New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க காலத் தமிழர்களும், கள்ளும்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
சங்க காலத் தமிழர்களும், கள்ளும்
Permalink  
 


சங்க காலத் தமிழர்களும், கள்ளும் எழுத்தாளர்: மூலிகை மணி

பழந்தமிழ் மக்களிடையே மது, கள் அருந்தும் பழக்கம் தனிச் சிறப்புடன் விளங்கியது. அரசன் முதல் புலவர்கள், சான்றோர்கள். குடிமக்கள் வரை ஆண், பெண் அனைவரும் களிப்புடன் கள்ளைப் பருகி மகிழ்ந்த செய்திகளைப் பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூல்களில் காணலாம். போதைக்காகவும், மன மகிழ்ச்சிக்காகவும் உடல் வெம்மைக்காகவும் பழந்தமிழர் பயன்படுத்திய ‘மது’, ‘கள்’ ஆகியன பற்றிய குறிப்புகளை இந்நூல்கள் விரிவாகக் குறிக்கின்றன. உள்நாட்டு மது வகைகளுடன் அயலக மது வகைகளும் பயன்படுத்தப்பட்டன. ‘யவன மது’வை மிக விருப்புடன் மகளிர் அருந்திய செய்தியைப் புறநானூறு குறிப்பிடுகின்றது. மட்டு, மது, நறவு, தேறல், கள் எனப் பல்வகைப் பெயர் பெற்று விளங்கும் குடிவகைகள் தேன், நெல்லரிசி, பழங்கள், பூவகைகள், தென்னை. பனை போன்ற மரங்களிலிருந்து இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டன.

--------------------

தேக்கள் தேறல்

தேனை மூங்கில் குழாய்களில் பெய்து அதனை முதிர்விப்பார்கள். நாட்பட நாட்பட இத்தேனின் சுவை அதிகமாகும். இவ்வாறு பதனப்படுத்திச் சுவையேற்றிய மதுவே தேக்கள் தேறல் எனப்படும். குறவர்கள் இத்தகு ‘தேக்கள் தேறலை’ப் பருகிக் குறிஞ்சிக் கடவுளான முருகனைப் பாடி ஆடுவார்களாம். தேனினை மூங்கில் குழாயில் ஊறல் முறைப்படி முற்ற வைக்கும் இத்’தேக்கள் தேறலை’ப் பற்றிய குறிப்புகள் திருமுருகாற்றுப் படை, மலைபடுகடாம், அகநானூறு ஆகிய நூல்களில் காணப் பெறுகின்றன.

------------------

தோப்பிகள்

வீடுகளிலேயே தயாரிக்கப்பட்ட கள்ளிற்குத் ‘தோப்பிகள்’ என்று பெயர்.

இல்லடு கள்ளின் தோப்பி பருகி

தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்

‘தோப்பின நெல்’ என்றொரு நெல் வகையுண்டு. தற்காலத்தும் மதுரை மாவட்டத்தில் ‘தொப்பி’ என்று இது அழைக்கப்படுகின்றது. இந்தத் தொப்பி என்ற அரிசியைக் கொண்டு வீடுகளில் தயாரிக்கப்பட்டகள், ‘தோப்பிகள்’ எனப் பெயர் பெற்றிருக்க கூடும் என்று கருதுவார் டாக்டர் மா.இராசமாணிக்கனார். பன முதலிய மரங்களிலிருந்து மாறுபட்டது இந்தத் தோப்பிகள் என்பதை ‘இல்லடுகள்’ என்ற தொடர் புலப்படுத்துகிறது.

------------------

நறும்பிழி (நெல்லரிசிகள்)

தொண்டை நாட்டில் வாழ்ந்த ‘வலையர்’ என்பார் தயாரிக்கும் கள் ‘நறும்பிழி’ எனப்பட்டது. குற்றாத கொழியில் அரிசியைக் களி போல் துழாவிக் கூழாக்குவார்கள். பின் அதனை ஆறச் செய்ய, வாயகன்ற தாம்பாளம் போன்ற தட்டுப் பிழாவில் ஊற்றி ஆற்றுவர். நெல் முனையை இடித்து அக்கூழிற் கலப்பர்; கலந்த இக்கூழினை இரண்டு நாட்கள் சாடியில் ஊற்றி வைப்பர். நன்கு ஊறிய பின்பு விரலாலே அரிப்பர். இவ்வாறு அரிக்கப்படும் கள் மிகுந்த சுவையினை உடையதாக இருக்கும். நறும்பிழி எனப்படும் இக்கள்ளினை வலையர்கள் உண்டு மகிழ்ந்தனர் என்னும் செய்தியினைப் பெரும்பாணாற்றுப் படையில் காணலாம்.

----------------

பெண்ணைப் பிழி (பனங்கள்)

காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த பரதவர்கள் பனங்கள்ளைப் பருகிய செய்தி பட்டினப்பாலையில் குறிக்கப்பட்டுள்ளது.

--------------------

நறவு

நன்னனது மலைநாட்டில் வாழும் மக்கள் நடத்தும் விருந்தில் தேக்கள் தேறலையும், நறவு எனப்படும் கள்ளினையும் பரிமாறி உண்டதாகத் தெரிகிறது. ‘நறவு’ என்பது நெல்லரிசி கொண்டு அமைக்கப்பட்ட ‘கள்’ ஆகும்.

------------------------

பூக்கமழ் தேறல்

செல்வந்தர்களின் மாளிகைகளிலும் அரண்மனைகளிலும் இவ்வகை மது பருகப்பட்டது. பொற்கலசங்களில், தேக்கள் தேறல் போன்றவற்றில் இஞ்சி, குங்குமப்பூ போன்ற மணங்கமழும் பூக்களை இட்டுத் தயாரிக்கப்படுவதே ‘பூக்கமழ் தேறல்’ ஆகும். அரசர்கள் இத்தகு தேறலை உண்டு வாழ்ந்த வரலாற்றை மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில் குறிப்பிடுகிறார்.

-----------------

கட்சுவையும் – பழச்சுவையும்

படைவீரர்கள் கள்ளை விரும்பிக் குடிப்பதால் நாவில் ஏற்படும் புளிப்பு வேட்கைக்குக் களாப்பழமும், துடரிப்பழமும் உண்டனர். அப்படியும் நீர் வேட்கை தணியாமையால், கருநாவல் பழத்தைப் பறித்து உண்டனர். கள் உண்டதால் ஏற்பட்ட நீர் வேட்கையைக் களாப்பழமும், துடரிப்பழமும். கருநாவற் பழமும் தணிவித்ததுடன் உடலுக்கு உரமாகவும் இவை விளங்கின. படை வீரர்கட்கு அளப்பரிய வலிமையையும் இவை அளித்தன. களாப்பழம் உடம்பு வலியைப் போக்குவதுடன் மலையைப் போன்று உடலுக்கு வன்மையை அளிக்கும் குணம் உடையது. கருநாவற்பழம் கள் அருந்துதலால் ஏற்படும் உடல் வறட்சியைப் போக்கி உடலுக்கு உரமளிக்கும் தன்மையுடையது என்பதை மூலிகைக் குணபாடம் வழி அறியலாம். எனவே, கள்ளைப் பருகினாலும், அதன் தீமைகளிலிருந்து உடலைப் பாதுகாக்கும் வகையில் பழ வகைகளையும் அக்காலத்தில் உண்டனர். அதனால் கள் உடலுக்குத் தீமையை உண்டாக்கவில்லை.

--------------------

கண் சிவக்கும் கள்

வையை ஆற்றில் நீராடிய தலைவி உடலின் ஈரம் புலர வெப்பத்தைத் தரும் கள்ளைப் பருகினாள். கள் பருகுவதற்கு முன் நெய்தற் பூவைப் போன்ற கருமையாக இருந்த கண்கள் கள்ளைப் பருகியபின், நறவம் பூவைப் போல சிவந்தனவாம். அவ்வளவு வெப்பத்தினை அளிக்க வல்ல கள்ளைப் பருகி, நீராடிய களைப்பைப் போக்கி மகிழ்ந்தனர் அக்கால மகளிர் என்பதைப் பரிபாடல் உணர்த்தும்.

குளிரைப் போக்கும் கள்

தானைத் தலைவன் ஒருவன் போருக்குச் செல்லத் தயாராகின்றான். அப்போது நடுக்கத்தைத் தரும் குளிரிலிருந்து உடம்பைப் பாதுகாக்க நாறால் வடிக்கப்பட்ட ‘நறவு’ என்னும் கள்ளைப் பருகிச் செல்கின்றான். உண்டார்க்கு வெம்மையை அளிக்கும் குணம் நறவு கள்ளுக்குண்டு என்பதைப் புறுநானூற்றுப் பாடல் கருத்து குறிப்பிடுகிறது.

------------------

வழி நடை வலியைப் போக்கிய கள்

பரிசில் பெற வழிநடை சென்ற பாணர்களுக்கு ஏவல் மகளிர் பொன்னாற் செய்த வட்டில் நிறையக் கள்ளினை அளித்தனர். அக் கள்ளினைப் பாணர்கள் பருகி வழிநடையால் ஏற்பட்ட உடல் வலியைப் போக்கிக் கொண்டனர். போதைக்கு மட்டுமின்றி உடல் வலியைப் போக்குவதற்கும் அக்கால மக்கள் கள் பருகியமையை இச்செய்தி உணர்த்தும்.

இவ்வாறு பழந்தமிழர் பழக்கத்தில் நிலவிய பலவகை மதுவும், கள்ளும் போதைக்காகவும் உடல் நலத்துக்காகவும் பயன்படுத்தப்பட்டதை அறியலாம். இக்காலத்து, தென்னை, பனை, ஈந்து, அரிசி போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் மது, வயிறு, நுரையீரல் போன்ற உள் உறுப்புகளின் நோய்களுக்கு மருந்தாவதை நோக்கும்போது சங்க காலத்துத் தயாரிக்கப்பட்ட இவ்வகை மதுவும், கள்ளும், உடல்நலத்தைக் கெடுக்கவில்லை என்பதையும், மாறாக இவை குளிர்காலங்களில் உடலுக்கு வெம்மையைத் தந்து, வழிநடையின் பொது வலியைப் போக்கிக் களைப்பையும், நீர் வேட்கையையும் தணித்து உடலுக்கு உரம் அளித்த திறத்தினையும் அறியலாம்.

மதுவையும் கள்ளையும் பயன்படுத்திய பழந்தமிழர் இவற்றுடன் களா, துடரி, கருநாவல், இஞ்சி, குங்கும்பூ, இலுப்பைப்பூ போன்ற மருத்துவக் குணமுடைய துணைப் பொருட்களையும் கலந்து உண்ட தால் உடல் வலிமை பெற்றனரேயன்றித், தீமை ஏதும் பெறவில்லை என்பதை அறியலாம். பழந்தமிழர் மதுப்பழக்கம் இக்கால மதுவினின்று முற்றிலும் வேறுபட்டது. இயற்கைப் பொருட்களி லிருந்து அவை தயாரிக்கப்பட்டதால் உடலுக்கு நன்மை அளித்தன. அதனால் தான் ஔவை போன்ற பெண்பாற் சான்றோர்களும் அதனைப் பருகி மகிழ்ந்து போற்றினர். அவ்வகையில் பழந் தமிழரின் நலவாழ்வுக்கு உறுதுணையாகும் வகையில் அமைந்த நலம் தரும் பழக்கங்களில் தலைசிறந்த பழக்கமாக ‘மதுப் பழக்கம்’ இருந்தது. பிற்காலத்தில் சித்தர்கள் பட்டைச் சாராயம் என்னும் பெயரில் தயாரித்த மதுவுக்கும் சங்க கால ‘மது’, ‘கள்’ ஆகியவற்றுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. சங்க கால மதுவின் விரிவான வளர்ச்சியைச் சித்தர்களின் பட்டைச் சாராயத் தயாரிப்பில் காணலாம். அறிவியல் அடிப்படையில் இதனை ஆராய்ந்தால், சங்ககால மக்கள் பருகிய ‘நலம் தரும் நன் மது’வாகப் புதியதொரு மதுவை உருவாக்கலாம். அதன் மூலம் இக்கால ‘தீமை தரும் மது’வை ஒழிக்கலாம்.

---------------------

கருப்பஞ்சாறு

இக்காலத் தமிழக நகர்ப்புற வீதிகள் தோறும் கருப்பஞ்சாறு விற்பதையும் மக்கள் அதனை விரும்பி உண்பதையும் காண்கிறோம். சங்ககாலத்தும் இப்பழக்கம் இருந்ததைக் ‘கரும்பின் தீஞ்சாறு விரும்பினர் மிசைமின’ எனும் பெரும்பாணாற்றுப்படைக் குறிப்பின் வழி அறியலாம்.

---------------

பல்வகைப் பழங்கள் உண்ணும் பழக்கம்

இயற்கை அளித்த இனிய மருந்து ‘பழங்கள்’ என்றால் மிகையன்று. பழங்கள், உடல் வலிமைக்கும், அழகைப் பராமரிக்க உதவும் இயற்கை மருந்தாகும். பருவ நிலைகளுக்கேற்ப தோன்றும் பல்வகைப் பழங்கள் உண்பதால் இயற்கைச் சக்தி உடலில் குன்றாது காக்கப் பெறுவதுடன் பருவ நிலைக்கும் ஏற்ற உடல்நிலையைப் பெற்று நோயணுகாது வாழலாம். அறுசுவையளிக்கும் பழங்கள் இனிய உணவாகவும் இயற்கை மருந்தாகவும் பயன்படுகிறது. பழங்களை உண்ணும் பழக்கம் நல வாழ்வுக்குதவும் நற்பழக்கமாகும். சங்க கால மக்கள் மருத்துவக் குணமுடைய பல்வகைப் பழங்களை உண்ணும் பழக்கத்தினர். மா, பலா, வாழை, முந்திரி, நாரத்தை, நாவல், களா, துடரி போன்ற பழங்களை உண்டனர். தேமாங்கனி எனும் மாம்பழத்தை உண்பதால் பெருங்குடல் புற்று நோய், குடல் இறக்கம், குடல்வாய் அழற்சி போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுவதாக அண்மைக்கால ஆய்வுகள் கூறுகின்றன.

உடலுக்குக் காரச் சக்தியைத் தருவதில் வாழை நிகரற்றது. நீண்ட வாழ்நாளைத் தரும் தனிச் சிறப்புடையது நெல்லிக்கனி. நீர் வேட்கையைத் தீர்ப்பது நாவல். வயிற்றுக் கோளாறுகளை வராமல் தடுப்பது நாரத்தை. நரம்புகளுக்கு வலிமை தருவது முந்திரி, முக்கனிகளில் தனிச்சுவையுடைய பலாப் பழம் உடலுக்கு உரமளிக்கும் தன்மை கொண்ட தாகும். கள்ளின் மயக்கத்தைப் போக்க சங்கத் தமிழர் பலாப்பழத்தின் விதையை உண்டனர். உடலின் வலிமைக்கு மட்டுமின்றி ‘காப்பு மருந்தாகவும்’ விளாம்பழத்தை அக்காலத்தில் பயன்படுத்தினர். தயிர் கெடாமல் இருக்கவும் புளித்த நாற்றம் வீசாமல் இருக்கவும் தயிர்த் தாழியில் விளாம்பழத்தைப் போட்டனர். இவ்வாறு பழந்தமிழர் அன்றாட வாழ்வில் பழங்களைப் பயன்படுத்தி ஆரோக்கியத்தைப் பராமரித்தனர். 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

http://thalaivanankatamilan.blogspot.in/2010/06/blog-post_21.html

சங்ககாலத்தில் மது(கள்)

 
கள் உண்ணும் வழக்கம் இன்று நேற்று வந்ததல்ல. மனிதன் நாகரிக வளர்ச்சி எட்டாத காலத்திலே தொடங்கியிருக்க வேண்டும். என்று நெருப்பை பயண்படுத்த தொடங்கினானோ அன்றே கள் காய்ச்ச தொடங்கியிருக்க வேண்டும்.சங்க காலத்தில் அரசரும், மறவரும், புலவரும், கூத்தரும், பெண்டிரும், உழவரும் பான வகைகளில் கள்ளையே சிறந்த பானமாக உட்கொண்டனர். வெப்ப நாடாகிய தமிழகத்தில் காலை முதல் மாலை வரை உடல் வருந்தி உழைக்கும் உழவர்களுக்கு உடல் நோவை போக்கவும் நீர் வேட்கையை தணிக்கவும், குளிர்ச்சியுடையதாகவும் புளிப்பு சுவை உடையதாகவும் உள்ள கள் தயாரிக்கப்பட்டது.கள் என்பது அன்றைய வாழ்வியல் சூழலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பானமாக இருந்தது. அரசர், சான்றோர்கள் மற்றும் உயர்குடிப் போர்வீரர்கள் குழுமியிருந்த அவையில்கூடக் கள் தடை செய்யப்படவில்லை. 

 
 
 

கள் ‍ என்ற வார்த்தை களித்திருத்தல் (இன்பமாக இருத்தல்) என்ற சொல்லிருந்து வந்ததாகும். ‌கள் என்ற சொல் சங்க இலக்கியத்தில் வெறிநீர், பதநீர், மட்டு, தேன் ஆகிய நால்வகை பதங்களோடு குறிக்கப்படுகிறது. 
 
மதுவில் தென்னங்கள், பனைக்கள், அரிசிக்கள், தோப்பி, தேக்கள், பிழி ,மணங்கமழ் தேறல், பூக்கமழ் தேறல்,நறவு என பலவகைகள் உண்டு. நெல்லால் சமைத்த கள் நறவு எனவும்,  தேனால் சமைத்த கள் தேறல் எனவும்,  பூக்களால் தயாரிக்கப்பட்டு அத்துடன் குங்குமப் பூவையும் இட்டு தருகிற கள் தெளிவுக்கு பூக்கமழ் தேறல் எனவும் பெயர்.
கள் தயாரிக்கும் முறைகூட சில பாடல்களில் விளக்கப்படுகின்றன.
 
கூறு மிக்க அரிசி பனை மரத்தின் காய் இவற்றின் கூழ் 8 லிட்டர் ம‌ற்றும் 21.5 லி உளுந்தை ஊறவைத்த தண்ணீர் இவற்றின் கலவை மதுக்குழம்பு எனப்படும் (ஒரு தூணி உழுந்துக்கழுநீர், 1 கருடம் கூறு மிக்க அரிசி மற்றும் பெருங் குரும்பை)
 
ஒரு தூணி உழுந்துக்கழுநீர் - 21.5 லி உளுந்தை ஊறவைத்த தண்ணீர் 
பெருங் குரும்பை - பனை மரத்தில் காய்க்கும் பிஞ்சு காய் ‍நுங்குவின் முந்தைய நிலை 
1 கருடம் - 1 மரக்கால் -  8 படி - தோரயமாக 8 லிட்டர்
 
ஒர் ஆண்டு வரை ஊறல் வைக்கப்படும் மது வகைகள் தலையாயது என்றும், ஆறு மாதங்கள் வரை ஊறல் வைக்கப்படும் மது வகைகள் இடையாயது என்றும், ஒரு மாதம் ஊறல் வைக்கப்படும் மது வகைகள் கடையாயது என்றும் அழைக்கப்படும்.
 
தோப்பி 
ஒரு தூணி நீர்(21.5 லி) அரை மரக்கால்(4 ப‌டி) அரிசி மூன்று படி மதுக்குழம்பு இவற்றின் கலவை தோப்பி எனப்படும்.
 
தேறல் 
பன்னிரண்டு மரக்கால் மா ஐந்து படி மதுக்குழம்பு புத்திரகமரத்தின் பட்டை கனிகள் மணக்கூட்டு இவைகளின் கலவை தேறல் எனப்படும்.
 
பிழி 
ஒரு துலை விளம்பழம், ஐந்து துலை பாகு, ஒரு படி தேன் இவைகளுடைய கலவை பிழி எனப்படும். காற்கூறு மிக்கது தலையாயது. காற்கூறு குறைந்தது கடையாயது.
 
1 துலை - 1 துலாம் - 3.5 கி.கி.  
பாகு - செறிவாக் காய்ச்சிய சர்க்கரை
 
சாராயம் 
ஆடு திண்ணாப்பாளை திப்பிலி என்னும் இவற்றின் சாற்றைக் கொதிக்க வைத்து அதனோடு கருப்பஞ்சாறு வெல்லம் தேன்பாகு நாவற்பழச்சாறு பலாப்பழச்சாறு என்னும் இவற்றுள் ஒன்றைக் கலந்து ஒரு திங்கள் ஆறு திங்கள் அல்லது ஓர் யாண்டு வரை வைத்துப் பின் அதனோடு சிற்பிடம் வெள்ளரிப் பழம் கரும்பு மாம்பழம் நெல்லிக்கனி என்னுமிவற்றின் சாற்றிற் கலந்தேனும் கலவாமலேனும் அமைக்கப் படுவன சாராய வகைகளாம். 
 
நறும்பிழி
நெல்முளையைக் காயவைத்து  மாவாக்கி ,பிறகு அரிசியை கொதிக்க வைத்து அதனுடன் ஏற்கனவே அரைத்த மாவையும் கலந்து கூழாக்கி, அதை வாய் அகன்ற தாம்பளத்தில் இட்டு காய வைப்பார்கள். அதை குடத்தில் வைத்து இரு இரவும், இரு பகலும் தொடமல் வைக்க வேண்டும். இரு நாள் கழித்து எடுத்து உண்ணப்படும் கள்ளுக்கு நறும்பிழி எனப் பெயர். 
 
தேக்கள்
மூங்கில் அரிசியுடன் தேனைக் கலந்து கூழாக்கி, அந்த தெளிவை மூங்கில் குழாய்களில் அடைத்து வைத்து சிறிது நாள் கழித்து எடுத்து பருக வேண்டும். இதற்கு தேக்கள் தேறல் எனப் பெயர்.
 
சங்க காலப் பெண்பாற் புலவர் ஒளவையாரும் தகடூர் அரசன் அதியமானும் சேர்ந்தே மது அருந்தியுள்ளனர் (புறநானூறு பா. 235). மன்னன் அதியமான் ஒளவையாரின் புலால் நாற்றம் அடிக்கின்ற கூந்தலை நரந்தம்புல்லின் மணம் வீசும் தன் கையால் தடவிக் கொடுப்பதாக ஒரு குறிப்புள்ளது. 
 
புணர்ச்சியின் போது நுகரப்படும் கள் காம பானம் எனப்பட்டது, போருக்குச் செல்லுமுன் மறவ்ர்கள் அருந்தும் கள் வீரபானம் எனப்பட்டது. பூக்கமழ் தேறல், மணங்கமழ் தேறல் என்று கூறப்படும் இருவகை மதுபானமும் காமபானமாக உட்கொள்ளப்பட்டதாக இலக்கியங்களில் காணப்ப‌டுகின்றன. பெண்கள் புணர்ச்சியினபோது கள் அருந்தியதாக பட்டிணப்பாலை பாடல் ஒன்று இவ்வாறு கூறுகிறது.
 
"பட்டு நீக்கித்துகிலுடுத்தும் 
 மட்டு நீக்கி மதுமகிழ்ந்தும்” 
 
பெண்கள் புணர்ச்சி நேரத்தில் பட்டு ஆடகளை நீக்கி, நூலாடை அணிந்தும், மயக்கம் தராத கள்ளை உண்டு மகிழ்ந்தனர் எனப் பொருள். இங்கு "மட்டு" என்பது இனிய சுவை உடையது, மயக்கத்தை தராதது எனப் பொருள்படும்.
 
இதுகாரும்  கூறியவற்றை நோக்கின் நமது தமிழ் கலாச்சாரம் மது வகைகளுக்கு எதிரானதல்ல என்பதும், ஆரோக்கியமான மது வகை மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டது என்ப‌து நோக்க‌த‌க்க‌து.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard