New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருமுருகாற்றுப்படை


Guru

Status: Offline
Posts: 24601
Date:
திருமுருகாற்றுப்படை
Permalink  
 


 திருமுருகாற்றுப்படை-சொற்பிரிப்பு மூலம்

நக்கீரர்

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு                                                 நெடு 1,முல் 1,பட் 67

பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டு ஆஅங்கு

ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி

உறுநர் தாங்கிய மதன் உடை நோன் தாள்

5           செறுநர் தேய்த்த செல் உறழ் தட கை                                      திரு 99

மறு இல் கற்பின் வாணுதல் கணவன்
            கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை
            வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி
10       தலை பெயல் தலைஇய தண் நறும் கானத்து
           இருள் பட பொதுளிய பராரை மராஅத்து
           உருள் பூ தண் தார் புரளும் மார்பினன்
           மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில்                                  திரு 256,பெரும் 330
          கிண்கிணி கவைஇய ஒண் செம் சீறடி
15      கணை கால் வாங்கிய நுசுப்பின் பணை தோள்
          கோபத்து அன்ன தோயா பூ துகில்
           பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல்
          கை புனைந்து இயற்றா கவின் பெறு வனப்பின்
          நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை
20    சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி
         துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதி
         செம் கால் வெட்சி சீறிதழ் இடை இடுபு
         பைம் தாள் குவளை தூ இதழ் கிள்ளி
         தெய்வவுத்தியொடு வலம்புரி வயின் வைத்து
         திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்
25     மகர பகு வாய் தாழ மண்ணுறுத்து

துவர முடித்த துகள் அறும் முச்சி

பெரும் தண் சண்பகம் செரீஇ கரும் தகட்டு

உளை பூ மருதின் ஒள் இணர் அட்டி                                                 திரு 34

கிளை கவின்று எழுதரு கீழ் நீர் செ அரும்பு

30           இணைப்புறு பிணையல் வளைஇ துணை தக                      திரு 200,237

வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர்                                     திரு 207,குறி 119

நுண் பூண் ஆகம் திளைப்ப திண் காழ்

நறும் குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வை

தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின்                                 திரு 28

35           குவி முகிழ் இள முலை கொட்டி விரி மலர்                      சிறு 25

வேங்கை நுண் தாது அப்பி காண்வர

வெள்ளில் குறு முறி கிள்ளுபு தெறியா

கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி                                 திரு 55

வாழிய பெரிது என்று ஏத்தி பலர் உடன்

40           சீர் திகழ் சிலம்பகம் சிலம்ப பாடி

சூர் அரமகளிர் ஆடும் சோலை

மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து                                  மலை 315

சுரும்பும் மூசா சுடர் பூ காந்தள்                                                     மலை 145

பெரும் தண் கண்ணி மிலைந்த சென்னியன்

45           பார் முதிர் பனி கடல் கலங்க உள் புக்கு

சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல்                                  பெரும் 457

உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய்

சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின்

கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க

50           பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு

உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்

குருதி ஆடிய கூர் உகிர் கொடு விரல்

கண் தொட்டு உண்ட கழி முடை கரும் தலை

ஒண் தொடி தட கையின் ஏந்தி வெருவர

55           வென்று அடு விறல் களம் பாடி தோள் பெயரா                    திரு 38

நிணம் தின் வாயள் துணங்கை தூங்க                                      பெரும் 235

இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை

அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி

அவுணர் நல் வலம் அடங்க கவிழ் இணர்

60           மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து

எய்யா நல் இசை செ வேல் சேஎய்

சேவடி படரும் செம்மல் உள்ளமொடு                                      சிறு 145

நலம் புரி கொள்கை புலம் பிரிந்து உறையும்

செலவு நீ நயந்தனை ஆயின் பல உடன்

65           நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப

இன்னே பெறுதி நீ முன்னிய வினையே

செரு புகன்று எடுத்த சேண் உயர் நெடும் கொடி

வரி புனை பந்தொடு பாவை தூங்க

பொருநர் தேய்த்த போர் அரு வாயில்

70           திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து

மாடம் மலி மறுகின் கூடல் குட வயின்                                    மது 429,நெடு 29

இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த

முள் தாள் தாமரை துஞ்சி வைகறை                       சிறு 183,பெரும் 114,மது 249

கள் கமழ் நெய்தல் ஊதி எல் பட

75           கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர்

அம் சிறை வண்டின் அரி கணம் ஒலிக்கும்

குன்று அமர்ந்து உறைதலும் உரியன் அதாஅன்று

வைந்நுதி பொருத வடு ஆழ் வரி நுதல்

வாடா மாலை ஓடையொடு துயல்வர

80           படு மணி இரட்டும் மருங்கின் கடு நடை

கூற்றத்து அன்ன மாற்று அரு மொய்ம்பின்

கால் கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு                       திரு 170

ஐ வேறு உருவின் செய்வினை முற்றிய

முடியொடு விளங்கிய முரண் மிகு திரு மணி

85           மின் உறழ் இமைப்பின் சென்னி பொற்ப

நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலம் குழை

 

சேண் விளங்கு இயற்கை வாண் மதி கவைஇ

அகலா மீனின் அவிர்வன இமைப்ப

தா இல் கொள்கை தம் தொழில் முடிமார்                                  திரு 175

90           மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே

மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க

பல் கதிர் விரிந்தன்று ஒரு முகம் ஒரு முகம்

ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி

காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே ஒரு முகம்

95           மந்திர விதியின் மரபுளி வழாஅ

அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம்

எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி

திங்கள் போல திசை விளக்கும்மே ஒரு முகம்

செறுநர் தேய்த்து செல் சமம் முருக்கி                                     திரு 5

100        கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒரு முகம்

 

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

குறவர் மட மகள் கொடி போல் நுசுப்பின்

மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே

ஆங்கு அ மூவிரு முகனும் முறை நவின்று ஒழுகலின்

ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்

105        செம் பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர் விடுபு

வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள்

விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது

ஒரு கை உக்கம் சேர்த்தியது ஒரு கை

நலம் பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை

110        அங்குசம் கடாவ ஒரு கை இரு கை

ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப ஒரு கை

மார்பொடு விளங்க ஒரு கை

தாரொடு பொலிய ஒரு கை

கீழ் வீழ் தொடியொடு மீமிசை கொட்ப ஒரு கை

115        பாடு இன் படு மணி இரட்ட ஒரு கை

நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய ஒரு கை   பெரும் 135,மது 581,மலை 1

வான் அரமகளிர்க்கு வதுவை சூட்ட

ஆங்கு அ பன்னிரு கையும் பால் பட இயற்றி

அந்தர பல் இயம் கறங்க திண் காழ்

120        வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல                                 முல் 92

உரம் தலை கொண்ட உரும் இடி முரசமொடு                     குறி 49,மலை2-3,532

பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ

விசும்பு ஆறு ஆக விரை செலல் முன்னி

உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழு சீர்

125        அலைவாய் சேறலும் நிலைஇய பண்பே அதாஅன்று

சீரை தைஇய உடுக்கையர் சீரொடு

வலம்புரி புரையும் வால் நரை முடியினர்

மாசு அற இமைக்கும் உருவினர் மானின்                                   மது 456

உரிவை தைஇய ஊன் கெடு மார்பின்

130        என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் நன் பகல்

பல உடன் கழிந்த உண்டியர் இகலொடு

செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்

கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்கு

தாம் வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு

135        கடும் சினம் கடிந்த காட்சியர் இடும்பை

யாவதும் அறியா இயல்பினர் மேவர

துனி இல் காட்சி முனிவர் முன் புக

புகை முகந்து அன்ன மாசு இல் தூ உடை                                  பெரும் 469

முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து

140        செவி நேர்பு வைத்த செய்வுறு திவவின்

நல் யாழ் நவின்ற நயன் உடை நெஞ்சின்

மென் மொழி மேவலர் இன் நரம்பு உளர

நோய் இன்று இயன்ற யாக்கையர் மாவின்

அவிர் தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்

145        பொன் உரை கடுக்கும் திதலையர் இன் நகை

பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல்

மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்க

கடுவொடு ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிற்று

அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல்

150        பாம்பு பட புடைக்கும் பல் வரி கொடும் சிறை

புள் அணி நீள் கொடி செல்வனும் வெள் ஏறு

வல வயின் உயரிய பலர் புகழ் திணி தோள்

உமை அமர்ந்து விளங்கும் இமையா மு கண்

மூவெயில் முருக்கிய முரண் மிகு செல்வனும்

155        நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல்

வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து

ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடைதாழ் பெரும் தட கை உயர்த்த யானை                                     சிறு 19

எருத்தம் ஏறிய திரு கிளர் செல்வனும்

160        நால் பெரும் தெய்வத்து நல் நகர் நிலைஇய

உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கை

பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக

ஏமுறு ஞாலம்தன்னில் தோன்றி

தாமரை பயந்த தா இல் ஊழி                                                       பெரும் 404

165        நான்முக ஒருவர் சுட்டி காண்வர

பகலில் தோன்றும் இகல் இல் காட்சி

நால் வேறு இயற்கை பதினொரு மூவரொடு

ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர்

மீன் பூத்து அன்ன தோன்றலர் மீன் சேர்பு                                   பெரும் 477

170        வளி கிளர்ந்து அன்ன செலவினர் வளி இடை                      திரு 82

தீ எழுந்து அன்ன திறலினர் தீ பட

உரும் இடித்து அன்ன குரலினர் விழுமிய

உறு குறை மருங்கில் தம் பெறு முறை கொண்மார்

அந்தர கொட்பினர் வந்து உடன் காண

 175        தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள்                      திரு 89

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

ஆவினன்குடி அசைதலும் உரியன் அதாஅன்று

இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது

இருவர் சுட்டிய பல் வேறு தொல் குடி

அறுநான்கு இரட்டி இளமை நல் யாண்டு

180        ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை

மூன்று வகை குறித்த முத்தீ செல்வத்து

இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல

ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்

புலரா காழகம் புலர உடீஇ

185        உச்சி கூப்பிய கையினர் தன் புகழ்ந்து

ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி

நா இயல் மருங்கில் நவில பாடி

விரையுறு நறு மலர் ஏந்தி பெரிது உவந்து                                  திரு 235

ஏரகத்து உறைதலும் உரியன் அதாஅன்று

190        பைம் கொடி நறை காய் இடை இடுபு வேலன்

அம் பொதி புட்டில் விரைஇ குளவியொடு

வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன்                                      பட் 85

நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின்

கொடும் தொழில் வல் வில் கொலைஇய கானவர்

195        நீடு அமை விளைந்த தேம் கள் தேறல்                                     மலை 171,522

குன்றக சிறு குடி கிளையுடன் மகிழ்ந்து

தொண்டக சிறுபறை குரவை அயர

விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறும் கான்

குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி

200        இணைத்த கோதை அணைத்த கூந்தல்                                     திரு 30

 முடித்த குல்லை இலை உடை நறும் பூ

 

செம் கால் மராஅத்த வால் இணர் இடை இடுபு

சுரும்பு உண தொடுத்த பெரும் தண் மா தழை

திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ

205        மயில் கண்டு அன்ன மட நடை மகளிரொடு                       பெரும் 331,மது 608

செய்யன் சிவந்த ஆடையன் செ அரை

செயலை தண் தளிர் துயல்வரும் காதினன்                                 திரு 31,குறி 119

கச்சினன் கழலினன் செச்சை கண்ணியன்

குழலன் கோட்டன் குறும் பல் இயத்தன்

210        தகரன் மஞ்ஞையன் புகர் இல் சேவல் அம்

கொடியன் நெடியன் தொடி அணி தோளன்

நரம்பு ஆர்த்து அன்ன இன் குரல் தொகுதியொடு

குறும்பொறி கொண்ட நறும் தண் சாயல்

மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன்

215        முழவு உறழ் தட கையின் இயல ஏந்தி

மென் தோள் பல் பிணை தழீஇ தலைத்தந்து

குன்றுதொறு ஆடலும் நின்ற தன் பண்பே அதாஅன்று

சிறு தினை மலரொடு விரைஇ மறி அறுத்து

வாரண கொடியொடு வயின் பட நிறீஇ

220        ஊரூர் கொண்ட சீர் கெழு விழவினும்

ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்

வேலன் தைஇய வெறி அயர் களனும்

காடும் காவும் கவின் பெறு துருத்தியும்

யாறும் குளனும் வேறு பல் வைப்பும்

225        சதுக்கமும் சந்தியும் புது பூ கடம்பும்

மன்றமும் பொதியிலும் கந்து உடை நிலையினும்

மாண் தலை கொடியொடு மண்ணி அமைவர

நெய்யோடு ஐயவி அப்பி ஐது உரைத்து                                     நெடு 86

குடந்தம்பட்டு கொழு மலர் சிதறி

230        முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ

செம் நூல் யாத்து வெண் பொரி சிதறி

மத வலி நிலைஇய மா தாள் கொழு விடை

குருதியொடு விரைஇய தூ வெள் அரிசி                                    திரு 242

சில் பலி செய்து பல் பிரப்பு இரீஇ

235        சிறு பசு மஞ்சளொடு நறு விரை தெளித்து                                  திரு 188

பெரும் தண் கணவீர நறும் தண் மாலை

துணையுற அறுத்து தூங்க நாற்றி                                                   திரு 30,குறி 177

நளி மலை சிலம்பில் நல் நகர் வாழ்த்தி

நறும் புகை எடுத்து குறிஞ்சி பாடி

240        இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க

உருவ பல் பூ தூஉய் வெருவர

குருதி செம் தினை பரப்பி குறமகள்                                                 திரு 233

முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க

முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர்

245        ஆடுகளம் சிலம்ப பாடி பல உடன்

கோடு வாய்வைத்து கொடு மணி இயக்கி

ஓடா பூட்கை பிணிமுகம் வாழ்த்தி                                                  சிறு 83

வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட

ஆண்டாண்டு உறைதலும் அறிந்த ஆறே

250        ஆண்டாண்டு ஆயினும் ஆக காண்தக

முந்து நீ கண்டுழி முகன் அமர்ந்து ஏத்தி

கை தொழூஉ பரவி கால் உற வணங்கி                                    பெரும் 463

நெடும் பெரும் சிமையத்து நீல பைம் சுனை

ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

255        அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ

ஆல் கெழு கடவுள் புதல்வ மால் வரை                                    திரு 12,சிறு 97

மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே

வெற்றி வெல் போர் கொற்றவை சிறுவ

இழை அணி சிறப்பின் பழையோள் குழவி                                  பொரு 85

260        வானோர் வணங்கு வில் தானை தலைவ

மாலை மார்ப நூல் அறி புலவ

செருவில் ஒருவ பொரு விறல் மள்ள

அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை

மங்கையர் கணவ மைந்தர் ஏறே

265        வேல் கெழு தட கை சால் பெரும் செல்வ

குன்றம் கொன்ற குன்றா கொற்றத்து

விண் பொரு நெடு வரை குறிஞ்சி கிழவ                                    திரு 299

பலர் புகழ் நல் மொழி புலவர் ஏறே

அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக                                       முரு 274

270        நசையுநர்க்கு ஆர்த்தும் இசை பேராள

அலந்தோர்க்கு அளிக்கும் பொலம் பூண் சேஎய்

மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து

பரிசிலர் தாங்கும் உரு கெழு நெடு வேஎள்

பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள்                                  திரு 269

275        சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி

போர் மிகு பொருந குருசில் என பல

யான் அறி அளவையின் ஏத்தி ஆனாது

நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின்

நின் அடி உள்ளி வந்தனென் நின்னொடு

280        புரையுநர் இல்லா புலமையோய் என

குறித்தது மொழியா அளவையின் குறித்து உடன்                 பொரு 73,பொரு 152,சிறு 235,பெரு 464

வேறு பல் உருவின் குறும் பல் கூளியர்

சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி

அளியன்தானே முது வாய் இரவலன்                                       சிறு 40

285        வந்தோன் பெரும நின் வண் புகழ் நயந்து என                     பெரும் 461

இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி

தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின்

வான் தோய் நிவப்பின் தான் வந்து எய்தி

அணங்கு சால் உயர் நிலை தழீஇ பண்டை தன்

290        மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி

அஞ்சல் ஓம்புமதி அறிவல் நின் வரவு என

அன்பு உடை நல் மொழி அளைஇ விளிவு இன்று

இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து

ஒரு நீ ஆகி தோன்ற விழுமிய

295        பெறல் அரும் பரிசில் நல்குமதி பல உடன்

வேறு பல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து

ஆர முழு முதல் உருட்டி வேரல்

பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு

விண் பொரு நெடு வரை பரிதியின் தொடுத்த                      திரு 267

300        தண் கமழ் அலர் இறால் சிதைய நன் பல

ஆசினி முது சுளை கலாவ மீமிசை

நாக நறு மலர் உதிர யூகமொடு

மா முக முசு கலை பனிப்ப பூ நுதல்

இரும் பிடி குளிர்ப்ப வீசி பெரும் களிற்று

305        முத்து உடை வான் கோடு தழீஇ தத்துற்று

நல் பொன் மணி நிறம் கிளர பொன் கொழியா

வாழை முழு முதல் துமிய தாழை

இளநீர் விழு குலை உதிர தாக்கி

கறி கொடி கரும் துணர் சாய பொறி புற

310        மட நடை மஞ்ஞை பல உடன் வெரீஇ

கோழி வய பெடை இரிய கேழலொடு

இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன

குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம்                                  மலை 501

பெரும் கல் விடர் அளை செறிய கரும் கோட்டு

315        ஆமா நல் ஏறு சிலைப்ப சேணின்று

இழுமென இழிதரும் அருவி

பழம் முதிர் சோலை மலை கிழவோனே



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 திருமுருகாற்றுப்படை- நக்கீரர்

  

 

உயிர்கள் மகிழும் பொருட்டு வலமாக எழுந்து திரிதலைச் செய்யும்

பலரும் புகழும் ஞாயிறு கடலில் (எழக்)கண்டதைப் போன்று,
ஒழிவு இல்லாமல் மின்னும் சேய்த்துநின்று ஒளிரும் பிரகாசமான ஒளியையுடைய,
(
தன்னைச்)சேர்ந்தவர்களைத் தாங்குகின்ற செருக்குடைய, வலிமையான திருவடிகளையும்,
(
தான்)கோபங்கொண்டாரை அழித்த இடியின் மாற்றான பெரிய கையினை உடையவனும்               5
குற்றமற்ற கற்பினையும், ஒளியுடைய நெற்றியினையும், உடையவளின் கொழுநன் ஆகியவனும் -
கடலில் முகந்த நிறைத்த சூல் (கொண்ட)மேகங்கள்,
(
மின்னலாகிய)வாள் பிளந்த வானிடத்தே பெரிய துளியைச் சிதறி,
முதல்மழை பொழிந்த தண்ணிய நறிய காட்டில்,
இருள் உண்டாகத் தழைத்த பரிய அடியையுடைய செங்கடம்பின்                                                     10
(
தேர்)உருள் போலும் பூவால் செய்யப்பட்ட குளிர்ந்த மாலை அசையும் மார்பினையுடையவனும் -
பெரிய மூங்கில் உயர்ந்து வளர்ந்துள்ள வானளாவிய மலையிடத்தே,
சிறு சதங்கை சூழ்ந்த ஒளிரும் சிவந்த சிறிய அடியினையும்,
திரட்சியையுடைய காலினையும், வளைந்து நுடங்கிய இடையினையும், பெருமையுடைய தோளினையும்,
தம்பலப்பூச்சி(யின் செந்நிறத்தை) ஒத்த, சாயம் தோய்க்கப்படாத பூவேலைப்பாடமைந்த துகிலினையும்,           15
பல (பொற்)காசுகளை வரிசையாக அமைத்த சில வடங்களை அணிந்த அல்குலினையும்,
கையால் ஒப்பனை செய்து தோற்றுவிக்கப்படாத அழகினைப் பெற்ற வனப்பையும்,
நாவலின் பெயர்பெற்ற (சாம்பூந்தமென்னும்)பொன்னால் செய்த ஒளிரும் அணிகலன்களையும்,
தொலைதூரத்தையும் கடந்து விளங்கும் குற்றம் தீர்ந்த நிறத்தினையும் (உடைய சூரர மகளிர்) -
தோழியர் ஆராய்ந்த இணைந்து நெய் பூசி ஈரமான மயிரில்                                                               20
சிவந்த காலையுடைய வெட்சியின் சிறிய பூக்களை நடுவே (விடுபூவாக)இட்டு,
பசிய தண்டினையுடைய குவளையின் தூய இதழ்களைக் கிள்ளி (இட்டு),
தெய்வவுத்தி, வலம்புரி ஆகிய தலைக்கோலங்களை அதனதன் இடத்தில் வைத்து,
திலகம் இட்ட மணம் நாறுகின்ற அழகிய நெற்றியில்
சுறாவின் அங்காந்த வாயாகப்பண்ணின தலைக்கோலம் தங்கச் செய்து,                                             25


முற்ற முடித்த குற்றம் இல்லாத கொண்டையில்
பெரிய குளிர்ந்த சண்பகப்பூவைச் செருகி, கரிய புறவிதழினையும்
உள்ளே துய்யினையும் உடைய பூக்களையுடைய மருதின் ஒளிரும் பூங்கொத்துக்களை அதன் மேல் இட்டு,
கிளையில் அழகுற்று வளரும் நீர்க்கீழ் நின்ற சிவந்த அரும்பைக்
கட்டுதலுற்ற மாலையை வளைய வைத்து, (தம்மில்)ஒத்தற்குப் பொருந்த,                                                  30
வளவிய காதில் (இட்டு)நிறைந்த பிண்டியின் ஒளிரும் தளிர்
நுண்ணிய பூணையுடைய மார்பில் அசைய, திண்ணிய வயிரத்தையுடைய
நறிய (சந்தனக்)கட்டையை உரைத்த பொலிவுள்ள நிறத்தையுடைய குழம்பை,
மணம் நாறுகின்ற மருதம் பூவை (அப்பினால்)ஒப்பக், கோங்கின்
குவிந்த அரும்பு (ஒத்த)இளமுலையில் அப்பி, விரிந்த மலரினையுடைய                                35
வேங்கைப் பூவின் நுண்ணிய தாதையும் அதன்மேல் அப்பி, (மேலும்)அழகுண்டாக,
விளவின் சிறிய தளிரைக் கிள்ளித் தெறித்துக்கொண்டு,
கோழி(யின் உருவத்தைத் தன்னிடத்தே கொண்டு) உயர்ந்த வென்று அடுகின்ற வெற்றியையுடைய கொடி
வாழ்வதாக, நெடுங்காலம்', என்று வாழ்த்திப், பலருடன்
சீர்மை விளங்குகின்ற மலையிடமெல்லாம் எதிரொலிக்கப் பாடி -                                      40



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கொடுமையுடைய தெய்வமகளிர் ஆடும் சோலையையுடைய,
மந்திகளும் (ஏறி)அறியாத மரம் நெருங்கின பக்கமலையில்,
வண்டுகளும் மொய்க்காத நெருப்புப் போலும் பூவினையுடைய செங்காந்தளின்
பெரிய குளிர்ந்த கண்ணியைச் சூடிய திருமுடியையுடையவனும் -
பாறைநிலம் முதிர்வு பெற்ற குளிர்ந்த கடல் நிலைகுலைய உள்ளே சென்று,                                           45
சூரனாகிய தலைவனைக் கொன்ற ஒளிவிடுகின்ற இலைத்தொழிலையுடைய நெடிய வேல் -
காய்ந்து போன மயிரினையும், நிரை ஒவ்வாத பல்லினைக் கொண்ட பெரிய வாயினையும்,
சுழலும் விழியையுடைய பசிய கண்ணினையும், கொடிய பார்வையினையும்,
பிதுங்கிய கண்ணையுடைய கூகையோடு, கொடிய பாம்பு(ம்) தூங்கும் (அளவிற்குப் பெரிதான)
பெரிய முலையை வருத்துகின்ற காதினையும், சொரசொரப்பான பெரிய வயிற்றையும்,                     50
(
கண்டோர்)அஞ்சுதல் பொருந்திய நடையினையும் உடைய அச்சம் தோன்றுகின்ற பேயாகிய மகள்
குருதியை அளைந்த கூரிய உகிரினையுடைய கொடிய விரலால்
கண்களைத் தோண்டி உண்ணப்பட்ட மிக்க முடை நாற்றத்தையுடைய கரிய தலையை
ஒள்ளிய தொடியையுடைய பெரிய கையில் ஏந்தி, அச்சந்தோன்ற
வென்று அழிக்கும் திறலையுடைய போர்க்களத்தைப் பாடி, தோளை அசைத்து,                                       55
நிணத்தைத் தின்கின்ற வாயையுடையளாய், துணங்கைக்கூத்து ஆட -
இரண்டு பெரிய வடிவினையுடைய ஒன்றாகிய பெரிய உடல்,
அற்று வேறாகும் வகையால் அச்சம் தோன்ற மிக்குச் சென்று,
அவுணரின் நல்ல வெற்றி இல்லையாகும்படி, கீழ்நோக்கின பூங்கொத்துக்களையுடைய
மாமரத்தின் அடியை வெட்டின குற்றம் இல்லாத வெற்றியினையும்,                                                             60
அளந்தறியமுடியாத நல்ல புகழினையும், செவ்விய வேலையும் உடைய முருகக்கடவுளின் -
திருவடியில் செல்லுதற்குரிய பெருமைகொண்ட உள்ளத்தோடு,
நன்மைகளையே செய்யும் மேற்கோளுடன், (இருக்கும்)இடத்தை விட்டு (வேறிடத்தில்) தங்கும்
பயணத்தை நீ விரும்பியவனாய் இருந்தால், (கழிந்த)பற்பல பிறப்புகளிலும்,
நல்ல நெஞ்சத்தில் கிடந்த இனிய (வீடுபேற்றின்கண்)விருப்பம் நிறைவேறும்படி,                                    65
இப்பொழுதே பெறுவாய், நீ கருதிய வினையின் பயனை;
போரை விரும்பி எடுத்துக்கொண்ட, தொலை நாட்டில் உயர்ந்த, நெடிய கொடிக்கு அருகே
(
நூலால்)வரிந்து புனையப்பட்ட பந்துடன் பாவையும் தூங்கிக்கிடப்ப,
பொருவாரை இல்லையாக்கிய போர்த்தொழில் அரிதாகிய வாயிலினையும்,
திருமகள் வீற்றிருந்த குற்றம் தீர்ந்த அங்காடித் தெருவினையும்,                                                                    70
மாடங்கள் மிகுந்திருக்கும் (ஏனைத்)தெருக்களையும் உடைய மதுரையின் மேற்றிசையில் -
கரிய சேற்றினையுடைய அகன்ற வயலில் முறுக்கவிழ்ந்து மேற்புறமும் மலர்ந்த
முள்ளிருக்கும் தண்டையுடைய தாமரைப் பூவில் துயில்கொண்டு, விடியற்காலத்தே,
தேன் நாறுகின்ற நெய்தல் பூவை ஊதி, ஞாயிறு வீழ
கண்ணைப்போன்று விரிந்த விருப்பம் மருவின சுனைப் பூக்களில்,                                                                 75
அழகிய சிறகையுடைய வண்டின் அழகிய திரள் ஆரவாரிக்கும் -
திருப்பரங்குன்றத்தில் நெஞ்சமர்ந்து இருத்தலும் உரியன், அதோடன்றி,
கூரிய நுனி(யையுடைய தோட்டி) வெட்டின வடு அழுந்தின புகரையுடைய நெற்றியில்
வாடாத மாலையான பொன்னரிமாலை நெற்றிப்பட்டத்தோடு கிடந்து அசைய,
தாழ்கின்ற மணி மாறிமறி ஒலிக்கின்ற பக்கத்தினையும், கடிய நடையினையும்,                                     80



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கூற்றுவனை ஒத்த பிறரால் தடுத்தற்கரிய வலிமையினையும் உடைய,
காற்று எழுந்ததைப் போன்ற (ஓட்டத்தையுடைய)களிற்றில் ஏறி -
ஐந்தாகிய வேறுபட்ட வடிவினையுடைய (முடிக்குச்)செய்யும் தொழிலெல்லாம் முற்றுப்பெற்ற
முடியோடு விளங்கிய (ஒன்றற்கொன்று)மாறுபாடு மிகும் அழகினையுடைய மணிகள்
மின்னலுக்கு மாற்றாகும் சிமிட்டலுடன் தலையில் பொலிவுபெறவும்,                                                          85
ஒளி தங்கி அசையும் வகையாக(-நன்றாக) அமைந்த பொன்னாலான மகரக்குழை
தொலை தூரத்திற்கும் ஒளிரும் இயல்பினையுடைய ஒளியை உடைய திங்களைச் சூழ்ந்து
நீங்காத மீன்கள் போல விளங்குவனவாய் மின்ன,
குற்றம் இல்லாத நோன்புகளையுடைய தமது தவத்தொழிலை முடிப்பாருடைய
நெஞ்சில் பொருந்தித் தோன்றுகின்ற ஒளி மிக்க நிறத்தையுடைய திருமுகங்களில்;                            90
பெரும் இருள் (சூழ்ந்த)உலகம் குற்றமில்லாததாய் விளங்க
பல ஒளிக்கீற்றுகளையும் பரப்பியது ஒரு முகம்; ஒரு முகம்
(
தன்பால்)அன்புசெய்தவர்கள் வாழ்த்த, (அவர்க்கு) முகனமர்ந்து இனிதாக நடந்து,
(
அவர்மேல் கொண்ட)காதலால் மகிழ்ந்து (வேண்டும்)வரங்களைக் கொடுத்தது; ஒரு முகம்
மந்திர நியதிகளின் மரபுள்ளவற்றில் வழுவாத                                              95
அந்தணருடைய வேள்விகளை கூர்ந்து கேட்கும்; ஒரு முகம்
எஞ்சிய பொருள்களைச் (சான்றோர்)காவலுறும்படி ஆராய்ந்துணர்ந்து,
திங்கள் போலத் திசைகளெல்லாவற்றையும் பொலிவுறுத்தி நிற்கும்; ஒரு முகம்
கோபமுடையோரை அழித்து, செல்லுகின்ற போரில் கொன்றழித்து,
வெகுளி கொண்ட நெஞ்சத்தோடு களவேள்வியைச் செய்யும்; ஒரு முகம்               100
குறவரின் இளமகளாகிய, கொடி போன்ற இடையையும்
மடப்பத்தையும் உடைய, வள்ளியோடே மகிழ்ச்சியைப் பொருந்திற்று;
அவ்வாறாக, அந்த ஆறு முகங்களும் (தத்தம்)முறைமைகளைப் பயின்று நடத்தலால் -
ஆரத்தைத் தாங்கிய அழகுடைய பெரிய மார்பிடத்தே கிடக்கின்ற
சிவந்த வரிகளை வாங்கிக்கொண்ட, வலிமை மிக்க, வேலை எறிந்து,                                                             105
வளவிய புகழ் நிறையப்பெற்று, வளைந்து நெளிந்து(உருண்டு திரண்ட) நிமிர்ந்த தோள்களில்,
விண்ணுலகத்திற்குச் செல்லும் முறைமையினையுடைய துறவிகட்குப் பாதுகாவலாக ஏந்தியது
ஒரு கை; இடுப்பில் வைக்கப்பட்டது மற்றொரு கை;
செம்மைநிறம் பெற்ற ஆடையுடைய துடையின் மேலே கிடந்தது ஒரு கை;
தோட்டியைச் செலுத்தி நிற்ப ஒரு கை; இரண்டு கைகள்                                              110
அழகிய பெரிய கேடகத்தோடு வேற்படையையும் வலமாகச் சுற்றிநிற்ப; ஒரு கை
மார்போடே விளங்கிநிற்க; ஒரு கை
மாலையோடு அழகு பெற; ஒரு கை
கீழ்நோக்கி நழுவி வீழும் தொடி என்ற அணிகலனோடு மேலே சுழல; ஒரு கை
ஓசை இனிதாக ஒலிக்கின்ற மணியை மாறி மாறி ஒலிக்கப்பண்ண; ஒரு கை                 115
நீல நிறத்தையுடைய முகிலால் மிக்க மழையைப் பெய்விக்க; ஒரு கை
தெய்வ மகளிர்க்கு மணமாலை சூட்ட; 
அப்படியே, அந்தப் பன்னிரண்டு கையும் (ஆறு முகங்களின்)பகுதியில் பொருந்தத் தொழில்செய்து -
விசும்பின் பல இசைக்கருவிகள் முழங்கவும், திண்ணிய வயிரத்தையுடைய
கொம்பு மிக்கு ஒலிப்பவும், வெள்ளிய சங்கு முழங்கவும்,                                                                                    120



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வலிமையை(த் தன்னிடத்து)க் கொண்ட உருமேற்றின் இடி(யைப் போன்று ஒலிக்கும்)முரசுடன்
பல பீலியையுடைய மயில் வெற்றிக் கொடியிலிருந்து அகவ,
வானமே வழியாக விரைந்த செலவினை மேற்கொண்டு,
உலகமக்களால் புகழப்பட்ட மிக உயர்ந்த சிறந்த புகழினையுடைய
அலைவாய் என்னும் ஊரில் ஏற எழுந்தருளுதலும் (அவன்)நிலைபெற்ற பண்பே,அவ்வூரல்லாமலும், 125
மரவுரியை உடையாகச் செய்த உடையவரும், அழகோடு
வலம்புரிச்சங்கினை ஒத்த வெண்மையான நரைமுடியினை உடையவரும்,
அழுக்கு அற மின்னும் உருவினரும், மானின்
தோல் போர்த்த தசை கெடுகின்ற மார்பின்
எலும்புகள் தோன்றி உலவும் உடம்பினையுடையவரும், நல்ல பகற்பொழுதுகள்                        130
பலவும் சேரக்கழிந்த உணவினையுடையவரும், மாறுபாட்டுடன்
கோபத்தை(யும்) நீக்கிய மனத்தினரும், பலவற்றையும்
கற்றோரும் அறியாத அறிவினையுடையவரும், கற்றோர்க்கும்
தாம் எல்லையாகிய தலைமையை உடையவரும், அவாவோடு
கடிய சினத்தை(யும்) விலக்கிய காண்பதற்கினியரும், மனவருத்தம்                                          135
ஒருசிறிதும் அறியாத இயல்பினரும், பொருந்துதல் வரும்படி
வெறுப்பு அற்ற காட்சியையுடையரும் ஆகிய முனிவர், முன்னே செல்ல,
புகையை முகந்துகொண்டதைப் போன்ற அழுக்கேறாத தூய உடையினையும்,
மொட்டு வாய் நெகிழ்ந்த மாலை சூழ்ந்த மார்பினையும் (கொண்ட),
செவியால் இசையை அளந்து நரம்பைக் கட்டின சுற்றுதலுறும் வார்க்கட்டினையுடைய                 140
நல்ல யாழின் இசையில் பயின்ற நன்மையையுடைய நெஞ்சால்
மெல்லிய மொழி பேசுதல் பொருந்தியோர் (ஆகிய கந்தருவர்), இனிய யாழ் நரம்பை இயக்க -
நோய் இல்லையாக இயன்ற உடம்பினையும், மாவின்
ஒளிரும் தளிரை ஒக்கும் நிறத்தினையுடையவரும், ஒளிர்தோறும்
பொன்னுரை (விளங்கினால்)போல (விளங்கும்)தேமலையுடையவரும் ஆகிய, இனிய ஒளியினையுடைய 145
மேகலையை அணிந்த தாழ்ந்தும் உயர்ந்தும் உள்ள அல்குலையும்,
குற்றமில்லாத மகளிரோடு கறை இன்றி விளங்க;
நஞ்சுடன் மறைந்திருக்கும் உள்துளையுடைய வெண்மையான பல்லினையும்,
நெருப்பென்னும்படி நெட்டுயிர்ப்புக்கொள்ளும் அச்சம் தோன்றும் கடிய வலிமையினையும் உடைய,
பாம்புகள் மாளும்படி அடிக்கின்ற பல வரியினையுடைய வளைந்த சிறகினையுடைய                  150
கருடனை அணிந்த நீண்ட கொடியினையுடைய திருமாலும் - வெள்ளிய ஆனேற்றை
வலப்பக்கத்தே (வெற்றிக்கொடியாக)உயர்த்திய, பலரும் புகழ்கின்ற திண்ணிய தோள்களையும்,
இறைவி பொருந்தி விளங்குகின்ற, இமையாத மூன்று கண்களையும் உடைய,
முப்புரத்தை எரித்த, மாறுபாடு மிக்க உருத்திரனும் -
நூற்றைப் பத்தாக அடுக்கிய(ஆயிரம்) கண்களையும், நூற்றுக்கணக்கான பல                  155
வேள்விகளை வேட்டு முடித்ததனால் வென்று கொல்கின்ற வெற்றியினையும் உடையனாய்,
நான்கு ஏந்திய கொம்புகளையும், அழகிய நடையினையும்,
(
நிலம் வரை)தாழ்ந்த பெரிய வளைவினையுடைய கையினையும் உடைய புகழ்பெற்ற யானையின்
புறக்கழுத்தில் ஏறிய திருமகளின் விளக்கமுடைய இந்திரனும் -
நான்கு பெரும் தெய்வங்களுள் வைத்து நல்ல நகரங்கள் நிலைபெற்றுள்ள                   160



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  உலகத்தை ஓம்புதல் தொழில் ஒன்றையே விரும்பும் கோட்பாட்டையுடைய

பலராலும் புகழப்படுகின்ற (அயனை ஒழிந்த ஏனை)மூவரும் தலைவராக வேண்டி,
பாதுகாவலுறுகின்ற (இம்)மண்ணுலகில் (வந்து)தோன்றி,
தாமரை பெற்ற குற்றமற்ற ஊழிகளையுடைய
நான்முகன் ஒருவனை(ப் பழைய நிலையிலே நிறுத்தலை)க் கருதி, அழகுண்டாக,                                165
பகுத்துக் காணுங்கால் (வேறுபடத்)தோன்றியும், தம்முள் மாறுபாடில்லாத அறிவினையுடைய
நான்காகிய வேறுபட்ட இயல்பினையுடைய முப்பத்து மூவரும்,
பதினெண்வகையாகிய உயர்ந்த நிலையைப் பெற்றவரும் -
விண்மீன்கள் மலர்ந்ததைப் போன்ற தோற்றத்தையுடையவராய், மீன்களின்(இடத்தைச்)சேர்ந்து
காற்று எழுந்ததைப் போன்ற செலவினையுடையராய், காற்றிடத்தே                     170
நெருப்பு எழுந்ததைப் போன்ற வலிமையினையுடையராய், நெருப்புப் பிறக்க
உருமேறு இடித்ததைப் போன்ற குரலினை உடையராய், இடும்பையாயுள்ள
தமக்குற்ற குறைவேண்டும் பகுதியில் (தம்)தொழில்களைப் பெறுமுறையினை முடித்துக்கொள்வதற்கு,
வானத்தே சுழற்சியினையுடையராய், வந்து ஒருசேரக் காண -
குற்றமற்ற அறக்கற்பினையுடைய மடந்தையுடன், சில நாள்                                 175
திருவாவினன்குடி என்னும் ஊரிலே இருத்தலும் உரியன் - அவ்வூரேயல்லாமல்,
ஆறாகிய நன்மை பொருந்திய இலக்கணத்தில் வழுவாமல்,
(
பெற்றோர்)இருவர் குலத்தையும் உலகத்தார் சுட்டிக்காட்டத்தக்க பலவாய் வேறுபட்ட பழைய குடியிற் பிறந்த,
இருபத்துநான்கின் இரட்டியாகிய இளமை மிக்க நல்ல ஆண்டுகளை
(
மெய்ந்நூல் கூறும்)நெறியால் கழித்த, அறத்தை எப்பொழுதும் கூறுகின்ற கோட்பாட்டினையும்,   180
மூன்று வகையைக் கருதின மூன்று தீயாலுண்டாகிய செல்வத்தினையும் உடைய
இருபிறப்பினையுடைய அந்தணர், காலம் அறிந்து வாழ்த்துக்கூற -
ஒன்பதாகிய நூலைத் தன்னிடத்தே கொண்ட, ஒரு புரி மூன்றாகிய, நுண்ணிய பூணூலையும் உடைய,
ஈரம் காயாத துகில் புலர உடுத்தி,
தலைமேல் கூப்பிய கையினராய், தன்னைப் புகழ்ந்து,                                                                                             185
ஆறெழுத்தினைத் தன்னிடத்தே அடக்கி நிற்கின்ற கேட்டற்கரிய மந்திரத்தை
நா புடை பெயரும் அளவுக்கு பயில ஓதி,
(
வாசனைப்புகை முதலியவற்றால்)வாசனையேற்றப்பட்ட மணமுள்ள பூவை எடுத்துத் தூவி, பெரிதும் மகிழ்ந்து,
திருவேரகம் என்கின்ற ஊரில் இருத்தலும் உரியன் - அதுவேயன்றி
பச்சிலைக்கொடியால் நறு நாற்றத்தையுடைய காயை நடுவே இட்டு, வேலன்,                                          190
அழகினையுடைய தக்கோலக் காயைக் கலந்து, காட்டு மல்லிகையுடன்
வெண்டாளியையும் கட்டின கண்ணியினை உடைய;
நறிய சந்தனத்தைப் பூசின நிறம் விளங்கும் மார்பினையுடைய;
கொடிய தொழிலையுடைய வலிய வில்லால் கொல்லுதலைச் செய்த குறவர்
நெடிய மூங்கிலில் இருந்து முற்றின தேனால் செய்த கள்தெளிவை                          195
மலையிடத்தேயுள்ள சிறிய ஊரில் இருக்கின்ற தம் சுற்றத்தோடு உண்டு மகிழ்ந்து
தொண்டகமாகிய சிறுபறை(யின் தாளத்திற்கேற்ப)க் குரவைக்கூத்தைப் பாட,
விரலின் அலைப்பால் மலர்ந்தமையால் வேறுபடுகின்ற நறிய மணத்தையுடைய
ஆழ்ந்த சுனையில் பூத்த மலர்(புனையப்பட்ட) வண்டு வீழ்கின்ற மாலையினையும்,
பிணைக்கப்பட்ட மாலையினையும், சேர்த்தின கூந்தலையும் உடையராய்,                                                  200



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தலையிலே அணிந்த கஞ்சங்குல்லையினையும், இலையையுடைய நறிய பூங்கொத்துக்களையும்,
செவ்விய காலினையும் உடைய மரத்திலுள்ள வெண்மையான கொத்துக்களை நடுவே வைத்துச்
சுரும்பு (தேன்)உண்ணும்படி தொடுத்த பெரிய குளிர்ந்த அழகினையுடைய தழையை
திருந்திய வடங்களையுடைய அல்குலிடத்தே அசையும்படி உடுத்தி,
மயிலைக் கண்டாற் போன்ற மடப்பம் பொருந்திய நடையையுடைய மகளிரோடும்,                            205
சிவந்த மேனியன், சிவந்த ஆடையை உடையவன், சிவந்த அரையினையுடைய
அசோகின் குளிர்ந்த தளிர் அசைகின்ற செவியை உடையவன்,
கச்சைக் கட்டியவன், வீரக்கழல் அணிந்தவன், வெட்சிமாலை சூடியவன்,
குழலை ஊதுபவன், கொம்பைக் குறிப்பவன், சிறிய இசைக்கருவிகளை இசைப்பவன்,
கிடாயையும், மயிலையும் உடையவன், குற்றமில்லாத கோழிக்                              210
கொடியை உடையவன், நெடுக வளர்ந்தவன், தொடியை அணிந்த தோளையுடையவன்,
நரம்பு ஆரவாரித்ததைப் போன்ற இனிய மிடற்றையுடைய மகளிர் கூட்டத்தோடு,
ஒட்டியாணத்தை(யும்) கொண்டதும், நறிய, குளிர்ந்த, மென்மையுடைய
இடையில் கட்டப்பட்ட, நிலத்தளவும் தொங்குகின்ற துகிலினையுடையன்,
முழவுக்கு மாற்றான பெருமையுடைய கைகளில் பொருந்தத் தாங்கி,                                                         215
மெல்லிய தோளையுடைய பல மான்போல் மகளிரைத் தழுவி, (அவர்க்கு)இருக்கை தந்து,
மலைகள்தோறும் சென்று விளையாடுதலும் தனக்கு நிலைநின்ற குணமாம் - அவ்விடமன்றியும்,
சிறிய தினை அரிசியைப் பூக்களோடு கலந்து, மறியை அறுத்து,
கோழிக்கொடியோடு (தான்)அவ்விடத்தே நிற்கும்படி நிறுத்தி,
ஊர்கள்தோறும் எடுத்துக்கொண்ட தலைமை பொருந்தின விழாவின் கண்ணும்,                                     220
(
தன்பால்)அன்புடையார் (தன்னை வழிபட்டு)ஏத்துதலால், தன் மனம் பொருந்துதல் வந்த இடத்திலும்,
வேலன் இழைத்த வெறியாடு களத்திலும்,
காட்டிலும், பொழிலிலும், அழகிய ஆற்றிடைக் குறையிலும்,
ஆறுகளிலும், குளங்களிலும், (முற்கூறப்பட்ட ஊர்களன்றி)வேறு பல ஊர்களிலும்,
நாற்சந்தியிலும், முச்சந்தியிலும், புதிய பூக்களையுடைய கடப்ப மரத்தினும்,                                             225
ஊர்ப்பொது மரத்தடியிலும், அம்பலத்திலும், திருவருள்குறியாக நடப்பட்ட தறியிடத்திலும்,
மாட்சிமைப்பட்ட தலைமையினையுடைய கொடியோடு பொருந்துதல் வரச்செய்து,
நெய்யோடு வெண்சிறுகடுகையும் அப்பி, மெல்லிதாக (மந்திரத்தை)உரைத்து,
மெய் வளைத்துக் கைகூப்பி, அழகிய மலர்களைச் சிதறி,
(
தம்மில்)மாறுபட்ட வடிவினையுடைய இரண்டு அறுவையை உடுத்து,                                                         230
சிவந்த நூலைக் காப்புகட்டி, வெண்மையான பொரியைச் சிதறி,
மிகுந்த வலிமை நிலைபெற்ற பெரிய காலையுடைய கொழுவிய கிடாயின்
உதிரத்தோடு பிசைந்த தூய வெள்ளரிசியை
சிறு பலியாக இட்டு, பல குறுணிப் படையல்களையும் வைத்து,
சிறிய பசுமஞ்சளோடு மணமுள்ள சந்தனம் முதலியவற்றையும் தெளித்து,                                             235




__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பெரிய குளிர்ந்த செவ்வலரிமாலையினையும், (ஒழிந்த)நறிய குளிர்ந்த மாலைகளையும்
(
தம்மில்)இணையொக்க அறுத்து அசையும்படி தொங்கவிட்டு,
செறிந்த மலைப்பக்கத்திலுள்ள நல்ல ஊர்களை வாழ்த்தி,
நறிய மணப்புகை கொடுத்து, குறிஞ்சிப்பண்ணைப் பாடி,
முழங்குகின்ற ஓசையினையுடைய அருவியோடு இனிய இசைக்கருவிகளும் ஒலிக்க,                     240
சிவந்த நிறத்தையுடைய பல பூக்களையும் தூவி, அச்சம் வரும்படி
குருதி அளைந்த சிவந்த தினையினையும் பரப்பி, குறமகள்
முருகன் உவக்கும் இசைக்கருவிகளை ஒலிக்கச்செய்து, முரண்பட்டோர் அஞ்சும்படியாக,
முருகக்கடவுள் வரும்படி வழிப்படுத்தின அச்சம் பொருந்தின அகன்ற நகரின்கண்ணே -
வெறியாடுகளம் ஆரவாரிப்பப் பாடி, பல சேர்ந்த                                             245
கொம்புகளை ஊதி, வளைவுடைய மணியை ஒலிப்பித்து,
பின்வாங்காத கொள்கையை மேற்கோளாகவுடைய பிணிமுகம் என்னும் யானையை வாழ்த்தி,
வேண்டினோர் விரும்பினபடியே பெற்றாராய் வழிபாடுசெய்ய,
அவ்வவ்விடங்களில் தங்குதலும் உரியன், யான் அறிந்தபடியே,
அங்கேயும், வேறெங்கேயும் ஆக, காணும் தகுதி பெற                                       250
நின் முன் அப்பெருமானைக் கண்ட பொழுது, முகத்தால் விரும்பி நோக்கி, வாயால் வாழ்த்தி,
கையால் தொழுது, புகழ்ந்து, அவன் அடிகளில் வீழ்ந்து வணங்கி,
நெடிய பெரிய உச்சியில் கரும் பச்சை (நிறச்)சுனையில்,
ஐவருள் ஒருவனாகிய தீ தன் அங்கையில் ஏற்ப,
அறுவராலே பெறப்பட்ட ஆறு வடிவு பொருந்தின செல்வனே,                                                                           255
ஆலமரத்தின் கீழிருந்த கடவுளுடைய மகனே, பெருமையையுடைய மலையிலுள்ள
மலைமகளின் மகனே, பகைவருக்குக் கூற்றுவனே,
வெற்றியையுடைய வெல்லும் போர்த்தெய்வமான கொற்றவையின் மகனே,
பூண் அணிந்த தலைமையினையுடைய காடுகிழாளின் மகனே,
தேவர்கள் வணங்குகின்ற விற்படைத் தலைவனே,                                                                                                   260
மாலையணிந்த மார்பையுடையவனே, நூல்களை அறிந்த புலவனே,
போர்த்தொழிலில் ஒருவனாகி நிற்போய், பொருகின்ற வெற்றியையுடைய இளைஞனே,
அந்தணரின் செல்வமாயிருப்பவனே, சான்றோர் புகழும் சொற்களின் ஈட்டமாயிருப்பவனே,
மகளிர்க்குக் கணவனே, மறவருள் அரியேறு போன்றவனே,
வேல் பொருந்தின பெருமையையுடைய கையமைந்த பெரிய செல்வனே,                                                 265
மலையைப் பிளந்த குறையாத வெற்றியையுடைய,
விண்ணைத் தீண்டும் நெடிய மலைகளையுடைய குறிஞ்சிநிலத்திற்கு உரிமையுடையோனே,
பலரும் புகழ்ந்து சொல்லும் நன்றாகிய சொற்களையுடைய புலவர்களுக்கு அரியேறு போன்றவனே,
அரிதில் பெறும் முறைமையினையுடைய பெரிய பொருளையுடைய முருகனே,
நச்சிவந்தோர்க்கு அதனை அளித்து நுகர்விக்கும் பெரிய புகழை ஆளுதல் உடையோனே,               270



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இடுக்கண்பட்டோர்க்கு அருள்பண்ணும், பொன்னால் செய்த அணிகலன்களையுடைய சேயோனே,
மிக்குச் செல்கின்ற போர்களை முடித்த வென்று அடுகின்ற (உன்னுடைய)மார்பிடத்தே,
இரந்து வந்தோரைத் தழுவி (வேண்டுவன கொடுத்து)ப் பாதுகாக்கும் உட்குதல் பொருந்திய நெடிய வேளே,
பெரியோர் ஏத்துகின்ற பெரிய திருப்பெயரையுடைய இறைவனே,
சூரபன்மாவின் குலத்தை இல்லையாக்கின வலிமையுடைமையால் மதவலி என்னும் பெயரையுடைத்தோய்,275
போர்த்தொழிலில் மிகுகின்ற வீரனே, தலைவனே', என்று பலவற்றையும்
நான் அறிந்த அளவாலே புகழ்ந்து, அமையாதே,
உன் தன்மையெல்லாம் முற்ற அளவிட்டறிதல் பல் உயிர்க்கும் அரிதாகையால்,
உன் திருவடியை நினைத்து வந்தேன், உன்னோடு
ஒப்பாரில்லாத மெய்யறிவுடையோனே', என                                                         280
சொல்ல நினைத்ததைச் சொல்லி முடிப்பதற்கு முன்னரே - அதைக்குறித்து அப்பொழுதே ,
வேறு வேறாகிய பல வடிவினையுடைய குறிய பலராகிய பணியாளர்,
விழாவெடுத்த களத்தின் பொலிவுபெறத் தோன்றி,
அருள்புரியத் தகுந்தவன் (இந்த)அறிவு வாய்க்கப்பெற்றோனாகிய இரவலன்,
வந்துளன் பெருமானே, உன்னுடைய வளவிய புகழினை விரும்பி', என                       285
இனியனவும் நல்லனவும் ஆகிய மிக்க பலவற்றை வாழ்த்தி,
தெய்வத்தன்மை அமைந்த வலிமை விளங்கும் வடிவினையும்,
வானைத் தீண்டும் வளர்ச்சியினையும் உடைய தான் (உனக்கு)முன்னர் எழுந்தருளி,
வருத்தமமைந்த உயர்ந்த தெய்வத்தன்மையை உள்ளடக்கிக்கொண்டு, முன்பு உண்டாகிய தனது
மணம் கமழ்கின்ற தெய்வத்தன்மை பொருந்திய இளைய வடிவைக் காட்டி அருளி,                           290
அஞ்சுவதை விடுக, அறிவேன் நின் வரவை' என
அன்புடைய நல்ல மொழிகளைப் பலகாலும் அருளிச்செய்து, கேடு இன்றாக
இருண்ட நிறத்தையுடைய கடலால் சூழப்பட்ட (இந்த)உலகத்தில்
ஒருவனாகிய நீயே (யாண்டுமாகித்)தோன்றுமாறு, சீரிய
பெறுதற்கரிய பரிசில்(ஆன வீடுபேற்றினைத்) தந்தருளுவான் - பலவும் ஒருங்கே இயைந்த     295
வேறு வேறாகிய பல துகில் கொடிகளைப் போன்று அசைந்து, அகிலைச் சுமந்துகொண்டு,
சந்தனமாகிய பெரிய மரத்தைத் தள்ளி, சிறுமூங்கிலின்
பூவையுடைய அசைகின்ற கொம்பு தனிப்ப, வேரைப் பிளந்து,
விண்ணைத் தொடுகின்ற நெடிய மலையிடத்தே ஞாயிற்றைப் போல் (தேனீக்கள்)செய்த
தண்ணியவாய் மணக்கின்ற விரிந்த தேன்கூடு கெட, நல்ல பல                                       300
ஆசினிகளுடைய முற்றிய சுளை தன்னிடத்தே கலக்க, (மலையின்)உச்சியில்
சுரபுன்னையின் நறிய மலர்கள் உதிர, கருங்குரங்கோடு
கரிய முகத்தையுடைய முசுக்கலைகளும் நடுங்க, புகரை அணிந்த மத்தகத்தையுடைய
பெரிய பிடியானை குளிரும்படி வீசி, பெரிய ஆண்யானையின்
முத்தை உடைய வெண்மையான கொம்புகளை உள்ளடக்கி, தத்துதல் அடைந்து                       305
நல்ல பொன்னும் மணியும் நிறம் விளங்கும்படி செய்து, பொடியான பொன்னைத் தெள்ளி,
வாழையின் பெரிய முதல் துணியத், தெங்கின்
இளநீரையுடைய சீரிய குலை உதிர, (அவ்விரண்டையும்)மோதி,
மிளகுக் கொடியின் கரிய கொத்துக்கள் சாய, பொறியையுடைய புறத்தினையும்
மடப்பத்தினையுடைய நடையினையும் உடைய மயில்கள் பலவற்றோடே அஞ்சிக்,                            310
கோழியின் வலிமையுடைய பேடைகள் கெட்டோட, ஆண் பன்றியுடன்
கரிய பனையின் - (உள்ளே)வெளிற்றினையுடைய - புல்லிய செறும்பை ஒத்த
கரிய நிறத்தையுடைய மயிரினையுடைய உடம்பினையும் வளைந்த அடியினையுமுடைய கரடி
பெரிய கல் வெடித்த முழைஞ்சிலே சேர, கரிய கொம்பினையுடைய
ஆமாவினுடைய நல்ல ஏறுகள் முழங்க, உயரத்தினின்றும்                                            315
இழும் என்னும் ஓசைபடக் குதிக்கும் அருவியையுடைய
பழம் முற்றின சோலைகளையுடைய மலைக்கு உரிமையை உடையோனாகிய முருகப்பெருமான்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard