New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அர்த்தமுள்ள இந்துமதம்– கவியரசு கண்ணதாசன்


Guru

Status: Offline
Posts: 9863
Date:
அர்த்தமுள்ள இந்துமதம்– கவியரசு கண்ணதாசன்
Permalink  
 


Hindu

 உறவு


`மனிதன், சமுக வாழ்க்கையை மேற்கொண்டுவிட்ட ஒரு மிருகம்’ என்றார் ஓர் ஆங்கில அறிஞர்.

காட்டு மிராண்டிகளாகச் சிதறிக் கிடந்த மனிதர்கள் குடிபெயர்ந்து ஊர்ந்து வந்து ஓரிடத்தில் சேர்ந்தார்கள். அதனால் அவர்கள் சேர்ந்து வாழ்ந்த இடம் `ஊர்’ என்று அழைக்கப்பட்டது.

அதில் பலர் நகர்ந்து வந்து பெருங்கூட்டமாக ஓரிடத்தில் குடியேறினார்கள். அவ்விடம் `நகரம்’ என்றழைக்கப்பட்டது.

தனி மனிதர்கள் `சமுக’மாகி விட்டார்கள்.

தனி மனிதனுக்கான நியதிகளோடு சமுதாயத்திற்காகச் சில சம்பிரதாயங்களும் உருவாயின.

அந்தச் சம்பிரதாயங்களுள் சில புனிதமாகக் கருதப்பட்டுத் தருமங்களாயின.

கணவன் மனைவி உறவு, தாய் தந்தை பிள்ளைகள் உறவு, தாயாதிகள் பங்காளிகள் உறவு, ஊர்ப்பொது நலத்துக்கான கூட்டுறவு முதலியவைகள் தோன்றின.

Kannadaதந்தைவழித் தோன்றல்களெல்லாம் `பங்காளி’களாகவும், தந்தையுடன் பிறந்த சகோதரிகளெல்லாம் `சம்பந்தி’களாகவும், தாய்வழித் தோன்றல்கள் `தாயாதி’களாகவும் ஒரு மரபு உருவாயிற்று.

வார்த்தைகளைக் கவனியுங்கள்.

தந்தைவழி பங்குடையவன் என்பதாலே `பங்காளி’யாகவும், தாயை ஆதியாக வைத்து விளைந்த சகோதரத்துவம் `தாயாதி’ என்றும் கூறப்பட்டது.

`சகோதரன்’ என்ற வார்த்தையே `சக உதரன்- ஒரே வயிற்றில் பிறந்தவன்’ என்பதைக் குறிக்கும்.

சம்பிரதாயங்களாகத் தோன்றிய உறவுகள் மரபுகளாகி, அந்த மரபுகள் எழுதாத சட்டங்களாகி விட்டன.

இந்த உறவுகளுக்குள்ளும், பொதுவாகச் சமு கத்திலும் நிலவ வேண்டிய ஒழுக்கங்கள் சம்பிரதாயங்களாகி, மரபுகளாகி, அவையும் சட்டங்களாகி விட்டன.

இந்தச் சட்டங்களே நமது சமுகத்தின் கவுரவங்கள்; இந்த வேலிகள் நம்மைக் காவல் செய்கின்றன.

இந்த உறவுகள், ஒழுக்கங்களுக்கும், நிம்மதிக்குமாக உருவாக்கப்பட்டவை.

ஆனால் இவை மட்டும்தானா உறவுகள்?

இந்து மதம் அதற்கொரு விளக்கம் சொல்கிறது.

“பிறப்பால் தொடரும் உறவுகளல்லாமல், பிணைப்பால் தொடரும் உறவுகளே உன்னதமானவை” என்பது இந்துமதத் தத்துவம்.

பிறப்பின் உறவுகளே பேதலிக்கின்றன.

பெற்ற தந்தையைப் பிச்சைக்கு அலையவிடும் மகன் இருக்கின்றான்.

கட்டிய தாரத்தையும் பட்டினி போடும் கணவன் இருக்கிறான்.

தாயைத் தவிக்கவிட்டுத் தாரத்தின் பிடியில் லயித்துக் கிடக்கும் பிள்ளை இருக்கிறான்.

கூடப் பிறந்தவனே கோர்ட்டுப் படிக்கட்டுகளில் ஏறி எதிராக நிற்கிறான்.

ச முக மரபுகள் இவற்றை ஒழுக்கக் கேடாகக் கருதவில்லை.

முதலில் நமது சமு கங்களுக்கு, `இவையும் ஒழுக்கக் கேடுகள்’ என்று போதித்தது இந்து மதம்.

கணிகை ஒருத்தியைக் கட்டிலில் போட்டு இரவு முழுவதும் விளையாடுகிறோம். இச்சை தீர்ந்ததும், அவளைத் தள்ளிப் படு என்றுதான் சொல்லத் தோன்றுகிறதே தவிர, அங்கு நீக்க முடியாத பிணைப்பு ஏற்படுவதில்லை.

அந்த உறவு அந்த இரவுக்கு மட்டுமே!

அலுவலகத்தில் வேலை பார்க்கிறோம். வேலையிலிருந்து விலகியதும், வேலை பார்த்த இடத்தை மறந்து விடுகிறோம். அந்தப் பிணைப்பு கூலிக்காகவே!

ஹோட்டலில் அறை எடுத்துக்கொண்டு தங்குவது போல் சில உறவுகள், சொந்த வீட்டில் வாழ்வது போல் சில உறவுகள்.

ஆயிரம் வாசல் இதயம்! யாரோ வருகிறார்கள். யாரோ போகிறார்கள்!

வாழ்ந்தால் சிரிக்கிறார்கள்; வறண்டால் ஒதுங்குகிறார்கள்; செத்த பின் ஒப்புக்காக அழுகிறார்கள்.

இரண்டு ஆத்மாக்கள் ஐக்கியமாகி, ஓர் ஆத்மா தாக்கப்படும் போது இன்னொரு ஆத்மாவும் இயற்கையாகத் துடிக்குமானால், அந்த உறவே புனிதமான உறவு.

பிறப்பில் சொந்தமிருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி.

அது மனிதனாயினும் சரி, நாய் பூனையானாலும் சரி.

எங்கே பந்தம் ஏற்றத்தாழ்வுகளில் சேர்ந்து வருகிறதோ, அங்கேதான் உறவிருக்கிறது.

கண்ணீரைத் துடைக்கின்ற கைகள், காயத்துக்குக் கட்டுப் போடும் கைகள், வறுமையில் பங்கு கொள்ளும் உள்ளம், சோதனையில் கூடவே வரும் நட்பு உறவு பூர்த்தியாகி விடுகிறது.

“அற்ற குளத்தி னறுநீர்ப் பறவைபோல்

உற்றுழித் தீர்வா ருறவல்லர் அக்குளத்திற்

கொட்டியு மாம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி யுறுவா ருறவு!” என்றார் அவ்வையார்

இதற்குப் புராணத்திலிருந்து ஒரு பகுதியை உதாரணம் காட்டி விரிவுரை தருகிறார், திருமுருக கிருபானந்த வாரியார். அதை அவருடைய வாசகத்திலேயே தருகிறேன்.

`இடர் வந்த காலத்தில்தான் சிநேகிதர், பந்துக்கள் முதலியவர்களுடைய அன்பைத் திட்டமாக அளந்தறியலாம். நமக்கு வரும் இடர்தான், சிநேகிதரையும் உறவின் முறையினரையும் அளக்கும் அளவுகோல். ஆதலால் அக்கேட்டிலும் ஒரு பயன் உளது’ என்றார் பொய்யில் புலவர்.

கேட்டினும் உண்டோர் உறுதி; கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்.

இது சம்பந்தமாக, தருமபுத்திரர் வினவ, பீஷ்மர் கூறிய வியாக்கியானத்தை எடுத்துக் காட்டுவோம்.

காசிராஜனுடைய தேசத்தில் ஒரு வேடன், விடமுள்ள பாணத்தை எடுத்துக்கொண்டு, சேரியிலிருந்து புறப்பட்டு மானைத் தேடிப் போனான். அங்கு ஒரு பெரிய வனத்தில் மான்கள் அருகிலிருக்கக் கண்டு, மாமிசத்தில் இச்சையுடைய அந்த வேடன், ஒரு மானையடிக்கக் குறிவைத்துக் கூரிய பாணத்தை விடுத்தான். தடுக்க முடியாத அந்தப் பாணம் குறி தவறியதால், அக்கானகத்திலுள்ள ஒரு பெரிய தழைத்த மரத்தின் மீது பாய்ந்தது. கொடிய விடந்தடவிய கணையினால் மிக்க வேகத்துடன் குத்தப்பட்ட அம்மரம், காய்களும் இலைகளும் உதிர்ந்து உலர்ந்து போயிற்று. வானளாவி வளர்ந்தோங்கியிருந்த அத்தருவானது அவ்வாறு உலர்ந்தபோது, அதன் பொந்துகளில் வெகுநாள்களாக வசித்திருந்த ஒரு கிளி, அம்மரத்தின் மேலுள்ள பற்றினால் தன்னிருப்பிடத்தை விடவில்லை. நன்றியறிவுள்ளதும் தருமத்தில் மனமுள்ளதுமாகிய அந்தக் கிளி வெளியிற் சஞ்சரியாமலும், இரையெடாமலும், களைப்புற்றும், குரல் தழுதழுத்தும், மரத்துடன் கூடவே உலர்ந்தது. மரஞ்செழிப்புற்றிருந்த போது அதனிடஞ் சுகித்திருந்தது போல், அது உலர்ந்து துன்புறும்போதும் அதனை விட்டுப் பிரியாமல் தானுந்துன்புற்றிருந்தது. அந்தக் கிளியின் உயர்ந்த குணத்தை நன்கு நோக்குங்கள்.

சிறந்த குணமுள்ளதும், மேலான சுபாவமுள்ளதும் மனிதர்க்கு மேற்பட்ட நல்லொழுக்கமுடையதுமான அக்கிளி, அம்மரத்தைப் போலவே சுகத்தையும் துக்கத்தையும் அனுபவித்துக் கொண்டிருப்பதைக் கண்ட தேவேந்திரன் திகைப்படைந்தான். `திரியக் ஜாதிகளுக்கு இல்லாத கருணையை இந்தப் பட்சி அடைந்திருப்பது எவ்வகை?’ என்று நினைத்தான்; பிறகு, `இதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. எல்லாப் பிராணிகளிலும் குணம், குற்றம் எல்லாம் காணப்படுகின்றன’ என்ற எண்ணமும் இந்திரனுக்கு உண்டாயிற்று.

இங்ஙனமெண்ணிய இந்திரன், மானிட உருவெடுத்து ஓர் அந்தணன் வடிவமாகப் பூமியில் இறங்கி, அந்தப் பட்சியைப் பார்த்து, “ஓ பட்சிகளிற் சிறந்த கிளியே! உன் தாயாகிய தா யி உன்னால் நல்ல சந்ததியுள்ளவளாக ஆகிறாள். கிளியாகிய உன்னை நான் கேட்கிறேன். உலர்ந்துபோன இந்த மரத்தை ஏன் விடாமலிருக்கிறாய்?” என்று கேட்டான்.

இமையவர் தலைவனாம் இந்திரனால் இவ்வாறு கேட்கப்பட்ட கிளியானது அவனுக்குத் தலைவணங்கி நமஸ்காரம் புரிந்து, “தேவராஜாவே, உனக்கு நல்வரவு, நான் தவத்தினால் உன்னைத் தெரிந்து கொண்டேன்” என்று சொல்லிற்று. தேவேந்திரன் “நன்று! நன்று” என்று கூறி `என்ன அறிவு’ என்று மனத்திற்குள் கொண்டாடினான்.

இவ்வாறு சிறந்த செய்கையுள்ளதும், தருமத்தையே முக்கியமாகக் கொண்டதுமாகிய அந்தக் கிளியைப் பார்த்து இந்திரன், தான் கேட்பது பாபமென்று தெரிந்திருந்தும் கேட்கத் தொடங்கினான்.

“அறிவிற் சிறந்த பறவையே! இலைகளும் காய்களும் இன்றி உலர்ந்து, பறவைகளுக்கு ஆதரவற்ற இம்மரத்தை ஏன் காக்கிறாய்? இது பெரிய வனமாயிருக்கிறதே! இலைகளினால் முடப்பட்ட பொந்துகளும் சஞ்சரிக்கப் போதுமான இடமுள்ள இன்னும் அழகான மரங்களும் அநேகம் இப்பெரிய வனத்திலிருக்கையில் முதிர்ச்சி
யடைந்து, சக்தியற்று, இரசம் வற்றி ஒளிகுன்றிக் கெட்டுப் போன இந்நிலையற்ற மரத்தைப் புத்தியினால் ஆராய்ந்து பார்த்து விட்டு விடு.”

அமேரேசனுடைய இந்த வார்த்தையைக் கேட்டு தர்மாத்மாவான அந்தக்கிளி, மிகவும் நீண்ட பெருமுச்செறிந்து துயரத்துடன் பின்வருமாறு சொல்லத் தொடங்கிற்று:

“மகாபதியே! இந்திராணியின் கணவனே! யாவராலும் வெல்ல முடியாத தேவர்களிருக்கும் பொன்னுலகத்தில் வசிக்கும் நீ, நான் கூறுவதைத் தெரிந்து கொள். அநேக நற்குணங்கள் பொருந்திய இம்மரத்தில் நான் பிறந்தேன். இளமைப் பருவத்தில் நன்றாகப் பாதுகாக்கப்பட்டேன். பகைவர்களாலும் பீடிக்கப்படாமல் இருந்தேன். மழை, காற்று, பனி, வெயில் முதலிய துன்பங்களால் வருந்தாது, இத்தருவில் சுகித்திருந்தேன்.

வலாரியே! தயையும் பக்தியுமுள்ளவனாக வேறு இடம் செல்லாமலிருக்கும் என் விடயத்தில் அனுக்கிரகம் வைத்து என் பிறவியை ஏன் பயன்படாமற் செய்கின்றாய்? நான், அன்பும் பக்தியுமுள்ளவன். பாவத்தைப் புரியேன். உபகாரிகள் விடயத்தில் தயை செய்வதுதானே தருமத்திற்கு முக்கியமான இலக்கணம். தயை செய்வதே நல்லோர்களுக்கு எப்போதும் மனத்திருப்தியை உண்டாக்குகிறது. எல்லாத் தேவர்களும் தருமத்திலுள்ள சந்தேகங்களை உன்னிடத்திலேயே கேட்கின்றனர். அதனாலேயே, நீ தேவசிரேட்டர்களுக்கு அதிபதியாகப் பட்டாபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறாய். இந்திரனே! வெகுகாலமாக இருந்த மரத்தை நான் விடும்படி நீ சொல்வது தகாது. நல்ல நிலைமையிலிருந்ததை அடுத்துப் பிழைத்தவன், கெட்ட நிலைமைக்கு வந்தவுடன், அதை எப்படி விடலாம்?”

எக்காலமு மிப்பாதப மெனதாமென வைகி

முக்காலே முதிருங்கனி முசியாது கர்ந்தேன்

இக்காலமி தற்கிவ்வண மிடைறு கலந்தாற்

சுக்காதகல் வதுவோவுணர் வுடையோர்மதி தூய்மையே!

- மகாபாரதம்

இவ்வாறு கூறிய, பொருளடங்கியதும், அழகுடையதுமாகிய கிளியினது வசனங்களால் மகிழ்வுற்ற இந்திரன், அதன் நன்றியறிவையும் தயையையும் எண்ணித் திருப்தியுற்று, தருமம் தெரிந்த அக்கிளியைப் பார்த்து, “ஒரு வரம் கேள்!” என்று சொன்னான்.

அன்பர்காள்! அக்கிளியானது தன் நன்மையைக் குறித்து வரம் கேட்கவில்லை. அதனுடைய பெருங்குணத்தை உற்று நோக்குங்கள்!

எப்போதும், பிறர் நோவாமையைப் பெரிதாகக் கருதிய அந்தக் கிளி, “ஏ தேவர் கோமானே! இம்மரமானது நன்றாகச் செழித்துத் தழைத்து ஓங்க வேண்டும்!” என்றது.

அப் பறவையினுடைய உறுதியான பக்தியையும் நிரம்பின நல்லொழுக்கத்தையும் அறிந்து களிப்புற்ற இந்திரன் உடனே அம்மரத்தின் மீது அமிர்தம் பொழிந்தான். அதனால் அத்தரு, கனிகளும், இலைகளும், கிளைகளும் உண்டாகித் தழைத்தது.

கிளியினுடைய உறுதியான பக்தியால் அம்மரம் முன்னைக் காட்டிலும் மிகவும் நன்றாகச் செழித்தது.

நன்றியறிவு, தயை இந்தக் குணங்களின் பயனாகிய அச்செய்கையினால் கிளியும் அத்தருவில் இனிது மகிழ்ந்திருந்தது. தன் ஆயுள் முடிந்த பிறகு இந்திரலோகத்தை அடைந்தது.



-- Edited by devapriyaji on Wednesday 30th of November 2011 07:33:27 AM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

2. ஆசை

வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது?
ஆசையிலும் நம்பிக்கையிலுமே ஓடிக் கொண்டிருக்கிறது.
சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது.
அவன் தவறுக்கெல்லாம் அதுவே காரணமாகிறது.

`வேண்டும்’ என்கிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. `போதும்’ என்ற மனம் சாகும்வரை வருவதில்லை.

ஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால், வழிநெடுக நாணயம் கிடைக்கும் என்று தேடிக்கொண்டே போகிறான்.

ஒரு விஷயம் கைக்குக் கிடைத்துவிட்டால் நூறு விஷயங்களை மனது வளர்த்துக் கொள்கிறது.

ஆசை எந்தக் கட்டத்தில் நின்றுவிடுகிறதோ, அந்தக் கட்டத்தில் சுயதரிசனம் ஆரம்பமாகிறது.

சுயதரிசனம் பூர்த்தியானவுடன், ஆண்டவன் தரிசனம் கண்ணுக்குத் தெரிகிறது.

ஆனால் எல்லோராலும் அது முடிகிறதா?

லட்சத்தில் ஒருவருக்கே ஆசையை அடக்கும் அல்லது ஒழிக்கும் மனப்பக்குவம் இருக்கிறது.

என் ஆசை எப்படி வளர்ந்ததென்று எனக்கே நன்றாகத் தெரிகிறது.

சிறு வயதில் வேலையின்றி அலைந்தபோது “மாதம் இருபது ரூபாயாவது கிடைக்கக்கூடிய வேலை கிடைக்காதா?” என்று ஏங்கினேன்.

கொஞ்ச நாளில் கிடைத்தது.

மாதம் இருபத்தைந்து ரூபாய் சம்பளத்திலே ஒரு பத்திரிகையில் வேலை கிடைத்தது.

ஆறு மாதம்தான் அந்த நிம்மதி.

“மாதம் ஐம்பது ரூபாய் கிடைக்காதா?” என்று மனம் ஏங்கிற்று.

அதுவும் கிடைத்தது, வேறொரு பத்திரிகையில்.

பிறகு மாதம் நூறு ரூபாயை மனது அவாவிற்று.

அதுவும் கிடைத்தது.

மனது ஐநூறுக்குத் தாவிற்று.

அது ஆயிரமாக வளர்ந்தது.

ஈராயிரமாகப் பெருகிற்று.

யாவும் கிடைத்தன.

இப்பொழுது நோட்டடிக்கும் உரிமையையே மனது கேட்கும் போலிருக்கிறது!

எந்தக் கட்டத்திலும் ஆசை பூர்த்தியடையவில்லை.

`இவ்வளவு போதும்’ என்று எண்ணுகிற நெஞ்சு, `அவ்வளவு’ கிடைத்ததும், அடுத்த கட்டத்திற்குத் தாண்டுகிறதே, ஏன்?

அதுதான் இறைவன் லீலை!

ஆசைகள் அற்ற இடத்தில், குற்றங்கள் அற்றுப் போகின்றன.

குற்றங்களும் பாபங்களும் அற்றுப்போய் விட்டால் மனிதனுக்கு அனுபவங்கள் இல்லாமல் போய்விடுகின்றன.

அனுபவங்கள் இல்லையென்றால், நன்மை தீமைகளைக் கண்டுபிடிக்க முடியாது.

ஆகவே தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காக, இறைவன் ஆசையைத் தூண்டிவிடுகிறான்.

ஆசையை மூன்றுவிதமாகப் பிரிக்கிறது இந்து மதம்.

மண்ணாசை!

பொன்னாசை!

பெண்ணாசை!

மண்ணாசை வளர்ந்துவிட்டால், கொலை விழுகிறது.

பொன்னாசை வளர்ந்துவிட்டால், களவு நடக்கிறது.

பெண்ணாசை வளர்ந்துவிட்டால், பாபம் நிகழ்கிறது.

இந்த மூன்றில் ஒரு ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு.

ஆகவேதான், பற்றற்ற வாழ்க்கையை இந்துமதம் போதித்தது.

பற்றற்று வாழ்வதென்றால், எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிப்போய் சந்நியாசி ஆவதல்ல!

“இருப்பது போதும்; வருவது வரட்டும்; போவது போகட்டும்; மிஞ்சுவது மிஞ்சட்டும்” என்று சலனங்களுக்கு ஆட்படாமல் இருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்.

ஆசை, தீமைக்கு அடிப்படையாக இல்லாதவரை, அந்த ஆசை வாழ்வில் இருக்கலாம் என்கிறது இந்து மதம்.

நான் சிறைச்சாலையில் இருந்தபோது கவனித்தேன்.

அங்கே இருந்த குற்றவாளிகளில் பெரும்பாலோர் ஆசைக் குற்றவாளிகளே.

மூன்று ஆசைகளில் ஒன்று அவனைக் குற்றவாளியாக்கி இருக்கிறது.

சிறைச்சாலையில் இருந்துகொண்டு, அவன் “முருகா, முருகா!” என்று கதறுகிறான்.

ஆம், அவன் அனுபவம் அவனுக்கு உண்மையை உணர்த்துகிறது.

அதனால்தான் “பரம்பொருள் மீது பற்று வை; நிலையற்ற பொருள்

களின் மீது ஆசை வராது” என்கிறது இந்துமதம்.

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு” என்பது திருக்குறள்.

ஆசைகளை அறவே ஒழிக்க வேண்டியதில்லை. அப்படி ஒழித்துவிட்டால் வாழ்க்கையில் என்ன சுகம்?

அதனால்தான் `தாமரை இலைத் தண்ணீர் போல்’ என்று போதித்தது இந்து மதம்.

நேரிய வழியில் ஆசைகள் வளரலாம். ஆனால் அதில் லாபமும் குறைவு, பாபமும் குறைவு.

ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஐநூறு ரூபாய் மட்டுமே கிடைத்தால் அந்த ஐநூறு உனக்குப் பணமாகத் தெரியாது.

இருநூறு எதிர்பார்த்து உனக்கு ஐநூறு கிடைத்தால், நிம்மதி வந்துவிடுகிறது.

“எதிர்பார்ப்பதைக் குறைத்துக் கொள்; வருவது மனதை நிறைய வைக்கிறது” என்பதே இந்துக்கள் தத்துவம்.

எவ்வளவு அழகான மனைவியைப் பெற்றவனும், இன்னொரு பெண்ணை ஆசையோடு பார்க்கிறானே, ஏன்?

லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களைப் பெற்றவன் மேலும் ஓர் ஆயிரம் ரூபாய் கிடைக்கிறதென்றால் ஓடுகிறானே, ஏன்?

அது ஆசை போட்ட சாலை.

அவன் பயணம் அவன் கையிலில்லை; ஆசையின் கையில் இருக்கிறது.

போகின்ற வேகத்தில் அடி விழுந்தால் நின்று யோசிக்கிறான்; அப்போது அவனுக்குத் தெய்வ ஞாபகம் வருகிறது.

அனுபவங்கள் இல்லாமல், அறிவின் மூலமே தெய்வத்தைக் கண்டுகொள்ளும்படி போதிப்பதுதான் இந்துமதத் தத்துவம்.

`பொறாமை, கோபம்’ எல்லாமே ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்தான்.

வாழ்க்கைத் துயரங்களுக்கெல்லாம் மூலகாரணம் எதுவென்று தேடிப் பார்த்து, அந்தத் துயரங்களிலிருந்து உன்னை விடுபடச் செய்ய, அந்தக் காரணங்களைச் சுட்டிக் காட்டி, உனது பயணத்தை ஒழுங்குபடுத்தும் வேலையை இந்துமதம் மேற்கொண்டிருக்கிறது.

இந்துமதம் என்றும் சந்நியாசிகளின் பாத்திரமல்ல. அது வாழ விரும்புகிறவர்கள், வாழ வேண்டியவர்களுக்கு வழிகாட்டி.

வள்ளுவர் சொல்லும் வாழ்க்கை நீதிகளைப் போல இந்து மதமும் நீதிகளையே போதிக்கிறது.

அந்த நீதிகள் உன்னை வாழவைப்பதற்கே அல்லா மல் தன்னை வளர்த்துக் கொள்வதற்காக அல்ல.

உலகத்தில் எங்கும் நிர்பந்தமாகத் திணிக்கப்படாத மதம், இந்து மதம்.

உன் உள்ளம் நிர்மலமாக, வெண்மையாக, தூய்மையாக இருக்கிறது என்பதற்கு அடையாளமாகவே அது `திருநீறு’ பூசச் சொல்லுகிறது.

உன் உடம்பு, நோய் நொடியின்றி ரத்தம் சுத்தமாக இருக்கிறது என்பதற்காகவே, `குங்குமம்’ வைக்கச் சொல்கிறது.

`இவள் திருமணமானவள்’ என்று கண்டுகொண்டு அவளை நீ ஆசையோடு பார்க்காமலிருக்கப் பெண்ணுக்கு அது `மாங்கல்யம்’ சூட்டுகிறது.

தன் கண்களால் ஆடவனுடைய ஆசையை ஒரு பெண் கிளறி விடக் கூடாது என்பதற்காவே, அவளைத் `தலை குனிந்து’ நடக்கச் சொல்கிறது.

யாராவது ஆடவன் தன்னை உற்று நோக்குகிறான் என்பதைக் கண்டால், இந்தப் பெண்கள் மார்பகத்து ஆடையை இழுத்து மூடிக் கொள்கிறார்களே, ஏன்?

ஏற்கெனவே திருத்தமாக உள்ள ஆடையை மேலும் திருத்துகிறார்களே, ஏன்?

எந்தவொரு `கவர்ச்சி’யும் ஆடவனுடைய ஆசையைத் தூண்டி விடக்கூடாது என்பதால்.

ஆம்; ஆடவன் மனது சலனங்களுக்கும், சபலங்களுக்கும் ஆட்பட்டது.

கோவிலிலே தெய்வ தரிசனம் செய்யும்போது கூட கண் கோதையர்பால் சாய்கிறது.

அதை மீட்க முடியாத பலவீனனுக்கு, அவள் சிரித்துவிட்டால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகிறது.

“பொம்பளை சிரிச்சா போச்சு; புகையிலை விரிச்சாப் போச்சு” என்பது இந்துக்கள் பழமொழி.

கூடுமானவரை மனிதனைக் குற்றங்களில் இருந்து மீட்பதற்கு தார்மீக வேலி போட்டு வளைக்கிறது இந்துமதம்.

அந்தக் குற்றங்களில் இருந்து விடுபட்டவனுக்கே நிம்மதி கிடைக்கிறது.

அந்த நிம்மதியை உனக்கு அளிக்கவே இந்துமதத் தத்துவங்கள் தோன்றின.

இன்றைய இளைஞனுக்கு ஷேக்ஸ்பியரைத் தெரியும்; ஷெல்லியைத் தெரியும்; ஜேம்ஸ்பாண்ட் தெரியும். கெட்டுப் போன பின்புதான், அவனுக்குப் பட்டினத்தாரைப் புரியும்.

ஓய்ந்த நேரத்திலாவது அவன் ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்களைப் படிப்பானானால், இந்துமதம் என்பது வெறும் `சாமியார் மடம்’ என்ற எண்ணம் விலகிவிடும்.

நியாயமான நிம்மதியான வாழ்க்கையை நீ மேற்கொள்ள, உன் தாய் வடிவில் துணை வருவது இந்துமதம்.

ஆசைகளைப் பற்றி பரமஹம்சர் என்ன கூறுகிறார்?

“ஆழமுள்ள கிணற்றின் விளிம்பில் நிற்பவன், அதனுள் விழுந்துவிடாமல் எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பதைப்போல் உலக வாழ்க்கையை மேற்கொண்டவன் ஆசாபாசங்களில் அமிழ்ந்துவிடாமல் இருக்க வேண்டும்” என்கிறார்.

“அவிழ்த்து விடப்பட்ட யானை, மரங்களையும் செடி கொடிகளையும் வேரோடு பிடுங்கிப் போடுகிறது. ஆனால் அதன் பாகன் அங்குசத்தால் அதன் தலையில் குத்தியதும், அது சாந்தமாகி விடுகிறது.”

“அதுபோல, அடக்கியாளாத மனம் வீண் எண்ணங்களில் ஓடுகிறது.”

“விவேகம் என்ற அங்குசத்தால் அது வீழ்த்தப்பட்டதும் சாந்தமாகிவிடுகிறது” என்றார்.

அடக்கியாள்வதன் பெயரே வைராக்கியம்.

நீ சுத்த வைராக்கியனாக இரு. ஆசை வளராது. உன்னைக் குற்றவாளியாக்காது, உன் நிம்மதியைக் கெடுக்காது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

துன்பம் ஒரு சோதனை

வெள்ளம் பெருகும் நதிகளும் ஒருமுறை வறண்டு விடுகிறது. குளங்கள் கோடையில் வற்றி மழைக்காலத்தில் நிரம்புகின்றன. நிலங்கள் வறண்ட பின்தான் பசுமையடைகின்றன. மரங்கள் இலையுதிர்ந்து பின் தளிர் விடுகின்றன.

இறைவனின் நியதியில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பது மலை ஒன்றுதான். அதுவும் வளர்வதாகவும், அழிவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இறைவன் மனிதனையும் அப்படித்தான் வைக்கிறான். நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.

முதற்கட்டம் வரவு என்றால், அடுத்த கட்டம் செலவு.

முதற்கட்டம் வறுமை என்றால், அடுத்த கட்டம் செல்வம்.

முதற்கட்டம் இன்பமென்றால், அடுத்த கட்டம் துன்பம்.

முதற்கட்டமே துன்பமென்றால், அடுத்த கட்டம் இன்பம். இறைவனது தராசில் இரண்டு தட்டுகளும் ஏறி ஏறி இறங்குகின்றன.

`இடுக்கண் வருங்கால் நகுக; அதனை

அடுத்தூர்வ தஃதொப்ப தில்’ என்றான் வள்ளுவன்.

எல்லாச் செல்வங்களையும் நிரந்தரமாக எவனுக்கும் இறைவன் வழங்கியதில்லை.

அந்த நாளில் எனக்கு நல்ல பசியெடுத்தது; உணவு கிடைக்கவில்லை.

பின் பசியுமிருந்தது; உணவும் கிடைத்தது.

இப்போது உணவு கிடைக்கிறது; பசியில்லை.

அடுக்கடுக்காகப் பணம் சேர்த்து, ஆயிரம் வேலிக்கு மிராசுதாரர் ஆனார் ஒருவர். ஆன மறுநாளே, அவரை `அரிசி சாப்பிடக் கூடாது; சர்க்கரை வியாதி’ என்று சொல்லிவிட்டார் டாக்டர்.

சீனாவில் மாசேதுங் புரட்சி நடந்தபோது பல ஆண்டுகள் காடுமேடுகளில் ஏறி இறங்கினார். மனைவியைத் தோளில் தூக்கிக் கொண்டு அலையக்கூட வல்லமை பெற்றிருந்தார்.

புரட்சி முடிந்து, பதவிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் நோயில் படுத்தார்.

ரஷ்யாவில் லெனின் கதையும் அதுதான். புரட்சி நடக்கும்வரை லெனின் ஆரோக்கியமாகவே இருந்தார். பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே படுக்கையில் விழுந்தார்; சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார்.

எனது தி.மு.க. நண்பர்கள் ஒவ்வொருவரும் கடுமையான உழைப்பாளிகள். ரயிலிலும் கட்டை வண்டிகளிலும், கால்நடையாகவும் சென்று கூட்டத்தில் பேசுவார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைச் சாலைக்குப் போவார்கள்.

அப்பொழுதெல்லாம் அவர்கள் உடல்நிலை நன்றாகவே இருந்தது.

அவர்கள் பதவிக்கு வந்து நிம்மதியாக இருக்க வேண்டிய நேரத்தில் அவர்களில் பலருடைய ஆரோக்கியம் கெட்டுவிட்டது.

எனது நண்பர் ஒருவர் படமெடுத்தார். முதற்படமே அபார வெற்றி. அளவு கடந்த லாபம்.

அடுத்த படத்திலிருந்து விழத் தொடங்கியது அடி. இன்னும் அவர் எழ முடியவில்லை.

இன்னொரு பட அதிபர்…

ஊமைப்படக் காலத்திலிருந்து தொழிலில் இருக்கிறார். ஆரம்பக் கட்டத்தில் பல படங்கள் அவருக்குக் கை கொடுக்கவில்லை. மிகுந்த சிரமப்பட்டு சென்னைக்கு வந்து ஒரு படம் எடுத்தார்.

அவரது `வாழ்க்கை’யையே அந்தப் படம்தான் தீர்மானிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள்.

அந்தப் படம் அமோகமாக ஓடியது.

ஒரு புது நடிகையை நட்சத்திர நடிகையாக்கிற்று.

அது தெலுங்கிலும் வெற்றி; இந்தியிலும் வெற்றி. அது முதல் அவர் தொட்டதெல்லாம் வெற்றி.

பிறப்பிலிருந்து இறப்பு வரை துன்பமே இல்லாமல் வாழ்ந்தவர்கள் எத்தனை பேர்? கண்களை மூடிக்கொண்டு எண்ணிப் பாருங்கள்.

ஒரு கட்டம் அப்படி என்றால், மறு கட்டம் இப்படி!

ஏற்றம் என்பது இறைவன் வழங்கும் பரிசு.

இறக்கம் என்பது அவன் செய்யும் சோதனை.

நீ நினைப்பது எல்லாமே நடந்துவிட்டால், தெய்வத்தை நம்ப வேண்டாம்.

எப்போது நீ போடும் திட்டம் தோல்வியுறுகிறதோ அப்போது உனக்கு மேலானவன் அதை நடத்துகிறான் என்று பொருள்.

எப்போது உன் திட்டங்கள் வெற்றி பெறுகின்றனவோ, அப்போது இறைவன் உனக்கும் அனுமதியளித்து விட்டான் என்று பொருள்.

`ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட்டொன்றாகும்

அன்றி அதுவரினும் வந்தெய்தும்

ஒன்றை

நினையாது முன்வந்து நிற்பினும் நிற்கும்

எனையாளும் ஈசன் செயல்’

என்பது முன்னோர் பழமொழி.

`கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக்

காஞ்சிரங்காய் ஈந்தேன்

முற்பவத்தில் செய்தவினை’

இதுவும் அவர்கள் சொன்னதே.

உனது வாழ்க்கை பூஜ்ஜியத்திலே ஆரம்பமாகிறது. அதற்கு முன்பக்கம் நம்பர் விழுந்தால் இறைவனின் பரிசு; பின்பக்கம் விழுந்தால் அவனது சோதனை.

மேடும் பள்ளமுமாக வாழ்க்கை மாறி மாறி வந்தால் உனக்குப் பெரிய வீழ்ச்சியில்லை. ஒரேயடியாக உச்சிக்கு நீ போய்விட்டால் அடுத்து பயங்கரமான சரிவு காத்திருக்கிறது.

என் வாழ்க்கை மேடும் பள்ளமுமாகவே போவதால், என் எழுத்து வண்டி இருபத்தைந் தாண்டு காலமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதைத்தான் `சகட யோகம்’ என்பார்கள்.

வீழ்ச்சியில் கலக்கமோ எழுச்சியில் மயக்கமோ கொள்ளாதே!

`அடுத்த பாதை என்ன, பயணம் என்ன’ என்பது, உனக்குத் தெரியாது; `எல்லாம் தெய்வத்தின் செயல்’ என்றார்கள் நம் முன்னோர்கள்.

`ஆண்டவனின் அவதாரங்களே ஆண்டவன் சோதனைக்குத் தப்பவில்லை’ என்று நமது இதிகாசங்கள் கூறுகின்றன.

தெய்வ புருஷன் ஸ்ரீராமனுக்கே பொய் மான் எது, உண்மை மான் எது என்று தெரியவில்லையே!

அதனால் வந்த வினை தானே, சீதை சிறையெடுக்கப்பட்டதும், ராமனுக்குத் தொடர்ச்சியாக வந்த துன்பங்களும்!

சத்தியதெய்வம் தருமனுக்கே சூதாடக்கூடாது என்ற புத்தி உதயமாகவில்லையே!

அதன் விளைவுதானே பாண்டவர் வனவாசமும் பாரத யுத்தமும்!

முக்காலமும் உணர்ந்த கவுதமனுக்கே, பொய்க் கோழி எது, உண்மைக் கோழி எது என்று தெரியவில்லையே!

அதனால்தானே அகலிகை கெடுக்கப்பட்டதும், சாபம் பெற்றதும்.

ஆம், இறைவனின் சோதனை எவனையும் விடாது என்பதற்கு, இந்தக் கதைகளை நமது இந்துமத ஞானிகள் எழுதி வைத்தார்கள்.

துன்பங்கள் வந்தே தீருமென்றும், அவை இறைவனின் சோதனைகள் என்றும், அவற்றுக்காகக் கலங்குவதும் கண்ணீர் சிந்துவதும் முட்டாள்தனமென்றும் உன்னை உணர வைத்து, துன்பத்திலும் ஒரு நிம்மதியைக் கொடுக்கவே அவர்கள் இதை எழுதி வைத்தார்கள்.

இந்தக் கதைகளை `முட்டாள் தனமானவை’ என்று சொல்லும் அறிவாளிகள் உண்டு.

ஆனால், முட்டாள்தனமான இந்தக் கதைகளின் தத்துவங்கள் அந்த அறிவாளிகளின் வாழ்க்கையையும் விட்டதில்லை.

நான் சொல்ல வருவது, `இந்து மதத்தின் சாரமே உனது லவுகிக வாழ்க்கையை நிம்மதியாக்கித் தருவது’ என்பதையே.

துன்பத்தைச் சோதனை என்று ஏற்றுக்கொண்டுவிட்டால், உனக்கேன் வேதனை வரப்போகிறது?

அந்தச் சோதனையிலிருந்து உன்னை விடுவிக்கும்படி நீ இறைவனை வேண்டிக்கொள்; காலம் கடந்தாவது அது நடந்துவிடும்.

தர்மம் என்றும், சத்தியம் என்றும், நேர்மை என்றும், நியாயம் என்றும் சொல்லி வைத்த நமது மூதாதையர்கள் முட்டாள்களல்ல.

கஷ்டத்திலும் நேர்மையாக இரு.

நீ ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதே.

உன் வாழ்நாளிலேயே அதன் பலனைக் காண்பாய்.

தெய்வ நம்பிக்கை உன்னைக் கைவிடாது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

4.பாவமாம், புண்ணியமாம்! 

இதுவரை யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவில்லை. இப்போது ஒருவருடைய பெயரைக் குறிப்பிட விரும்புகிறேன்.

பட அதிபர் சின்னப்ப தேவரை நீ அறிவாய். சிறுவயதிலிருந்தே அவர் தெய்வ நம்பிக்கையுள்ளவர்.

சினிமாத் தொழிலிலேயே மதுப்பழக்கமோ, பெண்ணாசையோ இல்லாத சிலரில் அவரும் ஒருவர். மிகவும் உத்தமர்கள் என்று சொல்லத்தக்க உயர்ந்தோரில் ஒருவர்.

முப்பது முப்பத்தைந்து வயதுவரை, அவரது வாழ்க்கை கடுமையான வறுமையிலும் ஏழ்மையிலும் கழிந்தது. அப்போதும் அவர் நாணயத்தையும் நேர்மையையும் விட்டதில்லை.

குஸ்தி கோதா நடத்தினார். சிறிய பால் பண்ணை நடத்தினார். ஜூபிடர் பிக்சர்ஸ் படங்களில் ஸ்டண்ட் நடிகராக வேலை பார்த்தார்.

அவரது வரலாறு உழைத்து முன்னேற விரும்புகிறவர்களுக்கு ஒரு பாடமாகும்.

அந்த நேரத்தில் ஒரு வெற்றிலை பாக்குக் கடையில் அவருக்கு ஆறு ரூபாய் வரை கடனாகி விட்டது.

கடைக்காரன் அவர் கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்கினான்; அந்தக் கடையிருக்கும் பக்கமே போக முடியாதபடி அவதிப்பட்டார்.

அடிக்கடி கோவைக்குப் பத்து மைலுக்கு அப்பாலிருக்கும் மருதமலைக்குப் போய் `முருகா! முருகா!’ என்று அழுவார்.

அந்தக் கோவிலோ ஜன நடமாட்டமில்லாத கோவில்.

கடைக்காரன் கோபித்துக் கொண்ட அன்று இரவு. அந்த மருதமலைக் கோவிலில் போய் உட்கார்ந்து கொண்டு அழுதார்; “முருகா! காப்பாற்று” என்று வேண்டிக்கொண்டார்.

நள்ளிரவில் காடுகள் நிறைந்த அந்த மலையை விட்டு இறங்கினார்.

வழியில் ஒரு சிகரெட் பாக்கெட் கிடந்தது. அதைக் காலால் உதைத்துக் கொண்டு நகர்ந்தார்.

கொஞ்சதூரம் வந்ததும் என்ன தோன்றிற்றோ?

அந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்துப் பார்த்தார். உள்ளே இரண்டு சிகரெட்டுகளும், பத்து ரூபாய் நோட்டும் இருந்தன.

அப்போது அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும்?

“நல்லவனாக வாழ்ந்தோம்; தெய்வத்தை நம்பினோம்; தெய்வம் கைவிடவில்லை” என்றுதானே எண்ணியிருக்கும்!

அந்த முருகன் அவரை வாழ வைத்தான்.

ஒவ்வொரு நாளும், “முருகா! முருகா!” என்று உருகுகிறார்.

“தனக்கு நஷ்டம் வந்தாலும் பிறருக்கும் நஷ்டம் வரக்கூடாது” என்று தொழில் புரிகிறார். அதனால், அவர் நாளுக்கு நாள் செழித்தோங்குகிறார்.

நீயும் நல்லவனாக இரு. தெய்வத்தை நம்பு.

உனக்கு வருகிற துன்பமெல்லாம், பனிபோலப் பறந்து ஓடாவிட்டால், நீ இந்துமதத்தையே நம்ப வேண்டாம்.

“பாவமாம், புண்ணியமாம்; எந்த மடையன் சொன்னான்?”

“சொர்க்கமாம், நரகமாம்! எங்கே இருக்கின்றன அவை?”

“பாவமும் புண்ணியமும் பரலோகத்தில்தானே? பார்த்துக் கொள்வோம் பின்னாலே?”

இவையெல்லாம் நமது பகுத்தறிவு உதிர்க்கும் பொன் மொழிகள்.

பாவம் புண்ணியம், சொர்க்கம் நரகம் என்ற வார்த்தைகளைக் கேட்கின்ற இளைஞனுக்கு, அவை கேலியாகத் தெரிகின்றன.

`நரம்பு தளர்ந்துபோன கிழவர்கள், மரண பயத்தில் உளறிய வார்த்தைகள் அவை’ என்று அவன் நினைக்கிறான்.

நல்லதையே செய்தால் சொர்க்கத்துக்குப் போவாய் என்றும், அங்கே வகைவகையாக விருந்துகள் உனக்குக் காத்திருக்கும் என்றும், தீங்கு செய்தால் நரகத்துக்குச் செல்வாய் என்றும், அங்கே உன்னை எண்ணெய்க் கொப்பரையில் போட்டு வறுத்தெடுப்பார்கள் என்றும் சொல்லப்படும் கதைகள் நாகரிக இளைஞனுக்கு நகைச்சுவையாகத் தோன்றுவதில் வியப்பில்லை.

ஆனால் இந்தக் கதைகள், அவனை பயமுறுத்தி, அவன் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதற்காகவே தோன்றிய கதைகள்.

அவனுடைய பற்றாக்குறை அறிவைப் பயமுறுத்தித்தான் திருத்த வேண்டும் என்று நம்பிய நம் மூதாதையர் அந்தக் கதைகளைச் சொல்லி

வைத்தார்கள்.இந்தக் கதைகள் நூற்றுக்கு ஐம்பது பேரையாவது திருத்தியும் இருக்கின்றன என்பதை அறிந்தால், நம் மூதாதையர் நம்பியுரைத்த கற்பனைகள்கூட, எவ்வளவு பலனை அளிக்கின்றன என்பதை அவன் அறிவான்.

பாவம் புண்ணியம் பற்றிய கதைகளை விடு; பரலோகத்துக்கு உன் ஆவி போகிறதோ இல்லையோ, இதை நீ நம்ப வேண்டாம்.

ஆனால், நீ செய்யும் நன்மை தீமைகள், அதே அளவில் அதே நிலையில், உன் ஆயுட்காலத்திலேயே உன்னிடம் திரும்பிவிடுகின்றன.

அந்த அளவு கூடுவதுமில்லை, குறைவதுமில்லை.

ஒருவனை எந்த வார்த்தை சொல்லி நீ திட்டுகிறாயோ, அதே வார்த்தையில், எப்போதாவது ஒரு முறை நீ திட்டப்படுகிறாய்.

“எப்படித் தீர்க்க நினைக்கிறீர்களோ அப்படியே தீர்க்கப்படுவீர்கள்” என்று கிறிஸ்தவ வேதம் கூறுகிறது.

“செய்த வினை, அதே வடிவத்தில் திரும்ப வரும்” என்று முதன் முதலில் போதித்தது இந்துமதம் தான்.

“பாவம் என்பது நீ செய்யும் தீமை.”

“புண்ணியம் என்பது நீ செய்யும் நன்மை.”

“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.”

“அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.”

“விநாச காலே விபரீத புத்தி.”

இவையெல்லாம் இந்துக்களின் பழமொழிகள்.

ஊரைக் கொள்ளையடித்து, உலையிலே போட்டு, அதை உயில் எழுதி வைத்துவிட்டு மாண்டவன் எவனாவது உண்டா?

பிறர் சொத்தைத் திருடிக்கொண்டு, அதை நிம்மதியாக அனுபவித்து, அமைதியாகச் செத்தவன் எவனாவது உண்டா?

அப்படி ஒருவன் இருந்தாலும், அவன் எழுதி வைத்த உயிலின்படி அவன் சொத்துக்கள் போய்ச் சேர்ந்ததுண்டா?

எனக்குத் தெரிந்தவரை அப்படிப்பட்ட சொத்துக்களை நீதி மன்றத்தால் நியமிக்கப்படும் `ரிஸீவர்’கள்தான் சாப்பிட்டிருக்கிறார்கள். இறந்தவனுடைய சந்ததி சாப்பிட்டதில்லை.

கொலை செய்துவிட்டுத் தலைமறைவாகி, தண்டனையில்லாமல் நிம்மதியாக வாழ்ந்து, வலி இல்லாமல் செத்தவன் உண்டா?

எனக்குத் தெரிந்தவரை இல்லை.

ஒருவன் செய்த எந்த பாவமும் அவன் தலையைச் சுற்றி ஆயுட்காலத்திலேயே அவனைத் தண்டித்து விட்டுத்தான் விலகியிருக்கிறது.

“பாவத்தின் சம்பளம் மரணம்” என்கிறது கிறிஸ்துவ வேதம்.

இல்லை, பாவத்தின் சம்பளம் வயதான காலத்தில்

திரும்பவரும் சிறு சேமிப்பு நிதி; சரியான நேரத்தில்

அவனுக்குக் கிடைக்கும் போனஸ்!

சாவுக்குப் பின் நடப்பது இரண்டாவது விசாரணை!

முதல் தீர்ப்பு அவன் ஆயுட்காலத்திலேயே அளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு விடுகிறது.

எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது 1953ஆம் ஆண்டு டால்மியாபுரம் போராட்டத்தில் பதினெட்டு மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, நானும், நண்பர் அன்பில் தர்மலிங்கமும், மற்றும் இருபது பேரும் திருச்சி மத்திய சிறையில் இருந்தோம். அங்கே தூக்குத் தண்டனை பெற்ற கைதிகள் சிலரும் இருந்தார்கள்.

அவர்களைத் தனித்தனியாகச் சில அறைகளில் பூட்டி வைத்திருந்தார்கள்.

அவர்களிலே, `மாயவரம் கொலை வழக்கு’ என்று பிரபலமான வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஏழு பேர்.

செஷன்ஸ் கோர்ட் அவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்தது.

அப்போது உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக இருந்தவர் திரு. சோமசுந்தரம்.

பெரும்பாலான கொலை வழக்குகளில் அவர் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவது வழக்கம்.

காரணம், பன்னிரண்டு வருடங்கள் கழித்துத் திரும்பப் போகும் குற்றவாளி நல்லவனாகத் திரும்பி வந்து அமைதியான வாழ்க்கை வாழ்வான் என்ற நம்பிக்கையே!

அவர் சட்டத்தோடு தர்மத்தையும் கலந்தே யோசிப்பார்.

செஷன்ஸ் கோர்ட்டின் தூக்குத் தண்டனையொன்றை அவர் ஊர்ஜிதம் செய்கிறார் என்றால், அதை ஆண்டவனே ஊர்ஜிதம் செய்ததாக அர்த்தம்.

மாயவரம் கொலை வழக்கில் ஏழு கைதிகளின் தூக்குத் தண்டனையை ஊர்ஜிதம் செய்தார்.

அவரைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டும், அதை ஊர்ஜிதம் செய்தது.

ஜனாதிபதிக்கு கருணை மனு போயிற்று. அவரும் தூக்குத் தண்டனையை ஊர்ஜிதம் செய்தார்.

காரணம், நடந்த நிகழ்ச்சி அவ்வளவு பயங்கரமானது.

மாயவரத்தில் நாற்பது வயதான ஒரு அம்மையார், விதவை. அந்த வயதிலும் அழகாக இருப்பார்.

சுமார் அறுபதினாயிரம் ரூபாய் பெறக்கூடிய நகைகளை அவர் வைத்திருந்தார்.

சொந்த வீட்டில் ஒரு வேலைக்காரப் பெண்ணை மட்டுமே துணையாகக் கொண்டு வாழ்ந்திருந்தார்.

அவரை மோப்பமிட்ட சிலர், ஒருநாள் இரவு அவர் வீட்டுக்குள் புகுந்தார்கள்.

ஐந்து பேர் அவரைக் கற்பழித்தார்கள். அந்த அம்மையார் மூச்சுத் திணறி இறந்து போனார்.

இறந்த பிறகும் இன்னொருவன் கற்பழித்தான்.

ஆம்; மருத்துவரின் சர்டிபிகேட் அப்படித்தான் கூறிற்று.

நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன! கொலைகாரர்கள் ஓடிவிட்டார்கள்.

பிடிபட்டவர்கள் ஏழு பேர்.

சிறைச்சாலையில் அந்த ஏழு பேரில் ஆறு பேர் “நாளை தூக்குக்குப் போகப் போகிறோமே!” என்று துடித்துக் கொண்டிருந்தார்கள். “முருகா முருகா” என்று ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், ஒருவன் மட்டும் சலனம் இல்லாமல் அமைதியாக இருந்தான்.

சிறைச்சாலையில் தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளை மற்ற கைதிகள் அணுகிப் பேச முடியாது.

நானும் நண்பர் அன்பில் தர்மலிங்கமும் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, அவர்களை அணுகினோம்.

சலனமே இல்லாமலிருந்தானே அந்த மனிதன், அவனிடம் மட்டுமே பேச்சுக் கொடுத்தோம்.

உடம்பிலே துணிகூட இல்லாமல் சிறைச்சாலை விதிகளின்படி நிறுத்தப்பட்டிருந்த அந்த மனிதன், அமைதியாகவே பேசினான்.

நாளை சாகப்போகிறோம் என்ற கவலை அவனுக்கில்லை. அவன் சொன்னான்:

“ஐயா, இந்தக் கொலைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. ஏற்கெனவே நான் மூன்று கொலைகள் செய்திருக்கிறேன். ஒவ்வொரு கொலை செய்யும்போதும் நான் ஊரில் இல்லாதது மாதிரி `அலிபி’ தயார் செய்துவிட்டு அந்தக் கொலையைச் செய்வேன். மூன்று கொலைகளிலும் நான் விடுதலையானேன். இந்தக் கொலை நடந்த அன்று நான் மாயவரத்திலேயே இருந்தேன். ஆண்டவன்தான் என்னை அங்கே இருக்க வைத்திருக்கிறான். பல நாட்களாக எனக்கு வலைவீசிய போலீசார், சரியான சாட்சியங்களோடு என்னைக் கைது செய்துவிட்டார்கள். காரணம், கொலை செய்தவர்களிலே மூன்று பேர் என் சொந்தக்காரர்கள். சாட்சியம் சரியாக இருந்ததால், எனக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு விட்டது. ஐயா! இந்தக் கொலைக்காக நான் சாகவில்லை. ஏற்கெனவே செய்த கொலைகளுக்காகவே சாகப் போகிறேன்.”

அவன் சொல்லி முடித்தபோது, `அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்ற பழமொழியே என் நினைவுக்கு வந்தது.

அப்போது மாலை ஐந்து மணி இருக்கும். அறைக்கதவு மூடப்படும் நேரம். நானும் தர்முவும் எங்களுடைய அறைக்குத் திரும்பினோம்.

தர்மு தன்னையும் மறந்து சொன்னார்,

“என்னதான் சொல்லையா, செய்யற பாவம் என்றைக்கும் விடாதய்யா!”

ஆமாம், பாவம் கொடுத்த, `போனஸ்’ தான் செய்யாத கொலைக்குத் தண்டனை.

அன்று இரவு நான் தூங்கவே இல்லை.

காலை ஐந்து மணிக்கு, “முருகா! முருகா!” என்று பலத்த சத்தம்.

கைதிகள் தூக்குமேடைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள்.

அப்போது நான் உணரவில்லை. இப்போது உணருகிறேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

5.மறுபடியும் பாவம் புண்ணியம் 

இந்து மதத்தைப் பற்றி எழுத வந்து எங்கெங்கோ நடந்த சம்பவங்களை விரித்துக் கொண்டு போகிறாயே, ஏன்?” என்று நீ கேட்பது எனக்குப் புரிகிறது.

இந்து மதத்தைப் பற்றி ராமகிருஷ்ணரும், விவேகானந்தரும், காஞ்சி ஆசாரிய சுவாமிகளும், விரிவுரை நிகழ்த்தும் வாரியாரும், பிறரும் சொல்லாத விஷயங்கள் எதையும் நான் புதியதாகச் சொல்லப் போவதில்லை.

ஆனால், அவர்கள் சொன்னபடியேதான் உன் வாழ்க்கை நடக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுவது என் கடமை.

“ஒவ்வொரு ஒலிக்கும் எதிரொலி இருக்கிறது” என்பது அவர்கள் வாதம்.

அப்படி விவாதித்தபோது கண்ணெதிரே நடந்த சாட்சியங்களை அவர்கள் காட்டவில்லை. தத்துவார்த்த விளக்கமே கூறினார்கள்.

அந்தத் தத்துவார்த்தம் என்னைப் போன்றவர்களுக்கு.

அந்தத் தத்துவப்படி நடந்த சம்பவங்களை நான் எழுதுவது உன்னைப் போன்றவர்களுக்கு.

பாவம் புண்ணியம் என்பதையெல்லாம், வெறும் தத்துவமாகவே கேட்டுக் கொண்டிருந்த மனிதனுக்கு சில நிகழ்ச்சிகளைச் சுட்டிக் காட்டினால் விளங்கும் என்பதற்காகவே இதை நான் எழுதுகிறேன்.

வாழ்க்கை ஒழுக்கத்தை, சமுதாய ஒழுக்கத்தை அதிகமாக வற்புறுத்துவது இந்து மதம்தான்.

அதன் பண்பாடுகள் உன்னதமானவை; அதன் சடங்குகள் அர்த்தமுள்ளவை.

மங்கல வழக்கு, அமங்கல வழக்கு எனப் பிறந்தது இந்துக்களிடம்தான். சில சின்னங்களை மங்கலமாகவும், சிலவற்றை அமங்கலமாகவும் அவர்கள் காட்டினார்கள்.

மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும் வீட்டில், அமங்கல வார்த்தைகூடக் கேட்கக்
கூடாது என்றார்கள்.

பெண்ணுக்கு மங்கலம் என்பது தாலி.

திருமணத்தில் கட்டப்படும் அந்தத் தாலியை மரணத்தின் போது தான் கழற்ற வேண்டும்.

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போதுகூடக் கழற்றக் கூடாது. அவ்வளவு புனிதமானது அது.

ஒரு உத்தமியின் கழுத்திலுள்ள தாலியை யார் அபகரித்தாலும், அந்தத் தாலி அவர்கள் குடும்பத்தையே அழித்துவிடும் என்பது, இந்துக்கள் நம்பிக்கை.

எனக்கொரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.

பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னால் நான் படம் எடுக்கத் தொடங்கியபோது, எனது பாட்டுத்திறமையை மட்டுமே வைத்து, ஒரு படமெடுக்க விரும்பினேன்.

நன்கு பாடக்கூடிய ஒரு நடிகரை அதற்கு ஏற்பாடு செய்தேன்.

ஒரு காலத்தில் ஓகோ என்று விளங்கிய அந்த நடிகர் நான் ஒப்பந்தம் செய்தபோது வறுமையிலிருந்தார். அவருடைய மனைவியின் கழுத்தில் தங்க மாங்கல்யம் இல்லை. அரக்கு மஞ்சளை மஞ்சள் நூலில் கோர்த்து அணிந்திருந்தார்.

தாலி ஓரிடத்தில் அடகு வைக்கப்பட்டிருப்பதாக நடிகர் கூறினார். உடனே நான், அதற்கு வேண்டிய பணத்தை எடுத்துக் கொண்டு அவரைக் கூட்டிக்கொண்டு, அடகு பிடித்தவர் வீட்டிற்குப் போனேன்.

நடிகருடைய எல்லா நகைகளுமே அவரிடம்தான் அடகு வைக்கப்பட்டிருந்தன. தாலிக்கு வேண்டிய பணத்தை மட்டும் கொடுத்துத் தாலியைத் திருப்பிக் கேட்டேன்.

அவர் பணத்தையும் வாங்கிக்கொண்டு, “ஏராளமான வட்டி பாக்கிஇருக்கிறது, இதை வட்டிக்கு வரவு வைத்துக் கொள்கிறேன்; தாலியைத் தரமுடியாது” என்று சொல்லிவிட்டார்.

பணம் கொடுத்தும் அந்தத் தாலி கிடைக்கவில்லை.

பிறகு நான் மேலும் கொஞ்சம் பணம் கொடுத்து அவர் புதிய தாலியையே வாங்கி, தன் மனைவியின் கழுத்தில் கட்டினார்.

என் படம் நடந்து கொண்டிருந்தபோதே, அந்த நடிகர் `இன்சால்வென்ட்’ ஆனார்.

ஆனால், மூன்றாவது மாதமே படம் வெளிவந்ததும் பத்துப் படங்களுக்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுப் பணமும் வந்தது. `இன்சால்வென்சி’யும் ரத்தாயிற்று. அவருடைய சொத்துக்கள் அவருக்கே திரும்பி வந்தன. இன்று அவர் சுகமாக நாடகங்களிலும் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அவருடைய மனைவி உத்தமி. புராண காலத்து சீதை, வரலாற்றுக் காலத்துக் கண்ணகிக்கு நிகரான சத்தியவதி.

அந்தச் சத்தியவதியின் தாலியை வைத்திருந்தாரே அவரது குடும்பம் பட்டபாடும், அதில் ஏற்பட்ட குழப்பமும், அவர் நோயில் இழுத்துக் கிடந்து மாண்டதும் விவரிக்க முடியாத பெருங்கதை.

அந்தத் `தாலி’ அவரது குடும்பத்தின் நிம்மதியையே அழித்து விட்டது. இந்துக்களின் மங்கல சூத்திரம் தன் சக்தியைக் காட்டிவிட்டது.

பாவத்தின் விலை, அவரது வாழ்நாளிலேயே கிடைத்து விட்டது. நிற்க.

“அன்னையும் பிதாவும் முதல் தெய்வம்” என்பது இந்துக்கள் சம்பிரதாயம்.

“தாயைப் பணிந்தவன் கோவிலுக்குப் போக வேண்டாம்” என்பார்கள்.

தாய் தந்தையைச் சுற்றி வந்த கணபதிக்குத்தான் சிவபெருமான் மாம்பழத்தை அளித்தார்; உலகத்தைச் சுற்றி வந்த முருகனுக்கு அல்ல.

தாய் தந்தையருக்குத் தொண்டு செய்து கொண்டிருந்த ஒரு பக்தன், மாறுவேடத்தில் வந்த இறைவனைக் கவனிக்கவில்லை என்றும், இறைவன் ஆத்திரமுற்றபோது `தன் முதற்கடமை இதுதான்’ என்று அவன் உறுதியாகக் கூறினான் என்றும், இறைவனே மனமயங்கி, அவன் பாதத்தில் விழுந்தான் என்றும் நாம் படிக்கிறோம்.

அந்தத் தாய் தந்தையரை மனமார நேசிக்கும் எவனுக்கும் எதிர்காலம் உண்டு.

நான் கண்ணெதிரிலேயே பார்க்கிறேன், பலரை.

ஆனால், தாயின் குரலைக் கேளாத ஒருவருடைய கதையை உனக்குச் சொல்ல வேண்டும்.

அவர் என்னுடைய சமூகத்தைச் சேர்ந்தவர்; ஏழைக் குடும்பத்திலே பிறந்தவர்.

அவரது விதவைத் தாய் தன் வயிற்றைக் கட்டிவைத்து மகனுக்குச் சோறூட்டுவாள்.

எங்கள் பக்கத்தில் பிள்ளைகள் இல்லாத பணக்காரர்கள் `சுவிகாரம்’ எடுக்கும் பழக்கம் பரவலாக உண்டு.

அந்தச் சுவிகாரத்தில் பிள்ளையைப் பெற்ற தாய்க்கு விலையாக ஒரு தொகையையும் தருவார்கள்.

அந்தத் தொகைக்காகவும், தன் பிள்ளையாவது நல்ல இடத்தில் வாழட்டுமே என்று சுவிகாரம் விட்டு விட்டாள், அந்தத் தாயார்.

ஏழை மகன் லட்சாதிபதியானான். பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். வசதியான வாழ்க்கையில், பெற்ற `தாயையே’ மறந்துவிட்டான்.

அவனால் மறக்கமுடிந்தது; தாயினால் அது முடியவில்லை.

ஒருநாள் நான் அந்த மனிதனைப் பார்க்கப் போனேன். காய்கிற வெயிலில், அந்த வீட்டின் வெளித்திண்ணையில் அந்த அம்மையார் உட்கார்ந்திருந்தார்கள்.

என்னைப் பார்த்ததும் “ஐயா, நீ யார்?” என்று கேட்டார்கள்.

“என்ன ஆச்சி? என்ன வேண்டும்?” என்று நான் கேட்டேன்.

உடனே அந்த மூதாட்டி, “தம்பி, உள்ளே இருப்பது என் பிள்ளைதான். சுவிகாரம் விட்டு
விட்டேன். அவனைப் பாக்குறதுக்காகக் காலையில் இருந்து திண்ணையிலேயே உட்கார்ந்திருக்கேன். ஒருத்தரும் விடமாட்டேங்கிறாங்க. நீயாவது எம் மகங்கிட்ட கொஞ்சம் சொல்லேன்” என்றார்கள்.

என் கண்கள் கலங்கிவிட்டன.

ஆசையாக, ஒரு கூடையில் பணியாரமும் உளுந்துவடையும் கொண்டு வந்து, துணியால் அதை மூடி வைத்திருக்கிறார்கள், தன் மகனுக்குத் தன் கையாலேயே ஊட்டி விடுவதற்காக.

நான் வேகமாக உள்ளே போய், அந்தப் பையனைப் பார்த்து, “உன்னைப் பெற்ற தாயார் வந்திருக்கிறார்கள். கொஞ்சம் உள்ளே கூப்பிட்டு உட்கார வையப்பா” என்றேன்.

அவர் கோபமாக, “அவுங்களுக்கு எப்பவும் இதே வேலையாய்ப் போச்சு. வராதே வராதேன்னா எதுக்காக வர்ராக?” என்று கூறிவிட்டு, கணக்குப் பிள்ளையை அழைத்து, “இந்தா, ஆத்தா வந்திருக்காளாம், ஒரு இருநூறு ரூபாய் கொடுத்து, இனிமே இந்தப் பக்கம் வரவேண்டாம் என்று சொல்லு” என்றார்.

“அதை நீயே கூப்பிட்டுச் சொல்லேன்” என்றேன் நான்.

அவர் மறுத்துவிட்டார், மனைவிக்குப் பயந்து.

கணக்குப்பிள்ளை அந்தப் பணத்தைக் கொண்டு போய்க் கொடுத்ததும் அந்த அம்மையார்.

“அப்பச்சி! தம்பி! ஐயா! ஒருதரமாவது பார்த்துட்டுப் போயிடுறேன்!” என்று சத்தம் போட்டார்கள்.

அந்தக் குரல் அந்தப் பாவியின் காதில் விழவில்லை. விளைவு என்ன தெரியுமா?

தாயின் குரலைக் கேட்காத அந்தக் காதுகள், வேறு எந்தக் குரலையும் கேட்க முடியாதபடி, `டமாரச்’ செவிடாகி விட்டன.

மனைவி மயக்கத்தில் மாதாவை மறந்தவன் கதி என்ன என்பதைப் புராணங்களைப் படித்து நீ நம்பவில்லையானால், உன் பக்கத்து வீடுகளில் கேட்டுப் பார். இப்படியொரு சம்பவம் அங்கேயும் நடந்திருக்கும்.

தாய் தகப்பனுக்குச் செய்யும் பாவம் உன் தலையைச் சுற்றி அடிக்கும்.

ஆயிரம் மனைவிமார்களை விலைக்கு வாங்கலாம்; அன்னையும் பிதாவும் மறுபடி வரமுடியாது.

இந்துக்கள் சொன்ன தத்துவம் வேடிக்கைக் கதையல்ல.

`யாருக்கு நீ பாவம் செய்தாலும் அதற்குத் தண்டனை உண்டு’ என்பது அழிக்க முடியாத உண்மை.

இத்தகைய நிகழ்ச்சிகளை நான் விவரித்துக் கொண்டே போகலாம்.

எவ்வளவோ பாவிகள் தங்கள் வாழ்நாளிலே தண்டிக்கப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன்.

`பாவத்தின் அளவு எவ்வளவோ அவ்வளவே தண்டனை’ என்பது, எவ்வளவு உண்மை!

இறைவன் தீர்ப்புகள் எப்படி இருக்கும் என்பதை இந்துக்கள் சொன்னது போல் வேறு யார் சொன்னார்கள்?

இறைவா, இந்து சமூகம் உன்னையும் உன் ராஜாங்கத்தையும் சரியாக அளந்து வைத்திருப்பதை எண்ணி எண்ணி நான் வியக்கிறேன்.

சொந்த நிகழ்ச்சிகளில் இந்த அனுபவத்தைக் காணாதவரை, ஞானமார்க்க உபதேசிகளை நான் கேலி செய்ததுண்டு.

ஒவ்வொரு படிக்கட்டிலும், ஒவ்வொரு உண்மையைக் காணக் காண, நமது ஞானிகள் `அறிவுலகத்தின் சுடரொளிகள்’ என்றுதான் நான் நம்புகிறேன்.

இசையின் சுவையைப் பாடல் அதிகப்படுத்துவது போல், தத்துவத்தின் உண்மையைச் சம்பவங்களே உறுதி செய்கின்றன.

`இந்து மகாசமுத்திரம்’ என்ற பெயர், இந்துமதத்துக்கே பொருந்தும்.

`பாவமும் குற்றமும் செய்துவிட்டுத் தெய்வத்தை வணங்கினால் பலன் உண்டா?’

நன்றி -தினத்தந்தி



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

6.புண்ணியம் திரும்ப வரும் ! 

ஆனால், செய்த வினையும் செய்கின்ற தீவினையும், ஓர் எதிரொலியைக் காட்டாமல் மறையமாட்டா.

நீ விதைத்த விதைகளை நீயே அறுவடை செய்த பின்னால்தான் அந்த நிலத்தில் வேறு பயிர்களைப் பயிரிட முடியும்.

கொலை, களவு, சூது அனைத்தையும் செய்துவிட்டு, “குமரா! முருகா!” என்று கூவினால் குமரன் நீ வரும் கோவிலுக்குக் கூட வரமாட்டான்.இதிலும் எனக்கோர் அனுபவம் உண்டு.

என்னிடம் படம் வாங்கிய ஒருவர், படத்துக்காக வசூலான பணம் கணக்குக் காட்டாமல், பொய்க் கணக்கு எழுதி, நான் அவருக்கு முப்பதினாயிரம் ரூபாய் தரவேண்டும் என்று கோர்ட்டிலே வழக்குத் தொடர்ந்தார்.

வேறு வழியில்லாமல் வயிற்றெரிச்சலோடு நானும் கொடுக்க வேண்டி வந்தது.

அவர் ஏற்கெனவே ஒரு பணக்காரச் செட்டியாரையும், ஆச்சாள்புரத்துக்காரர் ஒருவரையும் ஏமாற்றியவர்.

அவரது மூலதனமே ஏமாற்றுவதுதான்.

ஏமாற்றி என்ன பயன்?

அத்தனை பணமும் போய், நகை நட்டுகளும் போய் அன்றாடச் சோற்றுக்கே இன்று அலைமோதுகிறார்.

அவரை அடிக்கடி வடபழனி கோவிலில் காணலாம்.

உடம்புக்குச் சட்டையில்லாமல் இடுப்புக்குத் துண்டு கட்டிக் கொண்டு, அந்தப் `பாபாத்மா’ தினமும் கோவிலுக்கு வருகிறது.

நெற்றியில் கட்டுக்கட்டாக விபூதி; இரண்டு காதிலும் கதம்பப் பூக்கள்; கையில் தேங்காய் பழம் கொண்ட தட்டு.

அந்த மனிதர் தினந்தோறும் முருகனைத் தேடுகிறார்.

முருகனோ அவரைக் கண்டாலே ஓடுகிறான்.

ஒருவன் வந்த வழியைப் பார்த்துத்தான், வரப்போகும் வழியைத் திறந்து விடுகிறான், கந்தன்.

ராஜாங்கம் கட்டி ஆண்டவனும்கூட, நேர்மை தவறி நடந்தால் நிம்மதி இல்லாமல் துடிக்கிறான்.

இறைவனின் தராசு வணிகனின் தராசு அல்ல; அது எடையைச் சரியாகவே போடுகிறது.

குளத்திலே ஒரு ரூபாயைத் தவறிப் போட்டுவிட்டால், குளம் வற்றியதும் அது உன் கைக்கே கிடைக்கிறது, அது நேர்மையாகச் சம்பாதித்த பணமாக இருந்தால்.

ஒரு நடைபாதையில் நீ கண்ணாடித் துண்டைப் போட்டால், நீ திரும்பி வரும்போது, அது உன் காலிலேயே குத்துகிறது.

குளிக்கும் அறையில் நான் எச்சிலைத் துப்பிவிட்டேன்.

ஒரு மணி நேரம் கழித்து நான் உள்ளேபோனபோது, அது என் காலையே வழுக்கி விட்டது.

விதி என்பது இறைவன் விதித்தது மட்டுமல்ல; நீயே விதித்ததுமாகும்.

ஊரையெல்லாம் கேலி செய்த ஒரு பணக்காரர், ஊர் முழுவதும் கேலி செய்யும் நிலையில் வாழ்ந்து மடிந்ததை நான் அறிவேன். அவரும் பக்தர்தான்!

பக்தி செய்யும் எல்லோருக்கும் பரமனருள் கிடைப்பதில்லை.

அது பாவம் செய்யாதவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

`உண்மையே தெய்வம்,’ `அன்பே தெய்வம்’ என்று இந்துமதம் சொன்னது அதனால்தான்.

`நம்பினோர் கெடுவதில்லை’. இது நான்கு மறைத் தீர்ப்பு என்பது உண்மை தான்.

ஆனால் `கெட்டவன்’ நம்பினால் அவனருள் கிட்டுவதில்லை.

அதுவும் உண்மைதான்.

காலங்களை நிர்ணயிக்கின்றவனும், வாழ்க்கையின் கதியையே உருவாக்குகின்றவனுமான பரம்பொருள், உன் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை, ஆத்மாவுக்கே பொறுப்பேற்றுக் கொள்கிறான்.

மதத்துறையை `ஆத்மார்த்தத் துறை’ என்பது அதனால்தான்.

நதியின் ஓட்டம் பள்ளத்தை நோக்கியே; அந்த நாயகனின் ஓட்டமும் எளிமையான நேர்மையை நோக்கியே.

ஒன்று, அறியாமல் செய்யும் தவறுகள் பாவங்கள் அல்ல; அவை வெறும் தவறுகளே!

அவற்றுக்கு உடனே மன்னிப்பு உண்டு.

அறிந்து செய்யும் தவறு, தவறல்ல; அது குற்றம்.

அதற்கு மன்னிப்புக் கிடையாது!

நான் பாவம் என்று குறிப்பிடும்போது, நீ அறியாமல் செய்த பிழைகளை எல்லாம் பாவக்கணக்கில் சேர்க்காதே.

சிறுவயதில் கடன்தொல்லை தாங்காமல் நான் `திருடியிருக்கிறேன்’, என் தாயின் பணத்தைத்தான்.

ஆனால் திருடிவிட்டு நிம்மதியில்லாமல் இருந்திருக்கிறேன்.

கடவுளை வேண்டியிருக்கிறேன் “இறைவா மன்னி” என்று.

அந்தத் தவற்றைக் கடவுள் மன்னிக்கவில்லை என்றால் இந்த வாழ்க்கையை எனக்கு அருளியிருப்பாரா?

என்னுடைய நண்பர்களில் என்னிடம் உதவி பெறாதவர்கள் குறைவு.

உதவி பெற்றவர்களில் நன்றியுடையவர்கள் குறைவு.

என்னுடைய ஊழியர்களில் என்னை ஏமாற்றாதவர்கள் குறைவு.

ஏமாற்றியவர்களில் நன்றாக வாழ்கின்றவர்கள் குறைவு.

எழுத்தின் மூலமே சம்பாதித்தவர்களில் என்னைப்போல் சம்பாதித்தவர்கள் குறைவு.

சம்பாதித்ததை அள்ளி இறைத்ததில், என்னைப்போல் அள்ளி இறைத்தவர்கள் குறைவு.

இவ்வளவு அறியாமைக்கு இடையிலும், ஏதோ ஒரு சுடரொளி என்னைக் காப்பாற்றுகிறது.

ஏன் காப்பாற்றுகிறது? எதனால் அது என்னைக் காப்பாற்றுகிறது?

என் தாய் தகப்பன் செய்த தருமங்களை நினைக்கிறேன்.

`தர்மம் தலைகாக்கும்’ என்ற இந்துக்களின் பழமொழி எனக்கு நினைவுக்கு வருகின்றது.

செய்த பாவம் தலையிலடிக்கிறது, செய்த புண்ணியம் தலையைக் காக்கிறது.

ஆம்; செய்த புண்ணியம் திரும்பி வருகிறது.

புண்ணியம் என்பது, என்றும் எதிலும் நீ செய்யும் நன்றி!

பாவத்தில் முதற்பாவம், நன்றி கொல்லுதல்.

கஷ்டகாலத்தில் எனக்கு ஒரு ரூபாய் உதவியவரை நான் ஞாபகத்தில் வைத்துக் கைம்மாறு செய்திருக்கிறேன்.

அந்த நாயகன் அறிய நான் நன்றி கொன்றதில்லை.

ஆகவே பாவம் செய்யாமல், புண்ணியம் செய்து கொண்டே இறைவனைத் தியானித்தால் உன் வாழ்நாளிலேயே உனக்கொரு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.

நான் தத்துவம் பேசவில்லை; அனுபவம் பேசுகிறது.

இந்து மதத்தின் ஒவ்வொரு அணுவையும் உணர்வதற்கு எதையும் நான் படிக்கவில்லை.

சாதாரணப் பழமொழிகளும் அனுபவத்தில் அவற்றின் எதிரொலிகளுமே, இந்துமதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையை எனக்கு உண்டாக்கியிருக்கின்றன.

அறியாமல் செய்கின்ற பிழைகள் அப்பொழுதே மன்னிக்கப்படுகின்றன

ஆண்டவனின் அவதாரங்களேகூட, அறியாமல் தவறு செய்திருப்பதாக வழக்குக் கதைகள் உண்டு.

ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஒருமுறை கங்கைக்குக் குளிக்கச் சென்றார்.

அவரது அம்பறாத் தூணியில் ஒரே ஒரு அம்பு மட்டுமே இருந்தது.

அந்த அம்பைப் படுக்கை வசமாக வைக்கக்கூடாதென்ற மரபுப்படி, அதைப் பூமியிலே குத்தி வைத்தார்.

“ஒற்றை அம்பை ஊன்றி வை” என்பது வழக்கு.

அம்பை ஊன்றிய ராமபிரான், கங்கையில் குளித்து விட்டுக் கரையேறினார்.

ஊன்றிய அம்பை எடுத்தார்.

அதிலொரு தேரைக் குஞ்சு குத்தப்பட்டிருந்தது.

பூமிக்குள்ளிருந்த தேரைக் குஞ்சை அவர் அறியாமல் குத்திவிட்டார்.

தேரைக் குஞ்சு சாகும் தருவாயிலிருந்தது.

ராமபிரான் கண்கள் கலங்கிவிட்டன.

“ஐயோ, தேரையே! நான் குத்தும்போது நீ கத்தியிருந்தால் காப்பாற்றி இருப்பேனே, ஏன் கத்தவில்லை?” என்றார்.

அதற்குத் தேரை சொன்னது:

“பெருமானே! யாராவது எனக்குத் துன்பம் செய்யும் போதெல்லாம் நான் `ராமா ராமா’ என்றுதான் சத்தமிடுவேன். அந்த ராமனே என்னைக் குத்துகிறார் என்னும்போது, யார் பெயரைச் சொல்லி ஓலமிடுவேன்?”

ராமபிரான் கண்ணீரோடு சொன்னார்:

“தேரையே, என்னை மன்னித்துவிடு. இது நான் அறியாமல் செய்த பிழை.”

தேரை சொன்னது,

“பெருமானே! `அறியாமல் செய்கின்ற பிழைகள் அப்பொழுதே மன்னிக்கப்படுகின்றன’ என்று சொன்னது உன் வாக்குத்தானே!”

தேரையின் ஆவி முடிந்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

7. விதிப்படி பயணம்! 

உனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையே `விதி’ என்று கூறப்படுகிறது.

உனது வாழ்க்கை எந்தச் சாலையில் போனாலும், அது இறைவன் விதித்ததே.

ஜனனம் உலகமெங்கும் ஒரே மாதிரி இருக்கிறது.

பத்தாவது மாதம் ஜனனம் என்பது நிரந்தரமானது.

ஆனால் வாழ்க்கை ஏன் பல கோணங்களில் போகிறது? மரணம் ஏன் பல வழிகளில் நிகழ்கிறது?

நீ கருப்பையில் இருக்கும் போது, நீ போகப் போகிற பாதைகளும், சாகப்போகிற இடமும், நேரமும், உன் மண்டை ஓட்டுக்குள் திணிக்கப்படுகின்றன.

நீ எங்கே போனாலும், எப்படி வாழ்ந்தாலும், அது இறைவன் விதித்ததே.

மனத்தின் சிந்தனைப் போக்கு எப்படி வேண்டுமானாலும் போகலாம்; ஆனால் அது நடப்பதும் நடக்காததும் உன் விதிக்கோடுகளில் அடங்கி இருக்கிறது.

`ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினும் தான்முந் துறும்’

என்றார் வள்ளுவர்.

`ஊழ்’ என்பது பூர்வ ஜென்மத்தையும், விதியையும் குறிக்கும்.

பூர்வ ஜென்மத்தின் எதிரொலியைக் கொண்டே அந்த ஜென்மத்தின் விதி நிர்ணயிக்கப் பெறுகிறது.

அதனை `ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்’ என்றான் இளங்கோ.

போன ஜென்மத்தில் உன் விதி பாவம் செய்யும்படி விதிக்கப்பட்டிருந்தால், அதற்கான பரிகாரம் இந்த ஜென்மத்தில் எழுதப்படுகிறது.

ஆகவே விதியின் கோடுகள்தாம் உன்னை ஆட்சி செய்கின்றன என்பது, இந்துக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

நீ எண்ணியது நடந்தாலும் நடக்கா விட்டாலும், எண்ணாதது நடந்தாலும், யாவும் உன் விதிரேகைகளின் விளைவே.

முயற்சி கால் பங்கு; விதியின் ஒத்துழைப்பு முக்கால் பங்கு.

“எல்லாவற்றுக்கும் காலநேரம் வர வேண்டும்”என்கிறார்களே இந்துக்கள், அதற்கு என்ன காரணம்?

இன்ன காரியங்கள், உனக்கு இன்ன காலங்களில் நடக்கும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது; அவ்வளவுதான்.

நினைவுகளின் மயக்கத்தை விதி ஒழுங்குபடுத்துகிறது.

இரண்டாவது உலக யுத்தத்தின் போது, ஹிட்லருக்கு இருந்த வசதியும், ஆயுதப் பெருக்கமும் வேறு எந்த நாட்டிற்கும் இல்லை.

ஒரே நாளில் போலந்தைப் பிடித்தான்.

வெறும் மிரட்டலிலேயே செக்கோஸ்லாவாகியாவைப் பிடித்தான்.

குண்டு போடாமலேயே பிரான்ஸைப் பிடித்தான்.

அவன் விரும்பியிருந்தால் ஐரோப்பாவையும், ஆறு நாட்களில் பிடித்திருக்கலாம்.

வெறும் வாய் வேட்டுக்களையே விட்டுக்கொண்டிருந்த சர்ச்சிலை, அவன் கனடாவுக்குத் துரத்தியடித்திருக்கலாம்.

(சர்ச்சில் தென் அமெரிக்காவுக்கு ஓடத் திட்டமிட்டிருந்தார்.)

அகில ஐரோப்பாவையும் பிடித்து விட்டால், உலகத்தில் ஐரோப்பிய நாடுகளுக்குக் காலனிகளாக இருந்த சுமார் எண்பது ஆசிய ஆப்பிரிக்க, அரேபிய நாடுகள் குண்டுகள் போடாமலேயே அவன் கைக்கு இயற்கையாகவே வந்திருக்கும்.

இது சுலபமாக நடந்திருக்கக் கூடியதே.

ஆனால், விதி ஹிட்லரின் ஆணவத்தை ஆட்சி புரிந்தது.

பிரிட்டனைக் `கோழிக் குஞ்சு’ என்று அவன் கேலி செய்துவிட்டு, `யானையைச் சாப்பிட்டால்தான் என் பசி அடங்கும்’ என்று, சோவியத் யூனியனுக்குள் நுழைந்தான்.

`அவனது சவக்குழி அங்கேதான் தோண்டப்படுகிறது’ என்று விதி சிரித்தது.

சோவியத் யூனியனின் பருவகாலத்தில் அவன் சிக்கிச் சிக்கி இழுபட; அமெரிக்காவும், பிரிட்டனும் தங்களைத் தயார் செய்து கொண்டுவிட்டன.

எச்சரிக்கையாக இருந்திராததால், உலகத்தையே ஆண்டிருக்கக் கூடிய ஹிட்லர், தன் பிணத்தைக்கூடப் பிறர் பார்க்க முடியாதபடி இறந்து போனான்.

எந்த மனிதனின் பாதையையும் திசை திருப்பிவிடும் விதி, ஹிட்லரின் ஆணவத்தையும் அழிவை நோக்கித் திருப்பி விட்டது.

உலக வரலாறுகளைக் கூர்ந்து நோக்குங்கள்.

நினைத்ததை எல்லாம் நடத்தி முடித்தவன் எவன்?

நினைப்பவன்தான் நீ; முடிப்பவன் அவன்.

இந்துக்களின் தத்துவத்தில் இது முக்கியமானது.

நம்முடைய லகான் இறைவன் கையிலே உள்ளது என்பதை, இந்துமதம்தான் வலியுறுத்துகிறது.

பிச்சைக்காரி ராணியான கதையும், ராஜா பிச்சைக்காரனான கதையும் `அதிர்ஷ்டம்’ என்ற பெயரிலோ, `துரதிர்ஷ்டம்’ என்ற பெயரிலோ விதியின் பரிசளிப்பு.

“ஐயோ! எவ்வளவோ ஆசை வைத்திருந்தேனே, இப்படி ஆகிவிட்டதே” என்று நீ பிரலாபித்துப் பயனில்லை.

“அப்படித்தான் ஆகும்” என்று நீ ஜனிக்கும் போது எழுதப்பட்டிருக்கிறது.

ராமனையும் விதி ஆண்டது, சீதையையும் விதி ஆண்டது.

காமனையும் விதி ஆண்டது, ரதியையும் விதி ஆண்டது.

சோழநாட்டுக் கோவலனின் விதி, மாதவியின் மயக்கத்திலே இருந்தது.

கண்ணகியின் விதி, மதுரையிலே இருந்தது.

பாண்டியன் நெடுஞ்செழியன் விதி, ஒரு காற்சிலம்பில் அடங்கியிருந்தது.

அலெக்சாண்டரின் விதி, பாபிலோனியாவில் முடிந்தது.

ஜூலியஸ் சீஸரின் விதி, சொந்த நண்பனின் கையிலே அடங்கியிருந்தது.

நெப்போலியனின் விதி, அவனது பேராசையிலே அடங்கியிருந்தது.

காந்திஜியின் விதி, கோட்ஸேயின் கைத்துப்பாக்கியில் அடங்கி இருந்தது.

அடிமைகள் கிளர்ந்து எழுந்ததும், ஆதிக்க வெறியர்கள் விழுந்து துடித்ததும், காலமறிந்து கடவுள் விதித்த விதி.

கடவுளே இல்லை என்று வாதிடுவோரும் நீண்ட காலம் வாழவேண்டும் என்று இறைவன் ஏன் விதிக்கிறான்?

தங்கள் கொள்கைகள், தங்கள் கண் முன்னாலேயே தோல்வி அடைவதைக் கண்டு சாகவேண்டும் என்றுதான்!

உண்மையான பக்தி உள்ள சிலருக்கு ஆண்டவன் ஏன் நீண்ட ஆயுளைத் தருகிறான்?

`தாங்கள் பக்தி செலுத்தியது நியாயமே’ என்று அவர்களும், அவர்களைப் பார்த்துப் பிறரும் உணர்வதற்காகத்தான்.

இறைவன் விதியை ஒரு வேடிக்கைக் கருவியாக வைத்திருக்கிறான்.

சக்தியும் சிவனும் பூமியில் பல வேடங்களில் பிறந்ததாக இந்துக் கதைகள் கூறுவது, இறைவன், தானும் விதிக்கு ஆட்பட்டு, அதன் சுவையை அனுபவிக்கிறான் என்பதைக் காட்டுவதற்காகத்தான்.

அந்தக் கதைகளை வெறும் கதைகளாக நோக்காமல், இறைவனின் தத்துவங்களாக நோக்கினால், மானிடத் தத்துவத்தை எப்படி இறைவன் வகுத்திருக்கிறான் என்பதை அறிய முடியும்.

விதி-மதி ஆராய்ச்சியில், மதியையே விதிதான் ஆட்சி செய்கிறது என்பதை நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

அதை ஒரு கதையாக மூன்று வருடங்களுக்கு முன்பு எழுதினேன்.

பிரவாகம்

ஞானி பிரகதீஸ்வரர், திருக்கோவிலுக்கு விஜயம் செய்தார்.

அவர் பெரிய மகான். உண்மையிலேயே ஞானி. சிறு வயதிலேயே துறவு பூண்டவர்.

கல்மண்டபத்தின் வடக்கில், அவருக்காக மேடை அலங்கரிக்கப்பட்டது.

எதிரே ஆண்களும் பெண்களும் கணக்கிலடங்காது கூடியிருந்தனர்.

வேதங்கள் பற்றியும், புராணங்களைப் பற்றியும் விளக்கிக் கொண்டே வந்த ஞானியார், `யாரும் கேள்விகள் கேட்கலாம். பதில் சொல்லப்படும்’ என்று தெரிவித்தார்.

யார் என்ன கேள்வி கேட்கப் போகிறார்கள் என்பதையே ஒவ்வொருவரும் ஆவலாக எதிர்பார்த்தார்கள்.

மண்டபத்தின் மேற்கு மூலையிலிருந்து ஓர் உருவம் மெதுவாக எழுந்து நின்றது.

நடுத்தர வயது; தீட்சண்யமான கண்கள்; பந்தபாசங்களில் அடிபட்டுத் தேறி வந்தது போன்ற ஒரு தெளிவு.

சபையில் இருந்த எல்லோரும் அவரையே திரும்பிப் பார்த்தார்கள்.

“தாங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்கள்?” என்று ஞானியார் கேட்டார்.

அவர் சொன்னார்:

“சுவாமி!

விதியையும் மதியையும் பற்றி வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சர்ச்சைகள் தோன்றி முடிவுக்கு வராமல் முடிந்திருக்கின்றன.

“விதியை மதியால் வெல்லலாம் என்றும், மதியை விதி வென்று விடும்” என்றும், இரண்டு கருத்துகள் இன்னும் இருந்து கொண்டிருக்கின்றன.

“எது முடிவானதோ சாமிக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.”

கேள்வி பிறந்ததும், ஞானியார் லேசாகச் சிரித்தார்.

மண்டபத்தில் இருந்த எல்லோரையும் பார்த்து, “எல்லோரும் எழுந்து வெளியே செல்லுங்கள்; நான் கூப்பிட்ட பிறகு வாருங்கள்” என்றார்.

மண்டபம் காலியாயிற்று.

இரண்டு நிமிஷங்கள் கழித்து, “எல்லோரும் வாருங்கள்” என்றழைத்தார்.

திபுதிபுவென்று எல்லோரும் ஓடிவந்து அமர்ந்தார்கள்.

ஞானியார் கேட்டார்:

“குழந்தைகளே, இந்த மண்டபத்தில் உட்கார்ந்திருந்தவர்கள் வெளியே போய் மீண்டும் உள்ளே வந்திருக்கிறீர்கள். உங்களில் போன தடவை உட்கார்ந்த அதே இடத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் எத்தனை பேர்?”

எல்லோரும் விழித்தார்கள்.

நாலைந்து பேர் மட்டும் பழைய இடத்தில் அமர்ந்திருந்தார்கள்.

மற்ற எல்லோரும் இடம் மாறி இருந்தார்கள்.

கேள்வி கேட்டவரைப் பார்த்து, ஞானியார் சொன்னார்:

“பாருங்கள், இந்தச் சின்ன விஷயத்தில்கூட இவர்கள் மதி வேலை செய்யவில்லை.

கொஞ்சம் நிதானமாக யோசித்தால், இவர்கள் மெதுவாக வந்து, அவரவர் இடங்களில் அமர்ந்திருப்பார்கள்!

இவர்கள் மதியை மூடிய மேகம் எது?”

கேள்வியாளர் கேட்டார்:

“இது அவர்கள் அறியாமையைக் குறிக்கும்; இதை விதி என்று எப்படிச் சொல்கிறீர்கள்?”

ஞானியார் சொன்னார்:

“அறியாமையே விதியின் கைப்பாவை.

அறிவு எல்லோருக்குமே தெளிவாக இருந்துவிட்டால், விதியும் இல்லை, விதித்தவனும் இல்லை.”

கேள்வியார் கேட்டார்:

“மனிதனின் அறியாமையே விதி என்றால், விதிக்குத் தனி நியமங்கள் இல்லையா?”

ஞானியார் சொன்னார்:

“இருக்கின்றன!

இந்த உருவத்தில், இந்த இடத்தில் பிறக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லை.

உங்களைப் பிறக்க வைத்தது விதியின் பிரவாகம்.

இப்படித்தான் வாழவேண்டும் என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள்; அப்படி வாழவிடாமல் செய்வது விதியின் பிரவாகம்.

இந்தப் பெண்தான் எனக்குத் தேவை என்று முடிவு கட்டுகிறீர்கள்; அவளைக் கிடைக்க விடாமல் செய்வது விதியின் பிரவாகம்.

எப்போது நீங்கள் நினைத்தது நடக்கவில்லையோ, அப்போது உங்கள் நினைவுக்கு மேல் இன்னொன்று இருக்கிறது என்று அர்த்தம்.

அதற்கு நம் மூதாதையர் சூட்டிய பெயரே விதி.”

கேள்வியாளர் கேட்டார்:

“அந்த விதி எப்போது நிர்ணயிக்கப்படுகிறது? எங்கிருந்து தொடங்குகிறது?”

ஞானியார் சொன்னார்:

“சூன்யத்தில் நிர்ணயிக்கப்படுகிறது; ஜனனத்தில் தொடங்குகிறது.

தான் நினைத்தபடியெல்லாம் வாழ்க்கையை நடத்தி முடித்தவர்கள் எத்தனை பேர்?

வீரன் வெற்றி பெற்றால், அது வீரத்தால் வந்தது.

கோழை தோல்வியுற்றால், அது கோழைத்தனத்தால் கிடைத்தது.

ஆனால் வீரன் தோல்வியுற்றாலோ, கோழை வெற்றி பெற்றாலோ, அவை விதியால் நிர்ணயிக்கப்பட்டவை!

வரலாற்று நதியைத் தனிமனிதனின் சாகசங்கள் இழுத்துச் செல்வதில்லை.

விதியே அழைத்துச் சென்றிருக்கிறது.

கோவலனை மதுரைக்கு அழைத்ததும், பொற்கொல்லனைச் சந்திக்க வைத்ததும் விதி.

மாதர்களாலேயே ஆரம்பமான பிரெஞ்சு சாம்ராஜ்யம், மாதர்களாலேயே அழிவுற்றதற்குக் காரணம் விதி!

ஒன்று நடைபெற்ற பின்னால், `கொஞ்சம் அப்படிச் செய்திருந்தால் நடந்திருக்காதே’ என்று மதி சிந்திக்கிறது!

மதி ஏன் தாமதமாகச் சிந்திக்கிறது?

விதி முந்திக்கொண்டு விட்டது!”

கேள்வியாளர் கேட்டார்:

“அப்படியானால் மனிதனின் மதியால் ஆகக்கூடியது ஒன்றுமே இல்லையா?”

ஞானியார் சொன்னார்:

“இருக்கிறது!

பள்ளம் என்று தெரியும்போது, அதில் விழாதே என்று எச்சரிப்பது மதி.

அதைப் பள்ளம் என்று தெரியவைத்தது விதி.

விதி வாசலைத் திறந்து கொடுத்தால், மதி மாளிகைக்குள்ளே நுழைகிறது.

விதி வாசலை மூடிவிட்டால், மதி அதிலே மோதிக் கொண்டு வேதனை அடைகிறது.

விதியென்னும் மூலத்திலிருந்து முளைத்த கிளையே மதி.

தந்தையைக் கொன்று சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றிய இளவரசர்களைப்போல் மதி சிலநேரம் விதியை வென்றிருக்கலாம்.

ஆனால் விதி அந்த மதியின் குழந்தையாக மறுபடியும் பிறந்து தந்தையைக் கொன்றுவிடுகிறது.

நியமிக்கப்பட்ட தர்மங்கள் சலனமடைவதும், நியமிக்கப்படாதவை உறுதிபெறுவதும், நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியினாலே.

அதை என்ன பெயர் வைத்து அழைத்தாலும், அதுதான் நம்மை அழைத்துச் செல்கிறது.

சாமியாக இருந்தவன் யோகியாக மாறுவது அனுபவத்தால் வந்த மதி.

யோகி சாமியாக மாறுவது ஆசையின் மூலம் வந்த விதி.

தொடக்கம் பலவீனமானால், முடிவு பலமாகிறது.

தொடக்கம் பலமானால், முடிவு பலவீனமாகிறது.

தொடக்கமும் முடிவும் ஒரே மாதிரி இருந்தால் விதி வேலை செய்யவில்லை என்று அர்த்தம்.

அப்படி யாராவது இருக்கிறார்களா?”

ஞானியாரின் கேள்வி, கேள்வியாளரைச் சிந்திக்க வைத்தது.

கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் யோசித்தார்.

மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஞானியார் அமைதியாகக் கேட்டார்:

“உங்கள் மதி வேலை செய்யவில்லையா?”

கேள்வியாளர் அமர்ந்தார்.

ஞானியார் சொன்னார்:

“ஜனனத்துக்கு முன்பும் மரணத்திற்குப் பின்பும், நாம் எங்கிருந்தோம், எங்கு போகிறோம் என்று தெரியும்வரை நமக்கு அப்பாற்பட்டது ஒன்று இருக்கிறது.

இடைப்பட்ட வாழ்க்கையை அது நடத்துகிறது.

நான் துறவியானதும் நீங்கள் சம்சாரிகளானதும் நமது விருப்பத்தால் மட்டும் விளைந்தவை அன்று.

காலை வெயிலில், நமது நிழல் நம் உயரத்தைவிடப் பன்மடங்கு உயரமாக இருக்கிறது.

மதியத்தில் நம்மைவிட அது கூனிக்குறுகிக் காலடிக்குள் ஒண்டிக் கொள்கிறது.

மாலையில் அது மீண்டும் உயரமாகி விடுகிறது.

ஆனால், நம் உருவம் என்னமோ ஒரே மாதிரி இருக்கிறது.

நம் உருவமே விதி; நம் நிழலே மதி!”

மண்டபமே அதிரும்படி கையொலி கேட்டது.

சபை கலைந்தது.

கேள்வியாளர் மட்டும் வெளியே நின்றுகொண்டிருந்தார்.

“உங்கள் கேள்வியும் என் பதிலும் விதியல்ல; மதியே!

மதியால் விதியை ஆராய்ச்சி செய்யலாம். ஆட்சி செய்ய முடியாது” என்றபடி ஞானியார் நடந்தார்.

கேள்வியாளர் பின் தொடர்ந்தார்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

8. ஆணவம் !

`நம்மிடம் ஏதுமில்லை’ என்று நினைப்பது ஞானம்.
`நம்மைத் தவிர ஏதுமில்லை’ என நினைப்பது ஆணவம்.
ஞானம், பணிந்து பணிந்து வெற்றி மேல் வெற்றியாகப் பெறுகிறது.
ஆணவம், நிமிர்ந்து நின்று அடி வாங்குகிறது.

***

நமது புராண இதிகாசங்களில் ஆணவத்தால் அழிந்தவர்களைச் சித்தரிக்காதது மிகவும் குறைவு.

ராம காதையில் ராவணன், பாரதத்தில் துரியோதனன், இரணியன், கண்ணனால் கொல்லப்பட்ட நரகாசுரன், கந்தனால் கொல்லப்பட்ட சூரபத்மன் மற்றும் பத்மாசுரன் இவர்களெல்லாம் ஆணவத்தின் அடையாளச் சின்னங்கள்.

இவர்களுடைய முடிவு கொடுமையானதைக் காட்டி, இந்து மதம் ஆணவக்காரர்களை எச்சரிக்கிறது.

“நான்” என்னும் எண்ணம் ஒருவனுக்குத் தோன்றுகின்றது என்றால், அவன் தோல்விகளைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றான் என்று பொருள்.

அறிவு குறைவானவர்களுக்கே ஆணவம் வருகிறது.

நிறை குடங்களுக்கு அது வருவதில்லை.

வெற்றி மயக்கம் ஏற ஏற அறிவு தடுமாறி, முட்டாள்தனமான தைரியம் தோன்றி, `எல்லாம் நாமே’ என்ற எண்ணம் பிறந்து, தடுமாறிக் காரியம் செய்யத் தொடங்கியதும் ஒவ்வொரு தோல்வியாகத் தொடர்ந்து வந்து, ஆணவக்காரனைக் கூனிக் குறுகச் செய்கின்றன.

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர், நீண்ட கால நண்பர்.

ஆரம்பத்தில் மிகுந்த சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.

அந்தச் சிரமத்தோடு கடன் வாங்கி ஒரு படம் எடுத்தார்.

கதை, வசனம், டைரக்ஷன் எல்லாம் அவரே.

படம், `ஓகோ’ என்று ஓடிற்று.

வெற்றி மயக்கத்தில் அவர் நிலை கொள்ளவில்லை!

உடனே ஒரே நேரத்தில், நாலைந்து படங்கள் எடுக்கப் போவதாக விளம்பரம் செய்தார்.

விநியோகஸ்தர்கள் அவரிடம் வந்து, “புதிய படங்களை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம்; யார் யார் நடிக்கிறார்கள்!” என்று கேட்டார்கள்.அதற்கு அவர் கோபமாக, “எல்லாம் நானே. என் பெயருக்குத் தான் படமே தவிர நடிப்பவர்களுக்காக அல்ல; இஷ்டமிருந்தால் கையெழுத்துப் போடுங்கள்” என்று மிரட்டினார்.

நான் ஒருநாள் அவரைச் சந்தித்தபோது, “என் ஒவ்வொரு படத்தையும் `பாக்ஸ் ஆபீஸ்’ பண்ணிக் காட்டுகிறேன்” என்று என்னிடமே சவால் விட்டார்.

“என்னுடைய படம் என்றால், ஓலையிலே பிரிண்ட் பண்ணினாலும் ஓடும்” என்று சொன்னார்.

பெரிய பெரிய கோவில்களுக்கெல்லாம் வேண்டிக் கொண்டும், அவரது அடுத்த படம் படுதோல்வியடைந்தது. மூன்றாவது படமும் படுதோல்வி. கடன்காரரானார்; கஷ்டப்படுகிறார்.

தன்னைத் தேடி வந்தவர்களிடம் ஆணவத்தோடு நடந்து கொண்ட அவர், தினமும் அவர்களைத் தேடி நடக்கிறார்.

இன்னொருவர்-

அவரும் கதை வசனம் எழுதி டைரக்ஷன் செய்கிறவர்.

அவர் விழித்துக் கொண்டிருக்கிற நேரத்தில், பெரும்பகுதி தன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்.

நீங்கள் அவரோடு பேசப்போனால் நீங்களும் அவரைப்பற்றியே பேசினால்தான் அவர் உங்களோடு பேசுவார்.

வசனத்திலே வல்லினம், மெல்லினம் இருக்காது. ஆனால் குருட்டுத்தனமாக வந்த வெற்றி, அவரைக் குருடனாகவே ஆக்கிவிட்டது.

இதுவரை ஆணவக்காரர்கள் எப்படி அவதிப்பட்டார்களோ, அப்படிப்பட்ட அவதிக்கே அவரும் தயாராகிக் கொண்டிருக்கின்றார்.

மனிதன் உடம்பு மிகவும் பலவீனமானது.

அதில் ஒரு நரம்பைத் தட்டினால் பல நரம்புகளிலும் சங்கீதம் கேட்கிறது.

ஒரு வெற்றி கண்ணுக்குத் தெரிந்துவிட்டால், வரப்போவதெல்லாம் வெற்றியே என்ற திமிர் வருகிறது.

அந்தத் திமிர், யாரையும் அலட்சியப்படுத்தச் சொல்கிறது.

அடி பலமாக விழுந்ததும், திமிர் தானாக அடங்கிப் பணிவு எங்கிருந்தோ வந்துவிடுகிறது.

ஒரு சபைக்கு நான் போயிருந்தேன்.

பெரிய பெரிய அறிஞரெல்லாம் வந்திருந்தார்கள்.

அவர்களையெல்லாம் சாதாரணமாக நினைத்து, ஓர் அரை குறைப் படிப்பாளி, ஆணவத்தோடு பேசிக்கொண்டு இருந்தார்.

அவரது ஆணவத்தைப் பார்த்து அவர் பேசியதிலிருந்த தவறுகளைக்கூட யாரும் திருத்தவில்லை.

ஒவ்வொரு வரியையும் முடிக்கும்போது, “எப்படி நான் சொல்வது?” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.

நான் ஆத்திரம் தாங்காமல், “ஒரு குழந்தை எப்படிச் சொல்லுமோ, அப்படியே சொல்கிறீர்கள்” என்றேன்.

“தெளிவில்லாதவன், விவேகமற்றவன்” என்பதை நயமாகவும், நளினமாகவும் சொன்னேன்.

சில கவியரங்கங்களிலும் இந்த அனுபவம் எனக்குக் கிடைத் திருக்கிறது.

இலக்கண மரபோ, இலக்கியச் சுவையோ தெரியாத சிலரும், அந்த அரங்கங்களில் தோன்றிவிடுவார்கள்.

என்னைத் தாக்கிவிட்டால் தாங்கள் பெரிய கவிஞர்கள் என்ற எண்ணத்தில், அசிங்கமாகத் தாக்குவார்கள்.

நான் அடக்கத்தோடும் பயத்தோடும் உட்கார்ந்திருப்பேன். திரும்ப அவர்களைத் தாக்கமாட்டேன்.

காரணம், கிருபானந்தவாரியார் சொன்ன ஒரு கதை.

கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக்கொண்டு சுத்தமாக வந்துகொண்டிருந்ததாம்.

ஓர் ஒடுக்கமான பாலத்தில் அது வரும்போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்ததாம்.

யானை ஓர் ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழிவிட்டதாம்.

அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், “பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்துவிட்டது!” என்று சொல்லிச் சிரித்ததாம்.

அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, “அப்படியா! நீ பயந்துவிட்டாயா?” என்று கேட்டதாம்.

அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னதாம்.

“நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்துவிடக் கூடாதே என்று ஒதுங்கினேன். நான் ஏறி மிதித்தால் அது துவம்சமாகிவிடும்; ஆனால் என் கால் அல்லவா சேறாகிவிடும்.”

இந்தக் கதையின்படி சிறியவர்களின் ஆணவத்தைக் கண்டு, நான் அடக்கத்தோடு ஒதுங்கி விடுவது வழக்கம்.

முன்னேற விரும்புகிற எவனுக்கும் ஆணவம் பெருந்தடை.

ஆணவத்தின் மூலம் வெற்றியோ லாபமோ கிடைப்பதில்லை; அடிதான் பலமாக விழுகிறது.

தான் பணக்கார வீட்டுப்பெண் என்ற மமதையில் கணவனை அலட்சியப்படுத்தும் மனைவி;

தான் மந்திரியாகிவிட்ட போதையில் தொண்டர்களை அலட்சியப்படுத்தும் தலைவன்;

தான் சொன்ன ஏதோ ஒன்றை ஜனங்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்காகத் தினமும் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கும் தலைவர்கள்;

இவர்களெல்லாம், ஒரு கட்டத்தில், அவமானத்தாலும் வெட்கத்தாலும் கூனிக் குறுகிப் போய்விடுகின்றார்கள்.

`எதற்கும் தான் காரணமல்ல; ஏதோ ஒரு சக்திதான் காரணம்’ என்று எண்ணுகிறவன் ஆணவத்திற்கு அடிமையாவதில்லை.

`மற்றவர்களுக்கு என்ன தெரியும்’ என்று நினைப்பவன், சபைகளில் அவமானப்படாமல் தப்பியதில்லை.

ஆணவத்தால் அழிந்துபோன அரசியல் தலைவர்கள் உண்டு; சினிமா நடிகர்கள் உண்டு; பணக்காரர்கள் உண்டு.

அடக்கத்தின் மூலமாகவே தோல்விகளில் இருந்து மீண்டும் வெற்றிகரமாக முன்னேறியவர்கள் பல பேருண்டு.

மகாபாரதத்தில் நான் கேட்டிருந்த ஒரு சம்பவம்.

பரந்தாமன் மஞ்சத்தில் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தானாம்!

துரியோதனனும் அர்ச்சுனனும் அவனிடம் உதவி கேட்கப் போனார்களாம்.

துரியோதனன் பரந்தாமனின் தலைமாட்டருகே அமர்ந்தானாம்.

அர்ச்சுனன் காலடியில் அமர்ந்தானாம்!

காலடியில் அமர்ந்திருந்ததால், விழித்ததும் முதன் முதலில் அவனையே பார்த்த பரந்தாமன், “என் உதவி உனக்குத்தான்” என்று

கூறிவிட்டானாம்.ஆணவம் தலைமாட்டில் அமர்ந்தது; அடக்கம் காலடியில் அமர்ந்தது.

அடக்கத்துக்கு உதவி கிடைத்தது.

பாரதப் போரில் ஆணவம் தோற்றது.

ஆணவத்தோடு நிமிர்ந்து நிற்கும் தென்னை, புயற்காற்றில் விழுந்து விட்டால் மீண்டும் எழுந்து நிற்க முடிவதில்லை.

நாணலோ பணிந்து, வளைந்து, எந்தக் காற்றிலும் தப்பிவிடுகிறது.

`எல்லார்க்கும் நன்றாம் பணிதல்’ என்றான் வள்ளுவன்.

`அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்றவனும் அவனே!

நான்கு வரி ஒழுங்காக எழுதுவதற்கு முன்னால், `கம்பன் என்னிடம் பிச்சை எடுக்க வேண்டும்’ என்று பேசுகிறவர்கள் உண்டு.

ஆனால், கம்பனுக்கு அந்த ஆணவம் வந்ததில்லை.

அதனால்தான், காலங்களுக்கும் நிலைக்கக்கூடிய காவியத்தை அவனால் எழுத முடிந்தது.

இந்துக்கள் வற்புறுத்தும் பணிவும் அடக்கமும் வாழ்வில் வெற்றியை நோக்கிப் போவதற்கான படிக்கட்டுகளே!

இந்தப் பணிவை வங்காளத்து இந்துக்களிடம் அதிகம் காணலாம்.

தன்னைவிட வயதில் மூத்தவரைச் சந்தித்தால், எந்தப் பேரறிஞனும், அவர்கள் காலைத் தொட்டுக் கும்பிடுகிறான்.

வெறும் வயதுக்கே அந்த மரியாதையைத் தருகிறான்.

என்னுடைய விழா ஒன்றில், ஒரு பெருந்தலைவரின் காலைத் தொட்டு வணங்கியதுபற்றி, என்னைச் சிலர் கோபித்தார்கள்.

நான் சொன்னேன்:

“அந்தக் கால்கள் தேசத்துக்காகச் சத்தியாக் கிரகம் செய்யப் போன கால்கள்.

சிறைச்சாலையில் பல்லாண்டு உலாவிய கால்கள்.

என்னுடைய கால்களுக்கு அந்தப் பாக்கியம் இல்லாததால், கைகளாவது அந்தப் பாக்கியத்தைப் பெறட்டுமே!”

சில சபைகளில், என்னை உட்கார வைத்துக் கொண்டே என்னைப் புகழ்வார்கள். எனக்கு சர்வாங்கமும் ஒடுங்கிவிடும்.

`நாம் என்ன எழுதிவிட்டோம்? என்ன செய்துவிட்டோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

9. தாய் -ஒரு விளக்கம் ! 

பெயர் சொல்ல விரும்பாத ஒரு நண்பர் கீழ்க்கண்ட கடிதத்தை எனக்கு எழுதியிருக்கிறார்.

அவர் எழுப்பியிருக்கும் ஐயம் சிந்தனைக்குரியது.

அதுபற்றி விளக்கம் கூறுமுன், அவரது கடிதத்தை அப்படியே சமர்ப்பிக்கிறேன்.

`தாயை வணங்கு; தந்தையைத் தொழு; தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை; கோவிலுக்குச் சென்று அடையும் புண்ணியத்தை விடத் தாயை வணங்கிக் கிடைப்பது பெரும் புண்ணியம்’ என்று, ஒரு வார இதழில் எழுதியுள்ளீர்கள். நானும் சிறிதளவு படித்திருக்கிறேன்; ஆனால் எனக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை; குழம்புகிறது.

அதாவது, தாய் எப்படிப்பட்டவராக இருப்பினும் அவர் எத்தகைய செயலைச் செய்பவராக இருந்தாலும் (கற்பல்ல ஈண்டு குறிப்பது) பிள்ளையிடம் வாஞ்சையோ பெரியோரிடத்து (தாய்க்கு) மதிப்போ, மஞ்சள் குங்குமம் தந்தவனிடத்து மாண்போ இன்றித் தான்தோன்றித்தனமாக நடக்கும் தாயைக்கூட மதிக்கலாகுமோ?

மேலும் கூட்டுக்குடும்பம் குழப்பமடைந்து சிதறிப்போகச் செய்யும் உள்ளம் படைத்து, கூச்சல் குழப்பம் மிகுதியும் விளைவித்து, வயது வந்த பிள்ளைகளை மதிக்காமல் நடக்கும் தாய்க்கு, “அர்த்தமுள்ள இந்து மதம்” என்ன சொல்கிறது?

இப்படிப்பட்ட ஒரு தாயை வைதால் ஏற்படக்கூடிய பாவ புண்ணியங்களைப் பற்றி நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதை அறிய ஆவலுடன் இருப்பேன்! ஏன் தெரியுமா? நான் வீட்டுக்கும், வீட்டுப் பெரியோர்களுக்கும் நல்லது செய்ய முயல்கிறேன்; ஆனால் – என் இதன் மூலம் எனக்கு என்ன தண்டனை பாவ புண்ணியங்கள் கிடைக்கும்?”

உண்மைதான்.

ஒரு தாய் ராட்சசியாக இருந்துவிட்டால், அவளும் வணங்கத் தக்கவள்தானா?

மகனுக்குச் சோறு போடாமல், மணாளனை மதிக்காமல் கற்புநெறி உள்ளவளாக இருந்தாலும், இந்துக்கள் சொல்வது போல் ஓர் அன்னையின் குணம் இல்லாமல் ராட்சசப் போக்கில் நடப்பவளை எங்ஙனம் வணங்குவது?

முதலில் இதற்கு என் பதில்:

“அப்படிப்பட்ட தாய் லட்சத்தில் ஒருத்தியே” என்பதாகும்.

எந்த நியதியிலும் விதிவிலக்கு உண்டு.

ராட்சச தாயும் அப்படியே!

`மூன்று தலையோடு கன்றுக்குட்டி, ஐந்து குலை தள்ளிய வாழை மரம்’ என்பது போல, குணங்கெட்ட தாயும் ஓர் அபூர்வ சிருஷ்டியே!

பசுக்கள் சாந்தமானவை. அவற்றில் முட்டித் தள்ளுகிற பசுக்களும் உண்டு. அவற்றில் சொந்தக் கன்றுகளையே முட்டித் தள்ளுகிற பசுக்களும் உண்டு. இவை அபூர்வமானவை.

கண்ணாடித் துண்டுகளையே தின்று ஒருவர் ஜீவிக்கிறாராம்.

பூமிக்கடியில் ஆறு மாதங்கள் இருந்த ஒருவர் உயிரோடு வெளிவருகிறாராம்.

இவர்கள் எப்படி லட்சத்திலோ, கோடியிலோ ஒருவராகக் காட்சியளிக்கிறார்களோ, அப்படியேதான் குணங்கெட்ட தாயும்.

சத்திய தேவதை ருத்திர தாண்டவமும் ஆடுவதாக இந்துக்களின் புராணங்கள் கூறுகின்றன.

ருத்திர தாண்டவம் முடிந்த பிறகு அமைதியடைகின்றது.

ராட்சச குணங்கொண்ட தாயும் தன் முதுமையில் அமைதியடை
கிறாள்.

சட்டி தூக்கி, தெருத் தெருவாக அலைய வேண்டிய நிலைமைக்கு வரு
கிறாள்.

பரம்பொருள் அந்தத் தாயை அப்படித்தான் தண்டிக்கிறான்.

பசி, பட்டினி நோய்களால் வெந்து, தன் பாவங்களுக்குக் கழுவாய் தேடுகிறாள் அவள்.

அத்தகைய தாய்க்குத் துர்மரணமே சம்பவிக்கும் என்பது இந்துக்கள் நம்பிக்கை.

மலர் கல்லாகிவிட்டால் வாசம் போய்விடுகிறது.

தோற்றம் மலரானாலும் அது வெறும் கல்லே!

குணம் கெட்ட தாயும் அப்படியே!

இப்படிப்பட்ட தாய் எப்படி உற்பத்தியாகிறாள்?

இந்துக்களின் பூர்வஜென்ம நம்பிக்கையை இங்கேதான் நானும் ஒப்புக் கொள்கிறேன்.

பூர்வஜென்ம பாவ புண்ணியம் தொடர்ந்து வருகிறது.

காரணம் தெரியாத துயரங்களுக்கு அதுதான் காரணம் என்பது இந்துக்கள் நம்பிக்கை.

`போன ஜென்மத்தில் மகனாலும் மணாளனாலும் பழி வாங்கப்பட்ட தாயொருத்தி, அடுத்த ஜென்மத்தில் இருவரையும் பழி வாங்குகிறாள்’ என்றே நான் அதற்குப் பொருள் கொள்கிறேன்.

இது எனது யூகமே; வேறு பொருள்களும் இருக்கக்கூடும்.

இல்லையென்றால், உலகத்திலேயே மென்மையான அன்னையின் இதயம் கல்லாவது எப்படி?

இறைவனின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று என்பதைத் தவிர, வேறு பதில் சொல்ல எனக்குத் தோன்றவில்லை.

`எதிலும் விதிவிலக்கு உண்டு’ என்பதைத்தான் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

கோடானு கோடி இந்துக்களில் இப்படிப்பட்ட தாய்மார்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவே இருப்பார்கள்.

அதற்காக, அந்தத் தாயின் மகனோ, கணவனோ, தாய்க் குலத்தையே வெறுக்கக் கூடாது.

வகை வகையான மலர்கள் பூத்துக் குலுங்கும் உலகில் ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு விதமான வாசம் உண்டு.

ஆனால் மலர் ஒன்று `மல நாற்றம்’ அடிப்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆனால் அபூர்வமான மலர்.

அது மலரும் செடியின் பெயர் `பீநாறிச் சங்கு’ என்பதாகும்.

அந்தச் செடியின் இலைகள்கூட மலநாற்றமே அடிக்கும்.

அந்த இலைகளை அரைத்துக் குடித்தால், உடம்பில் எவ்வளவு `சிரங்கு’ இருந்தாலும் உதிர்ந்துவிடும்.

அந்த மலரைத் தேடிப்பிடித்து வாங்கிப் பாருங்கள். அதைவிட அழகான மலர் உலகத்திலேயே கிடையாது.

ஆனால் அதை மூக்கிலே வைத்தால் மூன்று நாளைக்குச் சோறு செல்லாது.

அதுவும் இறைவனின் படைப்புத்தான்!

உலகத்திலுள்ள அபூர்வத் தன்மைகளை மனத்திற் கொண்டே, இந்துக்கள் பூர்வஜென்ம நம்பிக்கையை வளர்த்தார்கள்.

குணங்கெட்டவளைத் தாயாகப் பெற்றவர்கள், இந்தப் பூர்வஜென்ம நம்பிக்கையிலேயே அமைதியுற வேண்டும்.

அவர்கள் அவளை வணங்க வேண்டியதில்லை; அவளை விட்டு ஒதுங்கிவிட வேண்டும்.

முதுமையில் அவளே வந்து அவர்களை வணங்குவாள்.

விதிவிலக்குகளை வைத்துப் பொதுவான தத்துவங்களை யாரும் எடை போடக்கூடாது.

பொதுவில் `தாய்மை’ என்பது இந்துக்களால் சக்தி என்றழைக்கப்படுகிறது.

ரத்த பாசத்தை உடம்பு சிலிர்க்க வருணிப்பது இந்து
மதம்தான்.

பூமியைப் `பூ மாதா’ என்றும் பசுவைக் `கோ மாதா’ என்றும் வருணிப்பவர்கள் இந்துக்கள்தாம்.

பொறுமையில் `பூமா தேவி’ என்றும், அமைதியில் `பசு’ வென்றும் சொல்பவர்கள் இந்துக்கள்தான்.

ஆகவே, பொறுமையும் அமைதியும் நிறைந்தவள் தாய் என்பது இந்துக்கள் மரபு.

பொறுமை, அமைதி, ரத்த பாசம், தன் வயிற்றைப் பட்டினி போட்டு மகனுக்கு ஊட்டுதல் இவையே தாய்மை!

இந்துக்களிடையே ஒரு கதை உண்டு.

ஒரு தாய்; அவளுக்கு ஒரு மகன்; அந்த மகனோ தாசிலோலன்; ஒரு தாசியிடம் மனதைப் பறிகொடுத்தான்.

`மனம் போனபடியே பொருள் போகும்’ என்றபடி பொருளையும் பறிகொடுத்தான்.

அவனிடம் பொருளில்லை என்பதை அறிந்த கணிகை அவனைத் துரத்தியடித்தாள்.

அவனோ மோக லாகிரி முற்றி, “உனக்கு எது வேண்டுமோ கொண்டு வருகிறேன்” என்று காலில் வீழ்ந்தான்.

அவள் கேலியாகச் சிரித்துக்கொண்டே, “உன் தாயின் இருதயம் எனக்கு வேண்டும்” என்றாள்.

காம மயக்கத்தில் சிக்கிய அவன், தாயிடம் ஓடினான்.

“அம்மா! அவளுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஏதுமில்லை. உன் இருதயம் வேண்டும் என்கிறாள். அவளை என்னால் மறக்க முடியாதம்மா” என்றழுதான்.

தாய் கேட்டாள்:

“அதன்மூலம் அவள் திருப்தியடைந்து உன்னுடனேயே இருப்பாளோ மகனே?”

“இருப்பாள்!” என்றான் மகன்.

தன்னைக் கொன்று இருதயம் வெட்டி எடுத்துக் கொள்ளும்படி தாய் கூறினாள்.

அவன் தாயைக் கொன்றான்; இருதயத்தை எடுத்தான். வலது கையில் ஏந்தியவாறு கணிகை வீடு நோக்கி ஓடினான். வழியில் ஒரு கல் தடுக்கிக் கீழே விழுந்தான். கையிலிருந்த தாயின் இருதயம் நான்கு அடி தள்ளி விழுந்தது.

அடிபட்டு விழுந்த அவனைப் பார்த்து, அதே இருதயம் சொன்னது:

“ஐயோ! வலிக்கிறதா மகனே! நான் உயிரோடில்லையே உனக்கு மருத்துவம் செய்ய!”

மகன் “அம்மா!” என்றலறினான். அவன் ஆவி பிரிந்தது.

ஆம், அதன் பெயர்தான் தாய்மை!

ஓர் இடத்தில் நான் சொன்னேன், “இறைவன் உன் ஆத்மாவுக்கு மட்டுமே பொறுப்பேற்றுக் கொள்கிறான்” என்று.

ஆனால், ஓர் அன்னையோ உன் ஆத்மாவுக்கும் உடம்புக்கும் பொறுப்பேற்றுக் கொள்கிறாள்.

கடைசியாக, தாயை மதிப்பவர்களுக்கு, பக்தி செலுத்துவோர்களுக்கு, எப்படி வாழ்வு வரும் என்பதைச் சாதாரண மனிதனுக்கும் புரியும்படி சொல்கிறேன்.

இன்று படவுலகில் இருபது வருஷங்களாக அசைக்க முடியாமல் இருந்துவரும் நட்சத்திரங்கள், அரசியலில் திடீரென்று, அதிர்ஷ்டம் வாய்ந்த குறைந்த கல்வியே உள்ள தலைவர்கள், அனைவரையும் எண்ணிப் பாருங்கள். அவர்கள் அனைவரும் தாயிடம் பக்தி செலுத்திய ஒரே காரணத்தினால் முன்னுக்கு வந்தவர்கள்!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

10. மங்கல வழக்குகள் 

சுயமரியாதை, சீர்திருத்த இயக்கம் தீவிரமாக இருந்த காலம்.

கடவுள் ஒழிப்பு, பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு,

மூட நம்பிக்கை ஒழிப்பு என, அது ஆரவாரம் செய்த காலம்.

அந்த ஆரவாரத்தால் கவரப்பட்டவர்களில் நானும் ஒருவன்.

கறுப்புச்சட்டை போட்டுக் கொள்வதும், மதங்களையும் மதவாதிகளையும் கேலி செய்வதும், அந்த நாளில் இளைஞர்களுக்கு வேடிக்கை விளையாட்டாக இருந்தது.

அது ஒரு தத்துவமா?, அதில் பொருள் உண்டா?,

பயனுண்டா? என்று அறியமுடியாத வயது.

அந்த வயதிலும், அந்த நிலையிலும், இந்துக்களின் மங்கல வழக்குகள் மீது எனக்குப் பிடிப்புண்டு.

சில சீர்த்திருத்தத் திருமணங்களுக்கு நான் தலைமை தாங்கியிருக்கிறேன்.

மற்றும் சில திருமணங்களில் நான் பேசியிருக்கிறேன்.

மேலவைத் தலைவர் திரு.சி.பி.சிற்றரசுவின் மகளுக்கு சீர்திருத்தத் திருமணம் நடந்த போது, நானும் அதில் கலந்து கொண்டேன்.

அங்கே பேசியவர்களில் பொன்னம்பலனார் என்று ஒருவரும் பேசினார்.

மணமக்களின் தலைமீது மஞ்சள் அரிசியும், புஷ்பங்களும் தூவப்பட்டது பற்றி அவர் குறிப்பிட்டார்.

“இங்கே மஞ்சள் அரிசி தூவினார்கள். இந்த முட்டாள்தனம் எதற்காக? பிணத்துக்கும்தான் மஞ்சள் அரிசி தூவுகிறார்கள். இவர்கள் மணமக்களா? இல்லை பிணங்களா?” என்று அவர் பேசினார்.

எனக்கு நெஞ்சில் அடிப்பது போலிருந்தது.

`திருமண வீட்டில் அமங்கலமாய்ப் பேசுகிறாரே’ என்று நான் வருந்தினேன்.

இன்னொரு சீர்திருத்தத் திருமணம்.

அங்கே ஒருவர் கீழ்க்கண்டவாறு பேசினார்.

“இங்கே நடப்பது சீர்த்திருத்தத் திருமணம். இரண்டே நிமிடத்தில் செலவில்லாமல் முடிந்துவிட்டது. ஐயர் வரவில்லை, ஓமம் வளர்க்கவில்லை, அம்மி மிதிக்கவில்லை, அருந்ததியும் பார்க்கவில்லை. இங்கே ஐயர் வராததால் இந்தப் பெண் வாழமாட்டாளா? இவளுக்குப் பிள்ளை பிறக்காதா? ஐயர் வந்து நடத்தாததால் இவள் விதவையாகிவிடப் போகிறாளா? அப்படியே விதவையாகிறாள் என்றே வைத்துக் கொள்வோம். ஐயர் நடத்தும் திருமணங்களில் பெண் விதவையாவதில்லையா? அந்த ஐயர் வீட்டிலேயே விதவைகள் இருப்பார்களே! அவர் வந்து கட்டினால்தான் தாலி நிலைக்குமா? நாங்கள் கட்டி வைத்தால் அறுந்து போகுமா?”

அவர் பேசி முடிக்கவில்லை. நான் அவர் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்தேன்.

“நடப்பது திருமணம்; நீ பேசுவது விதவையாவது எப்படி என்பதைப்பற்றி, பேசாமல் உட்கார்” என்றேன்.

பிறகு நான் பேசும்போது நமது மங்கல மரபுகள் பற்றிக் குறிப்பிட்டேன்.

`மங்கலம்-அமங்கலம்’ என்று இந்துக்கள் பிரித்தது மூட நம்பிக்கையால் அல்ல; அது மனோதத்துவ மருத்துவம்.

நல்ல செய்திகள், வாழ்த்துக்கள் ஒரு மனிதனின் காதில் விழுந்துகொண்டே இருந்தால், அவனது ஆயுளும் விருத்தியாகிறது; ஆனந்தமும் அதிகரிக்கிறது.சந்தோஷச் செய்திகள், வெற்றிச் செய்திகள் கேட்கும்போது, உன் உடல் எவ்வளவு புல்லரிக்கிறது.

மங்கல வழக்குகள் அதற்காகவே ஏற்பட்டவை.

திருமணத்தில் மாங்கல்யம் கட்டும்போது ஏன் கெட்டிமேளம் கொட்டுகிறார்கள்?

ஏதாவது ஒரு மூலையில், யாரோ யாரையோ, `நீ நாசமாய்ப் போக’ என்றோ, `உன் தலையில் இடி விழ’ என்றோ அமங்கலமாய்த் திட்டிக் கொண்டிருக்கக்கூடும்.

அத்தகைய வார்த்தைகள் மணமக்களின் காதுகளில் விழக் கூடாது என்பதற்காகவே, அந்தச் சத்தத்தை அடக்குவதற்காகவே பலமாகக் கெட்டிமேளம் தட்டப்படுகிறது.

இதையெல்லாம் மூட நம்பிக்கை என்று சொல்லிக் கொண்டு துள்ளி வந்த சீர்திருத்தம், களை எடுக்கிற வேகத்தில் பயிரையே பிடுங்க ஆரம்பித்தது.

நமது மங்கல வழக்குகள் ஒரு நாகரிக சம்பிரதாயத்தையே உருவாக்கியுள்ளன. அவற்றுள் பல விஞ்ஞான ரீதியானவை.

மணமக்கள் வீட்டுக்குள் நுழையும்போது, ஏன் வலது காலை எடுத்து வைத்து வரச் சொல்லுகிறார்கள்.

மணவறையைச் சுற்றி ஏன் வலம் வருகிறார்கள்?

ஊர்வலம் வருவது என்று ஏன் கூறுகிறார்கள்?

எல்லாமே வலப்புறம் போவதன் நோக்கம் என்ன? காரணம், பூமியே வலப்புறமாகச் சுழல்கிறது என்பதுதான்.

மனிதனின் இரண்டு கால்களில் இரண்டு கைகளில் இடது கால் கைகளைவிட, வலது கால் கைகள் பலம் வாய்ந்தவை.

`சக்தியோடு வாழ’ நிரந்தரமாக எதிலும் `வலப்புறமாக வருவது நன்று’ என இந்துக்கள் நம்பினார்கள்; நம்புகிறார்கள்.

`வலம்’ என்பது `நாம் வலிமையடைவோம்’ என்றும் பொருள் தருகிறது.

`வலியோம், வல்லோம், வல்லம், வலம்’

இந்த நான்கு வார்த்தைகளும் ஒரே பொருள் உடையவை.

தனது வலிமையின் மீது நம்பிக்கை வைத்து வாழ்வதற்கே வலது காலை முதலில் எடுத்து வைக்கச் சொன்னார்கள் இந்துக்கள்.

சாதாரணமாக, நண்பர்கள் வீட்டுக்கோ, திருமணங்களுக்கோ போகிறவர்கள், திரும்பிச் செல்லும் போது, `போய் வருகிறேன்’ என்று சொல்லிக் கொண்டு போவார்கள்.

அதன் பொருள், “இன்னும் பல திருமணங்கள், விழாக்கள் உன் வீட்டில் நடைபெறும்; நாங்கள் மீண்டும் வருகிறோம்” என்பதே.

அமங்கல வீடுகளுக்குச் செல்கிறவர்கள் திரும்பும் போது, “போகிறேன்” என்று சொல்லிக்கொண்டு போவார்கள்.

அதன் பொருள், “இனி உன் வீட்டில் அமங்கலம் நேராது. நாங்கள் வரவேண்டியதாயிருக்காது” என்று நம்பிக்கைட்டுவதாகும்.

மணமக்களை, “பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க” என்று ஏன் வாழ்த்துகிறார்கள்?

உலகத்திலுள்ள வாழ்க்கைப் பேறுகள்,

இந்துக்களால் பதினாறு வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

அவை மக்கட்பேறு, செல்வப்பேறு, உடல் நலம் எனப் பதினாறு வகையாக விரியும்.

மணமக்கள் அவ்வளவு சுகமும் பெறவேண்டும் என்பதையே, இந்துக்கள் `பதினாறும் பெற வேண்டும்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

நூற்றுக்கணக்கான ஆண்டுகள், விழுது விட்டு விழுது விட்டுத் தழைக்கும் மரம் ஆலமரம் ஒன்றுதான்!

ஓரிடத்தில் முளைக்கும் அருகம்புல் அத்தனையையும் ஒருங்கு சேர்ப்பது ஒரே வேர்தான்.

இப்படித் தழைத்து நிற்பவை, வேரோடு வாழ்பவை பெருமைக்குரிய பேறுகள் அனைத்தையும், மங்கலவழக்கில் சேர்த்தார்கள் இந்துக்கள்.

`கணவரின் பெயரை மனைவி சொன்னால்கூட மரியாதையும் குறையும், மங்கலமும் குறையும்’ என்று நம்பினார்கள்.

யாராவது ஒருவர் தும்மினால், பக்கத்தில் இருக்கிறவர்கள் `வாழ்க’ என்பார்கள்.

`தும்மினேனாக வழுத்தினாள்’ என்றான் வள்ளுவன்.

தும்மும் போது சிலர் `நூறு வயது’ என்பார்கள்.

எங்கள் பாண்டிய நாட்டில் பிச்சைக்காரர்கள் வந்து சோறு கேட்கும்போது, சோறு இல்லை என்றால் `இல்லை’ என்று சொல்ல மாட்டார்கள்.`நிறைய இருக்கிறது; நாளைக்கு வா’ என்பார்கள்.

தீபத்தை அணைக்கச் சொல்லும்போது, `அணையுங்கள்’ என்று சொல்லமாட்டார்கள். `வளர்த்து விடு’ என்பார்கள்.

வீட்டில் ஒருவர் இறந்துவிட்டதைக் குறிக்கும் போது `சிவலோகப் பதவியடைந்தார்; பரலோகப் பிராப்தியடைந்தார்’ என்பார்கள்.

பெண் ருதுவாவதைப் `பூப்படைந்தாள், புஷ்பவதியானாள்’ என்பார்கள்.

அதாவது `பெண் மொட்டாக இருந்து புஷ்பம் போல் மலர்ந்திருக்கிறாள்’ என்பது அதன் பொருள்.

மணமக்களின் முதலிரவை `சாந்தி முகூர்த்தம்’ என்பார்கள்.

“காதலில் துடித்துக் கொண்டிருந்த உள்ளம், ஆசைகளை அடக்கிக் கொண்டிருந்த உடம்பு அன்றைக்குச் சாந்தியடைகிறது” என்பது அதன் பொருள்.

இந்துக்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையிலும் மங்கலமே நிறைந்திருக்கும்.

நான் சொல்லுவது சராசரி இந்துக்களை.

ஆத்திரக்காரர்கள் அமங்கலமாகப் பேசுவது இந்துக்களின் மரபைச் சேர்ந்ததல்ல.

நன்றாக வாழ்கிற பெண்ணை எங்களூரில் `வாழ்வரசி’ என்பார்கள். கொச்சைத் தமிழில் `வாவரசி’ என்பார்கள்.

பெரும்பாலான இந்து சமூகங்களில் `கணவனை இழந்த பெண் வெள்ளைச் சேலை அணியவேண்டும்’ என்று விதிவகுத்து வைத்திருப்பது ஏன்?

`இவள் கணவனை இழந்தவள்’ என்று தனித்துக் காட்டுவதற்காகவும் கணவனை இழந்தும் `தூய்மையானவள்’ என்று குறிப்பதற்காகவும்.

ஆக, மங்கல மரபு அல்லது வழக்கு என்பது வாழ்க்கையில் நம்பிக்கையும் உற்சாகமும் உண்டாவதற்காகவே.

அமங்கலங்கள் குறிக்கப்படும்போதெல்லாம், அவற்றில் அடக்கமும் அமைதியும் வற்புறுத்தப்படுகின்றன.

“இந்தத் துயரங்கள் உனக்கு இறைவனால் அளிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை நீ ஏற்றுக் கொள்” எனக் கூறுவதே அமங்கலங்களில் பலர் கூடிப் பரிந்துரைப்பதன் நோக்கம்.

வாழாமல் இறந்துபோன குழந்தைகளை, வாலிபர்களை,கன்னிப்பெண்களை, இந்துக்கள் புதைக்கிறார்கள்.
கொஞ்ச நாளாவது வாழ்ந்து இறந்தவர்களை எரிக்கிறார்கள்.

வாழாத உடம்பு மண்ணிலே கலந்து நிம்மதியடையவும், வாழ்ந்த உடம்பு விண்ணிலே கலந்து ஐக்கியமாகவும் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள்.

சாம்பலை ஏன் நதியில் கரைக்கிறார்கள்?

“ஆறுபோல உன் ஆத்மா ஓடிக் கடல் போலிருக்கும் இறைவனோடு கலக்கட்டும்” என்பதற்கே.

இந்துக்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும், பழக்க வழக்கங்களையும் கூர்ந்து நோக்குங்கள்.

அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் பொருள் விரித்துப் பாருங்கள்.

இயற்கையாகவே மங்கலம், அமங்கலம் தெரிந்துவிடும்.

மங்கலச் சொற்கள், மங்கல அணி, மங்கல விழா என்ற வார்த்தைகள் இந்துக்களின் பண்பாட்டு உணர்ச்சியை அறிவுறுத்தும்.

அடுத்தவர் வீட்டில் சாப்பிடும்போது, சாப்பாடு மட்டமாக இருந்தாலும், `அற்புதமாக இருக்கிறது’ என்று சொல்லுவது இந்துக்கள் வலியுறுத்தும் நாகரிகம்.

“பெயக் கண்டும் நஞ்சுண்டமைவர், நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.”

என்றான் வள்ளுவன்.

உலகத்தில், நாகரிகம் என்பது இருபதாம் நூற்றாண்டின் பழக்க வழக்கங்களைக் குறிக்கிறது.

நமது நாகரிகமோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

11. கல்லானாலும்… புல்லானாலும்…

`ஒரு பெண் உத்தமியாக இருக்க வேண்டும்; பத்தினியாக இருக்க வேண்டும்’ என்ற மரபு எல்லா மதங்களிலும் உண்டு.

ஆனால் அதை வலியுறுத்தும் கதைகள் இந்து மதத்தில்தான் அதிகம்.

இந்துப் புராணங்களில் வரும் எந்த நாயகியும் அப்பழுக்கற்ற பத்தினியாகக் காட்சியளிப்பாள்.

குடும்பத்தில் கெட்ட சூழ்நிலை ஏற்படுவதற்குப் பெண்தான் காரணமாக அமைவாள் என்பதால், மானத்தையும் கற்பையும் பெண்ணுக்கே வலியுறுத்திற்று இந்துமதம்.

கற்பு என்பது, நல்ல தாயிடமிருந்து நல்ல மகள் கற்றுக் கொள்வது.

அடிப்படையிலிருந்தே அந்த ஒழுக்கம் வளரவேண்டு மென்பதற்கு, இந்துமதம் சான்று காட்டி நீதி சொல்கிறது.

`பிற புருஷனை அவள் மனத்தால் நினைத்தாலும் கற்புஇழந்து விடுகிறாள்’ என்று இந்துமதம் அச்சுறுத்துகிறது.

பெண் `தலைகுனிந்து நடக்க வேண்டுமென்று, இந்துக்கள் விரும்புவது’ அவள் பிற முகங்களைப் பார்க்காமல் இருப்பதற்குத் தான்.

அழகான ஆடவன் முகத்தை அவள் பார்த்து ஒரு கணம் அதிர்ச்சி வந்து, பிறகு அவள் தன்னிலைக்கு மீண்டால்கூடக் `களங்கம்’ என்று இந்துக்கள் கருதுகிறார்கள்.

`காலைப் பார்த்து நட’ என்று அவர்கள் போதிப்பது அவள் பிற முகங்களைப் பார்க்காமல் இருப்பதற்கு மட்டுமல்ல; பூமியிலும், வாழ்க்கையிலும் வழுக்கி விழாமல் இருப்பதற்கும்கூட!

பெண்ணுக்கு அதை அதிகம் வலியுறுத்தினாலும் `ஆணுக்கும் அது வேண்டும்’ என்கிறது இந்து மதம்.

திருமணத்தில் பெண்ணுக்குக் கழுத்தில் மாங்கல்யம் கட்டுகிறார்கள்! காலிலே ஆடவனுக்கு வெள்ளியால் `மெட்டி’ போடுகிறார்கள். இவை ஏன்?

நிமிர்ந்து நடந்துவரும் ஆடவன் கண்ணுக்கு எதிரே நடந்து வரும் பெண் கழுத்தில் மாங்கல்யம் இருப்பது தெரிய வேண்டும். `அவள் அந்நியன் மனைவி’ என்று தெரிந்து அவன் ஒதுங்கிவிட வேண்டும்.

தலைகுனிந்து நடக்கும் பெண்ணின் கண்களுக்கு எதிரே வரும் ஆடவன் கால் மெட்டி தெரியவேண்டும்; `அவன் திருமணமானவன்’ எனத் தெரிந்து அவள் ஒதுங்கி விட வேண்டும்.

ஒரு பெண்ணும், காளையும் சந்தித்து ஒருவரையொருவர் காதலிக்கலாம். மணம் செய்து கொள்ளலாம். காதல் நிறைவேறவில்லை என்றால் பிரிவால் ஏங்கலாம்; துயரத்தால் விம்மலாம்; இறந்தும் போகலாம். அது ஒரு கதையாகவோ காவியமாகவோ ஆகலாம்.

ஆனால் திருமணமான ஒரு பெண்ணுக்கு பிரபுருஷன் மீது ஆசை என்பது கிஞ்சித்தும் வரக்கூடாது.

தாலி என்பது பெண்ணுக்குப் போடப்படும் வேலி; அதை அவள் தாண்ட முடியாது.

தமிழகத்திலே ஒரு மன்னனுக்குத் `தாலிக்கு வேலி’ என்ற பெயரே உண்டு.

திருமணத்தின் போது `அக்கினி’ வளர்க்கிறார்களே, ஏன்?

அவர்களது எதிர்கால ஒழுக்கத்தில் `அக்கினி’ சாட்சியாகிறான்.

அவர்கள் வழி தவறினால் அந்த அக்கினி அவர்கள் உள்ளத்தை எரிக்கிறான்; அவர்களைத் தண்டிக்கிறான்.

அதனால்தான், கற்பு நிறைந்த பெண்ணைக் `கற்புக்கனல்’ என்கிறார்கள்.

அம்மி மிதிக்கிறார்களே, ஏன்?

எல்லாக் குடும்பங்களுக்கும் இன்றியமையாதது அம்மி. அந்த அம்மியின் மீது காலை வைப்பது, `என் கால் உன்மீதுதான் இருக்கும்; உன்னைத் தாண்டிப் போகாது’ என்று சத்தியம் செய்வதே.

`படி தாண்டாத பத்தினி’ என்பது வழக்கு.

`படியைத் தாண்டமாட்டேன்’ என்பதே அம்மியின் மீது சொல்லப்படுவது.

அருந்ததியைப் பார்ப்பது ஏன்?

`அருந்ததியைப் போல் நிரந்தரக் கற்பு நட்சத்திரமாக நின்று மின்னுவேன்’ என்று ஆணையிடுவதே.

`பால் பழம்’ சாப்பிடுவது ஏன்?

அது `பாலோடு சேர்ந்த பழம்போலச் சுவை பெறுவோம்’ என்று கூறுவதே.

பூ மணம் இடுவது ஏன்?

`பூ மணம் போலப் புகழ் மணம் பரப்புவோம்’ என்றே!

மாங்கல்யத்தில் மூன்று முடிச்சுப் போடுவதேன்?

ஒரு முடிச்சு கணவனுக்கு அடங்கியவளென்றும், மறு முடிச்சு தாய் தந்தையருக்குக் கட்டுப்பட்டவளென்றும், மூன்றாவது முடிச்சு தெய்வத்துக்குப் பயந்தவளென்றும் உறுதி கொள்ளவைப்பதே.

ஆம்; பெண்ணிற்குத் `தற்காப்பு’ வேண்டும்; தாய் தந்தை `காப்பு’ வேண்டும்; தெய்வத்தின் `காப்பு’ வேண்டும்.

இந்தக் காப்புகளுக்காகவே கையில் `காப்பு’ அணியப்படுகிறது.

`அவளைக் காப்பேன்’ என்ற உத்தரவாதத்திற்காகவே கணவன் கையில் `காப்பு’க் கட்டப்படுகிறது.

குழந்தைப் பருவத்திலிருந்து முதுமைப் பருவம் வரை ஒரு பெண்ணைப் பக்குவமாக வைத்திருக்க இந்து மதம் கூறும் வித்தியாசங்கள்தாம் எத்தனை!

`கற்புடைய பெண் நினைத்தால் கடவுள்களையே குழந்தைகள் ஆக்கலாம்’ என்று போதிக்கும் அனுசூயையின் கதை.

`கற்புடைய பெண் விரும்பினால் சூரியனையே உதிக்காமல் செய்யலாம்’ என்று கூறும் நளாயினியின் கதை.

`கற்புடைய பெண் மரணத்தையும் வெல்லுவாள்’ என்று கூறும் சாவித்திரியின் கதை.

அதையே வேறு வடிவில் நாகபஞ்சமி கதை.

இவையெல்லாம் பொய்க்கதைகள் என்று வாதிக்கலாம். ஆனால் `அவர்களைப் போல’த் தன் மனைவி இருக்க வேண்டும் என்று விரும்புகிறவனுக்கு இவை மெய்க்
கதைகளே!

கொல்லப்பட்டான் கணவன் என்றறிந்து, துடித்தெழுந்து மதுரை நகர் வலம் வந்து, `செங்கதிர்ச் செல்வனே! என் கணவன் கள்வனா?’ என்று நியாயம் கேட்டுத் துர்க்கை கோயிலில் வளையல்களை உடைத்து மதுரையை எரித்தாள் கண்ணகி.

`அவள் இடது பக்கத்து மார்பைத் திருகி எறிந்தாள்; மதுரை எரிந்தது’ என்கிறது சிலப்பதிகாரம்.

`மார்பைத் திருகி எறிந்தால் மதுரை எரியுமா?’ என்று கேலி பேசுவோருமுண்டு.

`இடது பக்கத்து மார்பை’ என்று இளங்கோ சொல்வதைக் கவனிக்க வேண்டும்.

இடது பக்கம்தான் இதயம் இருக்கிறது; அதுவும் மார்பை ஒட்டியே இருக்கிறது.

`அந்த இருதயத்து அக்கினி மதுரையையே எரித்தது’ என்பதைத்தான் இளங்கோ அப்படி விவரிக்கிறான்.

`கல்லானாலும் கணவன்! புல்லானாலும் புருஷன்’ என்பது இந்துக்கள் பழமொழி.

`கல்லும் புல்லும் கணவனாகுமா?’ என்று கேலி பேசுவோருமுண்டு.

வெறும் ஜடப் பொருள்களான கல்லையும், புல்லையும் இது குறிக்கவில்லை.

`உன் கணவன் மனது கல்லானாலும், அவன் உனக்குக் கணவனே; சம்பாதிக்க முடியாத சக்தியற்ற கோழையாக ஊருக்குப் புன்மையானவனாக, வெறும் புல்லைப் போல இருந்தாலும், அவன் உனக்குப் புருஷனே’ என்பது அதன் பொருள்.

பெண்ணைத் தெய்வமாக்கிக் கணவனைப் பக்தனாக்கி வாழ்க்கையை சந்தோஷமாக்க, இந்துமதம் எடுத்துக் கொண்ட முயற்சியைப் போல வேறு எந்த மதமும் எடுத்துக் கொண்டதில்லை.

அந்நியப் புருஷன் தன்னைப் பார்க்கிறான் என்று தெரிந்ததும் முந்தானையைச் சரி செய்துகொள்ளும் பெண்கள் இந்துமதத்தின் சிருஷ்டிகள்.

கற்புக்கு இவ்வளவு காவல் வேலிகள் போட்ட பிறகும், பலாத்காரமாக, வேறுவழியில்லாமல் கெடுக்கப்பட்ட பெண்களுக்குப் பரிகாரமென்ன?

இங்கே நிகழ்ச்சியொன்று பழைய தத்துவத்தை வலியுறுத்துகிறது.

1947-48ல் பாகிஸ்தானில் கற்பழிக்கப்பட்ட இந்துப் பெண்கள் லட்சோபலட்சமாக இந்தியாவுக்கு வந்தார்கள்.

`அவர்கள் உடலால்தான் கெட்டார்கள். உள்ளத்தால் கெடவில்லை. அவர்களை இந்து இளைஞர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று காந்தியடிகள் வாதாடினார்.

எத்தனை இளைஞர்களுக்கு அந்த அநியாயம் புரிந்ததென்று தெரியவில்லை.

ஆனால், காந்தியடிகள் நேசித்து வணங்கிய ராமபிரானின் வரலாற்றிலேயே அதற்கு நேரடியாகச் சாட்சியம் உண்டு.

அது அகலிகையின் கதை. அகலிகையை முனிவன் மணந்தான்.

ஒருநாள் நள்ளிரவில் இந்திரன் சேவல் வடிவமெடுத்தான்; பொழுது விடிந்துவிட்டது போலக் கூவினான். உண்மையறியாத முனிவன் சந்தியாவந்தனத்திற்குப் புறப்பட்டான்.

இந்திரன், முனிவன்போல் வேடமிட்டு அகலிகையை நெருங்கினான்.

திரும்பி வந்த முனிவன் உண்மையறிந்தான். அகலிகையைக் கல்லாகச் சபித்துவிட்டான்.

ராமபிரானின் காலடி பட்டுத்தான் அந்த சாபம் நீங்க வேண்டும்.

ராமபிரான் ஒருநாள் அந்தக் கல்லை மிதித்தார். அகலிகை மீண்டும் உயிர் பெற்றாள்.

முனிவனோ, “நான் என்று நினைத்து இன்னொருவனோடு அவள் கலந்ததெப்படி? இவள் பத்தினியானால் எனக்கும் இன்னொருவனுக்கும் `பேதம்’ தெரியாதா?” என்று கேட்டான்.

அதற்கு ராமபிரான் சொன்னார்:

`கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய திரிகாலமும் அறிந்த முனிவன் நீ! நீயே உண்மைச் சேவல் எது, பொய்ச் சேவல் எது என்று தெரியாமல் சந்தியாவந்தனத்துக்குப் புறப்பட்டாயே! அவளோ ஒரு காலமும் தெரியாத பேதை! உள்ளத்தால் உன்னையே நினைத்தாள். உடலால்தான் கெட்டாள்; ஆகவே ஏற்றுக்கொள்வது உன்
கடமை.’

முனிவன் அவளை ஏற்றுக்கொண்டுவிட்டான்.

பாகிஸ்தானில் கற்பழிக்கப்பட்ட பெண்கள் பற்றிய காந்தியடிகளின் வாதம், ராமபிரான் வாதத்தின் எதிரொலியே!

நான் ஏற்கெனவே சொன்னதுபோல அறியாமல் செய்த பிழைகள் மன்னிக்கப்பட வேண்டியவையே!

அவை விதிக்கணக்கில் சேர்க்கப்பட வேண்டியவையே!

`அறிந்து கெடக்கூடாது’ எனக் குலமாதருக்கு விதித்த தடை, நமது குடும்ப வாழ்வை எவ்வளவு நிம்மதியாக்கி இருக்கிறது!

கற்பு என்றொரு வேலி போட்டு, பெண்களைத் தெய்வங்களாக்கி, குடும்பங்களை மகிழ்ச்சிகரமாக்கிய `ஏ! இந்து மதமே, உன்னை என் உயிராக நேசிக்கிறேன்.’



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

12. நல்ல மனைவி

மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிதானத்தையும் எச்சரிக்கையையும் இந்துமதம் வலியுறுத்துகிறது.

`அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே’

என்பதே இந்துக்களின் எச்சரிக்கைப் பழமொழி.

இளம் பருவத்தின் ரத்தத்துடிப்பு வெறும் உணர்ச்சிகளையே அடித்தளமாகக் கொண்டது.

அந்தப் பருவத்தில் காதலும் தோன்றும்; காமமும் தோன்றும்.

ஒரு பெண்ணிடம் புனிதமான காதல் தோன்றிவிட்டால், உடல் இச்சை உடனடியாக எழாது.

அவளைப் பார்க்க வேண்டும், பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்; பேச வேண்டும், பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை

வளரும்.அவளைக் காணாத நேரமெல்லாம் கவலைப்படும்.

கனவு காணும்.

கற்பனை செய்யும்.

மிகவும் சிறு பருவத்தில் மட்டுமே அத்தகைய புனிதக் காதல் தோன்றும்.

அது நிறைவேறி, வாழ்க்கை வெற்றிகரமாக நடப்பதும் உண்டு; நிறைவேறாமல் தலையணையைக் கண்ணீரால் நனைப்பதும் உண்டு. நிறைவேறிய பிறகு கூட்டுறவில் தோல்வி ஏற்படுவதும் உண்டு.

ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும்போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்தக் காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே!

உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறிவிடுகிறான்.

எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்குப் பிடிக்கிறது.

அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான்.

பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவனுக்கு வந்து சேருகிறாள்.

பூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனுடைய பார்வை லயித்து விட்டால், அந்தச் சரீரத்துள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோசத்தை, வேஷத்தை அவன் அறியமுடியாமல் போகிறது.

ஆனால் ஆத்மாவின் ராகம் கண்களை மட்டும் கவனிக்கிறது.

அந்தக் கருநீலக் கண்கள் அவனைப் பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனிதத்தன்மை வெளியாகிறது.

அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.

புனிதமான அந்தக் காதலை அறியாதவர்கள் உடல் இச்சையால் தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள்.

எதிர்காலக் குடும்ப நிம்மதியையும், ஆனந்தத்தையும் நாடும் இளைஞன், எத்தகைய பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு வடமொழியில் ஒரு சுலோகம் உண்டு.

கார்யேஷஷ தாசி
கரணேஷஷ மந்திரி
ரூபேஷஷ லட்சுமி
க்ஷமவா தரித்ரி
போத்யேஷஷ மாதா
சயனேஸு வேஸ்யா
சமதர்ம யுக்தா
குலதர்ம பத்தினி

சேவை செய்வதில் தாசியைப் போலவும்,

யோசனை சொல்லுவதில் மந்திரியைப் போலவும்,

அழகில் லட்சுமியைப் போலவும்,

மன்னிப்பதில் பூமாதேவியைப் போலவும்,

அன்போடு ஊட்டுவதில் அன்னையைப் போலவும்,

மஞ்சத்தில் கணிகையைப் போலவும்

நடந்துகொள்ளக்கூடிய ஒருத்தியே குலதர்ம பத்தினி என்கிறது அந்த சுலோகம்.

`கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி’ என்ற பழமொழிக்கேற்பக் கணவனுக்கு என்னென்ன நேரங்களில் என்னென்ன தேவை என்பதை வீட்டுக்கு வந்த சில நாட்களிலேயே கண்டு கொண்டு, அந்தக் கடமைகளைச் செய்வதில் அவள் அடிமைபோல் இயங்க வேண்டும்.

(வட மொழியில் `தாசி’ என்றால் அடிமை.)

அவள் கல்வியறிவுள்ளவளாய், இக்கட்டான நேரங்களில் நல்ல யோசனை சொல்பவளாய், ஒரு மந்திரியைப் போல இயங்க வேண்டும்.

`பார்ப்பதற்கு லட்சுமி மாதிரி இருக்கிறாள்’ என்கிறார் களே, அந்த மகாலட்சுமியைப் போன்ற திருத்தமான அழகு இருக்க வேண்டும்.

அழகு என்றால், முடியை ஆறு அங்குலமாக வெட்டி, ஜம்பரைத் தூக்கிக் கட்டி, பின்னால் வருவோருக்கு முக்கால் முதுகு தெரிகிற மாதிரி ஜாக்கெட் போட்டு, பாதி வயிற்றையும் பார்வைக்கு வைக்கும் நாகரிக அழகல்ல.

காஞ்சிபுரம் கண்டாங்கி கட்டி, அரைக்கை ரவிக்கை போட்டு, ஆறடிக் கூந்தலை அள்ளி முடித்து, மல்லிகைப் பூச்சூடி, முகத்துக்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து, கால் பார்த்து நடந்து வரும் கட்டழகையே, `மகாலட்சுமி போன்ற அழகு’ என்றார்கள்.

அவள் பார்க்கும்போது கூட நேருக்கு நேர் பார்க்கமாட்டாள்.

“யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்.”

என்றான் வள்ளுவன்.

`ஒரு கண் சிறக்கணித்தாள் போல நகும்’ என்பதும் அவனே.

எந்த ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில் திடீரென்று அதிர்ச்சியைத் தருமென்றால், மகாலட்சுமி போன்ற குலப்பெண்கள், அந்த அதிர்ச்சிக்குப் பலியாகி விடுவதில்லை.

இடிதாங்கிக் கருவி, இடியை இழுத்துக் கிணற்றுக்குள் விட்டு விடுவது போல், அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவர்கள் விரட்டி விடுகிறார்கள்.

ரூபத்தில் மகாலட்சுமி, என்று சொல்லுகிற சுலோகம், அப்படிப்பட்ட ரூபத்திலுள்ள இதயத்தையும் மகாலட்சுமியின் இதயமாகவே காட்டுகிறது.

பொறுத்தருள்வதில் அவள் பூமாதேவியைப் போல் இருக்க வேண்டும்.

கணவனது சினத்தைத் தணிக்கும் கருவியாக இருக்க வேண்டும்.

அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது.

நல்ல குலப்பெண்களால் அது முடியும்.

அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில், அவள் தாய்போல் இருக்கவேண்டும்.

`தாயோடு அறுசுவைபோம்’ என்பது, நம் முன்னோர் மொழி.

பள்ளியறையில் அவள் கணிகையைப் போலவே நடந்து கொள்ளவேண்டும்.

கணிகையின் சாகசம், சாதுர்யம், ஊடல், கூடல் அனைத்தும் உள்ளவளாய் இருக்கவேண்டும்.

மீண்டும் மீண்டும் அவளையே பார்க்க வேண்டும் என்ற ஆசை கணவனுக்கு எழவேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு பெண்ணைத் தன் பத்தினியாக ஏற்றுக் கொண்டவன், பெரும்பாலும் கெட்டுப் போவதும் இல்லை; வாழ்க்கையில் தோல்வியடைவதும் இல்லை.

நல்ல பெண்ணை மணந்தவன், முட்டாளாய் இருந்தாலும் அறிஞனாகி விடுகிறான். அவன் முகம் எப்பொழுதும் பிரகாசமாயிருக்கிறது.

தவறான பெண்ணை அடைந்தவன், அறிஞனானாலும்

முட்டாளாகி விடுகிறான்; அவன் முகத்தில் ஒளி மங்கி விடுகிறது.

எல்லாம் சரி.

அத்தகைய நல்ல பெண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?

அதற்குப் பாண்டிய நாட்டு இந்துக்களிடையே ஒரு பழமொழி உண்டு.

`தாயைப் பார்த்துப் பெண்ணெடு

தரத்தைப் பார்த்து வரவிடு

நிலத்தைப் பார்த்துப் பயிரிடு

நேரம் பார்த்து முடிவெடு’

என்பார்கள்.

“தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால், மகளைப் படிக்கட்டில் பார்க்க வேண்டாம்” என்பார் கள்.

“தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை” என்பார்கள்.

தாயின் குணங்கள் பெண்ணுக்கும், தந்தையின் குணங்கள் பிள்ளைக்கும் படிவதாக ஐதீகம்.

அப்படிப் படியாமலும் போவதுண்டு; அது விதிவிலக்கு.

ஆகவே, தாயைப் பற்றித் தெரிந்து கொண்டால், பெண்ணைப் பார்க்க வேண்டியதில்லை.

இளைஞனின் துடிதுடிப்பு தாயைப்பற்றிக் கேள்வி கேட்பதில்லை. பெண்ணின் வாளிப்பான அங்கங் களே அவன் நினைவை மயக்குகின்றன.

அதனால்தான் `பெற்றோர் பார்த்து மகனுக்குப் பெண் தேட வேண்டும்’ என்கிறார்கள்.

பெற்றவர்கள் பெண் பார்க்கும்போது, பெண்ணின் குலம் கோத்திரம் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்த பிறகுதான், பேசி

முடிக்கிறார்கள்.அத்தகைய திருமணங்கள் நிதானமாக அறிந்து முடிக்கப்பட்ட திருமணங்கள், நூற்றுக்குத் தொண்ணூறு வெற்றிகரமாக அமைந்திருக்கின்றன.

ஆத்திரத்தில் காதல்

அவசரத்தில் கல்யாணம்

என்று முடிந்த திருமணங்கள், நூற்றுக்குத் தொண்ணூறு தோல்வியே அடைந்திருக்கின்றன.

ஆகவே, ஆயுள்காலக் குடும்ப வாழ்க்கைக்கு நிம்மதி வேண்டும் என்றால், பெண்களைத் தேடும் பொறுப்பைப் பெற்றோர்களிடம் விட்டுவிட வேண்டும்.

காவியத்துக்குச் சுவையான காதல் வாழ்க்கை, பல பேருக்கு நேர்மாறான பலனையே தந்திருக்கின்றது. (விதி விலக்குகளை இதில் நான் சேர்க்கவில்லை.)

குடிப்பிறப்புப் பார்த்துத்தான் பெண்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை முழுவதும் அமைதி இழந்து, அவமானம் சுமந்து, அழுது நொந்து சாக வேண்டியிருக்கும்.

`குடிப்பிறப்பு’ என்பது ஜாதியைக் குறிப்பதல்ல; பெண் பிறந்த குடும்பத்தையே குறிப்பது.

எந்த ஜாதியிலும் நல்ல பெண்கள் தோன்றுகிறார்கள்; கெட்ட பெண்களும் இருக்கிறார்கள்.

நல்ல பெண்களைத் தேர்ந்தெடுப்பதில் ஜாதி மதம் பார்ப்பது பயனற்றது.

குடிப்பிறப்புத்தான் இன்றியமையாதது.

இலங்கையில் சீதையைக் கண்டு திரும்பிய அனுமன்,

ராமனிடம் இப்படிச் சொல்கிறான்:

“விற்பெரும் தடந்தோள் வீர

வீங்குநீர் இலங்கை வெற்பின்

நற்பெரும் தவத்த ளாய

நங்கையைக் கண்டே னில்லை;

இற்பிறப் பென்ப தொன்றும்

இரும்பொறை என்ப தொன்றும்

கற்பெனும் பெயர தொன்றும்

களிநடம் புரியக் கண்டேன்!”

“ஆரிய புத்ரா! நான் இலங்கையில் சீதை என்னும் நங்கையைக் காணவில்லை.

குடிப்பிறப்பு என்ற ஒன்றையும், சிறந்த பொறுமை எனும்

ஒன்றையும், கற்பு எனும் ஒன்றையும் கண்டேன்” என்கிறான்.

“நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்

குலத்தின்கண் ஐயப் படும்”

என்றான் வள்ளுவன்.

“நடத்தையின் குற்றம் குலத்தின் குற்றமே” என்பது வள்ளுவன் வாதம்.

ஆகவே, ஒரு பெண்ணின் குடிப்பிறப்பைக் கூர்ந்து அறிதல் இன்றியமையாதது.

நற்குடிப் பிறப்பை அறிந்துகொண்டுவிட்டால், பிறகு பெண்ணின் உருவத்தை மட்டும் பார்த்தால் போதும். மற்ற குணங்கள் தாய் வழியே

வந்திருக்கும்.பொறுப்பற்ற இளைஞன், குடும்பப் பொறுப்பை மேற்கொண்ட பிறகு, அந்த ரதம் நீண்ட தூரம் செல்ல வேண்டிய ரதம் என்பதை அறிந்தால், இதில் எச்சரிக்கையாக இருப்பான்.

நல்ல துணை கிடைக்காமல், பைத்தியக்காரரைப் போல் உலவும் துர்ப்பாக்கியசாலிகளின் கண்ணீரில் இருந்து, பெண்ணைத் தேர்ந்

தெடுக்கும் பாடத்தை இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

“பத்தாவுக் கேற்ற பதிவிரதை யாமானால்

எத்தாலும் கூடி வாழலாம் சற்றேனும்

ஏறுமா றாக இருப்பாளே யாமாயின்

கூறா மற் சந்நியாசம் கொள்!”

“சண்டாளி சூர்ப்பநகை தாடகையைப்

போல்வடிவு

கொண்டாளைப் பெண்ணென்று கொண்டாயே

- தொண்டா

செருப்படிதான் உந்தன் செல்வமென்ன செல்வம்

நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்!”

என்றாள் தமிழ் மூதாட்டி.

“கைப்பிடி நாயகன் தூங்கையிலே அவன் கையை

எடுத்(து)

அப்புறம் தன்னில் அசையாமல் முன்வந்(து)

அயல்வளைவில் ஒப்புடன் சென்று துயில்நீத்துப்

பின்வந்(து)

உறங்குவாளை எப்படி நான் நம்புவேன், இறைவா

கச்சி ஏகம்பனே!”

என்று புலம்பினார் பட்டினத்தார்.

சித்தர்கள், ரிஷிகள், சந்நியாசிகள் பலர் மனைவியால் விரக்தியுற்று அப்படி ஆனவர்கள் என்பதால்

தான் நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது

என்கிறார்கள்.

“இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை

இல்லாளும் இல்லாளே ஆமாயின் இல்லாள்

வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்

புலிகிடந்த தூறாய் விடும்.”

இதுவும் மூத்தோர் மொழி.

“இல்லாள் என்பவள் இல்லத்தை ஆள்பவள்; அவள் அன்பில்லாளாக, அடக்கமில்லாளாக பணமில்லாளாக, பத்தினித்தன்மை இல்லாளாக இருந்துவிட்டால், உன் வீடு புலி கிடந்த குகைபோல் ஆகிவிடும்” என்பது முன்னோர் எச்சரிக்கை!

இந்துப்புராணங்களில் ஈடுபாடு கொண்டவர்கள், நல்ல மனைவியின் இலக்கணங்களை அறிவார்கள்.

இன்றைய இளைஞனுக்கும் மத ஈடுபாடு

ஏற்பட்டுவிட்டால், அவன் கண்ணை மனது வென்று, நல்ல பெண்ணை நோக்கிக் கொண்டு போகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

13. நல்ல நண்பன்

நல்ல மனைவியைத் தேர்ந்தெடுப்பது போலவே, நல்ல நண்பனைத் தேர்ந்தெடுப்பதிலும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.

உன் எதிரியை நீ சுலபமாக அடையாளம் கண்டு கொண்டுவிட முடியும்.

ஆனால், நண்பர்களிலே, நல்ல நண்பர் யார் என்பது அனுபவத்தின் மூலமேதான் தெரியுமே தவிர, சாதாரண அறிவினால் கண்டுகொள்ள முடியாது.

முகத்துக்கு நேரே சிரிப்பவன்,

முகஸ்துதி செய்பவன்,

கூனிக் குழைபவன்,

கூழைக் கும்பிடு போடுபவன்,

இவனெல்லாம் நல்ல நண்பன் மாதிரியே தோற்றமளிப்பான்.

ஆனால் எந்த நேரத்தில் அவன் உன்னைக் கவிழ்ப்பான் என்பது அவனுக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும்!

ஆகவே ஒருவனை நண் பனாக்கிக் கொள்ளுமுன், அவனைப்பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

சரியாகத் தெரிந்த பின்புதான், அவனிடம் ரகசியங்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்.

நன்றாக ஆராய்ந்து, `இவன் நல்லவன்தான்’ என்று கண்டபின், ஒருவனை நண்பனாக்கிக் கொண்டு விட்டால், பிறகு அவன்மேல் சந்தேகப்படக்கூடாது.

“அவசரத்தில் ஒருவனை நம்பிவிடுவதும், நம்பிக்கைக்கு உரியவன் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவனைச் சந்தேகிப்பதும், தீராத துயரத்தைத் தரும்” என்றான் வள்ளுவன்.

தேரான் தெளிவும் தெளிந் தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

சரி, நல்ல நண்பனைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

யாரோடு நீ பழக ஆரம்பிக்கின்றாயோ, அவனோடு நீ இனிமையாகப் பழகவேண்டும்.

கொஞ்ச காலத்திற்கு அதை, நீ நட்பாகக் கருதக்கூடாது.

வெறும் பழக்கமாகத்தான் கருதவேண்டும்.

உனக்குக் கஷ்டம் வந்தபோது அவன் கைகொடுத்தால், உன்னைப்பற்றி நல்லவிதமாக, நீ இல்லாத இடத்தில் அவன் பேசுவதைக் கேள்விப்பட்டால்,

பிறர் உன்னைப்பற்றித் தவறாகப் பேசும்போது, அவன் தடுத்துப் பேசியதாக அறிந்தால்,

அவனை நீ நம்பத் தொடங்கலாம்.

தொடர்ந்து இது போன்ற பல செய்திகளைக் கேள்விப்பட்ட பிறகுதான், அவனை நண்பனாக நீ வரித்துக் கொள்ளவேண்டும்.

பல இடங்களில் ஒரே மாதிரி ஒருவன் நடிக்க முடியாது. ஆகவே, உன்மீது அவன் வைக்கும் அன்பும் உண்மையாகத்தான் இருக்க முடியும்.

நட்பு என்பது வெறும் முகஸ்துதி அல்ல.

ஆபத்தில் உதவுவது ஒன்றே நட்பு.

நீ அழும்போது உண்மையிலேயே அவனுக்கும் அழுகை வருகிறது என்றால், அதுதான் நட்பு.

“முகநக நட்பது நட்பன்று; நெஞ்சத்து

அகநக நட்பதே நட்பு.”

“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.”

என்றான் வள்ளுவன்.

நண்பர்களை மூன்று வகையாகப் பிரிக்கிறது ஒரு பழம்பாடல்.

பாடல் மறந்துபோய் விட்டது. விளக்கம் இதுதான்:

ஒன்று, பனைமரம் போன்ற நண்பர்கள்; இரண்டு, தென்னைமரம் போன்றவர்கள்; மூன்று, வாழைமரம் போன்றவர்கள்.

பனைமரம் யாராலும் நட்டுவைக்கப்பட்டதல்ல.

பனம்பழத்தைத் தேடி எடுத்து யாரும் புதைப்பதில்லை.

அது தானாகவே முளைக்கிறது.

தனக்குக் கிடைத்த தண்ணீரைக் குடித்துத் தானாகவே வளர்கிறது.

தனது உடம்பையும், ஓலையையும், நுங்கையும் அது உலகத்திற்குத் தருகிறது.

நம்மிடம் எந்த உதவியையும் எதிர்பாராமல், நமக்கு உதவுகிறவன், பனைமரம் போன்ற நண்பன்.

தென்னைமரம் நம்மால் நடப்படுகிறது.

அதற்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றி வளர்த்தால்தான் அது நமக்குப் பலன் தருகிறது.

அதுபோல், நம்மிடம் அவ்வப்போது உதவி பெற்றுக் கொண்டு நண்பனாக இருக்கிறவன், தென்னைமரத்துக்கு இணையான நண்பன்.

வாழைமரமோ, நாம் தினமும் தண்ணீர் ஊற்றிக் கவனித்தால்தான் நமக்குப் பலன் தருகிறது.

அதுபோல் தினமும் நம்மிடம் உதவி பெற்றுக் கொள்கிறவன் வாழைமரம் போன்ற நண்பன்.

இந்த மூவரில், பனைமரம் போன்ற நண்பனே நீ தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டிய நண்பன்.

எனக்கு அப்படிப்பட்ட நண்பர்கள் சிலர் கிடைத்தார்கள்.

எனக்குக் கிடைத்த நண்பர்களில் நூற்றுக்கு ஒருவர் இருவரே அப்படிப்பட்ட நண்பர்களாக இருந்தார்கள் என்பது பொருத்தம்.

மற்றவர்கள் எல்லோரும் என்னிடம் பணம் பறிப்பதற்காகவே நண்பர்களாக இருந்தார்கள்.

அதிலே நான் ஏமாளியாக இருந்தேன் என்பதை ஒப்புக் கொள்வதில் வெட்கமில்லை.

ஆனால், என்னை ஏமாற்றிய நண்பர்கள் எல்லாம் இன்று செல்வாக்கிழந்து `கோழி மேய்க்கிறார்கள்’ என்பதை எண்ணும்போது, சிநேகிதத் துரோகிகளுக்கு இறைவன் அளிக்கும் தண்டனையைக் கண்டு, நான் மகிழ்ச்சியடைகிறேன்.

மற்றவர்களுக்கு அந்த அனுபவம் வரக்கூடாது என்பதற்காகவே இதை எழுதுகிறேன்.

இந்துக்களின் இதிகாசங்கள், நல்ல நண்பன் எப்படி இருப்பான் என்பதை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.

ஸ்ரீராமனுக்குக் கிடைத்த நண்பர்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைத்தால், துன்பங்களே இல்லாமல் போய்விடும். ஸ்ரீராமனின் துன்பங்களை யார் யார் பங்கு போட்டுக் கொண்டார்கள்?

அதை ரகுநாதனின் வாய்மொழியாகக் கம்பன் சொல்கிறான்.

“குகனொடும் ஐவரானோம்

முன்பின் குன்று சூழ்வான்

மகனொடும் அறுவ ரானோம்

எம்முறை அன்பின் வந்த

அகமலர் காதல் ஐய

நின்னொடும் எழுவ ரானோம்!”

வீடணன் நண்பனானபோது, வீடணனைப் பார்த்து ஸ்ரீ ராமன் சொன்ன வார்த்தைகள் இவை.

“வீடணா! நானும் இலக்குவனும், பரதனும், சத்துருக்கனனும் நான்கு சகோதரர்களாகப் பிறந்தோம்.

கங்கை இரு கரையுடையான், கணக்கிறந்த நாவாயான் குகனைச் சந்தித்தபோது, நாங்கள் ஐவரானோம்.

சுக்ரீவன் எங்களோடு சேர்ந்தபோது நாங்கள் அறுவரானோம்.

உன்னைச் சேர்த்து இப்போது எழுவராகி விட்டோம்.”

ஆம்! ராமனுக்கு அவர்கள் செலுத்திய அன்புக் காணிக்கை ராமனுடைய சகோதரர்களாகவே அவர்களை ஆக்கிவிட்டது.

நல்ல நட்புக்கு என்னென்ன இலக்கணங்கள் உண்டோ அவை எல்லாம் கூடிவாய்க்கப் பெற்ற ஒருவன் நண்பனாக மட்டுமின்றிச் சகோதரனாகவும் ஆகிவிடுகிறான்.

நண்பர்கள் தனக்கு உதவி செய்தார்கள் என்பதற்காகத் தன் சொந்த சகோதரர்களையே விரோதித்துக் கொண்டு செஞ்சோற்றுக் கடன் கழித்து, ஒருவன் மகாபாரதத்தில் காட்சியளிக்கிறான்.

அவனே கர்ணன்.

கர்ணன் குந்தியின் மகன்; பாண்டவர்களின் சகோதரன்.

கௌரவர்கள் அவனிடம் பாராட்டிய நட்புக்காக, அவர்கள் செய்த உதவிக்காக, போர்க்களத்தில் தன் சகோதரர்களையே எதிர்த்தான் கர்ணன்.

நட்பு என்பதும், செஞ்சோற்றுக் கடன் கழித்து நன்றி செலுத்துவது என்பதும் இந்துக்களின் மரபு.

அந்த மரபின், நட்பின் மேன்மையை வற்புறுத்தும் புராணக் கதைகள் பலவுண்டு.

நல்ல மனைவியை எப்படி இறைவன் அருளுகிறானோ, அப்படியே நல்ல நண்பர்களை அருளுமாறு இறைவனைப் பிரார்த்திப்பது நல்லது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

14. கீதையில் மனித மனம்

கவியரசு கண்ணதாசன் அர்ஜுனனுக்குப் பரந்தாமன் உபதேசித்தது பகவத் கீதை.

மனிதனின் மனதைப்பற்றி அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் வாக்குவாதம் நடக்கிறது.

கண்ணன் சொல்கிறான்:

“அர்ஜுனா, எவன் தன்னையே உதாரணமாகக் கொண்டு இன்ப துன்பங்கள் இரண்டையும் சமமாகப் பார்க்கிறானோ, அந்த யோகிதான் சிறந்தவன் என்பது துணிவு.”

அர்ஜுனன் கேட்கிறான்:

“மதுசூதனா! உன்னால் கூறப்படும் சமநோக்கத்துடன் கூடிய யோகத்தின் ஸ்திரமான நிலையை என்னால் உணர முடியவில்லை; காரணம், உள்ளம் சஞ்சலமுடையது.

கிருஷ்ணா! மனித மனம் சஞ்சலமுடையது; கலங்க வைப்பது; வலிமையுடையது; அடக்க முடியாதது; காற்றை அடக்குவது போல் அதை அடக்குவது கடினமானது.”

பகவான் கூறுகிறான்:

“தோள் வலி படைத்த காண்டீபா! மனம் அடக்க முடியாதது; சலனமடைவது; இதில் ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே! பழக்கத்தால் அதை அடக்கமுடியும்.”

இதையே ராமகிருஷ்ண பரமஹம்சர் இப்படிக் கூறுகிறார்:

“கீழே கொட்டிய கடுகைப் பொறுக்கி எடுப்பது வெகுசிரமம். அதுபோலப் பல திசைகளிலும் ஓடும் மனத்தை ஒருமைப் படுத்துவது எளிதன்று. ஆனால், வைராக்கியத்தால் அதைச் சாதித்துவிட முடியும்.”

மனித மனத்தின் சலனங்களை, சபலங்களை, எப்படி அடக்குவது, என்பதுபற்றி பரந்தாமன் அர்ஜுனனுக்கு உபதேசித்த பகுதி, பகவத் கீதையின் தியான யோகமாகும்.

சகல காரியங்களுக்கும், இன்பத்திற்கும், துன்பத்திற்கும், நன்மைக்கும், தீமைக்கும், இருட்டுக்கும், வெளிச்சத்திற்கும், பாவத்திற்கும், புண்ணியத்திற்கும், அன்புக்கும், வெறுப்புக்கும் மனமே காரணம்.

மனத்தின் அலைகளே உடம்பைச் செலுத்துகின்றன.

பகுத்தறிவையும் மனம் ஆக்கிரமித்துக் கொண்டு வழி நடக்கிறது.

கருணையாளனைக் கொலைகாரனாக்குவதும் மனம்தான்; கொலைகாரனை ஞானியாக்குவதும் மனம்தான்.

அது நோக்கிச் செல்லும் தடங்களின் அனுபவத்தைப் பெற்றுப் பேதலிக்கிறது; அப்போதுதான் அறிவு வேலை செய்கிறது.

எந்த அனுபவங்களையும் கொண்டுவருவது மனம்தான்.

இது சரி, இது தவறு என்று எடை போடக்கூடிய அறிவை, மனத்தின் ராகங்கள் அழித்துவிடுகின்றன.

உடம்பையும் அறிவையும் மனமே ஆக்கிரமித்துக் கொள்வதால், மனத்தின் ஆதிக்கத்திலேயே மனிதன் போகிறான்.

என்ன இந்த மனது?

காலையில் துடிக்கிறது; மதியத்தில் சிரிக்கிறது; மாலையில் ஏங்குகிறது; இரவில் அழுகிறது.

“இன்பமோ துன்பமோ எல்லாம் ஒன்றுதான். நடப்பது நடக்கட்டும்” என்றிருக்க மனம் விடுவதில்லை.

ஒரே சீரான உணர்ச்சிகள் இந்த மனத்துக்குத் தோன்றுவதில்லை.

எவ்வளவு பக்குவப்பட்டாலும் மனத்தின் அலைகளாலேயே சஞ்சரிக்கிறான்.

கடிவாளம் இல்லாத இந்த மனக்குதிரையை அடக்குவது எப்படி?

“வைராக்கியத்தால் முடியும்” என்கிறது கீதை.

அதையே சொல்கிறார் பகவான் ராமகிருஷ்ணர்.

அது என்ன வைராக்கியம்?

உள்ளத்தை ஒருமுகப்படுத்துவது; எந்த நிகழ்ச்சிகளுக்கும் அசைந்து கொடுக்காமல் இருப்பது.

மெழுகு போல் இருக்கும் மனதை மரக்கட்டை போல் ஆக்கிவிடுவது.

ஆசாபாசங்களில் இருந்து மனதை மட்டும் ஒதுக்கிவைத்து விடுவது; பந்தபாசங்களில் இணங்கிவிடாமல் இருப்பது.

பற்றறுப்பது; சுற்றுச் சூழ்நிலைகள் வெறும் விதியின் விளையாட்டுகளே என்று முடிவு கட்டிவிடுவது.

நடக்கும் எந்த நிகழ்ச்சியும் இறைவனின் நாடகத்தில் ஒரு காட்சியே என்று முடிவுக்கு வருவது.

ஜனனத்துக்கும், மரணத்துக்கும் இடைப்பட்ட வாழ்க்கை, சாட்டை இல்லாப் பம்பரம்போல் ஆட்டி வைக்கப்படும் வாழ்க்கையே என்று கண்டுகொள்வது.

துன்பத்தைத் தரக்கூடிய விஷயங்களை அலட்சியப் படுத்துவது.

இன்பமான விஷயங்களைச் சந்தேகமில்லாமல் ஏற்றுக் கொள்வது.

பிறர் தனக்கிழைத்த துன்பங்களை மறந்துவிடுவது, மன்னித்துவிடுவது.

முயற்சிகள் தோல்வியுறும்போது, `இதற்கு இறைவன் சம்மதிக்க வில்லை’ என்று ஆறுதல் கொள்வது.

`கணநேர இன்பங்களை’ அவை கண நேர இன்பங்களே என்று முன் கூட்டியே கண்டுகொள்வது.

`ஆத்மா என்னும் மாயப்புறா அமரும் மாடங்களெல்லாம் நம்முடைய மாடங்களே’ என்ற சம நோக்கத்தோடு பார்வையைச் செலுத்துவது.

காலையில் இருந்து மாலை வரை நடந்த நிகழ்ச்சிகள் ஆண்டவனின் கட்டளையால் செலுத்தப்பட்ட வாகனங்களின் போக்குத்தான் என்று அமைதி கொள்வது.

சொல்வதற்கும் எழுதுவதற்கும் சுலபமாக இருக்கிறது. ஆனால், எப்படி இது முடியும்?

பகவத் தியானத்தால் முடியும்.

அதிகாலையில் ஓர் அரைமணி நேரம், இரவிலே ஓர் அரைமணி நேரம், கோவிலிலோ, வீட்டுப் பூஜை அறையிலோ தனிமையில் அமர்ந்து, வேறு எதையும் நினைக்காமல் இறைவனையே நினைப்பது.

இறைவனை நினைத்துக் கொண்டிருக்கும்போதே, மனம் வேறு திசையில் ஓடினால் அதை இழுத்துப் பிடிப்பது.

பாசத்திலே மூழ்கிக் கிடந்த பட்டினத்தார் `ஞானி’யானது இப்படித்தான்.

தேவதாசிகளின் உறுப்புகளிலேயே கவனம் செலுத்திய அருணகிரிநாதர், ஆண்டவனின் திருப்புகழைப் பாடியதும் இப்படித்தான்.

இயற்கையாகவே கல்வியாற்றல் பெற்றிருக்கும் ஒரு கவிஞன், ஒரு பொருளைப்பற்றிக் கவிதையில் சிந்திக்கும் போது, அவன் மனம் கவிதையிலேயே செல்கிறது.

அதில் லயிக்கிறது, ரசிக்கிறது, சுவைக்கிறது.

அப்போது ஓர் இடைறு, குறுக்கீடு வந்தாலும் அவனுக்கு ஆத்திரம் வருகிறது.

கண்கள் திறந்திருக்கின்றன. மனம் கவிதையில் ஆழ்ந்து கிடக்கிறது; அப்போது திறந்த கண்ணின் எதிரில் நிற்கும் மனைவிகூட அவன் கண்ணில் படுவதில்லை.

மரத்தில் அமர்ந்திருக்கும் பறவையை நோக்கி வில்லெடுக்கும் வேடனின் கண்களில் பறவை மட்டும் தெரியுமே தவிர, மரத்திலுள்ள இலைகள், காய்கள், கனிகள் தெரிவதில்லை.

கவிஞனுக்கும், வேடனுக்கும் சாத்தியமான மனதின் ஒருமுக நிலையை மற்றவர்களும் பெறமுடியும்.

அதாவது, ஒன்றையே நினைத்தல்.

அந்த லயம் கிட்டிவிட்டால் புலன்களும், பொறிகளும் செயலற்றுப் போகின்றன.

வாயின் சுவை உணர்வு, நாசியின் மண உணர்வு, கண்களின் காட்சி உணர்வு, செவியின் ஒலி உணர்வு, பிற அங்கங்களின் ஸ்பரிச உணர்வு அனைத்தையும் அடித்துப் போட்டுவிட்டு, புலியைக் கொன்ற வேடன்போல் மனது கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. அதுதான் சரியான லயம்.

சங்கீத வித்வான் சரித்திர ஆராய்ச்சி செய்வதில்லை; ஸ்வரங்களையும் ராகங்களையுமே ஆராய்ச்சி செய்கிறான்.

ஒரே இடத்தில் ஒரே நிலையில் மனத்தைச் செலுத்தினால் சலனமில்லாத ஒரே உணர்ச்சி தோன்றுகிறது.

ஒரு கதை உண்டு!

ஒரு தாய் தனது ஒரு மாதக் கைக்குழந்தையோடு தரையிலே பாய் விரித்துப் படுத்திருந்தாள். அப்போது அவளுக்குக் கொஞ்ச தூரத்தில் பாம்பு வந்து நின்றது.

பாம்பைக் கண்ட உறவினர்கள் பதறினார்கள்; துடித்தார்கள்.

அந்தப் பாம்பு குழந்தையையும் தாயையும் கடித்து விடப் போகிறதே என்று பார்த்தார்கள்.

தாயின் பெயரைச் சொல்லி சத்தமிட்டார்கள்.

தாய் எழவில்லை.

ஓங்கித் தடியால் அடித்தார்கள்; அப்போதும் அவள் எழவில்லை.

பக்கத்தில் படுத்திருந்த குழந்தையின் மீது ஒரு மல்லிகைப் பூவை எடுத்துப் போட்டார்கள். தாய் உடனே விழித்துக்கொண்டு, அந்தப் பூவை எடுத்து அப்புறம் போட்டாள்.

தன்னை உதைத்தபோது கூடச் சொரணையில்லாது உறங்கிய தாய், குழந்தை மீது பூ விழுந்ததும் விழித்துக் கொண்டது எப்படி?

அந்த உள்ளம் குழந்தையிடமே லயித்துக் கிடந்ததால்தான்.

ஈஸ்வர பக்தியில் உடல் உருக, உள்ளம் உருக லயித்துக் கிடந்த அடியார்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் எல்லாம் மனதை ஒருமுகப்படுத்தியவர்களே.

இந்த மனத்தின் கோலங்களாலேயே நான் பலமுறை தடுமாறி இருக்கிறேன்.

ஆசைக்கும் அச்சத்துக்கும் நடுவே போராடி இருக் கிறேன்.

ஜனனம் தகப்பனின் படைப்பு; மரணம் ஆண்டவனின் அழைப்பு; இடைப்பட்ட வாழ்க்கை அரிதாரம் பூசாத நடிப்பு என்பதை, நாளாக நாளாக உணர்ந்து வருகிறேன்.

இன்னமும் முழுப்பக்குவம் கிட்டவில்லை.

திடீர் திடீரென்று மனதில் ஒன்றிருக்க ஒன்று பாய்கிறது.

ஒன்றை எடுத்தெறிந்தால், இன்னொன்று ஓடி வருகிறது.

ஒரேயடியாக மிதித்துக் கொன்றால்தான் நிம்மதி கிடைக்கும் என்பது தெரிகிறது.

என் கால்கள் இன்னும் அந்த வலுவைப் பெறவில்லை.

பெற முயல்கிறேன்; பெறுவேன்.

பிறந்தோருக்காகச் சிரிக்காமலும், இறந்தோருக்காக அழாமலும் பரந் தாமன் கூறியதுபோல் சமநோக்கத்தோடு நின்று, மன அமைதி கொள்ள முயல்கிறேன்.

அதை நான் அடைந்துவிட்டால், கடவுள் கண்களிலே கண்ணீர் வைத்ததற்கான காரணமும் அடிபட்டுப் போகும்.

இவ்வளவையும் நான் சொல்லுவது லௌகிக வாழ்க்கையிலும் நம்மை அமைதிப்படுத்துவதே இந்துமதத்தின் நோக்கம் என்பதை விளக்கத்தான்.

லௌகிக வாழ்க்கையைச் செப்பனிடும் இந்துமதக் கருவிகளில் பகவத் கீதையும் ஒன்று என்பதுதான் என் துணிவு.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

“பூர்வ ஜென்மம் என்று ஒன்று உண்டா?

பூர்வ ஜென்மத்தின் தொடர்ச்சியாக இந்த ஜென்மத்தில் நாம் நன்மை தீமைகளை அனுபவிக்கிறோம் என்பது உண்மையா?”

“ஜென்மங்கள் பற்றிய விஷயத்தில் கடவுளுக்குச் சம்பந்தம் என்ன?”

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் என்னுடைய பதிலைக் கூறுமுன் மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பராமாசாரிய சுவாமிகள் எழுதியுள்ள ஒரு சிறு நூலிலிருந்து விஷயங்களை வைக்கிறேன்.

“கடவுளை நோக்கிச் செய்கின்ற பிரார்த்தனை அல்லது வேண்டுகோள் பலனுடையதாக இருக்குமா? அப்படி ஒரு கடவுள் இருக்கிறாரா? அப்படி இருப்பாரென்றால், நமக்கும் அவருக்கும் எவ்விதத் தொடர்பும் இருக்கின்றதாகத் தெரிய வில்லையே! அவ்வித மூட நம்பிக்கை நமது நாட்டை விட்டுப் போனாலன்றி நம் நாடு முன்னேற முடியாது” என்று சொல்கின்ற பலர், ஆலய வழிபாட்டிலும், வீட்டு வழிபாட்டிலும் தலைசிறந்த நமது தமிழகத்திலேயே உற்பத்தியாகி இருக்கிறார்கள். இவை வெளிநாடுகளிலிருந்து விதைத்த விதைகளால் ஏற்பட்டவை. இப்படிப்பட்ட கேள்விகளையும் இதற்கு மேலதிகமான கேள்விகளையும் பல்லாயிரம் வருஷங்களுக்கு முன்பே கேட்டு, அவர்களுக்கெல்லாம் பல நியாயங்களும் நிரூபணங்களும் கொடுத்து ஒத்துக்கொள்ளுமாறு நமது அருளாளர்களும் ரிஷிகளும் செய்து, அவற்றைப் பின் சந்ததியார்கள் யாவரும் உணர்ந்து கொள்ளுமாறு ஏடுகளில் எழுதியும் உதவியிருக்கிறார்கள். அந்த உண்மைகளை நாம் திருவருளால் கண்டுணர்ந்து இன்று வெற்றிமுரசு கொட்டிக் கையாண்டு வருகிறோம்.

அவ்வாறு கேட்கின்ற ஒருவரிடம், நாம் முதலாவதாக ஒரு கேள்வி கேட்கிறோம்: “நீ இந்த உலகத்தில் பிறந்து, நன்றாக உண்டு வளர்ந்து, இவ்வாறு பேசுவதற்கு மூல காரணம் உன்னுடைய அப்பாவும் அம்மாவும்தான் என்பதை ஒப்புக் கொள்கிறாயா?” என்பதே அந்தக் கேள்வி. “ஆம்” என்று ஒப்புக் கொண்டால் மட்டும் மேற்கொண்டு பேசுவோம்.

மனிதனான எவனும் ஒப்புக் கொள்ளாதிருக்க முடியாது. “உன்னை உன்னுடைய அம்மா தானே பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்துப் பாலூட்டித் தாலாட்டி உணவு கொடுத்து வளர்த்து வந்தாள்? அப்படியிருக்க “நீ யாருடைய குழந்தை?” என்று கேட்டால், “நீ ஏன் அம்மாவின் பெயரைச் சொல்லாமல் அப்பாவின் பெயரைச் சொல்லி, அவருடைய மகன் என்று சொல்கிறாயே” என்று கேட்போம். உன்னைப் பெற்றெடுத்தது உனது தாயார் தான் என்பதே அவள் சொல்லத்தான் தெரியுமே தவிர, நீ அறியாதிருக்க, தகப்பனார் பெயரை உன் தாயார் சொன்னதைக் கேட்டுத் தானே ஒப்புக் கொண்டு சொல்லி வருகிறாய்?” என்போம்.

“ஆம்” என்று சொல்லாமல் தீராது.

தாயாருக்கே தான் பெற்ற பிள்ளையின் தகப்பனார் யார் என்று தெரியாத நிலையிலிருந்தால், தாயார் விலாசத்தைப் போட வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. தாயார் பெயரை சொல்லாததும், தகப்பனார் பெயரைச் சொல்லாததும் உலக முழுவதிலும் நடைபெறுவதாகும். அதற்கு மூல காரணம் ஒன்று உண்டு. அதாவது, ஒரு விளைநிலம் ஒருவனுக்குச் சொந்தமாக இருக்க, அதில் உழவு செய்து வித்திட்ட அவனுக்குத்தான் அந்த நிலத்தில் விளைந்து வந்த பயிர் சொந்தமாகும். அதுபோல் மனைவி, கணவனுடைய உடைமை, வித்திட்டவனும் கணவன். ஆகவே, கணவனது உண்மையான மனைவியிடத்தில் உற்பத்தியான குழந்தைகள் சொந்தத் தந்தையின் குழந்தைகளாகின்றன.

அதனாலேயே பெண்களெல்லாம் கற்புடையவர்களாக இருக்க வேண்டுமென்பது உலக நீதி.

இரண்டாவது கேள்வி: “உனக்குக் கல்யாணமாகி விட்டதா?” என்பதாகும். “ஆம்” என்பான். “பிள்ளைகள் இருக்கின்றனவா?” “ஆம், இருக்கின்றனர்!” “நீயும் உன் மனைவியும் விரும்பிய வண்ணம் குழந்தைகள் பிறந்தனவா?” “இல்லவே இல்லை” என்பான்.

நேருஜிக்கு எவ்வளவோ வசதிகள் இருந்தும் ஆண் குழந்தைகள் கிடையாது என்பதும், பல பெரிய பணக்காரர்களுக்கும், பதவியில் உள்ளவர்களுக்கும், சில வைத்திய நிபுணர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் குழந்தையே கிடையாது என்பதும், யாவரும் அறிந்த உண்மையாகும்.

அதற்கும் உண்மையான காரணம் உண்டு. அது எந்த மனிதனும் தனது விருப்பம்போல் ஆண் மகவுக்குரிய வித்தையோ, பெண் மகவுக்குரிய வித்தையோ உற்பத்தி செய்து உண்டாக்கிக் கொள்ள முடியாததேயாகும். அந்த வித்தை, எல்லாம் வல்ல கடவுள் கொடுத்துத்தான் எந்தத் தந்தையும் பெறவேண்டியிருக்கிறது. கடவுள் கொடுக்க தந்தை பெற்று, தாயார் அதனைப் பெற்றதன் காரணத்தினாலேயே தாய் தந்தையரைப் `பெற்றவர்கள்’ அல்லது `பெற்றோர்கள்’ என்று சொல்லுகின்றோம்.

இந்த உண்மையை உணர்ந்த அருளாளர்கள், தந்தை இரண்டு மாதம் தங்குகின்ற நாற்றங்காலாகவும், தாயாரைப் பத்து மாதம் வளர்க்கின்ற விளைநிலமாகவும், இரண்டையும் உடையவர்கள் கடவுளே என்றும், அவற்றில் வித்திட்டவரும் கடவுளே என்றும் கண்டு, ஆண்டவனே உலகத்தில் பிறந்திருக்கிற எல்லா மனிதர்களுக்கும் எல்லாப் பிறவிகளுக்கும் உண்மையான அம்மையப்பன் ஆகின்றான் என்றும் அருளியிருக்கின்றார்கள்.

இந்துக்கள், கடவுளை `அம்மையே அப்பா’ என்றும், `எந்தையாய் எம்பிரான்’ மற்றும் யாவருக்கும் `தந்தை தாய் தம்பிரான்’ என்றும்; கிறிஸ்தவர்கள் `நாமெல்லாம் பரமண்டலத்திலிருக்கின்ற பிதாவினது குழந்தைகளே’ என்றும்; இஸ்லாமியர்கள் `கடவுளே மனிதர்களைப் படைத்தார்’ என்றும் கூறி வருகிறார்கள். யாரும் உயிர்களைக் கடவுள் படைத்ததாகச் சொல்லவில்லை.

மூன்றாவது கேள்வி: “உனக்கு ஒரு பெயரிடப் பெற்றிருக்கிறதல்லவா? அந்தப் பெயர் கண்ணுக்குத் தெரியாத உயிருக்கு இடப்பட்டதா? கண்ணுக்குத் தெரிகின்ற பாரமுள்ள உடலுக்கு இடப்பட்டதா? அல்லது வேறொரு பாரமில்லாத உன் உடலுக்கு இடப்பட்டதா?” என்று கேட்போம். “நான் பிறந்த பின்தான் பெயரிட்டிருக்கிறார்கள்; ஆணா பெண்ணா என்று பார்த்து என் பெற்றோர்கள்தான் பெயரிட்டிருக்கிறார்கள்” என்றுதான் (நாம் எழுதியிருக்கிற புத்தகத்தைப் படித்தறியாத) எவரும் சொல்வர்.

ஆனால் உண்மையில் மனிதராகப் பிறந்திருக்கிற எவருக்கும் பெயரிட்டவர் கடவுளேயாவார். ஒருவரை ஆணாகவோ பெண்ணாகவோ பிறக்கச் செய்ய வேண்டிய தகப்பனாருடைய உடலில், அதற்குரிய அணுப்பிரமாணமுள்ள அதிசூக்குமமான வித்தைச் செலுத்தி, முன்னரேயே அவருடைய வினைகளுக்குத் தகுந்த தலையெழுத்தை ஆணுக்கு வலது உள்ளங்கையிலும், பெண்ணுக்கு இடது உள்ளங்கையிலும் சுருக்கெழுத்துப் போன்ற ரேகைகளாகப் பொறித்து, இன்ன ஊரில், இன்ன ஜாதியில், இன்ன பெற்றோருக்கு இன்ன பெயரோடு, இன்ன விநாடியில் இன்னின்ன கிரக நிலையில் பிறக்க வேண்டுமென்று கடவுளே தீர்மானித்து, அதன்படி பிறக்கச் செய்து அவர் இட்ட பெயரையே இடும்படியாகவும், அவரவர் செய்த புண்ணிய பாவத்திற்கேற்ப இன்ன இன்ன இன்பம் துன்பம் அனுபவித்து வருமாறும் ஆட்சி புரிந்து வருகிறார். அந்தப் பெயரும் சொப்பனத்தில் பாரமுள்ள உடலின் உதவியின்றி, இன்பம் துன்பம் அனுபவிக்கின்ற, பாரமில்லாத உள்ளுடலுக்கே இட்டிருக்கிறார்.

இந்த அரிய பெரிய பேருண்மையை முதன் முறையாகக் கேட்கின்ற அனைவரும் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. ஒருவேளை, நமக்கு மூளைக்கோளாறாக இருக்கலாமோ என்றுகூடச் சில ஆத்திரக்காரர்கள் நினைக்கக்கூடும். நாம் இதனுடைய உண்மையைச் சோதித்து உணருவதற்காக ரூபாய் ஒரு லட்சத்திற்கு மேல் செலவு செய்த பின் இவ்விதம் கூறுகின்றோம்.

திருவள்ளுவர்:

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்றும்,

“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”

என்றும் கூறியிருப்பதனால், நாம் கூறும் இந்த உண்மையைச் சோதித்துப் பார்த்தபின், அதைப்பற்றி ஏதாவது சொல்ல வேண்டுமே தவிர, கேட்டமாத்திரத்தில் யாரும் எதையும் மறுத்தால் அது அறிவுடைமையாகாது.

பெயர்களைக் குறித்து கிறிஸ்துவ வேதநூலில் பிரசங்கி ஆகமம், அதிகாரம் 6, வசனம் 10ல் “இருக்கிறவன் எவனும் தோன்று முன்னமே பெயரிடப் பெற்றிருக்கிறான். அவன் மனுஷன் என்பது தெரிந்திருக்கிறது” என்றும், ரேகை, சாஸ்திரத்தைக் குறித்து யோபு ஆகமம், அதிகாரம் 37, வசனம் 7ல் “தாம் உண்டாக்கின சகல மனுஷரும் தம்மை அறியும்படி, அவர் சகல மனுஷருடைய கையையும் முத்தரித்துப் போடுகிறார்” என்றும் கூறியிருக்கிறது.

உதாரணமாக நாகர்கோவில் ஸ்ரீ ஆறுமுக நாவலரது நாடி சாஸ்திர ஏட்டில், அவருடைய பெயரை `ஐந்தும் ஒன்றும் வதனமெனப் பெயரும் சூட்டி’ என்று கண்டிருந்தது. ஐந்து + ஒன்று ஆறு; வதனம் என்றால் முகம்; ஆறுமுகம் என்பது ஆண்டவன் இட்ட பெயர்.

ஸ்ரீ வைகுண்டத்திலுள்ள ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்துவ அன்பருக்கு, `சாவில் ஆறும் சாவில் ஒன்பதும் இவன் தன் நாமம்’ என்று கண்டிருந்தது. `ச’ என்ற எழுத்து வரிசையில் ஆறாவது எழுத்து `சூ’ ஒன்பதாவது எழுத்து `சை’ அவரது தந்தை இட்ட பெயரும் `சூசை’ என்பதாகும். ஆண்டவன் கொடுத்த பெயரும் `சூசை’ என்பதாகும்.    ஓர் இந்துவைப்போல் மாறுவேஷம் போட்டுக் கொண்டு சென்ற, மதுரையிலுள்ள இஸ்லாமியருக்கு `அப்துல் ரஹ்மான்’ என்ற பெயர் கூறப் பெற்றிருக்கிறது. ஓர் ஆங்கிலேயர் பார்த்தபொழுது, `முழத்தில் பாதி இவன் தன் நாமம்’ என்றிருந்தது. அவரது பெயர் `ஜான்’ என்பதாகும். கோவையில் கௌமார மடத்தை நிறுவிய தலைவருக்கு `இராமக் குட்டி’ என்றும், பின் துறவு பூண்டு `ராமானந்தர்’ ஆவார் என்றும் கண்டிருந்தது. இவற்றின் உண்மைகளை, சென்னை அரசாங்கத்தார் கைரேகைகள் சம்பந்தமாக, `சப்தரிஷி நாடி’யின் பழைய ஏட்டுப் பிரதிகளிலிருந்து பல புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கந்தர் நாடி, காக்கையார் நாடி, கௌசிகர் நாடி, சீவக சிந்தாமணி, அநாகத வேதம் முதலிய பிற ரேகை சாஸ்திரங்களும் இருக்கின்றன. கடவுள் கொடுத்திருக்கும் அவ்விதத் தீர்ப்புகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருப்பதற்குக் காரணம், அவரவர் சுயஅறிவு கொண்டு முன் பிறவிகளில் செய்த நல்வினை தீவினைகளில் ஏற்பட்ட வேற்றுமைகளே தவிர, கடவுளது பட்சபாதமுள்ள செயலால் அல்ல என்பதற்குரிய நிரூபணங்களும், ரேகை சாஸ்திர ஏடுகளில் காணப்பெறுகின்றன. கடவுள் கொடுக்கிற நியாயத் தீர்ப்பில் தவறு ஏதும் இருக்க முடியாது.”

மதுரை ஆதீன கர்த்தர் மேற்கூறிய கருத்துப்படி நம்முடைய பிறப்பும், நமக்குப் பெயரிடப்படுவதும், நமது வளர்ப்பும், முற்பிறவியும், மறுபிறவியும் ஆக எல்லாமுமே இறைவன் கையில் தான் இருக்கின்றன.

“ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே” என்றும் முன்னோர்கள் சொல்லிச் சென்றார்கள்.

“முன்னர் நமதிச்சையில் பிறந்தோமில்லை.
முதல்இடை கடைநமது வசத்திலில்லை.”

என்றான் மகாகவி பாரதி.

எந்தத் தாயின் வயிற்றில், எந்த நேரம் நாம் பிறக்கிறோம் என்பதையும், நமக்கு என்ன பெயர் சூட்டப்படும் என்பதையும் இறைவன் குறிக்கிறான்.

பின்னாளில், நாம் வைத்துக் கொள்கிற புனைபெயரைக்கூட இறைவனே குறித்திருக்கக்கூடும் என்று நான் நம்புகிறேன்.

உதாரணமாக,

என் பெற்றோர் எனக்கிட்ட பெயர் முத்தையா. இது வைத்தீசுவரன் கோயில் சுவாமியின் பெயர். அந்த சுவாமி எங்கள் குலதெய்வம்.

என் சகோதரருக்கு மறுபெயர் முத்துக்குமரன்.

என் பெயரை மாற்றி ஒரு புனைபெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியபோது `கண்ணதாசன்’ என்ற பெயர் எனக்கேன் தோன்றிற்று?

அப்போது பாரதிதாசன், சக்திதாசன், கம்பதாசன் என்றெல்லாம் பலர் இருந்ததால் அதுமாதிரி ஒரு பெயரை வைத்துக்கொள்ள விரும்பினேன்.

உண்மைதான்.

காலங்களால் அந்தப் பெயர் எவ்வளவு பொருத்தமாகி விட்டது.

கண்ணனும் தன் பெற்றோருக்கு எட்டாவது குழந்தை!

நானும் எட்டாவது குழந்தை.

கண்ணனை வணங்கத் தொடங்கிய நாளில் இருந்து எனக்கு அமைதியும் ஞானமும் வரத் தொடங்கின.

சரியாகத் தேடிப் பார்த்தால் ஏதாவது ஒரு நாடி சாஸ்திரத்தில் இதை நான் காணக்கூடும்.

பூர்வ ஜென்மத்தில் நான் யாராக இருந்தேன் என்பதும் தெரியக்கூடும்.

நாடி சாஸ்திரம் அதையும் சொல்கிறது என்கிறார் ஆதீனகர்த்தர்.

உதாரணமாக,

“எகிப்து தேசத்தில் முன் பிறவியில் மன்னராக இருந்த ஒருவரே, இன்று திருநெல்வேலி ஜில்லாவில் சிங்கப்பட்டி ஜமீன்தாராகப் பிறந்திருக்கிறார்” என்று `அநாகத வேதம்’ என்ற நாடி சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.

அதில், முன் செய்த தீவினை இன்னதென்றும், அதற்குரிய பரிகாரம் இன்னதென்றும் குறிப்பிடப் பெற்று அந்தப் பரிகாரம் செய்தபின் அவருடைய வியாதி பூரணமாகக் குணமாகி விட்டதாம்.

“ஒவ்வொரு உயிரும் மறுபிறப்பெடுத்து நன்மை தீமைகளை அனுபவிக்கிறது” என்னும் இந்துக்கள் நம்பிக்கை எனக்கும் இருக்கிறது.

`பதவீம் பூர்வ புண்ணியானாம்’ என்பது வடமொழி சுலோகம்.

`மேலைத் தவத்தளவே யாகுமாம் தான்பெற்ற செல்வம்’ என்பதும் தமிழ் மூதுரை.

முற்பிறப்பின் கருமவினைகள் அடுத்த பிறப்பிலும் தொடர்கின்றன.

அலகாபாத்தில் செல்வந்தர் மகனாகப் பிறந்தவர் பரத கண்டத்தில் பிரதம மந்திரியானதும், சேரிவாழ் மக்களிடையே பிறந்தவர் பாதுகாப்பு மந்திரியானதும், மராட்டியக் குடிமகன் ஒருவர் நிதி மந்திரியானதும், காஞ்சியிலும், திருவாரூரிலும் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்கள் முதல் மந்திரிகளானதும் அவர்களுடைய திறமையினாலா? முயற்சியினாலா?

எட்டாம் வகுப்பை எட்டிப் பார்க்காத ஓர் ஏழை, தமிழகத்தின் தலைவனாகி, ஆயிரம் பள்ளிக்கூடங்கள் கட்டி நூற்றுக்குத் தொண்ணூறு பேரைப் படிக்க வைத்தது எப்படி முடிந்தது?

“இட்டமுடன் என் தலையில் இன்னபடி
என்றெழுதி விட்ட சிவன்.”

என்றொரு பாடல் சொல்கிறதே, அதன் பொருள் என்ன?

ஒவ்வொரு உயிரின் வாழ்வும் தாழ்வும், வறுமையும் வளமும், நோயும் சுகமும், இறப்பும் மறுபிறப்பும் ஆண்டவனின் இயக்கமே என்பதைத் தவிர வேறென்ன?

முற்றி முதிர்ந்த ஞானம் இவற்றை அடையாளம் கண்டு கொள்கிறது.

முயற்சியால் ஆகக்கூடிய திருவும், தெய்வத்தின் இயக்கத்தால் கிடைப்பதே.

ஆண்டவனின் தீர்ப்புக்கு யாரும் தப்பமுடியாது.

ஒரு தலைவருக்குப் புற்றுநோய் வந்தபோது “நாத்திகம் பேசியதால் வந்தது” என்றார்கள்.

ஆத்திகம் பேசிய ரமணரிஷிக்கு ஏன் வந்தது?

சிலருக்குப் பொடி போட்டதால் வந்தது என்றார்கள்.

பொடி போடாதவர்களுக்கு ஏன் வந்தது?

`புகையிலை உபயோகிப்பதால் வருகிறது’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதை உபயோகிக்காதவர்களுக்கு ஏன் வருகிறது?

ஆத்திகராக இருந்ததால், ஒருவர் நீண்டநாள் வாழ்ந்ததாகக் கூறுகிறார்கள்.

நாத்திகர்களும் நீண்ட நாட்கள் வாழ என்ன காரணம்?

அளவோடு சாப்பிடுகிறவர்கள் அதிக நாள் வாழலாம் என்கிறார்கள்.

அளவின்றிச் சாப்பிடுவோரும் வாழ்வதற்கு என்ன காரணம்?

இன்பத்தையோ துன்பத்தையோ தெய்வம்தான் வழங்குகிறது என்பதைத் தவிர வேறு என்ன காரணம்?

எந்தக் கணக்கைக் கொண்டு தெய்வம் வழங்குகிறது?

ஒவ்வொரு பிறவியின் கணக்கைக் கொண்டும் அடுத்த பிறவியை நிர்ணயிக்கிறது.

நூறாண்டுகள் வாழ்வது எப்படி என்ற நூலை எழுதியவர், அறுபது ஆண்டிலேயே காலமானதை நான் பார்த்திருக்கிறேன்.

ஆகவே, நமது கண்ணுக்குத் தெரியாத சூட்சும இயக்கம் என்று ஒன்று நடந்து கொண்டிருக்கிறது.

நாம் பிறந்துள்ள இந்தப் பிறப்பில் நடந்து கொள்கிற முறையை வைத்து, அதற்குரிய பரிசையோ தண்டனையையோ இந்தப் பிறப்பில் பாதியையும், அடுத்த பிறப்பில் பாதியையும் அனுபவிக்கின்றோம்.

“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு
எழுமையும் ஏமாப் புடைத்து”

என்றான் வள்ளுவன்.

ஆகவே பிறவிகள் ஏழு என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, நம்மவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த பிறப்பு என்பது நம்முடைய ஆசையின்படியே விளைய இறைவன் அனுமதிப்பானானால், அடுத்த பிறவியில் நான் ஒரு நாயாகப் பிறந்து, இந்தப் பிறவியில் என்னிடம் நன்றியோடு நடந்தவர்களுக்கெல்லாம், அந்த நன்றியைத் திருப்பிச் செலுத்த விரும்புகிறேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இந்துமதம் பிற மதங்களை வெறுப்பதில்லை

இந்துமதம் பிற மதங்களை வெறுப்பதில்லை. சொல்லப்போனால் எல்லா மதங்களையும் தன்னோடு சமமாகவே கருதுகிறது.

மதத் துவேஷம், எந்தக் காலத்திலும், இந்துக்களால் ஆரம்பிக்கப்பட்டதில்லை.

அதன் பரந்த கரங்கள், அத்தனை மதங்களையும் அணைத்துக்கொண்டே வளர்ந்திருக்கின்றன.

ஓர் ஏரியின் நீரைப்போல் பரம்பொருளையும், அதில் இறங்குகின்ற பல படித்துறைகளைப்போல் எல்லா மதங்களையும் பரமஹம்சர் காணுகின்றார்.அன்பின்மூலம் அன்பு வளர்வதைப்போல், வெறுப்பின் மூலம் வளர்வதில்லை என்கிறது இந்துமதம்.

வெறுப்பு ஒரு குறுகிய கூட்டுக்குள் சதிராடுகிறது.

அன்போ, வானையும் கடலையும்போல், அறிவை விரியச் செய்கின்றது.

நிலத்தைப் பங்கு போட்டுக் கொள்வதுபோல் வானத்தைப் பங்கு போட முடிவதில்லை.

`நிலம்’ என்பது மதம்; `வானம்’ என்பது பரம்பொருள் என்கிறார் பரமஹம்சர்.

`சமணமதம் பரவிக் கிடந்த காலத்தில் அதைக் கருவறுத்து, சமணர்களைக் கழுவிலேற்றிய கூன்பாண்டியனும், மங்கையர்க்கரசியும் தான் பிறமதங்களைத் துவேஷித்த முதலாவதும் கடைசியுமான இந்துக்கள்.’ அவர்களுக்கு முன்னாலும் சரி, பின்னாலும் சரி, இந்துமதம் யாரையும் வெறுத்ததில்லை.

“வீட்டின் உச்சி முகட்டுக்குப் போக ஏணி, மூங்கில் படி, கயிறு இவற்றில் ஏதேனும் ஒன்றின் உதவியைக் கொண்டு ஏறலாம். அதுபோலப் பரம்பொருளை அடைவதற்கு வேறு வேறு மார்க்கங்கள் உண்டு. உலகத்திலுள்ள ஒவ்வொரு மதமும் அப்படிப்பட்ட மார்க்கங்களில் ஒன்றைத்தான் காட்டுகிறது.

மின்சார விளக்கின் ஒளி மங்கலாகவோ, பிரகாசமாகவோ வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாகத் தோன்றுமாயினும், மின்சாரம் ஒரே இடத்திலிருந்துதான் வருகிறது.

அதுபோலவே, வெவ்வேறு காலத்தில் தேசந்தோறும் தோன்றிய மதபோதகர்கள் அனைவரும், சர்வ சக்தியுள்ள ஒரேயொரு மூலப்பொருளிடமிருந்து இடைவிடாது பெருகிக் கொண்டிருக்கும் ஒளியை வெளியிடும் தீப ஸ்தம்பம் போன்றவர்களே” என்றார் பரமஹம்சர்.

எல்லா மதங்களாலும் போற்றப்படும் இறைவன் ஒருவனாகவே இருந்தால் ஏன் அவனைப் பல மதங்களும் பல மாதிரி வர்ணிக்கின்றன?

இங்கு பரமஹம்சரின் பதில்:

“நீ வீட்டு எஜமான்; உன் மனைவிக்குக் கணவன்; மகனுக்குத் தந்தை; வேலைக்காரனுக்கு முதலாளி; ஆனாலும் நீ ஒருவன்தான்.

அவரவரும் உன்னிடம் கொண்ட உறவுமுறையை வைத்து உன்னைப் பார்ப்பதுபோல், பல மதத்தவரும் ஆண்டவனைப் பல விதத்தில் பார்க்கிறார்கள்.” ராமகிருஷ்ணரின் இந்த வாக்கு இந்துவின் விரிந்த ஞானத்துக்கு எடுத்துக்காட்டு.

இந்து மதத்திற்கு எதிராகப் பல கட்டங்களில் தோன்றிய நாத்திக வாதம், தானாகவே மடிந்து போனதற்குக் காரணம் இதுதான்.

சகிப்புத் தன்மையையும், அரவணைப்பையும் இந்து மதம் வலியுறுத்துகிறது.    “உடலில் பட்ட காயம் மறைந்துவிடும்; உள்ளத்தில் பட்டால் மறையாது. ஆகவே, பிறரை நீ புண்படுத்தாதே” என்கிறது இந்து மதம்.

தண்டனையைக் கடவுளின் பொறுப்பில் விட்டுவிடுவதால், நடைமுறைகளைத் தாங்கிக் கொள்கிற சக்தி இயற்கையாகவே வந்துவிடுகிறது.”காலப்போக்கில் ஒவ்வொன்றும் மாறுகிறது” என்ற விஞ்ஞான உண்மையை, வேதாந்த உண்மையாக இந்துக்கள் எப்போதோ சொல்லிவிட்டார்கள்.

`மாறும்வரை பொறுத்திரு’ என்பதே இந்து மதத்தின் உபதேசம்.

மனப்பக்குவம் இல்லாதவன், நினைத்தபடி எல்லாம் நடக்கிறான்.

வழியில் கிடைக்கும் அனுபவங்கள், அவனுக்கு அந்தப் பக்குவத்தை உண்டாக்கி விடுகின்றன.

`வெறுப்பை வளர்ப்பவனும் என்றோ ஒரு நாள் பக்குவம் பெறுவான்; அதுவரை அவனை நாம் சகிப்போம்’ என்பதே இந்து மதத்தின் சாரம்.இவற்றை நான் குறிப்பிடுவதற்குக் காரணம் இந்தத் தொடர் கட்டுரையில், நான் பிற மதங்களை மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டி வந்த கடிதமே.

இந்து மதத்தின் சிறப்பியல்புகளை நான் விவரித்துக் கொண்டு போகும்போது, வேறு மதங்களுக்கு அந்தச் சிறப்பில்லை என்று கருதக்கூடாது.

நான் ஓர் இந்து என்ற முறையில், எனது மதத்தின் மேன்மைகளை நான் குறிப்பிடுகிறேன்.

அவை பிற மதங்களில் இருக்கலாம்; நான் மறுக்கவில்லை.

உதாரணமாக `கல்லானாலும் புல்லானாலும்’ என்ற கட்டுரையில் இந்துப் பெண்களின் கற்பியல்புகளை நான் விவரித்ததைப் படித்துவிட்டு, “எங்கள் மதத்தில் கற்புள்ள பெண்கள் இல்லையா?” என்று ஒரு கிறிஸ்துவ நண்பர் எனக்கு எழுதியிருக்கிறார்.

நான் அப்படிச் சொன்னேனா?

`கற்பை வலியுறுத்தும் கதைகள் இந்துமதத்தில் அதிகம்’ என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன்.

எனது மூதாதையர்கள் எப்படி எந்த மதத்தையும் வெறுக்கவில்லையோ, அப்படியே நானும் வெறுக்கமாட்டேன்.

“சாதாரண மனிதன் தன் அறியாமையால் தன் மதமே பெரியதென்று எண்ணி ஆரவாரம் செய்கிறான்.

உண்மை ஞானம் உதித்துவிட்டால், பிறமதங்களை அரவணைக் கிறான்” என்கிறார் பரமஹம்சர்.

உண்மை ஞானம் எனக்கு இன்னும் உதிக்கவில்லை. அது உதிக்கும் முன்னாலேயே எல்லா மதங்களையும் நேசிக்கும் அறிவை நான் பரமஹம்சரிடம் இருந்து பெற்றுக் கொண்டிருக்கிறேன்.

ஆகவே, இந்தக் கட்டுரையில், தொடர்ச்சியாக இந்துமதத்தின் மேன்மையை நான் குறிப்பிடும் போதெல்லாம், பிறமதங்களில் அவை இல்லை என்று சொல்வதாகக் கருதக்கூடாது.

`என் மனைவி அழகானவள்’ என்று சொன்னால் `அவன் மனைவி கோரமானவள்’ என்று அர்த்தமல்ல!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சமதர்மம்

`ஏழை ஏழையாகவே இருப்பது, அவன் தலையெழுத்து’ என்று இந்து மதம் சொல்கிறதா?

ஏழை முயற்சி செய்து முன்னுக்கு வரக் கூடாதென்று இந்து மதம் தடுக்கிறதா? `பணக்காரன் தேவைக்குமேல் சொத்து வைத்திருப்பதை இந்து மதம் அனுமதிக்கிறதா?’ இல்லை!

தர்மம் சரியாக விநியோகிக்கப்படவேண்டும் என்பதே இந்து மதத்தின் சாரம்.

கடந்த நூற்றாண்டுகளில் பணக்காரர்களாக இருந்தவர்கள், தங்கள் சுயநலத்துக்காக ஏழ்மையைத் `தலைவிதி’ என்றார்கள்.

ஏழைக்கு இறைவன் கொடுத்த அளவு மற்றவர்களோடு சம அளவுதான்.

ஆனால், ஏழையின் அளவைப் பணக்காரர்கள் பங்கிட்டுக் கொண்டார்கள்.

ஏழ்மை என்பது நிரந்தரமாக இருக்குமானால், அது இறைவன் விதித்த விதியாக இருக்கலாம்.

எப்போது ஏழையும் பணக்காரனாக வாய்ப்பிருக்கிறதோ, அப்போது அந்த வாய்ப்புகள் தடுக்கப்பட்டவன்தான் ஏழையாக இருக்கிறான் என்று அர்த்தம்.

`பேராசைக்காரர்கள் மோட்சத்துக்குப் போவதில்லை’ என்று இந்து மதம் கூறுகிறது.

ஒருவனது அறிவை இறைவன் நிர்ணயிக்கலாம்; ஆனால் பொருளை அவன் நிர்ணயிப்பதில்லை.

`ஏழ்மை என்பது இறைவனால் நிர்ணயிக்கப்பட்டது அல்ல’ என்று இந்து மதம் அறுதியிட்டுக் கூறுகிறது.

அந்தக் கால உபன்யாசகர்கள் இதுபற்றி என்ன சொன்னார்களோ, எனக்குத் தெரியாது.

ஆனால், இந்தக் காலத்தில் இந்துமதத் தத்துவங்களை லௌகீக வாழ்க்கைக்கு உகந்த வகையில் விமர்சிக்கும் காஞ்சி ஆச்சார்ய சுவாமிகளே, அதனைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

தெளிவான சமதர்மமே இந்துமதத்தின் நோக்கம் என்பதை அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

பொருளாதார சமதர்மத்தையே அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அவர்களது கருத்தை, அவர்களது வார்த்தைகளிலேயே அப்படியே தருகிறேன்.

இது யாரோ ஒரு துறவியின் பேச்சு என்று அப்போது படிக்காமல் இருந்தவர்கள், இப்போது படியுங்கள்.

அவர்கள் சொல்கிறார்கள்:

“ஸாயா தோயம் வஸநம் அஸநம்”

ஸாயா என்றால் நிழல்; தோயம் என்பது ஜலம்;

`வஸநம்’ என்பது உடுத்திக் கொள்கிற வஸ்திரம்; `அஸநம்’ என்றால் ஆகாரம்.

மனுஷர்களுடைய மானம், உயிர் இரண்டையும் காப்பாற்றிக்கொள்ள, இந்த நான்கும் மிகவும் அவசியமானவை.

நிழல் கொடுப்பது இந்தப் பூமிதான். பூமியிலிருந்து மண், கல், சுண்ணாம்பு எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு வீடு கட்டிக் கொள்கிறோம். பூமியிலிருந்து ஜலம் வருகிறது. ஆகாரம், பூமியிலிருந்துதான் கிடைக்கிறது. வஸ்திரமும் பூமியிலிருந்து வரும்படியான பருத்தியினால்தான் கிடைக்கிறது. முடிந்த முடிவில், நாம் `பூமி’யில்தான் மறைந்து போகிறோம். நமக்குத் தேவையானவற்றை எல்லாம் பூமிதான் கொடுக்கிறது, என்றாலும், `பூமி’யில் இருந்து கிடைக்கும்படியான பொருள்களில், நமக்கு மிகவும் குறைச்சலாக எவ்வளவு வேண்டுமோ அவ்வளவுதான் உபயோகப்படுத்திக் கொள்ளவேண்டும். மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள ஆடை கட்டிக்கொள்ளவேண்டும். நமக்கு ஒரு வருஷத்திற்குக் குறைந்தது எவ்வளவு ஆடை வேண்டுமோ அவ்வளவுதான் உபயோகப்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த விஷயத்தில்தான் நாம் கவனம் செலுத்துவதில்லை.

ஆடை எதற்கு? மானத்தைக் காத்துக் கொள்வதற்காக, அதற்கு நல்ல கெட்டித் துணியாக, பருத்தி ஆடையாக இருந்தால் போதும். பகட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக மிக விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டால், பட்டுத் துணிகளை அணிந்து கொண்டால், மற்றவர்கள் கவுரவமாக நினைப்பார்கள் என்று தப்பாக எண்ணிக் கொண்டு, அவ்வாறு செய்கிறோம். அதனால், மானத்தையும் மறைப்பதாக நினைக்க முடியாது. `பாருடா எவ்வளவு இறுமாப்பு’ என்றுதான் பார்க்கிறவர்களுக்குத் தோன்றும். இந்த விஷயத்தில் குடும்பம் செலவழிக்கிற பணத்தைக் கணக்கெடுத்தால், அந்தக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மானத்தைக் காத்துக்கொள்ளத் தேவைப்படும் துணி போக, பாக்கியை வைத்துக்கொண்டு, ஐந்து குடும்பங்களுக்கு வேண்டிய துணியைக் கூட சப்ளை பண்ணலாம்.   இரண்டாவது, பட்டுப்புடவை என்று வாங்குகிறார்களே தவிர, அதனால் பாவம் நிறைய வருகிறது. பட்டுப்புடவை, பட்டு வேஷ்டி இவற்றால் எத்தனை ஜீவன்களுக்கு ஹிம்சை ஏற்படுகிறது? செலவு அதில் அபாரமாக ஆகிறது. அஹிம்சை அஹிம்சை என்று சொல்லிக்கொண்டு மாமிசமே சாப்பிடுவது இல்லை என்று நாம் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், நமக்கு இந்தப் பட்டுப்புடவை, பட்டு வேஷ்டி இவற்றினால் வருகிற பாவம் மாமிசம் சாப்பிடுகிறவர்களுக்குக் கூட வராது. ஓர் ஆடோ இரண்டு ஆடோ அங்கே உயிரை இழக்கின்றன என்றால், இங்கே கணக்கு வழக்கு இல்லாத ஜீவன்களுக்கு ஹிம்சை ஏற்பட்டு வருகிறது. கூடிய வரைக்கும் நாம் உடுத்திக் கொள்கிற வஸ்திரம் ஹிம்சை இல்லாத வஸ்திரமாக இருக்கவேண்டும். கெட்டியான வஸ்திரமாகவும், சாதாரண ஜனங்கள் எல்லாம் உடுத்திக் கொள்ளும்படியானதாகவும் இருக்க வேண்டும்.

மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவேண்டும் என்பதற்காக, அரசாங்கத்தார் அநேக திட்டங்களைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாட்டிலும் தரித்திரம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கைத்தரம் உயர்வது என்றால் ஒருவன் இரண்டு வேளை காப்பி சாப்பிடுவது, நான்கு வேளையாக வேண்டும்; இரண்டு வேஷ்டி வைத்துக் கொண்டிருப்பவன் இருபது வேஷ்டி வைத்துக் கொள்ளவேண்டும் என்கிற அபிப்பிராயம் வளர்ந்தால், அது பெரிய தப்பு. வாழ்க்கைத் தரம் உயர்வது என்று சொல்லிக்கொண்டு வாழ்க்கைத் தேவைகள் நாளுக்குநாள் மனுஷர்களுக்கு அதிகமாகிக் கொண்டே போனால், நாட்டில் தரித்திரம்தான் மிஞ்சும்.

மனுஷ்யர்களுக்கு மானம், உயிர் இரண்டையும் காப்பாற்றிக் கொள்ள மிக மிக அத்தியாவசியமானவை எவையோ அவை நாட்டில் உள்ள அத்தனை ஜனங்களுக்கும் கிடைக்கவேண்டும். அதற்குத்தான் திட்ட ஒழுங்கு எல்லாம் வேண்டும். அப்படி வாழவேண்டுமானால், வசதி உள்ளவர்கள்கூட, நாட்டில் இருக்கும்படியான பரம ஏழை எப்படி வசிக்கிறானோ அப்படி வசிக்கப் பிரயத்தனம் பண்ணவேண்டும். சவுகரியம் இருக்கிறவர்களும்கூடத் தங்களிடம் பணம் இருக்கிறது என்று தேவைக்குமேல் அதிகமான வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முடியாமல் இருக்க வேண்டும்.

வசதி இருக்கிறது என்று இவர்கள் பண்ணுகிற காரியங்கள் எல்லாம், அபரிக்ரகம் என்பதற்கு விரோதம்தான். இந்தத் தோஷம் வந்துவிட்டால் ஈசுவரானுக்ரகம் கிடையாது. மனுஷ்ய ஜென்மம், பிரயோஜனம் உள்ளதாக ஆக வேண்டுமானால், நமக்கு எவ்வளவு தேவையோ அதற்கு மேல் ஓர் இம்மிகூட விரும்பக்கூடாது. வசதி இருக்கிறது என்றால், அதைக்கொண்டு கஷ்டப்படுகிற இதர குடும்பங்களுக்கு அந்தக் குறைச்சலான வசதியைக்கூடப் பெற முடியாதவர்களுக்கு உதவி செய்வதுதான் புண்ணியம். இதுதான் அவனுக்கு மோட்சத்தை அளிக்கும்.

இது தெரியாமல், வசதி இருக்கிறவர்கள், தேவைக்கு மேல் பட்டுப்புடவை, பட்டு வேஷ்டி என்கிற தோஷத்தை அதிகமாக இப்போது பண்ணிக் கொண்டிருக்கிறது, ஒரு பக்கம்; அந்தச் சமயம் இவர்களைப் பார்த்து வசதி இல்லாதவர்களும் கூட கடன் வாங்கியாவது அவற்றை வாங்கவேண்டும் என்று கடனாளியாகி அநேக உபத்திரவங்களுக்கு உள்ளாகி வருகிறார்கள்.

பட்டுப்புடவையைப் போலத்தான் வைர ஆபரணங்களில் உள்ள ஆசை. இதில் போடுகிற பணம் வீண்.

`கந்யாம் கநக ஸம்பந்தாம்’ என்று பெண்ணைக் கொடுக்கும்போது `ஸ்வர்ணம்’ கொடுப்பது என்கிற வழக்கம் இருந்திருக்கிறது. தங்கத்தில் போடுகிற பணமாவது பிரயோஜனப்படுகிறது. வைரத்தில் பிரயோஜனம் இல்லை. உபத்திரவம் இருக்கிறது.

ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் எல்லாம் யாரும் காப்பி சாப்பிட்டது இல்லை. குடிசையில்தான் இருந்தார்கள். காதில் பனை ஓலைதான் போட்டுக் கொண்டிருந்தார்கள். கேழ்வரகுக் கூழோ, கஞ்சியோதான் சாப்பிட்டார்கள். ஏழைகளோ, பணக்

காரர்களோ எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தார்கள். நாம் பட்டுத்துணி உடுப்பது இல்லை. காப்பி குடிப்பது இல்லை என்று சங்கல்பம் செய்துகொண்டு விட்டால் இப்போது ஒரு குடும்பத்துக்குச் செலவாகிறதைக் கொண்டு, ஐந்து குடும்பங்கள் வாழ முடியும். தேவையை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகப்படுத்திக் கொள்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு சாந்தி ஏற்படாது, சவுக்கியம் ஏற்படாது. தரித்திரம், துக்கம் எல்லாந்தான் உண்டாகும்.

பட்டுப் புடவையில் காசு போடவில்லை என்றால், காப்பிக் கொட்டையில் காசு போடவில்லை என்றால், எல்லாக் குடும்பங்களும் முன்னுக்கு வந்துவிடும். குடும்ப சவுகரியத்திற்காக மட்டும் சொல்லவில்லை. பட்டுப்புடவையினால் வருகிற பாவங்கள் நமக்கு இல்லை என்றால், மோட்சத்திற்குச் சிரமங்களே இல்லாமல் போகும். அஷ்டாங்க யோகத்தின் முதல் அங்கமே அஹிம்சை, அபரிக்ரகம் இவை எல்லாம்தான். ஒரு பிராணிக்குக்கூட நம்மால் ஹிம்சை உண்டாகக் கூடாது. நம்முடைய தேவைக்கு மேல் ஒரு துரும்பைக்கூட, வசதி இருக்கிறது, பணம் இருக்கிறது என்பதற்காக வாங்கிக்கொள்ளக் கூடாது. பணம் இருக்கிறது என்றால், இன்னும் சில குடும்பங்களுக்கு உதவி செய்யலாம். இப்படிச் செய்தால்தான், செய்வதற்குப் பிரயத்தனமாவது செய்தால்தான் சீக்கிரத்திலே பிரம்ம சாட்சாத்காரத்தைப் பெற முடியும். அஷ்டாங்க யோகத்தின் முதல்படியே இதுதான். முதல் படியை மிதிக்காமல் மேல்படிக்குப் போக முடியாது என்பதற்காக இதைச் சொன்னேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

உலவும் ஆவிகள்

இறந்து போனவர்களுடைய ஆவிகள் தங்கள் குடும்பத்தினரைக் கண்காணிக்கின்றன என்பதற்கு, மறுக்க முடியாத ஆதாரங்கள் கிடைக்கின்றன.

ஆவி உலகில் உலவுகிற சிலர், தங்களுக்குப் பிரியமானவர்களின் உடலில் புகுந்து கொண்டு, அவர்களையே மீடியமாக வைத்து, மற்றவர்களோடு பேசுகிறார்கள் என்பது உண்மை.

அண்மையில் ஒரு பத்திரிகையில் காங்கிரஸ் பிரமுகர் திரு.பி.ஜி. கருத்திருமன் அவர்கள் இதுபற்றி இரண்டொரு கட்டுரைகள் எழுதியிருந்தார்கள்.

இறந்து போனவர்களுடைய ஆவி தங்களுக்குப் பிரியமானவர்கள் உடலில் புகுந்து பேசுவதும் உண்டு. வேறு உடல்களை மீடியமாகக் கொண்டு பேசுவதும் உண்டு.

எனக்கே இதில் அனுபவம் உண்டு.

1941ஆம் ஆண்டு என் உடன் பிறந்த நாலாவது சகோதரி இறந்து போனார்.

அவருக்கு இரண்டு பெண்களும், ஒரு பையனும் உண்டு.

அந்தப் பெண்களில் மூத்த பெண்மீது, என் சகோதரியின் ஆவி வந்து பேசுவது உண்டு.

ஏதாவது முக்கியமான பிரச்சினைகளைப்பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது என் சகோதரியின் ஆவி தன் மகள் உடம்பில் வந்து பேசும்.

அந்தப் பெண்ணுக்கு நான் மாமன்!

சாதாரண நேரங்களில் `மாமா’ என்றழைக்கின்ற அந்தப் பெண், ஆவி வந்து அழைக்கும்போது `தம்பி’ என்றழைக்கும்.

மற்ற உறவினரையும், என் சகோதரி எப்படி அழைப்பாரோ, அப்படியே அழைக்கும்.

மேலும், குரலும் என் சகோதரியின் குரலாகவே இருக்கும்.

இதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.

ஆவி வந்து சொன்ன விஷயங்களெல்லாம் நடந்திருக்கின்றன.

இறந்து போனவர்களுக்குப் பிரியமான பதார்த்தங்களைச் செய்து நாம் படையல் நடத்துகிறோம் அல்லவா? அந்தப் பதார்த்தங்களை ஆவிகள் உண்ணுகின்றன என்பது ஐதீகம்!

தர்க்கத்திற்கு இது நிற்கமுடியாது என்று வாதிடுவோரும் உண்டு.

ஆனால் இறந்து போனவர்களுடைய ஆவி பற்றிய பல சம்பவங்களைத் தம் வாழ்நாளிலேயே கண்டிருக்கிறார் மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள்.

அவர் கூறியுள்ள சில அனுபவங்களை அப்படியே இங்கு எடுத்துக் கொடுப்பது வாசகர்களைச் சிந்திக்க வைக்கும்.

அவர் சொல்லியுள்ள பல விஷயங்களில் சிலவற்றை மட்டுமே நான் இங்கே தருகிறேன்.

1. இறந்தவர்கள் மீடியமாக இருப்பவர்களுக்குத் தெரியாத பாஷையில் அறிவித்தல்:

தூத்துக்குடியில் வருமான வரி ஆபீசராக இருந்த ஓர் இஸ்லாமியர், இறந்தவர்களோடு பேசுவதன் உண்மையை அறிய வேண்டும் என்று, எமது தம்பியார் வீட்டிற்கு வந்து இருந்தார். அவர் தாமும் பேசிப் பார்க்கவேண்டும்; ஆனால் தமிழைத் தாய் பாஷையாகக் கொண்ட மீடியம் மூலம், அந்த மீடியத்திற்குக் கொஞ்சமும் பழக்கமில்லாத பாஷையாகவும் தமது தாய் பாஷையாகவும் இருக்கும் உருது பாஷையில் கேள்வி கேட்டுப் பதிலும் உருது பாஷையில் வந்தால்தான், அது மீடியத்தில் ஏற்பட்ட பதில் அல்ல, இறந்தவருடைய வாக்கே என்று உறுதியாகக் கூற முடியுமென்று சொன்னார்.

தம்பியார், “யாரும் இவ்வாறு இதுவரை யோசித்துப் பார்க்கவில்லை; ஆபீசர் சொல்வது சரியான சோதனையே; சோதித்துப் பார்ப்போமே” என்று பார்த்தார்.

`உருது’ ஒரு வார்த்தையும் தெரியாத பிராமணச் சிறுவன் மீடியமாக இருக்க, அவன் மூலம் உருது பாஷையில் பதில் வரவே ஆபீசரும் மற்றவர்களும் திகைத்துப் போனார்கள்.

மேற்கொண்டு பேசவேண்டும் என்று ஆபீசரும் விரும்பவே ஆவி உலகத்திலிருந்து அவருடைய கொழுந்தியாள், `இப்பொழுது மேற்கொண்டு பேசவேண்டாம்; இங்கு பேசுகின்ற முறையிலேயே வீட்டில் வைத்துப் பேசுங்கள்; வீட்டில் இருக்கும் மகள் மீடியமாக இருக்கிறாள்’ என்று அறிவித்து விட்டாள். அதன்படி அவர் வீட்டில் வைத்துப் பேசவும், அதன் உதவியைப் பிறருக்கு எடுத்துச் சொல்லவும் ஆரம்பித்து விட்டார்.    எனவே நல்ல சக்தி வாய்ந்த மீடியமாக இருந்தால், மீடியத்திற்குத் தெரியாத பாஷைகளிலும் பேச்சு நிகழ்த்தலாம் என்பதும், அதில் மீடியத்தினுடைய அறிவின் விளக்கமோ, மீடியம் கள்ளத்தனமாக வேண்டுமென்றே தன்னுடைய கருத்தை ஆவி உலகக் கருத்தாக வெளிப்படுத்துகின்ற போலித்தனமோ, ஓர் அணுவளவும் கலக்கமுடியாதென்பதும் பெறப்படுகின்றதல்லவா?

2. மறதியாகப் பணம் வைக்கப்பட்ட இடத்தை இறந்தவர் அறிவித்தல்:

ஆவி உலகத்திலிருந்து அறிவித்தபடியே அந்த வருமானவரி அதிகாரி தன்னுடைய வீட்டில் உருது பாஷையில் தன்னுடைய சொந்த மகளை மீடியமாக வைத்துப் பேசியதில், அவருடைய மனைவியின் தங்கை ஆவியுலகத் திலிருந்து பல அரிய விஷயங்களை அறிவித்ததாகத் தெரிவித்தார். அவற்றுள் ஒன்றை மட்டும் இங்கு குறிப்பிடுகின்றோம்.

ஒருநாள் அவருடைய சட்டைப் பையில் போட்டு வைத்திருந்த ஒரு ரூபாயைக் காணாத காரணத்தால், அவர் தம்முடைய வேலைக்காரன் திருடியிருக்கலாம் என்று கருதி, அவனைக் கடுமையாகக் கோபித்து அடித்து விட்டார். மறுமுறை ஆவி உலகத்திலிருந்த தன்னுடைய கொழுந்தியாளோடு பேசியபோது காணாமற்போன ரூபாயைக் குறித்து அவர் ஒன்றும் பேசாதிருக்க, அந்த அம்மையார் அதைக் குறித்துப் பேசியதாகவும், அந்த ரூபாயை சட்டையின் மேல் பையில் இருப்பதாகவும், அவரே ஞாபக் குறைவாக அதில் போட்டிருக்க, கீழ்ப்பையில் போட்டதாக எண்ணிக் கொண்டதாகவும், அந்த வேலைக்காரனைப் பேசியதும் அடித்ததும் பாவமான காரியமென்றும், அந்தப் பாவத்தைப் போக்குவதற்கு அவனிடம் உண்மையைச் சொல்லி, அவனுக்கு ஒரு ரூபாய் வெகுமதி கொடுக்க வேண்டும் என்று அறிவித்ததாகவும், அவர் அதன்படியே நடந்துகொண்டதாகவும், அதிலிருந்து ஆவி உலகத்தில் புண்ணியப் பகுதியிலுள்ள சுற்றத்தார் தாங்கள் இருந்த வீட்டில் ஏதாவது விபரீதமான காரியங்கள் நடந்தால், அதை எவ்வளவு கருத்தோடு கவனித்து வருகிறார்கள் என்பதை அவர் உணர்ந்து கொள்ள முடிந்ததாகவும் அறிவித்தார்.

3. இறந்த இஸ்லாமியர் தானாகவே வலிய வந்து தன் மகனது வியாகூலத்தை நீக்கல்:

ஈரோடு மார்க்கத்தில் கரூருக்குச் சமீபமாயுள்ள புகழூரிலே ஒரு நாள் இரவு 1 மணிக்கு இறந்துபோன சுற்றத்தாருடன் பேசிக் கொண்டிருக்கையில் ஆவி உலகத்திலிருந்த ஓர் இஸ்லாமியர் வந்து தாம் அவ்வூரிலுள்ள (போஸ்ட் மாஸ்டர்) தபால் அதிகாரியினுடைய தகப்பனார் என்றும், தம்முடைய மகன் தூக்கம் வராமல் விழித்துக் கொண்டு படுக்கையில் உட்கார்ந்து கொண்டு இருப்பதாகவும், அவன் அவனுடைய மனைவியின் உடல்நிலை விஷயமாகவும் அவளுடைய பிள்ளைப் பேறு விஷயமாகவும் நினைத்துக் கொண்டே இருப்பதாகவும், அவனைத் தயவுசெய்து கூட்டிக் கொண்டு வந்து தம்மோடு பேச வைக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டாராம்.

இரவில் 1 மணிக்கு அவரை அவ்விதம் கூப்பிடுவது சரியல்லவே என்று கேட்டபொழுது, “அவன் தூங்கிக் கொண்டிருப்பானானால் எழுப்பக்கூடாதுதான். ஆனால் விழித்துக் கொண்டிருக்கும் பொழுது தெரு வாயில் கதவை லேசாகத் தட்டினாலே அவன் வந்து திறந்து விடுவான்; அதைப்பற்றி யாதும் யோசிக்க வேண்டாம். அந்த உதவியைச் செய்து தரவேண்டும்” என்று வேண்டிக் கொண்டார். அதன்படி ஒரு வேலைக்காரனை அனுப்பி, `அவருடைய வீட்டுக் கதவைத் தட்டிப் பார்; விழித்திருந்து உடனே கதவண்டை வந்து யாரென்று கேட்டால், விவரம் சொல்லிக் கூட்டி வா; இல்லாவிடில் வந்துவிடு’ என்று அறிவித்திருந்தோம். அவனும் (போஸ்ட் மாஸ்டர்) தபால் அதிகாரி வீட்டுக்குச் சென்று லேசாகக் கதவைத் தட்ட, அவர் எழுந்து வந்து யாரென்று கேட்டு விவரம் அறிந்து, தகப்பனாரிடம் பேச வந்துவிட்டார். நாங்கள் இறந்தவர்களோடு பேசும் வழக்கமுள்ளவர்கள் என்பது மாத்திரம் அவருக்கு முன்னமேயே தெரியும். ஆவி உலகத்திலுள்ள தந்தையார் தமது மகனிடம், `கவலைப்பட வேண்டாம்; மனைவிக்குச் சுகமான பிரசவம் நடைபெறும்; பிறக்கப் போவது ஆண் குழந்தை’ என்று சொல்லி, குடும்ப சம்பந்தமாக எல்லா நலங்களும் உண்டாவதற்கு மேலுலகத்தில் தாமும் ஆண்டவனிடம் பிரார்த்தித்து வருவதாகவும், வேறு சில இடைறுகளை வரவொட்டாமல் தாம் தடுத்து விட்டதாகவும் சொல்லி, மகனை உற்சாகப்படுத்தி அனுப்பி விட்டார்.

பின்னர், அதன்படியே மனைவிக்குச் சுக பிரவசம் நடந்து ஆண் மகவு பெற்றெடுத்தாள் என்பதை அறிவோம். இதிலிருந்து ஆவி உலகத்திலுள்ளவர்கள், நாம் நினைத்த மாத்திரத்தில் அந்த இடத்திற்கு வந்து நம்முடைய நிலைகளை நன்றாக அறிய முடிகிறதென்பதை உணருகிறோம். இதனை உபமானமாகக் கொண்டுவிட்டால் சர்வ வல்லமையுள்ள ஆண்டவன், நாம் நினைப்பதையும் பேசுவதையும் சொல்வதையும் அறிந்து கொண்டும் கேட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டும் இருக்க முடியும் என்பதை யாரும் உய்த்து உணர்ந்து கொள்ளமுடியும் அல்லவா?

4. இறந்தவர் தம் தம்பியிடம் தனது மகனுடைய அந்தரங்கச் செயல்களை அறிவித்து மணம் முடிக்கச் செய்தல்:

ஒரு நாள் மதுரைக்கு வந்திருந்த நாட்டுக்கோட்டை செட்டியார் ஒருவர், அம்மைய நாயக்கனூருக்குத் தம்முடைய சொந்த மோட்டார் காரில் வந்து, காலம் சென்ற தம் தந்தையாருடன் பேசிப் பார்க்க வேண்டுமென்று விரும்பினார். அதன்
படியே அவர் தம் தந்தையாருடன் பேசிக் கொண்டிருக்கும்பொழுது தந்தையார் தம்முடன் ஆவி உலகத்தில் இருந்த மூத்தமகன் (மதுரையிலிருந்து வந்திருந்த செட்டியாருடைய காலஞ்சென்ற தமையன்) தம்பியுடன் அவசரமாகப் பேசவேண்டுமென்று தம்முடன் வந்திருப்பதாக அறிவித்தார்.    அந்த அண்ணாவைப் பேசச் சொன்னபொழுது அவர், தம்முடைய மகன் காட்டுப்புத்தூரில் படித்துக் கொண்டிருப்பது போதுமென்றும், அவனைப் பற்றி அவ்வூரில் சில புகார்கள் வருகின்றனவென்றும், அவனும் இன்னொரு வயது வந்த பெண்ணும் காதல் கடிதங்கள் வரைந்து கொண்டிருக்கிறார்களென்றும், காரியம் முற்றிவிடுவதன் முன், அவனை ஊருக்குக் கூட்டிக் கொண்டு போய், வேறு பெண் பார்த்துக் கல்யாணம் செய்து வைத்துவிட வேண்டுமென் றும், இனி யாதொரு தாமதமும் செய்யக்கூடா தென்றும், அம்மைய நாயக்கனூருக்குக் கொண்டு வந்திருக்கிற காரிலேயே நேராகக் காட்டுப் புத்தூருக்குப் போய் அங்குள்ள தம் மகனைக் கூட்டிக் கொண்டு வந்துவிட வேண்டுமென்றும் தெரிவித்தார்.

பேச வந்த செட்டியாருக்கு ஒன்றும் புலப்படவில்லை. தாம் மதுரையில் அநேகரைக் காக்க வைத்துவிட்டு, இரவு திரும்பி வந்துவிடுவதாக அம்மை நாயக்கனூருக்கு வந்ததாகவும், ஆனதால் நேரே மதுரைக்குத் திரும்பிப் போய் அங்குள்ள காரியங்களைப் பார்த்துவிட்டு, மறுநாள் காட்டுப்புத்தூர் போவதாகவும் பதில் அறிவித்தார்.

ஆவி உலகத்திலிருந்து பேசிய தமையனும், மதுரைக் காரியத்தைப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்றும், காட்டுப்புத்தூர் காரியம் மிகவும் அவசரமானது என்றும், மதுரைக்குத் தந்தியைக் கொடுத்துவிட்டு, நேரே காட்டுப் புத்தூருக்குச் சென்று, தன்னுடைய மகன் விஷயத்தைக் கொஞ்சமும் தாமதியாமல் கவனித்து ஆவன செய்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்க வேண்டுமென்றும் திரும்பத் திரும்பச் சொன்னார். அதைப்பற்றித் தன் தந்தையாரிடம் செட்டியார் கேட்டபொழுது அவரும் அது மிகவும் அவசரமான காரியம்தான் என்று சொல்லவே மதுரைக்குத் திரும்பிவிட வேண்டுமென்று எண்ணியிருந்த செட்டியார், அந்த எண்ணத்தை மாற்றி, தந்தியில் தான் காட்டுப்புத்தூருக்குச் சென்று வருவதாக அறிவித்துவிட்டு, அம்மையநாயக்கனூரிலிருந்தே காரில் காட்டுப்புத்தூருக்குப் போய்விட்டார்.

அங்கு சென்று காரியங்களைப் பரிசீலனை செய்து பார்க்க, தம் தமையனார் சொன்னது முற்றிலும் உண்மை என்று புலனாயிற்று. ஆனதால், தன் தமையனார் தனக்கு அறிவித்ததுபோல், படித்துக் கொண்டிருந்த பையனுடைய படிப்புக்கு அன்றோடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அவனைத் தன்னுடைய ஊருக்கு அழைத்துச் சென்று, காலதாமதமில்லாமல் கல்யாணமும் செய்து வைத்துவிட்டார். நாங்களும் அக்கல்யாணத்திற்குச் சென்று சிறப்பித்தோம்.

ஆகவே, ஆவி உலகத்திலிருக்கிற தந்தை தம்முடைய மகனுடைய நடத்தைகளைக் கண்காணித்து வருகிறார் என்பதும், அதற்கு இன்னது செய்யவேண்டுமென்று அறிவிக்க ஆர்வத்துடன் சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியிருக்கிறார் என்பதும் இதிலிருந்து புலப்படுகிறதல்லவா? அல்லாமலும் அம்மையும் அப்பனும் ஆகிய சர்வ வல்லமையுள்ள ஆண்டவனும், நாம் செய்கின்ற காரியங்களை எல்லாம் நமக்குத் தெரியாமல் கண்காணித்து வருகிறார் என்பதை ஊகித்து உணர்ந்து கொள்ளவும், நாம் நம்முடைய நடத்தைகளைத் திருத்தி அமைத்துக் கொள்ளவும், இச்சம்பவம் உள்ளத்தைத் தூண்டுகிற அளவுக்கு, எத்தனை புத்தகப் படிப்பும் மக்களைத் தூண்ட முடியாதன்றோ!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சோதனையும் வேதனையும்

இந்தத் தொடர் கட்டுரை பற்றி எனக்கு ஏராளமான கடிதங்கள் வந்துள்ளன.

பெரும்பாலான கடிதங்களில் வேதனையும், சோதனையும், விம்மலும் தொனிக்கின்றன.

வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்ததுதான் என்பதை அறியமுடியாத, பக்குவமற்ற இளம் உள்ளங்கள், தங்கள் ஏக்கத்தை வெளியிட்டிருக்கின்றன.

சில கடிதங்கள் திகைப்பளிக்கக் கூடியவையாகவும் இருக்கின்றன.

உதாரணமாக, வடஆற்காடு திருப்பத்தூரிலிருந்து ஒரு சகோதரி, தனக்கு வேண்டிய வேறு ஒருவரது காதல் கவலையை வெளியிட்டிருக்கிறார்.

அந்தக் காதல், நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்றாக இருக்கிறது.

ஒரு பெண் தனது பெரியப்பாவின் மகனைக் காதலிக்கிறாளாம்.

இந்துக்களின் அழுத்தமான பண்பாட்டின்படி ரத்தபந்த சகோதரனாகிய ஒருவனை அவள் காதலிக்கக்கூடாதுதான் என்றும், ஆனால் எப்படியோ இருவருக்கும் அன்பு அரும்பிவிட்டதென்றும், இது பூர்வஜென்மத் தொடர்ச்சியாக இருக்கக்கூடும் என்றும், அவர் தெரிவிக்கிறார்.

இந்துக்கள் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாத கெட்ட கனவு, தீய நினைவு என்றே நான் இதைக் குறிப்பிடுவேன்.

“அந்த ஒருத்தி, ஒருவனை மனப்பூர்வமாகக் காதலித்துவிட்டதால் வேறொருவனை அவள் திருமணம் செய்துகொள்வது அவளது கற்பியல்பிற்குக் களங்கமல்லவா?” என்று அவர் கேட்கிறார்.

நான் அப்படி நினைக்கவில்லை.

ரத்த பந்தத்தை உணர்ந்துகொள்ளாத நினைவு காதலாகாது.

ஆகவே, அவள் வேறு ஒருவனை மணந்து கொள்வது தவறாகாது.

இந்துக்களின் உறவு முறைகள் மிகவும் கண்டிப்பானவை, அர்த்தமுள்ளவை. அதிலே தொய்வோ மாறுதலோ இதுவரை ஏற்பட்டதில்லை.

பங்காளி உறவும், மாமன் மைத்துனன் உறவும் வேறு வேறானவை.

அவை ரத்தத்தை அனுசரித்தே உண்டாக்கப்பட்டவை.

ஆகவே, பண்புகெட்ட நினைவிலிருந்து மீண்டும் வேறு திசையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது ஒழுக்கத்திற்கு உயர்வே தவிர தவறாகாது என்பதை அந்தச் சகோதரிக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இன்னொரு நண்பர் மகுடஞ்சாவடி, அ.தாழைரிலிருந்து கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

“என் தாய் மாமனுக்கு ஆறு பெண்கள். அவர்களில் ஒருத்தியை நான் மனமார விரும்புகிறேன். அவளும் என்னை விரும்புகிறாள். எங்கள் காதலைத் தங்கள் வார்த்தைகளில் கூறவேண்டுமானால், `சரீரத்தின் தாளம் அல்ல; ஆத்மாவின் ராகம்.’ தாங்கள் குறிப்பிடும் நற்குடியைச் சேர்ந்தவள். அதைவிட மேலாக, நைந்துபோன உறவை மீண்டும் ஏற்படுத்த, என் தாயே அப்பெண்ணை மருமகளாக்கப் பெரிதும் ஆவலாய் உள்ளார். ஆனால், என் சோதனை என் தந்தையிடம்தான் ஆரம்பிக்கிறது.    என் தந்தை, அவருக்கும் என் மாமாவிற்கும் முன்பு ஏற்பட்ட மனஸ்தாபத்தைக் காரணமாக வைத்து, என் மாமாவின் பெண்ணைத் திருமணம் செய்ய அனுமதிக்க மறுக்கிறார். அதைவிடப் பெரிய அதிர்ச்சி என்னவென்றால் என் மாமா வீட்டிற்குப் பக்கத்து வீட்டிலேயே ஒரு பெண்ணை எனக்குத் திருமணம் முடிக்க ஏற்பாடு செய்கிறார். அவர் பார்க்கும் பெண்ணும், தங்கள் கூற்றுப்படி `நற்குடி’ப் பெண்தான். நானும் கண்டு பேசியிருக்கிறேன்… நல்ல அழகு, நல்ல குணம், நல்ல ஒழுக்கம் நிறைந்தவள்தான்.

நீங்கள் கூறுகிறீர்கள், “பெற்றோர் பார்த்து மகனுக்குப் பெண் கேட்க வேண்டும்; அவர்கள் பெண்ணின் குலம் கோத்திரம் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்த பிறகுதான் பேசி முடிக்கிறார்கள்” என்று. என்னைப் பொறுத்தவரை என் தாயும் தந்தையும் இருவேறு பெண்களை எனக்குப் பேசி முடிக்க விரும்புகின்றார்கள். அந்த இரு பெண்களுமே, நீங்கள் எத்தகைய பெண்களைச் சிபாரிசு செய்கிறீர்களோ அத்தனை தகுதிகளும் உடையவர்களே. ஆனால் என் மனம் என் மாமாவின் பெண்ணைத்தான் நாடுகிறது. என் தந்தையோ அதற்குச் சிறிதும் இணங்கத் தயாராய் இல்லை. அவரை மீறவும் எனக்குத் தைரியம் போதவில்லை. அம்மாவைப் புறக்கணிக்கவும் என் மனம் இடந்தரவில்லை. நான் அழுகிறேன்; குழம்புகிறேன்; துடிக்கிறேன். இந்தச் சூழ்நிலையில் தங்கள் கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது.

`நதியினில் வெள்ளம்

கரையினில் நெருப்பு

இரண்டிற்கும் நடுவே

இறைவனின் சிரிப்பு!’

எனவே, எனது இந்தக் கடிதத்திற்குத் தாங்கள் தயவு செய்து கொஞ்சம் மதிப்புக் கொடுத்து, என்னை இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுவிக்கவும். நான் எவ்வாறு நடந்து கொண்டால் பிரச்சனை தீரும் என்பதற்கு வழிகாட்டித் தாங்கள் பதிலளித்தீர்களானால் எனக்கு வழி காட்டிய `கண்ணனாக’வே தங்களைப் பூஜிப்பேன் எனக் கூறி என் கடிதத்தை முடிக்கிறேன்.’

இந்த நண்பரின் துயரம் எனக்குப் புரிகிறது.

`பெற்றோர்தான் பெண் தேடித்தர வேண்டும்’ என்று நான் சொன்னதை ஒப்புக் கொண்டே அவர், தாயும் தகப்பனும் வேறு வேறு பெண்ணைப் பார்த்தால் என்ன செய்வது என்று கேட்கிறார்.

அப்போது விஷயத்தைப் `புல் பெஞ்சு’க்கு விட்டுவிட வேண்டும். அதாவது, இருவரும் ஒரு நீதிபதியாக அமர்ந்து விடவேண்டும்.

எந்தப் பெண்ணுக்கு இவருடைய `ஓட்டு’ விழுகிறதோ அந்தப் பெண்ணுக்கு இரண்டு ஓட்டு விழுந்துவிட்டதாக அர்த்தம்.

மெஜாரிடியை நம்புகிற ஜனநாயகத்தில், இத்தகைய முடிவுதான் சரியானது.

பொதுவில் தங்களது காதல் துயரங்களையும் வேறு பல துயரங்களையும் ரசிகர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

“நான் கடவுளை மனதார நம்புகிறேன். எனினும் எனக்கு துயரத்தின் மேல் துயரம் வருகிறதே என்ன செய்ய?” என்று தஞ்சாவூரிலுள்ள ஒருவர் கேட்கிறார்.

எப்போது நமக்குத் துயரம் தொடர்ந்து வருகிறதோ அப்போதே நாம் இறைவனின் பார்வைக்கு இலக்காகி இருக்கிறோம் என்றுதான் அர்த்தம்.

வாரியார் சுவாமிகளும் அதைத்தான் கூறினார்.

சோதனை அதிகமாக இருந்தால் சுகம் பெரிய அளவில் வரப்போகிறது என்று அர்த்தம்.

உண்மையான பக்தனைத்தான் இறைவன் சோதிக்கிறான்.

திருடர்களை அவர்கள் இஷ்டம்போல போகவிட்டுத் தண்டனைக்கு ஆளாக்குகிறான்.

பக்தர்களைப் பரமன் சோதித்து, இறுதியில் சிறந்த அருள் வழங்கியதாக நமது புராணங்களில் உள்ளன.

முதலில், சோதனைகளாலே மனம் மரத்துப் போய்ப் பக்குவம் பெற்று விடுகிறது.

பக்குவம் வந்தபின் கைக்கு வரும் எந்த லாபமும் தலைமுறைக்குத் தொடர்ந்து வருகிறது.

வீண் ஆரவாரங்கள், ஆர்ப்பாட்டங்கள் அடிபட்டுப் போய் நிதானம் வந்துவிடுவதால், பெரிய நன்மை வரும்போது ஆணவமோ அகந்தையோ வருவதில்லை; உள்ளம் அதை அமைதியாக வரவேற்கிறது.

சோதனைகளின் பலனாகக் கிடைத்த அடக்கமும் பணிவும் அதிகமாகின்றன.

சோதிக்கப்பட்ட மனிதன், பிறகு பலருடைய மரியாதைக்கும் உரியவனாகிறான்.

ஆகவேதான், நல்லவனை மிக நல்லவனாக்குவதற்கு வேதனைகளையும், சோதனைகளையும் இறைவன் தொடர்ந்து வழங்குகிறான்.

நண்பா, வருகின்ற சோதனைகளையெல்லாம் தாங்கிப் பார்க்க வேண்டும்.

ராசி மாறும்போது, ஜாதகத்தின் நல்ல நேரம் தோன்றும்போது, அதன் பலன் தெரியும்.

“நிழலருமை வெய்யிலிலே

நின்றறிமின் ஈசன்

கழலருமை வெவ்வினையில்

காண்மின்”

என்றார்கள்.

வீழ்ந்தவன் வீழ்ந்துகொண்டே இருந்து, வாழ்ந்தவன் வாழ்ந்து கொண்டே இருந்தால், இறைவனின் இயக்கம் சரிவர இயங்கவில்லை என்று பொருள்.

ஆனால் வீழ்ந்தவனுக்கு எழுச்சியையும், எழுந்தவனுக்கு வீழ்ச்சியையும் மாறி மாறி நான் காண்கிறேன்.

இந்த எழுச்சியும் வீழ்ச்சியும்தான், இறைவன் இயங்கிக் கொண்டிருக்கிறான் என்பதைக் குறிக்கின்றன.

பிறந்துவிட்ட ஒவ்வொரு மனிதன் ஜாதகமும் இறைவனாலே கணிக்கப்பெறுகிறது.

வேறு, வேறான பாதைகளும், வாதைகளும் இறைவனை நினைக்க வைக்கின்றன.    மனிதனைப் பிரக்ஞையோடு வைத்திருப்பதற்குத்தான் இறைவன் ஒவ்வொருவருடைய விதியையும் மாற்றி மாற்றி அமைக்கிறான்.

விதியும் பூர்வஜென்மமும் ஒன்றோடொன்று தொடர்புடையவையாக இருப்பதற்குக் காரணமும் இதுதான்.

ஆகவே சிக்கல் நேரும்போதெல்லாம், `கண்ணா’ என்றோ, `கந்தா’ என்றோ ஒருமுறை அழைத்து, அதைத் தாங்கிக்கொண்டு அமைதியடைய வேண்டும்.

`துன்பம் வரும்போது சிரி; அதற்கு அடுத்தாற் போல வருவது துன்பமாக இருக்காது’ என்று வள்ளுவன் அறுதியிட்டுக் கூறினான்.

இந்துமதம் வேரூன்றியுள்ள இந்தியாவில் காலநிலையின் மாறுபாட்டுக் கணிதத்தை நாம் பார்க்கிறோம் அல்லவா?

கோடைக்கால வெயிலால் காய்ந்துபோன ஏரிகள் மாரிக்கால மழையால் மறுபடியும் நிரம்பவில்லையா?

“காலம் ஒருநாள் மாறும் நம்

கவலைகள் யாவும் தீரும்!”

என் வாழ்க்கையிலேகூடப் பல நேரங்களில், துன்பம் தாங்காமல் தற்கொலையைப் பற்றி நான் சிந்தித்ததுண்டு.

அது நடக்காமற் போனதற்குக் காரணம், என்னாலும் `ஏதோ ஆகும்’ என்று இறைவன் எழுதியிருப்பதுதான்.

பலமுறை தற்கொலைக்கு முயன்ற ராபர்ட் கிளைவ், இந்தியாவையே ஆளக்கூடியவனாக வந்து சேரவில்லையா?

பாழும் மனது சில நேரங்களில் சஞ்சலிக்கும்.

`போதுமே, இந்தக் கஷ்டம்’ என்று தோன்றும்.

`போய்ச் சேர்ந்துவிடலாம் அவனிடம்’ என்று எண்ணும்.

குழம்பும், புலம்பும், தவிக்கும், தத்தளிக்கும்; நன்மை கிடைத்தவுடன் `வாழ்ந்து பார்க்கலாம்’ என்ற சபலம் வரும்.

அது அதிகமாகும்போது, வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கையும் வந்துவிடும்.

அந்த நம்பிக்கையிலேதான் நண்பா சோதனைகளைத் தாங்கிக் கொள்ளவேண்டும்.

இறைவன் யாரையும் கைவிடமாட்டான்.

இது சத்தியம்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சாதிகள் -அர்த்தமுள்ள இந்துமதம்

இந்து சமய வரலாற்றின் மிக ஆரம்பக் காலத்தில் இந்து சமூகமானது பல நிலைகளாகப் பகுக்கப்பட்டு அமைந்திருந்ததையே விளக்கும் வகையில், சாதி முறையானது அமைந்திருந்தது. பழங்குடி மக்கள் என்ற அடிப்படையிலும், செய்தொழில் அடிப்படையிலும், சாதி முறையானது அமைந்ததில் ஏற்பட்ட குழப்பமானது கண்டிப்பான நியதிகளில் ஒன்றாகப் பழங்குடி மக்களுடைய பழக்க வழக்கங்கள் பிரத்தியேகமாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான காரணமாயுள்ளது.

சாதிமுறை அமைப்பினுடைய சமூக அம்சத்தைப் பார்க்கும் பொழுது அந்த அமைப்பானது மனிதர்களால் உருவாக்கப்பட்டதே தவிர, அது தெய்வீக அமைப்பின் மர்மமாக அமைந்து விடவில்லை. மக்களிடையே காணப்பட்ட உண்மையான வேற்றுமைகளுக்கு ஏற்பவும், இலட்சியமான வகையில் அமையவேண்டிய ஒற்றுமைக்காகவும், மனித சமுதாயத்தினை நெறிப்படுத்தி அமைப்பதற்காகவே, சாதி முறையானது அமைக்கப்பட்டது.

மிகப் பெரியதோர் அமைப்பினுடைய பல்வேறு அம்சங்களாகச் சமூகத்தினுடைய பல்வேறு பகுதிகளும் கருதப்பட்டது பற்றி முதல் முதலாக `புருஷசூக்தம்’ எனும் நூலில் ஜாதிமுறை அமைப்புப் பற்றிக் குறிப்பிடப்பட்டுக் காணப்படுகிறது. மனித சமுதாயமானது பல்வேறு உறுப்புகளுடன் கூடிய ஒரு முழுமைப் பொருளாகவும், அதனுடைய ஒவ்வோர் அங்கமும் தனக்கான பொறுப்புகளையும் கடமைகளையும் சரிவர நிறைவேற்றுவதன் மூலமாகப் பிற அங்கங்களும் தம்முடைய பொறுப்புகளையும் கடமைகளையும் செவ்வனே நிறைவேற்றுவதற்கு உதவியும், பிற அங்கங்கள் தம்முடைய பொறுப்புகளையும் கடமைகளையும் செவ்வனே நிறைவேற்றி வரக்கூடிய காரணத்தால், தன்னுடைய பொறுப்புகளையும் கடமைகளையும் செவ்வனே நிறைவேற்றும் வகையில், பல அம்சங்களும் ஒன்றை மற்றது இயல்பாகச் சார்ந்து அமையும் வகையில் அமைந்துள்ளன.

இந்தக் கண்ணோட்டத்துடன் பார்ப்போமேயானால் முழுப் பொருளினுடைய தன்மையானது அதனுடைய பல்வேறுபட்ட அங்கங்கள் ஒவ்வொன்றிலும் அமைந்தும், முழுப் பொருளினுடைய நல் இயக்கத்திற்கு அதனுடைய பல்வேறு அங்கங்கள் ஒவ்வொன்றும் இன்றியமையாததாகவும் உள்ளன. ஒரு சமூகத்தினுடைய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் பணியாற்றி வரக்கூடிய பல பிரிவுகளுடனும் கூடிச் சமூகங்கள் அனைத்தும் அமைந்து காண்கின்றன.

பல்வேறு பிரிவுகளும் பொதுவானதோர் இலட்சியத்தை எய்தும் வகையில் செயலாற்றக்கூடிய காரணத்தால், அவற்றினிடையே ஒற்றுமையுணர்வும் சமூக சகோதரத்துவமும் நன்கு மருவுகின்றன. முதல் பிரிவாகப் பண்பாட்டின் வளர்ச்சிக்காகவும் ஆன்மிகத்தின் உயர்வுக்காகவும் முதலாவது பிரிவில் ஈடுபட்டவர்களையும், இரண்டாவது பிரிவாகப் போர்த்துறையிலும் அரசியலிலும் ஈடுபட்டுள்ளவர்களையும், மூன்றாவது பிரிவாகப் பொருளாதாரத் துறையிலும் வர்த்தகத்திலும், வாணிபத்திலும் ஈடுபட்டு உள்ளவர்களையும், நான்காவது பிரிவாகத் தேர்ச்சி பெறாத தொழிலாளிகளையும் உழைப்பாளிகளையும் கொண்டு, சாதி அமைப்பானது அமைந்தது.

மனித வாழ்க்கையினுடைய பல்வேறு கடமைகளும் மிகத் தெளிவான வகையில் புகுத்தப்பட்டும், அவற்றினுடைய பிரத்தியேகமான இயல்புகளும், எவ்வகையில் அவை பிறவற்றுடன் ஒருங்கே இயங்கினால் அதன் விளைவாக நிறைவு காண முடியும் எனும் நோக்குடன், அவை ஒவ்வொன்றினுடைய சிறப்பியல்புகளும் தெளிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஒவ்வொரு சாதிக்கும் சமூகத்தில் ஆற்ற வேண்டிய குறிப்பாக `பணியும், கடமையும்’ அது அனுசரிக்க வேண்டிய நியதியும் அதற்கான தனிப்பட்ட பாரம்பரியமும் உள்ளன. உணவியல் பற்றியும், திருமண இயல் பற்றியும் சில முறைகளைக் கையாண்டும், ஓரளவு பரம்பரை பழக்க வழக்கங்களை மேற்கொண்டும் பல்வேறு பிரிவுகளும் ஒன்றுக்கொன்று இயைந்து ஒற்றுமையுடன் கூடி வாழ்ந்து வரக்கூடிய ஒரு கூட்டு நிறுவனம் போன்றதுதான் சாதிமுறை அமைப்பு ஆகும்.    ஒவ்வொரு பிரிவும் பிற பிரிவுகளுடைய ஈடுபாடும் தலையீடு மின்றித் தனிப்பட்ட வகையில் தம்முடைய இலட்சியங்களையும் குறிக்கோள்களையும் எய்தும் முயற்சியில் பூரண சுதந்திரத்துடனும், சுயேச்சையாகவும், இயங்குவதற்குக் கூடிய வழிவகைகள் உள்ளன. பல்வேறு சாதிகளிடையே பல்வேறுபட்ட கடமைகளும் முழு அமைப்பினுடைய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அனைத்தும் கருதப்பட்டன. வேத நூல்களில் காணக்கூடிய உயரிய கருத்துகளைப் பிறருக்கு எடுத்துக் கூற வேண்டிய குருவினிடத்து காணப்பட வேண்டிய மனநிறைவும் அமைதியும், போர்க்களத்தில் சமர்புரியும் வீரனுடைய வீரமும் திறனும், வர்த்தக வாணிபத்தில் ஈடுபட்டுள்ளவருடைய மன நேர்மையும், தொழிலாளியின் பொறுமையுணர்வும் உழைப்புத் திறனும், இவையனைத்தும் சமுதாயத்தின் நல்வளர்ச்சிக்கு வழிக்கோலுகின்றன. இந்த அம்சங்கள் ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட முறையில் தனிப்பட்ட தொரு நிறைவு நிலை என்பது ஒன்று உண்டு”.

மேலே நீங்கள் படித்தது டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுடைய கருத்துரையாகும்.

`இந்து தர்மமும் வாழ்க்கையும்’ என்ற நூலில் அவர் இவ்வாறு கூறுகிறார்.

அவரது தெளிவான கருத்தை அறிந்து கொள்ள முடியாதவாறு, அந்த நூலை மொழிபெயர்த்தவர் கொடுமையான தமிழைக் கையாண்டிருக்கிறார். ஆயினும் அவருடைய தமிழையே நான் மீண்டும் மொழிபெயர்த்து ஓரளவு புரிந்து கொண்டேன்.

“சாதிப் பிரிவு என்பது நாட்டுக்குத் தேவையான நான்கு அம்சங்களைக் கொண்டது” என்கிறார் ராதாகிருஷ்ணன்.

1. ஆன்மிகத் துறை

2. அரசியல், போர்த்துறை

3. வாணிபம் தொழில்துறை

4. தொழில்களை இயக்கும் தொழிலாளிகள் துறை.

இவை பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்ர என நான்கு வருணங்களாக அமைக்கப்பட்டன என்பது டாக்டர் ராதா கிருஷ்ணனின் வாதம்.

அவர் மட்டுமல்லாது, இந்துமதச் சான்றோர்களின் வாதமும் அதுதான்.

காழ்ப்புணர்ச்சியின்றி, ஆத்திரமின்றி, தத்துவ ரீதியாக இதை நாம் ஆராயவேண்டும்.

மேற்கண்ட நான்கு பிரிவுகளையும், சாதிப் பிரிவுகள் என்று அழைப்பதை நான் ஒப்புக் கொள்வதில்லை.

ஒவ்வொரு வருணத்துக்குள்ளும் பல்வேறு சாதிகள் இருக்கின்றன. ஆதலால், இந்த நான்கு பெரும் பிரிவுகளும் சாதிப் பிரிவுகள் ஆகமாட்டா.

முதலில், இந்த நான்கு பிரிவுகளும் ஏற்படுத்தப்பட்ட நோக்கத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

சமுதாய வாழ்க்கையையே நான்கு அங்கங்களாகப் பிரித்து, ஒன்றை ஒன்று அனுசரித்து வாழும் முறையை இந்துமதம் உருவாக்கியது.

ஆன்மிகத் துறையில் ஈடுபட்ட முதற்பிரிவினர், எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கையை உண்டாக்கவும், நீதி நியாயங்களைப் போதிக்கவும், வழி காட்டவும் உருவாக்கப்பட்டனர்.

இரண்டாவது பிரிவினர், அரசியலில் ஈடுபடவும், நாட்டை நிர்வகிக்கவும் பகைவரிடமிருந்து நாட்டைக் காக்கவும் உருவாக்கப்பட்டனர்.

மூன்றாவது பிரிவினர், வாணிபம் நடத்தவும், பொருளீட்டி நாட்டின் செல்வத்தை வளர்க்கவும் உருவாக்கப்பட்டனர்.

இந்த மூன்று துறைகளிலும் பயிற்சியற்றவர்கள், உடல் உழைப்பாளிகளாக இருந்து தொழில்களை இயக்கவும், கட்டடங்கள் கட்டவும் பயன்படுத்தப்பட்ட நான்காவது பிரிவினரானார்கள்.

இந்த நான்கு பிரிவுகளுக்குள்ளேயுமே, அன்றைய மொத்த சமுதாயமே அடங்கி விடுகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

நாகரிக உலகத்தின் விஞ்ஞான வளர்ச்சி தோன்று முன்பு நாடுகள் எந்த நிலையில் இருந்தனவோ, அந்த நிலையைக் கணக்கெடுத்தே இந்தப் பிரிவுகள் வகுக்கப்பட்டன.

அந்தநாளில் பிரம்மப் பிரிவைச் சேர்ந்தவன் ஆன்மிகத் துறையில் மட்டுந்தான் ஈடுபட்டான்.

க்ஷத்திரியன் அரசியலிலும் போரிலும் மட்டுந்தான் ஈடுபட்டான்.

வைசியன் வாணிபத்தில் மட்டுந்தான் ஈடுபட்டான்.

(சூத்திரன் என்றால் `இழிமகன்’ என்று இந்து மதம் கூறுவதாக ஒரு பொய்யான வாதம் பலருடைய மனத்தைப் புண்படுத்தியிருக்கிறது.)

இந்து மதத்தையோ, `சூத்திரன்’ என்ற வார்த்தையையோ சரியாகப் புரிந்து கொள்ளாத எவனோ இட்டுக்கட்டி உரைத்த உரை இது.

`சூத்திரம்’ என்றால், இயக்கப்படுவதற்கான `இலக்கணம்’ என்று பொருள்.

`சூத்திரன்’ என்றால், `இயக்குகிறவன்’ என்று பொருள்.

(சூத்திரதாரி என்ற வார்த்தையின் மரூஉ அது)

ஆக அந்த நாளையச் சமுதாய அமைப்பின்படி இந்த நான்கு வருணங்கள் பிரிக்கப்பட்டன.

காலங்களால் சமுதாய அடிப்படை மாறி, அவரவர் ஏற்றுக் கொண்ட பணிகளும் மாறிவிட்டன.

மேற்கூறிய நான்கு பெரும் பிரிவைச் சேர்ந்தவர்களும் எல்லாத் தொழில்களிலும் காணப்படுகிறார்கள்.

ஆன்மிகத் துறையில் அனந்தராம தீட்சிதர் மட்டும் இல்லை; கிருபானந்தவாரியாரும் இருக்கிறார்.

அரசியலில் காமராஜர் மட்டும் இல்லை; ராஜாஜியும் இருக்கிறார்.

வாணிபத் துறையில் ஈடுபடாத சாதிகளே இல்லை.

அதுபோல உடல் உழைப்பிலும் எல்லாப் பிரிவினரும் ஈடுபட்டிருக்கிறார்கள்.    ஆகவே, இந்து சமயம் தோற்றுவித்த வருணங் களின் நோக்கம் அடிபட்டுப் போய்விட்டது.

தாங்கள் மேற்சாதி என்று உயர்ந்த மனப்பான்மை கொண்டவர்களும், தாங்கள் கீழ்ச்சாதி என்ற தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களும், இன்று வெகுவாகக் குறைந்து விட்டார்கள்.

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே

என்றபடி, ஹரிஜன் ஒருவர் கலெக்டராக இருக்க அவருக்குக் கீழே பிராமணர் ஒருவர் தாசில்தாராக இருப்பது இன்று சர்வசகஜம்.

இந்துமதம் பிரித்த பிரிவுகள் தொழில் நோக்கம் மட்டுமே கொண்டவை.

ஆகவே, இன்றைய மாறுதல்களையும் வளர்ச்சியையும் இந்துமதம் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறது.

தீண்டாமை என்பதும், தாழ்ந்தவன் உயர்ந்தவன் என்பதும், வெறுப்பின் அடிப்படையிலே தோன்றிய சாதிப் பிரிவுகளாக இந்து மதத்தின் மூல வேதங்கள் எவையும் கூறவில்லை.

நாடார், முதலியார், நாயக்கர், செட்டியார் என்ற சாதிப் பெயர்களெல்லாம் அந்த நாளில் ஒவ்வொரு துறையில் பங்காளிகளாக இருந்தவர்கள், தங்களுக்கு இட்டுக் கொண்ட பட்டப்பெயர் அல்லது குடும்பப் பெயர்களே!

இந்தச் சாதிப்பெயர் எதையும் இந்து வேதங்களில் காண முடியாது.

காலப்போக்கில், அவ்வப்போது தோன்றிய உபன்யாசிகள், அவரவர் மனப்போக்கின்படி உருவாக்கிய பேதங்களே அன்றி, இவை இந்துமதம் உருவாக்கிய பேதங்களல்ல.

இன்றைய சமுதாய அமைப்பின்படி, இந்த நான்கு வருணங்களைத் தொழில் முறையில் பிரிக்க முடியாது.

காலத்தைக் கொண்டு கவிதையை ஆராய்வது போலத்தான் மதத்தையும் ஆராய வேண்டும்.

அந்நாளைய சமுதாய அமைப்புத்தான் எந்நாளும் இருந்தாக வேண்டும் என்று இந்துமதம் வற்புறுத்தவில்லை.

ஆகவே வெறுப்பின்மீது கட்டப்பட்ட எந்தக் கட்டடமும், இந்து மதத்தால் உருவாக்கப்பட்டதல்ல என்பது உறுதி.

இந்த பேதங்களை உருவாக்கியவர்கள், தீண்டாமையை உருவாக்கியவர்கள், முற்பிரிவினர்கள்தான் என்ற பொய் வாதத்தைத் தகர்க்க, அதே பிரிவினர்தான் அவற்றை ஒழிப்பதிலும் ஈடுபட்டார்கள் என்பதை தேசிய போராட்டக் காலத்தில் நாம் கண்டிருக்கிறோம்.

இடைக் காலத்தில் வந்த சாதிகள், நம் தலைமுறையிலேயே மறையத் தலைப்பட்டிருப்பது, `நாம் நல்ல காலத்தில் வாழ்கிறோம்’ என்பதைக் காட்டுவதோடு, இந்துமதத்தின் மீது சுமத்தப்பட்ட களங்கத்தையும் துடைத்து வருகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

வாசலில் அமீனா நிற்கிறான்

தமிழர் ஒருவர் லண்டன் நகருக்குச் சென்றார்.

காலையில் குளித்துவிட்டுக் கட்டுக்கட்டாக விபூதி பூசினார்.

அதைப் பார்த்த ஓர் ஆங்கிலேயர் அவரிடம் கேட்டார்:

“ஏன் இப்படிச் சாம்பலை அள்ளி நெற்றியில் பூசுகிறீர்கள்?”

தமிழர் பதில் சொன்னார்:

“இந்த உடம்பு என்றாவது ஒருநாள் சாம்பலாகப் போகிறது என்பதை நாங்கள் தினமும் நினைவுபடுத்திக் கொள்கிறோம். அதன்மூலம் கெட்ட புத்தி விலகி விடுகிறது”.

ஆங்கிலேயர் திகைத்துப் போனார்.

அன்று முதல் இந்துமதத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார்.

இன்றும் லண்டனில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் தமிழர் எனக்குச் சொன்ன செய்தி இது.

`யாக்கை நிலையாமையை’ இந்துசமய தத்துவஞானிகள் அடிக்கடிக் கூறி வந்திருப்பது, மனிதனை விரக்தியடையச் செய்வதற்கு அல்ல.

வாழ்க்கையில் ஒரு தைரியத்தை உண்டாக்குவதற்கே.

`விட்டுவிடப் போகுதுயிர்; விட்ட வுடனே உடலைச்

சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார்…’

என்று பட்டினத்தார் மரணத்தைச் சுட்டிக் காட்டியது, ஒருநாள் மரணம் வரப்போகிறது என்பதை உணர்ந்து அதுவரை வாழ்க்கையை நேர்மையாக நடத்துமாறு செய்வதற்கே.

இந்த ஞானம், ஒவ்வொரு சராசரி மனிதனுக்குக் கூட ஒருநாள் வருகிறது.

ஏதாவது ஒரு சாவு வீட்டுக்குப் போகும்போது, “நாமும் சாகத்தான் போகிறோம்” என்ற எண்ணம் வருகிறது.

அதையே `மயான வைராக்கியம்’ என்பார்கள்.

“காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா” என்று பாடியவர், இறைவன் படைத்த உடலை அவமானப் படுத்துவதற்காகப் பாடவில்லை.

`பொய்யான இந்தக் காயத்தைக் காப்பாற்ற, நீ பொய் சொல்லாதே, நீ திருடாதே, பிறரை ஏமாற்றாதே’ என்று எச்சரிப்பதற்காகப் பாடினார்.

`இந்த உயிர் இறைவன் கொடுத்த கடன்.

இந்த உடல் இலவசமாகக் கொடுத்த பரிசு.

தலை வழுக்கை விழுவதோ, ரோமம் நரைப்பதோ, பல் விழுவதோ இறைவன் நமக்குப் போடும் ஞாபகக் கடிதம்.

`நீ கையெழுத்துப்போட்ட பத்திரம் காலாவதியாகிப் போகிறது.

கடனைக் கட்டுவதற்குத் தயாராகிக் கொள்.

உன் உயிரை நான் ஜப்தி செய்யப் போகிறேன்”.

என்று இறைவன் நம்மை எச்சரிக்கிறான்.

உயிரை ஜப்தி செய்தவற்காக, அமீனா எப்போதும் வாசலில் நிற்கிறான் என்பதை, நமது சித்தர்களும் ஞானிகளும் சுட்டிக் காட்டினார்கள்.

அந்த அமீனாவுக்கு `யமன்’ என்றும், `கூற்றுவன்’ என்றும் பெயர் கொடுத்தார்கள்.

உடலின் நிலையாமையை மனிதன் உணர்ந்து கொண்டிருந்தால், கூடுமானவரை அவன் மனத்தில் நாணயம், நேர்மை, இரக்கம், கருணை எல்லாம் வளர்ந்து விடுகின்றன.

சாவதற்குள் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது.

துன்பங்களை அலட்சியப்படுத்தும் சக்தி வருகிறது.

அல்லது சாவதற்குள் நன்றாக உழைத்துக் குடும்பத்திற்கு ஒருவழி செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.

யாக்கை நிலையாமையை மறந்தவர்கள், எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று அலைந்து, சம்பாதித்த பணத்தைத் தாங்கள் அனுபவிக்காமலே மாண்டு போகிறார்கள்.

மரணத்தின் மகத்தான சக்தியை மரணம் வருமுன்பே மனிதனை அறிந்து கொள்ளச்செய்வது, இந்துசமயவாதிகளின் நோக்கங் களில் ஒன்றாகும்.

எதையும் அளவோடும் நியாயமாகவும் பகிர்ந்து அனுபவிக்கும் உணர்ச்சிக்கு இது அடித்தளம்.

ஆவியோடு காயம் அழிந்தாலும்
மேதினியில்
பாவிஎன்று நாமம், படையாதே!

மேவியசீர்
வித்தாரமும் கடம்பும் வேண்டா
மடநெஞ்சே!

செத்தாரைப் போலத் திரி!
இப்பிறப்பை நம்பி இருப்பாரோ
நெஞ்சகமே!

வைப்பிருக்க வாயில்
மனைஇருக்கச் சொப்பனம்போல்
விக்கிப்பற் கிட்டக்கண்
மெத்தப்பஞ் சிட்டு அப்பைக்
கக்கிச் செத்துக் கொட்டக்
கண்டு!

ஒன்பதுவாய்த் தோல்பைக்கு
ஒருநாளைப் போலவே
அன்புவைத்து நெஞ்சே
அலைந்தாயே!

வன்கழுக்கள்
தத்தித்தத் திச்செட்டை
தட்டிக்கட் டிப்பிட்டுக்
கத்திக்குத் தித்தின்னக் கண்டு!

முதற்சங்கு அமுதூட்டும்,
மெய்குழலார் ஆசை
நடுச்சங்கம் நல்விலங்கு
பூட்டும் கடைச்சங்கம்
ஆம்போ ததுஊதும், அம்மட்டோ?
இம்மட்டோ?
நாம்பூமி வாழ்ந்த நலம்!

எத்தனைநாள் கூடி
எடுத்த சரீரம் இவை!

அத்தனையும் மண்தின்ப
தல்லவோ வித்தகனார்
காலைப் பிடித்துமெள்ளக்
கங்குல்பகல் அற்றிடத்தே
மேலைக் குடியிருப்போ மே?
இருப்பதுபொய் போவது
மெய் என்றெண்ணி நெஞ்சே!

ஒருத்தருக்கும் தீங்கினை
யுன்னாதே பருத்ததொந்தி
நம்மதென்று நாமிருப்ப
நாய்நரிகள் பேய்க்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான்!

இவை பட்டினத்தார் பாடல்கள்.

காயம் நிலையாமையைப் பற்றிப் பாடிய பட்டினத்தார் வாழ்க்கையில் விரக்தியடைந்த நிலையில் தான் பாடினார் என்றாலும், அந்தச் சிந்தனை வந்த பிறகுதான், அவருக்கு அமைதி வந்தது என்பதை, அவரது வாழ்க்கையிலிருந்து காணுகிறோம்.

“செத்தாரைப் போலே திரி”, என்று அவர் சொன்னது பற்றில்லாமல் வாழச் சொன்னதாகும்.

அதே நேரத்தில், ஆவியும் காயமும் அழிவதென்றாலும், பாவி என்ற பெயரைப் படைக்கக்கூடாது என்று அவர் கூறுவது கவனிக்கத் தக்கது.

வாழ்க்கைக்கு மூன்று சங்குகள் என்கிறார் பட்டினத்தார்.

முதல் சங்கு பாலூட்டுகிறது, குழந்தையாக இருக்கும்போது.

இரண்டாவது சங்கு திருமணத்தின்போது ஊதப்படுகிறது.

மூன்றாவது சங்கு மரணத்திற்குப் பிறகு ஊதப்படுகிறது.

அதிலும் வார்த்தைகளோடு அழகாக விளையாடுகிறார் பட்டினத்தார்.

`சங்கம்’ என்ற வார்த்தை சங்கையும் குறிக்கும்; சங்கமம் ஆவதையும் குறிக்கும்.

`முதற்சங்கம் அமுதூட்டும்’ என்பது, சங்கு பால் கொடுப்பதைக் குறிக்கிறது.

`மொய்குழலார் ஆசை நடுச்சங்கம்’ என்பது, ஆண் பெண் உறவு நடுவிலே சங்கமமாவதைக் குறிக்கிறது.

`கடைச்சங்கம்’ என்பது கடைசியில் மரணத்தில் சங்கமமாவதைக் குறிக்கிறது.

“இவ்வளவுதான் நாம் பூமியில் வாழ்ந்த வாழ்க்கை” என்கிறார் பட்டினத்தார்.

`இந்த உடல் நமக்கே சொந்தம்’ என்று நாமிருக்கிறோமாம்.

`நாயும் நரியும், பேயும் கழுகும், தாம் ஒரு நாள் இதை உண்ணப் போகிறோம்’ என்று காத்துக் கொண்டிருக்கின்றனவாம்!

நிலையாத இந்த உடம்பின் மீது எவ்வளவு மோகம்; எவ்வளவு வருணனைகள்!

இந்த உடம்பும் அழகும் பொய்யென்று நினைப்பதில் என்ன லாபம் என்று நீங்கள் கேட்கக் கூடும்?

அளவுக்கு மிஞ்சிய பற்று அடிபட்டுப் போவது, முதல் லாபம்.

கடற்பாம்பின் கால்கள் போல் ஆசைகள் திசை தோறும் பரவாமல், கிடைத்த வரைக்கும் நிம்மதி என்று வருவது, இரண்டாவது லாபம்.

அதனால்தான் இந்துக்கள், பிற மதத்தவரைப் போல், இறந்தவர் உடலைப் புதைப்பதில்லை; எரித்து விடுகிறார்கள்.

இந்த உடம்புக்கான தவணை முடிந்துவிட்டது; அது சாம்பலாகி விடுவதுதான் நியாயம். அதைப் புதைத்து வைத்து, இன்னும் அது இருப்பது போன்ற பிரமையை உண்டாக்கக்கூடாது என்று இந்துக்கள் கருதினார்கள்.

புதைபட்ட உடலுக்கு, அது புதைக்கப்பட்ட இடம் சொந்தமாகி விடுகிறது.

எரிக்கப்பட்ட உடலுக்கு, எது சொந்தம்?

“காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்றார்கள்.

இறந்த உடலுக்கு, ஏன் ஆறடி நிலத்தைச் சொந்தமாக்க வேண்டும்?

அது சாம்பலாகிக் கரைந்து போவதுதான் முறை என்று நம்பினார்கள்.

தங்களைத் தாங்களே சரிபார்த்துக் கொள்ள நமது தத்துவ ஞானிகள் வற்புறுத்திய நிலையே யாக்கை நிலையாமை.

“அமீனா வாசலில் நிற்கிறான்”.

“இறைவனிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கட்டத் தயாராக இருங்கள்”.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஒரு புதிய சிந்தனை

ராமகிருஷ்ணா மிஷனைப் போல, உத்திரப் பிரதேசம் ஷாஜஹான்பூரில் ஸ்ரீராம சந்த்ர மிஷன் என்று ஒன்று இருக்கிறது.

இதனுடைய ஸ்தாபகர் மகாத்மா ஸ்ரீராம் சந்த்ரஜி ஆவார்கள்.

அவர்களைப் பற்றிய விவரங்களோடு, அவர்கள் எழுதிய `சத்யோதயம்’ என்ற புத்தகத்தின் தமிழாக்கம் ஒன்றையும், சேலத்தைச் சேர்ந்த நண்பர் திருவேங்கடம் என்பார் எனக்கு அனுப்பியிருந்தார்.

இந்து மதத்தில் அவர் ஒரு புதிய மார்க்கத்தை உபதேசிக்கிறார்.

எனக்குத் தெரிந்தவரை இந்த மார்க்கம் மற்றவர்கள் சொல்லாத ஒன்றாகும்.

விக்கிரக ஆராதனையை வெறும் ஸ்தூல ஆராதனை என்று வருணித்து, அது மனத்தின் உள் நோக்கத்தை அதிகமாகப் பூர்த்தி செய்வதில்லை என்று சிலர் கூறியிருக்கிறார்கள்.

வெறும் ஸ்தூல வழிபாட்டில் சிக்கியவர்கள் பெரும் ஆன்மிகப் பயிற்சியைப் பெற்றதில்லை என்று அவர்கள் வாதிக்கிறார்கள்.

ஸ்ரீராம் சந்த்ரஜியும் அதைத்தான் கூறுகிறார் என்றாலும், மற்றவர்கள் கூறாத புதிய கருத்துகளையும் கூறுகிறார்.

கோஷ்டி பஜனைகளைப் பற்றி அவர் கூறும் போது, கூட்டமாக உட்கார்ந்து பஜனை செய்வதில், தெய்வத் தியானம் விருப்பத்தை நிறைவேற்றுவதில்லை என்கிறார்.

விக்கிரக ஆராதனையும், பஜனைகளும் பக்குவமில்லாத தாழ்ந்த நிலையில் ஆரம்ப நிலையில் மட்டுமே பயன்படும் என்கிறார்.

சாதாரணமாக, இன்றைய இளைஞர்களின் மனத்தில் இதே சிந்தனை தோன்றியிருப்பது கவனிக்கத் தக்கது.

“கோவிலுக்குப் போய்க் கூட்டத்தோடு கோவிந்தா போடுவதில் என்ன கிடைக்கிறது?”.

“பஜனைப் பாடல்களை சத்தம் போட்டுப் பாடுவதில் என்ன பயன் இருக்கிறது?” என்றுதான் இன்றைய இளைஞர்களும் கேட்கிறார்கள்.

ஆத்மாவுக்கு அமைதிப் பயிற்சி அளிப்பது பற்றியும், மனத்தின் கடிவாளங்களை இழுத்துப் பிடிப்பது பற்றியும், ஸ்ரீராம் சந்த்ரஜியின் கருத்துக்கள் சுவையாக இருக்கின்றன.

முழுப் பிரயத்தனத்தோடு தனியாகத் தியானம் செய்வதை அவர் வற்புறுத்துகிறார்.

இவை அனைத்தையும் விட, லௌகீக வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு ஒட்டுமொத்தமாகப் பற்றற்ற வாழ்க்கையையும், துறவி வாழ்க்கையையும் போதிப்பதை அவர் கண்டிப்பதில் அர்த்தமிருக்கிறது.

குடும்ப வாழ்க்கையில் இருந்துகொண்டே பற்றுகளைச் சமநிலைப்படுத்தி, அளவற்ற ஆசையின்றிப் பண்பாடாக வாழும் வாழ்க்கையிலே மதபோதனைகளை போதிக்க வேண்டுமென்கிறார்.

நூற்றுக்குத் தொண்ணூறு பேர் லௌகீக வாழ்க்கையின் இச்சைக்கு ஆட்பட்டு வாழ விரும்புகிறார்கள்.

தொல்லைகளையும் துன்பங்களையும் காணும் போது, அவர்கள் வேதனை அடைகிறார்கள்.

அந்த வேதனையைச் சாக்காகக் கொண்டு, `அவர்களை வீட்டைவிட்டு ஓடு’ என்று போதிப்பது, என்ன நியாயம் என்று கேட்கிறார்.

அவர் கூறுகிறார்:

“உபத்திரவங்களும் இடுக்கண்களும் ஜீவிதத்தில் பூரணமாக இல்லாமற் போவதென்பது நடக்காத காரியம்; இயற்கைக்கும் மாறானது; உண்மையில், அவை நமது மேன்மைக்காகவே ஏற்பட்டவை. அவை நோயாளிக்கு ஆரோக்கியம் உண்டாவதற்காகக் கசப்பு மாத்திரைகள் கொடுப்பது போலாகும். மிக உயர்ந்த நல்ல வஸ்துவானாலும், சரியான முறையில் உபயோகப் படுத்தக்கூடாது போனால், உபத்திரவங்களை விளைவிக்கும். துன்பங்களின் விஷயமும் இப்படியே. எவற்றையும் சரியான காலத்தில், சரியான முறையில், சரியாக உபயோகித்தால், நாளடைவில் அவை நற்பலனை அளிப்பது திண்ணம்.

உண்மையில் துன்பங்களே நமக்கு மேன்மையான வழிகாட்டிகள். அவற்றால் நமது மார்க்கம் செம்மைப்படுகிறது. சாமானிய வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள மனிதனுக்கு அவனைச் சரியான முறையிலிருக்கச் செய்யத் துன்பங்கள் மிகவும் உதவியாயிருக்கும். குடும்பக் கஷ்டங்களையும் உலக வாழ்க்கையிலுண்டாகும் துயரங்களையும் பற்றி எனது குருநாதர் இப்படிச் சொல்வதுண்டு. `நமது இல்லமே அமைதியும் பொறுமையும் அடைய நாம் பயிலுமிடம். கிருஹஸ்தாச்ரமத்தில் நாம் படும் வறுமை, இடுக்கண் களைப் பதறாது பொறுப்பது நாம் இயற்றும் பெருந்தவம். இதனிலும் உயிரிய தவம் வேறொன்றுமில்லை. இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் நாம் என்ன செய்ய வேண்டுமென்றால், கோபத்திற்காவது துக்கத்திற்காவது இடங்கொடாமல், குறைகூறும் மனப்பான்மையை ஒழித்து நமது குற்றத்திற்காகவே நாம் அனுபவிக்கிறோம் என்று நினைத்து, சாந்த மனத்துடன் பொறுமையாய் இருக்கவேண்டும்.

காட்டில் தனித்த வாழ்வும், உலக விஷயங்களில் கலக்காது விலகி நிற்றலும் சிலருக்குப் பொறுமையையும், அமைதியையும் பழகச் சாதனங்களாகும். ஆனால் நமக்குப் பந்துமித்திரர்களின் இகழ்ச்சியும், சுடுசொற்களும் அரிய பெரிய தவத்திற்கொப்பாகி வெற்றிக்கு ஒப்பற்ற சாதனங்களாகின்றன.’

“உண்மையில் துன்பங்களையும் சடங்குகளையும் நாம் அமைதியுடன் பொறுத்தோமேயாகில், அவை நம்மை மேம்பாட்டடையச் செய்து, மேல்நிலைகளுக்குச் செல்வதற்கு வேண்டிய முக்கிய சாதனங்களாகும். அங்ஙனம் அல்லாது முரணான வழியில் உபயோகித்தோமேயாகில், நற்பலன் அழிந்துபோய் நாமடையவிருக்கும் ஆதாயம் கெட்டுப் போகும்.”

“பரித்தியாகம், அதாவது பற்றுதலற்ற தன்மை ஒரு முக்கிய நிலை என்பதில் சந்தேகமில்லை. பற்றற்றாலன்றி மாயையின் சிக்கல்களிலிருந்து தப்பமுடியாது. ஆனால் நாம் மனையை விட்டகன்று, குடும்பம் லௌகீக விஷயங்களெல்லாவற்றையும் புறக்கணித்துத் துறவு பூண்டு சந்நியாசியாக வேண்டியதில்லை. இல்லறமும் இல்வாழ்க்கையும் துறந்து உலக பந்தங்களை விட்டுவிட்டு, ஏகாந்தத்தை நாடி நிற்பதே பற்றற்றுப் போவதற்கு ஒரே சாதனம் என்னும் கொள்கையை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். பலாத்கார முறையில் சர்வசங்க பரித்தியாகம் செய்வது நிஜமானதன்று. ஏனெனில் உலகத்தைத் துறந்துவிட்டாற் போலத் தோன்றினாலும் கூட, உட்கருத்தில் அவர்கள் உலகத்தைப் பற்றியே நிற்கக் கூடும்.

இல்லற வாழ்க்கையில் நாம் அநேக விஷயங்களைக் கவனிக்க வேண்டுமென்பதற்கு சந்தேகமில்லை. சம்சாரத்தைத் தாங்க வேண்டும். மக்களின் கல்விக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அவர்கள் வேண்டுவனவற்றையும், அவர்களை வெப்பம், குளிர், நோய், துன்பங்கள், மற்றெல்லாவற்றிலிருந்தும் காப்பாற்ற வேண்டும். இப்படி முக்கியமாக வேண்டியவற்றிற்காக நாம் பணமும் ஆஸ்தியும் சம்பாதிக்கிறோம்.”

“இப்படி நாம் சம்பந்தப்பட்டுள்ள விஷயங்களில் அளவு கடந்து பற்றுதல் கொள்வதே உண்மையில் தீமையாகும். இதுவே நமது இடுக்கண் களுக்கு முக்கியக் காரணம். ஆனால், விருப்பு வெறுப்பற்று நமது கடமை என்று நாம் காரியங்களைச் செய்வோமாகில், உலகப் பற்றுதல்களினின்று ஒருவாறு விலகியவராகி, அநேக உடைமைகளைப் படைத்து அவற்றைக் கையாளுபவராயிருப்பினும், உண்மையில் உலகைத் துறந்தவராகிறோம். இத்தன்மையில் உடைமைகள் பலவானால் நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள தர்மத்தைச் செய்வதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளவை என்பதும் தெளிவாகும்.

சங்க பரித்தியாக மென்பதற்கு உலகப் பற்றற்றுப் போதல் என்பது உண்மையான பொருளாம். உடைமைகள் இல்லாது போவதென்பது பொருளாகாது. ஆகையால், இன்றியமையாதவாறு ஆஸ்திகளைப் பெற்று உலகத்துடன் சம்பந்தம் கொண்டுள்ள இல்லற வாழ்க்கையை, விஷயங்களில் அளவுக்கு மிஞ்சிய பற்றற்று நடத்தினால், பரித்தியாகத்திற்கு, அதன் விளைவான சத்திய நிலை எய்துவதற்கும் இவை தடையாக மாட்டா.”

“எண்ணற்ற மகான்கள் ஆயுள் முழுவதும் இல்லற வாழ்க்கையை நடத்திக் கொண்டே மகோன்னதமான பூர்ணத்துவத்தை அடைந்திருக்கின்றனர். பரித்தியாகம் என்பது மனத்தின் உள்நிலை. அது வஸ்துகளின் நிலையற்றதும் மாறுபடுவதுமான தன்மையை உணர்த்துவதோடு அவற்றின்மேல் அவிச்சையை உண்டுபண்ணும். மேலும் நித்தியமானதும், மாறுபாடே இல்லாததுமான சத்தியத்தின் மேலேயே நோக்கம் நிலைத்து, விருப்பு, வெறுப்பு என்னும் உணர்ச்சிகளுமற்றுப் போகும். உண்மையான வைராக்கியம் ( ஸிமீஸீஸீநீவீணீவீஷீஸீ ) என்பது இதுவே.”

“நமது மனத்தின்கண் இந்தப் பாவம் ஏற்பட்டதும் நமக்குப் பற்றற்றுப் போகும். கிடைத்த மட்டும் திருப்தியடைந்திருப்போம். பற்றற்றுப் போகவே, ஸம்ஸ்காரங்கள் உண்டாவது நின்று போகும். இப்பொழுது எஞ்சியுள்ளது ஏதெனில், இதுவரை சேமித்த ஸம்ஸ்காரங்களை ஜீவிதத்தில் அனுபவித்துக் கழிப்பதே. பிரகிருதியும் ஸம்ஸ்காரங்களை காரண சரீரத்துடன் அனுபவித்துத் தீர்த்துக் கொள்வதற்காகத் தக்க இடத்தைச் சிருஷ்டி செய்து நமக்கு உதவி செய்யும். இப்படியாகப் புரைகள் கரைந்து போனதும், நாம் சூக்ஷ்மரூபம் அடைந்து நிற்கின்றோம்.”

“நமது எண்ணங்களையும் செயல்களையும் அடக்குவதற்கு சதா ஒலித்துக் கொண்டேயிருக்கும் மனம் சரியான முறையில் வேலை செய்கின்றதா என்பதை கவனிக்க வேண்டும். மதபோதகர்கள் மிக்க கசந்த வார்த்தைகளால், மனதைக் கடிந்து தூஷித்து, அதற்கு கெட்ட பெயர்கள் எல்லாம் இட்டு, அதை நமது பெரிய விரோதி என்று பழிப்பதைப் பலமுறை கேட்டிருக்கின்றேன். இதன் காரணம் வெட்ட வெளிச்சமாகத் தெரியும். அவர்கள் நம்மிலுள்ள தீமைகள் எல்லாவற்றிற்கும் மனமே காரணம் என்று நினைக்கிறார்கள். அதன் காரணமாக மனம் போன போக்கே போகாது, அதை நசுக்கிவிட வேண்டுமென்று ஜனங்களுக்குப் புத்தி புகட்டுவர். ஆனால் ஜனங்கள் மனத்தின் கவனத் தன்மையைக் கட்டுப்படுத்தவோ, அதன் சொற்படி கேளாதிருக்கவோ முடியாமல் இருக்கின்றனர்.”

“கோட்பாடுகளைச் சார்ந்து சொல்லப்பட்ட புத்திமதிகளும் உபந்நியாசங்களும் கொஞ்சமும் உபயோகப்படுவதில்லை. உபந்நியாசங்களைக் கேட்ட எவரும் மனமடக்குதல் என்பதை நடைமுறையில் அடைந்ததேயில்லை. மேலும் தற்காலச் சூழ்நிலைகளும், சந்தர்ப்பங்களும், மனத்தை மேன்மேலும் சலிக்கச் செய்கின்றன. இக்காலத்தில் ஒவ்வொருவரும் ஜீவிதம் நடப்பதே கடும் போரெனவும், வறுமை, பாதுகாப்பில்லாமை, இடுக்கண்கள், போட்டிகள் என்னுமிவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றின் விளைவினின்று தாம் விலகி நிற்க முடியாதென்றும் நினைப்பர். இதனால் எப்போதும் அமைதியின்மையும், மனசஞ்சலமும் ஏற்படும். இந்தப் பாவம் நமது சுவாசத்திலும் கலந்து உட்சென்று சூழ்நிலை சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப இழுத்துச் செல்லும். நமது தனிமையானது காற்றுக் காட்டிபோல் நமது பாதம் போகும் போக்கிலேயே போகும் தனது தைரிய சாகஸங்களால். இதை எவன் எதிர்த்து நின்று பாதிக்கப் படாமல் தன்னைக் காத்துக் கொள்கிறானோ அவனே தீரன்”.

ஸ்ரீராம்சந்த்ரஜியின் இந்தக் கருத்தை நான் முழு மனத்தோடு ஒப்புக் கொள்கிறேன்.

இந்தத் தொடர் கட்டுரையின் ஆரம்பக் கட்டத்திலேயே இதை நான் கூறியிருக்கிறேன்.

வாழ்க்கையை வாழ்க்கையாக ஒப்புக் கொண்டு, துன்பங்கள் வந்தே தீரும் என்பதைப் போதித்து, வருகிற துன்பங்களை எப்படிச் சமாளிப்பது என்று யோசனையும் சொன்னால், சராசரி மனிதனுக்கு அது வழி காட்டும்.

மதத்தின்மீது பற்றுதலையும் ஏற்படுத்தும்.

நான் படித்தவரை, பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் கடவுளை அடையும் வழி என்று சொன்னவை எல்லாம் முழுக்க முழுக்கப் பந்தபாசங்களை அறுத்தெறிந்து விட்டு வாழ்வது பற்றியனவாகவே இருக்கின்றன.

குடும்ப வாழ்க்கையை நடத்திக் கொண்டே ஒருவன் யோகியாக முடியும்; மகான் ஆக முடியும்; முக்தியடையவும் முடியும். அதற்கான வழியை இந்துமத போதகர்கள் அதிகம் சொல்லவில்லை என்பதே என் கருத்து.

வள்ளுவன் அதை வலியுறுத்தியிருக்கிறான்.

இல்லறத்தில் துறவறம் என்ற தலைப்பில் சொன்னவர்கள் கூட ஒரு கட்டத்தில் மனைவியைத் தாய்போலப் பாவிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

உடல் இச்சைகளிலிருந்து விடுபடச் சொல்லியிருக்கிறார்கள்.

ஸ்ரீராம்சந்த்ரஜி எதிலிருந்தும் விடுபடச் சொல்லவில்லை. அதற்கு ஒரு அளவை நிர்ணயித்து கொள்ளச் சொல்லுகிறார்.

அந்த அளவு என்பது ஏறக்குறையத் திருக் குறளை ஒட்டியே இருக்கிறது.

பகவத் கீதையில் பரந்தாமன் கூறும் மனத்தின் சமநிலையே, வள்ளுவரும் ஸ்ரீராம்சந்த்ரஜியும் வலியுறுத்தும் அளவாகும்.

இன்பங்களையே அனுபவிக்காமல், ஒருவன் துறவு பூண்டால், அந்த இன்பத்தை நோக்கியே அவன் மனம் ஓடிக் கொண்டிருக்கும்.

அவன் எந்தக் காலத்திலும் முழு ஞானம் பெற முடியாது.

அனுபவித்து ஞானம் பெற்றவர்கள்தான் தலைசிறந்த ஞானிகளாகக் காட்சியளிக் கிறார்கள்.

பற்றற்ற வாழ்க்கை என்பதற்கு ஸ்ரீராம்சந்த்ரஜி கொடுக்கும் விளக்கத்தை நவநாகரிக இளைஞர்கள் கூட விரும்பி ஏற்றுக் கொள்ளுவார்கள்.

சத்தியம் உதயமாவதற்குத் தத்துவ ரீதியாகவும் பிரத்தியட்சக் கண்ணோட்டத்திலும் அவர் சொல்லும் வழிகளைச் `சத்யோதயம்’ என்ற நூல் தெளிவாக விவரிக்கின்றது.

இந்நூலைக் கல்லூரிகளில் பாடப் புத்தகமாக வைப்பதுக் கூட பொருத்தமானது என்பது என் கருத்து.

இந்தத் தமிழ் நூல் கிடைக்குமிடம்: ஸ்ரீராமசந்த்ரமிஷன், ஷாஜகான்பூர். (உ.பி.)



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

வரும் ஏற்றுக் கொள்; தரும் பெற்றுக்கொள்!

லௌகீக வாழ்க்கையில் நாம் தவம் செய்கிறோம் என்றும், அந்தத் தவம் எத்தகையது என்றும் விளக்கி, ஸ்ரீ ராம்சந்த்ரஜி கூறியுள்ள கருத்துக்களை நான் முன்னே விவரித்தேன்.

உலக இச்சைகளுடனேயே உடைமைகளையும் பெற்றுப் பற்றற்று வாழ்வது என்ற கருத்து மிகவும் புதியது.

நம்முடைய சுற்றத்தாரும், நண்பர்களும், ஊழியர்களும் நமக்கு இழைக்கின்ற துயரங்களால் நமது மனம் பக்குவப்படுகிறது என்கிறார் அவர்.

அது மிகவும் உண்மை.

சிலர் நாக்கிலும் உடம்பிலும் ஊசியைக் குத்திக் கொள்கிறார்கள்.

சிலர் கூர்மையான ஆணிகளின் மீது படுத்துப் புரளுகிறார்கள். சிலர் கண்ணாடித் துண்டுகளை விழுங்கிக் காட்டுகிறார்கள்.

இந்த யோகங்கள் எல்லாம் சரீரத்தின் புறத்தோற்றம் பதப்படுத்தப்பட்டு, பக்குவம் பெற்றுவிட்டதைக் குறிக்கின்றன.

கடுந் துன்பங்களைத் தாங்கிக் கொள்வதன் மூலம் சரீரம் யோகம் செய்வதுபோல், பிறர் நமக்கு இழைக்கும் துன்பங்களைத் தாங்கிக் கொள்வதன் மூலம், உள்ளம் தவம் செய்கிறது.

ஆரம்பக் கட்டத்தில் சிறிய துன்பங்கூடப் பெரிதாகத் தெரியும்.

அது வளர வளர உள்ளம் மரத்துக் கொண்டே வரும்.

ஒரு கட்டத்தில் எதையும் தாங்கிக் கொள்கிற சக்தி வந்துவிடும்.

துன்பங்களின் மூலம் உலகத்தைக் கற்றுக் கொண்டவன் ஒரு ஞானியைவிடச் சிறந்த மேதையாகி விடுகிறான்.

ஓரளவு துன்பம் வந்தால் அழுகை வருகிறது.

தொடர்ந்து துன்பங்கள் வந்துக்கொண்டே இருந்தால், அழுவதற்கு சக்தி இல்லாமற் போய், வெறுப்பும் விரக்தியும் கலந்த சிரிப்பு வருகிறது.

ஒரு கட்டத்தில் எந்தத் துயரம் வந்தாலும் சிரிப்பது பழக்கமாகி விடுகிறது.

அதுவே ஞானம் வந்துவிட்டதென்பதற்கு அடையாளம்.

ஆவீன மழைபொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாக
மாவீரம் போகுதென்று விதைகொண் டோட
வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்றத்
தள்ளவொணா விருந்துவர சர்ப்பந் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கள்வந்து தட்சணைகள் கொடு என்றாரே!

என்றொரு பாடல்.

ஒரு மனிதனுக்கேற்பட்ட துயர அனுபவமாம் இது!

கற்பனை தான்!

ஆனால், ஒரே நேரத்தில் வரும் துயரங்களின் வரிசையைப் பாருங்கள்.

பசு மாடு கன்று போட்டதாம்.

அடாத மழை பெய்ததாம்.

வீடு விழுந்து விட்டதாம்.

மனைவிக்குக் கடுமையான நோய் வந்ததாம்.

வேலைக்காரன் இறந்து போனானாம்.

வயலில் ஈரம் இருக்கிறது.

விதைக்க வேண்டுமென்று ஓடினானாம்.

வழியில் கடன்காரர்கள் மடியைப் பிடித்து இழுத்தார்களாம்.

“உன் மகள் இறந்து போனாள்” என்று சாவுச் செய்தியோடு ஒருவன் வந்தானாம்.

இந்த நேரத்தில் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்து சேர்ந்தார்களாம்.

பாம்பு அவனைக் கடித்துவிட்டதாம்.

நில வரி வாங்க அதிகாரிகள் வந்து நின்றார்களாம்.

குருக்களும் தட்சிணைப் பாக்கிக்காக வந்திருக்கிறாராம்.

ஒரே நேரத்தில் இவ்வளவு வந்து சேர்ந்தால் ஒருவனுக்கு அழுகையா வரும்?

இவ்வளவு துன்பங்களையும் சந்தித்த பிறகு, ஒருவன் மனம் மரத்துப் போகும்.

மரத்துப்போன நிலையில், துன்பங்களைக் கண்டு பிடிக்காமல் அலட்சியப்படுத்தத் தோன்றும்.

“நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்” என்ற தைரியம் வந்துவிடும்.

சிறிதளவு இன்பமும் பெரியதாகத் தோன்றும்; பேராசை அடிபட்டுப் போகும்.

பல ஆண்டுகள் தவம் செய்து பெறுகிற ஞானத்தை விட இந்த ஞானம் அழுத்தமானது; ஆழமானது; உண்மையானது; உறுதியானது.

ஆகவே, லௌகீக வாழ்க்கைதான் அதில் ஏற்படும் இன்ப துன்பங்கள்தான் ஒரு மனிதனைப் பக்குவம் பெற்ற ஞானியாக்குகின்றன.

எனக்கு இதிலும் அனுபவம் உண்டு.

என் ஞானம் என்பது என் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து திரட்டப் பெற்ற தொகுப்பு நூல்.

பூனையின் மலமே புனுகு ஆவதுபோல, மோசமான அனுபவங்களே உண்மையான அறிவை உண்டாக்குகின்றன.

அனுபவங்களே இல்லாமல், இருபது வயதிலேயே ஒருவன் பற்றற்ற வாழ்க்கையைத் தொடங்கினால், அடுத்துச் சில ஆண்டுகளிலேயே அவன் லௌகீக வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவான்!

இல்லையேல் கள்ளத்தனமான உறவுகளில் இறங்குவான்.

அந்தத் துறவு போலித்தனமானது.

அண்ணா ஒரு முறை சொன்னதுபோல் “படுக்கையில் படுக்க வேண்டும்; பாம்பு வர வேண்டும்; கடிக்க வேண்டும்; உயிர் துடிக்க வேண்டும், ஆனால் சாவு வரக்கூடாது” இப்படித் தினமும் ஒருவனுக்கு நேர்ந்தால், பாம்பே அவனுக்கு வேடிக்கையான ஜந்து ஆகிவிடும்!

பிறகு அது வருமென்று தெரிந்தே அவன் படுப்பான்.

“கடிக்கும் என்று தெரிந்தே தயாராயிருப்பான், கவலைப்பட மாட்டான்”.

ஸ்ரீ ராம்சந்த்ரஜி கூறும் `லௌகீக வாழ்க்கையில் `தவம்’ என்பது இதுதான்.

யார் யாருக்கு நான் சோறு போட்டேனோ, அவர்கள் எல்லோரும் என் கையைக் கடித்திருக்கிறார்கள்.

அதிலிருந்து யாருக்குப் போடலாம், யாருக்குப் போடக்கூடாது என்ற புத்தி எனக்கு வந்துவிட்டது.

என் படுக்கையிலும் பாம்பு வந்து என்னைக் கடித்திருக்கிறது. இப்போதெல்லாம் பாம்பைப் பற்றிய பயமே எனக்கு இல்லாது போய்விட்டது.

துன்பம், துன்பம் என்று ஒவ்வொருவரும் தலையிலடித்துக் கொள்கிறார்களே! அவர்கள் அந்தத் துன்பந்தான் அவர்களுடைய குரு என்பதை மறந்து போகிறார்கள்.

கிராமங்களிலே `பட்டறி, கெட்டறி’ என்பார்கள்.

பட்டால் தான் அறிவு வரும்.

கெட்டால்தான் தெளிவு வரும்.

அறிவும் தெளிவும் வந்த பின்பு ஞானம் வரும்.

அந்த ஞானத்திலே அமைதி வரும்.

அந்த அமைதியில் பேராசை, கெட்ட எண்ணங்கள் எல்லாம் அடிபட்டுப் போகும்.

பற்று அளவோடு நிற்கும்.

உள்ளம் வெள்ளையடிக்கப்பட்டு நிர்மலமாக இருக்கும்.

அதுவே ஸ்ரீராம்சந்த்ரஜி கூறும், `லௌகீகத்தில் நாம் செய்யும் தவம்.’

“எனக்கு என்ன சீர் கொடுத்தீர்கள்!” என்று சகோதரி ஒருபக்கம் கண்ணீர் வடிப்பாள்.

“ஒரு நகையுண்டா, நட்டுண்டா?” என்று மனைவி உயிரை வாங்குவாள்.

பந்துமித்திரர்கள், நாம் வாழ்ந்தாலும் ஏசுவார்கள்; கெட்டாலும் ஏசுவார்கள்.

வறுமை ஒரு பக்கம் உடலை வாட்டும்.

அமைதியோடும் நிதானத்தோடும் இவற்றைச் சமாளித்து உள்ளத்தை ஒருமுகப்படுத்திக் கொண்டால், இந்தத் தவம்பலித்து விடும்.

எனக்கு வரும் கடிதங்களில், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகைத் துயரத்தால் விம்முவதை நான் காணுகிறேன்.

அந்தத் துயரங்களை அவர்கள் அலட்சியப்படுத்தியோ ஜீரணித்தோ தான் அமைதி
அடையவேண்டும்.

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமினென்றால் போக இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.

என்றொரு வெண்பா.

நீ வருந்தி வருந்தி அழைத்தாலும் வரமுடியாதவை வரமாட்டா?

உன்னோடு ஒட்டிக்கொள்பவை போகச் சொன்னாலும் போகா!

நினைத்து நினைத்து அழுவதேன்?

ஸ்ரீ ராம்சந்தரஜி சொல்வதுபோல், துயரங்களை ஒரு தவம் என்றெண்ணு.

லௌகீக வாழ்க்கையிலே கிடந்து உழலு.

துயரங்களின் மூலம் அனுபவங்களைச் சேகரி.

இதுதான் உலகம் என்று முடிவுக் கொள்.

இதுதான் நமக்கு விதிக்கப்பட்ட பாதை என்று அறிந்துக் கொள்.

இறைவனை வழிபடு!

காலை முதல் மாலை வரை நடந்தவற்றையெல்லாம் இரவிலே மறந்துவிடு.

மறுநாள் பொழுது மயானத்தில் விடியாது;

அமைதியில் விடியும்.

அளந்து வாழும் மனத்தின் சமநிலை திருடனுக்குக்கூடக் கிடைத்துவிடும்!

பரிதாபத்துக்குரிய கிரகஸ்தனுக்கு அது ஏன்கிடைக்காது?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பட்டினத்தார் பாடலில் பற்றி எரிந்த கழு மரம்

பத்ரகிரியார் கூறுகிறார்:

சுவாமிகள் உரைத்த மொழி, என்னை ஆத்திரக்காரனாக்கவில்லை; சிந்தனையாளனாக்கிற்று.
அரண்மனைக்குச் சென்றேன். இளங்காற்றுத் தாலாட்டும் மேன்மாடத்தில் உலாத்தினேன்.
`எந்தப் பெண்ணுக்கும் இரண்டு மனம்; சக்தி தத்துவத்தைக் கூட அது விட்டதில்லையாமே!’

நான் அப்படி நினைக்கவில்லை.

எனது பட்டத்து ராணி ஒரு தெய்வத் திருமகள். அவளுக்கு ஒரே மனம். அது முற்றிலும் என் மீதே!

இரவுக்கு ஒரே நிலவு; பகலுக்கு ஒரே ஆதவன்.

எனக்கு அவள்; அவளுக்கு நான்!

நிலா முற்றத்துச் சாய்வு மஞ்சத்தில் அமர்ந்தேன்.

காற்சலங்கை ஒலி கேட்டது. அது என் தேவதை வரும் அறிவிப்பு!

தோள் தொட்டது தென்றல்; அது அவளது கைவிரல்!

பாடிற்று ஒரு குயில்; அது அவள் பேசிய மொழி.

மெதுவாகத் திரும்பிப் பார்த்தேன். அவள் முகத்தையே உற்று நோக்கினேன்.

களங்கம் நீங்கிய பூரண சந்திரனாயிற்றே இது! இதற்கா களங்கம்? நான் நம்ப மாட்டேன்.

`பிரபு’ என்றாள் ராணி.

`தேவி!’ என்றேன்.

`சிருங்கார சதகம் பாடும் நேரத்தில், சிந்தனைக்கு வேலை என்ன?’ என்றாள்.

`சிருங்காரலயத்தில், சோகம் இழைவது உண்டா?’ என்றேன்.

`மன மயக்கம் காதல்; மதி மயக்கம் சோகம்’ என்றாள் அவள்.

`என் மதி மயங்குகிறது!’ என்றேன்.

அவள் தனது மெல்லிய பஞ்சு போன்ற இதழ்களால் என் இதழ்களில் முத்தமிட்டாள்.

என் மதி மயக்கம் நீங்கி, மன மயக்கம் அதிகரித்து விட்டது.

எனது தேவி பாரம்பரிய ராஜகுமாரி அல்ல. தாய் ஒரு நாடு; தந்தை ஒரு நாடு; அவர்கள் வாழ்ந்தது உஜ்ஜைனி. பத்து வயது முதல் நான் அவளை அறிவேன். பதினாறாவது வயதில் மணம் முடித்தேன்.

சிருங்காரத்தைப் பற்றி எனக்குச் சில விஷயங்கள் தெரியும்.

ஒரு பெண் சுகமானவளா இல்லையா என்பதை, அவளை ஸ்பரிசிக்கும் போதே நான் கண்டு கொள்வேன்.

முதல் நாளிலேயே அவளை நான் தீண்டிய போது என்னை மெய்மறக்கச் செய்தது.

பல பெண்ணைச் சந்தித்த ஒருவன்தான் சரியான பெண்ணை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

வகை வகையான பெண்ணை ரசித்தது உண்டு. ஆனால், இவ்வளவு மகிழ்ச்சியை எவளிடமும் பெற்றதில்லை. அதனால் இவளை `ராஜ மோகினி’ என்று அழைப்பது பழக்கம்.

அவள் என்னை முத்தமிட்டதும், தெள்ளிய தடாகத்தில் சுவாமிகள் கிளப்பிவிட்டிருந்த அலை ஓய்ந்து விட்டது.

நான் அவளது கழுத்தில் முத்தமிட்டேன்.

பழங்கதையானதால், பச்சையாகச் சொல்கிறேன். அவளது கன்னத்தை என் உதட்டுக்குள் இழுத்துக் கொண்டேன்.

`என் தெய்வமே…’ என்றாள்.

மதுவினை ஊற்றிக் கொடுத்தாள். அதிகம் பருகினேன். பருகப்பருக அவளது பிணைப்பு அதிகமாயிற்று. பிறகென்ன உள்ளத்து ரகசியம் வெளிவரத் தொடங்கியது.

`உனக்கு இரண்டு மனம் என்று ஒரு ஆண்டி சொன்னான்’ என்றேன்.

`யாரவன்?’ என்றாள். அழுதாள்; அரற்றினாள்.

`உங்களைத் தவிர ஒருவரை நான் மனதாலும் நினைத்திருந்தால், அந்த நெருப்பு என்னைத் தீண்டட்டும்’ என்றாள்.

காம மயக்கத்தில் கண்டுண்ட ஒருவன் அந்த இன்பத்துக்குக் காரணமானவள் என்ன சொன்னாலும் கேட்பானல்லவா? இனந் தெரியாத விழுக்காடு காமம் ஒன்றுதானல்லவா?

கள்ளருந்துவதில் உள்ள ஒரே துயரம், நாம் எதை நினைக்கிறோமோ, அதை அது வளர்த்துவிடும்.

என் மனைவிக்கு இரண்டு மனம் என்று சொன்ன அந்த ஆண்டியை, என்னவோ செய்ய வேண்டும் போல் எனக்குத் தோன்றிற்று.

பொழுது விடியும் வரையில், போக அமளியில் அவளோடு விளையாடினேன்.

பின்னாளில் மகா நிர்வாணத்திற்குப் பக்குவப்பட்ட நான், அன்று அவளது முழு நிர்வாணத்தில் மோக வசப்பட்டேன்.

என்றைக்கும் இல்லாத மகிழ்ச்சியை அன்றைக்கு அவள் எனக்குத் தந்தாள்.

காலையில், எனக்குக் கள் வெறியும், காம வெறியும் தணிந்தன. தூக்க மயக்கத்தில் சாய்ந்து கிடந்தேன். ஆனால், அவளோ ஏதோ ஒரு வெறியில் உந்தப்பட்டவள் போல் காட்சியளித்தாள்.

குளித்துவிட்டு வந்தவுடனேயே அமைச்சரை அழைத்துக் கொண்டு சிறைச்சாலைக்குச் சென்றாள்.

போகட்டும்; என்ன வேண்டுமோ செய்யட்டும் என்று நான் பேசாமல் இருந்து விட்டேன்.

இனி, சுவாமிகள் சொல்வார்கள்.

பட்டினத்தார் கூறுகிறார்:

சிறைச்சாலை ஆனால், என்ன, அறச்சாலை ஆனால் என்ன?

செங்கதிர் முளைத்ததும் என் கடன் முடிந்தது. சிவனாரைத் தொழுவது என் பணி. அன்றும் அவ்வண்ணமே தொழுது கொண்டிருந்தேன்.

நான் ஒவ்வொரு வரியாகப் பாடப் பாட, பக்கத்து அறைக் கூடங்களில் இருந்த என் சீடர்கள், `போற்றி, போற்றி!’ என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

சலங்கை ஒலி கேட்டது! உமாதேவியார் வருகிறார்களா? நான் பாட்டை நிறுத்தவில்லை.

`ஏ ஆண்டி!’ என்றார்கள் அவர்கள்.

`நான் ஆண்டியைத்தான் பாடிக் கொண்டிருக்கிறேன்’ என்றேன்.

`ஆண்டி வேறு எதனைப் பாடுவான்?’ என்றார்கள்.

`அரசர்களும் அவன் முன்னால் ஆண்டிதான்’ என்றேன்.

`உன் நெற்றியில் உள்ள சாம்பல் போல் உன் உடம்பும் ஆகும்!’ என்றார்கள்.

`தங்கள் உடம்பு தங்கத்தால் ஆனதா!’ என்றேன்.

`சந்நியாசிக் கழுதைக்கு வாய்க்கொழுப்பா?’ என்றார்கள்.

`நானும் சம்சாரக் கழுதையாக இருந்தவன் தான்’ என்றேன்.

`யாரிடம் பேசுகிறாய் தெரியுமா…?’ என்றார்கள்.

`அந்த சிவபெருமானின் ரோமக் கால்களில் ஒன்று குதித்துக் கூத்தாடுகிறது,’ என்றேன்.

`நான் உஜ்ஜைனியின் பட்டத்து ராணி!’ என்றார்கள்.

`அந்த மாகாளியும் உங்களுக்கு அடுத்தபடிதானா?’ என்றேன்.

`நான் காளி ஆனால், காளி என் கைக்குழந்தையாவாள்’ என்றார்கள்.

`காளி கைக்குழந்தையானால் நான் தாயாகித் தாலாட்டுப் பாடுவேன்!’ என்றேன்.

`உனக்கு சக்தி இருந்தால், இந்தச் சிறைச்சாலையை உடைத்து வெளியே வா! பார்க்கலாம்..’

`நான் சித்தனல்ல தாயே! பக்தன், முக்தன்!’ என்றேன்.

`கையாலாகாத கழுதைக்குப் பேச்சென்ன பேச்சு?, ஆமாம், எனக்கு கூட இரண்டு மனது என்றாயாமே?’ என்றார்கள்.

`அந்த இறைவிக்கேகூட’ என்றேன்.

`என்னைவிட உயர்ந்த ஒருத்தியை உதாரணம் காட்டி விட்டதாக நினைப்போ?’ என்றார்கள்.

நான் சிரித்தேன்.

கிடைக்கக் கூடாதவனுக்குப் பதவி கிடைத்து விட்டால், அவனுக்கு வரக்கூடாத புத்தி எல்லாம் வந்து விடுகிறது.

ஆதிக்க வெறியால் அந்த அம்மையார் உலக மாதாவை அவமதித்தார்.

நான் ஒரே வரியில் சொன்னேன்:

`காற்றடிக்கும் போது துரும்பு, மலையை விட அதிக உயரத்தில் பறக்கக் கூடும். அதனால் துரும்பை விட மலை தாழ்ந்ததாகி விடாது’.

மகாராணியாருக்கு ஆத்திரம் அதிகமாகி விட்டது.

அவர்களே கைதட்டிக் காவலர்களை அழைத்துச் சொன்னார்கள்: `நாளை காலையில் சூரியோதயத்தில் இவனைக் கழுவிலே ஏற்றுங்கள்’ என்றார்கள்.

ஆணை பிறப்பித்தவுடன் அதிகாரி ஏன் நிற்கப் போகிறார்? அவர்கள் போய்விட்டார்கள்.

நான் கலங்கிவிடவில்லை.

ஏற்கெனவே செத்து விட்டதாக நினைக்கிற ஒருவனுக்கு எப்போது சாவு வந்தாலும் அது ஒரு சடங்கு என்று தானே நினைப்பான்? ஸ்தூலத்தில் என்ன இருக்கிறது? எல்லாம் ஆத்மாவிலே அடங்கி இருக்கிறது.

பாம்பு, சட்டை கழற்றுவது போல், ஆன்மா இந்தக் கூண்டை ஒரு நாள் கழற்றி விடுகிறது.

காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த ஒரு வணிக மகன் உடம்பு, உஜ்ஜைனியில் எரிக்கப்பட வேண்டும் என்பது அந்தக் காளத்திநாதன் அருளானால், நான் யாரை, எதைத் தடுக்க?

பக்கத்துக் கூடங்களில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த என் சீடர்கள் வாய்விட்டு அழுதார்கள்.

மரணத்தைப் பற்றி எவ்வளவு சொல்லி, நான் அவர்களைப் பக்குவப்படுத்தி இருந்தென்ன? அப்படியும் அவர்கள் அழுகிறார்கள்.

சிறு வயதில் நான், திருமால் கோயிலில் கேட்ட கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

அர்ஜுனனுக்கு பகவத் கீதையை முழுக்க முழுக்க உபதேசித்து விட்டு, ரதத்தின் மேற்குடையிலே போய் உட்கார்ந்து கொண்டானாம் கிருஷ்ணன். யுத்தம் நடந்ததாம். அர்ஜுனனின் மகன் அபிமன்யு அதிலே இறந்து விட்டானாம். அர்ஜுனன் புலம்பி அழுதானாம்.

அப்போது மேற் குடையில் இருந்து பத்துச் சொட்டுக் கண்ணீர் அர்ஜுனன் தலையிலே விழுந்ததாம்.

ஆம்; கண்ணனும் அழுது கொண்டிருந்தானாம்.

உடனே அர்ஜுனன் கேட்டானாம், `கண்ணா! நான் தான் மகனுக்காக அழுகிறேன்; மரணத்தைப் பற்றிக் கவலைப்படாத நீ ஏன் அழுகிறாய்?’ என்று.

கண்ணன் சொன்னானாம். `இல்லையடா அர்ஜுனா! மனத்தைத் திடமாக வைத்துக் கொள்வது பற்றி உனக்கு இவ்வளவு நேரம் கீதை உபதேசித்தேனே, அது எவ்வளவு சீக்கிரம் வீணாகிவிட்டது!’ என்று.

அது போலவே என் சீடர்கள் இருந்தார்கள்.

நாளை கழுவிலேற்றப்பட வேண்டியவன் என்ற முறையில் ஒவ்வொரு காவலரும் மெதுமெதுவாக என்னைப் பார்த்து விட்டுப் போனார்கள்.

நான் ஆளுக்குக் கொஞ்சம் திருநீறு கொடுத்தேன்.

மறுநாள் பொழுது புலர்ந்தது.

மகாராணியின் மேற்பார்வையில் என்னைக் கழுவிலேற்றும் பணி துவங்கியது.

மகாராஜா என்ன ஆனார், என்று எனக்குத் தெரியாது. பின்னாளில் அவர் கூறியதிலிருந்து அவர் முழுக்க மதுவில் ஆழ்ந்து கிடந்ததையும், அவருக்கு மகிழ்ச்சி ஊட்ட மகாராணியாரே நான்கு பெண்களை ஏற்பாடு செய்திருந்ததையும் நான் தெரிந்து கொண்டேன்.

காவலர்கள் என்னைத் தூக்கி கழுவிலே உட்கார வைத்தபோது நான் பாடினேன்:

என்செய லாவதியாதொன்று மில்லை; இனித்தெய்வமே
உன்செய லெயென் றுணரப் பெற்றேன்; இந்த வூனெடுத்த
பின்செய்த தீவினையாதொன்று மில்லை பிறப்பதற்கு
முன்செய்த தீவினை யோலிங்ங னேவந்து மூண்டதுவே!

பாடி முடித்தபோது நான் சுய நினைவில் இல்லை.

விழித்துப் பார்த்த போது, சிறைச்சாலையில் படுக்க வைக்கப்பட்டிருந்தேன்.

இடையில் கழுமரம் தீப்பற்றி எரிந்ததாகவும், காவலர்கள் மயங்கி மயங்கி விழுந்ததாகவும், மகாராணியாரை ஒரு நாகப் பாம்பு துரத்தியதாகவும் என்னிடம் சொன்னார்கள்.

இது என்ன லீலையோ நானறியேன்!

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மனிதனின் பிறப்புகள் எத்தனை? 

`மனித உயிர்களுக்கு மறு பிறப்பு உண்டு’ என்பதை இப்போது எல்லா மதங்களுமே ஒப்புக்கொள்ளத் தொடங்கி விட்டன.

பிறப்பின் முடிவு இறப்பு- இறப்பின் முடிவு பிறப்பு.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு உயிர் பூமியிலே மீண்டும் மீண்டும் பிறக்கிறது.

ஏழு பிறப்பு என்பது தவறான வாதம்.

`எழு பிறப்பு’ என்ற வள்ளுவன் வார்த்தைக்கு, `எழுகின்ற ஒவ்வொரு பிறப்பும்’ என்பது பொருள்.

`இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும்’ என்பது பிரபந்தம்.

`ஏழேழ் பிறவி’ என்றால், `நாற்பத்தொன்பது பிறவி’ என்று அர்த்தமல்ல.

`எழுந்து வரும் ஒவ்வொரு பிறவிக்கும்’ என்பது பொருள்.

சில உயிர்கள், போன வேகத்தில் திரும்புகின்றன. சில உயிர்கள் ஓய்வெடுத்துத் திரும்புகின்றன.

புதிய வடிவங்கள் பிறந்த பின்னாலும், பழைய வடிவங்கள் கனவில் வந்து பேசுகின்றன.

இம்மையில் பக்தியைச் செம்மையாகச் செலுத்தி ஈஸ்வரனிடமே லயித்து விட்ட உயிர், பிரிந்தால் மீண்டும் அது திரும்புவதில்லை. மறு பிறப்பு என்ற துயரம் அதற்கு இல்லை.

மற்றொன்று, `சில நேரங்களில் மரணம் அடைகிற உயிர் மீண்டும் திரும்புகிறதென்றும், வேறு சில நேரங்களில் மரணம் அடைகிற உயிர் திரும்புவதில்லை என்றும், தன்னைச் சரணடையும் உயிர் எப்போது மரித்தாலும் அதற்கு மறு பிறப்பு என்ற துன்பமே இல்லை’ என்றும் பகவான் கூறுகின்றான்.

எப்போது மரிக்கின்ற உயிர், மறுபடியும் பிறந்து அவஸ்தைப்படுகின்றது?

புகை சூழ்ந்த நேரம், இரவு நேரம், கிருஷ்ண பக்ஷம், தக்ஷணாயணம் ஆகியவற்றில் இறப்பவர்கள், சந்திரனின் வழியில் செல்கிறார்கள்.

சந்திர கதியை அடைந்த எந்த உயிரும் மீண்டும் திரும்புகிறது. காரணம், சந்திரன் என்பது அகங்காரம்; சூரியன் என்பது உண்மை அறிவு.

சந்திரனுக்கு இயற்கை ஒளி கிடையாது. சூரியனுடைய ஒளியை வாங்கித் திருப்பி அனுப்புகிறான்.

சந்திரனுடைய அகங்காரத்தை தனக்குள் அடக்கிக் கொண்டவன் பரமாத்மா. அவனைச் சரணடைந்து விட்டால் இந்த மறுபிறப்பை வெல்லலாம்.

எப்போது மரணம் அடைகிறவர்களுக்கு இயற்கையிலேயே மறுபிறப்பு இல்லை?

நெருப்பு, வெளிச்சம், பகல், சுக்லபக்ஷம், உத்தராயணம் இவற்றில் மரிக்கிறவர்கள் மீளாத வழியில் சென்று ஈஸ்வரனோடு ஐக்கியமடைந்து விடுகிறார்கள். இவர்களுக்கு மறுபிறவி இல்லை.

உத்ராயணம் என்பது சூரியனின் வடதிசைப் பயணம். அதனால்தான், இறந்து போனவர்களை வடக்கே தலைவைத்துப் படுக்க வைக்கிறார்கள், முத்தியடைவதற்காக.

உயிரோடு இருப்பவர்கள் வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது என்று சொல்வதும் அதற்காகவே.

இந்தப் பிறப்பில் துன்பங்களை அனுபவித்தவர்கள் இன்னும் ஒரு பிறப்பையா விரும்புவார்கள்?

மாதா உடல்சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்

வேதாவும் கைசலித்து விட்டானேதாதா

இருப்பையூர் வாழ்சிவனே இன்னும்ஓர் அன்னை

கருப்பையூர் வாராமற் கா! – என்றார் பட்டினத்தார்

`பிறவா வரம் வேண்டும் எம்மானே’ என்று புலம்பினார் ஒருவர்.

`மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி வருத்தப்படுத்தவேண்டாம்’ – என்று வேண்டுகோள் விடுத்தார் ஒருவர்.

`அன்னை எத்தனை அன்னையோ

அப்பன் எத்தனை அப்பனோ

இன்னும் எத்தனை ஜென்மமோ?’ – என்று கலங்கினார் ஒருவர்.

மறு பிறப்பைப் பற்றிய திடமான நம்பிக்கையும், `ஐயையோ! படமுடியாதினித் துயரம்! பட்டதெல்லாம் போதும்’ என்ற அவலமும் சேர்த்து இதிலே எதிரொலிக்கின்றன.

மறு பிறப்பு இல்லாமல் இருப்பதற்கோ, அப்படிப் பிறந்தாலும் பூர்வ ஜென்மத்தைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கோ ஒரே வழி ஈஸ்வர பக்தி.

அதையும் தெளிவாகச் சொல்வதென்றால், கிருஷ்ண பக்தி. ஏனென்றால், பகவான் மட்டும் தான் மறுபிறவி இல்லாமல் இருக்க வழி சொல்கின்றான்.

எங்கள் குடும்பத்தில் நான் சந்தித்த முதல் மரணம் முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது.

எனது நாலாவது சகோதரியான காந்திமதி ஆச்சியின் மரணமே அது.

அந்தச் சகோதரி சத்தம் போட்டுப் பேசாது. அவ்வளவு அடக்கம், பொறுமை, பண்பாடு.

அவரது மரண ஊர்வலத்தின் போது லேசாக மழை பெய்தது. அந்த ஊரே அதைப்பற்றி பெருமையாகப் பேசிற்று.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன், 1962-இல் நானும் சம்பத் அவர்களும் தமிழ் தேசியக் கட்சியின் சார்பில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டபோது, மதுரை மாவட்டத்தில் ஒரு காப்பித் தோட்ட அதிபரின் வீட்டுக்குச் சாப்பிடப் போனோம்.

நான் தலைகுனிந்து சாப்பிட்டுக்கொண்டே இருந்தேன்.

ஒரு அம்மையார் சற்று அதிகமாகக் குழம்பு ஊற்றி விட்டார்.

`போதும் அம்மா!’ என்று சொன்னபடியே நிமிர்ந்து பார்த்தேன்.

என் உடம்பெல்லாம் வியர்த்து விட்டது. அப்படியே என் சகோதரியின் தோற்றம், அதே முகம், அதே மூக்குத்தி, அதே சிரிப்பு!

இது என்ன அதிசயம்! இதைவிட அதிசயம், அவர் பெயரும் காந்திமதி தான்!

பாண்டிய நாட்டில் `காந்திமதி’ என்ற பெயர் அதிகம் என்றாலும், இந்த ஒற்றுமையில் எனக்கு மறுபிறப்புத் தத்துவம் தான் தோன்றிற்று.

பகவான் ஒன்று சொல்கிறான், `மனம், உயிர், ஆத்மா மூன்றும் வேறு வேறு’ என்று.

உடம்பை விட்டு உயிர் பிரியும் போது, ஆத்மாவும் பிரிகிறது. அதனால்தான் இறந்து போனவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் போது, `அவரது ஆத்மா சாந்தியடையட்டும்’ என்கிறோம்.

மனிதனின் பாவ புண்ணியங்களை கவனிக்கிற இந்த ஆத்மா, உயிரைக் கையோடு அழைத்துக் கொண்டு மறு கூட்டிலே புகுந்து விடுகிறது.

அந்த ஆத்மா சாந்தியடைந்து விட்டால், அந்த உயிரையும் தன்னோடு வைத்துக் கொண்டு விடுகிறது.

இந்தப் பிறவியில் துன்பங்களை அனுபவித்தவர்கள், தன் வாழ்நாளிலே துன்பங்களிலிருந்து விடுதலை பெற முடியவில்லை என்றால், கடைசியாக அவர்கள் பெறக் கூடிய விடுதலை, `ஆத்ம சாந்தி’.

ஈஸ்வர பக்தி இல்லாதவனுடைய ஆத்மாவும், தற்கொலை செய்து கொள்கிறவனுடைய ஆத்மாவும் எப்போதும் சாந்தியடைவதில்லை.

மறு உலகில் அவை, பேயாய் கணங்களாய்த் திரிகின்றன. மீண்டும் இந்தப் பூமியிலே பிறந்து விட்ட இடத்திலிருந்து துன்பத்தைத் தொடருகின்றன.

ஆகவே லெளகீகத்தில் போராடிப் பார்த்து இறுதியாகத் துன்பங்களிலிருந்து விடுதலை பெற முயற்சிக்கிறவனுக்குக் கைகொடுக்கும் ஒரே மார்க்கம், பக்தி மார்க்கம்.

இங்கே மீண்டும் என் கதைக்கு வருகிறேன்.

இருபது வருஷங்களுக்கு முன்னால், என் எழுத்துக்களை நீங்கள் படித்திருப்பீர்கள். ஆண்டுகளுக்கு ஆண்டு அதிலே மாறுதலைக் கவனித்திருக்கிறீர்கள்.

இதற்குக் காரணம் என் திறமை அன்று; பக்தி மார்க்கத்திலே ஏற்பட்ட பற்றுதலே.

முன்பெல்லாம் துன்பங்களில் நடுக்கம் வரும்; தூக்கம் வராது. இப்போது வருவது போல் தூக்கம் எப்போதுமே வந்ததில்லை.

பெரிய பெரிய நிகழ்ச்சிகளைப் பற்றிக் கேள்விப்படும் போதெல்லாம் சிரிப்புத்தான் வருகிறது.

`அது இல்லை, இது இல்லை’ என்ற சிந்தனைகள் எல்லாம் போய்விட்டன.

`இருப்பது கடவுள் கொடுத்தது’ என்று இயற்கையாகவே தோன்றுகிறது.

உடல் நோயைப் பொறுத்தவரை தினமும் மாலையில் ஒரு டாக்டரைச் சந்திக்கிறேன்.

அவர் தான் டாக்டர் கிருஷ்ணன்!

அவரை ஊனக் கண்ணால் பார்க்க முடியாது; ஞானக் கண்ணால் தான் பார்க்கலாம்.

சட்டங்களிலும் இ.பி.கோ, இ.பு.கோ. ஆகியவற்றைக் கண்டு நான் பரிதாப்படுகின்றேன்; அவற்றை அலட்சியப்படுத்துகிறேன்.

நான் பயப்படுவது `ப.பு.கோ’ ஒன்றுக்குத்தான்.

அதாவது `பகவான் புரொஸீஜர் கோர்ட்’ ஒன்றுக்குத்தான்.

காரணம் என்னுடைய `புருஷன்’ இப்போது கம்பீரமாக நிற்கிறான்.

வடமொழியில் `புருஷன்’ என்றால் `ஆத்மா’ என்று அர்த்தம்.

கணவன் தான் மனைவியினுடைய `ஆத்மா’ என்பதால் தான் அவனைப் `புருஷன்’ என்று அழைத்தார்கள்.

அடிக்கடி சொல்லும் ஒன்றையே நான் மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

`ஒன்று நடந்து தான் தீரும் என்றால் அதைப் பற்றிக் கவலைப்பட்டு என்ன பயன்?’

அத்தனையையும் பகவானிடம் ஒப்படையுங்கள்.

இந்த வாழ்க்கையில் கசப்பையே இனிப்பாக்கிக் கொள்ளுங்கள்; இருட்டையே வெளிச்சமாக்கிக் கொள்ளுங்கள்; நஷ்டத்தையே லாபமாக்கிக் கொள்ளுங்கள்; எது நேர்ந்தாலும் கவலைப்படாதீர்கள்.

விதி என்ற உண்மையைப் போட்டு, அதைத் துடைத்து விடுங்கள்.

எந்தச் செய்தியையும் அமைதியாகக் கேளுங்கள்; உடம்பை அலட்டிக் கொள்ளாதீர்கள்.

யாராவது தாறுமாறாக உங்களிடம் பேசிக் கொண்டிருந்தால், `நீங்கள் சொல்லுவதே சரியாக இருக்கக்கூடும்’ என்று சொல்லி விடுங்கள்.

உங்களை `முட்டாள்’ என்று திட்டினால், `எனக்குக் கூட அந்தச் சந்தேகம் உண்டு!’ என்று கூறுங்கள்.

உங்கள் மனைவி சண்டை போட்டால், `சம்சாரத்தில் இதுதான் முக்கிய கட்டம்’ என்று கருதுங்கள்.

யாராவது உங்களை அவமானப்படுத்தினால், ஒரு அனுபவம் சேகரிக்கப்பட்டு விட்டதென்று கருதுங்கள்.

வருகின்ற துன்பங்கள் எல்லாம் ஒன்று, இரண்டு, மூன்று என்று அனுபவமாகச் சேகரித்துக் கொள்ளுங்கள்.

புதுப்புது அனுபவமாகச் சேகரியுங்கள்; ஒரே அனுபவத்திற்கு இரண்டு மூன்று பதிப்புகள் போடாதீர்கள்.

`நம்மால் ஆவது ஒன்றுமில்லை’ என்ற நினைப்பு, `நமக்கு வந்தது துன்பமில்லை’ என்று நினைக்க வைத்துச் சாந்தியைத் தரும்.

`நாட்டையே கட்டி ஆண்டவர்கள் எல்லாம் கூட கோர்ட்டை மிதிக்கும்படி விதி வைக்கிறதே!’ உனக்கும் எனக்கும் வருவது துன்பமா என்ன?



-- Edited by devapriyaji on Wednesday 30th of November 2011 07:31:10 AM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பிரார்த்தனை கீதம்

பகவான் கீதையில் ஒரு இடத்தில் சொல்கிறான், `கூடுகின்ற பெருங்கூட்டத்தில் வெறுப்புக் கொள்’ என்று.

தனிமையில் இனிமையைத்தான் அவன் அப்படிக் கூறுகின்றான்.

`தனிமை கண்டதுண்டு; அதிலே சாரம் இருக்குதம்மா’ என்றான் பாரதி.

பரபரப்பான நகர, நாகரிகத்தில் தனிமை எங்கே நமக்குக் கிடைக்கிறது?

கிராமத்து நண்பர்கள் மேல் எனக்கொரு பொறாமை உண்டு.

ஒவ்வொரு கிராமத்தைப் பார்க்கும் போதும், `நமது வாழ்க்கை இங்கேயே அமைந்திருக்கக் கூடாதா?’ என்றே நான் ஏங்குகிறேன்.

ஆயிரம் விலங்குகளுக்கு காலையும், கையையும் கொடுத்து விட்ட நிலையில், இந்த ஏக்கம் எப்போது தீரப் போகிறது?

குளுகுளுவென்று காற்றடிக்கும் ஆற்றங்கரையையும், கரையில் இருக்கும் மரங்களையும், பச்சைப் புல்வெளியையும், பறந்து செல்லும் பட்சி ஜாலங்களையும், துள்ளியோடும் கன்றுக் குட்டிகளையும், தொடர்ந்து செல்லும் பசுக்களையும், ஆயர் மகளிரின் வளைகுலுங்கும் கைகளையும், களை எடுப்போரின் கலகலப்பையும், வைக்கோற் கட்டைத் தலையில் சுமந்து வரப்பிலே போகும் விவசாயிகளையும், அழகான கிராமத்துக் கோயில் களையும் பார்க்கப் பார்க்க மனது என்ன பரவசப்படுகிறது!

எனது துன்பங்கள் அதிலே மறைகின்றன.

`மலை வாசம் போனால் என் மனதில் இருக்கும் சுமைகளெல்லாம் இறங்கி விடுகின்றன’ என்றார் ஜவஹர்லால் ஒரு முறை.

கிராமம், நகரத்திலே இருப்பவனுக்குச் சுமை தீர்க்கும் பூமியாகிறது. ஆனால் கிராமத்திலே இருப்பவனின் நிலை என்ன?

அங்கேயே உழன்று கொண்டிருப்பவனுக்கு இந்த அற்புதக் காட்சிகளும் துன்பங்கள் தானே?

துன்பத்தை மனத்திலேயே வைத்திருப்பவன், எங்கே போனாலும் துன்பம்தான்.

இறக்கி வைக்கத் தெரிந்தவன், எங்கே இருந்தாலும் இறக்கி வைத்துவிட முடியும்.

ஆனால், இறக்கி வைக்கும் இடமும் சுகமாக அமைந்து விட்டால், அது தானாகவே உன் மனதிலிருந்து இறங்கிவிடும்.

தனிமையில் உட்கார்ந்து கொண்டு, `அது என்ன ஆகுமோ, இது என்ன ஆகுமோ?’ என்று அழுகின்றவன், எங்கே உட்கார்ந்து அழுதால்

என்ன?ஆனால், இயற்கையாகவே துன்பங்களை அகற்றத் தெரிந்தவன் குளிர்ந்த சூழ்நிலையில் அவற்றை அடக்கிவிட முடியும். தனிமை – அதிலும் பலவந்தமான தனிமை – மனைவி மக்களைப் பிரித்துக் கொண்டுபோய்ச் சிறையிட்ட தனிமை – அந்தத் தனிமையிலேதான் காந்திஜியின் சிந்தனைகள் வளர்ந்தன; நேருஜி உலக வரலாறு எழுதினார்; வினோபாஜி கீதையை முழுக்க ஆராய்ந்து தெரிவித்தார். நானும் கூட இருபத்தாறு வயதில் ஒரு காவியம் எழுதி விட்டேன்.

ஞானிகள் தனிமையில் தோன்றிய தத்துவங்களே, இந்து மதத்தின் சாரம்.

பரமார்த்திக ஞானத்தைத் தெளிவாக விளக்குவதற்கு பரமஹம்ஸரின் தனிமை பயன்பட்டது.

ஆல்வாய் நதிக் கரையில் ஆதிசங்கரர் மேற்கொண்ட தனிமையே, அத்வைத சிந்தாந்தத்திற்கு ஆணி வேர்.

தனிமையாக உட்கார்ந்து சுகமாகச் சிந்தித்தால் அகக்கவலை, புறக்கவலை இருக்காது.

எங்கே தனியாக உட்கார்ந்து சிந்தித்துப்பார்.

கற்பனை புறாவைப் பறக்க விடு.

அழகான பெண் ஒருத்தியைக் காதலிப்பது போலவும், அடுக்கடுக்காகப் புகழ் மாலைகள் குவிவது போலவும், ஊரெல்லாம் உன்னைத் தேடுவது போலவும் கற்பனையை வளர்த்துக் கொள்.

அப்படியே வீடு திரும்பு; சாப்பிட்டு விட்டுத் தூங்கு. இனிமையான கனவுகள் வரும்.

சுமைகளையும், தொல்லைகளையும் பற்றிப் பயந்துக் கொண்டே படுத்தால் தூக்கம் பிடிக்காது. திடீர் திடீரென்று விழிப்பு வரும். கெட்ட கனவுகள் வரும்; அப்போது யாராவது மெதுவாகக் கூப்பிட்டால் கூடச் செவிட்டில் அடிப்பது போலிருக்கும்.

பயத்தினால் புலன்கள் மென்மையாகி விடுகின்றன. தைரியத்தினால் தான் அவை கனமடைகின்றன.

தைரியத்தை வளர்ப்பதற்குத் தனிமையைப் போல சிறந்த சாதனம் வேறெதுவும் இல்லை.

அதிலும் பசுமை நிறைந்த காடுகளில் நடந்து சென்றால் ஒரு உற்சாகமும், தைரியமும் வரும்.

அதனால் தான் ஞானிகள் தங்கள் வாழ்க்கைக்குக் காடுகளை தேர்ந்தெடுத்தார்கள்.

கட்டுப்பாடற்ற சிட்டுக் குருவிகள்; மரமேறித் தாவும் குரங்குகள்; துள்ளித் திரியும் மான் குட்டிகள்- இவற்றைக் காணும் போது உள்ளம் எவ்வளவு உற்சாகமடைகிறது!

பரபரப்பான வாழ்க்கையில் இந்த நிம்மதி ஏது?

காடுகளில் திரியும் கொடிய திருடர்களிடம் கூடக் கருணையும், அன்பும் இருக்கும்.

காரணம், அது காடு வளர்த்த மனோதத்துவம்.

தற்கொலை செய்து கொள்ள விரும்புகிறவன் கூடக் காட்டுக்குப் போனால் அந்த எண்ணத்தை விட்டு விடுகிறான்.

ஜீவாத்மா, மகாத்மா ஆவது தனிமையிலே.

அண்மையில் ஆப்பிரிக்கக் காடுகளில் வாழுகின்ற மிருகங்கள் பற்றி, நான் ஒரு ஆங்கிலப் படம் பார்த்தேன்.

அதற்கு `யானை ராஜா’ என்று பெயரிட்டு, நானே பின்னணி உரை எழுதி, முன் பகுதியையும் பின் பகுதியையும் நானே பேசி இருக்கிறேன்.

அது வெறும் படம்தான். ஆனால், அதைப் பார்த்துக் கொண்டிருந்த தொண்ணூறு நிமிஷங்களும் ஆப்பிரிக்கக் காட்டிலே உலாவுவது போலிருந்தது.

கேள்வி கேட்பாரில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகள்; அந்த ஆறுகளிலே லட்சக்கணக்கில் நாரைகள் சிறகடித்துக் கொண்டே, அவை தண்ணீர் மீது ஓடுவதும், பிறகு அணி வகுத்துக் கொண்டு பறப்பதும், வானிலே வட்ட வடிவமாக சதுர வடிவமாக அவை அணி வகுப்பதும், ஏதோ ஆயிரம் பூமாலைகளை ஆளுக்கொன்றாக எடுத்துக் கொண்டு வகை வகையாக ஆட்டுவது போலிருந்தது.

இடுப்பளவு தண்ணீரிலே அங்கேயே உட்கார்ந்திருக்க வேண்டும் போல் தோன்றிற்று.

ஓடிக் கொண்டிருக்கும் இடுப்பளவு தண்ணீரில் உட்கார்ந்திருந்தால் உஷ்ணக் கோளாறு வராது; மனம் கொதிக்காது. சாத்விகக் குணம் வரும். `போனால் போகட்டும்’ என்ற உணர்வு வரும். எந்தத் துன்பத்தையும் அலட்சியப்படுத்தும் அமைதிவரும்.

துன்பங்களை ஜீரணிப்பதற்குத் தனிமையின் இனிமையான சூழ்நிலை பெரும் உதவி செய்கிறது.

ஒன்று செய்யுங்கள்.

கிராமத்தில் இருப்பவர்கள், பக்கத்தில் இருக்கும் காட்டில் நல்ல நிழல் தரக்கூடிய மரத்தின் கீழ் உட்கார்ந்து கொள்ளுங்கள். அதுவும் ஓடுகிற தண்ணீரிலோ, குளத்துத் தண்ணீரிலோ விழுந்து குளித்த பிற்பாடு துண்டை விரித்து உட்காருங்கள்.

நகரத்தில் இருப்பவர்கள், காற்றோட்டமான தனி அறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அங்கே உட்காருங்கள்.

இதற்குக் காலை அல்லது மாலை நேரமே உகந்தது.

எதிரே ஏதாவது ஒரு தெய்வத்தின் சிலை இருந்தால் நல்லது; இல்லாவிட்டாலும் கவலை இல்லை.

எங்கே, பிரார்த்தியுங்கள்:

“பிறப்புக்கு முன்னாலும் இறப்புக்குப் பின்னாலும் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் பெருமானே! உன்னை நான் வணங்குகிறேன்.”

“மரத்தில் இருந்து உதிர்ந்த சருகு, காற்றாலே அலைக் கழிக்கப்படுவது போல், மண்ணிலே விழுந்து நானும் அலை கழிக்கப்படுகின்றேன்.”

“எனக்கு வரும் துன்பங்கள் எவையும் என்னால் உண்டாக்கப் பட்டவையல்ல. அப்படி நானே உண்டாக்கி இருந்தால், அது பூர்வ ஜென்மத்தின் தொடர்ச்சியாக இருந்தால், என் மீது கருணை வைத்து அவற்றை எடுத்துக் கொண்டு விடு.”

“நான் அரக்கனாக இருந்ததில்லை; இருக்கவும் மாட்டேன். அப்படி இருந்திருந்தால் என் அறியாமையை மன்னித்து விடு.”

“நல்லது என்று நினைத்து நான் செய்வதெல்லாம் தீமையாக முடிவதென்றால், அதற்கு உன்னைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது.”

“என் அறிவு சிறியது; உன் ஆட்சி பீடம் பெரியது.”

“அகந்தை, ஆணவம் இவற்றால் நான் தவறு செய்திருந்தால், இதுவரை நான் அனுபவித்த தண்டனை போதும்.

இனி ஒருவருக்கும் கனவிலும் நான் தீங்கிழைக்க மாட்டேன். இறைவா, எனக்கும் மற்றவர்கள் தீங்கிழைக்கா வண்ணம் அருள் செய்.”

- இப்படிப் பிரார்த்தித்துவிட்டு, கீழ்கண்ட பாடல்களைப் பாடுங்கள்:

தாய்தந்தை இச்சையினால் தாரணியிலே நான்பிறந்தேன்
நாய்பட்ட பாடெல்லாம் நான்படவோ பரம்பொருளே!

தண்ணீரைக் கூடத் தவறி மிதித்தறியேன்
கண்ணீரைச் சிந்திக் கலங்குவதேன் பரம்பொருளே!

அல்லற்பட் டாற்றாது அழுதேன் எனக்குவந்த
தொல்லையெல்லாம் தீர்த்துத் துயர்துடைப்பாய் பரம்பொருளே!

மாட்டின்மேல் உண்ணியைப்போல் மானிடர்கள் செய்கின்ற
கேட்டை எல்லாம்நீக்கிக் கிளைத்தருள்வாய் பரம்பொருளே!

தோழன்என எண்ணித் தொடர்ந்தேன்; நீயும் ஒரு
வேழம்போ லானால் விதிஎதுவோ பரம்பொருளே!

கொண்ட மனையாளும் கொட்டுகின்ற தேளானால்
பண்டுநான் செய்ததொரு பாவமென்ன பரம்பொருளே!

ஈன்றெடுத்த பிள்ளைகளும் எனக்கே பகையானால்
சான்றோர்க்கு நான்செய்த தவறெதுவோ பரம்பொருளே!

தடம்பார்த்து நான்செய்த சரியான தொழில்கூட
கடன்கார னாக்கியதே! கைகொடுப்பாய் பரம்பொருளே!

ஒருவேளைச் சோற்றை உட்கார்ந்தே உண்ணுகையில்
மறுவேளைச் சோறெனக்கு மயங்குவதேன் பரம்பொருளே!

செய்யாத குற்றமெல்லாம் செய்தேன் எனச்சொல்லி
பொய்யான வழக்கென்மேல் போடுவதேன் பரம்பொருளே!

எந்தவழக் கானாலும் என்னோடு நீயிருந்து
சொந்தமெனக் காத்துத் துணையிருப்பாய் பரம்பொருளே!

பஞ்சாட்சரம் சொல்லிப் பழகா திருந்ததற்கு
நஞ்சாய்க் கொடுத்தாய்நீ நானறிந்தேன் பரம்பொருளே!

உன்னைத் தவிரஒரு உயிர்த்துணையைக் காணாமல்
எண்ணி வதைகின்றேன்! எனைக்காப்பாய் பரம்பொருளே!

கண்ணாடித் துண்டுகள்என் காலிலே தைக்கவில்லை
கண்ணிலே தைத்தென்னைக் கலக்குவதேன் பரம்பொருளே!

எங்கும் நிறைந்தாயே எவரையும்நீ காப்பாயே
தங்குவதற் கென்வீடு தரமிலையோ பரம்பொருளே!

கங்கையிலே மூழ்கிவரக் காசுபணம் இல்லையென்று
என்கையால் விளக்கொன்றை ஏற்றுகிறேன் பரம்பொருளே!

ஏற்றுகின்ற விளக்குக்கு எண்ணெயில்லை என்றக்கால்
ஊற்றுகின்ற நெய்யாக ஓடிவா பரம்பொருளே!

ஊனக்கண் எத்தனைதான் உலகத்தைப் பார்த்தாலும்
ஞானக் குருடனுக்கு நலமேது பரம்பொருளே!

பாலூட்ட வந்தாயே பரிந்தே எனையணைத்து
தாலாட்ட வருவாயா தாயே! பரம்பொருளே!

ஆற்றில் ஒருகாலும் அறியாமை என்பதொரு
சேற்றிலொரு காலுமாகத் திரிகின்றேன் பரம்பொருளே!

எந்தக்கால் வைத்தாலும் ஏதோ தடுக்கிறது
சொந்தக்கால் இல்லைஎனத் துணிந்தேன் பரம்பொருளே!

உன்காலை வாங்கி உலாவ மறந்தபின்னர்
என்காலைக் கொண்டுநான் எதுசெய்வேன் பரம்பொருளே!

தான்போட்ட கண்ணியிலே தானே விழுந்ததுபோல்
நான்போட்டு விழுந்தேனே நலந்தருவாய் பரம்பொருளே!

சூதாடித் தோற்றவர்க்குத் துணைஇருக்க வந்தாயே
வாதாடிக் கெட்டவர்க்கு வழியொன்று காட்டாயோ!

அரக்கர் குலமெல்லாம் அன்றோ டழியவில்லை
இரக்கமில்லார் வடிவாக இன்னும் இருக்குதையோ!

பாய்விரித்துச் சோறு பல்பேர்க்கும் தந்தவனே
வாய்நிறையும் சோற்றுக்கும் வழிகாட்ட மாட்டாயா!

எத்தனையோ கேள்விகளை எழுப்பிவிட்டாய் பூமியிலே
இத்தனைக்கும் நான்ஒருவன் எப்படித்தான் பதில்சொல்வேன்!

துன்பத்தைத் தானே தொடர்ந்தெனக்கு வைத்தாய்!
இன்பத்தை எப்போது எனக்குவைப்பாய் பரம்பொருளே!

ஐயாநின் பாதம் அடியேன் மறவாமல்
மெய்யாய்த் தொழுகிறேன்! வினைதீர்ப்பாய் பரம்பொருளே!

காவல்ஒரு வில்லாகக் கருணைஒரு வேலாக
கோவில்உருக் கொண்டாயே குறைதீர்க்க மாட்டாயோ!

தூங்குகிற வேளைநீ தோன்றுவாய் கனவில்என
ஏங்குகிறேன் ஐயா! நீ எப்போது வருவாயோ!

மஞ்சளினைச் சுண்ணாம்பு மணந்தால் சிவப்பதுபோல்
நெஞ்சமெல்லாம் துன்பத்தால் நிறைந்து சிவப்பதென்ன!

பழுதறியாப் பிள்ளைஇது பாவமே செய்தாலும்
அழுதறியா வாழ்வொன்றை அளிப்பாய் பரம்பொருளே!

நெஞ்சறிய ஓர்போதும் நிறைபாவம் செய்ததில்லை
அஞ்சாமற் சொல்கின்றேன் அகம்தானே என்சாட்சி!

மாற்றார் உரிமையைநான் மனமறியக் கவர்ந்திருந்தால்
ஆற்றா தழுவதுஎன் அகக்கடமை என்றிருப்பேன்!

இந்துமதச் சாத்திரங்கள் எதையும் பழித்திருந்தால்
பந்துபடும் பாடு படுவதற்குச் சம்மதிப்பேன்!

நற்கோவில் சிலையதனை நான்உடைத்துப் போட்டிருந்தால்
தற்காலத் தொல்லைகளைத் தாங்கத் துணிந்திருப்பேன்!

அடுத்தார் மனைவியைநான் ஆசைவைத்துப் பார்த்திருந்தால்
படுத்தால் எழாதபடி பாய்விரித்துக் கிடந்திருப்பேன்!

நல்லதொரு தண்ணீரில் நஞ்சை விதைத்திருந்தால்
கல்லாய்க் கிடப்பதுஉன் கருணைஎன நினைத்திருப்பேன்!

தாயை மகனைத் தனித்தனியே பிரித்திருந்தால்
நாயையே என்னைவிட நற்பிறவி என்றிருப்பேன்!

கல்யாண மாகாத கன்னியரைப் பற்றியொரு
சொல்லாத வார்த்தையினைச் சொன்னால் அழிந்திருப்பேன்!

பருவம் வராதவளைப் பள்ளியறைக் கழைத்திருந்தால்
தெருத்தெருவாய் ஒருகவளம் தேடித் திரிந்திருப்பேன்!

நானறிந்து செய்ததில்லை; நலமிழந்து போனதில்லை;
வாய்திறந்து கேட்கிறேன் வாழவைப்பாய் பரம்பொருளே!

சக்தியுள மட்டில் தவறாமல் நாள்தோறும்
பக்திசெயப் புறப்பட்டேன் பக்கம்வா பரம்பொருளே!

மாடுமனை மாளிகைகள் மலர்த்தோட்டம் கேட்கவில்லை
பாடும்படும் என்நெஞ்சில் பாலூற்று பரம்பொருளே!

தாயும்நீ தந்தைநீ சார்ந்திருக்கும் சுற்றமும்நீ
வாயும்நீ வயிறும்நீ வரமளிக்கும் தேவனும் நீ!

நோயும்நீ மருந்தும்நீ நோவுடனே சுகமும்நீ!
ஆயும் குணளிக்கும் ஆறாவ தறிவும்நீ!

இறப்பும் பிறப்பும்நீ இருட்டும் வெளிச்சமும்நீ
மறப்பும் நினைப்பும்நீ மனக்கோவில் தேவதைநீ!

எல்லாமும் நீயே எனைப்பெற்ற பெருந்தாயே
இல்லாதான் கேட்கிறேன் இந்தவரம் அருள்வாயே!

இன்பவரம் தாராமல் இதுதான்உன் விதியென்றால்
துன்பமே இன்பமெனத் தொடர்வேன் பரம்பொருளே!

பாமர மனிதனுக்கு நான் சொல்லும் தியான யோகமே மேலே கண்டது.

ஆனால், பக்குவம் பெற்ற மனிதர்களுக்குச் சற்று கடுமையான தியான முறையைப் பகவான் கீதையிலே விளக்குகிறான்.

எப்படி உட்காருவது, உடம்பை எப்படி வைத்துக் கொள்வது, அந்தத் தியானத்தில் என்ன பயன், எந்த வகையில் மனதுக்கு நிம்மதி என்பதையெல்லாம் தெளிவுபடுத்துகிறான்.

`சஞ்சலம் மிக்க மனத்தை என்ன செய்ய முடியும்?’ என்ற அர்ஜுனனின் கேள்விக்கு பகவான் அதிலே பதில் சொல்கிறான்.

மனம் அங்கும் இங்கும் அலையும்போது, மூளையும் உடலும் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றன.

பேயாய் உலாவும் சிறுமனத்தை, மனக் குரங்கை அடக்கியாள்வதன் மூலமே மனிதனின் துன்பங்களிலிருந்து விடுதலை பெறமுடியும்.

ஆழ்ந்த தியானத்தில், அலைபாயும் நினைவுகள் அடைபட்டுப் போகின்றன.

பகவான் சொல்லும் முறைப்படி நீங்கள் தியானம் செய்ய ஆரம்பித்தால், அந்த நேரத்தில் பக்கத்திலே வெடிகுண்டு வெடித்தாலும் உங்கள் காதுக்குக் கேட்காது.

ரம்பையே எதிரிலே வந்து நின்றாலும் உங்களுக்குத் தெரியாது. விஷத்தையே உங்கள் வாயில் வைத்தாலும் அதன் கொடுமையை உணர மாட்டீர்கள். கொடிய காற்று உங்கள் நாசியில் புகுந்தாலும் உங்கள் நாசிக்கு அந்த உணர்வு இருக்காது. நெருப்பையே உங்கள் உடம்பில் அள்ளிக்கொட்டினாலும் அது உங்களைச் சுடாது.

மொத்தத்தில் ஐந்து புலன்களும் செயலற்று நிற்கும்; மனம் ஒரே சம நோக்கில் இருக்கும்.

அந்தத் தியான யோகம் உங்களின் நீங்காத கவனத்துக்கு உரியது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

துன்பத்தில் இருந்து விடுபட உத்தமர்களுடன் சேருங்கள்

`பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும்’ என்பார்கள்.

பழமொழி கேட்பதற்கு எப்படியோ இருக்கிறதா? நல்லது. ஆனால் உண்மைதான்.

யாரோடு, நீ பேசுகிறாயோ அவனுடைய நடத்தையைப் பொறுத்தே உன் புத்தி செயல்படுகிறது.

ஏன், வர்ணங்களிலேகூட ஒரு மனோதத்துவம் உண்டு.

கறுப்பு வர்ணத்தையே பார்த்துக் கொண்டிருப்பவனுக்குக் கல்மனம்; வெள்ளை நிறத்தைப் பார்த்தால் தூய்மை; பச்சை தயாள சிந்தை; மஞ்சள் மங்கலமுடையது.

வாசனையிலும் அந்தப் பேதம் உண்டு.

நறுமண மலர்களை முகரும் போது உன் மனமும், முகமும் பிரகாசிக்கின்றன.

நாற்றத்தை முகரும் போது உனக்கே அருவருப்பு.

அதுவே உனக்குப் பழக்கமாகி விட்டால், உன்னைப் பார்க்கும்போதெல்லாம் எதிரிகளுக்கு அருவருப்பு.

சகவாச தோஷமும் இதுதான்.

நான் பன்னிரண்டு வயதில் தமிழ் வித்துவான் பரீட்சையில் புகுமுக வகுப்பு எழுதினேன். அப்போது அமராவதி புதூர் குருகுலத்தில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அங்கேயே வித்துவான் பட்டப்படிப்புத் தொடங்கினார்கள். அப்போது வித்துவான் பட்டப்படிப்புக்கு இவ்வளவு ஆங்கிலப்படிப்பு வேண்டும் என்ற விதிமுறை இல்லை.

முதல் வருடம் `என்ட்ரன்ஸ்’ பாஸ் செய்தேன். அப்போது எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த ஆசிரியர் ராமநாதபுரம் வித்துவான் ராமசாமிப் பிள்ளை. அவரது எளிய தோற்றம் என்னைக் கவர்ந்தது.

அத்தோடு நான் கிராமத்துக்கு வந்துவிட்டேன்.

வித்துவான் படிப்பைத் தொடர வேண்டும் போல் தோன்றிற்று.

பக்கத்து ஊரான கீழ்ச்செவல்பட்டியில் இருந்த வித்துவான் முத்துகிருஷ்ண ஐயரிடம், தினமும் நான்கு மைல்கள் நடந்து போய்த் தமிழ் இலக்கியம் கற்றுக் கொண்டேன்.

அதையும் முழுமையாகக் கற்கவில்லை.

குருகுலத்திலும், பிறகு சென்னைக்கு வந்ததும், பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் அவர்களிடம் தான் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.

குருகுலத்தில் நான் படித்த போது அவர்தான் தலைமை ஆசிரியர்.

அவர்களிடம் நான் பாடம் கற்றுக் கொண்டேன்; பழகியும் வந்தேன்.

அந்தப் பழக்கத்தில் தான், எனக்குப் பணிவு ஏற்பட்டது.

புதுக்கோட்டை, ராயவரத்தில் ஒரு பத்திரிகையில் நான் ஆசிரியராக இருந்த போது, சில நண்பர்களின் தொடர்பு எனக்கு ஏற்பட்டது. அந்தத் தொடர்பில்தான் மதுப்பழக்கம் ஆரம்பமாயிற்று.

பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் திருமுருக கிருபானந்த வாரியாரின் தொடர்பு ஏற்பட்டது.

திடீரென்று அவர் எனக்கு ஒருநாள் டெலிபோன் செய்து, ஒரு திருக்குளத் திருப்பணிக்காக என்னைப் பார்க்க வருவதாகச் சொன்னார்.

நான் உடனே, `சுவாமி நீங்கள் வரவேண்டாம்; நானே வருகிறேன்’ என்று கூறி ஒரு நண்பரிடம் ரூபாய் ஐயாயிரம் கடன் வாங்கிக் கொண்டு, நேரே சிந்தாதிரிப் பேட்டையிலுள்ள அவரது இல்லத்திற்குச் சென்றேன்.

அவர் காலைத் தொட்டு வணங்கி, அந்தப் பணத்தைக் கொடுத்தேன்.

பிறகு அவர் சொற்பொழிவுகளைக் கேட்க ஆரம்பித்தேன். அதிலிருந்து என் போக்கே மாறி விட்டது.

1949 இல் நாத்திக நண்பர்களின் சகவாசத்தால் நாத்திகனானவன், வாரியார் சுவாமிகளின் சகவாசத்தால் `அர்த்தமுள்ள இந்துமதம்’ எழுதத் தொடங்கினேன்.

இன்று எனக்கே நான் சிறந்தவனாகக் காட்சியளிக்கிறேன்.

பஜகோவிந்தத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் மிக அழகாகச் சொன்னார்:

ஸத்ஸங்கதேவே நிஸ்ஸங்கத்வம்

நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்

நிர்மோஹத்வே நிஸ்சலத்வம்

நிஸ்சலதத்வே ஜீவன்முக்தி

நல்ல ஞானிகளுடைய தொடர்பு ஏற்பட்டால், சொந்தம் பந்தம், மயக்கம் விலகிவிடும்.

அது விலகினால், காசு பணத்தின் ஆசை விலகிவிடும்.

அந்த ஆசை விலகிவிட்டால், மனதுக்கு நிம்மதி வந்துவிடும்.

அந்த நிம்மதி வந்துவிட்டால், ஆத்மா சாந்தியடையும்.

நல்ல சகவாசத்தில் எவ்வளவு பெரிய வாழ்க்கை அடங்கிக் கிடக்கிறது!

காஞ்சிப் பெரியவர்களைப் பார்க்கும் போதெல்லாம், `நாமும் அவரது மடத்தில் ஊழியம் பார்க்கக் கூடாதா?’ என்று எனக்குத் தோன்றுகிறது.

கட்டுப்பாடற்ற வாழ்க்கை நடத்தும் நண்பர்களோடு சேர்ந்து விட்டாலோ, `இதல்லவோ வாழ்க்கை’ என்று தோன்றுகிறது.

எதைச் சார்ந்து நிற்கிறோமோ, அதன் வடிவத்தை அடைந்து விடுகிறோம்.

அதனால்தான் நான் இப்போதெல்லாம் வேடிக்கை விளையாட்டுக் கூட்டத்தில் இருந்து விலகியே நிற்கிறேன்.

சார்ந்தால் மேதைகளைச் சாருகிறேன்; இல்லையேல் தனிமையை விரும்புகிறேன்.

லண்டனில் இருக்கும் வரை கீழ்த்தரமானவன் என்று பெயர் வாங்கிய கிளைவ், இந்திய மண்ணுக்கு வந்ததும் வீரனாகி விட்டான்.

கணிகையாகத் தொழில் நடத்திய ஒருத்தி, புத்தபிரானைச் சந்தித்ததும் ஞான தீட்சை பெற்று விட்டாள்.

திருமாலை வணங்கிய சேர மன்னன், முடி துறந்து குலசேகர ஆழ்வாரானான்.

கண்ணனை நம்பிய குசேலன் குபேரனானான்.

துரியோதனன் சோற்றைத் தின்று விட்டதால் தான், சூரகர்ணன் அநியாயத்திற்கே துணை போக வேண்டி வந்தது.

சகுனியைச் சார்ந்த கெளரவர்கள் அழிந்தார்கள்; கண்ணனைச் சார்ந்த பாண்டவர்கள் வாழ்ந்தார்கள்.

அண்ணனைத் துறந்து ராமனைச் சார்ந்த விபீஷணன் அரசுரிமை பெற்றான்.

இராவணனை அண்டி நின்றார், அவனது முடிவையே பெற்றார்கள்.

ராமனைச் சார்ந்து நின்றதால், ஒரு குரங்குக்குக் கூட நாட்டிலே கோயில் தோன்றிற்று.

`சிறிய இனங்களைக் கண்டு அஞ்சுங்கள்; சேராதீர்கள்’ என்றான் வள்ளுவன்.

செம்மண்ணில் மழை விழுந்தால், தண்ணீரின் நிறம் சிவப்பு; கரிசல் காட்டில் விழுந்தால் கருப்பு.

மனிதனின் சேர்க்கையைப் பொறுத்தே மதிப்பு இதுவும் வள்ளுவன் சொன்னதே.

`உன் மனதைப் பொறுத்து உனக்கு உணர்ச்சிகள் எழலாம்; நீ சேரும் இனத்தைப் பொறுத்தே உன் யோக்கியதை தீர்மானிக்கப்படும்’ என்பது வள்ளுவன் சொல்லே.

நல்ல கூட்டத்தில் சேர்ந்தால், எல்லாப் பொருள்களும் கிடைக்கும்.

திருடர்களுடனே சேர்ந்தால், நீ சிறைச்சாலைக்குத் தப்ப முடியாது திருடாவிட்டாலும் கூட.

நல்லோர் உறவைப் போல் துணையும் இல்லை; தீயோர் உறவைப் போல துன்பமும் இல்லை.

நல்லது.

இவன் நல்லவன், இவன் கெட்டவன் என்று எப்படித் தெரிந்து கொள்வது?

அவனோடு ஒட்டாமலேயே பல நாட்கள் ஆராய்வது, ஆராய்ந்து தெளிந்த பின் உறவு கொள்வது.

`ஆராயாமல் ஒருவனை நல்லவன் என்று முடிவு கட்டுவதும் தப்பு, நல்லவன் என்று தெரிந்த பிற்பாடு அவன் மீது சந்தேகப்படுவதும் துன்பம்’ என்றான் வள்ளுவன்.

மனைவியைத் தேர்ந்தெடுக்கும் போது இருக்கும் புத்தி, மற்ற சகவாசங்களைத் தேர்ந்தெடுக்கும் போதும் இருக்க வேண்டும்.

`தீயவர்’ என்றால் தீயைப் போன்றவன் என்று அர்த்தம்.

அதற்கு எதிர்மறை என்ன?

`நல்லவர்’ என்பார்கள்; அது தவறு.

தீயைப் போன்றவர் என்பதற்கு எதிர்மறை தண்ணீரைப் போன்றவர் என்பதாகும்.

அதை `நீரவர்’ என்றான் வள்ளுவன்.

தீ சுடும்; தண்ணீர் குளிரும்.

குளிர்ச்சியான உறவுகளே, குதூகலமான உறவுகள்.

நம்பிப் பணத்தைக் கொடுத்தால் ஏமாற்றுகின்றவன், நம்பி வீட்டுக்குள் விட்டால் நடத்தை தவறுகிறவன், நம்பித் தொழிற் பங்காளியாக்கினால் மோசம் செய்கிறவன், நம்பிப் பின் பற்றினால் நட்டாற்றில் விடுகிற தலைவன்- இவர்களால்தான் பெரும் நஷ்டங்களும், துன்பங்களும் வருகின்றன.

ஆகவே, இளம்பருவத்தில் இருந்தே ஆட்களை அடையாளம் கண்டு பழகத் துவங்கினால், பல வகையான துன்பங்கள் அடிபட்டுப் போகும்.

அது மட்டுமல்ல, நீ நஷ்டப்படும் போது மளமளவென்று உதவிகளும் கிடைக்கும்.

சாதாரணமாக வழித்துணைக்குக் கூட ஒரு அயோக்கியனை நம்பக்கூடாது; ஆனால் மரண பரியந்தம் ஒரு உத்தமனை அவன் பரம ஏழையாக இருந்தாலும் நம்பலாம்.

தான்கூடச் சாப்பிடாமல், உனக்குப் பரிமாறும் ஏழைகளும் உண்டு.

உன் மேலாடையைத் திருடி வைத்துக் கொள்ளும் பணக்காரர்களும் உண்டு.

இனமும் குணமும் தான் முக்கியமே தவிரப் பணம் அல்ல இதில் முதலிடம் வகிப்பது.

முதலாளி நொடித்துப் போனபோது, அவரைத் தன் வீட்டிலேயே வைத்துச் சோறு போட்ட வேலைக்காரனைக் கண்டிருக்கிறேன்.

அவராலே பணக்காரரானவர்கள் எல்லாம், அவரைக் கைவிட்டதையும் பார்த்திருக்கிறேன்.

`இனம்’ என்பது ஜாதியைக் குறிப்பதல்ல; குணத்தைக் குறிப்பது.

`சிற்றினம்’ என்பது குணத்தால் கீழ் மக்களைக் குறிப்பது.

அவர்களிடமிருந்து அறவே விலகி, ஒவ்வொரு துறையிலும் உத்தமர்களையே சார்ந்து நின்று பாருங்கள்; பெருமளவு துன்பத்திலிருந்து விடுபடுவீர்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

உடல் நலத்தை பாதிக்கும் கோபம்

மனிதனுக்கு ரத்தக் கொதிப்பு ஏன் வருகிறது?

`மெண்டல் டென்ஷன்’ என்கிறார்கள் டாக்டர்கள்.

இதயத்துடிப்பு அதிகமாவதற்கும் அதுவே காரணம்.

உணர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க மனம் உடலைத் தாக்குகிறது. உடலின் மென்மையான ரத்தம் கொதிக்கத் தொடங்குகிறது. அந்தக் கொதிப்பு அதிகமாகி அதிகமாகி இருதயத்தைத் தாக்குகிறது.

கொழுப்புச் சத்துக்களாலும் ரத்தக் கொதிப்பு அதிகமாகும் என்றாலும், அது இல்லாதவனுக்கும் ரத்தக்கொதிப்பு வருவதற்கு `டென்ஷன்’ தான் காரணம்.

குடும்பம், தொழில், கடன் இந்த மூன்றிலேயும் டென்ஷனை வளர்க்கும் சூழ்நிலை உண்டு என்றாலும், பயங்கரமான டென்ஷன் மனதுக்கு ஏற்படுவதே பகை உணர்ச்சியால் தான்.

குடும்பக் கோபம் தணியும்; தொழிலின் கவலை தணியும்; கடன் கவலை தணியும்; ஆனால், பகை உணர்ச்சி மட்டும் சீக்கிரம் தணியாது.

ஒரு தடவை யார் மீதாவது பகை ஏற்பட்டு விட்டால், அது திடீர் திடீர் என்று தோன்றும்.

கோடைகாலத்து மேகம் போல கூடும்; விலகும்; சமயங்களில் மழைகாலத்து மேகம் போல ஏழு நாட்களுக்கு மூடிக் கிடக்கும்.

எவனையாவது உதைக்க வேண்டும் போல் தோன்றும்; அதற்கான சக்தி இருக்காது. ஆனால், ஆத்திரம் மட்டும் தணியாது.

மூடி வைத்த கண்ணாடிச் சீசாவுக்குள் அடைப்பட்ட ஆவி கொதிக்கத் தொடங்கினால், சீசா வெடித்துப் போகும்.

உள்ளுக்குள்ளேயே வெந்து கொண்டிருக்கும் பகை உணர்ச்சி எதிரியைத் தாக்காது; உன் உடலைத்தான் தாக்கும்.

பிறருக்குப் பகைவன் என்று தன்னை வரித்துக்கொண்டு விட்டவன், தானே தனக்கு எதிரியாகிறான்.

இராமன், இராவணனைப் பகையாக நினைக்கவில்லை; அதனால் அவனுக்கு இராவணனை எண்ணித் துடிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை; சீதையை எண்ணி உருகுகிற நிலைதான் ஏற்பட்டது.

இராவணனோ சூர்ப்பனகையின் போதனையால், `ராமன் பகைவனே’ என்று முடிவு கட்டிவிட்டான்.

அந்தப் பகை, அவனது மரண பரியந்தம் வரை இருந்தது.

சீதையை அடைய முயன்றான், தோற்றான்; ஆத்திரம் வளர்ந்தது.

தம்பி விபீஷணன் அவனை விட்டுப் பிரிந்தான்; இன்னும் அது வளர்ந்தது.

அனுமன் வரவால் அது அதிகரித்தது.

அமர்க்களத்து நிகழ்ச்சிகளால் அது நெருப்பாய்க் கொதித்தது.

அப்போது `அலோபதி’ மருத்துவம் இல்லை. இருந்திருந்தால், இராவணனின் ரத்தக் கொதிப்பையும் கம்பன் விவரித்திருப்பான்.

`பகைவனுக்கு அருள்வாய்’ என்று சொன்ன ஞானிகளெல்லாம் கருணையால் சொல்லவில்லை; ரத்தக்கொதிப்பு வராமல் இருக்க மருந்து சொன்னார்கள்.

பகைவனே இல்லாமல் இருப்பது எப்படி?

சில விஷயங்களை ஜீரணிக்க வேண்டும்; சில விஷயங்களை அலட்சியப்படுத்த வேண்டும்.

பெற்ற பிள்ளை ஒரு தவறு செய்துவிட்டால், அதை ஜீரணித்துப் பிள்ளையைத் திருத்து.

அடுத்தவன் உன்னைப் பற்றி அவதூறு பேசினால் அதை அலட்சியப்படுத்து.

கத்திரிக்காயை ஜீரணி; அதன் காம்பை அலட்சியப்படுத்து.

மாறாகக் காம்பை ஜீரணிக்க முயன்றால் ஜீரணமாகாது; காயை அலட்சியப்படுத்தினால் பசி அடங்காது.

`போனால் போகட்டும் போடா’ என்பது ஒரு பொதுத் தத்துவம்.

கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களுடன் அவரது வீட்டில் ஒரு நாள் நான் அமர்ந்திருந்தேன். அப்போது அந்த வீட்டுக்கு ஒரு கடன்காரர் ஜப்தி கொண்டு வந்தார்.

`என்ன?’ என்று கேட்டார் கலைவாணர்.

`அட்டாச்மெண்ட்’ என்றான் அமீனா.

`ஆகா! ஆகா! உனக்கும் நமக்கும் நல்ல அட்டாச்மெண்ட்’ என்று சிரித்தார்.

அவர் பதறவில்லை; பயப்படவில்லை; மிகச் சாதாரணமாகவே அதை எடுத்துக் கொண்டார்.

அமீனா கண்ணீர் வடித்தானே தவிர, கலைவாணர் கண்ணீர் வடிக்கவில்லை.

லண்டன் பாராளுமன்ற உறுப்பினரான ஒரு பெண்மணி, ஒருமுறை பிரதம மந்திரி சர்ச்சிலைப் பார்த்து ஆத்திரத்தோடு கத்தினாள்:

`நான் மட்டும் உமது மனைவியாக இருந்தால், என் கையாலேயே உமக்கு விஷம் கொடுப்பேன்!’ என்று.

ஆத்திரமில்லாமல் சர்ச்சில் பதில் சொன்னார்:

`அம்மணி! உங்களைப் போன்ற மனைவி எனக்குக் கிடைத்தால் விஷத்தைச் சந்தோஷமாகக் குடிப்பேன்!’ என்று.

உன்னோடு வாழ்வதை விட `விஷமே மேல்’ என்பது அதன் பொருள்.

ஆத்திரமான கேள்விகளை அமைதியாகச் சமாளித்தால் பகைவனே நண்பனாகி விடுவான்.

சமயங்களில் நாமே தவறு செய்து விடுகிறோம்; அதுவே எதிரொலிக்கும் போது ஆத்திரப்படுகிறோம்; இது மனித சுபாவம்.

ஆனால், தர்மன் ஆத்திரப்படவில்லையே!

பாஞ்சாலி துகிலுரியப்பட்ட போது, தர்மன் சபையிலே தான் இருந்தான். அவன் கோழையல்ல; ஆயினும் அமைதியாக இருந்தான். காரணம், நாம் செய்த தவறுக்குப் பிறரை நோவானேன் என்பதே.

வட்டமேஜை மாநாட்டுக்கு முழந்துண்டு கட்டி காந்தி போனபோது, வெள்ளைக்காரப் பிரபுக்கள் கேலியாகக் காந்தியைப் பார்த்துச் சிரித்தார்கள். காந்தி அமைதியாகப் புன்கைத்தார்.

இறுதியில் வென்றது அமைதிப் புன்னகையே தவிர, கேலிச் சிரிப்பல்ல.

வெல்லக் கூடிய பகையின் மீது நீ சபத
மெடுத்தால் உன் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும்.

காரணம் தன்னம்பிக்கையின் உச்சம்.

`துச்சாதனனின் தொடையைப் பிளந்து ரத்தம் குடிப்பேன்’ என்று பீமன் சபதம் செய்த போது, அவனது ரத்தக் கொதிப்பு அதிகமாகவில்லை.

காரணம், தன்னால் அது முடியும் என்ற நம்பிக்கை, `அல்டோமெட்’ மாத்திரை போல கூடவே நின்றது.

`செல்லா இடத்து சினம் தீது.’

(இதை நான் `அர்த்தமுள்ள இந்து மதம்’ மூன்றாம் பாகத்தில் `கோபம் பாவம் சண்டாளம்’ என்ற தலைப்பில் விவரித்துள்ளேன்.)

பகவான், கீதையிலே மூன்று குணங்களை விவரிக்கிறார் அல்லவா? சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம் என்று. அதிலே சத்துவ குணம் எதையும் புன்னகையோடு அலட்சியப்படுத்தும்.

ரஜோ குணம் பழி தீர்க்க நினைக்கும்.

தமோ குணம் அதை நினைத்து நினைத்து அழும்.

பின் இரண்டு குணங்களில் உன் உடல்நிலை பாதிக்கப்படும்.

முதல் குணத்தில் எதிரியே பாதிக்கப்படுவான்.

சாத்விக குணம் உள்ளவனையே, `சாது’ என்கிறார்கள்.

`சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்பார்கள்.

அடிக்கடி கோபப்படுகிறவனை ஊர் மதிக்காது.

சாதுவுக்குக் கோபம் வந்தால், `இவனுக்கா கோபம்’ என்பார்கள்.

புலன்களை அடக்கி, ஒருமுகப்படுத்தி, எதிரியையும் பரிதாபமாகப் பார்த்து அனுதாபப்படத் தொடங்கினால், பகை உணர்ச்சி அழியும்; பகைவன் பணிவான்; உள்ளம் ஒரு முகப்படும்; உடல்நிலை ஒரே சீராக இருக்கும்.

பகையிலே தாறுமாறாக வந்து விழும் வார்த்தைகள், பிறகு நட்பு வரும்போது குறுக்குச் சுவராகித் தடைகல்லாகி விடும்.

பகையில் நிதானம் வந்தால், நட்பு சந்நிதானமாகி விடும்.

அந்தச் சந்நிதானத்தில் பகைவன் பக்தனாவான்; நீ தெய்வமாவாய்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நாற்பது வயதில் படிக்க வேண்டிய பாடங்கள்

நாற்பது வயதை நீ தாண்டி விட்டால், இதற்கு முன்னாலே விளைவித்த பயிர்களை எல்லாம் அறுவடை செய்ய வேண்டியிருக்கும்.

அந்த நாள் உணவு, ஆட்டபாட்டங்கள் இவற்றின் எதிரொலி இப்போது தான் கேட்கத் தொடங்கும்.

இதற்கு முன்னால், உனக்கு மது அருந்தும் பழக்கம் இருந்திருக்குமானால், இப்போது உன் ஞாபக சக்தியை மெது மெதுவாக மேகங்கள் மூடும்.

இதற்கு முன்னால் கல்லும் உனக்கு ஜீரணமாகி இருக்கும்; இனி அரிசியும் பருப்புமே உன்னோடு சண்டை போடும்.

இதற்கு முன்னால் எதைச் சாப்பிடலாம் என்று நீ டாக்டரைக் கேட்டிருக்க மாட்டாய்; இனிக் கேட்க வேண்டி இருக்கும்.

முந்திய அத்தியாயங்களில் குறிப்பிட்டிருப்பதைப் போல், இதுவரை கீழ்கண்ட விஷயங்களை நீ கவனித்து வந்திருந்தால், இந்தப் பருவமும் உனக்கு இளமைப் பருவமே!

1. கைகள் இரண்டையும் வீசியபடி முடிந்த வரை நீண்ட தூரம் நடத்தல்.

2. வாயுப் பதார்த்தங்களைச் சாப்பிடாமல் இருத்தல்.

3. கடலைப் மாவு, கடலை எண்ணெய் ஆகியவற்றை ஒதுக்குதல்.

4. தவறான உறவுகள் கொள்ளாதிருத்தல்.

5. விழுந்து குளித்தல்.

6. இனம் அறிந்து சேருதல்.

7.இருதயத்திற்குத் துன்பம் கொடுக்கக் கூடிய தொல்லைகளில் மாட்டிக் கொள்ளாதிருத்தல்.

8. எதையும் அளவோடு வைத்திருத்தல்.

நாற்பது வயது வரை இவற்றை ஒருவன் கடைப்பிடித்தால், இப்போது அவனைப் பார்க்கிறவர்கள், `உங்களுக்கு இருபத்தைந்து வயதா?` என்று கேட்பார்கள்.

ஆயுள் எவ்வளவு என்று நிர்ணயிப்பது நம் கையில் இல்லை. ஆனால், ஆயுள் உள்ளவரை ஓடியாடிக் கொண்டிருக்கும் வித்தையில் நம்முடைய திறமையும், முயற்சியும் கூட அடங்கிக் கிடக்கின்றன.

தசரதன் அறுபதினாயிரம் மனைவியரை மணந்தது உண்மையோ இல்லையோ, அவனது வரலாற்றையும், அவன் ஆண்மை காத்ததையும் படிக்கும் போது, ஒரு ஆயிரம் மனைவியரையாவது திருப்தி செய்யக்கூடிய சக்தி அவனுக்கு நீண்ட காலம் இருந்திருக்கின்றது என்பது புலப்படுகிறது.

மனதறிந்து, புராணத்திலோ இதிகாசத்திலோ நல்ல பாத்திரங்கள் துன்பங்களை வரவழைத்துக் கொண்டதில்லை. தானே வரும் துன்பங்களை, `அவனவன் கர்மா’ என்பார்கள்.

பகவானால் கூட அவற்றைத் தவிர்க்க முடியவில்லை.

மீண்டும் உதாரணத்திற்கு, இராமாயணத்தையும் பாரதத்தையும் தான் நாம் திறக்க வேண்டிருக்கும்.

ஆகவே, நாற்பது வயதை ஒரு `எல்லைக்கல்’ என்று வைத்து, நீ வாழ்க்கையை நடத்த வேண்டும்.

நாற்பது வரையிலே ஒலி எழும்பும் வீணைகள், நாற்பதுக்கு மேலேதான் எதிரொலியைக் கேட்கத் தொடங்குகின்றன.

செய்த நன்மை, தீமைகளின் எதிரொலியும், இப்போது தான் கேட்கத் தொடங்கும்.

இதுவரை அவற்றை அலட்சியப்படுத்தக்கூடிய ரத்தம் இருந்தது; இப்போது ரத்தத்தைவிட, எதிரொலி சக்தி வாய்ந்ததாகக் காட்சியளிக்கும்.

துன்பத்தின் பரிபூரண சக்தியும், இப்போது தலையைச் சுற்றி வட்டமிடத் தொடங்கும்.

மனைவி, மக்கள், பொறுப்பு, பொருளாதார நிலை அனைத்தையும் பற்றிய கவலை, இந்தப் பருவத்தில் ஆரம்பமாகும்.

இதுவரை வாழ்க்கையை ஒழுங்காக வாழாதவனைச் சுற்றி அவை பேய் போல் நின்று கூத்தடிக்கும்.

`ஐயோ! தாங்க முடியவில்லை!’ என்ற ஓலம் இப்போது தான் ஆரம்பமாகும்.

`இதுவரை எப்படியோ வாழ்ந்துவிட்டேன். தெரியாமல் வாழ்ந்து விட்டேன். மன்னித்துக்கொள். என் துன்பங்களுக்குப் பரிகாரம் கூறு!’ என்கிறாயா? நல்லது.

பாவங்களுக்கு மன்னிப்புத் தருகிற பாதிரியார் நானல்ல என்றாலும், ஓரளவுக்குப் பரிகாரம் சொல்லக்
கூடிய பக்குவம் எனக்கு உண்டு.

நாற்பது வயது, ஞானம் பிறக்கும் வயது.

மீண்டும் நானே உதாரணமாகிறேன்.

`என்ன நீ பெரிய மேதையா! உன்னையே உதாரணமாக்கிக் கொண்டு போகிறாய்?’ என்று கேட்கிறீர்களா!

நான் பன்னிரண்டு வயதில் இருந்தே உலகத்தைப் பார்த்திருக்கிறேன். ஆகவே நான் அறிவியல் மேதை இல்லை என்றாலும், அனுபவ மேதை.

இதுவரை நான் சொல்லி வந்த எல்லா வகைத் துன்பங்களையும், நான் அனுபவித்திருக்கிறேன்.

ரத்த வேகம் என்ன செய்யும் என்பதை நான் அறிவேன்.

கள்வனாக, காமுகனாக, நாத்திகனாக, வெறியனாக, கடன்காரனாகப் பலவகையான பின்னல்களை நானே பின்னி, நானே அவிழ்க்க முயன்றிருக்கிறேன்.

உறவு, பகை இரண்டாலும் வஞ்சிக்கப்பட்டிருக்கிறேன்.

உலகத்தைப் பக்கத்தில் இருந்தும் பார்த்திருக்கிறேன்; தூரதிருஷ்டியிலும் கண்டிருக்கிறேன்.

பல நாள் பட்டினியுடன் கிடந்திருக்கிறேன்; வசதி வந்தபோது கருங்குரங்கில் இருந்து பச்சைப்பாம்பு வரை சாப்பிட்டும் பார்த்திருக்கிறேன்.

நான் `மாஸ்டர் ஆப் ஆல் சப்ஜெக்ட்ஸ்’ இல்லை என்றாலும், எத்தனை வியாதிகள் உண்டு, எத்தனை மருந்துகள் உண்டு என்பது எனக்குத் தெரியும்.

பெண்மையில் எத்தனை வகை உண்டு; எத்தனை குணம் உண்டு என்பதை நான் அறிவேன்.

துன்பங்களில் எத்தனை ரகம் உண்டு என்பதும் எனக்குப் புரியும்.

எனது நிலத்து விளைச்சலைக் கொண்டே, உனது பசியைத் தீர்க்க முயல்கிறேன்.

மூன்று வருஷங்களுக்கு முன், கவலைக்கு மருந்து என்று கருதிய நான் `பெதடின்’ போடத்தொடங்கினேன். அதைப் பற்றிப் பெருமையாக ஒரு கவிதையும் எழுதினேன்.

நாள் ஒன்றுக்கு 1200 மி.கி. பெதடின் போட்டேன்.

இருதய வியாதியால் துடிப்பவருக்கே 100 மில்லி கிராம் தான் போடுவார்கள். அந்த 100 மில்லி கிராமிலேயே அவர்கள் நான்கு நாட்கள் தூங்குவார்கள்.

நானோ 1200 மில்லி கிராம் பெதடினோடு, ஏராளமான மதுவும் அருந்துவேன்.

அதே நேரத்தில் ஈரலைக் காப்பாற்றிக் கொள்ள மாத்திரைகளும் சாப்பிடுவேன்.

என் குழந்தைகள் எல்லாம் பெருந்தலைவர் காமராஜ் அவர்களிடம் போய் அழுதன.

அப்பொழுது முதலமைச்சராக இருந்த என் அருமை நண்பர் கருணாநிதியிடம் போய் அழுதன.

காமராஜ் என்னைக் கூப்பிட்டு, `இந்த சனியனை நிறுத்தி விடேன்!’ என்றார்.

கருணாநிதியோ, `எங்களைச் சீக்கிரமாக அழ வைக்க விரும்புகிறாயா?’ என்று கேட்டார்.

பல திசைகளில் இருந்தும் பலர் புத்திமதி சொல்லத் தலைப்பட்டார்கள்.

`பல பேருக்குப் புத்தி சொல்லக் கூடிய ஒருவனுக்கு இது தேவைதானா?’ என்று ஒருநாள் நானே யோசித்தேன்.

பெதடின் பழகிக் கொண்டவர்களை, `அடிமைகள்’ என்பார்கள்.

மதுப் பழக்கத்தை யாரும் விட முடியும். ஆனால், இந்தப் பழக்கத்தை எவனும், தானே விட்டதாக உலகத்தில் வரலாறே கிடையாது.

அதிலேயும் ஒன்றரை வருஷ காலம் அதற்கு நான் அடிமையாகவே ஆகியிருந்தேன்.

திடீரென்று ஒரு நாள் ஏதோ எனக்குத் தோன்றிற்று. அது 1975-ஆம் ஆண்டு, ஏப்ரல் 29-ம் தேதி.

நேரே சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள திரு.நாகிரெட்டியார் அவர்களின் ஹாஸ்பிட்டலுக்குப் போனேன்.

நாகிரெட்டியாரின் மகளை மணந்த மாப்பிள்ளை, அந்த ஹாஸ்பிடலின் தலைமை டாக்டராக இருந்தார்.

பெத்தடினை விட்டுவிட விரும்புவதாக அவரிடம் சொன்னேன்.

`உண்மையிலேயா?’ என்று கேட்டார்.

அவர் மீது தவறில்லை. அப்படி வந்தவர்களில் சிலர் அர்த்த ராத்திரியிலேயே ஓடி விட்டார்களாம்.

நானோ, `நிச்சயமாக விட விரும்புகிறேன். எனக்குக் குழந்தைகள் அதிகம். எல்லாக் குழந்தைகளும் அழுகின்றன. இதனால் உடம்பில் என்ன எதிரொலி வந்தாலும் பரவாயில்லை!’ என்றேன்.

வசதிகள் மிக்க விஜயா ஹாஸ்பிடலில், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை விடச் சிறந்த அறைகள் உண்டு.

அவற்றிலே ஒரு அறையை அவர் எனக்காக ஏற்பாடு செய்தார்.

`இதோ பாருங்கள், உங்கள் ஆசை எனக்குப் புரிகிறது. ஆனால் இந்த அடிமைத்தனம் சீக்கிரம் விலகி விடாது. இன்றோ நாளையோ உங்களுக்கு பெதடின் போட்டுக் கொள்ள வேண்டும் போல் தோன்றினால் என்னிடம் கேளுங்கள்; வெளியிலே போகாதீர்கள்!’ என்றார்.

அன்று மாலையே என்னால் தாங்க முடியவில்லை. `ஒன்றே ஒன்று போடுங்கள்’ என்று கெஞ்சினேன். போட்டார்.

இரவிலே மறுபடியும் கேட்டேன்; மறுத்து விட்டார். அதிகாலையில் ஒரு டாக்ஸி வைத்து கொண்டு வெளியே போய் ஒரு டாக்டரிடம் போட்டுக் கொண்டு வந்துவிட்டேன்.

அவருக்கு நம்பிக்கை போய்விட்டது.

எனக்கே என்மீது கோபம் வந்தது.

`சீ! என்ன எழுதி என்ன பயன்? இந்த யோக்கியதை கூட நமக்கு இல்லாமல் போய்விட்டதே’ என்று அழுகை அழுகையாக வந்தது.

அப்போது என் பேரக் குழந்தைகள் எல்லாம் என்னைப் பார்க்க வந்தார்கள். எனக்கொரு வைராக்கியம் பிறந்தது.

மென்டல் ஹாஸ்பிடல் டாக்டர் ராமச்சந்திரன் வரவழைக்கப்பட்டார்.

அவர் என்னைக் காலைப் பலகாரம் சாப்பிட வைத்து வாலியம்-5 மாத்திரையில் இரண்டும், லிபிரியம்-10 மாத்திரையில் இரண்டும், `பைசெப்டோன்’ மாத்திரையும் கொடுத்தார்.

நன்றாகத் தூங்கினேன்.

மதிய உணவிற்குப் பிறகும் அதே மாத்திரைகள்; இரவிலும் அதே மாத்திரைகள்.

இப்படி ஏழு நாட்களுக்கு பிரக்ஞை இல்லாமல் தூங்கினேன்.

பிறகு எதிரொலிகள் ஆரம்பமாயின.

கடுமையான கால்-கை வலி; திடீர் என்று சர்க்கரைக் குறைவு; ரத்தக் கொதிப்பு ஏறுதல்-இறங்குதல்; நான் பேசுவது எனக்கே புரியாத நிலை; எழுத முடியாத மயக்கம். இதனை (With Reaction) என்பார்கள்.

ஒரு வருஷ காலம் படாத பாடுபட்ட பிற்பாடு, இப்போது ஓரளவுக்கு நான் பழைய மனிதனாகி விட்டேன்.

அதுவும் ஓரளவுக்குத் தான்.

இடையில் எத்தனையோ முறை `பெதடின்’ தாகம் வந்தது. கட்டுப்பாடாக ஒதுக்கி விட்டேன்.

இது என்னுடைய சக்தியால் அல்ல; பகவான் அருளால்.

உலகத்தில் உள்ள எந்த நன்மை தீமையைப் பற்றி நீ சொன்னாலும், அதில் ஓரளவாவது எனக்கு அனுபவம் உண்டு.

எப்போதும் நான் வெற்றியில் குதிப்பதில்லை; இப்போதும் அப்படித்தான்.

ஆனால், முன்பெல்லாம் துன்பங்கள் என்னை சுட்டெரிக்கும்; பகவான் அருளால் இப்போது அவை என்னை நெருங்க முடிவதில்லை. மிகச் சுலபமாக அவற்றை அலட்சியப்படுத்த முடிகிறது.

கடந்த காலங்களில் ஒழுங்காக வாழவில்லையே என்று வருந்துகிற, நாற்பது வயதுக்கு மேற்பட்ட நண்பர்களுக்கு என் யோசனை இதுதான்:

அலட்சியப் படுத்துங்கள்! அலட்சியப் படுத்துங்கள்!

மனித விளையாட்டில் கடைசி விளையாட்டு மரணம்! அதற்குத் தப்பியவன் எவனுமில்லை.

ஆகவே, அழுவதற்கு நேரம் ஒதுக்குவது வீண் வேலை.

இனி நாம் புதுப்பருவம் எடுக்கப் போவது, அடுத்த ஜென்மத்தில் தான்.

ஆகவே, இனி, ஜாக்கிரதையாகப் போகும் இளைஞர்களைப் பார்த்து ஏங்குவதில் பயனில்லை.

`இடுக்கண் வருங்கால் நகுக.’

தொல்லைகள் அதிகமாகும் போது கிராமத்துப் பெரியவர்களைப் போல், `எல்லாம் பகவான் செயல்’ என்று சொல்லிக் கொள்ளுங்கள்.

மேலும் மேலும் தொல்லைகள் வந்தால், `எவ்வளவு தூரம் நடத்துகிறானோ, நடத்தட்டும்,’ என்று அமைதியாகச் சொல்லுங்கள்.

மாரடைப்பு வருகிற மாதிரிச் சிந்திக்காதீர்கள்.

மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.

ஆற்றாமை என்று யார் சொன்னாலும் பரவாயில்லை; துரோகிகளைக்கூட மன்னித்து விடுங்கள்.

அது நம் கருணையினால் அல்ல; நாமும் மகாத்மா ஆவதற்கல்ல; நம் இதயத்தைக் காப்பாற்றிக் கொள்ள.

எனக்கு எப்போதுமே பெருங்கோபம் வருவது சாப்பாட்டிலே தான்.

நான் விரும்பியவாறு உணவு அமையவில்லையென்றால் அதை அப்படியே தூக்கி சமைத்தவரின் முகத்திலே கொட்டிவிடுவேன்.

இப்போதெல்லாம் பிடிக்காததை ஒதுக்கி விட்டுக் கண்களை மூடிக்கொண்டு சாப்பிட்டுவிட்டு எழுந்திருக்கிறேன்.

துன்பம் வரும்; அது வரத்தான் செய்யும். இறைவனின் இயக்கத்தில் அது சரிபாதி.

பகல் என்றால் இரவு உண்டு.

வசந்தத்தின் பிறகு கோடை.

பூமியை பகவான் ஒரு முறை காயப்போடுகிறான்; ஒரு முறை வளப்படுத்துகிறான்.

மரத்தில் இருந்து இலைகளை உதிர்க்கிறான்; தழைக்க வைக்கிறான்.

ஒரு ஜீவனுக்குப் பிறப்பைக் கொடுக்கிறான்; ஒரு ஜீவனை எடுத்துக் கொள்கிறான்.

அவனது பேரேட்டிலே வரவுக்குத் தக்கபடி செலவிருக்கிறது.

ஏழையின் கவலையைவிடப் பணக்காரனின் கவலை அதிகம்.

அடுத்தவன் நன்றாக இருப்பதாக எண்ணுவது வெறும் மயக்கம்.

`தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை

அம்மா பெரிதென்று அகமகிழ்க!’

`உனக்குக் கீழே உள்ளவர் கோடி; நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு.

என் தாயார் அடிக்கடி சொல்லுவார்கள், `நம்மிலும் தாழ்ந்து நாலாயிரம் பதினாயிரம்’ என்று.

காலுக்குச் செருப்பில்லாதவர்கள், கால் இல்லாதவர்
களைப் பார்த்து ஆறுதலடையுங்கள்.

தலைக்கு எண்ணெய் இல்லாதவர்கள், முடி இல்லாதவர்களைப் பார்த்து ஆறுதலடையுங்கள்.

யானை மீது ஏறியவன் கீழே விழுவதைப் பார்த்து, நமக்கு யானை வேண்டாம் என்று முடிவு கட்டுங்கள்.

`உங்கள் கையில் இருந்து ஒரு விரலை எடுக்க வேண்டும்” என்று டாக்டர் சொன்னால், ஏற்கெனவே கால் எடுக்கப்பட்டவனைப் பார்த்து நிம்மதியடையுங்கள்.

`துன்பங்களிலெல்லாம் குறைந்தபட்சத் துன்பம் நமக்கு வந்ததுதான்’ என்று கருதினால், எந்தத் துன்பமும் துன்பமாக இருக்காது.

நாற்பது வயதுக்கு மேற்பட்ட பருவம்தான், மனிதன் உடம்பை அலட்டிக் கொள்ளும் பருவம்.

உடம்பிலே காற்றுப் பட்டாலும், கணை பாய்கிறது போல் தோன்றும் பருவம்.

அலோபதி மருத்துவத்தில் புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ள வியாதிகள் எல்லாம், இந்த வயதுக்கு மேலே தான் வருகின்றன.

காரணம், உடம்பு மட்டுமல்ல; மனமும் கூட.

அந்த மனத்தை – ஐம்புலன்களை, ஆத்மாவில் அடக்கச் சொன்னான் பகவான் கீதையிலே.

இன்பம்-துன்பம், இருட்டு-வெளிச்சம் இவற்றைச் சமமாக நோக்கச் சொன்னான்.

`இப்படி நோக்குகிறவர்கள் இவ்வுலகிலும், அவ்வுலகிலும் இணையற்றிருப்பார்கள்` என்றான்.

மகாகவி பாரதியின் பாடல் ஒன்று எனக்குத் தெளிவான வழி காட்டிற்று.

அது இது:

சென்றதினி மீளாது மூடரே நீர்

சென்றதையே எந்நாளும் சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில்வீழ்ந்து

குமையாதீர்…

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவீர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு

தின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

காதலின் உண்மை வடிவம்!

எனக்கு வரும் கடிதங்களில் காதல் தோல்வி பற்றிய கடிதங்கள் அதிகம்.

காதலைப் பற்றிக் காந்தியடிகளும் கூடச் சொல்லி இருக்கிறார்.

`அது தேவையானது; தவிர்க்க முடியாதது; ஆனால் அது வேறொரு பிறப்புக்கான காரியம்தான்’ என்று கூறி இருக்கிறார்.

அந்நாளிலெல்லாம் பெண் பருவம் அடைவதே, பதினெட்டு வயதுக்கு மேல்தான்.

ஆணுக்கும், பெண்ணுக்கும் காதல் என்பது உள்ளுக்குள்ளேயே தோன்றி, உள்ளுக்குள்ளேயே அடங்கிவிடும் ஒன்றாக இருந்தது.

நாகரிக உலகில் அது கடிதங்களாக விளையாடுகிறது.

பருவத்தின் உணர்ச்சி `இவள் இல்லாவிட்டால் உலகமே இல்லை’ என்று முடிவு கட்டிவிடுகிறது. அதற்காகவே மருகுகிறது; உருகுகிறது. அது நிறைவேறாமல் போனால் துன்பம் பெருகுகிறது.

உஷாவைச் சிறை எடுத்த அநிருத்தன் போலவும், சுபத்திரையை மணந்த அர்ஜுனன் போலவும், எந்தத் தடைகளையும் வென்று ஒரு பெண்ணை மணம் முடித்துக் கொள்ள முடியுமானால், நீ துணிந்து அவளைக் காதலிக்கலாம். இல்லையேல், `இவளைத்தான் மணக்கப்போகிறோம்’ என்று தெரிந்து சீதையைக் காதலித்த ராமனைப் போல், உன் காதலும் இருக்க வேண்டும்.

எனக்கும் வாழ்க்கையில் ஒரு தோல்வி உண்டு.

தங்கம் ஏற்றி வந்த நான்கு கப்பல் கவிழ்ந்து போனால் கூட அவ்வளவு துயரம் இருக்காது.

முதல் காதலின் தோல்வியில் அவ்வளவு துயரம். ஆனால், அந்தக் காதலே ஒரு மடத்தனம் என்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது.

முதலில்- என்னைவிட அந்தப் பெண்ணுக்கு ஒரு வயது அதிகம். இரண்டாவது, எனக்கு முன்னால் திருமணம் செய்ய வேண்டிய ஒரு சகோதரரும், ஒரு சகோதரியும் இருந்தார்கள். எங்களிடம் வசதி இல்லை.

இந்தக் காதல் எப்படிக் கைகூடும்?

அவளும் என்னை விரும்பினாள். நானும் அவளை விரும்பினேன் என்பதைத் தவிர, மணம் முடிக்கும் வாய்ப்பே இல்லாத ஒரு காதல் என்ன ஆகும்?

குளிக்கிறேன் என்று கல்லிலே விழுந்து விட்டுத் தண்ணீர் இல்லையே என்றால், கல்லிலே தண்ணீர் எங்கிருக்கும்?

குளிப்பதற்காக விழுவதென்றால், குளத்தில் விழ வேண்டும்.

காதலிக்கிறேன் என்றால், கல்யாணத்திற்கு வாய்ப்பு உண்டா என்று பார்த்துத்தான் காதலிக்க வேண்டும்.

குருடன், கையிலுள்ள கோலைத் தரையிலே தட்டிப் பார்க்கிறான்; அது தரையில் படாமல் போனால், பள்ளம் என்று தெரிந்து கொள்கிறான். பிறகு தரையிருக்கும் பக்கம் தட்டிப் பார்த்துத் திரும்பி நடக்கிறான்.

`காதலுக்கு கண் இல்லை’ என்பது உண்மைதான். ஆனால் அந்தக் குருடனுக்கு இருக்கும் விவஸ்தை கூடவா இல்லாமல் போயிற்று?

சூர்ப்பனகை ராமனை விரும்பியதற்குப் பெயரும் காதல்தான்; இராவணன் சீதையை விரும்பியதற்குப் பெயரும் காதல்தான்; கோவலன் மாதவியை நாடியதற்குப் பெயரும் காதல்தான்; சீதா-ராம, ராதா-கிருஷ்ண காதலர்களும் காதலர்கள்தான்.

இவற்றில் உன் காதல் எந்த ரகம்?

எந்த ரகமும் இல்லை. கண் போன போக்கிலே மனம் போய்விட்டது. அவ்வளவுதான்!

ஜெயித்து வந்த குதிரை என் குதிரை என்று நினைப்பது போல், கல்யாணம் செய்து காதலிப்பதைப் போன்ற வம்பில்லாத வேலை வேறெதுவும் இல்லை.

இல்லையென்றால், இது நிறைவேறும் என்று நன்றாகத் தெரிந்து கொண்டு, காதலைத் தொடங்கினால் தோல்வி இல்லை.

இன்னொன்றும் துணிந்து சொல்வேன்.

ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்களும் தமயந்தியை விரும்பினார்கள். அவள் கையிலே ஐம்பத்தாறு மாலைகள் இல்லை. நளனை எதிர்பார்த்தாள்; வந்தான்; மாலையிட்டாள்.

பிருதிவிராஜன்-சம்யுக்தை கதையும் இதுதான்.

அம்பிகாபதியும், அமராவதியும் கொலைக் களத்திற்கே தயாரானார்கள்.

ரோமியோவும், ஜுலியட்டும் மரணத்திற்கே துணிந்தார்கள்.

இந்தத் துணிச்சல் எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டாய்; நீ யாரைக் காதலிக்கிறாயோ அவள் உன் வீடு தேடி வந்து விட வேண்டும்;

இல்லையா?நீயாக நினைப்பது, நீயாக ஏங்குவது, பிறகு நீயாக அழுவது! என்ன கூத்து இது?

ஆகவே, திட்டம் தெரிந்து காதலி; தோல்வி இல்லை.

அப்படியும் தோல்வி வந்தால், கல்யாணம் செய்து காதலி; தோல்வி வராது.

வெறும் கற்பனா வாசகங்களையும், காவியங்களையும் படித்துவிட்டு உடம்பை அலட்டிக் கொள்வதில் என்ன லாபம்?

ஒரு ஆணுக்கு ஒரு நல்ல பெண் துணை வேண்டும். அதை நீயாகப் பார்ப்பதை விடத் தாய்-தந்தையர் பார்த்தாலென்ன?

ராமன்-சீதை திருமணத்தை வசிஷ்டரும், ஜனகரும் தான் பேசி முடித்தார்களே தவிர, அவர்களே பேசி முடிக்கவில்லை.

ஆகவே, காதல் தோல்வி என்பது மறக்கக்கூடிய துன்பம்தான் என்பது என்னுடைய கருத்து, சொல்லப்போனால் அதைத் துன்பக் கணக்கிலேயே நான் சேர்த்ததில்லை.

வேறு பெண்ணே இல்லாத உலகத்தில்தானே, நீ ஒருத்திக்காக ஏங்க வேண்டும்?

மதுரையில் இருந்து திருப்பதிக்குப் போக முடியவில்லையென்றால், அழகர் கோயிலுக்குப் போ. அதை விடுத்துத் திருப்பதியை நினைத்து அழுதால் திருமால் என்ன இறங்கி வரப் போகிறாரா?

காதல் புனிதமானது! வீணாக அதை நீ களங்கப்படுத்தாதே; பேசாமல் கல்யாணம் செய்து கொள்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டிய உணவு பழக்கம்

பன்னிரண்டு வயதுக்கு மேல் அறிவுக்கண் லேசாகத் திறக்கிறது. ஆடல், பாடல்களில் உற்சாகம் பிறக்கிறது. உயரமான இடங்களைக் கண்டால் ஏறிக் குதிக்கச் சொல்கிறது. நீரூற்றுகளில் கரணமடிக்க அவாவுகிறது. புதிய புதிய ஆடைகளிலே கவனம் போகிறது. உடலின் வலிமை நிரந்தரமானது என்றே நிச்சயமாகத் தோன்றுகிறது. சீக்கிரமே அது விலகியும் விடுகிறது.

எந்த இளைஞனும் நிதானிக்க வேண்டிய இடம் இதுதான்; ஆனால், நிதானிக்கவே முடியாத நேரமும் இதுதான்.

பக்குவமற்ற ரத்த அணுக்களின் பரிணாம வளர்ச்சி, உற்சாகத்தையே மூலதனமாக்கி விடுகிறது.

உணர்ச்சியே பிரதானமாக அங்கம் வகிக்கிறது.

இது கற்பூரப் பருவம்.

ஆசைத்தீ உடனுக்குடன் பற்றி கொள்ளும் பருவம்.

நடுத்தரக் குடும்பத்து இளைஞர்கள் மிகவும் பயத்தோடும், பொறுப்போடும் கல்வி கற்றாலும், ரத்த வேகம் அவர்களையும் விடுவதில்லை.

இந்த நாளில், ஒரு இளைஞன் எந்தெந்த உணவுகளை விரும்புகிறானோ, அவற்றிலுள்ள தீமைகளை யார் சொன்னாலும் கேட்க மாட்டான்.

கடலை மாவில் செய்த பலகாரங்களையும், வாய்வுப் பதார்த்தங்களையும் விரும்பிச் சாப்பிடுவான்.

அவற்றின் எதிரொலி நாற்பது வயதுக்கு மேல்தான் அவன் காதுகளுக்குக் கேட்கும்!

இருபது வயதிலிருந்து முப்பது வயது வரை, நான் சேலத்தில் இருந்தபோது ஒவ்வொரு இரவிலும் குறைந்தது அரைக்கிலோ உருளைக்கிழங்கு சாப்பிடுவேன். அதற்கேற்ற உழைப்பு இல்லாததால், இப்போது எனக்கிருக்கும் ஒரே துயரம்- வாய்வு துயரம்.

இளம் பருவத்தில் நடப்பதும் ஓடி ஆடுவதுமாக இருக்கிற இளைஞன், உட்கார்ந்து வேலை செய்யத் தொடங்கியதும் உடல் துன்பம் ஆரம்பமாகும்.

இளம் வயதிலிருந்து, மரண காலம் வரையிலே ஒருவன் நடந்து கொண்டே திரிந்தால், பெரும்பாலான நோய்கள் போய்விடும்.

தினசரி கால் வலிக்க மலை ஏற வேண்டும் என்று தான், இந்துக்கள் கோயில்களை மலை மீது கட்டினார்கள்.

உடம்பு வியர்க்க மலை மீது ஏறி நூற்றியொரு பிரகாரம் சுற்றி, அதன் பிறகு குளிர்ந்திருக்கும் தண்ணீர்க் குளத்தில் விழுந்து குளித்தால் அது போன்ற சுகமும், ஆரோக்கியமும் வேறெதுவும் இல்லை.

பாகற்காய், நாவற்பழம் போன்றவற்றை அந்த வயதிலிருந்தே விரும்பி அதிகமாகச் சாப்பிட்டுக் கொண்டு வந்தால், தகப்பனுக்கு சர்க்கரை வியாதி இருந்தாலும் மகனுக்கு வராது.

சந்நியாசிகளின் உணவு முறை எப்போதும் இப்படித்தான் இருக்கும்.

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமி அவர்களுக்கு இப்போது எழுபது வயதாகிறது. கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக அவர் சமயப்பிரச்சாரம் செய்து வருகிறார். ஒரு நாள் கூட அவர் உடல் நலிவு என்று ஓய்வெடுத்துக் கொண்டதில்லை.

இந்த ஆரோக்கியத்திற்குத் தெய்வ பக்தியும், உணவு முறையுமே காரணமாகும்.

ஆன்மாவிற்குச் சக்தி தரத் தெய்வ பக்தியும், உடலுக்கு வலுவு தர உணவும், ஒழுங்கும்.

அகால உணவை இளைஞன் அறவே ஒழிக்க வேண்டும்.

சந்தியா காலம், உச்சிவேளை, அர்த்த சாமம் என்ற கோயில் பூஜைக்குக்கூட குறிப்பிட்ட நேரங்கள் ஒதுக்கப்படுகின்றன.

உப்பு, உறைப்பு, புளிப்பு, இனிப்பு இவை நான்கும் குறைவாகவும், கசப்பும், துவர்ப்பும் அதிகமாகவும் சேர்த்துக் கொண்டே வந்தால், பிற்காலத்தில் உடம்பிலிருந்து அடிக்கடி ரத்தம் எடுக்க வேண்டி வராது.

காப்பி, தேநீர் அருந்துகின்ற இளைஞர்கள் காபியை உடனே நிறுத்தி விட்டுத் தேநீரை எவ்வளவு வேண்டுமானாலும் அருந்தலாம். அதில் ஐந்து வகை வைட்டமின் சத்துக்கள் இருப்பதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

உலக விஞ்ஞானிகளில், ரஷ்ய விஞ்ஞானிகள் மட்டும்தான் ஒரு தரம் செய்த முடிவை மறுதரம் மாற்றுவதில்லை.

இந்த வம்பு எதற்கென்றுதான் நம்முடைய மூதாதையர்கள் வேறு வகையான சாறுகளை அருந்தினார்கள்.

ஆவாரம்பூவைக் காயப்போட்டு இடித்துக் காப்பித்தூள் போல் வடிகட்டிப் பாலோடு சேர்த்துச் சாப்பிடுகிறார்கள்.

நாரத்தை அல்லது எலுமிச்சை இலையைக் கிள்ளிப் போட்டுத் தண்ணீரில் வேக வைத்தால், தேயிலையின் நிறத்திலேயே அதைவிடச் சுவையான பானம் ஒன்று உருவாகிறது.

இது எனது சிறைச்சாலை அனுபவம்.

மாத்திரைச் சீசாவையே பார்த்தறியாத அந்நாளைய இந்துக்கள், இன்றிருப்பது போன்ற பரவலான மார்படைப்புக்கு ஆளானதில்லை.

உடல் உழைப்பு, விழுந்து குளிப்பது, உணவு முறை இந்த மூன்று டாக்டர்கள் அந்நாளையை இந்துக்களைக் காப்பாற்றி வந்தார்கள்.

உணவும் நோயும் பற்றித் தெரிந்து கொள்ள, திருமூலர் `திருமந்திரம்’ படியுங்கள்.

எந்த உணவுக்கு என்ன குணம் என்பதை அறிந்து கொள்ளப் `பதார்த்தகுண சிந்தாமணி’ படியுங்கள்.

வாழ்க்கையின் பிற்காலத் துன்பங்களிளெல்லாம் மிகப் பெரிய துன்பம், ஆரோக்கியத்தை இழந்து விடுவதே ஆகும்.

ஆஸ்பத்திரியில் ஆறு மாதம் படுக்க வேண்டிய நிலைமை வரும்போது தான் வாயைக் கட்டாததன் தன்மை புரியும்.

கொழுப்புச் சத்துள்ள உணவுகளை நெய், முட்டை, ஆட்டிறைச்சி போன்றவற்றை இளம் பருவத்திலேயே அறவே ஒதுக்கி விட்டால் மரண பரியந்தம் ஆரோக்கியம் இருக்கும்.

துன்பங்களிலெல்லாம் பெரும் துன்பமான நோய் பிடிக்காது.

இளைஞன் முதலில் கற்றுக் கொள்ள வேண்டியது, உடலைக் காப்பாற்றிக் கொள்வது பற்றியே.

மனத் துன்பத்தை நீயே விலக்கிக் கொள்ள முடியும். உடற் துன்பம் வந்தால் ஊரூராக டாக்டரைத் தேடச் சொல்லும்.

இந்துக் குடும்பங்களில் அந்நாளில் என்னென்ன உணவு சாப்பிட்டார்கள் என்பதைக் கேட்டுத் தெரிந்து எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.

நவீன உணவு முறையிலே, கொழுப்பிலே வடிக்கப்பட்ட நெய் சேர்க்கிறார்கள். அதைவிடத் தீங்கு வேறெதுவும் இல்லை.

அடுப்பிலே விறகைப் போட்டு எரித்துச் சமைப்பதிலேயே ஒருவகை ஆரோக்கியம் இருக்கிறது. அதே ஆரோக்கியம் எண்ணெய் அடுப்பிலோ, வாயு அடுப்பிலோ கிடைப்பதில்லை.

விறகிலும் வேம்பு, புளி, கருவேல விறகுகளே ஆரோக்கியமானவை.

அடுத்தது, காம உணர்ச்சி வசப்பட்ட இளைஞன் செயற்கை முறையைப் பின்பற்றிச் சீரழிவதை காந்தி அடிகளே ஒரு முறை `ஹரிஜன்’ பத்திரிகையில் எழுதியுள்ளார். `மாணவர்க்கு’ என்று எழுதியுள்ள தொகுப்பில் இதனை விரிவாகக் காணலாம்.

வடமொழியில் இதனை `முஷ்டி மைதுனம்’ என்பார்கள்.

இந்தத் தவறின் மூலம், நெஞ்சு கூடு கட்டும்; கண் குழி விழும்; முகம் களை இழக்கும்; புத்தி மழுங்கிப் போகும்.

இது இளைஞர்களிடம் அதிகமாகப் பரவிய நேரத்தில் இதற்கு மாற்றாக `அக்கோவிரான்’ என்றொரு மருந்தே வந்தது.

`தன்னைத்தானே மகிழ்வித்தல் தாளாத பாவம்; ஆணோடு ஆண் கலப்பது அதைவிடப் பாவம்’ என்பது கிராமத்துப் பழமொழி.

பிரம்மசாரி இளைஞன் குடும்ப வாழ்க்கைக்குத் திரும்பும் போது, இந்தத் தவறு பயங்கரமாக எதிரொலிக்கும்; செயலற்ற நிலை பிறக்கும்; குடும்ப வாழ்வில் அருவருப்புத் தோன்றும்; குழந்தையும் ஆரோக்கியமாக இருக்காது.

உயர்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கட்டம் இது.

இன்று வாய்ப்புக்கள், வசதிகள் அதிகமாகி விட்டதால், இந்தச் சீர்கேடு மிகவும் குறைவு.

பிற்கால உடல் துன்பங்களில் இருந்து விடுபடப் பன்னிரண்டு வயது முதல் இருபத்தி நான்கு வயது வரையுள்ள பிரம்மசாரி இளைஞர்கள், உடலைப் பேணுவது பற்றியே நான் முக்கியமாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

இந்தக் காலத்தில் அவர்களுக்கு வரக்கூடிய மனக்கவலை எல்லாம், `அப்பா பணம் அனுப்பவில்லையே, கடன் அதிகமாகி விட்டதே’ என்பது மட்டும்தான்.

இது விரையில் தீரக்கூடிய ஒன்றே.

அதற்காக ஹாஸ்டலில் திருடுகிற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவே கூடாது.

`தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்பார்கள்.

`ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பார்கள்.

`பின்னால் நீ பழுக்கப் போவது பலாப் பழமாகவா? இல்லை காஞ்சிரம் பழமாகவா?’ என்று நிர்ணயிக்கப் போவது இந்தப் பருவம்தான்.

பால பருவத்தில் ராமன் ஏந்திப் பழகிய கோதண்டம் தான் பின் பருவத்தில் இலங்கையில் கை கொடுத்தது.

`துன்பம், துன்பம்’ என்று ஏங்கும் முதியவர்களிடம் நெருங்குவதற்கு முன்னால், இன்னும் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ளாத இளைஞனை எச்சரிப்பதே, இந்த அத்தியாயத்தின் நோக்கம்.

இந்த வயதில் நன்மை தீமைகளையும், கற்கும் கல்விகளையும் ஒழுங்காகக் கற்றுத் தேறவில்லை என்றால், `துள்ளித் திரியும் வயதில் என் துடுக்கடக்கி, பள்ளிக்கு அனுப்பி வைத்திலனே என் தந்தையாகிய பாதகனே’ என்று பாடிய பட்டினத்தார் போல் பதற வேண்டியிருக்கும்.

அறிவால் உணர்ந்து விடு; இல்லையேல் அனுபவம் காட்டிவிடும்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

குழந்தைகளைப் பழக்க வேண்டிய விஷயங்கள்…

`ஆரம்பத்தில் பிறப்பும் நம்கையில் இல்லை;
அடுத்தடுத்து நடப்பும் நம்வசம் இல்லை.’

குழந்தை பிறந்ததிலிருந்து சுமார் பன்னிரண்டு வருஷங்கள் வரை இது முழுக்கப் பொருந்தும்.

`இந்தப் பருவத்தில் எப்படி வாழ்வது’ என்று அவனுக்குச் சொல்லிப் புரியாது. ஆனால், அவனை `எப்படி வளர்ப்பது’ என்று தாய் தந்தையர்க்குச் சொல்வது முக்கியம்.

இந்தப் பருவத்தில் ஒரு குழந்தையைக் கவனமாகப் பழக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு.

ஒன்று, உணவு; மற்றொன்று, கல்வி.

சுத்தமாக இருக்கப் பழக்கி வைப்பது முக்கியம்.

கிராமத்தில் நான் வெளியே போய்விட்டு வீட்டுக்குத் திரும்பினால், கால்களை அலம்பிக் கொள்ளாமல் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டார்கள், என் தாயார்.

காலைக் கழுவும் போது, முழுப் பாதத்திலும் தண்ணீர் ஊற்றி ஒரு காலால் இன்னொரு காலைத் தேய்த்துக் கழுவச் சொல்வார்கள். முன் காலில் தண்ணீர் விழுந்து கணுக்காலில் விழாமல் போனால், `எந்த இடத்தில் தண்ணீர் படவில்லையோ அந்த இடத்தில் சனீஸ்வரன் வந்து உட்கார்ந்து கொள்வான்’ என்பார்கள். நள மகா
ராஜனை அப்படித்தான் சனீஸ்வரன் பற்றிக் கொண்டானாம்.

பேரின்பம் தருகின்றவன் பரமேஸ்வரன்; பெருந்துன்பம் தருகின்றவன் சனீஸ்வரன். இந்த இரண்டு பேருக்கு மட்டும்தான் `ஈஸ்வரன்’ பட்டம் உண்டு.

இந்த இரண்டாவது ஈஸ்வரன் எப்பொழுது ஒரு குழந்தையைப் பற்றி கொள்கிறானாம்?

தயிரும், கீரையும் அதிகம் சாப்பிட வேண்டியவை.

ஆனால், இரவிலே இவற்றைச் சாப்பிடவே கூடாது. அப்படிச் சாப்பிட்டால், `சனீஸ்வரன் பிடிப்பான்’ என்பார்கள்.

ஏன் சொன்னார்கள்?

தயிரும், கீரையும் முழு அளவில் ஜீரணமாகப் பதினெட்டு மணி நேரமாகும்.

பகலில் சாப்பிட்டால், காலையிலேயே தெளிவாக மல ஜலம் கழியும். இரவிலே சாப்பிட்டால் மறுநாள் மத்தியானம் அகாலத்தில் வயிற்றைக் கலக்கும்.

இந்துக்களின் தெய்வ நம்பிக்கை பெரும்பாலும் ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஒன்று, உடல் ஆரோக்கியம்; மற்றொன்று, ஆன்ம ஆரோக்கியம்.

பன்னிரண்டு வயது வரையில் நான் தலை முடியை கிராப்பு வெட்டிப் பழகியதில்லை. மொத்தமாக வளர விட்டு விடுவார்கள். எனக்கு என் தாயார் ஜடை போட்டு விடுவார்கள். `மலைக் கோயிலுக்கு முடி, அழகர் கோயிலுக்கு முடி’ என்று ஒவ்வொரு கோயிலுக்காக முடி வளர்க்கச் சொல்வார்கள்.

ஒரு கோயிலுக்குப் போய் முடி இறக்கிக் கொண்டு வந்தவுடனேயே, அடுத்த கோயிலுக்காக `நேர்ந்து’ விடுவார்கள்.

காரணம், பால வயதில் சேருகிற அழுக்கு, மூளையின் ஆரோக்கியத்தைப் பாதிக்கா வண்ணம் அடிக்கடி `முடி இறக்குதல்’ என்ற பெயரில் மொட்டை அடித்துக் கொண்டு இருப்பார்கள். அதையும் தெய்வத்தின் பெயரால் கட்டுப்பாடாகச் செய்வார்கள்.

புத்த சந்நியாசிகளும் சரி, சமண சந்நியாசிகளும் சரி, இந்து சந்நியாசிகளில் ஒரு பகுதியினரும் சரி தலையை மொட்டையாக வைப்பதற்குக் காரணம் இதுதான்.

அடுத்தது, புதன் கிழமையும், சனிக்கிழமையும், மறந்து விடாமல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவார்கள்.

செவ்வாயும், வெள்ளியும் பெண்களுக்கு.

உடம்பிலே உஷ்ணக் கோளாறு வராமல் இருக்க இதுவே ஒரே வழி.

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாளில் மோர் சாதமோ, தயிர் சாதமோ சாப்பிட விடமாட்டார்கள்.

குளிர்ச்சியாக எண்ணெய் தேய்த்துக் கொள்ளும்போது மேலும் குளிர்ச்சி தரக்கூடிய பொருள்களைச் சாப்பிடக் கூடாது என்பார்கள்.

தாய் தந்தையின் சுவை உணர்ச்சிதான் குழந்தையைப் பற்றிக் கொள்கிறது. அதனால்தான் குழந்தை கருவில் இருக்கும் போது தாய் பத்தியமாக இருக்கிறாள். குழந்தை பிறந்த பிறகும் பெற்றோர் உணவு முறையைக் கட்டுப்பாடாகக் கடைப்பிடித்தால், குழந்தைக்கும் அதே பழக்கம் வரும்.

அதோடு உணவு நேரத்தைப் பற்றிய உணர்ச்சியையும் குழந்தைக்கு உண்டாக்க வேண்டும்.

காலையில் ஆறு மணியடித்தால், `ஆறு மணி, ஆறு மணி எழுந்திரு’ என்று எழுப்ப வேண்டும்.

காலைக் கடன்களை முடிக்க வைக்க வேண்டும்

எட்டு மணியடித்ததும், `எட்டு மணி, எட்டு மணி பலகாரம்’ என்று அவசரப்படுத்த வேண்டும்.

பள்ளிக்குச் சென்று திரும்பியதும், `ஒரு மணி, ஒருமணி’ என்று சாப்பாட்டுக்கு அவசரப்படுத்த வேண்டும்.

இரவிலே `எட்டு மணி, எட்டு மணி’ என்று, துரிதப்படுத்த வேண்டும்.

பல வருஷங்கள், இந்த மணியைப் பற்றிய உணர்ச்சி ஒரு குழந்தைக்குப் படிந்து விட்டால், உடம்புக்கே இது பழக்கமாகி விடும்.

அகால உணவை அந்த உடம்பு ஏற்க மறுக்கும்.

காலம், ஆரோக்கியமான உணவு, அதன் அளவு இந்த மூன்றையும் குழந்தையின் உடற் பழக்கமாக ஆக்கிவிட வேண்டும்.

படிப்பு என்பது, இயற்கையாகவே சில குழந்தைகளுக்கு வரும்; சில குழந்தைகளுக்கு வராது. வராத குழந்தையை உதைத்துப் படிக்க வைப்பது பயன் தராது.

`படிக்காவிடில் வாழ்க்கை இருண்டு போகும்’ என்று அடிக்கடி சொல்வதன் மூலம், கல்வியைப் பற்றி ஒரு உணர்ச்சியை உண்டாக்கலாம்.

ஒழுங்கான பழக்க வழக்கங்களை மட்டும் ஒரு குழந்தைக்கு உண்டாக்கி விட்டால், பிறகு அது எந்தத் துறையில் ஈடுபடுவதையும் அனுமதித்து விடலாம். ஏதாவது ஒரு துறையில் அது முன்னேறி விடும்.

பின்னாளில் அதற்கு வரக்கூடிய உடல் துன்பம் மனத் துன்பம் இரண்டில் இருந்தும், பெற்றோர் அந்தக் குழந்தையை ஓரளவு காப்பாற்றிவிட முடியும்.

`வறுமை நிறைந்த வீட்டில் பெரும்பாலும் அகால நேரத்தில்தானே உணவு கிடைக்கும்’ என்ற கேள்வி எழும்.

அகாலத்தில் கிடைக்கும் உணவைக் கூடச் சூடாக்கிக் காலத்தில் சாப்பிடப் பழக்க வேண்டும்.

`கல்வி கற்க முடியாதே’ என்பீர்கள்.

வறுமையைவிடச் சிறந்த பள்ளிக்கூடம் வேறெதுவும் கிடையாது.

நான் சொல்வது நம்மால் ஆகக்கூடிய காரியங்களை மட்டுமே.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நிம்மதி: அது தெய்வத்தின் சந்நிதி

ஒருவன் பணக்காரனோ, ஏழையோ, எங்கும் புகழ் பெற்றவனோ, காதவழி கூடப் பெயரில்லாதவனோ, எவனாக இருந்தாலும் அவனவன் உள்ளத்திலும் ஒரு நெருப்பு எரிந்து கொண்டே இருக்கிறது.

அந்த நெருப்பின் ஜுவாலை கூடலாம், குறையலாம். குறைந்த பட்சம் புகை மண்டலமாவது மண்டிக் கிடக்கிறது.

ஒவ்வொரு நெஞ்சிலும் ஏதேனும் ஒரு வடு விழுந்திருக்கிறது.

ஒரு வேளையாவது மனிதன் மூச்சு, அனல் மூச்சாக இறங்குகிறது.

அவலம், ஆதங்கம், ஏக்கம், தோல்வி, குத்தல், குடைச்சல்.

ஒவ்வொரு மனிதனும், மரணத்தைப் பற்றி ஒரு முறையாவது சிந்திக்கிறான்.

`இதைவிடச் செத்துப்போவது நல்லது கடவுளே’ என்று நூற்றுக்குத் தொண்ணூறு பேர் சொல்லியிருக்கிறார்கள்.

`போதுமடா சாமி’ என்று அலுத்துக் கொள்ளாதவர்களே இல்லை.

`என்னை நிம்மதியாக இருக்க விடுங்களேன்’ என்று ஒவ்வொரு குடும்பஸ்தனும் சத்தம் போட்டிருக்கிறான்.

நிம்மதி: அது தெய்வத்தின் சந்நிதி.

துன்பம்: அது சாத்தானின் சந்திதி.

சாத்தானின் சந்நிதியில் இருந்து நீங்கள் தெய்வத்தின் சந்நிதிக்குப் போக விரும்புகிறீர்களல்லவா?

வாருங்கள்! உலகத்தின் மூலத்தைக் காண்பதற்கு முன்னால், துயரத்தின் மூலத்தைக் காணலாம்.

துன்பம் மொத்தத்தில் இரண்டு வகையாக வருவது.

ஒன்று, மனிதன் தானாகவே கை கால்களை மாட்டி இழுத்துக் கொள்வது; மற்றொன்று, அவனுக்குச் சம்பந்தமில்லாமலேயே விதி விளையாடுவது.

இரண்டாவது வகையில் அவனுக்குச் சம்பந்தமில்லையாயினும், விதி அவன் மூலமாகவே செயல்படுகிறது.

விளையாட்டிலே நீ கீழே விழுந்து காலை ஒடித்துக் கொண்டால், அது விதியின் செயல்தான். ஆனால், உன்னையே விளையாடச் சொல்லி, நீயாகவே விழுந்து கால் ஒடியும்படி அது வைத்து விடுகிறது.

ஒரு பெண்ணை நீ காதலித்து, அந்தக் காதலே துயரமாகி விடுமானால், விதி உன் கண்களிலிருந்து விளையாடி இருக்கிறதென்று பொருள்.

சரியான தொழில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அது தவறானதாகிக் கையைச் சுட்டுக்கொள்ள நேருமானால், விதி உன் மூளையில் நின்று விளையாடி இருக்கிறதென்று பொருள்.

ஒவ்வொரு சிக்கலிலும், பின்னலிலும் விதியின் பங்கு பெரியது.

நீ சாப்பிடும் சாப்பாட்டில் பல்லி எச்சமிட்டு நீ நோய் வாய்ப்பட நேர்ந்தால், உனக்குச் சம்பந்தமில்லாமல் விதி செயல்பட்டதாகப் பொருள்.

`இது என்ன செய்துவிடப் போகிறது’ என்று ஏதாவதொரு தவறான வழியில் நீ இறங்கிவிட்டால், அதில் உன் செயல் முக்கால் பங்கு, விதி கால் பங்கு.

ஆகவே, ஒவ்வொரு துன்பத்திற்கும் ஒரு பின்னணி இருக்கிறது.

அதனால்தான், புத்தி தாமதமாக உதயமாகியது.

இந்தத் துன்பங்களைக் களைவதற்கு வழி என்ன?

ஒரே வரியில் சுலபமாகச் சொல்வதென்றால், சித்தர்களும், ஞானிகளும் சொன்னது போல் பந்தம், பாசம், உடமைகள் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு, `வீடு நமக்குண்டு திருவாலங்காடு, நிமலர் தந்த ஓடுண்டு அட்சய பாத்திரம்’ என்று கோவணத்தோடு ஓடி விடுவதுதான் ஒரே வழி.

ஆனால், லெளகீகத்தில் இருப்பவனுக்கு இப்படியொரு யோசனையைச் சொல்வதை விட மடத்தனம் வேறு இருக்க முடியாது.

ஏற்படும் பிணைப்புகளை உறுதி செய்துகொண்டே நிம்மதியாக வாழ்வதற்கு வழி செய்வதுதான், பயனுள்ளதாக அமையும்.

மனிதன் அனுபவிக்க விரும்பும் பொருள்களில் இருந்து அவனை அப்புறப்படுத்துவதும் சுலபமான காரியமல்ல.

எல்லோரையும் அப்படி அப்புறப்படுத்தி விட்டால், உலக இயக்கங்கள் ஸ்தம்பித்துப் போகும்.

ஆகவே, வாழ்க்கை நடைமுறைகள் பற்றிய சில எச்சரிக்கைகளை, வலிமையான உள்ளத்தை அவனுக்குத் தந்து, இன்பத்தோடு கலந்து வரும் துன்பங்களைக் களைந்தெடுக்க வழி காண்பதே நல்லது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இறைவனின் நீதிமன்றங்கள் 

மனித வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன.

வானிலும், மண்ணிலும் பல்வேறு கோளங்கள் இயங்குகின்றன.

மனித உடம்பிலிருக்கும் ஆயிரக்கணக்கான நரம்புகள் போல், வாழ்க்கையில், ஆயிரக்கணக்கான சாலைகள் ஒன்றையொன்று வெட்டிக் கொண்டு போகின்றன.

குளங்களில் அலைகள் ஒன்றிலிருந்து பத்தாக, பத்திலிருந்து நூறாகக் கிளைத்துக் கொண்டே செல்கின்றன.

எங்கே தொடக்கம், எங்கே முடிவு என்பது ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவு சிக்கல்களையும் விசாரித்துத் தீர்ப்பு வழங்க ஒரு நீதிமன்றம் போதாது.

மற்ற மதங்களில் `சுப்ரீம் கோர்ட்’ மட்டுமே இருக்கிறது.

ஒரே நாயகனுடைய விசாரணைக்கு ஒரு கோடி வழக்குகளும் வைக்கப்பெறுகின்றன.

அதனால் வழக்குகள் பைசலாவதில் தாமதமாகின்றன.

வழக்கின் தரத்திற்கேற்ப பெஞ்சு கோர்ட்டுகளும், செஷன்ஸ் கோர்ட்டுகளும், உயர்நீதி மன்றங்களும், சுப்ரீம் கோர்ட்டும் அவற்றைப் பகிர்ந்து கொண்டு விசாரிப்பதை பூமியில் நாம் பார்க்கிறோம்.

இந்த அடிப்படையில் தான், இந்து மதத்தில் `இறைவனின் நீதிமன்றங்’களும் அமைந்து இருக்கின்றன.

`பெஞ்ச் கோர்ட்’ நீதிபதிகளாகச் சில தேவதைகள்.

`மொபைல் கோர்ட்’ நீதிபதிகளாகச் சில தேவதைகள்.

அப்படியே படிப்படியாக விசாரிக்கும் தெய்வங்கள்.

இவற்றில் சிவன், பிரம்மா, விஷ்ணு என்ற அமைப்பு `சுப்ரீம் கோர்ட்’ அமைப்பாகும்.

கண்ணன், முருகன், விநாயகர் என்ற அமைப்பு உயர் நீதிமன்ற அமைப்பாகும்.

காளியம்மன், மாரியம்மன் என்ற அமைப்பு செஷன்ஸ் கோர்ட் அமைப்பாகும்.

ஊருக்கு ஊர் காணப்படும் குட்டித் தேவதைகள் அமைப்பு `மாஜிஸ்திரேட் கோர்ட்’ அமைப்பாகும்.

இறந்து போன மூதாதையர் `பெஞ்ச் கோர்ட்’ நீதிபதிகளாவர்.

குட்டிச் சாத்தான் போன்றவை, மொபைல் நீதிபதிகளாகும்.

எண்ணிப் பார்க்கும்போது, இயற்கையான ஒரு மதத்தின் நிலைக்குத் தேடிக் கொண்ட செயற்கையான கற்பனை போலத் தோன்றும்.

ஆனால், வழக்குகள் பைசலாகும் முறையை விவரிக்கும் போது இது எவ்வளவு உண்மை என்பது தெரியவரும்.

சிவனையோ, விஷ்ணுவையோ வணங்கி சீக்கிரம் தீர்ப்புப் பெற்றவர் யாருமில்லை.

ஏறவேண்டிய அளவு படிக்கட்டுகளில் ஏறி இறங்கிய பின்னால், காலந்தாழ்ந்து அவர்கள் தீர்ப்பு கைக்குக் கிடைக்கிறது.

கண்ணன், முருகன், விநாயகர் போன்ற உயர்மன்ற நீதிபதிகள் ஏற்கெனவே இருக்கும் சட்டங்களுக்குப் `புது ரூலிங்’ கொடுக்கிறார்கள்.

காலத்தால் மாறுகின்ற நியாயங்கள், இந்த ரூலிங்கின் விளைவாகத் தோன்றியவையே.

இந்தத் தொடர் கட்டுரையில் ஒவ்வொரு நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டுத் தீர்ப்புகளைக் காட்டுகின்றேன்.

உதாரணத்திற்கு, தலைகீழாக நடந்து எத்தனை படிக்கட்டுகள் ஏறிக் காரைக்கால் அம்மையார் `சுப்ரீம் கோர்ட்’ தீர்ப்புப் பெற்று முக்தியடைந்தார் என்பதைக் குறிப்பிடலாம்.

இதுபோன்ற பல செய்திகள்.

இந்தத் தொடர் கட்டுரையை இப்படி வரிசைப்படுத்திக் கொள்கிறேன்.

1. மொபைல் கோர்ட்
2. பெஞ்ச் கோர்ட்
3. மாஜிஸ்திரேட் கோர்ட்
4. செஷன்ஸ் கோர்ட்
5. ஹைகோர்ட்
6. சுப்ரீம் கோர்ட்

மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு வரும் பெரிய வழக்குகள் செஷன்ஸுக்கு `கமிட்’ செய்யப்படுகின்றன.

அங்கே தீர்ப்புப் கிடைத்ததும் `அப்பீல்’ செய்யும் உரிமையோடு (Right to Appeal) ஹைகோர்ட்டுக்கு அப்பீல் செய்யப்படுகின்றது.

அங்கேயும் தீர்ப்பு ஒரே மாதிரி இருந்தால், `அப்பீல்’ செய்ய அனுமதி கேட்டு, (Leave to Appeal) சுப்ரீம் கோர்ட்டிடம் அப்பீல் செய்யப்படுகின்றது.

சட்டத்திலுள்ள நடைமுறை, தர்மத்தில் எப்படி செயல்படுகின்றது?

சமயங்களில் சட்டம், தர்மத்திற்கு விரோதமாக இருக்கக்கூடும். ஆனால், தர்மம் சட்டத்திற்கு நியாயமாகவே இருக்கிறது.

கலவர வழக்கில் சில பேருக்கு இரண்டு வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கிறார் மாஜிஸ்திரேட்.

சில சமயங்களில், கொலை வழக்குக்கே இரண்டு வருடம் தண்டனைதான் கிடைக்கிறது செஷன்ஸில்.

அங்கே சந்தேகத்தின் பலன், எதிரிக்கு அளிக்கப்படுகிறது.

சட்டநீதி மன்றங்களில்தான் சந்தேகம் எழுகிறதே தவிர, தர்ம நீதி மன்றத்தில் சந்தேகத்துக்கு இடமில்லை.

ஆகவே, தீர்ப்பு அளந்து வழங்கப்படுகிறது.

திருட்டுக் குற்றத்திற்காகப் பல வகையான தண்டனைகளைப் பலவகையான மாஜிஸ்திரேட்டுகள் வழங்குகிறார்கள்.

அது அவர்களுடைய மனோபாவத்தையும், அன்றைக்கு அவர்கள் குடும்பத்தில் நடந்த தகராறுகளையும் குறிக்கும்.

ஆனால், தர்ம நீதி மன்றத்தில் தண்டனை, பாவத்தை விட அதிகமாக இருக்காது.

ஏராளமான நிகழ்ச்சிகள், செவி வழிச் செய்திகள், புராணங்கள், இதிகாசங்கள் இதை உறுதி செய்கின்றன.

அடுத்து, மொபைல் கோர்ட் நீதிபதிகளைச் சந்திப்போம்.

1. மொபைல் கோர்ட் நீதிபதிகள்

உலவும் ஆவிகள் பற்றி, அர்த்தமுள்ள இந்துமதம் முதல் பாகத்தில், நான் ஏற்கெனவே கூறியுள்ளேன். அந்த வகை ஆவிகளே `குட்டிச் சாத்தான்’ போன்றவை.

ஆசை நிறைவேறாமல் இறந்த உயிர்களும்; தற்கொலை செய்துகொண்ட அல்லது கொல்லப்பட்ட உயிர்களும் குட்டிச் சாத்தான்களாகின்றன என்பது என் கருத்து.

ஒருசில சாத்தான்கள் நல்லது செய்கின்றன.

பலவந்தமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆவிகள் பழி வாங்குகின்றன.

சத்திய சாயிபாபா என்பவரைப் பற்றிக் கூறப்படும் தகவல்கள், அவர் பல குட்டிச் சாத்தான்களை ஏவலுக்கு அமர்த்திக் கொண்டவர் என்றே எண்ணத் தோன்றுகிறது.

அவரது தலைமயிர் திடீரென்று இரும்புபோல் இருக்குமாம்; யாராவது அதைத் தொட்டால் கையெல்லாம் ரத்தமாகி விடுமாம்.

திடீரென்று அவர் விபூதி கொடுப்பாராம்; வெறும் கையிலேயே விபூதி வருமாம்.

பிறரது கனவில் ஊடுருவும் சக்தி அவருக்கிருக்கிறது என்பது உண்மை.

குட்டிச் சாத்தான்கள் மூலமாகவே அப்படி ஊடுருவ முடிகிறது என்று நான் நம்புகிறேன்.

என்னுடைய கனவிலும் அவர் இரண்டு முறை ஊடுருவினார்.

முதல் முறை வந்த கனவில், சத்திய சாயிபாபா அமர்ந்திருக்கிறார்; நான் கைகளால் ஊர்ந்து அவர் அருகே செல்கிறேன்.

இரண்டாவது கனவில், சத்திய சாயிபாபா அமர்ந்திருக்கும் கட்டத்துக்குள் ஒரு `கரண்ட்’ என்னை இழுக்கிறது; நான் அதை எதிர்த்துப் போராடுகிறேன். `கிருஷ்ணா! கிருஷ்ணா!’ என்று நான் சப்தமிடுகிறேன். அந்தக் கரண்ட் என்னை விட்டு
விடுகிறது.

சத்திய சாயிபாபா செய்வதாகச் சொல்லப்படும் காரியங்கள் அனைத்துமே, சித்து வேலையாகவே எனக்குத் தோன்றுகின்றன.

இதே போல் பன்றிமலை சுவாமிகளைப் பற்றியும் ஏராளமான கதைகள் கூறப்படுகின்றன.

அவரை ஒரு நாள் பார்க்கப் போனேன்.

அங்கிருந்த ஒரு மலர் மாலையிலிருந்து ஏழு எட்டு மலர்களை உருவிக் கைக்குள் தேய்த்தார். உடனே அனைத்தும் திருப்பதி அட்சதைகளாக மாறின.

அவர் பாம்பு என்று ஒரு காகிதத்தில் எழுதி வைக்கிறார். அதை நீங்கள் விரலால் தொட்டால் விஷம் ஏறுகிறது.

நெருப்பு என்று எழுதி வைக்கிறார்; தொட்டால் சுடுகிறது.

சந்தனம் என்று எழுதி வைக்கிறார்; தொட்டால் மணக்கிறது.

ஆங்கிலத்தில் கட்டுரை எழுதும் அளவு அவர் வல்லுநர் அல்ல.

நீங்கள் ஏதாவது விஷயம் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரை எழுதித் தரும்படி அவரிடம் கேட்டால் அவர் `முருகா’ என்பார். எங்கிருந்தோ டைப் அடிக்கப்பட்ட காகிதங்கள் வந்து விடுகின்றன.

திட்டவட்டமாகக் குட்டிச் சாத்தான் ஏவல் கொண்டவர் என்றே நான் கருதுகிறேன்.

கோவை ஜெயில் ரோடில் 1950ஆம் ஆண்டில் நான் தங்கியிருந்தபோது என்னிடம் ஒரு சாமியார் வந்தார். அவர் இரண்டு ரூபாய்கள் தாம் என்னிடம் கேட்டார். கொடுத்தேன். அவர் ஒரு தாயத்துக் கொடுத்தார். அவர் ஒரு காகிதத்தில் `நல்லது நடக்கும்’ என்றும் ஒரு காகிதத்தில் `கெட்டது நடக்கும்’ என்றும் எழுதித் தூரத்தில் வைத்தார். நாலடி தூரத்தில் தாயத்தை வைத்தார். தாயத்து ஊர்ந்து சென்று `நல்லது நடக்கும்’ என்ற காகிதத்தில் ஏறிற்று.

ஏதோ ஒரு ஆவியை அடக்கி வைத்திருப்பவர் போலிருந்தது அவர் செய்கை.

வீதியிலே வித்தை காட்டுகிறவன், ஒரு துணிப் பொம்மையின் தலையில் அடித்தால், பார்த்துக் கொண்டிருப்பவர்கள் எல்லோருடைய தலையிலும் அடி விழுகிறது. மேலும் அவன் செய்யும் குட்டிச் சாத்தான் வித்தைகளை எல்லாம் நீங்கள் அறிவீர்கள்.

மாஜிக் நிபுணர்களும் குட்டிச் சாத்தான்களை அடக்கியாள்பவர்களே!

இந்தச் சாத்தான்களை எதிரியின் மேல் ஏவ முடியும் என்கிறார்கள் சிலர்.

எனக்கு அதில் நம்பிக்கை இல்லை.

`சோற்றிலே மலம் வந்து விழுந்தது, வீட்டிலே கல் விழுந்தது, எல்லாம் குட்டிச் சாத்தான் வேலை’ என்று சொல்வோர் உண்டு. இவை எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்குத் தெரியாது.

ஆனால், ஆவிகள் உலவுவதும், அவையே குட்டிச் சாத்தான்கள் என்று அழைக்கப்படுவதும் அசைக்க முடியாத உண்மை.

இந்த ஆவிகளை எப்படிச் சிலர் அடக்கியாளுகிறார்கள் என்ற வித்தைதான் எனக்குத் தெரியவில்லை.

குட்டிச் சாத்தான்கள் நல்லவர்களுக்கு வழித் துணையாக விளங்குகின்றன.

தீயவர்களுக்குத் தீங்கு செய்கின்றன.

இந்தச் சாத்தான்கள் வயல்களைக் காவல் செய்கின்றன.

இறைவனிடமும் மனிதனிடமும் பேசுகின்றன.

ஒரு குறிப்பிட்ட காலத்தில், இவை மீண்டும் பிறக்கின்றன.

மனிதர்களாகவோ, மிருகங்களாகவோ தோன்றுகின்றன.

ஏழைகளுக்கு உணவு வழங்குகிறவர்கள் வீட்டையும், பிறர் கஷ்டத்தில் உதவுகின்றவர்கள் வீட்டையும், இவை காவல் காக்கின்றன.

உண்மையில், இவை `மொபைல் கோர்ட்’ நீதிபதிகளாகவே விளங்குகின்றன.

2. பெஞ்ச் கோர்ட் நீதிபதிகள்

பாண்டிய மண்டலத்தின் கிராம தேவதைகளுக்கு திருவிழா நடைபெறும்போது `புரவி எடுத்தல்’ என்றொரு விழா நடைபெறும்.

மண்ணாலே குதிரை செய்து கோவிலுக்கு அருகில் நிறுத்திவிடும் பழக்கமே அது.

அவர்களுடைய சக்திக்குத் தகுந்தபடி, குதிரை பெரியதாகவோ சிறியதாகவோ இருக்கும்.

ஒரு காலத்தில் குதிரை வீரர்களைக் கெளரவிப்பதற்காக வந்த இப்பழக்கம், நாளடைவில் எல்லாச் சிறு தேவதைகளுக்கும் எடுக்கின்ற பழக்கமாகி விட்டது, முத்தன், முனியன், காட்டேரி என்கிற சிறு தேவதை பெயர்களெல்லாம் வீரனாக வாழ்ந்திருந்த யாரோ ஒருவரைக் குறிக்கும் பெயர்களே!

பாண்டிய நாட்டிலுள்ள ஐயனார் கோவில்களில் இந்தப் புரவி எடுக்கும் பழக்கம் அதிகம்.

பாண்டிய நாட்டில் ஒரு கிராமத்திலிருந்து மறுகிராமத்திற்குப் போகிறவன், வழியில் இத்தகைய மண் புரவிகளை ஏராளமாகச் சந்திப்பான்.

இது ஒரு வகையான வீர வணக்கம்.

எங்கள் ஊரிலே `மலையரசி அம்மன்’ கோயில் என்று ஒன்று உண்டு `பூமலைச்சி அம்மன்’ கோயில் என்றும் உண்டு.

பக்கத்து ஊர்களில், `பொன்னழகி அம்மன்’ என்ற பெயரிலும், வேறு பெயர்களிலும் அம்மன் கோயில்கள் உண்டு.

இந்த அம்மன்களெல்லாம், ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்றும் சகோதரிகள் என்றும் கூறுகிறார்கள்.

அவற்றில் `மலையரசி அம்மன்’ மீது எனக்கு ஈடுபாடுண்டு.

அந்தக் கோவிலில் போய்ச் சத்தியம் செய்தால், யாருமே அதை மீற மாட்டார்கள்.

யாரிடமாவது கடன் கொடுத்து ஏமாந்தவர்கள், கோர்ட்டுக்கு போக வழி இல்லாவிட்டால், அந்தக் கடன் பத்திரத்துக்கு ஒரு காப்பி எடுத்து மலையரசியின் கோவிலில் வைத்து விடுவார்கள். கடனை ஏமாற்றியவன் குடும்பம் அழிந்தே போய்விடும்.

நான் கண் முன்னாலேயே இதனைக் கண்டிருக்கிறேன்.

அங்கே மலையரசி நீதிபதியாகவே வாழ்கிறாள்.

எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மூதாட்டியினுடைய மாங்கல்யத்தை அடகு பிடித்திருந்தார் ஒருவர். பணத்தோடு போய்க் கேட்டபோது, `தாலி வட்டியோடு மூழ்கி விட்டது’ என்று கூறி அதைத் தர மறுத்து விட்டார்.

`உன் குடும்பம் சந்ததி இல்லாமல் போய்விடும்’ என்று திட்டிவிட்டார் அந்த மூதாட்டி.

என்ன ஆச்சரியம்!

அந்தக் குடும்பம் ஆண் வாரிசு இல்லாமல் அழிந்து போய்விட்டது.

நமது மூதாதையர் நம்பி உரைத்த எவையுமே பொய்யல்ல என்பதை நான் கண் முன்னாலேயே கண்டிருக்கிறேன்.

ஏழைப்பெண் ஒருத்திக்குத் திருமணம் பேசிக் கொண்டிருந்தார்கள். அவள் அழகாக இருந்ததால் பெரிய இடத்துச் சம்பந்தம் கிடைக்கும் போலிருந்தது. பொறாமைக்காரர்கள் சிலர் அந்தப் பெண்ணைப் பற்றி அவதூறு கூறித் திருமணத்தைத் தடுத்து விட்டார்கள்.

அந்தப்பெண், காலையில் குளித்துவிட்டு ஈரப்புடவையோடு, இருபத்தொரு நாள்கள் அம்மன் கோவிலை வலம் வந்தாள்.

அவதூறு கூறியவர்கள் குடும்பம் சின்னா பின்னமாகி விட்டது.

`பெஞ்ச கோர்ட்’ நீதிபதிகளைப் போன்ற கிராம தேவதைகள் தம்மை நம்பினோரைக் காக்கிறார்கள்; அவர்கள் எதிரிகளைக் கருவறுக்கிறார்கள்.

முத்தாளம்மன், முத்துமாரியம்மன் போன்ற அம்மன்கள் எல்லாம் சக்தி வாய்ந்தவை என்பதைக் குறிக்க ஏராளமான கதைகள் உள்ளன.

ஏதாவதொரு வகையில் அவற்றின் சக்தி வெளிப்பட்டிருக்கிறது.

சென்னை நகரில் ஆலையம்மன், எல்லையம்மன், படவட்டம்மன் என்று பல அம்மன்கள் இருக்கின்றன.

படவட்டம்மன் என்பது `படை வீட்டு அம்மன்’ என்பதின் மரூஉ ஆகும்.

இன்றைய சென்னை நகரம் பல கிராமங்களின் தொகுப்பாகும்.

மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அடையாறு, வண்ணாரப் பேட்டை என்று பல கிராமங்கள் அக்காலத்தில் விளங்கின.

இவை ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத கிராமங்கள். இடையில் பெரும் காடுகள் இருந்திருக்கின்றன. இந்தக் கிராமங்களின் எல்லைகளில் சிறு தேவதைக் கோயில்கள் இருந்திருக்கின்றன!

1945ல் சென்னை நகருக்கு வந்து இருந்தபோது கோடம்பாக்கம் பகுதி பெரும் காடாக இருந்தது. அங்கே மிகப் பெரிய தோட்டம், `நவாப் தோட்டம்’ என்பது.

சினிமாவுக்கு அவுட்டோர் சூட்டிங் போகிறவர்கள் கோடம்பாக்கத்துக்குத்தான் போவார்கள்.

ஆற்காடு நவாப் குதிரைகளைக் கட்டுகிற இடமாக அது இருந்ததால் `கோடா பாக்’ என்று அதற்குப் பெயர் வைத்தார்.

`கோடா’ என்றால் உருது மொழியில் குதிரை என்று அர்த்தம்.

ஆற்காடு நவாப்பை முன்னிட்டுத்தான் அந்த ரோடும் `ஆற்காடு ரோடு’ என்று பெயர் பெற்றது.

1945ல் காடாக இருந்த கோடம்பாக்கத்தில் மூன்று சிறு தேவதைக் கோயில்கள் இருந்தன. அவை இன்றும் இருக்கின்றன.

வடபழனி ஆண்டவர் கோவிலும் அவற்றில் ஒன்று.

அந்தக் கோவிலில் ஒரு சாமியார் இருந்தார். முள்ளாலே செய்யப்பட்ட பாதரட்சையைத்தான் அவர் அணிவார். முட் படுக்கையில் தூங்குவார். அவர்தான் வடபழனி கோவிலுக்குப் பூஜை புனஸ்காரங்கள் செய்து கொண்டிருந்தார்.

முதலில் சிறு தேவதைக் கோவிலாக இருந்த அதுதான் பிற்பாடு முருகன் கோவிலாயிற்று.

இந்தச் சிறு தேவதைகளின் சக்திகளைப் பற்றிச் சென்னை நகரில் ஏராளமான கதைகள் உண்டு.

பாண்டிய நாட்டு அளவுக்குத் தொண்டை மண்டலத்திலும் இந்தச் சிறு தேவதைகள் ஆதிக்கம் புரிந்து வருகின்றன.

`அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்ற பழமொழியை இந்தச் சிறு தேவதைகள் தான் உறுதிச் செய்கின்றன.

எங்கள் ஊருக்குப் பக்கத்தில், பள்ளத்தூர் என்ற ஊரில் `சோலை ஆண்டவர் கோயில்’ என்றொரு கோவில் உண்டு.

அந்தக் கோவிலுள்ள தெய்வம் சக்தி வாய்ந்தது என்று ஊரார் நம்புகின்றனர்.

திருட்டுப் போன தாலி திரும்பி வந்ததாகவும், வண்டிச் சக்கரத்தில் நசுக்கப்பட்ட குழந்தை உயிர் பெற்றதாகவும் பல கதைகளை அங்கே கூறுகிறார்கள்.

மொத்தத்தில், இந்துக்களின் சிறு தேவதை வழிபாடு நல்ல நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்ததே தவிர, மூட நம்பிக்கையில் எழுந்தது அல்ல.

கீழ்க்குலத்து மக்களால் மட்டுமே மதித்து வணங்கப்பட்ட சிறு தேவதைகள், இப்போது எல்லோராலும் மதிக்கப்படுகின்றன.

அவை செய்யும் சாகஸங்களை அறிந்தவர்கள் அவற்றை `பெஞ்ச் கோர்ட் நீதிபதிகள்’ என்றழைப்பதில் என்ன தவறு? அந்தச் சிறு தேவதை ஆதர்ஸம் எனக்கும் உண்டு.

எனக்கு வழிகாட்டியவள் எங்கள் ஊர் மலையரசி அம்மன்தான் என்று நான் இன்னமும் நம்புகிறேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பக்குவம்

`பக்குவம்’ என்பது என்ன?

ஒரு மனிதன் பக்குவம் அடைவதற்கு முன் உள்ள நிலை என்ன?

அடைந்த பின் காணும் நிலை என்ன?

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், சில அற்புதமான உவமைகளைக் கூறுகிறார்.

ஒன்று…

குடத்தில் தண்ணீர் மொள்ளும் போது `பக்பக்’ கென்று சத்தம் உண்டாகிறது.

குடம் நிரம்பியதும் அச்சத்தம் நின்று விடுகிறது.

இரண்டு….

ஒரு வீட்டில் விருந்துக்குப் பலரை அழைத்தால் முதல் முதலில் அவர்கள் போடும் சத்தம் அதிகமாக இருக்கும்.

சாப்பிட உட்காரும் வரையில் அச்சத்தம் இருக்கும்.

இலையில் அன்னம் பரிமாறி விருந்தினர்கள் சாப்பிடத் தொடங்கியதும், முக்கால்வாசிச் சத்தம் நின்றுவிடும்.

கடைசியாகத் தயிர் பரிமாறும்போது, அதை உண்ணும் `உஸ் உஸ்’ என்ற சத்தம்தான் கேட்கும்.

மூன்று…

தேனீயானது மலரில் உள்ளே இருக்கும் தேனையடையாமல், இதழ்களுக்கு வெளியே இருக்கும் வரையில் ரீங்காரம் பண்ணிக்கொண்டு பூவைச் சுற்றிச் சுற்றி வரும்.

ஆனால், பூவுக்குள் நுழைந்து விட்டால் சத்தம் செய்யாமல் தேனைக் குடிக்கும்.

நான்கு…

புதிதாக வேறு மொழியைக் கற்றுக் கொள்பவன் தான் பேசும் போதெல்லாம் அம்மொழியின் வார்த்தைகளை உபயோகித்துத் தனது புது ஈடுபாட்டைக் காட்டிக் கொள்வான்.

அந்த மொழியில் விற்பன்னனோ, தன் தாய் மொழியில் பேசும்போது, அந்த மொழி வார்த்தைகளை உபயோகிப்பதில்லை.

ஐந்து…

ஒரு மனிதன் சந்தைக் கடைக்கு வெகு தூரத்தில் இருக்கும்போது, உருத் தெரியாத `ஓ’ என்ற சத்தத்தை மட்டும் கேட்கிறான்.

ஆனால், அவன் சந்தைக்குள் நுழைந்தவுடன் ஒருவன் உருளைக் கிழங்கிற்கும், மற்றொருவன் கத்திரிக்காய்க்கும் பேரம் பண்ணுவதைத் தெளிவாகக் கேட்கிறான்.

ஆறு…

சுடாத மாவுப் பலகாரம் ஒன்றைக் கொதித்துக் கொண்டிருக்கும் நெய்யில் போட்டால் முதலில் `பட்பட்’ என்ற சத்தம் உண்டாகும்.

அந்தப் பலகாரம் வேக வேக அதன் சத்தம் குறையும்.

முற்றிலும் வெந்தவுடன் சத்தமே கேட்காது.

பக்குவமற்ற நிலைக்கும், பக்குவ நிலைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் பகவான் எவ்வளவு அழகாகக் கூறியிருக்கிறார்.

கல்லூரியில் படிக்கும்போது, ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது.

கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும்போது, ஒவ்வொரு வேடிக்கைக்குள்ளும் வேதனை இருப்பது அவனுக்குப் புரிகிறது.

இளமைக் காலத்து ஆரவாரம், முதுமை அடைய அடையக் குறைந்து வருகிறது.

ஒவ்வொரு துறையிலும், நிதானம் வருகிறது.

இளம் பருவத்தில் இறைவனைப்பற்றிய சிந்தனை அர்த்த புஷ்டியற்றதாகத் தோன்றும்.

வாழ்வில் அடிபட்டு வெந்து, நொந்து ஆண்டவனைச் சரணடைய வரும்போது, அவனது மாபெரும் இயக்கம் ஒன்று பூமியில் நடைபெறுவது புத்தியில் படும்.

பக்குவமற்றவனுக்கு நாத்திகம், அராஜகம் எல்லாமே குஷியான தத்துவங்கள்.

பக்குவம் வர வர, ரத்தம் வற்ற வற்ற இந்தத் தத்துவங்கள் எல்லாம் மறுபரிசீலனைக்கு வரும்.

நடைமுறைக்கு ஒத்த சிந்தனை, பக்குவப்பட்ட பிறகே தோன்றும்.

இருபது வயது இளைஞனைப் பெண் பார்க்கச் சொன்னால் எல்லாப் பெண்களுமே அவன் கண்களுக்கு அழகாய்த்தான் தெரிவார்கள்.

நாற்பது வயதிற்கு மேலேதான், நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் தெளிவு அவனுக்கு வரும்.

கல்லூரி மாணவனைப் படிக்கச் சொன்னால் காதல் கதையையும், மர்மக் கதையையும் படிப்பதில்தான் அவன் கவனம் செலுத்துவான்.

காதலித்துத் தோற்றபின்தான், அவனுக்குப் பகவத் கீதையைப் படிக்கும் எண்ணம் வரும்.

விளையாட்டுத்தனமான மனோபாவம் பிடிவாதத்திற்குப் பெயர் போனது.

எதையும் சுலபத்தில் ஏற்றுக்கொண்டு `அதைவிட உலகமே கிடையாது’ என்று வாதாடும்.

எதிர்த்தால் வேரோடு பிடுங்க முயலும்.

பக்குவமற்ற நிலை என்பது இரண்டு `எக்ஸ்ட்ரீம்’ நிலை.

ஒன்று, இந்த மூலையில் நின்று குதிக்கும், அல்லது அந்த மூலையில் இருந்து குதிக்கும்.

பக்குவ நிலைக்குப் பெயரே நடு நிலை.

மேலை நாட்டில் ஒரு பழமொழி உண்டு.

`இருபது வயதிற்குள் ஒருவன் கம்யூனிஸ்ட் ஆகவில்லை என்றால் அவன் அப்பாவி; முப்பது வயதிற்கு மேலும் அவன் கம்யூனிஸ்டாக இருந்தால் அவன் மடையன்!’

இதுதான் அந்தப் பழமொழி.

பரபரப்பான பருவ காலத்தில் கோயிலுக்குப் போனால் தெய்வம் தெரியாது என்பது மட்டுமல்ல, அங்கே சிலையில் இருக்கும் அழகுகூடத் தெரியாது.

ஐம்பது வயதில் கோயிலுக்குப் போனால், சிலையில் இருக்கும் ஜீவனும் தெரியும்.

இதில் வெறும் பருவங்களின் வித்தியாசம் மட்டுமில்லை.

பக்குவத்தின் பரிணாம வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது.

ஏன், உடம்பேகூட இருபது வயதில் எந்த உணவையும் ஜீரணிக்கிறது.

நாற்பதிற்கு மேலேதானே `இது வாய்வு’, `இது பித்தம்’, என்கிற புத்தி வருகிறது.

`டென்ஷன்’ என்ற ஆங்கில வார்த்தைக்குச் சரியான தமிழ் வார்த்தை எனக்குப் புரியவில்லை.

`முறுக்கான நிலை’ என்று அதைக் கூறலாம்.

அந்த நிலையில் `எதையும் செய்யலாம், எப்படியும் செய்யலாம்’ என்கிற `திமிர்’ வருகிறது.

அதில் நன்கு அனுபவப்பட்ட பிறகு, `இதைத்தான் செய்யலாம்’, `இப்படித்தான் செய்யலாம்’ என்ற புத்தி வருகிறது.

இனி விஷயத்திற்கு வருகிறேன்.

`ஞான மார்க்கப் பக்குவமும் அப்படிப்பட்டது தான்’ என்பதைக் கூறவே இவற்றைக் கூறினேன்.

உள்ளம் உடலுக்குத் தாவி, உடல் ஆன்மாவுக்குத் தாவிய நிலையே, பக்குவப்பட்ட நிலை.

தேளைப் பிடிக்கப் போகும் குழந்தை, அதையே அடிக்கப் போகும் மனிதனாக வளர்ச்சியடைகிறது.

அதற்குப் பிறகு, அந்தத் தேளிடமேகூட அனுதாபம் காட்டும் ஞானியாக அந்த மனிதன் மாறி விடுகிறான்.

இன்றைய பக்குவம் இருபதாண்டுகளுக்கு முன் எனக்கு இருந்திருந்தால், எனது அரசியலில்கூட முரண்பாடு தோன்றியிருக்காது.

வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பில், நன்மை தீமைகளை உணரும் நிதானம் அடிபட்டுப் போகிறது.

ஆரம்பத்தில் `இதுதான் சரி’ என்று ஒன்றை முடிவு கட்டிவிட்டு, பின்னால் `இது தவறு’ என நாமே சொல்ல வேண்டிய நிலை வருகிறது.

சரியாகக் கணக்கிட்டால், மனித வாழ்க்கைக்கு மூன்று கட்டங்கள்.

முதற் கட்டம் ஒன்றுமே புரியாத உணர்ச்சிக் கூத்து.

இரண்டாவது கட்டம் ஏதோ இருப்பதாக, ஆனால் தெளிவாகத் தெரியாத, மயங்கிய நிலை.

மூன்றாவது கட்டம் பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்றும், நமக்கும் மேலே ஒரு நாயகன் இருக்கிறான் என்றும் முழு நம்பிக்கை கொண்ட ஞானநிலை.

இந்த மூன்றாவது நிலையை முதற் கட்டத்திலேயே எய்தியவர்கள் பலர் உண்டு.

சுவாமி விவேகானந்தரைப் போல, வளைந்து கொண்டே வளர்ந்த மரங்கள் உண்டு.

அவர்கள் எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் அந்த நிலையை எய்தியவர்கள்.

மற்றவர்கள், அனுபவத்தின் மூலமாகத்தானே பக்குவ நிலையை அடைய வேண்டியிருக்கிறது!

எகிப்து மன்னன் பாரூக், பட்டம் துறந்து பாரிஸ் நகரில் சீரழிந்த போதுதான் `மனிதாபிமானம்’ என்றால் என்ன என்பதை உணர முடிந்தது.

ஆனால், அரண்மனை வாசத்திலேயே அதனை உணர்ந்து கொண்ட சித்தார்த்தன், கெளதம புத்தரான வரலாறும் நம்முடைய நாட்டிலே உண்டு.

தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் நடுவே தடுமாறும் மனிதர்கள் நம்முடைய நாட்டிலே மிக அதிகம்.

ஒன்று, தூங்குவதென்றால் நிம்மதியாகத் தூங்கி விடவேண்டும்.

விழிப்பதென்றால் சுறுசுறுப்பாக விழித்துக் கொள்ள வேண்டும்.

தூக்கமும் விழிப்புமாக இருப்பதால் தூக்கத்தின் பலனும் கிட்டாது, விழிப்பின் பலனும் கிட்டாது.

`மனப்பக்குவம்’ என்பது அனுபவங்கள் முற்றிப் பழுத்த நிலை.

அந்த நிலையில் எதையுமே `இல்லை’ என்று மறுக்கின்ற எண்ணம் வராது.

`இருக்கக்கூடும்’ என்றே சொல்லத் தோன்றும்.

எனது நண்பரும் முன்னாள் அமைச்சருமான தோழர் நெடுஞ்செழியன் அவர்கள், ஒரு கட்டுரையில் “நாஸ்திகன் தன் கொள்கையில் தெளிவாகவே இருக்கிறான்” என்றும், “ஆஸ்திகன் தான் தடுமாறுகிறான்” என்றும், “கடவுள் இல்லை என்பதை நாஸ்திகன் உறுதியாகச் சொல்லுகிறான்” என்றும், “உண்டு என்பதற்கு ஆஸ்திகன் ஒழுங்காக விளக்கம் தர முடியவில்லை” என்றும் எழுதியிருக்கிறார்.

நல்லது.

`இல்லை’ என்று சொல்பவனுக்கு எந்தப் புத்தியும் தேவையில்லை.

எதைக் கேட்டாலும் `இல்லை’ என்று சொல்ல முட்டாளாலும் முடியும்.

ஆனால் `உண்டு’ என்று சொல்பவனுக்குத்தான் அதை நிலைநாட்டப் போதுமான அறிவு தேவைப்படும்.

“பூமிக்குக் கீழே என்ன இருக்கிறது” என்று கேட்டால் எதுவுமே இல்லை, என்று குழந்தைகூடப் பதில் சொல்லிவிட முடியும்.

ஆனால், “அடியிலே நீர்; அதன் கீழே நெருப்பு” என்று சொல்ல விஞ்ஞான அறிவு வேண்டும்.

பாத்திரம் செய்பவனுக்குப் பல நாள் வேலை; போட்டு உடைப்பவனுக்கு ஒரு நாள் வேலை.

நாஸ்திகன் எப்போதுமே தெளிவாக இருக்க முடியும்.

காரணம் எதைக் கேட்டாலும், எந்திரம் போல் `இல்லை இல்லை’ என்று மட்டுமே அவன் பதில் சொல்லப் போகிறான்.

நன்றாகத் தலையாட்டத் தெரிந்த அழகர் கோயில் மாட்டை விடவா அவன் உயர்ந்து விட்டான்.

ஆனால், ஆஸ்திகனோ, விபூதிக்கு ஒரு காரணம், குங்குமத்திற்கு ஒரு காரணம், திருமண்ணுக்கு ஒரு காரணம் சொல்லியாக வேண்டும்.

சொல்வது மட்டுமல்ல, எதிரியையும் ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும்.

ஒன்றை ஒப்புக்கொண்டு, அதன் உட்கீற்றுகளை விவரிப்பதற்குத் தகுந்த பக்குவம் தேவை.

ஆஸ்திகன், பிரபஞ்சத்தின் தோற்றம் முதல் இயக்கம் வரையில் கண்டுபிடிக்க முயலுகிறான்.

ஜனனம், மரணம் இரண்டையும் அவன்தான் ஆராய்கிறான்.

அப்படி ஆராய்ந்து, இந்து வேதாந்திகள் செய்த முடிவை இதுவரை விஞ்ஞானம் தாண்டியதில்லை.

வேதங்களின் முடிவையே, விஞ்ஞானம் தன் முடிவாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால், விஞ்ஞானமும் அறியாமல், மெய்ஞ்ஞானமும் அறியாமல், அஞ்ஞானத்தைக் கொண்டு உழலும் நாஸ்திகனுக்கு, எல்லாம் இயற்கையாக நடக்கின்றன’ என்று சொல்லத் தெரிகிறதே தவிர, அந்த இயற்கை என்பது என்னவென்று சொல்லத் தெரியவில்லை.

பக்குவ நிலைக்கும், பக்குவமற்ற நிலைக்கும் வேறுபாடு இதுதான்.

“கோயிலுக்குப் போய் ஏன் தேங்காய் உடைக்க வேண்டும்?”

“அப்படிக் கோயிலிலே என்ன இருக்கிறது?” என்று நாஸ்திகன் கேட்கிறான்.

அந்தத் தேங்காயை உடைக்கும் வரையில், `அந்தத் தேங்காய்க்குள் என்ன இருக்கிறது?’ என்பது அவனுக்குத் தெரியுமா?

அதில் வழுக்கையும் இருக்கலாம், முற்றிய காயும் இருக்கலாம்.

ஆகவே, உடைத்த பின்பே காயைக் கண்டு கொள்ளும் மனிதன், உணர்ந்த பின்பு தெய்வத்தைக் காண முடியும் என்பது உறுதி.

`கடவுளே இல்லை’ என்று வாதாடியவன் எவனும் `எனக்கு மரணமே இல்லை’ என்று வாதாட முடியவில்லையே!

`மரணம்’ என்று உணரப்படும்போதே சிலருக்குப் பக்குவம் வருகிறது.

எனக்குத் தெரிந்த மிகப் பெரிய நாஸ்திகர் கூட தமது அந்திம காலத்தில் யார் கொடுத்த விபூதிகளையும் பூசிக் கொண்டார்கள்.

மரணத்தின் பின் எங்கே போகப் போகிறோம் என்று நிச்சயமாகத் தெரியும் வரை ஈசுவரன் ஒருவன் இருப்பது உறுதி.

நன்கு பக்குவப்பட்டவர்கள், தம் வாழ்நாளிலேயே காணமுடிகிறது.

இப்போதெல்லாம், `போலித்தனம் எது? பொய் எது?’ என்பதைக் கண்டுகொள்ளக்கூடிய தெளிவு எனக்கு வந்து விட்டது.

காரணம், வயது மட்டுமல்ல, பக்குவம்.

செருப்புப் போடாத காலத்தில், மலத்தை மிதித்திருக்கிறேன். அதனால், இப்போது செருப்புப் போடுகிறேன்.

கடலை மாவில் செய்த பலகாரத்தைச் சிறுவயதில் விரும்பிச் சாப்பிட்டேன். இப்போது அது தவறு என்பதை உணருகிறேன்.

என் முன்னால் ஒரு வாதியையும், பிரதிவாதியையும் கொண்டு வந்து நிறுத்தி, `யார் நிரபராதி’ என்று சொல்லச் சொன்னால் அவர்களது வாக்குமூலங்கள் இல்லாமலேயே, நான் அவர்களைக் கண்டுபிடிப்பேன்.

அரசியலில் கூட 1969ல் நான் எடுத்த முடிவுக்குத் தான் 1971ல் பலபேர் வந்தார்கள்.

1972 ல் எனது பெருந்தலைவரே வந்தார்.

1977ல் பெரும்பாலோர் வந்திருக்கிறார்கள்.

என்னுடைய தீர்க்கதரிசனத்துக்கு முதல் அடிப்படை அறிவல்ல; அனுபவம்.

தலைப்பை மீண்டும் நினைவுபடுத்தினால், அதன் பெயரே `பக்குவம்’.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மதுவும் மதமும்

மதுப் பழக்கம் உள்ள ஒருவனே மதுவினால் விளையும் தீமைகளைத் தெளிவாக எடுத்துரைக்க முடியும்.

`எனக்கு இருபதாண்டுகளாக அந்தப் பழக்கம் உண்டு’ என்பது ஒன்றும் புதிய செய்தியல்ல.

அந்தத் தார்மீக ஒழுக்கக் கேட்டிற்கு நான் வக்காலத்து வாங்க வரவில்லை.

ஆனால், `சட்டத்தினால் மதுவை ஒழிக்க முடியாது’ என்று நான் வாதிட்டிருக்கிறேன்.

சட்டம் போட்டு ஒன்றை மறைக்க, மறைக்க அது பற்றிய ஆசைகளே கிளர்ந்து எழும்.

முழுக்க மூடிக்கொண்டிருக்கும் பெண்ணைப் பார்க்க விரும்பும் கண்ணைப்போல், முழுக்க மறைக்கப்பட்ட ஒன்றைச் சுவைக்க விரும்புவது மனித இயல்பு.

ஆகவேதான், `மதுப்பழக்கம், விலைமாதர் உறவு இரண்டையும் சட்டத்தின் மூலம் ஒழிக்க முடியாது’ என்று நான் வாதிடுகிறேன்.

அடுத்தவனுக்குத் தீமை பயக்கக்கூடிய சமுதாய ஒழுக்கக்கேட்டை மட்டுமே சட்டம் தடுக்க முடியும்.

தனிமனிதனின் ஒழுக்கத்திற்கு அது உத்தரவாதம் தேடமுடியாது.

காரணம் அவன் எங்கேயாவது மறைந்து நின்று கொண்டு, அந்த ஒழுக்கக் கேட்டிற்குப் பலியாவான்.

ஆகவே, மது, விலைமாதர் என்ற இரு விஷயங்களில் அழுத்தமான `நீதி’ போதனையே மனிதனின் மனத்தை மாற்ற முடியும்.

“குடித்தால் உன் உடம்பு கெடும்.

மலத்துக்கும், சோற்றுக்கும் வித்தியாசம் தெரியாது.

காரணம் இல்லாமல் வீண் பகைகளைக் கொண்டுவந்து சேர்க்கும்.

நீ என்ன சொன்னாலும் உலகம் உன்னை நம்பாது.

நீ நிதானமாகப் பேசினாலும் கூட, `இது குடிகாரன் பேச்சு’ என்று தள்ளிவிடும்.

நீ குடிக்கும் மது, உன் குடும்பத்தின் வாழ்வைக் குடித்து
விடும்.

உன் வருமானம் பாழாகும்.

செய்ய வேண்டிய காரியத்தைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்ய முடியாது.

மதுவினால் நீ நோயுற்றால், உனக்காக யாரும் வருத்தப்பட மாட்டார்கள்.

குடும்பத்தாலும் சமுதாயத்தாலும் ஒதுக்கப்பட்ட புல்லாக, பூச்சியாக நீ மாறிவிடுவாய்.

நற்குலப் பெண்கள் உன் அருகில் வரவே பயப்படுவார்கள்.

மொத்தத்தில் நீ மனிதனாகவே வாழ முடியாது”

இப்படி அவனுக்கு இடித்துக் காட்டினால், ஒரு கட்டத்தில் இந்த அனுபவம் அவனுக்கு வந்து, மதுவைக் கைவிட்டு விடுவான்.

ஆகவே தான், இந்தியா தோன்றிய காலத்தில் இருந்து, பின் இந்து மதம் பிறந்த காலத்தில் இருந்து, மதுவுக்கு எதிராக மதம் வாதாடிப் போதித்திருக்கிறதே தவிர, அரசர்களிடம் தன் சக்தியைப் பயன்படுத்தி, அதைத் தடைசெய்யச் சொன்னதில்லை.

“மது உள்ளே போனால், மதி வெளியே போகும்.”

“சாராயத்தை உள்ளே போட்டால், பூராயம் எல்லாம் வெளியே வந்துவிடும்”

“குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சாக்கப் போச்சு”

“கள்ளுக் குடிச்சவனுக்குச் சொல்லுப் புத்தி ஏறாது.”

இவையெல்லாம் கிராமத்துப் பழமொழிகள்.

மதுவிலக்குப் பிரச்சாரம் இந்தியாவில் பல கோணங்களில், பல விதங்களில், பல கட்டங்களில் நடைபெற்று வந்திருக்கிறது.

அப்பொழுதெல்லாம், நாட்டிலே குடிகாரர்கள் குறைவாகவே இருந்தார்கள்.

என்று மதுவிலக்குச் சட்டம் வந்ததோ, அன்றிலிருந்துதான் குடிப்பவர்கள் அதிகமானார்கள்.

ஆகவே, இந்த வகையிலும் மதம் போதித்து எழுப்பும் தார்மீகச் சக்தியை சட்டம் உருவாக்க முடியாது.

இந்து மதம், மது உண்பவர்களையே `அரக்கர்கள்’ என்று அழைத்தது.

மதுவினால் மதியிழந்தோர் கதைகள் இந்துமத ஏடுகளில் ஏராளம், ஏராளம்.

எங்கள் குடும்பத்தில் நான்தான் குடிக்கப் பழகிய முதல் மனிதன்.

எனக்கு முந்திய தலைமுறையில் ஒவ்வொருவரும் குடித்து விட்டு வருவோனைக் கண்டால், காலால் உதைப்பார்கள்.

என் தந்தை ஒரு கிராம முன்சீப்பையே அப்படி உதைத்திருக்கிறார்.

அந்நாளில், அரசாங்கம் லைசென்ஸ் கொடுத்தாலும் ஊருக்குள்ளே கள்ளுக்கடையோ சாராயக் கடையோ வைக்க எந்தக் கிராமத்திலும் யாரும் இடம் கொடுக்க மாட்டார்கள்.

குடித்துவிட்டுச் சபைக்கு வரும் ஒருவனை அந்நாளில் காணவே முடியாது.

குடிப்பவனுக்குப் பெண் கொடுக்க மாட்டார்கள்.

காரணம், இந்து மதத்தின் உணர்ச்சிகரமான போதனை அவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருந்தது.

தாங்கள் குடிப்பதற்குப் பெரும்பாலோர் சொல்லும் காரணம் `கவலைகளை மறப்பதற்கே’ என்பதாகும்.

ஒரு இடத்தில் கம்பன், இதனை சுக்ரீவன் வாய்மொழியாக மிக அழகாகச் சொல்லுகிறான்.

“நெருப்பை நெய்யால் அணைத்தேன்” என்கிறான்.

கவலைக்காகக் குடிக்க ஆரம்பித்தால், உள்ளே போய் விழுந்த மது, அந்தக் கவலையை அதிகப்படுத்துமே தவிரக் குறைக்காது.

ஒரு குடிகாரன், குடிக்க ஆரம்பிக்கும்போது எதை நினைத்துக் கொண்டு குடிக்கத் துவங்குகிறானோ, அதுதான் அவன் குடித்து முடித்துத் தூங்கும்வரை விசுவரூபம் எடுத்து நிற்கும்.

முதல் ரவுண்டு குடிக்கும் போது, `ஒருவனை உதைக்க வேண்டும்’ என்று நீ நினைத்தால் மூன்றாவது ரவுண்டு முடிந்ததும், அவனைத் தேடி உன்னைப் போகச் சொல்லுமே தவிர, அந்தக் கோபத்தை அது குறைக்காது.

அதனால்தான், மேலை நாட்டார் தனியாகக் குடிப்பது இல்லை.

`சொசைட்டி டிரிங்கிங்’ என்று கூட்டம் கூட்டமாகக் குடிக்கத் தொடங்கினார்கள்.

குடித்துவிட்டு நாட்டியமாடத் தொடங்கினார்கள்.

விளைவு

`எவ்வளவு குடிக்கிறோம்’ என்ற அளவு தெரியாமல் அற்ப ஆயுளிலேயே மாண்டு போனார்கள்.

தனியாகக் குடித்தால், கவலையின் அளவு அதிகமாகிறது. கூட்டமாகக் குடித்தால், குடிக்கும் அளவு அதிகமாகிறது.

நமது புராணங்களில், `குடிப்பவனது வயிறு பெரிதாக இருக்கும்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

அரக்கர்களின் வயிற்றை அப்படியே வர்ணிக்கிறார்கள்.

இது ஒரு மருத்துவ உண்மை.

குடிக்க குடிக்க, வயிற்றுக்குள்ளே Fluid உற்பத்தியாகிறது.

`வயிறு மகோதரம்’ போல் ஆகிவிடுகிறது.

ஈரலில் Liver Sirosis என்ற நோய் உற்பத்தியாகிறது.

ஆரம்ப காலத்தில், குடிகாரர்கள் நிறையச் சாப்பாடு சாப்பிடுவார்கள்.

நாள் ஆகஆக, குடி அதிகமாகி சாப்பாடு குறைந்துவிடும்.

`மரணம் வாசல் வரைக்கும் வந்துவிட்டது’ என்பது இதன் பொருள்.

தண்ணீரையும் நாம் குடிக்கிறோம்; பாலையும் குடிக்கிறோம்.

ஆனால், எதையும் `குடி’ என்று அழைப்பதில்லை.

இதை மட்டும் ஏன் `குடி’ என்கிறோம்? இது ஒன்றுதான், உயிரைக் குடிக்கிறது.

குடியைப்பற்றிச் சொல்கின்ற புராண இதிகாசங்கள் எல்லாம் `அவர்கள் குடித்தார்கள்’ என்று கூறிவிட்டு அதன் மூலம் என்னென்ன தவறுகள் செய்தார்கள் என்பதையே விவரிக்கின்றன.

வள்ளுவர், சுருக்கமாக, `நஞ்சுண்பார் கள்ளுண்பவர்’ என்றார்.

`இந்திரன் மதி மயங்கி, அகலிகை கெடுக்கப்பட்டதற்கும் மதுவேதான் காரணம்’ என்று ஓர் உபன்யாசகர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

என் அனுபவத்தில், சாராசரி மூளை சுறுசுறுப்பாக வேலை செய்து கடைசியில் முட்டாள்தனமாக முடிவெடுக்கும்படி வைப்பது மது ஒன்றே.

இரவு நேரத்தில், அக்கம் பக்கத்தார் விழித்துக் கொள்ளும்படியாகக்கூட நான் சத்தம் போட்டிருக்கிறேன்.

எவ்வளவு அறிவுள்ள மனிதனையும் முட்டாளாக்கி விடும் அந்த மதுவிற்கு அடிமையாகி விட்டால், பிறகு மீள்வது கடினம்.

கம்பராமாயணத்தில், மதுவுண்டு மயங்கிய சுக்ரீவன், தன் நிலமைக்கு இரங்கி, கீழ்க்கண்டவாறு புலம்புகிறான்.

“உறவுண்ட சிந்தை யானும்
உரைசெய்வான்! ஒருவற்கு இன்னம்
பெறல் உண்டோ?அவரால் ஈண்டுயான்
பெற்றபேர் உதவி; உற்றது
இறல்உண்டோ? என்னின் தீர்வான்
இருந்தபேர் இடரை எல்லாம்
நறவுஉண்டு மறந்தேன்! காண
நாணுவல், மைந்த!” என்றான்.

ஏயின அது அலால், மற்று ஏழைமைப் பாலது என்னோ?
“தாய் இவள் மனைவி” என்னும் தெளிவு இன்றேல்!
தருமம் என் ஆம்?
விவினை ஐந்தின் ஒன்று ஆம்; அன்றியின் திருக்கு நீங்க
மாயையின் மயங்குகின்றோம்; மயங்கினமேல்
மயக்கம்வைத்தோம்.
`தெளிந்து தீவினையைச் செற்றார் பிறவியின் தீர்வர்’ என்ன
தீளிந்திலா உணர்வி னோரும் வேதமும் விளம்ப வேயும்
தெளிந்து உறை புழுவை நீக்கி, நறவு உண்டு
நிறைகின்றேனால்
அளிந்து அகத்து: எரியும் தீயை நெய்யினால்
அவிக்கின்றாரின்,
`தன்னைத்தான் உணரத் தீரும் தகைஅறு பிறவி,
என்பது என்னத்தான் மறையும் மற்றத் துறைகளும்
இசைத்த எல்லாம்
முன்னை, தான் தன்னை ஓராமுழுப்பிணி அழுக்கின் மேலே
பின்னைத்தான் பெறுவது அம்மா; நறவுஉண்டு திகைக்கும்
பித்தோ?
அளித்தவர் அஞ்சும் நெஞ்சின் அடைத்தவர், அறிவில், மூழ்கிக்
குளித்தவர், இன்ப துன்பம் குறைந்தவர், அன்றி வேரி
ஒளித்தவர் உண்டு, மீண்டும் இவ்வுலகு எல்லாம் உணர
ஓடிக் களித்தவர் எய்தி நின்ற கதிஒன்று கண்டது உண்டோ?
செற்றது பகைஞர், நாட்டார் செய்தபேர் உதவி தானும்
கற்றதும், கண்கூடாகக் கண்டதும், நிலைவ லாளர்
சொற்றதும், மானம் வந்து தொடர்ந்ததும் படர்ந்த இன்பம்
உற்றதும் உணரார் ஆயின் இறுதிவேறு இதனின் உண்டோ?
வஞ்சமும், களவும், பொய்யும், மயக்கமும் மரபுஇல்
கொட்பும்
தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும், களிப்பும் தாக்கும்
கஞ்சமெல் அணங்கும் தீரும், கள்ளினால்! அருந்தினாரை
நஞ்சமும் கொல்வது அல்லால்; நரகினை நல்காது அன்றே
கேட்டனன் `நறவால் கேடுவரும்’ எனக் கிடைத்த
அச்சொல்
காட்டியது; அனுமன் நீதிக் கல்வியால் கடந்தது அல்லால்
மீட்டு இனி உரைப்பதே என்ன? விரைவின் வந்து
அடைந்த வீரன்
மூட்டிய வெகுளி யால்யாம் முடிவதற்கு ஐயம் உண்டா?
“ஐய நான் அஞ்சினேன்; இந்நறவனின் அரிய கேடு;
கையினால் அன்றி யேயும் கருதுதல் கருமம் அன்றால்;
வெய்யது ஆம் மதுவை; இன்னம் விரும்பினேன் என்னின்
செய்ய தாமரைகள் அன்ன சேவடி சிதைக்க” என்றான் வீரன்!

இந்தக் கட்டுரைத் தொடரில், நான் ஏன் மதுவிலக்குப் பிரச்சாரம் செய்ய வருகிறேன் என்றால், சில வேதங்களையும், கம்ப ராமாயணத்தையும், திருக்குறளையும் படித்தது ஒன்று; என் அனுபவம் இரண்டு.

மதுவினால், உண்மையிலேயே நான் போய்ச் சேர வேண்டிய ஊருக்குப் போய்ச் சேர முடியாமல் ரயிலைத் தவற விட்டிருக்கிறேன். வாழ்க்கை ரயிலையும் தவற விட்டிருக்கிறேன்.

ஒரு இந்து, மது அருந்துவதை மதம் நியாயப்படுத்தவில்லை.

வழக்கம்போலவே அவனைத் தட்டிக் கொடுத்துத் தர்ம போதனை மூலம் திருப்புகிறது.

மதுவிலக்கை சரியாகச் செயல்படுத்த வேண்டும் என்றால், அது நமது போலீஸ்காரர்களால் இயலாது.

மத விரிவுரையாளர்களால் மட்டுமே இயலும்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கோபம், பாவம், சண்டாளம்!

`ராமன் காடு செல்ல வேண்டும்’ என்று கைகேயி கேட்டுப் பெற்ற வரத்தால், ராமன் எள்ளளவும் சினம் கொள்ளவில்லை.

ஆனால், அவன் உடம்புக்கு வெளியே நிற்கும் உயிர் போல, அவனையே முற்றிலும் பற்றித் தொடர்ந்த இலக்குவன், பெருங்கோபம் கொள்கிறான்.

அவனை எவ்வளவோ சமாதானம் செய்கிறான் ராமன்.

`தம்பி! எனக்கு நீ வெளியில் நடமாடும் உயிரல்லவா? நான் சொல்வதைக் கேள். நீ தைரியசாலி, உன் கோபத்தையும் உன்னைப் பற்றிய துக்கத்தையும், நீ அடக்கியாள வேண்டும். இது உன்னைப் பிடித்துக் கொண்டு வெறியாட்டம் ஆட இடம் கொடுக்காதே.

தருமம் என்பதைப் பலமாகப் பற்றிப் பிடித்து, இப்போது ஏற்பட்ட அவமானத்தை ஒரு பெரிய சந்தோஷமாக மாற்றுவோம். பட்டாபிஷேகத்தை முற்றிலும் மறந்துவிட்டு நம் கருத்தை எல்லாம் வேறு துறையில் செலுத்துவோம்.

`நம்மைப் பெற்ற தந்தையின் நிலை இப்போது என்ன?’ என்பதை நன்றாக ஆலோசிப்போம். அவருக்கு ஏற்பட்டிருக்கும் பயன் என்ன என்பதை நாம் உணர்ந்து நடந்து கொள்ளவேண்டும்.

எந்தக் காரணத்தைக் கொண்டோ கொடுத்துவிட்ட ஒரு வரத்தை, `இல்லை’ என்று இப்போது சொன்னால் அசத்தியத்தில் இறங்கினதாகும். பாவம் வந்து சுற்றிக் கொள்ளும். இதுவரையில் அவர் நடத்திய சகல தர்மமும், தானமும், புண்ணிய கருமங்களும் பயனின்றிப் போகும். இந்தப் பெரும் பயத்தினால் நம் தந்தை வேதனைப்படுகிறார். அவரது பயத்தைத் தீர்ப்பதல்லவோ நம்முடைய கடமை?

என்னைப்பற்றி வருந்துகிறார். எனக்கு வருத்தம் கொஞ்சமும் இல்லை. உனக்கும் வருத்தம் இல்லை என்று அவரது சந்தேகத்தை முற்றிலும் போக்கி அவருக்கு நாம் வழி ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். நமக்கு உயிர் கொடுத்த தந்தையின் பயத்தைப் போக்கி அவர் மனம் நிம்மதியடையச் செய்வது புத்திரர்களாகிய நம்முடைய கடமை.

பரலோகத்தைப் பற்றி நம்முடைய தந்தை பயப்படுகிறார். அந்தப் பயத்தை நாம் போக்க வேண்டும். இதுவரையில் நாம் அவருக்கு எள்ளளவும் துக்கமோ அதிருப்தியோ தந்ததில்லை. இப்போது நாம், அவர் பரலோகத்தைக் குறித்து பயப்படுவதற்குக் காரணமாகி விட்டோம். அதைச் சுலபமாக நாம் தீர்க்கலாம். அப்படிச் செய்யாமல் அவருடைய சங்கடத்தை அதிகப்படுத்தலாமா?

இந்தக் காரணத்தினால், லட்சுமணா! பட்டாபிஷேகத்தைப் பற்றி முற்றிலும் என் மனம் விலகி, வனம் போவதிலேயே ஈடுபட்டு விட்டது. நான் காட்டுக்குப் போய் பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதே என்னுடைய ஆசையும் மகிழ்ச்சியுமாகி விட்டது. இதைத் தாமதப்படுத்தினால் கைகேயிக்குச் சந்தேகம் உண்டாகும். ஆனபடியால், இன்றே வனம் சென்று அவளுடைய மனம் நிம்மதியடையச் செய்யவேண்டும். சத்தியப் பிரதிக்ஞையைப் பற்றிய பயம் தீர்ந்துபோய் நம் தந்தை சுகமாக இருப்பார்.

நான் துயரமடைவேன் என்றல்லவா அவர் வேதனைப்படுகிறார். எனக்குக் கொஞ்சமும் துக்கமில்லை என்று அவருக்குத் தெளிவாகச் செய்தால் அவருடைய வேதனை அவரை விட்டு விலகும். இதனாலேயேதான் நான் அவசரப்படுகிறேன்.

கைகேயியைப் பற்றி நாம் கோபித்துக் கொள்ளக் கூடாது. நம்மிடத்தில் அவள் இதுவரையில் எவ்வளவு ப்ரீதி வைத்திருந்தாள்! திடீரென்று இம்மாதிரியான எண்ணம் அவளுக்கு உண்டானது விதியின் காரணம். நாம் அவளை நிந்திக்கலாகாது.

மனிதர்கள் ஏதேதோ சங்கற்பம் செய்வார்கள்; ஆனால் விதி வேறு விதமாகத் தீர்த்து விடுகிறது! இது கைகேயினுடைய காரியமே அல்ல. விதி அவளை ஒரு அறிவில்லாத கருவியாகப் பயன்படுத்திஇருக்கிறது. பழியைச் சுமக்கும் துக்கம் அவளுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அவளிடத்தில் நாம் வைத்து வந்த அன்பு அப்படியே இருக்க வேண்டும். வஞ்சக எண்ணம் அவள் உள்ளத்தில் முந்தியே இருந்திருந்தால், அவள் நடவடிக்கை வேறு விதமாக இருந்திருக்கும். திடீரென இந்த விதம் நிர்த்தாட்சண்யமாக, ராமனை `நீ வனவாசம் செல்’ என்று தன் வாயாலே சொல்வதற்குக் காரணம் தெய்வச் செயலே! சந்தேகமில்லை!

அவள் மேல் நாம் கோபம் கொள்ளக்கூடாது! அவள் எவ்வளவு மேன்மைக் குணம் பொருந்தியவள். நம்மைப் பெற்ற தாயைப் போலப் பார்த்து வந்தாள். பண்பாடு அடைந்தவள், புருஷன் எதிரில் இம்மாதிரிக் கூச்சமின்றி ஏன் நடந்துகொண்டாள்? இதற்குத் தெய்வத்தின் செயல் அல்லாமல் வேறு காரணம் இருக்க முடியாது. விதியை யார் தான் எதிர்க்கமுடியும்?

மகா தீரர்களான ரிஷிகள் கூடத் தங்கள் தவத்திலிருந்து திடீரென வழுவிப் போயிருக்கிறார்கள். தெய்வத்தால் வந்ததை எதிர்க்கும் ஆற்றலைக் கைகேயி எப்படிப் பெறுவாள்? நம்முடைய மனோ தைரியத்தால் இந்த அனர்த்தத்தை நாம் சந்தோஷ நிகழ்ச்சியாகச் செய்து விடுவோம். அதுவே நம் வீரத்திற்கு அடையாளம்.

லட்சுமணா! வனம் செல்வதற்குச் சங்கற்பம் முறைப்படி செய்து பெரியோர்களுடைய ஆசியைப் பெற்றுக்கொண்டு நாம் உடனே போகவேண்டும். தாமதம் கூடாது. அபிஷேகத்திற்குக் கொண்டு வந்திருக்கும் கங்கை ஜலத்தைக் கொண்டுவா. அதையே வனவாச விரத சங்கல்பத்திற்கு உபயோகித்துக் கொள்கிறேன்; இல்லை! வேண்டாம், அந்த ஜலம் பட்டாபிஷேகத்திற்கு உபயோகப்பட வேண்டிய ராஜாங்கப் பொருள். அதை நாம் எப்படித் தொடலாம்.

நாமே கங்கை சென்று ஜலம் கொண்டு வருவது நலம். தம்பி! விசனப்படாதே! ராஜ்யம் சம்பத்து இவைப்பற்றிச் சிந்தனை செய்யாதே. வனவாசம் எனக்கு மேன்மையான பாக்கியம். நம்முடைய சிறிய அன்னை பெயரில் கோபிக்க வேண்டாம். தெய்வம் வகுத்ததை அவள் பெயரில் போடலாகாது’ என்றான்.

எந்தக் காரியம் நடந்தாலும், அதற்கு `விதிதான்’ காரணம் என்று முடிவு கட்டிவிட்டால், கோபம் வராது அல்லவா?

`இன்னார் தன்னை வஞ்சம் தீர்த்துக் கொள்ள முயன்றார்கள்’ என்று நினைத்து வேதனையடைவதைவிட, `இதிலே விதி விளையாடுகிறது’ என்று முடிவு கட்டிவிடுவது கோபமே எழாமல் செய்துவிடும் அல்லவா?

நதியின் பிழையன்று நறும்புன லின்மை; அற்றே

பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள்

மதியின் பிழையன்று; மகன்பிழை யன்று மைந்த!

விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்ட தென்றான்.

கம்பர் சித்திரத்தில் இலக்குவன் கோபத்தையடக்க ராமன் சொன்ன சமாதானம் இது.

உவமைதான் எவ்வளவு சுவையானது!

தண்ணீரில்லாமல் போவது, நதி செய்த குற்றமல்லவே?

அதுபோலவே காய்ந்து போய்க் கிடப்பது காடு செய்த குற்றமல்லவே?

கடலில் திமிங்கலங்கள் இருப்பது கடல் செய்த குற்றமல்லவே?

ஒன்றுக்காகவே ஒன்றைக் கோபித்துக்கொண்டால் நிம்மதியை இழப்பதுதான் மிஞ்சும்.

ஆகவே, `எந்தக் கட்டத்திலும், எந்தச் சூழலிலும் கோபமே வரக்கூடாது’ என்று போதிக்கிறது இந்துமதம்.

`ஆறுவது சினம்’ என்றார் ஔவையார்.

`எரிகிறதைப் பிடுங்கினால். கொதிக்கிறது அடங்கிப் போகும்’ என்பது கிராமத்துப் பழமொழி.

`சினம் என்பது சேர்ந்தாரையே கொல்லும்’ என்றார் வள்ளுவர்.

அதற்குச் `சேர்ந்தாரைக் கொல்லி’ என்றே ஒரு பட்டம் கொடுத்தார்.

உன் கோபம் செல்லாத இடத்தில் நீ கோபம் கொள்ளுவது தீமை பயக்கும்.

`செல்லக்கூடிய இடத்திலும் அதைவிடத் தீமை எதுவுமே இல்லை’ என்றார் அவர்.

செல்லா இடத்துச் சினந்தீது; அல்லிடத்தும்

இல்லதெனில் தீய பிற.

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான்; அல்லிடத்துக் காக்கிலென் காவாக்கால் என்?

 

உன் மனைவியை நீ உதைத்தால் யாரும் உன்னைக் கேட்க முடியாது.

அவளும் உன்னைத் திருப்பி உதைக்க மாட்டாள்.

இது உன் கோபம் செல்லக்கூடிய இடந்தான்.

ஒரு பயில்வானிடம் நீ கோபம் கொண்டால் அவன் உன்னைத் தீர்த்துக் கட்டிவிடுவான்.

அது உன் கோபம் செல்லாத இடம்.

இந்த இரண்டு இடங்களிலுமே கோபம் தவறு என்கிறார் வள்ளுவர்.

`கோபம் பாவம், சண்டாளம்’ என்கிறார்கள் நமது மூதாதையர்கள்.

இராமாயணத்தில் முக்கியமான கட்டம் எங்கிருந்து தொடங்குகிறது?

முதலில் சூர்ப்பனகை மீது இலக்குவன் கொண்ட கோபம்.

அதனால் மூக்கிழந்து நின்ற தங்கையைப் பார்த்து, இராவணன் கொண்ட கோபம்.

இலக்குவன் கோபம், செல்லக்கூடிய இடத்திலேயே நிகழ்ந்தது.

இராவணன் கோபம், செல்லாத இடத்திலே நிகழ்ந்தது.

இராம கதையில் ஒரு முடிச்சு விழுந்தது.

ஆத்திரத்தில் மகனை வெட்டியவன், குழந்தையைக் கொன்றவன் என்று எத்தனை குற்றவாளிகளை நீ வாழ்க்கையில் சந்தித்திருக்கிறாய்!

`கொலை’ என்பது எந்தக் காரணத்திற்காக நிகழ்ந்தாலும், அதற்கு மூலகாரணம் கோபந்தானே!

சிறைச்சாலையில் உள்ள கொலைக் குற்றவாளிகள் அனைவருமே ஆத்திரத்தால் அறிவிழந்தவர்கள் தான்.

நான் திருச்சி சிறையில் இருந்தபோது, அண்ணன் தம்பிகளாகவே ஜோடி ஜோடிகளாகச் சில ஆயுட்காலக் கைதிகள் இருந்தார்கள்.

வயற்காட்டுக்குக் கஞ்சி கொண்டுபோன அண்ணனின் மனைவியை ஒருவன் கையைப் பிடித்து இழுத்தான்.

அவனை வெட்டிக் கொல்ல அண்ணன் போனான்.

கூடவே தம்பியும் போனான்.

விளைவு!

கைப்பிடித்து இழுத்தவன் கொல்லப்பட்டான்.

ஆனால், அண்ணனின் மனைவி நிர்க்கதியானாள்.

காவலுக்கு ஆள் இல்லாத நிலையிலேயே, கொல்லப்பட்டவனின் உறவினர்கள் சிலராலே அவள் கற்பழிக்கப்பட்டாள்.

அதைத் தடுக்க அந்தச் சகோதரர்களால் முடியவில்லையே!

எதன்மீது ஆத்திரமுற்று அவர்கள் கொலை புரிந்தார்களோ அதே காரியம் நடந்தே விட்டது.

அப்போது அவர்கள் அந்தக் கொலையை மட்டும் செய்யாமல், வேறு வழியில் எதிரியைப் பழி வாங்கியிருந்தால், வெளியிலேயே இருந்து தங்கள் குலமகளைக் காப்பாற்றி இருக்க முடியும்.

கோபம் முதற்கட்டத்தில் `வென்றது’ போலத் தெரிந்தால் `நிரந்தரமாகத் தோல்வியடையப் போகிறது’ என்று பொருள்.

திருச்சியிலிருந்து பெரம்பலூர் செல்லும் வழியில் மலையடிவாரத்தில் ஒரு சிற்றூர்.

அங்கே இரண்டு சகோதரர்கள்.

இருவரும் `ரெட்டியார்’ சாதியைச் சேர்ந்தவர்கள்.

அவர்களுடைய சிற்றன்னைக்கும், அந்த ஊர்க் கிராம முன்சீப்பிற்கும் தொடர்பு ஏற்பட்டுவிட்டது.

தன் சொத்துக்களை எல்லாம் அந்தக் கிராம முன்சீப்பிற்கு அவள் கொடுக்கப்போவதாக, அவர்கள் கேள்விப்பட்டார்கள்,

ஆத்திரமுற்றார்கள்.பட்டப்பகலில் இருவரும் சிற்றன்னையை வெட்டிக் கொன்றார்கள்.

கண்கண்ட சாட்சிகள் ஏராளம்.

இருவரும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்கள்.

விளைவு?

சிற்றன்னையின் சொத்துக்களை அவள் விரும்பியது போலவே கிராம முன்சீப்பே அனுபவிக்க ஆரம்பித்தார்.

இதன் பொருள் என்ன?

`எது நடக்கக்கூடாது’ என்பதற்காக நீ கோபப்படுகிறாயோ, நீ கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்திற்காக, அது நடந்தே விடுகிறது.

ஆகவே, எதையும் சாதிக்க விரும்பும் மனிதனுக்கு `நிதானம்’ தான் அற்புதமான ஆயுதமே தவிர கோபம் அல்ல.

கைகேயி வாங்கிய வரங்கேட்டு இலக்குவன் கோபப்பட்டது போலவே இராமனும் கோபப்பட்டிருந்தால், அந்த வரத்தை மீறி முடி சூட்டிக்கொண்டிருந்தால் `ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி’ என்ற தியாக புருஷனை நாம் வணங்கப்போவதில்லை.

பாகிஸ்தானில் இந்துக்களுக்கு நேர்ந்த அநீதியை எதிர்த்து அப்பொழுதே நேருஜி நேரடி யுத்தம் தொடர்ந்திருந்தால், உலகத்தில் அவருடைய மரியாதையும் உயர்ந்திருக்காது. நம்முடைய மரியாதையும் உயர்ந்திருக்காது.

அரபு நாடுகளின் நட்புறவும் கிடைத்திருக்காது.

உள்நாட்டில் நிம்மதியும் இருந்திருக்காது.

அவரது நீண்டகாலச் சகிப்புத் தன்மையின் விளைவாக எதிரிகள் தாங்களாகவே பணிந்தார்கள்.

வெற்றிக்கு மேல் வெற்றி பெற்ற ஹிட்லரின் கோபம் தானே, அவனது சடலத்தைக்கூட ஜெர்மானிய மக்கள் காண முடியாமல் அழித்து

விட்டது.காமம், குரோதம், லோபம், மதம், மாச்சரியம் என்று ஐந்து தீய குணங்களை வடமொழி குறிப்பிடுகிறது.

இதில், `குரோதம்’ இரண்டாவது இடத்தை வகிக்கிறது.

`பஞ்சமாபாதகங்களில் கோபம் ஒன்று’ என்கிறது.

எவ்வளவு பெரிய கொடுமை உனக்கு இழைக்கப்பட்டாலும், அந்த நேரத்தில், அதை விதி என்று சகித்துக் கொண்டுவிட்டால், கொஞ்ச நாளில் நிலைமையே தலை கீழாகி விடும்.

கோபத்தில் உடனே நீ நடவடிக்கை எடுத்தால் நிலைமை பயங்கரமாகி விடும்.

முன்பெல்லாம் `எவரையாவது தாக்கி எழுத வேண்டும்’ என்று எனக்குத் தோன்றினால் அவசரமாக எழுதிவிடுவேன்.

பிறகு சாவகாசத்தில் சங்கடப்படுவேன்.

இப்பொழுதெல்லாம் எழுதத் தோன்றுவதை இரண்டு நாள் ஒத்திவைக்கிறேன்.

சூடு தணிந்து மனோபாவம் மாறிவிடுகிறது.

முன்பு, தினமும் ஒரு எதிரியைச் சம்பாதித்துக் கொள்வேன்.

இப்போது அது இல்லை.

எல்லா மனிதரும் கோபத்தை மட்டும் கைவிட்டு விட்டால், கோர்ட்டுகளின் வேலை குறைந்து போகும்.

பத்திரிகைகளுக்குப் பரபரப்பான செய்தி கிடைக்காது.

ஒவ்வொரு மனித ஆத்மாவும் `மகாத்மா’ ஆகிவிடும்.

சரீர தத்துவப்படி ஒரு உணர்ச்சியில் இதயம் விழுந்து கொதிக்கும்போது, உடம்பும் கொதிக்கிறது.

அந்தக் கொதிப்பு மூளையிலும் ஏறுகிறது.

உஷ்ணத்தால் தாக்கப்பட்ட மூளை நிதானமிழந்து போகிறது.

ஆகவே, செய்தியைக் காதில் வாங்கும்போதே மிகச் சாதாரணமாக, சகஜமாக வாங்கிக் கொள்வது ஒன்றே கோபம் வராமல் தடுக்க ஒரே வழி.

கடைசியாக-

கோபத்தைப் பற்றி, காஞ்சிப் பெரியவர்கள் கூறியுள்ள கருத்தை அப்படியே கொடுத்து முடிக்கிறேன்.

அவர் சொல்கிறார்:

`நமக்கு அநேக சந்தர்ப்பங்களில் கோபம் வருகிறது; முக்கியமாக இரண்டு விதங்களில் கோபம் வருகிறது.

ஒருவன் ஒரு தப்புக் காரியம் செய்தால் அவனிடம் கோபம் ஏற்படுகிறது. அல்லது ஒருவன் நம்மைத் தூஷித்தால் அவனிடம் கோபம் வருகிறது. யோசித்துப் பார்த்தால் இந்த இரண்டு விதங்களிலும், எவரிடமும் கோபம் கொள்வதற்கு நமக்கு யோக்கியதை இல்லை என்று தெரியும்.

ஒருவன் தப்புப் பண்ணுகிறான் என்றால் கோபம் கொள்கிறோமே, அப்படியானால் நாம் தப்புப் பண்ணாதவர்களா? ஒருவனைப் பாவம் என்று நாம் துவேஷிக்கும் போது, நாம் அந்த பாவத்தைப் பண்ணாதவர் தானா என்று நினைத்துப் பார்க்க வேண்டும். காரியத்தில் பண்ணாவிட்டாலும் மனசால் பண்ணிக் கொண்டேதான் இருக்கிறோம். நம்மைவிடப் பாவமும் தப்பும் பண்ணுகிறவர்கள் இருக்கலாம். நம் மனசு ஏதோ ஒரு அளவுக்குப் பக்குவம் அடைந்திருப்பதால், நாம் இந்த அளவு பாவத்தோடு நிற்கிறோம். அவனுடைய மனசுக்கு இந்தப் பக்குவம்கூட வராததால் இன்னும் பெரிய பாவம் பண்ணுகிறான்.

நாம் செய்கிற தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு எத்தனை பாடுபட வேண்டியிருக்கிறது? நம்மையும்விட மோசமான நிலைக்கு இறங்கிப் பாவங்களைச் செய்யப் பழகிவிட்ட இன்னொருத்தனின் மனசுக்கும் அதிலிருந்து மீளுவது சிரமமான காரியம்தான்.

அப்படிப்பட்டவனோடு நாம் சேர்ந்திருக்க வேண்டும் என்பதில்லை. அஸத்ஸங்கத்தை விட்டு ஸத்ஸங்கத்தில் சேர்வதுதான் ஆத்மா விருத்திக்கு முதல் படி என்று சகல சாஸ்திரங்களும் சொல்கின்றன.

ஆனால் பாவிகளை நாம் வெறுப்பதிலும் கோபிப்பதிலும் பயனில்லை. `அவர்களுடைய மனசும் நல்ல வழியில் திரும்ப வேண்டும்’ என்று பிரார்த்திப்பதொன்றே நாம் செய்ய வேண்டியது. ஈசுவரானுக்கிரகத்தில், நம்மில் யாருக்காவது அனுக்கிரக சக்தி கிடைத்திருந்தால், அதை இந்தப் பாவிகள் கரையேறுவதற்கே உபயோகிக்க வேண்டும்.

நம் கோபம் எதிராளியை மாற்றாது. அவனுக்கு நம்மிடத்தில் கோபத்தை உண்டாக்குவதுதான் அதன் பலன். இரண்டு பக்கங்களிலும் துவேஷம் வளர்ந்துக் கொண்டே போகும். ஒருவன் தன் தப்பைத் தானே உணர்ந்து திருந்தச் செய்யாமல், நம் கோபத்துக்குப் பயந்து நடந்து காட்டுவதில், நமக்குப் பெருமையில்லை. இது நிலைத்தும் நிற்காது. அன்பினாலேயே பிறரை மாற்றுவதுதான் நமக்குப் பெருமை; அதுதான் நிலைத்து நிற்கும்.

ஒருத்தன் பாவம் செய்ய அவனுடைய மனசு, சந்தர்ப்பம் இரண்டும் காரணமாகின்றன. நாம் பல பாவங்களைச் செய்யாமல் சந்தர்ப்பங்களே நம்மைக் கட்டிப் போட்டிருக்கலாம். எனவே ஒரு பாவியைப் பார்க்கும் போது, `அம்பிகே! இந்தப் பாவத்தை நானும் கூட செய்திருக்கலாம். ஆனால், அந்தச் சந்தர்ப்பம் தராமல் நீ கிருபை செய்தாய். அந்தக் கிருபையை இவனுக்கும் செய்யம்மா’ என்று பிரார்த்திக்க வேண்டும்.

இரண்டாவதாக நம்மை ஒருத்தர் துவேஷிக்கிறார் என்றும் கோபம் கொள்ள வேண்டியதில்லை. நாம் எத்தனை தூஷணைக்குத் தக்கவர் என்பது நம் உள்மனசுக்குத் தெரியும். ஒரு வேளை நம்மைத் தூஷிக்கிறவர் நாம் செய்யாத தவறுக்காக நம்மைத் திட்டிக் கொண்டிருக்கலாம். ஆனால் நாம் செய்த தவறுகள் அதைவிடப் பெரியவை என்று நம் அந்தரங்கத்திற்குத் தெரியும். நம் தவறுகளைக் கழுவிக்கொள்வதற்காக, ஒவ்வொரு நாளும், அம்பாளிடம் பச்சாதாபத்துடன் அழவேண்டிய நிலையில் தான் இருக்கிறோம். இந்த நிலையில் உள்ள நாம் பிறரைத் தப்புக் கண்டுபிடித்துக் கோபிக்க நியாயம் ஏது?

நாம் தப்பே செய்யவில்லை என்றால், அப்போது பிறரைக் கோபிக் கலாமா என்றால், இப்படித் தப்பே பண்ணாத நிலையில் நாம் அன்புமயமாகி விடுவோம். அப்போது நமக்குப் பாவியிடமும் கருணை தவிர வேறு எந்தப் பாவனையும் இராது; கோபமே உண்டாகாது. நாம் தப்புச் செய்தவர்கள் என்றாலோ, நமக்குப் பிறரைக் கோபிக்க யோக்கியதை இல்லை. தப்பே பண்ணாத நிலையிலோ, எல்லாம் அம்பாள் லீலைதான் என்று தெரிகிறது. லீலையில் யாரைப் பூஜிப்பது, யாரைத் தூஷிப்பது?எப்படிப் பார்த்தாலும் கோபம் கூடாதுதான்.

மனிதனைப் பாவத்தில் அழுத்துகிற இரண்டு பெரும் சக்திகள், `காமமும் குராதமுமே’ என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. அதாவது நம் கோபத்தினால் நமக்கே தான் தீங்கு செய்து கொள்கிறோம். பெரும்பாலும், நம்முடைய கோபத்தை எதிராளி பொருட்படுத்துவதே கிடையாது. ஆத்திரப்படுவதால், நாமே நம் மனசு, சரீரம் இரண்டையும் கெடுத்துக் கொள்வதோடு சரி. அன்பாக இருப்பதுதான் மனிதனின் ஸ்வபாவமான தர்மம். அதுதான் ஆனந்தமும். அன்பு நமக்கும் ஆனந்தம் எதிராளிக்கும். `அன்பே சிவம்’ என்பார்கள். நாம் எல்லாரும் அன்பே சிவமாக அமர்ந்திருக்கப் பிரயாசைப்பட வேண்டும்.’



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

காம உணர்ச்சி

மனிதன் என்று ஒருவன் இருக்குமிடம் எங்கும், காமம் என்று ஒன்று இருந்தே தீருகிறது.

அது ஆண்மை, பெண்மை இரண்டையும் சோதிக்க ஆண்டவன் நடத்தும் லீலை.

உடல் உணர்வு அல்லது பாலுணர்ச்சி என்பது மேலோங்கிய நிலையிலேயே உலகத்தில் பாவங்கள் அதிகரித்தன.

நமது இதிகாசங்கள், புராணங்கள் மட்டுமல்லாது வரலாறும் அதையே குறிக்கிறது.

சரிந்துபோன சாம்ராஜ்யங்கள் பலவற்றிற்கு, காமமே முதல் காரணமாக இருக்கிறது.

தலைமறைவாக இருந்த கொள்ளைக்காரர்கள், புரட்சிக்காரர்களில் பலர், தம்மை மறந்த நிலையில் பிடிபட்டதற்கும், காமமே காரணமாக இருக்கிறது.

சராசரி மனித வாழ்வில் பசி, காமம் இரண்டும் தவிர்க்க முடியாதவை.

கட்டுப்பாடாக அதைத் தவிர்த்தவர்களுக்குப் பெயரே ஞானிகள்.

உடல் வற்றிப்போய் காய்ந்த எலும்புக்கூடக் கிடைக்காமல், பசியோடு அலையும் ஆண் நாய் ஒன்று ஒரு பெண் நாயைக் கண்டவுடன் பசியையும் மறந்து, காம உணர்வு கொள்வதாக ஒரு பாடல் உண்டு.

வட மொழியில் `காமம்’ என்ற வார்த்தைக்கு, `பாலுணர்ச்சி’ என்பது மட்டுமல்லாமல், வேறு பல பொருள்களும் உண்டு.

ஆனால், பாலுணர்ச்சியை மையமாகக் கொண்டு, இந்துமதத் தத்துவங்களை ஆராயப் புகுந்தால், அதைத் தவிர்ப்பதற்கு, அது சொல்லும் வழிகள் ஏராளம்.

முதலில், சந்நியாசிகளில் ஒரு வகையினர் நிர்வாணமாக இருப்பதே, இந்த உணர்ச்சியைத் தவிர்க்கத்தான்.

`பார்ப்பதற்கு அருவருப்பான ஒரு தோற்றத்தைத் தான் பெற்றிருந்தால், பெண்களுக்குத் தன்மீது ஆசை வராது’ என்பதே அந்த நிர்வாணத்தின் நோக்கம்.

ஆடை, அணி மணி அலங்காரங்களினால் மூடப்பட்ட உடம்பு, சுருதியைத் தூண்டி விடுகிறது.

அழகாக அலங்கரிக்கப்பட்ட சிகையும், சவரம் செய்யப்பட்ட முகமும் பெண்களின் உணர்ச்சித் தந்தியை மீட்டி விடுகின்றன.

ஆகவே, அலங்கோலமான உருவத்தைச் செயற்கையாக தேடிக்கொள்வதே ஜடாமுடி தரிப்பதன் நோக்கம்.

அவர்கள் வெறும் கோவணத்தோடு இருப்பதற்கும் காரணம் அதுதான்.

அண்மையில் `ஹரே கிருஷ்ணா ஹரே ராமா’ இயக்கம் அமெரிக்காவில் வெகு வேகமாகப் பரவத் தொடங்கியதும், அங்கு ஏற்படுத்தப்பட்ட ஆசிரமங்களில் ஒன்றில் ஒரு புது யாகத்தைத் தொடங்கினார்கள்.

சுமார் பன்னிரண்டு ஆண்களும் பெண்களும், `ஒரு ஆண் ஒரு பெண்’ என்று மாற்றி மாற்றி வட்டமாகத் தொடையளவு தண்ணீரில் நின்றார்கள்.

ஒருவர் தோள் மீது ஒருவர் கை போட்டுக்கொண்டார்கள்.

`ஒருவரது அங்கத்தை இன்னொருவர் பார்த்தாலும் தோளிலே கை போட்டுக் கொண்டாலும் உணர்ச்சி கிளர்ந்தெழாமல் அடக்கவேண்டும்’ என்பதே இந்த யாகத்தின் நோக்கம்.

`லைப்’ என்ற பிரபல ஆங்கிலப் பத்திரிகையில் இந்தப் படத்தை நான் பார்த்தேன்.

உடம்பு ஆரோக்கியமாக இருக்கும்போதே, காம வேகத்தைத் தவிர்ப்பதற்கு இந்து மதம் வழி காட்டுகிறது.

சகல உணர்வுகளையும், உறவுகளையும், துறந்து விட்டநிலைக்கு, `நிர்வாணம்’ என்பது பெயர்.

அந்த மகா நிர்வாணத்தை, இந்து தத்துவங்களில் இருந்தே பெளத்தம் எடுத்துக்கொண்டது.

இந்து மதமே உலகின் ஆதி மதம்.

`சந்நியாசம்’, `துறவு’ என்பவை அது உண்டாக்கியவையே.

அந்தத் துறவு நிலையை உடையவர்களே உலகத்திற்கு உபதேசிக்க முடியும் என்பதால் பின்னால் தோன்றிய ஒவ்வொரு மதமும் அதனை மேற்கொண்டன.

உணர்ச்சியைத் தூண்டும் உணவுப் பொருள்களையும் உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவுப் பொருள்களையும் விலக்கி, கடுங்குளிரிலும்கூட குளிர்ந்த நீரிலே நீராடி, காம உணர்வை அகற்றினர் இந்து ஞானிகள்.

ஆண் பெண் உறுப்புக்களுக்கு அவர்கள் `ஜனனேந்திரியங்கள்’ என்று பெயர் கொடுத்தார்கள்.

சில உயிர்களுக்குப் பிறப்பைக் கொடுப்பதற்காக மட்டுமே இந்த அங்கங்கள் படைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் நம்பினார்கள்.

அதில் ஏற்படுகின்ற சுகத்தை `அற்ப சுகம்’ என்றார்கள்.

தமிழுங்கூட அதைச் `சிற்றின்பம்’ என்றே அழைத்தது.

மனைவி என்பவள் தன் கணவனின் காமச் சூட்டைத் தணிப்பதற்காக வரும் வெறும் கருவியல்ல.

அதற்கு மேற்பட்ட சமூக சம்பிரதாயங்களே அவளுக்கு அதிகம்.

ஆணைவிடப் பெண்ணுக்கு ஐந்து மடங்கு அதிகமான உணர்ச்சி உண்டு.

ஆனால், பத்து மடங்கு அடக்கம் உண்டு.

இது இயற்கையாக அவளுக்கு வந்ததல்ல.

இந்து மதம் காலகாலங்களாகப் பெண்ணை அப்படிப் புடம் போட்டு எடுத்தது.

இழிந்த குலப்பெண்கள், இதன் மறு எல்லைக்குப் போவதுண்டு.

அந்த இரண்டு வகைப் பெண்களையும் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றும், சமண இலக்கியங்களில் ஒன்றுமான `சீவக சிந்தாமணி’ காட்டுகிறது.

ஒரு பாடலில் உயர்ந்த பெண்ணைக் குறிக்கும் போது,

சாமெனில் சாதல் நோதல்
தன்னவன் தணந்த காலை
பூமனும் புனைதல் இன்றிப்
பொற்புடன் புலம்ப வைகிக்
காமனை என்றும் சொல்லார்
கணவற்கை தொழுது வாழ்வார்!
தேமலர்த் திருவோ டொப்பார்
சேர்ந்தவன் செல்லல், தீர்ப்பார்!

என்கிறது.

தாழ்ந்த பெண்டிரைக் குறிக்கும்போது,

பெண்ணெனப் படுவ கேண்மோ
பீடில பிறப்பு நோக்கா
உள்நிறை உடைய வல்ல
ஓராயிரம் மனத்த வாகும்,
எண்ணிப்பத் தங்கை யிட்டால்
இந்திரன் மகளும் ஆங்கே
வெண்ணெய்க்குள் றெரியுற் றாற்போல்
மெலிந்துபின் நிற்கு மன்றே!

என்கிறது.

இந்த இருவகைப் பெண்டிரில், முதல் வகையினர் நூற்றுக்குத் தொண்ணூறு பேராவர்.

இரண்டாம் வகையினர் விதிவிலக்கில் சேர்க்கப் படவேண்டியவர்கள்.

ஒரு குல மகளுக்குப் பள்ளியறையும், காம உணர்ச்சியும், ஒரு குழந்தைக்குத் தாயாகிற தொழிலுணர்ச்சியே தவிர, சுகம் முதல் காரணமாகாது.

`சுகமும் அதிலே ஒன்று’ என்பதைத் தவிர, அதற்கு ஒரு தனி முக்கியத்துவத்தை அவர்கள் கொடுப்பதில்லை.

காரணம், இந்து மதம் அவர்களை அப்படி வளர்த்திருக்கிறது.

கணவனிடம் அத்தகைய சுகம் கிடைக்கா விட்டாலும் குழந்தைக்குப் பாலூட்டுவதிலேயே அதைப் பெற்றுவிடுகிறாள் ஒரு இந்துப் பெண்.

காமத்தின் மின்சாரத் தாக்குதல், நற்குடிப் பிறந்த இந்துப் பெண்களிடம் பலிப்பதில்லை.

ஆனால், ஆடவர்களது நிலை வேறு.

அவர்களது ரத்த அரிப்பு, அந்த எல்லைக்கும் அவர்களைத் துவண்டுகிறது.

லெளகீக மனிதனுக்கு இந்த ராட்சத அரிப்பு ஏற்படும் போது, குலப்பெண்களைக் கெடுக்காமல், அவன் அந்த உணர்ச்சியைத் தணித்துக்கொள்வதற்காகவே `தேவதாசி முறை’ ஏற்பட்டது.

முடிந்தவர்களுக்கு ஏக பத்தினி விரதத்தையும், முடியாதவர்களுக்கு இந்த வகை வாழ்க்கையையும், அது அனுமதித்தது.

ஒரே இதிகாசத்தில் ஒரே அரண்மனையில், இந்த இருவகைக் காட்சிகளையும் அது காட்டிற்று.

`தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவியர்’ என்றது.

அவன் மகன் ராமன், `ஏகபத்தினி விரதன்’ என்றது.

அது தசரதன் செயலைக் குற்றம் சாட்டவில்லை.

ஆனால், ராமனின் நடத்தையைப் புகழ்ந்துரைத்தது.

பல மாதர் உறவுக்கு அது நியாயம் கற்பிக்கவில்லை.

ஆனால், அனுமதித்தது.

அதே சமயம், ஒருதார வாழ்க்கையை உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றிற்று.

அதைத் `தெய்வீகம்’ என்றது.

மனித மனத்தின் சபலங்களை அங்கீகரித்து, அதைத் தட்டிக் கொடுத்து, மெதுமெதுவாக மீட்பதே அதுசெய்யும் பணி.

எந்த உணர்ச்சியையும், அது அறுவைச் சிகிச்சை மூலம் தீர்க்க விரும்பவில்லை.

அங்கீகரித்துத் திருத்தும் நாகரிகத்தைக் கையாண்டது.

“நீ பன்றியைக் கூடச் சாப்பிடலாம்; ஆனால் உடலில் கொழுப்பேறிவிடும், பார்த்துச் சாப்பிடு” என்று சொன்னதே தவிர, கட்டளையிடவில்லை.

எண்ணெய் ஸ்நானம் செய்த அன்று மனைவியோடு உறவு கொண்டால், சிலருக்கு ஜன்னி காணும்.

அந்த உடற்கூற்று உண்மையைக்கூட, அது நாகரிகமாக `தரித்திரம் பிறக்கும்’ என்று சொன்னதே தவிர `ஜன்னி காணும்’ என்று பயமுறுத்தவில்லை.

அது காமத்தை ஒருவகைக் குற்றமாகக் கருதவில்லை.

ஆனால், குற்றங்களுக்குக் காரணமான காமத்தை அது கதைகளிலே விவரிக்கிறது.

இளம் விதவைகள் வேதம் படிக்கிறார்கள், புராணம் படிக்கிறார்கள், இதிகாசம் படிக்கிறார்கள். உணர்ச்சியடங்கி விடுகிறதே! எப்படி?

அவர்களே நமது வாரப் பத்திரிகைகளையும், மாதப் பத்திரிகைகளையும் தொடர்ந்து படித்தால் என்னவாகும்?

சராசரி மனிதனின் தவிர்க்கமுடியாத உணர்ச்சியாகிய காமத்தை, இந்து மதம் எவ்வளவு வைதீகமாகக் கையாளுகிறது.

`காமம் எப்போது பாவமாகிறது’ என்பதை அது எவ்வளவு அற்புதமாக விவரிக்கிறது.

இந்து சாஸ்திரங்களில், ஓரிடத்தில் `உடலுக்கு ஏற்ற உறவு எது?’ என்பதுகூடக் கூறப்பட்டிருக்கிறது.

`தன்னைவிடப் பத்து வயதுக்குமேல் அதிகமான ஒரு பெண்ணுடன் ஒருவன் உறவு கொண்டால், அவன் உடம்பு மெலிந்து முகம் களையிழந்து போகிறது.

வயது குறைந்த பெண்ணோடு தொடர்பு கொண்டால் முகம் பிரகாசமடைகிறது.

ஒரு மத சாஸ்திரம் இதை ஏன் விவரிக்க வேண்டும்?

ஒன்று ஒரு ஆரோக்கியமான உடம்புக்குப் பொறுப்பேற்றுக் கொள்வது.

இரண்டு பத்து வயது அதிகமான பெண் குறைந்த வயதுடைய ஆணுடன் தொடர்பு கொள்ள வருகிறாள் என்றால், ஒன்று அவள் கெட்ட நடத்தையுடையவளாக இருக்கவேண்டும்; அல்லது இன்னொருவன் மனைவியாக இருக்கவேண்டும்; அதைத் தடுப்பது.

அப்படியென்றால் குறைந்த வயதுடைய பெண்ணோடு தொடர்பு கொள்வதைச் சிலாகித்துப் பேசுவது கற்பழிப்பதற்கு வகை செய்யாதா?

இல்லை; அதனால்தான் அது பல தார மணத்தை ஏற்றுக் கொண்டது.

நீ எதை விரும்பினாலும், அதற்கொரு அளவை நிர்ணயித்து அதை அனுமதித்துப் பின் உன்னை ஞானியாக்குவதே இந்து மதம்.

காம உணர்ச்சியிலும் அதன் கட்டம் அத்தகையது தான்.

எப்போது காம உணர்ச்சி பாவமாகிறதோ, அப்போது தண்டனை கடுமையாகிறது.

இந்து மதத்தின் பயமுறுத்தல் என்பது அங்கே மட்டும்தான் வருகிறது.

`யாரையும் கெடுக்காத, யாருக்கும் தீங்கிழைக்காத ஒரு ஆடவனின் உணர்ச்சிகளை, இந்து மதம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறது’ என்று நான் சொன்னால் யார் அதை மறுக்கமுடியும்?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மனிதாபிமானம்

`சக்தியும் சிவனும், அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் பாதியாக இருக்கிறார்களே, அவர்களது மீதிப் பாதி எங்கே போயிற்று’ என்று விநாயகப் பெருமானை யாரோ கேட்டார்களாம்.

அதற்கு விநாயகர் `சிவத்தின் பாதிதான் உலகத்தில் ஆண்களாகவும், சக்தியின் பாதிதான் உலகத்தில் பெண்களாகவும் அவதரிக்கிறார்கள்’ என்றாராம்.

இப்படி ஒரு கதை நான் படித்தேன்.

`தெய்வம் மனுஷ ரூபயனா’ என்பது வடமொழி சுலோகம்.

ஒவ்வொரு மனிதனும் பரமனின் அணுவில் தோன்றியவனே!

ஒவ்வொரு பெண்ணும் சக்தியின் அணுவில் பிறந்தவளே!

அதனாலேதான், பிறக்கும்போது குழந்தை வஞ்சகம், சூது, கள்ளம், கபடு அறியாததாக இருக்கிறது.

தெய்வீக அணுவின் அடையாளச் சின்னமே குழந்தை.

ஒவ்வொரு குழந்தையும் தெய்வமாகவே அவதரிக்கிறது!

பிறகு ஏன், சில குழந்தைகள் திருடர்களாகவும், சில குழந்தைகள் அறிஞர்களாகவும், வளர்கின்றன.

இறைவன் உலகத்தில் உணர்ச்சிக்களத்தை உருவாக்க விரும்புகிறான்; உலகத்தை இயக்க விரும்புகிறான்.

எல்லாக் குழந்தைகளும் பிறந்தபோது இருந்தது போலவே வளரும்போதும் இருந்துவிட்டால், உலக வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமற் போய்விடும்.

மாறுபட்ட உணர்ச்சி இல்லை என்றால், மோதல்கள் இல்லாமற் போய்விடும்.

மோதல்கள் இல்லை என்றால், உண்மை என்ற ஒன்று
அறியப்படாமற் போய்விடும்.

`நிழலருமை வெய்யிலிலே நின்றறிமின்’ என்றார்கள்.

நிழலை உணர வெயில் தேவை.

மழையை உணர வறட்சி தேவை.

மனிதாபிமானத்தை உணர மிருகத்தனம் தேவை.

தெய்வீகத்தை உணர மனிதர்கள் தேவை.

உமையும் மகேஸ்வரனும் படைத்த ஆண் பெண்கள் மூன்று வகையாக உருப்பெறுகிறார்கள்.

மிருகம்;

மனிதன்;

தெய்வம்.

கேவலமான உணர்வுக்கும், உயர்ந்த உணர்வுக்கும் நடுவே சராசரி மனிதன் நிற்கிறான்.

மிருகத்தைப் பார்க்கும்போது, மனிதாபிமானத்தின் மீது பற்று வருகிறது.

மனிதனைப் பார்க்கும்போது, தெய்வம் தேவைப்படுகிறது.

எல்லோருமே தெய்வங்களாகி விட்டால், தெய்வத் தத்துவம் செத்துப்போகும்.

எல்லோருமே மிருகங்களாகி விட்டால், தெய்வமே பயனற்றுப் போகும்.

நடுவே நிற்கும் மனிதனே, உலக இயக்கத்தின் பிதாவாகிறான்.

அவனைப் பார்த்தே தெய்வங்களும், மிருகங்களும் உணரப்படுகின்றன.

அதனால்தான் மிருகத்திற்கும் தெய்வத்திற்கும் நடுவே உள்ள மனிதனிடம் ஒரு அபிமானத்தை வளர்க்க இந்துமதம் முயற்சி எடுத்தது.

இதன் பெயரே மனிதாபிமானம்!

இதிகாசங்களில் வருகிறவர்கள் மனிதர்கள் தான். ராமன் என்ற மனிதன் தன் நடத்தையால் தெய்வமானான்.

இராவணன் என்ற மனிதன் தன் நடத்தையால் மிருகமானான்.

பாண்டவர்கள் தெய்வமானார்கள்.

கெளரவர்கள் மிருகமானார்கள்.

மனிதனுக்கு மனிதன் அபிமானத்தை வளர்த்தால் மனிதன் உள்ளத்திற்குள்ளேயே தெய்வம் தோன்றிவிடுகிறது.

மனத்தைக் `கோயில்’ என்கிறார்கள்; அதில் அமர்த்தப்படும் தெய்வமே மனிதாபிமானம்.

ஞானிகள் வானத்திலிருக்கும் தெய்வத்தைக் காண முயலவில்லை; மனிதனுக்குள்ளே தெய்வத்தைக் காண முயன்றார்கள்.

`தர்மம்’ என்ற வார்த்தையின் மூலம், கோவிலிலிருக்கும் தெய்வத்தை மனிதனுடைய இதயத்திற்குள் கொண்டுவர முயன்றார்கள்.

அன்புள்ளவன் தெய்வம்.

கருணையுள்ளவன் தெய்வம்.

கற்புள்ளவள் தெய்வம்.

`பண்புள்ளவள் தெய்வம்’ என்று மனித நிலையின் மேம்பாடுகளைத் தெய்வ நிலைகளாகக் குறித்தார்கள்.

அதனால்தான், கீழ்த்தர உணர்வுகளிலிருந்து மனிதனை மேல்நோக்கிக் கொண்டு வருவதற்கு `மதம்’ என்ற ஒரு அமைப்பு தேவைப்பட்டது.

அந்த வகையில், முதலில் தோன்றிய மதம் இந்துமதமே.

சராசரிக் கடமைகளில் இருந்து மனிதனை அப்புறப்படுத்தாமல், அவன் இருக்கும் இடத்தையே கோவில் ஆக்க முடியும் என்று காட்டியது இந்து மதம்.

மழையை வரவழைப்பவளும், வாழை மட்டையை எரியச் செய்பவளும் மட்டுமே பத்தினியல்ல.

கணவன் கண்களில் மழை வராமலும், அவன் உள்ளத்தில் கனல் எரியாமலும் பார்த்துக் கொள்பவளே பத்தினி.

அத்தகைய பத்தினி இருக்குமிடம் குடிசையாயினும் அது கோயிலாகி விடுகிறது.

வெறும் கையில் விபூதியை வரவழைப்பவன் ஞானியல்ல; வெறும் உள்ளத்தில் விவேகத்தை வளர்த்துக் கொள்பவனே ஞானி.

வளர்த்த விவேகத்தைப் பயனுள்ள வகையில் விநியோகிப்பவனே விஞ்ஞானி.

இவர்கள் ஆண்டவன் வகுத்த சாலையையே அறியக் கூடியவர்கள்; எந்தப் பயணத்தையும் நிர்ணயிக்கக் கூடியவர்கள்.

அதனால்தான், மற்ற ஆத்மாக்களைவிட அவர்கள் மகாத்மாக்களாகக் காட்சியளிக்கிறார்கள்.

ஆகவே, இருக்கும் இடத்தைக் கோயிலாக்குவது மனிதாபிமானம். அந்த மனிதாபிமானத்தை உருவாக்குவது மதாபிமானம்.

அந்த வகையில், மற்ற மதத்திற்கு இல்லாத தனித் தன்மை இந்து மதத்திற்கு உண்டு.

`இத்தனை தடவை கோயிலுக்குப் போய், இத்தனை முறை நீராடினால்தான் புண்ணியம்’ என்று எந்தத் தத்துவமும் சொல்லவில்லை.

அவை நம்முடைய ஆத்ம திருப்திக்காக நாம் ஏற்படுத்திக் கொண்டவை.

குடும்பத்தைக் கோவில் ஆக்கிக்கொள்ள முடியாதவர்கள் துயரங்களைக் கொட்டி அழுவதற்காக ஏற்படுத்திக் கொண்ட இடங்களே, கோயில்கள்.

மனத்தைக் குளிப்பாட்டி மகேஸ்வரனைக் காணச் சக்தியற்ற உள்ளங்கள், உடலைக் குளிப்பாட்டி உமாபதியைக் காண ஏற்படுத்தப்பட்டவையே பொதுக் குளங்கள்.

அடக்க ஒடுக்கத்தோடு ஆயிரக்கணக்கானவர்களைச் சந்திப்பதால், மனோதத்துவப்படி அந்த அடக்கம் பிறர்க்கும் வரும் என்பதைக் காட்டுவதற்காகவே, தேர்த்திருவிழாக்கள்.

தனிமையில் ஒருமுகப்படுத்த முடியாத மனது, சந்நிதானத்தில் ஒருமுகப்படுத்தப்படுகிறது.

சிந்தனைக் குழப்பங்களில் ஆழ்ந்துவிடாமலிருக்கத் தேங்காய் உடைப்பதிலும், தீபாராதனை காட்டுவதிலும் சிந்தனை திருப்பி விடப்படுகிறது.

குறைந்த பட்சம், மனிதனை மனிதனாக வைப்பதற்கே இந்துமதம் பெருமுயற்சி எடுத்தது.

எல்லோரும் சங்கராசாரிய சுவாமிகளாகி விட்டால், உபதேசத்திற்கு என்ன மரியாதை?

ஆனால், வசதியுள்ளவர்கள் பாரியாகலாம், பச்சையப்பராகலாம், அழகப்பராகலாம்.

மன நிலையில் தெளிவுள்ளவர்கள் தலைவர்களாகலாம்.

உடல் நிலையில் வலுவுள்ளவர்கள் தொண்டர்களாகலாம்.

ஒன்றும் முடியாதவர்கள், நான்கு சுவர்களுக்குள் அடங்கியுள்ள தங்கள் குடும்பத்தை நாணயமான முறையில் காப்பாற்றலாம்.

எறும்பைக்கூட மிதிக்காத அளவுக்குக் கொல்லாமை; இருப்பதைப் பகிர்ந்து கொடுக்குமளவுக்கு வள்ளல் தன்மை; மனிதாபிமானத்தை இப்படி வளர்க்கிறது இந்து மதம்.

இயலாமையிலும் திருடாமையைப் போதிக்கிறது இந்துமதம்.

மந்திரிக்குப் பதவி போனால் வீட்டைக் காலி செய்கிறான்.

மனிதன் பதவி போனால் உலகைக் காலி செய்கிறான்.

ஆனால், உயிருள்ளவரை ஒவ்வொரு மனிதனும் மனிதப் பதவியில் இருக்கிறான்.

மந்திரிப் பதவி தவறு செய்தால் விசாரணைக் கமிஷன் போடலாம்; மனிதப் பதவி தவறு செய்தால் மகேஸ்வரன்தான் விசாரிக்க வேண்டும்.

அந்த நீதிமன்றத்தில் மனிதன் கைகட்டி நிற்காமல் இருக்க, இகலோகத்திலேயே அவனது தஸ்தாவேஜுகளைச் சரி செய்து கொடுப்பதே இந்துமதம்.

அது சொல்லும் மனிதாபிமானத்தின் சுருக்கம் என்ன?

நன்மை செய்தவனுக்கு நன்றி காட்டு; தீமை செய்தவனை மறந்துவிடு.

நீ முடிந்தால் நன்மை செய், தீமை செய்யாதே. ஒவ்வொரு மனிதனும் இதைக் கடைபிடிக்க ஆரம்பித்தால் பகையும் நோயும் இல்லாத சமுதாயம் உருவாகும்.

அந்தச் சமுதாயத்தை உருவாக்குவதே இந்துமதத்தின் நோக்கம்.

இன்று வரையிலே நிரூபிக்கப்பட்டுள்ள ஒரு உண்மை `ஒரு நல்ல இந்து நல்ல மனிதனாகத்தான் இருப்பான்’ என்பதே.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மாலைக்குள் பாம்பு

`உலகத்தைப் பிரபஞ்சம்’ என்றது வடமொழி. பஞ்ச பூதங்களின் சேர்க்கைதான் உலகமாக உருவாகி இருக்கிறது. அதனாலேயே, இந்தப் பெயர்.

இந்த உலகத்தை மறந்து, இதில் ஏற்படும் பற்று, பாசம், இன்பம், துன்பம் அனைத்தையுமே மறந்து இறைவனிடம் லயிப்பது எப்படி? அந்த ஞானத்தைப் பெறுவது எப்படி?

அழகான பெண் கண்ணெதிரே தோன்றினாலும் அதில் அவள் தெரியக்கூடாது; இறைவனே தெரிய வேண்டும்.

கோடிக்கணக்கான ரூபாய்கள் கண் எதிரே கொட்டிக் கிடந்தாலும், அதிலே செல்வம் தெரியக்கூடாது; தெய்வமே தெரிய வேண்டும்.

உலகத்திலேயே உயர்ந்தது என்று கருதப்படுகிற பதவியே உனக்குக் கிடைத்தாலும், அந்தப் பதவியின் சுகம் உனக்குத் தெரியக்கூடாது; பரம்பொருளே தெரிய வேண்டும்.

உற்றார் உறவினர்கள் செத்துக்கிடக்கும்போது கூட அங்கே ஒரு சடலம் சாய்ந்து கிடப்பது உனக்குத் தெரியக் கூடாது; தர்மதேவன் பள்ளி கொண்டிருப்பது தெரிய வேண்டும்.

`இன்பங்களில் அவன்; துன்பங்களில் அவன்; பிறப்பில் அவன்; இறப்பில் அவன்.’

`அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த மூர்த்தியாக’ அவனே உன் கண்ணுக்குத் தெரிய வேண்டும்.

இது எப்படிச் சாத்தியமாகும்?

அழகான மான்குட்டி இறந்து போனால், உள்ளே இருக்கும் மாமிசப் பிண்டத்தை வெளியே தூக்கி எறிந்து விட்டு அதைப் பாடம் பண்ணி வைத்துவிட வேண்டும்.

கல்லின்மீது மழை விழுந்தாலென்ன, வெயில் விழுந்தாலென்ன?

சிலையின் மீது தண்ணீரை ஊற்றினாலென்ன, வெந்நீரை ஊற்றினாலென்ன?

சலனங்களுக்கு ஆட்படாத சமநிலை அதுவே.

அந்தச் சமநிலையில் இறைவனைக் காணமுடியும்.

மனிதனைப் பாவம் செய்யத் தூண்டுவது எது என்று கண்ணனிடம் அர்ஜுனன் கேட்டான்.

அதன் பெயரே `ஆசை’ என்றான் கண்ணன்.

பகவத் கீதை இதைக் கூறுகிறது.

காம குரோத மத மாச்சரியங்கள் ஒன்றா, இரண்டா?

எதுவும் பூர்த்தியடைவதில்லை.

`இத்தோடு போதும்’ என்று எதையும் விடமுடிவதில்லை.

நினைவுகள் பின்னிப் பின்னி இழுக்கின்றன.

மனித வீணையில் விநாடிக்கு விநாடி சுதிபேதம்.

ஆயிரக்கணக்கான சிக்கல்களில் இருந்து விடுபட்டு ஆண்டவனிடத்தில் ஐக்கியமாவதற்கு இந்துமதம் வழி காட்டுகிறது.

அதிலே ஒரு சுகம் இருக்கிறது; பயமற்ற நிலை இருக்கிறது.

வாழ்ந்துக்கொண்டே சாவது லெளகீகமாகி விட்டால், செத்தவன் போல் வாழ்வதுதான் ஞானமாகி விடுகிறது.

தாமரை இலைத் தண்ணீரை இந்து மதம் உதாரணம் காட்டுகிறது.

அதையும் தாண்டித் தத்தளிக்காத தண்ணீராக வாழ்வதற்கும் வழி சொல்கிறது.

ஒரு கட்டம் வரையில் இனிப்பை ருசி பார்த்த பிறகு அதுவே கசப்பாகி விடுகிறது.

கசப்பை உணரத் தொடங்கும் போது, வாழ்க்கை வெறுப்பாகி விடுகிறது.

வெறுப்பே வளர்ந்து வளர்ந்து, இதயம் நெருப்பாகி விடுகிறது.

இந்த வளர்ச்சிக்கு ஆசைதான் காரணமாகி விடுகிறது.

பிரபஞ்ச உணர்ச்சிகளில் இருந்து தன்னை முற்றிலும் விலக்கிக் கொண்டு, சாவைக் கண்டு அழாமலும், பிறப்பைக் கண்டு மகிழாமலும், ஞான யோக நிர்விகல்ப சமாதி அடைவதில் ஒரு சுகம் இருக்கிறது.

`இந்தப் பூமியில் வாழ்ந்துகொண்டே இந்தப் பூமியின் நிகழ்ச்சிகளுக்கு ஆட்படாமல் இருப்பது எப்படி?’ என்று கேட்பீர்கள்.அதைத்தான் சொல்ல வருகிறேன்.

சில நாட்களுக்கு முன் பாதி முடிந்த தெலுங்குப் படம் ஒன்றைப் பார்த்தேன். அதன் பெயர் சீதா கல்யாணம்.

திரையில் சீதை காட்சியளித்தாளோ இல்லையோ, என் நினைவு கம்ப ராமாயணத்திற்குத் தாவி விட்டது.

பிறகு படத்தில் என்ன காட்சிகள் வந்தன என்பது எனக்கு நினைவில்லை.

கண்கள் திரையையே பார்த்துக் கொண்டிருந்தன. ஆனால் இதயமோ, கம்ப ராமாயணத்தின் மிதிலைக் காட்சிப் படலத்தை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது.

மீண்டும் அதை இழுத்து வந்து, படத்திலே நிறுத்துவது, எனக்குச் சிரமமாகத்தான் இருந்தது.

அங்கே ஒரு நிகழ்ச்சியில் லயித்த மனம், அடுத்தடுத்த நிகழ்ச்சிகளைக் கண்டும், காணாமல் இருந்து விட்டது.

லயித்து நிற்பது, ஒருவகைச் சித்தப் பிரமையே.

இறைவனிடத்தில் லயித்து நின்றுவிட்டால், பிரபஞ்சத்தின் சகல நிகழ்ச்சிகளில் இருந்தும் நாம் விடுபட்டு விடுகிறோம்.

காஞ்சிப் பெரியவர்களின் கருத்துகளைத் திரட்டித் `தெய்வத்தின் குரல்’ என்றொரு புத்தகத்தை 900 பக்கங்களில் வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

அதிலுள்ள பெரியவர்களின் கருத்து ஒன்றை, முழுமையாக இங்கே தந்தால், உங்களுக்கு விவரம் புரியும்.

எந்த வரியையும் விலக்க முடியாதபடி அந்தக் கட்டுரை அமைந்திருக்கிறது.

`கண்ணனும் சொன்னான், கம்பனும் சொன்னான்’ என்பது அந்தக் கட்டுரையின் தலைப்பு.

அந்தச் சிறிய கட்டுரையை அப்படியே தருகிறேன்.

ஆத்மா தான் எல்லாவற்றுக்கும் ஆதாரம். ஆனால், அதுவே அவற்றைக் கடந்திருக்கிறது என்றால் அதெப்படி என்று தோன்றுகிறது; குழப்பமாயிருக்கிறது; ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கீதையில் இம்மாதிரிப் பல தினுசாக குழப்பிக் குழப்பிப் பிறகு ஒரேயடியாகத் தெள்ளத் தெளிவாகப் பண்ணிவிடுவார்.

`நான் எல்லாப் பொருட்களிலும் இருக்கிறேன். எல்லாப் பொருட்களும் என்னிடம் இருக்கின்றன’ என்று கீதையில் ஓரிடத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார் (யோமாம் பச்யதி ஸர்வத்ர, ஸர்வம் சமயி பச்யதி) எல்லாப் பொருட்களும் இவரிடம் இருக்கின்றன என்றால், இவர் தான் அவற்றுக்கெல்லாம் ஆதாரமான ஆத்மா என்றாகும். ஆனால், எல்லாப் பொருட்களிலும் இவர் இருக்கிறார் என்றால், அவைதான் இவருக்கு ஆதாரம் என்று ஆகுமே, இதில் எது சரி என்ற குழப்பம் ஏற்படலாம்.

ஸ்வாமி அல்லது ஆத்மாவே எல்லாவற்றுக்கும் ஆதாரம் என்பதுதான் சரி. அவர் எல்லாவற்றுள்ளும் இருக்கிறார் என்பதால் அவை இவரைத் தாங்குகின்றன என்று ஆகாது. இவரால்தான் அவற்றுக்கு உருவமும் உயிரும். இவர் இல்லாமல் அவை இல்லை. எனவே, அவை இவருக்கு ஆதாரமல்ல; இவர்தான் சகலத்தையும் ஆட்டிப் படைப்பவர். இதை ஸ்ரீ கிருஷ்ணனே தெளிவாகச் சொல்கிறார்.

பொம்மலாட்டப் பொம்மை மாதிரிதான் சகல பிராணிகளும். உள்ளேயிருந்து ஈசுவரனே அவற்றை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறான் (ஈச்வர ஸர்வ பூதானாம் ஹ்ருதே தேசே அர்ஜீனதிஷ்டத பிராம்யன் ஸர்வ பூதானி யந்த்ராரு டானி மாயயா) என்கிறார்.

இப்படிக் குழப்பத்தைத் தெளிவு செய்கிற பகவான், அதே கீதையில் மறுபடியும் குழப்பம் செய்கிறார். `எல்லாப் பொருட்களிலும் நான் இருக்கிறேன்; எல்லாப் பொருட்களும் என்னிடம் உள்ளன’ என்று கூறுபவரே, `என்னிடத்தில் ஒரு பொருளும் இல்லை. நானும் ஒரு பொருளிலும் இல்லை’ என்கிறார் (நச மத் ஸ்தானி ந சாஹம்தேஷீ அவஸ்தீத;)

இங்கே ஆத்மா எல்லாவற்றையும் கடந்தது என்ற தத்துவம் பேசப்படுகிறது.

`இது என்ன குழப்புகிறாயே’ என்றால் எல்லோருக்கும் விளங்குவதில்லை (ந அகம் ப்ரசாக ஸர்வஸ்ய;) அதுதான் `என் யோக மாயா’ (யோக மாயா ஸமாவ்ருத;) என்று ஒரு போடு போடுகிறார்.

`இது என்ன உபதேசம் வேண்டிக் கிடக்கிறது? ஒன்றும் புரியவில்லையே!’ என்று தோன்றுகிறதா?

நன்கு ஆலோசித்துப் பார்த்தால் குழப்பத்துக்குத் தெளிவு காணலாம்.

`நான் ஒருவருக்கும் விளங்க மாட்டேன்’ என்று பகவான் சொல்லியிருந்தால், `ஆயிரம் பேர் இருந்தால் ஆயிரம் பேருக்கும் விளங்கமாட்டான்’ என்று அர்த்தமாகும். ஆனால் அப்படியின்றி `நான் எல்லாருக்கும் விளங்க மாட்டேன்’ என்றால் `ஆயிரம் பேரில் 999 பேருக்கு விளங்காமலிருந்தாலும் இருக்கலாம். ஒருவனுக்காவது விளங்குவேன்’ என்றுதான் பொருள். பகவான் `எல்லோருக்கும் (ஸர்வஸ்ய) விளங்க மாட்டேன்’ என்றாரேயன்றி `ஒருவருக்கும் (கஸ்யாபி) விளங்க மாட்டேன்’ என்று சொல்லவில்லை.

அப்படியானால் அவரும் சிலருக்கு விளங்குகிறார் என்றாகிறது.

அந்தச் சிலர் யார்? இவர் சொன்ன யோக மாயையால் பாதிக்கப்படாத ஞானிகள். `நான் எல்லாப் பொருளிலும் இருக்கிறேன், ஒரு பொருளும் என்னிடம் இல்லை’ என்று பகவான் முரண்பாடாகப் பேசியது போலத் தோன்றுவதற்கு இத்தகைய ஞானிகளே விளக்கம் தந்து தெளிவு செய்வார்கள்.

தெருவிலே ஒரு பூமாலை கிடக்கிறது. அரை இருட்டு; எவனோ அந்தப் பக்கம் வந்தவன் அதை மிதித்து விட்டு, `ஐயோ பாம்பு, பாம்பு’ என்று பயத்தால் கத்துகிறான்.

மாலையாக இருப்பதும், பாம்பாக இருப்பதும் ஒன்றுதான். இது மாலைதான் என்று தெரிந்தவுடன் அவனுக்குப் பாம்பு இல்லையென்று தெரிந்து விடுகிறது. ஆனால் முதலில் பாம்புக்கு ஆதாரமாக இருந்தது என்ன? மாலைதான்.

மாலையைப் பாம்பு என எண்ணுவதுபோல், அஞ்ஞானிகள் ஒன்றேயான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகப் பார்த்து மயங்குகிறார்கள். இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆதாரம் பிரும்மம்தான்.

`இந்தப் பிரபஞ்சத்துக்குள் நான் இருக்கிறேன். பிரபஞ்சம் என்னிடத்திலிருக்கிறது’ என்று சொன்னால் என்ன அர்த்தம்?

`மாலைக்குள்தான் பாம்பு இருக்கிறது. பாம்புக்குள்தான் மாலை இருக்கிறது’ என்பது எப்படியோ, அப்படித்தான்.

இரண்டும் உண்மைதானே?

பாம்பு என்று அலறியவனுக்குப் பாம்பு, மாலையைத் தனக்குள் `விழுங்கி’ விட்டது. அவன் பார்வையில் ஆதாரமாக இருப்பது பாம்பு. அஞ்ஞானம் நீங்கி `இது மாலைதான்’ என்று உணர்ந்து கொண்டவனுக்கு மாலை பாம்பைத் தன்னுள் மறைத்துவிடுகிறது. மாலை தான் ஆதாரமாகத் தெரிகிறது.

மாயையினால் மூடப்பட்டுப் பிரபஞ்சத்தைச் சத்தியம் என்று பார்த்தாலும், பிரபஞ்சத்துக்கு ஆதாரமாக இருந்து தாங்குபவன் ஈசுவரன் தான்.

பிரபஞ்சத் தோற்றத்தை ஞானத்தினால் விலக்கியவனுக்கு ஈசுவரனே எல்லாமாய், தானுமாய்த் தோன்றுகிறான். ஈசுவரனைத் தவிர வெறும் தோற்றமாகக்கூடப் பிரபஞ்சம் என்று எதுவுமே ஞானியின் நிர்விகல்ப ஸமாதியில் தெரியாது. பிரபஞ்சம் என்றே ஒன்று இல்லாத போது, அது ஈஸ்வரனிடத்தில் இருப்பதாகவோ அல்லது ஈசுவரன் அதனுள் இருப்பதாகவோ சொல்வதும் அபத்தம் தானே!

அஞ்ஞான தசையில் உடம்பு, பிராணன், மனசு, அறிவு என்றெல்லாம் தெரிகின்றன. ஞானம் வந்தால், ஆத்மானந்தம் புரிகிற போது இது எதுவுமே இல்லைதான்; இது எல்லாவற்றையும் கடந்துதான் அந்த நிலை வருகிறது. இதனால்தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான் முடிந்த முடிவான ஞான நிலையில் நின்று `என்னிடத்திலும் பொருள்கள் இல்லை’, `நானும் பொருள்களிடத்திலில்லை’ என்று கூறி விட்டார். எவனோ அஞ்ஞானி மாலையைப் பாம்பாக நினைத்தான் என்பதால் உண்மையிலேயே ஒரு பாம்பு மாலைக்குள் இருந்ததாகவோ அல்லது பாம்புக்குள் மாலை இருந்ததாகவோ சொல்லலாமோ?

கம்பர், சுந்தர காண்டத்தில் இதைத்தான் சொல்கிறார்.

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவுஎனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
வேறுபா டுற்ற வீக்கம்
கலங்குவ தெவரைக் கண்டால்
அவர்என்பர் கைவி லேந்தி
இலங்கையில் பொருதா ரன்றே
மறைகளுக் கிறுதி யாவார்!

`அலங்கல்’ என்றால் மாலை. `அரவு’ என்றால் பாம்பு. அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு மாலையில் தோன்றும் பாம்பு என்ற மெய்யான எண்ணம். இது போலப் பஞ்சபூதங்கள் ஒன்று சேர்ந்து பொய்யான பிரபஞ்சம் என்ற வீக்கிமாகி மயக்குகிறதே. அது யாரைக்கண்டால் விலகிப் போய் மாலையான ஈசுவரன் மட்டும் தெரியுமோ அவர்தான் ராமச்சந்திர மூர்த்தி என்றார்.

பரம வைஷ்ணவரான கம்பர், வைரமாத்ம ஸ்வரூபத்தை இப்படி ஸ்வச்சமான அத்வைத பாஷையில் சொல்கிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மரத்தைத் தண்ணீரில் போடு

காஞ்சிப் பெரியவர்கள் ஒன்று கூறியிருக்கிறார்கள்:

“கிணற்று நீருக்குள் நீரை நிரப்பிக்கொண்ட குடத்தை இழுக்கும்போது கனம் தெரியவில்லை; ஆனால் தண்ணீர் மட்டத்துக்கு மேலே குடம் வந்தவுடன் கனக்க ஆரம்பித்து விடுகிறது.

எளிதில் புரட்ட முடியாத பெரிய மரங்களை வெள்ளத்தில் உருட்டித்தான் புரட்டி இழுப்பது வழக்கம்.

அதேமாதிரி நம் துன்பங்களையெல்லாம் `ஞானம்’ என்னும் தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போதும் துக்கம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். ஆனால், தண்ணீருக்குள் இருக்கிற குடம் மாதிரித் துக்கம் பரமலேசாகி விடும்.”

லெளகீகத்தில் இருந்து சுத்தமாக விடுபட்டு விட்ட ஒரு சந்நியாசி, லெளகீக வாழ்வில் துக்கத்தைக் குறைப்பதற்குச் சொல்லும் அற்புத வழி அது.

இந்துமதம் லெளகீகத்தையே முதற்படியாகக் கொண்டது என்பதற்கு சாட்சி.

வாழ்வைப் பற்றிய சிக்கலில் மனதை ஈடுபடுத்திக் கொண்டு குழம்பித் தவிக்கும் கோடானுகோடி மக்களுக்கு இந்து மதம் ஒரு ஆறுதல் சொல்கிறது.

சித்தம் தெளிவற்றிருந்தால் பிரமை பிடித்து விடுகிறது. அது தெளியும்போது, ஞானஒளி பெற்று விடுகிறது.

இக வாழ்க்கையைச் சுகமாக்கித் தர, பிற மதங்கள் செய்யாத முயற்சியை இந்து மதம் செய்கிறது.

துக்கமே இல்லாத சந்நியாசிகள்கூடத் துக்கத்தைப் பற்றிச் சிந்திக்கிறார்கள்.

மரணமே இல்லாத பரமாத்மாகூட மரணத்தைப் பற்றிப் பேசுகிறது.

எங்கே எது இல்லை? காட்டில் மட்டுந்தானா முள் இருக்கிறது? அது ரோட்டிலும் இருக்கிறது! பார்த்து நடப்பவன் காட்டில்கூட நடந்துவிட முடியும்; பாராமல் நடப்பவன் ரோட்டில்கூட நடக்க முடியாது.

கவலை என்பது ஒரு வலை.

தனக்குத்தானே அதை வீசிக் கொள்கிறவர்கள் உண்டு.

பல நேரங்களில் ஆண்டவனும் அதை வீசுவதுண்டு.

வலைக்குத் தப்பிய மீன்கள், நீர் வற்றிவிட்டால், மரணத்துக்குத் தப்புவதில்லை.

காலம்தான் வித்தியாசம். சில முந்திக் கொள்கின்றன. சில பிந்திக் கொள்கின்றன.

ஒவ்வொருவன் கண்ணுக்கும், அடுத்தவன் சந்தோஷமாக இருப்பது போலவே தோன்றுகிறது.

அவன் பார்க்கும் கண்ணாடி நல்ல கண்ணாடியாக இருந்தால்தானே, அவன் முகத்தைக் காட்டும்.

வண்டியின் மீது மற்றவர்கள் பாரத்தை ஏற்றுக்கிறார்கள். வண்டி தானே ஏற்றிக்கொள்வதில்லை.

மனித மனமோ தானே சுமைகளை ஏற்றிக் கொள்கிறது.

ஏற்றிய சுமையை எளிமைப்படுத்த என்ன வழி?

`ஞானம் எனும் தண்ணீரை நிறையக் குடி’ என்கிறார்கள் காஞ்சிப் பெரியவர்கள்.

`ஞானம் ஞானம்’ என்கிறோமே அது என்ன?

சட்டையைப் போடும்போது, கிழிந்த சட்டை என்று தெரிந்தே போட்டுக் கொள்வது; பிறகு `ஐயோ, இது கிழிந்திருக்கிறதே’ என்று அங்கலாய்க்காமல் இருப்பது; அதன் பெயரே ஞானம்.

`இது இவ்வளவுதான்; இப்படித்தான்’ என்று தேறுவதும் தெளிவதும் ஞானம்.

`எது எப்படியிருந்தால் என்ன; இறைவன் விட்ட வழி, என்றிருப்பது ஞானம்.

குடிசைகளே நிரம்பிய காட்டில்கூட ஏதாவது ஒரு ஓட்டு வீடு இருக்கிறல்லவா?

துயரங்களே நிரம்பியே மனதிற்கும் ஏதாவது ஒரு நிம்மதி வந்தே தீரும்.

எந்தச் சந்நிதியில் நிற்கிறோம் என்பது முக்கியம்.

குளிக்கும் அறைக்குள் போய் நின்று கொண்டு கோகுலக் கண்ணன் படத்தைத் தேடக்கூடாது. பூஜை அறைக்குள் `ஷவர்பாத்’ இல்லையே என்று வருந்தக் கூடாது.

தேர்வும் தெளிவும் சரியாக இருந்தால், ஞானம் சரியாகிவிடும்.

ஞானத்தண்ணீர் பெருகி ஓடினால், துன்ப மரங்கள் எளிமையாகி விடும்.

மாட்டி இருப்பது விலங்குதான் என்று தெரிந்து கொண்டு, நடக்க ஏன் முயல வேண்டும்?

“ஐயோ! நடக்கமுடியவில்லையே” என்று ஏன் அழ வேண்டும்?

ஒவ்வொரு மரமும் இடைவெளி விட்டு நிற்கும் தென்னந்தோப்பைப்போல இரண்டு சுகங்களுக்கிடையில் ஒரு துயரம் இருக்கிறது.

இரண்டு துயரங்களுக்கிடையே ஒரு சுகம் இருக்கிறது. இதுதான் லெளகீக வாழ்க்கை.

கல் குத்தினால் வலிக்கிறது. கண்ணாடி குத்தினால் ரத்தம் வருகிறது. கவனித்து மருந்து போட்டால் ஆறிவிடுகிறது. கவனிக்காமல் விட்டால் `ஸெப்டிக்’ ஆகிறது. கவனித்தும் `ஸெப்டிக்’ ஆனால் ஏதோ பூர்வ ஜென்ம பாபம் இருக்கிறது.

துன்பத்தின் கதை இத்தோடு முடிந்துவிடுகிறது.

ஜன்னலின் அளவைப் பொறுத்து காற்று வருகிறது.

ஜன்னல்கள் இல்லாத வீடு சுகாதாரத்தைக் கெடுக்கிறது.

அதுபோல், சூழ்நிலைகளைப் பொறுத்துத் துன்பம் வருகிறது; அந்தச் சூழ்நிலைகளை நீக்கிக்கொள்ளும் பொறுப்பு மனிதனுக்குத் தான் இருக்கிறது.

நம்மையறியாமல் வருவது நாம் அறியாமலே தீர்க்கப்படுகிறது.

நாம் அறிந்து வருவதை நாமே தீர்த்துவிட முடியும்.

இந்த இரண்டுவகைத் துன்பங்களில், முதல்வகை ஈஸ்வர பக்தியால் விலகுகிறது.

இரண்டாவது வகை, கூரிய புத்தியால் விலகுகிறது.

பக்தியும் இல்லாமல் புத்தியும் இல்லாமல், `ஐயோ அம்மா’ என்று அலறுவதில் என்ன பொருள்?

பசுவை வாங்கி வந்தால் பால் கறக்கலாம்; காளையை வாங்கிவிட்டுக் கடவுள்மீது குறை சொல்வதில் என்ன அர்த்தம்?

காரணத்தோடு வரும் துன்பங்களை, விவேகத்தோடு சமாளிக்க வேண்டும்.

குடித்துவிட்டுக் காரோட்டி விபத்திற்குள்ளானால் அது காரணத்தோடு வரும் துன்பம்.

ரயில் விபத்தில் நீ சிக்கிக்கொண்டால், அது காரணமில்லாமல் வரும் துன்பம்.

முன்னதை நீ தடுக்கலாம்; பின்னதைக் கடவுள் தான் தடுக்க வேண்டும்.

இரண்டுக்கும் `ஞானம்’ என்றுதான் பெயர்.

சம்பாதிப்பது போதவில்லை என்றால் அது ஒருவகைத் துன்பம். நிறையச் சம்பாதித்தும் போதவில்லை என்றால் அது ஒருவகைத் துன்பம். சம்பாத்தியமே இல்லை என்றால் அது ஒருவகைத் துன்பம்.

எது உன் வாழ்க்கையில் நேர்ந்தாலும், அதன் மறுபகுதி துன்பம்.

தலையில் கை வைத்துக்கொண்டு தடுமாறுகிறவனுக்குத் துன்பம் தீராது.

ஞானம் என்ற தண்ணீரில் துன்பத்தை அமுக்கி இழுத்தால் பாரம் குறையும்.

நம்மைப் பிறக்க வைத்தபோது, தாய் பட்டது துன்பம்;
தாய் இறந்துபோனால் உறவினர் படப்போவது துன்பம்; இரண்டுக்கும் இடையிலே நாம் அனுபவிப்பது துன்பம்.

எல்லாவற்றுக்கும் பரிகாரம் மனதை ஞானத்தண்ணீரில் முக்கி எடுப்பதே.

வாழ்க்கையில் எந்தப் படிக்கட்டில் துன்பம் இல்லை?

பணம் இல்லை என்றால் துன்பம்.

அதிகம் சேர்ந்துவிட்டால் வருமான வரித்துன்பம்.

வடதுருவத்திற்குப் போனாலும் பனிக்கட்டிதான்; தென் துருவத்திற்குப் போனாலும் பனிக் கட்டிதான்.

`துன்பம் ஒரு சோதனை’ என்று முன்பே நான் எழுதி இருக்கிறேன்.

துக்கச் சுமையைக் குறைக்கக் காஞ்சிப் பெரியவர்கள் சொன்ன உதாரணம் என்னை மெய்சிலிர்க்க வைத்ததால், இதனை மீண்டும் எழுதுகிறேன்.

`ராமன் கிடைப்பானா?’ என்று கலங்கிய சீதை;

அவன் கிடைத்த பின்னாலும் காடு சென்று கலங்கிய சீதை;

காட்டிலும் ஒருவனால் தூக்கிச் செல்லப்பட்டுக் கலங்கிய சீதை;

அவனைக் காணாமல் தினந்தினமும் கலங்கிய சீதை;

வந்து தன்னை மீட்டதும் அவனால் சந்தேகிக்கப் பட்ட சீதை!

சீதையின் வாழ்க்கையிலே ஒரு சுவடுக்கு மறுசுவடு துன்பம் என்றால், என் நிலையும் உன் நிலையும் என்ன?

காட்டில் முளைத்த மரமும் கவலையுறும் காலம் இலையுதிர் காலம்.

ஆற்று மணலும், கவலைப்படும் காலம், கோடைக் காலம்.

பகுத்தறிவற்ற விலங்குகளும் கவலைப்படும் காலம், அவை பயப்படும் காலம்.

இவற்றுக்கெல்லாம் யார் ஆறுதல் கூறப்போனார்கள்?

மானிட ஜாதி ஆறுதல் தேடுகிறது.

திடீரென்று கேரளாவில் இருந்தொருவர் `ட்ரங்கால்’ போட்டுத் தம் துன்பங்களைச் சொல்லி என்னிடம் ஆறுதல் கேட்கிறார்.

அதையே அவர் பக்கத்து வீட்டுக்காரனிடம் சொன்னால், அவன் தன் துன்பங்களைச் சொல்வான்; அதுவே ஆறுதலாகி விடும்.

மறுபடியும் தொடக்கத்தைச் சொல்லி முடிக்கிறேன்.

மரங்களைத் தண்ணீரில் போட்டு இழுப்பது போல், துக்கங்களை ஞானத்திலும் நிதானத்திலும் இழுத்துப் பாருங்கள்.

அப்போதும் அது குறையவில்லையென்றால், துக்கப்படுவதையே வாழ்க்கையாக்கிக் கொள்ளுங்கள்; வேறென்ன செய்வது?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

குடும்பம் என்னும் தர்மம்

வாழ்வின் நெறிமுறைகளை விளக்கும் தொடர்- குடும்பம் என்னும் தர்மம்.

ஒரு பத்திரிக்கையில் படித்தேன்.

தமிழர் ஒருவர் வெளி நாட்டிற்குச் சென்றிருந்தாராம். அங்கு ஓர் அமெரிக்கத் தம்பதிகளைச் சந்தித்தாராம். அவர்கள் ஹோட்டலுக்கு வெளியிலேயே கட்டிப் பிடித்துக்கொண்டு நின்றார்களாம்.

தமிழரைப் பார்த்து அந்த அமெரிக்கர், “இவள் எனது மூன்றாவது மனைவி” என்று அறிமுகப்படுத்தி வைத்தாராம்.

“முதல் இருவரையும் வெட்டி விட்டதாக” வேறு சொன்னாராம்.

“ஒத்து வரவில்லை என்றால் ஒதுக்கிவிடுவதுதான் நல்லது” என்று போதித்தாராம்.

“வாழ்க்கையை வாழ்க்கையாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்; அதற்கென்று பண்பாடு எதற்காக?” என்று வேறு வினவினாராம்.

“கட்டிக்கொண்டு விட்டோம் ஒருத்தியை என்பதற்காகச் சண்டை போட்டுக்கொண்டே அவளோடு வாழ்வதில் என்ன அர்த்தம்? புதிதாக ஒன்றை ஏற்றுக் கொள்வதுதான் நியாயம்” என்று வேறு போதித்தாராம்.

ஆடு மாடுகள் இப்படித்தான் செய்கின்றன. ஆனால், அவை ஒப்பந்தத்திற்காகப் பதிவாளர் அலுவலகத்திற்கும் போவதில்லை; வெட்டுவதற்காக நீதிமன்றத்திற்கும் போவதில்லை.

`எப்படி வேண்டுமானாலும் வாழலாம்’ என்று முடிவு கட்டிவிட்டால் ஆண் பெண் என்ற இரண்டு வகை மிருகங்கள் தான் மிஞ்சும்.

மாமன், மைத்துனன் என்ற பண்பாட்டு உறவுக்கு அங்கே வேலை இல்லை.

ஆனால், அந்த வகை உறவில்தான், இந்து தர்மம் உலகெங்கும் தலை தூக்கி நிற்கிறது.

குடும்ப வாழ்க்கையை ஒரு அறம் என்று போதித்தது இந்து தர்மம். அதனால்தான் தமிழ், அதனை `இல்லறம்’ என்றது.

இந்து தர்மத்தில் ஒருவன் எத்தனை மனைவியரை வேண்டுமானாலும் கொள்ளலாம். ஆனால், அத்தனை பேருக்கும் அவன் ஒருத்தன்தான் கணவன்.

ஒருத்தியை அவன் ஒதுக்கி வைத்திருந்தாலும், சாகும் வரையிலும் அவள், அவனது மனைவியே.

அவளை எல்லா வகையிலும் திருப்தி செய்ய வேண்டியது கணவனின் கடமை.

அந்தக் கடமையில் தவறுவோர் பலருண்டு.

அவர்கள் அந்தத் தர்மத்தை மறந்தவர்களே தவிர, அந்தத் தவற்றைச் செய்ய அனுமதிக்கப்பட்டவர்களல்ல.

இந்து மதத்திலும் சில பிரிவினரிடத்தில், அறுத்துக் கட்டும் பழக்கம் இருந்திருக்கிறது. சில இடங்களில் இன்னும் இருக்கிறது.

இதனை இந்து தர்மம் அங்கீகரிக்கவில்லை.

இது எப்படி ஏற்பட்டது?

கோஷ்டிச் சண்டைகளால் ஏற்பட்ட வஞ்சம் தீர்க்கும் மனப்பான்மையில் ஏற்பட்டது.

`பெண் கொடுத்துப் பெண் எடுப்பது’ என்றொரு பழக்கம் உண்டு.

ஒரு வீட்டினுள் ஓர் இளைஞனும் இளம் பெண்ணும் இருந்தால் அதேபோல ஓர் இளைஞனையும், இளம் பெண்ணையும் பெற்ற குடும்பத்தினர், தங்கள் பெண்ணைக் கொடுத்து அந்தப் பெண்ணை எடுத்துக் கொள்வார்கள்.

இதில் ஒரு ஜோடி சந்தோஷமாக வாழும்போது, இன்னொரு ஜோடி சண்டை போட்டுக்கொள்ள நேரலாம்.

சண்டைபோடும் கணவன், தன் மனைவியைப் பிறந்த வீட்டிற்கே திருப்பியனுப்பினால், அங்கே சந்தோஷமாக வாழ்கிற கணவன்கூடத் தன் மனைவியைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பி விடுவான்.

வஞ்சம் தீர்ப்பதற்காக தங்கள் பெண் கழுத்திலிருந்த தாலியை அறுத்துவிட்டு, வேறொருவனுக்கு அவளைக் கட்டி வைத்தால், அவர்களும் அதே போலச் செய்துவிடுவார்கள்.

ஆத்திரத்தில் உருவான இந்தப் பழக்கம், கடைசியில் ஒரு சம்பிரதாயமாகவே மாறிவிட்டது.

இந்தச் சம்பிரதாயத்தை வெறும் கதைகளிலேகூட இந்து தர்மம் ஏற்றுக்கொண்டதில்லை.

தர்மங்களின் வரிசையில் குடும்ப தர்மத்தையும் அது சேர்த்தது.

உடலைவிட மனைவியின் ஆன்மாவையே முதலில் கணவன் திருப்தி செய்ய வேண்டும்.

ஆனால், மனைவியோ கணவனின் உடலைத் திருப்தி செய்து, ஆன்மாவைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

கணவன், மனைவியின் உடலைத் திருப்தி செய்வதும் இன்றியமையாததாகவே கருதப்பட்டது. ஆனால், அது இரண்டாம் பட்சமாக வைக்கப்பட்டது.

உண்மையை ஒப்புக் கொள்வதானால் நூற்றுக்கு எண்பது ஆடவர்கள் உடல் உறவில் தம் மனைவிக்கு முழுத்திருப்தியையும் அளித்ததில்லை. இதுவே மேல் நாடாக இருந்தால் விவாகரத்துக்கு இந்த ஒரு காரணம் போதும்.

தான் திருப்தியுறும் அளவையே தேவையான அளவாகக் கருதுகிறவள் இந்து மத மனைவி.

அந்தப் பொறுமையின் மூலம் ஒரு கட்டத்தில் முழுத் திருப்தியடைந்து விடுகிறாள்.

விரிவாகப் பார்ப்போம்.

திருமணம் ஆன புதிதில், கொஞ்ச காலத்துக்குக் கணவன் மட்டுமே சந்தோஷமடைகிறான்.

உடம்பில் இருந்த வெறியும் சூடும் காமக் கலப்பில் இவனைப் பலவீனமாக்கி விடுகின்றன.

ஒரே உடலில் அவன் தொடர்ந்து உறவு கொள்வதால் நாளாக நாளாக அவனது பலவீனம் மறைந்து பலசாலியாகி விடுகிறான்.

மனைவியின் உடம்பில் சேமிக்கப்பட்டிருந்த வெறி வெள்ளம், அவனைப் பலவீனமாக்கிச் சீக்கிரம் திருப்தியுறச் செய்துவிடுகிறது.

ஒரே தம்பதிகள் நீடித்து வாழ்வதன் மூலம், உணர்ச்சிக் கலப்பில் சம கால போகத்திற்கு வந்து விடுகிறார்கள்.

கணவனின் உடம்பிலிருந்து சுக்கிலமும், மனைவியின் உடம்பிலிருந்து சுரதமும் வெளியாகும் நேரம் ஒரே நேரமாகயிருந்தால் அது சமகால போகம் என்றழைக்கப்படும்.

அந்த சமகால போகத்தில் இருவர் உடம்பும் பலமடைகின்றன.

மழைத் தண்ணீர் சாலை வழியாக ஏரியில் விழும் போது, ஏரியிலுள்ள மீன் அந்தத் தண்ணீர் வழியாகச் சாலைக்கு வருவது போல், சுக்கிலத்தின் ஜீவ அணுக்கள் மனைவியின் உடம்பிலும், சுரதத்தின் ஜீவ அணுக்கள் கணவனின் உடம்பிலும் மாறி மாறிப் புகுந்து கொள்கின்றன.

ஒரே தம்பதிகள் நீண்ட நாள் வாழ்வதன் மூலமே இந்தச் சமகால போகம் சாத்தியமாகிறது.

ஒருவர் மீது ஒருவருக்குள்ள பிடிப்பு அதிகமாகிறது.

நோய் நொடியில்லாத ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கின்றன.

தாய் தந்தை மீது பாசத்தோடு அவை வளர்கின்றன.

அங்கு ஒரு மகிழ்ச்சிகரமான இல்லம் உதயமாகிறது.

அத்தகைய, இல்லங்களின் மீது ஒரு ஆரோக்கியமான நாடு உருவாகிறது.

ஆகவேதான் இந்து தர்மம் இல்லறத்தை வலியுறுத்திற்று.

இல்லறத்தில் உடல் உறவு ஒரு பகுதியே.

அதில் மற்றொரு பகுதி, வெளி உலகத்தோடு தொடர்புடையது.

அதன் பெயரே விருந்தோம்பல்.

செல்கின்ற விருந்தினரை வழியனுப்பி, வருகின்ற விருந்தினருக்காகக் காத்திருப்பவன் இல்லறவாசி.

அதனை ஒருவகை நாகரிகம் என்கின்றது இந்து தர்மம்.

குறைந்தபட்சம், ஓர் அதிதிக்காவது சோறு போடாமல் கணவனும் மனைவியும் சாப்பிடக்கூடாது.

யாராவது ஒரு அன்னக்காவடி, பரதேசி, பிச்சைக்காரன் வருகிறானா என்று பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.

வருகின்ற விருந்தாளிக்கும் ஒரு நாகரிகத்தைப் போதித்தது இந்து மதம்.

சாப்பாடு நன்றாக இல்லாவிட்டாலும் `பிரமாதம்’ என்று சொல்லிவிட்டுப் போவதே அந்த நாகரிகம்.

இன்னும் அற்புதமான நாகரிகம் என்னவென்றால் கணவன் சாப்பிட்ட இலையிலேயே மனைவி சாப்பிடுவது.

`அது ஆரோக்கியக் குறை’ என்போர் உண்டு.

`கணவனுக்கு எவ்வளவு ஆரோக்கியம் இருக்கிறதோ அவ்வளவு தனக்கும் இருக்க வேண்டும்’ என்று நினைப்பவளே இந்து மனைவி.

கணவன் காசநோய்க்காரன் என்றால், அந்த நோயைத் தானும் ஏற்றுக்கொள்ளவே, அவள் அவனது இலையில் சாப்பிடுகிறாள்.

கடல்கொண்ட `லெமூரியா’ கண்டத்தில் வாழ்ந்தவரிடையே ஒரு பழக்கம் இருந்ததாம்.

மணமகனின் வலதுகைப் பெருவிரலைக் கத்தியால் லேசாகக் கிழித்து, அதுபோல் மணமகளின் பெருவிரலையும் கிழித்து, இரண்டையும் ஒன்றாக வைத்துக் கட்டுப்போட்டு விடுவார்களாம்.

ரத்தம் கலந்து விடவேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு.

அதைத் தார்மிகமாகவே செய்து விடுகிறாள் இந்து மனைவி.

கணவன் சாப்பிடுவதற்கு முன்பு அவள் சாப்பிடுவதில்லை; அது எத்தனை நாளாயினும் சரி.

தீனிக்குப் பேர் போன மேல்நாட்டில், மனைவி சாப்பிட்ட மிச்சம் கணவனுக்குக் கிடைத்தால் பெரிய விஷயம்.

இப்போது குலமகளிர் அனைவரும் எல்லா நாள்களிலும் மல்லிகைப் பூவைத் தலையில் சூடுகிறார்கள்.

ஆனால், அந்நாளில் ஒரு அற்புதமான பழக்கம் இருந்தது.

பலர் அறியக் கணவனும் மனைவியும் படுக்கைக்குச் செல்லாத காலம் அது.

நடு இரவில் சந்தித்துப் பிரிந்து, தனியே படுக்கும் காலம் அது.

மாலை நேரத்தில் கணவனுக்கு மனைவியின் உடல் நிலை தெரிந்துவிடும்.

அவள் தலையில் மல்லிகைப்பூ இல்லை என்றால் அவள் வீட்டுக்கு விலக்காகி இருக்கிறாள் என்று பொருள்.

பெரும்பாலும் வீட்டுக்கு விலக்கானவர்கள், தனி அறையில் இருப்பது பழக்கம்.

கணவனும் மனைவியும் தனியாக இருக்காத வீட்டில் மனைவி தன் நிலையைக் கணவனுக்குத் தெரிவிக்கும் ஜாடையே மலர் இல்லாத கூந்தல்.

மனைவி கருவுற்றால், அவள் கருவுற்றிருப்பதை மாமியார் அறிந்துதான் மகனுக்குச் சொல்வாளே தவிர மனைவியே சொல்வதில்லை.

அது திருமணத்திற்குப் பின்வரும் `தோன்றா நாணம்’ எனப்படும்.

அஃதன்றியும், தன் கணவனைப் பற்றி மற்றவர்களிடம் குறிப்பிடும் சமயம் வரும்போது, `என் கணவர் என்றோ, என் அத்தான் என்றோ கூறுவதில்லை. தன் குழந்தையின் பெயரைச் சொல்லி `அவனுடைய தகப்பனார்’ என்று சொல்வது வழக்கம்.

அது கணவனுக்கும், உலகத்திற்கும் செய்யும் சத்தியமாகும்.

“தாய் அறியாத சூல் உண்டோ?” என்பார்கள்.

`தான் கருவுற்றது தன் கணவனுக்கே’ என்று அவள் சத்தியம் செய்கிறாள்.

எங்கள் ஜாதியில் கணவன் இறந்ததும் மனைவி பாடும் ஒப்பாரிப் பாட்டில், கணவனை `பிஞ்சு மக்கள் ஐயா’ என்றுதான் அழைப்பாள்.

இல்லறத்தில் அற்புதமான சட்டதிட்டங்களை வகுத்துக் கொடுத்தது இந்து தர்மம்.

அவ்வப்போது வரும் கோபதாபங்களை நீக்கி விட்டுப் பார்த்தால், ஒரு இந்துக் குடும்பம் இரண்டாயிரம் கோயில்களுக்குச் சமமாகக் காட்சியளிக்கும்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இரத்தங்களின் யுத்தம்

`பரசுராமன் பரசுராமன்…’ என்று மூன்று முறை அழைக்கிறார் நீதிமன்றத்தின் டவாலி.

அடுத்தாற்போல், `பரசுராமன் மகன் ரங்கராஜன்’ என்று மூன்று முறை அழைக்கிறார்.

மகன் வாதி; தகப்பன் பிரதிவாதி.

நீதிமன்றத்திலே ரத்தம் நேருக்கு நேராக மோதிக் கொள்கிறது.

பாச அணுக்களால் ஊறி வளர்ந்த ரத்தம், பகை அணுக்களுக்கு இடம் கொடுத்தது எப்படி?

ஆம், சமயங்களில் அது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

தந்தையும் மகனும் மோதிக்கொள்வதும், அண்ணனும் தம்பியும் மோதிக் கொள்வதும் விபரீதமான நிகழ்ச்சிகளே. ஆயினும் எப்படியோ இவை நடந்து விடுகின்றன.

அன்பையும் பாசத்தையும் வலியுறுத்தும் இந்து மதம் தவிர்க்க முடியாத சில விதிவிலக்குகளையும் சுட்டிக் காட்டுகிறது.

உறவு ரத்தம் பகையாக மாறுவதே விதியின் வலிமை என்கிறது.

என்னுடைய ரத்தம் மிகவும் மென்மையானது.

உறவினருக்குச் சிறிது துன்பம் என்றாலும்கூட, என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.

அவர்கள் என்னை ஏமாற்றி விட்டால்கூடப் பகை உணர்ச்சி எனக்கு வருவதில்லை.

சில இடங்களில் உறவினர்கள் மோதிக் கொள்ளும் வேகத்தைப் பார்க்கும்போது எனக்குத் திகைப்பு ஏற்படும்.

ஐந்து ரூபாய் வித்தியாசத்துக்காக அப்பனும் மகனும் அடிதடியில்கூட இறங்கி விடுகிறார்கள்.

தகப்பனார் இறந்து கிடக்கிறார். அவரது ஐந்து பிள்ளைகளும் பிணத்தின் பக்கமே போகவில்லை; பெட்டகத்தை உடைத்துப் பணத்தைப் பங்குபோடத் துவங்குகின்றனர்.

அடிதடி அரிவாள் தூக்கும் வரையில் முன்னேறுகிறது.

அவர்களது மனைவிமார்கள், உடனே இரண்டாவது போர்க்களத்தைத் துவங்குகிறார்கள்.

பிணம் இரண்டு நாட்கள் கிடந்து நாற்றம் எடுக்கிறது.

இரவு பகலாகப் பங்காளிகள் சமாதானம் செய்கிறார்கள்.

கடைசியில், மூத்த பிள்ளை கொள்ளிவைப்பதற்குக் கூட பணம் கேட்கிறான்.

இறந்து போனவனுக்காக ஒரு பிள்ளைகூட அழவில்லை.

அவன் சம்பாதித்த சொத்தும், கொண்டுவந்த மருமக்களும், தந்தை மகன் என்ற புனிதமான உறவை எவ்வளவு கேவலப்படுத்தி விட்டன.

என் உறவினர் ஒருவர் வீட்டில் நான் கண்ட காட்சி இது.

ஒரு தந்தை நன்றாகச் சம்பாதித்தார்.

தனது நான்கு பெண்களுக்கும் நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தார்.

தனது இரண்டு பிள்ளைகளுக்கும் அழகான பங்களாக்களைக் கட்டிக் கொடுத்தார்.

பெரிய இடத்தில் பெண் எடுத்தார்.

பிறகு, தமக்கென்று கொஞ்சம் செல்வத்தை ஒதுக்கிக் கொண்டு, ஒரு கோயில் விடுதியில் கடைசிக் காலத்தைக் கழித்தார்.

மரணத் தருவாயில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கே மரணமடைந்தார்.

அவரது சடலத்தைத் தங்கள் வீட்டில் போட்டுத் தூக்க ஒரு பிள்ளையும் ஒப்புக்கொள்ளவில்லை.

அவர்களல்லவா குழந்தைகள்!

என் வீட்டில் வேலைக்காரன் இறந்து போனாலும், அந்தச் சடலத்தைக்கூட அலங்கரித்து என் வீட்டிலிருந்தே தான் தூக்கி அனுப்புவேன்.

அவனோ தந்தை; வீடும் அவன் கட்டிக்கொடுத்த வீடு; பெற்ற பிள்ளைகள் பிணத்துக்குக்கூட இடம் தரவில்லை.

`நதிமூலம் ரிஷி மூலம் பார்க்கக்கூடாது’ என்பார்கள்.

காரணம் பல ரிஷிகள் மனைவியராலும், பிள்ளைகளாலும் ஆனார்கள் என்பதால்.

ரத்தம் தண்ணீரைவிட கனமானது என்பார்கள்.

என்னுடைய கணக்கில் அது புஷ்பத்தைவிட மென்மையானது.

என் சகோதரருக்கு உடல்நிலை சரியில்லையென்று கேள்விப்பட்டால், என் உடம்பிலிருக்கும் ரத்தம் முழுவதும் தலைக்கு ஏறுகிறது, ரத்தக் கொதிப்பு அதிகமாகிறது.

ஆனால் சிலரது ரத்தம் இரும்பைவிடக் கனமாக இருக்கிறது.

இரும்பைப்போல் அது துருப்பிடித்துப் போகிறது.

உறவுகளில் மனிதனுடைய இஷ்டமே இல்லாமல் இறைவனே நேரடியாக வழங்கும் உறவுகள் தாய், தந்தை, சகோதர உறவுகள்.

மனிதனுடைய மந்த புத்தியும், இறைவனுடைய சொந்த புத்தியும் சம அளவில் தேடித் தரும் உறவு, மனைவி உறவு.

அது சரியாக அமைந்தாலும், தவறாக அமைந்தாலும், அதைத் தேடி எடுத்ததில் மனிதனுக்குப் பங்கு இருக்கிறது.

ஆனால், பிறப்பிலும், உடன் பிறப்பிலும், மனித அறிவுக்கு வேலையே இல்லை.

அது முழுக்க முழுக்க இறைவனுடைய நியதியில் வருவது.

பின் ஏனங்கே பகை வந்து, பாசம் சாகிறது?

அதைத் தெளிவாகக் கண்டுகொள்ள வேண்டுமென்றால் மீண்டும் நாம் `பகவத் கீதை’ க்குள்ளே தான் நுழைய வேண்டும்.

பாரதப்போரில் உறவுகள் ஒன்றையொன்று எதிர்க்க வேண்டி வந்தது.

இத்தனைக்கும் சிற்றப்பன், பெரியப்பன் பிள்ளைகள்தான். உடன் பிறந்த அண்ணன் தம்பிகள்கூட அல்ல!

அதிலும் அர்ச்சுனன் மயங்கி விழுகிறான். பாவம் அவன் என்னைப்போல.

பார்த்தனின் சாரதி பரந்தாமன் அவனைத் தூக்கி நிறுத்துகிறான்.

தவிர்க்க முடியாத அந்த யுத்தத்திற்கான நியாயங்களைக் கூறுகிறான்.

ஒருவன் மனம் முழுக்கக் கல்லாகிவிட்ட பிறகு அவனைப் பற்றிய உறவு முறைகளை மறந்துவிடவேண்டும் என்கிறான்.

ஒரு சகோதரனின் கழுத்தை இன்னொரு சகோதரன் அறுக்க முயன்றால், அதைத் தடுப்பதற்கு அவன் கையையாவது வெட்ட வேண்டி வருகிறதே! விருப்பத்திற்கு விரோதமான இந்த வினைக்கு விதியைத் தவிர, வேறு எந்தக் காரணத்தைக் கூற முடியும்.

இது `தற்காப்பு’ என்ற தலைப்பில் அடங்கும்.

இருவருமே ஒருவர் கழுத்தை ஒருவர் அறுக்கத் துணிந்து விட்டால், அந்தக் கேள்விக்கு இறைவன் தான் பதில் சொல்ல வேண்டும்.

பிறப்பு நிர்ணயிக்கப்பட்ட போது, அதன் நோக்கத்திற்கு ஒரு சட்டத்தையும், அந்தச் சட்டத்திற்குச் சில செக்ஷன்களையும், இறைவன் விதித்திருக்கிறான்.

பூர்வ ஜென்மத்தை ஆதாரமாகக் கொண்டு ஒவ்வொரு பிறப்புக்கும் ஒவ்வொரு செக்ஷனை வழங்கியிருக்கிறான்.

சில பிறப்புகள் பந்த பாசத்தினால் உருகிச் சாகவும், சில உறவுகள் பகையினால் போரிட்டுச் சாகவும், அவன் நிர்ணயித்திருக்கிறான்.

அதை அவன் நிர்ணயித்ததால் தான், அவனே கண்ணன் வடிவில் அதற்கு நியாயத்தைக் கற்பிக்கிறான்.

“அர்ச்சுனா,

கொலை செய்வது பாவம் என்றா நீ மயங்குகிறாய்?

இல்லை, அப்படித்தான் நீ என்ன கொலையே செய்யாதவனா?

ஏற்கெனவே பல போர்களில் பலரைக் கொன்றவன் நீ.

இங்கே ஏன் மயங்குகிறாய்?

எதிரே நிற்பவர்கள் யாரென்று பார்த்ததும் உனக்கு மயக்கம் வருகிறது இல்லையா?” என்று கேட்கிறான்.

பாவம் அர்ச்சுனன்!

சிருஷ்டிகர்த்தா, பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் ஒரே மாதிரியான குணத்தைக் கொடுக்கவில்லை.

ஒரு ரத்தத்தை மலராகவும், ஒரு ரத்தத்தை இரும்பாகவும் படைத்தான்.

இரும்பு எழுந்து நின்றாலும்கூட மலர் துவண்டு விழுகிறது.

வாழ்க்கையின் எல்லாக் கட்டங்களையுமே, சில குடும்பங்களில் இப்படி க்ராஸ் போட்டு வைத்திருக்கிறான் இறைவன்.

அந்த க்ராஸ் இறைவனாலேயே விழுந்தது என்று கண்டு விட்டுக் கொடுக்கும்படி புஷ்பங்களை வேண்டிக் கொள்கிறது இந்துமதம்.

இரண்டு கைகளையும் தட்டினால் தானே சத்தம் வருமென்று, மென்மையான கையை அது அப்புறப்படுத்துகிறது.

`வன்செயலில் ஈடுபடும் கை தன் கருமத்தின் பலனை அனுபவிக்கும், என்று போதிக்கிறது.

பின் ஏன் பரமாத்மா அர்ச்சுனனை மட்டும் கொலை புரியத் தூண்டினான்?

ஒரு காடு அழிந்தால்தான் ஒரு வயல் உருவாகும் என்ற நிலை அங்கேயிருந்தது.

நான் வைத்த மரங்கள், நான் வளர்த்த மரங்கள் என்று பார்த்துப் பார்த்து மயங்குவதில் பயனில்லை.

அவற்றைவிடப் பயனுள்ள தானியங்களுக்காக அவற்றை அழிப்பது முறையே.

அங்கே நியாயம் தேவையைப் பொறுத்தது.

அப்படி இன்றியமையாத தேவை வரும்போது ரத்தங்களுக்குள் யுத்தம் வரலாம்; நீதிமன்றத்து டவாலியும் மூன்று முறை கூப்பிடலாம்.

ஆனால், மிகமிக இன்றியமையாத கட்டங்களைத் தவிர மற்ற நேரங்களில், மேன்மையான உறவுகள் விட்டுக் கொடுத்துப் போவதையே இந்துமதம் வலியுறுத்துகிறது.

தகப்பன்தான் இறந்து போய்விட்டானே, தம்பிக்கு என்ன ஆட்சியென்று ராமன் சிங்காதனத்தில் போய் உட்கார்ந்திருந்தால் யார் கேட்டிருக்கப் போகிறார்கள்?

கைகேயியின் கைகளில் விலங்கு மாட்டி, பரதனையே பாதுகாப்பாகக் காட்டுக்கு அனுப்பியிருந்தால் அதுவும் ஒரு கதையாகத்தானே இருந்திருக்கும்!

அப்படி ஆகியிருந்தால், ஸ்ரீராமன் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாக ஆகியிருக்க மாட்டார்; அயோத்தி இன்னொரு பங்காளதேஷ் ஆகியிருக்கும்.

ராமன் பரதனுக்கு விட்டுக் கொடுக்க, பரதன் ராமனுக்கு விட்டுக் கொடுக்க, விட்டுக் கொடுப்பதிலேயே ஒரு நாகரிக சம்பிரதாயத்தை உருவாக்கியது ராமாயணம்.

ஒரு நாற்காலி இருக்குமிடத்தில் இரண்டுபேர் நின்று கொண்டிருந்தால், ஒருவரைப் பார்த்து ஒருவர் `நீங்கள் உட்காருங்கள்’ என்று சொல்வது நாகரிகமா? ஒருவரைப் பிடித்துத் தள்ளிவிட்டுத் தான் போய் உட்காருவது நாகரிகமா?

விட்டுக் கொடுப்பது தவறில்லை; அது யுத்தத்தைத் தடுக்கிறது; ரத்தத்தைக் காப்பாற்றுகிறது.

இதில் நாம் இறைவனிடம் வேண்டிக் கொள்வது ஒன்றுதான்.

“இறைவா, இனிமேலாவது தொட்டுக் கொடுக்கும் உறவுகளைத் தராதே; விட்டுக் கொடுக்கும் உறவுகளையே உலகத்துக்குக் கொடு!”



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

விரும்பாதவனும் முடியாதவனும்

`முடியாதவனை மன்னித்துவிடு; விரும்பாதவனைத் தண்டித்துவிடு’ என்கிறது இந்துதர்மம்.

தன்னால் செய்ய முடிந்த ஒன்றைச் செய்ய விரும்பாதவன் சமுதாய விரோதி.

ஆனால், அதே காரியத்தைச் செய்ய விரும்பியும் முடியாதவன் அனுதாபத்திற்குரியவன்.

நாடிழந்த பாண்டவர்கள் துரியோதனனிடம் கேட்டது என்ன?

`குறைந்த பட்சம் சில ஊர்களாவது, சில வீடுகளாவது கொடுங்கள்’ என்பதுதான்.

செய்ய முடியாதா துரியோதனனால்?

முடியும்; ஆனால் விரும்பவில்லை.

அதன் விளைவே பாரத யுத்தம்.

அனுமானும் விபீஷணனும் உரைத்தபடி சீதையைத் திரும்பக் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்திருக்க முடியாதா, இராவணனால்?

முடியும்; ஆனால் விரும்பவில்லை.

அதன் விளைவே ராம-ராவண யுத்தம்.

`உன்னால் முடிந்ததைச் செய்’ என்று ஏன் பெரியவர்கள் உபதேசிக்கிறார்கள்?

“பெரிய விஷயத்தைச் செய்ய நினைத்தேன், முடியவில்லை” என்று வருந்திக் கொண்டிருக்காதே; “எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்” என்பது அதன் பொருளாகும்.

என் உடம்பு என் கையளவில் எட்டுச்சாண் உயரம் இருக்கிறதென்றால், எறும்பின் உடம்பு அதன் கையளவில் எட்டுச்சாண் தான்.

உணவைச் சமைத்ததும் யாராவது ஒரு அன்னக் காவடிக்கோ, பிச்சைக்காரனுக்கோ போட்டுவிட்டுச் சாப்பிடுவது என்ற பழக்கம் இந்துக்களுக்கு உண்டு.

பெட்டி நிறைய பணம் இருக்கிறது. பெட்டிச் சாவியும் செட்டியார் மடியில் இருக்கிறது. கொட்டிய கண்ணீரோடு திருமணமாகாமல் கோதையர் சிலர் கஷ்டப்படுகிறார்கள். இவர் கொஞ்சம் பெட்டியைத் திறந்தால் இறைவன் அவர்களுக்குச் சொர்க்க வாசலைத் திறப்பான். இவரால் முடியும்; ஆனால் விரும்பவில்லை.

இந்து தர்மத்தில் இவருக்குரிய தண்டனை என்ன?

வாழ்க்கையை ஓரளவுக்காவது அனுபவிக்க விரும்பியவர்களுக்கு அதனை மறுத்தாரல்லவா? அதனால் இவர் எதையும் அனுபவிக்க முடியாமல் போய்விடும்.

பல லட்சம் செலவு செய்து இவர் தம் பெண்ணுக்குக் கல்யாணம் செய்திருப்பார். அது மலடியாகப் போய்விடும். அல்லது வாழா வெட்டியாகப் போய்விடும்.

`அறஞ்செய விரும்பு’ என்றார் ஔவைப்பாட்டி.

`செய்’ என்று அவர் ஆணையிடவில்லை `விரும்பு’ என்றுதான் சொன்னார்.

காரணம், செய்ய முடியாதவரும் இருக்கலாம் அல்லவா!

அவன் விரும்பினால்கூட போதும்; அதுவே கருணையின் பரப்பளவாகும்.

யூதர்களை மன்னித்திருக்க முடியாதா, ஹிட்லரால்?

போரின் நாசத்தைத் தடுத்திருக்க முடியாதா ஹிட்லரால்?

முடிந்தும் அவன் விரும்பவில்லை. விளைவு …?

மற்றவர்களை அவன் எப்படி நடத்தினானோ? அப்படியே இறைவன் அவனை நடத்தினான்.

வண்டி மாட்டை நீ ஒரு அடி அடித்தால்கூட, அதற்குப் பதிலடி உனக்குக் கிடைக்கிறது.

வண்டி மாட்டுக்கு நீ வைக்கோல் போட்டால்கூட, அதற்குக் கைம்மாறாக ஒரு கவளச்சோறு உனக்குக் கிடைக்கிறது.

ஆகவே விரும்பு; முடிந்தால் செய்; முடியாவிட்டால் விரும்பு.

`விரும்பு’ என்ற உடனேயே தஞ்சாவூரைப் பார்த்து, இந்த நிலமெல்லாம் நம்முடைய நிலமாக இருக்கக்கூடாதா என்று விரும்பாதே!

அதன் பெயர் விருப்பமல்ல; ஆசை!

விரும்புவது என்ற வார்த்தையே நல்லதை விரும்புவதைத்தான் குறிக்கும்.

தவறு செய்ய நினைப்பது விரும்புவதாகாது; திட்டமிடுவதாகும்.

ஆயிரம் ஏக்கர் நிலத்தை வளைத்துப் போட்டுக் கொண்டு அடுத்தவனுக்கு அரை ஏக்கர் கூடக் கொடுக்க விரும்பாதவன் இறுதியில் அனுபவிக்கப் போவது எத்தனை ஏக்கர்?

வெறும் ஆறடிதான்!

இந்து சம்பிரதாயத்தில் அதுகூடக் கிடையாது.

ஆறடி நிலத்தில் மாறி மாறி மாறி ஆயிரக்கணக்கானவர்கள் கொளுத்தப்படுகிறார்கள்.

இறைவன் தன்னுடைய விருப்பத்தைப் பூமியில் எப்படிப் பரவலாக வைத்தான்?

நீ சிந்தும் துளித் தண்ணீர், எறும்பு குளிக்கும் படித்துறையாகி விடுகிறது.

கழுதைக்கும் உணவாகட்டும் என்றுதானே காகிதத்தைக் கண்டு பிடிக்கும் அறிவை மனிதனுக்குக் கொடுத்தான்.

விளைவுகளில் நல்லவை எல்லாம் இறைவனது விருப்பத்தின் விளைவுகளே!

`நெல்’ என்று ஒன்றை அவன் படைக்க விரும்பாமல் இருந்திருந்தால், `சோறு’ என்ற ஒன்றை நாம் கண்டிருக்க மாட்டோம்.

`இறைக்கின்ற கேணி ஊறும்’ என்று ஏன் கூறுகிறார்கள்?

`கொடுக்கின்ற இடத்திலேதான் இறைவன் அருள் சுரக்கும்’ என்பதால்.

தேங்கிய நீர் தேங்கியே கிடந்து விட்டால், நோய்களுக்கு அது காரணமாகிறது.

தேங்கிய செல்வமும் தேங்கியே கிடந்து விட்டால் பாவங்களுக்கு அது காரணமாகி விடுகிறது.

இல்லாமை கொடுமையல்ல; இயலாமை குற்றமல்ல; விரும்பாமையே பாபமாகும்.

மனிதனுடைய மனோதர்மம் சரியாக இருந்து விட்டால் `சமதர்மம்’ என்ற வார்த்தை அரசியலில் ஏன் அடிபடப் போகிறது?

ஒவ்வொரு மனிதனும் ஏதோ அகத்தியர் காலத்திலிருந்து வாழ்ந்து கொண்டிருப்பது போலவும், இன்னும் ஆயிரம் ஆண்டுக் காலத்துக்கு வாழப்போவது போலவும் திட்டமிட்டே பொருள்களைப் பதுக்கி வைக்கிறான்.

குருட்டுப் பிச்சைக்காரனின் சட்டியில் பத்துப் பைசாவைப் போட்டுவிட்டு இருபது பைசாச் சில்லரை எடுப்பவனும் இருக்கிறான்.

செய்ய விரும்பாமையும், திருட்டுத்தனமுமே சமூகத்தைப் பாழ்படுத்துகின்றன.

பிள்ளையே இல்லாத ஒரு கோடீஸ்வரர், எல்லையே இல்லாத ஒரு வீடு கட்டி இருக்கிறார்.

கணவனும் மனைவியும் மட்டுமே மாடி ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர் விரும்பினால் எத்தனையோ சுற்றங்களை வாழ வைக்கலாமே!

மனக் கதவு அடைத்துக் கொண்டது; அதனால் வாசற் கதவும் அடைப்பட்டு விட்டது!

கடைசியில் அவரது சமாதியாவது அந்த வீட்டிற்குள் அமையப் போகிறதா என்றால் இல்லை.

அவரது வேலைக்காரனை எரித்த இடத்திலே தான் அவரையும் எரிக்கப் போகிறார்கள்.

வெறும் பிரமை, மயக்கம், சகலமுமே நிலையாகி விட்டது போல் தனக்குள்ளே ஒரு தோற்றம்!

இத்தகைய மூடர்களுக்காகவே இந்து மதம் நிலையாமையைப் போதித்தது.

திரும்பத் திரும்ப, `நீ சாகப் போகிறாய், சாகப் போகிறாய்’ என்று சொல்வதன் மர்மம் இதுதான்.

நிலையாமையை எண்ணி விரும்பாமையைக் கைவிடு.

உன்னைப் பற்றிய புள்ளி விவரம் கணக்கெடுக்கப்படும் போது எத்தனை வீடு கட்டினாய் என்று கணக்கு எடுக்கப்படுவதில்லை. எவ்வளவு செய்தாய் என்பதே ஏட்டுக்கு வருகிறது.

எந்த நிலத்திலும் ஏதாவது ஒன்று விளையும். குறைந்த பட்சம் பறங்கியும் பூசணியுமாவது விளையும்.

நீ குறைந்தபட்சம் விரும்பி அதைச் செய்தால், அதுவே உன்னைப் பெரிய தோட்டக்காரனாக்கி விடும்.

மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது சாப்பிட்டால் உடம்புக்கு ஆகாது என்றும், திருஷ்டி படும் என்றும் இந்துக்கள் ஏன் சொல்கிறார்கள்?

`பிறருக்குப் பகிர்ந்து உண்ணாமை பாபம்’ என்று அப்படிச் சொல்கிறார்கள்.

சரியோ தவறோ, செய்ய முடியாதவனுக்கு நல்ல இருதயத்தையும், செய்ய விரும்பாதவனுக்குச் செல்வத்தையும் வழங்கியிருக்கிறான் இறைவன்.

கடலிலே நீரை வைத்து அதைக் குடிக்க முடியாமல் ஆக்கியவனல்லவா அவன்!

இதற்குக் காரணம் உண்டு.

ஒவ்வொருவருடைய புத்தியையும் அளவெடுப்பதற்கு இறைவன் நடத்தும் லீலை அது.

அனுபவத்தின் மூலம் ஒன்று நன்றாகத் தெரிகிறது.

செய்ய முடிந்தும் விரும்பாதவனுடைய செல்வம் மோசமான முறையில் அழிந்து போகிறது. அவனுடைய மரணமும் அப்படியே!

செய்ய விரும்பி முடியாதவனுடைய நிலை முடிவில் நிம்மதியடைகிறது.

காரணம், அவனிடம் இல்லை என்பது அவனுக்குத் தெரியும், ஆண்டவனுக்கும் தெரியும்.

இதுவரையில் தர்மம் செய்யாத பணக்காரன் நிம்மதியாகச் செத்ததும் இல்லை; அவன் சந்ததி அந்தச் செல்வத்தை அனுபவித்ததும் இல்லை.

ஏன், பலருக்குச் சந்ததியே இல்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இன்றைய இளைஞனுக்கு

நாப்பிளக்கப் பொய்பேசி நவநிதியம் தேடி
நலமொன்றும் இல்லாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
பொலபொலலெனக் கலகலெனப்
புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வழியறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால்
நுழைத்துக்கொண்டு
ஆப்பதனை அசைத்திட்ட குரங்கதனைப் போல
அகப்பட்டீர் கடந்துழல அகப்பட்டீர் நீரே!

- பட்டினத்தார்.

`ஏ மனிதர்களே! நாக்கே பிளந்துவிடும்படியாகப் பொய் பேசுவீர்கள்!

புதிய புதிய செல்வங்களைத் தேடுவீர்கள்!

பூமியைப் பிளந்துக்கொண்டு வருகின்ற புற்றீசல் போலப் பொல பொலவென்று கலகலவென்று பிள்ளைகளைப் பெறுவீர்கள்!

காப்பதற்கும் உங்களுக்கு வழி தெரியாது; அவர்களைக் கைவிடவும் மாட்டீர்கள்.

பாதி பிளந்து ஆப்பு வைக்கப்பட்ட மரத்துளையில் காலை வைத்துக்கொண்டே ஆப்பைப் பிடுங்குகிற குரங்கு, மரத்துளையில் கால் மாட்டிக் கொண்டு திண்டாடுவது போல பந்த பாசத்தில் கிடந்து உழலுவீர்கள்!’ என்று சிரிப்போடு சொல்கிறார் பட்டினத்தார்.

தொட்ட பின்பே பாம்பு என்றறியும் மனிதர்கள்… -

சுட்ட பிறகே நெருப்பென்றறியும் அப்பாவிகள் -

அவர்கள் பட்ட பின்புமே கெட்ட பின்புமே பரம்பொருளை நினைக்கிறார்கள்.

ஆரம்பத்திலிருந்தே வாழ்வை வகுத்துக்கொள்ள அவர்களால் முடிவதில்லை.

ராமலிங்க வள்ளலாரைப் போலவோ, ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போலவோ, சுவாமி விவேகானந்தரைப் போலவோ, இளம் பருவத்திலே ஞான ஒளியைப் பெற அவர்களால் முடியவில்லை.

`ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே!’

சாட்டை இல்லாப் பம்பரம் போல் ஆட்டி வைக்கிறான் கண்ணன்.

`உண்டு, உண்டு’ என்று ஓடி, பிறகு `இல்லை, இல்லை’ என்று ஏமாந்து, `எங்கே எங்கே’ என்று தேடி, `இதோ, இங்கே இங்கே’ என்று கண் மயங்கி, வெட்ட வெளிப் பொட்டலிலே விட்டெறிந்த பந்தினைப்போல், `ஆடி ஓடி அமர்ந்தேன் பராபரமே!’ என்று அமர்ந்து விடுகிறார்கள்.

அனுபவங்களுக்குப் பிறகுதான் உண்மை அவர்களுக்குத் தெரிகிறது.

அந்த உண்மையை ஆரம்பத்திலேயே கண்டு கொள்வதெப்படி?

இது இன்றைய இளைஞனுக்குச் சொல்லவேண்டிய பாடம்.

குத்திய பின்பே முள்ளென்று அறியாமல், `இது முள்’ என்று பார்வையிலேயே அவன் தெரிந்துக் கொள்ளவேண்டும்.

அதற்கு என்ன வழி?

இதோ ராமகிருஷ்ணர் சொல்கிறார்:

“வீட்டு ஈயானது ஒரு சமயம் அழுகிய புண்ணின் மீதும், மறு சமயம் நிவேனத்துக்கு வைத்திருக்கும் பொருளின்மீதும் உட்காரும். ஆனால், தாமரையிலுள்ள தேனை அருந்தும் வண்டு, அதைத் தவிர வேறொன்றையும் மதியாது. நீ வீட்டு ஈயைப் போலிராமல் தேன் வண்டைப் போலிரு”. -பரமஹம்சரின் இந்த வாக்கு, இன்றைய இளைஞன் கடைபிடிக்க வேண்டிய அறிவியல் அரிச்சுவடி.

வாழ்க்கைப் பாதையில் நீண்ட தூரம் பயணம் செய்யவிருக்கும் இளைஞன் முதற்கோணல், முற்றும் கோணல் என்பதை நினைத்தே தன் படிப்பைத் தொடங்க வேண்டும்.

அந்தப் படிப்பையும் தேன் வண்டைப்போல் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும்.

வாழ்க்கைக்குத் தேவையில்லாத, பயன்படாத, நூல்களைப் படித்துக் காலத்தை வீணாக்கக் கூடாது.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

- என்றான் வள்ளுவன்.

பயனற்ற நூல்களில் காலம் வீணாகிறது.

பண்பாடற்ற நண்பர்களால் மனம் பாழாகிறது.

அலட்சிய மனப்பான்மையால் அறிவு மயங்குகிறது.

வெறும் ஆரவாரங்களில் போலி வாழ்க்கையே கிட்டுகிறது.

அஞ்சியஞ்சிச் சாவதால் ஆன்மா அடிமையாகி விடுகிறது.

படிப்பது என்பது, வரப்போகும் காலங்களுக்குப் போடப்படும் அஸ்திவாரம். ஆனால், தவறாகப் படிக்கும் படிப்புப் பயனற்றுப் போகிறது.

எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க முடியாத வயது இளம் வயது.

ஆனால், சிந்தித்தே தீரவேண்டிய வயதும் அதுதான்.

`சித்திரப்பாவையின் அத்தக அடங்கி’ நல்ல பாடங்களைக் கேட்டு, நாளையப் பொழுதுக்குத் தன்னைத் தயார் செய்துக் கொள்ள வேண்டிய வயது, பள்ளி வயதுதான் என்பதை இளைஞன் மறக்கக்கூடாது.

அவனுக்குச் சாப்பாட்டைப் பற்றியும், தூக்கத்தையும் பற்றியும் இந்துமதம் கூறுகிறது.

கீதையில் பரந்தாமன் கூறுகிறான்:

“அர்ஜுனா!

அதிமாக உண்ணுபவனுக்கும் யோகமில்லை; ஒன்றும் உண்ணாதவனுக்கும் இல்லை; தூக்கத்தில் அதிக விருப்பமுடையவனுக்கும் இல்லை; தூங்காமலேயே விழிப்பவனுக்கும் இல்லை. அளவான ஊணும், உழைப்புமுடையவனுக்கும், அளவான உறக்கமும், விழிப்புமுடையவனுக்கும் துன்பம் துடைக் கும் யோகம் கிட்டுகிறது”.

- அதையே பரமஹம்சர் கூறுகிறார்:

“பகலில் திருப்தியாகச் சாப்பிடலாம். ஆனால் இரவில் உணவு, அளவு குறைந்ததாயும் சத்துக் குறைந்ததாயும் இருக்கட்டும். சரீரத்திற்கு உஷ்ணத்தையும் மனத்துக்குச் சஞ்சலத்தையும் கொடுக்கும் உணவை உட்கொள்ளாதே! இழவு வீடுகளில் நடக்கும் சாப்பாட்டுக்குப் போகாதே. புரோகிதத்தால் பிழைப்பவர் வீட்டிலும் சாப்பிடாதே. இறைவனுக்குப் படைக்கக்கூடியது போன்ற சுத்தமான ஆகாரத்தையே சாப்பிடு”.

ஆம். முதலில் ஆராய்ந்து தேர்ந்தெடுத்துப் படிக்கும் படிப்பு; அடுத்து அளவான சுத்தமான உணவு; அடுத்தது அளவான உழைப்பும் உறக்கமும்.

நான் சின்ன வயதில் படித்த எல்லாப் பாடங்களும் எனக்கு நினைவில் இருக்கின்றன.

அவைதான் இத்தனை ஆண்டுகளாக எனக்குக் கை கொடுத்து வருகின்றன.

ஆனால், முறையற்ற உணவு, அதற்கு நேர்மாறான பட்டினி, அளவற்ற தூக்கம் – இவற்றால் என் உடம்பு கெட்டுவிட்டது.

ஆரம்பத்திலிருந்தே உணவு முறையை ஒழுங்குபடுத்திக் கொள்ளவில்லையே என்று இன்று நான் வருந்துகிறேன்.

நல்ல வேளையாக இறைவன் எனக்களித்த வரம், அன்று நான் அர்த்தம் தெரியாமலே மனப்பாடம் செய்த பாடல்கள் அனைத்தும் இன்று அர்த்தத்தோடு வந்து உதவி புரிகின்றன.

இந்துமதத்தின் உபதேசங்களை இன்றைய இளைஞன் ஒதுக்கிவிடாமல் படிக்கவேண்டும்.

நோய்கள் பற்றியும் மருந்துகள் பற்றியும்கூட இந்துமதம் முழு அளவில் சொல்லி வைத்திருக்கிறது.

இன்றைய இளைஞன் திருமூலரின் திருமந்திரத்தை மனப்பாடம் செய்யவேண்டும்.

அவை இப்போது உதவாவிட்டாலும், பின்னாளில் உதவும்.

சந்தம் நிறைந்த பாடல்கள் விரைவிலே மனத்தில் பதியும்.

“சித்தர் ஞானக்கோவை” என்று வழங்கப்படும் நூலில் பட்டினத்தார், சிவவாக்கியர், பத்திரகிரியார் பாடல்களை மனப்பாடம் செய்தால், பெண்ணாசை குறையும்.

எப்படிப்பட்ட பெண்ணைத் திருமணத்திற்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்.

ஆரம்பப் படிக்கட்டுகளை இவ்வளவு அழகாகப் போட்டுக் கொண்டு விட்டால், எதிர்காலத்தில் துன்பமிருக்காது; சோர்விருக்காது; அவமானம் நிகழாது. சென்ற இடமெல்லாம் சிறப்பும் கிடைக்கும்.

நண்பர்கள் இருப்பார்கள்; எதிரிகள் இருக்க மாட்டார்கள்.

வரவறிந்து செலவு செய்யும் புத்தி வந்து விடும்.

வாழ்க்கை என்பது பங்கீடு செய்யப்பட்ட சாலையாகி விடும்.

என்னைப்போல அடிக்கடி சோகப்பாட்டுப் பாட வேண்டியிராது.

சராசரி மனிதன் லெளகீக வாழ்க்கையில் எல்லாவித சுகங்களையும் அடைவதற்கு, இந்துமத நூல்கள் நல்ல வழி காட்டுகின்றன.

வரவு செலவு பற்றிக்கூட நமது பெரியவர்கள் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள்.

காஞ்சிப் பெரியவர்கள் ஒன்று சொன்னதாக எனக்கு ஞாபகம்.

“ஒருவரிடம் கடன் வாங்கினால் எப்படியாவது கஷ்டப்பட்டு ஒரே தவணையில் பணத்தைக் கொடுத்துப் பத்திரத்தைத் திருப்பி வாங்கிவிடு. கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டத் தொடங்கினால், அதன் வட்டிக் கணக்கு தலைமுறை தலைமுறைக்கு வரும்”.

ஆம், அதிலும் இன்றைய இளைஞன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கடைசியாக சாப்பாடு பற்றிய அனுபவம்.

எதை எதைச் சாப்பிடக்கூடாது என்று நான் ஒரு பாடல் எழுதியிருக்கிறேன்.

…………………….

தட்டைப் பயறுகள் மொச்சை
சாகர எறாக்கள் நண்டு
கொட்டை உருளைக் கிழங்கில்
கொடியதோர் வாய்வு தோன்றும்
தொட்டுப் பாராதே என்றும்
சுவைக்காக நோய் பெறாதே!

-நமது மூதாதையர்கள் வாய்வு, உஷ்ணம், சீதம், சிலேட்டுமம், பித்தம் என்று நோய்களுக்கான காரணங்களையே தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

இன்றைய இளைஞன் மர்ம நாவல்களை விட்டு விட்டு, மதநூல்களைப் படித்தால், வாழ்க்கையில் சகல பகுதிகளுக்கும் வழி கிடைக்கும்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அறிவும் திருவும்

இந்துக்களின் கடவுள் கொள்கை முற்றிலும் லெளகீகத்தை ஒட்டியதே.

குடும்ப வாழ்க்கையின் கூறுகளே, தெய்வ அம்சங்களாகச் சித்தரிக்கப்பட்டிருகின்றன.

சிவனுக்குப் பார்வதி என்று ஒரு மனைவி உண்டென்றும், முருகன், கணபதி ஆகிய மக்கள் உண்டென்றும், ஒரு குடும்பத்தைக் காட்டினார்கள்.

சிவனுடைய ஒவ்வொரு அவதாரத்திலும், சக்தியும் அவதாரம் செய்து, கணவன் – மனைவி ஆகிறார்கள்.

சிவன் சொக்கநாதர் ஆனால், சக்தி மீனாட்சி ஆகிறாள்.

சிவன் விசுவநாதரானால், சக்தி விசாலாட்சி ஆகிறாள்.

சிவன் ஏகாம்பரேசுவரர் ஆனால், சக்தி காமாட்சி ஆகிறாள்.

அதுபோல், பிரகதீசுவரர் – பிரகதாம்பாள்.

ஒவ்வொரு சிவன் கோவிலிலும், சிவசக்தியின் பெயர் மாற்றமிருக்கும்.

அது போலவே,

திருமால் கண்ணனானால், திருமகள் ருக்மணி ஆகிறாள்.

திருமால் வேங்கடத்தான் ஆனால், திருமகள் அலர்மேலு மங்கை ஆகிறாள்.

திருப்பதியில் இருந்து, ஸ்ரீரங்கமும், திருவல்லிக்கேணி, அரியக்குடி அத்தனை இடங்களிலுமுள்ள திருமால் கோயில்கள் வேறு பெயர்களைச் சுட்டுகின்றன.

சைவர்கள் சிவனையும், வைணவர்கள் திருமாலையும் தந்தையாகக் கொண்டு இயங்குகிறார்கள்.

சைவர்களுக்கு வைணவர்கள் சம்பந்திகள்.

சைவ – வைணவத் தகராறு என்பது, சம்பந்திகள் தகராறே!

திருமாலின் தங்கையைத்தான் சிவன் மணந்தார்.

அதுபோல், ஒவ்வொரு கடவுளுக்கும் பத்தினி உண்டு.

பிரும்மாவுக்கு சரஸ்வதி; இந்திரனுக்கு இந்திராணி; முருகனுக்குத் தெய்வானை-வள்ளி; கணபதி மட்டுமே பிரம்மசாரி.

இப்படி ஏன் கடவுளுக்குக் குடும்பங்களை வகுத்தார்கள்?

தெய்வமும் லெளகீகத்துக்குத் தப்பவில்லை என்பதைக் குறிக்கவே!

இந்துமதம் என்பது லெளகீகத்தையே முதற்படியாகக்
கருதுகிறது.

துறவு என்பது இரண்டாம் பட்சமே.

குடும்பங்களில் கணவன்-மனைவி தகராறு வருவது போல், சிவனுக்கும் சக்திக்கும் தகராறு வந்ததாகக் கதைகள் உண்டு.

மனிதக் குடும்பங்களில் என்னென்ன காரணங்களுக்காகத் தகராறு வருமோ, அதே காரணங்களுக்காகத்தான் கடவுள் குடும்பங்களிலும் தகராறு வந்திருக்கிறது.

இதைக் கேட்கின்ற வேறு நாட்டவர்களுக்கு வியப்பாக இருக்கும்.

எந்த மதமும் கணவன் – மனைவியாகக் கடவுளைக் கண்டதில்லை.

கணவனுக்குரிய இடம் எது? மனைவிக்குரிய இடம் எது?

இந்துமதக் கதைகள் பதில் சொல்லும்.

இந்துமதம் வெறும் சந்நியாசிகளுக்கும், வாழ்க்கையைக் கண்டு பயந்தவர்களுக்கும் மட்டும் அடைக்கலம் கொடுப்பதல்ல.

அது போலவே, மனித வாழ்க்கையின் நாகரிகம் கலைகள் அனைத்தையுமே இந்துமதம் எதிரொலிக்கிறது.

சினம்-சினத்தால் அழிவு.

பொறாமை – பொறாமையால் அழிவு.

ஆணவம் – ஆணவத்தால் அழிவு.

துரோகம் – துரோகத்தால் அழிவு.

- இவைபோல் வாழ்க்கையில் எத்தனை கோணங்கள் உண்டோ, அத்தனை கோணங்களும் இந்துமதக் கொள்கைகளில் உண்டு.

கல்வி பற்றியும், கல்லாமை பற்றியும் கதைகள் உண்டு.

கல்விக்கு சரஸ்வதி, செல்வத்துக்கு லட்சுமி என்றெல்லாம் வாழ்க்கைத் தேவைக்கும் கடவுள்களை வைத்தது இந்துமதம்.

ஏன், கலைகளைக்கூட இந்துமதம் தன் வழிகளில் ஒன்றாக ஏற்றுக்கொண்டது.

கடவுள் நாட்டியமாடுவதாக எந்த மதத்திலாவது கதைகள் உண்டா?

சரசுவதி வீணை வாசிக்கிறாள்! நாரதர் தம்புரா மீட்டுகிறார்! நந்தி மத்தளம் கொட்டுகிறார்.

நடராசர் நாட்டியமாடுகிறார்.

இப்படி, மனிதர்களின் ஆசைகளுக்கும் உல்லாசப் பொழுது போக்குக்குங்கூட இந்துமதம் வழிவகுத்துத் தருகிறது.

போர் செய்வது பற்றியும் கதைகளுண்டு; சமாதானம் பற்றியும் கதைகளுண்டு; தூது செல்வது பற்றியும் கதைகளுண்டு; பேரம் பேசுவது பற்றியும் கதைகளுண்டு; கடன் வாங்குவது பற்றியும் கதைகளுண்டு.

பொய் சொல்வது பற்றியும், பொய் சொல்லாதது பற்றியும், அரிச்சந்திரன் கதைபோல் இப்படி ஆயிரங் கதைகளுண்டு.

இந்துமதத்தின் மூல நோக்கம் வாழ்க்கையின் சகல பகுதிகளையும் சுட்டிக் காட்டுவதே!

அடுத்தவன் மனைவியைத் தாயாக நினைத்த கதை நூற்றுக்கணக்கிலுண்டு.

அடுத்தவன் மனைவியைக் கெடுத்து இழிநிலை அடைந்த கதைகள் உண்டு.

இந்திரன்-அகலிகை.

சந்திரன்- தாரை.

வள்ளுவன் குறள், எப்படிப் போகின்ற பக்கமெல்லாம் எதிரொலிக்கின்றதோ, ஒவ்வொரு அனுபவத்திலும் ஓடி வந்து நிற்கிறதோ, அதுபோல, இந்தப் புராணக் கதைகளும் வந்து நிற்கின்றன.

விஞ்ஞான ரீதியாகவும் இந்துக்கள் சிந்தித்தார்கள்.

வானத்தில் பறக்கும் புஷ்பக விமானத்தைக் கற்பனை செய்தார்கள்.

கடல் நீரை மேகம் வாங்கி மழையாகப் பொழிவதை அப்பொழுதே சொல்லிவிட்டார்கள்.

பூமி சுற்றுவதைப் பிரதட்சணம், அப்பிரதட்சணம் என்று அப்பொழுதே சுட்டிக் காட்டினார்கள்.

சந்திர கிரகணத்தைத் தத்துவமாகச் சொன்னார்கள்.

நட்சத்திரங்களின் நடமாட்டத்தை விரிவாக எழுதி வைத்தார்கள்.

சந்திரமண்டலம் பூமியிலிருந்து எவ்வளவு தூரத்திலிருக்கிறது என்பதையும், செவ்வாய்க் கிரகம் அதைவிடத் தூரம் என்பதையும், அப்பொழுதே சொல்லிவிட்டார்கள்.

இந்துக்களின் விஞ்ஞான அறிவை விரிவாக ஆயிரம் பக்கங்களிலே எழுதலாம்.

மகாபாரதத்திலும், ராமாயணத்திலும் வரும் அஸ்திரங்களின் வகைகளைப் படிக்கும்போது, அவற்றைப் பார்த்துத்தான் குண்டு செய்யவே மேலைநாடு கற்றுக்கொண்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

தஞ்சை சரசுவதி மகாலிலிருந்து ஏராளமான ஏடுகளை இங்கிலாந்துக்குக் கொண்டு போயிருக்கிறார்கள்.

விஞ்ஞானத்தில் பலதுறைகளை அவற்றிலிருந்தே கண்டு பிடித்ததாக ஓர் ஆங்கிலேயர் எழுதிய கட்டுரையை பதினெட்டாண்டுகளுக்கு முன் ஒரு மொழிபெயர்ப்பில் நான் படித்தேன்.

பல நூற்றாண்டுகளாக, வாழ்க்கையின் சகல கோணங்களையும் விஞ்ஞான ரீதியாக இந்துக்கள் கூறி வைத்திருக்கிறார்கள்.

நீருக்கு ஒரு கடவுள் – வருணன்.

நெருப்புக்கு ஒரு கடவுள் – அக்கினி.

காற்றுக்கு ஒரு கடவுள் – வாயு.

வெளிச்சத்துக்கு ஒரு கடவுள் – சூரியன்.

இந்துமதத்தின் ஆரம்ப காலத்தில் சூரிய வணக்கமே தெய்வ வணக்கமாக இருந்து வந்திருக்கிறது.

காலங்களில் அது வளர்ந்து ஒவ்வொரு துறையாகக் கண்டு
பிடிக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு அனுபவத்தின் மீதும் புதிய புதிய தத்துவங்கள் தோன்றியிருக்கின்றன. இது நீண்ட கால மதமாகையால், ஆண்டுக்காண்டு பக்குவப்பட்டு, இன்று தழைத்துக் குலுங்கி நிற்கிறது.

ஆராய்ந்து பார்த்தால், இந்துக்களின் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஓர் அர்த்தமிருக்கிறது.

இப்போது நாம் சரசுவதி பூஜையையும், ஆயுத பூஜையையும் கொண்டாடுகிறோம்.

சரசுவதியையும், மகாலட்சுமியையும் வணங்கினோம்.

அதாவது அறிவையும், செல்வத்தையும் வணங்கினோம்.

வாழ்க்கை என்பது என்ன? – அறிவும் செல்வமுந்தான். அறிவுக்குத் தலைவியான சரசுவதி யார்?

அவளுக்குக் கலைமகள், வாணி, சரசுவதி என்ற பெயர்களும் உண்டு.

திருப்பாற் கடலில் தேவர்கள் அமுதம் கடைந்த போது அதில் உண்டானவள் சரசுவதி என்பது ஐதீகக் கதை.

அவள் கல்வி, கலைக்கு மட்டுமே தலைவி.

அமிர்தம் கடைந்தபோது அவள் உருவானவள் என்று ஏன் குறிப்பிட்டார்கள்.

உள்ளத்தை அறிவால் தோண்டி எடுக்கும்போது வாழ்க்கை ஒளி அடைகிறது என்பதாம்.

கலைக்கு முக்கியம், தெய்வத்தை வணங்கித் தொடங்குவது.

அதுவே கலைமகள் கையில் உள்ள ஜெபமாலை.

அவள் ஒரு கையில் ஏடு வைத்திருக்கிறாள்.

- அது கல்வி வடிவம்.

கையில் உள்ள வீணை, நாத வடிவம்.

அவளுக்கு வெள்ளை உடை.

அமர்ந்திருப்பது வெள்ளைத் தாமரை மீது.

வெள்ளை உள்ளமே கல்வியும், கலையும் வளர்வதற்கு முக்கியம் என்று அவை குறிக்கின்றன.

கயவனுக்கும், திருடனுக்கும் கல்வி வராது; கலையுணர்ச்சி இருக்காது.

அதுபோலவே திருமகள் வடிவம்.

கல்வி மட்டும் போதாது. வாழ்க்கைக்குப் பொருளும் வேண்டும் என்பதைக் குறிக்கவே திருமகள் வடிவம்.

பூமியில் வாழும் உயிர்களுக்கெல்லாம் திருமால் வடிவம் கூறப்பட்டிருக்கிறது.

அந்த உயிர்களுக்குச் செல்வம் வழங்குபவள் திருமாலின் மனைவியான திருமகள்.

பொதுவில் மனித வாழ்க்கையின் குறிக்கோளை இந்து
மதமே பூர்த்தி செய்கிறது.

அதன் தத்துவங்கள், கல்வெட்டுகள்.

அறிவுடையோர் அதனை மதிப்பர்;

திருவுடையோர் அதற்கு நன்றி கூறுவர்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஆண்டாள், தமிழை ஆண்டாள்!

தமிழிலே காதல் இலக்கியங்கள் ஏராளம். அவற்றில் மனிதனைக் காதலனாக்கிக் காட்டும் இலக்கியங்கள் பல.

அரசனைக் காதலனாக்கிக் காட்டும் இலக்கியங்கள் சில.

அவையெல்லாம் ஆடவனைப் பெண் காதலிக்கும் இலக்கியங்கள்.

ஆனால், ஆண்மையில் பெண்மை கண்டு, அதை `நாயகி பாவ’மாகக் கொண்டு, இறைவனை நாயகனாக விவரிக்கும் சமய இலக்கியங்கள் தனிச்சுவை வாய்ந்தவை.

ஆணைப் பெண் காதலிக்கும் போது வருகின்ற உருக்கத்தைவிட, ஆணே பெண்ணாகும் உருவகத்தில் உருக்கம் அதிகம்.

காதலுக்குச் சொல்லப்படும் இலக்கணங்களையெல்லாம் அந்த ஆணாகப் பிறந்த பெண் உருவங்கள் எப்படி எப்படி கையாளுகின்றனர்.

அப்படிக் கையாளும்போது நமது தமிழ் மொழிக்கு இந்து சமயம் வழங்கியுள்ள வார்த்தைகள்தான் எத்தனை!

அவற்றில் `நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தை’ப் புதிய தமிழ்ச் சொற்களின் அகராதி என்றே அழைக்கலாம்.

பெண்மையின் காதல் அவஸ்தையைச் சித்தரிக்கும் முத்தொள்ளாயிரப் பாடல்களோ, மற்றச் சங்க காலத்து அகநூல்களோ, ஏன், கம்பராமாயணமோ கூடக் காட்டாத வாண வேடிக்கைகளைப் பிரபந்தம் காட்டுகிறது.

தூதும் மடலும், உலாவும் பிரபந்தமும் தமிழுக்குப் புதியவையல்ல.

ஆனால், பக்திச் சுவையை இலக்கியச் சுவையாக்கித் தமிழ் நயமும், ஓசை நயமும், பொருள் நயமும் கலந்து படிப்பவர்களுக்குத் தெய்வீக உணர்ச்சியையும், லெளகீக உணர்ச்சியையும் ஒன்றாக உண்டாக்குவது திவ்வியப்பிரபந்தம்.

இதை `தமிழுக்கு இந்து மதம் செய்த சேவை’ என்று சொல்வதிலே தவறென்ன?

தமிழ் அகத்துறையில் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்ற குணங்களும், விரக வேதனையால் அங்கங்களில் ஏற்படும் மாறுதல்களும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.

தமிழ் படிக்கும் ஒருவன், எல்லாத் தமிழ் இலக்கியங்களிலும் இந்த ஒரே ஒரு விஷயம் வேறு வேறு விதமாகச் சொல்லப்படுவதை அறிவான்.

அகநூல் விதிப்படி, நாணிக் கண்புதைத்தல், நெஞ்சோடு கிளத்தல் என்றெல்லாம் பகுத்துக்கொண்டு, எழுதப்பட்ட நூல்கள் உண்டு.

தனித் தனிப் பாடல்களாக விரக வேதனைகளைப் பல்வேறு வகையில் காட்டும் பாடல்களும் உண்டு.

அவற்றிலெல்லாம் காதல் என்பது கற்பியலிலும் முடியும்; இல்லை, களவியலிலும் முடியும்.

அந்த இலக்கியங்களுக்குச் காதலை மிகைப்படச் சித்தரிப்பதைத் தவிர, வேறு நோக்கம் கிடையாது.

ஆனால், சமய இலக்கியத்தில் காதலுக்கும் பக்தியே மூலநோக்கமாகும்.

தேனிலே மருந்து குழைப்பதுபோல், காதலிலே பக்தியைக் குழைத்தால், சராசரி மனிதனை அது வசப்படுத்துமென்றே சமய இலக்கியங்கள் அவ்வாறு செய்தன.

நாமும் வெறும் நாமாவளிகளைவிட இந்தச் சுவையையே பெரிதும் விரும்புகிறோம்.

உலகத்தில் எல்லாமே இறைவனுடைய இயக்கம்.

ஆண் – பெண் உறவு இதற்கு விதிவிலக்கல்ல.

அந்தச் சுவை மிகைப்படப் போயினும் தவறில்லை.

அது ஞானியை இறைவனிடமும், நல்ல மனிதனை மனைவியிடமும் சேர்க்கிறது.

அந்த வகையில் பிரபந்தம் காட்டும் திரு
மொழிகள் அளவிட முடியாத உணர்ச்சிக்
களஞ்சியங்கள்.

நாச்சியார் திருமொழியில் பல தமிழ் வார்த்தைகள் எனக்கு வியப்பளித்தன.

ஆண்டாள் என்றொரு பெண்பாற் பிறப்பு இல்லை என்றும், அது பெரியாழ்வார் தமக்கே கற்பித்துக் கொண்ட பெண்மை என்றும் சிலர் கூறுவர்.

ஆனால், வடக்கே ஒரு மீராபாயைப் பார்க்கும் தமிழனுக்குத் தெற்கே ஓர் ஆண்டாளும் இருந்திருக்கலாம் என்ற நம்பிக்கை வரும்.

அது எப்படியாயினும், நமக்குக் கிடைத்திருப்பது ஓர் அரிய கலைச் செல்வம்.

நானும் என்னைக் காதலியாக்கிக்கொண்டு, கண்ணனை நினைத்து உருகியிருக்கிறேன்.

கண்ணன் என்னும்
மன்னன் பெயரைச்
சொல்லப் சொல்ல
கல்லும் முள்ளும்
பூவாய் மாறும்
மெல்ல மெல்ல…

-என்றும்,

கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே

- என்றும், இசைக்காக ஏதேதோ புலம்பியிருக்கிறேன்.

ஆனால், `இசை மங்கலம்’, `சொல் மங்கலம்’. `பொருள் மங்கலத்’தோடு புதுத் தமிழ்ச் சொற்களைத் தூக்கிப் போட்டுப் பந்தாடி இருக்கும் நாச்சியார் திருமொழி, எனது சிறுமையை எண்ணி எண்ணி என்னை வெட்கப்படவே வைத்தது.

அந்தச் சீர்மல்கும் ஆயர்பாடிச் செல்வச் சிறுமியரை கூர்வேல் கொடுந்தொழிலனிடம் – நந்தகோபாலன் குமரனிடம் – ஏகாந்த கன்னி யசோதை இளஞ்சிங்கத்திடம், கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தானிடம் அழைத்துச் செல்வது, தமிழில் அற்புதமான பாவைக் கூத்து.

`நாம் நெய்யுண்ணோம், பாலுண்ணோம், மையிட்டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம்’ என்கிறார் நாச்சியார்.

`அவன் ஓங்கி உலகளந்த உத்தமன்.’

ஆகா; எவ்வளவு அற்புதமான உருவகம்? அங்கு நீங்காத செல்வமாக நிற்பன எவை தெரியுமா?

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளற்பெரும் பசுக்களாம்!

பசுவுக்கு `வள்ளல்’ என்ற பட்டத்தை, பக்தியின்றி எது சூட்டும்?

ஓர் உருவகத்தைச் கேளுங்கள். அதுவும் விஞ்ஞான உண்மை.

மழை பெய்வதை நாச்சியார் கூறுகிறார்:

ஆழி மழைக் கண்ணா
ஒன்றுநீ கைகரவேல்
ஆழியுள் புக்கு
முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன்
உருவம்போல் மெய்கருத்துப்
பாழியந் தோளுடைப்
பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி
வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம்
உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய்!

… கடலிலே புகுந்து நீரை எடுத்து, ஊழி முதல்வன் உருவம் போல் உடம்பு கருத்து மேகமாகி, அந்தப் பத்மநாபன் கையில் ஆழிபோல் மின்னி, சங்குபோல் முழங்கி, வில்லிலிருந்து பொழிந்த அம்பு மழைபோல் மழை பெய்யக் கோருகிறார் நாச்சியார்.

அந்தக் கண்ணன் மாயன், வடமதுரை மைந்தன்!

`வீங்கு நீர் இலங்கை’ என்றானே கம்பன், இங்கே நாச்சியார் `தூயபெருநீர் யமுனைத் துறைவன்’ என்கிறார்.

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனே- எவ்வளவு புதிய சொல்லாட்சி!

அதோ வருகிறான் கண்ணன்.

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய, தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமன் மகளே, மணிக்கதவம் தாள் திறவாய்; மாமீர்! ஏ, மாமிமார்களே; அவளை எழுப்பீரோ!

நாற்றத் துழாய்முடி நாராயணன் வந்திருக்கிறான்! நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியன் அவன். குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே! சிற்றாதே – நீ அசையாதே, பேசாதே, நீ செல்லப் பெண்டாட்டி!

வார்த்தை வந்து விழுகிறதே நாச்சியாருக்கு!

புள்ளினம் புலம்புகிறது. நீ குள்ளக் குளிரக் குடைந்து நீராடாமல் பள்ளிக்கிடத்தியோ! அடப்பாவி! உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாளியுள், செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்புதடி!

எல்லே! (இது பாண்டி நாட்டு வழக்கு)
இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
ஐயோ, இதென்ன; கண்ணனும் தூங்குகிறானோ?

அம்பரமே, தண்ணீரே, சோறே, அறஞ்செய்யும் எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்!

அம்மா, யசோதா!

கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே! குல விளக்கே! எம்பெருமாட்டி! உன் மகனுக்குக் கொஞ்சம் சொல்லம்மா.

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்தவனல்லவா! அவனை அருத்தித்து வந்திருக்கிறோம்.

ஏ, கண்ணா!

ராசலீலை மறந்தாயா! குத்துவிளக்கெரியக் கோட்டிக்கால் கட்டிலின் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி, கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்!

அடியம்மா, நப்பின்னை!

நீ உன் மணவாளனை விட்டு எந்த நேரமும் எழுந்துவர மாட்டாயா?

எந்த நேரமும் பிரிவு பொறுக்க மாட்டாயா?

நல்லது!

இது தத்துவமல்ல; தகவுடையதுதான்!

ஏ, கப்பல் (நடுக்கம்) தவிர்க்கும் கலியே! வெப்பம் கொடுக்கும் விமலா!

நாங்கள் ஆற்றாது வந்துன் அடி பணிகின்றோம். எழுந்து வா!

கிண்கிணியாய்! செய்ய தாமரைப் பூப்போல உனது செங்கண் சிறுகச் சிறுக எங்கள் மேல் விழிக்காதோ!

அன்று இந்த உலகை அளந்தாயே! சென்று தென்னிலங்கை வென்றாயே!

கன்றை எறிந்தாயே! சகடம் உதைத்தாயே! குன்றைக் குடையாக எடுத்தாயே!
மாலே மணிவண்ணா!
கோல விளக்கே, கொடியே, விதானமே!
ஆலிலையில் துயில் கொள்ளும் ஐயா!
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!
எழுந்துவர மாட்டாயா?

சூடகமும், தோள்வளையும், தோடும், செவிப்பூவும், பாடகமும் மற்றும் பல்வேறு நகைகளும் நாம் அணிவோம்.

ஆடை உடுப்போம்! அதன் பின்னே பாற்சோறு மூட நெய்பெய்து முழங்கை வழிந்துவரக் கூடியிருந்து உண்போம்.

ஆகா!

சோற்றையே மூடுகிற அளவுக்கு நெய்யாம்! அதை அள்ளி உண்ணும்போதும் முழங்கை வழியாக வழியுமாம்!

மேலும் சொல்கிறார் நாச்சியார்:

குறைவொன்றும் இல்லாத கோவிந்தா!

அறியாத பிள்ளைகள் அழைக்கிறோம்; கோபப்படாதே! வங்கக் கடல் கடைந்த மாதவா, கேசவா, எழுந்து வா! வா வா!

நாச்சியாருக்குப் பெருக்கெடுத்த காதல் நமக்கும் பெருக்கெடுக்கிறது.

அவர் காதல் மட்டுமா கொண்டார்; கடிமணமும் செய்து பார்த்தார்.

வாரணம் வந்ததாம்; பூரண பொற்குடம் வந்ததாம்; தோரணம் நாட்டினார்களாம்; வாழை, கமுகு தொங்கவிட்ட பந்தலாம்; இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம் வந்திருக்கிறார்களாம்; நாச்சியார் மந்திரக் கோடிப் பட்டு உடுத்தி வந்தாராம்; மாயவன் மணமாலை சூட்டினானாம்!

நான்கு திசையிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்தார்களாம்; பார்ப்பனப் பெரியவர்கள் பல்லாண்டு பாடினார்களாம்.

கதிர் போன்று ஒளிவிடும் தீபத்தை, கலசத்தோடு ஏந்தியபடி, சதிரிள மங்கையர் வந்து எதிர் கொண்டார்களாம்; மத்தளம் கொட்டினார்களாம்; சங்குகள் வரிசையாக நின்று ஊதினவாம்.

முத்துக்களால் அலங்காரம் செய்யப்பட்ட அந்தப் பந்தலில், மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றினானாம்!

அவன் இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் துணையல்லவா! அவன் நன்மையுடையவன் அல்லவா!

ஆகவே, செம்மையுடைய திருக்கையால் பாதம் பற்றி அம்மி மிதிக்க வைத்தானாம்!

அவன் எப்படி?

ஏ, வெண் சங்கே; நீ சொல்!

அவன் வாய் இதழில் கற்பூரம் மணக்குமோ? கமலப்பூ மணக்குமோ? அந்தத் திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?

ஏ, சங்கே, பெரும் சங்கே! வலம்புரிச் சங்கே! பாஞ்ச சன்னியமே!
அவன் இதழ்ச் சுவையை எனக்குச் சொல்ல மாட்டாயா!
ஏ, மேகங்காள்!
விண்ணில் மேலாப்பு விரித்தாற் போன்ற மேகங்காள்!
மாமுத்த நீர் சொரியும் மாமுகில்காள்!
களங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள்!
கார்காலத் தெழுகின்ற கார்முகில்காள்!
மதயானை போலெழுந்த மாமுகில்காள்!
வேங்கடத்தைப் பதியாக வைத்து வாழும் மேகங்காள்!
எனக்குப் பதியாகி, என் கதியாக அவன் கருதவில்லையா!
ஒரு பெண் கொடியை வதைசெய்தால், இவ்வைகயகத்தார் மதிப்பாரா?

-நாச்சியார் துடிக்கிறார்; நாமும் துடிக்கிறோம்!
நாச்சியார் உருகுகிறார்; நாமும் உருகுகிறோம்!
நாச்சியார் கெஞ்சுகிறார்; நாமும் கெஞ்சுகிறோம்!
நாச்சியார் கொஞ்சுகிறார்; தமிழும் கொஞ்சுகிறது!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அங்காடி நாய்

மனத்தை `அங்காடி நாய்’ என்கிறார் பட்டினத்தார். கடைத்தெருவில் ஒவ்வொரு கடையாக ஓடி அலைகின்ற நாயைப்போல், மனமும் ஓடுகிறது என்றார். மனிதனின் துயரங்களுக்கெல்லாம் காரணம் மனந்தானே!

`பேயாய் உழலும் சிறுமனமே’ என்கிறார் பாரதியார். மனத்தின் ஊசலாட்டத்தைப் பற்றி அவரும் கவலை கொள்கிறார். பயப்படக்கூடிய விஷயங்களிலே, சில சமயங்களில் இந்த மனம் துணிந்து நிற்கிறது.

துணியவேண்டிய நேரத்தில் பயந்து ஒடுங்குகிறது.

காரணம் இல்லாமல் கற்பனைகளை வளர்த்துக் கொண்டு கலங்குகிறது. நடந்துபோன காலங்களுக்காக அழுகிறது. நடக்கப்போகும் எதிர்காலத்தைக் கண்டு அஞ்சுகிறது. அடுத்தவர்களுக்கு ஆறுதல் சொல்ல முனைந்து நிற்கிறது. அந்த ஆறுதல் தனக்கே தேவைப்படும்போது சக்தியற்றுப் போய்விடுகிறது.    பசுமையைக் கண்டு மயங்குகிறது. வறட்சியைக் கண்டு குமுறுகிறது. உறவினருக்காகக் கலங்குகிறது.

ஒரு கட்டத்தில் மரத்துப்போய் விடுகிறது.

ஆசைகளை வளர்த்துக் கொள்கிறது.

ஆசாபாசங்களில் அலைமோதுகிறது. விரக்தியடைந்த நிலையில், தன் கழுத்தைத் தானே அறுத்துக்கொள்ளும் வலிமையைத் தன் கைகளுக்குக் கொடுத்துவிடுகிறது. கொலை, திருட்டு, பொய், இரக்கம், கருணை, பாசம் எல்லாவற்றுக்கும் மனமே காரணம். மனத்தின் இயக்கமே மனித இயக்கம். எதிலும் துணிந்து நிற்கக்கூடிய சக்தி எப்போது இந்த மனத்துக்கு வரும்?

`எல்லாம் மாயையே’ என்ற இந்து தத்துவத்தை நம்பினால் வரும். கீதையிலே கண்ணன் கூறுகிறான்:

“என்னைப் பரம் எனக் கொள்க; வேறொன்றில் பற்றையழித்து என்னைத் தியானித்து வழிபடுக. இறப்பும் பிறப்புமாகிய கடலிலிருந்து உன்னை நான் கைதூக்கி விடுவேன்”.

நல்லது; அப்படியே செய்து பார்ப்போம். ஆனாலும் முடியவில்லையே!

நெருப்புக்குத் தப்புகிறோம்; நீரில் மூழ்குகிறோம்.

நாய்க்குத் தப்புகிறோம்.

நரியின் வாயில் விழுகிறோம். ஒன்றை மறந்தால், இன்னொன்று வருகிறது. புகை பிடிப்பதை நிறுத்துவதற்காக வெற்றிலைப் போடப்போய், வெற்றிலைப் போட்டுக்கொண்டே புகைபிடிக்கும் இரட்டைப் பழக்கம் வருவதுபோல், மறக்க முயன்றவற்றை மறக்கமுடியாமல், புதிய நினைவுகளும் புகுந்துக்கொண்டு விடுகின்றன. கள்ள நோட்டு அடித்ததற்காக ஒருவனைச் சிறையில் தள்ளினார் களாம். அவன் சிறையில் இருந்துக் கொண்டே கள்ள நோட்டைத் தயாரித்தானாம்! இனி அவனை எங்கே கொண்டு போய்த் தள்ளுவது?

மனத்துக்கு, மனைவியைவிட மற்றொருத்தியே அழகாகத் தோன்றுகிறாள். கைக்குக் கிடைத்துவிட்ட மலரில் வாசம் தெரிவதில்லை. கிடைக்காத மலர்கள் கற்பனையில் எழுந்து மனத்தை இழுக்கின்றன. நிறைவேறிவிட்ட ஆசைகளில், மனது பெருமிதப்படுவதில்லை. நிறைவேறாத ஆசைகளுக்காகவே இது மரண பரியந்தம் போராடுகிறது. மகாலட்சுமியே மனைவியாகக் கிடைத்தாலும் சினிமா நடிகைக்காக ஏங்கி நிற்கும் ரசிகனைப்போல், உள்ளவற்றைவிட இல்லாதன குறித்தே மனம் ஏங்குகிறது.

பிறர் புகழும்போது நெக்குருகுகிறது. இகழும்போது கவலைப்படுகிறது. ஓராயிரம் பின்னல்கள்; ஓராயிரம் சிக்கல்கள்!

சிலந்தி எப்படி வலை கட்டிற்றென்று அதற்குத்தான் தெரியும். இந்தச் சிக்கல்கள் எப்படி வருகின்றன என்று இறைவனுக்குத்தான் தெரியும். கப்பலில் பயணம் செய்வது நம் பொறுப்பு. அதை கரை சேர்க்க வேண்டியது இறைவன் பொறுப்பு. அலை இல்லா கடல் ஒன்றை இறைவன் உருவாக்கும்போது சலனமில்லாத மனம் ஒன்றும் உருவாகி விடும். `மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்’ என்பார்கள். `எப்போது ஊற்றுவான்?’ என்று மனம் ஏங்குகிறது. சலனமும், சபலமும், கவலையும் இல்லாதவர்கள் யார் இருக்கிறார்கள்?

செத்துப்போன தன் குழந்தையை உயிர் மீட்டுத் தரும்படி, புத்த தேவனிடம் ஒரு தாய் கெஞ்சினாளாம். “சாவே நிகழாத வீட்டில் சாம்பல் எடுத்துவா, மீட்டுத் தருகிறேன்” என்று புத்தர் சொன்னாராம். தாய், நாடெல்லாம் அலைந்து, “சாவு நிகழாத வீடே இல்லையே!” என்றாளாம். “இந்தக் கதையும் அதில் ஒன்றுதான்”, என்று கூறிப் புத்தர் அவளை வழியனுப்பினாராம். கவலையே இல்லாத மனிதன் என்று ஒருவனை நான் பார்த்துவிட்டால், நான் கவலைப்படுவதில் நியாயம் உண்டு.    எனக்கு நூறு என்றால் இன்னொருவனுக்கு இருநூறு. அதுவரைக்கும் நான் பாக்கியசாலி. அவனைவிடக் குறைவாகத்தானே இருக்கிறேன். எல்லாம் நிறைவேறி, நிம்மதியாக உயிர் விடும் வாய்ப்பு எவனுக்குமே இல்லை. ஒருவனுக்குத் துயரம் மனைவியால் வருகிறது. ஒருவனுக்கு மக்களால் வருகிறது. ஒருவனுக்கு நண்பனால் வருகிறது. ஒருவனுக்கு எதிரியால் வருகிறது.

ஒருவனுக்கு சம்பந்தமே இல்லாத எவனாலோ வருகிறது. கடலில் பாய்மரக் கப்பல்தான் காற்றிலே தள்ளாடுகிறது. எதிலும் கெட்டிக்காரனாக இருப்பவனுக்குத்தான் அடிக்கடி சஞ்சலம் வருகிறது. காகிதக் கப்பலுக்கு என்ன கவலை?

மனம் காகிதம்போல மென்மையாக இருக்கட்டும். சுகதுக்கங்கள், கோடை, பனி, மழை – அனைத்தையும் தாங்கட்டும். மனதுக்கு வருகின்ற துயரங்களைப் பரந்தாமனிடம் ஒப்படைத்து விடு. பிறர்க்குத் தொல்லையில்லாமல் உன் மகிழ்ச்சியை நீ அனுபவி. சாவைத்தான் தவிர்க்க முடியாது; சஞ்சலத்தைத் தவிர்க்க முடியும். சிறு வயதில் எனக்குத் தாய், தந்தையர்கள் சாவார்கள் என்று எண்ணும்போது தேகமெல்லாம் நடுங்கும். ஒரு நாள் அவர்கள் இறந்தே போனார்கள். நாற்பத்தெட்டு மணி நேரத்தில் நடுங்கிய தேகம் அடங்கிவிட்டது. “ஐயோ, இது நடந்துவிடுமோ?” என்று எண்ணினால்தான் துடிப்பு, பதைப்பு. “நடக்கத்தான் போகிறது” என்று முன்கூட்டியே முடிவு கட்டிவிட்டால், அதிர்ச்சி உன்னிடம் நெருங்காது. தர்மனும் அழுதான், பீமனும் அழுதான், ராமனும் அழுதான், ராவணனும் அழுதான். நெஞ்சத்தின் பதைப்பை, `கடன்பட்ட நெஞ்சம்’ என்றான் கம்பன். பட்ட கடன் ஒன்றானால், பத்திரத்தைத் தீர்த்து வாங்கிவிடலாம். ஒவ்வொரு கடனையும் தீர்த்த பிறகும், வட்டி பாக்கி நிற்கிறது. மழை நின்று விட்டாலும், துவானம் தொடர்கிறது. மரண பரியந்தம் மனம் தன் வித்தையைக் காட்டிக் கொண்டே இருக்கிறது. மனத்துக்கு இப்படியெல்லாம் சுபாவங்கள் உண்டு என்று இருபது வயதிலேயே தெரிந்து கொண்டு விட்டால், பிறகு வருவனவெல்லாம் மாயையே என்று வைராக்கியம் பிறந்துவிடும். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவனிருக்கிறான் மயங்காதே

செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றுங்கள். மனம் அங்காடி நாய்போல் அலைவதை அடக்குங்கள். சாகப்போகும் கட்டைக்குச் சஞ்சலம் எதற்கு?

செத்தார்க்கு நாம் அழுதோம்.

நாம் செத்தால் பிறரழுவார். அதோடு மறந்து விடுவார்.

மனத்துக்கு நிம்மதியைக் கொடுங்கள்.

பகவான் கிருஷ்ணனின் காலடிகளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தூங்குங்கள்.

இங்கே இருந்தாலும் அவன்தான் காரணம்; அங்கு சென்றாலும் அவன்தான் காரணம். இங்கிருந்து அவன் கொண்டு போகும் தூதுவனுக்குப் பேர்தான் மரணம். அடுத்த ஜனனத்தை அவன் நிர்ணயிக்கட்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இந்து மங்கையர்

இந்துக்களின் குடும்ப வாழ்க்கை பலவித சம்பிரதாயங்களைக் கொண்டது.

அந்தச் சம்பிரதாயங்கள் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் எப்படி இருந்தன என்பதை, சுவாமி விவேகானந்தரின் அமெரிக்கச் சொற்பொழிவுகளால் அறிய முடிகிறது.

சுவாமி கூறுகிறார்:

“இந்தியாவில் லட்சியப் பெண்மணி, தாய். அன்னையே முன்னறி தெய்வம். இறுதியாக, அறியப்படுவதும் அன்னையே. `பெண்’ என்ற சொல் இந்தியனுக்கு எண்ணத்தில் தாய்மையையே நினைவுபடுத்துகிறது. ஆண்டவனையே அவர்கள் `அன்னை’ என்றுதான் வணங்குகிறார்கள். குழந்தைப் பருவத்திலே, நாங்கள் ஒவ்வொரு நாளும் விடியற்காலத்தில் சிறு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துச் சென்று அன்னையின் முன் வைப்போம். அவள் அதிலே தன் காற் பெருவிரலைத் தோய்ப்பாள். அந்நீரை நாங்கள் பருகுவோம்.    மேலை நாட்டிலே பெண் என்றால் மனைவி. பெண்மை என்னும் லட்சியம், இங்கே மனைவியாகக் குவிந்திருக்கிறது. இந்தியாவில் பாமரன் கருத்துப்படி பெண்மணியின் முழுச் சக்தியும் தாய்மையில் ஒருமுகப்பட்டுள்ளது. மேல் நாட்டிலே மனைவி, வீட்டை ஆள்கிறாள். இந்தியக் குடும்பத்திலே வீட்டை ஆள்பவள் தாய். மேலை நாட்டுக் குடும்பத்தில் ஒரு தாய் ழைந்தால் அவர் மனைவிக்கு அடங்கியே இருக்க வேண்டும். ஆனால், எங்கள் நாட்டிலே மனைவிதான் தாய்க்கு அடங்க வேண்டும்.

மனைவி என்ற இடத்தில் இந்தியப் பெண்மணி வகிக்கும் நிலை என்ன? இன்னும் என்னை ஈன்றெடுத்துப் புகழுக்கெல்லாம் பாத்திரமாகிய அன்னையின் நிலை என்ன? ஒன்பது மாதம் என்னைக் கருவிலே காத்த அவள் நிலை யாது? தேவைப்பட்டால் இருபது தடவையானாலும் எனக்காகத் தன் உயிரைத் தரக்கூடிய அவள் எங்கே? நான் எவ்வளவு தீயவனானாலும் தன் அன்பு என்றும் மறவாத தாயின் நிலை எது? ஒரு சிறிது யான் அவளைத் தவறாக நடத்தியதும் உடனே மணமுறிவு வேண்டி நீதிமன்றம் செல்லும் மனைவியோடு ஒப்பிடுங்கால் அந்தத் தாய் எங்கே? ஓ! அமெரிக்க மங்கையரே! அவள் எங்கே?

எங்கள் தாய்! அவளுக்கு முன்னால் நாங்கள் இறப்பதாயினும் அவள் மடியிலே தலைவைத்தே இறக்க ஆசைப்படுகிறோம். `பெண்ணென்பது உடலோடு உறவு ஏற்படுத்தக்கூடிய பேர்தானா! இந்துக்கள் அந்தப் பெயரை நிரந்தரமாகப் புனிதமாக்கி விட்டார்கள். `காமம்’ என்பதே என்றும் அணுகாத, தீய நினைவுகளே என்றும் நெருங்காத ஒரு பெயர், தாய் எனும் ஒன்றைத் தவிர வேறு எது?

எங்கள் நாட்டிலே ஒவ்வொரு பெண்ணையும், `தாயே’ என்றுதான் நாங்கள் அழைக்கிறோம். சிறுமியைக் கூட `அம்மா’ என்றுதான் அழைக்கிறோம்.

இங்கே அமெரிக்கப் பெண்களை நான் `தாயே’ என்று அழைத்தபோது அவர்கள் திடுக்கிட்டார்கள். எனக்குக் காரணம் புரிந்தது. தாய் என்றால் வயது முதிர்ந்தவர்கள் என்று இங்குள்ளவர்கள் எண்ணுகிறார்கள். எங்கள் நாட்டில் பெண்கள் அனைத்துமே தாய்மை.

தாய்தான் முதலில்; பின்புதான் மனைவி; நான் மணம் புரிந்துகொண்டிருந்தேனாயின், என் மனைவி, என் அன்னையை வருத்தப்படுத்தத் துணிந்தால் நான் அவளை வெறுப்பேன். ஏன், நான் என் தாயை வணங்கவில்லையா? அவளுடைய மருமகள் ஏன் அவளை வழிபடலாகாது? நான் வழிபடும் ஒருவரை அவள் வழிபட்டால் என்ன? என் தலைமேலே ஏறிக்கொண்டு என் தாயை அதிகாரம் செய்ய அவள் யார்? தாய்மையிலிருந்தே பெரும் பொறுப்பு ஏற்படுகிறது. அதுதான் அடிப்படை! அங்கிருந்து முன்னேறுங்கள்”.

ஆம், இந்துவின் குடும்பம் என்பது தாய்மையையே தலையாகக் கொண்டது.

அங்கிருந்துதான் ஒவ்வொரு கிளையும் தொடங்குகிறது.

தாயை மகன் நேசிப்பதுபோல், மருமகளும் நேசித்தாக வேண்டும்.

தன் தாயை நேசிக்காத மனைவியை, கணவன் தான் நேசிக்கக் கூடாது.

தாய் வேர்.

மகன் மரம்.

அந்த மரக்கிளையில் வந்தமரும் பறவையே மனைவி.

தன்மீது விளையாட அந்தப் பறவைக்கு மரம் இடம் கொடுத்ததால் மரத்தின் வேரை அது கொத்தித் தின்ன முடியாது.

இந்துக் குடும்பத்தில் மருமகள் என்பவளின் அந்தஸ்து வீட்டுக்கு ராணி என்னும் அந்தஸ்தல்ல; தாய் என்னும் ராணியின் தோழி என்னும் அந்தஸ்தே.

கணவன் தன்னிடம் பெறும் சுக அனுபவங்களுக்காகவும், சந்தோஷங்களுக்காகவும், அவனது தாயை அவள் விலையாகக் கேட்க முடியாது.

எவள் இல்லையென்றால் இந்தப் பூமியில் அவன் ஜனித்திருக்க முடியாதோ, அவளேதான் எல்லோரையும்விட உயர்ந்தவள்.

அந்தத் தாயின் அந்தஸ்தை ஒப்புக்கொண்ட மருமகள்தான், தனக்கு வரப் போகும் மருமகளிடம் அந்த அந்தஸ்தை எதிர்பார்க்க முடியும்.

மருமகளும் ஒரு நாள் மாமியார் ஆகத்தான் போகிறாள்.

ஆகவே, குடும்பக் கோவிலின் கோபுரம் அன்னையே.

இந்துக்கள் பொருளாதாரத் திலும் அதே நிலையை வைத்திருந்தார்கள்.

மகன், தான் தனியாகச் சம்பாதிக்கிற பணத்தைத் தாய் தந்தைக்குத் தெரியாமல் மனைவியிடம் கொடுக்க முடியாது.

மகனையும், மருமகளையும் அதே அளவிலே கட்டுப்படுத்துவதற்குத்தான், `பாட்டனின் சொத்து பேரனுக்கு’ என்ற சம்பிரதாயத்தை ஏற்படுத்தினார்கள்.

தன் தகப்பன் சொத்தை மகன் விற்றுவிட்டால், பேரன் கோர்ட்டுக்குப் போனால், அந்த விற்பனை செல்லுபடியாகாது.

இந்துக்களின் பொருளாதாரப் பாதுகாப்பும் இதிலே அடங்கியிருக்கிறது.

`தாயின் தனி உடைமைகள் பெண் மகளுக்கே’ என்பது இந்துக்களின் சம்பிரதாயம்.    மகனது குடும்பத்துக்குப் பாதுகாப்புக்காக, `தகப்பன் சொத்துப் பேரனுக்கு’ என்றும், பெண் மக்களுக்குப் பாதுகாப்பாகத் `தாயின் சொத்து பெண் மக்களுக்கு’ என்றும் வகுத்தார்கள்.

அதனால் ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய் வழியில் சொத்து வருகிறது.

அவளது பிள்ளைக்குப் பாட்டன் வழியில் சொத்து வருகிறது.

மகன் சம்பாதிப்பது அவனது பேரனுக்குப் போகிறது.

ஆகவே, ஒவ்வொரு தலைமுறைக்கும் சொத்துப் பாதுகாப்பு இருக்கிறது.

இதிலே இன்னும் ஒரு கௌரவத்தை இந்து மகன் தாய்க்கு அளித்தான்.

அதாவது, தாயின் முன்னிலையில் மனைவியோடு பேசுவதில்லை.

இன்று காலம் மாறிவிட்டது.

சம்பிரதாயங்கள் மீறப்படுகின்றன.

தாயின் முன்னிலையில் மனைவியின்மீது கைபோடுவதுகூட வேடிக்கையாகி விட்டது.

போன தலைமுறை வரை நமது இந்து சமுதாயம் கண்டிப்பான சம்பிரதாயங்களை அனுஷ்டித்தது.

தாய் தகப்பன் விழித்துக் கொண்டிருக்கும் போது கணவனும் மனைவியும் தனியறைக்குள் செல்ல மாட்டார்கள்.

கணவன் பெயர் `சங்கரன்’ என்றிருந்தால் இதே சங்கரன் என்ற பெயரில் அவனுக்கொரு தம்பியோ வேலைக்காரனோ இருக்கலாம்.

அவனை, `டேய் சங்கரா?’ என்று அழைக்க நேரிடலாம்.

அது கணவனை அவமானப்படுத்துவதாக அமையலாம்.

ஆகவேதான், கணவன் பெயரைச் சொல்லக் கூடாது என்று வைத்தார்கள்.

பெண்ணுக்கு அடக்கம் போதிக்கப்பட்டது.

சத்தம் போட்டுச் சிரிப்பது இழிவான பெண்களின் குணம் என்று கருதப்பட்டது.

அதனால், `நகுதல் – நகைத்தல’ என்று மெல்லச் சிரிப்பதை, அது பெண்ணுக்கு வலியுறுத்தியது.

அந்தச் சிரிப்பையும் அவள், பிற ஆடவர் முன்னிலையில் சிரிக்கக் கூடாது.

காரணம், எவனாவது ஒரு ஆடவன் அந்தச் சிரிப்பைத் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடும்.

“பொம்பிளை சிரிச்சாப் போச்சு, புகையிலை விரிச்சாப் போச்சு” என்பது பழமொழி.

நேருக்கு நேராக அவள் யாரையும் பார்க்கக் கூடாது.

இந்தப் பார்வை, சிரிப்பு – இரண்டையும் ஒரு குறளில் சொன்னான் வள்ளுவன்.

யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்.

ஆம், பாராத போது பார்க்கும், மெல்ல நகும். அவ்வளவுதான்.

காதல் உணர்ச்சியில் அவள் உடலில் எவ்வளவோ மாறுதல்கள் ஏற்படும்.

அவள் உள்ளம் கொதிக்கும். ஆனால், அப்போதும் அவள் ஊமையாகவே இருப்பாள்.

`நாணம்’ என்பது தமிழ்ச் சொல்தான்; என்றாலும், இமயமுதல் குமரிவரையிலே உள்ள இந்துப் பெண்களுக்கு அது பொதுச் சொல் ஆகும்.

இந்துக்கள் இந்த நாணத்தை மனப் பழக்கமாகத் தொடங்கி, உடற் பழக்கமாகவே ஆக்கிவிட்டார்கள்.

இந்துப் பெண்களுக்கு நாணம் சொல்லித் தெரியவேண்டிய கலையல்ல; அது அவள் ரத்தத்திலேயே ஊறியிருக்கிறது.

சாந்தி முகூர்த்தத்தன்று, மணமகளை இரண்டொரு மங்கல மங்கையர் அழைத்துக் கொண்டு போய் பள்ளியறையில் உட்கார வைக்கும் பழக்கம் இந்துக்களிடையே உண்டு.    ஏனிந்தப் பழக்கம்?

காமத்தால் துடித்தும், நாணத்தால் நடக்க முடியாமலிருக்கும் அந்தப் பெண்ணை, நாலுபேர் நடத்திக் கொண்டு போவதாக ஐதீகம்.

இதைத் `தனியறை சேர்த்தல்’, `அமளியிற் சேர்த்தல்’ என்று இதிகாசங்களும் இலக்கியங்களும் கூறுகின்றன.

இவையனைத்தும் பலமான கட்டுக்காவற் சம்பிரதாயங்கள்.

இவற்றை மீறுவோர் உண்டு. தவறுவோர் உண்டு.

இவர்கள் சமுதாய அங்கவீனர்கள்.

இவர்கள் நற்குடிப் பிறவாதவர்கள்.

வள்ளுவன் தெளிவாகவே சொன்னான்.

நலத்தின்கண் நாரின்மை தோன்றின்

அவனைக்

குலத்தின்கண் ஐயப் படும், என்று.

`ஒருவன் அல்லது ஒருத்தியின் நடத்தை தவறாயின் அவர்களது குலமே சந்தேகத்திற்குரியது’ என்றான் வள்ளுவன்.

இன்னும் மணமாகாத இந்து இளைஞன், தனது சம்பிரதாயங்களின்படி அமையப்பெற்ற ஒரு பெண்ணோவியத்தைப் தேர்ந்தெடுத்தால், அவனது வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.

நீண்ட நாள் கணவனைப் பிரிந்திருந்தாலும், நெறிமுறை பிறழாது, உலை மூச்சைப்போல அனல் மூச்சை ஜீரணித்து உப்பைக் குறைத்துச் சாப்பிட்டும், குளிர்ந்த நீராடியும் காம உணர்ச்சியே இல்லாமல் வாழும் ஓர் இந்துப் பெண் கிடைப்பதுபோல், கணவன் பெறக்கூடிய பெரும்பேறு வேறு எதுவுமே இல்லை.

கண்களையும் கவர்ச்சிகளையும் நம்பி, கட்டுப்பாடற்ற பெண்ணின் வலையில் விழுவோர் ஒன்று பைத்தியமாவார்கள்; அல்லது தற்கொலை செய்து கொள்வார்கள்.

இந்துச் சட்டங்கள் மட்டுமல்லாது, சம்பிரதாயங்களும்கூட, சகல வழிகளிலும் செம்மையான வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கின்றன.

வாழ்க்கை என்பது உடல் இச்சை மட்டுமன்று.

அதனையும் மீறிச் சில சுகங்களும் பெருமைகளும் உண்டு.

உடல் இச்சை மட்டும் மூல ஆதாரமாக இருந்து விட்டால், பெண்ணைத் தேர்வதில் இளைஞன் தவறி விழுவான்.

தாய்க்கும் தனக்கும், அடங்கிய பெண்ணுக்கு அழகு தேவையில்லை.

அவள் அழகில்லாதவளானாலும், அவளுக்குத் தெய்வமும் நிகரில்லை!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஏன் இந்த நம்பிக்கை 

“தத்துவ ஞானம் எது பேசினாலும் பேசுக; பிராமணவாதம் எதனைக் கொள்னினும் கொள்ளுக; உலகிலே மரணம் என்பது இருக்கும் வரையும், மனித இதயத்திலே பலவீனம் இருக்கும் வரையும், அந்த பலவீனத்திலே மனிதனுடைய இதயத்திலிருந்து அழுகுரல் வரும் வரையில், ஆண்டவனிடத்தில் நம்பிக்கை இருந்தே தீரும்” என்கிறார் சுவாமி விவேகானந்தர். ஆம், பலவீனத்திலும் பயத்திலுந்தான் கடவுள் நம்பிக்கை தோற்றமளிக்கிறது. இந்து சமயமன்றிப் பிற சமயங்களும் இந்த உண்மையை ஒப்புக் கொண்டிருக்கின்றன. நீண்ட நாட்களுக்கு முன் ஒரு திரைப்படத்தில் கேட்டதாக நினைவு. ஓர் ஆசிரியர் தன் மாணவியைப் பார்த்துக் கேட்கிறார்:

“கடவுள் எங்கே இருக்கிறார்?”

மாணவி சொல்லுகிறாள்:

“தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார்.”

“இல்லை; அது பழங்கதை. வாழ்க்கை நன்றாக இருக்கும் போது கடவுள் இல்லை; வறுமை வரும்போது அவர் உடனே வருகிறார். வெற்றி பெற்றவனுக்குக் கடவுள் இல்லை; தோல்வியுற்றவன் நெஞ்சில் உடனே தோற்றமளிக்கிறார்” என்றார் ஆசிரியர்.    ஆம்; பாவம் செய்யும்போது கடவுள் இல்லை. அதற்குரிய தண்டனையை அனுபவிக்கும் போது கடவுள் இருக்கிறார். ஒலியிலே தோன்றாத கடவுள், எதிரொலியில் தோன்றுகிறார். சிலையிலே காணமுடியாத தெய்வம், சிந்தையிலே சாட்சிக்கு வருகிறது.

`கடவுள் நம்பிக்கை என்பது ஏதாவதொரு வடிவத்தில் எல்லோருக்கும் இருந்தே தீருகிறது’ என்பது இந்துக்கள் முடிவு. `உயர்ந்தனவோ தாழ்ந்தனவோ அனைத்திலுமே நான் இருக்கிறேன்’ என்றே கண்ணன் சொல்கிறான்.

அர்ஜுனனிடம் கண்ணன் சொல்கிறான்:

“அர்ஜுனா, தேவர் கூட்டங்களும், முனிவர்

களும் என் உற்பத்தியை உணரமாட்டார்கள்; ஏனென்றால், அவர்களுக்கு முற்றிலும் முதற்காரணம் நானே. ஆதி இல்லாதவன் என்றும், பிறவாதவன் என்றும், உலகிற்குக் தலைவன் என்றும், என்னை அறிகிறவன் மனிதர்களுள் மயக்கமில்லாதவன். புத்தி, ஞானம், தெளிவு, பொறுமை, சத்தியம், அடக்கம், அமைதி, இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு, அஞ்சுதல், அஞ்சாமை, அஹிம்சை, மனத்தின் நடுநிலை, திருப்தி, தவம், தானம், புகழ்ச்சி, இகழ்ச்சி அனைத்துமே என்னிடத்திலிருந்தே உண்டாகின்றன. வேதங்களுள் நான் சாம வேதம்; தேவர்களுள் இந்திரன்; இந்திரியங்களுள் நான் மனது; உயிர்களில் நான் உணர்வு. புரோகிதர்களுள் நான் பிரகஸ்பதி; சேனாதிபதிகளில் நானே தேவசேனாதிபதியாகிய முருகன்; நீர் நிலைகளில் நான் கடல். ஆயுதங்களில் நான் வஜ்ராயுதம்; பசுக்களில் நான் காமதேனு; தம்பதிகள் நடுவே நான் மன்மதன்; பாம்புகளில் நான் வாசுகி. நாகங்களில் நான் அனந்தன்; மழைத் தேவதைகளில் வருணன்; அடக்கியாள்வோர்களில் நான் எமன். விலங்குகளில் நான் சிங்கம்; பறவைகளில் நான் கருடன். தூய்மை தருவனவற்றுள் நான் காற்று; ஆயுதம் ஏந்தியவர்களில் நான் ராமன்; மீன்களிலே நானே மகர மீன்; நதிகளில் நானே கங்கை. அர்ஜுனா! சிருஷ்டிப் பொருளுக்கு முதல், இடை, கடையாகிய மூன்றும் நானே. வித்தைகளில் நானே ஆத்ம வித்தை. வாதம் செய்பவர்களிடம் நானே வாதம். பெண்மையில் நானே புகழ், திரு, சொல், நினைவு, அறிவு, திண்மை, பொறுமை. காலங்களில் நானே வசந்தம்; மாதங்களில் நானே மார்கழி; தருக்களில் நானே தேவதாரு. வாசகர்களின் சூதாட்டம் நானே; அழகும், மனத் தெளிவும், செயலாற்றும் வன்மையும் சேர்ந்தவர்களிடத்தில் அனைத்தும் நானே!

தண்டிப்பவர்களிடத்தில் நானே செங்கோல் ஆகிறேன்; வெற்றி வேண்டுவோரிடத்தில் நானே நீதி. ரகசியங்களில் நானே மவுனம்; ஞானிகளுடைய ஞானமும் நானே. அர்ஜுனா அனைத்துக்கும் வித்து எதுவோ அது நானே”.

- இது கண்ணனின் திருவாய் மொழி. எல்லாம் நானே என்று சொல்ல வந்த பரந்தாமன், எவை எவை உயர்ந்தவையோ, எவை எவை பிரச்சினைக்குரியவையோ, அவற்றைச் சுட்டிக்காட்டி, இந்த அகிலத்தில் தான் யார் என்பதை விளங்க வைக்கிறான். ஸ்தூலமாகக் காட்சி தரும் அழகிய கண்ணன் நிலை, இவை அனைத்தையுமே உள்ளடக்கியது. தெளிவு, மயக்கம் இரண்டிலுமே திரண்டு நிற்கும் அந்த இறைவனைக் கர்மத்தைவிட ஞானமே அதிகமாக அறிகிறது. கர்மத்தின் விளைவாக வரும் ஞானம், அதைவிட விரைவாகப் புரிந்து கொள்கிறது. நம் கண்ணுக்குத் தெரியும் உலகத்தைவிட கண்ணுக்குத் தெரியாத சூட்சம உலகம் பல மடங்கு பெரிதாக இருக்கிறது. அவை அனைத்தையும் இயக்கும் மூலப் பொருளை அனுபவம் அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வருகிறது.    கடவுள் நம்பிக்கையல்ல. விஞ்ஞானிகூட விளக்கம் சொல்ல முடியாத ரகசியம் இறைவனின் சிருஷ்டியில் இருக்கிறது. உலகத்தில் இருநூறு கோடி மனிதர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்த இருநூறு கோடியிலும் ஒருவரே போல் காட்சியளிக்கும் இன்னொருவர் இல்லை. ஒருவருக்கொருவர் பத்துக்கு ஒன்பது ஒற்றுமை இருந்தால், ஒன்றாவது மாறுபட்டு நிற்கும். நூற்றுக்கு நூறு உடலமைப்பும், குரலமைப்பும் உள்ள இருவரை நீங்கள் காண முடியாது. இரட்டைப் பிள்ளைகளாகப் பிறப்பவரிடையே கூட ஏதாவதொரு வித்தியாசத்தைக் காணமுடியும். குணங்களிலும் ஒருவருக்கொருவர் கொஞ்சமாவது மாறுதல் இருந்தே தீரும்.

என் தந்தை குடிக்க மாட்டார்; வேறு பெண்களை ஏறெடுத்துப் பார்க்க மாட்டார்; ஆனால் சீட்டாடுவார்.

நானோ, சீட்டு மட்டும் ஆடமாட்டேன். ஆகவே, இருநூறு கோடிக்கும் தனித்தனி `டிசைன்’ செய்தவன் இறைவன். இது மனிதனால் ஆகக்கூடியதா?

மனித முயற்சியால் நடக்கக் கூடியதா?

உலகமெங்கும் நீதித் துறையினர் குற்றவாளிகளின் கைரேகை

களைப் பதிவு செய்கிறார்களே, ஏன்?

ஒருவனின் கைரேகை போல் இன்னொருவனின் ரேகை இருக்காது என்பது ஒரு நம்பிக்கையாகும். விஞ்ஞானமும் அதை ஒப்புக் கொண்டிருக்கிறது. இருநூறு கோடி கைகளுக்கும் தனித்தனி `டிசைன்’ போட்டிருக்கிறான் இறைவன். படிப்பறிவில்லாதவர்களைக் கைரேகை வைக்கச் சொல்வதற்குக் காரணம் இதுதான். குறுக்கெழுத்துப் போட்டியில், ஒரு எழுத்தை மாற்றினால் ஓரு கூப்பன் அதிகமாவது போல், ஒவ்வொரு பிறவிக்கும் ஒவ்வொரு ரேகையை மாற்றுகிறான் இறைவன். வியக்கத்தக்க அவனது சிருஷ்டியிலேயே அவனைக் கண்டுகொள்ள முடிகிறது.

அப்படியும் கண்டு கொள்ளாதவர்கள், தங்கள் பலவீனத்தால் ஏற்பட்ட துன்ப அனுபவங்களிலே கண்டு கொள்ளுகிறார்கள்.

விஞ்ஞான ரீதியாக இன்று சொல்லப்படும் உண்மைகளை இந்து மதம் எப்போதோ சொல்லி விட்டது. இந்து மதத்தின் தனிச்சிறப்பு அதுதான். சிலை வழிபாட்டு நிலையையும் அது ஒப்புக் கொண்டிருக்கிறது. அதற்கு அப்பாற்பட்டு மனத்துள்ளே கடவுளைக் காணும் நிலையையும் `மேல்நிலை’ என்று கூறுகிறது. சிலையை வெறும் கல் என்று சொல்லும் நாஸ்திகனுக்கும், மனம் என்னும் ஒன்று இருக்கிறது. அது மரணப்படுக்கையிலாவது கடவுளைப் பற்றிப் பேச வைக்கிறது. பிறப்புக்குத் தகப்பன் கொடுத்தது ஒரு துளி ரத்தம் மட்டுமே. இவ்வளவு எலும்புகளும், நரம்புகளும் ரேகைகளும் எங்கிருந்து வந்தன?

மண்டையோட்டை அறுத்துப் பார்த்தால் உள்ளே ரோமம் இல்லை. இந்த ரோமம் வளர்வது எப்படி?

நாம் வளர்வது எப்படி?

குழந்தைப் பருவத்தில் விழுந்த பல் முளைப்பது எப்படி?

ஒன்பது ஓட்டைகள் இருந்தும் உள்ளே இருக்கும் காற்று உலாவிக்கொண்டே இருப்பது எப்படி?

இவை அறிவு போடும் கேள்விகள். ஆனால் அனுபவம் காட்டும் உண்மைகள், இவற்றை விட அதிகமாகக் கடவுள் நம்பிக்கையை உறுதி செய்கின்றன. இறைவனின் அஸ்திவாரம் என்ன என்பதனை முதலிலேயே கண்டுகொண்டவர்கள் இந்துக்கள்தான். இரக்கம், அன்பு, கருணையைக் காட்டிய பௌத்தமதம் கடவுள் ஒன்றைக் காட்டவில்லை. ஆனால், கடவுள் என்று ஒன்றைக் காட்டிய இந்து மதம் இரக்கம், அன்பு, கருணையை விட்டுவிடவில்லை. பௌத்த மதத்தை இந்து மதம் ஜீரணித்து விட்டதற்குக் காரணம் இதுதான். வாழ்க்கையைக் `கர்ம காண்டம்’, `ஞான காண்டம்’ என்று பிரித்தது இந்து மதம் தான்.

கர்ம காண்டத்தின் தொழில்கள் காரணமாக ஜாதி உண்டு. ஞான காண்டத்தில் ஜாதி இல்லை; யாவரும் சந்நியாசி ஆகலாம். லௌகீக வாழ்க்கையையும், தெய்வ நம்பிக்கையையும் ஒன்றாக இணைத்தது இந்து மதம். உணவு, மருத்துவம், தொழில் அனைத்திலும் பாவ புண்ணியங்களைக் காட்டுவது இந்து மதம். உடல் இன்பத்தைக் ஒப்புக்கொண்டது இந்து மதம். அதற்கு மேற்பட்ட துறவு நிலையிலும் ஆதிக்கம் செலுத்துவது இந்து மதம். இன்பங்களுக்குச் சடங்குகள் செய்வது இந்து மதம். துன்பங்களுக்கு ஆறுதல் சொல்வது இந்து மதம். ஆகவேதான், எந்த நிலையிலும் ஒரு இந்துவுக்குக் கடவுள் நம்பிக்கை எழுந்துக்கொண்டே இருக்கிறது. அந்த நம்பிக்கை இல்லாதவனும், மேற்சொன்ன நிலைகளுக்குத் தப்ப முடியாது. `ஆஸ்தி’ என்றால் சொத்து. `நாஸ்தி’ என்றால் பூஜ்ஜியம். `நாஸ்திகன்’ ஒன்றுமில்லாத சூனியம். இந்துவின் கடவுள் சூனியத்தில் தோன்றி, செல்வத்தில் பரிணமிக்கிறான். ஆகவே, நாஸ்திகனும், இந்துவே; ஆஸ்திகனும் இந்துவே. இரண்டு பேரும் கடவுளைப் பற்றியே பேசுகிறார்கள்.



__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard