New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்?


Guru

Status: Offline
Posts: 24601
Date:
திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்?
Permalink  
 


  

திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்?

தி. பொ. கமலநாதன் எழுதிய ‘தலித் விடுதலையும் திராவிடர் இயக்கமும்’ என்ற நூலை வாசித்துக் கொண்டிருந்தேன் (தமிழில் ஆ. சுந்தரம் எழுத்து பிரசுரம்) அதன் துணைத்தலைப்பு வித்தியாசமாக இருந்தது ‘மறைக்கப்படும் உண்மைகளும் கறை படிந்த அத்தியாயங்களும்’.

 இந்நூலின் வரலாறு ஆர்வத்திற்குரியது 1980 களின் தொடக்கத்தில் பெங்களூரில் இருந்து வெளிவரும் ‘தலித் வாய்ஸ்’ என்ற ஆங்கில இதழ் திராவிட இயக்கம் தற்போது தலித்துக்களுக்கு எதிராக இருப்பதாகக் கூறி தலையங்கம் ஒன்றை எழுதியது. திராவிட இயக்கம்இன்று தமிழ் நாட்டில் நடக்கும் தீண்டாமை முதலிய சாதிக் கொடுமைகளுக்கு எதிராக எதுவுமே செய்யாமலிருக்கிறது  என்று குற்றம் சுமத்தியது.

 அதற்குப் பதிலாக திராவிட இயக்கத்தின் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஒரு நீண்ட மறுப்புரை எழுதி அதற்கு அனுப்ப அது வெளியிடப்பட்டது. அதில் திராவிட இயக்கத்தின் வழக்கமான கருத்து வடிவம் முன்வைக்கப்பட்டது. ஒன்று, சாதி வேற்றுமை தீண்டாமை முதலியவை பிராமணர்களால் உருவாக்கப்பட்டு நிலைநிறுத்தப்படுபவை. ஆகவே அதில் பாதிக்கப்படும் அனைவருமே சேர்ந்து பிராமணர்களை எதிர்க்க வேண்டும். பிற்பட்ட சாதியினரும் தலித்துக்களும் சேர்ந்து பிராமண எதிர்ப்பில் ஈடுபட வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் செய்யும் சாதிகொடுமைகளை பிராமணர்களின் பிரித்தாளும் சதியாக மட்டுமே பார்க்க வேண்டும்.

 இரண்டாவதாக தலித்துக்களின் விடுதலைக்கான குரல் தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தால் தான் உருவாக்கப்பட்டது. ஈ. வே. ரா அவர்கள் நடத்திய வைக்கம் சத்தியாக்கிரகத்திற்குப் பிறகே அத்தகைய விழிப்புணர்ச்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டது. தலித் விடுதலைக்கான போராட்டங்களை நடத்தியதும், அவர்கள் இன்று அடைந்துள்ள எல்லா நன்மைகளைப் பெற்றதும் திராவிட இயக்கத்தின் வழியாகவே.

 இவ்விரு கருத்துக்களையும் விரிவாக மறுத்து கமலநாதன் அவர்கள் தலித் வாய்ஸ் இதழுக்கு நீண்ட கடிதம் எழுதினார். நீளம் கருதி அது பிரசுரிக்கப்படவில்லை. ஆகவே அதை அடிக்குறிப்புகள் சேர்த்து நூலாக பிரசுரித்தார். அந்நூலின் தமிழாக்கமே இந்த நூல்.

 தலித்துக்களை அடிமைப்படுத்தியதிலும் இழிவு படுத்தியதிலும் பிராமணியத்திற்கு உள்ள பங்களிப்பைப் பற்றி கமலநாதன் அவர்களுக்கும் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. ஆனால் பிராமணியம் என்ற பொது எதிரியை முன்வைத்து தலித்துக்கள் மீது நேரடியான ஒடுக்குமுறையைச் செலுத்தும் பிற்பட்ட மக்களின் சாதிவெறியை மழுப்ப நினைப்பது தலித் உரிமைப் போராட்டத்திற்கு எதிரானது என்று கமலநாதன் வாதிடுகிறார். தலித் அடையாளத்தை திராவிடம் என்ற அடையாளத்தில் அடக்கி விடமுடியாது என்று கூறுகிறார்.

 அவரது கூற்றின்படி தலித்துக்கள் அவர்கள் தலித்துக்கள் என்பதனால்தான் பிற்பட்டோர் உட்பட அனைத்து சாதியினராலும் ஒடுக்கப்படுகிறார்கள். ஆகவே அந்த அடையாளத்துடன் அவர்கள் ஒருங்கிணைவதே சிறந்த போராட்ட முறையாக அமையமுடியும். அதற்கு திராவிட இயக்கத்தின் பொதுமைப்படுத்தல்கள் தடையாக ஆகக்கூடும் என்கிறார்.

 தலித்துகளின் உரிமைக்கான போராட்டத்தை 1920ல் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபோதிருந்து ஆரம்பிப்பது என்பது தலித்துகளின் உரிமைக்காகப் போராடிய தலித் தலைவர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதும் அவமதிப்பதுமாகும் என்று வாதிடுகிறார் கமலநாதன். மிகவிரிவான ஒரு வரலாற்றுச் சித்திரத்தை உருவாக்கிக் காட்டுகிறார். இந்தியாவுக்கு வந்த மிஷினரிகளிடமிருந்து தலித் விடுதலைக்கான கருத்துக்கள் ஆரம்பிக்கின்றன. அயோத்திதாச பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், எம். சி. ராஜா ஆகிய தலித் தலைவர்களின் அயராத உழைப்பால் தலித் விடுதலைக்கான கருத்தியல் சட்டகம் உருவாகிறது.

 உண்மையில் தலித் விடுதலைப் போர் தனித்த இயக்கமாக வளராமல் செய்தது திராவிட இயக்கம். இதை பிற்பட்ட சாதியினரின் நலனுக்கான இயக்கமாக இருந்த திராவிட அரசியலுடன் இணைத்தல் வழியாக அதன் தனித்தன்மையையும் போர்க்குணத்தையும் இல்லாமலாக்கியது. திராவிட இயக்கத்தின் பிடியில் இருந்து விடுபட்ட பின்னரே தமிழ்நாட்டில் மீண்டும் தலித் இயக்கம் உருவாகி முக்கால் நூற்றாண்டு தாண்டிய பிறகும் தலித்துக்கள் மீதான ஒடுக்குதல்கள் அப்படியே இருந்தன. அவர்களின் கோரிக்கைகள் 1930 களில் எப்படி இருந்தனவோ அப்படியே நீடித்தன. அவற்றை 1980 களில் மீண்டும் புதிதாக கிளப்பி, போராட்டங்களை நிகழ்த்த வேண்டிய தேவை இருந்தது. அதன் விளைவாகவே இன்று தமிழகம் முழுக்க பலவகையான தலித் போராட்டங்கள் வேகம் கொண்டிருக்கின்றன.

 அதாவது தங்களுடைய வரலாற்று ரீதியான போராட்டங்களையும் அதற்காக உருவாக்கிய கருத்துச் சட்டகத்தையும் திராவிட இயக்கம் எடுத்து வெறும் கோஷமாக மாற்றி பொருளிழக்கச்செய்தது என்றும் தங்கள் பிரச்சினைகளுக்காக அது எதையுமே செய்யவில்லை என்றும் தலித்தியக்கம் கூறுகிறது.

 ஏறத்தாழ இதே வரலாற்றுச் சித்திரத்தை தமிழியர்களும் கூறுவார்கள். தமிழ் மொழி மற்றும் தமிழ்ப்பண்பாட்டின் தனித்தன்மை மறுக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில் வரலாற்றின் தேவையால் உருவானது தமிழியக்கம். தமிழ்நாடு ஏறத்தாழ 300 ஆண்டுகளாக தமிழரல்லாதவர்களால் ஆளப்பட்டது. தமிழகத்தை ஆண்ட நாயக்கர்களின் ஆட்சியும், மராட்டியர் ஆட்சியும் தமிழ்நாட்டின் பொருளியலுக்கும் மதத்திற்கும் பெரும் பங்களிப்புகளை ஆற்றியிருக்கின்றன. தமிழகத்தில் இன்றுள்ள சாலைகள், சந்தைகள், ஏரிகள் பெரும்பாலானவை இவர்களின் ஆட்சிக்காலத்தில் உருவானவை. இன்று நாம் காணும் தமிழக ஆலயங்கள் பெரும்பாலும் இவர்கள் காலகட்டத்தில் புதுப்பிக்கப்பட்டு எழுந்தவை.

 ஆனால் இந்த அன்னிய ஆட்சிக்காலத்தில் தமிழ்ப்பண்பாடு புரவலர்களை இழந்து மெல்ல மெல்ல அழிய ஆரம்பித்தது. தமிழிசை கைவிடப்பட்டு மருவி கர்நாடக சங்கீதமாக ஆகியது. தமிழ் இலக்கியங்களை பேணிவந்த தமிழறிஞர் குடும்பங்கள் பேணுநரின்றி அழியவே தமிழ்நூல்கள் மறைந்தன. சம்ஸ்கிருதம் தெலுங்கு முதலியவை முன்னிறுத்தப்பட்டமையால் தமிழ் மொழிக்கலப்பு அடைந்து அதன் அழகை இழந்தது. இக்காலகட்டத்தில் தமிழின் மாபெரும் செவ்வியல் மரபு அனேகமாக மறக்கப்பட்டது. மதத்துடன் இணைந்திருந்த காரணத்தினால் பக்தி மரபு மட்டுமே உயிருடன் எஞ்சியது.

 இந்திய மறுமலர்ச்சியின் காலகட்டத்தில் இந்தியா முழுக்க கிட்டத்தட்ட ஒரே சமயம் வட்டார மொழிகளைப் பற்றிய விழிப்புணர்வு உருவாகியது. அதே காலகட்டத்தில்தான் தமிழ்குறித்த விழிப்புணர்வு உருவாகியது. ஆங்கிலக்கல்வி மூலம் பண்பாட்டுப் பிரக்ஞை பெற்ற ஒரு  புதிய தலைமுறை உருவாகி வந்ததே இதற்கு முதற்காரணம். அவர்கள் தங்கள் பண்பாடு குறித்த இழிவுணர்ச்சியை உதறி பெருமிதத்தைப் பெற ஆரம்பித்தார்கள். விளைவாக தமிழ்ப் பண்பாட்டுச் சின்னங்கள் மீட்கப்பட்டன. அதற்கு அன்று உருவாகி வந்த அச்சு, பதிப்பு முதலிய துறைகளும் உதவி புரிந்தன.

 தமிழியக்கத்தை மூன்று தளங்களில் நிகழ்ந்த செயல்பாடுகளாகப் பிரிக்கலாம். 1) தமிழ் நூல்களை பதிப்பித்தல் 2) தமிழிசை இயக்கம் 3) தனித்தமிழ் இயக்கம்.

 ஏட்டுச்சுவடிகளில் பேணப்படாது அழியும் நிலையில் இருந்த தமிழ் நூல்களை தேடிக் கண்டுபிடித்து பிழைதிருத்தம் செய்து பொருள் குறிப்பு உருவாக்கி சீராக நூலாக கொண்டு வந்ததே தமிழை மீண்டும் உருவாகிய பெரும்பணி என்று கூறலாம். உ. வே. சாமிநாதய்யரே இப்பணியின் முன்னோடியாவார். சி. வை. தாமோதரம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், வ. உ. சிதம்பரம் பிள்ளை,  வெள்ளக்கால் சுப்ரமனிய முதலியார், கெ.என்.சிவராஜ பிள்ளை, மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, எஸ். வையாபுரிப் பிள்ளை போன்றவர்களை இத்துறையில் பெரும்பணியாற்றிய முன்னோடிகள் என்று கூறலாம்.

 தமிழிசையே கர்நாடக இசையாக மருவியது என்று இலக்கணப்படியும் வரலாற்றின்படியும் நிலைநாட்டுவதும், வழக்கொழிந்து போன தமிழ்ப்பண்ணிசையினை மீண்டும் புத்துருவாக்கம் செய்வதும், தமிழ்ப் பாடல்களை மீண்டும் புழக்கத்திற்குக் கொண்டுவருவதும், தமிழ் பாடல்களை புதிதாக உருவாக்குவதும் தமிழிசை இயக்கத்தின் பணிகள். இதில் முன்னோடி என்று தஞ்சை ஆபிரகாம் பண்டிதரைச் சொல்ல வேண்டும். அண்ணாமலை அரசர், பரிதிமாற் கலைஞர் , விபுலானந்த அடிகள், தண்டபானி தேசிகர், குடந்தை சுந்தரேசனார், கல்கி, டி.கெ.சிதம்பரநாத முதலியார் போல பல முக்கியமான அறிஞர்கள் இத்துறையில் பெரும்பணி ஆற்றியிருக்கிறார்கள்.

 தமிழில் மறந்து விட்ட பிறசொற்களை விலக்குவது, தமிழின் தூய சொற்களை புழக்கத்திற்குக் கொண்டு வருவது, தமிழில் புதிய கலைச் சொற்களை உருவாக்குவது ஆகியவை இவ்வியக்கத்தின் பணிகள். மறைமலை அடிகளை இந்த இயக்கத்தின் முன்னோடி, வழிகாட்டி என்று கூறலாம். பரிதிமாற் கலைஞர், ரா. பி. சேதுப்பிள்ளை, திரு. வி. கலியாணசுந்தரனார் போன்றவர்கள் இவ்வியக்கத்தின் முதல்வர்கள்.  

 தமிழியக்கம் என்பது திராவிட இயக்கத்துடன் எவ்வகையிலும் சம்பந்தம் உடையதாக இருக்கவில்லை என்பதே வரலாறு. தமிழியக்கம் பெரும்பாலும் சைவச் சார்பு உடையது. அதன் முன்னோடிகளில் பலர் காங்கிரஸ் அனுதாபிகளும் கூட. அரசியலில் ஜஸ்டிஸ் கட்சியின் குழந்தையாக உருவாகி வந்ததே திராவிட இயக்கம். ஜஸ்டிஸ் கட்சிக்கு தமிழியக்கத்தில் பெரிய ஆர்வம் இருந்ததில்லை. காரணம் அதில் பெரும்பாலானவர்கள் தமிழர்களல்ல. சொல்லப் போனால் அதற்கு தமிழ் அடையாளமே இருக்கவில்லை. தமிழர், தெலுங்கர், மலையாளிகள் கூடி உருவாக்கிய இயக்கம் அது. அதன் தலைவர்கள் ஆங்கில மோகம் கொண்ட அன்றைய உயர்குடிகள். பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைத்து தங்களுக்கான நலன்களைப் பேணிக்கொள்ள முயன்றவர்கள்.

 ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து திராவிட இயக்கம் உருவான காலத்தில் கூட அதற்கு தமிழியக்கத்தில் ஆர்வம் இருந்ததில்லை. அக்காலத்தல் ஈ. வே. ரா அவர்கள் தீவிரமாக ஆங்கிலத்தை ஆதரிப்பவராகவும் தமிழை காட்டு மிராண்டி பாஷை என்று கூறுபவராகவும் தான் இருந்தார். இது தமிழ் நீசபாஷை என்று கூறிய சனாதனிகளிடமிருந்து எவ்வகையிலும் வேறுபட்ட தரப்பு அல்ல. அந்த தரப்பில் இருந்து தமிழ்ப்பற்றை நோக்கி திடீரென்று ஒரு தாவலை நிகழ்த்தியது திராவிட இயக்கம். அதற்கு சி.என்.அண்ணாத்துரை ஒரு காரணம்.

 தமிழியக்கத்தின் ஆரம்பகால அறிஞர்களில் பலர் பிராமணர்கள். ஆனால் விரைவிலேயே பிராமணரல்லாத உயர்சாதியினரின் இயக்கமாக அது மாறியது. குறிப்பாக வேளாளர், முதலியார். இவர்களின் பிராமண எதிர்ப்புப் போக்கு காரணமாக திராவிட இயக்கத்திற்கும் இவர்களில் சிலருக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு உருவாகியது. ஆனால் அக்காலகட்டத்தில் திராவிட இயக்கத்திற்கும் தமிழியக்கத்திற்கும் நடுவேதான் கடுமையான மோதல்கள் உருவாகி நீடித்தன. தமிழியக்க முன்னோடிகளில் பலர் ஈவேராவை தமிழில் ஈடுபாடற்றவர், தமிழை அழிக்கவந்த கன்னடர் என்றே எண்ணினார்கள், இன்றும் அக்கால கட்டுரைகளில் அந்த விமரிசனங்கள் குவிந்துகிடக்கின்றன.

 ஆனால் தமிழியக்கத்தின் ஆயுதங்களை சிறப்பாக பயன்படுத்த ஆரம்பித்த சி. என். அண்ணாதுரை அவர்கள் விரைவிலேயே தமிழியக்கத்திற்கும் திராவிட இயக்கத்திற்குமான முரண்பாடுகளை இல்லாமலாக்கினார். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ போன்ற வரிகள் இந்தச் சமரசத்தின் வழிகளே. திருமூலர் வரியை கூறுவதன் மூலம் பகுத்தறிவையும் இழக்காமல் சைவத்தையும் இழக்காமல் ஒரு சமரசத்தை அண்ணாதுரை மேற்கொண்டார். பின்னர் தமிழியக்கத்தின் எல்லா கோஷங்களையும் திராவிடஇயக்கம் எடுத்தாள ஆரம்பித்தது.

 இன்று திராவிட இயக்கம் தமிழியக்கத்தின் எல்லா கடந்த காலச் சாதனைகளுக்கும் உரிமை கொண்டாடுகிறது. தமிழ் நூல்களை மீட்டது, தமிழிசையை வளர்த்தது, தனித்தமிழைப் பரப்பியது எல்லாமே ஈவேரா வில் தொடங்கும் திராவிட இயக்கத்தின் சாதனைகள் என்று இன்று சாதாரணமாக மேடைகளில் பேசுகிறார்கள். தமிழியக்க முன்னோடிகளான உ. வே. சாமிநாதய்யர், ஆபிரகாம் பண்டிதர், மறைமலை அடிகள் போன்றவர்கள் மறக்கப்பட்டு விட்டார்கள்.

 ஆனால் உண்மையில் திராவிட இயக்கம் தமிழுக்கு என்ன செய்தது? நிலையாக எதுவுமே செய்யவில்லை என்பதே உண்மை. மேடைகளில் ஆர்ப்பாட்டமாகப் பேசுவதற்கு தனித்தமிழியக்கத்தின் சொல்லாட்சிகளை கடன்பெற்று பயன்படுத்தி வெற்றிக் கண்டது அது. சி. என். அண்ணாதுரை அவர்களின் மேடைமொழி ரா. பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றவர்களின் அடுக்குமொழிப் பாணியில் இருந்து கடன்பெற்றது  என்பதை நாம் காணலாம்.  அவரை ஒட்டி தமிழை அலங்காரமாகப் பயன்படுத்தும் பேச்சாளர்களின் பெரும் படை ஒன்று கிளம்பியது. அவர்களின் வாரிசுகள் இன்றும் உள்ளனர். இவர்களை வைத்தே தமிழை திராவிட இயக்கம் வளர்த்தது என்ற பாமர நம்பிக்கை உருவாகி நீடிக்கிறது.

 ஆனால் சி.என்.அண்ணாத்துரை, மு.கருணாநிதி போன்றவர்களின் மொழிநடையில் தனித்தமிழ் மிகக்குறைவே என்பதை பலர் கவனிப்பதில்லை.  குறிப்பாக சி.என்.அண்ணாத்துரை அவர்களின் ஆரம்பகால பேச்சுகளில் கடினமான சம்ஸ்கிருதச் சொற்கள் புழங்கும். துவஜாரோகணம் போன்ற சொற்களைக்கூட அவரது உரைகளின் அக்கால பதிப்புகளில் காணமுடியும். அன்றும் தனித்தமிழியக்கவாதிகளே நல்ல தமிழ் பேசினார்கள்.

 ஒரு மொழி வளரவும் வேர்விடவும் தேவையான அடிப்படைப் பணிகள் எதுவுமே தமிழில் திராவிட இயக்கத்தால் செய்யப்படவில்லை. திராவிட இயக்கம் போல மொழியரசியல் பேசியவர்கள் பதவியில் இல்லாத கேரளத்திலும் கர்நாடகத்திலும் செய்யப்பட்ட பெரும்பணியுடன் ஒப்பிடும்போது இது பரிதாபகரமான யதார்த்தம் என்பது புரியும்.

 இந்தியாவுக்குச் சுதந்தரம் கிடைத்ததும் எல்லா இந்திய மாநிலங்களும் மாநில மொழிகளின் வளர்ச்சிக்காக  திட்டங்கள் தீட்டி செயல்பட ஆரம்பித்தன. தமிழின் வளர்ச்சிக்காக அன்றைய காங்கிரஸ் அரசு மூன்று அடிப்படையான செயற்திட்டங்களை வகுத்தது. ஒன்று, தமிழை ஆட்சிமொழி ஆக்குவதற்கான கலைச்சொல்லாக்கம் இரண்டு, பேரகராதி தயாரிப்பு .மூன்று, தமிழில் கலைக்களஞ்சியம் கொண்டுவருதல், இம்மூன்று பணிகளையும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் செய்து முடித்தார்கள். இன்றும் தமிழில் செய்யப்பட்ட மாபெரும் மொழிவளர்ச்சிப் பணிகளாக அவை நீடிக்கின்றன.

 தமிழின் வளர்ச்சிக்கு பணியாற்றியவர்களில் தி. சு. அவினாசிலிங்கம் அவர்களின் பங்களிப்பு மகத்தானது. கல்வியமைச்சராக பணியாற்றிய அவர் அக்காலத்தைய திறன்மிக்க பேரறிஞர்களை எல்லாம் இப்பணிக்கு தன்னுடன் இணைத்துக் கொண்டார். ஏறத்தாழ இக்காலகட்டத்தில் தான் தமிழகத்தின் மாபெரும் ஆரம்பக்கல்வி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழகத்தை இன்றும் பிற மாநிலங்களில் இருந்து ஒருபடி முன்னால் நிற்கச் செய்த இயக்கம் அது. தமிழ் ஆரம்பக்கல்வி முதல் உயர்தளம் வரை புத்தெழுச்சி கண்ட காலகட்டம் இதுவேயாகும்.

 ஆனால் இன்று இந்தச் சாதனைகளை வரலாற்றில் இருந்து தோண்டி எடுத்து திரும்பத்திரும்பச் சொல்லி நிறுவ வேண்டியிருக்கிறது. திராவிட இயக்கத்தின் ஆர்ப்பாட்டமான மேடையுரைகளிலும் கூசாமல் செய்யப்படும் வரலாற்றுத் திரிப்புகளும் இந்த உண்மைகளை முற்றாகவே மழுங்கச் செய்து விட்டிருக்கின்றன. இன்றும் பெரிய அநீதி என்னவென்றால் காங்கிரஸின் பணி உட்பட இந்த தொடக்ககாலத்து தமிழ் மறுமலர்ச்சியின் சாதனைகளை எல்லாம் திராவிட இயக்கம் தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடுகிறது என்பதே.

 காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட பேரகராதிக்கு இன்றுவரை ஒரு நல்ல மறுபதிப்பு கொண்டு வர பின்னர் வந்த திராவிட ஆட்சிகளால் இயலவில்லை. தமிழ்ப் பேரகராதிக்கு ஒரு மறு அச்சு கொண்டுவரக்கூட அவற்றால் முடியவில்லை. தமிழ்மொழிக்கு கடந்த ஐம்பதாண்டுக்கால திராவிட ஆட்சியில் செய்யப்பட்டது என எந்த பெரும்பணியும் கிடையாது. இதுவே நம் கண்முன் உள்ள உண்மையாகும்.

 அதற்கு மாறாக நிகழ்ந்தது என்ன? எப்போதும் கவற்சியான மேடை உரைகள், விழாக்கள், கொண்டாட்டங்கள், ஆர்பாட்ட அறிவிப்புகள் மட்டுமே நிகழ்ந்தன. பெரும் திட்டங்கள் முன்வைக்கப்படும், ஆனால் அவை ஒரு போதும் எளிய முறையில் கூட நிறைவேற்றப்படாது. திராவிட ஆட்சியில் தமிழுக்கு என்று உருவாக்கப்பட்ட மிகப்பெரிய அமைப்பு என்றால் அது தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகம்தான். அது கடந்த கால்நூற்றாண்டில் செய்த சாதனை என்ன என்று கேட்டால் சங்கடமான மௌனமே பதிலாக அமையும். அறிவிக்கப்பட்ட எல்லா திட்டங்களும் அரைகுறை முயற்சியாக முடிய இன்று செயலற்று பெறும் கட்டிடக்குவியலாக கிடக்கிறது அது.

 இதே போன்றுதான் சென்ற காலங்களில் திராவிட இயக்கத்தால் நடத்தப்பட்ட உலகத்தமிழ் மாநாடுகளையும் கூறவேண்டும். பாமரர்கள் தவிர பிறர் எவரும் இந்த மாநாடுகளால் தமிழுக்கு ஏதேனும் நன்மை விளைந்தது என்று கூறமாட்டார்கள். திராவிட இயக்கத்தின் அடிபப்டை இயல்பே பெரும் திருவிழாக்களை நடத்துவதில்தான் இருக்கிறது. கூட்டம் ஆர்பபட்டம் அலங்காரம் என்றே அதன் மனம் செல்கிறது. அழுத்தமான ஆக்கப்பணிகளை அதனால் நீடித்தகால உழைப்புடன் ஆற்ற இயலாது.

 பொதுத்தளத்தில் திராவிட இயக்கம் தமிழுக்குச் செய்த பணிகள் அனேகமாக ஏதும் இல்லை. இன்றும் தமிழில் தமிழ்வழிக்கல்வி சாத்தியப்படவில்லை. நேர்மாறாக எங்கும் எதிலும் ஆங்கிலம் மேலோங்கியது திராவிட இயக்க ஆட்சிக்காலத்திலேயே என தமிழியர்களே சொல்கிறார்கள். தமிழகத்தில் மெல்ல மெல்ல தமிழ் அழியும் நிலையிலேயே உள்ளது. தனிப்பட்ட முயற்சிகளினாலேயே தமிழை நிலைநிறுத்தும் பணிகள் நடக்கின்றன. இத்தனை பெரிய இயக்கமும் அரசும் இருந்த போதிலும் கூட அம்முயற்சிகளுக்கு மிக எளிய ஆதரவு கூட அளிக்கப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

 திராவிட இயக்கம் செல்வாக்கு பெறுவதற்கு முன்னர் தமிழாராய்ச்சியின் ஒரு பொற்காலம் இருந்தது. உ. வே. சாமிநாதய்யர் முதல் தொடர்ச்சியாக இரண்டு தலைமுறைக்காலம் பிரமிக்கத்தக்க தமிழாராய்ச்சி நூல்கள் வெளிவந்தபடியே இருந்தன. இன்றும் கூட ஒரு தமிழ் வாசகன் அந்த ஆய்வுகளை பார்க்கும்போது அவற்றுக்கு அளிக்கப்பட்டுள்ள ஈடிணையற்ற உழைப்பு  அயரச் செய்கிறது. ஆனால் திராவிட இயக்கம் வலுப்பெறும் தோறும் தமிழாய்வு வலுவிழந்தது. தமிழறிஞர்கள் அரசியல்வாதிகளாயினர். அரசியல் வாதிகள் தமிழறிஞர்கள் என்று அறியப்படலாயினர்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

திராவிட இயக்கத்தின் சாதனை என்றால் நமது கல்விப் புலத்தை முழுமையாகக் கைப்பற்றி அங்கே தமிழாய்வே நிகழாமல் செய்ததுதான். இன்று எந்த ஒரு இந்திய மொழியிலாவது ஒரு வருடத்தில் குறிப்பிடத்தக்க ஒரு ஆய்வுகூட வராத தேக்க நிலை உள்ளது என்றால் அது தமிழில்தான். எப்போதுமே தமிழாய்வுப் புலத்தைக் கூர்ந்து கவனிப்பவன் என்ற முறையில் இந்த வெறுமை எனக்கு பெரும் திகைப்பையே ஊட்டுகிறது. பழைய ஆய்வுகளை நகல் எடுப்பதே இன்று ஆய்வு என்று ஆகிவிட்டிருக்கிறது.

 இன்று தமிழாய்வு நிகழ்வது கல்விப் புலத்திற்கு வெளியே தனிநபர்களின் அந்தரங்கமான ஈடுபாட்டின் விளைவாகத்தான். அவ்வப்போது குறிப்பிடத்தக்க நூல்கள் அவர்களிடமிருந்தே வெளிவருகின்றன. அவர்களில் சிலருக்கு திராவிட இயக்கம் குறித்து நல்லெண்ணம் இருக்கலாம். ஆனால் திராவிட இயக்கத்தில் இருந்து உருவாகி வரும் தமிழாய்வு என்று அனேகமாக ஏதுமில்லை.

 மிகச் சாதாரணமான தலைமைத்துதிகள், கொள்கை விளக்கத்துண்டுப் பிரசுரங்களைத்தவிர இன்றுள்ள இருபெரும் திராவிட இயக்க அமைப்புகள் உருவாக்கும் இலக்கியமோ, ஆய்வோ என்ன என்று யோசித்துப் பாருங்கள். ஒரு வாசகனாக இத்தனை பெரிய திராவிட இயக்கம் அதன் பல லட்சம் தொண்டர்கள் பலகோடி ஆதரவாளர்கள் கோடானு கோடி பணம், அரசு அதிகாரம் ஆகியவற்றின் மூலம் உங்களுக்கு வாசிப்பதற்காக உருவாக்கியளித்த நூல்கள் எவை? எத்தனை தத்துவநூல்கள், எத்தனை இலக்கியபப்டைப்புகள்?

 எந்த ஒரு மொழியும் அறிவுத்துறைகளின் புதிய போக்குகளை உள்வாங்கிக் கொள்ளும் போதும் இலக்கியம் மூலம் நவீன காலகட்டத்தை எதிர் கொள்ளும்போதும் மட்டுமே வாழும் மொழியாக இருக்க முடியும். திராவிட இயக்கம் அதன் தொடக்கம் முதல் இன்று வரை நவீன இலக்கியத்திற்கு எதிரான சக்தியாகவே இருந்துள்ளது. தமிழில் உருவாகி வந்த நவீன இலக்கியத்தை அது ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. இன்றுவரை  புதுமைபித்தனின் பெயரை எந்த திராவிட இயக்க அறிவுஜீவியும் கூறியதில்லை.

 மாறாக திராவிட இயக்கத்தின் ஆர்வம் தமிழின் வணிக இலக்கியத்தின் உத்திகளை கட்சிப்பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துவதாகவே இருந்தது. திராவிட இயக்கம் தமிழ்ச் சூழலை முழுக்க மூடியிருந்த சூழலில் அதை மீறி ஒரு சிறிய வட்டத்திற்குள் இலக்கியத்தில் ஈடுபட்டவர்களின் பிடிவாதம் மற்றும் அர்ப்பணம் மூலமே தமிழில் நவீன இலக்கியம் உருவாகி வந்தது. தமிழ் நவீன இலக்கியத்தின் மரபை சிற்றிதழ்கள்தான் உருவாக்கி பேணி முன்னெடுத்தன. மொத்தச் சிற்றிதழ் இயக்கமே திராவிட இயக்கத்தின் பரவலான பெரும் பண்பாட்டுக்கு எதிரான குறுங்குழுச் செயல்பாடுதான்.

 இந்தக் குறுங்குழுவுக்குள் தான் தமிழில் உலக சிந்தனைகள் பேசப்பட்டன. கோட்பாடுகள் இறக்குமதியாயின. அறிவார்ந்த விவாதங்கள் நடந்தன. நீங்கள் இன்று பேசும் தமிழ்க் கலைச்சொற்களில் பெரும்பகுதி உருவாகி வந்தது. நீங்கள் இன்று தமிழின் இலக்கியச் செல்வங்கள் என எவற்றையெல்லாம் முன்வைக்கிறீர்களோ, எவற்றையெல்லாம் ரசிக்கிறீர்களோ அவையெல்லாம் இந்தச் சிறிய வட்டத்தால் உருவாக்கப்பட்டவை மட்டுமே. அவற்றை உருவாக்கியவர்கள் பணமோ அங்கீகாரமோ இல்லாமல் தங்கள் உள்வேகம் காரணமாகவே அவற்றை உருவாக்கினார்கள். எந்தவித கவனிப்பும் இன்றி மறைந்தார்கள். அவர்களின் வட்டத்திற்கு வெளியே தமிழ் தமிழ் என்று வெற்று ஓசையை எழுப்பியபடி ஊடகங்களை, மேடைகளை, கல்விப்புலத்தை நிறைத்து செயல்பட்டுக் கொண்டிருந்தது திராவிட இயக்கம்.

 இந்த சிறிய அறிவியக்கத்தின் தொடர்ச்சியாக தன்னை உணரும் ஒருவர், இதன் விளைவுகளை அனுபவிக்கும் ஒருவர் ஒருபோதும் திராவிட இயக்கத்தின் மீது நம்பிக்கை கொள்ள இயலாது. பல வருடங்களுக்கு முன்னர் சிற்றிதழ்ச் சூழலுக்குள் திராவிட இயக்கத்தின் பெருமை பேசும் ஒரு சில குரல்கள் ஒலித்தன. உதாரணம் அ. இரா. வெங்கடசலபதி. ஆனால் அவருடைய ஆய்வுகளை நிகழ்த்துவதற்கும் விவாதிப்பதற்குமான களத்தை சிற்றிதழ்ச் சூழல்தான் தன் சிறிய வட்டத்திற்குள் உருவாக்கி அளித்தது. அவர் அந்த வாசகர்களை நம்பித்தான் பேசவேண்டியிருந்தது.

 மாபெரும் பண்பாட்டு சக்தி என்று அவர் வருணித்த திராவிட இயக்கம் அவருக்கு எளிய ஒரு மேடையைக்கூட உருவாக்க வில்லை. இன்றும் அந்த தளத்தில் அவரைப்போன்ற ஓர் அறிஞருக்கு எந்த இடமும் இல்லை. திராவிட இயக்கமேடை அர்த்தமற்ற வெட்டிப்பேச்சுக்கானதாக மட்டுமே இருந்தது. திராவிட இயக்கம் காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை முழுமைசெய்யக் கூட முயலவில்லை, தூரனின் கலைக்களஞ்சியம், வையாபுரிப்பிள்ளையின் பேரகராதி முதலிய பெருமுயற்சிகள் மதிக்கப்படவில்லை என்று அவரே கூறினார் பிறகு.

 திராவிட இயக்கம் மேடையில் தமிழை கொண்டுவந்தது என்று ஒரு பரவலான நம்பிக்கை உள்ளது. உண்மையில் இதுவும் ஒரு மூடநம்பிக்கையே. தமிழில் மேடையுரை என்ற வடிவம் திராவிட இயக்கம் உருவாவதற்கு முன்னரே உருவாகிவிட்டிருந்தது. அதற்கு நாம் பத்தொண்பதாம் நூற்றாண்டு சைவமறுமலர்ச்சி இயக்கத்திற்கே நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். சைவத்தை வெகுஜன இயக்கமாக ஆக்கும் நோக்குடன் ஏறத்தாழ ஐம்பதாண்டுக்காலம் தமிழில் பரவலாக நடைபெற்ற அவ்வியக்கம்தான் தமிழ் மரபின் மாபெரும் பேச்சாளர்களை உருவாக்கியது

 தமிழின் மேடையுரையின் முன்னோடி என்று சைவப்பேச்சாளரான ஞானியார் சுவாமிகளையே சொல்லவேண்டும். பின்னர் பெரும்பேச்சாளர்களாக ஆன திரு. வி. கல்யாணசுந்தரனார், மறைமலை அடிகள் போன்றவர்கள் அவரது பாணியை பின்பற்றியவர்களே. வாழ்நாளெல்லாம் ஒருநாள் கூட தவறாமல் மேடையில் பேசியவர் ஞானியார் சுவாமிகள். அடுத்த தலைமுறையில் ரா. பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் முதலியவர்கள். அந்த மரபின் நீட்சியே குன்றக்குடி அடிகளார், புலவர் கீரன் முதலியவர்கள்.

 தூயதமிழை அழகிய முறையில் மேடையில் பேசுவதற்கும் பெருவாரியான மக்கள் விரும்பும்படி சொற்பொழிவை எளிமையாகக் கொண்டு செல்வதற்கும் முயன்று பெருவெற்றி பெற்றவர்கள் இவர்கள். திரு. வி. க, மறைமலையடிகள் போன்றவர்களின் சுயசரிதைகளில் இவர்களின் கூட்டங்கள் எத்தனை பெரிய மக்கள் பங்கேற்புடன் நடந்தன என்று பதிவாகியிருக்கிறது. இவர்களின் உரை முறையை தானும் பின்பற்றியவர்தான் திராவிட இயக்கத்தின் ஆகப்பெரிய பேச்சாளரான சி.என்.அண்ணாதுரை அவர்கள்.

 மரபிலக்கியத்தை ரசிப்பதற்கும் மதிப்பதற்கும் திராவிட இயக்கம் கற்றுத்தந்தது என்பது கூட எந்தவகையில் சரி என்று பார்க்க வேண்டும். தமிழின் பிரம்மாண்டமான இலக்கியமரபில் ஒரு சிறுபகுதியை மட்டுமே திராவிட இயக்கம் கருத்தில் கொண்டது. சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், குறள் அவ்வளவுதான். தமிழிலக்கிய மரபின் ஆகப்பெரிய இலக்கிய சாதனையும் தமிழ்ப்பண்பாட்டின் மகத்தான பதிவுமான கம்பராமாயணம் திராவிட இயக்கத்தால் இகழ்ந்து ஒதுக்கப்பட்டது. ஈவேரா அவர்களும் அவரது வழிவந்த சி. என். அண்ணாதுரை அவர்களும் கம்பராமாயணத்தை ஆபாச இலக்கியம் என்று வசைபாடினர்.

 அவர்களுடைய இலக்கிய நோக்கு மிக எளிய விக்டோரிய ஒழுக்கவியலால் ஆனதாக இருந்தது. அத்தகைய ஒழுக்கவியலை வைத்துக்கொண்டு எந்தப் பேரிலக்கியத்தையும் மதிப்பிட முடியாது, பைபிளைக்கூட புரிந்துகொள்ள முடியாது என்று அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. அந்த அளவுகோலை வைத்து சங்க இலக்கியத்தையும் நிராகரித்துவிட முடியும் என்றுகூட புரிந்துகொள்ள வில்லை. ஈவேரா அவர்கள் அந்த அளவுகோலை அப்படியே பயன்படுத்தி குறள், சிலப்பதிகாரம் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நிராகரித்தபோது சி. என். அண்ணாதுரை அவற்றை மட்டுமாவது தக்கவைத்துக் கொள்வதற்காக தன் அளவுகோல்களை மழுப்பினார்.

 தமிழின் பெரும் இலக்கியச் செல்வங்களான சீவகசிந்தாமணி, மணிமேகலை போன்றவை திராவிட இயக்கத்தின் எளிய இலக்கிய அணுகுமுறையால் மூடநம்பிக்கையை வளர்ப்பவை என புறக்கணிக்கப்பட்டன. தமிழின் பிரம்மாண்டமான பக்தி இலக்கிய மரபு முழுமையாக நிராகரிக்கப்பட்டது. சிற்றிலக்கிய காலகட்டம் ஒதுக்கப்பட்டது. காரைக்குடி சா. கணேசன் அமைத்த கம்பன்கழகம் போன்ற அமைப்புகளாலும் டி. கெ. சிதம்பரநாத முதலியார், நீதிபதி மு. மு. இஸ்மாயீல் போன்றவர்களாலும் கம்பராமாயணம் திராவிட இயக்கத்தின் எதிர்பிரச்சார அலையில் இருந்து மீட்கப்பட்டு தமிழர்களின் ரசனையில் அழுத்தமாக நிலைநாட்டப்பட்டது. அவ்வியக்கம் இல்லாமலிருந்திருந்தால் ஒருவேளை கம்பனை ஒரு தலைமுறை தொலைப்பதற்கு திராவிட இயக்கம் காரணமாக அமைந்திருக்கும்.

 அதேபோல வைணவ இயக்கத்தாரால் பிரபந்தங்கள் பேணப்பட்டன. சைவத்திருமுறைகள் சைவர்களால் நிலைநிறுத்தப்பட்டன. சேக்கிழாரின் பெரியபுராணத்தை திராவிட இயக்கத்தின் தாக்குதல்களிலிருந்து மீட்கவும் பாரதியை திராவிட இயக்கத்தின் திரிப்புகளில் இருந்து மீட்கவும் தொடர்ச்சியான அறிவியக்கங்கள் தேவைப்பட்டன. இன்று கூட தலைமுறை தலைமுறையாக உருவாகிவரும் ஆய்வாளர்கள் பாரதி குறித்த அவதூறுகளுக்கு ஆய்வுகள் மூலம் பதில் கூறியபடியே உள்ளனர்.

 கடைசியாக திராவிட இயக்கம் கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக வலிந்து முன்னிறுத்திய நூல்களான திருக்குறள், சிலப்பதிகாரம், சங்க இலக்கியம் ஆகியவற்றுக்கு அவ்வியக்கம் இதுவரை உருவாக்கிய ஆய்வுகள் என்ன என்று பார்க்கும் எவரும் ஆழமான அயர்ச்சியை மட்டுமே உணர்வார்கள். குறள் மீது இதுவரை நடந்துள்ள ஆய்வுகளில் முக்கியமான அனைத்துமே திராவிட இயக்கத்திற்கு முன்னரே உருவாகிவிட்டவை. குறளுக்கு இன்று கிடைக்கும் தரமான ஒரே ஆய்வுப் பதிப்பு கி. வா. ஜகன்னாதன் அவர்களால் செய்யப்பட்டது.

 உண்மையில்  அவற்றையும் கருத்தில் கொண்டு பார்த்தால் கூட தமிழில் குறள் குறித்து இதுவரை செய்யப்பட்டுள்ள ஆய்வுகள் முற்றிலும் போதாதவை என்பது ஓரளவு ஆய்வு நோக்குடன் அணுகக் கூடிய எவருக்குமே தெரியவரும். குறளுக்கும் இந்திய இலக்கிய மரபுக்கும் இடையேயான தொடர்புகள், குறளுக்கும் சமண மரபுகளுக்கும் இடையேயான தொடர்புகள், குறளுக்கும் இந்திய தர்மசாஸ்திரங்களுக்கும் இடையேயான தொடர்புகள், குறளுக்கும் இந்தியாவின் நாட்டார் நீதி மரபுகளுக்கும் இடையேயான தொடர்புகள் என ஆய்வு செய்யப் படாத பகுதிகள் விரிந்து பரந்து கிடக்கின்றன. ஏன், குறளுக்கும் சீவகசிந்தாமணிக்கும் இடையே உள்ள உறவுகளை இன்றும் ஆராயப்படாத ஒரு களம் தான்.

 சிலப்பதிகாரம் குறித்து கூறவே வேண்டியதில்லை. இன்றுவரை ஒரு நல்ல ஆய்வுப்பதிப்புகூட சிலப்பதிகாரத்திற்கு இல்லை. ஔவை துரைசாமிப்பிள்ளைக்குப் பின் சங்க இலக்கியம் குறித்து நேரடியான ஆய்வுகளே நிகழவில்லை. முந்தைய ஆய்வுகளை பிரதிசெய்யும் ஆய்வுகளே உள்ளன. சங்க இலக்கியங்களுக்கும் இந்திய தொல் இலக்கியங்களுக்குமான ஒப்பீடு, இந்திய நாட்டாரியல் இலக்கியத்துடன் சங்க இலக்கியத்தை ஒப்பிட்டு ஆராய்தல் போன்ற பெரும்பணிகள் அப்படியே விடப்பட்டிருக்கின்றன. திராவிட இயக்கம் உருவாக்கியதெல்லாம் சில மேலோட்டமான விளக்கஉரைகளை மட்டுமே.

 பிற ஆய்வுத்தளங்களில் தமிழ்ப் பண்பாடு மற்றும் வரலாற்று ஆராய்ச்சிக்கான முயற்சிகள் எவையும் நிகழவில்லை. இத்தகைய முழுமையான செயலிழப்பு எப்படி ஏன் நிகழ்ந்தது என்பதே கேட்கக் கேட்க ஆற்றாமை எழும் ஒன்றாக உள்ளது. தமிழகத்தின் வரலாற்றாய்வு நீலகண்டசாஸ்திரி, சதாசிவப் பண்டாரத்தார் காலகட்டத்திற்குப் பிறகு எதுவுமே நிகழாமல் உறைந்து விட்டது. அவர்கள் தமிழக வரலாற்றின் ஒரு கோட்டுச்சித்திரத்தை உருவாக்கி கால அட்டவணை போட்டுக் கொடுத்தார்கள். அது ஒரு முன்வரைவு. அதை நுண் வரலாறுகளால் நிரப்பும் பெரும்பணி முற்றிலுமாக கைவிடப்பட்டுவிட்டது.

 இன்று கல்விப்புலம் சார்ந்து வரலாற்றாய்வே நிகழவில்லை. வரலாற்றாய்வில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தனிநபர் உதிரி முயற்சிகள் மட்டுமே நிகழ்கின்றன. ஆனால் உண்மையான வரலாற்றாய்வு என்பது அப்படி தனிமுயற்சிகளால் செய்யபப்ட முடியாது. ஒவ்வொருவரும் ஒரு இடத்தை நிரப்ப ஒரு கூட்ட்டுச்செயல்பாடாக, ஓர் அறிவியக்கமாக  வரலாற்றாய்வு நிகழ்த்தப்படவேண்டும். அகழ்வாய்வு,நாணய ஆய்வு, கல்வெட்டாய்வு  போன்றவற்றுக்கு மேலாக  நாட்டாரியல், மானுடவியல்,சமூகவியல், மொழியியல், குறியியல் போன்ற பலதுறைகளை இணைத்து அந்த ஆய்வுகள் செய்யப்படவேண்டும். அது கல்வித்துறையாலேயே செய்யப்பட முடியும். தமிழில் அதற்கான வாய்ப்புகள் ஏதும் இப்போது தெரியவில்லை.

 கடந்த ஐம்பதாண்டுக்காலத்தில் பிரம்மாண்டமான திராவிட இயக்கத்தின் தரப்பில் இருந்து தமிழக வரலாற்றாய்வில் நிகழ்ந்த பங்களிப்பு என்று எதுவுமே கிடையாது. திராவிட இயக்கத்தின் பணி என்று உலக அரங்கில் எடுத்து வைக்கத்தக்க ஒரே ஒரு ஆய்வுநூல்கூட எழுதப்பட்டதில்லை, முன்வைக்கப்பட்டதுமில்லை. சுட்டிக்காட்டும்படியான ஒரே ஒரு திராவிட இயக்க வரலாற்றாசிரியர்கூட கிடையாது என்பதே உண்மை. திராவிடவியல் சார்ந்த ஆய்வுகளை குறிப்பிடும்படிச் செய்த அமைப்பு என்றால் வி.ஐ.சுப்ரமணியம் அவர்களின் முயற்சியால் சந்திரபாபு நாயிடுவின் ஆதரவில் ஆந்திரத்தில் அமைந்த குப்பம் திராவிடப் பல்கலையைதான் சொல்லவேண்டும்.

 தமிழகத்தில்தான் இந்தியாவிலேயே அதிகமான அளவுக்கு கல்வெட்டுகள் கண்டடையப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகளில் முக்கால்பங்கு இன்னமும் பரிசோதிக்கப்பட்டு நூல்வடிவம் பெறவில்லை. ஆய்வாளர்களும் நிதியும் இல்லை என்கிறார்கள். இக்கல்வெட்டுகளை ஆராய்ந்து வரலாற்று தகவல்களை உறுதிசெய்யும் பெரும்பணி அதற்குப் பின்னர்தான் தொடங்கப்பட முடியும். தமிழக வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட ஜேசுசபை குறிப்புகள், இலத்தீன், போர்ச்சுகல், ஜெர்மானிய மொழிகளில் ஏராளமாக இன்று பொதுவாசிப்புக்கு வந்துள்ளன. அவை எதுவும் இன்னமும் தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. அவை சார்ந்து ஆய்வுகளும் செய்யப்படவில்லை.

 தமிழகம் சார்ந்த காலனியாதிக்க காலகட்டத்து ஆவணங்கள் பிரெஞ்சு, டச்சு, ஆங்கில மொழிகளில் ஏராளமாக உள்ளன அவை எதுவும் இன்றும் தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. பதினெட்டாம் நூற்றாண்டு முதல் தமிழக ஆலயங்கள், ஆலயச்சொத்துக்கள் குறித்த நீதிமன்ற ஆவணங்கள் பல்லாயிரம் உள்ளன. அவை இன்னமும் மொழியாகம்செய்யபப்டவோ ஆய்வுக்குறிப்புகளாக தொகுக்கப்படவோ இல்லை.  வள்லலாரின் அருட்பா மருட்பா வழக்கு சம்பந்தமாக மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் இருந்து  மூல ஆவணங்களை எடுத்து ப.சரவணன் செய்துள்ள ஆய்வு அவை எத்தனை பெரிய பொக்கிஷங்கள் என்பதைக் காட்டுகின்றது.

 ஏன், தமிழக வரலாறு சார்ந்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பல நூல்கள் இன்னும் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லை. மலையாளத்திலும் கன்னடத்திலும் எல்லாம் இந்த மொழியாக்கங்களை அரசாங்கத்தின் பிரசுரத்துறையே செய்து விடுகிறது. கேரள அரசின் பிரசுரத்துறை கேரளம் குறித்த முக்கியமான நூல்களை அனைத்தையுமே மலையாளத்திற்கு கொண்டு வருகிறது. வருடம்தோறும் கிட்டத்தட்ட நூறு நூல்கள்! அவை மிகப்பெரிய ஓர் அறிவுக்குவை. அத்தகைய அமைப்போ முயற்சியோ நமது அரசு சார்பிலும் செய்யப்படவில்லை. பல்கலை கழகங்கள் சார்பிலும் செய்யப்படவில்லை. இத்தனைக்கும் ‘செம்மொழியா’ன தமிழில் மலையாளத்திற்குச் செலவிடப்படுவதைவிட பத்து மடங்கு அதிகமான தொகை வருடம் தோறும் செலவிடப்படுகிறது.

 தமிழகத்தில் மாபெரும் ஆவணச் சுரங்கங்கள் இரண்டு உள்ளன. ஒன்று சென்னையில் உள்ள மக்கின்சி கீழ்த்திசை கைப்பிரதி ஆவண மையம். இன்னொன்று தஞ்சை சரஸ்வதி மகால் ஆவண மையம். இங்குள்ள தமிழ் சார்ந்த ஆவணங்களில் மிகச்சிறு பகுதியே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நூல் வடிவம் பெற்றுள்ளது என்று சொல்லப்படுகிறது. மீதிப் பெரும்பகுதி இன்னமும் தீண்டப்படாமல் தூங்குகின்றது.

 ஏன் தமிழின் பொக்கிஷங்கள் என்று சொல்லப்படும் பல மகத்தான ஆக்கங்கள் திராவிட இயக்கம் கோலோச்சிய இந்த அரைநூற்றண்டுக்காலத்தில் மறுபதிப்பே வராமல் மறைந்தன என்றால் என்ன சொல்ல? ஆபிரகாம் பண்டிதரின் கர்ணாமிர்த சாகரம் எத்தனை பதிப்பு வந்திருக்கிறது என்று பார்த்தால் வியப்பே ஏற்படும். விபுலானந்தரின் யாழ்நூல் சிவதாசன் என்ற ஒரு புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் வணிகரால் பல வருடங்களுக்குப் பின்னர் மறு பதிப்புசெய்யப்பட்டது.

 இந்தியாவில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு மாபெரும் நாட்டார் பண்பாடு உள்ள பகுதி தமிழ்நாடு. தமிழக நாட்டார்கலைகளை மூட நம்பிக்கை சார்ந்தவை என்று திராவிட இயக்கம் புறமொதுக்கி அழிக்கத் தலைப்பட்டது. நாட்டார் கலைகள் அழிந்து அங்கே சினிமா சார்ந்த கேளிக்கைகள் இடம்பிடித்தமைக்கு திராவிட இயக்கத்தின் இந்த முதிரா பகுத்தறிவு வாதம் ஒரு முக்கியமான காரணம்.

 ஆனால் திராவிட இயக்கத்தைவிட இறைமறுப்பு கொள்கை கொண்டிருந்த போதிலும் இடதுசாரிகள் நாட்டார்கலைகளை மக்கள் கலைகளாகப் பேணி முன்னெடுத்தனர். நாட்டார்கலைகளை புரிந்து கொள்ளவும் பேணவும் வழியமைத்த கருத்துக்களை உருவாக்கிய முன்னோடி என்று இடதுசாரி ஆய்வாளர் நா. வானமாமலை அவர்களையே குறிப்பிடவேண்டும். பி. எல்.சாமியை தமிழக நாட்டுப்புறவியலின் தந்தை என்றே சொல்லலாம். இன்றும் கூட அவர்களின் ஆய்வுகள் மறுபதிப்புகள் வராமல், அரசு அமைப்புகளால் கவனிக்கபடாமல்தான் உள்ளன.

 இத்தனை விரிவாக நான் உருவாக்கும் இச்சித்திரத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் எல்லாமே மிக அடிப்படையானவை. எவரும் எளிதாக உறுதிசெய்து கொள்ளக் கூடியவை. தமிழகத்தில் கடந்த ஐம்பதாண்டுக்காலத்தில் பண்பாட்டுக்கும் மொழிக்கும் பெரும் பங்களிப்பாற்றியவர்கள் அத்தனை பேருமே திராவிட இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள். இவர்கள் திராவிட இயக்கத்தின் பேரலையை மீறி, புகழோ பணமோ பெறாமல் தங்கள் சுய அர்ப்பணிப்பால் மட்டுமே தங்கள் பணியை ஆற்றியவர்கள். இவர்களை எல்லாம் நான் அங்கீகரித்து இவர்களின் நீட்சியாக என்னை நிறுத்திக்கொள்ள விழைகிறேன். ஆகவே தான் திராவிட இயக்கத்தை நிராகரிக்கிறேன்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 அப்படியானால் திராவிட இயக்கத்தை ஓர் எதிர்மறைச் சக்தியாக, அழிவு சக்தியாக கருதுகிறேனா? இல்லை. அது ஒரு வரலாற்று நிகழ்வு அதன் காரணத்தையும் விளைவுகளையும் புரிந்து கொள்ள முயல்கிறேன். திராவிட இயக்கம் எனது பார்வையில் ஒரு ‘பரப்பிய’ இயக்கம் (Populist movement) பரப்பியம் என்ற சொல் ஒரு மார்க்சிய கலைச்சொல். அதற்குப் பொருள் ‘ஆழமான கொள்கையும், சமூகத்தைப் புரிந்து கொள்ளும் கோட்பாட்டு முறையும் இல்லாமல் சமூகத்தில் ஏற்கனவே இருந்து கொண்டிருக்கும் உணர்ச்சிகளைப் பயன்படுத்திக் கொண்டு அரசியலதிகாரத்தை பிடிக்க முயலும் இயக்கம்’ என்பதாகும். திராவிட இயக்கத்தைப் போல அந்த வரையறை கச்சிதமாகப் பொருந்தும் இன்னொரு இயக்கம் இந்தியாவில் இல்லை.

திராவிட இயக்கம் பேசிய எந்த ஒரு கொள்கையையும் கோட்பாட்டையும் அது உருவாக்கவில்லை. அவற்றை தீவிரமாகவும் ஆத்மார்த்தமாகவும் அது முன்வைக்கவும் இல்லை. அது அனைத்தையும் பிற சமூக, அரசியல் இயக்கங்களில் இருந்து எடுத்துக் கொண்டது. அவற்றை வெகுஜன கோஷங்களாக மாற்றி மக்கள் முன் வைத்தது. அதனூடாக அதிகாரத்தை நோக்கி நகர்ந்தது. அதிகாரம்தான் அதன் இலக்காக இருந்ததே ஒழிய அந்தக் கொள்கைகள் அல்ல. ஆகவே அதிகாரத்தின் பாதையில் தேவையான இடங்களில் அதை உதறி உதறி அது முன்னகர்ந்தது. எது அதன் சாரமாக நமக்குத் தோன்றியதோ அதையெல்லாம் அது அதிகாரத்திற்காக உதறியது. 

திராவிட இயக்கத்தின் ஊற்றுக் கண்கள் பல. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல தமிழ்நாட்டில் சென்னையை மையமாக்கி 1890 களிலேயே உருவாகிவிட்ட தலித் விழிப்புணர்ச்சி இயக்கத்தின் கோட்பாடுகளை அது எடுத்துக் கொண்டது. திராவிடம் என்ற கருதுகோள் அயோத்திதாச பண்டிதர் போன்றவர்களிடம் இருந்துதான் அதற்கு வந்து சேர்ந்தது. திராவிடக் கோட்பாட்டின் இன்னொரு மூல ஊற்று தென்தமிழகத்தில் நெல்லையை மையமாக்கி உருவான சைவ மறுமலர்ச்சி இயக்கம். அது வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார், மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை முதலியோரால் முன்வைக்கப்பட்டது. இவர்கள் இந்து மதத்திலும் சைவத்திற்குள்ளும் இருந்த பிராமண ஆதிகத்திற்கு எதிராக இந்த திராவிட வாதத்தை உருவாக்கினர்.

அயோத்திதாசரும் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையும் ஒருவருக் கொருவர் முற்றிலும் எதிரிகளாகவே இருக்க இயலும். ஆனால் திராவிட இயக்கத்தின் பரப்பிய அரசியல் இரு ஊற்றுக் கண்களையும் பயன்படுத்திக் கொண்டது. அவற்றுக்கிடையே சமரசத்தை உருவாக்கவில்லை. இரண்டையுமே ஏமாற்றியது என்று கூறலாம். ஆனால் திராவிட இயக்கத்தின் சார்புநிலை மனோன்மணியம் சுந்தரனார் பிரதிநிதித்துவம் செய்த சைவ- உயர்சாதி கருத்தியல் நோக்கியே இருந்தது. திராவிட இயக்கத்தின் முகப்பு அடையாளமாக சுந்தரம்பிள்ளை முன்னிறுத்தப்பட்டபோது அயோத்திதாசர் முற்றாகவே புறக்கணிக்கப்பட்டு மறக்கப்பட்டார். தலித் இயக்கம் 1980களில் உருவாகி வந்தபிறகுதான் அயோத்திதாசர் முன்னிலைப்படுத்தப்பட்டார். இல்லையேல்  வெறும் பெயராகவே எஞ்சியிருப்பார்.

திராவிட இயக்க அரசியலின் இன்னொரு ஊற்றுக்கண் ஜஸ்டிஸ் கட்சி. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பிரிட்டிஷாருடன் ஒத்துழைத்து ஆட்சியதிகாரங்களைப் பெறவிரும்பிய உயர்குடியினரின் கட்சி அது. மன்னர்களும் ஜமீன்தார்களும் நிலப்பிரபுகளும் வழக்கறிஞர்களும் அடங்கியது. காங்கிரஸ¤க்கு எதிராக அதைப் பேணினார்கள் பிரிட்டிஷார். ஜஸ்டிஸ் கட்சியின் அரசியல் என்பது பெரும்பாலும் ‘நியமன அரசியலே’ பிரிட்டிஷ் அரசு இந்தியர்களுக்கு அரசியல் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க விரும்பி மாகாண சபைகளையும் மத்திய சட்டமன்றத்தையும் உருவாக்கியபோது அது தேர்தல்களைப் புறக்கணித்த சந்தர்ப்பத்தில் தேர்தல்களில் ‘வென்று’ ஆட்சி அமைத்தது. ஜஸ்டிஸ் கட்சியின் பங்களிப்பாக இன்று கூறப்படும் இட ஒதுக்கீட்டு கோரிக்கைகள் இக்காலகட்டத்தில் உருவானவையே.

ஜஸ்டிஸ் கட்சி பேசிய இட ஒதுக்கீடுகள் எவையுமே மக்களுக்கான இட ஒதுக்கீடுகள் அல்ல. மக்களுக்கு அன்று அரசியலதிகாரமே இல்லை. வரி கொடுப்பவர்களுக்கு மட்டுமே அன்று வாக்குரிமை. அது பெரும்பாலும் உயர்சாதியினருக்கு மட்டுமே இருந்தது. ஜஸ்டிஸ் கட்சி கோரிய இட ஒதுக்கீடு என்பது அந்த எல்லைக்குள் நின்று கோரப்பட்டதே. ஆகவே தான் பிராமண எதிர்ப்பு அன்று அத்தனை முக்கியமாக தேவைப்பட்டது. காரணம் அன்றைய வாக்கு முறையில் பிராமணர்கள் நில உரிமை, வரி கொடுக்கும் உரிமை காரணமாக அதிகளவில் வாக்களித்தார்கள். அவர்களை எதிர்த்து வெல்ல பிற சாதியினருக்கு இட ஒதுக்கீடு தேவையாக இருந்தது.

காங்கிரஸ் இந்தியாவிற்கு சுதந்திரத்தைப் பெற்றுதந்து இந்தியக் குடியரசை அமைத்த பின்புதான் வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை என்ற உண்மையான ஜனநாயகம் நடைமுறைக்கு வந்தது. அது எந்தவிதமான இடஒதுக்கீடும் இல்லாமலேயே பிற்படுத்தப்பட்டவர்களின் அதிகாரம் உருவாக வழிவகுத்தது. காரணம் பிற்படுத்தப்பட்டவர்கள்தான் எண்ணிக்கையில் அதிகமானவர்கள். நாம் இன்று காணும் பிற்படுத்தப்பட்டோர் அரசியல் இந்திய விடுதலைக்குப் பின்னரே உருவானது.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இருந்த ஜனநாயக உரிமை என்பது வெறும் கண்துடைப்பு தான். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு உதவி செய்யக்கூடிய, ஆலோசனை சொல்லக்கூடிய அதிகாரம் மட்டுமே அந்த அரசுகளுக்கு இருந்தது. அந்த அரசியல்மூலம் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் இல்லை. உயர்குடியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் பதவிசுகம் அனுபவிக்க முடியும் அவ்வளவுதான். ஆகவே காந்தி எப்போதும் அந்த அரசதிகாரத்தை நிராகரிப்பவராகவே இருந்தார். ஒரு பயிற்சி என்ற வகைப்பாட்டில்தான் அதை அவர் கடைசியில் தற்காலிகமாக அங்கீகரித்தார்.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகே இந்திய மக்களுக்கு உண்மையான ஜனநாயகம் கிடைத்தது. அந்த ஜனநாயகத்தின் விளைவே இன்று நாம் அனுபவிக்கும் எல்லா உரிமைகளும்; எல்லா வளர்ச்சிகளும். அந்தச் சுதந்திரத்திற்கு எதிராக பாடுபட்ட மரபுள்ளது ஜஸ்டிஸ் கட்சி. ஜஸ்டிஸ் கட்சியின் மறுவடிவமே திராவிட இயக்கம் .சுதந்திரத்திற்குப்பிறகு பிரிட்டிஷ் ஆட்சியிடம் சலுகை பெறுவதற்காக கேட்டுக் கொண்டிருந்த அதே இடஒதுக்கீடு கோரிக்கையை ஜனநாயக உரிமையாக மாற்றிக் கோரியது திராவிட இயக்கம். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சாதியும் அரசியலதிகாரத்திற்காக போராடிக் கொண்டிருந்த காலகட்டம் வந்தது. திராவிட இயக்கம் தமிழகத்தில் பிற்பட்ட சாதியினரின் அரசியல் குரலாக தன்னை மாற்றிக் கொண்டது . அதன்மூலம் அது அரசியலதிகாரம் நோக்கி நகர்ந்தது.

இவ்வாறு பிற்படுத்தப்பட்டவர்களின் அரசியலதிகாரத்தை நோக்கி நகர்வதற்கு ஒரு மூடுதிரையாகவே திராவிட இயக்கம் தமிழியக்கத்தின் கோஷங்களை எடுத்தாண்டது என்பதே வரலாறு. தமிழியக்கத்தின் கோஷங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் செல்வாக்கு பெற்றிருந்தன. அவற்றுக்கு ஒரு இலட்சியவாதச் சார்பு இருந்தது. ஆனால் அதைவிட முக்கியமாக தமிழியக்கம் அதன்வலுவான ஒரு சாராரின் உணர்ச்சியாக பிராமண வெறுப்பை கொண்டிருந்தது. தமிழின் தனித்தன்மையையும், மரபையும் நிராகரித்த  பிற்போக்குத்தனமான பிராமண மதத்தலைவர்களும் அறிஞர்களில் சிலரும்தான் அந்த உணர்ச்சி உருவாவதற்குக் காரணமானவர்கள். அந்த பிராமண வெறுப்பு ஆட்சியதிகாரத்திற்காக பிற சாதியினரை ஒருங்கிணையச் செய்வதற்கு மிக முக்கியமான ஆயுதம் என்று திராவிட இயக்கம் கண்டு கொண்டது. அது பலன் தந்தது.

திராவிட இயக்கம் அரசியலதிகாரம் நோக்கி நகர்ந்த வரலாறு ஒரு முன்னுதாரண பரப்பிய இயக்கம் எப்படி நடந்து கொள்ளும் என்பதற்கான ஆதாரம். மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதே ஒரு மக்களியக்கம் செய்யும் பெரும் பணியாக இருக்கும். கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் இடதுசாரி இயக்கங்கள் செய்தது அதையே. அது சற்று கடினமான பாதை. ஆனால் மக்களின் அவ்வப்போதுள்ள ஐயங்களை, உணர்வெழுச்சிகளைப் பயன்படுத்திக் கொள்வதையே பரப்பிய இயக்கங்கள் செய்யும். அவை உடனடியான விளைவுகளையும் உருவாக்கும். ஆனால் ஓரு மக்களியக்கத்தின் உண்மையான வரலாற்றுப் பங்களிப்பு அவற்றுக்கு இருக்காது.

1940 முதல் இந்தியாவில் பஞ்சங்கள் ஆங்காங்கே உருவாகி 1943ல் உச்சம் கொண்டன. அவை சுதந்திர இந்தியாவை வேட்டையாடின. 1780 முதல் பிரிட்டிஷாரின் தவறான நிர்வாக முறை காரணமாகவும், சுரண்டல் காரணமாகவும், போர்கள் காரணமாகவும் இந்தியாவில் மாபெரும் பஞ்சங்கள் நிகழ்ந்து வந்தன என்பது வரலாறு. அப்பஞ்சங்களின் தூவானமே 1940 களின் பஞ்சங்கள். சுதந்திரம் கிடைத்த முதல் பத்து வருடங்கள் இப்பஞ்சங்களை சமாளிக்க காங்கிரஸ் ஆட்சி திணறியது. ஆனால் மாபெரும் பாசனத்திட்டங்கள் மூலம் உணவு உற்பத்தியைப் பெருக்கி அடுத்த பதினைந்து வருடங்களில் இந்தியாவில் உணவுப் பஞ்சங்களே இல்லாத நிலையை உருவாக்கியது.

தமிழ்நாட்டிலேயே இன்றுள்ள மாபெரும் பாசனத் திட்டங்கள் பல காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உருவானவையே. மொத்தக் கொங்குநாடும் நீர்ப்பாசன வசதி பெற்றது சி. சுப்ரமணியம் அவர்களின் முயற்சியினாலேயே. தமிழகத்தின் விவசாய நிலத்தின் பரப்பு 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. ஆனால் ஆரம்பகாலத்தின் பஞ்சங்களும் அதன் விளைவாக உருவாக்கப்பட்ட ரேஷன் முறையும் தமிழக மக்களில் கடுமையான அதிருப்தியை உருவாக்கியது. அவர்கள் சுதந்திரம் கிடைத்ததுமே நாட்டில் பாலும் தேனும் ஓடும் என்று நம்பிய எளிய மக்கள். அந்த அதிருப்தியை திராவிட இயக்கம் பயன்படுத்திக் கொண்டது.

அக்காலத்து பிரச்சாரங்களை இன்று வாசிக்கும்போது பிரமிப்பே உருவாகிறது. ‘தமிழகத்தில் தட்டினால் தங்கம் வெட்டினால் வெற்றி அத்தனையும் எடுத்து மக்களின் வாட்டத்தைப் போக்குவோம்’ என்று பேசினார் சி. என். அண்ணாதுரை அவர்கள். வட இந்தியா உணவுப் பஞ்சத்தில் அழிந்து கொண்டிருந்த காலம் அது. நேரு உலகநாடுகளிடம் உணவுபிச்சை கேட்டு அலைந்து கொண்டிருந்தார். அமெரிக்க நிதியுதவியால் பிகாரில் அவுன்ஸ் கணக்கில் மக்காச்சோளம் ரேஷனில் அளிக்கப்பட்டது. ஆனால் ‘வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ என்று சி. என். அண்ணாதுரை அவர்கள் பிரச்சாரம் செய்தார். அந்த கோஷம் சாதாரண மக்களை விரைவிலேயே கவர்ந்தது

இந்தியா ஒரு அரசியல் தேசமாக ஒருங்கிணைக்கப் பட்டபோது மொழிவாரி மாநிலங்களுக்கான கோரிக்கை உருவாகியது. பண்பாட்டு தனித்தன்மைகள் எங்கும் விவாதத்திற்கு வந்தன. அதுவரை திராவிட வாதம் பேசி வந்த திராவிட இயக்கம் எந்தவிதமான விவாதமும், விளக்கமும் இல்லாமல் மொழிவழி அரசியலுக்கு வந்து தமிழ் வாதம் பேச ஆரம்பித்தது. திராவிடமும் தமிழும் ஒன்றே என்று கூற ஆரம்பித்தார்கள். மொழிப் பிரச்சனையில் மக்களிடையே இருந்த ஐயங்களை பயன்படுத்திக் கொண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதலியவற்றின் மூலம் மக்களின் ஆதரவை பெற்றார்கள். இதன் பொருட்டே தமிழியக்கத்தின் தமிழ்முதன்மை வாதத்தை திராவிட இயக்கம் பயன்படுத்திக் கொண்டது. 

மிகச்சிறந்த பரப்பிய இயக்கமாக விளங்கிய திராவிட இயக்கம் அன்று உருவாகிவந்த எல்லா வெகுஜன ஊடகங்களையும் திறம்பட பயன்படுத்திக்கொண்டது. ஒலிப்பெருக்கி மேடை, திரைப்படம், பரபரப்பு இதழியல் மூன்றுமே அதன் ஆயுதங்கள் ஆக மாறின. இத்தனைக்கும் அப்பால் இரு முக்கியமான கூறுகளைச் சுட்டிக்காட்டியாக வேண்டும். ஒன்று, சி.என்.அண்ணாத்துரை அவர்களின் ஈர்ப்புள்ள ஆளுமை. தன் லட்சக்கணக்கான ஆதரவாளர்களையும் நெருக்கமான தோழர்களையும் முழுக்க தன்னுடைய பெருந்தன்மையாலும், உண்மையான அன்பாலும், கடைசிவரை ஒரே அணியாகத் திரட்டி வைக்க அவரால் முடிந்தது. அவர்களின் அன்பையும் நம்பிக்கையும் முழுமையாகவே அவர் பெற்றார்

மறுபக்கம் தமிழகத்தின் மாபெரும் மக்கள்தலைவரான கு.காமராஜ் அவர்கள் தமிழகத்தை விட்டுவிட்டு டெல்லி அரசியலில் ஈடுபட்டது பெரும் அரசியல் வெற்றிடத்தை உருவாக்கியது. அவருக்குப் பதில் இங்கே ஆட்சி செய்த பக்தவத்சலம் அவர்கள் ஓர் கறாரான நிர்வாகி. தமிழகத்தின் தொழில் விவசாய வளர்ச்சியில் அவரது திட்டங்கள் பெரும்பங்காற்றியுள்ளன. ஆனால் மக்களிடம் பேசும் வல்லமை இல்லாதவர் அவர். இந்த வாய்ப்பை திராவிட இயக்கம் சரியாகவே பயன்படுத்திக்கொண்டது.

அப்படியானால் திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பங்களிப்பு என்ன? அவற்றை சுருக்கமாக வரையறுத்து இவ்வாறு சொல்லலாம்.

1. திராவிட இயக்கம் தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒருங்கிணைந்து அரசியல் அதிகாரத்தை அடைவதற்கு ஒரு ஊடகமாக செயல்பட்டது.பிற்படுத்தப்பட்டமக்கள் அரசியலதிகாரம் நோக்கிச் சென்றது என்பது இந்தியாவில் எங்கும் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி. அந்த பயணத்திற்கு ஒவ்வொரு  மாநிலத்திலும் ஒவ்வொரு இயக்கம் பங்காற்றியிருக்கிறது. கேரளத்தி இடதுசாரி இயக்கம். கர்நாடகத்தில் சோஷலிச இயக்கம். தமிழ்நாட்டில் அது திராவிட இயக்கத்தால் நடந்தது. அந்த அதிகார மாற்றம் என்பது இயல்பான இன்றியமையாத ஒரு ஜனநாயக நிகழ்வே.

2. ஒரு பரப்பிய இயக்கம் என்ற முறையில் திராவிட இயக்கம்  கோடிக்கணக்கான மக்களை சென்றடைந்தது. ஆகவே அது எடுத்துப்பேசிய சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களும் தமிழ் முதன்மைக் கருத்துக்களும் தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் அறிமுகமாயின. அறிவியக்கங்களின் கொள்கைகள் மக்களுக்கு சென்றுசேர மிகவும் தாமதமாகும். பரப்பிய இயக்கம் சில வருடங்களிலேயே அவற்றை நிகழ்த்தும். பெரும்பாலான தமிழக மக்களின் சிந்தனையில் சாதி எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பழைமைவாத எதிர்ப்பு போன்ற முற்போக்குக் கருத்துக்கள் திராவிட இயக்கம் மூலமே சென்று சேர்ந்தன.

தமிழகத்தின் சமூக மாற்றத்துக்கு இந்த கருத்துக்கள் மெல்லிய பங்களிப்பையே ஆற்றுகின்றன என்பதே உண்மை. ஏனென்றால் இக்கருத்துக்கள் பரப்பிய இயக்கத்தால் வெறும் கோஷங்களாகவே சென்று சேர்க்கப்படும். அப்போது எல்லாரும் மேடையில் சாதி ஒழிக என்பார்கள், நடைமுறையில் சாதி அப்படியே இருக்கும். சாரமுள்ள அறிவியக்கம் மட்டுமே கருத்துக்களை வரலாற்று புரிந்தலுடன் நடைமுறைத்தீர்வுகளுடன் முன்வைக்க முடியும். இருந்தாலும் இந்த அளவில் திராவிட இயக்கத்தின் பணி முக்கியமானதே.

3. ஒரு பரப்பிய இயக்கம் என்ற முறையில் திராவிட இயக்கம் பாமர மக்களுக்குரியதாக இருந்தது. ஆகவே இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய மக்களை அரசியல் மயப்படுத்தும் பணியில் அது பெரும் பங்களிப்பு செலுத்த முடிந்தது. சுதந்திரப் போராட்டம் கூட சென்று தீண்ட முடியாத அடித்தட்டு மக்களுக்கும் அரசியல் பிரக்ஞையை ஊட்ட அதனால் முடிந்தது. அச்சு ஊடகம் போன்றவை சென்று தீண்ட முடியாத அளவுக்கு தனிமைப்பட்டு கிடந்த எளிய மக்களை திராவிட இயக்கத்தின் பரப்பிய ஊடகங்கள் சென்று உசுப்பின. நிலப்பிரபுத்துவ மதிபீடுகளுக்குள் வாழ்ந்த அவர்களை ஜனநாயக அரசியல்கருத்துக்களுக்குள் கொண்டுவந்தன.

தமிழகத்தில் கோடிக்கணக்கானவர்கள் இருபதாம் நூற்றாண்டை உலுக்கிய மானுட சமத்துவம், அடிப்படை உரிமைகள், உரிமைக்கான போராட்டம் போன்றவற்றை எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் வழியாகவே அறிமுகம்செய்துகொண்டிருப்பார்கள். அவர்களின் அரசியல் பிரக்ஞை ஆரம்பிப்பதே அங்கிருந்துதான். ஆகவே தான் இன்றும் எளிய மக்களில் கணிசமானவர்கள் திராவிட இயக்கம் மீது பற்று கொண்டிருக்கிறார்கள். இந்தியா போன்ற ஒரு பரந்து விரிந்தநாட்டில் இந்த ஜனநாயகப்படுத்தல் மிகவும் முக்கியமான ஒன்று.

இந்த மூன்றுமே திராவிட இயக்கத்தின் சாதனைகள் என்றே கூறுவேன். இவற்றுக்காக திராவிட இயக்கத்தை அங்கீகரிக்காமல் நான் எந்த விதமான விமரிசனத்தையும் கூறுவதில்லை. இவற்றின் அடிப்படையில் திராவிட இயக்கம் மீதான மதிப்பை முன்வைக்கும் ஆய்வுகளையும் நான் ஏற்கிறேன். பிற சூழல்களில் காங்கிரஸ¤ம் இடதுசாரி இயக்கங்களும் ஆற்றிய பணி இது. அவை பரப்பிய இயக்கங்கள் அல்லாத காரணத்தால் அப்பணி மெதுவாகவே நடைபெற்றது.

அனைத்தையும் விட முக்கியமான பங்களிப்பு ஒன்றுண்டு. ஆதரவு போலவே எதிர்ப்பும் ஜனநாயக இயக்கத்தில் முக்கியமானது என்று காட்டியது திராவிட இயக்கமே. பிரிட்டிஷ் அதிகாரம் காங்கிரஸ¤க்கு வந்தது. அந்த அதிகாரத்தை ஒருவகை மன்னராட்சியாகவே பிற பகுதிகளில் பெருவாரியானவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணம் அறுபதுகளில்கூட முன்வைக்கப்பட்டதுண்டு. ஆனால் அரசை விரும்பாதபோது தூக்கி வீச முடியும் என எளிய மக்களுக்கு திராவிட இயக்கம் கற்றுத்தந்தது. எதிர்ப்பு என்பது ஜனநாயக அரசியலின் அடிபப்டை செயல்பாடு என்றது.

பிற இடங்களில் அந்தப்பணியை ஆற்றியவை இடதுசாரி இயக்கங்கள். இடதுசாரி இயக்கங்கள் வலுவாக இல்லாத இடங்களில் சாதி இயக்கங்கள் இப்பணியை ஆற்றின. இவை தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் வலுவிழக்கும் போது அந்த இடத்தை சாதி இயக்கங்கள் நிரப்புகின்றன என்று பார்க்கையில் திராவிட இயக்கங்களின் பங்களிப்பு ஒருவகையில் ஆக்கபூர்வமானதும் முற்போக்கானதும்தான் என்றே எண்ணுகிறேன்.

தமிழகம் சாதி அரசியல் வழியாக அரசியல்மயமாக்கப்பட்டிருந்தால் மோதல்களும் வன்முறைகளும் உருவாகியிருக்கும். அது அழிவுப்பாதைக்கே நம்மை கொண்டு சென்றிருக்கும். அதன் அத்தனை குறைகளுடன் திராவிட இயக்கம் ஒரு ஜனநாயக இயக்கமாகவே இருந்தது. ஜனநாயக நடவடிக்கைகளுடன் தான் அது தன் அரசியலை முன்னெடுத்தது. அத்தனை விமரிசனங்களுடன் கூட திரு. மு. கருணாநிதி அவர்களை திராவிட இயக்கத்தின் கடைசி ஜனநாயகவாதி என்றே கூற வேண்டியிருக்கிறது. அவருக்குப் பதிலாக மூர்க்கமான சுயமைய நோக்குள்ள சாதிதலைவர்களே நமக்கு கிடைக்கிறார்கள் இன்று.

ஒரு வேளை திராவிட இயக்கத்திற்குப் பதில் இடதுசாரிகள் அந்தப் பணியை ஆற்றியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். ஆனால் வரலாற்றில் ‘லாம்’ களுக்கு இடமில்லை. வரலாறு அதன் ஒரு பணியை நிறைவு செய்ய திராவிட இயக்கத்தை உருவாக்கியது. அவ்வளவுதான்.என் நோக்கில் இவ்வாறே திராவிட இயக்கத்தின் பங்களிப்பின் சாதக பாதகங்களை வகுத்துக்கொள்கிறேன்.

எதிர்காலத்தில் திராவிட இயக்கத்தால் மழுங்கடிக்கப்பட்ட தன்னுடைய உரிமைக்குரலை மீட்டு தலித் இயக்கங்கள் முன்னகர கூடும். பிற்பட்டோர் அரசியலுக்கு மாற்றாக எழும் சக்திகள் திராவிட இயக்கத்தை உதறித்தானாக வேண்டும். அவையெல்லாம் வரலாற்று முரணியக்கத்தின் சாத்தியங்கள். அவற்றைப்பற்றி தீவிரமான கருத்துக்களை முன்வைக்க நான் விரும்பவில்லை. அந்த மாற்றம் எந்நிலையிலும் ஜனநாயகபூர்வமானதாக இருக்க வேண்டும் என்று மட்டும் கூற விழைகிறேன்.

நான் செயல்படுவது பண்பாட்டுத்தளத்தில். இங்கே திராவிட இயக்கம் என்ற பரப்பிய இயக்கத்தின் விளைவுகள் முற்றிலும் எதிர்மறையானவை. முழுமையாக எதிர்த்து ஒழிக்கப்படத்தக்கவை. அல்லாமல் ஆக்கபூர்வமாகச் சிந்திக்கவும் செயல்படவும்  வேறு வழியில்லை. அதுவே என் தரப்பாகும் . திராவிட இயக்கத்தின் எதிர்மறைக்கூறுகள் என நான் எண்ணக்கூடிய அனைத்துமே அது ஓரு பரப்பிய இயக்கம் என்பதில் இருந்து ஆரம்பிக்கிறது. என் கருத்துக்களைச் சுருக்கி இவ்வாறு கூறலாம்.

1) பரப்பிய இயக்கம் எப்போதுமே சிந்தனைகளை கோஷங்களாக சுருக்கும் தன்மை கொண்டது. சிக்கலான ஊடுபாவுகளும் வரலாற்றுப் பின்புலமும் உடைய சிந்தனைகள் அதற்கு தேவையில்லை. எளிய ஒற்றைப்படையான உண்மைகளையே அது முன்வைக்கும்.  அதன் மூலம் சிந்தனைகள் மேலும் வளர்வதற்கான வழி அடைபடுகிறது. மூர்க்கமான நிலைபாடுகள் மட்டுமே உருவாகின்றன. இன்றைய சூழலில் நாம் சிந்தனைகளை வளர்க்கவும் முன்னெடுக்கவும் திராவிட இயக்கம் உருவாக்கிய இந்த மனநிலையை வென்றே ஆக வேண்டும்.

2) பரப்பிய இயக்கம் எப்போதுமே பாமர மக்களைச் சார்ந்தது. ஆகவே அது எல்லாவற்றையும் அந்த தளம் நோக்கி இழுக்கிறது. கலை இலக்கியங்களில் சீரிய முயற்சிகளை அது வரவேற்காது. கேளிக்கைகளையும் பரபரப்புகளையும் அது நாடும். திராவிட இயக்கம் வணிகக்கலையும் வணிக இலக்கியமுமே முக்கியமானது என்று தமிழ் மனதில் நிறுவி விட்டது. அந்த மனநிலையை உடைத்து ஆழத்தையும் நுண்மையையும் நிறுவியாக வேண்டும்.

3) பரப்பிய இயக்கம் எந்த ஒரு விஷயத்தையும் அர்ப்பணிப்புடன் நெடுங்காலம் நெடுந்தூரம் கொண்டு செல்வதில்லை. அதன் உடனடி பயன் முடிந்ததும் அதை அப்படியே விட்டுவிடும். தமிழியக்கத்தின் கனவுகளும் அப்படியே திராவிட இயக்கத்தால் கைவிடப்பட்டன. தலித் இயக்கம், இடதுசாரி இயக்கங்களின் இலட்சியங்களும் அவ்வாறே திராவிட இயக்கத்தால் கொஞ்ச நாள் மேடையில் முழங்கப்பட்டு கைவிடப்பட்டன. திராவிட இயக்க அரசியலில் இருந்து இந்த இலட்சியங்களை மீட்டு மீண்டும் உயிர்த்துடிப்புடன் முன்னெடுத்தாக வேண்டும்.

4) பரப்பிய இயக்கம் கவனத்தைக் கவரும் செயல்களை மட்டுமே முன்னிறுத்தும், அவ்வாறு கவனத்தைக் கவரும் மனிதர்களே அதன் நாயகர்கள். அர்ப்பணிப்பும் ஆழமும் கொண்ட அறிவியக்கம் அதற்கு ஒரு பொருட்டே அல்ல. ஆகவேதான் திராவிட இயக்கம் உண்மையான அறிஞர்களை புறக்கணித்தது. மேடைப் பேச்சாளர்களை முன்வைத்தது. விளைவாக காலப்போக்கில் மேடை பேச்சாளர்கள் பெருகினார்கள். ஆய்வாளர்கள் அருகினார்கள். ஆய்வாளரும் அறிஞரும் தேவையற்றவர்களாக உணரப்பட்டார்கள். இன்று திராவிட இயக்கத்தின் மனநிலையை முழுக்க நீக்கி நம் சமூகத்தில் அறிவார்ந்த செயல்பாடுகளுக்கும் ஆய்வுகளுக்கும் உள்ள முக்கியத்துவத்தை நிறுவியாக வேண்டும்.

5) பரப்பிய இயக்கம் வெகுஜன ஊடகங்களை மட்டுமே பொருட்படுத்தும். திராவிட இயக்கத்தின் ஊடகமாக சினிமா, மேடை இரண்டுமே இருந்துள்ளன. அது அடிப்படையில் எழுத்துக்கு எதிரான இயக்கம். இடதுசாரி இயக்கங்களுடன் திராவிட இயக்கத்தை ஒப்பிடும் எவரும் இதை உணரலாம்.  திராவிட இயக்கம் அதன் உச்சத்தில் இருந்த நாட்களில், சி.என்.அண்ணாத்துரை அவர்களின் ஒரு கூட்டத்துக்கே பல்லாயிரம்பேர் வந்த காலகட்டத்தில் அவரது இதழ்கள் சில ஆயிரம் பிரதிகளுக்குமேல் விற்றதில்லை என்பதே வரலாறு. அவரது நூல்கள் விற்பதில்லை என்பதை அவரே பலமுறை சொல்லியிருக்கிறார்.

இந்தியாவின் எல்லா அறிவியக்கங்களும் பற்பல பெரும் நாளிதழ்களையும் பிரசுர அமைப்புகளையும் உருவாக்கியிருக்கின்றன. திராவிட இயக்கம் அப்படி பெரிய அமைப்புகள் எதையுமே உருவாக்கவில்லை. காரணம் அது எழுத்து வாசிப்பு சார்ந்தது அல்ல என்பதே. அதன் விளைவாகவே இன்றைய தமிழ் மனம் எழுத்து- வாசிப்பு இரண்டிலும் அக்கறையற்றதாக உள்ளது.. திராவிட இயக்கத்தின் பாதிப்பில் இருந்து மீளாத வரை அதை எழுத்து, வாசிப்புக்கு கொண்டு வரஇயலாது.

6) திராவிட இயக்கம் உருவாக்கிய எளிய பகுத்தறிவு வாதம் நம் மரபின் தொன்மையையும் ஆழத்தையும் புரிந்து கொள்ள உதவியானது அல்ல. இன்னும் சொல்லப்போனால் அது பெரிய தடையும் ஆகும். இன்னும் விரிவான வரலாற்று ஆய்வு முறைகள் நமக்குத் தேவைப்படுகின்றன.  இந்தியச் சூழலில் இடதுசாரிகளும் அம்பேத்கார் முதலிய தலித்தியர்களும் விரிவான ஆய்வுமுறைகளை உருவாக்கியிருக்கிறார்கள். அவை திராவிட இயக்கத்தின் எளிமைப்பாட்டுக்கு எதிராக முன்னெடுக்கப்படவேண்டும். அவற்றையும் தாண்டிச்செல்லும் புதிய சிந்தனைகள் வந்துசேர வேண்டும்.

7) ஒரு பரப்பிய இயக்கமாக திராவிட இயக்கம் பிரச்சாரத்தையே எல்லாவகையான அறிவுச் செயல்பாட்டுக்கும் ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. கலைப்படைப்பின் சவால்களும் சாதனைகளும் திராவிட இயக்கக் கருத்தமைவால் உள்வாங்கப்பட முடியாதவை. ஆகவேதான் ஒரே ஒரு கலைப் படைப்பினைக்கூட அது உருவாக்க முடியவில்லை. இலக்கியம் திராவிட இயக்கத்தின் பாதிப்பை முற்றாக உதறாதவரை கலையில் வெற்றிகளைச் சாதிக்க இயலாது.

ஆகவேதான் பண்பாட்டுச் செயல்பாட்டாளன், இலக்கியவாதி என்ற முறையில் நான் திராவிட இயக்கத்தை முழுமையாகவே நிராகரிக்கிறேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

திராவிடத்தை வேறருக்க வேண்டும் என்பதற்கு சில காரணங்கள்.

 

 

%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE
"மறந்து கொண்டே இருப்பது
மக்களின் இயல்பு
நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
இருப்பது எம் கடமை"

திராவிடம் செய்யும் தீமைகளை மறப்பது தமிழினின் இயல்பு ....
திராவிடம் வேண்டாம் என்று நினைவு படுத்துவது எனது கடமை 

திராவிடத்தை வேறருக்க வேண்டும் என்பதற்கு சில காரணங்கள் :- 


1. அண்டை மாநிலத்தில் இதுவரை தமிழன் முதல்வர் பதவியல் இருத்து இருகிறான? அப்படி இல்லாத போது வீட்டில் தெலுங்கு / கன்னடம் / மலயாளம் பேசும் இவர்கள் எப்படி தமிழர்களின் இன உணர்வை புரிந்து கொள்ள முடியும் ...

2. திராவிட கட்சிகளால் ஏன் இன்னும் ஒடுக்கப்பட்ட இன மக்கள் ஏன் முதல்வர் பதவிக்கு வர முடியவில்லை ... ஆனால், திராவிடம் இல்லாத மண்ணில் தான் ............ஒடுக்கப்பட்ட இனத்தில் உள்ள ராம்விலாஸ் பாஸ்வான் போன்றவர்கள் தலைவராகஅமைச்சராக முடிந்தது. திராவிடம் இல்லாத மண்ணில் தான் ............ஒடுக்கப்பட்ட இனத்தில் உள்ள மாயாவதி முதல்வர் ஆகா முடிந்தது.

3. திராவிடம் என்றால் தெலுங்கன், கன்னடன், மலையாளி சேர்ந்த ஒன்று என்று சொல்லும் உனனால் ஏன் இன்னும் காவிரி தண்ணீரை வாங்கி தர முடியவில்லை.
முல்லை பெரியாறு அணையில் இதுவரை நமக்கு தண்ணீர் வரவில்லை ... தமிழன் மீது இன வெறியை துண்டி தமிழனுக்கு தண்ணீர் தர மறுத்த தெலுங்கர்கள்.....ஏன் ஏன் ஏன் .

4. திராவிடம் பேசும் நீ தீண்டாமை பேசும் நீ ஏன் இன்னும் தமிழகத்தின் கிராமங்களில் ஜாதியின் பெயரால் இருக்கும் இரட்டைக் குவளை முறையை மற்ற முடியவில்லை. ஏன் ஏன் ஏன் ..

5. திராவிடம் பேசும் நீ இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க நீ என்ன முயற்சி செய்தாய்... 

6. திராவிடம் பேசும் நீ ஏன் இலங்கையில் நடைபெற்ற போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது, அவர்களைக் காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் மௌனம் மகா இருந்தது ஏன் ... ஏன் ஆட்சில் இருந்து வெளிய வர வேண்டியது தானே ஏன் உன்னால் முடியவில்லை ...அப்படி செய்தால் கனி மொழி மற்றும் ராசா உடன் சேர்த்து ச்பெச்ரம் முறைகேடு செய்ய முடியாது என்றோ ?

7. திராவிடம் பேசும் நீ ஏன்டா .. குடும்ப அரசியல் பண்ணி தமிழர்களை படுகொலை செய்கிரா... 

8. திராவிடம் பேசும் நீ ...ஆரியத்துக்கு எதிராய் தான் திராவிடம் வந்தது என்றால் பார்பனியர் எப்படி திராவிட கட்சில் வந்தார்கள்.

9. திராவிடம் பேசும் நீ ... சாராயம் கொடுத்து தமிழர்களை ஏன் அடிமையை போல வைத்து இருக்கிறாய் ... சாராயத்தை நிறுத்த வேண்டியது தானே ... 

10. பள்ளியில் தமிழ் மொழி படிப்படியாக அகற்றப்படுகிறது! ஆங்கிலமும் திராவிட மொழிகளும், இந்தியும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன! இதுதான் திராவிடம் செய்த கோலமா ?

11. தமிழர்களின் விளை நிலத்தை தெலுங்கு / மலையாளி/ கன்னட / வட இந்தியர் வாங்கி கொளுமையை இறுக்க வழி வகுக்கும் தெலுங்கு / மலையாளி/ கன்னட அரசியல் வியாதிகளே ... 

12. திராவிடம் பேசும் நீ ....தமிழர்களை கடன் வாங்கி கடன்காரனாக ஆக்கும் முத்தூட் / மனபுரம் / மர்வடி நிறுவனத்திற்கு மற்றக .... தமிழகத்தில் வங்கி மூலம் கடன் கொடுத்து தமிழர் நலம் காக்க மறந்தது எப்படி ...

என்னை திராவிடனாய் இரு என்று சொல்ல நீ யாராட பொறம்போக்கு 

வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்
தமிழ் சாதிகள், தமிழ் இனமாய் ஓன்று சேர்வோம். தமிழ் நாட்டில் திராவிட சிந்தனை அழியாதவரை, ஈழத்தில் மட்டும் அல்ல, உலகில் எந்த நாட்டிலும், தமிழ் இனமோ, மொழியோ - வாழாது, வளராது. திராவிடம் தான் தமிழனின் முதல் எதிரி. "

விழுவது எல்லாம் அழுவதற்கு இல்லை ..
விழுவது எல்லாம் எழுவதற்கு !! 

 
 நன்றி.தமிழ் அனிதா


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ. வே. ரா வின் அணுகுமுறை

 

இக்கட்டுரை , ஈ.வே.ரா குறித்த எனது முழுமையான மதிப்பீடு அல்ல. அவரது மொத்த எழுத்துக்களையும் ஆனைமுத்து தொகுப்பில் கூர்ந்து படித்ததுண்டு. அவர் மீது விமரிசனங்களை அவ்வடிப்படையில் முழுமையாக ஆதாரங்களுடன் முன் வைக்க என்னால் முடியும். அது இச்சந்தர்ப்பத்தில் எளிதாகச் செய்யப்பட வேண்டிய ஒன்றல்ல. இக்கட்டுரையை என் மனப் பதிவும், நிலைப்பாடும் என்ன என்பதை இவ்விவாதச் சூழலில் விளக்குவதற்கே எழுதியிருக்கிறேன்.

பொதுவாக ஈ.வே.ரா குறித்துப் பேசுபவர்களுக்கு ஒரு போக்கு உண்டு. அவர்கள் மற்ற சிந்தனையாளர்களை அச்சிந்தனையாளர்களின் சொந்த வாழ்க்கை, பொதுச் செயல்பாடுகள், அவற்றின் விளைவுகள் ஆகியவற்றை முக்கியமாகக் கொண்டு மதிப்பிடுவார்கள். ஆனால் ஈ.வே.ரா வை மதிப்பிட முன் வருபவர்கள் அவரது பேச்சுகளை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும் என்றும், மற்ற விஷயங்களைக் கணக்கில் கொண்டால் அது அவதூறு என்றும் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.

பெரியாரியர்களுக்கும் இது பொருந்தும். அவர்கள் மற்ற அனைவரையும் தனி வாழ்க்கை சார்ந்தே விமர்சித்து வந்துள்ளனர். ஆனால் அவர்கள் தனி வாழ்க்கை எப்போதுமே விசித்திரமான முறையில் மர்மமாக இருக்கும். தமிழகத்துப் பெரியாரியர்களில் தங்கள் சொந்த சாதியின் எல்லையை கடந்தவர்கள் மிக, மிகக் குறைவு என்ற எளிய உண்மை கூட, இதனால் விவாதத்துக்கு வருவது இல்லை.

என்னைப் பொறுத்த வரை, ஒருவர் என்ன சொன்னார் என்பது ஒரு போதும் முதன்மையான அளவுகோல் அல்ல.

சொல்வது யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்.

ஈ.வே.ரா தன் நீண்ட வாழ்வில் பல் வேறு இடங்களில் பேசிய பேச்சுகளில் பலவகைப் பட்ட கருத்துக்கள், உணர்ச்சி வெளிப்பாடுகள் உள்ளன. பொதுவாக அவரது இயல்பு, மிகையாக உச்சகட்ட வேகம் வெளிப்பட கருத்து சொல்வது. ஆகவே இன்று, அவரைத் தங்கள் விருப்பப் படி சித்தரிப்பது மிக எளிது.

எஸ். வி. ராஜதுரை, அ.மார்க்ஸ், கி வீரமணி ஆகியோர் முன் வைக்கும் மூன்று கோணங்களும் அவரது பேச்சுகளில் இருந்து உருவாக்கப் பட்டவை. ஈ.வே. ரா வை ஒரு இந்து ரிஷி எனச் சித்தரிக்கும் பல நூறு மேற்கோள்களைத் திரட்டி ஒருவர் வைத்திருந்ததைப் பார்த்திருக்கிறேன்.  ஆகவே எஸ். வி. ஆர், அ மார்க்ஸ் ஆகியோரின் முயற்சிகளை ஒருவகை அறிவுத் தொழில் நுட்பங்களாக மட்டுமே நான் பார்க்கிறேன். எனக்கு அவரது வாழ்க்கையும், அவரது செயலின் விளைவுகளும் முக்கியமே. பேச்சுகளை மட்டும் வைத்து மதிப்பிட வேண்டுமென்றால் தமிழ் சரித்திரத்திலேயே பெரிய கலகக்காரர் சாரு நிவேதிதா தான், ஈ.வே.ரா உறை போடக் கூடக் காணாது.

ஈ.வே.ரா வின் வாழ்க்கையை வைத்து அவரை ஒரு கலகக்காரர் என்றோ, சமூக அமைப்பை முழுமையாக மறுதலித்தவர் என்றோ சொல்வது வேடிக்கையானது. சொத்து சேர்ப்பது, அச்சொத்தை வாரிசுகளிடம் விட்டுச் செல்ல முனைவது, அதற்காக வயதில் பாதி கூட இல்லாத பெண்ணை மணம் செய்வது, சொந்த சாதியின் எல்லைகளை மீறாமலிருப்பது, ஏன் சொந்த மதத்தின் அடையாளத்தைக் கூடத் துறக்க மறுப்பது என ஈ.வே.ராவின் மனம் ஒரு மரபார்ந்த முறையிலேயே செயல் பட்டுள்ளது .

அவரது எழுத்துக்களில் ஒட்டு மொத்தமாக ஒரு ஒழுக்கவாதியின் பார்வையையே காண முடிகிறது -மதத்துக்குப் பதிலாக ஒழுக்கத்தை முன் வைத்தவர் என்று ஈ.வே.ராவை கூறி.விட முடியும். அந்த ஒழுக்கங்கள் பல மரபால், மதத்தால் உருவாக்கப் பட்டவை . அவர் அவற்றின் மூல ஊற்று குறித்தெல்லாம் சிந்தித்ததே இல்லை. எந்த சந்தர்ப்பத்திலும் அவர் மரபான அறம், ஒழுக்கம் சார்ந்த அறிவுரைகளையே தன்னை நாடி வந்தவர்களின் சொந்த வாழ்க்கை குறித்து சொல்லியுள்ளார் .

பல நூல்களை இது குறித்து சொல்லலாமென்றாலும் முக்கியமாகச் சொல்லவேண்டிய நூல் கோவை அய்யாமுத்து வின் சுயசரிதை. ஈ.வே.ராவின் நண்பராகவும், குடியரசு வெளியீட்டாளராகவும் இருந்த சர்வோதயத் தலைவர் அவர். அவர் காட்டும் ஈ.வே.ரா மரபான மனப் போக்கும், லெளகீக விவேகமும், சக மனிதர்களிடம் அபாரமான கனிவும் கொண்ட, அதே சமயம் மிகக் கறாரான,  துடுக்குத்தனமும் , நிலையற்ற சிந்தனைப் போக்கும். கொண்ட, ஒரு மேலான மனிதர் மட்டுமே.

இன்று ஈ.வே.ரா தமிழகத்தில் விமரிசனத்துக்கு அப்பாற்பட்ட பிம்பமாகக் கட்டமைக்கப் பட்டு வருகிறார். படிப் படியாக அவர் குறித்த நினைவுகளும் அப்படியே தொகுக்கப் பட்டுப் பதிவாகும். வரலாறும் அப்படியே சமைக்கப்படும். ஆயினும் சிலராவது இம்மாதிரி படிமச் சமையல்களை மீறி விஷயங்களக் காண முற்படவேண்டிய அவசியமுள்ளது. ஆனால் இங்கு அறிவு ஜீவிகள் கூட இவ்வாறு உருவாக்கப் படும் கெடுபிடிகளை அஞ்சியே செயல் படுகிறார்கள் .

உதாரணமாக ஒரு நிகழ்ச்சி: நான் எவருடைய பட்டப் பெயரையும் குறிப்பிடுவதில்லை. ஆகவே மகாத்மா என்றோ, பெரியார் என்றோ எழுதுவதில்லை. சிலகாலம் முன்பு கன்னட சிந்தனையாளர் டி. ஆர். நாகராஜ் அவர்களை, காலச் சுவடுக்காக பேட்டி கண்டேன். நாகராஜ் ஈ.வே.ராவின் இயக்கத்தில் தொடர்பு கொண்டிருந்து பிறகு தலித் சிந்தனையாளராக ஆனவர். ஈ.வே.ரா மீது மதிப்பை வெளியிட்டு, கூடவே அவர் ஒரு சிந்தனையாளர் அல்ல, பாமரத் தனமான சீர் திருத்தவாதியே, என்றும் கருத்து சொல்லியிருந்தார். தன் பேட்டியில் அவர் ஈ.வே.ரா [E.V.R] என்று மட்டுமே சொல்லியிருந்தார். ஆனால் காலச்சுவடு , பெரியார் என்று போடா விட்டால் இதழுக்கே பிரச்சினை வரும் என்று பயப் பட்டது. அது உண்மையும் கூட. அவர்கள் வற்புறுத்தலுக்கு இணங்கி கடைசியில் ஒரு சமரசமாகப் பெரியார் என்று தான் போட வேண்டி வந்தது. இன்று இம்மாதிரி கெடு பிடிகளை மீறி அவரை, அவரது பங்களிப்பின் ஒட்டு மொத்தத்தை வைத்துத்தான் மதிப்பிட வேண்டும்.

ஈ.வே.ரா முற்றிலும் மரபான மனம் கொண்டவர் என்று நான் சொல்ல வரவில்லை. முற்றிலும் மரபை எதிர்த்தவர் என்று சொல்ல முடியாது என்று தான் சொல்கிறேன். யதார்த்த மனம் கொண்ட எவருமே அப்படி எல்லாவற்றையும் தலைகீழாக்க வேண்டுமென்று சொல்லவும் மாட்டார்கள். ஈ.வே.ரா வாய்ப்பந்தல்காரர் அல்ல,செயல்வாதி. அவர் வரையில் எதை நம்பினாரோ அதைச் செய்ய முயன்றவர் அவர். அவ்வகையில் திராவிட இயக்கத்தவரில் அவர் விதி விலக்கு.

ஒவ்வொன்றும் அதன் உள்ளார்ந்த பல காரணங்களுடன், ஒரு தொடர்ச்சி நிலையில் தான் இங்கு காணப்படுகிறது. ஒவ்வோரு விஷயமும் ஏராளமான பிற விஷயங்களுடன் கலந்தும் உள்ளது. முழுப்புரட்சி பேசும் மார்க்ஸியர் கூட அதை ஏற்றுத்தான் பேச முடியும். அந்தச் சிக்கலை ஓரளவேனும் புரிந்துகொண்டவன் தான் சீர்திருத்தவாதியாக ஏதேனும் செய்ய முடியும். ஈ.வே.ரா அமைப்புக்கு வெளியே போய்த் தீர்வு காண முயன்றவர். மற்ற அத்தனை பேரும் அமைப்புக்குள்ளேயே தீர்க்க முயன்றவர்கள், என்றெல்லாம் பொத்தாம் பொதுவாகச் சொல்ல என்ன ஆதாரம்? [மேற்கோள் என்றால் காஞ்சி சங்கராச்சாரியாரில் இருந்தே அதேபோல எடுத்துக் காட்டுகிறேன்] இம்மாதிரி பொது சொற்றொடர்களைத் தவிர்த்து விட்டுப்பேச முயல்வது நல்லது.

என்னைப் பொறுத்த வரை ஈ.வே.ரா ஒரு சமூக சீர்திருத்தவாதி மட்டுமே. எல்லா சீர்திருத்த வாதிகளிடமும் மேலான ஒரு சமூகம் குறித்த கனவு இருக்கும். அது எப்போதுமே நடைமுறையிலிருக்கும் அமைப்புக்கு வெளியேதான் இருக்கும். அதை நடைமுறைக்கு கொண்டு வருவதற்குரிய ஒரு குறைந்த பட்ச செயல் திட்டமும் இருக்கும். அத்துடன் அவர்கள் அடிப்படையில் சார்ந்து இருக்கும் ஒரு சமூகப்பின்னணி [அல்லது ஆதரவுத்தளம்] இருப்பதையும் காணலாம். அது அக்காலத்தைய வரலாற்றுச் சந்தர்ப்பத்தால் இயல்பாக உருவாகி வரக்கூடிய ஒன்று

ஒரு சமூகவியல் ஆய்வாளன் அச்சீர்திருத்தவாதியை முற்றிலும் தவிர்த்து விட்டு அவரது எழுச்சியையும், சாதனைகளையும் முழுக்க ஒரு சமூக வர்க்கப் போராட்டமாக மட்டும் காணமுடியும்– ஈ.எம்.எஸ் எப்போதுமே அப்படித் தான் பார்க்கிறார். நாராயண குரு ஈழவப் பின்னணி உடையவர். பூலே மகர்களின் பின்னணி உடையவர். இப்படி அனைத்து சீர்திருத்தவாதிகளைப் பற்றியும் சொல்லலாம். அதே சமயம் அவர்கள் இப்பின்னணியின் உருவாக்கம் மட்டுமே என்று சொல்லும் அணுகு முறைகளை என்னால் ஏற்க முடியவில்லை. இப்பின்னணிக்கு அப்பாலும் அவர்கள் இருக்கிறார்கள். உண்மையில் அவர்களுடைய தனி ஆளுமைக்கும், இப்பின்னணிக்கும் இடையேயான ஒரு மோதல்-சமரசப் புள்ளியாகவே அவர்களின் செயல் பாட்டுத் தளம் அமைகிறது .

நீண்ட காலமாக ஒடுக்கப் பட்ட ஈழவ மக்கள் ஆட்சியிலும், சமூக அதிகாரத்திலும் பங்கு பெறும் பொருட்டுக் கொண்ட சமூக எழுச்சி, நாராயண குருவின் பின்னணியில் உள்ளது. அதை அவர் உருவாக்கினார், அது அவரையும் உருவாக்கியது. இரண்டையும் பிரிக்க முடியாது. அந்த எழுச்சியின் தேவைகளும், விதிகளும் அவரைத் தீர்மானித்தன. கூடவே அவரது தத்துவத் தேடல்,      தனிப்பட்ட ஆளுமைஅம்சங்களும் அவரை தீர்மானித்தன. அவரது வாழ்க்கை முழுக்க இவ்விரு சக்திகளுக்கும் இடையேயான மோதலும், சமரசமும் மாறி மாறி நடக்கும் வலி மிக்க நாடகத்தை நாம் காணலாம்.  அவரது வாழ்க்கை குறித்து, கறாரான வரலாற்றுப் பதிவுகள் பல எழுதப் பட்டிருப்பதனால் நமக்கு இன்று இது தெரிகிறது.

ஈழவர்களுக்கு, மற்ற தீண்டப்படாதாருடன் உள்ள துவேஷத்தை நீக்க, நாராயண குரு தன் வாழ்வின் கடைசிக் கணம் வரை போராடினார். அதில் ஏராளமான மனக் கசப்புகளையும் விரோதங்களையும் கூட அவர் அடைந்தார். ஈழவர்களின் அதிகாரப் போட்டிகளை அவர் தொடர்ந்து காண நேர்ந்தது. அவரது பிரியப்பட்ட மூன்று முக்கிய மாணவர்களும் [நடராஜ குரு, ‘புலையன் ‘ அய்யப்பன், குமாரன் ஆசான்] அவரது இயக்கத்திலிருந்து வெளியேற நேர்ந்தது. இறுதிக் கட்டத்தில் அவரும் வெளியேறினார்.  இதெல்லாம் தான் நிதரிசனங்கள். எல்லா சீர்திருத்த வாதிகளின் வாழ்க்கையிலும் இந்த போராட்டமும், அவலமும் இருக்கும். உண்மையில் இது இலட்சிய வாதத்துக்கும், யதார்த்தத்துக்கும் இடையேயான  போராட்டம்.

ஈ.வே.ரா குறித்து தமிழில் வரலாற்றுப் பதிவுகள் இல்லை, துதிகளே உள்ளன. ஆயினும் அவர் ஏறத்தாழ சமகாலத்தவர், நானே அவரைப் பார்த்து, பேச்சை கேட்டிருக்கிறேன். ஆகவே பல விஷயங்களை நாம் இப்போதும் அறிய முடிகிறது. ஈ.வே.ரா வின் ஆதரவுத் தளம் அவரது அரசியலில் தெளிவாகவே இருக்கிறது. பிராமணரல்லாத உயர் சாதியினர் ஆட்சி மற்றும், சமூக அதிகாரத்துக்காக நடத்திய சமூகப் போராட்டத்தின் பின்னணியே ஈ.வே.ரா வின் இயக்கம். அந்த எல்லையைத் தாண்டிப் போகும் அம்சங்களும் அவரிடமிருந்தன. அவை அந்த அரசியலில் சமரசத்துக்கும் உள்ளாயின. அதிகாரம் கிட்ட நெருங்கியபோது அவரும், நாராயணகுரு போலவே புறக்கணிக்கப் பட்டார்

ஈவேராவின் இயக்கம், பிரிட்டிஷ் அரசதிகாரத்துடன் சமரசம் செய்துகொண்டு, அதற்குக் குற்றேவல் புரிந்தது என்று கூடச் சொல்லலாம். ஆட்சியதிகாரத்தைக் கையாள விரும்பிய உயர் குடியினரால் உருவாக்கப்பட்ட, ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து உருவானது.  அன்று வரி செலுத்துவோர் மட்டுமே வாக்களித்தனர். ஆகவே நிலமும், சொத்தும் வைத்திருந்த பிராமணர் வலுவான சக்தியாக இருந்தனர். அதனால் அந்த இயக்கம் பிராமணரல்லாதார் இயக்கமாக ஆரம்பித்து ஆட்சிக்கு முயன்ற போது ஜஸ்டிஸ் கட்சியாக ஆகியது.

சுதந்திரத்திற்குப் பின்னர் அனைவருக்கும் வாக்குரிமை வந்த போது, பிற பிற்பட்ட சாதியினர் எண்ணிக்கை பலம் காரணமாக அரசியல் சக்தியாக ஆனார்கள். அப்போது ஈ.வே.ராவின் இயக்கம் அவரை மீறி சி.என்.அண்ணாத்துரை தலைமையில் பிற பிற்பட்ட சாதியினர் இயக்கமாக ஆகியது. பிராமணர் வெறுப்பு என்ற கொடியின் கீழ் உயர் சாதி நிலப் பிரபுக்களையும், குடியானவ சாதிகளையும் இணைக்கவும், அதிகாரத்தை நோக்கி செல்லவும் அது முயன்றது. ஒரு கட்டத்தில் உயர் சாதியினர், பிற பிற்பட்ட சாதியினரின் எண்ணிக்கை பலத்தால் ஓரம் கட்டப்பட்டு முற்றிலும் பிற்பட்ட சாதியினருக்கான அரசியலியக்கமாக அது ஆகியது. இத்தருணத்தில் ஈ.வே.ராவும் அதிகார அரசியலில் ஓரம் கட்டப் பட்டார். அவரது மரணத்துக்குப் பின்னரே அவர் ஒரு புனித தந்தைச் சின்னமாக ஆக்கப் பட்டார்.

தலித்துக்கள் மீதான ஈ.வே.ராவின் அணுகுமுறை இன்று தமிழ் நாட்டில் மிகக் கடுமையாக விமரிசிக்கப் படுகிறது. வரும் காலத்தில் அது மேலும் வலுப்படவே செய்யும். நடைமுறையில் ஈ.வே.ரா தலித்துக்களுக்காக ஏதும் செய்யவில்லை. அவரது ஆதரவுத் தளங்களில் இருந்த கடுமையான சாதிக் கொடுமைகளைத் தடுப்பதற்காகக் குரல் கொடுக்கவோ, திட்டவட்டமான போராட்டங்களில் ஈடுபடவோ இல்லை. பல தலித் போராட்டங்களில் அவர் எடுத்த மேம்போக்கான நிலைப்பாட்டை, இன்று தலித் சிந்தனையாளார்கள் பலர் கடுமையாக விமரிசித்தும் வருகிறார்கள் .

தமிழகத்தில் தலித்துக்கள் தங்களை நேரடியாக அடக்கி ஆண்ட பிற்படுத்தப் பட்ட  மக்களிடமிருந்து விடுதலை பெறுவதற்கான எந்த போராட்டத்தையும் அவர் நிகழ்த்தவில்லை. இந்த உண்மையை மறைக்கவே அவர் கேரளத்தில் பங்கு கொண்ட ஒரே போராட்டமான வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டம் பெரிது படுத்தப் படுகிறது. இங்கே கவனிக்கத் தக்கது என்னவென்றால் வைக்கத்தில் ஆலய நுழைவுக்காகப் போராடியவர்கள் தலித்துக்கள் அல்ல, பிற்படுத்தப் பட்டவர்களான ஈழவர்களே. அவர்களுடன் இணைந்தே ஈ.வே.ரா போராடினார். இந்த உண்மை இங்கே பேசப் படுவதே இல்லை.

தமிழகத்தில் ஈ..வேராவின் அரசியல் பிரவேசத்துக்கு முன்னரே தலித் எழுச்சி உருவாகிவிட்டிருந்தது. அயோத்திதாச பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா போன்றவர்கள் அவ்வெழுச்சியின் நாயகர்கள். ஆனால் அந்த எழுச்சியை பிராமணரல்லாத உயர்சாதியினரின் பிராமண எதிர்ப்பு அரசியலுடன் பிணைத்தது வழியாக அதை மழுங்கடித்தார் ஈ.வே.ரா.  அவரது கொள்கைகள், பிற்படுத்தப்பட்டவர்கள் அரசியலதிகாரம் நோக்கிச் செல்லத் தோள் கொடுக்கும் சக்தியாக தலித்துக்களை முக்கால் நூற்றாண்டுக் காலம் நிறுத்தி வைத்தன. பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துக்களை ஒடுக்குகிறார்கள் என்ற நடைமுறை உண்மையை பிராமண எதிர்ப்பு என்ற ஒற்றைக் கோஷத்தால் மூடி வைத்தது ஈ.வே.ராவின் இயக்கம்

ஈ.வே.ரா மறைந்து அரை நூற்றாண்டு கழித்து, உருவான தலித் இயக்கங்கள் தங்கள் முன்னோடிகள் நிறுத்தி விட்ட புள்ளியில் இருந்து, ஈ.வே.ரா தொடங்கிய புள்ளியில் இருந்து மீண்டும் புதிதாகத் தொடங்க வேண்டியிருந்தது. இந்த அடிப்படையிலேயே அவர்கள் ஈ.வே.ராவை எதிர்க்கிறார்கள். இன்று தலித் இயக்கங்கள் உருவாகி தலித் விடுதலைக்கான ‘உண்மையான‘ போராட்டங்கள் நடக்கும் போது ஈ.வே.ராவின் ஆதரவுத் தளமே அவர்களின் முதல் எதிரியாக இருப்பதையும், எவரும் காணலாம்.

தலித்துக்கள் அறிவும், விவேகமும் சற்று குறைவானவர்கள், அவர்களையும் நாம் சற்று அணைத்துப் போக வேண்டும் என்பதே அவரது பார்வையாக இருந்துள்ளது. இந்த உயர்சாதிப் பார்வையை  அவர் தவிர்த்திருக்க முடியாது, அது ஓரளவு அவரது அந்தரங்க நம்பிக்கை, ஓரளவு அரசியல் சமரச நிலைப்பாடு. அவருக்கு ஆதரவுத் தளமாக இருந்த உயர் / நடுத்தர சாதிகளின் நம்பிக்கை அது. அந்த மனப் போக்குக்கு வெளியே அவரால் அதிகம் நகர்ந்திருக்க முடியாது.

ஈ.வே.ரா அரசியலுக்கு வருவதற்கு முன்னரே தலித்துக்களின் வரலாற்றுக்கான ஒரு முன் வரைவு பண்டித அயோத்தி தாசரால் முன் வைக்கப்பட்டு பிற இரு தலித் தலைவர்களால் வலுவாக முன்னெடுக்கப் பட்டிருப்பதை இன்று தலித் ஆய்வாளர்கள் நமக்கு எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். தலித்துக்கள் தங்கள் மரபாலோ, குணத்தாலோ இழிந்தவர்கள் அல்ல என்பதே அந்த வரலாறு. அவர்கள் இந்நிலத்தின் பூர்வகுடிகள். நில உடைமையாளர்கள். பழைய பௌத்தர்கள். பௌத்தம் வீழ்ச்சியடைந்த போது நிலம் பிடுங்கப் பட்டு மெல்ல,மெல்ல ஒடுக்கப்பட்ட நிலை அடைந்தவர்கள். இதை அயோத்தி தாசர் ஆதாரங்களுடன் முன்வைத்து பேசியிருக்கிறார். அக்காலத்து மேலை ஆய்வாளர்களான கர்னல். ஆல்காட் போன்றவர்கள் இதை ஏற்றிருக்கிறார்கள்.

ஆனால் ஈ.வே.ரா இந்த நம்பிக்கையை, ஒரு போதும் முழு மனதாக  ஏற்க வில்லை, என்பதை அவரது மொத்த எழுத்துக்களை வாசிக்கையில் காணலாம். அவரது இயல்புக்கு ஏற்ப அவர் தன் தரப்பை மாற்றி, மாற்றிச் சொல்லியிருந்தாலும் தலித்துக்கள் புராதனமான காலத்தில், பண்பாட்டின் ஆரம்பத்திலேயே, ஆரியர்களின் புராணங்களால் தாழ்த்தப் பட்டவர்கள் ஆக ஆனவர்கள் என்பதே, அவர்களின் கொள்கையாக இருந்துள்ளது.

இங்கே ஒரு நிகழ்ச்சியைச் சொல்லவேண்டும். என்னுடைய விஷ்ணுபுரம் நாவல் 1997ல் வெளி வந்த போது, அதில் பத்தாம் நூற்றாண்டில், பறையர்கள் நகர,வீதிகளில் நடமாடும் உரிமையுடன், கோயில்,சேவையில் இருந்ததாக எழுதியிருந்ததை சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் அ.மார்க்ஸ் மிகக் கடுமையாக விமரிசித்து அது ஒரு ‘இந்துத்துவ அஜெண்டா’ என்று குற்றம் சாட்டினார். ”பறையரை ஒருத்தர் ‘நீர் பறையரா?’ என்று கேட்கிறார். அவர்கள் பறையுடன் கோயிலுக்குள் செல்கிறார்கள். இதென்ன இந்துத்துவ சொர்க்கமா? ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, இந்து மரபால் அடிமைப்படுத்தப்பட்ட தலித்துக்கள், மனிதர்களாகக் கருதப்பட்டதே கிறித்தவ மிஷனரிகளால்தான். அந்த யதார்த்தத்தை மூடிவைத்து இந்துக்கள் பறையர்களை மதித்தார்கள் என்ற கட்டுக்கதையை இந்நூல் உருவாக்குகிறது’ என்றார் அ. மார்க்ஸ்

அப்போது அயோத்தி தாசரின்  படைப்புகள் வெளியாகவில்லை. நான் அவர் பெயரையே கேள்விப் பட்டிருக்கவும் இல்லை. ஆனால் நான் அப்படி எழுதியமைக்கான காரணத்தை விளக்கினேன். பறையர்களும், கேரளத்தில் புலையர்களும் நில உடைமையாளர்களாக இருந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளன. கேரள ஆய்வாளர்கள் விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். அபிதான சிந்தாமணியில் கூடத் திருவாரூர்க் கோயிலில் பறையர்களுக்கு உள்ளே நுழையும் உரிமை கொடுக்கும் ஆசாரம் உள்ளது என்றும் இது அவர்கள் எப்போதோ உயர்நிலையில் இருந்திருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரம் என்றும் சொல்லப் பட்டிருக்கிறது. அதனால் தான் எழுதினேன் என்றேன். அ.மார்க்ஸ் அதை ஏற்காமல் மீண்டும், மீண்டும் அது ஓர் இந்துத்துவப் பொய் என்றும், அதை ஈ.வே.ரா ‘தோலுரித்து’ ஐம்பதாண்டுகள் ஆகின்றன என்றும் சொன்னார். பெரியாரியர்களின் மனப்போக்குக்கு அ.மார்க்ஸின் இந்த அணுகுமுறை சரியான உதாரணம்.

கூட்டம் முடிந்து வெளியே செல்லும்போது ஒருவர் என்னிடம் நான் சொன்னதே உண்மை என்றும் அதற்கு ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன என்றும், அயோத்திதாசர் என்பவரைத் தெரியுமா, என்றும் கேட்டார். ’இல்லை’ என்றேன். ’பாருங்கள் பெயரே தெரியாமல் புதைத்துவிட்டார்கள்’ என்று வருந்திய பின் சென்னையில் உள்ளஅன்பு. பொன்னோவியம் என்ற அறிஞரை, நான் சந்திக்கவேண்டும் என்றார். நான் அடுத்த சென்னைப் பயணத்தில் அன்பு. பொன்னோவியத்தைச் சென்று சந்தித்தேன். ஆனால் அவர் உடல்நலம் குன்றியிருந்தமையால் சிறிதளவே பேச முடிந்தது. பின்னர் அயேத்திதாசர் நூல்கள்  பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியால் வெளியிடப்பட்டன.

ஈ.வே.ரா தலித் அரசியலின் அடிபப்டையாக இருக்கும் அவர்களின் வரலாற்றுவாதத்தை ஏற்க.வில்லை. அதை ஒரு மூட.நம்பிக்கை என்றே அவர் எண்ணினார். ஏனென்றால் அவர் அதை வெளிப்படையாக திட்டவட்டமாக ஏற்றிருந்தால் அவரால் அவரது ஆதரவு வட்டமான பிராமணரல்லாத உயர்சாதியினர் மற்றும் பிற்பட்ட மக்களின் ஆதரவை இழக்க வேண்டியிருக்கும்

இதே போல ஈ.வே.ரா தொழிலாளர் இயக்கங்களுடன் கொண்டிருந்த உறவு குறித்தும், ஆழமான விமரிசனங்கள் எதிர்காலத்தில் வரும் என்று தான் நான் நம்புகிறேன். இன்றைய இடது சாரி கட்சிகள் திராவிட இயக்கம் உருவாக்கியுள்ள உணர்ச்சி வேகங்களை எதிர் கொள்வதை விட அதனுடன் சேர்ந்து போவதே மேல் என்று முடிவு செய்து வெகு நாள் ஆகிவிட்டது . தொழிலாளர் இயக்கங்களில் ஈ.வே.ராவின் உறவு அவரது ஆதரவுத் தளமான நடுத்தர வியாபாரிகள், நிலவுடமையாளர்கள் ஆகியோரின் மனநிலையால் கட்டுப்படுத்தப் பட்டது .

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஈ.வே.ராவின் மீதான என் முக்கிய விமரிசனங்கள் இவற்றின் அடிப்படையிலானவை அல்ல. எந்த சீர்திருத்த வாதியும் அவனது சமூகச் சிந்தனையாலும், வரலாற்று சந்தர்ப்பத்தினாலும் தான் தீர்மானிக்கப் படுகிறான். ஈ.வே.ரா உருவாக்கிய அறிவார்ந்த விவாதத் தளம் மிக மேலோட்டமானது. அவசர முடிவுகளின் அடிப்படையில் அதி மூர்க்கமான செயல் பாடுகளில் இறங்கும் போக்கு கொண்டது. அறிவியக்கத்தின் அடிப்படை விதிகளைப் பாமரத்தனமாக நிராகரிக்கும் இயல்பு கொண்டது என்பதே என் விமரிசனம்.  அதனால்தான் அவரது இயக்கம் ஒரு அறிவியக்கமாக ஆகாமல் போயிற்று. தமிழின் பொதுவான அறிவுச் செயல்பாடுகளுக்கு ஆழமான பின்னடைவை அது உருவாக்கியது. பல விதமான விமரிசனங்களைத் தொடர்ந்து முன் வைத்த ஒருவர் மீது, இம்மாதிரி ஒரு விமரிசனத்தை முன்  வைப்பது ஒன்றும் பெரிய பழி பாவமல்ல என்று தான் நான் எண்ணுகிறேன்.

இவ்வகையில் ஈ.வே.ராவின் முதல் பிரச்சினை அவர் எதைப் பற்றியெல்லாம் பேசினாரோ அதைப்பற்றி அவருடைய ஞானம் மிகக் மிகக் குறைவு என்பதே. அவர் சமத்துவம்,பொதுவுடைமை குறித்துப் பேசுகிறார். அதைப் பற்றிய அவரது அறிவு பாமரத்தனமானது. அவர் ஜாதி குறித்து கடுமையான விமரிசனங்களை முன்வைக்கிறார் அதைப் பற்றி ஒரு குறைந்த பட்ச ஆய்வை அவர் மேற் கொண்டதற்கான தடயங்களை அவரிடம் காண முடியாது. அவர் மதம் குறித்தும், கடவுள் குறித்தும் பேசுகிறார், ஆனால் அவை குறித்த அவரது புரிதல் மிக சாதாரணமானது. அவருக்குச் சமானமான தளத்தில் இயங்கிய பூலே, அம்பேத்கார் ஆகியோரின் விரிவான அசல் ஆய்வுகளை இங்கு சுட்டிக் காட்டலாம். அதை விட முக்கியமாக அவருக்கு முன்னரே தமிழில் இயங்கிய அயோத்திதாச பண்டிதரின் ஆய்வுகளை.

ஏன் இந்த ஆய்வுகள் தேவை என்ற கேள்வி எழுப்பப் படுகிறது. அடிப்படை ஆய்வுகளின் பலம் கொண்ட செயல் திட்டங்களே நிதரிசனத்துக்கும், வரலாற்றுத் தேவைகளுக்கும் நெருக்கமாக வர முடியும். சாதி என்பது பிராமணச் சதி என்ற ஒற்றை வரியில் புரிந்து கொண்ட ஈ.வே.ரா உண்மையில் சாதியின் எடையின் அடித் தட்டில் நசுங்கிக் கிடந்த தலித்துக்களை ஏமாற்றுகிறார். சாதியைக் கற்பித்தவன் பார்ப்பான். ஆகவே தேவர்களும், நாயுடுக்களும், பார்ப்பானை ஒழிப்பார்கள். தலித்துக்களை தீண்டாமலும் இருப்பார்கள் என்ற விபரீத நிலைமை தமிழ் நாட்டில் உருவாக இதுவே காரணம்..

இரண்டாயிரம் வருடங்களாக இங்கு வேரூன்றியவை மதங்கள். அவற்றுக்கு மிக விரிவான தத்துவ கட்டமைப்பு உள்ளது. அவற்றின் படிமங்களே நம் ஆழ்மனத்தை உருவாக்கியுள்ளன. ஆயிரம் வருடக் கலையிலக்கியப் போக்குகள் அவற்றிலிருந்து முளைத்தவை. போகிற போக்கில் கடவுள்களைத் திட்டினால் மதத்துக்கு ஏதும் ஆகி விடுவது இல்லை. அதுவும் ஈ.வெ.ரா மதம் உருவாகிய குறியீட்டு அமைப்புகளைக் கூட அப்படியே நேரடி அர்த் தம் எடுத்துக் கொண்டு விளாசியவர் . அவர் வாழ்ந்த காலத்திலேயே மதச் சொற்பொழிவளர்கள் அவற்றுக்குத் திட்ட வட்டமான பதிலை அளித்து விட்டார்கள். ஈ.வே.ரா கேட்ட கேள்விகள் மிக மேலோட்டமானவை மட்டுமல்ல அவற்றுக்கு திட்ட வட்டமான பதிலும் மரபில் ஏற்கனவே இருந்தது.கடவுளை empirical ஆக நிரூபிக்க முடியுமா என்றார் அவர்.அப்படியானால் empirical ஆக நிரூபிக்க முடியாத எல்லாமே பொய்யா,தேவையற்றவையா என்று திருப்பி கேட்கப்பட்ட போது பதில் சொல்ல முடிய வில்லை.

சில வருடங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் ஒரு தி. க கூட்டம் நடந்தது .அதில் ஈ.வே.ராவின் ஒரு மேற்கோளை சொல்லிப் பேசினார் ஒருவர்.  ‘சரஸ்வதி நாவில் இருக்கிறாள் என்றால் அவள் மலம் கழிப்பது எங்கே ?‘ நான் போன ஆட்டோ ஓட்டுநரிடம் அவரது கருத்தைக் கேட்டேன்.  ‘இவர்கள் இதயத்தில் குடிகொண்டிருக்கும் அண்ணாவுக்கு அங்கே என்ன கக்கூஸா கட்டி வைத்திருக்கிறார்கள்?’என்றார் அவர். ‘ சரஸ்வதின்னா ஒரு சக்தி சார்.வீணை நாதத்திலேயும், பாட்டோட அழகிலேயும் அது இருக்குது.  நம் நாக்கிலும், புத்தியிலும் அது வரணும்னு ஆசப்படறோம்.  கும்பிடற வசதிக்காக அத அம்மான்னு சொல்லிக்கிறோம்.வேற மாதிரியும் சொல்லலாம்… அவரு பாவம் வயசானவரு. படிச்சவர் கூட கெடயாது. ஏதோ சொல்லிட்டார். இவரு எம்மே படிச்சவர் தானே, இவருக்கு எங்கே போச்சு சார் புத்தி?” இது தான்  தமிழ் நாட்டில்இன்று ஈ.வே.ராவின் இடம்.

அதாவது அறிவார்ந்த ஆய்வின் பலம் இல்லாமல் பொதுப் புத்தியால் [பிராமண காங்கிரஸ் தலைவர்கள் மீதுள்ள தனிப் பட்ட கோபங்களாலும்] ஈ.வே.ரா உருவாக்கிய எளிய வாதகதிகள் உடனடியாக உடைத்து எறியப் பட்டன . இந்தியா முழுக்க சனாதனப் போக்குக்கு எதிராக தத்துவப் பரிமாணமுள்ள, வரலாற்றுப் பிரக்ஞை உள்ள ஆழமான விமரிசனங்கள் உருவாயின. அவற்றை இன்றுவரை சனாதன மதம் எதிர் கொள்ள முடியவுமில்லை.  நாராயண குரு முதல் அம்பேத்கர் வரை பல உதாரணங்கள் சொல்லலாம். தமிழில் ஈ.வே.ரா உருவாக்கிய சருகு வேலி உடைபட்டதும் சனாதன மதம் விஸ்வரூபம் கொண்டு வளர்ந்துள்ளது. இதை எவரும், இன்றைய தமிழ்ச் சூழலை அவதானித்தால் காணமுடியும்.

பதினாறு வருடம் முன்பு பி.கெ. பாலகிருஷ்ணன் [கேரள வரலாற்றாசிரியர் ] சொன்னார். ‘இனி தமிழ் நாட்டில் பிராமணர்களுக்கு நல்ல காலம். யாகமும், ஹோமமும் தூள் கிளப்பப் போகின்றன” . ‘‘ஏன்?” என்று கேட்டேன். ‘‘எளிமையான ஒரு பிராமண எதிர்ப்பு மட்டுமே அங்கே உருவாக்கப் பட்டுள்ளது. பிராமண தத்துவம் எதிர் கொள்ளப் படவேயில்லை. அங்கே வெள்ளைக்காரன் காலத்தில் பிராமணன் கைப்பற்றிய ஆட்சி அதிகாரத்தை இனி மற்ற சாதியினர் கைப்பற்றியதுமே சமரசம் ஆரம்பித்து விடும். அவர்களுக்காக பிராமணன் யாகம் செய்ய ஆரம்பித்து விடுவான்”  மேற்கொண்டு இதற்கு ஆதாரம் தேவை என்றால் ஸி .ஜெ.ஃபுல்லர் எழுதிய தேவியின் திருப் பணியாளார்கள் என்ற நூலை பார்க்கலாம்.

மதமும், பாரம்பரியமும், அன்றாட நம்பிக்கைகளும் பின்னிப் பிணைந்துள்ள நம் சூழலில் மிகுந்த ஆய்வுக்குப் பிறகு நிதானத்துடன் தான் ஒரு சீர்திருத்தக் கோணத்தை முன் வைக்க முடியும். முளைப்பாரி இல்லாத மாரியம்மன் விழா இல்லை. முளைப்பாரி , பல்லாயிரம் வருட விவசாய வாழ்க்கையின் தொடர்ச்சியான விவசாயச் சடங்கு. மாரியம்மன் கோவில்களை இடித்து விட்டு அங்கே கிராமக் கக்கூஸ் கட்டலாம் என்று சொல்வது எளிய விஷயம். அதன் விளைவாக மாரியம்மன், பராசக்தியாக மாறுவதும் பல்லாயிரக் கணக்கான முளைப் பாரித் தட்டுகளை மேல் மருவத்தூருக்குக் கொண்டு போவதும் தான் நடந்தது தமிழ் நாட்டில்.

முன் வைத்த ஒரு சீர்திருத்தக் கருத்தை, மெல்ல மெல்ல வளர்த்தெடுப்பது அதைவிட முக்கியமான விஷயம். அப்போக்கில் அது பல மாற்றங்களுக்கு உள்ளாகும் என்பது ஓர் உண்மை. அது மக்கள் அக்கருத்தை உள் வாங்கிக் கொண்டதன் விளைவு. .ஈ.வே.ராவைத் தமிழகம் எந்த அளவுக்கு உள்வாங்கிக் கொண்டது? இங்குள்ள தந்தை[முதுமை] வழிபாட்டு மனநிலை அவரை மதிக்கச் செய்தது. தமிழ் இளைஞர்களில் ஒரு சிறு சாரார் இளமையின் ஒரு கட்டத்தில் அவர் மீது எளிய ஈர்ப்பினை அடைந்து சில வருடங்களியே நேர் எதிராகத் திரும்பியும் விடுகிறார்கள். ஈ.வே.ராவின் கருத்துக்கள் முளைக்காத கூழாங்கல் விதைகள்போல இன்று தமிழ்நாட்டு அகநிலத்தில் சிதறிக்கிடக்கின்றன என்பதே உண்மை. அவர் மீது ஏன் தீவிரமான விமரிசனங்கள் எழவில்லை, ஏன் எளிய மரியாதையுடன் எல்லாரும் தாண்டிச்செல்கிறார்கள் என்றால் ஈவேராவை ஏற்றுக் கொண்டு வாழ்க்கையின் பகுதியாக ஆக்கிக் கொள்வதில்லை.

“ தன் தரப்புக்கு வலு சேர்க்கும் விஷயங்களைக்கூட ஈவேரா கற்றுக் கொள்ளவில்லை” என்கிறார் டி ஆர் நாகராஜ்[காலச்சுவடு பேட்டி] . இந்திய மரபிலேயே அழுத்தமான நாத்திக போக்குகள், அவைதீக போக்குகள் பல உள்ளன. அவற்றை அடையாளம் கண்டு தமிழ் மரபின் ஆக்கபூர்வமான கூறுகளுடன் பிணைக்க முயலும் அயோத்தி தாச பண்டிதர் மிக முக்கியமான முன்னுதாரணமாக இங்கு ஏற்கனவே இருந்தார். தத்துவ மேதையாக  ஈ.வே.ராவைக் காட்டப் பெரும் பணமும், உழைப்பும் செலவிடப்படும் இன்றும் கூட பலவகையிலும் நவீனத் தமிழின் முதல் தத்துவ சிந்தனையாளாரான அயோத்திதாச பண்டிதர் ஏன் அப்படி முன்வைக்கப்படுவது இல்லை?

தமிழ் அறிஞர்களை தேடித் தேடி படித்த எனக்கு அவரது படைப்புகள் தலித் இயக்கங்கள் தலையெடுத்த பிறகே வாசிக்கக் கிடைத்தன என்ற நிதரிசனத்தை ஒரு போதும் நான் மறக்க சித்தமாக இல்லை. தமிழ் பெளத்தம் குறித்த எனது பத்தாண்டு தேடலின் அடிப்படை விடைகளைப் பண்டிதர் அரை நூற்றாண்டுக்கு முன்னரே எழுதி விட்டிருந்தார் என்பதும் அவை மறைக்கப்பட்டன என்பதும் எனக்கு தமிழ் அறிவுத் துறையில் செயல்படும் சாதி மனநிலையின் ஆதாரமாகவே தெரிகிறது . விஷ்ணுபுரம் எழுதுவதற்கு முன்பு அயோத்தி தாச பண்டிதர் கிடைத்திருந்தால் பல தளங்களை விரிவு செய்திருப்பேன் .

ஈ..வே.ரா வின் நடைமுறை வெற்றி அவர் தன் இயக்கத்தை ஜஸ்டிஸ் கட்சியுடன்[பிராமணரல்லாதார் இயக்கத்துடன்] இணைத்துக் கொண்டதில் தான் உள்ளது. சமூக/அரசியல் ரீதியாக தவிர்க்க முடியாத ஒரு தரப்பு அது. இந்தியா முழுக்க அந்தத் தரப்பு வலுப் பெற்று அதிகாரத்தை பிடித்தது.  இப்போது இந்திய அரசியல் பிற்பட்ட [குடியானவ/மேய்ச்சல் ] சாதிகளுக்கு ஆதரவாக உள்ளது. நாளை அது தலித்துக்களுக்கும் பிற்பட்ட சாதிகளுக்கும் இடையேயான ஒரு சம நிலையாக இருக்கும். இவ்வாறு பிற்பட்ட சாதிக்குரிய அரசியல் அலையின் திவலையாக,ஒரு முத்திரையடையாளமாக மட்டுமே ஈ.வே.ரா இன்று முக்கியத்துவம் பெறுகிறார் .

ஈ.வே.ரா திராவிட இயக்கம் முன்வைத்த தமிழ் தேசியம், தமிழ் கலாச்சார அடையாளத்தேடல் முதலியவற்றுக்கு முற்றிலும் எதிரானவர் என்பது ஒரு உண்மை. இன்று திராவிட இயக்க அரசியல் தமிழ் இன அரசியலாக மாற்றப் பட்டுள்ளது. கொள்கை ரீதியாக ஈ.வே.ரா தோற்று, புறக்கணிக்கப் பட்டுள்ளார் என்பதற்கு இதுவே சான்றாகும். இப்போது தன் தெலுங்கு அடையாளத்தை மறக்காத, அவரே தமிழ் இன அரசியலின் தொடக்கப்புள்ளி என்று கூசாமல் வரலாறு திரிக்கப் படுகிறது. அதே சமயம் தமிழ் இன அரசியல் அதன் தீவிரத் தளத்தை அடையும் போது ஈ.வே.ராவே தெலுங்கு ஆதிக்கவாதி என குற்றம் சாட்டப்படும் நிலையும் இங்கு உள்ளது [பார்க்க. குணாவின் திராவிடத்தால் வீழ்ந்தோம்] எப்போது உண்மையிலேயே தமிழின அரசியல் அதிகாரம் நோக்கி நெருங்குகிறதோ அப்போதே ஈ.வே.ராவும் அவர்களால் தூக்கி வீசப்படுவார் என்பதற்கான சான்று அது.

ஈ.வே.ராவை முன்னிறுத்த இன்று நடக்கும் எல்லா முயற்சிகளுக்கும் பின்னால் அரசியல் நோக்கமே உள்ளது என்பது என் புரிதல். உயர்சாதியிலிருந்தும் [எஸ்.வி.ராஜதுரை,வ கீதா,ஆ.இரா. வேங்கடாசலபதி,.ராஜன் குறை ] பிற்படுத்தப்பட்ட சாதியிலிருந்தும்[அ.மார்க்ஸ், எம். எஸ். எஸ். பாண்டியன் ]செய்யப் படும் இம்முயற்சிகள் உருவாகி வரும் தலித் எழுச்சி கண்டு அஞ்சி செய்யப் படுபவை. பிராமணர்களைப் பொது எதிரியாகக் காட்டித் தங்கள் மீதான தலித்துக்களின் அதிருப்தியை சமாளிக்கும் நோக்கம் கொண்டவை. தலித்துக்களைத் தங்கள் தலைமையின் கீழ் சேர்க்கும் பொருட்டு ஈ.வே.ராவைப் பொதுவான தத்துவ வழிகாட்டியாக சித்தரிக்க முயல்பவை.

கிட்டத்தட்ட ஒரே கால கட்டத்தில் ஈ.வே.ரா அவசர அவசரமாக ‘மறுகண்டுபிடிப்பு ‘ செய்யப் பட்டிருப்பது தற்செயலல்ல. ஈ.வே.ராவைத் தத்துவ அறிஞராகச் சொல்லும் போது ஏன் பெரும்பாலானவர்களுக்குச் சிரிப்பு வரவில்லை என்றால் நாம் செத்துப்போன அனைவரையுமே அமரர் ஆகக் காண்பவர்கள் என்பதனால் தான். ஈ.வே.ரா சிலைக்குப்  பிறந்த நாளுக்கு மாலை போட்டு சுண்டல் வினியோகித்து வழி படுகிறார்கள் தமிழர்கள். அதைப் போன்ற ஒரு வழிபாடு தான் இதுவும், வேறெதுவும் அல்ல

தமிழ்ச் சூழலில் ஈ.வே.ரா உருவாக்கிய அறிவார்ந்த வெளிறலை பற்றி ஏராளமாகச் சொல்லலாம். தர்க்க பூர்வ விவாதத்தில் கோபம் எழுவது இயல்புதான். தர்க்கமே இல்லாமல் எளிய ஒற்றை வரியைத் தன் தரப்பாக முன்வைப்பது, அதற்கு எதிராகச் சொல்லப் படும் தர்க்கங்களைக் கூட எளிய ஒற்றை வரியாக மாற்றிக் கொள்வது எனும் போக்கு ஈ.வே.ராவில் இருந்து தமிழ் சூழலில் பரவிய ஒன்று.

இரண்டாவது விஷயம், எல்லா அறிவார்ந்த விஷயங்களையும், பாமரத்தனமாகக் குறுக்கி எளிய ஒற்றை வரிகளாக மாற்றிகொள்வது. பேசும் விஷயம் குறித்து அடிப்படை ஆய்வு கூடச் செய்யாமலிருப்பது. இப்போக்கு தமிழில் எதையுமே வசையாக மட்டுமே முன் வைக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி விட்டது. மாற்றுத் தரப்பை எளிமைப் படுத்துவது போன்று அறிவார்ந்த விவாதத்துக்குத் தீங்கு செய்வது பிறிதில்லை. விவாதத்தை நடத்தவே முடியாது போகும். முடிவில்லாமல் ‘‘ஐயா, நான் சொல்ல வந்தது அதல்ல”  என்று மாற்றுத் தரப்பினர் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

உதாரணமாகப் பெரியாரியர்களின் சங்கர மட எதிர்ப்பையே எடுத்துக் கொள்வோம். அந்த மரபார்ந்த சாதியமைப்பின் மீதுள்ள விமரிசனத்தை அப்படியே அவர்கள் அத்வைதம் மீதான விமரிசனமாக ஆக்கி விடுவார்கள். அத்வைதம் ஒரு சாதிய சித்தாந்தம், அதைக் கற்பித்த சங்கரர் சாதியை நம்பினார் என்பதனால் –என் று சொல்வது இன்றைய பெரியாரிய நோக்கு. ஆகவே அது புதைந்து போகவிடுவதே மேல்! பிளேட்டோ முதல் ஹெகல் வரையிலான மேற்கத்திய சிந்தனையாளார்கள் அடிமை முறையில் நம்பிக்கை கொண்டவர்கள். அத்தனை பேரையுமே குழி தோண்டிப் புதைத்து விட்டார்களா? இந்திய மறுமலர்ச்சிக்கால சீர்திருத்தவாதிகளில பலர் அத்வைதிகள். விவேகானந்தர் போன்ற சூத்திரர்கள், நாராயண குரு, அய்யா வைகுண்டர் போன்ற தீண்டப் படாத சாதியினர் ….. தலித்துக்களில் மீட்பின் முதல் செய்தியை கொண்டு சென்ற சுவாமி ஆத்மானந்தா, தலித் துறவியான சுவாமி சகஜானந்தா போல [150 பேரை நான் பட்டியலிட முடியும்] இவர்களெல்லாம் அத்வைதிகளே. இது எப்படி?

சங்கரர் குறித்துப் பல வகையான ஐயங்கள் இது வரை பதிவு செய்யப் பட்டுள்ளன. பிரம்ம சூத்திர பாஷ்யம் எழுதிய சங்கரரும், கேரள ஜாதியமைப்பின் இலக்கண கர்த்தா என்று அடையாளம் காட்டப் படும் சங்கரரும், இந்திய சங்கர மடங்களை நிறுவிய சங்கரரும் ஒருவரல்ல என்று ஆய்வாளர்களால் கூறப் படுகிறது. பல ஐதிகங்கள் அவர் பெயரின் வலிமையைப் பயன் படுத்தி கொள்ளும் பொருட்டு உருவாக்கப் பட்டவை. பல நூல்கள் அவர் பெயரில் பிறகு எழுதி சேர்க்கப்பட்டவை.  நித்ய சைதன்ய யதி போன்றவர்கள் செளந்தர்ய லஹரிக்கும், பிற நூல்களுக்கும் இடையே மொழி அமைப்பில் பெரிய கால வேறு பாடு உள்ளது என்று சொல்லியிருக்கிறார்கள். 18 ஆம் நூற்றாண்டில் கூட சங்கரர் பேரில் நூல்கள் எழுதப் பட்டுள்ளன.

இப்படிப் பட்ட ஒரு விஷயத்தில் கருத்துக்களை உருவாக்கிக் கொள்வது மிக சிக்கலான விஷயம். ஆனால் இதோ எளிதாக ஒற்றை வரியை உருவாக்கியாகி விட்டது.  ஆகவே சங்கரரைப் படிக்க வேண்டிய அவசியமே இல்லை. புதைத்துக் கையைக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான் மீதி. ஆனால் அம்பேத்கார் அத்வைதத்தைப் படித்தார். ஈ.எம். எஸ் படித்தார். அயோத்தி தாசர் படித்தார். இது தான் ஈ.வே.ரா உருவாக்கிய மனோ பாவத்தின் சரியான உதாரணம்.

சங்கரரில் இந்தியப் பெளதிக வாத மரபின் மிகச் சாரமான பகுதி உள்ளடங்கியுள்ளது. அத்வைதத்தின் எதிர்முனை பிற்கால பெளத்த சிந்தனை. பெளத்த சிந்தனை நியாய மரபின் அடிப்படையிலானது. அவ்விவாதத்தினூடாக அத்வைதம் நியாய மரபின் தருக்கக் கட்டுமானத்தை அப்படியே தானும் சுவீகரித்து கொண்டிருக்கிறது. அதே போலத் தூய தருக்கத்தை முன்னிறுத்தும் பெளதிகவாத சிந்தனையான நியாயத்தில் முதல் கட்ட வேதாந்த மரபின் அடிப்படைகள் சில உள்ளடங்கியுள்ளன. சிந்தனையை அதன் விவாத வடிவில் மட்டுமே பயில, மீட்க, தக்க வைக்க முடியும். மார்க்ஸையும் -ஹெகலையும்,  கிராம்ஷியையும் -குரோச்சேவையும் சேர்த்தே பயில முடியும். மிக எளிமையாக சொல்லப் போனால் பக்தி, சடங்கு ஆகியவற்றுக்கு எதிராக தூய அறிவை முன் வைக்கிறது அத்வைதம். அதனாலேயே அது இந்திய மறு மலர்ச்சிக் கால சீர்திருத்தவாதிகளுக்கு முக்கியமான கருவியாகியது. அத்வைதத்தின் வழியாக, நியாய மரபே அப்பங்களிப்பை நடத்தியது என்றும் சொல்லலாம் .

அத்வைதத்தின் எதிர் முனையாகவே இங்கு மார்க்ஸியம் செயல் பட முடியும் என்றே ஈ.எம்.எஸ் சொல்கிறார். அத்வைதத்தை வசதியாக புறக்கணித்து விடலாம். ஆனால் நம் சமூகத்தின் அடிப்படை சிந்தனையில் [மொழியில்] அது வலுவாக உட்கார்ந்திருக்கும் வரை அதை விவாதித்து வென்றடக்கியே ஆகவேண்டும். நமது பழமொழிகளில் கணிசமானவை அத்வைதச் சார்பு கொண்டவை. நமது பக்திப் பாடல்கள் அத்வைத உள்ளடக்கம் உடையவை. ஒரு சிந்தனை காலப் போக்கில் மொழியில் கலந்து விடுகிறது. பிறகு அதன் பாதிப்பு பெரிதும் நனவிலி சார்ந்தது.  ஆக அத்வைதம் அல்லது சங்கரர் போன்ற ஒரு வரலாற்று நிகழ்வை அணுகுவதற்கு மிக நுட்பமான பகுப்பாய்வு நோக்கு தேவை. மிக விரிவான வரலாற்று அணுகுமுறை தேவை. ஆனால் ஈ.வே.ரா செய்வது அவருக்குத் தெரிந்த சில்லறைத் தகவல்களை வைத்துக் கொண்டு ஆங்காரத்துடன், வன்மத்துடன் மண்டையில் ஓங்கிப் போடுவது மட்டுமே. அது சிந்தனைத் தளத்தில் மிக, மிக ஆபத்தான போக்குகளையே உருவாக்கும். அதன் விளைவே இன்றைய தமிழ்ச் சூழலின் தேக்க நிலை.

அம்பேத்கார் போன்றவர்கள் உருவாக்கியது ஒரு விவாதக்களத்தை. அடிப்படை தருக்கக் கட்டுமானமும் சுயமான ஆய்வுகளும் கொண்டது அது. முரண்படவும் விரிவு படுத்திக் கொள்ளவும் அதில் இடமுண்டு. ஈ.வே.ரா உருவாக்கியது மூர்க்கமான ஒரு வசைப் பாடல் பாணியை மட்டுமே. என்ன தான் சிறப்பான நோக்கங்கள் இருப்பினும் அது நேர் எதிரான விளைவுகளையே தான் உருவாக்கும். ஈ.வே.ராவின் பங்களிப்பு அற்பமானதல்ல என்றே நான் கருதுகிறேன். இறந்த காலத்தின் கைதிகளாக வாழும் பெரும் மக்கள் திரள் உடைய பகுதி தமிழகம். நவீன விஞ்ஞானத் தொழில் நுட்ப, நுகர்வோர் கால கட்டத்துக்கு [முதலாளித்துவ கால கட்டத்துக்கு என கலைச் சொல்லாகக் கூறலாம்] நகர்வதற்கான கருத்தியல் ஆயுதங்கள் சிலவற்றை அவர்களுக்கு உருவாக்கித் தந்த சக்தி மிக்க சமூக சீர்திருத்தவாதி அவர். அவரை நவீனத்துவத்தின் பிரச்சாரகர் என்று சொல்லலாம் . அவரது நோக்கங்களோ,அவரது தனிப் பட்ட மனிதாபிமான நோக்கோ ஐயத்துக்கு உரியவை அல்ல. அவர் ஒரு முக்கியமான வரலாற்று நாயகர் என்றே நான் கருதுகிறேன். ஈ.வே.ரா மூலம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மாற்றம் கண்டிப்பாக உருவாகியுமுள்ளது. ஆனால் எது மூட நம்பிக்கை, எது மரபான குறியீட்டுச் செயல்பாடு என்றெல்லாம் தெரியாத ஒட்டு மொத்த மட்டையடி பகுத்தறிவையும், கலாச்சாரம் சார்ந்த ஒரு வகை மூடநம்பிக்கையாகவே மாற்றிவிட்டது.

பெரியாரியர்களின் மனம் எப்படி செயல் படும் என்பதை இக்கட்டுரையில் நான் எழுதியதை என்னை ஒரு பிராமணிய வெறியனாக முத்திரை குத்திய பிறகே அவர்களால் மேற் கொண்டு விவாதிக்க முடியும் என்ற யதார்த்ததை வைத்தே புரிந்து கொள்ளலாம்.  விவாதங்களை மறுக்கும்,முத்திரை குத்தி வசைபாடும், வெறுப்பை உமிழ்வதையே கருத்துப்போராக எண்ணும் இந்த மூர்க்கம் ஈ.வே.ரா உருவாக்கியது தான்.

 

நான் என் குரு மரபாகக் கொண்டுள்ள நாராயண குருவின் குருகுலம் என்பது இந்திய ஞான மரபை வேதங்களையும், வேத விரோத ஞான நூல்களையும் எல்லாம் ஒருங்கிணைத்து ஒரு மாபெரும் விவாதக் களனாகக் காணும் போக்கு கொண்டது. அடிப்படையிலேயே பிராமண எதிர்ப்புக் கொண்ட ஓர் அறிவியக்கம் அது. அடிப்படையில் எனக்கு அவைதீக மரபுகள் மீது, குறிப்பாக பெளத்தம் மீது மட்டுமே ஓரளவாவது சார்பு நிலை உள்ளது. தமிழில் கடந்த 15 வருடங்களில் என்னளவுக்கு வைதிக மரபை ஆக்க பூர்வமாக விமரிசித்த, அவைதீக மரபைத் தீவிரமாக முன் வைத்த இன்னொரு படைப்பாளி இல்லை. தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுக்கவே சனாதன, புரோகித மரபிற்கு மாற்றான அசலான சிந்தனைப் போக்குகள் உருவாக்கப்பட, மறு கண்டுபிடிப்பு செய்யப்பட வேண்டுமென நான் எண்ணுகிறேன்.

அத்தகைய அவைதீக மரபு வெகு காலம் இந்தியாவில் வலுவாக இருந்துள்ளது. இந்தியாவின் தத்துவ வெற்றிகளுக்கு முக்கியமான காரணமாக அமைந்தது ,அது உருவாக்கிய விவாத சாத்தியம்தான். [நான் வேத விரோதி என்று என்னை சொல்லிக் கொள்வேன். ஆகவே இங்கு வேத மரபும் இருந்தாகவேண்டும் — டி ஆர் நாகராஜ்] நான் அதைக் கற்று ஆராய்ந்து முன் செல்லவே விரும்புவேன். மாறாக நான் பெரியாரை ஏற்றால் சங்க இலக்கியத்தை, பதஞ்சலி யோக சூத்திரத்தை, திருக்குறளை, நியாய சூத்திரங்களை எல்லாம் முழுமையாக நிராகரிக்க வேண்டியிருக்கும். வேதங்களை கீதையை, கம்பராமாயணத்தை, பாரதியை, அரவிந்தரை, கொளுத்த வேண்டியிருக்கும். பிறகு எனக்கு மிஞ்சுவது ஐரோப்பிய அறிவொளிக் காலத்தின் தூறல்களான சில அரைத் தத்துவவாதிகள் மட்டுமே. மூளை சூம்பிப் போன ஆசாமிகள் அதை மட்டும் ஏற்றுக் கொண்டு வாழ்வதில் எனக்கு பிரச்சினை இல்லை. அது எனக்கு ஒவ்வாது. என் சவாலே வேறு என்று தான் சொல்கிறேன். அந்த முரட்டு மட்டையடி தமிழ்க்கலாச்சாரத்தில் செல்லாக் காசு என நிரூபணமாகி விட்டது என்று தான் சொல்கிறேன்.

தமிழகத்தைப் பொறுத்த வரை இங்குள்ள மதம், மொழி அனைத்திலும் சனாதன மரபின் பாதிப்பு அதிகம். தமிழகத்தின் மூல மரபுகள் பல ஒடுக்கப் பட்டுள்ளன. அவற்றை மீட்டெடுப்பதும் நிலை நாட்டுவதும் ஒரு பெரும் கலாச்சாரப் பணி. அது ஒருபோதும் எதிர்மறையான செயல்பாடுகள் மூலம் உருவாகாது. தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும், அயோத்தி தாச பண்டிதரும் [நாராயணகுருவும், நடராஜ குருவும்] ஆற்றிய ஆக்க பூர்வமான பணிகளே, எனக்கு உத்வேகம் ஊட்டுபவைகளாக உள்ளன. கலை இலக்கியங்களைப் புறக்கணிக்கும், கொச்சையாக மதிப்பிட்டு இழிவுபடுத்தும் மனநிலை அப்பணிக்கு நேர் எதிரான ஒன்று. ஏனெனில் கலை இலக்கிய மரபுகளில் இருந்தே நம் சாராம்சமான கலாச்சார அம்சங்கள், குறிப்பாக தமிழ் கலாச்சாரக் கூறுகள் கண்டடையப் பட முடியும்.

ஓர் உதாரணம் சொல்லலாம். இப்போது என் முன் கணிப்பொறி அருகே நான் படித்துக் கொண்டிருக்கும் இரு முக்கிய ஆய்வாளர்களின் ஆய்வுகள் உள்ளன. தஞ்சை ஆபிரகாம் பண்டிதரின் இசை ஆய்வு [வட்டப்பாலை குறித்தது] குமரிமைந்தன் பண்டைத்தமிழ் கால, நில அமைப்பு குறித்து எழுதிய ஆய்வு . இரண்டுமே சோதிடத்தை, குறிப்பாக ராசி சக்கரத்தை முக்கியமான கருவியாகப் பயன்படுத்துபவை.  பழந்தமிழரின் அறிதல் முறையை ஆய்வு செய்ய மிக முக்கியமான ஒரு தளம் சோதிடம். அது குறித்து இன்னும் நமக்கு முழுக்கத் தெரியாத நிலையில் உடனடி முன் முடிவுகளுக்கு வருவதை பொறுப்பான ஆய்வாளர் தவிர்க்கிறார்கள் .

இன்று சோதிடத்துக்குப் பயன்படுத்தப்படும் ராசி சக்கரம் என்ற அமைப்பு முன்பு தமிழரின் கணித முறையாக இருந்தது என்கிறார் குமரி மைந்தனும், அவரது நண்பரும் ஆய்வாளருமான வெள்ளுவனும். குமரிமைந்தன் ஈ.வே.ரா மீது பிடிப்புள்ளவர் என்றபோதிலும் தமிழ்நாட்டு சோதிட ஆய்வு முறைகளை மூட நம்பிக்கை என எள்ளி நிராகரிக்கக் கூடாது என்கிறார். தமிழக ஆலயங்களின் சடங்குகளை மாற்றக் கூடாது என்கிறார். பண்டைத் தமிழரின் காலக் கணிதமும், வானியலும் அவற்றில் உறைகின்றன என்பது அவரது கூற்று. ஈ.வே.ரா உருவாக்கும் மனோபாவம் இந்த மரபான அறிவுகளை முழுக்கத் துடைப்பத்தால் அள்ளி குப்பையில் போடத் தானே நமக்கு கற்பிக்கிறது?

இன்று நாம் சிந்தனைக்கும், கலாச்சாரத்துக்கும் எதிரான ஈ.வே.ராவின் மூர்க்கமான எதிர்மறைப் போக்குகளை தவிர்த்து விட்டு படைப்பூக்கத்துடன் முன்னகர வேண்டிய அவசியம் தான் உள்ளது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard