனது எல்லையை இச்சொற்கள் அடைந்துவிடப் போவதில்லை.

அல்குர்ஆன் 7:7 நாம் எங்கும் மறைந்திருக்கவில்லை. இவ்வசனம் அல்லாஹ்வினது நிலையையும், நமது பார்த்துக் கொள்ள முடியாத கையறு நிலையையும், முயன்றால் பார்க்க முடியும் என்பதையும் சூசகமாக அறிவிக்கின்றது. இதனால்தானே உங்களது முயற்சிகள் கணக்கில் எடுக்கப்படும் எனக் கூறியுள்ளான். அவனைப் போன்று எதுவுமில்லை. இந்த வசனம்கூட அல்லாஹ்வுக்கு உருவம் இல்லையென்று கூறியுள்ளதா? இல்லையே! அவனைப் போன்று எதுவும் இல்லை எனக் கூறுவது அவனுக்கு உருவமில்லை எனக் கூறுவதாகிட முடியுமா? நமது அறிவு அவனது உருவத்தைப் பற்றிக் கூறும் வல்லமை பெற்றதல்ல என்பதே உண்மை. அதனாலேயே வல்ல நாயன் தன்னருள் மறையில், அவர்கள் வர்ணிப்பதை விட்டும் மிக உயர்வாக உயர்ந்தவன் எனக் கூறுகிறான்.

சூரிய சந்திரர் தவிர அனைத்துக் கிரகங்களும் நமது கண்களுக்குப் படுவதில்லை என்பதால் அவை இல்லை என்றாகிவிடுமா? அல்லது நாம் எங்கும் மறைந்து விடவில்லை என்பதாவது அவனுக்கு உருவம் இல்லை என்ற கருத்தைத் தருகின்றதா? உருவம் இருக்கின்றது அது நமது பார்வைக்குள் அடங்கா நிலையிலிருப்பதை உணரவில்லையா? நட்சத்திரம் மின்னுவதை வைத்துக் கொண்டு அதுதான் நட்சத்திரம் எனலாமா? அல்லது அதற்கு உருவமில்லை எனலாமா? உங்கள் பார்வைகள் என்னை வந்தடைவதில்லை, நான் எல்லோருடைய பார்வைகளையும் அடைகிறேன் என்ற அவனது வாக்கை உண்மைப்படுத்தும் நிகழ்வாக அந்த நட்சத்திர ஒளி நமது கண்களை அடைவதை அறிய முடியவில்லையா? உங்கள் பார்வைகள் என்னை வந்தடைவதில்லை என்பது அவனுக்கு உருவம் இல்லை என்ற கருத்தைக் கொண்டதா? நமது பார்வைக்குள், ஒன்றின் எல்லைகள் அல்லது ஓரங்கள் அகப்படாத போது இல்லை என்ற எண்ணமே உருவாகும்.

இறைவனின் படைப்பான நீருக்கே உருவம் இல்லை என்றாலும் அது தான் இருக்கும் இடத்தைத் தன் உருவாகக் கொள்வதில்லையா! அப்பாத்திரத்துள் நீர் இருக்கும் வரை அதனையே நீரின் உருவாக நாம் கொள்வதில்லையா? அப்படியே கூட நாம் நீரின் மொத்த உருவைக் காண முடிவதில்லையே! இது உருவம் உண்டு இல்லையென்ற கேள்வியை வியர்த்தமாக்கி உள்ளதைக் காட்டவில்லையா! மாறாக அப்பாத்திரமே நீரின் உருவமாகக் கொள்ளப்பட்டால் அது ஷிர்க் என்ற வரைவுள் கொண்டு சென்றுவிடும். ஆக அவன் எங்கெல்லாம் காணப்படுகின்றானோ அவை அவனது உருவமாகிவிடாது. அதனாலேயே எப்பொருளும் அவனைப் போன்றில்லை எனக் கூறியுள்ளான்.

அந்த வகையில் அவனுக்கு உருவம் என்ற ஒன்றின் தேவையில்லை. அனைத்து உருவங்களையும் வேண்டுமானால் அவனால் ஏற்க முடியும். நம் கண்ணினுள்ளும் காட்சியாகி விடுவான். அது அவரவர் அடைவைப் பொறுத்ததே! ஆம் இது அவன் கூறிய, நான் எல்லோர் பார்வைகளையும் அடைந்து விடுவேன் என்பதால் ஏற்படும் பண்பே. ஆக நாம் காண்பதில்தான் வரையறை, திறன் உண்டே தவிர, அவனது இயல்புக்கு வரையறை கிடையாது.

காற்றைப் பார்க்க முடியாததனால் அதற்கு உருவம் உண்டு என்றோ, இல்லை என்றோ வாதிட முடியுமா? அணுவைப் பார்க்க முடியாதிருப்பதனால் அதற்கு உருவம் உண்டு இல்லையெனக் கூறலாமா? படைப்புக்களிலேயே இந்நிலை என்றால், இல்லாமையில் இருந்து எல்லாவற்றையும் படைத்து, காத்து, பரிபாலித்து வரும் வல்ல அல்லாஹ்வை நமது சிற்றறிவால் அளவு கட்டிடமுடியுமா? அல்லது அவனது மகிமைக்குத் தான் அது தகுமா? பார்க்க முடியாமை என்பது மனிதப் பண்பினுள் அடக்கமானதே! பார்க்கும் உயர் பண்பைப் பெற்றுவிட்டால் உருவம் உண்டு இல்லை என்ற எண்ணங்களுக்கெல்லாம் விடை கிடைத்து விடும்.

இறைவன் சுலைமான் அலை அவர்களுக்குக்கூட காற்றை வசப்படுத்திக் கொடுத்ததை, அதனால் அவர்கள் தமது பிரயாண நேரத்தைச் சுருக்கிக் கொண்டதை, வேலைகளை இலகுவாகச் செய்து கொண்டமையைக் குர்ஆனில் காண்போர் நல்லறிவு பெறுவர். வேதம் ஓதிய சாத்தானாகிவிடக் கூடாது.

நாம் எதற்காவது தீர்ப்புக் கொடுக்க வேண்டி ஏற்படும்போது அல்லாஹ்வின் தீர்ப்பையே கொடுக்க வேண்டும். இது அவனது கட்டளையுங் கூட. அப்படியாயின் அவன் எங்காவது ஓரிடத்தில் குர்ஆனில் தனக்கு உருவம் உண்டு அல்லது இல்லையெனக் கூறியிருக்கிறானா? தன்னை நினைவு கூருங்கள், தனது நெருக்கத்தை அடையம் வழிகளைத் தேடிக் கொள்ளுங்கள், அவனை அறியும் விதத்தில் அறியுங்கள், அவனது கண்ணியத்துக்குத் தக்கவாறு அவனை அறியுங்கள், உங்கள் முன்னோர்களை நினைவுகூர்வது போன்று அவனை நினைவு கூருங்கள் என்றல்லவா கூறியிருக்கின்றான். அப்படி அவனை அறிய முடியாதவர்கள் அவனைப் பற்றி அறிந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள் 25:59 என்றுதானே கூறியிருக்கிறான். அவனைப் பாருங்கள்! பார்க்க முடியாவிட்டால் பார்த்தவர்களிடத்தில் கேட்டுப் பாருங்கள் எனக் கூறியுள்ளானா? அப்படிக் கூறியிருந்தாலும், இன்னொருவர் பார்த்ததை நாம் அவர்களிடம் கேட்டு அறிவது எவ்வாறு?

இஸ்லாம் என்பதே ஏவலைச் செய்தல், விலக்கலைத் தவிர்த்தல் என்றால், அவன் ஏவாததைச் செய்ய முற்படுதல், அதனையே விவாதப் பொருளாக்கிக் கொள்ளல் இறை நிராகரிப்பு அல்லவா! பகுத்தறிவால் அவனை அறிய முடியாது என அவனே கூறியிருக்க, அதற்கு மாறாக பகுத்தறிவைப் பிரயோகித்து, தர்க்க ரீதியாக அவனைப் பற்றிய விமர்சனங்களில், விவாதங்களில் ஈடுபட்டு முடிவுகளைக் காண முயல்வது சுத்த முனாபிக்குகளின் தன்மையல்லவா! சிந்திக்கும்படி கூறிய அல்லாஹ் எங்காவது ஓரிடத்தில் அவனுக்கு உருவம் உண்டா அன்றி இல்லையா எனச் சிந்திக்குமாறு வேண்டியுள்ளானா?அவனது படைப்புக்களைப் பற்றித்தானே சிந்திக்கும்படி வேண்டியுள்ளான். அத்தாட்சிகளை உங்களுக்குள்ளும் கவனிக்க வேண்டாமா? என்றுதானே கூறியுள்ளான். அவன் செய்யுங்கள் எனக் கூறியவை எவ்வளவோ இருக்க, அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு அவன் சொல்லாததைச் செய்ய முயல்வதிலும், கண்டு பிடிக்க மேடையமைத்துத் தர்க்கிப்பதிலும் கேட்டைத் தவிர வேறு உண்டா? இறை நிராகரிப்பு அல்லவா!

ஏதாவதொன்றைப் பற்றிப் பேசு முன்னர், அது இறைவனோடு சம்பந்தப்பட்டதாயின், குர்ஆனில் எந்த ஓரிடத்திலும் முரண்பாட்டைத் தோற்றுவக்காத வகையில் சிந்திக்க, பேச, முடிவுக்கு வர, தீர்ப்பளிக்க முயல வேண்டும். அரை குறையாக ஏதாவது ஒரு வசனத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டு, யானை பார்த்த குருடனாகி விடக்கூடாது. முயலுக்கு மூன்று கால் என்றவாறு அல்லாஹ்வின் விடயத்தில் வாதிட முனையலாகாது. புடைப்புக்களையே முன்மாதிரி இன்றிப் படைத்தவனை நாம் படைக்க முயற்சிப்பது நிராகரிப்பை, அதன்மூலம் ஷிர்க்கை வரவழைத்து விடுகின்றது. அவனைப் போன்று எதுவுமில்லை 42:11 என்ற திருவசனத்தை நிராகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம், அதன் பின்னர் ஷிர்க் தானாக நுழைந்துவிடுகிறது. நமது அறிவுக்குள் கற்பனைக்குள் கொண்டுவர முடியாத ஒன்றை நாம் உருவகப்படுத்த முற்படும் போது இவ்வாறான வழிகேடுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

லா இலாக இல்லல்லாஹு என்ற கலிமாவுக்கான சரியான விளக்கம் கிடைத்திருந்தால் இந்த விவாதமே உருவாகி இருக்க முடியாது என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. இதனால் வல்ல நாயன் அல்லாஹ் எதனைக் குறித்து உமக்குத் தீர்க்கமான ஞானமில்லையோ அதனை நீர் பின்பற்றாதீர்… 17:36 என்று கூறியுள்ளான். அவனை அறிவது, நினைவு கூர்வது என்ற அளவோடு நிறுத்திக் கொள்ளாது, எல்லை தாண்டி அவனுக்கு உருவுண்டு, இல்லையென வாதிட முற்படுவது, நமது அறிவுக்கெட்டாத ஒன்றை அதாவது அவனது உருவத்தை எப்படியெல்லாம் இருக்கும், அன்றி இப்படித்தான் இருக்கும், அன்றி எப்படியாவது இருக்கும் என்ற மனோ இச்சைக்கு ஆளான குற்றத்தை வருவித்துவிடும்.

மேலும் இச்செய்கை அல்லாஹ்வை எப்படி அறிய வேண்டுமோ அப்படி அறிவதில் வரம்பு மீறலை ஏற்படுத்திவிடும். உருவம் என்றால் அது பார்வையில் படுவதாக இருக்கும், அதற்கு நீளம், அகலம், பருமன், வர்ணம், சிறிது, பெரிது, அழகு, அழகற்றது, நல்லது, கெட்டது போன்ற இன்னோரன்ன பண்புகளை ஏற்க வேண்டிவரும். உருவம் பற்றிய இக்குறையறிவு நிச்சயமாக இறை நிராகரிப்பை, ஷிர்க்கை வருவித்து விடும். பார்வைகள் அவனை வந்தடைவதில்லை என்ற பண்பைக் கேள்விக் குறியாக்கிவிடும். நாம் கற்பனை பண்ணுவது போன்று கை,கால், முகம், கண், காது என்றெல்லாம் அவயங்கள் உண்டு என நினைப்பது நமது அறிவுக்குள் நாம் கண்டு கொண்ட உருவங்களை வைத்து ஏற்பட்ட மாயையே! இவை படைப்பினங்களின் தேவையே தவிர, அல்லாஹ்வின் தேவைகளல்ல. அவயங்கள் ஊடகங்களே தவிர சக்திகள் கொண்டவை அல்ல என்பதை அவயங்கள் இருந்தும் அவற்றினால் பெறப்படுபவை இல்லாமல் இருப்பதில் புரிந்து கொள்ளலாம்,

மேற்கண்ட விவாதத்தின் போது எடுத்தாளப்பட்ட ஹதீஸ், ஜப்பார் (அதிகாரமுள்ளவன்) மறுமையில் மக்கள்முன் தோன்றியதைக் கூறுகிறது. அதாவது முதற்றடவை ஒரு உருவத்தில் வந்தான் எனவும், மறுதடவை இன்னோர் உருவத்தில் வந்தான் எனவும் அதைப் பார்த்த எஞ்சி நின்ற மக்கள் தாங்கள் முன்னர் பார்த்த அந்த உருவம்தான் இது எனக் கூறியதாகவும் கூறப்பட்டது. இதிலிருந்து, 1. உருவமற்ற ஒன்றே பற்பல உருவங்களை எடுக்கும் (கொணர்ந்த ஆதாரமே எதிராகப் பேசுகிறது. கூடுவிட்டுக் கூடு பாயும் சக்தி. ஆகுக என்றால் அனைத்தும் நடந்துவிடும் என்ற அல்லாஹ்வுக்கு இவை தேவையா?) 2. குறிப்பாக ஒரு உருவம் இருந்தால் மட்டுமே அதனை ஒன்றின் உருவம் எனக் கொள்ளலாம் 3. வெவ்வேறு உருவங்களில் வந்த ஒன்று எந்த உருவையும் எடுக்கும் ஆற்றல் உள்ளது என்றோ, அன்றி, அதனது உருவம் இன்னொரு உருவம் எடுப்பதால் மாற்றப்படக் கூடியது எனவோ கூறலாம். உதாரணமாக மேகம், புகை, காற்று, நெருப்பு.  அஸ்தஃபிருல்லாஹ். மேற்கண்ட எந்தப் பண்புகளுக்குள்ளும் அல்லாஹ் அடங்கான்.

அடுத்து இரண்டாவது முறை வேறு உருவத்தில் கண்டவர்கள் தாம் முன்னர் பார்த்த உருவம் என்பதை உறுதி செய்து அது அல்லாஹ்தான் என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டார்கள் என்றால், முன்பு வேறு யாரோ அல்லாஹ் போன்று வந்து சென்றுள்ளார்கள் என்றல்லவா ஆகும். உண்மையில் இரண்டாவது முறை கண்டவர்கள் இதுதான் அல்லாஹ் என நிச்சயப்படுத்திக் கூறியிருந்தால், முன்பு எங்கே பார்த்தார்கள் என்ற கேள்வி எழும். அதற்கான விடை கொடுக்கப்படவில்லை. அது பற்றி ஆராய முன்னர், முதலாவது மறுமை வந்து விட்டதா? இரண்டாவது அல்லாஹ் உருவம் எடுத்து எதையும் செய்யும் தேவை கொண்டவனா? மூன்று மறுமையில்கூட அல்லாஹ் அல்லாதவர்கள் அல்லாஹ்வின் உருவில் வந்துள்ளார்கள் என்ற மாயையை உருவாக்கி விடுகிறது இந்த ஹதீஸ். அல்லாஹ்வைக் கண்டு, மனிதர் உறுதி செய்யும் அவலம் அல்லாஹ்வுக்குக் கற்பிக்கப்படுகிறது இந்த ஹதீஸ் மூலம்.

உருவின்றி இங்குமங்குமாக அலைக்கழிக்கப்படும் மேகம்,புகை போன்றவை எவ்வளவு உருவங்களாக மாற்றப்படுகின்றன! அவை அவற்றின் உருவங்களா? நாம் காண்பவற்றுக்கே உருவமில்லை என்ற நிலை,காண்பதற்கு உருவம் தேவையில்லை என்பதை நிறுவுகிறது. இந்நிலயை எண்ணிப் பார்த்தால் அனேக உண்மைகள் மறைந்து நிற்பதை அறியலாம். இது அல்லாஹ் வுக்கு உருவமுண்டா இல்லையா என்ற வாதத்தைத் தேவையற்றதாக ஆக்கிவிடும். வெளிச்சம் இல்லாதபோது எதையும் காண முடிவதில்லை என்பதனால் எதுவுமில்லை என்றாகி விடுமா?

அல்லாஹ்வுக்குள் அடக்கமான அவனது படைப்பான அகண்ட வெளிக்குள் (Space) இருந்து கொண்டு அதற்கு உருவம் உண்டா இல்லையா எனக் கூற முடியாத நிலையில் இருப்பதை அறிகிறோமே! அப்படியிருக்க அகண்ட வெளியையும் தன்னுள் கொண்ட அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு இல்லை என எண்ணவாவது நம்மால் முடியுமா! இதனால் தானே எண்ணங்களில் அதிகமானவை பாவமாகும். அதனைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என அறிவுரை பகன்றுள்ளான். 49:12 நீங்கள் எண்ணங்களில் பெரும்பாலானவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக எண்ணங்களில் சில பாவமாகும். துருவி ஆராய்ந்து கொண்டு இருக்காதீர்கள்.

அல்லாஹ்வை அறிய வேண்டிய கடமைப்பட்டவர்களாக நாமிருக்கையில், அவனை அறிவதற்கான வழிவகைகளைக் காண வேண்டியும் உள்ள நிலையில், நாம் வாளாவிருக்க முடியுமா? இல்லையே! அப்படியானால் அதற்கு நாம் என்ன செய்யலாம் என்பதற்கு, அல்லாஹ்வே நமது பார்வைகளை வந்தடைவதாகக் கூறியுள்ளமைக்கு வேறு விளக்கங்கள் கொடுத்து வழிதவறாமல், அவன் வழியில் முயற்சித்தால், நமது முயற்சிகள் கணக்கெடுக்கப்பட்டு, அதற்கேற்ப பலனை நமக்கு அவன் தரவே செய்வான்.

நம்பிக்கையாளருக்கு அவர்கள் முயற்சித்ததே தவிர இல்லை. இது அவனது வாக்கே. ஆதலால் நாம் முழுமையாக அவனை நம்பி, இஸ்லாத்துள் நுழைந்து, அவன் வழியில் போராடி, அவன் திருப்தியைப் பெற்றால், அவனும் தன் வாக்கைக் காப்பாற்றி, நம் கண்ணுள் காட்சியாவான், நாமும் திருப்தியடைவோம்.