திருமணம் என்ற தேவையில்லாத நிகழ்ச்சி!

இன்றைய தினம் பழைமையின் கல்யாண முறைகள் மாற்றப்பட்டு புதிய முறையில் வாழ்க்கை ஒப்பந்தங்கள் ஏற்படுத்தியதற்குக் காரணமே பெண் அடிமையினை ஒழிக்கவும், மூட நம்பிக்கைகளை ஒழிக்கவுமேயாகும்.

பழைய முறையில் மனித சமுதாயத்தில் சரி பகுதி எண்ணிக்கை உடைய பெண்கள் சமுதாயம் ஆணுக்கு அடிமையாக இருக்க வழி வகைகளை செய்யக் கூடியதாகவே இருந்தது.

பழைய முறைகளுக்கு நூல்களோ, சாத்திரங்களோ பெண்களை ஒரு உயிருள்ள ஜீவன் என்றுகூட கருதி நடத்தவில்லை.

இத்தகைய முறைகள் மூலம் பெண் அடிமை நீக்கப்படுகின்றது. பெண்கள் ஆணுக்கு அடிமை அல்ல, இருவரும் சமமான அந்தஸ்து உடையவர்களே என்பது நிலைநாட்டப்படுகின்றது.

அடுத்து முட்டாள்தனங்கள்; அர்த்தமற்ற சடங்குகள் ஒழிக்கப்பட்டு அறிவுக்குப் பொருத்தமான சங்கதிகளே மேற்கொள்ளப்படுகின்றன.

மனிதன் திருமணம் ஆன பிறகு தமது பெண்டாட்டி பிள்ளைகளுக்கு மட்டும்தான் தமது தொண்டு உழைப்பு என்று கருதுகிறார்களே ஒழிய மனிதனாகப் பிறந்தவன் மனித சமுதாயத்திற்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதை விட்டு விடுகின்றார்கள்.

எப்படி மனிதன் மனிதனை அடிமை கொள்வதை, தவறு சட்டப்படி குற்றமான காரியம் என்று ஆக்கி இருக்கின்றோமோ அதுபோல மனிதன் பெண்களைத் திருமணம் என்ற பெயரால் அடிமையாக்கிக் கொள்வதை சட்டப்படியான குற்றம் என்று செய்ய வேண்டும்.

நாங்கள் கூறுவது பலருக்கும் பிடிக்காது. கடவுள், மதம் பற்றி நாங்கள் கண்டிப்பது கண்டு ஆத்திரமும், வேதனையும் படுகின்றார்களே- அதுபோலத்தான் இதுவும்!

----------------------------15.4.1973 அன்று வேலூரில் நடைபெற்ற திருமண விழாவில், தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு (விடுதலை, 2.5.1973)

*********************************************************************************

திருமணம் என்கின்ற நிகழ்ச்சி ஒரு தேவை இல்லாத நிகழ்ச்சியாகும். ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுத்தும் நிகழ்ச்சியாகும்.

இந்த நிகழ்ச்சியானது முன்பு  பார்ப்பனர்களுக்குத்தான் தேவைப்பட்டது, நமக்கல்ல. பார்ப்பனர்கள் இந்த நாட்டுக்கு வரும்போது பெண்களைக் கூட்டிக் கொண்டு வரவில்லை. அவர்கள் தங்களுக்கு இந்த நாட்டுப் பெண்களையே மனைவியாக்கிக் கொள்ள முற்பட்டார்கள். நம் நாட்டுப் பெண்கள் அவர்கள் இஷ்டப்படி அடங்கி நடக்கவில்லை. அதன் காரணமாக நம் பெண்களை அடக்கி ஆள அடிமைப்படுத்த ஏற்படுத்திய முறைதான் விவாகம், பாணிக் கிரகணம், கல்யாணம் முதலியனவாகும்.

எதைக் கொண்டு சொல்லுகின்றேன் என்றால், தமிழர்களால் பெரிதும் பாராட்டப்படுகின்றதும், மிகவும் பழைமையானதும் ஆன தொல்காப்பியத்தைப் பார்த்தே கூறுகின்றேன்.

பார்ப்பனர்கள் நம் பெண்களைத் தங்கள் இஷ்டப்படி அடக்கியாளவே காரணங்களை ஏற்படுத்தினர். பொய்யும், கழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப என்று நாட்டில் தங்கள் இஷ்டப்படி கட்டுப்பட்டு நடப்பதற்காக காரணங்களை ஏற்படுத்தினார்கள் என்பது.

நம் புலவர்கள் அய்யர் என்பது பார்ப்பனர்களைக் குறிக்காது. அறிவால் மேற்பட்ட பெரியோர்கள் என்று முட்டாள்தனமாக வியாக்கியானம் பண்ணுவார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கும் கூறுவேன், தொல்காப்பியர் அவர்கள் அடுத்த சூத்திரத்திலேயே கூறுகின்றார்.

திருமண முறை என்பது மேல் ஜாதிக்காரராகிய பார்ப்பன, சத்திரிய, வைசியர்களாகிய மூன்று பிரிவினர்களுக்கும்தான் இருந்தது. பிறகு பிற்காலத்தில் கீழ் ஜாதிக்காரர்களுக்கும் அது புகுத்தப்பட்டது என்று.

`மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்காகிய காலமும் உண்டே

என்று பட்டாங்கமாகக் கூறி இருக்கின்றாரே!

எனவே, பெண்களை அடிமைப்படுத்தும் நோக்கத்தில்தான் திருமண முறை பார்ப்பனர்களால் ஏற்படுத்தப்பட்டது.

நம் முன்னோர்களோ, புராணிகர்களோ, புலவர்களோ எவருமே பெண்களை ஒரு மனித ஜீவன் என்று கருதி கருத்தினை வெளியிடவே இல்லை.

அனைவராலும் பாராட்டப்படுகின்ற வள்ளுவன்கூட பெண்களைப்பற்றி மிகக் கொடுமையாகத்தானே பாடி இருக்கின்றான்.

பெண்களுக்குச் சுதந்திர வாழ்வு வேண்டும், ஆண்களுக்கு அடிமை என் கின்ற நிலை மாறவேண்டும் என்பதற்காகத் தோற்றுவிக்கப்படுவதுதான் இப்படிப் பட்ட மாறுதல் திருமணமாகும்.

பெற்றோர்கள் தங்கள் பெண்களை 22 வயது வரைக்கும் நன்றாகப் படிக்க வைக்கவேண்டும். அவசரப்பட்டு சிறு வயதிலே திருமணம் செய்துவிடக் கூடாது. படித்து முடித்து ஒரு தொழிலுக்குச் சென்ற பிறகே திருமணம் பற்றிப் பேச வேண்டும். அதுவும் திருமணச் சங்கதியைப் பெண்ணின் இஷ்டத்திற்கு விட்டுவிட வேண்டும். அவர்களாக தங்களுக்கு ஏற்றவரைத் தெரிந்து எடுத்துக் கொள்வார்கள்.

------------------------------

28.4.1973 அன்று திருச்சி மக்கள் மன்றத்தில் நடைபெற்ற திருமண விழாவில், தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு  (`விடுதலை, 9.5.1973).

http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/24340-2013-07-05-02-35-26